வை.மணிகண்டன்

பாரிஸ் – அரிசங்கர் நாவல் குறித்து வை.மணிகண்டன்

பாரிஸ் என்னும் கனவின் நிஜத்தை கண்டு விரும்பத் தொடங்கி நிழல் மட்டுமே வசமாகி இருக்கும் சமூக கைவல்ய நிலையை உரசி செல்லும் புதினம் “பாரிஸ்”.
பாரிஸ் என்னும் கனவினுள் நிஜம் உண்டு, பாவனை உண்டு, அற்பத்தனம் உண்டு,லௌகீகம் உண்டு, கனவின் லட்சியமும் உண்டு,அக்கனவு குறித்த அலட்சியமும் உண்டு.

கனவை நினைவாக்க எடுக்கப்படும் பிரயத்தனங்கள் ஏற்படுத்தும் பதற்றம் நாவலின் அடி நாதமாக இருக்கிறது. இந்த பிரயத்தனங்கள் குறித்து வாசிக்கையில் வாசகனுக்கு அசூயையும் கோபாவேசமும் தோன்ற வாய்ப்பிருக்கிறது, அசூயையும் கோபத்தையும் தூண்டும் வாசகனின் தார்மீகத்தை நம்பியே இந்த புதினம் எழுதப்பட்டிருக்கிறது. இவற்றைத் தாண்டி நாவல் காட்டும் யதார்த்தம் வாசகனின் தார்மீகம் எல்லா இடங்களிலும் செல்லுபடியாகுமா  என்ற கேள்வியை முன் வைக்கிறது. யதார்த்தம் என்பது லௌகீகம் முன் பல்லிளித்து நிற்கும் தார்மீகம் தான்  என்றும் கூறப்பார்க்கிறது.

கனவின் நியாயம் என்று ஒருவர் வகுக்க இயலாது. அக்கனவினை அடைய ஒருவன் மேற்கொள்ளும் முயற்சிகளில் நியாய அநியாயங்கள் , பாவனைகள், சோம்பல்கள் , முட்டாள்தனங்கள் இருக்க வாய்ப்புண்டு , கனவுகளை அடைய விடலைத்தனமான முயற்சிகள் தொடங்கி காரியார்த்தமான செயல்கள் வரை மேற்கொண்டு கனவுகளை துரத்திய படியே
யதார்த்தத்தை வந்தடையும் பல்வேறு கதைமாந்தர்கள் வழி புதுச்சேரியின் தெருக்களில் வாசகன் நடை பயில்கிறான்.

நாவலின் வடிவத் தேர்வு அருமை, குறிப்பாக நிகழ்வுகளையும் முன் நிகழ்ச்சிகளையும் கோர்த்திருக்கும் கொக்கி போன்ற அந்த கண்ணி  அமைப்பு வாசிப்பை சுவாரஸ்யமானத்தாக்குகிறது.

செட்டில் ஆவது – வாழக்கையை துவங்கும் முன்னரே செட்டில் ஆகத் துடிக்கும் , பொருளாதார தன்னிறைவு அடைய முயலும், தங்கள் சூழலை முற்றும் துறந்து அந்நிய நிலத்தில் தடம் பதிக்க நினைக்கும் இளம் தலைமுறையினர் காட்டும் பதற்றம் நாவலின் ஜீவநாடி. இந்த பதற்றம் ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் இன்றி பரவலாக அமையப்பெற்றுள்ளது,

ரபி ,கிறிஸ்டோ மற்றும் அசோக் பொருளாதாரத்தின் இரு எல்லையில் இருப்பவர்கள், இம்மூவரும் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் வேவ்வேறானவை.
ஆனால் மூவருமே விளிம்பு நிலையில் இருப்பவர்கள், ரபியின் பொருட்கனவு இன்னொருவனின் லௌகீதத்தின் முன் தோற்கிறது, அசோக் யதார்த்தத்தின் முன் தோற்கிறான், கிறிஸ்டோ அன்பை கைவிட்ட செல்வத்தின் எல்லையின்மை முன் தோற்கிறான்.

கலாச்சார ரீதியாக தன்னை அயல் குடிமகனாக காட்டிக்கொள்ள முயலும் அசோக் இன் அசல் பிரச்னை பொருளாதாரம் தொடர்பானதாக இருக்கிறது, பொருளாதார நிறைவு பெற்ற ரபி யின் ஆசை அயல் நாடு போவதேனினும் அவன் எதிர்பார விதமாக சந்தித்த சிக்கல் உறவு ரீதியானது, அன்பை அடைய முயலும் கிறிஸ்டோ வின் அசல் பிரச்சினை அவனது குடும்ப அந்தஸ்து குறித்தது. பதற்றத்தின் மூல காரணங்களாக நாம் நாவல் வழி கண்டுகொள்வது , இந்திய தேசம் குறித்த கலாச்சார தாழ்வுணர்ச்சி , அயல் நாட்டு மோகம், தனி மனிதனின் பொருளாதார சுமை, பணம் சேர்ப்பதின் எல்லையின்மை குறித்த உணர்வின்மை.

கிறிஸ்டோ விரும்பும் கலாச்சார சுதந்திரம் அசோக்கை சுற்றி அமைந்திருக்க வாய்ப்பிருக்கிறது, டைலர் என்னும் கதாப்பாத்திரம் வழி நாம் உணர்வது இதையே , உறவு தொடர்பான சிக்கல் பெரிதும் அற்ற பாரிஸ் ஒத்த கலாசார சூழல் நம் நாட்டின் பொருளாதாரத்தில் தாழ்ந்த விளிம்பு நிலை மனிதர்களிடம் உள்ளதோ ? அதே நேரத்தில் பொருள் சேர்த்தலுக்கும் உறவு சிக்கல்களுக்குமான பொருந்தாத முடிச்சு குறித்து  ரபி அறிகிறானோ ? மிதமிஞ்சிய செல்வத்தின் மலட்டுத் தன்மை கிறிஸ்டோவை தவிக்க விடுகிறதோ ? ரபியின் பொருள் x காதல் என்பதான இரட்டை நிலை கிறிஸ்டோவின் அன்பிற்கும் அசோக்கின் பொருளிற்கும் இடையே வைக்கத்தக்கது.

சமகால பொருளாதார ஏற்றத் தாழ்வின் குறியீடு போல் அமைந்துள்ளது நாவலின்  கடைசிப் பகுதி, “பாரிஸ்” என்னும் நிழலின் தன்மையை மூவரும் அறிந்து கொள்கின்றனர். அசோக், கிறிஸ்டோ,  ரபி மூவரும் கண்ட வெவ்வேறான அதே கனவினை விடுத்து எதேச்சையின் கரம் பற்றி தங்கள் பயணத்தை துவங்குகின்றனர்.
செல்வம் எனும் இந்தப் பேயுடன் நாம் வரவேற்பறையில் உரையாடி கொண்டிருக்கையில், நம் உள்ளறைகளிலிருந்து அன்பு விடைப்பெற்றுக் கொண்டே இருக்கிறது.

“பாரிஸ் “அரி சங்கர் எழுதியுள்ள முதல் நாவல். பதிலடி என்னும் சிறுகதை தொகுப்பு வெளி வந்துள்ளது

இமையத்தின் ‘வாழ்க வாழ்க’ குறுநாவல் குறித்து வை.மணிகண்டன்

இமையம் அவர்கள் எழுதியுள்ள ‘வாழ்க வாழ்க’ ஒரு பொதுக் கூட்டத்தை சுற்றிப் பின்னப்பட்ட சமகால அரசியல் சூழ்நிலையின் கோட்டுச் சித்திரம். இமையம் அவர்களின் திமுக பின்புலம் பற்றி வாசகன் அறிந்துள்ளதால், தவிர்க்க இயலாத வண்ணம் வாசிக்கையில் இமையம் அவர்களின் சார்புத்தன்மை குறித்தக் கேள்வி மனதில் எழுகிறது,  சராசரி வாசகன் எதிர்க்கொள்ளவேண்டிய சவால் இது, இதைக் கடந்து நாவலின் அழகியல் குறித்து மேலும் அறிய முற்படுதலே நல்ல வாசிப்பின் அடையாளமாக இருக்கும். இமையம் அவர்களின் படைப்புகளில் பெரும்பான்மையானவற்றில் பெண் கதாப்பாத்திரங்களை முன்னிலைப்படுத்தியே நாவலின் போக்கு அமைந்திருக்கும், இந்தக் குறுநாவலும் ஆண்டாள் என்னும் கதாப்பாத்திரத்தை முன்னிறுத்தி அமைக்கப் பட்டிருக்கிறது.

நாவலின் உச்சமாக இறுதியில் நிகழும் ரசவாதக் காட்சி நாவலின் தளத்தை விரித்து உரைக்கிறது, ஒரு எளிய ,புற விவரிப்புக் கொண்ட அரசியல் சமூக எழுத்தாக மட்டும் முடிந்திருக்க வேண்டிய நாவல் அதன் எல்லையை உணரும் இடம் அது. நாவல் தனது அரசியல் யதார்த்த புரிதலின் எல்லையை ஒப்புக்கொள்கிறது. அத்தனை நேரம் வருவாரா மாட்டாரா என்று புலம்பித் தீர்க்கும் ஜனங்கள் தலைவர் ப்ரசன்னமாகவும் நொடியில் தன்வசம் இழந்து கைகளைக் கூப்புவது எதற்காக என்ற கேள்வி வாசகன் மனதில் எழுகிறது ? , வானூர்தியின் வருகையா? கூட்டத்தின் ஆரவாரத்தில் தன்னை இழந்த பிரக்ஞையா?அவ்வாறு கைகளைக் குவித்து கும்பிட வெறும் பழக்கம் மட்டும் தான் காரணமா ? வாங்கிய ஐநூறு ருபாய் காரணமா ? அழைத்து வந்த வெங்கடேச பெருமாள் பார்த்து விடப் போகிறான் என்ற தன்னுணர்ச்சியில் கும்பிடுவதுப் போல் செய்த பாவனையா ?, இவ்வாறு யதார்த்தம் மீறிய ஒரு தளத்தில் நாவல் பயணிக்க முற்படுகிறது. ஆயினும் விரைந்து யதார்த்த தொனியினை இழக்க விரும்பாது அடுத்த நிகழ்வுகள் வழி வாசகனை மீண்டும் யதார்த்தம் நோக்கித் தள்ளுகிறது , இந்த அழகியல் தேர்வு வழி ஒரு சமூக நாவல் என்பதையும் தாண்டி இறைவனுக்கும் பக்தனுக்குமான உரையாடலாக (?) இந்தக் குறு நாவலை வாசிக்க வாய்ப்பிருக்கிறது.

இறைவன் குறித்துக் கூறியப் பிறகு பூசாரி இல்லாமல் எப்படி ? கூட்டத்திற்கு ஆள் சேர்க்கும் வெங்கடேச பெருமாள் என்னும் உள்ளூர் அரசியல்வாதியின் கதையும் இந்நாவலில் உள்ளது, எந்த வித கொள்கைக் குழப்பங்களும் இன்றி வலம் வரும் பெரிய மனிதன் வெங்கடேச பெருமாள். மக்களின் பணத்தை காக்கைக்கடி கடித்து அதிலும் கொஞ்சத்தை எடுத்து மீண்டும் வேறு காரணத்திற்காக மக்களிடமே திரும்பக் கொடுக்கும் பெரிய மனிதன், வாங்கும் மக்களிடமும் பெரிதாக சலனம் இருப்பதாக நாவலில் பதிவு இல்லை, தங்கள் பொருளாதார நிலை குறித்த அங்கலாய்ப்பு தவிர மக்களுக்கு தார்மீகக் கோபம் எதுவும் இருப்பதுப் போல் இல்லை , இப்படிப் பரஸ்பரம் நாம் சமூகமாக வந்தடைந்திருக்கும் கீழ்மை குறித்தே நாவல் உட்பிரதியாய் பேச விரும்புகிறது.

பொதுக்கூட்டம் நடக்கும் பொட்டல் ஒரு குறியீடாக தகிக்கிறது, விளை நிலங்கள் அழிக்கப்பட்டு உருவான பொட்டலின் மேடையில் நடக்கும் அவலங்களின் தொடர்ச்சி எந்த நாகரீக சமூகத்திலும் கேள்விக்கு உள்ளாக்கப்படும். லாரிகளிலும் வேன்களிலும் காசுக்காக வந்திறங்கிய மக்கள் உச்சி சூரியனில் தங்கள் நிலையிழந்து அமர்ந்திருக்கும் இந்தப் பொதுக்கூட்ட பொட்டல் ஒரு தகிக்கும் குறியீடு.

நாவல் கச்சிதமாக எடிட் செய்யப்பட்டிருக்கிறது. இது பலம் பலவீனம் என்பது தாண்டி பெண்களின் உரையாடல்களில் எப்போதும் இடம் பெறும் நீண்ட நீண்ட பதில் பேச்சுகள் இந்த நாவலின் எடிட் கட்டமைப்பால் சட்டென முடியும் உரையாடல்களாக மாறி விட்டன. பஸ் இருக்கைக்காக இரு பெண்கள் சண்டையிட்டுக் கொள்ளும் இமையம் அவர்களின் சிறுகதை  நினைவிற்கு வந்தது.அந்தச் சிறுகதையில் இருந்தக் கட்டற்ற உரையாடல் போக்கு வாசிப்பின் லகரிகளில் ஒன்று. இந்நாவலில் அத்தகையப் பகுதிகள் சற்றே மட்டுப்படுத்தப்பட்டுக் காணப்படுகின்றன. அவை பதவி சண்டை, சாதி சண்டை, பெண் விடுதலை எனக் குறியீட்டு ரீதியான உரையாடல்களாக மாற்றப்பட்டு விட்டன, நவீன நாவலின் போக்குப் படி இது ஆசிரியரின் அழகியல்த் தேர்வு என்று ஒப்புக்கொண்டாலும் அந்தக் கட்டற்ற பகுதிகளே மனதிற்கு உகந்தவையாக இருக்கின்றன.

குடும்பச் சிக்கலில் தொடங்கி இன்னவென்று விவரிக்க முடியாத நிலையில் ஆண்டாள் இருக்கையில் நாவல் முடிகிறது, அத்தனை குடும்ப பாரத்தையும் சுமக்கும்  ஆண்டாள் கதாப்பாத்திரம் வலுவாக மனதில் பதிகிறது, “எதுக்கு வெயில் நேரத்தில் அழுவுற வுடு” என்று கண்ணகி ஆண்டாளை தேற்றுகையில் சகப் பெண்ணின் பரிவும் அதே நேரத்தில் அனைத்தும் அறிந்த ஒரு உலகத்தின் கீற்றை நாம் காண்கிறோம். உணர்ச்சிப் பிழம்பாக நாம் பெண்களைப் புரிந்து வைத்திருக்கையில் அழுகையைக் கூட திட்டமிட்டபடி செய்ய வல்ல, அனைத்தும் அறிந்த பெண்கள் உலகினைப் புரிந்துக் கொள்ள இந்த ஒற்றை வரி உதவுகிறது.

திருவிழாவைக் காணவந்த உற்சாகத்தில் இருந்த ஆண்டாளும், தெரு மக்களும் நேரம் செல்ல செல்ல வெளியேறமுடியாத ஒரு நெருக்கடியான விளையாட்டில் இருப்பதை உணர்கின்றனர்,வெளியேறும் வழி உடைமைக்கும் உயிருக்கும் பாதகம் விளைவிக்கக் கூடிய ஒன்றாக மாறிவிட்டது. சேலைக்கும் ஐநூறு பணத்திற்கும் ஆசைப்பட்டு வந்தவர்கள் தானே நாம் என்ற சுயபச்சாதாபம் முன் அவர் குடும்பங்களின் பொருளாதார சூழல் குறித்து வாசகன் எண்ணிப் பார்க்க நாவலின் துவக்கத்திற்குச் செல்ல வேண்டும். தனிப்பட்ட தார்மீகச் சிக்கல் சுமை என்றாக , கோடிகள் செலவாகும் பொதுக்கூட்டத்தின் முன் கோடி மக்களின் வறுமைச் சூழல் குறித்த தார்மீகக் கேள்வியே “வாழ்க வாழ்க” என்ற புதினமாக மாறியிருக்கிறது.

எஸ்.செந்தில்குமாரின் கழுதைப்பாதை நாவல் குறித்து வை.மணிகண்டன்

பாரங்கள் சுமந்தபடி ஓட்டமும் நடையுமாய் இடம் பெயர்ந்தபடியே இருக்கும் மனிதர்களின் கதை கழுதைப் பாதை, இந்தக் கதைகள் மேற்கு தொடர்ச்சி மலையும் அதன் அடிவாரங்களும் கண்ட பல ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வின் சிறு துளி, இயற்கையால், மனிதனின் ஆசையால், விதிவசத்தால், இன்னதென்று கூறமுடியாத, பின்னிப் பிணைந்த மனித உறவுகளின் நிழல் பற்றி,தொல்கதைகளின் தொகுப்பென விரிகிறது கழுதைப்பாதை.

நாவலின் போக்கு கதை நாயகனின் தேவையை பின்பற்றியோ, ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட குறிப்பிட்ட இலக்குடனோ பயணிக்கவில்லை. மாறாக ஒரு ஆவணதொகுப்புக்கான நுண் விவரங்களின் கவனத்துடன், பலதரப்பட்ட கதைமாந்தர்களின் பார்வைக்கோணத்திலும், சிறிய பெரு நிகழ்வுகளின் துல்லிய புறவிவரிப்பின் வழி, ஒரு அட்டகாசமான காட்சியனுபாவமாக அமைந்திருக்கிறது. பூர்வகதை அல்லது ஆதி கதை என்று உத்தி வழி காலத்தின் தொடர்ச்சியை மலையின் பூடகத்தை தக்கவைத்துள்ளது.இந்த அழகியல் தேர்வுகளே இந்நாவலை குறிப்பிடத்தக்க ஒன்றாக மாற்றுகிறது.

மலை என்னும் பூடகம்

என் வீட்டின் அருகே சிறிய மலை உண்டு. மலை என்று கூட கூற முடியாது , சிறு குன்று. கல்குவாரி போக மீந்து நிற்கும் நிலமகன். சிறிய அளவினதே ஆனாலும் இம்மலையை காணுகையில் இன்னவென்று அறியாத ஒரு பணிவு போன்ற உணர்வு மனதில் எழும். கைகள் தன்னால் கூப்பித்தொழும். மலையின் கருணை குறித்த இந்தப் பணிவு, பயம், இந்நாவல் முழுவதும் மீண்டும் மீண்டும் நினைவுகூரப்படுகிறது , ராக்கப்பன்,கங்கம்மா என்னும் தொல் தெய்வங்களின் கருணை முதுவான்களை, மலையை நம்பி வாழ்பவர்களை வழி நடத்துகிறது, இப்பணிவின் நிழலில் நாம் அறியாத அனைத்தையும் வைக்கிறோம், நமது தவறுகளின் குற்றஉணர்வையும், இயற்கையை சந்தையாகும் நம் சாமர்த்தியத்தையும் சேர்த்தே இந்நிழலில் வைக்கிறோம். இந்தப் பணிவை வெறும் கோஷங்களாக அல்லாது செயல்தளத்தில் மீட்பதே அசல் முற்போக்கான செயல்பாடாக இருக்கமுடியும். அதே நேரத்தில் இப்புனிதத்தின் பணிவின் ஆன்மீக சாயல் சமகால முற்போக்கு பாவனைகளுக்கு முரண்படுபவை.

முற்போக்கின் தராசு

மலை வாழ் முதுவான்கள், தலைச்சுமை கூலிகள், கழுதைசுமைக்காரர்கள், காபி தோட்டத்து வேலையாட்கள், முதலாளிகள், கங்காணிகள் என்ற விஸ்தாரமான கதைக்களத்தில் , இவ்வமைப்பையே நகலெடுத்து சுரண்டலின் மீதான கட்டுமானம் என்று எளிய பிரதியை வாசிக்க அளித்திருக்கலாம், ஆனால் நமக்கு படிக்க கிடைப்பது முரண்படும் ஒத்திசைவுடன் கூடிய ஒரு பிரதி.

அப்பட்டமான சுரண்டலின் அமைப்பில் இருக்கும் தலைசுமைக்காரன் தனது செயல் தர்மம் குறித்து எந்தவொரு சஞ்சலமும் கொள்ளாது தெளிவாக இருக்கிறான் , அத்தனை சுரண்டலுக்கு பிறகும் அவனை அந்த செயல் தர்மம் வழி நடத்திய விசை எது ? தொழில் வழி போட்டியாக அமைந்துவிட்டாலும் மூவண்ணா விற்கும் தெம்மண்ணா விற்குமான சுமூகமான உறவு எதன் பொருட்டு ? துரோகத்தின் வழி குலைந்த தலைச்சுமைகாரர்களின் வாழ்வும் இறுதியில் மூவண்ணாவிற்கு நேரும் நிலைக்கும் என்ன தொடர்பு ?

அரசியல் சரி தவறுகளை புறம் தள்ளி, ரத்தமும் சதையுமான வாழ்வை முன்னிறுத்தி, வெறுப்பின் நிழலை சிறிதும் அண்டவிடாது அமைந்துள்ளது இப்படைப்பு , எளிதான சரி தவறுகளில் சிக்கி நாயகன், வில்லன் என்ற இரு துருவபடுத்துதலை தவிர்த்து பத்துக்கும் மேற்பட்ட முக்கிய கதைமாந்தர் தம் பார்வை வழி கதை விரிகிறது. கதைமாந்தர் தம் விசுவாசம், துரோகம், காதல்,காமம், ஆற்றாமை, கனவு, ஆசை உணர்வுகளுடன் நாமும் சஞ்சாரம் செய்கின்றோம்.

சாகசம்

மனிதன் தான் கடந்து வந்த பாதையை மீண்டும் மீண்டும் எண்ணி பார்க்கிறான் , கழுதைப்பாதையில் மீண்டும் மீண்டும் மூவண்ணா தலைச்சுமைகாரர்களை பற்றி கூறியபடியே வருகிறார், நூறுமாடுகளுடன் ராவுத்தர் வந்து செல்வது குறித்து கதை சொல்கிறான் செவ்வந்தி.

நூறு மாடுகளுடன் ராவுத்தர், கொல்லத்தில் இருந்து உப்பு வாங்க வேதாரண்யம் வரை செல்லும் வழியில், ஊருக்கு வரும் நிகழ்வு, அத்தனை அற்புதமான காட்சியனுபவமாக பதிவாகி இருக்கிறது , தூரத்தில் ராவுத்தரின் ஆட்கள் வரத் தொடங்குகையில் ஏற்படும் புழுதியில் தொடங்கி , அவர்களின் வருகைக்காக காத்திருக்கும் கடைக்காரர்கள் , ஊர்மக்கள், அவர்கள் எந்த வகையில் தயாராகின்றனர் என்பாதான சித்திரம் அபாரம்.

நூறு தலை சுமை காரர்கள் முத்துசாமியின் சாட்டையின் கீழ் ஒரு ராணுவ தளவாடம் போல் எஸ்டேட்களுக்கு தலைச்சுமை ஏற்றி சென்று வருவதை விவரிக்கும் அத்தியாயம் மயிர் கூச்செரிய செய்வது , அரசியல் சரி தவறுகள் தாண்டி அதன் நிகழ்த்தி காட்டும் அம்சம் மிகுந்த ஜீவனுடன் அமைந்துள்ளது.

முதன் முதலில் முத்தண்ணா கழுதைப்பாதை அமைத்து செல்லும் இடம் , இரண்டு இட்டிலிக்காக உமையாள் விலாஸில் தலைச்சுமை காரர்கள் படும்பாடு, கீசருவும் தெம்மண்ணாவும் மல்லுக்கு நிற்கும் இடங்கள்,எர்ராவுவை நாகவள்ளி பின்தொடர்ந்து செல்லும் இடங்கள், மிகுந்த அர்ப்பணிப்புடன் தூரிகையால் வரைந்தது போல் வாசிக்கையில் மனக்கண்ணில் எழுகின்றன, பானை சோற்றிற்கு பதம் இவ்விடங்கள். “அனார்கலியின் காதலர்கள்” கதையில் அமையப்பெற்ற புற விரிப்பின் கூர்மை கழுதைப்பாதையில் உச்சம் பெற்றிருக்கிறது .

இந்த அழகியல் தேர்வு பக்கம்பக்கமாய் தலை சுமை கூலிகளின் துயரங்களை ஆவணப்படுத்துவதற்கு ஒப்பானது, நாம் கடந்து வந்த பாதையை, நாம் ஏறி மிதித்து நிற்கும் உடல் உழைப்பை, கடந்த காலத்தின் தியாகங்களை குறித்து நம் பிரக்ஞையை மாற்றி அமைக்க வல்லது.

காதல் காமம்

காதல் களியாட்டங்களும் கசப்புக்களும் நிறைந்த பயணம் கழுதைப்பாதை . காதல், துரோகம் ,குற்றவுணர்வு,ரகசியம்,நிறைவேறா காதல், கூடாத காமம்,பிறன்மனை, காரிய காதல் , ஒருதலை காதல், என அத்தனை பரிமாணங்களும் ஜொலிக்கும்படி அமையப்பெற்றுள்ளது. குறிப்பாக கெப்பரூவும் பெங்கியும் வரும் இடங்கள் அழகு கூடி வந்துள்ளது, செல்வம் -கோமதி காதல், இளமைக்கால நாகவள்ளி – எர்ராவு காதல் மிகுந்த ஜொலிப்புடன் கனவு உலகில் நடப்பது போல் இருக்கிறது,கெப்பரூ பெங்கியின் மறுஎல்லை முத்துசாமியும் வெள்ளையம்மாளும் , செல்வம் கோமதியின் மறு எல்லை இளஞ்சி. துரோகத்தின் நிழலில் இளைப்பாற முடியாது , குற்றவுணர்வு நீண்டு மீண்டுமொரு துரோகத்தையோ பிராய்ச்சித்தத்தையோ செய்யும் வரை துரோகத்தின் நிழலின் வெப்பம் தகித்தபடியே இருக்கும்.

கூட்டமும் தனியாளும்

நாவலின் வகைமைப்படியே தலைச்சுமை காரர்கள், கழுதைசுமை காரர்கள், தோட்ட முதலாளிகள், கங்காணிகள் என்று பொதுமையாய் அமைந்தாலும் நாம் இறுதியில் அறிவது தனி ஆட்களின் ஆளுமையை , குறிப்பாக மூவண்ணா மற்றும் தெம்மண்ணாவின் ஆளுமைகளை. தோட்டத்து முதலாளிகளை பொறுத்த வரை “தலைச்சுமை காரர்கள் எல்லோரும் ஒரே மாதிரி இருப்பது” போல் கூறுகிறார்கள் , முத்துசாமி ஒருவனிடம் மட்டுமே முதலாளிகள் உரையாடுவார்கள் , தோட்டத்து முதலாளியை பொறுத்த வரை கழுதை சுமை மூவண்ணா அடிமைக்கு கிட்டத்தில் வருபவர், எதிர் பேச்சு பேச முடியாதவர். இந்த சூழலில் இருந்து தலை சுமை தெம்மண்ணா மற்றும் கழுதைக்கார மூவண்ணா இருவரும் வாழ்ந்த நேரிடையான, அலைச்சல் மிகுந்த வாழ்வின் ஒரு பகுதி நமக்கு காணக் கிடைக்கிறது. பல்வேறு கதை மாந்தர் குறித்து எழுத முடிவெடுத்துள்ளது ஆசிரியரின் அழகியல் தேர்வு, அத்தேர்வு இவ்விரு ஆளுமைகளின் சில கீற்றுகள் தவிர்த்து, வேறு எவர் குறித்தும் ஒரு முழுமையான சித்திரத்தை அளிக்கவில்லை. இது தெரிந்தே எடுக்கப்பட்டுள்ள தேர்வாகவும் இருக்கலாம் – பிம்ப வழிபாடு மிகுந்துள்ள இந்த சமூக ஊடக காலகட்டத்தில் இத்தேர்வும் சரியானதாக இருக்க வாய்ப்புண்டு.

அற்புதமான காட்சி அனுபவம் வழியும், உறுதியான நிறைவுப் பகுதியும், கழுதைப்பாதையை மறக்க முடியாத வாசிப்பு அனுபவமாக்குகிறது. தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலையும், அதன் அடிவாரமும் பற்றி செந்தில்குமார் அவர்கள் எழுத வேண்டும் , அவர் எழுத்து வழி மேலும் உருவாகும் உலகங்களை காண விருப்பம்.

ரா.கிரிதரனின் காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை சிறுகதை குறித்து வை.மணிகண்டன்

ரா.கிரிதரனின் “காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை”,2009 ல் தொடங்கி 2019 வரை வெவ்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்டுள்ள பன்னிரண்டு சிறுகதைகளின் தொகுப்பு இந்தப் புத்தகம்.

புத்தக தலைப்பாய் அமைந்துள்ள “காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை” சிறுகதை ஜெர்மன் சிறையில் நடந்த ஒரு இசை அரங்கேற்றம் குறித்து எழுதப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியின் வரலாற்று பின்புலம் எதுவும் அறியாது நாம் வெறுமனே இந்தக்கதையை வாசிக்கையில் எழும் அடிப்படையான கேள்வி “நாம் ஏன்  கடினமான சூழல்களில் இசையை நாடி செல்கிறோம் ? ” என்பது.

நடந்த இசை அரங்கேற்ற  நிகழ்ச்சியின் பின் புலம் குறித்து, வரலாறு  குறித்து  ஒரு புத்தகமே எழுதப்பட்டுள்ளது – For the End of Time: The Story of the Messiaen Quartet – Rebecca Rischin என்னும் ஒரு clarinet கலைஞரால் இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளது. . இந்த சிறுகதை உண்மையில் நடந்த  நிகழ்ச்சியின் பிரதியாக இருப்பதால், நிகழ்ச்சியை விட இந்நிகழ்ச்சி குறித்து விளக்க ஆசிரியர் எடுத்துள்ள தேர்வுகளே நாம் கணக்கில் கொள்ள வேண்டியது.

கடினமான சிறை சூழல் , ஒரு இசை மேதைமை குறித்த வியப்பு அதே நேரத்தில் அந்த இசை மேதைமையை இறுக்கமான சூழலோடு பொருத்தி பார்த்து எடை போடும் தன்மை , இசைமேதையின் பதில் – இதுவே இந்த நிகழ்ச்சியை விவரிக்கும் சிறுகதையின் வடிவம் -கதையில் சிறை சூழலின் புற விவரிப்பு நன்றாக அமைந்து வந்திருக்கிறது,  அதே நேரத்தில் வாசகனுக்கு இவ்வரலாற்று நிகழ்வு குறித்த அனுமானங்களை வலிந்து வந்து கூறுவது போல் கட்டுரை போல் அமைந்து விட்டது , இந்தக் கதையில் ஆலிவர் போன்ற இசை மேதை அல்லாது வேறு ஒரு பெயர் அறியாத கலைஞன் இசைத்திருந்தால் ?அந்த இசை தொகுப்பு ” quartet for the end of time ” போல் அல்லாது யாருமறியா ஒரு இசை கலைஞனின் ஆத்ம சங்கீதமாக இருந்திருந்தால் ? இங்கு நாம் “மோகமுள்” நாவலில் வரும் ஒரு வடக்கத்திய பாடகரையும் அவரது மகனையும் நினைவு கூறலாம்.

இந்தத் தொகுப்பில் என்னை மிகவும் கவர்ந்த கதை ” நந்தாதேவி” என் கணிப்பில் இச்சிறுகதை தொகுப்பின் தலைப்பாக வைத்திருக்க பட வேண்டிய ஒன்று . இந்திய ராணுவத்தின் மலையேற்ற குழுவின் அனுபவம் குறித்து அட்டகாசமான நிகழ்த்து தன்மையுடன் அமைந்துள்ள சிறுகதை – ஜாக் லண்டன் முதல் அசோகமித்திரனின் “மிருகம்” வரை மனித வாழ்வின் விளிம்புகளை நினைவூட்டும் தொடர்ச்சியாக அமைந்திருக்கிறது,

“நீர் பிம்பத்துடன் ஒரு உரையாடல் ” – நூறு ஆண்டு கால வரலாற்று நிகழ்வுகளின் சரளமான தொகுப்பு போல் அமைந்துள்ளது – ஆசிரியர் தேர்ந்தெடுத்து இருக்கும் உத்தி முறை ரசிக்கும் வண்ணம் அமைந்திருந்தது தொடர் நிகழ்வுகளின் அவலங்களின் சித்திரத்தை அதே நேரத்தில் எந்த ஒரு பார்வையையும்  கோணத்தையும்  வலிந்து திணிக்காது கால மாற்றத்தின் மௌன சாட்சி போல் அமைந்துள்ளதே இந்தக் கதையின் சிறப்பு. நீண்ட நீண்ட வாக்கியங்களை படிக்கையில் தமிழின் சிறந்த நாவல்களின் ஒன்றான ” தாண்டவராயன் கதை ” நினைவுக்கு வந்தது – வரலாற்று நிகழ்வுகளின் குறிப்பிடத்தக்க ஒரு நிகழ்ச்சியை மையமாக வைத்து எழுதப்படும் கதைகள் ஒரு புறம் , வரலாற்றையே ஒரு மாபெரும் புனைவு வெளியாக்கி எழுதப்படும் கதைகள் இன்னொரு புறம் , பின்னதின் சாயலில் அமைந்துள்ள ” நீர் பிம்பத்துடன் ஒரு உரையாடல் ” எந்த ஒரு இலக்குமற்று எதேச்சையின் கரங்களால் உந்தப்பட்டு செல்லும் காலம் குறித்த நினைவலைகலாக அமைந்துள்ளது.

இசை குறித்தும் வரலாற்று பின்புலத்தில் அமைந்துள்ள கதைகள் யாவும் தகவல் செறிவு காரணமாகவும் நிகழ்ச்சியின் முக்கியத்துவம் காரணமாகவும் கவனத்தை கோருகின்றன , அதே நேரத்தில் அரசியல் சரி நிலைகள் குறித்த பிரக்ஞை காரணமாக நிகழ் தன்மை குறைந்து கட்டுரை போல் நீளும் இடங்கள் ஆசிரியர் கவனத்தில் கொள்ள வேண்டியவை.

இருள் முனகும் பாதை – நாவலாக வந்திருக்க வேண்டிய சிறுகதை – ஷுமன் கிளாரா என்னும் இசை துருவங்கள் குறித்த ஒரு கோட்டு சித்திரமாக அமைந்து விட்டது – பென்னட் என்னும் பார்வையாளன் ஷுமனின் மேதைமையை புரிந்து கொண்டவன் , இயந்திரத்தனமான வெற்றியை நோக்கி பயணித்த கிளாரா,பென்னெட்டிடம் , தன் மொத்த இருப்பின் பொய்மையை உணர்ந்து உருகுகிறாள்,  இயந்திரம் Vs இயற்கை என்று சட்டகம் வழியே கதையை அணுக நினைக்கையில் ஷுமன் என்னும் காதலன் தன் காதல் கடிதங்களை நமக்கு வாசிக்க அளிக்கிறான் , கடைசி ஸ்டாப்பை அறிந்திருந்தாலும்  , கடைசிக்கு முந்தைய ஸ்டாப்பில் எந்த ஒரு பெரிய கலைஞனும் இறங்கி விடுவான் என்பதின் சாட்சியாக ஷுமன் கிளாரா காதல். இந்த இடத்தில சங்கர ராமசுப்ரமணியனின் இந்த கட்டுரை மிக முக்கியமானது , அனைத்துக்கும் ஆசைப்பட்டபடியே அத்வைதம் போதிக்கும் கலைமனதை உணர்கையில் மேலும் நாம் ஷுமனின் தவிப்பை புரிந்து கொள்ள முடியும் – (https://www.shankarwritings.com/2019/12/blog-post_26.html?m=1)

பலி மற்றும் மௌன கோபுரம் சிறுகதைகளில் தலைப்பு மற்றும் குறிப்புகள் சுட்டும் விஷயங்கள் நேரடியாக உள்ளது. பலி சிறுகதை ஒரு “abstract ” தன்மையுடன் அழகாக உள்ளது ,” பலி” என்னும் தலைப்பு வலிந்து வந்து ஆசிரியர் கூற விரும்புவதை சுட்டுகிறது , வேறு ஒரு மெல்லிய உருவக தலைப்பு பொருத்தமாக இருக்கக் கூடும் – இவ்விடத்தில் ஆல்பர்ட் காம்யுவின் ” The guest ” குறித்து இணைத்து வாசிக்க சில விஷயங்கள் உள்ளன – ” கதாபாத்திரத்தின் பெயர் நேரடியாக ” அரபி” என்றும் தலைப்பு ” தி கெஸ்ட் ” என்றும் உள்ளது – இக்கதையில் சுமி மற்றும் லியோன் , கதையின் தலைப்பு “பலி” – இந்த வலிய தலைப்பு எதிர்மறை அம்சம் கொண்டதாக உள்ளது – மொத்த கதையின் சாரமும் ஏன் இரண்டு அல்லது மூவர் சேர்ந்து இருக்க முடிவதில்லை ஸ்தூலம் இல்லாத எதோ ஒன்று எப்படியோ அதை ஏன் தடுத்துவிடுகிறது என்ற கேள்வியில் இருக்கிறது , இந்த சிறுகதை Godard ன்  Bande à part  திரைப்படத்தை நினைவூட்டியது.

வரலாறு இசை மற்றும் புலம் பெயர் வாழ்வு என்கிற வெவ்வேறான தளங்களில் ஒரு நிறைவான வாசிப்பு அனுபவமாக “காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை” சிறுகதை தொகுப்பு அமைந்துள்ளது