விமரிசனம்

அன்றாடங்களின் ஆன்ம தரிசனம் – வண்ணதாசனின் ‘ஞாபகம்’ சிறுகதையை முன்வைத்து வெங்கடேஷ் சீனிவாசகம்

 – வெங்கடேஷ் சீனிவாசகம் – 

ஏதேனும் ஒரு ஞாபகம், இயந்திரகதியாகிப் போன அன்றாடங்களுக்கிடையில் மறைந்திருக்கும் பசுமையைத் துலக்கி நம் கண்கள் முன் கொண்டுவந்து பரவசப்படுத்தத்தான் செய்கிறது. பழகிப்போன தினசரி அனுபவங்களிலிருந்து நம்மை விலக்கி, சாதாரணங்களுக்குள் ஒளிந்திருக்கும் பரவசத்தைக் கண்டுகொள்ளும் வேறு கண்களை நமக்களித்துச் செல்கிறது.

அவ்வாறான ஞாபகங்கள், தானாக தோன்றாதபோதும், வலிந்து நானே அத்தருணங்களை உருவாக்கிக் கொண்டு அது தரும் பரவசங்களை அனுபவிப்பதுண்டு. பாலகுமாரனின் “தாயுமானவன்”-ல் பரமுவின் பகல் பொழுதுகள்; சமீபத்தில் ஜெயமோகனின் ‘இல்லக் கணவன்’ கட்டுரையில் வரும் பகல் பொழுது.

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலையில் படிக்கும்போது, ஒவ்வொரு விடுமுறை முடிந்து மதுரையிலிருந்து விடுதி திரும்ப விடிகாலை நான்கு அல்லது ஐந்து மணி அளவில் காந்திபுரம் பேருந்து நிலையம் இறங்கும்போதெல்லாம், அவ்வைகறையில் பேருந்து நிலையத்தின் சூழல் பரவசம் தரும். இதற்காகவே விடுமுறை இல்லாத கல்லூரி நாட்களிலும், விடிகாலை நான்கு மணிக்கு எழுந்து குளித்து கிளம்பி சைக்கிளில் பின்கேட்டில் வெளியில் வந்து பால் கம்பெனி, ஆர்.எஸ்.புரம், அர்ச்சனா தியேட்டர் வழியாக காந்திபுரம் வந்துவிடுவது. பேருந்து நிலையத்தில் பெட்டிக்கடையில் டீ குடித்துக்கொண்டே, வந்து சேரும் தொலைதூரப் பேருந்துகளிலிருந்து வந்திறங்கும் பயணிகளையும், பேருந்து வரிசைகளையும், விளக்கொளியில் கடைகளையும், அச்சூழலையும் பார்த்துக்கொண்டிருப்பது ஓர் இனிய அனுபவம்; பகலில் பார்ப்பதற்கும், வைகறையில் பார்ப்பதற்கும்தான் எத்தனை வித்தியாசம்! ஒருமுறை நண்பர் பாலா, சென்னை வந்த ஜெயமோகனை அழைத்துச் செல்ல விடிகாலை நாலு மணிக்கு எக்மோர் ஸ்டேஷன் வந்தபோது கண்ட, வைகறையின் எக்மோர் ஸ்டேஷன் அழகை பின்னர் பேசும்போது சொல்லியிருக்கிறார்.

இதேபோல் நள்ளிரவில் கேஜியில் இரண்டாம் காட்சி பார்த்துவிட்டு சைக்கிளில் விடுதி திரும்பும்போது, மரக்கடை மேம்பாலத்தில் சோடியம் விளக்கொளியில் ஆளரவமற்ற, வெற்றுத் தார்ச்சாலையில் கொஞ்சநேரம் அமர்ந்துவிட்டு, லாலி ரோட்டில் வந்து தர்சனா பேக்கரியில் டீ சாப்பிட்டு வந்த நாட்கள் அநேகம். பகல் பொழுதுகளின் பரபரப்புகள், விரைவுகள், ஒலிகளில்லாத தார்ச்சாலைகளின் அமைதிதான் எத்தனை வசீகரிக்கிறது.

வேலை செய்யும் நிறுவனங்களிலும், பண்ணை வேலை என்பதால், ஞாயிறும் வேலை இருக்கும். கூடிய மட்டில் ஞாயிறு வேலை செய்துவிட்டு, ஏதேனும் ஒரு வார நாளில் விடுமுறை எடுத்துக்கொள்வது. ஞாயிறு வேலை செய்யுமிடம் வேறு முகம் காட்டும். அது அற்புதமான முகம். அதேபோல்தான் வாரநாட்களில் ஒரு விடுமுறை தினம் வீட்டில்.

***

வண்ணதாசனின் “ஞாபகம்” சிறுகதை பல வருடங்களுக்கு முன்பு எப்போதோ, எங்கேயோ படித்தது; சரியாய் ஞாபகமில்லை; ஆனால் அந்தக் கதையும், வண்ணதாசனும் மனதில் பதிந்து போனார்கள். வண்ணதாசனுக்கு 2016-ல் விஷ்ணுபுரம் விருது கிடைத்தபோது “ஞாபகம்” பல வருடங்களுக்குப் பின் நினைவடுக்கிலிருந்து மேலெழுந்து வந்தது. சாகித்ய அகாடமி விருதும் தொடர, மிகுந்த மகிழ்ச்சியாயிருந்தது. விஷ்ணுபுரம் விருது கிடைத்ததிலிருந்தே, வண்ணதாசனின் மொத்த சிறுகதைத் தொகுப்பை தேடிக்கொண்டிருந்தேன். நண்பர் சக்தி இம்முறை இந்தியாவிலிருந்து வரும்போது, முழுத் தொகுப்பு கிடைக்கவில்லையென்றும், கிடைத்த இரண்டு சிறு தொகுப்புகள் கொண்டுவந்த்தாகவும் சொன்னார். அதிலொன்று “தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள்”. ஆம், “ஞாபகம்” அதிலிருந்த சிறுகதைகள் பதினொன்றுக்குள் ஒன்று.

அலுவலகத்திலிருந்து கிளம்பி வீடு செல்லும்போது டிபன்பாக்ஸை எடுக்க மறந்து, அதை எடுத்துச் செல்ல மறுபடி பஸ் பிடித்து அலுவலகம் வருகிறாள். அந்த முன்னிரவு நேரம் காட்டும் அலுவலகம், ஆட்களில்லாத, பரபரப்பில்லாத, இரைச்சல்களில்லாத, வெறும் மேசை, நாற்காலிகளுடன் கூடிய அந்த அறை அவள் மனதை நெகிழ்த்துகிறது. வேலை நேரம் தாண்டி, வீட்டிற்குச் செல்லாமல் அலுவலகத்தில் தனது அறையில் வேலை செய்துகொண்டிருக்கும் கிளார்க்கைப் பார்த்து அவளுக்குப் பாவமாய் இருக்கிறது (“இவளுக்கு அந்த விரல்களின்மீது இரக்கமாக இருந்தது”). ”அவர் அப்படித்தாம்மா; வழக்கம்போல ஓவர் டைம் பாக்குறார். நேரங்காலம் தெரியாம வீட்ட மறந்து இங்கேயே உட்கார்ந்துருவார்,” சொல்லிவிட்டு வாட்ச்மேன் சிரிக்கிறான். அவளுக்கு சிரிப்பு வரவில்லை; ’தனக்கு டிபன்பாக்ஸ் ஞாபகம் வந்ததுபோல், அவருக்கு வீட்டின் ஞாபகம் வரவேண்டும்’ என்றுமட்டும் உடனடியாகத் தோன்றுகிறது.

***

ஒருமுறை வார இதழ் ஒன்றில் வெளியான டைரக்டர் மகேந்திரன் பேட்டியில், “உங்கள் சினிமாக்களின்/ படைப்புகளின் வழியாக நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?” என்ற கேள்விக்கு, “அன்புதான்… அன்பைத் தவிர என்னிடம் சொல்வதற்கு வேறொன்றுமில்லை…” என்று பதில் சொல்லியிருந்தார். வண்ணதாசன் கதைகளும், மனதின் அப்பாகத்தை தூண்டி நெகிழ்த்திவிட்டுத்தான் செல்கின்றன. அன்றாடங்களைக்கூட நின்று நிதானித்து இதுவரை கவனிக்காத ஒன்றை கவனிக்கச் செய்து மனதின் உட்பயணத்திற்கு உதவி செய்கின்றன. எல்லோரையும், எல்லாவற்றையும் அன்பெனும் போர்வையால் போர்த்துகின்றன.

2007-ம் வருடம், நான் புனே அருகில் “சம்பாலி” எனும் மலர்ப்பண்ணையில் வேலை செய்துகொண்டிருந்தேன். மார்ச் மாதத்தின் அமைதியான ஒரு ஞாயிற்றுக் கிழமை. மலர்ப் பண்ணையில் ஞாயிற்றுக்கிழமையும் வேலையாட்கள் பணிக்கு வருவார்கள். அலுவலர்களில் நான் ஒருவன் மட்டும்தான் ட்யூட்டி. உச்சி நண்பகல் 12 மணி தாண்டியிருந்தது. அலுவலகத்தின் இரண்டு மாடிகள் முழுதும் மிகுந்த அமைதியாயிருந்தது. கீழ்த்தளத்தின் இடதுகோடியில் இருந்த கேண்டீனில் மட்டும் மதிய உணவு சமைக்கும் இரு பெண்களின் சிறு பேச்சுக் குரல்கள். முதல் மாடியின் வெளிக்கதவு தாண்டி, நான் திறந்தவெளி பால்கனிக்கு வந்தேன். முன்கோடையின் சுட்டெரிக்கும் வெயில். பண்ணையின் வேலிக்கு அப்பால் பக்கத்து கிராம பெரியவர் மாடு மேயவிட்டிருந்தார். அலுவலகத்திலிருந்து ஸ்டோருக்கு செல்லும் பாதையின் இருபக்கமும் இருந்த நெட்டிலிங்க மரங்கள் இலைகள் அசையாமல் உயர்ந்து நின்றிருந்தன. ஸ்டோருக்கருகிலிருந்த ஜெனரேட்டர் ரூமிலிருந்து ஜெனரேட்டர் ஓடும் சத்தம் தாளம் மாறாமல் கேட்டுக் கொண்டிருந்தது. எதிர்சாரியில் தூரத்தில் குன்றின்மேல் பச்சைப் போர்வைக்கு நடுவில் வினோபா கிராமத்தின் வீடுகள் சிறியதாய் தெரிந்தன. அப்போதுதான் என் மனம் கொஞ்சம் கொஞ்சமாய் நழுவ ஆரம்பித்தது. கண்களில் நீர் நிரம்பி காட்சிகள் மசமசப்பாயின. சுற்றிலும் எல்லாமே, ஏதோ ஊமைப்படத்தின் காட்சிகள் போல துல்லிய அமைதியில் நிகழ்ந்தன. பின்னால், கேண்டீனில் வேலை செய்யும் மீனாள் கெய்க்வாட்டின் “சார், லன்ச் ரெடியாயிருச்சு” என்ற குரல்தான் தரையிறக்கியது. உடலில் மெல்லிய நடுக்கமிருந்தது.

“எங்கெங்கு காணிணும் சக்தியடா…” என்ற வரி மட்டும் உள்ளுக்குள் அன்று முழுதும் திரும்பத்திரும்ப ஓடிக்கொண்டிருந்தது.

Advertisements

புதிய குரல்கள் 2 – சுரேஷ் பிரதீப்பின் ‘ஒளிர் நிழலை’ முன்வைத்து – நரோபா

நரோபா

சுரேஷ் பிரதீப் தொண்ணூறுகளில் பிறந்தவர். எழுபதுகளிலும், எண்பதுகளின் முற்பாதியிலும் பிறந்து எழுத வந்தவர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் சற்றே குறைந்து, எழுத்துலகில் சிறு சுணக்கம் இருந்ததாக தோன்றியது.

எண்பதுகளின் பிற்பாதியிலும், தொண்ணூறுகளிலும் பிறந்து எழுதுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருக்கிறது. உலகமயமாக்கல், இணையம் எளிதாக உலகின் கலைச் செல்வங்களை கொண்டு சேர்க்கிறது. ரசனையை இளமையிலேயே மேம்படுத்திக்கொள்ள வாய்ப்பளிக்கிறது. எந்த முக்கியமான உலக இலக்கிய ஆக்கத்தையும் நமக்கு வேண்டிய வடிவில் செலவின்றி தரவிறக்கம் செய்துவிட முடியும். சுரேஷ் பிரதீப் வெண்முரசு பற்றி கூர்மையாக எழுதும் ஓர் வாசகராகத்தான்  அறிமுகம். பின்னர் சு.வேணுகோபால் படைப்புலகம் பற்றி விரிவான கட்டுரை ஒன்றை எழுதி இருந்தார். அவருடைய சில சிறுகதைகளை வலைதளத்திலும் பதாகையிலும் வாசித்திருக்கிறேன். அவை என்னைப் பெரிதாக ஈர்க்கவில்லை. இந்நிலையில் அவருடைய நாவல் பற்றிய அறிவிப்பு வியப்பை ஏற்படுத்தியது. அதற்கு ஜெயமோகன் எழுதிய விரிவான மதிப்புரை மேலும் ஆர்வத்தைத் தூண்டியது. நாளுக்கு இரண்டு மணிநேரம் என இரண்டே நாட்களில் வாசித்து முடித்தேன். கவனம் சிதையாமல் தொடர்ச்சியாக வாசிக்க முடிந்தது. சுரேஷ் பிரதீப்பிற்கு சொல்வதற்கு ஒரு வாழ்க்கை உள்ளது. அதை சுவாரசியமாக சொல்வதற்குரிய மொழியும் அமைந்திருக்கிறது. நாவல் வடிவம் அவருடைய எழுத்து பாணிக்கு உகந்ததாகவும் திகழ்கிறது.

‘ஒளிர் நிழல்’ புனைவுக்குள் புனைவு என்ற வகைமையை தனதாக்கிக் கொள்கிறது. சுரேஷ் பிரதீப் எனும் இளம் எழுத்தாளனின் மரணத்திற்கு பின் பதிப்பிக்கப்படும் அவனுடைய நாவலும், சுரேஷ் பிரதீப்பின் மரணத்திற்கு பின்பான நிகழ்வுகளுமாக முடையப்பட்டிருக்கிறது ‘ஒளிர் நிழல்’. சுரேஷ் பிரதீப், ரகு, சக்தி, குணா என பல்வேறு பாத்திரங்கள் கதைசொல்லிகளாக திகழ்கின்றனர். உரை, கவிதை, கட்டுரை என வெவ்வேறு வடிவங்களை கையாள்கிறது. தற்கால இளைஞனின் வாழ்வில் சூழும் வெறுமை மற்றும் அகத் தத்தளிப்புகள், ஒரு குடும்பத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும், ஒரு காலகட்டத்தின் அரசியல் – சமூக மாற்றத்தின் கதை என மூன்று தளங்களில் வாசிப்பை அளிக்கிறது.

‘ஒளிர் நிழலில்’ குறிப்பிட்டு கவனப்படுத்த வேண்டிய அம்சம் என்பது நாவலில் வரும் பெண் பாத்திரங்களின் வலுவான சித்தரிப்பு. அருணா, மீனா, கோமதி, வசுமதி, அம்சவல்லி என எல்லா பாத்திரங்களும் வெவ்வேறு அடர்த்திகளில் மிளிர்கின்றன. ஆனால் நாவலின் ஆண் பாத்திரங்களில் இந்த வேறுபாடு தெளியவில்லை. ஆண்கள் அனைவருமே கூரிய தன்னுணர்வு கொண்டவர்களாக, சலிப்புற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்குள் உள்ள வர்ண அடர்வுகள் நுண்மையாக மாறுகின்றன. சுரேஷ் – குணா, ரகு – சக்தி, செல்வராஜ் குரல்கள் ஒன்று போலவே ஒலிக்கின்றன. மூத்த தலைமுறையினர் அனைவரும் ஒன்று போலவே தென்படுகின்றனர். மனதில் தங்க மறுக்கிறார்கள். சந்திரசேகர் போன்ற பாத்திரங்கள் இந்த வார்ப்பிலிருந்து விதிவிலக்காக இருக்கின்றன.

இதில் கவனிக்கத்தக்க பாத்திர வார்ப்பு என்பது சக்தியும் குணாவும் என கூறலாம். அவர்களிருவரும் ஒரே ஆளுமையின் இரண்டு துருவ இயல்புகளின் பிரதிநிதிகள். சக்தி வெளிப்பார்வையில் வெளிமுக (extrovert) ஆளுமை போல வடிவமைக்கபட்டுள்ளான். ஆனால் உள்ளே அவனுக்கு எதுவுமே ஒரு பொருட்டல்ல. எக்கணத்திலும் கனிவு கொள்ளாதவனாக இருக்கிறான். நேரெதிராக குணா உள்முக ஆளுமையாக வெளிப்படுகிறான். எவரிடமும் ஒட்டாது, எல்லாரையும் வெறுப்பது போல் தெரிந்தாலும் அன்பிற்காக ஏங்குகிறான். நாவலின் மைய விசை என்பது இவ்விரு இயல்புகள் கொள்ளும் ஊடாட்டமே. வெண்முரசு கையாளும் ஆடி பிம்பம் எனும் வடிவத்தை இப்பாத்திரங்களுக்கு பொருத்திப் பார்க்கலாம். அவர்கள் ஒருவரையொருவர் நிறைவு செய்கிறார்கள்.

நாவலுக்குள் அடையாளபடுத்தப்படுவது போலவே சுரேஷ் பிரதீப்பிடம் தாஸ்தாவெஸ்கியின் தாக்கம் உள்ளது. கவிஞர் சபரிநாதன் ‘நிலவறைக் குறிப்புகள்’ பற்றி எழுதிய கட்டுரையில் தாஸ்தாவெஸ்கியின் கதைமாந்தரின் இரு முகங்களைப் பற்றி சுட்டிக் காட்டுகிறார். சமகால விழுமியங்களின் மீது நம்பிக்கையற்ற எதிர்நாயகன் என அவனை வரையறை செய்கிறார். சமூகத்தின் பொருட்டின்மைக்கு எதிராக உருவானவன் என்கிறார். “பொருட்டின்மை என்பது முகமூடிதான். உள்ளே இருப்பதோ வெறுப்பு. செல்ல இடமில்லாதபோது அவ்வெறுப்பு தன் மீதே பாய்ந்துகொள்கிறது. எதுவும் இல்லாத இடத்தில் வெறுப்பு  குடியேறும் என்பது தாஸ்தாயெவ்ஸ்கியின் கண்டுபிடிப்புகளில் ஒன்று,” என எழுதுகிறார். ஒளிர் நிழலில் அப்பட்டமாக இது வெளிப்படுகிறது. “சக மனிதன் மீதெழும் வெறுப்பே இந்த நாவலுக்கான அடிப்படை எனத் தோன்றுகிறது” என்று நாவலின் துவக்கத்தில் வரும் ஒரு வரி மேற்சொன்ன உணர்வுக்கு நெருக்கமாக திகழ்கிறது.

சபரி அதே கட்டுரையில் தாஸ்தாவெஸ்கியின் கதைமாந்தர்களைப் பற்றிய அவதானிப்பை வைக்கிறார்- “நிலவறை மனிதன் தன்னைப் பீடித்துள்ள நோயாகக் கருதுவது அதீத பிரக்ஞையை. ஓரிடத்தில் பிரக்ஞையே பிணிதான் என்கிறான். இந்த அதீத பிரக்ஞை காரணமாக அவனுக்கு எதார்த்தத்தில் உள்ள முரண்களும் விரிசல்களும் சட்டென கண்ணில் படுகின்றன. அதை விட மோசமாக, தன் உள்ளே மொய்க்கும் எதிர்வுகள் மற்றும் பிறழ்வுகளில் இருந்து பார்வையை அகற்ற முடிவதில்லை.” ஒளிர் நிழலின் துவக்க பக்கங்களில் இருந்தே இத்தகைய போக்கு நிலைபெறுகிறது. உணர்வுகளை வெளிப்படுத்த விரும்புகிறான், ஆனால் அதன் நாடகீயத்தன்மை, பொருளின்மை காரணமாக தொடுகையைக்கூட தவிர்க்கிறான். யாரேனும் தன்னைத் தீண்ட வேண்டும் என தவிக்கிறான், ஆனால் தானே அதைச் செய்யக் கூடாது எனும் தன்னுணர்வு தடுக்கிறது. தனது மேன்மையும் நல்லியல்புகளும் புரியாத மனிதர்களுடன் வாழ்வதை எண்ணி சலிக்கிறான், ஆத்திரம் கொள்கிறான். மறு எல்லைக்கு சென்று கழிவிரக்கம் கொள்கிறான். சக மனிதர்கள் மீதான வெறுப்பு என பிரகடனபடுத்திக் கொண்டாலும்கூட அது அன்பை நோக்கியே நீள்கிறது. நிழல்கள் இருளாமல் ஒளிர்கின்றன. சுரேஷ் பிரதீப் எனும் எழுத்தாளன் மாய்ந்து அவனுடைய நிழலாக அவன் வார்த்த பாத்திரம் குணா என்றென்றைக்குமாக புனைவுக்குள் வாழ்கிறான், ஆகவே ஒளிர்கிறான். தன்னை அழித்து கலையை வளர்க்கும் சென்ற நூற்றாண்டின் துவக்கத்தில் செல்வாக்குடன் திகழ்ந்த இருத்தலியல்வாதத்தின் நீட்சியாகவே ‘ஒளிர் நிழலை” காண முடியும். இத்தனை அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்குப் பிறகு, மனிதனை ஒவ்வொரு நொடியிலும் வியப்பிலேயே அமிழ்த்தி வைப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகிய பின்னரும் பொருளின்மை நம் முகத்தில் அறைகின்றது, இக்கேள்விகள் மேலும் கூர்மை கொண்டு எழுகின்றன என்பதே புதிய தலைமுறை தமிழ் எழுத்தாளர்களை வாசிக்கும்போது புலப்படும் மற்றுமொரு பொதுத்தன்மை.

தொண்ணூறுகளில் பிறந்த மற்றொரு எழுத்தாளரான விஷால் ராஜாவின் படைப்புலகுடன் சுரேஷ் பிரதீப்பின் உலகம் கொள்ளும் ஒப்புமைகள் மற்றும் வேறுபாடுகளை கவனிப்பது முக்கியம். ‘எனும் போது உனக்கு நன்றி’ எனும் விஷாலின் தொகுப்பை முன்வைத்து, “விஷாலின் கதைகளில் கதைமாந்தர்கள் ‘ஏன் இப்படி இருக்கிறது இவ்வுலகம்?’ எனும் திகைப்பை வெவ்வேறு தருணங்களில் வெளிப்படுத்துகிறார்கள். ஆனால் அதற்காக அவர்கள் தங்களைப் பீடத்தில் அமர்த்திக் கொண்டு பிறரை குற்றம் சுமத்துவதில்லை. புகார் என்றுகூட இல்லை, மிகச் சன்னமான முனகல் ஒன்றே எழுகிறது. அவர்கள் ‘குளிர்’ நாயகனை போல் தங்கள் அளவில் காபந்து செய்து கொள்ள முடியுமா என்று மட்டுமே நோக்குகிறார்கள்.” என்றெழுதி இருந்தேன். விஷாலிடமும் சுரேஷிடமும் வெளிப்படுவது இருத்தலியல் சிக்கலே. ஆனால் சுரேஷிடம் வெளிப்படும் கோபம் விஷால் கதைகளில் வெளிப்படுவதில்லை. இதற்கு முக்கியமான காரணம் என்பது சுரேஷ் பிரதீப்பின் பாத்திரங்கள் வெளிப்படுத்தும் ஆளுமைப் பிளவாக இருக்கக்கூடும். தற்கால இலக்கியத்தின் இரு போக்குகளாக இவ்விரண்டையும் அடையாளப்படுத்த முடியும்.

நாவலில் சில காட்சிப் படிமங்கள் வெகுவாக ஈர்த்தன. பொட்டலில் முளைத்தெழுந்த  வளைந்த பனைகளை “பல நூறு பாம்பு மாத்திரைகள் ஒன்றாக வைத்து கொளுத்தியது போல தடித்து கறுத்த பனை மரங்கள்” என விவரிக்கிறார். மற்றொரு தருணத்தில் குணாவின் இயல்பை விவரிக்கும் போது “கானல் நீராலான பெருங்கடலில் நீந்துகிறான்” என்றெழுதுகிறார். ஆனால், சுந்தரத்தைப் பற்றிய அத்தியாயத்தில் “ஒத்த ஆளா பீமசேனன் மாதிரி குடும்பத்த தாங்குனான்” எனும் பயன்பாடு அவ்விடத்தில் எனக்கு அன்னியமாக துருத்திக்கொண்டு தெரிந்தது.

காத்தவராயன் ஊர்விட்டு கூட்டத்துடன் விலகி தனது சாமியைக் கண்டுகொள்ளும் இடம் சிறப்பாக சித்தரிக்கப்படுகிறது. முழுவதும் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் என்றபோதும்கூட கடவுள், திருவிழாக்களுக்கு நாவலுக்குள் இடமில்லை. எப்படியாவது தான் இறந்துவிட வேண்டும் என கடவுளிடம் மன்றாடும் நாவலின் துவக்க பகுதியில் “இங்கிருக்கும் எதுவுமே என்னை ஆற்றுப்படுத்த முடியாது என்ற முதல் எண்ணத்தில்தான் நீ உதித்திருக்க வேண்டும். நீ எனக்கு ஆணவங்களின் தொகுப்பு” என கடவுளைப் பற்றி சொல்கிறார். உன்மத்த நிலையில் சாக்த தாக்கம் கொண்ட கவிதைகள் உள்ளன.

தலித் இயக்கங்கள் சார்ந்து துணிந்து சில அரசியல் விமர்சனங்களை போகிற போக்கில் வைக்கிறார். நாமறிந்த இயக்கங்கள் மற்றும் அதன் தலைவர்களை நினைவுபடுத்துகிறது. கோமதியின் மரணம் சார்ந்து பள்ளருக்கும் தேவருக்கும் இடையிலான உரசல்கள் கோடிட்டுக் காட்டப்படுகின்றன. நூற்றி சொச்ச பக்க நாவலில் இத்தனைத் தளங்களை தொட்டிருப்பது சுரேஷ் பிரதீப்பின் வருங்கால ஆக்கங்களின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.

மரியோ வர்கோஸ் லோசா அவருடைய ‘இளம் நாவலாசிரியனுக்கு எழுதும் கடிதம்’ எனும் நூலில் நாவலின் வடிவத்திற்கும் நாவலின் பேசுபொருளுக்கும் இடையிலான உறவு உயிர்ப்புடன் திகழ வேண்டும் என்கிறார். கருப்பொருள் வாழ்க்கை அளிப்பது, பல எழுத்தாளர்கள் ஒரே கருப்பொருளை மையமாக கொண்டு எழுதுகிறார்கள், ஆனால் அதன் வெளிப்பாட்டு முறை எழுத்தாளனின் திறன் சார்ந்தது என்கிறார். ஒளிர் நிழல் எனும் நாவலுக்குள் வராத பகுதிகளின் இருப்பைப் பற்றி சிந்தித்து பார்க்கையில், புனைவுக்குள் புனைவு எனும் வடிவுக்கு நியாயம் இருக்கிறதா எனும் கேள்வி இயல்பாகவே எழுகிறது. வாசகருக்கு வாசிப்பு சுவாரசியம் அளிக்கிறது, அவனுக்கொரு சவாலை அளிக்கிறது, சவாலான வடிவத்தை கையாள்வதில் துவக்க நாவலிலேயே தேர்ச்சி அடைந்திருக்கிறார் போன்றவை உண்மையே. எனினும் நாவலின் மையத்திற்கு எவ்விதத்திலாவது வலு சேர்க்கிறதா என்பது கேள்விக்குரியதே. மாறாக இந்நாவலை எப்படி வாசிக்க வேண்டும் எனும் சில வழிகாட்டல்கள் அப்பகுதிகளில் வெளிப்படுகின்றன. உளவியலாளர் கூற்று, எழுத்தாளர் ஜெயகுமார் உரை ஆகியவை அதையே செய்கின்றன.

நாவலின் வடிவை கோளம் என உருவகப்படுத்த தோன்றுகிறது. அணுக அணுக அதன் மேற்பரப்பில் இருக்கும் வடிவ வேறுபாடுகள், சமமின்மைகள் புலப்படும், விலகி நோக்கும் தோறும் அவை மறைந்து ஒற்றை வடிவமென முழுமை கொள்ளும். வடிவ ரீதியாக கட்டற்ற பெருக்கு, ஒழுங்கற்ற சிதறல்கள் என தோன்றினாலும் அவையூடாக ஒரு ஒழுங்கு ஊடுருவி செல்லும். ஒளிர் நிழலின் துவக்கத்தில் குடும்ப அமைப்பை பொருளியல் பின்னணியில் வகுத்து நோக்கும் கட்டுரை நாவலுக்குள் எப்படியோ பொருந்தி போகிறது. சில கழிவிரக்கப் பகுதிகள், சுய விமர்சனங்கள் துருத்திக்கொண்டு இருந்தாலும்கூட, ஒளிர் நிழல் நிச்சயம் ஒரு கதைக் கோளம்தான். எழுத்தாளர் சுரேஷ் பிரதீப்பிற்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

ஒளிப்பட உதவி – சுரேஷ் எழுதுகிறான்

புதிய குரல்கள் – 1 – விஷால் ராஜாவின் ‘எனும்போது உனக்கு நன்றி’யை முன்வைத்து– நரோபா

 

ஐரா லெவினின், ‘எ கிஸ் பிபோர் டையிங்’ – ஆர். அஜய்

– ஆர். அஜய்-

ஐரா லெவினின் (Ira Levin), ‘எ கிஸ் பிபோர் டையிங்’ நாவலின் முதல் பத்தியில் தன் திட்டங்கள் கலைகின்றனவே என்ற ஆத்திரத்தில் தாடை இறுகி வலியெடுக்கும் அளவிற்கு உடலெங்கும் வெறியாலும், மன அழுத்தத்தாலும் பீடிக்கப்பட்டிருக்கும் முக்கிய பாத்திரத்தை சந்திக்கிறோம். தான் கருவுற்றிருப்பதாக அவன் காதலி அப்போதுதான் சொல்லி இருக்கிறாள். தன் மேல் அவள் சாய்ந்திருப்பதைச் சகிக்க முடியாமல் தள்ள வேண்டும் என்ற உந்துதலைக் கட்டுப்படுத்தி, பதற்றம் சிறிது குறையும்வரை அமைதியாக இருந்து விட்டு பேச -அக்குள் விரையில் நனைந்திருக்க, கால்கள் இன்னும் நடுங்கிக் கொண்டிருக்க – ஆரம்பிக்கிறான். திருமணம் செய்வதைப் குறித்து எந்த தயக்கமும் இல்லை, ஆனால் அவள் கருவுற்றிருப்பது அவள் தந்தைக்கு தெரிந்தால் பெரும் பணக்காரரான அவர் அவளை ஒதுக்கி விடுவார். காதலி, அது குறித்து தான் கவலைப்படவில்லை என்கிறார். காதலனும் தனக்காக அதைச் சொல்லவில்லை, இருவருமே இன்னும் கல்லூரிப் படிப்பை முடிக்காத நிலையில் பிறக்கப் போகும் குழந்தையை எப்படி நல்லபடியாக வளர்க்க? படிப்பு முடிந்தபின் முறைப்படி அவள் தந்தையைச் சந்தித்து மணம் முடிக்க அனுமதி கேட்டு, பின் திருமணம் நடந்தால் அவர்கள் வாழ்க்கை எப்படி இருக்கும்? காதலி, ஏன் அந்த நிறைவேற முடியாத கனவுகளைப் பேசுகிறாய் என்று கேட்க, இப்போதும் அவை நிறைவேற முடியும் என்கிறான். கருக்கலைப்பு செய்ய மாட்டேன் என்று உறுதியாக காதலி சொல்ல, தொடர்ந்து அவளிடம் பேசி, மாத்திரைகள் வேலை செய்யவில்லை என்றால் இப்போதே திருமணம் செய்து விடலாம் என்று சம்மதிக்க வைக்கிறான்.

நாவலின் முதல் அத்தியாயத்திலேயே அப்பாத்திரத்தின் ஆளுமை வெளிப்பட்டு, எந்தச் சூழலிலும் தன்னிலை இழக்காதவன், தன் பேச்சினால் யாரையும் வசியம் செய்யக் கூடியவன் என்ற புரிதல் கிடைக்கிறது. எனவே அடுத்த அத்தியாயங்களில் காதலியைக் கொலை செய்ய அவன் திட்டமிட ஆரம்பிக்கும்போது, வியப்பு ஏற்படவில்லை என்றாலும், அதில் அவன் வெற்றி அடைகிறானா, எப்படி பிடிபடுகிறான் என்பதைத் தவிர வேறென்ன புதிதாக இருக்க முடியும், என்று கேள்வி வாசகனுக்கு எழக்கூடும்.

காதலனின் எண்ண ஓட்டத்தை தெரிந்து கொள்கிறோமே தவிர அவன் பெயரை லெவின் வெளிப்படுத்துவதில்லை, முகமூடி போட்ட ஒருவன் நம் முன் நடமாடுவதை போல்தான் அவனை நாம் காண்கிறோம் என்பதையும், மற்ற பாத்திரங்களுக்கு அவன் முகமூடி அணிந்துள்ளான் என்பது தெரியாமல் இருப்பது மட்டுமே நமக்கும் அவர்களுக்கும் உள்ள வித்தியாசம் என்பதையும் உணராதபடி நாவலை கொண்டு செல்லும் லெவின் முதல் பகுதியின் இறுதியில்தான் அதன் -அந்த காதலன் யாராக இருப்பான் என்ற கேள்வியை, அதுவரை அவனுடையை செயல்களில் ஆழ்ந்து இருக்கும் வாசகனை கேட்கச் செய்கிறார். வாசகன் பெரிதாக கவனிக்காமல் செல்லக்கூடிய சில விஷயங்களை சொல்லி அவற்றை பின்னால் மிகச் சரியாகப் பொருத்தி அதன் முக்கியத்துவத்தை, அதை -அதன் அர்த்தம் புரியாமல் – கவனித்திருந்தால் மகிழ்ச்சியும், அதில் ஒன்றுமில்லை என்று கடந்திருந்தால் வியப்பும் அடையச் செய்வதுடன் மர்ம நாவல்களின் ஒழுங்கை குலைக்கக் கூடிய இரண்டு அபாயகரமான விஷயங்களிலும் லெவின் ஈடுபடுகிறார்.

ஒன்று, தனக்கு (ஆசிரியருக்கு) மட்டும் தெரிந்திருக்கும் விஷயங்களை கொஞ்சம் கொஞ்சமாக வாசகனுக்கு வெளிப்படுத்தி/ உணர்த்தி, அவனை அதிரச் செய்வது அல்லது இனி இந்தக் கதையில் ஒன்றுமில்லை என்ற தட்டையான மனநிலைக்கு அவனைக் கொண்டு வந்த சில பக்கங்களில் மீண்டும் அவனை வசப்படுத்தி உள்ளிழுத்துக் கொள்வது. முதல் பகுதியில் நடக்கும் கொலைக்குப் பின் ஏற்படும் எதிர்பார்ப்பின்மையை, கொலைகாரன் யார் என்று தெரியாது என்ற உணர்தலினால் விலக்கி, இரண்டாம் பகுதியில் மீண்டும் ஒரு முடிச்சை உருவாக்கி, அதன் இறுதியில் வெளிப்படுத்தும் தகவல்- கொலை செய்பவனின் முகமூடி விலகும் தருணம்- ஒரு உதாரணம். அது மிகப் பெரிய திறப்பு என்றாலும், இத்தகைய நாவல்களின் முடிவாகவே- கொலைகாரன் யார் என்று தெரிந்துவிட்ட பின் என்ன சுவாரஸ்யம் – பெரும்பாலும் இருக்க முடியும் இல்லையா, ஆனால் அதற்குப் பின்னரும் கதையை நீட்டிப்பது என்ற தற்கொலை முடிவை எடுக்கும் துணிச்சல் லெவினுக்கு இருப்பதோடு மட்டுமில்லாமல் அதை வெற்றிகரமாக கொண்டும் செல்கிறார். (திருமணத்துடன் சுபமாக முடியும் காதல்/ தேவதை கதைகளை அதற்குப் பின்னான வாழ்கையையும் சித்தரித்து நீடிப்பதைப் போல)

இரண்டாவது, இனி தப்பிக்கவே முடியாது என்று நாம் எண்ணுமளவுக்கு ஒரு இக்கட்டை உருவாக்குவது. ஒரு பாத்திரத்தை பற்றி தெரிந்து கொள்ள வேறு பெயரில் அவன் குடியிருக்கும் இடத்தின் சொந்தக்காரரை -அவன் அங்கில்லாத நேரமாக பார்த்து -சந்திக்கச் செல்லும், பெரிதாக பிரச்சனை ஏற்பட முடியாத நிகழ்விலும்கூட இத்தகையை சிக்கலொன்றை உருவாக்கும் திறமை லெவினுக்கு உள்ளது. அப்படியொன்று உருவாகிய பின், அதை ஏனோதானோ என கடந்து சென்றால் வாசகனுக்கு அது அவனை வயப்படுத்த முனையும் மலிவான உத்தியாக மட்டுமே தோன்றி அதை விலக்கி விடுவான். ஆனால் லெவின் அதை தர்க்க ரீதியாக இயல்பான முறையில் அவிழ்ப்பது வாசகனை சில பக்க பதட்டங்களுக்குப் பின் ஆசுவாசமாக, அதே நேரம் தான் ஏமாற்றப்படவில்லை என்ற எண்ணத்துடன் மூச்சு விட வைக்கிறது.

நாவலின் முக்கிய பாத்திரம் தளராமல் முயற்சி செய்பவனாக இருப்பது குறித்து நாவலின் முதலிரு அத்தியாயங்களில் நமக்கு புரிதல் கிடைத்துவிட்டாலும், அப்பாத்திரத்தை நம் மனத்தில் இன்னும் துல்லியமாக கட்டமைக்கும் வகையல் அவ்வப்போது லெவின் அவனைக் குறித்து தகவல்கள் தந்துச் செல்கிறார். பெரிய சோகப் பின்னணியோ, பழிவாங்கும் காரணமோ இந்த பாத்திரத்திற்கு இல்லை. சிறிய கிராமமொன்றில் சாதாரண மத்தியத் தர குடும்பமொன்றில் பிறந்து வளர்பவன்தான் இவன். ஆனால் நீல நிறக் கண்கள், பொன்னிற தலைமுடி என்று மரபணு குலுக்கல் சீட்டில் வென்றிருக்கும் அவன் சிறு வயதிலிருந்தே மற்றவர்களை எளிதில் தன் பால் ஈர்த்து தான் பிறந்த அந்த சிறிய இடத்தின் நாயகனாக வளர்வது, அவனுடைய தன்மோகம் (narcissism) குறித்த உணர்தலை நமக்குத் தருகிறது. சிறிய குளத்தில் மிகப் பெரிய ஒற்றை மீனாக விளங்கியவன், பெரு நகரத்திற்கு வரும்போது தான் அப்படி ஒன்றும் மிகவும் தனித்துவம் கொண்டவன் அல்ல என்று ஏற்படும் புரிதல் (தன்னை விட முதிர்ந்த பணக்கார விதவை பெண்ணுடன் உறவு ஏற்பட்டதில் உண்டாகும் பெருமிதம் அப்பெண் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மாற்றும் இளைஞர்கள் வரிசையில் ஒருவன் தான் என அவனுக்குத் தெரியவருவது) அதனால் சீண்டப்படும் அவனுடைய அகங்காரம் ஆதார குணமான சுயமோகத்துடன் ஒன்றிணையும்போது, அதன் பின் அவன் மனதளவில் ஒரு முடிவுக்கு வருவதும், நிஜத்தில் அதை செயல்படுத்துவதும் அவனுடைய ஆளுமையின் மற்றொரு வெளிப்பாடாகவே, இயல்பான ஒன்றாகவே இருக்கிறது.

அவனுக்கும் அவன் தாய்க்குமான உறவிலும் வாசகன் யூகிக்கக்கூடிய சில விஷயங்கள் உள்ளன. கணவனின் எதிர்காலம் குறித்த பல கனவுகளுடன் திருமணம் செய்து கொண்டு பெரும் ஏமாற்றமடைந்த அவன் தாய், அதை வெளிக்காட்டவும் தயங்குவதில்லை. அந்த எதிர்பார்ப்புக்களை மகனிடம் திருப்புகிறார் என்று லெவின் சுட்டுகிறார். அவருடன் அவ்வப்போது பிணக்கு கொண்டாலும் தான் ஒரு நல்ல நிலைக்கு வரும் சூழல் ஏற்பட்டவுடன் தாயை அழைத்து தன் தற்போதைய நிலைமையை பார்க்கச் செய்வது, நம் பாத்திரம் எந்தளவிற்கு தாயின் எதிர்பார்புக்களால் உந்தப்பட்டான், எப்படியேனும் அவர் முன் வெற்றிகரமான மனிதனாக உருவாக ஆசைப்பட்டானா என்று யோசிக்க வைக்கிறது. இவை அவன் செய்கைகளை நியாயப்படுத்துவதாக அல்லாமல் அவனுடைய ஆளுமை உருவாக்கத்திற்கான காரணிகளாக இருக்கலாம் என்ற கோணத்தில் வாசகனைச் சிந்திக்க வைப்பவையாக மட்டுமே நாவலில் உள்ளன.

சதுரங்கத்தில் சிப்பாய்கள் ஒவ்வொரு கட்டமாக முன்னேறி ராஜாவை நெருக்குவதைப் போல் நாவலை இறுதி வரை கொண்டு செல்லும் லெவின், சிப்பாய்கள் ஆட்ட விதிகளை மீறி நாலைந்து கட்டங்கள் தாவிச் செல்லும் சில நிகழ்வுகளை வைப்பது அதுவரை இருந்த நாவலின் போக்கிற்கு நேர் எதிர்மாறாக, சற்றே ஏமாற்றமளிப்பதாகவும்கூட இருந்தாலும், ‘ழானர்’ எழுத்தின் எல்லைகள் இவை என்றளவில் அவற்றை கடந்து செல்லலாம். நாவலில் இறுதியில் இன்னொரு மீள முடியாததாக தோன்றும், ஆனால் கச்சிதமாகப் பொருந்தும் ஒரு சந்திப்பை/ கேள்வியை உருவாக்கி முடிப்பதின் மூலம் அதையும் சரி செய்து விடுகிறார். இந்த சிக்கலை லெவின் எப்போதும் போல் எளிதாக அவிழ்த்து விட்டிருப்பார், ஆனால் அவ்வாறு செய்யாமல் அதன் பொறுப்பை வாசகனிடம் விட்டு விடுவதால் நாவல் முடிந்த பின்பும் அவன் அதற்கான முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறான்.

பின்குறிப்பு:

நாவலை படிக்கும் போது, தொண்ணூறுகளின் முதற்பகுதியில் வெளிவந்த, இன்றைய ஹிந்தி திரையுலகின் பெருநட்சத்திரங்களில் ஒருவர் அந்த இடத்திற்கு செல்லும் பாதையில் அடியெடுத்து வைக்க உதவிய ஹிந்தி திரைப்படம் சிலருக்கு நினைவுக்கு வரலாம். இந்த நாவலை அதிகாரபூர்வமாக படமாக்கிய ஆங்கில திரைப்படத்தின் அதிகாரபூர்வமற்ற தழுவலான அப்படத்தை பார்த்திருந்தாலும், முற்றிலும் புதிய, அதைவிட மேம்பட்ட அனுபவத்தை தரும் இந்த நாவல் தருகிறது. அதற்கு காரணம் நாவலின் தரம் மட்டுமல்ல ஹிந்தி திரைப்படத்தின் சாதாரணத்தன்மையும்தான்.

ஜான் ஆஷ்பெரி – எம்மா பௌமன் எழுதிய அஞ்சலிக் குறிப்பு

Emma Bowman

மிகுமெய்ம்மை மற்றும் விடையிலித்தன்மை கொண்ட படைப்புகளுக்குப் பெயர் பெற்ற, புலிட்சர் பரிசு வென்ற கவிஞர் ஜான் ஆஷ்பெரி தொண்ணூறாம் வயதில் மறைந்திருக்கிறார்… அவர் தன் இல்லத்தில் இயற்கை மரணம் எய்தினார்.

1975ஆம் ஆண்டு வெளிவந்த அவரது கவிதை தொகுப்பு, ‘செல்ஃப் போர்ட்ரெய்ட் இன் எ கான்வக்ஸ் மிரர்’ பலராலும் அவரது மிகச் சிறந்த படைப்பாகக் கருதப்படுகிறது. புலிட்சர் பரிசு, நேஷனல் புக் அவார்ட் மற்றும் நேஷனல் புக் கிரிடிக்ஸ் சர்க்கிள் பரிசு என்று இலக்கிய உலகின் மிக அபூர்வமான மூன்று விருதுகளை அது பெற்றது. இந்த நூலின் தலைப்புக் கவிதை அதே பெயர் கொண்ட பார்மிஜியானினோவின் பதினாறாம் நூற்றாண்டு ஓவியத்தின் மீதான தியானமாகும். முன்னால் அதிபர் பராக் ஒபாமா நேஷனல் ஹ்யூமானிட்டிஸ் பதக்கம் அளித்து ஆஷ்பெரியின் சாதனைகளை அங்கீகரித்துள்ளார்.

இளம் வயது முதலே கவி மரபுகளை நிராகரித்த ஆஷ்பெரியின் மனப்போக்கு ஜான் கேஜ் போன்றவர்களின் இசை மற்றும் காண்கலை, குறிப்பாக அப்ஸ்ட்ராக்ட் எக்ஸ்பிரஷனிஸ்ட் ஓவியர்களின் தாக்கத்தில் வளர்ந்த ஒன்று.

அவரது கவிதைகளுக்கும் ஓவியத்துக்கும் உள்ள உறவை நியூ யார்க் டைம்ஸ் இவ்வாறு அடையாளப்படுத்தியது: “அவரது கவிதைகள் சவாலாய் இருக்கின்றன என்றால் திரு. ஆஷ்பெரியின் நோக்கத்தில் அதுவும் ஒன்று- ஓவியம் குறித்த தம் முன்னனுமானங்களை பார்வையாளர்கள் கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அப்ஸ்ட்ராக்ட் எக்ஸ்பிரஷனிஸ்டுகள் போலவே கவிதை குறித்த தம் முன்னனுமானங்களை வாசகர்கள் மீள்பரிசீலனைக்கு உட்படுத்த அவர் கட்டாயப்படுத்துகிறார்.”

பாரிஸ் ரிவ்யூவின் பீட்டர் ஸ்டிட்டிடம், “ஓவியனாவ்துதான் என் லட்சியம்,” என்றார் ஆஷ்பெரி. பதின்ம வயதுக்கு முந்தைய ஆண்டுகளில் அவர் ஓவிய வகுப்புகள் எடுத்துக் கொண்டார், ஆனால், “ஓவியம் வரைவதைவிட கவிதை எழுதுவது சுலபமாக இருப்பதை அறிந்து கொண்டேன்.” அதற்கிடையிலான காலத்தில் அவர் நவீன கவிதைகள் வாசிக்கத் துவங்கியிருந்தார்.

லூயி உண்டர்மேயர் தொகுத்த கவிதை நூல் ஒன்றில் தான் கவிஞனாய் அங்கீகாரம் பெற்றதாக அவர் ஸ்டிட்டிடம் சொல்கிறார். பல விமரிசகர்களும் ஆஷ்பெரியின் கவிதைகள் புரிந்து கொள்ள முடியாதவையாக இருப்பதாய்ச் சொல்வது குறித்து, “அதில் பலவும் எனக்கு முதலில் பிடிபடவில்லை… பிற கவிஞர்கள் போல் எழுத வேண்டும் என்ற ஆர்வம்தான் என்னைக் கவிதை எழுத வைத்தது என்று நினைக்கிறேன்”.

அவரது புதிர்க்கவிதைகள் இலக்கிய விமரிசகர்களையும் அவரது சமகால கவிஞர்களையும் குழப்பத்தில் ஆழ்த்தினாலும், சோதனை முயற்சிகள் மேற்கொள்ளும் அவரது பாணி ஒரு தலைமுறை எழுத்தாளர்களுக்கு இலக்கியத்தை புதிதாக்கி அளித்தது.

மிகச் சிறந்த கவிஞர் என்று போற்றப்பட்ட டபிள்யூ. ஹெச். ஆடனை ஆஷ்பெரியின் முதல் புத்தகம் புரிந்து கொள்ள முடியாமல் தடுமாறச் செய்தது (“கவிஞனாய் என் மொழியை உருவாக்கிய முதன்மை எழுத்தாளர்களில் ஒருவர்” என்று ஆஷ்பெரி ஆடன் குறித்து மதிப்பு கொண்டிருந்தார்). ‘சம் ட்ரீஸ்’ (1956) என்ற புத்தகத்துக்காக ஆஷ்பெரியை யேல் யங்கர் போயட்ஸ் பரிசுக்குத் தேர்வு செய்த ஆடன் பிற்காலத்தில், “அதில் ஒரு வார்த்தைகூட தனக்கு பிடிபடவில்லை என்று ஒப்புக்கொண்டார்”, என்பதை டைம்ஸ் குறிப்பிடுகிறது.

ஆம், 2008ஆம் ஆண்டு தி அசோஷியேட்டட் பிரஸ்சுக்கு அளித்த பேட்டியில் ஆஷ்பெரி, தன் பெயரை தான் வினைத்தொகையாக்குவதானால் அது, “மனிதர்களைச் சொல்லவொண்ணாதபடி குழப்புவது”, என்று பொருட்படும் என வேடிக்கையாய் குறிப்பிட்டார்.

வாழ்வே அவ்வாறு இருப்பதால்தான் ஓவிய மரபுகளைப் பின்பற்றாத அவரது படைப்புகளும் சீரில்லாமல் இருக்கின்றன என்று ஒரு முறை ஆஷ்பெரி லண்டன் டைம்ஸில் கூறினார்: “வாழ்வில் நேரடி அறிவிப்புகள் எதுவும் இருப்பதாய் நான் கண்டதில்லை. அறிவு அல்லது உணர்வு எனக்கு எவ்வாறு வருகிறதோ, அதைப் போல் அல்லது அதை நகல் செய்யும் வகையில் என் கவிதை உள்ளது- தட்டுத் தடுமாறி, திசையின்றி வளர்கிறது. அப்படிப்பட்ட ஒரு நிலையை கச்சிதமான வடிவங்களில் அமைக்கப்பட்ட கவிதைகள் பிரதிபலிக்காது என்று நினைக்கிறேன். என் கவிதை துண்டிக்கப்பட்ட தன்மை கொண்டது, ஆனால் வாழ்வும் அப்படிதான் இருக்கிறது”

வீக்எண்ட் எடிஷன் நிகழ்ச்சியை நடத்திய ஸ்காட் சைமனிடம் 2005ஆம் ஆண்டு ஒரு நேர்முகத்தில் அவர், கவிதை எழுதுவது என்பது சமூகத்தில் “ஒரு விளிம்புநிலைத் தொழில்” என்றார். பெருவாரி வாசகர்களால் அவரது படைப்புகளைப் புரிந்து கொள்ள முடிவதில்லை என்பதைத் தாம் கண்டிருப்பதாக விமரிசகர்கள் தன்னிடம் கூறியுள்ளனர் என்றும் அவர் அந்தப் பேட்டியில் குறிப்பிட்டார், ஆனால் மானுட அனுபவம் தொடர்பான தனது கருப்பொருட்கள், ஐயம், தீர்மானமின்மை போன்றவை, பலரையும் முன்னிட்டுப் பேசுபவை.

“எத்தனை பேர் புரிந்து கொள்ள முடியுமோ அத்தனை பேருக்கும் அவை புரிந்தால் நன்றாகத்தான் இருக்கும்,” என்று அவர் சைமனிடம் கூறினார். “அவை அந்தரங்கமானவை அல்ல, அப்படி நான் சொல்ல மாட்டேன். அவை நம் அனைவரின் அந்தரங்கம் குறித்தவை, சிந்திப்பதும் முடிவெடுப்பதும் நமக்கு எவ்வளவு கடினமாக இருக்கிறது என்பது குறித்தவை. அப்படி பார்க்கும்போது அவை, யாருக்காவது புரிந்து கொள்ளும் ஆர்வம் இருக்குமானால், அவர்களுக்கெல்லாம் பிடிபடும் என்று நினைக்கிறேன்”

(This is an unauthorised translation of the article, ‘John Ashbery, Celebrated And Experimental Poet Of The 20th Century, Dies At 90’, by Emma Bowman, published at NPR. This Tamil translation is intended for educational, non-commercial display at this particular webpage only).

ஆளற்ற பாலம் – கொண்டபல்லி கோடேஸ்வரம்மா (புத்தக அறிமுகம் – எஸ். சுரேஷ்)

எஸ். சுரேஷ்

கொண்டபல்லி கோடேஸ்வரம்மாவின் நினைவுகள் தெலுங்கில், “நிர்ஜன வாரிதி” என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது.  கெளரி கிருபானந்தன் தமிழாக்கத்தில் “ஆளற்ற பாலம்” என்று காலச்சுவடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ள இந்த நூல், மனதை மிக ஆழமாய்த் தொட்டு நெகிழ்த்துகிறது. இது ஒரு சுதந்திர போராட்ட வீரரின், கம்யூனிஸ்டின், எல்லாவற்றுக்கும் மேல், ஒரு பெண்ணின் நினைவுக் குறிப்புகள்.

கோடேஸ்வரம்மா நான்கு வயதில் விவாகம் முடிக்கப்பட்டு விரைவிலேயே குழந்தை விதவையானவர். பின்னர், அவர் சமூக எதிர்ப்புகளைப் பொருட்படுத்தாமல், கொண்டபல்லி சீதாராமையாவை மணம் முடிக்கிறார், சீதாராமையா பின்னாளில் மக்கள் போர்க்குழுவைத் துவக்கியவர். இந்த நூலில் கோடேஸ்வரம்மாவின் நினைவுகள் அவரது குழந்தைப் பருவத்தில் துவங்கி, அதன் பின் அவர் சீதாராமையாவை மணம் முடித்தது, இருவருமாக இணைந்து கம்யூனிஸ்டு கட்சிப்பணியில் ஈடுபட்டது, சீதாராமையா கைவிட்டபின் அவர் எதிர்கொள்ளும் கொந்தளிப்பான நாட்கள், மத்திம வயதில் மெட்ரிகுலேஷன் படித்து தேர்ச்சி பெறுவது, அவர் வாழ்வின் பெருஞ்சோகங்கள், இரு குழந்தைகளும் இறப்பது, சீதாராமையா முதுமையில் அவரிடம் மீண்டும் திரும்ப விரும்புவது, பேத்திகளுடன் வாழ்வைக் கழிப்பதில் கிட்டும் நிறைவு என்று தொடர்கின்றன.

அவரது வாழ்வு ஒரு சோகக்கதை. இந்திய பெண்களில் பெரும்பாலானவர்கள் கடந்த காலத்தில் எதிர்கொண்ட கதை. மகத்தான போர்க்குணம், வீரம், வாழ்க்கை வீசுவது அனைத்தையும் நேருக்கு நேர் எதிர்கொண்டு எடுத்துக் கொண்ட பணியைத் தொடர்வதையும் பேசும் கதை. கர்ம யோகியின் வாழ்வுக்கு உண்மையான இலக்கணம்.

விதவை மறுமணம், பெண் கல்வி, சாதி ஒழிப்பு என்று பல்வேறு சமூக இயக்கங்களை கம்யூனிஸ்ட் கட்சி தீவிரமாக மேற்கொண்ட வரலாற்றை இந்த நினைவுக் குறிப்பு பதிவு செய்கின்றது. அதே நேரம், வர்க்கம், சாதி, ஆண்- பெண் வேறுபாடுகள் குறித்து அக்காலத்தில் நிலவிய எண்ணங்களும் இதில் இடம் பெறுகின்றன. முன்னிருந்ததற்கு இப்போது நாம் முன்னேறியிருக்கிறோம் என்றாலும் மேலுள்ள விஷயங்களில் இன்றும் நம் தேசம் பெரிய அளவில் மாறவில்லை என்பதைப் பார்க்க முடிகிறது.

இவரது சுயசரிதையில் இரண்டு விஷயங்கள் எனக்கு தனித்து தெரிகின்றன. ஒன்று, ஆண்களில் மிகவும் புரட்சிகரமானவர்களாக இருந்தவர்களும்கூட பெண்களைத் தமக்கு சமமானவர்களாக நினைக்கவில்லை. அவர்கள் பெண் விடுதலைக்குப் போராடினார்கள், ஆனால் ஒரு பெண்ணின் தலைமையை ஏற்கத் தயாராக இல்லை. கோடேஸ்வரம்மா இதைச் சொல்லவும் செய்கிறார். வேறொரு பெண்ணுக்காக சீதாராமையா அவரைக் கைவிடுகிறார், அவரும் பெண் விடுதலை விஷயத்தில் சொல் ஒன்று செயல் ஒன்று என்று இருப்பதில் இருந்து தப்பவில்லை. இது போக, தனித்து தெரியும் இரண்டாவது விஷயம், கோடேஸ்வரம்மாவின் சுயமரியாதைதான். தெலுகு தேச அரசு சீதாராமையாவை விடுதலை செய்ததும் அவர் கோடேஸ்வரம்மாவும் சேர்ந்து வாழ விரும்புகிறார். ஆனால், அவருக்கு அப்படி ஒரு விருப்பம் இருக்கலாம், ஆனால் தனக்கு இணைந்து வாழும் விருப்பம் இல்லை என்று கூறி கோடேஸ்வரம்மா அதற்கு மறுத்து விடுகிறார்.  அவர் வாழும் அதே விஜயவாடாவில்தான் சீதாராமையா இருந்தார் என்றாலும்கூட, நீண்ட காலம் அவரைச் சந்திக்கவும் அவர் மறுத்து விடுகிறார்.  அதே போல், ஹைதராபாத்தில் உள்ள ஆந்திர மகில சபாவில் தங்கியிருந்து கல்வி கற்ற நாட்களிலும் அவர் எவரிடம் பண உதவி பெற்றுக் கொள்வதில்லை. அவர் கதை எழுதி பத்திரிக்கைகளுக்கு அனுப்புகிறார். ரேடியோ நாடகங்களில் நடிக்கிறார். இவற்றால் வரும் வருமானத்தைக் கொண்டு வாழ்வது போதாதென்று கம்யூனிஸ்டு கட்சியின் உறுப்பினர் சந்தாவையும் செலுத்துகிறார்.

கோடேஸ்வரம்மாவின் கதை, வாழ்வின் அபத்தத்தைக் குறித்து நம்மை யோசிக்கச் செய்கிறது. தன் கணவன் தன்னை விட்டுப் பிரிந்ததும் அவர் அன்றாடச் செலவுக்கும்கூட பணமின்றி தவிக்கிறார். காக்கிநாடாவில் ஒரு பெண்கள் ஹாஸ்டலில் அவருக்கு ஒரு மேட்ரன் வேலை கிடைக்கிறது. வாழ்க்கை ஓரளவு சுமுகமாகப் போகத் துவங்கும்போது, அவர் தன் மகனை இழக்கிறார். அவன் ஒரு புரட்சியாளனாக மாறிவிடுகிறான், அவனது மரணம் எப்படி நேர்ந்தது என்பதை யாராலும் சொல்ல முடிவதில்லை. அவன் தற்கொலை செய்து கொண்டதாக காவல் துறையினர் சொல்கிறார்கள். அவரால் அவன் உடலைக்கூட பார்க்க முடிவதில்லை. அவரது மகளும் மருமகனும் மருத்துவர்கள், தில்லியில் மகிழ்ச்சியான இல்லறம் அவர்களுக்கு அமைகிறது. ஆனால் அவரது மருமகனுக்கு மத்திய கிழக்கில் வேலை கிடைத்ததும் அவர்கள் விஜயவாடா வந்து செல்கிறார்கள். விஜயவாடாவில் வெப்பம் தாக்கி அவரது மருமகன் மரணமடைகிறார். இந்த துக்கத்திலிருந்து மீள முடியாத அவரது மகள் அடுத்த சில ஆண்டுகளில் தற்கொலை செய்து கொண்டு தன் இரு பெண்களையும் அனாதையாக விட்டுச் செல்கிறார். தான் உருவாக்கிய கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட சீதாராமையா விஜயவாடா திரும்புகிறார், அவரது இயக்கச் செயல்பாடுகளுக்காக அவருக்கு சிறைத்தண்டனை அளிக்கப்படுகிறது. மெல்ல மெல்ல நினைவாற்றலை இழக்கும் சீதாராமையாவும் மறைகிறார். அவரது இறுதிச் சடங்குகளில் மிகச் சிலரே பங்கேற்கின்றனர். தன் வாழ்நாளெல்லாம் சமூக மேம்பாட்டுக்கு உழைத்த ஒருவர், கம்யூனிச இயக்கத்தின் அங்கமாக இருந்தவர், நக்சல் இயக்கத்தில் பங்கேற்றவர், இறுதியில் யாருமில்லாமல் இறந்து போகிறார். மானுட நேயத்தைவிட கோட்பாடுகளா முக்கியம், என்று கேள்வி எழுப்புகிறார் கோடேஸ்வரம்மா.

இந்தப் புத்தகம் கம்யூனிச இயக்கம் பற்றிய ஒரு விரிவான பார்வை அளிக்கிறது. அதே சமயம், ஒரு கோட்பாட்டாளராக அல்ல, ஒரு மனைவியாகவும் தாயாகவும் கோடேஸ்வரம்மா இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார். எனவேதான் நாம் கம்யூனிஸ்ட் கட்சி உடைவது குறித்து இதில் வாசிக்கிறோம், ஆனால் இது குறித்து கட்சிக்குள் நடந்த விவாதங்கள் குறித்து எதுவும் குறிப்பிடப்படுவதில்லை. அந்த விவாதங்கள் நிச்சயம் கோடேஸ்வரம்மாவுக்கு தெரிந்திருக்கும். அதே போல், சீதாராமையா ஏன் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலகி மக்கள் போர்க்குழுவைத் துவக்கினார் என்பதையும் அவர் எழுதுவதில்லை. போராட்டத்தில் உயிரிழந்த காம்ரேடுகள் பற்றி நமக்குத் தெரிய வருகிறது, ஆனால் அவர்கள் நிகழ்த்திய வன்முறைச் சம்பவங்கள் குறித்து குறிப்பேதும் இல்லை. இந்த சுயசரிதையில் இன்னும் பல தகவல்கள் இருந்திருந்தால் இந்தியாவில் சில முக்கியமான இயக்கங்கள் குறித்த வரலாற்றுத் தகவல்கள் நமக்குக் கிடைத்திருக்கும், ஆனால் இந்தப் புத்தகம் இந்திய கம்யூனிச இயக்கத்திம் வரலாறு அல்ல – தான் வகுத்துக் கொண்ட விதிகளின்படி வாழ்ந்த ஒரு சுயமரியாதை மிக்க ஒரு பெண்ணின் சுயசரிதை.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் இது அவசியம் வாசிக்கப்பட வேண்டிய சுயசரிதை- நம் மனச்சாய்வுகளைப் புரிந்து கொள்ளவும், நியாயமான சமூகத்தை அமைக்க பலர் செய்த தியாகங்களின் மதிப்பை உணரவும், இன்னும் எத்தனை செய்யப்படக் காத்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ளவும் இது நிச்சயம் உதவும்.