விமர்சனம்

வெள்ளைக் கூகைகளின் அடக்கஸ்தலம். – சோ.தர்மனின் ‘பதிமூணாவது மையவாடி’ நாவல் குறித்து எஸ்.ஜெயஸ்ரீ

சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சோ.தர்மன் அவர்களின் சமீபத்திய நாவல், “ பதிமூணாவது மையவாடி”. அட்டைப்படத்தை சற்று நேரம் உற்றுப் பார்த்தாலே, நாவலின் உள்ளடக்கம் புரிந்து விடுவது போல இருக்கிறது. ஒரு கிராமத்து பாலகன், சிறுவனாக தன் கிராமத்தை விட்டு, படிப்பதற்காக வெளியூருக்குச் செல்கிறான். கருத்தமுத்து என்ற அந்தப் பையன் வழியாக ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்த சில நிறுவனத் தில்லுமுல்லுகளை எவ்வித ஒளிவு மறைவுமில்லாமல் தர்மன் எடுத்து வைக்கிறார்.

கிறித்தவ மதம் நம் நாட்டில் பரவத் தொடங்கியது கல்வி வழியாகவும், வயிற்றுப் பசி போக்கும் உணவு வழியாகவும் என்பது காலம் காலமாக சொல்லப்பட்டு வரும், தெரிந்த விஷயம். பள்ளிகளுக்கு ஃபாதர் ஸ்கூல், “சிஸ்டர் ஸ்கூல்” என்றே பெயர் வைத்து பாமர மக்களால் அழைக்கப்பட்டது. ஆனால், இவற்றின் வழியே அந்த மதமும் பரப்பப் பட்டது. இந்தப் பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகள் ஒழுக்கமானவர்களாக இருப்பார்கள் என இன்றளவும் நம்பப்படுகிறது. இதற்குக் காரணம், துறவு பூண்டு, வெள்ளை உடை அணிந்து, இறைவனுக்காகத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர்கள் இந்த ஃபாதர்களும், சிஸ்டர்களும் என்ற எண்ணம், பொதுப் புத்தியில் பதிய வைக்கப்பட்டிருக்கிறது. கிறித்துவத் துறவறம் என்றால் வெண்மையும், இந்துத் துறவறம் என்றால் காவியும் என்று காலம் காலமாக நம்ப வைக்கப்பட்டிருக்கிறது. அன்பும், கருணையும், நேர்மையும், உண்மையும், சத்தியமும் குடிகொண்டிருக்க வேண்டிய, இந்த உடைகளுக்குள் தம்மை ஒப்புக்கொடுத்தவர்களில் ஒரு பகுதியினர் உண்மையில் அப்படியில்லை என்பதை தர்மன் இந்த நாவலின் மூலம் சொல்கிறார்.

முக்கியமாக துறவறம் மேற்கொண்டவர்கள் வெல்ல வேண்டிய காமத்தை வெல்ல முடியாமல், ஆனால், வெளியில் முற்றும் துறந்தவர்கள் போலவும், புனிதர்களாகவும் காட்டிக் கொள்வதில் போலிப் பெருமையைக் கொண்டார்களாக இருக்கிறார்கள். கடவுளுக்கு நெருக்கமானவர்களாகத் தம்மைக் காட்டிக் கொண்டு நம்ப வைக்கிறார்கள். இந்த நாவலில் ஒரு குறிப்பிட்ட பிரிவினரை எடுத்துக் கொண்டு பேசியிருந்தாலும், இது மதங்களையும், அவற்றைப் போற்றுவதையும் கார்ப்போரேட் நிறுவனங்களாக ஆக்கிகியிருக்கும் எல்லா சாமியார்களுக்கும் பொதுவானது என்றே சொல்லலாம். எதன் மேலும் ஆசையற்றவர்கள் என்று சொல்லிக் கொண்டே மண், பெண், பொன் என்ற எந்த ஆசையையுமே துறவாமல் எல்லா சுகங்களையும் அனுபவித்துக் கொண்டே, ஊருக்கு உபதேசம் செய்பவர்களாக மாறிப் போயிருக்கிறார்கள் என்பதே நிதர்சனம்.

காமம் துறப்பது துறவறம் எனப்படுகிறது. இந்த இடத்தில் காமம் என்பது வெறும் உடற்பசி என்றுதான் பொருள் கொள்ளப்படுகிறது. ஆனால், காமத்தைத் துறத்தல் என்பது எல்லாப் பற்றுக்களின் மீதுமான ஆசையைத் துறப்பதுதான். உணவின் மீதான விருப்புக்களைக் கூடத் துறக்க முடியாதவர்களால் எப்படி மற்ற காமங்களிலிருந்து விடுபட முடியும்? நாவலில், துறவறம் பூண்டு கன்னியாஸ்திரிகளாக இருப்பவர்களால் வித விதமாகச் சாப்பிடாமல் இருக்க முடியவில்லை. பசி, தாகம் போன்றே உடற்பசியும் ஒரு மனிதத் தேவைதான். ஆனால், இதைத் துறந்து விட்டேன் என்று கூறிக் கொண்டு, கள்ளத்தனமாகவும், மூடி மறைத்தும் உறவு கொள்வதும், வெளியில் அதைக் காட்டிக் கொள்ளாமல் நடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதும் நாவல் நெடுகிலும் விரவிக் கிடக்கிறது.

இன்று பல மடங்கள், பீடங்கள் சம்பந்தமாக செய்திகள் வந்த வண்ணமே உள்ளன. யாரோ உண்மையாய் இருக்க விரும்பும் ஒருவர் மூலம், உள்ளே நடக்கின்ற தில்லு முல்லுகள், தவறான செயல்முறைகள், ஒழுக்கச் சீர்கேடுகள் எல்லாம் வெளியே வருகின்றன. ஆனால், அதன் பிறகு, அப்படி வெளிக் கொணர்பவர்களின் கதி என்ன ஆகிறது என்று பார்க்கிறோம். இந்த உண்மையை, நாவல் பேசுகிறது. ரேஷ்மா சிஸ்டர், ரீட்டா சிஸ்டரின் வாழ்க்கை உண்மையை, அவர் குழந்தை பெற்று விட்டுத்தான், சிஸ்டராக வலம் வருகிறாள் என்பதைச் சொல்ல வருகிறாள் என்றவுடனே, பைத்தியமாக சித்தரிக்கப்பட்டு, அடைத்து வைக்கப்பட்டு, சாவை எட்டும்படியே செய்யப்படுகிறாள். அது போல், மடத்தின் கணக்கு வழக்குகளைத் தட்டிக் கேட்கும் ஃபாதரும், பெண் சகவாசம் வைத்துக் கொண்டிருக்கும் ஃபாதர் பற்றிய உண்மையை வெளியே சொல்ல வரும் ஃபாதரும் கொல்லப்படுகிறார்கள். துறவறம் பூணுகிறவர்கள், தாங்கள் இறைவனுக்கு மிக நெருக்கமானவர்கள் என்று காட்டிக் கொள்ள விரும்புவதோடு, தாங்கள் காமத்திலிருந்து விலகியவர்கள் என்றும் இந்த உலகத்தின் முன் காட்டிக் கொள்ள விரும்புகிறார்கள்.

காமம் என்பதுதான் மனிதனை ஆட்டி வைக்கும் பெரிய பேய். இதை மிகச் சாதாரணமாக, இது ஒரு விதத் தேவை என எடுத்துக் கொள்ளும்போது பெரிய விஷயமாகத் தோன்றுவதேயில்லை. தாகமெடுக்கும்போது தண்ணீர் அருந்துகிறோம். பசிக்கு உணவு உட்கொள்கிறோம். உடம்புக்குத் தேவையான காமமும் அப்படி ஒன்றே என்பதைத் துறவறம் ஊணாமாலே சாதாரண மனிதர்களால் உணர முடிகிறது. இதற்கும் நாவலில் சில பாத்திரங்களை உலவ விட்டிருக்கிறார் தர்மன். அரியான் சுடுகாட்டில் பிணங்களை எரிப்பவனாக இருந்தாலும், மனித நேயத்தோடு செயல்படுகிறான். மஞ்சக்குருவி என்ற பொதுமகளை அங்கு தன் விருப்பத்திற்கு துய்ப்பவர்களை அவன் சாதாரணமாக எடுத்துக் கொள்கிறான். ஆனால், அதே சமயம், ஒரு இளைஞர் கும்பல், ஒரு இளம்பெண்ணை வற்புறுத்தி கல்லறை மையத்தில் வைத்து வண்புணர முயலும்போது போராடி அதைத் தடுக்கிறான்.

அதே போல, நாவலில் ஜெஸ்ஸியின் காமம், கருத்தமுத்துவிடம் அவள் நடந்து கொள்ளும் விதம் மிக ஆச்சர்யத்துக்குரியது. அவள் ஏற்கனவே ஒரு ஆடவனுடன் உடன்போகி ஏமாந்து திரும்பி வந்தவள். பெருகுகின்ற அவளுடைய காமம், கருத்தமுத்துவை, அவனுக்கு விபரம் தெரியாத பதின்பருவத்திலிருந்து உபயோகப்படுத்திக் கொள்கிறது. அதன் பிறகு அவளுக்குத் திருமணம் ஆன பிறகும் கூட அவள் கருத்தமுத்துவிடம் ஆசையுடன் கூடிய காமத்தை வெளிப்படுத்துகிறாள். ஆனால், இதில் அவளுக்குத் தயக்கமும் இல்லை; குற்ற உணர்வும் இல்லை. அதை சாதாரணமாக எடுத்துக் கொள்கிறாள். கருத்தமுத்துவும் இந்த காமத்தால் பீடிக்கப்பட்டவனாக இல்லை. அப்படியே அதற்கு அலைபவனாகவும் இல்லை. முரணாக, அவனுக்கு ஏஞ்சல் சிஸ்டரைப் பிடிக்கிறது. அவளும் தன் மனம் கருத்தமுத்துவிடம் ஈடுபடுவதை உணர்ந்து தன் துறவு நிலையிலிருந்து சாதாரணப் பெண்ணாக வந்து இணைகிறாள். காமம் மறைத்து ஒளித்து வைக்கப்படும்போது அது மேலும் மேலும் பொய்களுக்கும், ஏமாற்றுகளுக்கும் இட்டுச் செல்கிறது. அதனாலேயே, காமத்தை மனதிற்குள் பெரிய பாரமாக எடுத்துக் கொள்ளாத ஜெஸ்ஸிக்கு, தன் தாய், தந்தையை விடுத்து, மடத்து ஃபாதருடன் உறவு வைத்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நாவலின் கடைசியில் கடற்கரை ஓரத்தில் ஒரு பறவை வருகிறது. ஏஞ்சல் சிஸ்டர்தான் அதனை வெள்ளைக் கூகை என்று அடையாளம் கண்டு சொல்கிறாள். அவள் அந்தப் பறவை பற்றிச் சொல்லும் வார்த்தைகள்: “அத ஒண்ணும் செய்ய வேண்டாம்னு சொல்லுடா, ராத்திரியானாத்தான் அதால பறக்க முடியும். இப்ப வெளில வந்தா பறக்க முடியாது, எதுலயாவது மோதிச்செத்திடும், இல்லனா மத்த பறவைங்க எல்லாம் சேர்ந்து கொத்திக் கொன்னுடும்”

இது ஒரு விதத்தில் வெள்ளை உடை அணிந்து பகலில் பைபிளும் கையுமாய் அலைந்து கொண்டு, எப்போதும் பரம மண்டல பிதாவையே நினைத்துக் கொண்டிருப்பது போல் நடித்துக் கொண்டு மற்றவர்களோடு சாதாரணமாக ஒட்டி விடாமல் கண்ணையும் கருத்தையும் காமத்தையும் மறைத்துக் கொண்டு இரவுப் பறவைகளாய் அலையும் கன்னியாஸ்தீரிகளுக்கும், ஃபாதர் எனப்படும் சாமியார்களுக்கும் பொருத்தமாகவே உள்ளது.

நாவல் நடைபெறும் முக்கிய இடம், இடுகாடுகளின் வரிசை பனிரெண்டு முடிந்து பதிமூணாவதாக பாலிடெக்னிக் கல்லூரியுடன் இணைந்த ஃபாதர்கள் மடமாக இருக்கிறது. அதிலிருந்து தனியே கன்னியாஸ்திரிகள் மடம் உள்ளது. ஆசை பாசங்கள் எல்லாவற்றையும் அடக்கிக் கொண்டு வாழ்வது கூட பிணத்திற்குச் சமம் என்பதாலோ அல்லது இந்த மடங்களே கூட தங்கள் பொய்மைகளுக்கு ஒத்து வராத சிஸ்டர், ஃபாதர்களை ஒழித்துக் கட்டி சமாதி கட்டுவதாலோ இந்த நாவலுக்கு பதிமூணாவது மைய வாடி என்பது மிகப் பொருத்தமாகவே அமைந்துள்ளது.

கிறித்தவ மதத்தில் பதிமூன்று என்ற எண் ஒரு ராசியற்ற எண் என்று கருதப்படுகிறது. ஏசு கிறிஸ்துவை அவருடைய கடைசி உணவு மேசையில் காட்டிக் கொடுத்த யூதாஸ், அவருடைய பனிரெண்டு முக்கிய சீடர்களோடு, பதின்மூன்றாவதாக சேர்ந்து கொண்டவன். தூக்குக் கயிற்றில் பதின்மூன்று சுருக்குக் கண்ணிகள் இருக்கும் என்பது கூட இந்த நாவலின் தலைப்புக்குப் பொருந்துவதாக இருக்கிறது. மதத்தின் அடையாளங்களோடு, அதனைத் தாங்கிப் பிடிப்பதாக நினைத்துக் கொண்டு தூக்கித் தோளில் சுமப்பவருக்கு அதுவே சுருக்குக் கயிறாகவும் மாறும் என்பதனை நாவல் உணர்த்துவதாகவே சொல்லலாம்.

திடீரென முளைத்து பிரபலமாகும் ஆலயம் பற்றிப் பேசுகிறது. அதில் திரளும் மக்கள் கூட்டத்தோடு, புரளும் பணம் பற்றி பேசுகிறது. இது பொதுவாக எல்லா மததிற்கும் பொருத்திப் பார்க்கலாம். அதனால், அந்த கோவிலை நிர்வகிப்பவருக்குள்ளும் எழும் மனக் கசப்புகள் இவை எல்லாம் ஒரு பொதுவான ”தெய்வப் பெயர் சொல்லி கார்ப்பொரேட்டுகள்” என்ற வகையில் அடங்கும். சில நல்லவர்களும் இருப்பதை ஆங்காங்கே காட்டிச் செல்லும் நாவல் நடு நடுவே சலிப்புத் தட்டத்தான் செய்கிறது. கதையோட்டத்தோடு இல்லாமல், வலிந்து மரக்கால் பாண்டியன் என்ற பாத்திரம் திணிக்கப்பட்டு, அரசியல் கட்சிகள் பற்றி பேச வைக்கப்படுகிறது. கம்யூனிஸ்ட் கட்சி பற்றிய விவாதங்கள் தேவையில்லாமல், பாத்திரம் பேசாமல், ஆசிரியர் இடைப் புகுந்து பேசுவது போல் இருக்கிறது. கருத்தமுத்து கிராமத்திலிருந்து வந்த பிறகு, அவனுடைய பெற்றோருக்கும் அவனுக்கும் இடையே உள்ள தொடர்பு பற்றியோ, அவனுடைய ஆருயிர் நண்பணுடனான உறவு பற்றியோ பேசவேயில்லை.

கொஞ்சம் சலிப்பூட்டினாலும், அடைபட்டிருக்கும் ஒரு பகுதியினரின் வெளியில் தெரியாத மற்றொரு வாழ்க்கை பற்றிய சித்திரத்தைத் தீட்டிக் காட்டுவதில் நாவல் வெற்றி அடைந்திருக்கிறது என்று சொல்லலாம். அதற்காக நாவலாசிரியரைப் பாராட்டலாம். சிறந்த முறையில் அச்சிட்டிருக்கும் அடையாளம் பதிப்பகத்தார் பாராட்டுக்குரியவர்கள்.

(பதிமூனாவது மையவாடி, நாவல்,சோ.தர்மன், விலை:ரூ.320/- அடையாளம் பதிப்பகம்)

அபூர்வ மனிதர்கள் -மா.பா.குருசாமியின் ‘நான் கண்ட மாமனிதர்கள்’ நூல் குறித்து பாவண்ணன்

1959இல் சென்னை கிறித்துவக்கல்லூரியில் பொருளாதாரத்துறையில் பட்டப்படிப்பை முடித்தார் ஓர் இளைஞர். போட்டித் தேர்வெழுதி வெற்றி பெற்று அரசு வேலைக்கு எளிதாகச் செல்லும் தகுதி அவருக்கு இருந்தது. ஆனால் அவருக்கு அரசு வேலைக்குச் செல்ல விருப்பமில்லை. அவருக்குள் ஊறியிருந்த எழுத்தார்வம் அவரைத் தடுத்தது. தன் மனத்துக்குப் பிடித்த எழுத்தாளரும் பேராசிரியருமான மு.வரதராசனாரை நேரில் சந்தித்து ஆலோசனை கேட்டார். வாழ்க்கையை நடத்த ஒரு வேலையை உறுதிப்படுத்திக்கொண்டு எழுதலாமே தவிர, எழுத்துத்துறையிலேயே வாழ்வது சரியல்ல என்று ஆலோசனை வழங்கினார் அவர். அப்போதும் அந்த இளைஞர் அரசு வேலைக்குச் செல்ல விரும்பவில்லை. சென்னையிலிருந்து புறப்பட்டு வந்து கல்லுப்பட்டி காந்திநிகேதனில் வேலைக்குச் சேர்ந்தார். அவர் பெயர் மா.பா.குருசாமி.

கல்லுப்பட்டியில் தங்கியிருந்த ஜே.சி.குமரப்பாவின் தொடர்பு அவருடைய பொருளாதாரம் பற்றிய கருத்துகளை மெருகேற்றிக்கொள்ள உதவியது. அவர் எழுதிய பணம், வங்கி, பன்னாட்டு வாணிபம், பொதுநிதி இயல்கள் ஒரு முக்கியமான புத்தகம். கல்லுப்பட்டி ஆசிரமத்திலிருந்து அவர் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரியச் சென்றார். மதுரைப்பல்கலைக்கழகம் காந்தியக்கல்வி என்னும் துறையைத் தொடங்கியபோது, அதில் பணியாற்றுவதற்காக மு.வ.வின் அழைப்பின் பேரில் சென்றார். அங்கிருந்தபடியே வள்ளலார் தத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்று திருச்செந்தூர் கல்லூரிக்கே பேராசிரியராகத் திரும்பி வந்தார். அங்கேயே முதல்வராக பதவி உயர்வு பெற்று ஓய்வு பெற்றார். பணிக்காலத்திலும் அதற்குப் பிறகான ஓய்வுக்காலத்திலும் காந்தியம் சார்ந்தும் பொருளாதாரம் சார்ந்தும் அவர் எண்ணற்ற நூல்களை எழுதினார். காந்தியடிகளும் கார்ல்மார்க்சும் அவருடைய சிறந்த ஆய்வுநூல்.

நான் கண்ட மாமனிதர்கள் மா.பா.குருசாமியின் நூல்களில் மற்றொரு முக்கியமான நூல். அவருடைய நினைவலைகள் வழியாக விரிந்தெழும் பதினாறு ஆளுமைகளைப்பற்றிய சித்திரங்கள் இந்த நூலில் உள்ளன. காந்தியத்தில் தோய்ந்த ரா.குருசாமி, க.அருணாசலம், கோ.வேங்கடாசலபதி, ஜெகந்நாதன், வீ.செல்வராஜ், க.ரா.கந்தசாமி, ஜீவா, லியோ பிரவோ போன்றவர்களும் இப்பட்டியலில் அடக்கம். அவர்கள் தனக்கு அறிமுகமான விதத்தைப்பற்றிய சித்தரிப்போடு தொடங்கும் ஒவ்வொரு கட்டுரையும் அந்த ஆளுமைகள் செயல்பட்ட விதங்களையும் அவர்கள் ஆற்றிய சேவைகளையும் கோர்வையாகப் பட்டியலிட்டுக் காட்டுகின்றன. இவர்களுடை வாழ்க்கை வரலாறுகள் தனிநூலாகவே எழுதப்பட வேண்டியவை. மீண்டும் மீண்டும் வாசிக்கப்படவேண்டியவை. இவர்கள் வழியாகவே இலட்சியவாதம் அடுத்த தலைமுறைத் தொட்டு வளரவேண்டும்.

லியோ பிரவோ அபூர்வமான ஒரு ஆளுமை. பெல்ஜியத்தில் பிறந்து இந்தியாவுக்கு வந்து முப்பதாண்டுகளுக்கும் மேல் தமிழ்நாட்டில் வாழ்ந்து மக்களுக்குத் தொண்டாற்றி மறைந்தவர். இங்கு வாழ்கிறவர்களே தமக்கு அருகில் வாழ்கிற சகமனிதர்களைப்பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாமல் ஒதுங்கி வாழ்கிற சூழலில் எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து இங்கு அவர்களைச் செல்லத் தூண்டிய விசைக்கு இலட்சியவாதம் என்னும் பெயரை அன்றி வேறெந்த பெயரைச் சூட்டமுடியும்? மா.பா.குருசாமி பிரவோ பற்றி எழுதியிருக்கும் நினைவலைகள் இந்த நூலின் மிகமுக்கியமான பகுதி.

லியோ பிரவோ பற்றித் தெரிந்துகொள்வதற்கு முன்னால், அவருடைய கவனத்தை இந்தியாவின் பக்கம் திருப்பிய ஜோசப் ழீன் லான்சா டெல் வாஸ்டோவைப்பற்றி முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். அவர் இத்தாலியில் தத்துவ இயல் படித்தவர். கவிஞர். காந்தியடிகளைப்பற்றி ரோமன் ரோலண்ட் எழுதிய புத்தகத்தைப் படித்துவிட்டு காந்தியடிகளைச் சந்திப்பதற்காக 1936இல் இந்தியாவுக்கு வந்தார். ஏறத்தாழ ஆறுமாத காலம் காந்தியடிகளோடு தங்கி, அவர் செல்லுமிடங்களுக்கெல்லாம் சென்று, அவருடைய செயல்பாடுகளைக் கவனித்தார். காந்தியடிகள் அவருக்கு சாந்திதாஸ் என்று பெயரிட்டார். அகிம்சைப் போராட்ட வழிமுறைகளைப்பற்றி தனக்கெழுந்த ஐயங்களையெல்லாம் காந்தியடிகளுடன் உரையாடித் தெளிவு பெற்றுக்கொண்டு இத்தாலிக்கு திரும்பிச் சென்றார் சாந்திதாஸ். தன் இந்திய அனுபவங்களைத் தொகுத்து ஒரு புத்தகம் எழுதி வெளியிட்டார்.

காந்திய வழியில் தன் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும் என முடிவெடுத்த சாந்திதாஸ் ஆர்க் சமுதாயம் என்னும் பெயரில் ஓர் அமைப்பை உருவாக்கினார். அவர் நினைத்த அளவுக்கு அது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. எல்லாக் குறுக்கீடுகளையும் கடந்து ஒத்த சிந்தனையுடையவர்களைத் திரட்டி அந்தக் குழுவை அவர் ஏற்படுத்தி அகிம்சைப்போராட்ட வழிமுறையைப்பற்றிய நம்பிக்கையை மக்களிடையே விதைத்தார். 1954இல் மீண்டும் இந்தியாவுக்கு வந்து வினோபாவுடன் பூமிதான யாத்திரையில் கலந்துகொண்டார். 1957இல் அல்ஜீரியப்போர் நடைபெற்றுக்கொண்டிருந்த சமயத்தில் ஆர்க் சமுதாயத்தின் சார்பில் மக்களுடன் இணைந்து கொடுமைக்கெதிரான அமைதிப்போராட்டத்தை முன்னெடுத்தார். காந்தியடிகளின் வழியில் பிரான்சு அரசு நிறுவ திட்டமிட்டிருந்த அணு உலைகளுக்கு எதிராக, கண்டனத்தைத் தெரிவிக்கும் விதமாகவும் மக்களிடையில் விழிப்புணர்ச்சியை உருவாக்கும் விதமாகவும் 21 நாட்கள் உண்ணாவிரதமிருந்தார். போப் ஆண்டவர் போருக்கு எதிராக குரல் கொடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி ஒருமுறை ரோம் நகரில் 40 நாட்கள் உண்ணாவிரதமிருந்தார்.

ஆர்க் சமுதாயத்தின் கிளைகள் பல இடங்களில் உருவாக்கப்பட்டன. பெல்ஜியத்தில் அக்குழுவுடன் இணைந்த லியோ பிரவோ மிகக்குறுகிய காலத்திலேயே மிகச்சிறந்த தொண்டர் என்னும் பெயரைப் பெற்றார். அவருடைய தொண்டுணர்வைப் புரிந்துகொண்ட சாந்திதாஸ், அவரை இந்தியாவுக்குச் சென்று தொண்டாற்றும்படி கேட்டுக்கொண்டார். அவர் உடனே இந்தியாவுக்கு வந்து சேர்ந்தார். வார்தாவில் சிறிது காலம் தங்கியிருந்துவிட்டு கல்லுப்பட்டியில் உள்ள காந்திநிகேதனுக்கு வந்தார். ஓராண்டுக்கும் மேல் அங்கு தங்கியிருந்து காந்திய வழிகள் பற்றியும் ஆசிரம வாழ்க்கையைப்பற்றியும் கிராமப்பணிகள் பற்றியும் தெரிந்துகொண்டார். எல்லோரும் இன்புற்று ஒற்றுமையாக வாழ்கிற சர்வோதய சமுதாயத்தை உருவாக்கவேண்டும் என்னும் விருப்பம் அவருக்குள் எழுந்தது.

பூமிதான இயக்கத்துக்காக கடவூர் ஜமீன்தார் தன்னிடம் இருந்த 300 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கியிருந்த நேரம் அது. அந்த இடத்தின் பெயர் சேவாப்பூர். அங்கு தங்கி ஏழை மக்களுக்கு உதவும்படி பிரபோவிடம் கேட்டுக்கொண்டார் கெய்த்தான். கல்லுப்பட்டி காந்தி நிகேதனிலிருந்து சேவாப்பூருக்கு வந்து சேர்ந்தார் பிரவோ. இன்ப சேவா சங்கம் என்னும் பெயரில் ஒரு அமைப்பை உருவாக்கி, அதன் வழியாக சேவாப்பூரில் ஒரு சமத்துவபுரத்தைக் கட்டியெழுப்பினார் பிரவோ. சேவாப்பூரைப்போலவே அவர் அமைத்த மற்றொரு புதிய கிராமம் வினோபாஜிபுரம். இதற்கு வேண்டிய நிதியின் ஒரு பகுதியை அரசு வழங்கினாலும் பெல்ஜியத்தில் வசிக்கும் நண்பர்கள் வழியாகவும் தன் சொத்துகளை விற்றுப் பெற்ற பணத்தின் வழியாகவும் பெரும்பகுதியான தொகையைத் திரட்டினார். ஏறத்தாழ முப்பதாண்டுக்காலம் ஏழை மக்களின் உயர்வுக்காக அந்தப் பகுதியிலேயே சேவையாற்றி மறைந்தார் பிரவோ.

காந்தியமே மக்கள் சேவைக்கான அடிப்படை விசை. க.அருணாசலம், கோ.வே., ரா.குருசாமி, ஜீவா போன்றோரைப்பற்றி எழுதியிருக்கும் நினைவலைகளிலும் இந்தப் புள்ளியை வெவ்வேறு கோணங்களில் தொட்டுக் காட்டுகிறார் மா.பா.குருசாமி. அவர் நினைவலைகள் வழியாக திரண்டெழும் ஜீவாவைப்பற்றிய சித்திரம் உயிர்த்தன்மையோடு காணப்படுகிறது.

ஜீவாவைச் சந்திக்கச் செல்லும்போது அவர் கல்லூரி மாணவர். சந்திரபோஸ் மணி என்பவர் அவருடைய கல்லூரி நண்பர். அவருடைய சித்தப்பா பொதுவுடைமைத் தலைவர்களில் ஒருவரான கே.டி.கே.தங்கமணி. ஒருநாள் தன் சித்தப்பாவைச் சந்திக்க மணி செல்கிறார். அப்போது அவருக்குத் துணையாக குருசாமியும் செல்கிறார். இருவரும் கட்சி அலுவலகத்துக்குள் நுழைகிறார்கள். உள்ளே கட்சியின் உட்குழுக்கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்ததால் வெளியே அமரவைக்கப்படுகிறார்கள். தற்செயலாக அந்த அலுவலக வளாகத்திலேயே ஜனசக்தி இதழின் அலுவலகமும் இருப்பதைப் பார்க்கிறார் குருசாமி. அதைப் பார்த்ததுமே அந்த இதழின் ஆசிரியர் ஜீவாவின் நினைவு அவருக்கு வருகிறது. உடனே ஜீவாவை இருவரும் பார்க்கச் செல்கிறார்கள். அறைக்கு வெளியே இருந்த தோழரிடம் தம் விருப்பத்தைத் தெரிவிக்கிறார்கள். அவர் உள்ளே சென்று பார்க்கும்படி சொல்கிறார். உள்ளே யாருமில்லை. அந்தப் பக்கமாக வந்த ஒருவர் அவர் அச்சுக்கோர்க்கும் பகுதியில் இருப்பதாகவும் விரைவில் வருவார் என்றும் தெரிவித்துவிட்டுச் செல்கிறார். சிறிது நேரத்தில் அவரே வந்துவிடுகிறார். அற்புதமான ஓர் ஆளுமையான ஜீவாவின் அறிமுகம் அப்படித்தான் அவர்களுக்குக் கிடைக்கிறது.

ஒருமுறை கல்லூரி திருவள்ளுவர் மன்றத்தின் சார்பாக ஒரு நிகழ்ச்சியில் பேச ஜீவாவை அழைக்கிறார் குருசாமி. மகாகவி கண்ட கனவு என்னும் தலைப்பில் கையில் எந்தக் குறிப்புமின்றி அழகாக சொற்பொழிவாற்றுகிறார் ஜீவா. மற்றொரு முறை கம்பரைப்பற்றிப் பேச அழைக்கிறார். அப்போது அண்ணாவின் ‘கம்பரசம்’ வெளியாகி நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் பேச்சுகள் எழுந்த நேரம். அரசியல் கலக்காமல் பேசும்படி கேட்டுக்கொள்கிறார் துறைத்தலைவர். கம்பன் பாடல்களின் பொதிந்திருக்கும் கவிநயத்தையும் கற்பனை வளத்தையும் சுட்டிக்காட்டி தன் உரையை முடித்துக்கொள்கிறார் ஜீவா.

மா.பா.குருசாமியின் காலத்தில் நல்ல எழுத்தாளராகவும் இலக்கியப் பேச்சாளராகவும் விளங்கியவர் ம.ரா.போ.குருசாமி. அவர் மு.வ.வின் நேரடி மாணவர். கோவையில் பணிபுரிந்து வந்தார். இருவருமே தமிழ்நாடு என்னும் இதழில் எழுதி வந்தனர். ஒருமுறை திருநெல்வேலி தமிழ்ச்சங்கத்தைச் சேர்ந்தவர்கள் ம.ரா.போ.குருசாமியை தம் கல்லூரிக் கூட்டத்துக்கு தலைமை தாங்க அழைக்க நினைத்தார்கள். ஆனால் அவர்களிடம் தொடர்பு முகவரி இல்லை. அதனால் அவர்கள் தமிழ்நாடு இதழுக்கு எழுதிக் கேட்டார்கள். அவர்களும் அனுப்பிவைத்தார்கள். ஆனால் அது மா.பா.குருசாமியின் முகவரி. அது தெரியாமல் அவரை கூட்டத்துக்கு அழைத்து வந்துவிட்டார்கள். நிகழ்ச்சிக்கு வந்த பிறகு, அவருடைய வயதைப் பார்த்த பிறகே அவர்களுக்கு உண்மை புரிகிறது. உடனே அவருடைய தலைமையில் பேசமாட்டோம் என ஆசிரியர்கள் மறுக்கிறார்கள். நிகழ்ச்சி தொடங்கவிருக்கும் நேரத்தில் இது என்ன புதுக்குழப்பம் என்று நினைக்கிறார் மா.பா.குருசாமி. தக்க சமயத்தில் இடையில் புகுந்த துறைத்தலைவர் இவர்தான் தலைமை தாங்குவார், போய் அமருங்கள் என்று ஆணித்தரமாக தெரிவித்துவிடுகிறார். அன்றைய தலைமை உரையை மிகச்சிறப்பாக நிகழ்த்துகிறார் மா.பா.குருசாமி. அன்று அவரை சங்கடத்திலிருந்து மீட்ட துறைத்தலைவர் பேராசிரியர் நா.வானமாமலை. இப்படி ஓர் அறிமுகத்தோடு தொடங்குகிறது அவரைப்பற்றிய கட்டுரை.

இன்று வீட்டிலிருந்து தெருவில் இறங்கினால் ஒவ்வொரு நாளும் நடைபாதையில், பேருந்துகளில், புகைவண்டிகளில், சந்தைகளில், அரங்குகளில், பொழுதுபோக்கும் இடங்களில் என எண்ணற்ற இடங்களில் ஏராளமானவர்களை நாம் பார்க்கிறோம். அவர்களில் எத்தனை பேரை நேருக்கு நேர் நிமிர்ந்து பார்க்கிறோம், எத்தனை பேரிடம் உரையாடுகிறோம், எத்தனை பேரிடம் நட்புடன் இருக்கிறோம் என கணக்கிட்டுப் பார்த்தால் நம்மை நாமே எடைபோட்டுக் கொள்ளலாம். இப்படிப்பட்ட சூழலில் நட்பைத் தேடிச் செல்வதும் தொடர்வதும் ஒவ்வொரு நட்பும் வாழ்நாள் முழுதும் நீடிப்பதும் அபூர்வமான செய்திகள். அபூர்வமான மனிதர்களுக்கே அத்தகு அபூர்வமான வாய்ப்புகள் அமைகின்றன. மா.பா.குருசாமி அபூர்வமான மனிதர்களில் ஒருவர். தான் சந்தித்த மாமனிதர்களை தம் சொற்சித்திரங்கள் வழியாக நம்மையும் சந்திக்கவைக்கிறார்.

(நான் கண்ட மாமனிதர்கள். மா.பா.குருசாமி. சர்வோதய இலக்கியப்பண்ணை, மதுரை. விலை.ரூ70)

ரா.கிரிதரனின் காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை சிறுகதை குறித்து வை.மணிகண்டன்

ரா.கிரிதரனின் “காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை”,2009 ல் தொடங்கி 2019 வரை வெவ்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்டுள்ள பன்னிரண்டு சிறுகதைகளின் தொகுப்பு இந்தப் புத்தகம்.

புத்தக தலைப்பாய் அமைந்துள்ள “காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை” சிறுகதை ஜெர்மன் சிறையில் நடந்த ஒரு இசை அரங்கேற்றம் குறித்து எழுதப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியின் வரலாற்று பின்புலம் எதுவும் அறியாது நாம் வெறுமனே இந்தக்கதையை வாசிக்கையில் எழும் அடிப்படையான கேள்வி “நாம் ஏன்  கடினமான சூழல்களில் இசையை நாடி செல்கிறோம் ? ” என்பது.

நடந்த இசை அரங்கேற்ற  நிகழ்ச்சியின் பின் புலம் குறித்து, வரலாறு  குறித்து  ஒரு புத்தகமே எழுதப்பட்டுள்ளது – For the End of Time: The Story of the Messiaen Quartet – Rebecca Rischin என்னும் ஒரு clarinet கலைஞரால் இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளது. . இந்த சிறுகதை உண்மையில் நடந்த  நிகழ்ச்சியின் பிரதியாக இருப்பதால், நிகழ்ச்சியை விட இந்நிகழ்ச்சி குறித்து விளக்க ஆசிரியர் எடுத்துள்ள தேர்வுகளே நாம் கணக்கில் கொள்ள வேண்டியது.

கடினமான சிறை சூழல் , ஒரு இசை மேதைமை குறித்த வியப்பு அதே நேரத்தில் அந்த இசை மேதைமையை இறுக்கமான சூழலோடு பொருத்தி பார்த்து எடை போடும் தன்மை , இசைமேதையின் பதில் – இதுவே இந்த நிகழ்ச்சியை விவரிக்கும் சிறுகதையின் வடிவம் -கதையில் சிறை சூழலின் புற விவரிப்பு நன்றாக அமைந்து வந்திருக்கிறது,  அதே நேரத்தில் வாசகனுக்கு இவ்வரலாற்று நிகழ்வு குறித்த அனுமானங்களை வலிந்து வந்து கூறுவது போல் கட்டுரை போல் அமைந்து விட்டது , இந்தக் கதையில் ஆலிவர் போன்ற இசை மேதை அல்லாது வேறு ஒரு பெயர் அறியாத கலைஞன் இசைத்திருந்தால் ?அந்த இசை தொகுப்பு ” quartet for the end of time ” போல் அல்லாது யாருமறியா ஒரு இசை கலைஞனின் ஆத்ம சங்கீதமாக இருந்திருந்தால் ? இங்கு நாம் “மோகமுள்” நாவலில் வரும் ஒரு வடக்கத்திய பாடகரையும் அவரது மகனையும் நினைவு கூறலாம்.

இந்தத் தொகுப்பில் என்னை மிகவும் கவர்ந்த கதை ” நந்தாதேவி” என் கணிப்பில் இச்சிறுகதை தொகுப்பின் தலைப்பாக வைத்திருக்க பட வேண்டிய ஒன்று . இந்திய ராணுவத்தின் மலையேற்ற குழுவின் அனுபவம் குறித்து அட்டகாசமான நிகழ்த்து தன்மையுடன் அமைந்துள்ள சிறுகதை – ஜாக் லண்டன் முதல் அசோகமித்திரனின் “மிருகம்” வரை மனித வாழ்வின் விளிம்புகளை நினைவூட்டும் தொடர்ச்சியாக அமைந்திருக்கிறது,

“நீர் பிம்பத்துடன் ஒரு உரையாடல் ” – நூறு ஆண்டு கால வரலாற்று நிகழ்வுகளின் சரளமான தொகுப்பு போல் அமைந்துள்ளது – ஆசிரியர் தேர்ந்தெடுத்து இருக்கும் உத்தி முறை ரசிக்கும் வண்ணம் அமைந்திருந்தது தொடர் நிகழ்வுகளின் அவலங்களின் சித்திரத்தை அதே நேரத்தில் எந்த ஒரு பார்வையையும்  கோணத்தையும்  வலிந்து திணிக்காது கால மாற்றத்தின் மௌன சாட்சி போல் அமைந்துள்ளதே இந்தக் கதையின் சிறப்பு. நீண்ட நீண்ட வாக்கியங்களை படிக்கையில் தமிழின் சிறந்த நாவல்களின் ஒன்றான ” தாண்டவராயன் கதை ” நினைவுக்கு வந்தது – வரலாற்று நிகழ்வுகளின் குறிப்பிடத்தக்க ஒரு நிகழ்ச்சியை மையமாக வைத்து எழுதப்படும் கதைகள் ஒரு புறம் , வரலாற்றையே ஒரு மாபெரும் புனைவு வெளியாக்கி எழுதப்படும் கதைகள் இன்னொரு புறம் , பின்னதின் சாயலில் அமைந்துள்ள ” நீர் பிம்பத்துடன் ஒரு உரையாடல் ” எந்த ஒரு இலக்குமற்று எதேச்சையின் கரங்களால் உந்தப்பட்டு செல்லும் காலம் குறித்த நினைவலைகலாக அமைந்துள்ளது.

இசை குறித்தும் வரலாற்று பின்புலத்தில் அமைந்துள்ள கதைகள் யாவும் தகவல் செறிவு காரணமாகவும் நிகழ்ச்சியின் முக்கியத்துவம் காரணமாகவும் கவனத்தை கோருகின்றன , அதே நேரத்தில் அரசியல் சரி நிலைகள் குறித்த பிரக்ஞை காரணமாக நிகழ் தன்மை குறைந்து கட்டுரை போல் நீளும் இடங்கள் ஆசிரியர் கவனத்தில் கொள்ள வேண்டியவை.

இருள் முனகும் பாதை – நாவலாக வந்திருக்க வேண்டிய சிறுகதை – ஷுமன் கிளாரா என்னும் இசை துருவங்கள் குறித்த ஒரு கோட்டு சித்திரமாக அமைந்து விட்டது – பென்னட் என்னும் பார்வையாளன் ஷுமனின் மேதைமையை புரிந்து கொண்டவன் , இயந்திரத்தனமான வெற்றியை நோக்கி பயணித்த கிளாரா,பென்னெட்டிடம் , தன் மொத்த இருப்பின் பொய்மையை உணர்ந்து உருகுகிறாள்,  இயந்திரம் Vs இயற்கை என்று சட்டகம் வழியே கதையை அணுக நினைக்கையில் ஷுமன் என்னும் காதலன் தன் காதல் கடிதங்களை நமக்கு வாசிக்க அளிக்கிறான் , கடைசி ஸ்டாப்பை அறிந்திருந்தாலும்  , கடைசிக்கு முந்தைய ஸ்டாப்பில் எந்த ஒரு பெரிய கலைஞனும் இறங்கி விடுவான் என்பதின் சாட்சியாக ஷுமன் கிளாரா காதல். இந்த இடத்தில சங்கர ராமசுப்ரமணியனின் இந்த கட்டுரை மிக முக்கியமானது , அனைத்துக்கும் ஆசைப்பட்டபடியே அத்வைதம் போதிக்கும் கலைமனதை உணர்கையில் மேலும் நாம் ஷுமனின் தவிப்பை புரிந்து கொள்ள முடியும் – (https://www.shankarwritings.com/2019/12/blog-post_26.html?m=1)

பலி மற்றும் மௌன கோபுரம் சிறுகதைகளில் தலைப்பு மற்றும் குறிப்புகள் சுட்டும் விஷயங்கள் நேரடியாக உள்ளது. பலி சிறுகதை ஒரு “abstract ” தன்மையுடன் அழகாக உள்ளது ,” பலி” என்னும் தலைப்பு வலிந்து வந்து ஆசிரியர் கூற விரும்புவதை சுட்டுகிறது , வேறு ஒரு மெல்லிய உருவக தலைப்பு பொருத்தமாக இருக்கக் கூடும் – இவ்விடத்தில் ஆல்பர்ட் காம்யுவின் ” The guest ” குறித்து இணைத்து வாசிக்க சில விஷயங்கள் உள்ளன – ” கதாபாத்திரத்தின் பெயர் நேரடியாக ” அரபி” என்றும் தலைப்பு ” தி கெஸ்ட் ” என்றும் உள்ளது – இக்கதையில் சுமி மற்றும் லியோன் , கதையின் தலைப்பு “பலி” – இந்த வலிய தலைப்பு எதிர்மறை அம்சம் கொண்டதாக உள்ளது – மொத்த கதையின் சாரமும் ஏன் இரண்டு அல்லது மூவர் சேர்ந்து இருக்க முடிவதில்லை ஸ்தூலம் இல்லாத எதோ ஒன்று எப்படியோ அதை ஏன் தடுத்துவிடுகிறது என்ற கேள்வியில் இருக்கிறது , இந்த சிறுகதை Godard ன்  Bande à part  திரைப்படத்தை நினைவூட்டியது.

வரலாறு இசை மற்றும் புலம் பெயர் வாழ்வு என்கிற வெவ்வேறான தளங்களில் ஒரு நிறைவான வாசிப்பு அனுபவமாக “காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை” சிறுகதை தொகுப்பு அமைந்துள்ளது

பிரபு கங்காதரனின் அம்புயாதனத்துக் காளி கவிதைத் தொகுப்பு விமர்சனம் – ரா. பாலசுந்தர்

பிரபு கங்காதரனின் அம்புயாதனத்துக் காளி, இந்த ஆண்டு நான் வாசித்த முதல் கவிதை தொகுப்பு, பரிந்துரைத்த பாவாவிற்கு மிக்க நன்றி. பெயரே மிக வித்தியாசமாக, சிந்திக்கவும், தேடவும் தூண்டக்கூடியத் தலைப்பு, யாதனம் என்றால் மரக்கலம், தெப்பம், வேதனை, துயரம் என்று பொருள் தருகிறது தமிழ் அகராதி, ஆக அம்புயாதனம் என்றால், அம்புத்துளைக்கும் வேதனையைத் தரக்கூடியவள் காளி என்றோ அம்புகளால் செய்யப்பட்ட தெப்பத்தைக் கொண்டு காமத்தைக் கடந்து, காமத்தால் முக்தித் தரக்கூடியவள் காளி என்றோ பொருள் கொள்ளும் வகையில் வாசகத் தேர்விற்கு ஆசிரியர் சுதந்திரம் தருகிறார். இத்தொகுப்பு எங்ஙனமும் தலைப்புச் சார்ந்தோ, தலைப்பிற்கு பொருள் என்ன என்பது பற்றியோ கவிதையொ, குறிப்போ, பொருளோ இல்லை. இது ஒரு எழுத்தாளனால், கவிஞனால் வாசகனுக்கு அளிக்கப்படும் மிகப்பெரிய சுதந்திரம் எனலாம்.

கொண்டாட்டத்திற்குரிய மகிழ்ச்சியான கவிதைகள் குறைவாக இருப்பதன் காரணம் என்ன? மகிழ்ச்சியை எழுதுவது அவ்வளவு சிரமமா? என்று புகழ்பெற்ற படிம எழுத்தாளர் ரமேஷ்பிரேதனிடம் கேட்கப்பட்டது, அதற்கு அவர் அளித்த பதில்,

மகிழ்ச்சி, கொண்டாட்டம் என்றால் என்ன? நுணுகிப் பார்த்தால் ஆணுக்குப் பெண்ணின் உடம்பும், பெண்ணுக்கு ஆணின் உடம்பும்தான் மகிழ்ச்சி. என் அறிவுக்கு எட்டியவரை, காம நிகழ்த்துகலைதான் மானிடத்தின் முக்கியமான கொண்டாட்டம். இந்தக் கொண்டாட்டத்தைப் பற்றி எழுதினால்தான் எல்லோரும் பதற்றமாகி விடுகிறார்களே அய்யோ இவன் உடம்பைப் பற்றி எழுதுகிறான் என்று ஒதுக்கிவைத்து விடுகிறார்களே? ஒரு பல்கலைக்கழகத்திற்குச் சிறப்பு விருந்தினராகச் சென்றால், மாணவிகள் ஒதுங்கிச் சென்றுவிடுகிறார்களேஇந்தச் சமூகம் காமத்தைக் கொண்டாட்டத்திற்குரிய ஒன்றாகக் கருதவில்லை. அப்படி நினைக்க அச்சப்படும் சமூகம், அதன்மீதான கவனத்தை ஈர்ப்பைத் தவிர்ப்பதற்காகவே சினிமா, கலைநிகழ்ச்சிகள், குடி, கூத்து, அரட்டை என மனிதரின் முன் கொண்டாட்டம் இதுதான் எனப் பாசாங்கு செய்கிறது. இப்படியான சமூகத்தில் மகிழ்ச்சியான படைப்புகள் எப்படி உருவாகும்?” என்று விவரித்தார். இவர் அளித்த பதிலின் உண்மை நிலையை உணர நாம் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய கவிதை நூல் அம்புயாதனத்துக்காளி. தமிழில் வெளிவந்து இருக்கும் முதல் தாந்த்ரீக பாலியல் கவிதைத்தொகுப்பு அம்புயாதனத்துக்காளி ஆகும்.

நமது இந்திய மரபில் காமத்திற்கு நீங்கா இடம் உள்ளது, இந்திய மரபு மட்டுமல்ல உலகின் தொன்மையான அனைத்து மதங்களின் அடித்தளமும், காமம் மற்றும் காமத்தை வென்றடைதல் என்பதன் கீழ் மேல்கட்டுமானம் கொள்ளும். இன்றளவில் ஆலயங்களில் காணப்படும் தாந்திரிக பாலியல் குறியீடுகள், பாலியல் சிற்பங்கள் அனைத்தும், காமம் என்பது வெறும் உடலின்பம் மட்டுமே, இவ்உடலின்பத்தைக் கடந்து உள்ளின்பத்தை அடைந்த முதல்வன், இறைவன் உள்ளே வீற்றிருப்பவன், இங்கிருந்து கடந்து செல்கையில் இத்தகைய காமகளியாட்டங்களை கடந்து உள்செல்கிறாய், எனும் குறியீட்டு பொருள் கொள்ளவே பாலியல் சார் சிற்பங்கள் வடித்துள்ளனர். அதுவும் நமது மரபில் கோபுரங்கள் விண்ணெழும் தீயின் குறியீடாக உவமப்படுத்தியுள்ளனர். அத்தகைய கோபுரங்களில் காமச்சிற்பங்களை அமைத்ததன் காரணம், காமத்தை எரித்து, தூய உள்ளத்தினனாக உள்ளே செல்லவேண்டும் என்பதற்காகவே, அந்த வகையில், பிரபு கங்காதரன் தன் காம உணர்வெழுத்தை காளி எனும் இந்திய மரபு ஒற்றைத்தளத்தில் ஏற்றி தன் காம உணர்ச்சிகளை எரிக்கிறார். இத்தொகுப்பை முடித்து வெளிவருகையில் ஒருவித வெம்மை நம்மை ஆட்கொள்ளும். அந்த வெம்மை காமத்தின் மீதான காதலின் வெம்மை, காமத்தை முற்றழிப்பதற்கான வெம்மை.

இக்கவிதை தொகுப்பு தமிழில் இதுவரை வெளிவராத ஒற்றைப் பிம்பம் நோக்கி, ஒற்றைச்சாளரத்தின் வழியே தன்னை கண்டடையும் உள்முறை. ”நாம் பற்றுவதெல்லாம், தானும் பிறிதொன்றைப் பற்றி நிற்பதைத்தான். பேருந்தில் கம்பியைப் பற்றுகிறோம், கம்பியோ பேருந்தின் தளத்தைப் பற்றியிருக்கிறது, தளமோ சட்டகத்தைப் பற்றியிருக்கிறது, சட்டகமோ அடிதாங்கியைப் பற்றியிருக்கிறது, அடிதாங்கியோ உருளியைப் பற்றியிருக்கிறது, உருளியோ தரையைப் பற்றியிருக்கிறது, தரையோ பூமியைப் பற்றியிருக்கிறது, பூமியோ பிற கோள்களுடனான இழுவிசையைப் பற்றியிருக்கிறது, இவை எல்லாவற்றையும் அடக்கிய அண்டமோ பற்ற ஏதுமில்லாமல் வெட்ட வெளிதனில் கொட்டிக் கிடக்கிறது. ஏதோ ஒரு பிடி கிட்டாப் புள்ளியைத்தான் எல்லாமே ப்றறிக் கிடக்கின்றன. நாமும் பற்றத் தலைப்பட்டுச் சிக்கெனப் பிடித்தால் பற்றற்ற அந்தப் புள்ளியின் பிடி கிட்டாமலா போகும்?” அந்தப் பற்றும் பற்றற்ற பிடியாக காமத்தைக் காளியுடன் கையாண்டு, பற்றற்றான் பற்றினை பெற வள்ளுவரின் பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு வழி  கையாள்கிறார். கவிஞர். ஆக பற்றுவதே வாழ்வு என்று வாழ்வார்க்கு ஒன்று, ஒன்றையும் பற்றாது நிற்பவனைப் பற்றுக. அவனையே பற்றிப் பற்றிப் பற்றாமல் நிற்கப் பயில்க  என்பார் கரு. ஆறுமுகத்தமிழன். கவிஞரின் இப்பற்றினை ஒவ்வொரு கவிதையிலும் காணலாம்.

இக்கவிதைக்கு கவிஞர் கையாண்டிருக்கும், குறியீடுகள், உவமை அனைத்தும் தமிழுக்கு புதுமை. இதில் எந்தக் கவிதை முக்கியம், எது முக்கியமில்லை என்று பிரித்தரியா நிலையில் அனைத்தையும் பற்றும் விதத்தில் உள்ளது. நறை, ராஜபாட்டை, யோனி, நுசும்பு, கணுக்கால் என சில தொடர் பிரயோகங்கள் பயன்படுத்தினாலும், வெவ்வேறு சொல்லமைப்பில், புதிய பொருளில் அர்த்தப்படுத்தும் விதம் புதுமை.

நமது கவிதை மரபில் கவிஞர்கள் முதல் தலைமுறையில் இருந்து தங்களது அக தேடலை படிமத்தின் துனணக்கொண்டு படைத்துவருகின்றனர். அத்தகையவர்களின் ஆன்மிக உள்அகத்தேடலின் ஆதர்ச நாயகனாக பாரதியார், பிரமிள், நம்மாழ்வார், தேவதேவன் முதலிய கவிஞர்களை குறிப்பிடலாம். அவ்வரிசையில் பிரபுகங்காதரனை பின்பற்றி சமீப காலத்தில் அம்புயாதனத்துக் காளி போன்ற படைப்புகள் வரத்தொடங்கியுள்ளன. அதில் முக்கியமான மற்றொரு படைப்பு ஜெ. பிரான்சிஸ் கிருபாவின் காளியின் கூத்தில் ஒளியொரு தாளம் எனும் கவிதைத் தொகுப்பு.

இத்தகைய கவிதைகளின் அடிப்படை அலகாக இருப்பது கற்பனாவாதக் காமம் ஆகும். காளியின் கூத்தில் ஒளியொரு தாளம் கவிதைத் தொகுப்பிற்கான அறிமுகத்தில் கற்பனாவாதக் காமம் பற்றிய நிறை குறைகளை எழுத்தாளர் ஜெயமோகன் குறிப்பிட்டுள்ளது இத்தகைய கவிதைகளை அணுகுவதற்கு மிகவும் உதவிபுரிபவன,

கற்பனாவாதம் காமம் சார்ந்ததாக மட்டுமே நின்றுவிடுகையில் ஒரு வகையான சலிப்பை விரைவாகவே உருவாக்கிவிடுகிறது. கற்பனாவாதம் என்பது சிறகடித்தெழல். காமத்தில் சிறகடிப்பதற்கு சாண் அளவுக்கு அகலமான வலைக்கூண்டுதான் உள்ளது. எங்கெல்லாம் காமம் சார்ந்த கற்பனாவாதம் கலையாகிறதோ அங்கெல்லாம் அது அடுத்தகட்டத்திற்கு நகர்ந்திருப்பதைக் காணலாம்.

காமம் மானுட உறவுக்குக் குறியீடாக ஆகும். இயற்கையுடனான முயங்கலின் அடையாளமாகும். காலம் வெளியென தழுவி விரியும் பேருணர்வாகும். இறையனுபவமாக ஆகும். நாம் கொண்டாடும் மகத்தான அகத்துறைப் பாடல்கள் அனைத்துமே அவ்வகையில் காமம் என்னும் எல்லையை கடந்தவையே. இயற்கை இல்லாத சங்கப்பாடல்கள், பெருமாள் இல்லாத ஆழ்வார்களின் நாயகிபாவப் பாடல்கள் எப்படி கவிதையாகியிருக்கமுடியும்?

நவீனத்துவக் கவிதை காமத்தை மட்டுமே காண்கிறது. ஒவ்வொன்றையும் அது எதுவோ அதிலேயே நிறுத்துகிறது அதன் யதார்த்த நோக்கு. ஆனால் ஒவ்வொன்றிலிருந்தும் உச்சத்தை, முடிவிலியை நோக்கி எழுகிறது கற்பனாவாதக் கவிதை. அனைத்தையும் அங்குசெல்வதற்கான வழியாக ஆகிறது. கற்பனாவாதக் கவிஞனுக்கு வாழ்க்கையின் அனைத்துக்கூறுகளும் பறவைக்குக் கிளைநுனி போல எம்பி எழுவதற்கான தளங்கள் மட்டுமே.

நவீனத்துவத்தின் பார்வைக்குள் கற்பனாவாத அழகியலுடன் எழுதப்படும் கவிதைகளில் பல வெறுங்காமத்தையே வெளிப்படுத்துகின்றன. அவை அந்தக் கவிஞன் என்னும் தனிமனிதனின் அக அவசங்களை நோக்கி மட்டுமே நம்மைக் கொண்டுசெல்கின்றன. அவற்றுடன் நாம் நம்மை அடையாளம்கண்டுகொள்கையில் நம்மை பாதிக்கின்றன. நம் உணர்வுகளை அலைக்கழிக்கின்றன.ஆனால் அலைக்கழிக்கும் எந்த உணர்ச்சியிலிருந்தும் நாம் எளிதில் விடுபட்டுவிடுகிறோம். அதைப்போலவே நவீனத்துவக் கவிதை அளிக்கும் அந்த உணர்வூசலை மிக எளிதில் நிறுத்திக்கொள்கிறோம். என்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன்.

இக்கவிதைத் தொகுப்பில் இருந்து ஓரிரு கவிதைகள் இங்கு தரப்படுகின்றன. இவ்விரண்டு கவிதைத் தொகுப்பில் உள்ள ஒற்றுமைகள் இக்கவிதைகள் நமக்கு எடுத்துக்காட்டுவதாக உள்ளன.

உதாணத்திற்கு,

நாள் முழுக்க

நாடி நரம்புகளெங்கும்

ஒரு புதிர்குறித்த புரிதல்வேண்டி

முத்தங்களின் கருத்தரங்கங்கள்

நடந்துகொண்டிருக்க

பகலோரமாய் நிழலில் அமர்ந்து

மணற்கிண்ணத்தில் நிரம்பியிருந்த மதுவை

நிதானமாய் அருந்திக்கொண்டிருந்தது இரவு

அப்போது அவ்வழியாய்

நொண்டியடித்தபடி கண்டும் காணாமலும்

சென்றுகொண்டிருந்தது ஒரு கனவு”

எனும் கவிதை பிரபு கங்காதரனின் நீண்ட முத்தத்திற்கு என வரும் கவிதையுடன் ஒத்துப்போவதைக் காண முடிகிறது.

காளியின் இதழ்கள் களிமண் நிலத்தின் வெடிப்புகளாயிருக்கிறது வயல் நண்டாய் ஊடுருவிப் போகிறேன்எனும் கவிதையில் உதடு வெடிப்புகளை களிமண் நிலத்தின் வெடிப்புகளுக்கு உவமைப்படுத்துகிறார். மற்றொரு கவிதையில் காளியின் உடலை வருணிக்க ஆம்பல், களிமண் வாசனை, வைகாசியில் பழுத்த புளியின் வாசனை என தொடங்கி, காமத்தின் முதன்மை தளமான ஆதிவாசியாகிறேன் உன்னை நுகர்கையில் எனும் முடிவில் காமத்தின் அடியை தொட்டுச்செல்கிறான் கவிஞன்.

அடர்வனம் நாணும். காளியின் கெண்டைக்கால் உரோமம் காண்கையில்.

மரவட்டை போல் ஊருமென் மீசை காளி, வியர்வையாய் வழிந்தோடுகிறேன்,

அளவிற் பெரிய சதுப்பு நிலத்தை பௌர்ணமியிரவில் கடப்பது போலானது காளியுடனான முயக்கம், போன்ற பல புதிய உவமைகளை பயன்படுத்தி, சொற்களுக்கான புது அர்த்தத்தை காமத்தில் தன்னைத் தேடுவது போன்று தேடுகிறார் கவிஞர். அரைஞான் கயிற்றை வெள்ளிநதிக்கு ஒப்பிடும் உவமை என நீண்ட பட்டியல் போடலாம் கவிஞனின் உவமப்புதுமையை வெளிக்கொணர

எடுத்துக்காட்டாக,

ஒரு மலைச்சரிவின்

கருத்த பாறையின் மேல்

படர்ந்திருக்கிறாள் காளி

நீ..ண்……ண்..ண்……

முத்தத்தின் முடிவில்

மலைப்பாம்பாய்

எனை விழுங்குகிறாள்

கதகதப்பான

அவள் கருப்பைத்

தேடியமர்ந்து கொள்கிறேன்

 

என்ற கவிதையில் நீண்ட முத்தத்தின் கால அளவை காட்ட, சுஜாதா பயண்படுத்தும், அவன் மாடியிலிருந்து மெதுவாக

                                                                                                           

                                                                                                                       

ங்

                                                                                                                                   

கி

போன்ற உத்தியைப் பயன்படுத்தியிருக்கும் விதம், அந்த முத்தத்தை நாமும் நீண்ட நேரம் அனுபவிக்கும் ரசனையை ஏற்படுத்துகிறது. வாசக விருந்து என்றும் கொள்ளலாம்.

 

நீர் கொண்டு போகும் நத்தைப் போலலெனை முதுகில் சுமத்தியிருக்கிறாள் எனும் வரியில், நீர் போன்று தான் மிகவும் இயல்பானவன் என்று குறிக்கிறார். இக்கவிதைகள், ஆன்மீகத்தின் ஊற்றுக்கண் என்பதற்கு இந்த ஒருக்கவிதைப் போதும்,

 

முன்னும் பின்னும்.

பின்னும் முன்னும்.

யென நாவால் தவழ்ந்துன்

திருமேனியளந்து பிறவாப்

பேறடைவேன் மாகாளி

 

எனும் கவிதையை சுட்டலாம்பக்தி இலக்கியத்தில், இறைவனை துதிக்கும் பாடல்களின் ஒருவகை, கேசாதி பாதம், பாதாதி கேசம் என்பது. அதாவது இறைவனை பாதத்தில் இருந்து தலைவரை பாடுவது பாதாதி கேசம், தலையிலிருந்து பாதம் வரை பாடுவது கேசாதி பாதம் என்பதாகும். அதுபோன்று முன்னும் பின்னும். பின்னும் முன்னும் நாவால் தவழ்ந்து துதிப்பதாக இக்கவிதையைக் கொள்ளலாம் நாம். இதுபோன்று பலக் கவிதைகளை கூறப்போனால் மொத்தக் கவிதையையும் கூறிவிடுவதாக அமைந்துவிடும் என்பதால் இனி கவிதைகளைப் படித்து இன்பம் நுகர இத்தொடு நிறுத்துகிறேன்.

 

காளியெனும் பிம்பம் நம் மரபில், கோவத்தின், தீயசக்தியின், பயத்தின் குறியீடாகத்தான் கொள்வோம். அத்தகைய பிம்பத்தை, அன்பின், காமத்தின், காதலின் குறியீடாக் கொண்ட கவிஞனின் துணிச்சல் எதிலும் அன்பைக் காணும் நோக்கை அறிவுறுத்துகிறது.

 

காமம் வழியும் முக்தியை அடையலாம் என்று நவீனத்துவ வழியில் நிரூபிக்கும் தமிழின் முக்கிய ஆவனம் அம்புயாதனத்துக் காளி.

தமிழகம் கண்ட காந்தியர்கள் – பாவண்ணனின் ‘சத்தியத்தின் ஆட்சி’ நூல் குறித்து எஸ்.ஜெயஸ்ரீ

இன்று நம்மில் பல பேர், சுற்றுலா செல்லத் திட்டமிட்டால், வெளி நாடுகளோ, வெளி மாநிலங்களோ செல்லவே விரும்புகிறோம். நம் மாநிலத்திலேயே பார்க்காத இடங்கள் எத்தனையோ இருக்கிறதே என்று நினைப்பதேயில்லை. எந்த ஊரில் இருக்கும் கோவில்களூக்கோ சென்று வருவோம். அவரவர் சொந்த ஊரிலோ, அல்லது அருகிலோ இருக்கும் கோவில்களுக்குச் சென்று தரிசிக்க வேண்டும் என்றோ, அந்தக் கோவிலிலும் அழகாக உள்ள சிற்பங்களை நின்று ரசிக்க வேண்டும் என்றோ தோன்றுவதேயில்லை. நாம் இங்குதானே இருக்கிறோம்; பார்த்துக் கொள்ளலாம் என்ற மனோபாவமோ அல்லது உள்ளூர் பற்றிய ஒரு அலட்சிய மனப்பான்மையோ என்று பிரித்தறிய முடிவதில்லை. அது போல அண்ணல் காந்தியடிகள் பற்றி நமக்கெல்லாம் தெரியும். காந்தி தேசப் பிதா என்று தெரியும். அதை விட்டால், கோகலே, ..சி. பாரதி என்று மிகப் பிரபலமான தலைவர்கள் பற்றி மட்டுமே தெரிந்து வைத்திருக்கிறோம். காந்தியின் கொள்கைகள் வெற்றி பெற்றது, அவரது அற வழி, சத்தியாக்கிரகப் போரே என்று சொல்கிறோம். ஆனால், காந்தியின் அற வழிப் போராட்டத் திட்டங்கள் இந்திய நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பரவி செயல்படுத்தப்பட்டதற்கு எத்தனையோ மாபெரும் மனிதர்கள் தங்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள் அப்படியே.காந்தியக் கொள்கைகளை இம்மியளவும் பிசகாமல் சுவீகரித்துக் கொண்டு செயல்படுத்தியிருக்கிறார்கள். அவர்களின் பெயர்கள் கூட அதிக வெளிச்சத்திற்கு வராமல் இருக்கிறது.அப்படி செயல்படுத்தியவர்கள் பற்றித் தெரிந்து கொண்டால் கூட அதை ஒரு சாதாரண செய்தியாகக கடந்து போகிறோம். ஆனால், அவர்கள் அந்தந்தப் பகுதியில் இயக்கங்களைக் கட்டியிராவிட்டால், சுதந்திர வேட்கை நாடு முழுவதும் பரவுவதற்கு வாய்ப்பே இருந்திருக்காது. அதோடு, காந்தியின் கொள்கைகளான, கிராம சுயராஜ்ஜியம், மது விலக்கு, அந்நியத் துணி பகிஷ்கரிப்பு, சத்தியாக்கிரகம் போன்றவை நாட்டின் மூலை முடுக்குகளில் பரவியிருக்காது. அப்படிப்பட்ட ஆளுமைகளை எல்லோர்க்கும் அறிமுகப்படுத்தும் உயரிய நோக்கத்தோடு, பாவண்ணன் அவர்கள், அத்தகையோரைப் பற்றிய குறிப்புகளையும், ஆவணங்களையும், புத்தகக் குறிப்புகளையும் தேடித் தேடிப் படித்து, அதன் சாராம்சத்தைப் பிழிந்து சிறிய கட்டுரைகளாக எழுதியுள்ளார். அந்தக் கட்டுரைகளின் தொகுப்பே சமீபத்தில் வெளி வந்துள்ள அவரது “ சத்தியத்தின் ஆட்சி “ என்ற புத்தகம்.

இந்தத் தொகுப்பை எழுத வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்ட காரணத்தை பாவண்ணன் அழகாக முன்னுரையில் சொல்லியிருக்கிறார். அதுவே ஒரு கட்டுரையின் சுவாரசியத்தைக் கொடுக்கிறது. அவரது நண்பரும், எழுத்தளருமான விட்டல்ராவ், இவரோடு பகிர்ந்து கொண்ட சுவையான சம்பவத்தைக் குறிப்பிடுகிறார். சாவி இதழுக்காக மலர் தயாரிக்கும் பணியில் விட்டல்ராவுக்கும் ஒரு பங்கேற்பு கிடைத்தபோது, அவர், சென்னையை மையமாக வைத்தே, ஆழ்வார்பேட்டை மலர், வண்ணாரப்பேட்டை மலர் என் தயாரிக்கலாமே என்ற ஆர்வத்தில், அந்தப் புகுதியில் வசிக்கின்ற சில குறிப்பிடத்தக்க மனிதர்களை சந்தித்து உரையாடி,மலருக்கான கட்டுரைகளைத் தயாரித்தபோது, அது நிர்வாகத்தால் ஏற்றுக் கொள்ளப்படவேயில்லை. மைசூர் மலர், உதகை மலர் என்று தயாரிப்பதிலேயே ஆர்வம் காட்டப்பட்டது. இந்தச் சிறு பொறியே பாவண்ணனை ஆங்காங்கே தோன்றி மறைந்த காந்தியர்களைப் பற்றித் தொகுக்க வேண்டும் என்ற மன எழுச்சியை அவருக்குக் கொடுத்தது.

காந்தி ஒரு சுதந்திரப் போராளி என்பவர் மட்டுமல்லர். அவர் ஒரு சத்குருவுக்கு ஒப்பானவர். சத்குரு என்பவர் யாருக்கும் எந்த போதனைகளையும் ஓதுவதில்லை. தன் வாழ்க்கை நடைமுறைகள் மூலம், தன் பண்புகள் மூலம், தன் அனுபவங்களிலிருந்து தன் வாழ்க்கையைத் தான் தகவமைத்துக் கொண்டு, தன் வாழ்க்கையே மற்றவர்களுக்குப் போதனையாக அமையும்படிச் செய்பவர். அவர்.வழியாக தங்கள் வாழ்க்கையின் திசையைத் தீர்மானித்துக் கொண்ட ஆளுமைகள் பலர். .வே.சாமிநாதய்யர் தமிழ் நூல்களைத் தேடித் தேடிச் சேகரித்தது போல, பாவண்ணன், காந்திய ஆளுமைகளத் தேடித் தேடிப் படித்து தொகுப்பாக்கியுள்ளார்.

இந்தத் தொகுப்பில், பதினான்கு காந்திய ஆளுமைகள் பற்றிய கட்டுரைகள் உள்ளன. இவர்கள் அனைவரும் காந்தியை ஒரே ஒரு முறை சந்தித்தோ, கடிதத் தொடர்பு கொண்ட பிறகோ உடனே தங்களையும் அப்படி மாற்றிக் கொண்டு இந்த சமுதாய மாற்றத்திற்கும், சுதந்திரத்திற்கும் பாடுபட்டவர்களாகின்றனர்.

பெண் விடுதலை, பெண் சுதந்திரம் என்ற வார்த்தைகள் கூட அதிகம் புழங்காத அந்தக்காலத்தில்,பெரிய பணக்காரக் குடும்பத்திலிருந்து வெளிவந்து, போராடிய பெண் ஆளுமைகள் பற்றிய கட்டுரைகள் மூன்று இந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. சௌந்திரம் அம்மா டி.வி.எஸ். குடும்பத்திலிருந்து வந்த பெண்மணி. அவருடைய இளமை வாழ்க்கை வெகு சீக்கிரமாகவே கருகி விட, அப்போதே அவர் காந்தியின் முன், மறுமணம் செய்து கொண்டார். காந்தியே அதை நடத்தி வைத்தார். காந்தியின் கொள்கையான கிராம சுயராஜ்ஜியம், சுய சார்பு இவற்றை நடைமுறப்படுத்தியதில் இவருக்கு பெரும்பங்குண்டு. பெண்களுக்குக் கைத்தொழில்கள் பயிற்சி மையங்களும், ஆரோக்கியத்தை சொல்லித்தரும் மையங்களும் என் கிட்டத்தட்ட அறுபது மையங்களை இவர் ஏற்படுத்தியிருக்கிறார். இவரது சேவைக்கு சாட்சியாக இன்றும் மதுரையில்,டி.சுப்பலாபுரத்தில் சௌந்திரம் காலனி இருப்பது பெருமைக்குரியது. காந்தியின் வழியைப் பின்பற்றுபவர்கள், நாட்டின் சேவையை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருந்தார்களே ஒழிய, தங்களுக்குப் பெருமை தேடிக் கொள்வதற்காக அல்ல அவருக்கு ஒரு சிலை நிறுவ ஒருவர் அனுமதி கேட்டபோது, அதை மறுத்ததோடு, அப்படி சிலை நிறுவினால், தான் அந்தச் சிலை முன்பாக அமர்ந்து உண்ணாவிரதமிருந்து உயிர் விடுவேன் என்றார். புகைப்படத்துக்காக குப்பை தள்ளுவது போல பாவனை செய்து, உடனே அந்த இடத்தில் தனக்கு சிலை நிறுவிக்கொள்ளும் காரியவாதத் தலைவர்கள் இருக்கும் இந்த நாட்டில், சௌந்திரம் போன்ற ஆளுமைகள் நினைந்து நினைந்து போற்றத் தகுந்தவர்கள்.

அது போலவே, கோதைநாயகி அம்மாள், அம்புஜம்மாள். இவர்கள் மூவருமே, ஏதோ சாப்பாட்டுக்கு வழி இல்லாமல், தேசிய சேவை என்ற பெயரில் காந்தியுடன் இணைந்தவர்கள் அல்லர். பெண்களுக்கென்று இயற்கையாக நகை, பணம் என்ற ஆசைகளை ஒதுக்கி, வீட்டில் அடைபட்டுக் கிடப்பதே நல்ல பெண்களுக்கு லட்சணம் என்ற கட்டுக்களையெல்லாம் உடைத்து, தம் பகட்டாடை, ஆபரணங்கள் துறந்து, வீதியில் இறங்கிப் போராடியதை மிகச் சாதாரண விஷயமாகத் தள்ளி விட்டுப் போக முடியாது. இந்தப் பெண்மணிகள், தங்கள் கல்வி எல்லாமே கிராமப்புற பெண்களுக்குப் பயன்படும் விதத்தில் காந்திய வழியில் ஆசிரமங்களை நிறுவியிருக்கிறார்கள். அதற்குத் தங்களுக்குச் சொந்தமான இடங்களையே பயன்படுத்தியிருக்கிறார்கள். மது ஒழிப்பு என்ற காந்தியின் கொள்கைகளச் செயலாற்ற இவர்கள் பெண்களைச் சேர்த்துக் கொண்டு, கள்ளுக் கடைகள் முன்னால் நின்று கொண்டு, கள்ளுக் கடைகளுக்குச் செல்வோரைத் தடுத்து நிறுத்தும் போராட்டத்தை செய்திருக்கிறார்கள். இதற்காக கள்ளுக்கடை உரிமையாளர்களின் தாக்குதலுக்கு உள்ளாயிருக்கிறார்கள். துணிக்கடைகளுக்கு முன்னால் நின்று கொண்டு அந்நியத் துணிகளைப் பகிஷ்கரிபோம் என்று போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். அதற்காகச் சிறை சென்றிருக்கிறார்கள். அம்புஜம்மாள், தன்னிடம் இருந்த தங்க ஆபரணன்களை அப்படியே காந்தியின் தேசிய சேவைக்கு முழுவதுமாகக் கொடுத்து விட்டார். கோதைநாயகி அம்மாள், சிறந்த பேச்சாளராக இருந்ததோடு, நன்றாகப் பாடும் திறமையும் கொண்டிருந்தார். அவர், கதராடை, மது அருந்தாமை ஆகியவற்றை வலியுறுத்தி மேடைப் பேச்சுகள் பேச ஆரம்பிக்கும்போது, சுதந்திர உணர்வைத் தட்டி எழுப்பும் பாடல்களைப் பாடுவார்.காந்திக்கு மிகவும் பிடித்த குஜராத்திக் கவிஞர் நரசிங்க மேத்தா அவர்கள் எழுதிய வைஷ்ணவ ஜனதோ பாடலை, சங்கு சுப்பிரமணியன் அவர்கள் தமிழில் மொழிபெயர்த்ததை, கோதைநாயகி அம்மாள் மேடை தோறும் பாடுவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார்.

வேதரத்தினம் பற்றிய கட்டுரையில்,உப்புச் சத்தியாக்கிரக போராட்டத்தின்போது, வேதாரணயம் நோக்கிப் போகும் தொண்டர்களுக்கு ஆங்காங்கே மரங்களில் உணவுப் பொட்டலங்கள் கட்டித் தொங்க விட்டிருக்கும் என்ற தகவல் மிகவும் சுவாரசியமானது திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் நிலச்சுவான்தாரர்களிடமிருந்து நிலங்களைப் பெற்று ஏழைகளுக்கு வழங்கினார் .அது போல வேதாரண்யம் அருகில் புயல் தாக்கி, மக்கள் வீடு வாசலை இழந்து நின்றபோது, ராமகிருஷ்ணா மடத்தின் உதவியோடு அவர்களுக்கு வீடுகளைக் கட்டித் தந்தார். இவரோடு உப்புச் சத்தியாக்கிரக் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் ஒருவர் நாராயணசாமி ஐயர். சுதந்திரப் போராட்டத்திற்காக தன் சொத்துகள் முழுவதையும் இழந்து விட்டார். 1945 ல், தன் இறுதிக்காலம் நெருங்கிவிட்டதாகக் கூறி, தன் இரு மகள்களையும் வேதரத்தினத்திடம் ஒப்படைத்தார். இந்த நிகழ்ச்சியை வாசிக்கும்போது, இது சங்க காலத்தில் பாரி மகள்கள், கபிலரிடம் ஒப்படைக்கப்பட்டதோடு தொடர்புபடுத்திக் கொள்ள முடிகிறது.

மற்ற ஆளுமைகளான தி.சே.சௌ.ராஜன், குமரப்பா, ராஜாஜி, மதுரை வைத்திய நாதய்யர், அவனாசிலிங்க செட்டியார் என்று ஒவ்வொருவரப் பற்றியும் வாசிக்கும்போது, சுதந்திரப் போராட்டத்தின் வீச்சு எப்படி இருந்தது என்பதை நம்மால் உண்ர்ந்து கொள்ள முடிகிறது. காந்தியர்கள் எப்படி ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்டிருந்திருக்கிறார்கள் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. மதுரை வைத்தியநாதய்யர், ஹரிஜன மேம்பாட்டுக்காவும், ஹரிஜனங்களும் ஆலயங்களுக்குள் செல்ல வேண்டும் போராட்டம் நடத்தும்போது, மாகாணப் பொறுப்பு வகிக்கும் வாய்ப்பு தனக்கு கிடைத்ததை ராஜாஜி அருமையாகப் பயன்படுத்தியிருக்கிறார். ஆலயப் பிரவேசச் சட்டம்,மது விலக்குச் சட்டம், விவசாயிகள் கடன் நிவாரணச் சட்டம் போன்றவற்றை இயற்றியிருக்கிறார். காந்தி தண்டி யாத்திரையை தொடங்கியபொழுது, ராஜாஜி, திருச்சி தி,சே.சௌ.ராஜன் வீட்டிலிருந்து வேதாரண்யம் நோக்கி தன் உப்புச் சத்தியாக்கிரக யாத்திரையைத் தொடங்கியிருக்கிறார். அதைப் போல, காந்தி சென்னைக்கு வரும்போதெல்லாம் தங்கும் இந்தியன் ரிவ்யூ பத்திரிகையின் ஆசிரியர் ஜி. நடேசன் வீட்டில்தான் கோ.சுவாமிநாதன், காந்தியைச் சந்தித்திருக்கிறார். நடேசன் தான், அம்புஜம்மாள் அவர்களின் தந்தையார் சீனிவாச ஐயங்காரின் வீட்டுக்கு காந்தியை விருந்துக்கு அழைத்து வந்திருக்கிறார். அங்குதான், அம்புஜம்மாள் காந்தியைச் சந்தித்ததும், மன மாற்றமும் நிகழ்ந்தது.

திருப்பூரைச் சேர்ந்த அவினாசிலிங்கம் கோவையில் குருகுல முறையில் ஒரு பள்ளியை நடத்தி வந்தார். காந்தி கோவைப் பகுதிக்கு வரும்போது அங்குதான் தங்குவார். அவினாசி, தமிழ்நாட்டில் காந்தி பயணிக்கும்போது அதிகமாக உடனிருந்திருக்கிறார்.அப்போது தான் கவனித்த சிலவற்றை காந்தியடிகள் பற்றிய குரிப்பாகக் குறித்து வைத்துள்ளார். ஒரு கூட்டம் முடித்து, மதிய உணவு சாப்பிட்டு ஆனவுடன், இலைகளை எடுத்தவர் அப்படியே சிதறலாக போட்டு விடுகிறார். காந்தி அவற்றையெடுத்து குழிக்குள் போட்டு சுத்தம் செய்தார்.இன்னொரு முறை, அவினாசி மழையில் சேற்றில் இறங்கி நடக்கத் தயங்கும்போது காந்தி அதில் இறங்கி நடந்து வருவதைக் கவனித்தார். அவருக்கு காந்தியைக் கூடவே இருந்து அவருடைய பழக்க வழக்கங்களை உற்றுக் கவனிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது

அது போல டங்கன் காந்தியைச் சந்திக்கும்போது, அவர்கள் நடந்து வரும் வழியில் பலர் மலம் கழித்துவிட்டுச் சென்றிருப்பார்கள். காந்தி சிறிதும் தயங்காமல், அவற்றை மண்ணில் தள்ளி புதைப்பார்.

தக்கர் பாபா, முழுக்க முழுக்க காந்தியின் ஹரிஜன சேவாவைக் கைக் கொண்டு வாழ்ந்தார். கோ. சுவாமிநாதன், கல்லூரி மாணவராகக் காந்தியடிகளைக் காண வந்தார். சென்னைக்கு காந்தி வரும்போதெல்லாம், அவருக்குக் கூடவே இருந்து ,கூட்டம் நடக்கும் இடங்களுக்கு அழைத்துச் செல்வது, எழுதும்போது உடனிருந்து உதவி செய்வது என ஒரு சீடன், குருவுக்கு சேவை செய்வது போல செய்தார். ஆனால், கல்லூரி மாணவர்களில் ஆசிரமத்துக்கு அழைத்துப் போவதற்காக அவர் காந்தியடிகளால் தேர்ந்தெடுக்கப் படவில்லை. தக்க தருணம் வரும்போது நானே அழிப்பேன் என காந்தியடிகள் கூறி விட்டார். காந்தியடிகள் மறைவு வரை அவருக்கு அழைப்பு வரவேயில்லை. காந்தியின் மறைவுக்குப் பிறகு, காந்தியடிகளின் கடிதங்கள், கட்டுரைகள், பேச்சுகள் என் எல்லாவற்றையும் தொகுக்கும் பணி அவருக்குக் கிடைத்தது. அப்போது அவருக்கு வயது 63. அதையே அவர் தனக்கு காந்தி கொடுத்த அழப்பாகவே எடுத்துக் கொண்டு மகிழ்ச்சியாக செய்தார். கிட்டத்தட்ட 50000 பக்கங்கள். ஆனால், அவருடைய அந்த அர்ப்பணிப்பு மிக்க வேலை மிகச் சரியாகக் கண்டு கொள்ளப்படவேயில்லை. காந்தியின் ஆக்கங்களை நூறு தொகுதிகளாகத் தொகுத்தவர் சுவாமிநாதன். நூறவது தொகுதியில் தொகுத்தவர்கள் பட்டியலில் அவருடைய பெயரும் பத்தோடு பதினொன்றாகச் சேர்க்கப்பட்டிருந்தது. அவ்வளவே. வெளியீட்டு விழாவில் எந்தத் தலைவரும் சுவாமிநாதன் பற்றி ஒரு வார்த்தை கூடக் குறிப்பிடவில்லை.தன் பெயரை ஒருபோதும் முன் வைத்துக் கொள்ள விரும்பாத தொண்டர் இவர். இது காந்திய சிந்தனைகளை தன் வாழ்க்கை முறையாகக் கைக் கொண்டவர்களால் மட்டுமே முடியும்.

லண்டனிலிருந்து மருத்துவம் பயின்று இந்தியா திரும்பிய தி.செ.சௌ. ராஜன், திருச்சி பகுதியில், கதர்ப்பிரச்சாரம்., மது ஒழிப்பு போன்றவற்றில் தீவிரமாக ஈடுபட்டதோடு, காங்கிரஸுக்கு உறுப்பினர்கள் சேர்ப்பதிலும் தீவிரமாக ஈடுபட்டார். அவரி சிறை வாழ்க்கையை அனுபவித்தபோது, சிறையில் பலருக்கு மலத் தொற்று ஏற்பட, இவர் மருத்துவராக இருந்ததால், தானே, பலருக்கும் மல மாதிரியை சோதிக்கும் பணியைச் செய்தார்.அதனால், அவருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டது.அதனால், மருத்துவமனையில் சேர்ந்து சிக்கிச்சை பெற வேண்டிய சூழல் ஏற்பட்டது. அவரை, மருத்துவமனையில் வந்து பார்க்க வந்த மாகாண சிறை அதிகாரி அவர் செய்த சேவையைப் பற்றி பாராட்டாமல், உடனடியாக மீண்டும் சிறைக்கு அனுப்பப்பட உத்தரவிட்டார். இப்படி எந்த எதிர்பார்ப்புமில்லாமல், துன்பங்களை அனுபவித்த ராஜன் போன்றவர்கள் காந்தி என்ற அந்த ஈர்ப்பு மையத்தில் மட்டுமே நின்றிருந்தார்கள்.

இதைப்போலவே, இங்கிலாந்திலிருந்து வணிக நிர்வாகவியல் படித்து முடித்த இளைஞராக வந்த ஜே.சி.குமரப்பா, தான் எழுதிய பொருளாதாரக் கட்டுரைகளைக் காட்டுவதற்காக வந்தவர்தான். ஆனால், காந்தியால் ஈர்க்கப்பட்டு யங் இந்தியாவில் பல கட்டுரைகளை எழுதினார். இங்கிலாந்து அரசு கோடிக்கணக்கில் வரிப்பணத்தை வசூலித்துக் கொண்டு, இன்னும் இந்தியா, இங்கிலந்துக்குக் கடன் பட்டுள்ளது என் அறிவித்தது. குமரப்பா, இங்கிலாந்து, தன் போர்ச் செலவுக் கணக்கையெல்லாம் இதில் சேர்த்துள்ளது என்க் கண்டுபிடித்து அறிக்கை சமர்ப்பித்தார். அத்னால், அவர் சிறை செல்ல நேர்ந்தது. குமரப்பா, பொது நிதி மிகச் சரியாகக் கணக்கு வைக்கப்பட வேண்டும் என்பதிலும், நிதியைக் கையாள்வதிலும் மிகவும் கறாராக இருந்தார். பீகார் நிவாரணப்பணிகள், மற்றும் காந்தி திரட்டிய நிதியை கணக்கு வைத்துக் கொள்வது போன்ற பணிகளை அவர் மிகச் சரியாக செய்து வந்தார். கிராமியத் தொழில்கள், கால்நடைகளின் நல்வாழ்க்கை போன்றவற்றில் மிகுந்த கவனம் செலுத்தினார். இப்படி காந்தியின் அடியொற்றித் திறமையாக பணியாற்றியவர் குமரப்பா.

1928 ஆம் ஆண்டு காந்தியடிகள் இலங்கைக்குச் சென்றிருந்தார். அங்கு காந்தியால் கவரப்பட்ட ராஜகோபால், இந்தியா வந்தார். வைத்தியநாதய்யரின் பரிந்துரையின் பேரில் காந்தி ராஜகோபாலை ஆசிரமத்தில் சேர்த்துக் கொண்டார். அந்நியத் துணிகள் பகிஷ்கரிப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றார். உப்புச்சத்தியாக்கிரகத்தில் பங்கெடுத்துக் கொண்ட பிறகு, நானூறு மைல்கள் நடைப்பயணமாகவே சென்னை வந்தார். வரும் வழியெல்லாம் மக்கள் சந்திப்பு பிரச்சாரங்களை நிகழ்த்தினார். இவர் தன் வரலாற்றுக் குறிப்புகளை எழுதி வைத்துள்ளார். அதில் காந்தியடிகள் கண்ணீர் விட்டு அழுத இரண்டு நிகழ்ச்சிகளைப் பதிவு செய்துள்ளார். புரட்சிகர இளைஞர் ஒருவர் சிறைக் கொடுமைகளைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் ஆங்கிலேய அதிகாரி ஒருவரை சுடுவதற்குப் பதிலாக, வேறொரு அதிகாரியைச் சுட்டு விடுகிறார். இதை எதிர்த்து காநதி அகமதாபாத் காங்கிரஸ் கூட்டத்தில் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். யாரும் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. அப்போது அகிம்சைக் கொள்கைகளை தன்னைச் சுற்றியிருப்பவர்களுக்கே புரிய வைக்க முடியவில்லையே என்று கண்ணீர் விட்டு காந்தி அழுதார்.

மற்றொன்று, நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, எங்கு பார்த்தாலும் மத மோதல்கள். ஒரு சீக்கிய கிராமத்தினை பகைக் கும்பல் முற்றுகையிட்டு, அங்கிருந்த 74 இளம்பெண்களை மணமுடிக்கத் திட்டமிட்டனர். அந்தப் பெண்கள் குளித்து வருகிறோம் என்று சொல்லி சென்று, தண்ணீரில் மூழ்கி உயிர் விட்டனர்.உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஒரே ஒரு பெண்ணை சுசிலா நய்யார் உயிர் பிழைக்க வைத்தார். அப்போதும், காந்தி அகிம்சை வழிக் கொள்கைகளை யாருமே சரியாகப் புரிந்து கொள்ளவில்லையே என்று கண்ணீர் விட்டு அழுதார்.

காந்தியோடு பழகும் வாய்ப்போ, இருக்கும் வாய்ப்போ கிடைக்கப் பெற்றவர்கள், தன்னெழுச்சியாக அவரைப் போல தாங்களும் மாறி விடுகிறார்கள். அது அவரது ஆளுமையின் பலத்தையே காட்டுகிறது.அவினாசிலிங்கம், காந்தியுடனான தன் அனுபவங்களை, :நான் கண்ட மகாத்மா” என்று ஒரு நூலாகத் தொகுத்துள்ளார். அதில் குறிப்பிடுகிறார்: அவரிடம் பேசும் விஷயங்களை விட, அவர் நம் மீது காட்டும் அன்பும்,அதன் வழியாக நம் மனத்தில் உருவாகும் எழுச்சியும் மிகமிக முக்கியமானவை. அவரிடம் சென்று வரும் ஒவ்வொரு முறையும், உயர்ந்த லட்சியங்களப் பின்பற்றும் மனவலிமை தோன்றுகிறது.உயர்வான செயல்களில் நம்பிக்கை பிறக்கிறது. சோர்வு அகன்று விடுகிறது. வெறுப்பு மறைந்து விடுகிறது எல்லாவற்றுக்கும் மேலாகநாமும் உயர்ந்த செயல்களைச் செய்து சாதிக்க முடியும் என்கிற எண்ணமும் துணிச்சலும் உருவாகிறது. அதுதான் காந்தியடிகளிடம் இருக்கும் சக்தி அது நம்மையும் அறியாமல் நம்மை உயர்த்துகிறது” என்று குறிப்பிடுகிறார். அவினாசி குறிப்பிட்டுள்ள இந்த வரிகளே காந்தி எப்படி ஒரு காந்த விசையாக இருந்து தன்பால் தொண்டர்களை ஈர்த்திருக்கிறார் என்பதை நமக்கு புரிய வைக்கும்.

இதில் குறிப்பிடப்பட்டுள்ள ஆளுமைகள் பற்றிய புத்தகங்களைத் தேடி எடுத்து பாவண்ணன் தொகுத்துள்ளதை வாசித்து இப்படி பல தகவல்களப் பெற்றுக் கொள்ள முடிகிறது. புத்தகங்களையே வாசிக்கும்ஆவல் எழுகிறது. ஒரு சில கட்டுரைகளில் மட்டுமே புத்தகங்களின் பெயர் கிடைக்கின்றன..

இப்படி வெளியில் அறியப்படாத ஆளுமைகளை தெரிய வைப்பதில் ஈடுபட்டிருக்கும் பாவண்ணன் பாராட்டுக்குரியவர். ஒரு கட்டுரை எழுத அவர் எத்தனை நூறு, ஆயிரம் பக்கங்கள் படித்திருக்க வேண்டும் என்ற மலைப்பு எழுகிறது. அடுத்த தொகுதியையும் கொண்டு வரப்போவதாக முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். பாவண்ணன், எப்போதுமே, தான் படித்ததை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள அதிக விருப்பமுள்ளவர். தனக்குப் பிடித்த கதைகள், நாவல்கள், கவிதைகள், நல்ல சினிமாக்கள், நல்ல ஓவியங்கள், நல்ல இசை என பலவற்றைப் பற்றியும் கட்டுரைகளாகவும்,, தொகுப்புகளாகவும் கொண்டு வந்திருக்கிறார். அந்த வரிசையில் இப்போது இந்தத் தொகுப்பு. பல தலைவர்கள் பற்றிக் கூட தெரிந்து கொள்ளாத, கொள்ள முடியாத, இருட்டடிப்பு செய்யப்படுகிற இன்றைய சூழலில், தேடித் தேடி அவர் காந்திய ஆளுமைகள் பற்றி தொகுத்திருப்பது மிகுந்த போற்றுதலுக்குரிய செயல்.

சிறப்பான முறையில் வெளியிட்டிருக்கும் சந்தியா பதிப்பகத்தினர் பாராட்டுக்குரியவர்கள். அட்டை வடிவமைப்பு சிறப்பு. அட்டையில் பதிதிருக்கும் முகங்களை அந்தந்தக் கட்டுரையின் தலைப்பிலும் பதித்திருந்தால் புரிதலுக்கு இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். அது போல கட்டுரைத்தலைப்புகளில் அடைப்புக் குறிக்குள் எந்த தலைவர் பற்றியது என்ற பெயரையும் போட்டிருக்கலாம். புத்தகத்தை வாசித்து முடிக்கும்போது காந்தியக் கொள்கைகளின் மீது பற்று ஏற்படுவது உறுதி.

 

( சத்தியத்தின் ஆட்சிஆசிரியர்: பாவண்ணன்வெளியீடு : சந்தியா பதிப்பகம், விலை: ரூ. 175/- பக்கங்கள்;176)