விமரிசனம்

கோபாலகிருஷ்ண அடிகா- கவிதை பற்றியும், ஒரு கவிஞனாகவும்

தி இரா மீனா

கன்னட மொழி கவிதை உலகில் ’ நவ்யா ’ இலக்கிய இயக்கத்தின் முன்னோடியாக போற்றப்படுபவர் மொகேரி கோபாலகிருஷ்ண அடிகா. ஆங்கில மொழி பேராசிரியர், கல்லூரி முதல்வர் என்று முக்கிய பொறுப்புகள் வகித்தவரெனினும் ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகாலம் கன்னட இலக்கிய உலகை படைப்புகளால் பெருமைப்படுத்தியவர். சாட்சி பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்து கன்னட இலக்கியத்தை பெரும்பான்மை மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மண்ணின் வாசனே, அனந்தே, பூமி கீதா, வர்த்த மானா, பாவதரங்கா ஆகியவை அவருடைய படைப்புகளில் சிலவாகும்.

ஞானபீட விருது பெற்ற யு.ஆர். அனந்தமூர்த்தி கோபாலகிருஷ்ண அடிகாவின் மாணவரும், சிறந்த நாவலாசிரியரும், விமர்சகருமாவார். அவர் அடிகாவோடு நிகழ்த்திய பேட்டியின் சில முக்கியமான பகுதிகள் இங்கே. எந்த மொழி கவிஞனுக்கும் ஆர்வமூட்டுவதான பார்வையை யு.ஆர். மற்றும் அடிகா வெளிப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

யு. ஆர்: உங்கள் இளம்பருவத்து நினைவுகளையும், அனுபவங்களையும் அடிப்படையாகக் கொண்டே உங்கள் பெரும்பாலான கவிதைகளின் வெளிப்பாடுள்ளது. ஏன் அப்படி? கவிதை எழுத உங்களைத் தூண்டிய ஓரிரு சமபவங்களைச் சொல்ல இயலுமா?

அடிகா: உங்களுடைய கேள்விக்கான பதில் சுலபமானதில்லை. ஆனால் அந்த பதிலைத் தேடுவதும் பொருத்தமானதுதான். ஒரு குழந்தையின் ஆசையான பார்வைக்கு முன்னால் உலகத்திலிருக்கும் எல்லாமும் புதியதாகவும், மலர்ச்சியானதாகவுமிருக்கும். குழந்தையின் மனம் மெழுகு பந்து போன்றது. பார்த்த அனுபவங்கள் கண்ணுக்குத் தெரியாத வகையில் அதில் பதிவாகிவிடும். அவை பின்னாளில் சரியான நேரத்தில் வெளிப்படும். இது எல்லா மனித உயிர்களுக்கும் பொருந்தும். இளம்பருவத்தின் அனுபவ தொகுப்புகள் யாருடைய [கவிஞன்] மனதிலும் புதிய கோணத்தை கற்பனைகளோடு உருவாக்கும். இந்த அனுபவங்களும், கற்பனைகளும் சாதாரண கருத்து என்பதை மீறி காலவெளி கடந்தவையாகின்ற அந்த உணர்வில் வெளியானவைதான் என்னுடைய சில சிறந்த கவிதைகள். இளம்பருவ அனுபவங்களைக் குறைவாகவோ அல்லது கூடுதலாகவோ மதிப்பீடு செய்வதென்பது சிறிது கடினமானதுதான். இப்போது அந்த நாட்களை நான் நினைக்கும்பொழுது உடனடியாக கேட்க முடிவது- காக்கையின் அலகில் சிக்கிக் கொண்டு தப்பிக்கப் போராடும் தவளையின் குரல்தான். அந்த தவளையைக் காப்பாற்றத் தவறிவிட்ட வேதனையில் நெஞ்சு துடித்ததை கேட்க முடிகிறது. மழைக்குப் பின்னால், சம்பிரதாயம் போல வீட்டின் மிக அருகிலிருந்த குளத்தில் நூற்றுக்கணக்கான தவளைகள் குரல் கொடுத்ததைப் பார்த்தும், கேட்டும் கழிந்த, வளர்ந்த நாட்கள்… இது போல பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். எதுவும் முக்கியமானதோ, முக்கியமற்றதோ இல்லை. ஒவ்வொரு சம்பவமும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் எனக்கு முக்கியமானதாகத் தெரிந்திருக்கிறது.

யு.ஆர் : உங்களின் தொடக்க கால கவிதைகளில் நகரக் குறியீடும், பிற்கால கவிதைகளில் கிராமம்சார் வெளிப்பாடும் உள்ளது போல தெரிகிறதே! இதற்கு காரணம் உங்களின் கிராமம் சார்ந்த இளம்பருவத் தாக்கம் எனலாமா? ? மொழித் தடை [கன்னடம்] என்பதற்கு இதில் பங்குண்டா?

அடிகா: இந்தியச் சுதந்திர காலகட்டத்தில் நாங்கள் [கவிஞர்கள் மற்றும் படைப்பாளிகள்] உடனடி கடந்த காலவெளிப்பாட்டிற்கு முதன்மை தந்தது உண்மைதான். நாங்கள் நகர்ப்புற குறியீட்டுத் தளைகளிலிருந்து தப்பிக்க முயன்றோம். என் தொடக்க காலக் கவிதைகளில் கவனக் குறைவாக நான் நகர்ப்புறக் குறியீடுகளைப் பயன்படுத்தியிருக்கிறேன். அன்று மேற்கத்திய நாகரிகம் சார்ந்த ஆங்கிலக் கவிதைகளின் தாக்கம் அதிகமிருந்தது என்பதையும் நான் ஒப்புக் கொண்டாக வேண்டும். எப்படியிருப்பினும், கவிதை எழுதுவதென்பது ஒருவரின் வாழ்வுச் சூழல் என்பதை மட்டும் உள்ளடக்கியதில்லை. இலக்கிய உணர்வுநிலை என்பது வாழ்க்கையின் பன்முகத்தன்மையை அறிவதும், அடையாளம் காட்டுவதும் மட்டுமின்றி, மாறுபட்ட ,உயர்வான அகம்சார்ந்த அனுபவங்களின் தேடலுமாகிறது.

யு.ஆர்: மக்கள் ஏற்கும் முறையில் , அணுகுவதற்கு எளிதான வகையில் கவிதைகள் எழுத வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

அடிகா: நீங்கள் மக்கள் என்று சொல்லும் போது உடனடியாக எழும் கேள்வி ’எந்த மக்கள்’ என்பதுதான் . எந்த கலையும் எவருக்கும் எளிமையானதி்ல்லை. பொது ஜனங்களை விட்டுவிடுவோம். படித்தவர்கள், அறிவாளிகள் என்று நாம் சொல்பவர்களில் பலர் கலையின் மீது அவ்வளவாக ஈடுபாடு இல்லாதவர்களாகவோ அல்லது கலையுணர்வு அற்றவர்களாகவோ இருப்பதை நாம் பார்க்கவில்லையா? கவிதைகளில் வெளிப்படும் எளிய அனுபவங்கள் எளிமைத் தன்மையை காட்சிப்படுத்துவது முக்கியமானது. ஆனால் அதே நேரத்தில் மிகச் சிக்கலான அனுபவங்களை வெளிப்படுத்தும்போது, அந்த வெளிப்பாடு அதிநவீனம் சார்ந்த நிலையில் அமைவதும் முக்கியமானதே. அணுகுவதற்கு எளிமையான நிலையில் இருப்பதுதான் கவிதை என்று சொல்வது எப்படித் தவறானதோ அது போலவே புரிந்து கொள்ளக் கடினமாக இருப்பது கவிதை என்று சொல்வதும்- இரண்டும் தவறுதான். ஒலிநயம் என்ற தளையை உடைத்துக் கொண்டு வருவது இலக்கியத்திற்கு மிக அவசியமானது. வடிவத்தை ஆழமாக புரிந்து கொண்டவருக்கு அது சாத்தியமாகிறது. தளையை உடைப்பதென்பது ’கட்டுத் தளர்வான செய்யுளை ’ உருவாக்கும் தன்மையல்ல. புதிய வடிவில் நம்மைத் தயார் செய்து கொள்ள நாம் ஓர் இறுக்கமான வடிவத்தை உடைத்து இன்னொன்றை உருவாக்குகிறோம் அவ்வளவுதான். இன்றைய சூழலில் நாம்- கவிஞர்கள் மக்கள் விரும்பும் படைப்புகளைத் தரும் வகையிலான பொறுப்பிலிருக்கிறோம்.

நன்றி :உதயவாணி – கன்னடம் தீபாவளிச் சிறப்பிதழ் மூலம் : கோபாலகிருஷ்ண அடிகா [1918—1992] ஆங்கிலம் : சி.பி.ரவிகுமார் தமிழில் : தி.இரா.மீனா


விமர்சகர்

நான் ஏறிய உயரத்திற்கு நிழல்போல நீயும் ஏறினாய்,
தாழ்வு ஆழங்களில் நான் குதித்து நகர்ந்தேன்,
உன் சிறகுகளை என்னுடைய சிறகுகளோடு உராய்ந்தபடி.
நான் பறக்கும் தொடுவானத்தில் நீயும் பறக்கிறாய்.
என்னைப் போல புதிய எல்லைகளைத் தேடுகிறாய் ;
இன்னமும் நீ தனியாகவே நிற்கிறாய் ,
தீண்டப்படாமல், உன்னைப் பரத்தியபடி,
மேலே, கீழே , சுற்றி வானத்தை ஊடுருவியபடி
நிலத்தைத் துளையிட்டபடி.

தலையிலிருந்து கால்வரை நான் என்னைத் திறந்து கொண்டேன்.
உள்ளிடத்தை உப்பால் நிரப்பினேன்,

காயங்களைத் ஆற்றிக்கொண்டேன்,
நிலத்தடிக்குப் போய் காட்டேரியானேன்,
மேலே வந்து சூரியனை நோக்கிக் குதித்து ,
சிறகுகளை எரித்துக் கொண்டேன்,
மண்ணில் விழுந்தேன்,
அந்த இடத்தைச் சுற்றி குகை அமைத்துக்கொண்டேன்,
அந்தக் குகையின் கும்மிருட்டானேன்,
பதினான்கு வருடங்கள் போராடினேன், கசந்து போனேன்
பழுத்து, நெருப்பைப் போல வெடித்தேன்,
சிறகுகள் மீண்டும் கிடைத்தது,
காணும் சிறகாக ஒன்றும், காணாததாக மற்றொன்றும்.
இசைவானவனாக மாறிக் கொண்டிருந்தேன்.
ஸ்தூலத்திலிருந்து சுருக்கத்திற்கு,
சுருக்கத்திலிரு!ந்து உண்மைக்கு ––இவை எல்லாமும்
உன்னாலும் பார்க்கப்பட்டிருக்கிறது,
என்றாலும் நிழலைப் போல
இன்னமும் நீ முழுமையாக , இடையீடின்றி…

நீ மனக்கண்ணில் எழுகிறாய்; நீ வெளியே இல்லை,
ஆனால் எனக்குள் இருக்கிறாய்;
சோதித்து ,அளந்து, எடைபோட்டு, சரிபார்த்து—
இவையெல்லாம் உன் பணிகள்.
நான் உறங்கும் போது ஊசியால் குத்தினாய்
எனக்குள் வீங்கியிருந்த தேவையற்ற
காற்றை வெளியேற்றினாய்.
நீ உள்ளிருக்கும் நிழலா? அல்லது,
சித்ரகுப்தனின் ஒரு தூதனா?
உணர்ச்சியுள்ள எந்த விலங்கும் செய்ய விரும்புகிற
அலைந்து திரிதலுக்கு நீ என்னை அனுமதிக்கவில்லை.

நீ என்னை இரங்கலுக்குட்படுத்தினாய், இரங்கலால் என்னை எரித்தாய்,
சரி ,தவறு என்ற சக்கரத்தில் என்னைப் பிடித்துக் கொண்டாய்
என்னை அவமதித்து,தெருக்களில் இழுத்துச் சென்று கொன்றாய்,
கொன்றதன் மூலம் எனக்குப் புத்துணர்ச்சி தந்தாய்,
நீ , ஒரு சனி, ஒரு அட்டைப் பூச்சி,
இருப்பினும் ஒரு சினேகிதன் ,என் ஆசான்.

உன் கண்கள்

உன் கண்கள் . அவை வித்தியாசமானவை, உன் கண்கள் !
அவைகளின் தங்க இழையில் என்னிதயம் சிக்கிக் கிடக்கிறது.
அவற்றின் நீலவானில் என்நெஞ்சு பறக்கிறது.
பனியின் வெண்மைக்கிடையில்
ஒளிரும் நீலக்கற்களா அவை ?
அல்லது வெண்தாமரையின் கருவறையிலிருந்து
எட்டிப் பார்க்கும் ஒரிரு குழந்தை தேனீக்களா?
உன் இதயக் கடைசலிலிருந்து தெறிக்கும் திவலைகளா?
ஒவ்வொன்றிலும் இத்தனை காதலை நிரப்பிக் கொண்டும்
எப்படி அவைகளால் இவ்வளவு பேசமுடிகிறது?

உன் கண்கள் .அவை வித்தியாசமானவை, உன் கண்கள் !
அவற்றின் நினைவுகளில் மூழ்கி
என் இதயம் தனிப் பயணியாகிறது

என் செந்தாமரை

வழிப்போக்கர்களுக்காக, பிரகாசமாக செந்தாமரை
இன்று மலர்ந்திருக்கிறது என்ன நறுமண விருந்து !
காற்று, தேனீக்கள், அல்லது மெலிதான திவலை
விருந்திற்கு அழைப்பு வேண்டுமா, என்ன?

பொன் கதிர்களால் கிச்சுகிச்சு மூட்டப்பட்டு
தண்ணீர் களிப்புடன் தெறித்துக் கொள்கிறது
எத்தனை வழிகளில் நான் இவற்றைக் காதலிக்க முடியும்?
தேனீ சுறுசுறுப்பாக வழிகளைக் கணக்கிடுகிறது….
தாமரை நாணுகிறது:
இதழ்கள் கருஞ்சிவப்பாகின்றன.
கவனி ! அவனுடைய ஏழு குதிரைகள் பூட்டியதேர்
கிழக்கு வானத்தில் ஊடுருவுகிறது..
அவனுடைய ஒவ்வொரு லட்சக் கணக்கான கைகளிலும்
சிக்கலான காதலின் வலைப் பின்னலைச் சுமக்கிறான்.
அந்தத் தாமரை மகிழ்வுக்குள்ளானது.
தேனீக்களின் ரீங்காரம் தேய்ந்தது;
அது எப்படியோ வெளிறிப் போனது

தன்னைச் சுற்றியுள்ள தேனீக்களை அவள் புறக்கணிக்கிறாள்
என் செந்தாமரை கதிரவனுக்காகக் காத்திருக்கிறாள்,
நாளைய கனவு கதிரவனின் உருவமாகுமா?
———————–

நோய்க்கு மருந்து கொண்கண் தேரே

வளவ துரையன்

அம்மூவனார் பாடியுள்ள ஐங்குறுநூற்றின் மருதத்திணைப் பாடல்களில் முதல் பத்துப் பாடல்கள் கொண்ட தொகுதி ”தாய்க்குரைத்த பத்து” எனும் பெயரைப் பெற்றுள்ளது. இப்பாடல்கள் அனைத்துமே “அன்னை வாழி!” என்றுதான் தொடங்குகின்றன. மேலும் எல்லாப் பாடல்களும் தோழி கூற்றாக அமைந்துள்ளன. அவை செவிலித் தாய்க்குத் தோழி உரைப்பவனாக அமைந்துள்ளன.

தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் கண்டு மனம் பறிகொடுக்கின்றனர். தனிமையில் கலந்து பழகுகின்றனர். பின்னர் அவன் அவளை மணம்புரிய வேண்டிப் பொருள் ஈட்டுவதற்காகப் பிரிந்து செல்கிறான். சங்க காலத்தில் ஆடவர் பொருள் கொடுத்துத்தான் மகளிரை மணம் செய்து கொள்ளவேண்டும் என்னும் நிலை இருந்ததை அறிய முடிகிறது. பொருள் ஈட்டிய அத்தலைவன் தேடிச் சேர்த்த பொருளுடன் தேரில் வருகிறான்.

தலைவன் சென்றபின் அவன் பிரிவால் தலைவி வாடுகிறாள். அவள் கண்களில் பசலை நோய் படர்கிறது. அவளின் நிலை கண்டு செவிலித் தாய் மனம் வருந்துகிறாள். அப்பொழுது தலைவியின் தோழி செவிலியிடம் கூறுகிறாள். “அன்னையே வாழ்வாயாக! உன் மகளின் கண்கள் நெய்தல் மலருக்கு நிகரானவை. தலைவன் பிரிவால் அக்கண்களில் இப்பொழுது பசலை நோய் படர்ந்துள்ளது. அந்நோய்க்கு மருந்து தலைவனின் வருகைதான். அதோ பார்! பசலை நோய்க்கு மருந்தாக நெய்தல் நிலத் தலைவனாகிய கொண்கணின் தேர் நீண்டு வளரும் அடும்பங்கொடியை அறுத்துக் கொண்டு வருகிறது.” கொண்கண் என்பது நெய்தல் நிலத் தலைவனைக் குறிப்பதாகும். கொடியை அறுத்துக் கொண்டு வருவது தேரின் விரைவைக் காட்டுவதாகும். தாய்க்குரைத்த பத்தின் முதல் பாடல் இது:

  ”அன்னை, வாழி! வேண்டு அன்னை! உதுக்காண்
   ஏர்கொடிப் பாசடும்பு பரிய ஊர்பு இழிபு
  நெய்தல் மயக்கி வந்தன்று, நின்மகள்
  பூப்போல் உண்கண் மரீஇய 
  நோய்க்கு மருந்துஆகிய கொண்கண் தேரே”

தலைவன் பொருள் தேடிக் கொண்டுவந்து விட்டான். திருமணம் நடக்க இருக்கிறது. அதனால் தோழி மிகவும் மகிழ்ச்சி அடைகிறாள். தலைவனும் தலைவியும் ஒருவர்க்கொருவர் மிகவும் பொருத்தமாக இருப்பதைப் பார்த்து செவிலித் தாய்க்குக் காட்டி உரைப்பதாக இப்பத்தின் மூன்றாம் பாடல் இருக்கிறது.

"அன்னை வாழி! வேண்டுஅன்னை புன்னையொடு
ஞாழல் பூக்கும் தண்ணம் துறைவன்
இவட்குஅமைந்த தனனால் தானே;
தனக்குஅமைந் தன்றுஇவள் மாமைக் கவினே”"


”அன்னையே! புன்னையும், ஞாழலும் மலர்கின்ற குளிர்ச்சி பொருந்திய நீர்த்துறைகளை உடைய நெய்தல் நிலத்தலைவன் அவன். அவன் இவளுக்காகவே அமைந்துள்ளான். அதேபோல இவளது அழகும் மாந்தளிர் மேனியும் அவனுக்காகவே அமைந்துள்ளது” என்பது பாடலின் பொருளாகும். புன்னை, ஞாழல் போன்ற நெய்தல் நிலத்தாவரங்கள் இப்பாடலில் காணப்படுகின்றன.

இப்பொழுது தலைவன் வந்துவிட்டான். தலைவி மிகவும் மகிழ்ச்சி அடைகிறாள். அவள் உடலில் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன. அழகு கூடுகிறது. தலைவியின் நெற்றி பொன்னை விட மிளிர்கிறது அதைக் காட்டிச் செவிலித்தாய் தோழியிடம் கேட்டதற்கு அவள் விடை கூறுவது போல ஐந்தாம் பாடல் அமைந்துள்ளது.

  ”அன்னை, வாழி! வேண்டுஅன்னை! முழங்குகடல்
  திரைதரு முத்தம் வெண்மணல் இமைக்கும்
  தண்ணம் துறைவன் வந்தெனப்
  பொன்னினும் சிவந்தன்று; கண்டிசின் நுதலே”

இப்பத்தின் ஏழாம் பாடலும் தலைவனின் பிரிவால் தலைவி வாடுவதைக் காட்டுகிறது. அவள் மெலிந்து விட்டாள். நெற்றி பசந்து விட்டது. அதனால் அழகு குறைந்து விட்டது. அவள் நெய்தலில் இருப்பதால் குளிர்ச்சி பொருந்தியக் கடலலையின் ஓசை கேட்டுக்கொண்டே இருக்கிறது. அந்த ஓசை காதில் விழும் போதெல்லாம் அது தன் தலைவன் வரும் தேரின் ஒலியோ என்றெண்ணி அவள் தூங்காதிருக்கிறாள். இதைச் சொல்லும் தோழி, “நோகோ யானே” என்கிறாள். அதாவது நானும் வருந்துகிறேன் என்றுரைக்கிறாள்.

  ”அன்னை, வாழி! வேண்டுஅன்னை! என்தோழி
  சுடர்நுதல் பசப்பச் சாஅய், படர்மெலிந்து,
  தண்கடல் படுதிரை கேட்டொறும்,
  துஞ்சாள் ஆகுதல் நோகோ யானே’

ஒன்பதாம் பாடல் ஒரு புதுவகையானக் காட்சியைக் காட்டுகிறது. தலைவியை மணம் புரிய வேண்டி பொருள் தேடி வரச்செல்கிறான் தலைவன். சென்றவன் இன்னும் திரும்பவில்லை. நெடுநாள்களாகின்றன. வருவானா, மாட்டானா எனச் செவிலித்தாய் ஐயுறுகிறாள். அவன் பிரிந்து செல்லும் காலத்து என்ன சொல்லிச் சென்றான் என செவிலித் தோழியிடம் கேட்கிறாள். அதற்குத் தோழி தலைவியின் நிலையில் நின்றே விடை கூறுவதாக அமைந்துள்ளது இப்பாடல்:

  ”அன்னை, வாழி! வேண்டுஅன்னை! நெய்தல்
  நீர்ப்படர் தூம்பின் பூக்கெழு துறைவன்
  எம்தோள் துறந்த காலை எவன்கொல்
  பல்நாள் வரும் அவன்அளித்த பொழுதே?”

”அன்னையே, நான் சொல்வதைக் கேட்பாயாக; நீரில் வாழும் உள் துளைகள் உடைய நெய்தல் மலர்கள் நெருங்கி வளர்ந்துள்ள நீர்த்துறைகளைக் கொண்டவன் எம் தலைவன்; அவனுடன் நாங்கள் மகிழ்ந்திருந்தபொழுது, அவன் திருமணம் செய்துகொள்வதாகக் கூறினான். அந்த வாக்குறுதிகள் இப்பொழுதும் எம் நினைவில் வந்துவந்து நிற்கின்றன” என்பது பாடலின் பொருளாகும்.

நெய்தல் நெருங்கி மலர்ந்துள்ளது அவன் தலைவிபால் கொண்டுள்ள அன்பின் நெருக்கத்தைக் காட்டுவதாகும். நீரிலேயே அவை தங்கி வளர்வதால் அவனும் இவள் நினைவிலேயே இருப்பான்; எனவே விரைவில் வந்துவிடுவான் எனக் கூறுவது போல அமைந்திருப்பதாகும்.

தோழன், தோழி போன்றோர் அகத்துறைப் பாடல்களில் முக்கியமான பங்கை வகிக்கின்றனர். தலைவனையும் தலைவியையும் சேர்த்து வைப்பதிலும் அவர்கள் ஊடல்கள் கொண்ட காலத்து அந்த ஊடலைத் தீர்ப்பதிலும் அவர்கள் பெரும்பங்கு வகிக்கின்றனர். இந்தப் பத்துப் பாடல்களிலும் தலைவியின் திருமணத்தின் பொருட்டுத் தோழி ஆற்றும் செயல்பாட்டை அவள் கூற்றின் வழி ஐங்குறுநூறு தெரியப்படுத்துகிறது எனலாம்.

சொல் ஒளிர் வெளி

பானுமதி ந

திருமதி. ச. அனுக்ரஹாவின் வீடும் வெளியும் தொகுப்பினை அமெசான்- கிண்டில் பதிப்பில் படித்தேன். கவிதைகளும், கதைகளுமான இதில் அவரது ஓவியத் திறமையும் வெளியாகியுள்ளது. ஈழத் தமிழ் எழுத்தாளர் திரு அ. முத்துலிங்கம் தன் முன்னுரையில், இப்படைப்பின் சிருஷ்டி கர்த்தாவின் கடித வாக்கியங்களே கவிதை போல இருப்பதாகச் சொல்கிறார். நுண்ணிய கவனிப்புகள், புரிதல்கள் கொண்ட எழுத்தில் உண்மை ஒளி வீசுகிறது என்பது அவரது அவதானிப்பு.

மாதத்தில் ஒரு நாள் தான் முழு நிலவு என்று தன் செல்ல வருத்தத்தைப் பதிவு செய்யும் சொல்வனம் இணைய இதழின் ஆசிரியர் திரு. மைத்ரேயன், இந்தத் தொகுப்பின் பரிமாணங்களை தன் அணிந்துரையில் காட்டுகிறார். கண்ணதாசனின் ஒரு பாடல் ‘அனுபவம்’ என்பதைப் பற்றி பேசுகிறது. கடவுள்- மனிதன் இடையே நடைபெறும் உரையாடலில், அனுபவமே தான்தான் என்று கடவுள் சொல்கிறார். தன் கூர்மையான பார்வை வழியே அனுக்ரஹா, இந்த உலகை, அறிவிலும் உணர்விலும் பதித்து, அந்த அனுபவத்தை கவிதைகளாகவும் கதைகளாகவும் தந்துள்ளார். நிதானித்து, கவனம் செலுத்தி, ஆழ்ந்து படைத்து, அதை நுட்பமாகச் செதுக்கியுள்ளார். இவரது பார்வைக் கோணங்கள், சொல் உணர்த்தும் பொருளாக, இரண்டும் இடைவெளியேயற்றுத் தரும் உணர்வாக பரிமளிக்கிறது.

இதில் நான்கு பகுதிகள் இருக்கின்றன. முதல் பகுதியில் (வீடும் வெளியும்) 11 கவிதைகள், 2 சிறுகதைகள், இரண்டாம் பகுதியில் (நகரமும் நானும்) 9 கவிதைகள், ஒரு சிறுகதை, மூன்றாம் பகுதியில் (அவர்களும் நானும்) 9 கவிதைகள், இரு சிறுகதைகள், நான்காம் பகுதியில் (மழையும் மற்றவையும்) 12 கவிதைகள், ஒரு சிறுகதை என இடம் பெற்றிருக்கின்றன. இந்த அமைப்பில் காலம், வளர்ச்சி, யதார்த்தம், போன்றவைகள் சீராக நடைபயில்கின்றன. தன்னிலை, பிறருடன் தானும் என்னும் நிலை, தரையில் பதியும் பாதங்களெனும் உணர்வு நிலை, காலம், மழை, மலை, இயற்கை இவை தரும் ஆழ் நிலை எனக் கவிதைகளும், கதைகளும் ஒத்திசைந்த ஸ்வரக் கோர்வையாக இசைக்கின்றன.

வெளியில் வீட்டைச் சுமந்து அலைகிறோம்; வீட்டிலோ, தனிமையில் நம் மனம் வெளியில் சென்று விடுகிறது. ஆனால், நமக்கெனக் காத்திருக்கும் வீடு. தேவதேவன் மரத்தின் வீடு என்ற கவிதையில் கேட்பார்: ‘யார் சொன்னது மரம் தனக்கோர் வீடு கட்டிக் கொள்ளவில்லையென்று? தனது இலைகளாலும், கிளைகளாலும், கொம்புகளின் அற்புத அமைப்புகளாலும், தனக்குள்ளே மரம் தனக்கோர் வீடு கட்டிக் கொண்டுள்ளது.’ எழுத நினைக்கும் போதெல்லாம், அனைத்தையும் நகர்த்தி நகர்த்தி ஒழுங்குபடுத்துகையில் தானுமே நகர்ந்து கொண்டிருப்பதை வியக்கிறார் கவிஞர். இன்று மெல்ல மெல்ல நேற்றாவது அனுபவச் சேகரிப்பு; அது பரணில், தூசி படிந்து உள்ள நேற்றோடு இன்றும் போய் சேரும் கால விளையாட்டு.

நிற்கத் தரைகளற்ற வானம், மற்றொரு கவிதையில் விளக்கணைத்து காத்திருக்கிறது. மேலும், அந்தத் தரைகளற்ற அனைத்து வானங்களிலும் இவரது மொட்டை மாடி காணக்கிடைக்கிறது. வளர்வதின் மிகப் பெரிய அறிதல் என்பதே மாற்று உலகம் இல்லையென்பது தானோ? நகரத்தின் ரேகைகளின் ஒரு சந்திப்பில் மூன்றாம் மாடி அறையைப் பூட்டி மீள் வந்து திறக்கையில் கதவில் சிக்கிய மிதியடியாய் வாசல் வரை வரும் உலகம்.

இவரது கவிதையில் காலையில் ஓடும் காலத்தை கிலுகிலுப்பையில் சலங்கையாக கவி மனம் இருந்தால் கேட்கலாம். தேவதச்சன் சொல்வார் ‘காற்று ஒரு போதும் ஆடாத மரத்தைப் பார்த்ததில்லை’ என்று. அவளிருந்த போது அவளுடன் செல்லும் சரிந்து நீளும் அந்தச் சாலையில் திடீரென உணரும் இட மாற்றம் வலியைக் கடத்துகிறது. சிலந்திக்கு மட்டுமே தெரியும் யாரும் தங்கள் வீட்டை மொத்தமாய்க் காலி செய்ய முடியாதென்று என்று பேசும் இந்திரனின் கவிதை நினைவிற்கு வந்தது. சொல் உதிர்ந்து பொருள் கனியும் கணங்களில் பேசும் கவிதைகள் கவிஞன் யாருடன் பேசுவான் எனக் கேட்டு பதில் சொல்கிறது. கடந்து விட்ட இடங்கள் மீண்டும் வந்து இணைகின்றன. காட்சி மறைவும் நடக்கிறது. பூமியின் எல்லையில் தூங்கும் மலை முகடுகள் மூன்று ஜன்னல்களாகப் பிரிந்து, ப்ளாஸ்டிக் தொட்டியிலுள்ள ஆலமரத்தில் நிலைப் படுகிறது.

சுவர்களெல்லாம் வேர் விரித்து வளர்ந்து கொண்டிருக்கும் போதி மழையை இவர் காட்டும்போது சிலிர்க்கிறது. முடியாக்காரியங்களுக்கென ஒதுக்கப்பட்ட கனவுகளில் துவைக்க நினைத்து நனைத்து பின்னர் கனவுள்ளே உலரப் போடுகையில் பெய்கின்றது மழை. ஆமாம், மழை சுத்தப்படுத்துகிறதா, சுற்றி இறுக்குகிறதா?

இதைப் போன்றதொரு சிந்தனையைக் கொண்டு வருகிறது இவர் சொல்லும் ஒரு வாக்கியம் : ‘இன்பத்தை அறியும் உலகத்தின் தொலைவு ஒவ்வொருவரின் வாழ் நாள் தூரம்.’ மரணம் தரும் தற்காலிக விடுதலை என நான் எண்ணுகிறேன். மரணம் முற்றுப்புள்ளி என்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால், தூக்கிச் சுமந்த வாழ்வை அந்தச் சுமைதாங்கியில் இறக்கி வைக்கலாமல்லவா? தின மணியான அந்த ஆதவனின் நிலையிருப்பு இவரை இப்படிப் பாட வைத்திருக்கிறது-‘மண்ணிலிருந்து வராத கிழட்டுத் தக்காளி எத்தனை காலைகளாக, செஞ்சிவப்பாக..’

மொத்தம் ஆறு சிறுகதைகள் அடங்கியுள்ள இந்தத் தொகுப்பில் கவித்துவம் நிரம்பிய வரிகள் மின்னல் கீற்றுகளென பளீரிடுகின்றன. தன்னைத்தானே அணைத்துக் கொண்டு மின் விளக்குக் கம்பத்தின் கீழ் படுத்திருக்கும் நாய் ஒரு காட்சியாக விடுதியில் தங்கியிருக்கும் ஒரு பெண்ணின் பார்வையில் வருகிறது. தொழில் நுட்பப் பூங்காவின் வாயிலில் ஒரு சிமென்ட் மரம்- அந்தத் தொழில் நுட்பப் பூங்காவோ இரவையே வெட்டிச் செகுத்துவது போலத் தென்படுகிறது. சாயும் காலத்தின் பூடக வரிகள் இவை: ‘சட்டென ஏதோ ஒன்று நினைவிற்கு வந்து மறைந்தது போல.’ அத்தனை கதைகளிலும் சிறப்பான ஒன்றாக நான் நினைப்பது ‘ராஜேஷ் கன்னா’ தான். ஐந்தாம் வகுப்பில் படிக்கும் ஒரு சிறுமி, தான் வகுப்புத் தலைவி எனப் பெருமிதம் கொள்வது, தன்னை சட்டை செய்யாத சந்திராவுடன் சண்டைக்குப் போவது, அதற்கான சாக்குகள் தேடுவது, அது மெல்ல மெல்ல ராஜேஷ் கன்னா என்ற பையனிடம் கற்பனைக் குரோதமாக வளர்வது, யாருடனும் பேசாத மக்குப் பையனான அவன், யார் பழித்தாலும், அடித்தாலும் புன்சிரிப்புடன் இருக்கும் அவன், இந்தச் சிறுமியுடன் இணக்கமாக விழைவது, இவள் அவனை அடிக்கையில் முதல் முறையாக அவன் வலியை வெளிப்படுத்துவது, அதன் காரணமாக தன் மனக் கோணலை இவள் உணர்வது, அவன் படித்து தன்னை அதிகாரம் செய்யும் நிலைக்கு வந்துவிடுவானென்றும், அந்தக் காரணம்பற்றியே தன் மேலாளரின் பெயர் ராஜேஷ் கன்னாவாக இருக்க வேண்டுமென நினைப்பது அனைத்துமே மனித குணங்களின் சிறந்த எடுத்துக்காட்டு.

நிலம் மீது நிலம் மீது நிலம்
கடல் மீது கடல் மீது கடல்

சமீபத்தில் இவர் எழுதிய ஹைக்கூ கவிதைகளைப் படித்தேன். விரைவில் அவையும் தொகுப்பாக வர வேண்டுமென விழைகிறேன்.

அன்னது ஆகலும் அறியாள்

வளவ. துரையன்

வயலும் வயலைச் சார்ந்த இடங்களும் மருதம் என வகைப் படுத்தப்பட்டது. சங்கப் பாடல்களில் மருத நிலத்தின் இயற்கைக் காட்சிகள் அழகாகப் புனைந்துரைக்கப்பட்டுள்ளன. ஒரு வயலில் தானியங்கள் விளைந்து முற்றி இருக்கின்றன. அவற்றைத் தின்ன வரும் பறவைகளைப் பறைகொட்டி விரட்டுகின்றனர். அவர்களை “அரிப்பரை வினைஞர்” எனப் பாடல் காட்டுகிறது. அந்த வயலில் குருகுகள் நிறைய மேய்கின்றன. அக்குருகுகள் அவ்வயலில் இருக்கும் ஆமைகளைப் பிடித்துத் தின்கின்றன. அந்த ஆமைகளின் வெண்மையான தசையை முழுதும் உண்ணாமல் மிச்சம் வைத்துவிட்டுப் போகின்றன. பறை கொட்டுபவர்கள் அந்த மிச்சத்தைத் தங்கள் உணவாக உண்கின்றனர்.

இக்காட்சியைச் சொல்லிப் பரத்தை தலைவனின் பாங்காயினர் கேட்கக் கூறுகிறாள். “மிகுதியான அழகான மலர்களால் பொய்கை அழகு பெறும் வளங்கொண்ட நாடன் ஊரனே! நீ என்னை விரும்புகிறேன் என்று உரைக்கிறாய்; இதைக் கேட்டால் உன் மனைவி மிகவும் வருந்துவாள்”

குருகு உண்ட மிச்சத்தை உண்ணும் பறை கொட்டுபவர் போல தலைவன் தன் மனைவியை விட்டுவிட்டுப் பரத்தையிடம் வந்து இன்பம் துய்க்கிறான் என்பது உள்ளுறைப் பொருளாகும். ஐங்குறுநூறில் உள்ள மருதத் திணையில் புலவி விராய பத்தின் முதல் பாடலில் இதைக் காணமுடிகிறது. புலவி என்பது ஊடலைக் குறிக்கும். இப்பகுதியின் பாடல்கள் எல்லாம் ஊடலின் பொருட்டு எழுந்தவையாகும். தலைவி, தோழி, மற்றும் பரத்தை ஆகியோரின் கூற்றுகளாக அமைந்துள்ளன. இப்பாடல்கள் தாங்களே கண்டவற்றை உரைப்பனவாகவும், தூது வருபவர்களிடம் மறுப்புரை கூறுவதாகவும் அமைந்துள்ளதால் இப்பகுதி ”புலவி விராய பத்து” என்று பெயர் பெற்றுள்ளது. பாடல் இதோ:

”குருகுஉடைத்து உண்ட வெள்அகட்டு யாமை
அரிப்பறை வினைஞர் அல்குமிசைக் கூட்டும்,
மலர்அணி வாயில் பொய்கை, ஊரநீ
என்னை ‘நயந்தனென்’ என்றிநின்
மனையோள் கேட்கின், வருந்துவள் பெரிதே”.

தலைவி கூற்றாக வரும் ஒரு பாடலைப் பார்ப்போம். இப்பாடல் தலைவி தலைவனிடம் சினம் கொண்டு ஊடி உரைப்பது போல் உள்ளது. அவள் தலைவனிடம் அனைப்பற்றி நேரடியாகவே குற்றம் கூறுகிறாள். “நீ என்னை மணந்துகொண்ட கணவன்; ஆனால் நீ என்மீது அன்பு செலுத்தவில்லை” என்கிறாள். பாடலில், “மணந்தனை அருளாய் ஆயினும்” எனும் சொற்கள் இதைக் காட்டுகின்றன. மேலும் அவள் பொய்க்கோபமாக, “நீ குளிர்ச்சியாக நீர்த்துறைகள் உள்ள உன்னுடைய ஊருக்குச் செல்வாயாக. அங்கே வாழும் பரத்தையர்களிடம் சேர்ந்து அவர்களும் உன் பெண்டிரே என ஊரார் மொழியும் அளவிற்கு என்னை விட்டுப் பிரிந்து செல்வாயாக” எனக் கூறுகிறாள்.

பரத்தையர் பற்றிப் பொறாமையுடன் சினந்து கூறும்போது கூடத் தலைவி, அவர்களை, “ஒண்தொடி” என்ற சொல்லால் ஒளி பொருந்திய வளையல்களைப் பூண்டவர்கள் என வருணிக்கும் பாங்கு குறிப்பிடத்தக்கது. மேலும் ”நீ அவர்களைச் சேர்ந்தால் மணந்த தலைவியை விட்டுவிட்டு இவர்களிடம் சேர்ந்திருக்கிறானே” என்று ஊரார் பழிப்பர் என்பதை மறைபொருளாக அவனுக்குத் தெரிவிக்கிறாள். புலவி விராய பத்தின் மூன்றாம் பாடல் இது.

”மணந்தனை அருளாய் ஆயினும், பைபயத்
தணந்தனை ஆகி, உய்ம்மோ நும்ஊர்
ஒண்தொடி முன்கை ஆயமும்
தண்துறை ஊரன் பெண்டுஎனப் படற்கே”

இப்பத்தின் நான்காம் பாடல் தோழி கூற்றாக அமைந்துள்ளது. அக்காலப் பெண்டிர் தம் கூந்தலை ஐந்தாக வகுத்துப் பின்னி இருந்தனர் என இப்பாடலில் உள்ள ஐம்பால் மகளிர்” எனும் சொல் காட்டுகிறது.

”செவியின் கேட்பினும் சொல்இறந்து வெகுள்வோள்,
கண்ணின் காணின், என்ஆ குவள்கொல்
நறுவீ ஐம்பால் மகளிர் ஆடும்
தைஇத் தண்கயம் போல,
பலர்படிந்து உண்ணும்நின் பரத்தை மார்பே?”

பெண்கள் தைத் திங்களில் குளிர்ச்சி பொருந்திய குளங்களில் நீராடும் வழக்கம் இருந்ததையும் இப்பாடல் காட்டுகிறது. மேலும் அக்குளமானது தலைவனின் மார்புக்கு உவமையாகச் சொல்லப்படுகிறது. “பலர் வந்து நீராடும் குளம் போல உன் மார்பு பரத்தையர் வந்து படியும் தன்மை உடையது என ஊரார் பேசுகின்றனர். அதைக் காதால் கேட்டாலே உன் தலைவி சினம் அடைகிறாள். நீ இப்பொழுது பரத்தை இல்லில் தங்கிய குறிகளுடன் வந்திருக்கிறாய்; தலைவி இப்பொழுது உன்னைக் கண்ணால் கண்டால் என்ன ஆவளோ?” எனத் தலைவி கூறுகிறாள்.

அடுத்த பாடலில் தலைவி, தலைவனைப் பார்த்து, “ஊரனே! உன் செயல் சிறுபிள்ளைகள் செய்வதைப் போல இருக்கிறது. இதைக் கண்டு ஊர்ப்பெரியவர்கள் எள்ளி நகையாட மாட்டார்களா?” எனக் கேட்கிறாள். மேலும் உன் ஊரில் சம்பங்கோழி அதன் பெடையோடு இணைந்து வாழ்கிறது என்று கூறி பறவையே அப்படி வாழ்கையில் அது போல நீ இருக்க வேண்டாமா எனக் குறிப்பாகக் கூறுகிறாள். கம்புள் என்பது சம்பங்கோழியைக் குறிக்கும். சம்பங்கோழியைக் கூட வெண்மையான நெற்றி உடையது எனும் பொருளில், “வெண்நுதல்” என வருணிக்கும் பாங்கு குறிப்பிடத்தக்கது.

இதோ ஐந்தாம் பாடல்:

”வெண்நுதல் கம்புள் அரிக்குரல் பேடை
தண்நறும் பழனத்துக் கிளையோடு ஆலும்
மறுஇல் யாணர் மலிகேழ் ஊரநீ
சிறுவரின் இனைய செய்தி;
அகாரோ பெருமநின் கண்டிசி னோரே”

பரத்தை கூற்றாக புலவி விராய பத்தின் எட்டாம் பாடல் விளங்குகிறது.

”வண்துறை நயவரும் வளமலர்ப் பொய்கைத்
தண்துறை ஊரனை, எவ்வை எம்வயின்
வருதல் வேண்டுதும் என்பது
ஒல்லேம் போல்யாம் அதுவேண் டுதுமே.”

”பரத்தையானவள் தன்னிடம் தலைவன் வந்து சேர்வதை விருப்பம் இல்லாதது போலக் காட்டுவாள்; ஆனால் அவள் விரும்பிக் கொண்டிருக்கிறாள்: அதுபோலிருக்கத் தன்னல் இயலாது” எனத் தலைவி கூறுகிறாள். அதைக் கேட்ட பரத்தை ‘ஆமாம்; நாங்கள் விரும்புகின்றோம். ஆனால் அதை வெளியில் சொல்லமாட்டோம். அதற்கு உடன்படாத்து போலக் காட்டி மனத்துள் உடன்படுகின்றோம்” எனக் கூறுகிறாள்.

வண்டானது மலர்விட்டு மலர் சென்று தேன் உண்ணுதலை தலைவன் பரத்தையரிடம் சென்று இன்பம் துய்த்தலுக்கு உவமையாகப் பல பாடல்களும் இது போல் சொல்லி இருக்கின்றன. தலைவன் ஊரில் வண்டுகள் தங்கும் வளமான மலர்கள் உள்ளன என்று இங்கு குறிப்பாக மறைபொருளாகச் சொல்லப்படுகிறது. தலைவியை உறவு முறையாகப் பரத்தை தமக்கை என்றழைக்கிறாள். ’எவ்வை’ எனும் சொல் அதைக் காட்டுகிறது.

இது பத்தாம் பாடல்:

மகிழ்நன் மாண்குணம் வண்டுகொண் டனகொல்?
வண்டின் மாண்குணம் மகிழ்நன்கொண் டான்கொல்?
அன்னது ஆகலும் அறியாள்,
எம்மொடு புலக்கும்அவன் புதல்வன் தாயே”

இப்பாடலில் பரத்தை ’புதல்வனின் தாய்’ எனத் தலைவியைக் காட்டுவதிலிருந்து மணமாகி சில ஆண்டுகள் தலைவியுடன் வாழ்ந்த பின் புதல்வனும் பிறந்தபின்னர் தலைவன் பரத்தை இல் சென்றுள்ளான் எனபது புலனாகிறது. இப்பாடலிலும் பல மலர்களுக்குச் சென்று வரும் வண்டு தலைவனுக்கு உவமையாகக் கூறப்படுகின்றது. தன்னிடமிருந்து தலைவனைப் பரத்தைதான் விலக்குகின்றாள் எனத் தலைவி கூறுவதைக் கேட்ட பரத்தை கூறுவது போல் அமைந்த பாடல் இதுவாகும்.

”வண்டு பல மலர்களிடம் சென்று தேனை உண்ணல் மரபு. தலைவனும் அதே போன்று பல பரத்தையரிடம் சென்று இன்பம் துய்க்கிறான். தலைவன் குணத்தை வண்டுகள் பெற்றனவா? இல்லை வண்டின் குணத்தைத் தலைவன் பெற்றானா என்பது தெரியவில்லை; அப்படி இருக்கத் தலைவனுடன் கலந்து புதல்வனைப் பெற்ற தலைவி எம்மைக் குறை கூறுகிறாளே” என்பது பரத்தை கூற்றாகும்.

சில ஆண்டுகள் பழகியபின்னரும் தலைவனின் குணத்தைத் தலைவி அறியவில்லையே என்பதை மறைமுகமாகக் காட்டவே இந்த இடத்தில் புதல்வனைக் குறிப்பிடுகின்றாள். “அன்னது ஆகலும் அறியாள்” என்ற சொறோடர் இதைத் தெரியப்படுத்துகிறது.

இவ்வாறு இயற்கைக் காட்சிகளைக் காட்டி அவற்றின் வழி தலைவன் மற்றும் பரத்தை போன்றோரின் வாழ்முறைகளையும் ஐங்குறு நூறு காட்டுகிறது எனலாம்.

அரங்கக் கலையின் மைல்கல், ‘மாத்தளையின் ஜீவநதி’

த. நரேஸ் நியூட்டன்

இலங்கையின் அரங்கக் கலையின் முன்னோடிகள் பலரைப் பற்றி நாம் பல ஊடகங்கள் ஊடாகவும் நேரடியாகவும் அறிந்திருக்கிறோம். இவர்களுள் மலையகத்திலிருந்து நாடகக்கலையின் வளர்ச்சிக்கும் தமிழ் திரைப்படத்துறை மற்றும் தொலைக்காட்சி, நாடகத்துறை, போன்றவற்றிற்கும் உரமிட்டவர்களில் மிகவும் பிரபல்யமான ஒருவர் மாத்தளை கார்த்திகேசு என்று அழைக்கப்படுகின்ற கா. கார்த்திகேசு. இவர் படைத்த நாடகங்கள் பல மலையகத்திலும் கொழும்பு போன்ற பகுதிகளிலும் பல தடவைகள் மேடையேற்றப்பட்டு கலை ஆர்வலர்களால் பெரிதும் பாராட்டப்பட்டவையாகும். இவர் அரங்கக் கலைகளுள் நாடகத்திற்கு முக்கியத்துவம் கொடுத்த அதே வேளை எழுத்துத் துறையிலும் தனது தடங்களைப் பதித்து தமிழ் இலக்கியத்துறையின் பங்களிப்பாளர்களுள் பேசப்படுபவராக மிளிர்ந்தார். தமிழ் இலக்கிய எழுத்துத்துறையில் சிறுகதைகள், இலக்கியம் மற்றும் சமயம்சார் கட்டுரைகள் போன்றவற்றை எழுதுவதிலும் நாட்டம் காட்டினார். எல்லாவற்றிற்கும் மேலாக இவர் ஒரு நாடக எழுத்தாளராகவே பெரிதும் நோக்கப்பட்டார்.

தை மாதம் 1ஆம் திகதி 1939ஆம் ஆண்டு இலங்கை மலையகத்தின் பெயர் பெற்ற மாவட்டமாகிய மாத்தளையில் பிறந்தார். இவர் மாத்தளை விஜயா கல்லூரியிலும் கிறீஸ்தவ தேவாலய கல்லூரியிலும் கல்வி பயின்றார். தனது கலைப் பயணத்தை 1958ஆம் ஆண்டில் ஆரம்பித்தவர் இறுதிக்காலம் வரை அப்பயணத்தை வெவ்வேறு வடிவங்களில் தொடர்ந்தார். இதே ஆண்டில் இவர் முதன் முதலில் எழுதிய நாடகம் ‘தீர்ப்பு’ என்பதாகும். இவர் கிறீஸ்தவ தேவாலயக் கல்லூரியில் கல்வி பயின்ற அவரது இளமைக்காலத்திலேயே பல நாடகங்களை எழுதி அவற்றின் பொருட்டு பாராட்டுக்களையும் பரிசுகளையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஒரு காலப்பகுதியில் மலையக மக்களின் மூத்த பரம்பரையினர் அநேகமாக கல்வியறிவு கிடைக்காத தேயிலை தோட்டங்களில் பணியாற்றும் கூலித்தொழிலாளர்களாக பல சவால்களுக்கு மத்தியில் தங்கள் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருந்தனர். கல்வியறிவு குறைவானவர்கள் என்பது மட்டுமன்றி பிராந்திய ரீதியான மற்றும் சமூக ரீதியான பாகுபாடுகளுக்கும் இவர்கள் பெரியளவில் முகம் கொடுத்தார்கள். தங்கள் மத்தியில் இருந்த கல்விசார் குறைபாட்டை தாங்களே நிவர்த்தி செய்ய எத்தனித்து பலர் கல்வி  பெற்றுக் கொள்ளத் தொடங்கினர். இவ்வாறு கல்வியறிவு பெற்றுக் கொண்டவர்களுள் அனேகமானவர்கள் தமது குடும்ப வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றும் நோக்கோடு வேலைவாய்ப்புக்களை தேடி இலங்கையின் பல்வேறு பகுதிகளுக்கும் நகர்ந்த சம்பவங்களும் உண்டு. இவர்களுள் சிலர் தாம் சார்ந்த சமூகத்தின் முன்னேற்றம் மற்றும் மாற்றம் கருதி தாம் வாழ்ந்த பிரதேசத்திலேயே  தங்கி சமூக முன்னேற்ற செயற்பாடுகளில் ஈடுபடத் தொடங்கினார்கள். சமூக பாகுபாடுகளுக்கு முகம்கொடுத்த இவர்களுள் சிலர் அதை சவாலாக எடுத்து தாம் சார்ந்த தோட்டங்களின் பெயர்களை தங்கள் பெயருக்கு முன்னால் அடைமொழியாக வைத்துக்கொண்டு கம்பீரமாக தலை நிமிர்ந்து வலம் வந்த பல ஆளுமைகளை நாம் காணலாம். அவர்களை போன்றோர் அநேகமாக தெரிவு செய்த துறை தான் கலை இலக்கிய துறை. கலை இலக்கியத் துறையில் தமது பங்களிப்பை நிறைவாக செலுத்த முற்பட்டவர்களுக்குள் பெர்குறிப்பிடக்கூடிய ஒருவர் தான் மாத்தளை கார்த்திகேசு. இவர் தனது ஊரின் பெயரையும் தனது பெயரோடு இணைத்துக்கொண்டே கலையுலகில் கால்தடம் பதித்து பிரபலமானார். இதனாலேயே இவரது பெயர் மாத்தளை கார்த்திகேசு என வழங்கப்படலாயிற்று.

‘அவள் ஒரு ஜீவநதி’ என்று ஒரு திரைப்படம் வெளிவந்தமை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். இது 1980ஆம் ஆண்டில் இலங்கையில் வெளிவந்த ஒரு தமிழ் திரைப்படம். இந்த திரைப்படத்தை கலைஞர் மாத்தளை கார்த்திகேசுவே திரைக்கதை வசனம் எழுதி தயாரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்தப்படத்திற்காக இவர் பாடல்கள் சிலவற்றையும் எழுதியதோடு தந்தை பாத்திரமேற்று நடித்திருந்தார். இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை தரவில்லை. அப்படியிருந்தபோதும் அவர் மனம் சோர்ந்துபோகாது தொடர்ந்தும் தனது கலைப்பயணத்தை தொடர்ந்தார். இவர் 25ற்கும் அதிகமான மேடை நாடகங்களை எழுதி அந்த நாடகங்களை தானே முன் நின்று வழிநடத்தி இயக்கி மேடையேற்றினார். இவரது நாடகங்களில் ‘களங்கம்’, ‘போராட்டம்’ மற்றும் ‘ஒரு சக்கரம் சுழல்கிறது’ போற்ற நாடகங்கள் முறையே 1974, 1975 மற்றும் 1976ஆம் ஆண்டுகளில் மேடையேற்றப்பட்டு தேசிய நாடக விழாவில் அநேகரின் பாராட்டைப் பெற்றதோடு பரிசும் பெற்றமை குறிப்பிடத்தக்கது. இவரால் அரங்கேற்றப்பட்ட நாடகங்களுள் ‘காலங்கள் அழுவதில்லை’ என்ற நாடகம் இவரை மிகப்பெரிய அளவில் பிரபல்யப்படுத்திய நாடகமென்றால் அது மிகையாகாது. இந்த நாடகம் யாழ் நகரில் உலகத் தமிழாராட்சி மாநாடு நடைபெற்றபோது தமிழ் தூது தனிநாயகம் அடிகளாரினதும் மற்றும் மாநாட்டில் பங்குபற்றிய பல முக்கியமான இலங்கை மற்றும் இந்திய பிரமுகர்களினதும் முன்நிலையில் மேடையேற்றப்பட்டு அநேகரின் பாராட்டைப்பெற்றமை இங்கு குறிப்பிடப்படவேண்டிய விடயமாகும். இந்த நாடகத்தை நேரடியாக பார்வையிட்டுக்கொண்டிருந்த காலம்சென்ற பேராசிரியர் கைலாசபதி அவர்களின் பாராட்டை நேரடியாக பெற்றதோடு பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் பாராட்டையும் பெற்றது. இந்த நாடகம் 15 தடவைகளுக்கு மேல் நாட்டின் பல பாகங்களிலும் மேடையேற்றப்பட்டு சாதனை புரிந்தது.

திரைப்படத்துறையில் ஏற்பட்ட பொருளாதார இழப்பினால் இவர் சலிப்படைந்து போகமல் அடுத்த கட்டமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பக்கம் தனது நாட்டத்தை காட்டத்தொடங்கினார். அதன் பயனாக ‘காலங்கள் அழுவதில்லை’ என்ற நாடகம் பின்னர் பெயர் மாற்றப்பட்டு ‘காலங்கள்’ என்ற பெயரில் மலைய மக்களின் வாழ்க்கை பின்புலங்களை பிரதிபலிக்கக்கூடிய வகையில் தொலைக்காட்சித் தொடராக உருவாக்கப்பட்டு இலங்கை தொலைக்காட்சியில் தொடர்ச்சியாக ஒளி பரப்பப்பட்டதோடு இலங்கையின் முதலாவது தமிழ் தொலைக்காட்சி நாடகத் தொடர் என்ற பெருமையையும் பெற்றது. இவர் தொலைக்காட்சி ஒளிபரப்பின் பொருட்டு தொலைக்காட்சித் தொடர் நாடகத்தை மட்டுமன்றி மலையகத்தின் மிகப்பிரபலமான ‘காமன்கூத்து’ எனப்படும் மலையக மக்களின் வழக்கமான முறைமையிலமைந்த நாட்டுக்கூத்தையும் தாமே முன்வந்து தயாரித்து வழங்கினார். இவை மட்டுமன்றி ‘குடும்பம் ஒரு கதம்பம்’ என்ற தொலைக்காட்சி நாடகமும் இவரால் தயாரிக்கப்பட்டு தொலைக்காட்சி நிறுவனத்தினால் ஒளிபரப்பப்பட்டது.

இலங்கை மத்திய வங்கியால் நாடாத்தப்பட்ட நாடக விழா ஒன்றில் ‘காலங்கள் அழிவதில்லை’ நாடகத்தினை மேடையேற்றி சிறந்த நாடகம், சிறந்த நாடக ஆசிரியர் மற்றும் சிறந்த நடிப்பு போன்றவற்றுக்கான பரிசையும் தனதாக்கிக்கொண்டார்.

இதைப்போலவே இலங்கையின் திரைப்படக் கூட்டுத்தாபனத்தினால் நடாத்தப்பட்ட ஒரு போட்டியில் இவர் எழுதிய ‘சுட்டும் சுடர்கள்’ என்ற திரைப்படக்கதை பிரதிக்கு இரண்டாவது பரிசைத் தட்டிக்கொண்டமை இவரது கலைப்பயணத்தில் இவர் தாண்டிய மற்றொரு மைல்கல்லாகும். இந்தப் போட்டியில் முதலாவது பரிசை பி. விக்கினேஸ்வரன் அவர்களும் மூன்றாவது பரிசை கே. கே. மதிவாணனும் பெற்றுக்கொண்டனர்.

கலைப்பணிக்காக பல அர்பணிப்புக்களுடன் அயராது உழைத்த இவரது உழைப்பை கவனத்தில் எடுத்த இலங்கை இந்து சமய கலாசார அலுவல்கள் அமைச்சு 1993ஆம் ஆண்டு சாகித்திய விழாவில் இவருக்கு ‘கலா ஜோதி’ என்ற விருதை வழங்கி கெரவித்தது.

இவரது படைப்பாகிய ‘வழி பிறந்தது’ என்ற நாவல் தமிழகத்தின் இளவழகன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. இலங்கை மலையக மக்களின் வாழ்வியல் முறைமைகள், கலாசாரம் மற்றும் பண்பாடு முதலியவற்றை பின்புலமாகக்கொண்டு எழுதப்பட்ட இந்நாவல் முதல் முதலில் இந்த வெளியீட்டகத்தினால் தமிழகத்திலேயே வெளியிடப்பட்டது. இதற்கு எழுத்தாளர் வல்லிக் கண்ணன் அவர்கள் அணிந்துரை வழங்கியிருந்தார். இலங்கை மலையகத் தமிழர்கள் தோட்டத் தொழிலாளர்கள் வாழ்க்கையையும் அவர்களது பிரச்சனைகளையும் உணர்சியோடு தீவிரமாக எடுத்துக் கூறும் படைப்பு ‘வழிபிறந்தது’ நாவல் என வல்லிக்கண்ணன் தனது அணிந்துரையின் தொடக்கத்திலேயே குறிப்பிட்டுள்ளார். மலையகத்திலிருந்து ஏற்கனவே வெளிவந்த ஏனைய படைப்புகளையும் விட இது மிகவும் வித்தியாசமாக யோசித்து புனையப்பட்டுள்ளதாக அவர் மேலும் விவரிக்கிறார்.

மாத்தளை கார்த்திகேசு அவர்கள் இலங்கையின் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையங்கள் பற்றி ஆரம்ப காலங்களிலேயே ஆழமான ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார். அந்தக்கருத்து ஆழமானதென்பதற்கும் அப்பால் உண்மைத் தன்மைகொண்ட ஒரு தீர்க்கதரிசனம் மிகுந்த கருத்தாக தற்கால நிலைமைகளுடன் ஒப்பிட்டுப்பார்க்கையில் எமக்க புலப்படும். அதனை இங்கு காலத்தின் தேவையாகக்கருதி குறிப்பிடுகிறேன். “நம் நாட்டில் தொலைக்காட்சி நாடகங்கள் வளர வேண்டுமானால் வெளி நாட்டிலிருந்து தொலைக்காட்சி நாடகங்கள் தருவிப்பதை நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் இலங்கைத் தமிழ் திரைப்படங்களுக்க ஏற்பட்ட நிலைதான் இலங்கைத் தமிழ் தொலைக்காட்சி நாடகங்களுக்கும் ஏற்படும்” என்ற கருத்தை பதிவு செய்துள்ளார். இக்கருத்து எவ்வளவு தூரம் நிதர்சனமானது என்பது இன்று இலங்கையில் செயற்பட்டுக்கொண்டு இருக்கின்ற தொலைக்காட்சி நிலையங்களின் நிகழ்ச்சிகளை பார்க்கின்றபோது புலப்படும். இந்நிறுவனங்களால் ஒளிபரப்பப்படுகின்ற நிகழ்ச்சிகளில் அநேகமானவை இரவல் தாயின் பிரசவங்களாகவே இருப்பது கவலையளிப்பது மட்டுமன்றி இலங்கைக் கலைஞர்களின் எதிர்காலத்தையும் கேள்விக்குட்படுத்தியுள்ளமை குறிப்பிடக்கூடியது.

இவர் மலையக எழுத்தாளர் மன்றத்தின் இணைச் செயலாளர்களில் ஒருவராகவும் இலங்கை கவின் கலைகள் மன்றத்தின் தலைவராகவும் மற்றும் இந்து சமய கலாசார அமைச்சின் நாடக குழு உறுப்பினராகவும் செயற்பட்டமை இவரது தலைமைத்துவ ஆளுமையை வெளி உலகிற்கு புடம்போட்டு காட்டுகிறது. தமிழ்க் கதைஞர் வட்டத்திலும் அங்கத்துவம் வகித்து சிறந்த கதைகளை தேர்வுசெய்வதில் தனது பூரணமான பங்களிப்பை வழங்கியிருந்தார். இவர் கடந்த பத்து வருடங்களாக ‘தகவம்’ இலக்கிய அமைப்பின் தலைவராகவும் செயற்பட்டு வந்துள்ளார். மாத்தளை தமிழ் பட்டதாரிகள் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட மலையகத்தின் நூல் திரட்டு ஆவணப்படுத்தல் செயற்பாட்டுக்கு மாத்தளையில் அமைந்திருந்த தனது நூலகத்தையும் அக்குழுவினருக்கு பயன்பாட்டுக்கு கொடுத்து பரிபூரணமான பங்களிப்பை வழங்கியிருந்தார்.

அண்மையில் இலங்கையிலிருந்து வெளிவரும் ‘ஞானம்’ சஞ்சிகையின் முகப்பை இவரது புகைப்படமே அலங்கரித்திருந்ததோடு அவர் பற்றிய ஒரு கட்டுரையை திரு. மு. நித்தியானந்தன் அவர்கள் ‘மாத்தளையின் ஜீவநதி’ என்ற தலைப்பில் இந்த சஞ்சிகையில் விரிவாக எழுதியிருந்தார்.

இவர் கொழும்பில் ஜம்பட்டா வீதி, கொச்சிக்கடையில் தனது வசிப்பிடத்தைக்கொண்டிருந்தார். தமிழ் இலக்கிய படைப்புலகத்திற்கு குறிப்பாக மலையக இலக்கிய படைப்பாளிகளுக்கு முன்னுதாரணமாகவும் ஆதர்சமாகவும் திகழ்ந்த ‘மாத்தளையின் ஜீவநதி’ மாத்தளை கார்த்திகேசு கடந்த ஆவணி 6ம் திகதி 2021 அன்று தனது பூவுலக வாழ்வை முடித்துக்கொண்டார். இவர் மறைவுக்கு சிலநாட்களுக்கு முன்புதான் ‘ஞானம்’ சஞ்சிகையில் இவரைப்பற்றிய கட்டுரை வெளிவந்திருந்தமை குறிப்பிடப்படக்கூடியது. இந்த கட்டுரையை இவர் படித்திருந்தால் இவர் ஆற்றிய கலைப்பணிக்கு கிடைத்த மிகப்பெரும் சான்றாகக் கருதி ஆத்ம திருப்தியடைந்திருப்பார் என்றால் அது மிகையாகாது.