வளவ. துரையன்
ஐங்குறுநூற்றில் ஓர் அழகான காட்சியைப் பார்க்க முடிகிறது. தலைவனும் தலைவியும் சந்திக்கின்றனர். ஒருவரை ஒருவர் விரும்பி மனம் பறிகொடுக்கின்றனர். தனிமையில் சந்தித்துப் பழகுகின்றனர். இது ஊர் முற்றும் பரவுகிறது. அவனையும் அவளையும் இணைத்துப் பேசுகின்றனர். இதைச் சங்க இலக்கியம் அலர் தூற்றுதல் என்று கூறுகிறது. இன்றோ அவள் ஓடிப்போய்விட்டாள் எனக் கொச்சையாகக் கூறுவர். சூழலைப் பொருத்து ஆணவக் கொலையும் கூட விழும். தலைவியின் செவிகளிலும் அலர் தூற்றல் விழுகிறது. அவளின் அன்னையும் இச்செய்தியைக் கேள்விப்படுகிறாள்.
தலைவி தன் தோழியிடம் இது பற்றி, “தோழியே! உனக்குத் தெரியுமா? நேற்று ஊரார் கடற்கரைத் துறைவர்க்கு என்னை மனைவி என்று கூறினார்களாம். அது கேட்ட என் அன்னை சினந்தாள். நேராக என்னிடம் வந்தாள். என்னிடம், “நீ என்ன அவனுக்கு மனைவியா? அத்தன்மையானவளா? என்று கேட்டாள். நான் மெல்லிய குரலில் ”ஆமாம்! ஊரார் சொல்வதெல்லாம் என்னைத்தான்” என்று மொழிந்தேன்” என்று கூறினாள்.
ஊராருக்கும் ஏதோ அச்சம்; இவர்கள் மணம் புரிந்து கொள்ள வேண்டும் என்றே அவர்கள் எண்ணுகிறார்கள். அதனால்தான் இன்னும் மணமாகலே இருப்பவளை அவன் மனைவி எனக் கூறுகிறார்கள். அத்துடன் அவனைப் பற்றிச் சொல்லும்போது, “வெண்மணலைச் சிதைக்கும் கடற்கரைத் துறைவன் என அவன் குணம் பற்றி உரைக்கிறார்கள். ”அவன் இவளை மறந்து போய்விடப் போகிறானே” என்று அவர்கள் அஞ்சுவது இதன் மூலம் தெரிகிறது.
தலைவியும் தன் காதலைத் தெரிவிக்க இதை ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொள்கிறாள். அதனால்தான் துணிவாக அதே நேரத்தில் பைய, அதாவது பெண்களுக்கே உரிய நாணம் வர மெல்லிய குரலில் ஊரார் என்னைத்தான் சொல்வதாகத் தாயிடம் கூறுகிறாள். அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்பவை பெண்மையின் அணிகலன்களாக அக்காலத்தில் கருதப்பட்டன. தோழிக்குரைத்த பத்து எனப் பெயரிடப்பட்டிருக்கும் இப்பகுதியில் உள்ளப் பத்துப் பாடல்களுமே தலைவி கூற்றாகத்தான் இருக்கின்றன. அதில் மூன்றாம் பாடல் இதுவாகும்.
”அம்ம வாழி, தோழி! நென்னல்
ஓங்குதிரை வெண்மணல் உடைக்கும் துறைவற்கு,
ஊரார், பெண்டுஎன மொழிய, என்னை,
அதுகேட்டு ‘அன்னாய்’ என்றனள், அன்னை;
பைய ‘எம்மை’ என்றனென் யானே”
[நென்னல்=நேற்று; உடைக்கும்=சிதைக்கும்; பெண்டு=மனைவி; அன்னாய்=அத்தன்மையவள்; பைய=மெதுவாக]
மற்றுமொரு நாடகக் காட்சியையும் ஐந்தாம் பாடலில் பார்க்கலாம்.
”அம்ம வாழி, தோழி! பல்மாண்
நுண்மணல் அடைகரை நாமோடு ஆடிய
தண்ணம் துறைவன் மறைஇ
அன்னை அருங்கடி வந்து நின்றோனே”
[மரைகி=மறைந்து; அருங்கடி=அரிய காவல்; மாண்=சிறப்பு]
முன்பு அவன் வந்தான். அவளுடன் கலந்தான். இருவரும் கடலில் ஆடினார்கள். அன்னைக்கு இது தெரிந்தது. அவள் அச்சப்பட்டாள். அன்னையர் எல்லாக் காலத்திலும் ஒரே மாதிரிதான் போலும். பெண்ணைக் காத்துக் கடிமணம் செய்து வைத்தல் அரிய செயல்தானே? எனவே அன்னை தன் மகளை வீட்டிலேயே சிறை வைத்தாள். அவன் விடுவானா? இப்பொழுதும் பார்க்கவேண்டி மனைப்புறத்தில் வந்து நிற்கிறான். இதைக்கண்ட தலைவி தன் தோழியிடம் கூறுவதுதான் இப்பாடல். அவன் வந்து நிற்பது அவளுக்கு மகிழ்ச்சியாகவும் அச்சமாகவும் இருப்பதைப் பாடல் மறைமுகமாக விளக்குகிறது.
எக்காலத்திலும் ஆடவர் பெண்களை விரும்புவார்கள். ஆனால் உடன் மணம் புரிய எண்ணாமல் காலம் தாழ்த்துவார்கள் போலும். ”அவன் இன்னும் மணம் புரிய ஆர்வமில்லாமல் இருக்கிறான் தோழி! திருமணத்திற்கு வேண்டிய செயல்களையும் செய்யவில்லை. புறம்பானவற்றைச் செய்கிறான். அதனால் அவன் என் மீது அன்பு இல்லாதவன் போலத் தோன்றுகிறான்” என்கிறாள் தலைவி இப்பத்தின் இறுதிப்பாடலில்.
”அம்ம வாழி, தோழி! நன்றும்
எய்யா மையின் ஏதில பற்றி,
அன்புஇலன் மன்ற பெரிதே
மென்புலக் கொண்கன் வாரா தோனே.”
[எய்யாமை=அறியாமை; ஏதில=தொடர்பற்ற]
தலைவன் இப்படி அறியாமையில் இருக்கிறானே எனத் தலைவி வருந்துவதும், ஏதிலவற்றைச் செய்பவனாகவும் இருக்கிறானே எனத் தலைவி கவலைப்படுவதும் பாடலில் தெளிவாகிறது. அதே நேரத்தில் அவன் புறம்பாக என்ன செய்தான் எனக் கூறவில்லை. அவனை இந்த நிலையிலும் தலைவி அதிகமாகக் குறை கூறாததுதான் அவள் செம்மையைக் காட்டி அவளை மேலும் மேலும் உயர்த்துகிறது எனலாம்.