முற்றுப்புள்ளி

முற்றுப்புள்ளியுடன் முயல் வளைக்குள் ஒரு பயணம்- காலத்துகள் சிறுகதை

காலத்துகள்

“நீ மிட் லைப் க்ரைசிஸ்ல சிக்கிட்டிருக்கேன்னு தோணுது,“ என்றார் பெரியவர் முற்றுப்புள்ளி.

“ஸார்…”

“பக்கத்து வீட்டுக்காரி கூட அப்பேர் வெச்சுக்கறவன் தன் பொட்டென்ஸி குறிச்சு சஞ்சலப்படறான்னு முன்னாடி ஏதோ “பிற்பகல் உரையாடல்ன்னு” கதை எழுதின, இப்ப மத்தியானம்ன்னு மரிடல் லைப் பத்தி எழுதிருக்க. ஒனக்கு ஆப்டர்நூன் பெடிஷ் ஏதாவது இருக்கா, அந்த நேரத்துல உடலுறவு வெச்சுக்கறதுதான் இன்னும் ஸ்டிமுலேட்டிங்கா…”

“அதெல்லாம் எதுவும் இல்லை ஸார்”

“பின்ன ஏன்யா மணவாழ்வின் மதியம்னு தலைப்பு. பலான கத மாதிரியும் இருக்கு, தாம்பத்திய உறவுக்கு உதவி செய்யும் செல்ப் ஹெல்ப் புக் டைட்டிலையும் ஞாபகப்படுத்துது. இலக்கியத்துக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை,” என்று சொல்லிக் கொண்டிருந்தவர், “கதையும் எழுத்தும் மட்டுமென்ன இலக்கிய தரமாவா இருக்கு!” என்று முடித்ததை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவருக்கும் எனக்குமான உறவு அப்படி. இல்லாவிட்டால், சைக்கிள் தவிர வேறு எந்த வாகனமும் ஓட்டப் பழகாத நான் பெரியவர் வீட்டிற்கு எண்பது ரூபாய் தந்து ஆட்டோவிலோ, நான் வசிக்கும் கடற்கரை நகருக்கு பிரத்யேகமான நாய் பிடிக்கும் வண்டி போல் இருக்கும் ’டெம்போ’விலோ பத்து ரூபாய் தந்து வருவதோடில்லாமல், என் சமீபத்திய கதை அவரிடம் சிக்கி, என் புனைவுலகம் மட்டுமின்றி, நிஜ வாழ்வும் சின்னாபின்னமாவதை ஏன் கேட்டுக் கேட்டுக்கொண்டிருக்கப் போகிறேன்? மசோகிஸ்ட் என்பதாலோ அவரைத் தவிர வேறு யாரும் என் கதைகள் குறித்து பேசுவதில்லை என்பதாலோ நான் அவரை சகித்துக் கொள்வதாக வாசகர்கள் நினைக்கலாம். ஆனால் உண்மையான காரணத்தை விளக்குவதற்காக, எனக்கும் அவருக்குமான உறவைப் பற்றி மீண்டும் சொல்லப் போவதோ (அதை ஏற்கனவே கதையாக எழுதி விட்டதால்), அந்தக் கதைக்கான லிங்க்கை இங்கு கொடுத்து உங்களின் வாசிப்பனுபவத்தை கலைத்துப் போடும் யுத்தியையோ உபயோகப்படுத்தப் போவதில்லை. ஏற்கனவே அதை – கதைக்குள் கதை அல்லது ஹைபர்லிங்க் கதை என்று எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் – செய்து விட்டேன் என்பதைவிட முக்கிய காரணம், இப்போதெல்லாம் என் மனம் கதை வெளியேற்றப்படாத கதை மீதுதான் குவிகிறது.

“ஸாரி நா வேற ஏதோ யோசிச்சிட்டிருந்தேன், என்ன சொன்னீங்க ஸார்?”

“தப்பா எடுத்துக்காத, ஒனக்கு செக்ஸுவல் ப்ரஷ்ட்ரேஷன் எதுவும் இல்லைல?”

அந்தரங்க விஷயங்களைப் பற்றி கேட்ட பின்பு என்ன “தப்பா எடுத்துக்காத”? கிழம் இப்படி நோண்டுவதைப் பார்த்தால் அவர் மீதே எனக்கு இப்போது சந்தேகம் வருகிறது. அவர் நல்ல மனநிலையில் இருக்கும் சமயமாகப் பார்த்து விஷயத்தை கறந்து விட வேண்டும், இன்னொரு கதை தயார்.

“நீங்கதான ஸார் சொந்த அனுபவங்கள் வெச்சே காலத்த ஓட்டற, அதெல்லாம் புனைவா மாற மாட்டேங்குது, மாத்தி எழுதுன்னு சொல்லிட்டே இருப்பீங்க. அதான் இந்தக் கதை எழுதிருக்கேன். எழுத்தாளனையும் அவன் எழுத்தையும் ஒண்ணா பாக்கறது சரியா ஸார்? நாலஞ்சு மாசம் முன்னாடி ரெண்டு துப்பறியும் கதை எழுதினேன், அதுக்காக என்னையோ இல்ல அகதா க்ரிஸ்டியையோ கொலைகாரன்னு சொல்வீங்களா?”

“நீ எழுதியது துப்பறியும் கதைன்னு நீதான் சொல்லிக்கணும், “துப்பறியும்”ன்னு தலைப்பு மட்டும் வெச்சா ஆச்சா? அதுல என்ன துப்பறிதல் இருக்குன்னு வாசகன் என்ன இன்வஸ்டிகேட் பண்ணினாலும் கண்டுபிடிக்க முடியாது. இதுல க்ரிஸ்டிகூட ஒன்ன கம்பேர் பண்ணிக்கறியா, பேஷ்”

“கம்பேர்லாம் இல்ல ஸார், நீங்க கேட்டதுக்கு பதில் சொன்னேன்”

“ஓகே, உன் மரிடல் லைப் நல்லாருக்குன்னே வெச்சுப்போம்”

“நெஜமாவே நல்லாத்தான் இருக்கு ஸார், வெச்சுக்கறதுக்கு ஒண்ணுமில்ல”

“சரி விடு, எனக்கெதுக்கு அந்த பிரச்சனைலாம், ஏதோ ப்ராஸ்டேட் வராம நான் தப்பிச்சுட்டேன், அதுக்காக மத்தவங்க…”

“எனக்கு அந்த வயசுலாம் இன்னும் வரலை ஸார்”

“டோன்ட் கெட் எக்ஸ்சைடட். யுவர் செக்ஸுவல் லைப், யுவர் ப்யுன்ரல். மணவாழ்வின் மதியம் கதைய பாப்போம், உன் கதைகள்ல வர பாத்திரங்களுக்கு மூஞ்சியோ, உடம்போ இருக்க மாட்டேங்குதே அதப் பத்தி யோசிச்சிருக்கியா?”

“அவங்க மனுஷங்கதான் ஸார், நான் எழுதின பேய் விளையாட்டு கதையோட குழப்பிட்டிருக்கீங்கன்னு நினைக்கறேன், அந்தளவுக்கா உங்கள அது பாதிச்சிருக்கு?”

“யோவ், பாத்திரங்கள் பற்றிய வர்ணனை இல்லைன்னு சொல்ல வரேன்யா, அதுக்காக நீங்கத்தானே சொன்னீங்க ஸார்ன்னு அடுத்த கதைல சாண்டில்யன் ரேஞ்சுக்கு பின்னழகு, முன்னழகுன்னு எழுதி வெச்சுடாத. சொல்றத சரியா புரிஞ்சுக்காதது உன்கிட்ட இருக்கற பெரிய ட்ராபேக்”

“இது புரியுது ஸார், கவனிக்கறேன்”

“புறச்சூழல் பத்தியும் பெருசா எதுவும் எழுத மாட்டேங்கற. அப்பறம் மனைவி நடந்துக்கற விதத்துக்கு கதைல ஜஸ்டிபிகேஷனே இல்ல, ஒரு நாள் நைட் வீட்டுக்கு வரலைன்னு இவ்ளோ வெறுப்பு ஏற்படுமா என்ன. அப்படி நடந்தா அந்த உறவுல ஏற்கனவே விரிசல்கள் இருந்திருக்கணும், அதைப் பத்தி கதைல எதுவும் இல்ல”

“இந்த மாதிரி இடைவெளிகளை வாசகர்கள்தானே ஸார் நிரப்பனும். எல்லாத்தையுமே வெளிப்படையா சொல்லிட்டா எப்படி”

“இடைவெளியை நிரப்பலாம்யா, ஆனா கதைல இந்த பாத்திரங்களின் கடந்த காலம் பத்தி இருப்பது ப்ளாக் ஹோல், அதுக்குள்ளே ரீடர் நுழைஞ்சா அவ்ளோதான்”

“இத பத்தியும் யோசிக்கறேன் ஸார்”

“இதெல்லாத்தையும் விட பெரிய பிரச்சனை உன் நடைதான். வாக்கியங்கள் நீ டைப் பண்ணின மாதிரி இல்ல, கடிச்சு துப்பின மாதிரி இருக்கு”

“தட்ஸ் ஹார்ஷ் ஸார்”

“ஹார்ஷா, மென்மையா சொல்லியிருக்கேன். உன் நடை உண்மைல எப்படி இருக்கு தெரியுமா, கான்ஸ்டிபேஷன் பிரச்சனை இருப்பவன், ரொம்ப நேரம் முக்கி, ரத்தக் கசிவோட..”

“ஸார் நிறுத்துங்க. நான் எழுதறது மினிமலிஸ்ட் ரைட்டிங், அதனால உங்களுக்கு இப்டிலாம் தோணுது”

“மினிமலிஸம்ன்னா கரடு முரடா இருக்கணும்னு எவன்யா சொன்னான், ஹெம்மிங்வே, கவாபாட்டா இவங்க ரைட்டிங் அப்படியா இருக்கு. இப்படி சில லிடிரரி ஜார்கன்ஸ அரைகுறையா புரிஞ்சுகிட்டு அப்படியே புடிச்சுக்க வேண்டியது. அப்புறம் பொருந்துதோ இல்லையோ, சான்ஸ் கிடைக்கும்போதெல்லாம் யூஸ் பண்ணிடறது”

“நாம இப்ப பேசிட்டிருக்கறதுக்கு அரைகுறையா பிட் ஆகுதே ஸார்”

“நல்லா வக்கணையா பேசற, எழுதறதுதான்… நீயும் தொடர்ச்சியா எழுதி என்ன இம்ப்ரூவ் ஆகிருக்க? எழுதினதை திருப்பி படிக்கணும், ஒரு பத்து பதினஞ்சு நாள் கேப் விட்டு திருப்பி எடுத்து தேறுமான்னு பாக்கணும், ஏதாவது நான் சொல்ற மாதிரி பண்றயா?”

“ஒரு கதைக்கு ஆறேழு வெர்ஷன் வரை திருத்தறேன். அதுவும் எடிட்டர் கொஞ்சமாவது சேடிஸ்பை ஆறது ரொம்ப கஷ்டம். நானும் இத்தன வருஷமா ட்ரை பண்றேன் மனுஷன் கல்லுளிமங்கனாட்டம் இருக்கார், உங்கள மாதிரியேதான்”

“என்ன எடிட்டிங்? உன்ன சும்மா என்கரேஜ் பண்றாரு, நாங்க என்ன எதுவும் தெரியாமயா இருக்கோம்? கும்பல் சேத்துட்டு குழுவா கும்மி அடிக்கற நீ, லாபி”

“லாபியா, கிழிஞ்சுது போங்க, அது ஒண்ணுதான் கொறச்ச ஸார்,” என்று நான் சொன்னதை கண்டுகொள்ளாமல், “பாம்புக் கதை ஒண்ணு எழுதின, அதுல ஒண்ணுமே இல்லைன்னு அப்பவே நான் சொன்னேன். கடசில என்னாச்சு, இந்தாள் கதை எழுதலைன்னு யார் அழுதாங்கன்னு செம சாத்து சாத்தினாங்க,” என்றார்.

“எடிட்டருக்குக்கூட அந்தக் கதை பத்தி டவுட் இருந்தது, பொதுவா அவர் சொல்ற திருத்தங்களை ஏத்துப்பேன், ஆனா அந்தக் கதைல வெறும் “ழானர்” எழுத்தைதான் ட்ரை பண்ணினேன், சூப்பர்நேச்சுரல், நாட் ஹாரர்.”
“உச்சரிப்ப மட்டும் சரியா சொல்லு. ஜானர், ழானர் என்ன பெரிய வித்தியாசம். கடைசில கதை குப்பைனு வெளிப்படையா சொல்லாம ஒத்துக்கறதுதான். ழானர்னு சொன்னேன்னா இலக்கியம் படைக்கற கடமையிலிருந்து நீ எஸ்கேப் ஆயிட முடியுமா?”

“அப்டில சார், கதை சூப்பர்நேச்சுரல்னாலும் சில உள்ளடுக்குகள் என்னையும் அறியாம கதைக்குள்ள புகுந்திருக்கலாமே, எனக்கும்கூட அந்தக் கதை மேல பெரிய இல்லுஷன்லாம் இல்ல ஸார்”
“இப்டி பொறுப்பில்லாம எழுதறதுனாலதான் நீ பாலகுமாரனைத் தவிர யாரையும் படிக்கலனு சொல்றாங்க”

“அதுக்கு நான் என்ன ஸார் பண்றது”

“ஏன் நல்லா எழுத ட்ரை பண்றது, நீ எழுதறது ஒண்ணு பாம்பு, பேய் மாதிரி போகுது இல்ல சம்பவங்களின் தொகுப்பு, நத்திங் எல்ஸ். ஒன் கதையை பத்தி வந்த கருத்தைவிட உன் வாசிப்பைப் பத்தி இப்படி சொன்னதுக்குதான் யு மஸ்ட் பி அஷேம்ட்”

“நல்லா எழுததான் ஸார் ட்ரை பண்றேன், வேணும்னேவா யாராவது இப்படி எழுதுவாங்க. இப்போ அசோகமித்திரன் ஜீனியஸ், ஆனா அவருக்குப் பிடிச்ச ரைட்டர்ஸ் கல்கி, அலெக்ஸாண்டர் டூமா. என் கேஸ் தலைகீழ்னு வெச்சுக்க வேண்டியதுதான், நான் படிக்கறவங்க ஜீனியஸ், எழுதறது ரைட் ஆப்போசிட்டா வருது.”

“இப்படியே சப்பக்கட்டு கட்டிட்டிரு, சரி இந்த மணவாழ்வு கதைக்கு தமிழ் சிறுகதை மரபுல என்ன இடம்னு சொல்லு பார்ப்போம்”

“எதிர் மரபு இல்ல அ-மரபுன்னு வெச்சுக்கலாமே ஸார். குடும்ப உறவு பற்றிய இன்னொரு பார்வை…”
“ரிச்சர்ட் யேட்ஸோட ரெவோல்யுஷ்னரி ரோட் படிச்சிருக்கேல, அப்பறம் என்ன புதுசா எதிர் மரபு?”

“இந்தக் கருவை வெச்சு நெறைய புனைவுகள் இருக்குதான் ஸார், ஆனா ஆல் ஹேப்பி பேமிலீஸ் ஆர் அலைக், பட் ஈச் …”

“நிறுத்து, டால்ஸ்டாயலாம் நீ க்வோட் பண்ணவே கூடாது, அவர் எங்க நீ எங்க. ஒன் ஸ்டோரீஸ்ல என்ன தரிசனம் இருக்கு. காலாகாலத்துக்குமான அறம் ஏதாவது அதுல இருக்கா. திருப்பி கேக்கறேன், உன் கதைகளுக்கு தமிழ் இலக்கிய மரபுல என்ன இடம் இருக்கு? நீ மட்டும் இல்ல, உன் கதைய பப்ளிஷ் பண்றவங்களும் இந்த கேள்வியை தங்களையே கேட்டுக்கணும், இல்லைனா நீ பாட்டுக்கு குப்பையா எழுதி குவிச்சுகிட்டே இருப்ப. அத தடுப்பது ஒரு வாசகனா, விமர்சகனா எங்க கடமை”

“இனிமே யதார்த்த புனைவு தான் ஸார், ஏதாவது தரிசனம் தானா மாட்டாமையா போயிடும். இப்போ நான் எழுதிட்டிருக்கற கதைய சட்டுன்னு “லவ்” பத்தினதுன்னு சொல்லிடலாம், ஆனா அதுல கூட …”

“லவ்வா, சரிதான். உன் முகம் கண்டேனடி இல்லைனா என் உயிரே கண்ணம்மா இப்படி ஏதாவதுதான் தலைப்பு வைக்கப் போற”

“இல்ல ஸார், இப்ப செல்லம்மாள் கதை இருக்கு இல்லையா, அதை காதல் கதைனா சொல்வீங்க, ஆனா அதுல வர தூய அன்பு..”

“அப்ப புதுமைப்பித்தன் கதையோட நீ எழுதியே முடிக்காத கதைய கம்பேர் பண்ற, உன்ன விட்டா குப்பையா எழுதிட்டே போவேன்னு சரியாத்தான் சொல்லிருக்காங்க”

“ஸார், புரிஞ்சுக்குங்க. நான் எழுதறதும் நீங்க குறிப்பிட்ட டைட்டில் உள்ள கதைங்க மாதிரி இல்லைன்னு தான் சொல்ல வரேன். ஒரு கேள்விக்கான பதிலை செவன்த் ஸ்டாண்டர்ட்லேந்து ஒரு பையன் தேடறான். ரியலிஸ்டிக் ஸ்டோரிதான், அதுல லவ்வும் இருக்கு, இப்ப நா என்ன விளக்கினாலும் சரியா புரியாது. தாமஸ் ஹார்டியோட கவிதை வரிகளோட கதைய முடிக்கப் போறேன்”

“என்ன எழவோ, பிஞ்சுலையே பழுத்த பையன் போலிருக்கு”

“இது ஸ்வீபிங் ஸ்டேட்மென்ட் ஸார், அவனுக்கு பண்ணண்டு வயசிருக்கும். அந்த வயசுல இந்த உணர்வு நாச்சுரல்தான, உங்களுக்கும் வந்திருக்குமே,” என்று சொன்னதற்கு பெரியவர், “அட நீ வேற” என்று சலித்துக் கொள்வது போல் சொன்னாலும், அவர் உள்ளூர பால்யத்தின் காட்சியொன்றை மீண்டும் நிகழ்த்திக் கொள்கிறார் என்பதை அவரின் அதன் பின்னான மௌனம் உணர்த்தியது. தன்னை மீட்டுக் கொண்டவர், “அதெல்லாம் அப்பறம், இப்ப ஒன்னப் பத்திதான பேசிட்டிருக்கோம், என்ன திடீர்னு லவ்ல இறங்கிட்ட?”

“ஜனவரி 25க்காக…” இவரிடம் ஏன் அதெல்லாம் சொல்ல வேண்டும்? “ஏதோ தோணிச்சு ஸார் ப்ளான்லாம் பண்றதுல்ல. உங்க டீன் ஏஜ் பத்தி நீங்க ஏதாவது சொன்னீங்கன்னா அதையே…”

“சும்மா இங்க இருக்கறத அங்க, அங்க இருக்கறத இங்க மாத்திப் போட்டு கதைன்னு சொல்லிட்டிருக்க, அப்பப்போ ரைட்டர்ஸ், புக்ஸ் நேம் வேற சேத்துக்கற. இதெல்லாம்… “

“அசோகமித்திரன்கூட தன் வாழ்க்கைல நடந்த இன்சிடென்ட்ஸ்ஸ கலைச்சு போட்டுதான்..” என்று நான் சொல்லிக் கொண்டிருக்க, “போதும் கெளம்புயா, கடுப்பேத்தாத. யாரோடெல்லாம் ஒன்ன கம்பேர் பண்ற, க்ரிஸ்டி, டால்ஸ்டாய், புதுமைப்பித்தன், தாமஸ் ஹார்டி, அசோகமித்திரன், ஒருத்தர விட மாட்டியா, என்ன விளையாட்டா இருக்கா?” என்று சத்தம் போட ஆரம்பித்தார் முற்றுப்புள்ளி.

முற்றுப்புள்ளியின் வீட்டிற்கு போவதற்கு ஆட்டோவை சில சமயம் உபயோகப்படுத்தினாலும், அவருடனான விமர்சன உரையாடல் முடிந்து திரும்பும்போது நாய் வண்டியையே எனக்குத் தகுதியான வாகனமாக உணர்வேன். இன்றும் அப்படித்தான், ஆனால் இப்போது எனக்கு சிந்திக்க தனிமை தேவைப்பட்டது. ஆட்டோவில் பேரம் பேசாமல் ஏறி, வீட்டு முகவரியைச் சொன்னேன். இந்திரா காந்தி சிக்னலில் காத்திருப்பு. நம்பிக்கை இழக்கப் போவதில்லை. இலக்கிய பயண பாதை இது, தமிழ் சிறுகதை மரபில் இடம் பிடித்து விடவேண்டும். காணி நிலமெல்லாம் தேவையில்லை, துண்டு விரிக்க இடம் கிடைத்தால்கூட போதும்.

எதிர் திசையில் நல்ல கூட்டம், இல்லை அது தவறான வார்த்தைப் பிரயோகம், மானுடத் திரள் என்பதே சரி. விரைந்து செல்லும் வண்டிகள். யாருக்கு என்ன அவசரமோ. முழுதும் போர்த்தப்பட்டிருக்கும் கைக்குழந்தையை மார்போடு அணைத்தபடி, வண்டியை எங்கும் பிடித்துக் கொள்ளாமல் பைக்கில் பின்புறம் ஒருபக்கம் மட்டும் கால் போட்டு அமர்ந்திருக்கும் சேலை அணிந்த பெண். அவள் மருத்துவரைப் பார்க்க சென்று கொண்டிருக்கலாம், மருத்துவச் செலவிற்கு பணமிருக்குமா? ஆட்டோ அருகில் நின்றிருக்கும், பைக்கின் ஹார்னை அழுத்திக் கொண்டே இருப்பவர் எந்த முக்கிய வேலையாக சென்று கொண்டிருக்கிறாரோ. எல்லா பக்கமும் நன்றாக ஒரு முறை திரும்பிப் பார்த்தேன். இந்த ஜனத்திரளில் ஏதேனும் மானுட தரிசனம் கண்டிப்பாக கிடைக்கும், கதையாக்கி விடலாம்.

எஃகு தகடு அல்லது மெல்லிய இதழ் – காலத்துகள் சிறுகதை

காலத்துகள்

“இலை நுனியில் விழக் காத்திருக்கும் மழையின் கடைசி துளி
குறி முனையில் தொக்கி நிற்கும் மூத்திரத்தின் கடைசி சொட்டு ”

கணினியின் திரையை பார்த்துக் கொண்டிருக்கும் முற்றுப்புள்ளி அவருக்கு இரண்டு மூன்று மணி நேரங்களுக்கு முன்பு நான் அனுப்பிய மேலே உள்ள வரிகளைதான் படித்துக் கொண்டிருப்பார். சிறு வயதில், நாளின் முதல் சிறுநீரின் அடர் மஞ்சள் நிறத்தை, கார நெடியை கவனித்ததுண்டு. வளர்ந்த பின்புதான் காப்பியின் எஞ்சியிருக்கும் மணமும் அதைக் குடித்த பின்னரான சிறுநீர் கழித்தலில் எழும், என்பதைக் கண்டு கொண்டேன். இன்று கழிவறையில் ப்ளஷ்ஷை அழுத்திவிட்டு, அந்த மணத்தை நுகர்ந்து கொண்டே வெளியே வரும்போதுதான் இந்த வரிகள் மனதில் தோன்றின. நாள் முழுதும் அதை விரிவாக்க முனைந்து, மிகையாக எழுந்த வரிகளை நீக்கி, மாலை ஆறரை மணி அளவில் பெரியவர் முற்றுப்புள்ளிக்கு மின்னஞ்சல் அனுப்பினேன்.

ஒன்றரை வருடங்களுக்கு முன் அவருடைய சிறுகதைகளைப் படிக்க நேர்ந்து அவற்றை என் கதைகளாக இணைய இலக்கிய இதழொன்றுக்கு என் புனைப்பெயரில் அனுப்பி, அவை
பிரசுரமாகி, அதன்பின் செய்த குற்றத்திற்கு பெரியவரிடம் மன்னிப்பு கேட்டது போக, உண்மையை இணைய இதழின் எடிட்டருக்கு எழுதி அனுப்பி, அதையே அவர் ஒரு கதையாக எண்ணிப் பதிப்பித்த கூத்து நடந்த பிறகுதான் முற்றுப்புள்ளியிடம் நட்பு ஏற்பட்டது. வாழ்க்கை புனைவைவிட மிக விசித்திரமானதுதான் (இது போன்ற சொற்றொடர்களை நிஜ வாழ்வில் பொருத்துவதற்கான வாய்ப்புக்களை நான் எப்போதும் எதிர்நோக்கியே இருப்பேன், நான் மேலே சொல்லிய நிகழ்வுகளையேகூட பின்நவீனத்துவ கதையாக எண்ணிப் பார்ப்பதுண்டு என்பதை நான் வாசகர்களுக்கு சொல்லத் தேவையில்லை).

‘முற்றுப்புள்ளி’ என்ற அவருடைய புனைப்பெயர்தான் அவருடைய நூலை வாங்கச் செய்தது, இன்றுவரை அவருடைய உண்மைப் பெயர் – நிஜ, உண்மைப் பெயர் என்ற சொற்றொடருக்கான அர்த்தம், இங்கு அதை உபயோகிப்பதற்கான பொருத்தம் எல்லாம் சரியாக புரியவில்லை என்றாலும், பொது வழக்காக இருப்பதால் அப்படியே குறிப்பிட்டு விடுகிறேன் – என்னவென்று எனக்குத் தெரியாது, அவரும் இதுவரை என்னுடைய பெயரைக் கேட்டதில்லை, புனைப்பெயராகவே என்னை அறிகிறார். ‘இரு நிழல்களின்’ நட்பு என்று இந்த இடத்தில் குறிப்பிட்டால் கதைக்கு இலக்கிய தொனி கிடைக்கும் என்று நினைக்கிறேன். மேலும், மௌனியின் வரிகளை மாற்றி – நகல் செய்து என்றும் எடுத்துக் கொள்ளலாம் – யார் நிழல், யார் நிஜம் என்ற தத்துவ விசாரத்திலும் ஓரிரு பத்திகளுக்கு ஈடுபடலாம் என்று தோன்றுகிறது (நான் குறிப்பிடும் வரிகளை மௌனிதான் எழுதினார் இல்லையா, அல்லது நகுலனா? இருவருமே அப்படி எழுதி இருக்கும் சாத்தியம் உண்டு).

பார்வையை என்னை நோக்கி திருப்பியவர், ‘என்னப்பா இது அனுப்பி இருக்க’ என்றார்.

‘கவிதை சார்’

‘என்னது….’

‘அதாவது எதிர்-கவிதை சார், இதை அ-கவிதைன்னு கூட எடுத்துக்கலாம் இல்லையா’

‘எதிரு.. ஆ.. என்ன சொல்ல வர’

‘அதாவது சார், கவிதையின் அழகியல், லிமிடேஷன்ஸ், வரையறை எல்லாத்தையும்  கலைச்சுப் போட்டு..’ என்றவனை இடைமறித்து, ‘கவிதைக்கு என்ன வரையறை நீ வெச்சிருக்க மொதல்ல, இதுவரைக்கு கவிதை பத்தி, இல்ல கவிதை என்ன எழுதி இருக்க, ஏதோ கதன்னு தான எழுதிட்டிருந்த’

‘மொதல்ல நாம சந்திச்சப்போ ரெண்டு மூணு கவிதை ஒங்ககிட்ட காட்டிருக்கேனே சார்,’ என்று நான் சொல்ல, சில நொடிகளுக்குப் பின் ‘ஏதோ எழுதினத காட்டின..ம்ம், சரி இப்ப என்ன திருப்பி…’

‘நீங்க வேற நா எப்பவுமே செங்கல்பட்டு கதை மட்டுமே எழுதறேன்னு சொன்னீங்க, வேற முயற்சி செய்யலாமேன்னு’

‘நான் வெறும் அனுபவப் பகிர்வு மட்டுமே கதை, இலக்கியம் ஆகாதுங்கற அர்த்தத்துல சொன்னேன்பா, அதுக்கு இப்படியா’

‘இது மொதல் ரெண்டு வர தான் சார், இன்னும் ஏழெட்டு வரி வரும், ரெயின் எங்க போய் சேர்றது, யூரின் எங்க போய் சேர்றது ரெண்டையும் ஜாயின் பண்ற மாதிரி.’

‘அப்போ இதை கண்டின்யு பண்ணத்தான் போறியா’

‘ஆமா ஸார், இப்போ இதை பாத்தா ஹைக்கூ மாதிரி இருக்குலியா, அதுன்னு நெனச்சுக்கப் போறாங்க’

‘ஹைக்கூவா…’

‘காபி குடிச்சுட்டு யூரின் பாஸ் பண்ணும்போது வர வாசனை, இப்படி நுணுக்கமான விஷயங்க. முன்னாடி நாம ஒரு நாள் பேசும் போது தி.ஜா ஏதோ அவர் கதைங்க பத்தின பேட்டியிலோ, நேர் உரையாடலிலோ வீட்ல கிச்சன், டிராயிங் ரூம் இருக்கற மாதிரி பாத்ரூமும் இருக்கே, அதைப் பத்தியும் எழுதணுமேன்னு சொன்னதா நீங்க கூட சொன்னீங்களே’

‘பாத்ரூம் பத்தி எழுதலாம்பா, ஆனா ப்ராடு வாஸ்த்து ஆளுகிட்ட மாட்டிக்கிட்ட மாதிரி, டிராயிங் ரூம பாத்ரூமா மாத்தறது மாதிரி ஆகக் கூடாதுல்ல’

‘இந்த மாதிரி எழுத்துக்களை பிரசுரிப்பாங்களான்னு தெரியல சார், எழுதி முடிச்சிட்டு அனுப்பறதான்னு முடிவு செய்யல, மோஸ்ட்லி அனுப்ப மாட்டேன்னு நினைக்கறேன்’

‘நல்லதுதான்’

பெரியவருடன் தொடர்பு ஏற்பட்டதும், சனி, ஞாயிறன்று அவர் வீட்டிற்குச் சென்று இலக்கிய உரையாடல்களில் ஈடுபடும் பழக்கமும் உண்டானது. அதாவது பெரியவர் என் எழுத்துக்களை கிழித்தெடுப்பார், நான் கேட்டுக் கொண்டிருப்பேன். நாற்பத்தைந்து ஆண்டுகளாக, தான் எழுதி, எங்கும் பிரசுரத்துக்கு அனுப்பாத அவர் கதைகளைப் படித்து (எழுபத்திரெண்டில் எழுத ஆரம்பித்த சிறுகதையின் இருபத்தி நான்காம் வரைவைக்கூட படித்திருக்கிறேன்) நாலைந்து நற்சொல் என் தரப்பாக வரும், குற்றம் செய்தவன் நான்தான் இல்லையா. மேலும் பெரியவரை ஒரு விதத்தில் என் ‘ஆல்டர் -ஈகோவாக’ பார்க்க ஆரம்பித்திருந்தேன். யுவனின் கதைகளில் வரும் இஸ்மாயில்கூட இப்படித்தான் ஈவிரக்கமில்லாமல் கதைசொல்லியின் கதைகளை கட்டுடைக்கிறார், இல்லையா, எனக்கு நிஜத்தில் நடக்கிறது அவ்வளவு தான்.

‘இலக்கிய இதழ்களே இப்படின்னா லிட்டரேச்சர் பத்திலாம் நெறைய பேருக்கு தெரியாது அவங்க கிட்டலாம் என்ன பேச, அதான் நான் எழுதறத பத்திலாம் யார்க்கிட்டயும் சொல்றது இல்ல’

‘அதான் நல்லது, கண்டிப்பா இது எழுதியே ஆகணும்னா கண்டின்யு பண்ணு பாப்போம் எங்க போய் நிக்குதுன்னு’

பெரியவரிடமிருந்து விடை பெற்றுக் கொண்டு ஹாலுக்கு வந்த, அவர் மனைவியைப் பார்த்து, உதடுகளை வலிந்து, எழுத்து உருவாக்கும் அசௌகரிய புன்சிரிப்பை எப்போதும் போல் உதிர்த்து விட்டு, ( சிரிப்பை எல்லாம் எப்படி உதிர்க்க என்று எனக்கு தோன்றினாலும், இந்த நேரத்தில் வேறு எந்த உவமை, உருவகம் எதுவும் தோன்றவில்லை என்பதால் வேறு வழியின்றி அதையே எழுதி விடுகிறேன், கதையை திருத்தம் செய்யும்போது நல்லதாக ஏதேனும் தோன்றினால் மாற்றி எழுதக்கூடும். ஆனால் அதற்கான தேவை இருப்பதாகத் தெரியவில்லை, என்ன இருந்தாலும் இது எழுத்து உருவாக்கும் அசௌகரிய புன்சிரிப்புதானே, அது மலர்வதைவிட உதிர்வதுதான் பொருத்தமாக இருக்கும், இல்லையா) வெளியே வந்தேன். முற்றுப்புள்ளியின் மனைவிக்கு கணவர் மீதும், அவர் எழுத்தின் மீதும் மிகப் பெரிய பற்று, என்னை தன் கணவனின் (முதல்) சீடனாக ( இறுதிச்’ சீடனும் நானாகத்தான் இருப்பேன், ஆனால் அந்தக் கட்டத்தை அவரது மனைவி இன்னும் அடையவில்லை) அவர் எண்ணுவதால் என் மீதும் கொஞ்சம் கரிசனம் உண்டு.ஆனால் நான் அவர் கணவரின் கதைகளை திருடிய கதை அவருக்குத் தெரிந்தால், என் கதை பெரியவரின் புனைப்பெயராகிவிடும் என்பதில் எனக்குச்’ சந்தேகமில்லை.

வீட்டிற்கு வந்து சாப்பிட்டு முடித்து அறையில் விளக்கை அணைத்துவிட்டு மற்றனைவரும் (மற்றனைவரும் என்பதில் மற்ற அனைவரும் என்பதற்கில்லாத ஒரு கவிநயமிருக்கிறதில்லையா) தூங்க மடிக்கணினியை திறந்து (எதிர்)கவிதையை செப்பனிட்டுக் கொண்டிருந்தேன். பத்தேமுக்காலாகி விட்டது. ஹெட்போனை அலைபேசியில் பொருத்தி, அதில் நிறுவியிருந்த ‘ஆல் இந்தியா ரேடியோவின்’ செயலியை இயக்கி ‘ஏ.ஐ.ஆர். தமிழ்’ நிலையத்தை தேர்வு செய்தேன்.(போன ஞாயிறன்று நேயர் விருப்ப நிகழ்ச்சியில் ‘ஐனாவரம் அபர்ணா நகரிலிருந்து இந்தப் பாடலை விரும்பிக் கேட்கும் நேயர்கள்’ என்று நாலைந்து பெயர்களை சொல்லி பாடலொன்றை ஒலிபரப்பினார்கள். சிறுவயதிலிருந்தே இந்த இடங்களும், அங்கிருந்து பாடல்களைக் கோரும் நேயர்களும் நிஜமானவர்கள்தானா என்ற சந்தேகம் எனக்குண்டு). யாரோ ஒருவர் கர்நாடக இசைப் பாடலொன்றைப் பாடிக் கொண்டிருந்தார் (நிலைய வித்வான்?). நான் கர்நாடக இசை கற்றுக் கொண்டதைப் பற்றி முன்பே தனிக் கதையாக எழுதிவிட்டதால், அதைப் பற்றி சொல்லப் பெரிதாக ஒன்றுமில்லை (அந்தக் கதையில்கூட ஒரு விஷயமும் இல்லை என்பது முற்றுப்புள்ளியின் கருத்து. இந்தக் கதை பிரசுரமாக தேர்ந்தெடுக்கப்பட்டால் முந்தைய கதைக்கான லிங்க்கை இந்த இடத்தில் தருமாறு இதழின் ஆசிரியரிடம் கேட்கவேண்டும்). என்னையும், கர்நாடக இசையையும் சேர்த்துச் சொல்வது என்பது ‘ஆக்ஸ்சிமோறான்’ என்று மட்டும் இங்கே குறிப்பிட்டால் போதும் என்று நினைக்கிறேன். (ஆங்கில வார்த்தைகளை புனைவுகளில் உபயோகிப்பதை பெரிய குற்றமாக – அவை கதையின் போக்கில் வேறு வழியின்றி உபயோகப்படுத்தப்பட்டிருந்தால் – பெரியவர் பார்ப்பதில்லை. பல பத்தாண்டுகளாக தன்னை புதுப்பித்துக் கொண்டே எழுதி வருகிறார் அவர். ஆனால் பிற மொழிச் சொற்களின் உச்சரிப்பு மிகச் சரியாக இருக்க வேண்டும் என்பதில் கண்டிப்பாக இருப்பார். அவர் சொல்லித்தான் உச்சரிப்புகளுக்கான ‘ஃபோர்வோ’ இணையதளம் குறித்து தெரிய வந்தது, அதிலிருந்து தான் ‘ஆக்ஸ்சிமோறான்’ என்பதற்கான உச்சரிப்பையும் பெற்றேன். இங்கு, நாலு பேர் ஒரே சொல்லை நாலு விதமாக உச்சரிப்பது போதாதென்று ஒரே சொல் நாலு பேர் காதில் நாலு விதமாக ஒலிப்பது நுண்புல ஆய்வுக்குரியது).

பதினோரு மணிக்கு ஒளிபரப்பாகும் இசை நிகழ்ச்சியை பாடுபவரின் குடும்பமே கூட கேட்டுக்கொண்டிருப்பது கடினம்தான், வித்வானேகூட தூங்கி இருக்கலாம் அல்லது இருளான அறையில் காதருகில் ரேடியோவை வைத்துக் கொண்டோ அல்லது என்னைப் போல் அலைபேசியிலோ கேட்டுக் கொண்டிருக்கலாம். பாடலின் புரியாத வரிகளும், பாடுபவரின் குரலும், பக்க வாத்தியக் கலைஞர்களின் கருவிகளின் ஒலியும் (அவர்களோ, அவர்கள் குடும்பத்தினரோகூட இந்த நிகழ்ச்சியை கேட்டுக் கொண்டிருப்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவுதான் இல்லையா) ஒலித்துக் கொண்டிருக்க, மடிக்கணியின் திரையில் தெரிந்த என் கவிதையின் வரிகளை பார்த்துக் கொண்டிருந்தேன். (எழுதுபவரே அவ்வப்போது நேரடியாக வாசகரிடம் பேசுவது, எழுதிக் கொண்டிருப்பதை பற்றி பேசுவது/ ஸெல்ப் ரிப்லெக்ஸ்சிவ் பிக்ஷன் – என்றெல்லாம் இந்தக் கதையை சொல்லலாமா என்று தெரியாவிட்டாலும் எனக்கு அந்த சொற்றொடர் புரிந்த அளவில் அதை இங்கே உபயோகப்படுத்தி இருக்கிறேன் – போல் இந்தக் கதை இருந்தாலும் நெகிழ்ச்சியாக (யாரும் கேட்காத பாட்டைப் பாடும் வித்வான், யாரும் வாசிக்கப் போகாத கவிதையின் வரிகளை எழுதிக் கொண்டிருப்பவன் இருவரும் இணையும் இருளின் ஒரு கணம்) – நவீனத்துவ புனைவு போல் முடிவது – நான் குறிப்பிட்டுள்ள இரு தனியுற்ற மனங்கள் இணையும் இருளின் ஒரு கணம் வாசகருக்கு நெகிழ்ச்சியை தரும் என்ற நம்பிக்கையில்தான் இப்படி குறிப்பிடுகிறேன் – எனக்கேகூட வியப்பாகத்தான் இருக்கிறது. (இந்த முடிவுக்கு மட்டும் தனியாக ஒரு பின்குறிப்பு தேவைப்படுகிறது. முடிவை தலைப்போடும் இணைக்கும் என்பதால் அதை தவிர்க்க முடியாது. மனதைத் தொடும் வாக்கியங்கள் அவை. மிகத் தேர்ந்த ஸ்டைலிஸ்ட்டான வில்லியம் காஸ் என்பவர் தன் தொகுப்பொன்றின் முன்னுரையில் எழுதியது. அதன் அழகு கெடாத வகையில் அதை ஆங்கிலத்திலேயே தந்திருக்கிறேன்)

oOo

முடிவின் பின்குறிப்பு (தலைப்புக்கும் ஒளிர்வூட்டுவது):

Unlike this preface, then, which pretends to the presence of your eye, these stories emerged from my blank insides to die in another darkness. I willed their existence, but I don’t know why. Except that in some dim way I wanted, myself, to have a soul, a special speech, a style. I wanted to feel responsible where I could bear to be responsible, and to make a sheet of steel from a flimsy page—something that would not soon weary itself out of shape as everything else I had known (I thought) always had,” என்று வில்லியம் காஸ் எழுதுவதை வாசிக்கும் எவருமே எழுத்தின் துயரனுபவத்துக்கு ஒரு கணமேனும் வருந்தாமல் இருக்க முடியாது. இதைத் தொடர்ந்து, “Because I wrote these stories without imagining there would be readers to sustain them, they exist now as if readerless (strange species indeed, like the flat, pigmentless fish of deep seas, or the blind, transparent shrimp of coastal caves), although a reader now and then lets light fall on them from that other, less real world of common life and pleasant ordinary things,” என்று அவரே எழுதும்போது நமக்கெல்லாம் நிழல்களின் நிழல்களின் நிழல்களாய் இருக்கவே கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

பிற பின்குறிப்புகள்:

பின்குறிப்பு 1:

கதையில் அடைப்புக்குறிகளுக்குள் எழுதப்பட்டுள்ளதை அடிக்குறிப்புக்களாகதான் முதலில் நான் எழுத எண்ணி இருந்தேன். நான் பெரிதும் வியக்கும் இலக்கிய ஆளுமைகள் பலர் (குறிப்பாக டேவிட் பாஸ்டர் வாலஸ்) இந்த உத்தியை மிகச் சிறப்பாக கையாண்டுள்ளார்கள். எனக்கு அடிக்குறிப்புகள் நிறைந்த கதையொன்றை எழுத வேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலும், வாசிப்பை கலைத்துப் போடும் இத்தகைய உத்திகள் மலிந்து விட்டனவோ என்ற சந்தேகம் எழ அதைக் கைவிட்டேன். மேலும் அடைப்புக்குறிகள் மீதும் எனக்கு கொஞ்சம் மோகம் உண்டு. நீண்ட வாக்கியங்கள், ‘-‘ போட்டு எழுதுவது மீதும். பின்குறிப்புக்கள் குறித்த என் அபிப்ராயத்தையும் கதை முடியும்முன் வாசகன் தெரிந்து கொண்டு விடுவான்.

பின்குறிப்பு 2:

எழுத்தாளர்களின் பெயர் உதிர்த்தல், கதையில் உள்ள இலக்கிய உத்திகள் (அவற்றை நான் புரிந்து கொண்ட அளவில்) பற்றிய விவரிப்பு எல்லாம் தேவையற்ற சுயமுன்னிருத்தலாக, ‘உயிரற்ற’ வார்த்தை ஜாலங்களாக (கதையின் உயிர் அல்லது ஆன்மா, இலக்கிய படைப்பில் கிடைக்க வேண்டிய ‘தரிசனம்’, ‘திறப்பு’, ‘ஆன்மீக சாரம்’ போன்ற கருத்தாக்கங்கள் எனக்கு சரியாக பிடிபடுவதில்லை. கருத்தாக்கம் என்ற சொல்லை நான் இங்கு உபயோகிப்பதுகூட பொருத்தமான ஒன்றா என்பதும் தெரியவில்லை. இந்தக் கதையில் எந்த ‘அறமும்’ இல்லை (நான் நினைக்கிற அறமும் நீங்கள் நினைக்கும் அறமும் ஒன்றெனில், இல்லாவிட்டால் ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவிப்பதைத் தவிர என்னால் வேறு ஒன்றும் செய்ய முடியாது இல்லையா) என்பதை மட்டும் என்னால் உறுதியாக கூற முடியும்), காலாவதியாகிவிட்ட உத்திகளாக வாசகருக்கு (அதாவது இந்தக் கதை பிரசுரிக்கப்பட தேர்ந்தெடுக்கப்பட்டால்) தோன்றலாம். அது நியாயமே, மேலும் கதை பொதுவெளிக்கு வந்தபின் ஆசிரியனுக்கு அதன் மேல் எந்த உரிமையும் இல்லை அல்லவா. என்னளவில் ஒன்று மட்டும் சொல்ல விரும்புகிறேன் (எழுத்தாளன் தன் எழுத்து பற்றி பேசக் கூடாது, வாசகன் அதலிருந்து என்ன பெற்றுக் கொள்கிறானோ அதுதான் அவனுக்கான கதை -அவரவர் கைமணல்- என்பதெல்லாம் சரிதான் என்றாலும்கூட இந்த ஒரு முறை மட்டும் தன்னிலை விளக்கமொன்று தரலாம் என்று நினைக்கிறேன்).

என்னுடைய முந்தைய இரண்டு கதைகளுக்கு இந்தக் கதையில் இணைப்பு கொடுத்திருப்பதால் இதை ‘ஹைப்பர்-டெக்ஸ்ட்’ கதையென்று சொல்ல மாட்டேன், அவற்றை மீண்டும் வாசகர்கள் முன் வைக்க கிடைத்த வாய்ப்பை உபயோகித்துக் கொண்டேன் அவ்வளவே.

இந்தக் கதையில் எனக்கு தோன்றிய (எதிர்)கவிதை வரிகள், அவை குறித்து பெரியவருடன் நான் உரையாடியது, அந்தப் பேச்சு தொடர்பான என் எண்ணங்கள் அனைத்தையும் அவை நிகழ்ந்தபடியே எந்த கூடுதலோ, குறையோ இல்லாமல் அப்படியே பதிவு செய்திருக்கிறேன். அந்த விதத்தில் இது எந்த மிகையும் இல்லாத நேரடியான யதார்த்தக் கதைதான், படிக்கும்போது வாசகனுக்கு வேறு மாதிரி தோன்றக்கூடும் அவ்வளவே (இங்கு, புனைவு வாழ்க்கையை விட விசித்திரமானது என்று மாற்றிச் சொல்லலாமா என்று தோன்றுகிறது)

பின்குறிப்பு 3:

கதை எழுதியதைப் பற்றி விளக்க ஆரம்பித்தபின், கதை குறித்த (சுய) விமரிசனத்தையும் பின்குறிப்பாக சேர்த்து விடலாம் என்றுதான் முதலில் நினைத்தேன். பிரசுரம் ஆகுமா ஆகாதா என்றே சொல்ல முடியாத கதைக்கு இதெல்லாம் தேவையா என்று கேள்வி எழ அந்த எண்ணத்தை விலக்கினேன். பிரசுரம் ஆகாவிட்டாலும்கூட ஒன்றும் பிரச்சனையில்லை. இதை முற்றுப்புள்ளியிடம் தந்தால் ‘ஆகச் சிறந்த’ விமரிசனத்தை அவர் தருவார். ‘பிரசுரமாகாத கதையொன்றின் விமர்சனம்’ என்று அதை இன்னொரு (யதார்த்த) கதையாகக்கூட எழுதி விடலாம். மற்றொரு பாத்திரத்தை சேர்த்தால் கதையை ‘பிரசுரமாகாத கதையொன்றின் விமர்சனக் கூட்டமாக்கி’ விடலாம்.

பின்குறிப்பு 4:

இரு சொற்றொடர்களை நடுவில் ‘அல்லது’ வைத்து இணைத்து கதையின் தலைப்பாக வருமாறு வைக்க வேண்டும் என்பது என் விருப்பம். அதாவது ‘மரணபுரத்தின் மர்மம் அல்லது லீலாவதியின் மூடுமந்திரம்’, ‘கும்பகோணம் வக்கீல் அல்லது திகம்பர சாமியார் இரண்டு பாகங்கள்’ போன்ற தலைப்புக்கள். ‘X அல்லது Y’ என்று வைத்துக் கொண்டால் வாசகன் இரண்டில் தனக்கேற்ற ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம். இந்த பாணி கதைகளுக்கான இப்படி தலைப்பு வைப்பது வழக்கமாகவும் (தமிழில்) உள்ளது. ஆனால் ‘X மற்றும் ‘Y’ஆக என்ன வார்த்தைகளைப் போடுவது என்பது குறித்து எனக்குத் தெளிவில்லை. ‘ஒரு பின் மாலை நேர இலக்கிய உரையாடல் அல்லது விழித்திருப்பவனின் இரவு நேர இலக்கிய விசாரம்’ என்று ஒரு எண்ணம். யதார்த்தக் கதை என்பதால் முதல் பகுதி பொருத்தமாக இருக்கும் (என் முந்தைய கதையொன்றின் தலைப்பைதான் இப்படி மாற்றி இருக்கிறேன்), இரண்டாவது பகுதி இலக்கியத் தன்மையுடன் கவித்துவமாக உள்ளதாக எண்ணுகிறேன். இருப்பினும் இதுவும் எனக்கு முழு உவப்பாக இல்லை என்பதால் இதழ் ஆசிரியரிடமே விட்டு விடுகிறேன். பிரசுரமாகும்போது/ பிரசுரமானால் வாசகன் படிக்கும் தலைப்பு அவர் வைத்ததுதான் என்பதை நினைவில் கொள்ள வேண்டுகிறேன். (கதையின் தலைப்பு மட்டுமல்ல, பாத்திரங்களுக்கான பெயரை வைப்பதிலும்கூட எனக்கு குழப்பமே ஏற்படுகிறது, எனவே ‘நான்’, ‘இவன்’ ‘அவள்’ என்றுதான் பெரும்பாலும் எழுதி வந்திருக்கிறேன். கதைக்கான கருவையும், நிகழ்வுகளையும், அவற்றை விவரிக்கும் வார்த்தைகளை, வாக்கியங்களைத் தொகுப்பதே கடினமாக இருக்கும் போது பெயர்களுக்கு நேரம் செலவிடுவது எனக்கு விரயமாகவே தோன்றுகிறது. மேலும் நாளை என்னை யாரேனும் நேர்காணல் காணும் அல்லது என் புனைவுலகை உருவாக்கும் முறை பற்றி நானே விவரிக்கும் சூழலோ உருவானால், பாத்திரங்களை ‘அவன்’, ‘நான்’ என்று அழைப்பது வாசகன் தன்னை எளிதாக, உடனடியாக அவர்களுடன் உணர்வுரீதியாக பொருத்திக் கொள்ள உதவக்கூடும், ‘அவன்’ என்பது நவீன மனிதனின் பிரதிநிதி, அவனுடைய தனிமையின் குறியீடு என்ற ரீதியில் நான் ஏதேனும் சொன்னால் அது எடுபடவும் கூடும்)

பின்குறிப்பு 5:

கதையில், நிறைய இடங்களில் ‘இல்லையா’, ‘அல்லவா’, ‘தோன்றுகிறது’ போன்ற வார்த்தைகள் திரும்பத் திரும்ப வருகின்றன, இதை தவிர்த்து அதே அர்த்தத்தில் பிற வார்த்தைகளையும் உபயோகித்திருக்கலாம். ‘அங்கிள்’ என்று அழைக்கப்படும் வயதாகிவிட்டாலும், எழுத்துப் பயணத்தைப் பொறுத்தவரை நான் இன்னும் பாலகன்தான் என்பதால், காலப்போக்கில் என் எழுத்தில் முதிர்ச்சி ஏற்படும் என்று நம்புகிறேன்.

பொதுவாக கலைச்சொற்களை அவற்றின் அர்த்தத்தை சரியாக புரிந்து கொண்டு பொருத்தமாக உபயோகிக்க வேண்டும் என்றுதான் முயல்கிறேன், ஆனால் என் புரிதலின் எல்லைகளை விரிவாக்குவது போராட்டமாகவே உள்ளது.

பின்குறிப்பு 6:

இதுவே கதையின் இறுதி வரைவாக இருக்கும் என்று நம்புகிறேன். ‘வாசகன்’ என்றே எல்லா இடத்திலும் குறிப்பிட்டிருப்பதையும் இப்போதுதான் கவனிக்கிறேன் என்பதால் இனி மாற்ற நேரமில்லை. ‘ரீடர்’ என்று ஆங்கிலத்தில் பொதுவாக உள்ள சொல்லின் அர்த்தத்தில் எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன், யாரையும் அவமதிக்கும், விலக்கும் எண்ணம் கிஞ்சித்தும் இல்லை எனக்கு. இருப்பினும் என்னையறியாமல் இப்படி நிகழ்ந்ததற்கு மன்னிப்பும் கோருகிறேன். (உண்மையில் எனக்கு பெண் வாசகியர் மீது ஒரு தனி பரிவுண்டு, அவர்களே என் கதையின் மீதான சிறந்த விமரிசனம் நிகழ்த்துவதாக நண்பர் ஒருவர் கூறுகிறார்).

பின்குறிப்பு 7:

இந்த வரைவை முற்றுப்புள்ளிக்கு அனுப்பப் போவதில்லை, ‘லெட் ஸ்லீபிங் டாக்ஸ் லை’ (சொற்றொடர்களை என் வாழ்க்கையில் பொருத்தும் வாய்ப்புக்களை எதிர்நோக்கி இருப்பது பற்றி முன்பே சொல்லி இருக்கிறேன் அல்லவா). என் புனைப்பெயரில் அனுப்புவதற்கு பதில், முற்றுப்புள்ளி என்ற பெயரில் அனுப்பலாம். அவர் கதைகளைத் திருடி குற்றம் செய்தவன் நான்தான், ‘ஆதி குற்றம்’ (சொற்றொடர்களை பொருத்துவதற்கு இது ‘ஆகச்சிறந்த’ கதையாக உள்ளது). ஆனால் தண்டனையை நான் மட்டுமே அனுபவிக்க வேண்டுமா என்ன, குற்றத்தையும் தண்டனையையும் ஒற்றைப்படையாக ஏன் அணுக வேண்டும், நாம் இப்போது வாழ்வது ‘போஸ்ட்-ட்ரூத்’ உலகில். (‘போஸ்ட்-ட்ரூத்’ என்ற சொல் பெரும்பாலான கட்டுரைகளில் – அது எந்த துறையை பற்றியதாக இருந்தாலும் – இடம் பெற்று வரும் சூழலில் அவ்வார்த்தையை புனைவொன்றில், அதுவும் அதன் முடிவில் முத்தாய்ப்பாக உபயோகித்திருப்பது உற்சாகமளிக்கிறது).

குற்றமும் தண்டனையும்

காலத்துகள்

1. குற்றம்

அன்புள்ள ஆசிரியருக்கு,

ஆறு மாதங்களுக்கு முன் ஒரு வார இறுதியில் பழைய புத்தகக் கடையில் துழாவிப் கொண்டிருக்கும்போது ‘வாசகனுக்காக காத்திருக்கும் கதைகள்’ என்ற சிறுகதைத் தொகுப்பை பார்த்தேன். எழுதியவர் பெயர் ‘முற்றுப்புள்ளி’ என்று இருந்தது. 1971ஆம் ஆண்டு வெளிவந்திருந்த அந்தநூலின் முதல் பக்கத்தில் ‘எப்போதும் என்னுடனிருக்கும் என் மனைவிக்கும், இந்தப் புத்தகத்தை வாசிக்கப்போகும் என் முதல் வாசகனுக்கும் சமர்ப்பணம்’ என்றிருந்ததும் என்னை ஈர்க்க, அந்தப் புத்தகத்தை வாங்கினேன்.

சிறிய முன்னுரையில் இந்த நூல் உருவான விதம் குறித்து எழுத்தாளர் சொல்லி இருந்தார். சுமார் 15 ஆண்டுகளாக எழுதி வந்துள்ள அவருடைய எந்தக் கதையும் பிரசுரமாகவில்லையாம். அதற்காக பத்திரிக்கைகளை அவர் திட்டவும் இல்லை. ஆனால் மனமுடைந்த நிலையில் இருந்த அவரிடம் அவர் மனைவிதான், தானே தன் கதைகளைத் தொகுத்து வெளியிடும் யோசனையைத் தந்திருக்கிறார். முதலில் இவர் ஒப்புக்கொள்ளாவிட்டாலும், யோசித்துப் பார்க்கும்போது அதுவே சரியான முடிவென்று தோன்றியதாகவும், இந்த நூலை வெளியிட்டு முடித்தவுடன் எதையும் எழுதப்போவதில்லை என்றும் முடிவு செய்ததாக கூறுகிறார். அதுவரை அவர் மனைவி மட்டுமே அவர் கதைகளை வாசித்திருந்தாலும், கணவன் என்பதால்தான் அவர் வாசித்திருக்கிறார், வேற்று மனிதனாக இருந்திருந்தால் அவருக்கும் தன்னைப் பற்றி தெரிந்திருக்காது, எனவே இனிமேல்தான் தன் முதல் வாசகனைப் பெறவேண்டும், எனவேதான் இந்நூலுக்கு இத்தகைய தலைப்பை வைத்ததாகவும், இத்துடன் தன் எழுத்துலக வாழ்க்கை முடிந்து விடுகிறது என்றும் எழுதியிருந்தார். பதிப்பித்தவர் பற்றிய தகவலில் ‘முற்றுப்புள்ளி’ என்றிருந்தாலும், முகவரி நானிருக்கும் நகரத்தில் இருந்தவர் அவர் என்பதை தெரிவித்தது. கிட்டத்தட்ட 45 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அவர் இன்னும் அங்கிருப்பாரா கேள்வி எழுந்தது.

நான் அன்றிருந்த மனநிலைக்கு இந்த நூல், இல்லை, அதன் முன்னுரை மிகவும் நெருக்கமானதாக இருந்தது. 14 கதைகள் கொண்ட அந்தத் தொகுப்பை அன்றே படித்து முடித்தேன். எனக்கு அக்கதைகள் பிடித்திருந்தன. அடுத்த இரண்டு மாதங்களில் என்னுடைய 3 கதைகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டன. சோர்வுற்றிருந்த நான் மீண்டும் இந்த சிறுகதைத் தொகுப்பை படித்தபோதுதான் அந்த எண்ணம் தோன்றியது. யோசிக்காமல், ‘முற்றுப்புள்ளி’ என்று மின்னஞ்சல் முகவரியை உருவாக்கி, அதிலிருந்து உங்களுக்கு இந்தத் தொகுப்பிலிருந்து ஒரு கதையை தட்டச்சு செய்து அனுப்பினேன்.

தன் கதைகளைப் பிரசுரிக்க பெரும்பாடுபட்ட அவர்பால் எனக்கு உண்டான பரிவா அல்லது (‘எனது’ இரண்டாவது புனைபெயரில் என்றாலும்) இதுவாவது பிரசுரமாகுமா என்ற நப்பாசையா என்று என்னால் இப்போதும் உறுதியாகச் சொல்ல முடியாது. அந்த நேர உந்துதலில் அதைச் செய்து விட்டேன். அந்தக் கதை ஏற்கப்பட்டது. பிறகு கடந்த 4 மாதங்களில் முற்றுப்புள்ளி தொகுப்பில் இருந்த வேறு 6 கதைகளும், காலத்துகளின் 2 கதைகளும் உங்கள் தளத்தில் வெளிவந்துள்ளன.

இப்படி ஏமாற்றி அனுப்புவது குறித்த கடந்த 10-15 நாளாக மன உளைச்சல் அதிகமாக, நேற்று மாலை நூலில் இருந்த முகவரிக்கு சென்று பார்க்க முடிவு செய்தேன். அந்த வீட்டில் 50-55 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர்எ ன்னை எதிர்கொண்டார். அவருக்கு இந்நூல் குறித்து எதுவும் தெரியவில்லை என்றும், தன் தந்தை அறிந்திருக்கக்கூடும் என்றும் சொல்லி அவர் அறைக்கு அழைத்துச் சென்று அறிமுகம் செய்து வைத்தார். 80 வயதிருக்கக்கூடிய முதியவர், என் கையில் இருந்த நூலைப் பார்த்ததும் மிக சிறிய அளவில் சலனமடைந்தார் என்று தோன்றியது.

மகன் வெளியே செல்ல, இருவரும் பேச ஆரம்பித்தோம். முன்னுரையில் எழுதி இருந்ததையே மீண்டும் சொன்னார். மனைவி குறித்து மன எழுச்சியுடன் பேசினார். அவர்தான் நூல் வெளியிட்டு ஒரு வடிகால் கிடைத்தால், தான் தொடர்ந்து எழுதுவோம் என்று நம்பினார் என்றும், அவர் இல்லாவிட்டால் தனக்கு பைத்தியம் பிடித்திருக்கும் என்றார். அருகிலுள்ள பூங்காவிற்கு மாலை நேர நடைக்கு சென்றிருக்கும் அவரது மனைவி என்னை (அவரது முதல் வாசகனை) கண்டால் மிகுந்த மகிழ்ச்சியடைவார் என்றும் சொன்னார். அவர் இன்றைய எழுத்துக்கள் வரை தொடர்ந்து வாசித்து வருகிறார் என்பது அவர் அறையில் அறையில் இருந்த புத்தகங்களிலிருந்து தெரிந்தது. இன்னும் பத்திருபது நாட்களில் ‘வெய்யோன்’ நாவலின் செம்பதிப்பு கிடைத்து விடும் என்று குதூகலத்துடன் சொன்னார்.

அவரிடம், மிகுந்த தயக்கத்துடன் நான் செய்த காரியத்தைச் சொன்னேன். அவர் உடல் மொழியில் இறுக்கம் தோன்றினாலும் , அதிர்ச்சி அடைந்தவர் போல் தெரியவில்லை. அதற்கான காரணத்தையும் அவரே சொன்னார். உங்கள் தளத்தை அவர் தொடர்ந்து வாசித்து வருகிறாராம். 4 மாதங்களுக்கு முன் தன் புனைப்பெயரிலேயே தன் கதைகளை இன்னொருவன் தன் அனுமதியில்லாமல் பதிவுகள் செய்திருந்ததை படித்து முதலில் வியப்படைந்தாலும், பிறகு விட்டுவிட்டாராம். (இந்த வயதில் வேறு என்ன செய்ய, என்றார்). தொடர்ந்து தன் கதைகள் வெளியாகவே அடுத்து எந்தக் கதை வரும் என்று (நான் புத்தகத்தில் உள்ளது போல் இல்லாமல் எனக்கு பிடித்திருந்த வரிசையில் உங்களுக்கு கதைகளை அனுப்பிக் கொண்டிருந்தேன்) ஆர்வத்துடன் கவனித்து வந்துள்ளார்.

மன்னிப்பு கேட்கும் தகுதி எனக்கு இல்லை, இன்றே உண்மையைச் சொல்லி அனைத்து கதைகளையும் எழுதியவர் நீங்கள்தான் என்று தெரிவித்து விடுகிறேன் என்றேன். அதெல்லாம் வேண்டாம், உங்கள் மனசாட்சி உங்களைத் தொந்தரவு செய்ததால்தானே நீங்கள் இங்கு வந்தீர்கள், இலக்கியத்தின் ஒரு முக்கிய நோக்கம், மனசாட்சி குறித்த சிக்கலை முன்வைப்பதுதானே, மஹாபாரதமே அதைத்தானே செய்கிறது, மேலும் தாஸ்தாவெஸ்கிகூட ரஸ்கால்நிகோவும் மீட்சியடைமுடியும் என்றுதானே சொல்கிறார், அவனுடன் ஒப்பிடும் போது நீ ஒன்றுமே செய்யவில்லையே, எனவே நீ வருந்தாதே, என்றார்.

அப்போது அவர் மனைவி வர, அவரிடம் அறிமுகம் செய்து வைத்தார். அவர் மனைவி அடைந்த பரவசத்தை எளிதில் சொல்ல முடியாது. கணவரின் முயற்சிக்கு இப்போதாவது பலன் கிடைத்ததே என்று நெகிழ்வோடு சொன்னதோடு, வீடு தேடி வந்து சந்தித்ததற்கு நன்றி சொன்னார். எனக்குத்தான் நான் செய்ததை நினைத்து மிகவும் கூச்சமாக இருந்தது. முற்றுப்புள்ளி நான் செய்ததைக் குறித்து தன் மனைவியிடம் கூறவில்லை. அதற்காக அவருக்கு நன்றி சொல்ல வேண்டும். அது மட்டும் தெரிந்திருந்தால் அந்த அம்மையாரிடமிருந்து நான் தப்பித்திருக்க முடியாது. சிறுகதைத் தொகுப்பை வெளியிட்ட பிறகு தன் மனைவி சொன்னதில் பாதி நடந்தது என்றார். தான் தொடர்ந்து எழுதி வருவதாகவும், ஆனால் கடந்த 45 ஆண்டுகளாக ஒன்றையும் பிரசுரிக்க அனுப்பவில்லையென்றும் சொன்னார். தன் லேப்டாப்பில் பதிவேற்றி வைத்திருந்த கதைகளை காண்பித்தார். 45 ஆண்டுகளில் 77 கதைகளை எழுதியுள்ளார். ஆனால் அவற்றை 77 கதைகள் என்று சொல்லிவிட முடியாது. 77 ஃபோல்டர்களில், ஒவ்வொன்றின் உள்ளேயேயும் V1, V2, V3 என பல வெர்ஷன்கள் அவை எழுதப்பட்ட வருடங்கள் பற்றிய குறிப்புடன் இருந்தன (சில கதைகள் v1.1, v1.2, v1.3 என்று சப்-ஃபோல்டர்களிலும் நீண்டன). கதைகளை யாருக்கும் அனுப்புவதில்லை என்பதால், அவற்றை தொடர்ந்து திருத்திக் கொண்டிருப்பதாக அவர் சொன்னார். 70களில் எழுதிய கதையை போன வருடம்கூட சற்றே திருத்தியிருக்கிறார். அவரின் ஈடுபாடு அசரடித்த அதே நேரம் அதற்கு துரோகம் செய்து விட்டேன் என்ற நினைவு வருத்தியது. உண்மையைச் சொல்லப்போகிறேன் என்று நான் மீண்டும் அவரிடம் சொன்னபோது அவர் மறுத்துவிட்டு வேறு சில நாவல்கள்/எழுத்தாளர்கள், இலக்கிய போக்கு இவற்றில் உரையாடலை திருப்பி விட்டார். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் பேசிய பிறகு, இனி அடிக்கடி வந்து அவரைச் சந்திப்பதாகக் கூறி விடைபெற்றேன். அவர் மனைவியிடம் நான் செய்ததைப் பற்றி கூறாமல் இருப்பார் என்ற நம்பிக்கையில் தான் மீண்டும் செல்ல எண்ணியுள்ளேன். பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.

அவர் என்ன சொன்னாலும் என் மனம் ஒப்பாததால் இன்று காலை இந்த மின்னஞ்சலை உங்களுக்கு அனுப்புகிறேன். அவரை மட்டுமல்ல, உங்களையும் நான் ஏமாற்றி இருக்கிறேன். நான் மன்னிப்பு கோரப்போவதில்லை. இந்த மின்னஞ்சலை நீங்கள் அப்படியே உங்கள் தளத்தில் வெளியிட்டு ‘காலத்துகள்’ என்ற பெயரில் (நான் சொந்தமாக எழுதிய) கதைகளை நீக்க முடிவு செய்தாலும் எனக்குச் சம்மதமே. என்ன, முற்றுப்புள்ளியைப் பற்றி இப்போது உங்களிடம் நான் எதுவும் சொல்ல முடியாது. அதையும் இன்னும் ஓரிரு வாரத்தில் சரிசெய்து அவர் அனுமதி பெற்று அவரது முடிவை உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.

தண்டனை கோரி,

காலத்துகள்

2. தண்டனை

வணக்கம் காலத்துகள்,

உங்கள் கதை கிடைத்தது. இதைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். இரு நண்பர்களின் கருத்துகள் கீழே தரப்பட்டுள்ளன. இவற்றை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை, இந்தக் கதையை இவை இன்னும் செறிவாக்கும் என்று நினைத்தால் செய்யலாம். அதற்கு முன் என் கருத்து.

இந்தக் கதையில் நீங்கள் இன்டர்-டெக்ஸ்டுவாலிட்டி என்ற இலக்கிய கோட்பாட்டைப் பயன்படுத்த முயல்கிறீர்களோ என்று சந்தேகமாக இருக்கிறது. நீங்கள் கவனித்தீர்களா என்று தெரியாது, ஆனால் நீங்கள் குறிப்பிடும் அதே காலகட்டத்தில் ‘முற்றுப்புள்ளி’ என்பவரும் சில சிறுகதைகளை இங்கு எழுதியுள்ளார். இன்டர்-டெக்ஸ்டுவாலிட்டி குழப்பங்கள் வேண்டாம் என்று நினைத்தால் இந்தப் பாத்திரத்தின் பெயரை மட்டும் நீங்கள் மாற்றி விடலாம் (நீங்கள் முற்றுப்புள்ளி இல்லை என்ற நம்பிக்கையில் இதைச் சொல்கிறேன்). இன்னொன்று உங்கள் கதைகள் தன்னுணர்வு கொண்டவையாக, தன்னைத் தானே பிரதிபலித்துக் கொள்பவையாக உள்ளன. அது தவறில்லை, ஆனால் மனித உணர்வுகளின் ஆழங்களை தேடுவதற்கு பதிலாக, வடிவம்/ உத்தி மட்டுமே எழுத்து என்ற இடத்திற்கு உங்களை அவை இட்டுச் செல்லக் கூடும்.

பின்நவீனத்துவ நகைமுரண் (postmodern irony) குறித்த டேவிட் பாஸ்டர் வாலஸின் இந்தக் கருத்தையும் சிந்தித்துப் பார்க்கலாம்-

“Irony and cynicism were just what the U.S. hypocrisy of the fifties and sixties called for. That’s what made the early postmodernists great artists. The great thing about irony is that it splits things apart, gets up above them so we can see the flaws and hypocrisies and duplicates. The virtuous always triumph? Ward Cleaver is the prototypical fifties father? “Sure.” Sarcasm, parody, absurdism and irony are great ways to strip off stuff’s mask and show the unpleasant reality behind it. The problem is that once the rules of art are debunked, and once the unpleasant realities the irony diagnoses are revealed and diagnosed, “then” what do we do? Irony’s useful for debunking illusions, but most of the illusion-debunking in the U.S. has now been done and redone. Once everybody knows that equality of opportunity is bunk and Mike Brady’s bunk and Just Say No is bunk, now what do we do? All we seem to want to do is keep ridiculing the stuff. Postmodern irony and cynicism’s become an end in itself, a measure of hip sophistication and literary savvy. Few artists dare to try to talk about ways of working toward redeeming what’s wrong, because they’ll look sentimental and naive to all the weary ironists. Irony’s gone from liberating to enslaving. There’s some great essay somewhere that has a line about irony being the song of the prisoner who’s come to love his cage.”

அவருடைய இந்தக் கட்டுரையையும் https://jsomers.net/DFW_TV.pdf படித்துப்பாருங்கள்.

இனி நண்பர்களின் கருத்து.

முதல் நண்பர் கூறுவது இது-

“இந்த மாதிரியான வடிவ உத்திகள் ஏற்கனவே வந்துள்ளன, அதன் தாக்கம் இந்தக் கதையில் இருப்பது பிரச்சினை இல்லை. ஆனால் எழுத்தாளர் தனக்குத் தெரிந்தது அனைத்தையும் கொட்டிவிட வேண்டும் என்று நினைக்கிறார், எல்லாவற்றையும் ஒரே கதையில் சொல்ல வேண்டுமென்ற கட்டாயமொன்றுமில்லை என்று அவருக்கு சொல்லவேண்டும். அதே போல் தேவையில்லாமல் எழுத்தாளர்/நூல்கள்/பாத்திரங்கள் பெயர் உதிர்ப்பும் செய்கிறாரோ என்று- இந்தக் கதையில் மட்டுமல்ல -இவர் கதைகளை படிக்கும் போது தோன்றுகிறது. முன்பு அனுப்பியிருந்த கதையில் மௌனி, இதில் ‘ரஸ்கால்நிகோவ்’ (அடுத்து தமிழின் தலைசிறந்த எழுத்தாளர்கள் தால்ஸ்தோய் மற்றும் செகாவ் வரப் போகிறார்களா?)- இதெல்லாம் தேவையா என்று இவர் யோசிக்கலாம்.”

இன்னொரு நண்பரின் கருத்து.

“முற்றுப்புள்ளி பற்றியும் அவர் மனைவி பற்றியும் இன்னும் கொஞ்சம் விரிவாக சொல்லலாம். அவருடைய எந்தக் கதைகளும் பிரசுரமாகவில்லை என்று சொல்லப்பட்டிருந்தாலும், அவை எப்படிப்பட்டக் கதைகள் என்று குறிப்பிடப்படவில்லை. அவை எந்த தரத்தில் இருந்தாலும், இந்தப் பாத்திரம் குறித்து படிக்கும்போது ‘கான முயல் எய்த அம்பினில்…’ என்ற குறள்தான் ஞாபகம் வந்தது. முற்றுப்புள்ளி இலக்கியம்/ எழுத்து என்ற களிறுடன் போராடித் தோற்றிருந்தாலும், அது கம்பீரமான தோல்வியே (magnificent failure). காலத்துகள் குறித்து அப்படிச் சொல்ல முடியுமா என்பதை, யோசித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.”