அமெரிக்கப் பெண் ஒருவர் சிறுவயதில் இருந்தே நிறைய வாசிப்பார். எத்தனைப் பெரிய புத்தகமாயிருந்தாலும் ஒரே நாளில் வாசித்து முடித்துவிடுவார். இவர் மணமுடித்த பின்னர் கணவர் இவருக்குத் தினமும் நூலகத்திலிருந்து புத்தகங்கள் கொண்டு வந்து கொடுப்பார். அவர் முடித்து விட்டு அடுத்த நாளே கணவரிடம் கொடுப்பார். கணவர் மாலை திரும்பும்போது புதுப் புத்தகங்கள் கொண்டுவரவேண்டும். மனைவிக்குப் புத்தகங்களில் திருப்தியே கிடையாது. கணவரிடம் தினமும் சொல்வார், ’இந்தப் புத்தகம் சரியில்லை. வேறு நல்ல புத்தகங்கள் கொண்டுவாருங்கள்.’ ஒருநாள் கணவர் வெறுத்துப்போய் சொன்னார், ‘உனக்குத்தான் நான் கொண்டு வரும் புத்தகங்கள் பிடிப்பதில்லையே. நீயே உனக்குப் பிடித்த ஒரு புத்தகத்தை எழுதுவதுதானே.’ அப்படி எழுதியதுதான் Gone with the Wind புத்தகம். அதை எழுதியவரின் பெயர் மார்கிரட் மிச்செல். இந்தப் புத்தகத்துக்கு புலிட்சர் பரிசு கிடைத்தது. இதைப் படமாக்கியபோது பல ஒஸ்கார் விருதுகளையும் அள்ளியது. கேள்வி என்ன வென்றால் அவருடைய கணவர் அன்று வெறுத்துப்போய் சொல்லியிருக்காவிட்டால் இந்தப் புத்தகம் எங்களுக்கு படிக்கக் கிடைத்திருக்குமா? அது அதற்கு ஒரு நேரம் இருக்கிறது.
நான் பதின்ம வயதிலேயே எழுதத் தொடங்கிவிட்டேன். ஏன் எழுதினேன் என்று இப்பொழுது நினைத்தால் தெளிவான பதில் கிடையாது. சமீபத்தில் ஒரு நேர்காணலில் ஒரு கேள்வி என்னிடம் கேட்கப்பட்டது. இதற்கு முன்னர் அப்படி ஒருவரும் என்னிடம் கேட்டதில்லை. கேள்வி என்னைத் திடுக்கிட வைத்தது. கேள்வி இதுதான். ‘உங்களுக்குச் சொந்தமான முதல் புத்தகம் என்ன?’ எங்கள் வீட்டில் இருந்த ஒரே புத்தகம் பஞ்சாங்கம்தான். அதைத்தவிர பாடப் புத்தகங்கள். நான் எங்கள் வீட்டில் ஐந்தாவது பிள்ளை. நாலு பேர் படித்து முடித்த பின்னர் என் முறை வரும்போது பாடப்புத்தகம் எனக்கு வந்து சேரும். அநேகமாக முன் அட்டையோ கடைசி பக்கமோ இருக்காது. நான் படித்து முடிந்த பின்னர் அது என் தம்பியிடம் போகும். நான் படித்த பத்திரிகைகள், நாவல்கள் எல்லாமே இரவல் வாங்கியவைதான். 1964ம் ஆண்டு அருமை நண்பர் செ.கணேசலிங்கன் என் சிறுகதைகளை புத்தகமாகப் பதிப்பித்தார். அதன் தலைப்பு ’அக்கா’. அதுதான் நான் முதல் சொந்தம் கொண்டாடிய புத்தகம். மார்கிரெட் மிச்செல் போல நான் சொந்தமாக்குவதற்கு நானே ஒரு புத்தகம் எழுதவேண்டி நேர்ந்தது.
அந்தப் புத்தகத்துக்கு நான் வெளியீட்டு விழா வைக்கவில்லை. அதற்குப் பின்னர் எழுதிய 21 புத்தகங்களுக்கும் கூட ஒருவித விழாவும் நான் ஏற்பாடு செய்தது கிடையாது. சில நண்பர்கள் கேட்பார்கள் ’உன்னுடைய புத்தகம் ஒன்று வெளிவந்துவிட்டதாமே. எனக்கு ஒரு புத்தகமும் நீ தரவில்லையே’ என்று. அந்த நண்பர் நல்ல வசதியானவராகத்தான் இருப்பார். ஆனால் நான் இலவசமாக ஒரு புத்தகம் அவருக்குத் தரவேண்டும் என எதிர்பார்ப்பார்.
தமிழில் எழுதுபவர்களில் முழு நேர எழுத்தாளர்கள் வெகு குறைவு. அநேகமானோர் வசதி இல்லாதவர்கள். அப்படியிருந்தும் வருமானத்துக்காகத் தமிழில் எழுதுபவர்கள் கைவிரல் விட்டு எண்ணக்கூடியவர்களே. தமிழில் எழுதினால் காசு காணமுடியாது என்பது எல்லாப் பெற்றோர்களுக்கும் தெரியும். அதுதான் சிறுவயதில் இருந்தே நான் என்ன படிக்கிறேன் என்பதை என் பெற்றோர் கண்காணித்தார்கள். எதிர்காலத்தில் நான் எழுத்தாளனாக வந்து சிரமப்படக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் இரவல் நாவல்களை ஒளித்து வைத்தார்கள். ஆங்கிலத்தில் எழுதுபவர்கள்கூட இதற்கு விதிவிலக்கல்ல. ரொறொன்ரோவில் ஆங்கிலத்தில் எழுதும் புகழ்பெற்ற எழுத்தாளர் ஒருவரை எனக்குத்தெரியும். பெற்றோரின் புத்திமதியை ஏற்காமல் எழுத்துத் துறைக்குள் நுழைந்தவர். அவர் சொல்லுவார் தன்னுடைய வருடாந்த வருமானம் 24,000 டொலர்கள் என்று. அதாவது கடைநிலையில் உள்ள தினக்கூலிக்கு கனடாவில் கிடைக்கும் வருமானத்திலும் பார்க்க இது குறைவுதான்.
எழுத்தாளரின் ஏழ்மை நிலையைச் சொல்ல ரொறொன்ரோவில் ஒரு கதை உண்டு. ஓர் எழுத்தாளரின் மகன் உதவாக்கரை. எழுத்தாளர் தன் வாழ்க்கையின் கடைசிப் படியில் நின்றார். ஒரு நாள் அவர் தன் மகனை அழைத்துச் சொன்னார். ’நீ இப்படியே இருந்தால் நான் உனக்கு ஒரு சதமும் விட்டுப் போகமாட்டேன்.’ அப்போது மகன் கேட்டான், ’அப்பா, அந்த ஒரு சதத்தை நீங்கள் யாரிடம் கடன் வாங்குவீர்கள்?’
எழுத்தாளர் எழுதுவதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. படைப்பின்பம். ஒரு படைப்பின் எல்லையை அடைந்து அது பூரணமாகும்போது கிடைக்கும் இன்பம் பற்றி படைப்பாளிகளுக்குத் தெரியும். அதற்கு ஈடு இணையில்லை. ஓர் ஓவியர் ஓவியம் வரைந்து முடிந்ததும் இந்த ஓவியம் எனக்குள் இருந்தா வெளியே வந்தது என்று வியப்படைகிறார். ஒரு சிற்பியின் மனநிலையும் அதுதான். சிற்பம் பூர்த்தியடையும்போது அவரடையும் பரவசம் சொல்லிமுடியாது. உலகத்தில் முன்பு இல்லாத ஒன்றை அவர் உருவாக்கியிருக்கிறார். அந்த மகிழ்ச்சி அதியுன்னதமான ஒரு நிலையில் பிறக்கிறது.
ஒன்பதாவது இசைக்கோவையை படைத்தபோது பீதோவனுக்கு செவிப்புலன் போய்விட்டது. அவர் இசைக் குறிப்புகளை எழுதியபோது இசை அவருக்குள் கற்பனையில் உருவானது. இறுதியில் இசைக் கோவையை எழுதி முடித்ததும் வியன்னா இசையரங்கத்தில் வாத்தியக் குழுவினால் இசைக்கப்பட்டது. இசை முடிந்ததும் சபையோர் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பினர். பீதோவனால் தன்னுடைய இசைய மட்டுமல்ல அதை அனுபவித்த மக்களின் கரகோஷத்தையும் ஆரவாரத்தையும் கூடக் கேட்கமுடியவில்லை. பீதோவன் பக்கத்தில் உட்கார்ந்திருந்த நண்பர் இவர் தோளைத் தொட்டு சபையோரை சுட்டிக்காண்பித்தார். அப்போதுதான் பீதோவனால் மக்களின் வரவேற்பை உணரமுடிந்தது. அந்தக் கணம் அந்த இசையைச் சிருட்டித்த பெருந்தகையின் மனம் எத்தனைக் குதூகலத்தை அனுபவித்திருக்கும்.
400 ஆண்டுகளுக்கு முன்னர் இத்தாலிய விஞ்ஞானி கலீலியோ தானாகவே இரவு பகலாக தேய்த்துத் தேய்த்து உண்டாக்கிய தூரக் கண்ணாடியை வானை நோக்கித் திருப்பினார். வியாழன் கிரகத்தை முதன்முதலாக தூரக் கண்ணாடியால் நோக்கியபோது ஓர் அதிசயத்தைக் கண்டார். வியாழன் கிரகத்தைச் சுற்றி நாலு சந்திரன்கள் சுழன்றன. அவருக்கு கைகள் நடுங்கின. கண்களில் நீர் கோர்த்தது. இந்தப் பூமியில் இதற்கு முன்னர் ஒருவருமே காணாத காட்சி அது. அவர் முதன்முதலாக அந்த அதிசயத்தைக் காண்கிறார். அவரால் அந்தப் பரவசத்தை தாங்க முடியவில்லை. ஓர் எழுத்தாளர் ஒன்றைப் புதிதாக படைப்பதும், ஒரு விஞ்ஞானி புதிதாக ஒன்றைக் கண்டு பிடிப்பதும் ஒன்றுதான். பரவசம் ஒன்றேதான்.
பாராட்டுகள் எழுத்தாளருக்கு உந்து சக்தி. சேக்ஸ்பியரை விமர்சித்தவர்கள் பலர் ஆனால் அவர் கவலைப்படவே இல்லை. பாராட்டுகள் அவரை முன்னே செலுத்தின. அழியாத கவிதைகளையும் நாடகங்களையும் உலகுக்குத் தந்தார். விமர்சகர்களின் தாக்குதல்களை தாங்க முடியாத எழுத்தாளர் ஒருவர் சொன்னார். ’எந்த ஊரிலாவது விமர்சகருக்குச் சிலை வைத்திருக்கிறார்களா?’ உலகம் கொண்டாடுவது எழுத்தாளரைத்தான். விமர்சகரை அல்ல.
சமீபத்தில் எனக்குக் கிடைத்த இரண்டு பாராட்டுகள் என் வாழ்க்கையிலேயே மறக்க முடியாதவை. எழுதும்போது ஓர் எழுத்தாளர் சந்திக்கும் இடர்களும் முட்டுக்கட்டைகளும் பாராட்டுக் கிடைக்கும்போது மறைந்துபோய் அடுத்த எழுத்துக்கு உற்சாகம் கூட்டுகிறது.
84 வயதைத் தாண்டிவிட்ட ஒரு முதிய எழுத்தாளரைச் சமீபத்தில் தொலைப்பேசியில் அழைத்தேன். அவர் நோய்வாய்ப்பட்டுப் படுக்கையில் கிடந்தார். அவருடன் எனக்கு முந்திபிந்தி எழுத்து தொடர்பு இருந்தது கிடையாது. நேரில் சந்தித்ததும் இல்லை. பேசியதும் இல்லை. கவிதைகள் எழுதியிருக்கிறார். பல ஆங்கில நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தவர். மதிப்புமிக்க விருதுகள் பல பெற்றவர். அவர் நான் என்ன விசயமாக அவரை அழைத்தேன் என்று கேட்கவே இல்லை. மூச்சு விடாமல் பேசினார். ’நீங்கள் எழுதி பத்திரிகைகளில் வெளிவந்த கதைகள் எல்லாவற்றையும் அவற்றின் படங்களுடன் சேர்த்துக் கத்தரித்து வைத்திருக்கிறேன். பைண்ட் பண்ணிப் பாதுகாக்க வேண்டும்’ என்றார். நான் அதிர்ச்சியில் உறைந்து போனேன். இப்படி ஒரு பாராட்டா? அது ஓர் எழுத்தாளருக்கு எத்தனை ஊக்கத்தைக் கொடுக்கும்.
அடுத்த சம்பவம் ஓர் அதிகாலையில் நடந்தது. அதுவும் சமீபத்தில்தான். யாழ்ப்பாணத்திலிருந்து முன்பின் தெரியாத ஒருவர் தொலைப்பேசியில் அழைத்திருந்தார். யார் என்று கேட்டேன். ஒரு பெயரைச் சொன்னார். எனக்கு அவரிடம் ஒரு வித பழக்கமும் இல்லை. என்ன வேண்டும் என்று கேட்டேன். ’ஐயா, நான் உங்கள் வாசகன். இப்பொழுதுதான் பூசா சிறையில் நாலு வருடம் இருந்துவிட்டு வெளியே வந்திருக்கிறேன். பூசா சிறையிலேதான் உங்கள் புத்தகத்தை முதலில் படித்தேன். படித்துவிட்டு என் நண்பனுடன் தினமும் கதைகளைப் பற்றி விவாதிப்பேன் என்றார். புத்தகத்தின் தலைப்பு தெரியுமா என்றபோது அவருக்குத் தெரியவில்லை. ஆனால் அதில் இருந்த அத்தனை சிறுகதைகளையும் வரிசையாகச் சொன்னார். சில வசனங்களை அப்படியே ஒப்பித்தார். ’சிறையிலே கிடைத்த இந்தப் புத்தகத்தை நான் திருடி வைத்திருந்தேன். ஆனால் அதை என்னிடமிருந்து யாரோ களவாடிவிட்டார்கள். சிறைக்குள்ளே இந்தப் புத்தகம் கிடைக்கிறது. ஆனால் வெளியே ஒரு புத்தகக் கடையிலும் இல்லை. எங்கே வாங்கலாம்?” இதுதான் கேள்வி. இவர் சொன்னதைக் கேட்டு நான் மகிழ்வதா அல்லது துக்கப்படுவதா? ஒன்றுமே புரியவில்லை. ஆனால் அவருடைய பாராட்டு என் மனதுக்குள் இன்றும் பொங்கியபடி இருக்கிறது.
பாராட்டுகள் முக்கியம்தான் ஆனால் அவை மட்டும் ஓர் எழுத்தாளரைத் தொடர்ந்து எழுத வைக்கிறதா? நீ இனி எழுதத் தேவை இல்லை என்று சொன்னால் எழுத்தாளர் எழுதுவதை நிறுத்திவிடுவாரா? அவர் எதற்காக முதலில் எழுதத் தொடங்கினாரோ அந்தக் காரணம் இறுதிவரை அவர் பின்னாலேயே இருக்கும். ஏதோ ஓர் உந்துதல் அவரை முதலில் எழுதத் தூண்டியது. அது இறுதிவரை மறைவதே இல்லை. அதுவே அவரை எழுதவைக்கிறது.
ஐஸாக் அசிமோவ் என்ற அறிவியல் எழுத்தாளர் 500 புத்தகங்களுக்கு மேல் எழுதி, உலகப் புகழ்பெற்றவர். தன்னுடைய கடைசி கதையைத் தட்டச்சு மெசினில் தட்டச்சு செய்துகொண்டிருந்த போதே அதன் மீது தலை கவிழ்ந்து இறந்து போனார். நோபல் பரிசு பெற்ற புகழ் பெற்ற எழுத்தாளர் ஏர்னஸ்ட் ஹெமிங்வே, ’கிழவனும் கடலும்’ நாவலை எழுதியவர், ஒரு வசனத்துக்காகக் காத்திருந்தார். அது வரவே இல்லை. விரக்தியில் துப்பாக்கியை எடுத்து தன்னைத் தானே சுட்டு இறந்துபோனார். எழுத்தாளர் ஜேம்ஸ் ஜோய்ஸை யாரோ கேட்டார்கள் ’ஏன் எழுதுகிறீர்கள்?’ என்று. அவர் இடக்காகப் பதில் சொன்னார். ‘அடுத்த 300 வருடங்கள் விமர்சகர்களுக்கு வேலை கொடுக்கத்தான்.’
நோபல் பரிசு பெற்ற அலிஸ் மன்றோவின் கூட்டம் ஒன்றுக்குப் போயிருந்தேன். அவர் பிரதம பேச்சாளர். இது நடந்து 10 வருடங்கள் இருக்கும். அந்தக் கூட்டத்தில் அவர் திடீரென்று ‘நான் இனிமேல் எழுதப் போவதில்லை’ என்று அறிவித்தார். சபையோர் திகைத்துவிட்டனர். எதற்காக இந்த அறிவிப்பு. ஓர் எழுத்தாளரால் எழுதாமல் இருக்க முடியுமா? அதைச் சொல்லி ஒரு வருடத்திற்குள் அவருடைய புத்தகம் ஒன்று வெளிவந்தது. பின்னர் ஒருநாள் அவருடைய சிறுகதை நியூ யோர்க்கர் பத்திரிகையில் வந்து படித்தேன். இரண்டு வருடங்கள் கழிந்தன. அவருடைய இன்னொரு புத்தகம் வெளிவந்தது. அவரால் எழுதுவதை நிறுத்த முடியவில்லை. ஒரு நல்ல எழுத்தாளரால் எழுதுவதை நிறுத்தவே முடியாது. ஆகவே நான் ஏன் எழுதுகிறேன் என்று கேட்டால் , ‘எழுதுவதை நிறுத்த முடியாது, அதுதான் தொடர்ந்து எழுதுகிறேன்’ என்று பதில் சொல்லத் தோன்றுகிறது.
எழுத்தாளர் வேலை எழுதுவதுதான். தச்சு வேலைக்காரருக்குச் சம்பளம் கிடைக்கும். வர்ணம் பூசுகிறவருக்கு கூலி கிடைக்கும். ஆனால் எழுத்தாளர் எழுதுவார். சம்பளம் எதிர்பார்க்கமாட்டார். அவரால் எழுதுவதைச் செய்யாமல் இருக்கவும் முடியாது. எழுதும்பொழுதுதான் அவர் பிறந்ததன் அர்த்தம் அவருக்கு நிறைவேறுகிறது.
அவர் தன் புத்தகங்களை வெளியிடத் தேவையில்லை. வீடு வீடாகப் போய் விற்க வேண்டியதில்லை. நாடு நாடாகப் புத்தங்களை அனுப்பத் தேவையில்லை. வண்ணத்துப்பூச்சி தேடித்தேடி பூக்களைக் கண்டு பிடிப்பதுபோல வாசகர் தேடித்தேடி எழுத்தாளரை எப்படியோ அடையாளம் கண்டுவிடுவார். பூக்கள் பறப்பதில்லை.
oOo
(இலங்கையில் கொக்குவில் என்ற சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன். கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்ததன் பின், இலங்கையின் சாட்டர்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும், இங்கிலாந்தின் சாட்டட்ர்ட் மனேஜ்மெண்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும் பூர்த்தி செய்து வேலை பார்த்தேன். பின்னர் ஐ.நாவுக்காக பல வெளிநாடுகளில் பணிபுரிந்தேன். 2000ம் ஆண்டில் ஓய்வு பெற்று கனடாவில் மனைவியுடன் வசிக்கிறேன். பிள்ளைகள் இருவர், சஞ்சயன், வைதேகி. வைதேகியின் மகள்தான் அடிக்கடி என் கதைகளில் வரும் அப்ஸரா. அறுபதுகளில் எழுத ஆரம்பித்து சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நேர்காணல்கள், நாடகங்கள், நாவல்கள் என எழுதியிருக்கிறேன்.)