சில படைப்பாளிகளின் புனைப்பெயர்கள், அவர்களின் ஆக்கங்களின் வழி நாம் அனுபவம் அடையும்பொழுது, ஜன்னலோர பயணங்களில் மரங்களின் இடையில் தோன்றி மறையும் சூரியனின் கதிர் போல அவ்வப்பொழுது நம்மை தொடர்ந்து தொட்டுக் கொண்டே இருக்கும். “பாவண்ணன்” என்பதும் அத்தகைய ஒரு பெயரே…”(ப்)பா…” என்பது இப்போதைய தலைமுறைக்கு ஒரு சமீப கால திரைப்படத்தில் நாயகன் உச்சரித்து உச்சரித்து பிரபலமடைந்த வார்த்தை என்று மட்டுமே அறியும் அளவிலே தமிழ் தள்ளாடிக் கொண்டிருக்கையில், “பா” என்றால் பாட்டு அல்லது செய்யுள் வகை என்னும் பொருளையும் தாண்டி ருசிக்கத்தக்க அர்த்தங்களை நினைப்பில் வைக்கமாறு செய்யக்கூடியது.”பாவண்ணன்” உள்ளே இருக்கும் “பா”.
இவரது படைப்புகளை வாசித்து பழகிய பின், இப்பெயர் குறித்து பெரும்பாலும் எனக்கு இரண்டு உருவகங்கள் மனதில் தோன்றுவதுண்டு.
நெசவில் “பாவு” என்பதை “பா” என்பார்கள். பாவண்ணன் நெய்யும் மொழித்தறிகளில் ஓடும் “பாவு”, நம் எண்ணங்களில் இழைக்கும் அன்றாட வாழ்வியல் அனுபவங்களின் வண்ணக் கலவை மிக வசீகரமானது.
“பா” என்பதற்கு “நிழல்” என்றொரு அர்த்தம் இருப்பதாக சொல்லக் கேட்டிருக்கிறேன். “நிழலுக்கு வண்ணம் தருபவர்” என்று யோசித்துப் பாருங்கள்… மனதின் நிழல் என்பது எண்ணம் தானே என்ற நினைப்பு நமக்குள் வந்து உட்கார்ந்து விடும். பின் அவரின் படைப்புகளை மறுவாசிப்பு செய்தால், அவரின் ஆக்கங்கள் எங்கும் நிறைந்திருப்பது நமது நிழலாகவும் அதற்கு அவர் பூசும் வண்ணங்களாகவும் நமக்குத் தெரியக் கூடும்…
“படைப்பாளி” என்பதன் பொருள் குறித்து இவர் சொல்வது [“ஒரு சிற்பம் ஓர் ஓவியம் ஒரு கவிதை“] இவரின் படைப்புகளுக்கே ஒரு அறிமுகம் தருவது போலவும், வாசிப்பு அனுபவம் நமக்கு வழங்கப் போவது என்ன என்று தெளிவு செய்வது போலவும் உள்ளது. “இந்த உலகம் ஏற்றுக் கொள்வதை சொல்ல வேண்டும் அல்லது இந்த உலகத்தை ஒரே ஒரு அங்குலமாவது முன்னகர்த்தி வைக்க வேண்டும் என்கிற எண்ணங்களின் அடிப்படையில் எந்தவொரு படைப்பாளியும் இயங்குவது இல்லை. தோல்வியின் தருணங்களையும் துக்கங்களின் தருணங்களையும் முன்வைக்கின்ற படைப்புகளின் பின்னணியில் உள்ள மன எழுச்சி யாருக்கும் குற்ற உணர்ச்சியை ஊட்டுவதில்லை. இதுவும் இயற்கையே என்ற எளிய உண்மையை உணர்த்துவதாகும். எல்லாவற்றையும் கடந்து வந்த உலகில் இதுவும் கடந்து போகும் என்கிற வெளிச்சத்தை வழங்கும் தோழமை உணர்வை மட்டுமே அது வெளிப்படுத்துகிறது” என்ற இவரின் எண்ணம் இவர் படைப்புகள் முழுவதிலும் பிரதிபலிப்பதை நாம் காண முடியும்.
பாவண்ணனின் களங்கள் அனைத்துமே ஒரு நுட்பமான புரிதலின் வேர் நோக்கி நம்மை இட்டுச் செல்கின்றன. நாம் எத்தகைய முனைப்புடன் ஒரு தருணத்தின் மீதேறி நிற்க விழைந்தாலும் அத்தருணத்தின் பார்வையாளனாக மட்டுமே நம்மை ஆக்கி வேடிக்கை பார்க்கும் வல்லமை காலத்திற்கு உண்டு என்பதையும், நம் சிந்தனை, செயல், நினைப்பு, முதிர்ச்சி அல்லது முதிச்சியின்மை அனைத்தும் அத்தருணங்களின் தயவே என்பதையும், அவ்வாறு பெற்ற அனுபவத்தின் வாயிலாக நாம் எடை போடக்கூடிய நியாய அநியாயங்களும் தர்ம அதர்மங்களும் கூட மற்றொரு தருணத்திற்கு நம்மை அழைத்துச் செல்ல காலம் வகுக்கும் யுக்தியோ என்றொரு சிந்தனையும் மீண்டும் மீண்டும் பல்வேறு கோணங்களில் நமக்குள் பதிகின்றன.
மேற்கூறிய “புரிதலின் வேர்” இரண்டு தளங்களில் இயங்கும் அற்புதமான உதாரணம் “வெள்ளம்“. மேல் தளம், சூரதத்தன் என்னும் ஒரு இளம் பிக்குவின் மனம் தன் “பாதை”யிலிருந்து விலகும் தள்ளாட்டத்தையும் அத்தள்ளாட்டத்தின் தருணங்களையும் விரிவுபடுத்துகிறது. எத்தனை நுட்பமாக என்றால், அப்படியொரு நிலை வரப்போகிறது என்பதன் தருணம், இரவெல்லாம் சேகரித்த நீர்த்துளியை காலையில் இழக்கும் இலையின் ஒரு நொடித்துளி மூலமாக பலகாலம் ஒருவன் சேகரிக்கும் அறிவையோ அனுபவத்தையோ வாழ்வியல் பாதையையோ ஒரு தருணம் இழக்கச் செய்யும் என்னும் படிமம் காட்சிப்படுத்தப்படுகிறது. தள்ளாட்டம் முடிந்த பின் அவன் தன்னையே “காணும்” தருணத்தையும் பின்னர் அவன் மனமே சொல்லும் தன்னிலை விளக்கத்தின் மூலமாக, புத்தரை கண்மூடி தியானிக்கும் பொழுதில் அவன் பிழையென்று நினைத்த நொடி சரியென்று நினைக்கும் தருணமாகவே பிக்குவின் உள்ளிறங்கி ஒளிர்வதாக முடிகிறது கதை. அதாவது கதையின் மேல்தளம்.
இம்முடிவிற்குள் நம்மை நுழைக்கும் வகையிலும், இக்கதையின் கருவிற்கு மட்டுமில்லாமல், எத்தகைய “தருணங்களின் அலைக்கழிப்பு”க்கும் பொருந்தும் வண்ணம் ஒரு பொதுத்தன்மை புகுத்தும் வகையிலும் புத்தரின் நான்கு வாக்கியங்களை ஒன்றன் பின் ஒன்றாக கட்டமைப்பதன் வழியாக கதையின் முடிவை சாத்தியப்படுத்துவது கவனிக்கத்தக்கது. “ஒரு மனிதனின் மிகப்பெரிய செல்வம் தன்னம்பிக்கை”, “சுவைகளில் சிறந்த சுவை சத்தியம்”, “மெய்யான அறத்தின் வழி அறிவதே சத்தியம்”, “சத்தியமே வாழ்வதற்கு சிறந்த வழி” என்பதன் வழியாக “அடித்தளத்தின்” அறிமுகம் நடக்கிறது. இந்த நான்கு கண்ணிகளின் இணைப்பிலோ அல்லது இணைக்க முடியாததன் இயலாமையிலோ தொங்கிக் கொண்டிருப்பவை தானே நம் வாழ்க்கையின் தருணங்கள்?
அடித்தளத்திற்கு செல்வதற்கான சாவி, கதையை வாசிக்கும் மனதுக்குள் இருக்கிறது. அதைக்கொண்டு அடித்தளத்தை திறப்பதற்கான தருணம், அதுவரை மனதுக்குள் கொட்டிக்கிடக்கும் தருணங்களின் தயவில் உருவாவதே…! எனவே இக்கதையின் அடித்தளம் அவரவர் மனதின் தளமே.
கதையின் பாத்திரங்கள், பின்புலன்கள், இச்சைகள் அனைத்தும் அடித்தளத்தில் குறியீடுகளே…
ஒரு தருணத்தை விலக்க விழையும் மனது. அத்தகைய விலக்குதல் பற்றிய விழைவை மனம் கற்பித்துக் கொண்ட தருணங்கள் வழியாகவே எதை விலக்க நினைத்ததோ அதன் வழியாகவே பயணம் போகும் அல்லது போக வைக்கப்படும் தருணங்கள் நம் அனைவரின் வாழ்விலும் உண்டு. அதன் உள்ளீடுகளே அடுத்த தருணத்தை நோக்கி நம்மை நகர்த்துகின்றன. இதுவே அடித்தள அனுபவம். தற்கால உலகம் நமக்குக் காட்டும் வாழ்வியல் மகிழ்ச்சிக்கான தருணங்களில் நாம் சிக்குவது இருப்பின் நியதி என்றாகி விட்டாலும் நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் பிக்கு அத்தருணங்களில் தவிர்க்க விழைவதை நம்மை நாமே கூர்ந்து நோக்கினால் உணர முடியும் தானே?
கற்றல் என்பது அனுபவம் என்றால் கற்றல் நேரும் இடமும் நொடியும் நமக்குத் தருவது பேரானந்த அனுபவம் எனலாம். பாவண்ணன் அத்தகைய இடங்களையும் நொடிகளையும் நமக்கு அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கிறார். கதையோ கட்டுரையோ, அது நிகழும் வரிகள் அப்படைப்புக்கும் இயல்பாய் அதை மீறிய நம் பிரத்யேக சிந்தனைக்கும் விருந்தாய் பொருந்துவது வாசிப்பவருக்கு மிகுந்த உவகை ஊட்டுவதாகும். “கடல் பார்ப்பது நல்ல விஷயம்…” என்று துவங்கி “கடல் கடவுளோட மனசு” என்று முடிக்கும் “அடைக்கலம்” ஆகட்டும், “யாரிடமும் நெருங்கிக் கழிக்க முடியா பொழுதுகள்” என்னும் வார்த்தை பிரயோகத்தின் வழியே நமக்குள் இறங்கும் [“பூனைக்குட்டி“] அடர்த்தியாகட்டும், “காட்டை யாராலும் முழுசா சுத்த முடியாது…அப்பப்போ கொஞ்சம் கொஞ்சம் பார்த்துக்கலாம்” என்று சொல்லும் “குருவி மடம்” ஆகட்டும் வரிகளின் வழியே மனதில் வரிவரியாய் பதிந்து போகும் கற்றல் அனுபவங்கள்…!
பாவண்ணனின் படைப்புகள் நமக்குள் உணர்வுச் சுனையை உற்பத்தி செய்யும் ஊக்கியாக திகழ்பவை. அத்தகைய உணர்வுச் சுனையில் இருந்து வழிந்தோடும் துளிகள் போகும் வழியெங்கும் விட்டுச் செல்லும் ஈரத்தின் பிசுபிசுப்பில் ஒட்டிக் கொண்டிருக்கும் மனிதத்தின் ருசி அலாதியானது. ஈரம் என்றாலே நினைப்புதானே? மண்ணின் ஈரம் மழையின் நினைப்பு; மனதின் ஈரம் நினைப்பை பற்றிய நினைப்பு. அவரின் பெரும்பான்மை கதைகளும் கட்டுரைகளும் நினைப்பை பற்றிய நினைவின் வாயிலாகவே உணர்வை ஊட்டுகின்றன. கடந்த காலத்துக்குரிய கடமையை நிகழ்கால தர்மமாக நினைக்கும் “அழைப்பு“, ஒரு தலைமுறை பெண்மைக்கு மறுக்கப்பட்ட உணர்வு சார்ந்த மறுப்பீடுகளின் நினைப்பை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் “வைராக்கியம்“, நினைப்பில் அல்லாடியே பிழைப்பை கெடுத்துக் கொள்ளும் “அட்டை“, கடந்ததன் நினைப்பையே தன் நிகழ்காலமாக மட்டுமின்றி நிரந்தர காலமாகவே ஆக்கிக் கொண்ட “அம்மா“, “பறத்தல்” குறித்த பேரனுபவங்களை மனதுக்குள் தூவிக் கொண்டே போகும் “ஒரு பறவையின் படம்“, ஒரு காலை நேர நடையை கூட காலத்தின் குப்பிக்குள் அடைக்க உதவும் கருவியான பறவைகள் நிரம்பிய மரம் தாங்கிய வீட்டின் நினைப்பைச் சொல்லும் “வலசை போகாத பறவை“, நமக்குள் மறைந்து போன எத்தனையோ முகங்களை மீட்டெடுக்கும் “மறக்க முடியாத முகம்“, நம் ஆசிரியர் ஒருவரையேனும் நினைக்க வைக்கும் “கோடியில் ஒருவர்“, சாலையில் பார்க்கும எந்தவொரு வியாபாரியின் முகத்திலும் அவரின் நதிமூலம் எப்படியிருக்குமோ என்று எண்ண வைக்கும் “கிஷன் மோட்வாணி” போன்ற கட்டுரைகள் என்று சொல்லிக் கொண்டே போகலாம்…
பாவண்ணனை வாசித்த பின், பேருந்து நிறுத்தங்களில் அமர்ந்திருக்கும் மூதாட்டிகளை பார்க்க நேர்ந்தால் “குழந்தையும் தெய்வமும்” வழியே மனது குழையும்…மன வளர்ச்சி குன்றியவர்கள் என்ற கருதப்படுபவர்களை காண்கையில் எது மன வளர்ச்சி என்ற “விடை தெரியாத கேள்வி“யில் மனம் குவியும்…வசிப்பிடம் ஏதுமின்றி தெருவோரம் “வாழ்வைத் தேடி” வருபவர்களிடம் நம் பார்வை பதியும்…”கீழ் தட்டு” என்று சொல்லப்படும் கண்டுகொள்ளப்படாமல் இருக்கும் சமூக தளத்திலிருந்து வரும் சிறுவர்களின் நடவடிக்கைகளில் “நான்கு எழுத்துக்கள்” பாய்ந்தால் மாற்றம் வாராதா என்ற என்ற எண்ணம் சூழும்…
பாவண்ணன் அவர்களின் எழுத்துக்கள் நமக்குள் இறங்க மறுத்தாலோ, சற்றே அந்நியமாகத் தோன்றினாலோ, நம்மை அவற்றுடன் அடையாளப்படுத்த முடியாமல் இருப்பது போல் தெரிந்தாலோ, நாம் தெருவில் இறங்கி நடந்து வெகுநாட்கள் ஆகி விட்டன என்று பொருள். இன்றைய சமூகம் முன்னிறுத்தும் ஓட்டத்தில் நாம் எப்புறமும் பார்க்காமல் தங்க கூண்டில் பயணம் செய்து கொண்டிருக்கிறோம் என்றும் பொருள். கூண்டை விட்டிறங்கி வானம் பார்க்கும் வாய்ப்பை வழங்குகின்றன பாவண்ணனின் ஆக்கங்கள்.