பாவண்ணன்

நிகழ்ச்சிகள் வழியாக ஒரு கோட்டோவியம் – பாவண்ணன்

சென்னையை நாங்கள் பெயரளவில் மட்டுமே தெரிந்துவைத்துக்கொண்டு அதை எப்போது பார்ப்போம் என ஏங்கியிருந்த ஒரு காலம் உண்டு. அப்போது அந்த நகரத்தைப் பார்த்தவர்கள் சொல்கிற ஒவ்வொரு செய்தியும் எங்களுக்குக் கிளர்ச்சியூட்டுவதாக இருக்கும். சொந்தக்காரர் ஒருவரின் திருமணத்துக்காகச் சென்னைக்குச் சென்று திரும்பிய எங்கள் ராமதாஸ் சார்கலச்சி உட்ட தேன்கூட்டிலேருந்து தேனீக்கள் பறக்கறமாதிரி எந்தப் பக்கம் பாத்தாலும் ஆளுங்க பறந்துகிட்டே இருக்காங்கடாஎன்றார். இன்பச்சுற்றுலா சென்று திரும்பிய முத்தம்மாள் பாட்டிஉயிர்காலேஜ் செத்த காலேஜ்னு புதுசுபுதுசா பல விஷயங்கள் அந்த ஊருல இருக்குப்பாஎன்று அடுக்கினார். கட்சி மாநாட்டுக்காக போய்வந்த சொக்கலிங்கம் மாமாஒரு ஊடு கூட நம்ம ஊருல இருக்கறமாதிரி கூரை ஊடு இல்ல பாத்துக்கோ. எங்க திரும்பனாலும் வரிசவரிசயா கல்லு ஊடுங்க. எல்லாமே ரெண்டு மாடி மூணு மாடி. எல்..சி.னு ஒரு கட்டடம். பதினாலு மாடி. எப்படி கட்டனாங்களோ தெரியலை. உலகளந்த பெருமாளாட்டம் மெளண்ட் ரோட்ல நிக்குது. நிமுந்து பாத்தா கண்ணே கூசுதுஎன்று சொல்லும்தோறும் அவர் வியப்பு பலமடங்காகப் பெருகியபடி இருந்தது. உடல்பரிசோதனைக்காக மருத்துவமனைக்குச் சென்று திரும்பிய கமலக்கண்ணன் பெரியப்பாமூர்மார்க்கெட்னு ஒரு எடம் ஸ்டேஷன் பக்கத்துலயே இருக்குது. வத்திப்பொட்டி அடுக்கனமாதிரி ஏகப்பட்ட கடைகள். அம்மா அப்பாவ தவிர எல்லாமே அங்க காசுக்கு கெடைக்குது. எல்லாமே கால்விலை, அரைவிலைனு பேரம் பேசி வாங்கலாம்என்று பெருமையாகச் சொன்னார். அனந்தநாயகி சித்திபட்டணத்துல உங்க பெரியண்ணன் சமுத்திரக்கரைக்கு ஒருநாள் சாயங்காலம் அழச்சிட்டு போயிருந்தான். அங்க என்ன மாதிரி காத்து தெரியுமா? எழுந்து வரவே மனசில்ல. அப்படி ஒரு சொகமான காத்துஎன்று சலிக்காமல் சொல்லிக்கொண்டே இருந்தார்.

சென்னை சார்ந்து சொல்லப்பட்டவை அனைத்தும் ஒவ்வொரு விதமென்று தோன்றினாலும் ஒவ்வொருவரும் தனித்தனியாக தாம் கண்ட உண்மைகளையே சொன்னார்கள். துண்டுகளாக சிதறிவிட்ட காகிதத்துணுக்குகளைச் சேகரித்து அடுக்கி, அதன்மீது தீட்டப்பட்டிருந்த கோட்டோவியத்தை மீட்டுருவாக்கம் செய்வதுபோல அவர்கள் சொன்ன தகவல்கள் சார்ந்து சென்னை நகரத்தின் சித்திரத்தை மிக எளிதாகத் தீட்டிக்கொள்ள முடியும். வெகுகாலத்துக்குப் பிறகு அந்த நகரத்தைச் சுற்றி அவர்கள் சொன்னதையெல்லாம் நானே பார்த்துத் தெரிந்துகொண்டேன்.

காந்தியடிகளோடு சேர்ந்து பணியாற்றியவர்களும் அவரைச் சந்தித்துவிட்டுத் திரும்பியவர்களும் காந்தியடிகளைப்பற்றி எழுதிவைத்த குறிப்புகள் ஏராளமானவை. காகா காலேல்கர், சுசிலா நய்யார், மகாதேவ தேசாய், நாராயண் தேசாய், மனுகாந்தி என எண்ணற்றோர் தம் நினைவிலிருந்து காந்தியடிகள் தொடர்பான பல நிகழ்ச்சிகளை எழுதிவைத்திருக்கிறார்கள். அவை அனைத்தையும் மையப்படுத்தி ஒரு வாசகனால் காந்தியடிகளின் உருவத்தைத் தீட்டிவிடமுடியும். பத்மபூஷன் விருது பெற்ற இந்தி எழுத்தாளர் விஷ்ணு பிரபாகர் கவிதை, சிறுகதை, நாவல்கள், கட்டுரைகள், குழந்தை இலக்கியம் என எல்லாத் தளங்களிலும் எழுதியவர். காந்தியடிகளின் வாழ்க்கையில் நடைபெற்ற பல நிகழ்ச்சிகளை பல நூல்களிலிருந்து எடுத்துத் தொகுத்து அவர் 1954இல் இந்தியில் எழுதிய புத்தகம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு 1970இல்உழைக்காமல் உண்பவன் திருடன்என்னும் தலைப்பில் முதல் பதிப்பாக வெளிவந்தது. காந்தியடிகளின் 150வது பிறந்தநாளையொட்டி இப்போது இரண்டாவது பதிப்பாக வெளிவந்துள்ளது. ஒரே அமர்வில் படிக்கத்தக்க வகையில் ஆர்வமூட்டும் பல நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நூலாக எழுதியிருக்கும் விஷ்ணு பிரபாகரும் தமிழில் மொழிபெயர்த்திருக்கும் மா.பா.குருசாமியும் நம் வணக்கத்துக்குரியவர்கள்.

ஒருமுறை வங்காளப்பகுதியில் காந்தியடிகள் பயணம் செய்தார். ஒரு ஜமீன்தார் வீட்டில் அவர் தங்குவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த ஜமீன்தார் வீட்டில் எண்ணற்ற வேலைக்காரர்கள் நாலாபக்கமும் ஓடி வேலை செய்தபடி இருந்தார்கள். ஒருநாள் வழிபாட்டுக்காக வீட்டுத் தாழ்வாரத்தில் உட்கார்ந்தார் காந்தியடிகள். அங்கு வெளிச்சம் கண்ணைக் கூசும் அளவுக்கு அதிகமாக இருந்தது. அதனால் விளக்குகளை அணைத்துவிடும்படி காந்தியடிகள் கேட்டுக்கொண்டார். ஜமீன்தார் அமர்ந்திருந்த இடத்துக்குப் பின்னால் கைக்கெட்டும் தொலைவிலேயே விளக்குப்பித்தான் இருந்தது. ஆனாலும் அதை அழுத்த அவர் தன் வேலைக்காரரை அழைத்தார். அவர் வராததால் மீண்டும் அழைத்துவிட்டுக் காத்திருந்தார். இதைக் கண்ட காந்தியடிகள் மெளனமாக எழுந்து சென்று தானே விளக்குப்பித்தானை அழுத்திவிட்டுத் திரும்பி வழிபாட்டைத் தொடங்கினார். பிறகு சொற்பொழிவின்போதுமனிதனுக்கு உடலுழைப்பு மிகவும் அவசியம். ஆனால் தற்காலத்தில் படித்தவர்களும் பணம் படைத்தவர்களும் உடலுழைப்பை வெறுக்கிறார்கள். ஆனால் இது தவறு. உழைக்காமல் உண்பவன் திருடன் என்பது கீதை சொல்லும் வாக்கியம்என்று சொல்லி முடித்தார். தற்செயலாக, உரை முடிந்து அனைவரும் எழுந்திருக்கும் தருணத்தில் மேசை மீதிருந்த பீங்கான் கோப்பை தவறி விழுந்து சுக்குநூறாக உடைந்தது. உடனே எழுந்துவந்த ஜமீன்தார் குனிந்து தரையில் சிதறிக்கிடந்த பீங்கான் துண்டுகளை எடுக்கத் தொடங்கினார். ஓசை கேட்டு ஓடி வந்த வேலைக்காரர்கள் அக்காட்சியைக் கண்டு நம்பமுடியாதவர்களாக திகைத்து நின்றார்கள். பொதுவில் சொல்லப்பட்ட ஒரு சொல் ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் மாற்றத்துக்குக் காரணமாக அமைந்துவிட்டது.

இத்தகு எண்ணற்ற நிகழ்ச்சிச்சித்திரங்களால் இந்தப் புத்தகம் நிறைந்திருக்கிறது. ஒருமுறை காகா காலேல்கர் குழந்தைகள் சொற்களைக் கற்றுக்கொள்ள உதவும் வகையில் குஜராத்தி மொழியில் நடைவண்டி என்ற தலைப்பில் ஒரு நூலை உருவாக்கியிருந்தார். அழகழகான ஓவியங்கள். வழவழப்பான தாள்கள். ஒரு புத்தகத்தின் விலை ஐந்தணா. அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆவல் காரணமாக ஒருநாள் அவர் காந்தியடிகளிடம்நீங்கள் நடைவண்டி புத்தகத்தைப் பார்த்தீர்களா?” என்று கேட்டார். “ஆம். பார்த்தேன். அழகாக இருக்கிறது. ஆனால் யாருக்காக இந்தப் புத்தகத்தை நீங்கள் தயாரித்தீர்கள்?” என்று கேட்டார். காகா காலேல்கர் பதில் சொல்லாமல் குழப்பத்துடன் அவரையே பார்த்தபடி நின்றிருந்தார். கோடிக்கணக்கான ஏழைக்குழந்தைகளிடம் கல்வியைக் கொண்டுசென்று சேர்க்கும் பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது. கடையில் ஏற்கனவே ஒரு புத்தகம் இரண்டணாவுக்கு கிடைக்கிறதென்றால், உங்கள் புத்தகம் காலணாவுக்குக் கிடைக்கவேண்டும். ஏழைக் குழந்தைகள் உங்கள் புத்தகத்தை எப்படி விலைகொடுத்து வாங்குவார்கள்?” என்று மென்மையான குரலில் கேட்டார் காந்தியடிகள். அவர் கேட்ட கேள்வி பொருள்பொதிந்த ஒன்றாக காலேல்கருக்குத் தோன்றியது உடனே ஆமதாபாத் சென்று அப்புத்தகத்தின் மலிவுப்பதிப்பைத் தயாரித்து ஐந்து பைசாவுக்கு விற்கும்படி செய்தார்.

தினமும் இரவில் படுக்கப்போகும் முன்பாக காந்தியடிகளின் தலையில் கஸ்தூர்பா எண்ணெய் தேய்த்துவிடுவார். அது ஒரு பழக்கம். ஒருநாள் கஸ்தூர்பா மிகவும் தாமதமாக வந்தார். காந்தியடிகள்ஏன் இன்று தாமதம்?” என்று கேட்டார். “சமையலறையில் நிறைய வேலைகள். இன்று இரவு ராம்தாஸ் ஊருக்குச் செல்கிறான் அல்லவா? மூன்று நாட்களுக்கு உதவும் வகையில் அவனுக்குத் தேவையான வழிச்சாப்பாட்டைத் தயாரிக்கத் தொடங்கினேன். அதை முடிக்க தாமதமாகிவிட்டதுஎன்றார் கஸ்தூர்பா. உடனே காந்தியடிகள்இன்று ராம்தாஸ் செல்கிறான். நாளை துளசி செல்வான். நாளைக்கு மறுநாள் சுரேந்திரன் செல்வான். இப்படி யாராவது ஒருவர் ஒவ்வொருநாளும் ஆசிரமத்திலிருந்து சென்றுகொண்டே இருப்பார்கள். ஒவ்வொருவருக்காகவும் நீ இப்படி உணவு தயாரித்துக் கொடுக்கமுடியுமா?” என்று கேட்டார். அதற்குக் கஸ்தூர்பாஅவன் நம் மகன். அதனால் செய்தேன். மற்றவர்கள் விருப்பத்துக்கு என்னால் எப்படி சமைக்கமுடியும்?” என்று கேட்டார். காந்தியடிகள் அவருக்குப் புரியும் வகையில்இது சத்தியாகிரகிகளின் ஆசிரமம். இங்கு வசிக்கும் ஒவ்வொருவரும் தம் பெற்றோரைத் துறந்து வசிப்பவர்களே. நம்மையே பெற்றோராக மனதார நினைப்பவர்கள். தாய்க்கும் மகனுக்கும் இடையிலிருக்கும் உறவை என்னால் புரிந்துகொள்ளமுடிகிறது. ஆனால் அது ஒரு வீடு என்னும் எல்லைக்குள் மட்டுமே செல்லுபடியாகும். இதுவோ சத்தியாகிரகிகளின் ஆசிரமம். இங்கு எல்லோருக்கும் என்ன கிடைக்குமோ அதுதான் ராமதாசுக்கும் கிடைக்கவேண்டும்என்று சொல்லி புரியவைத்தார்.

தண்டி யாத்திரையின்போது சத்தியாகிரகிகள் அனைவரும் ஒரு கிராமத்தில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இரவு உணவும் வழிபாடும் முடிந்ததும் அனவரும் உறங்கிவிட்டனர். காந்தியடிகளின் படுக்கைக்கு அருகில் ஒரு சின்ன விளக்கு மட்டும் எரிந்துகொண்டிருந்தது. இரண்டு மணியளவில் காந்தியடிகளுக்கு விழிப்பு வந்துவிட்டது. உடனே எழுந்து உட்கார்ந்துகொண்டு திரியை ஏற்றிவிட்டு எழுத உட்கார்ந்தார். எண்ணெய் தீர்ந்துபோய்விட்டதால் விளக்கு அணைந்துவிட்டது. ஆனாலும் காந்தியடிகள் எழுதுவதை நிறுத்தவில்லை. தற்செயலாக உறக்கத்திலிருந்து விழித்தெழுந்த ஒரு தொண்டர்எப்படி பாபு உங்களால் இந்த இருளில் எழுதமுடிகிறது? யாராவது ஒருவரை எழுப்பியிருக்கலாமே. விளக்கெரிய ஏதேனும் செய்திருக்கலாமேஎன்றார். காந்தியடிகள் புன்னகைத்தபடியேஎல்லாரும் சோர்ந்து உறக்கத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். யாரையும் எழுப்ப மனமில்லை. இருட்டில் எழுதும் பழக்கமுண்டு என்பதால் கவலையில்லைஎன்று பதில் சொன்னார்.

இந்து முஸ்லிம் ஒற்றுமைக்காக காந்தியடிகள் தில்லியில் உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த தருணம். உண்ணாவிரதம் தொடங்கி பதின்மூன்று நாட்கள் கடந்துவிட்டன. அவர் உடல்நலம் குன்றி படுக்கையில் படுத்திருக்கிறார். அவர் முழு ஓய்வில் இருக்கவேண்டும் என்றும் யாரையும் சந்தித்து உரையாடக்கூடாது என்றும் மருத்துவர்கள் சொல்லியிருந்தார்கள். ஆண்ட்ரூஸ் அறைக்குக் காவலாக நின்றிருந்தார். யாரோ ஒரு கிராமத்துத் தம்பதியினர் தொண்டர்களின் கட்டுக்காவலை மீறி காந்தியடிகள் படுத்திருந்த அறைவரைக்கும் வந்துவிட்டனர். ஆனால் ஆண்ட்ரூஸ் அவர்களைத் தடுத்துவிட்டார். அத்தம்பதியினருக்கு ஒரே மகன். அவனுக்கு பல நாட்களாக காய்ச்சலில் படுத்த படுக்கையாக இருக்கிறான். அவர்கள் ஊரில் ஒருவர் தண்ணீர் எடுத்துச் சென்று காந்தியடிகளின் பாதங்களைக் கழுவி, அந்நீரைக் கொண்டுவந்து மருந்தாக அளித்தால் மகன் நோய்நீங்கிப் பிழைத்துவிடுவான் என்று ஆலோசனை வழங்கியிருக்கிறார். அந்த எண்ணத்தோடு தண்ணீர் நிறைக்கப்பட்ட சொம்போடு அவர்கள் வந்திருந்தார்கள். காந்தியடிகளுக்கு அச்செய்தி தெரிவிக்கப்பட்டது. காந்தியடிகள் அத்தம்பதியினரை அருகில் அழைத்தார். மெல்லிய குரலில்உங்களுக்கு ஆண்டவன் மீது நம்பிக்கை இல்லையா? இருக்குமெனில், அந்த நம்பிக்கையை ஒரு சாதாரண மனிதன் மீது இறக்கி, ஆண்டவனை ஏன் ஏளனம் செய்கிறீர்கள்? என்னுடைய பாதங்களைக் கழுவி, கழுவிய அழுக்கான நீரை மருந்தாகக் குடிக்கவைக்க எண்ணுவது எனக்கும் அவமானம், உங்களுக்கும் அவமானம். முதலில் உங்கள் மகனை ஒரு நல்ல மருத்துவரிடம் அழைத்துச் செல்லும் வழியைப் பாருங்கள்என்று அறிவுரை சொன்னதோடு மட்டுமன்றி, தன் எதிரிலேயே அவர்கள் சொம்பில் இருந்த தண்ணீரைக் கீழே கொட்டும்படியும் செய்தார்.

தென்னாப்பிரிக்காவில் வசித்து வந்த காலத்தில் காந்தியடிகள் ஒரு சைவ உணவு விடுதியில் காலையிலும் மாலையிலும் சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒருநாள் அந்த உணவுவிடுதியில் ஆல்பர்ட் வெஸ்ட் என்னும் நண்பர் அறிமுகமானார். அவர் அதே ஊரில் அச்சகமொன்றை நண்பருடன் சேர்ந்து நடத்தி வந்தார். திடீரென அந்த நகரை கொள்ளைநோய் தாக்கியது. எண்ணற்ற இந்தியர்கள் அதில் பாதிப்படைந்தார்கள். காந்தியடிகள் நோயாளிகளுக்குத் தேவையான பணிவிடைகள் செய்வதில் ஈடுபட்டார். குறிப்பிட்ட நேரத்தில் அவரால் உணவு விடுதிக்குச் செல்லமுடியவில்லை. இரு நாட்களாக அவர் உணவு விடுதியின் பக்கம் வராததால் மூன்றாவது நாள் ஆல்பர்ட் வெஸ்ட் காந்தியடிகளைத் தேடிக்கொண்டு வந்துவிட்டார். கதவைத் திறந்தபடி வந்த காந்தியடிகளைப் பார்த்த பிறகுதான் அவர் ஆறுதலடைந்தார். பிறகு மெதுவாக ‘நான் உங்களுக்கு ஏதேனும் உதவி செய்யட்டுமா?” என்று கேட்டார். உடனே காந்தியடிகள் புன்னகைத்தவாறே ”நோயாளிகளுக்கு பணிவிடை செய்வீர்களா?” என்று கேட்டார். “தாராளமாகச் செய்வேன்” என உடனே அவர் ஒப்புக்கொண்டார். காந்தியடிகள் அவரை நெருங்கி தோளைத் தொட்டு தட்டிக்கொடுத்தபடி “உங்களிடமிருந்து இப்படிப்பட்ட பதிலே வரும் என எனக்குத் தெரியும். இந்த வேலைகளைச் செய்ய இங்கு பலர் இருக்கிறார்கள். இந்தியன் ஒப்பீனியன் பத்திரிகைக்குத்தான் எனக்கு உங்கள் உதவி தேவை. டர்பன் சென்று அந்தப் பொறுப்பை நீங்கள் ஏற்றுக்கொண்டால் எனக்கு உதவியாக இருக்கும்” என்று தெரிவித்தார். அடுத்த நாளே டர்பனுக்கு வண்டியேறிச் சென்று பத்திரிகையின் பொறுப்பை ஏற்றுக்கொண்டார் வெஸ்ட்.

தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பியதும் கோகலேயைச் சென்று சந்தித்தார் காந்தியடிகள். ”உங்களுடைய வேலைத்திட்டத்தை முடிவு செய்வதற்கு முன்பாக ஓராண்டுக்காலம் நாட்டைச் சுற்றிப் பாருங்கள்” என்று அனுப்பிவைத்தார் கோகலே. சரியாக ஓராண்டுக்கு பிறகு திரும்பி வந்த காந்தியடிகளிடம் “இந்தியாவைப்பற்றி உங்கள் கருத்தென்ன?” என்று கேட்டார் கோகலே. நீண்ட பெருமூச்சு விட்டபடி காந்தியடிகள் “எங்கும் ஒரே பேச்சுமயமாக உள்ளது. யாரும் நாட்டுக்காக உள்ளபடியாக சாகத் தயாராக இல்லை” என்று வருத்தத்துடன் சொன்னார். அதைக் கேட்டு அவர்கள் அருகில் அமர்ந்திருந்த டாக்டர் ஹரிபிரசாத் தேசாய் சீற்றமடைந்தார். “பஞ்சாபில் லாலா லஜபதிராய் இருக்கிறார். மகாராஷ்டிரத்தில் திலகர் இருக்கிறார். வங்காளத்தில் புரட்சிகர இளைஞர்கள் பலர் உயிர்த்தியாகத்துக்கு தயாராக இருக்கிறார்கள். இவர்களை நீங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லையா?” என்று கேட்டார். அதற்குக் காந்தியடிகள் “புரட்சிகர இளைஞர்கள் சாகத் தயாராக இருக்கிறார்கள் என்பது உண்மை. ஆனால் அவர்களுடைய வழிமுறையை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். அதனால் அவர்களை நான் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. அது ஒரு பக்கம் இருக்கட்டும். திலகர் மீது நான் பெருமதிப்பு வைத்திருந்தேன். அவர் தென்னாப்பிரிக்காவில் இருந்தபோது தாம் ராஜதுரோகி அல்ல என்பதை நிரூபிக்கும் பொருட்டு மூன்று நாட்கள் தொடர்ச்சியாக நீதிமன்றத்தில் முயற்சி செய்தார். அதைக் கண்டு நான் வருந்தினேன். “இன்று இந்தியாவில் நடைபெறும் ஆட்சியின் தன்மையை நான் எதிர்க்கத்தான் செய்வேன். இது குற்றமென கருதப்படுமானால், அக்குற்றத்தை நான் மீண்டும் மீண்டும் செய்வேன். நீங்கள் என்ன தண்டனை வேண்டுமானாலும் வழங்குங்கள். நீங்கள் என்னை விடுவித்தாலும் கூட இதே குற்றத்தைத் திரும்பத்திரும்பச் செய்வேன் என்று திலகர் ஏன் சொல்லவில்லை என்று தோன்றியது” என்று சொன்னார். கோகலேயும் தேசாயும் பதில் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார்கள். “தீமையை தீமையால் வெல்லவேண்டும் என்று திலகர் நம்புகிறார். நான் தீமையை சத்தியத்தால் வெல்லமுடியும் என்று நம்புகிறேன். இதுவே எங்கள் இருவருக்கிடையில் உள்ள கருத்து வேற்றுமை” என்று தொடர்ந்து சொன்னார் காந்தியடிகள்.

இப்படி அறுபத்தெட்டு காட்சிச் சித்தரிப்புகளோடு இந்த நூலை உருவாகியுள்ளார் விஷ்ணு பிரபாகர். ஒவ்வொரு நிகழ்ச்சியும் காந்தியடிகளின் அர்ப்பணிப்புணர்வு, தியாகம், அனைவரையும் ஒன்றெனக் கருதும் நேய உணர்வு, கடுமையான உழைப்பு, சத்தியத்தின் மீதான அவருடைய பற்று ஆகியவற்றை எடுத்துக் காட்டும் விதமாக அமைந்துள்ளது. காந்தியடிகளை அறிந்துகொள்ள விழைகிறவர்கள் ஓர் எளிய ஆரம்பக் கையேடாக இத்தொகுதியைப் படிக்கலாம்.

(உழைக்காமல் உண்பவன் திருடன் – விஷ்ணு பிரபாகர். தமிழில்: மா.பா.குருசாமி. காந்திய இலக்கியச் சங்கம். மதுரை. விலை ரூ.120)

பாவண்ணன் படைப்புலகம்: ஒரு பார்வை

 கே.ஜே.அசோக்குமார்

P7பூவண்ணன் என்ற சிறுவர் எழுத்தாளர் ஒருவர் இருந்தார். இப்போதும் எழுதுகிறார். என் சிறுவயதில் சிறுவர் புத்தகங்களில் அவர் கதைகளைப் படித்திருக்கிறேன். ஒரு வயது தாண்டியதும் அவரது கதைகளைப் படிப்பதை நிறுத்திவிட்டேன். குற்ற நாவல்கள் படித்து சுஜாதாவை தாண்டி சுந்தரராமசாமி, ஜெயமோகன் என்று படிக்க ஆரம்பித்தபோதும் நான் பாவண்ணனைப் பற்றி அறிந்திருக்கவில்லை. அல்லது அப்படி ஒரு பெயர் என் மனதில் பூவண்ணனாக ஒலித்து ஒதுங்கி போய்விட்டதாக நினைக்கிறேன். அல்லது இருவரும் ஒரே மாதிரியான குழந்தை எழுத்தாளர்கள் என்று நினைத்திருக்கலாம். ஒரு சமயம் இணையத்தில் ஏதோ ஒரு உந்துதலில் வேஷம் என்னும் சிறுகதையை படித்தபோது இவர் வேறு ஒருவர் என்று நினைக்க வைத்தது.

வேஷம் மிக எளிய ஒரு புத்தக வெளியீட்டை பற்றிய கதை. கதை ஆரம்பத்தில் ஒரு டிட்டிபி அலுவலகத்தில் நடக்கும். அந்த அலுவலகத்தை நடத்துபவருக்கும் அதில் வேலைச் செய்பவருக்கும் இடையே நடக்கும் சின்ன உரையாடல்களும், அதிகார தோரனைகளும் வேகமாக முடிக்க வேண்டும் என்கிற அவசரமும் கொண்ட சூழ்நிலைகளை விளக்குபவை. ஆனால் எதிர்பார்த்ததுபோல் பக்கங்களை அடித்து முடியாது. மின்சாரமும் போய்விடுகிறது. ஆனால் அதன் ஆசிரியர் ஒரு அரசியல்வாதி தாமதமாக்கவிருப்பவில்லை. அத்தோடு காலை நூல்வெளியீட்டு விழா வேறு. வேறு வழியில்லாமல் வெறும் காகிதங்களை வைத்து பையிண்ட் செய்யப்பட்ட புத்தகத்தை கொண்டு வெளியிடுவார்கள். அதில் உச்சம் என்ன வென்றால் எல்லோரும் அதை படித்ததுபோல் அதன் உள்ளடக்கம் பற்றி மேடையில் பேசுவதும் ஆவேசத்துடன் அதைப்பற்றி வெளியில் சொல்வதுதான். அதை தட்டச்சு செய்த கதைச்சொல்லியும் அவர் முதலாளியும் அதைக் குறித்து பேசும்போது இதற்கு ஒருவகையில் நாமும்தான் பொறுப்பு என உணர்கிறார்கள்.

நான் அப்போது படித்த கதைகளிலிருந்து இந்த கதை முற்றிலும் புதிய களம் இருந்தது. அதன் பேசும்பொருள் ஒரு புரட்சிகர சிந்தனையை கொண்டிருப்பது போலிருந்தாலும் மிக யதார்த்த தளத்தைதான் பேசுகிறது. ஆம் இதுதான் பாவண்ணன். மிக எளிய மனிதர்களின் நிலையில் நின்று சமூகத்தில் நடக்கும் அவசங்களையும் அவர்கள் மீதான தாக்குதல்களையும் எந்த எதிர்வினையும் இல்லாமல் மெல்லிய புன்னகையுடன் பதிவு செய்கிறது அவருடைய கதைகள்.

முள் என்றோரு சிறுகதை. அதில் கதையின் நாயகன் அவரின் அலுவலக நண்பரை அடிக்கடி காண அவர் வீட்டிற்கு செல்பவர். அவர்களின் குழந்தைகள் அவரின் மேல் இருக்கும் அன்பால் அவரை சித்தப்பா என்றுதான் அழைப்பார்கள். ஒருமுறை ஆப்ரிக்காவிலிருந்து அந்த குழந்தைகளின் நிஜமான சித்தப்பா குடும்பத்துடன் வந்திருக்கும்போது அங்கு சென்றிருப்பார். ஆப்ரிக்க சித்தப்பாவின் குழந்தைகள் அவருடன் விளையாடுவதை விரும்பாத சித்தி அவர் குழந்தைகளை அடித்து ஏன் கண்டவர்களிடம் சாக்லெட் வாங்குகிறாய் என்று தூக்கி எறிய அது அவர் காலடியில் வந்து விழும். மெளனமாக எழுந்து வெளியே வருவார் அப்போது அவரின் நண்பர் எதுவே சொல்லாதது அவருக்கு மேலும் துன்பத்தை அளித்துவிடும். தமிழ் சிறுகதைகளில் முக்கியமான சிறுகதை என்று எல்லோராலும் சொல்லப்பட்டிருக்கிறது இக்கதை. ஒருவர் என்னதான் சித்தப்பா என்று சொல்லப்பட்டாலும் நிஜ சித்தப்பாவின் முன் அவர் வெறும் நபர் அல்லது நண்பர்தான், அதை எல்லா சமூக அமைப்புகளும் உணர்த்துவதை ஒருவர் அறியும் இடம் இந்த முள் கதை.

பொதுவாக பாவண்ணனின் கதைகளின் எல்லா மனிதர்களும் நல்லவர்கள் என்று தான் சித்தரிக்கப்பட்டிருக்கும். கெட்டவர்கள் அவர்களின் குணங்கள் என்று பெரியதாக எதையும் அவர் எழுதுவதில்லை. விதிவசத்தால் சிலர் அப்படி நடந்துக் கொள்கிறார்கள் என்பதுபோல்தான் சொல்லப்பட்டிருக்கும். இதுவே அவர் எழுத்துகளின் சிறப்பு என்றும் சொல்லலாம்.

வாழ்க்கை ஒரு விசாரணை, சிதறல்கள், பாய்மரக்கப்பல் என்ற மூன்று நாவல்களை எழுதியிருக்கிறார். மூன்று நாவல்களும் வெவ்வேறு கதைகளமாக கொண்டிருப்பவைகள். அதேவேளையில் எல்லோரும் கதாமாந்தர்களும் நல்லவர்கள். முதல் நாவல் வடதமிழகத்தின் எளிய மக்களின் வாழ்க்கையை விவரிக்கிறது. அவர்களின் ஆசைகள், கனவுகள், அது நிறைவேறாமல் போகும் தருணங்கள் என்று அவர்களின் வாழ்க்கையை அவர்கள் பேசும் கொச்சை பேச்சுகளை பதிவு செய்தபடி சொல்லப்பட்டிருகிறது.

சிதறல்கள் நாவல் ஒரு ஆலை முடப்படும்போது அதில் வேலை செய்த மக்களின் அவலங்களை தினப்படி வாழ்க்கை பிரச்சனைகளைப் பற்றி பேசுகிறது. ஒரு ஆலை மூடப்பட்டதும் அதன் ஆலை முதலாளிகள் மிக இயல்பாக தங்கள் வாழ்வை பார்க்க போய்விடுகிறார்கள். ஆனால் அதன் தொழிலாளிகள், அவர்கள் வாழ்வில் அடுத்தடுத்து நடக்கவேண்டிய தருணங்கள் அப்படியே நின்று விடுகின்றன. அவர்கள் நினைத்திருக்கும் தங்கள் பிள்ளைகளின் திருமணங்கள், சுபகாரியங்கள், என்று எல்லாமே நின்றுவிடுவதால் மிகப்பெரிய நெருக்கடிக்கு உள்ளாகிறார்கள். தங்களை நிலைநிறுத்திக் கொள்ள தினப்படி செலவுகளை எதிர்க்கொள்ளவென்று உணவுகளை குறைத்து, தினக்கூலிக்கு சென்று, தன் வீட்டு பிள்ளைகளை வேலைக்கு அனுப்பி, வட்டிக்கு பணம் பெற்று என்று பலவகையிலும் அல்லல்படுகிறார்கள். ஆனால் மனிதர்கள் எந்த புகார்கள் இல்லாமல் தங்களை மட்டுமே குறை கூறி வாழ்கிறார்கள்.

மூன்றாவதான பாய்மரக்கப்பல் நாவல் மூன்று தலைமுறை மனிதர்களின் வாழ்க்கை அப்பாமகன்பேரன் என்கிற மூன்று மனிதர்களை மையமாக பேசுகிறது. அப்பாவின் ஒரு சொல்லையும் எதிர்காமல் அவர் சொன்னவற்றையே செய்து வாழ்கிறான் மகன். ஆனால் அரசியல் சகவாசத்தால் பேரன் தன் அப்பா, தாத்தாவின் பேச்சை கேட்காமல் அவர்களின் சொற்களுக்கு எதிராகவே வாழ்கிறான். அவர்களுக்குள் நடக்கும் பனிப்போரில் மகன் ஒரு கட்டத்தில் இறந்துவிட தாத்தா பேரன் என சண்டைகள் நடக்கின்றன. நேரான வழிகளில் எதிலும் செல்லாமல் குறுக்குவழியில் மட்டுமே செல்லும் பேரனை நினைத்து வேதனைபடுகிறார் தாத்தா. ஆம் கிராமங்களில் இன்றும் அரசியலின் ஆதிக்கத்தால் அதிகாரத்தால் சில்லறைதனங்களை எந்த புகாரும் இல்லாமல் எளிய முன்வைப்பு மூலம் பாய்மரக் கப்பலாக வாழ்க்கை செல்வதை கூறுகிறார்.

சமீபத்தில் பாவண்ணன் தொகுப்பாக வந்திருக்கும் பாக்கு தோட்டம் சிறுகதை தொகுப்பு மிக சிறப்பான தொகுப்பாக இருக்கிறது. அதில் இருக்கும் கதைகளில் வாழ்வில் ஒரு நாள், கல்தொட்டி, பாக்கு தோட்டம் போன்றவைகள் முக்கியமான கதைகள். ஏழு லட்சம் வரிகள், கடலோர வீடு சேர்ந்த மொத்தம் 17 தொகுதி சிறுகதைகளை வெளியிட்டிருக்கிறார். வினைவிதைத்தவன் வினையறுப்பான், ஊறும் சேரியும், கவர்மெண்ட் பிராமணன், பசித்தவர்கள், பருவம், ஓம் நமோ, தேர் என்று பல முக்கிய மொழியாக்கங்களை கன்னடத்திலிருந்து செய்திருக்கிறார்.

தொடர்ந்து தமிழ் இலக்கியத்திற்காக பணிபுரிபவர் பாவண்ணன். அவருடைய முழுமையான சிறுகதை மற்றும் கட்டுரைகளின் தொகுப்பு வரவேண்டும். அப்போதுதான் அவரது இதுவரையான பெரும் பங்களிப்பை நாம் சரியாக புரிந்துக் கொள்ள உதவும்.

பா வண்ணம்…

குமரன் கிருஷ்ணன்

P7

சில படைப்பாளிகளின் புனைப்பெயர்கள், அவர்களின் ஆக்கங்களின் வழி நாம் அனுபவம் அடையும்பொழுது, ஜன்னலோர பயணங்களில் மரங்களின் இடையில் தோன்றி மறையும் சூரியனின் கதிர் போல அவ்வப்பொழுது நம்மை தொடர்ந்து தொட்டுக் கொண்டே இருக்கும். “பாவண்ணன்” என்பதும் அத்தகைய ஒரு பெயரே…”(ப்)பா…” என்பது இப்போதைய தலைமுறைக்கு ஒரு சமீப கால திரைப்படத்தில் நாயகன் உச்சரித்து உச்சரித்து பிரபலமடைந்த வார்த்தை என்று மட்டுமே அறியும் அளவிலே தமிழ் தள்ளாடிக் கொண்டிருக்கையில், “பா” என்றால் பாட்டு அல்லது செய்யுள் வகை என்னும் பொருளையும் தாண்டி ருசிக்கத்தக்க அர்த்தங்களை நினைப்பில் வைக்கமாறு செய்யக்கூடியது.”பாவண்ணன்” உள்ளே இருக்கும் “பா”.

இவரது படைப்புகளை வாசித்து பழகிய பின், இப்பெயர் குறித்து பெரும்பாலும் எனக்கு இரண்டு உருவகங்கள் மனதில் தோன்றுவதுண்டு.

நெசவில் “பாவு” என்பதை “பா” என்பார்கள். பாவண்ணன் நெய்யும் மொழித்தறிகளில் ஓடும் “பாவு”,  நம் எண்ணங்களில் இழைக்கும் அன்றாட வாழ்வியல் அனுபவங்களின் வண்ணக் கலவை மிக வசீகரமானது.

“பா” என்பதற்கு “நிழல்” என்றொரு அர்த்தம் இருப்பதாக சொல்லக் கேட்டிருக்கிறேன். “நிழலுக்கு வண்ணம் தருபவர்” என்று யோசித்துப் பாருங்கள்… மனதின் நிழல் என்பது எண்ணம் தானே என்ற நினைப்பு நமக்குள் வந்து உட்கார்ந்து விடும். பின் அவரின் படைப்புகளை மறுவாசிப்பு செய்தால், அவரின் ஆக்கங்கள் எங்கும் நிறைந்திருப்பது நமது நிழலாகவும் அதற்கு அவர் பூசும் வண்ணங்களாகவும் நமக்குத் தெரியக் கூடும்…

“படைப்பாளி” என்பதன் பொருள் குறித்து இவர் சொல்வது [“ஒரு சிற்பம் ஓர் ஓவியம் ஒரு கவிதை“] இவரின் படைப்புகளுக்கே ஒரு அறிமுகம் தருவது போலவும், வாசிப்பு அனுபவம் நமக்கு வழங்கப் போவது என்ன என்று தெளிவு செய்வது போலவும் உள்ளது. “இந்த உலகம் ஏற்றுக் கொள்வதை சொல்ல வேண்டும் அல்லது இந்த உலகத்தை ஒரே ஒரு அங்குலமாவது முன்னகர்த்தி வைக்க வேண்டும் என்கிற எண்ணங்களின் அடிப்படையில் எந்தவொரு படைப்பாளியும் இயங்குவது இல்லை. தோல்வியின் தருணங்களையும் துக்கங்களின் தருணங்களையும் முன்வைக்கின்ற படைப்புகளின் பின்னணியில் உள்ள மன எழுச்சி யாருக்கும் குற்ற உணர்ச்சியை ஊட்டுவதில்லை. இதுவும் இயற்கையே என்ற எளிய உண்மையை உணர்த்துவதாகும். எல்லாவற்றையும் கடந்து வந்த உலகில் இதுவும் கடந்து போகும் என்கிற வெளிச்சத்தை வழங்கும் தோழமை உணர்வை மட்டுமே அது வெளிப்படுத்துகிறது” என்ற இவரின் எண்ணம் இவர் படைப்புகள் முழுவதிலும் பிரதிபலிப்பதை நாம் காண முடியும்.

பாவண்ணனின் களங்கள் அனைத்துமே ஒரு நுட்பமான புரிதலின் வேர் நோக்கி நம்மை இட்டுச் செல்கின்றன. நாம் எத்தகைய முனைப்புடன் ஒரு தருணத்தின் மீதேறி நிற்க விழைந்தாலும் அத்தருணத்தின் பார்வையாளனாக மட்டுமே நம்மை ஆக்கி வேடிக்கை பார்க்கும் வல்லமை காலத்திற்கு உண்டு என்பதையும், நம் சிந்தனை, செயல், நினைப்பு, முதிர்ச்சி அல்லது முதிச்சியின்மை அனைத்தும் அத்தருணங்களின் தயவே என்பதையும், அவ்வாறு பெற்ற அனுபவத்தின் வாயிலாக நாம் எடை போடக்கூடிய நியாய அநியாயங்களும் தர்ம அதர்மங்களும் கூட மற்றொரு தருணத்திற்கு நம்மை அழைத்துச் செல்ல காலம் வகுக்கும் யுக்தியோ என்றொரு சிந்தனையும் மீண்டும் மீண்டும் பல்வேறு கோணங்களில் நமக்குள் பதிகின்றன.

மேற்கூறிய “புரிதலின் வேர்” இரண்டு தளங்களில் இயங்கும் அற்புதமான உதாரணம் “வெள்ளம்“. மேல் தளம், சூரதத்தன் என்னும் ஒரு இளம் பிக்குவின் மனம் தன் “பாதை”யிலிருந்து விலகும் தள்ளாட்டத்தையும் அத்தள்ளாட்டத்தின் தருணங்களையும் விரிவுபடுத்துகிறது. எத்தனை நுட்பமாக என்றால், அப்படியொரு நிலை வரப்போகிறது என்பதன் தருணம், இரவெல்லாம் சேகரித்த நீர்த்துளியை காலையில் இழக்கும் இலையின் ஒரு நொடித்துளி மூலமாக பலகாலம் ஒருவன் சேகரிக்கும் அறிவையோ அனுபவத்தையோ வாழ்வியல் பாதையையோ ஒரு தருணம் இழக்கச் செய்யும் என்னும் படிமம் காட்சிப்படுத்தப்படுகிறது. தள்ளாட்டம் முடிந்த பின் அவன் தன்னையே “காணும்” தருணத்தையும் பின்னர் அவன் மனமே சொல்லும் தன்னிலை விளக்கத்தின் மூலமாக, புத்தரை கண்மூடி தியானிக்கும் பொழுதில் அவன் பிழையென்று நினைத்த நொடி சரியென்று நினைக்கும் தருணமாகவே பிக்குவின் உள்ளிறங்கி ஒளிர்வதாக முடிகிறது கதை. அதாவது கதையின் மேல்தளம்.

இம்முடிவிற்குள் நம்மை நுழைக்கும் வகையிலும், இக்கதையின் கருவிற்கு மட்டுமில்லாமல், எத்தகைய “தருணங்களின் அலைக்கழிப்பு”க்கும் பொருந்தும் வண்ணம் ஒரு பொதுத்தன்மை புகுத்தும் வகையிலும் புத்தரின் நான்கு வாக்கியங்களை ஒன்றன் பின் ஒன்றாக கட்டமைப்பதன் வழியாக கதையின் முடிவை சாத்தியப்படுத்துவது கவனிக்கத்தக்கது. “ஒரு மனிதனின் மிகப்பெரிய செல்வம் தன்னம்பிக்கை”, “சுவைகளில் சிறந்த சுவை சத்தியம்”, “மெய்யான அறத்தின் வழி அறிவதே சத்தியம்”, “சத்தியமே வாழ்வதற்கு சிறந்த வழி” என்பதன் வழியாக “அடித்தளத்தின்” அறிமுகம் நடக்கிறது. இந்த நான்கு கண்ணிகளின் இணைப்பிலோ அல்லது இணைக்க முடியாததன் இயலாமையிலோ தொங்கிக் கொண்டிருப்பவை தானே நம் வாழ்க்கையின் தருணங்கள்?

அடித்தளத்திற்கு செல்வதற்கான சாவி, கதையை வாசிக்கும் மனதுக்குள் இருக்கிறது. அதைக்கொண்டு அடித்தளத்தை திறப்பதற்கான தருணம், அதுவரை மனதுக்குள் கொட்டிக்கிடக்கும் தருணங்களின் தயவில் உருவாவதே…! எனவே இக்கதையின் அடித்தளம் அவரவர் மனதின் தளமே.

கதையின் பாத்திரங்கள், பின்புலன்கள், இச்சைகள் அனைத்தும் அடித்தளத்தில் குறியீடுகளே…

ஒரு தருணத்தை விலக்க விழையும் மனது. அத்தகைய விலக்குதல் பற்றிய விழைவை மனம் கற்பித்துக் கொண்ட தருணங்கள் வழியாகவே எதை விலக்க நினைத்ததோ அதன் வழியாகவே பயணம் போகும் அல்லது போக வைக்கப்படும் தருணங்கள் நம் அனைவரின் வாழ்விலும் உண்டு. அதன் உள்ளீடுகளே அடுத்த தருணத்தை நோக்கி நம்மை நகர்த்துகின்றன. இதுவே அடித்தள அனுபவம். தற்கால உலகம் நமக்குக் காட்டும் வாழ்வியல் மகிழ்ச்சிக்கான தருணங்களில் நாம் சிக்குவது இருப்பின் நியதி என்றாகி விட்டாலும் நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் பிக்கு அத்தருணங்களில் தவிர்க்க விழைவதை நம்மை நாமே கூர்ந்து நோக்கினால் உணர முடியும் தானே?

கற்றல் என்பது அனுபவம் என்றால் கற்றல் நேரும் இடமும் நொடியும் நமக்குத் தருவது பேரானந்த அனுபவம் எனலாம். பாவண்ணன் அத்தகைய இடங்களையும் நொடிகளையும் நமக்கு அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கிறார். கதையோ கட்டுரையோ, அது நிகழும் வரிகள் அப்படைப்புக்கும் இயல்பாய் அதை மீறிய நம் பிரத்யேக சிந்தனைக்கும் விருந்தாய் பொருந்துவது வாசிப்பவருக்கு மிகுந்த உவகை ஊட்டுவதாகும். “கடல் பார்ப்பது நல்ல விஷயம்…” என்று துவங்கி “கடல் கடவுளோட மனசு” என்று முடிக்கும் “அடைக்கலம்” ஆகட்டும், “யாரிடமும் நெருங்கிக் கழிக்க முடியா பொழுதுகள்” என்னும் வார்த்தை பிரயோகத்தின் வழியே நமக்குள் இறங்கும் [“பூனைக்குட்டி“] அடர்த்தியாகட்டும், “காட்டை யாராலும் முழுசா சுத்த முடியாது…அப்பப்போ கொஞ்சம் கொஞ்சம் பார்த்துக்கலாம்” என்று சொல்லும் “குருவி மடம்” ஆகட்டும் வரிகளின் வழியே மனதில் வரிவரியாய் பதிந்து போகும் கற்றல் அனுபவங்கள்…!

பாவண்ணனின் படைப்புகள் நமக்குள் உணர்வுச் சுனையை உற்பத்தி செய்யும் ஊக்கியாக திகழ்பவை. அத்தகைய உணர்வுச் சுனையில் இருந்து வழிந்தோடும் துளிகள் போகும் வழியெங்கும் விட்டுச் செல்லும் ஈரத்தின் பிசுபிசுப்பில் ஒட்டிக் கொண்டிருக்கும் மனிதத்தின் ருசி அலாதியானது. ஈரம் என்றாலே நினைப்புதானே? மண்ணின் ஈரம் மழையின் நினைப்பு; மனதின் ஈரம் நினைப்பை பற்றிய நினைப்பு. அவரின் பெரும்பான்மை கதைகளும் கட்டுரைகளும் நினைப்பை பற்றிய நினைவின் வாயிலாகவே உணர்வை ஊட்டுகின்றன. கடந்த காலத்துக்குரிய கடமையை நிகழ்கால தர்மமாக நினைக்கும் “அழைப்பு“, ஒரு தலைமுறை பெண்மைக்கு மறுக்கப்பட்ட உணர்வு சார்ந்த மறுப்பீடுகளின் நினைப்பை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் “வைராக்கியம்“, நினைப்பில் அல்லாடியே பிழைப்பை கெடுத்துக் கொள்ளும் “அட்டை“, கடந்ததன் நினைப்பையே தன் நிகழ்காலமாக மட்டுமின்றி நிரந்தர காலமாகவே ஆக்கிக் கொண்ட “அம்மா“, “பறத்தல்” குறித்த பேரனுபவங்களை மனதுக்குள் தூவிக் கொண்டே போகும் “ஒரு பறவையின் படம்“, ஒரு காலை நேர நடையை கூட காலத்தின் குப்பிக்குள் அடைக்க உதவும் கருவியான பறவைகள் நிரம்பிய மரம் தாங்கிய வீட்டின் நினைப்பைச் சொல்லும் “வலசை போகாத பறவை“, நமக்குள் மறைந்து போன எத்தனையோ முகங்களை மீட்டெடுக்கும் “மறக்க முடியாத முகம்“, நம் ஆசிரியர் ஒருவரையேனும் நினைக்க வைக்கும் “கோடியில் ஒருவர்“, சாலையில் பார்க்கும எந்தவொரு வியாபாரியின் முகத்திலும் அவரின் நதிமூலம் எப்படியிருக்குமோ என்று எண்ண வைக்கும் “கிஷன் மோட்வாணி” போன்ற கட்டுரைகள் என்று சொல்லிக் கொண்டே போகலாம்…

பாவண்ணனை வாசித்த பின், பேருந்து நிறுத்தங்களில் அமர்ந்திருக்கும் மூதாட்டிகளை பார்க்க நேர்ந்தால் “குழந்தையும் தெய்வமும்” வழியே மனது குழையும்…மன வளர்ச்சி குன்றியவர்கள் என்ற கருதப்படுபவர்களை காண்கையில் எது மன வளர்ச்சி என்ற “விடை தெரியாத கேள்வி“யில் மனம் குவியும்…வசிப்பிடம் ஏதுமின்றி தெருவோரம் “வாழ்வைத் தேடி” வருபவர்களிடம் நம் பார்வை பதியும்…”கீழ் தட்டு” என்று சொல்லப்படும் கண்டுகொள்ளப்படாமல் இருக்கும் சமூக தளத்திலிருந்து வரும் சிறுவர்களின் நடவடிக்கைகளில் “நான்கு எழுத்துக்கள்” பாய்ந்தால் மாற்றம் வாராதா என்ற என்ற எண்ணம் சூழும்…

பாவண்ணன் அவர்களின் எழுத்துக்கள்  நமக்குள் இறங்க மறுத்தாலோ, சற்றே அந்நியமாகத் தோன்றினாலோ, நம்மை அவற்றுடன் அடையாளப்படுத்த முடியாமல் இருப்பது போல் தெரிந்தாலோ, நாம் தெருவில் இறங்கி நடந்து வெகுநாட்கள் ஆகி விட்டன என்று பொருள். இன்றைய சமூகம் முன்னிறுத்தும் ஓட்டத்தில் நாம் எப்புறமும் பார்க்காமல் தங்க கூண்டில் பயணம் செய்து கொண்டிருக்கிறோம் என்றும் பொருள். கூண்டை விட்டிறங்கி வானம் பார்க்கும் வாய்ப்பை வழங்குகின்றன பாவண்ணனின் ஆக்கங்கள்.

பாய்மரக்கப்பல் – விவசாய வீழ்ச்சியின் துயரம்

சுரேஷ் கண்ணன்

paaimarakappal

பதாகைபாவண்ணன் சிறப்பிதழிற்காக கிரிதரன் ராஜகோபாலன் என்னைத் தொடர்பு கொண்டு கட்டுரை கேட்ட போது பாவண்ணன் என்கிற எழுத்தாளர் குறித்து எனக்குள் எந்த மாதிரியான சித்திரம் தோன்றுகிறது என்று சற்று நேரம் சிந்தித்துப் பார்த்தேன். பாவண்ணனின் எழுத்துக்களை அச்சிலும் இணையத்திலும் பல ஆண்டுகளாக தொடர்ந்து வாசித்து வந்திருந்த போதிலும் நானே வெட்கமும் குற்றவுணர்வும் கொள்கிற மாதிரி அவர் பற்றிய எந்தவொரு சித்திரமும்  எனக்குள் தோன்றவில்லை. ஓர் எழுத்தாளரின் படைப்புகளை தொடர்ந்து வாசிக்கும் போதே அவை பற்றிய மனப்பதிவுகளை தொடர்ந்து பதிவு செய்து வைத்துக் கொள்வதே  சிறந்த வாசகனின் செயலாக இருக்கும் என்று தோன்றுகிறதுஅந்த படைப்புகளை மீள்நினைவும் வாசிப்பும் செய்யும் போது அதன் மூலம் எழுத்தாளரின் உத்தேசமான முழு சித்திரத்தை நாம் எட்டிவிடக்கூடும். இன்னமும் அடுத்தபடி நிலையில் ஒரு விமர்சகனாக அந்த எழுத்தாளரின் படைப்புலகை துல்லியமாக சித்தரிக்கும் முயற்சியிலும் ஈடுபடுவதற்கான சாத்தியத்தை அது தரக்கூடும்.

எழுத்தாளர் ஜெயமோகன் நவீன தமிழிலக்கிய எழுத்தாளர்கள் பற்றிய நூல்களில் தொடர்புள்ள எழுத்தாளர்களின் ஒட்டுமொத்த படைப்புலகை அதற்குரிய பொருத்தமான மேற்கோள்களுடன் ஏறத்தாழ கச்சிதமாகவும் துல்லியமாகவும் தம்முடைய அற்புதமான தர்க்க மொழியின் மூலம் நிறுவி விடுவார்.. ஒரு கறாரான விமர்சகன் எட்ட வேண்டிய இடம் இதுவே என்று தோன்றுகிறது.

பாவண்ணன் எழுத்துக்கள் குறித்து நான் இதுவரை வாசித்தவற்றை மெல்ல நினைவுப்படுத்திப் பார்த்தேன். திண்ணை இணைய இதழில்எனக்குப் பிடித்த சிறுகதைகள்என தமிழக, இந்திய, அயல் எழுத்தாளர்களின் நூறு சிறுகதைகளை மிகச்சிறப்பாக அறிமுகப்படுத்தி அவர் எழுதிய தொடர் பசுமையாக நினைவில் வந்தது. தமது வாழ்வியல் அனுபவங்களோடு ஒவ்வொரு சிறுகதையையும் நுட்பமாகப் பொருத்தி அவர் எழுதிய விதம் அற்புதமானதாக இருந்தது. தாம் வாசிக்கும் நூற்களைப் பற்றிய அனுபவங்களையெல்லாம் தம்மோடேயே வைத்துக் கொள்ளாமல் அதை பிறருக்கும் சுவாரசியமாக அறிமுகப்படுத்துவது மிக முக்கியமான இலக்கியப் பணி மாத்திரமல்ல, அடிப்படையானதும் ஆகும். மிக குறிப்பாக தம்முடைய மொழியாக்கப் பணியின் மூலம் கன்னட மொழியிலிருந்து தமிழிற்கு அவர் அறிமுகப்படுத்தியிருக்கும் பல எழுத்துக்கள் முக்கியமானவை.

இலக்கியப்பூசல்களின் மூலமும் சர்ச்சைகளின் மூலமும் தன் இருப்பை நிலைநிறுத்திக் கொள்ளும் எந்தவொரு மலினமான முயற்சியிலும் ஈடுபடாமல் எது பற்றியும் யாரைப் பற்றியும் கவலைப்படாமல் எதிர்பார்க்காமல் ஒரு தெளிந்த நீரோடை போல அவர் இத்தனை ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வரும் அவரது நீண்ட கால இலக்கியச் செயற்பாடுகளை நினைவுகூர்ந்தால் பிரமிப்பாக இருக்கிறது. எழுத்தாளர், விமர்சகர், மொழிபெயர்ப்பாளர், சிறுவர்களுக்கான எழுத்து பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட எழுத்து அவருடையது. மூன்று நாவல்கள், சிறுகதைத் தொகுதிகள், கட்டுரைத் தொகுதிகள் என மிக நீண்ட பட்டியலைக் கொண்டது அவரது படைப்புலகம். சமீபத்திய தீராநதியில், மறைந்த வெங்கட்சுவாமிநாதன் பற்றி அவர் எழுதும் அஞ்சலிக் கட்டுரை கூட, வாசகனின் தோள் மீது கைபோட்டு உரையாடும் அவரின் வழக்கமான சிநேகமான தொனியை இன்னமும் கைவிடாமலிருக்கிறது.

***

அவரது புதினங்களுள் 1995-ம் ஆண்டின் இலக்கியச் சிந்தனைப் பரிசு பெற்ற புதினமானபாய்மரக்கப்பல் மிக முக்கியமானது. சூழலியல் குறித்த வந்த தமிழ் புதினங்களின் முன்னோடியான படைப்புகளில் இதுவொன்று.

உலகில் விவசாயத்தை பெருமளவு செயல்படுத்தும் நாடுகளுள் ஒன்று இந்தியா. அதற்கான நிலப்பரப்பும் இயற்கைச் செல்வங்களும் இங்குள்ளன. உணவுப் பொருட்களை விளைவிப்பதில் தன்னிறைவு பெற்றதோடு உபரிச் செல்வத்தை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் முக்கியமான காரணிகளில் ஒன்றாக உள்ளது விவசாயம். ஆனால் இந்தப் பெருமையை இந்தியா கடந்து செல்லும் கனவு போல மெல்ல மெல்ல இழந்து வருகிறது. விளைநிலங்களின் இடங்கள் பறிக்கப்பட்டு அந்த இடத்தில் தொழிற்சாலைகளும் வீடுகளும் இடம்பெறுகின்றன. பன்னாட்டு நிறுவனங்களின் இந்த நில அரசியலுக்கு அதிகார வட்டங்கள் தங்களின் ஆதாயத்திற்காக இந்த அழிவிற்கு உடந்தையாக இருக்கின்றன. அந்நிய நாடுகள் தங்களின் வணிகத் தந்திரங்களின் மூலம் அதிக சாகுபடிக்கு ஆசைகாட்டி விற்கும் பூச்சிக்கொல்லி மருந்துகள் காலப்போக்கில் விளைநிலங்களை மலட்டுத்தன்மையாக்கி விடுகின்றன. ஒருபுறம் கடன்களினாலும் இன்னொருபுறம் இடைத்தரகர்கள் அடிக்கும் கொள்ளை லாபம் மூலம் தங்களின் விளைப்பொருட்களுக்கான நியாயமான வருவாய் கிடைக்காத துயரங்களினாலும் விவசாயிகள் தற்கொலை செய்யும் அவலம் ஆண்டுக்கு ஆண்டு நீடித்துக் கொண்டே போகிறது. வேளாண் நிலங்களும் காடுகளும் அழிக்கப்பட்டுக் கொண்டே போவதும் நாகரிக மாற்றங்களினால் ஏற்பட்டிருக்கும் நுகர்வு கலாச்சாரமும் சுற்றுச் சூழலை பெருமளவு நாசம் செய்கின்றன.

தம்முடைய சமகாலத்தில் சமூகத்தில் ஏற்படும் எதிர்மறையான மாற்றங்களை, அழிவுகளை பதிவு செய்து தொலைநோக்குப் பார்வையோடு சுட்டிக்காட்டி எச்சரிப்பது ஒவ்வொரு எழுத்தாளரின், படைப்பாளியின் தார்மீக கடமையாகும். இந்த நோக்கில் தமிழில் எழுதப்பட்ட புதினங்களில், சூழலியலில் ஏற்படும் ஆபத்தைப் பற்றி அது பற்றி அதிகமாக உரையாடப்படாத காலத்திலேயே நுட்பமாகவும் கலையமைதியுடனும் எழுதப்பட்ட முதல் புதினமாக 1969-ல் வெளிவந்த  சா.கந்தசாமியின்சாயாவனத்தைச்சொல்லலாம். தஞ்சைப் பகுதியிலுள்ள ஒரு வனம் மெல்ல மெல்ல அழிந்து போவதைப் பற்றிய கவலையை தன்னுடைய மையமாக பதிவு செய்தது அந்தப் புதினம்.

பிறகு 1990-ல் வெளிவந்த ஜெயமோகனின்ரப்பர்புதினம், ரப்பர் என்கிற பணப்பயிர் எவ்வாறு மற்ற ஆதாரமான உணவுப் பயிர்களை அழித்து உறிஞ்சி பிரம்மாண்டமான தொழிலாக வளர்ந்து நிற்கிறது என்பதை ஒரு குடும்பத்தின் வீழ்ச்சியோடு இணைத்து உரையாடுகிறது அந்த நாவல். இந்த வரிசையில் பாவண்ணனி்ன்பாய்மரக்கப்பல்புதினத்தையும் வைத்துப் பார்க்கலாம்.

***

காசாம்புக் கவுண்டரின் விவசாயக்குடும்பமானது மெல்ல மெல்ல அடுத்தடுத்த தலைமுறைகளில் வீழ்ச்சியடைந்து விவசாயத்திலிருந்து விலகி கடைசியில் சாராயக்கடை திறப்பிற்கும் ஆதாய அரசியலுக்கும் சென்று சேரும் சோகத்தை இந்தப் புதினம் படிப்படியாக சொல்லிச் செல்கிறது. துரைசாமி சாராயக்கடை திறப்பதற்கான முன்னேற்பாடுகளைச் செய்யும் பரபரப்போடு துவங்குகிறது நாவல். அடுத்த அத்தியாயத்தில் அவனது தாத்தா முத்துசாமி கவுண்டரைப் பற்றிய அறிமுகமும் கோர்க்காட்டிலிருந்து வளவனூருக்கு வந்த அவரைப் பற்றிய பின்னணி விவரங்களும் மெல்ல துலக்கமாகின்றன. இப்படியாக சமகாலத்திற்கும் கடந்த காலத்திற்கும் மாறி மாறி நாவல் பயணிக்கிறது.

குடும்பத்தகறாரில் முத்துசாமியின் சகோதரர் வெறிகொண்டு பெரும்பாலான குடும்ப உறுப்பினர்களை வெட்டிப் போட தன் மனைவி வனமயிலையும் அதில் இழக்கிறார் முத்துசாமி. பொருந்தாத திருமணத்தில் கணவனிடமிருந்த விலகிய நாவாம்பாளை இரண்டாவதாக மணந்து கொள்கிறார். பட்டாளத்திற்கு சென்று சேர்வதற்காக பிரான்ஸ் செல்ல விரும்பும் மகன் முனுசாமியின் கோரிக்கையையும் அது சார்ந்த பிடிவாதத்தையும் முத்துசாமியால் தவிர்க்க முடியவில்லை. இன்னொரு மகன் ரங்கசாமி சாமியாராகப் போய் விடுகிறான். விவசாயத்தில் உதவிக் கொண்டிருந்த ஆறுமுகம் குடிப்பழக்கத்தின் விபத்தால் பக்கவாதம் வந்து முடங்கிப் போகிறான். இப்படியாக முத்துசாமிக்குப் பிறகு விவசாயத்தைத் தொடர எவருமில்லாததால் அரசியலில் ஈடுபடும் பேரன் துரைசாமியின் முரட்டுத்தனத்தனமான பிடிவாதத்தாலும் அது சார்ந்த சச்சரவுகளாலும் நிலத்தை ரியல் எஸ்டேட்காரர்களுக்கு விற்க நேர்கிறது. நிலம் தன்னை விட்டுப் போன அந்தக் கணத்திலிருந்தே தன்னை நடைப்பிணமாக உணரத் துவங்குகிறார் முத்துசாமி.

காலனியாதிக்கத்தில் இருக்கும் புதுச்சேரியின் காலக்கட்டம். பிரெஞ்சுக்கார துரைகளிடம் விசுவாசத்தைக் காட்டில் ஊரில் செல்வாக்கோடு இருக்கும் சீத்தாரம ரெட்டியிடம் தந்தை காசாம்பு  வாங்கிய கடனுக்காக நிலங்களை ரெட்டியிடம் இழக்கிறார் முத்துசாமி. தன் செல்வாக்கைப் பயன்படுத்தி முத்துசாமியை மிரட்டி நிலங்களைப் பறித்து விடுகிறான் ரெட்டி. கோர்க்காடிலிருந்து தமிழ்நாட்டின் வளவனூருக்கு புலம்பெயரும் முத்துசாமி, ஐயரிடமிருந்து குத்தகை எடுத்து விவசாயம் செய்யத் துவங்குகிறார். இது சார்ந்த வரலாற்றுப் பின்புலத்தோடு அத்தியாயங்கள் கடக்கின்றன.

***

இன்னொரு புறம் சமகாலத்தில் பேரன் துரைசாமியின் அரசியல் செயற்பாடுகளும் அதிகாரத்தின் படிக்கட்டுகளில் மெல்ல மெல்ல அவன் மூர்க்கமோடு முன்னேறும் உத்வேகங்களும் பாவண்ணனின் திறமையான சொற்களில் விரிகின்றன. தாத்தா முத்துசாமியோடு அவன் கொள்ளும் பகையும் தன் மனைவி மல்லிகாவின் மீது அவன் செலுத்தும் ஆதிக்கமும் குடும்ப வன்முறையும் இயல்பான தொனியில் ஆனால் அதன் உக்கிரம் குறையாமல் வெளிப்படுகின்றன.

காங்கிரஸ் தியாகியான காத்தவராயன் கவுண்டருக்குதியாகிபட்டம் மூலம் கிடைத்த ஒரு காணி நிலத்தை குத்தகையாகப் பெற்று விவசாயம் செய்கிறார் முத்துசாமி. காந்தி இறந்த செய்தியைக் கேட்ட அதிர்ச்சியில் மரணமடையும் காத்தவராயனுக்குப் பிறகு அவரது நிலத்தை மகனான சத்தியசீலனுக்கு கைமாற்ற முடியவில்லை. சினிமாவில் நடிப்பதற்கான ஆர்வம் முற்றி விவசாயத்தை தொடர விரும்பாமல் அவன் சென்னையில் திரிந்து கொண்டிருக்கிறான். எனவே அந்த நிலத்தை வேறு வழியின்றி முத்துசாமியே பணம் கொடுத்து வாங்கிக் கொள்கிறார்

விவசாயத் தலைமுறைகளிலிருந்து கிளைக்கும் வாரிசுகள் அரசியலாலும் சினிமா மோகத்தினாலும் குடியினாலும் தம்முடைய ஆதார தொழிலான விவசாயத்தை அடுத்தடுத்த தலைமுறைகளில் தொடராமல்  கைவிட்டுப் போகும் யதார்த்தமான சோகத்தை அதன் சமூகப் பின்னணிகளுடன்பாய்மரக்கப்பல்அடிநாதமாக விவரிக்கிறது.

ஒரு விவசாயக் குடும்பம் மெல்ல மெல்ல தடுமாறி தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் சிரமங்கள் அனைத்தும் அடுத்தடுத்த தலைமுறையின் உதாசீனங்கள்  மூலமும் விலகலின் மூலமும் எவ்வாறு சிதறிப் போகிறது என்பதை மூன்று தலைமுறையின் காலக்கட்ட வரலாற்றின் மூலம் பதிவு செய்கிறார் பாவண்ணன். பிரெஞ்சு அரசு பின்னணியில் புதுச்சேரியின் காலக்கட்டமும் அதுசார்ந்த அரசியலும் பின்னணியில் ஒரு மெல்லி்ய கோடாக பதிவாகியிருக்கிறது. நாவலில் உலவும் பாத்திரங்களின் உறவுகளை புரிந்து கொள்ள சற்று சிரமமாக இருந்தாலும் மீள்வாசிப்பின் போது எத்தனை கவனமாகவும் நுட்பமாகவும் இந்த நாவலின் கட்டுமானத்தை பாவண்ணன்  திட்டமிட்டு அதை செயலாற்றியிருக்கிறார் என்பதை உணர பிரமிப்பாக இருக்கிறது. நிலங்களை இழந்த விரக்தியோடும் துயரத்தோடும் அவதிப்படும் முத்துசாமி இறுதியில் தன் குடும்ப உறுப்பினர்களை அழைத்து நடுங்கும் கரங்களால் புதிய மரக்கன்றுகளை மீட்டுக் கொண்ட மகிழ்ச்சியோடு நடும் தருணத்தோடு நாவல் நிறைகிறது. சமூகமும் மனிதர்களும் எத்தனை அவநம்பிக்கைகளில் மூழ்கிப் போனாலும் துவண்டு போகாமல் அதன் மீது நம்பிக்கை ஏற்படுத்த வேண்டிய கடமை ஒரு படைப்பாளிக்கு இருக்கிறது. அந்த கடமையை பாவண்ணன் தன்னுடைய புதினத்தில் கச்சிதமாகவே நிறைவேற்றியிருக்கிறார்.

புயல் காற்றில் சிக்கித் தடுமாறி பயணிக்கும் ஒரு பாய்மரக்கப்பலைப் போல சமூகத்தின் மிக ஆதாரமாகவும் தொடர்ச்சியாகவும் இயங்க வேண்டிய விவசாயம் எனும் இயக்கம் பல்வேறு சமூகக் காரணங்களால்  தட்டுத் தடுமாறும் உருவகத்தை நாவலின் தலைப்பு உணர்த்துகிறது எனக் கொள்ளலாம். சூழலியல் சார்ந்து தமிழில் வெளிவந்த ஒரு குறிப்பிடத்தகுந்த படைப்பாகபாய்மரக்கப்பல்புதினத்தை நிச்சயம் குறிப்பிடலாம்.

உருமாறும் அன்பும் உறவின் வன்முறையும்: பொம்மைக்காரி தொகுப்பை முன்வைத்து

சிவகுமார்

bommaikari

பாவண்ணனின் 16 சிறுகதைகளைக் கொண்ட தொகுதிதான்பொம்மைக்காரி”.  2009, 2010, 2011 ஆகிய மூன்று ஆண்டுகளில் பல்வேறு இதழ்களில் வெளியான சிறுகதைகள் இதில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.  இந்தக் கதைகளை இதழ்களில் வெளியானபோதே வாசித்திருக்கிறேன்.  அந்த வாசிப்பு அனுபவத்துக்கும் படிக்கும் போது கிடைக்கும் வாசிப்பு அனுபவத்துக்கும் நிச்சயம் வித்தியாசம் இருக்கிறது. தொகுப்பாக வாசிக்கும் போது கதைகளுக்கு இடையிலான ஒரு கதையாடல் வாசிப்பில் உருவாகின்றது.  ஒப்பீடு செய்தல் வாசக நடவடிக்கையாக மாறிவிடுகின்றது.  கதைக்கரு, கதைமாந்தர்கள், சம்பவங்கள் என இவ்வாறு பலவற்றை ஒப்பிட்டுப் பார்க்க நேரிட்டு விடுகிறது.  எனவே சிறுகதைகளைத் தொகுப்பாக வாசிப்பது ஏதோ ஒரு வகையில் மதிப்பீட்டுச் செயலாகவே அமைந்து விடுகின்றது.  அதனுடன் தொகுத்துப் பார்த்தலும் நிகழ்கின்றது.

இத்தொகுப்பில் உள்ள பெரும்பாலான கதைகள் பெண்களின் பிரச்சனைகளைப் பேசுகின்றன. அதிலும் ஆண்களுடனான பெண்களின் உறவில் ஏற்படும் சிக்கல்கள், நெருக்கடிகள் ஆழமாக முன்வைக்கப்படுகின்றன.  சாத்தியமாகக்கூடிய அனைத்து பெண்ஆண் உறவுகளும் இக்கதைகளில் பேசப்படுகின்றன.  பாலியல் சார்ந்த பெண்ஆண் உறவு குறித்த கதைகள் முக்கியமானவையாக இருக்கின்றன.  இந்தப் பாலியல் உறவில் வன்முறையும் வஞ்சகமும் இணைந்து இருப்பது நுட்பமாக வெளிப்படுகிறது. ஓரிரண்டு கதைகளைத் தவிர பிற கதைகள் அனைத்திலும் பெண் பாத்திரமானது மையமாகவும் அப்பெண்ணின் உறவு கதையாடலின் முடிச்சாகவும் உள்ளது.

தொகுப்புக்குப் பெயராக உள்ளபொம்மைக்காரிகதையில் வள்ளிமாரி இருவரும் ஏழெட்டு வருஷமாக தம்பதியராக வாழ்ந்து வருகின்றனர்.  இருவரும் பொம்மை வியாபாரம் செய்பவர்கள்.  அவனிடம் அடிபட்டு அடிபட்டு அவள் பொம்மையாகவே மாறிவிட்டாள்.  தலைப்புக்கு இப்போது பல அர்த்தங்கள் விரிகின்றன.  பொம்மை விற்பவள், பொம்மை போன்று உருமாறி விட்டவள், விரலசைவில் ஆடும் பொம்மை என அர்த்தங்கள் அடுக்குகளாக மாறும்போது கதைக்கு வேறு பரிமாணம் கிடைக்கிறது.  வள்ளிமாரி உறவு என்பது வன்முறையானதாகவே உள்ளது.  உடலுறவு என்பது வள்ளிக்கு மற்றொரு உடல்ரீதியான தண்டனையாகும்.  சகித்துக் கொள்ளுதல்மூலம் அவள் உறவைத் தொடரச் செய்து வருகின்றாள்.  இருவரும் பொம்மை விற்க சந்தைத் தோப்புக்குப் போகின்றார்கள்.  பதினேழு பாளையத்துக்காரர்கள் சேர்ந்து நடத்தும் பெரிய சந்தை இது.  சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம், ஏன் சந்தர்ப்பத்தை உருவாக்கிக் கொண்டும் வள்ளியை வார்த்தைகளால் சிதைப்பதுதான் மாரியின் வழக்கம்.  பொம்மை வாங்குவதாக பாவனை செய்து கொண்டு நாலைந்து இளைஞர்கள் வள்ளிக்குப் பாலியல் தொந்தரவு தருகின்றனர். மாரியின் எதிர்ப்பால் கலவரம் மூள்கின்றது. மாரி தாக்கப்படுகிறான்.  வள்ளியைப் பலவந்தப்படுத்த முனைகின்றனர்.  மாரியும் வள்ளியும் தப்பித்து ஓடுகின்றனர்.  இளைஞர்கள் துரத்துகின்றனர்.  அடிப்பட்டிருந்த மாரி புதர் மறைவில் தண்ணீருக்காகத் தவிக்கின்றான்.  தண்ணீர் தேடி செல்லும் வள்ளியை இளைஞர்களில் ஒருவன் மற்றவர்களுக்குத் தெரியாமல் மிரட்டுகின்றான். செயலற்று அவள் கிடக்க அவன் வன்புணர்ச்சி கொள்கின்றான்.  மாரியும் வள்ளியும் உயிராபத்தில் இருந்து தப்பித்து இருப்பிடம் சேர்கின்றனர்.  மாரி உடல் தேறி வருகின்றான்.  நடந்த சம்பவத்தைவிட கோரமாக மாரி கேள்விகளால் வள்ளியை மேலும் சின்னாபின்னமாக்குகிறான்.

எளவட்டப்பசங்களுக்கு ஒன் மேல கண்ணுடி.  வளச்சிடலாம்னு  பார்த்தாங்க.  அதான்”.

ஏழு வருஷமா ஒன்ன எல்லா இடங்களுக்கும் இழுத்து அலஞ்சி சோறு போடறதெல்லாம் கண்டவன்கிட்ட கூட்டிக் குடுத்துட்டு வேடிக்கை பாக்கறதுக்கா?”

சொல்லுடி நாயே, என்னை உட்டுட்டு ஓடிரலாம்னு என்னைக்காவது தோணுமா?”

இந்தக் கேள்விகளே, சொற்களே மாரியின் எண்ணப்போக்கை வெளிப்படுத்தி விடுகின்றன.  மனைவியைத் தக்க வைத்துக் கொள்ளுதல்தான் கணவனுக்கான கம்பீரமாக/கடமையாக உள்ளது.  மனைவியைப் பிறர் கவர்தல் என்பது கணவனின் கையாலாகத்தனமாகி விடுகின்றது.  எனவே அச்சுறுத்தல் மூலமாகவே மனைவியை கணவன் தனக்குக் கீழ் அடிபணிய வைத்து உறவைத் தொடர்கின்றான்.  ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகத் தொடரும் கருத்தியல் இப்படியான ஆண், பெண்ணை உருவாக்கி உறவை கட்டமைத்துத் தக்கவைத்து வருகின்றது.

மாரியின் கேள்விகள் மனதைக் குடைந்து கொண்டு இருக்க வள்ளி குளிப்பதற்காக குளத்துக்குச் செல்கின்றாள். திடீரென்று தன்னை வல்லுறவு கொண்டவனின் முகமும் முத்தமும் அவளின் ஞாபகத்துக்கு வருகின்றது. அடிபட்டபோது வலிக்காத அடி அக்கணத்தில் வலிக்கிறது.  அவளுக்குள் குழப்பம்.  வல்லுறவின் விளைவுகளைக் குறித்து கவலை.  தற்கொலை செய்துகொள்ள குளத்தின் மையத்தை நோக்கி நகர்கிறாள்.  கழுத்தளவு சூழ்ந்த தண்ணீர் அவள் கன்னத்தில் மோத அது முத்தமாக அவளுக்குத் தோன்றுகிறது.  இந்தத் தண்ணீரின் முத்தம் அவளின் வேதனையை அழுத்தித் துடைப்பது போன்று உணர்கின்றாள்.  திரும்பி கரை ஏறி விடுகின்றாள்.  கதை முடிகிறது.

இக்கதை பல அடுக்குகளைக் கொண்டுள்ளது.  பெண்ஆண் உறவின் கபடமும் வன்முறையும் வெளிப்படுகின்றது.  அடக்குவதிலும் அன்பு இல்லை.  அடங்கிப் போவதிலும் அன்பு இல்லை.  உறவை தக்கவைத்து நீட்டுவதுதான் வாழ்வின் குறிக்கோளாக இருக்கிறது.  கணவனான மாரியின் வன்புணர்வும் இளைஞனின் வன்புணர்வும் ஒன்றுபடும் தருணத்தை மனதில் உணரும் போது அதிர்ச்சி ஏற்படுகின்றது.  கரை ஏறும் வள்ளி மீண்டும் மாரியிடம் சொல்லடியும் உடலடியும் படுவாளா? அல்லது வேறு ஏதாவது முடிவு அவளிடம் இருக்கிறதா? யாருக்குத் தெரியும்.  வாழ்க்கை அதன் போக்கில் போகத்தான் செய்கிறது.

இந்தக் கதைக்கு எதிர்நிலையில் செயல்படும் கதைவைராக்கியம்”.  கதைசொல்லியான பெண் ஒருஅம்மாவைச் சந்தித்து அவரது வாழ்க்கை நிகழ்வுகளைத் தெரிந்து கொள்ள செல்கின்றாள்.  அந்த அம்மாவின் கதை தினமும் செத்துப் பிழைத்த கதைதான்.  தினமும் அவளைச் சாகடிப்பது கணவன்தான்.  அடி, உதை, திட்டு.  அதனோடு விருப்பமில்லாத வன்புணர்ச்சி!. இருபது. இருபத்தைந்து வருடம் வாழ்க்கை ஓடிவிட்டது.  ஒரு நாள் நான்கு பெண் பிள்ளைகள் விழித்திருக்க அடி உதையுடன் மறுக்க மறுக்க வன்புணர்ச்சிக்கு ஆளாகிறாள் அம்மா.  அடுத்த நாள் இரவு மழை. மிருகமாக அவன் அவளைப் புணர்கிறான்.  பித்து பிடித்தாற் போன்று அவள் ஆகிறாள்.  கூரைமேல் கீற்றுகளை தடுத்து வைப்பதற்காக வைத்திருந்த பெரிய கல் ஏற்கனவே சரிந்து விழுந்து இருக்கிறது.  அந்தக் கல்லைத் தூக்கி அம்மா ஒரே போடாக கணவன் தலைமீது போட்டு விடுகிறாள்.  ஆவென்ற சத்தத்துடன் அவன் உயிரை விடுகிறான்.  விடிந்த பிறகு கூச்சல் போட்டு அம்மா, ”கூரை கல்லு உருண்டு விழுந்து விட்டதுஎனக் கூறுகிறாள்.  மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றபோது அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்து விடுகிறார்கள்.  மாமியார்காரி இது கொலை என செலவு செய்து நிரூபித்து அம்மாவை ஜெயிலுக்கு அனுப்பி வைத்து விடுகிறாள்.  மாமனார்தான் ஒரு வருஷம் சென்று ஜாமீனில் எடுக்கிறார்.  அவர்தான் முதலிலேயே கூரைமேல் இருந்து கல்தான் விழுந்தது என ஆரம்பத்தில் இருந்தே சாட்சி சொல்லி வருபவர்.     

பெரிய மகள் தேர்வு எழுதி மேல்படிப்புக்கு சிங்கப்பூர் சென்று பிறகு வேலையில் சேர்ந்து மூன்று தங்கைகளையும் அங்கேயே அழைத்துக் கொள்ள ஏற்பாடு செய்கிறாள்.  கூடவே அம்மாவும் செல்ல ஏற்பாடு.  ஏழெட்டு வருடம் கேஸ் இழுத்து கொலை நிரூபிக்கப்படவில்லை என தள்ளுபடியாகி விடுகிறது.  இவ்வளவு காலமாக தான் செய்த கொலை அவளுக்குள் உறுத்திக்கொண்டே இருக்கிறது.  சிங்கப்பூர் கிளம்பும் நாளில் மாமனாரிடம் அம்மா தான் செய்த கொலையைச் சொல்லி விடுகின்றார்.  மாமனார்தான் சொன்னதே இந்த உலகத்துக்கு உண்மையாக இருக்கட்டும்” (கூரை கல் விழுந்து மரணம்) எனச் சொல்லிவிடுகின்றார்.

இந்தக் கதையும் பல அடுக்கு அர்த்தங்களைக் கொண்டுள்ள கதைதான்.  போகிற போக்கில் சில சொற்கள் மூலம் ஆழமான அர்த்தங்கள் வெளிப்படுகின்றன.  கணவனைக் கல்லைப் போட்டு கொன்றதைச் சொன்ன பிறகு அம்மா இவ்வாறு கூறுகிறார்: ”அந்த நேரம் என் மனசுல நிம்மதியே தவிர வேற எதுவுமே இல்லை.  கால்ல ஒட்டியிருந்தத கழுவி தொடச்ச மாதிரி”.  கொலையின் மூலம் கணவன் இருப்பை இன்மையாக்குவது மலத்தை கழுவி விடுவது போலத்தான் என்கிறார் அம்மா.  அதிர்ச்சியில் இருந்து மீண்டு வாசிப்பைத் தொடரும்போது மேலும் பல அர்த்தங்கள் விரிகின்றன.  காலில் ஒட்டும் மலத்தை உடனடியாகத் தண்ணீர் தேடி கழுவி விட்டுத்தான் மறுவேலை பார்ப்போம்.  ஆனால் மலமாகிய கணவனை கழுவ இருபது இருபத்தைந்து ஆண்டுகள் ஆகிவிட்டன.  இத்தனை ஆண்டுகள் மலம் ஒட்டிய காலைக் கழுவ வேண்டும் என்ற உத்வேகத்துடன் ஆனால் கழுவ முடியாத இயலாமையுடன் அம்மா இருக்கிறார்.  பொம்மைக்காரி கதையின் வள்ளியும் இந்தக் கதையின்அம்மாவும் ஒன்றுதான் கொடுமைக்கும் கணவனின் வன்புணர்வுக்கும் ஆளாகின்றார்கள்.  ஆனால் இருவரும் வித்தியாசமானவர்கள்.  அம்மாவுக்கு செய்த கொலை மனதை அரிக்கின்றது; வள்ளிக்கு இளைஞனின் வன்புணர்ச்சி மனதை அலைக்கழிக்கின்றது.  முடிவுகள் வேறுபட்டவை.

இத்தக் கதையில் கதைசொல்லியான பெண் இன்றைய காலகட்டத்தின் பிரதிநிதி; அம்மா முந்தைய தலைமுறையின் பிரதிநிதி.  கதைசொல்லிப் பெண் திருமணமாகி விவாகரத்து பெற்றவள்.  அதாவது சட்டம் மூலம் கணவனிடம் இருந்து விடுதலை பெற்றவள்.  அம்மா கணவனைக் கொலை செய்து அவனிடம் இருந்து விடுதலை பெற்றவள்.  கதையாடல் முழுவதும் இந்த இரு பெண்களும் சமமாகப் பாவிக்கப்படுகின்றார்கள். ”புருஷன் தொணதான் மனுஷத்தொணையாக இருக்கணும்னு கட்டாயம் எதுவும் இல்லையேஎன அத்தையைக் கேட்கலாம் என எழுந்த வார்த்தைகளை எனக்குள்ளாகவே சொல்லிக் கொண்டேன்,” எனக் கதை முடிகின்றது.  சொல்லின் அர்த்தங்களைவிட சொல்லாத அர்த்தங்கள் புலப்படுகின்றன.  இந்தக் கதையில்அம்மாவுக்குப் பெயரில்லை.  இவள் காளியும் யசோதையும் கலந்த பிறப்பு.

இந்தக் கதைகளைப் படிக்கும்போது பல கேள்விகள் எழுகின்றன.  இக்கேள்விகளுக்குப் பதில்கள் கதைகளில் இல்லை.  வாழ்வில் தேடிப் பார்க்கலாம்.  ஆனால் இதுதான் விடை என்று உறுதியாகச் சொல்ல முடியாத கேள்விகள் இவை.  அதனாலேயே இவை முக்கியமானதாகின்றன.  குப்புஎன்ற கதையில் குப்பு என்ற பெண் ஏழுமலை ஓட்டுநரைக் காதலிக்கிறாள்.  காதல் பழக்கத்தால் அவள் கர்ப்பமாகின்றாள்.  முதலில் இயல்பாக கர்ப்பத்தை எதிர்கொள்ளும் ஏழுமலை பிறகு அவளை பிள்ளை பெற்று தொலைத்துவிட்டு வருமாறு கூறுகிறான்.  அப்படி வந்தால் திருமணம் செய்து கொள்ளலாம் என்கிறான்.  இந்தக் கொழந்த போனா என்ன, இன்னொரு கொழந்தய பெத்துக்க முடியாதா? என்கிறான்.  குப்புவும் குழந்தையை பெற்றெடுத்து பிறகு பதினைந்தாம் நாள் அக்குழந்தையை திட்டமிட்டு தொலைத்துவிட்டு ஏழுமலையிடம் வருகின்றாள்.  கன்னிப் பெண்ணாக வா, கல்யாண விஷயம் பேசலாம்னு சொன்ன, வந்திருக்கிறேன் என்கிறாள்.  ஆனால் ஏழுமலையோ மாமா பெண்ணை பதினைந்து நாட்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டு விட்டான்.  அதிர்ச்சி அடைகிறாள் குப்பு.  இத்துடன் கதை நின்றுவிடுகிறது.  குப்பு இனி என்ன செய்வாள் என்பது சிந்தனையின் அடுத்த கட்டம்.  ஆனால் கதைக்குள்ளேயே எழும் கேள்வி: ”எந்த நம்பிக்கையின் அடிப்படையில் குப்பு குழந்தையைத் தொலைத்துவிட்டு அவனிடம் வருகின்றாள்?” என்பதுதான்.

இதேபோன்றுஅட்டைகதையில் கோபாலு என்ற திருமணமாகாத இளைஞன் திருமணமான நீலா டீச்சர் மேல் காதல் கொள்கின்றான்.  இந்தக் காதலுக்கு அடிப்படை என்ன? ஏன் கோபாலு நீலாவைக் காதலிக்கிறான்? “அழைப்புஎன்ற கதையில் தனது மனைவி சியாமளாவை மீறிதான் சேர்த்துக் கொண்ட துணைவி ராதாவைப் போய் சொக்கலிங்கத்தால் ஏன் பார்க்க முடியாமல் போகின்றது.  ”வழிகதையில் பாலியல் தொழிலாளியான அஞ்சலையை திருமணம் செய்து கொண்ட ரங்கசாமி பிறகு அவளே அறுத்துவிடச் சொன்ன போதும் முடியாமல் ஏன் தவிக்கிறான்? “அடைக்கலம்கதையில் இடிந்த கோட்டையில் வந்து விடப்படும் முதியவர்களுக்கு அந்த இளைஞன் ஏன் தொடர்ந்து உதவி செய்கின்றான்?“ “பிரயாணம்கதையில் பிரெஞ்சு அதிகாரி பெஞ்சமின் முசே மட்டும் ஏன் இவ்வளவு நல்லவராக இருக்கிறார்?  இப்படியான கேள்விகள் வாசிக்கும் போது மனதில் எழுவதுதான் இக்கதைகளின் வெற்றியாகத் தோன்றுகின்றது.

துணைஎன்ற கதை மட்டும் பிரச்சனைக்குரிய கதையாக இருக்கிறது.  பிற கதைகளில் பெண் பாத்திரங்கள் மீதான கரிசனமும் கவனமும் குறிப்பிடத்தக்கதாக உள்ளன.  மீறவோ மீளவோ முடியாத பெண்களாயினும் அவர்களின் இருப்பு கதையாடலில் கவனத்துக்குள்ளானது.  ஆனால்துணைகதையில் இது முற்றிலும் எதிரானதாக உள்ளது.  கணபதி என்ற திருமணமாகாத 42 வயது ஆணுக்கு திருமண ஏற்பாடு.  முகூர்த்தத்துக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு மணப்பெண் நான்கு ஆண்டுகளாக ரகசியமாகக் காதலித்தவனோடு ஓடிப்போய் விட்டாள்.  மணப்பெண்ணின் தங்கையை அடுத்த மணப்பெண்ணாக்கி திருமணமும் முடிகின்றது.  பெண்ணின் வீட்டுக்கு அன்றே கணபதி மறுவீடு விசேஷத்துக்குச் செல்கின்றான்.  சிறிது நேரத்திலேயே தாலிகட்டிய மனைவி கடிதம் எழுதி வைத்துவிட்டு ஓடிவிடுகிறாள்.  அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கணபதிக்கு.  அவனுடைய மனவேதனையும் அவனது குடும்பத்தாரின் எதிர்வினையும் ப்ரீத்தி நாயின் செயலும்தான் கதை.  இப்படி அடிபட்ட. அவமானப்பட்ட ஒரு ஆணின் துயரத்தைப் பேசலாம்தான்.  ஆனால் சொல்லும் முறையில், கதையாடலில் இவனின் துயரத்திற்குக் காரணமான அந்த இரண்டு பெண்களும் குற்றவாளிகள் போல ஆக்கப்படுவது என்ன நியாயம்? பல பாத்திரங்களின் ஊடாக உருவாகும் இரண்டு மணப்பெண்களின் சித்திரமும் வில்லிகள் போல உருப்பெறுவது தவிர்க்கப்பட்டு இருக்க வேண்டும்.

சமூகத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வருகின்றன.  குடும்பம்என்பதே வன்முறையைப் பயிலும் களமாக நிற்கின்றது.  கருணைக் கொலை, முதியவர் தனித்து விடப்படுதல், பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை/ வன்புணர்ச்சி, குடிப்பழக்கம் முதலான சமூகக் கொடுமைகளை இக்கதைகள் பேசுகின்றன.  ஆனால் எந்தக் கதையிலும் இந்தக் கருத்துக்கள் பிரச்சாரமாக மாறவில்லை.  கதையின் போக்கில், கதையாடலில் இந்தக் கருத்துக்கள் வாசகரைச் சிந்திக்க வைக்கின்றன.  ஒவ்வொரு கதையும் வேறு வேறு தளத்தில் இயங்குகின்றன.  பாத்திரங்களும் பலவகை மாதிரிகளைச் சேர்ந்தவர்கள்.  பேசுபொருள்களும் கதைக்கு கதை வித்தியாசப்படுகின்றன.  ஆனால் சொல்கின்ற முறையும் நடையும் மொழியும் எல்லாக் கதைகளுக்கும் ஒன்று போலவே தோன்றுகின்றன.  இந்தப் பதினாறு கதைகளும் ஒரு நாவலின் பதினாறு அத்தியாயங்கள் என்ற உணர்வு ஏற்படுகின்றது.

பாவண்ணன் இதுவரை எழுதியுள்ள சிறுகதைகளில் இருந்து ஆகச்சிறந்த 10 சிறுகதைகளைத் தேர்ந்தால் அதில் இரண்டு அல்லது மூன்று சிறுகதைகள் இத்தொகுப்பில் உள்ளவையாக இருக்கும் என்பதை மறுக்க முடியாது.

பொம்மைக்காரி“, பாவண்ணன், சந்தியா பதிப்பகம், சென்னை-83, 2011