பிற

கெய்சீரோ ஹிரானோ நேர்முகம் – ஜப்பானிய மொழியில் விவியன் எங், ஆங்கில மொழியாக்கம் ஏலி கே. பி. வில்லியம்

(பென் தளத்தில் வாரம் ஒரு எழுத்தாளரிடம் பத்து கேள்விகள் கேட்டு நேர்முகம் பதிப்பிக்கிறார்கள். இந்த வாரம் வந்த நேர்முகத்தில் ஐந்து கேள்விகள் இங்கு)

1. “புனைவு சில ரகசியங்கள் வெளிப்படுவதைக் கட்டுப்படுத்திக் கொள்ள உதவுகிறது என்றாலும் வேறு ரகசியங்களை வெளிப்படுத்த அது ஒன்றே வழி,” என்று ‘அட் தி எண்ட் ஆப் தி மேட்டினி’ நாவலின் முன்னுரையில் எழுதுகிறீர்கள். உண்மையின் தடத்தை உங்கள் எழுத்து எவ்வாறு கண்டு கொள்கிறது? உண்மைக்கும் புனைவுக்கும் உள்ள உறவு பற்றி இன்னும் கொஞ்சம் சொல்ல முடியுமா?

‘உண்மை,’ என்ற சொல்லைக் காட்டிலும் ‘மெய்ம்மை’ என்ற சொல்லே புனைவின் பின்புலத்தில் பொருந்தும் என்று எனக்கு தோன்றுகிறது. புனைவின் தேவையை எதார்த்தம் வலியுறுத்துவதால்தான் அது தேவைப்படுகிறது. வேறு சொற்களில் சொன்னால், இப்போது என்ன நடந்து கொண்டிருக்கிறதோ அதை இன்னும் சுத்திகரிக்கப்பட்ட வடிவில் பகிர்ந்து கொள்ள மெய்ம்மை என்னை நோக்கி அழைப்பு விடுக்கிறது.

வேறு வழியில் சொல்ல முடியாத தனிப்பட்ட அனுபவங்களையும் புனைவின் பாதுகாப்புக் கூத்தின் உள்ளிருந்து பிறருக்கு தெரியப்படுத்த முடியும். சில சமயம் மெய்ம்மை குறித்து நமக்குள்ள அதிருப்தியும்கூட புனைவில் நிறைவு காண விரட்டுகின்றன என்றும் நினைக்கிறேன். மெய்யுலகில் வாழ்ந்து களைத்துப் போவது புனைவு அளிக்கும் விடுதலையை உணரச் செய்வதை நமக்குச் சாத்தியப்படுத்துகிறது என்று நினைக்கிறேன்.

2. இடத்துக்கும் கதைக்கும் உள்ள உறவு என்ன? உங்கள் எழுத்தில் குறிப்பிட்ட சில இடங்களுக்கு நீங்கள் எப்போதும் திரும்பிச் செல்வது உண்டா?

தென் பிரான்ஸ் முதல் மத்திய காலகட்டம் வரையும் 19ஆம் நூற்றாண்டு பாரிஸ்சிலிருந்து மெய்ஜி சகாப்தத்தின் நாரா கோட்டம் வரையும் டோக்கியோ முதல் எதிர்கால ஹூஸ்டன் வரையும்- மார்ஸ், நிகர் மெய்ம்மையைச் சொல்லவே வேண்டாம்- கதைக்கருவையொட்டி என் படைப்பின் களம் தொடர்ந்து மாறிக் கொண்டிருப்பது. கதைக்கு எந்த இடங்கள் பொருத்தமாக இருக்கும் என்பதை நான் கவனமாக பரிசீலிக்கிறேன். எழுதுவதற்கு முன் நேரடியாக அங்கு போய் அந்த இடத்தை அறிந்து கொள்கிறேன். நான் உண்மையாகவே வாழ்ந்த, அல்லது சென்று கண்ட இடங்கள்தாம் என் கதைக்களங்கள். எனவே இயல்பாகவே நான் இப்போது வசிக்கும் டோக்கியோ நான் அடிக்கடி பயன்படுத்தும் கதைக்களமாகிறது.

3. பாத்திரங்களையும் கதையோட்டத்தையும் வளர்த்தெடுக்க மெய்ம்மையை பல எழுத்தாளர்களும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால் அதை புத்தகத்தில் எங்கும் குறிப்பிடுவது வழக்கமில்லை. மகினோ யோகோ கதை நீங்கள் அறிந்த மனிதர்களின் “உண்மை” கதையின் அடிப்படையில் எழுதப்பட்டது என்பதை வாசகர்கள் அறிய வேண்டும் என்பது ஒரு முக்கியமான விஷயமாக உங்களுக்கு ஏன் தோன்றியது?

18ஆம் நூற்றாண்டு முதல் 20ஆம் நூற்றாண்டின் மத்திய பகுதி வரை எழுதப்பட்ட முக்கியமான கதைகள் சிலவற்றில் முன்னுரை எப்பணி இயற்றுகிறது என்பதில் எனக்கு ஆர்வமிருந்தது. கதாநாயகன் ஏன் குறிப்பிடத்தக்க கவனம் செலுத்தும் தகுதி கொண்டவனாய் இருக்கிறான் என்பதை ராபின்சன் குரூசோ, கரமசோவ் சகோதரர்கள், தி மாஜிக் மவுண்டெய்ன், நாசியா ஆகிவற்றின் முன்னுரைகள் வசீகரமான வகையில் விளக்குகின்றன. வெகு சீக்கிரம் சலிப்படையும் வாசகர்களின் ஆர்வத்தைக் கைப்பற்ற கதையின் பரபரப்பான இடத்துக்குள் விரைய வேண்டிய தேவையில்லாமல் கதை அதன் வாசகர்களை மெல்ல மெல்ல தன்னுள் இழுத்துக் கொள்ள இந்த உத்தி அனுமதிக்கிறது.

கூடுதலாக, கதாநாயகன் உண்மையாக வாழ்ந்தவன் என்று இப்பின்புலத்தில் விவரிக்கப்படும்போது, எழுத்தாளருக்கும் வாசகருக்கும் இடையில் உள்ள உறவில் மாற்றம் ஏற்படுகிறது. வாசகர்கள் எதிர்வினையாற்றும் வகையில் ஆசிரியன் ஒரு நாயகனை அளிப்பதற்கு பதில் – நாயகனை நடுவில் வைத்துக் கொண்டு எழுத்தாளரும் வாசகரும் ஒருவரையொருவர் எதிர்கொள்வதற்கு பதில்- அருகருகே நின்று, ஒரே கோணத்தில் நாயகனை இருவரும் காண முடிகிறது.

வெறும் புனைவாக இருக்கக்கூடிய படைப்பில், “அழகு,”, “திறமை,” போன்ற விவரணைகளை வாசிக்கும்போது வாசகர்கள் எச்சரிக்கையாக இருப்பார்கள். இது போல நல்ல வகையில் நாயகனைச் சித்தரிக்கும்போது அது வலிய திணிக்கப்பட்டது போலிருக்கும். ஆனால், நாயகன் ஒரு நிஜ மனிதரின் அடிப்படையில் அமைக்கப்பட்டிருந்தால், இது போன்ற விவரணைகள் புறவயப்பட்டவை என்று வாசகன் ஏற்றுக் கொண்டு விடுவான். அப்படி ஒரு மனிதர் உண்மையில் இருந்தாரா என்பதே சந்தேகமாக இருந்தாலும்கூட இதுவே உண்மை. குறிப்பாக மார்க்கரீட் யூர்செனாரின் ‘கூ டி கிரேஸ்,’ என்ற நாவல் ‘அட் தி எண்ட் ஆஃப் தி மேட்டினி’ எழுதும்போது எனக்கு ஒரு முன்னோடியாக இருந்தது.

அக்காலத்தில் தன் காலத்துக்கும் முற்பட்ட காலங்களைப் பற்றிய நாவல்கள் எழுதப்பட்டபோது பிற்காலத்தில் மீபுனைவு கொண்டு படைப்பின் புனைவுத்தன்மை உணர்த்தப்பட்டது போல் உணர்த்தப்படும் வழக்கமில்லை என்றாலும் புனைவென்பது தன்னவில் புனைவு என்பது வெளிபபடையாக இருந்தது. இன்றுள்ள நிலைக்கு இது நெருக்கமான ஒன்று என்று நினைக்கிறேன். எழுத்தாளர்களின் அன்றாட வாழ்வு நம்முன் சமூக ஊடகங்களில் வந்து சேர்ந்து விடுகிறது. ஆனால் இது பற்றி நான் பேச ஆரம்பித்தால் நிறுத்த மாட்டேன், எனவே வேறொரு சமயம் இதைப் பார்த்துக் கொள்ளலாம்.

4. நீங்கள் எப்போதும், “வாசகர்களின் கரங்கள் கட்டுப்படுத்த முடியாமல் மறு பக்கம் திருப்பச் செய்யும் நாவல்கள் எழுதுவதை விட, அவர்களை உள்ளிழுத்துக் கொண்டு மறு பக்கம் திருப்பவும் திருப்பாமல் இருக்கவும் விரும்பும் வகையில் அதன் கதகதப்பில் எப்போதும் வாழ்ந்து கொண்டிருக்க நினைக்கும் நாவல்களை எழுதவே விரும்பியதாக,” சொல்லியிருக்கிறீர்கள். இந்த இரு வகை நாவல்களையும் ஒன்றிலிருந்து மற்றொன்றை வேறுபடுத்திக் காட்டும் குறிப்பிடத்தக்க தனித்தன்மைகள் எவை என்று நினைக்கிறீர்கள்? அண்மைக் காலத்தில் நீங்கள் வாசித்த புத்தகங்களில் ஏதேனும் அதன் பக்கங்களுக்குள் விரியும் உலகினில் நிலைகொண்டு தங்கி விட வேண்டும் என்று உங்களை விரும்பச் செய்திருக்கிறதா?

ஒரு நாவல் தொடர்ந்து வாசிக்கச் செய்யும் உரைநடை, ஆன்மாவை அசைக்கும் சொற்கட்டுமானம், நிஜ மனிதர்களைவிட அவர்களைப் புரிந்து கொள்ளும் விழைவை ஏற்படுத்தும் பாத்திரங்கள் கொண்டதாய், மெய்ம்மையைக் காட்டிலும் ஆன்மீக உச்சம் தொட்ட பரவச உணர்வு அளிக்கும் உலகைச் சித்தரிப்பதாய் இருக்கும்போது, அதை வாசித்து முடிக்கையில் எனக்கு வருத்தம் வருகிறது. குற்றமும் தண்டனையும், பட்டன்புரூக்ஸ் போன்ற படைப்புகள் மிகவும் நீளமாக இருக்கின்றன, ஆனால் அவற்றை முதல் முறை படித்து முடித்ததும் மூடி வைக்கும்போது உண்மையாகவே ஒரு துயரத்தை உணர்ந்தேன். கலைப் படைப்புகள் ஒரு வகை உக்கிரமான, புலன்களால் உணர்ந்து கொள்ளக்கூடிய அனுபவம் அளிப்பதுதான் இதன் காரணம் என்று நினைக்கிறேன். இன்னும் சமீப காலத்தைய உதாரணம் கொடுப்பதானால், ஹான் காங்கின் கதைகள் நான் இப்போது விவரித்த அனுபவத்தை எனக்கு அளித்திருக்கின்றன.

ஆனால் மறுபக்கம், நம்மை உள்ளிழுத்துக் கொண்டு பக்கங்களைத் திருப்பிக் கொண்டே இருக்கச் செய்யும் புத்தகங்களையும் நாம் விரும்பி வாசிக்கிறோம், ஒரு சில தொழில்நுட்ப உத்திகளைப் பயன்படுத்தி இதையே முக்கிய நோக்கமாகக் கொள்ளும் புத்தகங்கள் ஒரு வகை வெறுமை கொண்டவை.

5. யோகோவுக்கும் மகினோவுக்கும் இடையில் உள்ள ரசாயனத்தின் கூறுகளில் ஒன்று அவர்களது உரையாடல் பொதுவான விஷயங்கள் பற்றி இருப்பது. குறிப்பாய், துவக்க உரையாடலில் இவ்வுலகில் உள்ள அழகு பற்றி அவர்கள் பேசிக் கொள்வது என் கவனத்தை ஈர்த்தது. வன்முறை நிறைந்த திரைப்படங்களை ரசிக்கும் வகையில், “கொடூரத்தை ஏற்றுக் கொள்ளச் செய்வது,” போன்ற “கனமான பணிகளை எப்போதும் சுமந்து களைத்துப் போவதிலிருந்து,” அழகுக்கு விடுதலை அளிக்க வேண்டும் என்று மகினோ சொல்கிறான். யோகோ வேறொரு கோணத்தை முன்வைக்கிறாள். “இவ்வுலகின் கொடூரங்களில் இருந்து கணப்பொழுது கண்களை விலக்கிக் கொள்ளச் செய்யும் அதே ஆற்றல் அழகுக்கு உண்டு” (78-79) என்கிறாள் அவள். காதல் போன்ற உக்கிரமான, நிலையற்ற உணர்ச்சியைப் பற்றி எழுதும்போது அழகிய கணங்களை விவரிப்பதையும் கனமான கணங்களை விவரிப்பதையும் எப்படி சமநிலைப்படுத்திக் கொல்கிறீர்கள்? உரையாடல் கொண்டு இந்த சமநிலையை எப்படி வலுப்படுத்துகிறீர்கள்?

இந்த விஷயத்தில் இசையும் ஓவியமும் எனக்கு நிறைய கற்றுத் தந்திருக்கின்றன. ஒரு கதையின் ஒட்டுமொத்த ஓட்டத்தை இசைப் பதங்கள் கொண்டு தொகுத்துக் கொள்கிறேன். இதற்கு காரணம், இசை என்பது காலம் சார்ந்த கலை. மூவ்மெண்ட், டிரான்ஸ்சிஷன், ஹார்மனி, மெலடி போன்ற பதங்கள் சமநிலையையும் கதையோட்டத்தில் மாற்றங்களையும் கற்பனை செய்து பார்க்கவும் உதவுகின்றன.

ஆனால் ஒரு தனிக் காட்சியை அதன் நுண்தகவல்களோடு எழுதிக் கொண்டிருக்கும்போது எதை முன்னிலைப்படுத்துவது எதைப் பின்னணியில் வைப்பது என்பதற்கு இடையிலுள்ள சமநிலையை ஓவியப் பதங்கள் வழியே உணர்ந்து கொள்கிறேன். ஒவ்வொரு காட்சியிலும் எதை முழுமையாகவும் தெளிவாகவும் முன்னிலைப்படுத்த வேண்டும், எதைப் பின்னணியில் இருத்த வேண்டும், அதற்கென்று ஒரு தொலைவும் விரிவும் அளிக்க வேண்டும்.என்று நான் என்னிடமே கேட்டுக் கொள்கிறேன்.

THE PEN TEN: AN INTERVIEW WITH KEIICHIRO HIRANO, TRANSLATED BY ELI K.P. WILLIAM By: Viviane Eng

என்   இறப்பு பற்றிய நினைவுக் குறிப்பு- வைக்கம் முகமது பஷீர்

தமிழில் : தி. இரா. மீனா

இந்த அழகான பூமியில் எனக்கென ஒதுக்கப்பட்டிருந்த காலம் முழுமையும் கழிந்திருக்கிறது. எனக்கு மேலும் கால அவகாசமில்லை. காலமிருப்பது, என்பது அல்லாவிற்கு— கடவுளுக்குத்தான். அவன் காலத்திற்கு முடிவேயில்லை, அது முடிவற்றது; காலம் முடிவற்றது.

இந்த நாள் வரை நான் காலையில் படுக்கையிலிருந்து எழும்போதும், எப்போதும் காலைப் பொழுதாக இருக்காதபோதும் நான் காலத்திற்கு வணக்கம் சொல்கிறேன்; முடிவற்ற காலத்திலிருந்து எனக்கு மேலும் ஒரு நாளை நீட்டித்ததற்கு கடவுளே நன்றி.

இந்து மற்றும் இஸ்லாமிய சந்நியாசிகள்- சூபி ஆகியவர்களுடன் நான் கழித்த நாட்கள் நினைவிற்கு வருகின்றன. உண்மையைத் தேடி  நான் அலைந்த நாட்கள் அவை. கடவுள் பற்றிய இணைச்சொற்களை நான் கணக்கிட்டுக் கொண்டிருந்தேன். ஏறக்குறைய நிர்வாணத்தோடு உட்கார்ந்து தலை முடியும், மீசையும் வளர, இடையீடின்றி சிந்தனைகளால் சூழப்பட்டிருந்தேன். பத்மாசனம் போட்டு “யோகாதண்டுவை” கையில் வைத்திருப்பதாகப் பாவித்தேன். அனைத்துலகச் சிந்தனைகளையும் நான் மனதிலிருத்தியிருந்தேன். என் தியானத்திலிருந்து மீளும்போது  சூரியன் ,சந்திரன், விண்மீன்கள், பால்வீதி, சூரிய மண்டலம், அண்டம் ஆகியவைகளுக்குக் கேட்கும்படியாக நான் “அஹம் பிரம்மாஸ்மி” என்று முணுமுணுக்கிறேன். அது சூபிக்கள் சொல்லும் “அனல் ஹஃ” (Anal Haq) என்பது தான்.

என்னுடைய “அனர்ஹ நிமிஷம்“ (Anargha Nimisham) தொகுதியில் “அனல் ஹஃ” பற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன். அன்று நான் இறக்கப் போகிறேன் என்று நினைத்தேன், நான் இல்லாமல் போவேன் என்று நினைத்தேன். இது வரை யதார்த்தம் உன்னையும் என்னையும் கூறாகக் கொண்டிருந்தது; ஆனால் இதற்குப் பிறகு நீ மட்டும்தான் யதார்த்தமாக இருப்பாய். அந்தக் கணம்தான் “அனர்ஹ நிமிஷம்”, விலைமதிப்பற்ற கணம்

எனக்கு மரணம் பற்றிய பயமில்லை. அது உண்மை; நான் மரணத்தை பயமுறுத்துகிறேன் என்பதும் இணையான உண்மைதான். மரணம் தவிர்க்க முடியாதது; அது தன் பட்டியல்களுடன் வரட்டும்.

பிறந்தது முதல் நான் மரணத்துடன் உராய்ந்திருக்கிறேன். ஒரு முறை கடுமையான விஷமுடைய கட்டுவிரியன் என் வலது காலைச் சுற்றிச் சூழ்ந்திருந்தது. இன்னொரு சமயத்தில் நல்ல பாம்பு என் இடது காலில்  தவழ்ந்து கொண்டிருந்தது. பெரும்பாலும் பல இரவுகளில் என் வீட்டில் நல்ல பாம்புகள் புகுந்திருக்கின்றன. கடைசி முறை அது மிக அணுக்கமாக வந்தது; நான் ஏறக்குறைய அதை மிதித்து விட்டேன்.

நான் இறந்து விட்டேன். இதற்குப் பிறகு யாராவது என்னை நினவு வைத்திருக்க வேண்டுமா? யாரும் என்னை நினைவு வைத்திருக்கத் தேவையில்லை என்பதுதான் என் அபிப்பிராயம். ஏன் நினைவு வைத்துக் கொள்ள வேண்டும்? கடந்து போன வருடங்களில் எண்ணிக்கையற்ற கோடிக்கணக்கான மக்கள், ஆண், பெண்கள் இறந்திருக்கின்றனர். யாராவது அவர்களை நினைவில் வைத்திருக்கிறார்களா?

என் புத்தகங்கள் எத்தனை காலம் வாழும்? ஒரு புதிய பூமி உருவாகலாம். கடந்த காலத்தவை எல்லாம் புதியவற்றில் கரைந்து எதுவுமின்றி மறைந்து போகலாம். என்னுடையது என்று நான் சொல்லிக் கொள்ள என்ன இருக்கும்? என்னுடையது என்று சொல்லிக் கொள்ளும் ஓர் இம்மியளவான அறிவையாவது நான் இந்த உலகத்திற்கு அளித்திருக்கிறேனா? கடிதங்கள், சொற்கள், உணர்வுகள்–இவையெல்லாம் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தியிருக்கி்றவைதான்.

இரண்டு மூன்று முறைகள் என் எல்லைக்குட்பட்ட நிலையில் நான் தனியாக நின்று கொண்டு ,முழு நிலா மற்றும் எண்ணற்ற நட்சத்திரங்கள் உருவாக்கியிருக்கும் அச்சமும் மதிப்புமான அழகை கவனித்திருக்கிறேன் அதை உள்ளடக்கத் தவறி, பயத்தில் அழுது ஓடியிருக்கிறேன். அந்தப் பாலைவனத்தோடான முதல் சந்திப்பிலேயே நான் மரணித்திருக்க வேண் டும்..

அது அஜ்மர் அருகேயுள்ள ஏதோ ஓரிடம். நடு மதியப்பொழுது. நான் நடந்து கொண்டிருந்த பாதை பாலைவனத்தின் விளிம்பு. முன்பு அந்தப் பகுதியின் பள்ளங்களில் பாதசாரிகளுக்கு தங்கள் வழியைக் கண்டுபிடிக்க உதவும் வகையில் செம்பாறைக் கற்கள் அடையாளமாக இருந்தன. ஆனால் இப்போது பாலைவனக் காற்றின் வரட்சியால் மண்குவியல்கள் அந்தப் பாறைகளை மூடிவிட்டன. நான் வழி தவறிவிட்டேன். உஷ்ணமும், தாகமும் பொறுக்க முடியாதவையாக இருந்தன.

நான் வலதுபுறத்தை நோக்கிப் போயிருக்க வேண்டும் ;ஆனால் இடதுபக்கம் திரும்பி விட்டேன். இப்போது அந்தப் பாலைவனம் எல்லையற்று என் முன்னால் மிகுந்த வெம்மையோடு நீண்டிருந்தது. சூரியன் இரக்கமின்றி என் தலை மீது கொளுத்திக் கொண்டிருந்தது. திசையின்றி நான் நடந்து கொண்டிருந்தேன். பாதம் மண்ணில் புதைந்தது- அது குளிர்வது போல இருந்தது– சூரியனின் தகிப்பில் நான் எரிந்தேன் — பொறுக்க முடியாத தாகம். சோர்ந்து விழுந்தேன். ஆனால் நான் இப்போது ஒரு பெரிய கரிக்கட்டை துண்டுதான். மையப்பகுதியில்,உள்ளே ஒரு சிறிய சிவப்பு ஒளிவட்டம். அல்லா! அது என்ன?

அதுவும் கூட மறைந்தது. நான் நினைவிழந்தேன். எவ்வளவு நேரம் அந்த உருக்கும் வெம்மையில் கிடந்தேன் என்று தெரியவில்லை. பல மணி நேரமாக இருக்கலாம். நாட்களாக இருக்கலாம்.

அங்கு இறந்து கிடந்தேன் என்று வைத்துக் கொள்ளலாம். பல மணி நேரமாக இருக்கலாம். நாட்களாக இருக்கலாம். எனக்குத் தெரியாது.

அதை நினைத்துப் பார்க்கும்போது ஒரு நகைச்சுவை போல் தெரிகிறது. பூமியில் வாழ்க்கை என்பது ஒரு பெரிய “வேடிக்கைதான்”, கடவுளின் நாடகம்.

வி.கே.என். ஒரு முறை மரணம் பற்றி என்னிடம் கேட்டார். ”கடைசி நிமிடம் வரை அவர் கடத்துகிறார்” என்றேன்.

வைக்கம் முகமது பஷீர் இறந்துவிட்டார். செய்தி வருகிறது. ஏன் அவர் இறந்தார்? எல்லாவற்றிற்கும் ஒரு காரணம் இருக்க வேண்டும். அவ்வளவுதான்.

பாருங்கள், இப்போது நான் இறந்து விட்டேன். என் இறப்பிற்குத் தகுந்த காரணங்கள் இருக்கிறதா என்று சரி பார்த்துக் கொள்ளுங்கள். முடிவற்ற நேரம் எனக்கு இல்லை என்று நான் சொல்லவில்லையா?

நான் அனைவரையும் வணங்குகிறேன். மாமரத்தையும் வணங்குகிறேன்; பூமியின் எல்லா படைப்புகளையும். அண்டமே—நான் ஏதாவது உனக்குத் தீங்கிழைத்திருந்தால் என்னை மன்னித்துவிடு. எல்லோரும் என்னை மன்னியுங்கள்.

—————————–

நன்றி : Malayalam Literary Survey   April –Sep 1994  Kerala Sahitya Academy

 

 

 

 

ஈரம் நிரந்தரம் – வண்ணதாசன் முன்னுரை

தேர்வு மற்றும் தட்டச்சு உதவி – சிவா கிருஷ்ணமூர்த்தி

(நவீன தமிழிலக்கியத்தின் முக்கிய படைப்பாளிகளுள் ஒருவரான திரு. வண்ணதாசன் அவர்களுக்கு 2016 வருட சாகித்ய அகாதெமி மற்றும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் ‘விஷ்ணுபுரம் விருது’ம் வழங்கப்படும் இந்த தருணத்தில், அவரது பல முக்கிய எழுத்துகளை நினைவுபடுத்திக் கொள்ளும் நோக்கத்திலும், அவருக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்தை தெரிவிக்கும் விதத்திலும் ‘நடுகை’ என்ற தொகுப்பிற்கு அவர் எழுதிய முன்னுரையை வெளியிடுவதில் பதாகை பெருமகிழ்வு கொள்கிறது.)

oOo

ஈரம் நிரந்தரம்
(நன்றி அகரம் பதிப்பகம்)

தண்டவாளங்களும் மின்சார ரயில் பயணங்களும் வாழ்க்கையின் தவிர்க்க முடியாத பகுதியாகிவிட்ட நிலையில் இதை எழுத ஆரம்பிக்கிறேன். எதிர்பார்த்ததைவிடக் குறைந்த நெரிசல் உடைய பயணங்கள்தான். நெரிசல்களை ஊடுறுவிச் செல்கிற மனம் இன்னும் வரவில்லை. அடுத்த வண்டி, அடுத்த வண்டி என்று இந்த வண்டித் தொங்கல்களை நகர அனுமதித்துக் கொண்டிருக்கிறேன். ஒரே ஒருநாள் ‘வெண்டார்’ வண்டியில் ஏறிய போது, சேத்துபட்டிலோ, எழும்பூரிலோ பிணம் ஒன்றை ஏற்றினார்கள். விபத்துப் பிணம். முகம் நசுங்கி இருந்திருக்கலாம். இடுப்புத் துணி விலகிக் கிடக்க, இறந்த உடம்பின் திறந்த பெருந்தொடையில் நிறையப் புண்கள். பிணந் தூக்கியவர்கள் சிரித்துக்கொண்டு ஒருவர் மேல் ஒருவர் பீடிகளை எறிந்து கொண்டார்கள். பத்திருபது பீடிகள் பிணத்தின் மேலும் அருகிலும் சிதறிக் கிடந்தன.

இன்னொரு தினம் காத்திருக்க வேண்டிய நிலை. வண்டி வருகிற திசையைப் பார்த்துக்கொண்டே, சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்தேன். என் முகத்தைப் பாராமலே, பத்திரிக்கையை பார்த்தபடியே உடம்பு சற்று நகர்ந்து கொண்டது. பத்திரிக்கைப் பார்வையின் தீவிரத்தை ஆசுவாசப்படுத்த அவ்வப்போது வேர்க்கடலை கொறித்துக் கொண்டது. தற்செயலாக இடதுபுறம் திரும்புகிறேன். யாரோ படுத்துக் கிடப்பது போல் இருந்தது.

சரியாகப்பார்த்தால் இன்னொரு பிணம். பிணத்தை மூடி, மேலேயே ஒரு மஞ்சள் பையையும் வைத்திருந்தார்கள். அந்த துணிப்பை கொடுத்த அதிர்ச்சி அதிகம். இறந்து போனவர் நிச்சயம் எங்கள் ஊர்க்காரர் என்று தோன்றிவிட்டது. அதுவும் எனக்கு இரண்டாம் வகுப்பு சொல்லிக்கொடுத்த ஒரு ஆசிரியர் என்று தோன்றிவிட்டது. ஏற்கனவே இறந்து போய்விட்ட அவர், மறுபடி இப்படி மின்சார ரயிலில் அடிபட்டு கிடப்பார் என்று எப்படி எதிர்பார்க்க முடியும். முகத்தை விலக்கிப் பார்க்க முடியவில்லை. என்னால் முடிந்தது எல்லாம், இதையெல்லாம் மறந்து, இதற்கெல்லாம் சகஜமாகி, பத்திரிக்கை படிக்காமல் இருப்பது, வேர்க்கடலை கொறிக்காமல் இருப்பது மட்டும்தான்.

பிணங்களுடன் பயணம் செய்வது போல் பூக்களுடனும் பயணம் உண்டு. சனிக்கிழமை பிற்பகல்களில் கோட்டை நிலையத்தில் பூ மூட்டைகளுடன் ஏறுவார்கள். ஏறி இறங்குகிற பாதையில் உட்கார்ந்து கொள்வார்கள். அங்கேயே நார் கிழிப்பார்கள். தொடுக்க ஆரம்பிப்பார்கள். வாய் பேச முடியாத ஒரு பெண், பூக்கட்டிக்கொண்டே, அவளுடைய பூக்காரச் சினேகிதனோடு சைகைகளில் ‘பேசிக்’ கொண்டும், பேச்சை விட அதிகம் சிரித்துக்கொண்டும் இருந்த பயணத்தின் பாதி வழியில் நான் இறங்க வேண்டியது தவிர்க்க முடியாது போயிற்று.

எல்லா ஊரையும் போல இங்கேயும் கண் தெரியாத இசைஞர்கள் இருக்கிறார்கள். புல்லாங்குழல் வாசிப்புக்கும், பார்வைக் குறைவுக்கும் சமன்பாடுகள் உண்டோ என்று மீண்டும் யோசிக்க வைக்கிறது போல் அருமையாக வாசிக்கிறார்கள். பழைய பாடல்கள் அமிர்தமாக இருக்கின்றன. ‘தென்றல் உறங்கிய போதும்’ என்று துவங்கி நீல இரவுக்கும் நிலவுக்கும் தாவுகிறது பாடல். வண்டி இதற்கு சம்பந்தமே இல்லாத அடையாறு சாக்கடைப் பாலத்தைத் தாண்டிக் கொண்டிருக்கும். நுங்கம்பாக்கம் இடுகாட்டுப் புகையின் நிணம் பரவும். நிண வாடையில் நான் என்றென்றோ கலந்து கொண்ட ஈமச்சடங்குகளும், தோள் கொடுத்த இறுதி ஊர்வலங்களும் விரியும். உதிர்த்து உதிர்த்து வீசிய ரோஜாப்பூக்களின் பாதையில், நண்பனின் உடல் அசைந்தசைந்து நகரும். குளிப்பாட்டி திருநீறு பூசப்பட்ட ஏழு வயது, ஐந்து வயது சிறுவர்கள் தூக்கக் கலக்கத்துடன் மைய வாடியில் தாய்மாமா மடியில் உட்கார்ந்திருப்பார்கள்.

இப்படியே, கதை எழுதினாலும், கவிதை எழுதினாலும், கடிதம் எழுதினாலும் நேற்று வரை நிகழ்ந்ததையே திருப்பித் திருப்பி நினைக்கவும் பகிர்ந்து கொள்ளவும் தோன்றுகிறது. நகரச் சந்தடி நிறைந்த, இந்த தனித்த, இரண்டாவது தளத்தில் இருந்து கொண்டு யாருடன் பேச, யாருடன் வாழ என்று தெரியவில்லை. எதிரே இருக்கிற அடர்ந்த மாமரங்களை மட்டும் நம்பிக்கொண்டே என் காலைகள் துவங்குகின்றன. ஒவ்வொரு நாள் காலையிலும், இந்த வீட்டுச் சொந்தக்காரரின் தாயாரான அந்த எண்பத்து நான்கு வயது பெரிய மனுஷி, அந்த மாமரம் வரை போய், தன் கூனல் முதுகும் கைத்தடியுமாக, உதிர்ந்து கிடக்கிற மாம்பிஞ்சுகளைப் பொறுக்குகிற நேரம் எனக்கு முக்கியமானது. மழையும் காற்றுமாக இருந்த ஒரு அதிகாலையில், ஒரு பச்சை நூல் சேலையுடன் அந்த முதிர்ந்த உடல் குனிந்து குனிந்து நடமாடிக் கொண்டதிலிருந்து, நான் இந்த நகரத்தின் நூல்கண்டுச் சிக்கல்களை அவிழ்த்துக் கொண்டேன் என்றுதான் சொல்ல வேண்டும்.

அடிக்கடி நினைவு பிறழ்ந்துவிட்ட நிலையில், தன் மகன் வீட்டுக்கதவு என்றும், தன் மகள் வீட்டுக் கதவு என்றும் எங்கள் வீட்டுக் கதவைத் தட்டிவிட்டு அந்த பெரிய மனுஷி நிற்கிற நிலையும் என்னுடைய நிலையும் வேறு வேறு அல்ல என்று தோன்றுகிறது. நேர்த்தியான இசை எழுப்புகிற அழைப்பு மணியைப் புறக்கணித்துவிட்டு, நானும் என் வீட்டு மரக்கதவுகளைத் தட்டிக் கொண்டிருக்கத் தடையில்லை. அகல விரித்த விரல்களும், கனத்த உறுதியான மரப்பலகைகளும் அதிர்ந்து அதிர்ந்து எங்கெங்கோ இருக்கிற மனிதர்களையும் எங்கெங்கோ மறைந்த வனங்களையும் கூப்பிடுகிற குரலை, ஒரு ஒற்றை விரல் அழுத்த அழைப்பு மணியில் இழந்துவிட்டது எவ்வளவு பெரிய விலை.

என் தாத்தாவைப் போலத் தச்சு வேலை அறிந்தவன் இல்லை எனினும் நான் உளிகளைத் தீட்டிக்கொடுத்த சில தினங்கள், ‘ஆக்கர்’ என்ற பட்டப் பெயர் உள்ள ஒரு இளைய தச்சனுடனும், அவரது மூத்த தச்சருடனும் நான் கொண்டிருந்த உறவுகள் மிகவும் உயர்ந்தவை. இழைத்த மரச்சுருள்கள் அடங்கிய சாக்குகளைத் துளாவித் துளாவி எவ்வளவு தடவை முகர்ந்திருக்கிறேன். வீட்டில் வந்து யாராவது விறகு கீறும் போது எனக்கு விறகுகளின் வாசனையை அறிமுகப்படுத்திய காற்று இப்போது எங்கு போயிற்று? சம்மட்டியும் ஆப்பும் கோடாரியும் வியர்வையும் அதிர்ந்து அதிர்ந்து நகர்கிற மண்ணும் விலகி விலகி எந்த வெளியில் கலந்தன?

நான் இப்படியான வாசனைகளுடனும், தோற்றங்களுடனும், அவற்றுடன் சம்பந்தப்பட்ட இடங்களுடனும் மனிதர்களுடனும்தானே பேசவும், எழுதவும், இருக்கவும், சிரிக்கவும், கலங்கவும் முடியும். அவைகளைத்தானே நானும் செய்து கொண்டிருக்கிறேன். எனக்கு அடுப்புக் கட்டி மேல் பூசப்படுகின்ற குருவமண் வாசனை தெரியுமெனில், ஊர்க்காட்டிலோ, காருகுறிச்சியிலோ குழைக்கிற வேளாரின் விரலிடுக்குகளில் பிதுங்கி வழிகிற செம்மண் வாசனை தெரியும் எனில், அதைப் பற்றியும் யாரிடமேனும் சொல்ல எனக்கு அனுமதி உண்டுதானே.

வாழ்க்கை எல்லாவற்றையும் அனுமதிக்கத்தானே செய்கிறது. எந்த அத்துமீறல்களுக்கும் இயற்கையின் கதியில் முன்னடையாளம் இருக்கிறதா என்ன? இவ்வளவு பெரிய நகரத்துத் தோட்டங்களில், எந்த அபாயமும் இன்றித் தன்போக்கில் கீரிப்பிள்ளைகள் நடமாடிக்கொண்டுதானே இருக்கின்றன?

நான் கீரிப்பிள்ளையா, அணில் பிள்ளையா, வீட்டு மிருகமா? தெரியாது. நான் புல்லா, முருங்கை மரமா, சோளக் கதிரா, சோற்றுக் கற்றாழையா, வரவேற்பறைத் தாவரமா? தெரியாது.

நான் பூவெனில், எனக்கு மணமுண்டா, மணமில்லாத பூவா? தெரியாது.

நான் தாவரமாகவும், மிருகமாகவும் மனிதனாகவும் இந்த வாழ்வுக்குரிய அடிப்படையான உயிருடன் இருக்கிறேன். என் உயிரிலும் உயிர்ப்பிலும் மட்டுமல்ல, எல்லோருடையதிலும் அக்கறை கொண்டிருக்கிறேன்.

அப்படி அக்கறை கொண்டிருப்பதால்தான், ‘நடுகை’ சிறுகதையில் வருகிற கிழவரை என்னால் அடையாளம் கண்டு கொள்ள முடிகிறது.

‘ஒண்ணைப் பிடுங்கினால் ஒண்ணை நடணும் அல்லவா?’ என்ற குரலைப் பதிவு செய்ய முடிகிறது.

ஒருவர் என்னைப் பிடுங்கட்டும். ஒருவர் என்னை நடட்டும்.

ஒருவர் மணமற்றது என்று வீசட்டும். இன்னொருவர் மணமுள்ளது என்று சூடட்டும்.

ஒருவர் தன் கைவிரல்களை உருவிக்கொள்ளட்டும். பிறிதொருவர் வந்து என் விரல்களைப் பற்றிக் கொள்ளட்டும்.

யாராவது எனக்கிருப்பார்கள் என்றும், யாருக்காகவோ நான் இருக்கிறேன் என்றும் நம்பி, எல்லார்க்கும் அன்புடனே எழுதிக் கொண்டிருக்கவே நான் தொடர்ந்து முயன்று கொண்டிருக்கிறேன்.

இந்த மின்சார வண்டித் தடங்களுக்கு மத்தியிலும், எங்கோ என் தாமிரபரணி ஓடுவதை நான் அறிந்தே இருக்கிறேன். ஈரம் நிரந்தரம் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.
எஸ்.கல்யாணசுந்தரம்
15.9.96 – ராஜூ நாயக்கன் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை.

(நடுகை, 1996, முன்னுரை)

இவ்வார புனைவு – தன்ராஜ் மணியின் ‘அணங்கும் பிணியும் அன்றே’

தன்ராஜ் மணியின் ‘அணங்கும் பிணியும் அன்றே‘ என்ற சிறுகதை காமம் நிறைந்த ஒரு பெண்ணின் மனநிலையை அவள் பார்வையில் விரித்துச் செல்லும் கதை. சங்கப் பாடல் அறிமுகம் உள்ளவர்கள் தலைப்பைக் கண்டதும் கதையின் உட்பொருள் என்ன என்பதை உணர்ந்து கொள்வார்கள். அந்த இடத்துக்கு கதையைக் கொண்டு செல்வதில் தன்ராஜ் மணி எந்த அளவு வெற்றி பெறுகிறார் என்ற அளவில் இந்தக் கதை வெற்றி பெறுகிறது.

நியூ யார்க்கர் இதழில் வரும் சிறுகதைகளுடன் This Week in Fiction  என்ற தலைப்பில் எழுத்தாளருடன் ஒரு சிறு உரையாடல் நிகழ்த்தி அதைப் பதிப்பிப்பது வழக்கம். இதை நாமும் இனி தொடர்ந்து செய்து பார்க்கலாம் என்ற எண்ணத்தில் தன்ராஜ் மணியுடன் ஒரு சிறு உரையாடலைத் துவக்கினோம். இனி வரும் வாரங்களில் இதை இன்னும் விரிவாக, தொடர்ந்து செய்ய எண்ணம்.

கேள்வி : ‘அணங்கும் பிணியும் அன்றே’ என்ற தலைப்பு வித்தியாசமாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக, இங்கிலாந்தில் வாழும் ஒரு பெண்ணின் கதையைச் சொல்ல இதைப் பயன்படுத்தியிருப்பதைச் சொல்ல வேண்டும். ஏன் இந்த தலைப்பைத் தேர்ந்தெடுத்தீர்கள்?

தன்ராஜ் மணி : அந்த வரி காமத்தை உண்பது, உறங்குவது போல ஒரு இயல்பான ஒரு விஷயமாக முன் வைக்கிறது. இக்கதை காமத்தை அப்படிப்பட்ட இயல்பான உயிரியல் தேவையாய் பார்க்கும் ஒரு பெண்ணுடையது, ஆகவே சரியான தலைப்பாய்ப் பட்டது. கதை நிகழும் இடத்தை நான் கணக்கில் எடுக்கவே இல்லை. கலாசார வேறுபாடுகள் இருக்கலாமே ஒழிய உணர்வுகள் எல்லா இடத்திலும் ஒன்றே என்பது என் பார்வை.

கேள்வி : நீங்கள் இந்தக் கதையை எழுத எது காரணமாயிற்று? (இந்தக் கதையின் ஊற்றுக்கண்/ தோற்றுவாய் என்ன?)

தன்ராஜ் மணி : சில மாதங்களுக்கு முன்பு சங்க இலக்கிய பாடல்களை புரட்டிக் கொண்டிருந்தேன்.

மிளைப் பெருங்கந்தனின் கீழ் வரும் பாடலுக்கு ஒரு சுவாரசியமான உரை அதில் இருந்தது. அதன் சாராம்சம், காமம் விருந்தாவது நம் மனதில், மனநிலையில், புற விஷயங்களில் அல்ல என்பது. முதிய பசு புல்லைச் சாப்பிட முடியாவிட்டாலும் ஆவலாய் அதைச் சுவைப்பதை முன் வைத்து உரையாசிரியர் அவ்வாறு சொல்லி இருந்தார்.

Tools and means are not but the mindset is all it matters” என்பது எனக்குள் ஓடிக்கொண்டே இருந்தது.

அதுவே முதல் தூண்டுதல், தோற்றுவாய். இங்கிலாந்தில் காமத்தைப் பற்றி இவ்வகை வாழ்க்கை நோக்கு கொண்டவர்கள் ஏராளம், ஆகவே கதை நிகழும் இடத்தை இங்கிலாந்தாக வைத்துக் கொண்டு எழுத ஆரம்பித்தேன்.

காமங் காம மென்ப காமம்
அணங்கும் பிணியு மன்றே நினைப்பின்
முதைச்சுவற் கலித்த முற்றா விளம்புல்
மூதா தைவந் தாங்கு
விருந்தே காமம் பெருந்தோ ளோயே.

எதற்காக எழுதுகிறேன் – தி. வேல்முருகன்

தி வேல்முருகன்

எழுதுவது – அதைப்பற்றி அருமை எழுத்தாள முன்னோடிகள் எல்லாம் நல்லவனவே எழுதி விட்டார்கள்

நான் ஏன் எழுதுகிறேன்?

ஆம் அதை சொல்லிதான் ஆக வேண்டும்

வெறும் வார்த்தை ஐாலத்தை நம்பி கைப்பணத்தை இழந்த அன்று, எப்படி படிப்படியாக ஏமாற்றப்பட்டோம் என்பதை அப்படியே எழுதியபோது கதையாகிவிட்டது. தனிமையில் நேரப்போக்குக்கு ஏதோ நினைப்பில் எழுத ஆரம்பித்த பிறகு எழுத வேண்டிய நினைப்பும் எழுத்தும் என்னை பிடித்துக் கொண்டது- ஆம் அதுதான் உண்மை

எழுத ஆரம்பித்த பிறகு என்னிடம் பணி சார்ந்த பதட்டம் குறைந்து நிதானம் வந்திருக்கிறது. இனி எழுதாமல் என்னால் இருக்க முடியாது போலிருக்கிறது

எப்போது எழுத வேண்டிய அவசியம் ஏற்படுகிறது? ஏன், எதற்கு அதை எழுத வேண்டும்?

ஏதாவது மனதை தொடும் சம்பவங்கள், ஏமாற்றங்கள், அவலங்களை பத்திரிகையிலோ கதைகளிலோ வாசிக்கும்போது அதை ஒட்டிய வாழ்வில் நடந்த சம்பவங்களை மனம் மெள்ள கோர்க்க ஆரம்பித்து விடுகிறது பிறகு அதை எழுத தொடங்கினால் எழுத்து தானாகவே ஓடி அதுவாகவே முடிகிறது எனக்கு சிறிது முயற்சிக்க வேண்டும் அவ்வளவுதான்

எண்பத்தி ஒன்பதில் கட்டிடவியலில் பட்டயப்படிப்பு
முடித்து விட்டு வேலையின்மையும் வேலையும் சார்ந்து ஊர் ஊராகவும் பிறகு நாடு நாடாகவும் அலைந்தபோது மிகப்பெரிய கடிதங்கள் எழுதுவேன் நண்பர்களுக்கு அனுபவங்களையும் வீட்டிற்க்கு அன்பையும் தெரிவிக்கும் அவைகள் தான் என் முதல் எழுத்துகள். எழுத வேண்டும் என்ற ஆவல் எப்போதும் உள்ளுக்குள் கனன்று கொண்டு இருந்தது. இரண்டு வருடமாக பணிக்காக ஒவ்வொரு நாளும் நீண்ட பயணம் செய்வதால் கிடைக்கும் நேரத்தில் எழுத ஒரு வாய்ப்பமைந்துவிட்டது.

என் முதல் வேலையே வீடற்றவர்களுக்கான திட்டமான தொகுப்பு வீடுகள் கட்டுவதுதான் மிக எளிய மக்கள் வறுமையிலும் நேர்மையானவர்கள் நாளெல்லாம் கீற்று முடைந்து வாழ்க்கை நடத்துபவர்கள் அவர்களிடம் அரசியல் செய்யும் கான்ராக்டர்கள். அப்படி ஒரு சூழலில் வேலை பார்த்த அனுபவம் அதுவரை இருந்த என்னை இளக்கி விட்டது

பசியில் பசுமை தேடி அலையும் ஆவினம் போல் வேலை தேடிச் செய்யும் நிர்பந்தம் எப்போதும் எனக்கு இருக்கிறது. தொழில் சார்ந்து எளிய மனிதர்களான தொழிலாளர்களுடன் பழக வேண்டி உள்ளதால் அவர்கள் நல்லவைகள் கெட்டவைகள் ஏமாற்றம் எல்லாம் அருகே இருந்து அந்த வாழ்க்கையை பார்த்து இருப்பதால் அதை எழுத வேண்டும் என்ற ஆவல் என்னுள் வந்து விடுகிறது.

எழுதுவதை தொழில் சார்ந்து இப்படி கூட சொல்ல தோன்றுகிறது, எப்படி சுய உழைப்பினால் கட்டி முடித்த வீட்டில் வாழும் திருப்தியிருக்குமோ அப்படி ஒரு திருப்தி எழுதுவதால் எனக்கு இருக்கிறது.

எந்த வேலையும் தெரியாதவன் வெறும் கையையும் காலையும் கொண்டு கட்டிட வேலையில் வந்து கற்றுச் செய்ய முடியும். ஆனால் ஒரு நல்ல வேலைக்காரன் மட்டும் தான் தன் வேலையில் சுயதிருப்தி ஏற்படும் வரை திரும்ப திரும்ப திருத்தி செய்து கொண்டு இருப்பான். செய்யும் தொழிலில் நல்ல வேலைக்காரனான நான் எழுத்திலும் அப்படியே இருக்க விரும்புகிறேன் வேறொன்றுமில்லை…

எனது பதின்ம வயதில் வாசிக்க தொடங்கியவன் இலக்கியம் பற்றிய எந்த அளவீடோ புரிதலோ இல்லாமல் யார் எழுத்து மனதை வருடுகிறதோ, இரக்க உணர்ச்சியை தூண்டுகிறதோ அதை மட்டுமே நூலகத்தில் எடுத்து வாசிப்பேன். அந்த எழுத்தாளர் புத்தகங்களை தேடி தேடி படிப்பேன்.

அது தான் இலக்கியம் என்று எனக்கு தெரியாது ஆனால் தெரியாமல் வாசித்தது எல்லாம் தமிழில் புகழ்பெற்ற இலக்கிய புத்தகங்கள். பிறகு இணையத்தில் வாசிக்க ஆரம்பித்த பிறகு தான் இலக்கியம் பற்றி ஓரளவு தெரிந்து கொண்டேன்.

நான் எழுத்தாளன் அல்ல நல்ல வாசகனகவும் வாசித்துக் கிடைக்கும் திறப்பில் மகிழவுமே விரும்புகிறேன்..

…….

(கடலூர் மாவட்டம், அகரம் பரங்கிப்பேட்டையைச் சேர்ந்த திரு. தி. வேல்முருகனை allimurugan@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்)