வைரவன் லெ ரா
‘வானம் பிளந்து கடலாய் கொட்டும்
பூமி பிளந்து தாகம் தீர்க்கும்’
‘சதைகளால் பிணைக்கப்பட்ட பெரும்தொகுப்பு மேலும் கீழுமாய் ஒரே நேரவரிசையில் உடலை இறக்கி ஏற்றியது. ஆத்துமாக்கள் அவர்களின் நிழலாய் காலடியில் கிடந்தது. எவரின் விழித் திரைகளும் அதற்குரிய இடத்தில் இல்லை. அவர்கள் தீர்க்கமாக நம்பினார்கள். ஆண்குறிகள், பெண்களின் மார்புகள் அறுக்கப்பட்டும், யோனிகள் சிதைக்கப்பட்டும் இரத்தம் இறுகி காய்ந்த உயிருள்ள சவங்கள் அவர்கள். குழந்தைகளே இல்லை, முன்னரே அறியப்பட்டு பலியிடப்பட்டு இருப்பார்கள். ஒளியில்லா மாமிசப் பந்தின் அகம் போலவே, இருளடைந்த உலகம் அவர்களுக்காகவே வாய்க்கப்பட்டு இருந்தது, சாம்பலே உயர சூழ்ந்து இருந்தது. அகரமும் உகரமும் மட்டுமே உக்கிரமாக காற்றுவெளியில் நிறைந்து இருந்தது, இவ்வொலி அவர்களின் தொண்டையில் இருந்தும், கால் கீழ் இருந்த நிலத்தில் இருந்தும் பிறந்தது. தூரவெளியில் கொலை மிருகங்கள் நான்கு கால் சாதுக்களால் வேட்டையாடப்பட்டது. எல்லாமுமே நடந்தாக வேண்டும், அதுதான் இந்நிகழ்வின் தீர்ப்பு எனத் தீர்க்கமாக அவர்கள் நம்பினார்கள். இளையவன் ஒருவன் தூரமாய் இருந்தப்படி இதையெல்லாம் கூர்க்கல் கொண்டு பாரையிடுக்கில் வரைந்தப்படி இருந்தான்’
“புதிய ஏற்பாட்டுலயும் புதிய உலகம் இருக்கு, எழுதினது யோவான். அவரும் இயேசுவோட சீடர்னு சொல்றாங்க. விவிலியத்துல நிறைய இடத்துல யோவான் வராரு. ஆனா எல்லாரும் ஒரே ஆளுன்னு எங்கயும் தெளிவுகள் இல்ல. அது ஒரு சாது மாதிரி பொதுவான பேரா இருக்கலாம். விஷ்ணுவோட அவதாரத்துலயும் கல்கி இதுக்காகத்தான், கலியுகத்துல நடக்கும்னு அவங்களும் நம்புறாங்க. ஐரோப்பிய, கிரேக்க தொன்மங்கள் எல்லாமுமே புதிய உலகம் பற்றி பேசுது. இந்த குகை சிற்பங்கள் பாருங்க, சின்ன சின்ன கிறுக்கல்கள் மனிதர்களா இருப்பாங்க. எல்லாருமே மேல பார்க்கிறாங்க. வானம் கிழியிற மாதிரி கிறுக்கிருக்காங்க. அதோ அந்த பக்கம் மொத்தமா கிறுக்கல்கள் அழிவோட குறியீடு மாதிரி இருக்கு. மொத்தத்துல உலகம் முழுக்க அழிவு எல்லா மதத்துலயும் பேசப்பட்டு இருக்கு, குறிப்புகள் அவங்க புனித நூலுல தொகுத்து இருக்காங்க” ஜெயனின் பேச்சுக்களை ஆடம் வெறுமனே கேட்பது போன்ற முகப்பாவனையில் இருந்தாலும், வார்த்தைகள் உள்ளுக்குள் என்றோ கண்ட ஆவணப்படத்தின் காட்சிகளை நினைவுப்படுத்தியது.
“ஜெயன், நீங்க சொல்றத நா ஏத்துக்கிறேன். இயல்பாவே ஏதோ ஒரு கணத்துல பிறந்த எல்லா ஜீவராசியுமே அதுக்கான கர்மபலன் செய்யுது. மாத்தி செய்றது ஆறறிவு கர்வத்துல நாமதானே. இயற்கையின் கட்டுமானத்த சிதைக்கிறோம். இதுக்கு கடவுள் மேல பழி போடுறோம். இந்தியா வந்ததுமே இங்குள்ள தொன்மங்கள், பழங்குடி கதைகள் மேலதான் என்னோட ஈர்ப்பு எல்லாமுமே. உங்க கூட நிக்கிறதுக்கான காரணம் அதுதான். உலகம் முழுக்க இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்துல அழிவுக்கான நாளுன்னு அவங்களோட மூதாதையர் குறிப்பிட்ட நாட்களுல எவ்வளோ குழு தற்கொலைகள் நடந்ததன. தவறுகளுக்கு நாம இன்னும் பயப்படுறோம். அதோட வெளிப்பாடு குறிப்புகளா எழுதப்பட்டு ஒரு வித புனித நிலையை அடையும். கூடவே பல கிளைக் கதைகள் இயல்பாவே இணையும். பல நதிகள் கலக்கிற கடல் மாதிரி, கடல் எல்லாத்தையும் உள்வாங்கி சலனமில்லால் கரையில் இருந்து பார்க்கிறப்ப தோணும். உள்ள போனாத்தான் கடலோட தன்மை புரியும்”
“இயற்கையோட எல்லா உணர்ச்சிகளும் கடவுளா மாறுது. மழை, நெருப்பு, இடி, காற்று, வானம் பஞ்சபூதங்களும், கூடவே மனித உணர்ச்சிகளும் அன்பு, பேராசை, பொறாமை, இரக்கம், காமம் கடவுள்களா உருமாற்றம் அடையுது. புனித நூல்கள் உணர்ச்சிக்குவியலின் கூட்டு உருவம் தான். இறுதியாய் அறம், மனிதம் பேசப்படும். எல்லா இசமும் இதைத்தான் வேற வேற கருத்துகளா பதிவு செய்யுது” ஜெயன் சொல்லிக்கொண்டே பாறை ஒன்றில் ஏறி அமர்ந்தார். வயதுக்கான முதிர்ச்சியை விட அவரின் அணுகுமுறை இருந்தாலும், உடலளவில் மிகவும் வலுவானவராக இருக்கிறார் என ஆடம் யோசித்தான். அவனும் பாறைகளில் ஏறினான். “எத்தனையோ ஆதிக்குடிகளோட நேரடி உரையாடல் செஞ்சுருக்கேன். அவர்கள் தங்களுக்கான தவறுகளின் பிராயச்சித்தமா கடவுளுக்கு பலி குடுக்கிறாங்க. உணவுக்கான விலங்கை வேட்டையாடுறது, கூரை வேய மரத்தோட இலைகளை அறுக்கிறது. இலைகள் மரத்தோட கண்களுன்னு சொல்றவங்கல சந்திச்சு இருக்கேன். முக்கியமா பூமில இருக்கிற எல்லா உயிருக்கும் ஆன்மா இருக்குன்னு நம்புறாங்க. மாற்றம்ங்கிற பேர்ல நாம என்ன செய்யுறோம்.” ஆடம் பேசிக்கொண்டே ஜெயனை நோக்கினான். வெறுமனே கைகளை பிசைந்தப் படி, நுனிவானின் எல்லைகளை பார்த்தப் படி அமர்ந்திருந்தான்.
ஆடமின் கண்கள் தன்னிடம் மையம் கொண்டிருப்பதை உணர்ந்த ஜெயன் “இந்த குகை சிற்பங்கள் வரைஞ்சவங்க மனநிலை என்னவா இருக்கும். அவங்க என்ன பாத்திருப்பாங்க, நடந்தத வரைஞ்சாங்களா இல்ல நடக்க போறத வரைஞ்சாங்களா”. “சரி, இறங்குவோம். இருட்ட ஆரம்பிக்குது” ஆடம் எழுந்து நின்றான். செந்நிற கதிர்கள் விளையாட்டை முடித்து அதன் கூடு திரும்ப ஆரம்பித்தது. பாறைச் சறுக்கம் அவர்களின் பாதங்களைப் பற்றி நடக்கும்படி நிர்பந்தித்தது.
ஹவாயின் எரிமலை வெடிப்பை நேரில் காண அவர்கள் வந்திருந்தார்கள். வந்தவிடத்தில் இக்குகை சிற்பங்களை காண அவர்கள் தங்கியிருந்த அறையின் மேலாளர் கேட்டுக்கொண்ட படி சென்று வந்தார்கள். அவர் தன்னை லோனே என்று அறிமுகப்படுத்தி கொண்டார். வந்தவர்கள் எழுத்தாளர்கள் என்பதாலும், ஒருவர் இந்தியர் இன்னொருவர் ஜெர்மானியர் என்பதாலும் அவர்களோடு உரையாடலை விரும்பி அன்றைய இரவே விருந்துக்கும் ஏற்பாடு செய்திருந்தார். ஜெயனும் ஆடமும் அறையில் அதிக நேரம் இருந்ததால் நேரமாகவே விருந்துக்கு சென்றார்கள். விடுதியில் அவருடைய அறையில் எல்லாமுமே தயாராகவே இருந்தது. விரும்பி வரவேற்றார்.
“உங்களை நான் மிகவும் மதிக்கிறேன். வந்ததற்கு நன்றி.” சிரித்த முகத்துடன் லோனே கூறினார். “எங்களுக்கும் மகிழ்ச்சிதான்” என்றனர் இருவரும். “கிலாயூயா எரிமலை பத்தி ஏற்கனவே கேள்விப்பட்டு இருக்கோம். எங்க நிலத்தில எரிமலைகள் பற்றிய புரிதல் குறைவு. உங்களோட வாழ்வியல் எல்லாமுமே வியப்பா இருக்கு” தனக்கும் சேர்த்து ஆடம் பேசுவதை ஜெயன் கேட்டுக்கொண்டு இருந்தான். லோனே சிறுக் குழந்தை போல் தலையை ஆட்டியப் படி கேட்டப்படி இருந்தார். “இத்தீவு எரிமலைகளால் ஆனதே, எங்களுடைய கடவுள் பீலே இதை படைத்தாள். அவள் நெருப்பின் கடவுள். அவளின் ஆணைக்கு இணங்க நெருப்புக் குழம்புகள் கடலின் தணுப்பில் இறுகி நிலமாய் மாறி இத்தீவு கூட்டங்கள் உருவானதாய் நாங்கள் நம்புகிறோம். அவள் பூமி அன்னைக்கும், வானத்தின் அதிபதி தந்தைக்கும் பிறந்தவள். பலப்பாடல்கள் அவளின் கதைகளை பேசுகிறது. நாங்கள் அவளின் வாயிற்காப்பாளன் என நம்பப்படும் லோனா மாக்குவாவின் வழியினர், அவர்தான் எரிமலை குழம்பை வெளியே திறக்கிறார். அவளின் நெருப்பின் சூட்டால் உலகம் நிலைகுழைந்தது. இதனால் கடலின் கடவுள் நாமகவொகாகயின் பீலே உடன் சண்டையிட்டாள், இறுதியில் பீலே கொல்லப்பட்டாள். அவளின் ஆன்மா இறக்கவில்லை. அதுவே கிலாயூயா எரிமலையில் புதைந்துள்ளது. அவள் உக்கிரமாய் புகையிராள், அவளை நாங்கள் தணிக்கிறோம்.” லோனே சொல்லிமுடித்ததும். ஜெயனும் ஆடமும் மௌனமாய் அமர்ந்திருந்தனர். லோனே அவர்களுக்கு உணவைப் பரிமாற ஆரம்பித்தார்.
முதலில் அவர்களின் சாராயம், ஜெயன் வேண்டாம் என மறுத்துவிட்டான். ஆடம் ஒரு குவளையை எடுத்துக்கொண்டான். “ரொம்ப ராவா இருக்கு. ஒருவித புளிப்பு ருசி, எனக்கு பிடிச்சிருக்கு.”, “இது வேரில் இருந்து உருவாக்கப்படுகிறது” என்றார் லோனே. ஒரு அமெரிக்கன் மூக்கு அவருக்கு அல்ல, பெரிய மூக்கு, சிறிய கண்கள். தெற்க்காசியா நெற்றிவாக்கு. ஒட்டிய வயிறு, உயரமும் அவ்வளவு இல்லை. ஜெயன் அவரையே பார்த்தப்படி இருந்தான். “கிலாயூயா, நாளை நெருப்புக் குழம்பை கக்கலாம் என செய்தி வருகிறதே.” ஜெயன் உரையாடலை விரும்பினான். “ஆம், நாளை இருக்கலாம். எங்களுக்கு பழகி விட்டது. வியப்பெல்லாம் உங்களுக்குத்தான்” என்றார் லோனே. “நீங்கள் எழுதுகிறவர்கள், ஆகவே கேட்கிறேன். அமெரிக்காவை எப்படி பார்க்கிறீர்” பார்வையை குவித்தபடி கேட்டார் லோனே. “பிழைக்க தெரிந்த வியாபாரி” என்றான் ஆடம். ஜெயன் பற்கள் வெளித் தெரியாமல் உதட்டை இழுத்தபடி சிரித்தான்.
“எதிர்பார்த்தேன், நாங்கள் இங்கே நடிக்கிறோம். சம்பளம் நடிப்புக்கான கூலி” லோனேவும் சிரித்தார். ஆடமும் லோனேவும் மாற்றி மாற்றி குவளைகளை நிரப்பினர். “நீங்கள் அரசாங்கத்திடம் அனுமதி வாங்கி விட்டீர்கள் அல்லவா” லோனேவின் கேள்விக்கு, ஆடம் “ஆமா, எனக்கு கூட்டமா ஓரமா பாக்க விருப்பம் இல்லை. தனியா காட்டுல இருந்து பாக்கணும்”. லோனே தலையை அசைத்தார். ஆடம் மீண்டும் “உங்கள் கதைகளில் வருவதின் சாராம்சம் அனைத்து பழங்குடிகளின் கதைகளின் மையம் தான். ஒரு தெய்வம் அழிக்கும், ஒன்று காக்கும். இடையே நாம, இதனாலே இந்த பூமி உருவாக்கப்பட்டது” என்றான். ஜெயன் இருவரும் பேசுவதை கவனித்தப்படி மேஜையில் இருந்த அன்னாச்சி பழங்களை ருசித்தான். “உலகம் உருவானது, நாமும் உருவானோம். கூடவே மனிதனின் உணர்ச்சிகளும் பிறந்தது. இங்கே எது தெரியுமா காக்கும் கடவுள், அன்பு, அறம், கருணை இன்னும் இன்னும். அழிக்கும் கடவுள் முக்கியமாய் பேராசை. அதுவே போரை தோற்றுவிக்கிறது. நிலங்களை, நீரை, காற்றை சொந்தமாக்குகிறது. பீலே பேராசைப்பட்டாள், கடல் முழுக்க தன் குழம்பால் நிரப்பி, அவளுக்கென தனி உலகம் படைத்தாள். யோசியுங்கள் கடல் மறைந்து நிலமே இருந்தால் என்னவாகும், தோற்றுவிட்டாள். இருப்பினும் அவள் எங்கள் கடவுள். அவளின் இருப்பிடம் கிலாயூயா. அங்கே பூமிக்கு அடியில் இன்னும் தகிக்கிறாள்” லோனே பேசிக்கொண்டே அடுத்த குவளைக்கு சென்றார். ஆடம் நிறுத்திக் கொண்டான். பின் அவர் அளித்த உணவை உண்டனர். பின் விடைபெற்று அவர்கள் கிளம்பும் வேளையில் லோனே “நாளை மாலை தயாராய் இருங்கள்” என்றார்.
இரண்டாயிரத்து பதினெட்டு மே மாதம் மூன்றாம் தேதி கிலாயூயா நெருப்பு குழம்பை கக்கியது. வெகுதொலைவில் ஜெயனும், ஆடமும் நின்றுகொண்டிருந்தார்கள். வானுக்கும் பூமிக்கும் செம்பிழம்பு பாதையை அது உருவாக்கியது. வானம் இருண்டு அழிவின் நாளாக புனிதநூல்களில் எழுதிய வாக்கியத்தை உண்மையாக்குவது போலவிருந்தது. ஆடம் கூறினான் “இதெல்லாம் அறிவியல் தானே, ஹவாய் பசுபிக் பெருங்கடலுல ஆழ்கடல் தட்டுக்களுக்கும், டெக்டோனிக் அடுக்குகளும் நெருங்கி இருக்கிற இடங்களில் எரிமலை இருக்குது . இங்கேயெல்லாம் பாறைகள் பூமியின் உள்ளடுக்கில் சூட்டில் உருகி பாறைக்குழம்பாகி, பூமியின் மெல்லிய அடுக்கு ஓட்டு வெடிப்பில் ஏற்படும் துளை வழியே வெளியே வருது. உள்ளேயிருந்து பச்சை மண்டல வாயுக்களும் கூடவே வருது.”, ஜெயன் “பூமியின் உள்ளடுக்கு எவ்வளவு சூடாக இருக்கிறது இங்கே. இதன் மேலே ஒரு தட்டு, அதன் மேலே பல அடுக்கு. அதுக்கு மேலே மண், தாவரங்கள், விலங்குகள், கூடவே நாம. இயற்கை அத சமச்சீராய் வச்சுருக்கு.”,”என்னைக்காவது உலகம் அழிவை சந்திச்சு தானே ஆகணும். அழிவின் மத்தியில் நின்னு அதோட விளையாட்ட பாக்கணும் “ ஆடம் சொல்லிவிட்டு அமைதியானான். பெரும்சத்ததோடு பூமி அதிர, நின்றிருந்த இடம் மெலிதாய் குலுங்கியது. இன்னும் சாம்பல் சூழ, இருவரும் விடுதிக்கு திரும்பினர்.
ஏற்கனவே இருட்டிய இடத்தில் இன்னும் இருள் சூழ்ந்து கொண்டிருக்க, அறையின் கதவை யாரோ தட்ட ஆடம் கதவைத் திறந்தான். லோனே நின்றுக் கொண்டிருந்தார். “செல்லலாமா”, எனக்கேட்க, இருவரும் தயாராய் அங்கிருந்து அவரோடு சிறிய சிற்றுந்து ஒன்றில் கிளம்பினர். எங்குமே ஒளியில்லை, தூரத்தில் பிரகாசமாய் ஒளிர்ந்தப்படி அனல்கங்கு புகைந்தப்படி தெரிந்தது. மூவருமே பேசிக்கொள்ளாமல் இருந்தது, மேலும் அவ்விடத்தை மௌனமாக்கியது. மலைக்குன்றில் ஏறி, வானமே இறங்குவது போலவிருந்த பாதையில் வண்டி இறங்கியது. ஓரிடத்தில் மூவரும் இறங்கி சிறிது தூரம் நடந்தனர், “இது இன்னும் எத்தனை நாள் தொடரும்” கேட்டான் ஆடம். “ஆகலாம், சில வாரங்கள் கூட. நான் அறிந்து நான்கு வாரங்கள் மேலே கூட ஆனதுண்டு.” என்றார் லோனே. “நாம எங்கே போகிறோம்”, “எங்கள் வழிப்பாட்டை காண விருப்பமா?”, “நிச்சயமாக” என்றனர் இருவரும்.
ஏற்கனவே சிலர் குழுமியிருந்தனர். ஆடம், ஜெயன் போலவே சிலர் அக்குழுவில் இருந்து விலகி நின்றனர். லோனேவின் முகச் சாடையில் ஆண்களும், பெண்களும் முகம் முழுக்க வெண்மையும், சிவப்பும் கலந்த மையால் பூசி, ஆடைகள் இன்றி மார்பிலும், ஆண்குறியிலும், யோனியிலும் சிவப்பு மையால் பூசியிருந்தனர். தூரமாய் பூமியில் துளைப் போலவிருந்த இடத்தில் நெருப்பு புகைந்தப்படி இருந்தது. லோனே இருவரின் அருகில் வந்தார் “இது பீலேவிற்கான காணிக்கை. எங்கள் மூத்தோர் அழிவின் நேரங்களில் இதுப் போன்ற சமயங்களில் பிறப்பை தடுக்கும் உயிர் உறுப்புகளை அறுத்து காணிக்கை கொடுத்தனர். ஒரு வித நம்பிக்கை. எங்கே மனிதர்களின் எண்ணிக்கை பெருகி, எடை தாங்காமல் பீலே வெளி வருகிறாளா என்று பயந்து உயிர்பெருக்கத்தை கட்டுப்படுத்துகிறோம் என அவளுக்கு அறிவித்தனர். இப்போதெல்லாம் அதன் தொடக்கமாக மிருகத்தின் குருதியை பூசி சடங்கு செய்கின்றனர், உறுப்பு சிதைவெல்லாம் கிடையாது” என்றார். “நீங்கள்” என ஜெயன் கேட்க “எனக்கு நம்பிக்கையில்லை” என முடித்தார்.
தோலால் முடையப்பட்ட மத்தளம் ஒலிக்க, பால் வேறுபாட்டின்றி வட்டமாய் நெருப்பை சுற்றி அவர்கள் அமர்ந்தனர். வார்த்தைகள் இயைந்து ஒலி பிறழ்ந்தது அவர்களின் குரலின் வழி. இருவரும் உடல் சிலிர்த்து, காணும் காட்சிகளை மனதில் பதியவைத்தனர். இளம் பன்றியை அக்குழியில் இட்டனர். நேரம் ஆக ஆக ஒலி இன்னும் பிறழ்ந்தது. அவர்கள் மேலும் கீழுமாய் உடலை அசைத்தனர். நெருப்பு இன்னும் உக்கிரமாய் எரிவதை போல உணர்ந்தார்கள். மனிதர்கள் ஒருவரோடு இணைந்து நெருக்கமாய் ஒரே உருவம் போல் ஆனார்கள். நெருப்பின் நிழலில் பெரும் உருவம் போல கரும்புகை புகைந்தது. அக்கூட்டத்தின் மேலே வாரி அவர்களை உண்ண வரும் மாமிசப் பட்சி போல் அது நிழலாடியது. இசைக்கும் ஒலிக்கேர்ப்ப அசைவு அவர்களின் உடலால் நெய்யப்பட்டது. லோனே அருகிலே அமர்ந்திருந்தார் “இவர்கள் எல்லாம் சாதாரண மனிதர்கள் தான், மரபின் நீட்சியாய் சடங்கை கழிக்கின்றனர். அழிவை தடுக்கும் பொருட்டு ஒரு சடங்கு. ஆனால் இதெல்லாம் இயற்கையின் நியதி தானே. இவர்களுக்கு ஒரு ஆசுவாசம் அவ்வளவே” என்றார்.
ஆடம் அவர்களை நோக்கி “எதுதான் பிரளயம் , புதிய உலகம் தான் எது” என்றான். “எதை கேட்கறீர்கள். அழிவு எனத் தனியாக ஏதும் இருக்கிறதா? புதிய உலகம் பாம்பு சட்டையை உரித்து விட்டு வருவது போல பிறக்குமா என்ன?” சிரித்துக்கொண்டே சொன்னார் லோனே. அவர்கள் சடங்கை முடித்து இருந்தார்கள். லோனே குழுவின் அருகில் சென்றார். “ஜெயன், புனித நூல்கள் சொல்ற அழிவு. சுனாமி, எரிமலை வெடிப்பு, பூகம்பம், புயல் மாதிரி இல்லையா?” கேள்வி மட்டுமே ஆடமிடம் இருந்தது. “அதெல்லாம் இயற்கை, தன்னை தானே மீள்ளுருவாக்கம் செய்ற உத்தியா இருக்கலாம் இல்லையா “. “அப்போ கலியுகம், விவிலியத்துல சொல்ற அப்போகலிப்ஸ் எல்லாமுமே”, “இயற்கையா உருவாகுமான்னு தெரியல. ஒருவேளை நீங்களும் நானும் அதற்கான முயற்சில இருக்கலாம் இல்லையா”.
பேசிக்கொண்டிருந்த இருவரையும் உணவருந்த லோனே அழைத்தார்.