மாலதி சிவராமகிருஷ்ணன்

அந்தர்வாஹினி

மாலதி சிவா

 

அவன் நிழல் நீண்டு அவர் காலைத் தொட்டது.

ரேழியில் நின்று கொண்டு கையில் இருந்த துண்டு கடுதாசியைப் படிக்க முயன்று கொண்டிருந்தவர் நிமிர்ந்து பார்த்தார்.

“கதவு திறந்துதான் இருக்கு வாங்கோ” என்றார்.

கம்பி அழிக்கதவைத் திறந்துகொண்டு வந்தவன் திண்ணைகளுக்கு இடைப்பட்ட ஆளோடியில் தயக்கமாக நின்றபடி

“ஈஸ்வர அய்யர் வீடு….?.” என்று கேள்வி மாதிரி கேட்டான்.

“ஆமா! ஈஸ்வர அய்யர் , எங்க அப்பாதான், ஆனா அவர் காலம் ஆகி ஆறேழு வருஷம் ஆறதே” என்றார்.

“ஆமா! மாமா! எங்க அப்பா சொல்லியிருக்கார்”

வந்தவனுக்கு இருபத்தைந்து வயது இருக்கும்.வேஷ்டியும் சட்டையும் பழையதாயிருந்தாலும் துவைத்து மொரிச்சென்று இருந்தது. சட்டை காலரின் மடித்த பகுதியில் நைந்து பிசிர் தெரிந்தது. தொண்டையின் முழை ஒரு சிறிய கோலிக்குண்டு. கையில் ஒரு பழைய காக்கிப் பை சுருட்டின வாக்கில் இருந்தது.

“உள்ளே வாங்கோ”  என்றபடி ரேழியைக் கடந்து கூடத்துக்குப் போனார்.

திரும்பிப் பார்த்து மறுபடி” வாங்கோ”’ என்றார்.

“உக்காருங்கோ” என்றார்.

அவருக்கு அருகில் இருந்த மர நாற்காலியைத் தவிர ஒரு மர முக்காலியும் , வர்ணமிழந்த தகர நாற்காலியும் இருந்தன. அவன் முக்காலியில் அமரப் போனான்.

“இல்ல! அது வேண்டாம். ரண்டு மரப் பலகையைச் சேத்து வச்சு பண்ணியிருக்கான். அதுல இடை வெளி விட்டுப் போயிடுத்து. உக்காந்தா கடிக்கறது. சேர்லயே உக்காந்துக்கோங்கோ!”என்றார்.

அவன் உட்கார்ந்த பின் கேட்டார்,

“நீங்க?”

“என்பேர் நீலகண்டன். அப்பா பேரு சதாசிவம்”

“சரி…..”

உள்ளேயிருந்து ஒரு சின்னக் குட்டி சமையல் ரூமுக்கும் கூடத்துக்கும் இடையிலான நிலைப்படியில் வந்து நின்றது. நாலைந்து வயதிருக்கும், தலையை இழைய வாரி  நுனியில்   சிவப்பு பட்டு நூலில் முடிந்திருந்தது.

இவனுடைய தொண்டடையின் கோலிக்குண்டையே உறுத்துப் பார்த்தது. கோலிக்குண்டு இன்னும் வேகமாக அசைந்தது.

அவர் குழந்தைகளிடம் பேசும் பொழுது வருகிற  ஒருமென்மையான குரலில் இடை வெளி விட்டு விட்டு  நிதானமாக

“தர்மு! மாமா வெய்யில்ல வந்திருக்கா பாரு! கொஞ்சம் ஜலம் கொண்டு வரயா?” என்றார்.

அது தலையை அசைத்து விட்டு உள்ளே போனது. பின்பக்கத்திலிருந்து யாரோ பேசுகிற சத்தமும், மாடியிலிருந்து குழந்தைகள்  சச்சரவிடுகிற சத்தமும்  கேட்டுக் கொண்டிருந்தன.

“இவ திருவையாறு போஸ்டிங்க்ல இருக்கும் போது பொறந்தா, அதான் தர்மசம்வர்தனின்னு பேரு. எந்த ஊர் போஸ்டிங்க்ல குழந்தை பொறக்கறதோ அந்த ஊர் அம்பாள் பேரை வச்சுடறது. இப்போ வீடு நிறைய அம்பாள்தான்“ அவர் சிரித்தார்.

“சரி! நீங்க சொல்லுங்கோ? எங்கேயிருந்து வரேள்? என்ன சமாசாரம்?” என்றார்.

“ நா ஜீயபுரம் , அம்மங்குடியிலேந்து வரேன்!”

குழந்தை அதற்குள் ஒரு சொம்பு ஜலத்தைத் தூக்கமாட்டாமல் தூக்கிக்கொண்டு வந்தது.

“ அடடே! நீயே தூக்கிண்டு வந்தயா? அம்மாகிட்டயோ , அத்தை கிட்டயோ சொல்ல மாட்டயோ” என்றார்.

அவனிடம் தண்ணீரைக் கொடுத்துவிட்டு,

“ஜீயபுரம் ஜாஸ்தி பழக்கமில்லை!  முந்தி எப்பவோ ஒரு தரம் வந்திருக்கேன்!”

அதற்குள் உள்ளேயிருந்து ஒரு மடிசார் மாமி ஒல்லியாய் வெடுவெடுவென்று உயரமாய் “ சாமினாதா” என்று  சத்தமாக கூப்பிட்டுக்கொண்டே வந்தாள்.

வேற்று மனிதனை  அங்கு எதிர்பாராததால்  சட்டென்று தயங்கி நின்று  மெதுவான குரலில் “வாங்கோ” என்றாள்.

“யாரு?” என்று இழுத்தாற்போல் கேட்டாள்.

சாமினாதன் “ அக்கா! இவருக்கு ஜீயபுரமாம்!” என்றார்.

அவனிடம் “ இது எங்க அக்கா!” என்றார்.

“அப்பிடியா? ஜீயபுரத்தில யாரு? எங்க ஜாகை?” மாமி கேட்டாள்.

“ஸ்டேஷன் மாஸ்டர் ஜம்புனாதையர்  இருக்காரில்லையா? அவாத்துக்கு மேலண்டைப் பக்கம் ரண்டு ஆம் தள்ளி” என்றான் வந்தவன்.

“ அடடே!  அப்பிடியா சமாசாரம்? ஜம்பு நாதய்யர் எங்க புக்காத்து வழியில தூரத்து சொந்தம்.

அவாத்துல ஒரு சீமந்தத்துக்கு ஜீயபுரம் வந்திருக்கேன், ரொம்ப வருஷத்துக்கு முன்னால!” என்றாள்.

“அப்பா என்ன பண்றார்?” அவனைப் பார்த்துக் கேட்டாள்.

“அப்பா இப்ப இல்லை! அவர் மூணாம் வருஷம் போயிட்டார்!”

சாமினாதன் “அடடா!” என்றார்

மாமி “த்ஸோ! த்ஸொ! பாவமே!” என்றாள்.

“இங்க தெப்பக்குளம் பக்கத்துல மெடிகல் ஸ்டோர்ல வேலை பாத்துண்டிருந்தார்.”

“ரங்கனாதா மெடிகல் ஸ்டோரா?”என்றாள்.

“இல்லை மாமி , அதைத் தாண்டி மூணு நாலு கடைக்கப்பறம் வினாயகா மெடிகல்ஸ்னு”

“ ஒல்லியா கண்ணாடி போட்டுண்டு , மருந்து எடுத்துக் குடுக்கறது, பில்லு போடறது எல்லாம் பண்ணுவாரே அந்த மாமாவா உங்க அப்பா?”

அவன் “ஆமா மாமி!! முதலாளிக்கு வலது கை மாதிரி  இருந்தார். முதலாளியும் அப்பா பேர்ல ரொம்ப மதிப்பும் , மரியாதையுமாதான் இருந்தார்” என்றான்.

“என்ன பண்றது, நல்ல மனுஷாளுக்கெல்லாம் இப்படி சட்னு முடிவு வந்துடறது கஷ்டமாத்தான் இருக்கு”

கொஞ்ச நேரம் மௌனம் நிலவியது.

தர்முவைப் பார்த்து

“ நீ என்னடி இங்க வாயைப் பாத்துண்டு நிக்கறே? அவாளோட விளையாடப் போகலையா?  என்றாள்.

அது தலையை அசைத்து “நீ போ அத்தை!” என்றது.

“அது சரி ! நா போய் விளையாடறேன்! நீ பெரிய மனுஷி! பேச்சைக் கவனி!” என்று சிரித்துவிட்டு.

“நீங்க பேசிண்டிருங்கோ!  நான் காபி எடுத்துண்டு வரேன்” என்றபடி மாமி உள்ளே போனாள்.

“அதெல்லாம் வேண்டாம் மாமி!”

அவர் “இருக்கட்டும் , இருக்கட்டும் , காபிக்கென்ன? குடிக்கலாம்” என்றார்.

கூடத்து மாடப் பிறை பக்கத்தில் இந்திய வரைபடம் மாதிரி காரை உதிர்ந்து இருந்தது. ஜம்மு காஷ்மீர் ஏரியா மாத்திரம் கொஞ்சம் பெரிதாக இருக்கிற இந்திய வரைபடம்.

தொண்டையை லேசாக கனைத்துக்கொண்டே ஆரம்பித்தான்.

“எங்க அப்பாவோட இந்தாத்துக்கு ஏழெட்டு வருஷத்துக்கு முன்னால  வந்திருக்கேன். உங்களை அப்ப பாக்கல. அதான் உங்க பேர் தெரியல. மன்னிச்சுக்கோங்கோ!”

“அதனால என்ன பரவாயில்லை. நான் இப்பத்தான் நாலு வருஷமா இங்க இருக்கேன். அதுக்கு முன்னாடி ஊர் ஊரா  போஸ்டிங்க்! இங்க இருக்கும் படி நேரலை! படிக்கற காலத்தில இங்க இருந்ததோட சரி , அப்புறம் இப்பதான் நாலைந்து வருஷம் முன்னாடிதான் இங்க வந்தேன். அப்பாக்குத் தள்ளாமை வந்தப்புறம், ஆத்துக்காரி  குழந்தைகள் எல்லாரும் இங்க முன்னாடியே வந்துட்டா.  நா மாத்திரம் ஊர் ஊரா போயிண்டிருந்தேன்” என்றார்.

“ எட்டு வருஷத்துக்கு முன்னாடி அப்பா ரண்டாம் அக்கா கல்யாணத்துக்கு மாமா கிட்ட , அதான் உங்க அப்பாகிட்ட ஆறாயிரம் ரூபா கடன் வாங்கியிருந்தா. அடுத்த வருஷமே திருப்பித் தரதா பேச்சு! ஆனா அடுத்த வருஷம் பெரிய அக்கா பிரசவத்துக்கு வந்துட்டா.

உங்களுக்குத் தெரியுமே சம்சாரிகள் ஆத்துல பிரச்னைகளுக்குப் பஞ்சமேது? அதுக்கடுத்த வருஷம் அறுவடை சமயத்துல வெள்ளம் வந்து சாகுபடியெல்லாம் வீணாப் போச்சு!”

தர்மு பெரிய கண்களை விரித்து அவன் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தது.

“அப்பாவுக்குத்தான் ரொம்ப தாபமா இருந்தது.  திருப்பி தரதா சொன்ன டயத்திலே பணத்தைக் கொடுக்க முடியலயேன்னு சொல்லிச் சொல்லி ஆத்துப் போயிட்டார்.

சாகற அன்னிக்குக் காத்தால கூட என் கையைப் பிடிச்சுண்டு அழுதார், நான் கடனாளியா சாகறேனேன்னு. எப்பிடியாவது சீக்கிரம் வட்டியும் முதலுமா குடுத்துடுடா குழந்தைன்னார்”

அவன் குரல் கரகரத்து ரகசியம் போலவும் அழுவது போலவும் ஒலித்தது.

தர்மு மெதுவாக அவன் பக்கத்தில் வந்து நின்றது.

“ ஆறாயிரத்தோட வட்டியா ஒரு மூவாயிரம் சேத்துக் கொண்டு வந்திருக்கேன். இப்போதைக்கு அவ்வளவுதான் சேக்க முடிந்தது. பாக்கி வட்டியை மொள்ள மொள்ள கொஞ்சம் கொஞ்சமா குடுத்துடறேன்.”

கலங்கிய கண்களொடு அவரைப் பார்த்தான்.

அவர் “ இருங்கோ! இருங்கோ! அவசரப் படாதீங்கோ! எங்க அப்பா கொஞ்ச நாள் படுத்துண்டு இருந்துட்டுதான் போனார். யார் யாருக்கு எவ்வளவு கொடுக்கணும், எங்களுக்கு எங்கேர்ந்து எவ்வளவு வரணும் எல்லாம் சொல்லிட்டுத் தான் போனார்.  உங்க அப்பா பேரு என்ன சொன்னேள்? சதாசிவமா?  அப்படி யாரும் எதுவும் கொடுக்கணும்னு சொல்லலையே?” என்றார்.

அவன் தொண்டையின் கோலிக்குண்டு வேக வேகமாக அசைந்தது.

“இல்ல மாமா! எங்க அப்பா சொல்லியிருக்காளே மாமா! அப்படி இருக்காது. எங்கயாவது எழுதி வச்சுருப்பா! கொஞ்சம் பாருங்கோளேன் ப்ளீஸ்!” என்றான்.

“ நீங்க சொல்றது கரக்ட்! அப்பா எல்லாத்தையும் சப்ஜாடா எழுதி வைப்பார். நான்  பல தடவை அந்த நோட்டைப் பாத்திருக்கேனே! உங்க அப்பா பேர் இல்லையே” என்றார்.

தர்மு அவர்களை மாறி மாறிப் பார்த்தது.

“இன்னும் ஒரு தடவை எனக்காகப் பாருங்களேன் “ அவனுக்குத் தொண்டை அடைத்தது.

அவர் மேஜை டிராயரை சாவி போட்டுத் திறந்து, கொஞ்ச நாழி தேடினார்.

கூடத்தின் பக்கவாட்டில் இருந்த கதவுக்கு அப்பால் கொல்லை பசுமையாய் தளதளத்துத் தெரிந்தது. கொய்யாவும் , மாதுளையும் செடி கொள்ளாமல் காய்த்துத் தொங்கின.

கொல்லைக் குழாயில் தண்ணீரும் , காற்றும் கலந்து கொர் புர்ரென்று சத்தம் கேட்டது.

“தண்ணி விட்டுருக்கான் போலிருக்கே! ஒரு நா விட்டு ஒரு நா ஒரு மணி நேரம்தான் வரும். அவாளுக்குக் கேக்கலை போலிருக்கு! இருங்கோ ஒரு நிமிஷம் ! அவாட்ட சொல்லிட்டு வறேன்!”

அவன் கொல்லையையே பார்த்துக் கொண்டிருந்தான். இப்பல்லாம் காவிரி வருஷத்தில்  பெரும்பாலும்  மணலாய் இருந்தாலும் ஆயிரம் வருஷமா ஓடிண்டிருந்த காவேரியின் கருணையும் தாய்மையும் அங்கே காயாய் , கனியாய்  திரண்டிருந்தன என அவனுக்குத் தோன்றியது.

திரும்பி  காபி டம்ளர் டபராவோடு வந்தவர் இவனிடம் கொடுத்து விட்டு “ குடியுங்கோ!  அதுக்குள்ள நோட்டைக் கண்டு பிடிக்கறேன்” என்றார்.

“ இதோ கிடைச்சுடுத்தே”

பக்கங்களைத் திருப்பி “ இதோ! குத்தகைக் கணக்கு, தான் வாங்கிய கடன், திருப்பித்தந்த விவரம், தனக்கு  வர வேண்டிய கடன் எல்லாம் தனித் தனியா எழுதியிருக்கார் பாருங்கோ! என்ன பேரு? சதாசிவம் இல்லையா? “ என்று கையை நோட்டில் ஓட்டியபடி தேடினார்.

அவர் பார்த்துவிட்டு உதட்டைப் பிதுக்கினார்.

“ஊ ..ஹூம்! கடன் குடுக்கப் பட்டவா பக்கத்துல உங்க அப்பா பேர் இல்லையே” என்றார்.

“மாமா! நா இப்ப என்ன பண்றது? கொடுக்க வேண்டிய கடனை இல்லேங்கறேளே! அப்பா கடனைத் திருப்பிக் கொடுக்க முடியலயேன்னு ரொம்ப வருத்தப் பட்டுண்டே போனார் மாமா!”

கிட்டத்தட்ட அழுவது போல் சொன்னான்.

“நான் என்ன பண்றது சொல்லுங்கோ? எனக்கு உரிமையில்லாததை  நான் எப்படி எடுத்துக்க முடியும் ? அது நியாயமில்லையே! நீங்க வருத்தப் படாதீங்கோ” என்றார் சாமினாதன்.

“மாமா உங்க நியாயத்துல என் தர்மம் அடிபட்டுப் போறதே ! அது சரியா? “   அவரைக் கெஞ்சுவது போலப் பார்த்தான்.

தர்மு அப்பாவை ஒரு பார்வை பார்த்து விட்டு அவன் கைகளைத் தொட்டு

“அயாதீங்கோ மாமா! நீங்களே வச்சுக்கோங்கோ! பவ்வால்லை!” என்றது.

 

********************************************

 

சிதை வளர் மாற்றம் – மாலதி சிவராமகிருஷ்ணன் சிறுகதை

“என்ன சௌக்யமா?” என்று கேட்டுக் கொண்டே அந்த மாமா உள்ளே நுழைந்தார்.

“அடடே! யாரு ஸாமிநாத அய்யரா? வாரும், வாரும், என்ன ஆளைப் பாக்கறதே அபூர்வமா போயிடுத்தே!எப்பிடி இருக்கேள்? ஆத்தில எல்லாரும் சௌக்யமா?உக்காருங்கோ ,உக்காருங்கோ!” தாத்தா குரலில் ஒரே உற்சாகம்.

“என்ன ஓய்! நம்ம வீ.ஓ,கர்ணம் கான்ஃப்ரன்ஸ்க்கு வராம வச்சுட்டீர்! எல்லாரும் வந்திருந்தா! உம்மை ரொம்ப விசாரிச்சா! திட்டச்சேரி, திருக்கண்ணபுரம், செம்மங்குடி எல்லாரும் அனேகமா வந்துட்டா, நீர்தான் இப்பிடி பண்ணிப்பிட்டீர்!”அவர் உட்காருவதற்குள் தாத்தா குற்றப் பத்திரிகை படித்தார்.

“இல்ல ! ஆத்துல ரொம்ப ஆச்சோ ,போச்சோன்னு ஆயிடுத்து, உடனே நாகப்பட்டினம் டாக்டர் கிட்ட கூட்டிண்டு போய் ஒரே அமக்களமாயிடுத்து, இல்லாட்டா அப்பிடி வராம இருப்பேனா என்ன?”

“அடடா! த்சோ!த்சோ! பாவமே!இப்ப உடம்பு தேவலாமா?தெரிஞ்சிருந்தா ஒரு நடை வந்து பாத்திருப்பேனே!”

“இல்ல! இல்ல !இப்பொ தேவலாம்!”

“இந்தா,இந்தா” தாத்தா சமையலறையை நோக்கி குரல் கொடுத்தார்,பாட்டியைக் கூப்பிடுகிறார்.”யாரு வந்திருக்கா பாரு” இரைந்து சொன்னார்.

“தாத்தா!பாட்டி சமையல் உள்ளில் இல்ல! கொல்லையையில வண்டி ரிப்பேர் பண்ணவந்தவன்கிட்டையும்,மாட்டை ஆஸ்பத்திரிக்கு கூட்டிண்டு போறதைப் பத்தி ராமசாமிகிட்டயும் பேசிண்டிருக்கா”ஊஞ்சல் ஆடிக் கொண்டிருந்த நான் ஆடுவதை நிறுத்தாமல் சொன்னேன்.

“யாரு பேத்தியா? மதுரையிலருந்தா?” நான் மாமாவைப் பார்த்து சினேகிதமாக சிரித்துவிட்டு “நமஸ்காரம் மாமா” என்றேன்.

“ஆமா! லீவுக்கு வந்திருக்கா,போய் பாட்டியை கூப்பிடும்மா”என்றார் தாத்தா

“இல்ல, பரவாயில்லை!மெதுவா வரட்டும்!இங்க என் மச்சினி ஆத்துக்கு வந்தேன். அப்பிடியே உங்களையும் பாத்துட்டு போலாம்னு”

“என்ன சமாசாரம்?”

“மச்சினி பொண்ணுக்கு வரன் பாத்துண்டு இருக்கா இல்லயா?அதான் ஒரு தெரிஞ்ச இடம் இருக்குன்னுட்டு சொல்றதுக்கு வந்தேன்”

“யாரு?”

“நம்ம மேலத்தெரு நாச்சாமி இருக்கான் இல்லியா?”

“ஆமா!”

“அவன் இரண்டாவது மச்சினியை கும்பகோணத்தில குடுத்திருக்கே”

“ஆமா!”

“அவ இளைய மாமனார் பிள்ளை மேட்டுர் கெமிகல்ஸ்ல வேலை பாக்கறனே”

“ஆமா!ஆமா!”

“அவன் பொண்டாட்டி கூட…… திருச்சி.”

“ ஆமா!திருச்சிக்காரி!”

“கரக்டா சொல்றேளே! அவ தம்பி திருச்சியில பி.எச்.ஈ.எல் ல வேலை பாக்கறான்”

“ஆமா!ஆமா”

இந்த ஒவ்வொரு ஆமாவுக்கும் தாத்தாவுக்கு குரலில் சத்தமும் , உற்சாகமும் கூடிக் கொண்டே போயிற்று.

“அவனொட மச்சினன் கூட மட்ராஸ்ல பாங்க்ல வேலை பாக்கறான்”

“ஆமா!ஆமா!”

“அவன் பையனுக்கு பாக்கலாம்னு!.உங்களுக்கு தெரியுமோல்லியோ”

“சரியா தெரியல யாருன்னு ! என் வைஃபை க் கேட்டா தெரியும்”

தாத்தா எப்பவும் பாட்டியை வைஃப் என்றுதான் குறிப்பிடுவார்.

இவ்வளவு நேரம் ஆமா ஆமா என்று சொன்னதற்கு என்ன அர்த்தம் என்று நினைத்துக்கொண்டேன். வந்த மாமா பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.

தாத்தா ஒல்லியாய் , உயரமாய் ஒரு சாயலில் லாரல், ஹார்டி இரட்டையரில் ஒல்லியாய் இருப்பவரான லாரலை நினைவு படுத்துகிறமாதிரி இருப்பார்.எப்பவும் கணுக்காலுக்கு மேலேயே இருக்கும் வேஷ்டி, முழங்கை வரை வருகிற தொள தொள சட்டை, முகத்தில் சதா சர்வதா சிரிப்பு, விடு விடு வென்ற வேக நடை. அந்த காலத்து எஸெல்சி. ஆங்கிலம் நன்றாக பேசுவார், அதைப் பற்றி பெருமையும் உண்டு.

ஒரு தடவைஅவர் மதுரைக்கு வந்த போது நான் படிக்கிற பள்ளிக்கு வந்து என்னுடைய ஏழாவது வகுப்பு டீச்சரிடம் ஆங்கிலத்திலேயே பேசிக் கொண்டிருந்தார். டீச்சரே கொஞ்சம் பயந்துகொண்டு உதறலோடு பேசினாற் போல் எங்களுக்குத்தோன்றியது.

அப்புறம் அந்த டீச்சர் என்னிடம் ”ஏண்டி! உங்க தாத்தா ரொம்ப நல்லா இங்க்லிஷ் பேசறாரே? பி.ஏ வா. எம் ஏ வா? ” என்று கேட்டார். நான் ” இல்ல டீச்சர்! எஸெஸெல்ஸி தான் “என்றேன். “அடேயப்பா! இந்த போடு போடறாரே! அந்த காலத்து எஸெஸெல்ஸி, இந்த காலத்து பி ஏ , எம் ஏக்கு சமம்டி!”

அதை தாத்தாவிடம் வந்து சொல்லி விட்டேன் . தாத்தாவுக்கு பெருமை சொல்லி மாளவில்லை.” “ஹெஹெ….. என்ன சொன்னா, பி ஏ வா, எம் ஏவான்னு கேட்டாளா? அந்த காலத்து எஸஎல்ஸி இந்த காலத்து எம் ஏ ன்னாளா” கெக்கெக்கென்று சிரித்தார்.

.அந்த டீச்சரையும் ரொம்ப பிடித்துவிட்டது “ ரொம்ப நல்லவ பாவம்!த்ஸொ! த்ஸொ! ரொம்ப நல்ல மாதிரி!” என்று சொல்லிக் கொண்டே இருந்தார்.

” மாப்பிள்ளை இதை கேட்டேளா? ராதாவோட டீச்சர் என்ன சொன்னான்னு?”

“ ம்.. கேட்டேன், கேட்டேன்! சொல்லமாட்டாளா பின்ன? எனக்கே அந்த சந்தேகம் ரொம்ப நாள் இருந்தது!” சொல்லிக் கொண்டே துண்டை தோளில் போட்டுக் கொண்டு குளிக்கப்போனார் அப்பா. அப்பாவின் முக பாவத்தை என்னால் சரியாக பார்க்க முடியவில்லை.

தாத்தா “மாப்பிள்ளை! மாப்பிள்ளை! இன்னொரு சமாசாரம் என்னன்னா “ என்று கூறிக்கொண்டே பின்னோடு போனார். அப்பா குளியலறையில் புகுந்து குளிக்க ஆரம்பித்த பிறகும் பாத்ரூம் வாசலில் இருந்துகொண்டு ஏதோ சொல்லிக்கொண்டே இருந்தார்.

அதோடு விட்டால் பரவாயில்லையே, என்னோடு தினம் பள்ளிக்கூடத்திற்கு வருவேன் என்று பிடிவாதம். அதை சமாளிப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது.

தாத்தாவின் அப்பா அந்த காலத்திலேயே நாகப்பட்டிணம் ஜில்லாவிலே முக்கிய புள்ளி, செஷன்ஸ் கோர்ட்டில் பிரபல வக்கீல். “வக்கீல்னா என்ன தேங்கா மூடி வக்கீலா என்ன அவர்? அவர் பேரைச் சொன்னா அழுத பிள்ளை வாய் மூடும், அவர் இருந்த கெத்து என்ன , கம்பீரம் என்ன , அந்தஸ்து என்ன, ஹோதா என்ன? அடேயப்பா! சொல்லி மாளாது “என்பாள் அம்மா.

ஆனால் துரதிர்ஷடவசமாக தாத்தாவுக்கு அந்த கல்யாண குணங்கள் எதுவுமே வர வில்லை என்பதுதான் பாட்டியின் குறை. தாத்தா ஒரு விதத்தில் நல்லவர்தான், ஆனால் வல்லவர் அல்ல. அவர் அப்பா வைத்து விட்டு போன சொத்துக்களை ஆளுகிற ஆளுமையோ, கட்டி காப்பாற்றுகிற சாமர்த்தியமோ,தோரணையோ அவரிடம் இல்லை. போதும் போதாதற்கு, எல்லாரிடமும், வயலில் வேலை செய்பவனிலிருந்து , அக்கம் பக்கத்தவர்,தாயாதி வரை ஏதோ சண்டை,பூசல். வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுகிறாற் போல்பேசுகிற வித்தை அவருக்குத் தெரியவில்லை.

பாட்டி பாஷையில் சொல்வதானால் ‘அங்கிருக்கிற ஒவ்வொவொரு பயலும் எமகாதகன்கள்,கண்ணை முழிச்சுண்டிருக்கறச்சயே கையில இருக்கறதை பிடுங்கற அதி சாமர்த்திய சாலிகள், அதுகளுக்கு நடுப்பற இப்பிடி இரண்டுங்கெட்டானா இருந்தா பிழைக்கறது எப்பிடி?’

சமையலறையில் பாத்திரங்கள் சத்தம் கேட்க ஆரம்பித்தது.

தாத்தா இரைந்து “இந்தா , இந்தா !” என்று கத்தினார்.

“ராதா! பாட்டி கிட்ட மாமா வந்திருக்கிறார்னு சொல்லு! காபி கொண்டு வா!”

“இல்லன்னா! அதெல்லாம் வேண்டாம் , நான் கிளம்பறேன்”

“நன்னாருக்கே! அப்பிடி எப்பிடி போக முடியும்?”

நான் சமையல் உள்ளில் நுழைந்தேன்.

பாட்டி” என்ன உங்க தாத்தா தட புடலா கத்தி ஆறது? உள்ள என்ன இருக்கு என்ன இல்லைன்னு ஒண்ணும் தெரியாது! தாட்டு பூட்டுனு அமக்களப் படுத்தியாறது!”பல்லைக்கடித்தாள்.

மடிசார் புடவை தலைப்பால் வலது தோளை லேசாக மூடிக்கொண்டு( மரியாதை நிமித்தம் !!) கூடத்துக்கு வந்து

“ வாங்கோ மாமா ! வாங்கோ! ஆத்தில எல்லாரும் சௌக்யமா? மாமியை அழைச்சுண்டு வல்லியா?” என்றாள் மென்மையான குரலில்.

“ மாமிக்கு உடம்பு முடியலையாம், அதான் வல்லை! நீ போய் காபி கொண்டு வா மாமாவுக்கு!” தாத்தா உரத்த குரலில் சொன்னார்.

யாராவது வரும்பொழுது தாத்தா பாட்டியை அதிகாரம் பண்ணுகிற தோரணையில் குரலை உயர்த்தி பேசுவார். மற்ற சந்தர்ப்பங்களில் பாட்டியின் உருட்டி விழிக்கிற முழிக்கும் , அடித் தொண்டையில் மெதுவாக உறுமுகிற மாதிரி பேசுகிற பேச்சுக்கும் எதிர் பேச்சு பேச முடியாது என்பதால் இந்த மாதிரி சந்தர்ப்பங்களை எல்லாம் நன்றாக பயன்படுத்திக் கொள்ளுவார்.

மாமா காபி சாப்பிட்டுவிட்டுக் கிளம்பினார். தன் அதிகார பேச்சுக்கான பின் விளைவுக்கு பயந்து தாத்தாவும் அவருடனே கிளம்பி வெளியே போனார்.

சாயங்காலம் தலையாரி கோபால் “அம்மா!அய்யா இல்லிங்களா?” என்று கேட்டுக் கொண்டே வந்தான்.

“ நல்ல வேளை நானே உன்னைக் கூப்பிட்டு விடனும்னு நினைச்சேன்!! நீயே வந்துட்ட! சித்த உடையார் வீட்டு வரைக்கும் போய் போன வாரம் குடுத்த பத்து மூட்டை நெல்லுக்கு பணம் வாங்கிண்டு வா! உங்க அய்யா கிட்ட சொல்றதும் இந்த சுவத்துகிட்ட சொல்றதும் ஒண்ணுதான்! வீட்டுல ஆயிரம் செலவு இருக்கு! என்னத்தை சொல்றது போ!”

“விளக்கு வைக்கறதுக்குள்ள போறேன், இல்லாட்டா கிடைக்காது” என்று சொல்லிக் கொண்டே போனான்.

என் அண்ணாவும், தம்பியும் விளையாட போய்விட்டார்கள்,

பாட்டி எனக்கு தலை வாரி விட்டுக்கொண்டே சொன்னாள்,

“ எனக்கும் , எங்க பெரியப்பா பொண்ணு சிவகாமுவுக்கும் ஒண்ணாதான் ஜாதகத்தை எடுத்தா. உங்க தாத்தா ஜாதகம், வெங்கடேச அத்திம்பேர் ஜாதகம் இரண்டும் வந்தது.எனக்கு இவர் ஜாதகம், அக்காவுக்கு அத்திம்பேர் ஜாதகத்தையும் பாத்தா,பொருந்தலைன்னா மாத்திப் பாத்துக்கலாம்னா! என்னைப் பிடிச்ச அதிர்ஷ்டம் , பொருந்தியுடுத்து. இல்லன்னா என்னை அத்திம்பேருக்கு பாத்துருப்பா ! ஹும்! தலைஎழுத்தை யாரால மாத்த முடியும்? இப்ப பாரு , அத்திம்பேர் , சிவகாமு அக்காவை தாங்கு தாங்குன்னு தாங்கறார்!”

“சாமி விளக்கேத்தறியா” என்று பாட்டி என்னைக் கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது,விறு விறு வென்ற உள்ளே நுழைந்த கோபால்,

“ போங்கம்மா! நம்ம ஐய்யா பண்ற வேலையை என்னன்னு சொல்றது?” என்றான்.

“ஏன் என்ன ஆச்சு?”

“ஏண்டா?ஒரு தடவை நெல்லை குடுத்துவிட்டு , எத்தனை தடவை பணம் வாங்குவீங்கன்னு பரியாசம் பண்றாங்கம்மா!,தலை தூக்க முடியல ,இஞ்ச வந்துதான் நிமுந்தே பாக்கறேன்! “

பாட்டி முகம் ஜிவு ஜிவென்று சிவந்தது.

“ எப்ப பணம் வாங்கினாராம்?

“இரண்டு நாள் முன்னாடி போய் வாங்கிட்டு வந்தாராம்!”

தாத்தாவை நினத்தால் கவலையாக இருந்தது.

“ வரட்டும் ப்ராம்ணன்! நான் இங்க இத்தனை சிலவு பூதம் போல நிக்கறதே , என்ன பண்றதுன்னு கையை பிசைஞ்சுண்டு நிக்கறேன்!வண்டியை ரிபேர் பண்ணனும், அடுத்த உழவுக்குள்ள மாட்டை கொஞ்சம் சரிபடுத்தி வைக்கணும், லீவுக்கு வந்த குழந்தைகளுக்கு ஏதாவது வாங்கித்தரணும், வீட்டுல மளிகை சாமான்கள் வாங்கணும்,பழய பாக்கிகளை செட்டில் பண்ணனும். இந்த மனுஷனானா இப்பிடி பண்ணறது?இவர் கூடப் பிறந்த பொண்ணுகள் ஒண்ணொண்ணும்எப்பிடி என்னைப் பார் , உன்னைப் பார்னு ஜகஜ்ஜால கில்லடிகளா இருக்குகள்! இது ஒத்தைப் பிள்ளையா பிறந்துட்டு இப்பிடி இருக்கே ! சமத்துக்கு அப்பாவைக் கொள்ளப் படாதோ, அப்பிடியே அசட்டுக்கு அம்மாவைக் கொண்டு பிறந்திருக்கு! போறும் போறாத்துக்கு இந்த பொய் பித்தலாட்டம் வேற!” பாட்டி எங்கோ ஆரம்பித்து எங்கோ போய் கடைசியில் பிரச்னையின் ஆதாரத்துக்கு வந்து சேர்ந்தாள்.

தாத்தா இருட்டி வெகு நேரம் கழித்து வந்தார். பாட்டி பிலு பிலுவென்று பிடித்து கொண்டு அரை மணி நேரம் ஓயவில்லை.

தாத்தா “ஷீ இஸ் ஏ டஃபர், ஆல்வேஸ் கம்ப்ளைனிங்க்!நெவர் லிசனிங்க்!!உச் ..உச்..” என்று நடு நடுவில் எதையோ சொல்லிக் கொண்டிருந்தார். நடுவில் கிடைத்த இடைவெளியில்,

“குழந்தை ரகு எஸ்ஸெல்ஸி போறானே, அதான் அவனுக்கு வாட்ச் வாங்கப் போனேன், அப்புறம்……” என்றார்.

அவ்வளவுதான் பாட்டிஒரு நொடியில் கொதிக்கும் எரிமலையிலிருந்து குளிரும் பனிமலையானாள்.

“அதை சொல்லிட்டு போலாமில்லியா? எங்க காட்டுங்கோ பாப்போம்!குழந்தை கைக்கு நன்னா இருக்கும், பரிட்சைம் போது மணி பாத்துக்கணுமே”

அவர்கள் இருவருக்கும் எங்கள் அண்ணா மீது இருந்த அன்பு, காவியங்களில் வைத்துப் போற்றப் பட வேண்டிய அன்பு .அதற்கு இணையான அன்பை என் வாழ்நாளில் இது வரை பார்த்ததில்லை ,ஆனால் அன்று அது எங்களுக்கெல்லாம் கொஞ்சம் பொறாமையாகத்தான் இருந்தது என்பதுதான் உண்மை.

“அப்புறம் வாழைத் தோப்பிலே மரங்களுக்கு முட்டு கொடுக்கறதுக்கு முன் பணம் கொடுத்துட்டு வந்திருக்கேன், இந்தா பாக்கி பணம்!” கொடுத்தார்.

‘சரி! சரி! காலை ,கையை அலம்பிண்டு சாப்பிட வரட்டும்!அப்புறம் செலவழிச்சதுக்கு கணக்கு சொல்லட்டும்”

இதற்கப்புறம் அந்த கோடை விடு முறை வேறு வில்லங்கமான நிகழ்சிகள் எதுவும் இல்லாமல் முடிந்தது.

அதற்கடுத்த கோடை விடுமுறைக்கு வழக்கம் போல நாங்கள் நால்வரும் மறுபடியும் கிராமத்துக்குப்போனோம்.அந்தி மயங்குகிற சமயத்துக்கு வீட்டைச் சென்று அடைந்தோம். பாட்டி கொஞ்சம் கவலை தோய்ந்த முகத்துடன் தன் வழக்கமான உற்சாகம் இல்லாமல் உட்கார்ந்திருந்தாள்.

எங்களைப் பார்த்தவுடன் “வாங்கோடா குழந்தைகளா! , எப்ப கிளம்பினேள்?எப்ப சாப்பிட்டேளோ?”என்று சொல்லிக் கொண்டே உள்ளே போனாள்.

“என்ன பாட்டி?ஏன் என்னவோ போல இருக்கேள்? தாத்தா எங்க?” என்றான் தம்பி. கொஞ்சம் குரலில் தெம்பு வந்தவளாக

“உங்க தாத்தா சமாசாரம்தான் தெரிந்த விஷயமாச்சே! இரண்டு நாளைக்கு முன்னாடி எனக்கு மருந்து வாங்கிண்டு வரேன்னு திருவாலூர் கிளம்பிப் போனார், இன்னும் ஆளைக் காணலை! வியாழக் கிழமை சாப்பாட்டுக்கப்புறம் கிளம்பிப் போனார், இதோ இன்னிக்கு சனிக்கிழமை ராத்ரி ஆப்போறது இன்னும் வரலை”

“என்ன பாட்டிதிருவாரூர் இங்க இருந்து பத்து,பதினைந்து கிலொ மீட்டர் தூரத்தில இருக்கு. ஜாஸ்தி ஆனாலும், நாலு, அஞ்சு மணி நேரத்தில திரும்பலாமே! நானும் சீனுவும் வேணா போய் பாத்துட்டு வரட்டுமா?” என்றான் அண்ணா.

“ ராத்திரி இருட்டிண்டு வரது,தவிர எங்கன்னு போய்த் தேடுவ? உங்க தாத்தா திருவாரூர் தான் போனாரோ? இல்ல அங்கிருந்து வேற எங்கயாவது போனாரோ?யார் கண்டா , வரப்போ வரட்டும் போ!” எங்களைப் பார்த்த தைரியத்தில் பாட்டி பேசினாள்.

ராத்திரி சாப்பாட்டிற்கு அப்புறம் சமையலறையை சுத்தம் செய்யும் போது பாட்டி முகத்தில் திரும்பவும் பயம் வந்தாற் போல் இருந்தது.

“என்ன பாட்டி, ஏன் கவலைப் படறேள்? நீங்கதான் தாத்தா இங்க இருந்தா படுத்தறார்ங்கறேள் .இரண்டு நாள் எங்கோ போய்ட்டு வந்தா வரட்டுமே!” என்றேன்.

“அது இல்லம்மா! அசடோ,சமத்தோ, இரண்டுங்கெட்டானோ, கெட்டிக்காரனோ,என் கையில இந்த மனுஷனை நன்னா பாத்துக்கோன்னு ஒப்படைச்சுட்டு போயிருக்காளே உங்க கொள்ளுப் பாட்டி மகராஜி! நான் பாத்துக்க வேண்டாமா? அது என் கடமை இல்லியா? சாப்பிட்டாரோ, வைச்சாரோ, எங்கயாவது அடி பட்டு கிடக்காரோன்னு மனசு அடிச்சுக்கறது! ஆனா அதுக்காக நான் இனிமே சண்டை போட மாட்டேன்னு அர்த்தம் இல்ல! திரும்ப வரச்ச பிடிச்ச காட்டில கொண்டு விடத்தான் விடுவேன். வரட்டும் மனுஷன்!”

மறு நாள் காலை பதினோரு மணி வாக்கில் தாத்தா வந்து சேர்ந்தார். திருவாரூரில் யாரோ பட்டாமணியத்தையோ, கர்ணத்தையோ பார்த்தாராம், முக்கியமான விஷயமாக நாகப்பட்டணம் போக வேண்டியிருந்ததாம், இந்த மாதிரி என்னவோ கதை கதையாக சொன்னார், யாருக்குமே அதை கேட்கிற மனநிலையுமில்லை, நம்புகிற மனநிலையுமில்லை. கடைசியில் பாட்டிக்கு வாங்க வேண்டிய மருந்துகளையும் வாங்கவில்லை.

அடுத்த கோடை விடுமுறை ஆரம்பிப்பதற்கு இரண்டு மாதங்கள் முன்பு பாட்டி செத்துப் போனாள். அந்த ஒரே இரவில் நாங்கள் அனைவரும் பெரியவர்களானோம்.சிதையில் எரிந்தது, எங்கள் பாட்டி மட்டுமில்லை, எங்கள்பால்யமும்தான். ’ பாட்டியோடு பால்யம் போம்!’ ஆம், போயிற்று!

பாட்டியை இனி பார்க்கவே முடியாது என்கிற பயங்கரமான, மாற்றமுடியாத, வலி மிக்க உண்மையை எதிர் கொள்ளத் தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தோம்.

அன்றைக்கு இரவு தூக்கமும் இல்லாமல், விழிப்புமில்லாமல் வெகு நேரம் தவித்து விட்டு கண் அசந்த வேளையில் தங்கை , என்னை எழுப்பி “அக்கா! அக்கா ! தாத்தாவைக் காணும், படுக்கையில இல்ல,” என்றாள்.

ஒரு நொடியில் வீடே விழித்துக் கொண்டது. வீடு முழுக்க தேடி அவர் அங்கு இல்லை என்று தீர்மானமானவுடன் ,அப்பாவும் ,ராமசாமியும் , கீழத் தெருவின் கடைசியிலிருந்த சிவன் கோவில் பக்கம் போனார்கள், சித்தப்பாவும், மாமா தாத்தாவும் , மேலத்தெரு பக்கம் தேடிக் கொண்டு போனார்கள், அண்ணாவும், தம்பி சீனுவும் ,கோபாலுவும்ஆற்றங்கரைப்பக்கம் போனார்கள்.

போய் விட்டு வந்த பிறகு அண்ணா சொன்னான்

“ பிள்ளயார் கோவில் திண்ணையில் படுத்துக் கொண்டிருதவர்களில் எல்லாம் தேடிப் பார்த்து விட்டு ஆத்தங்கரைக்குப் போனோம்,அரச மரத்து சலசலப்பு தவிர வேற சத்தமேயில்ல, மேலே மினுங்கிக் கொண்டிருந்த நட்சத்தர வெளிச்சம் இருட்டை ஜாஸ்தியா காமிச்ச மாதிரி இருந்தது, கொஞ்சம் பயமா கூட இருந்தது. மங்கின வெள்ளையா தெரிஞ்ச ஆத்து மணல்ல தூரக்க யாரோபடுத்துண்டு இருந்தது தெரிந்தது,கோபால் சொன்னான் ,’ கிட்டப் போய் திடும்னு நின்னா அய்யா பயந்துடுவாரு, இங்கேயேயிருந்து கூப்பிட்டுகிட்டே போலாம்’

குரல் குடுத்துண்டே போனோம், தாத்தாபதில் சொல்லலை , கிட்ட போய்ப் பார்த்தால் குலுங்க குலுங்க அழுதுண்டிருந்தார். அவர் தோளைத் தொட்டதும் அழுது கொண்டே பாட்டி பாவம்! என்றார்”

தாத்தாவை எங்களோடு நாங்கள் வசித்த நகரத்துக்கு கூட்டிக் கொண்டு போனோம்.எங்களோடு நகரத்துக்கு வந்த தாத்தா கிராமத்தில் இருந்தவர் இல்லை.