ஷைன்சன் அனார்க்கி

வீடுபேறு அடைதல் – ஷைன்சன் அனார்க்கி

நான் முன்னால் இருந்த அறையைக் காலி பண்ண வேண்டி வந்ததற்குக் காரணம் நான் அல்ல. ஒரு வீட்டின் மேல்தளங்கள் இரண்டை வாடகைக்கு எடுத்து மகான் மாதவன்* ஒரு தங்கும் விடுதி நடத்தி வந்தார். அங்கே தங்கியிருந்த பத்து பேரில் நானும் ஒருவன்.

(* மகான் என்பது அவரது பெயரின் பகுதியன்று. ஆனால் அவரது பேச்சு அவர் முற்றும் துறந்த ஞானி என்பதற்கு சான்றாக இருக்கும். எ.டு: இவ்வீட்டுக்கு நான் ஒன்றரை லட்சம் வாடகை கொடுக்கிறேன்; அதனால் எனக்கு ஒரு லட்சம் நஷ்டமாகிறது. இக்கூற்றை உண்மை என்று கொண்டால் அவர் இச்சென்னை மாநகரிலே பெரும் மகான். ஆனால், அவர் பொய் சொல்லுதல் என்னும் பெருங்குற்றமிழைக்கிறார் என்று உங்களுக்குத் தோன்றினால் அதற்கு நான் பொறுப்பாக முடியாது.)

எங்கள் அறையில் நான்கு பேர். அந்த தளத்தைப் பொறுத்த வரையில் அது சாதாரண அறை அல்ல, சமையல் அறை. எக்கச்சக்கமான ஷெல்ஃபுகளும், கிச்சன் ஸிங்கும் அந்த உண்மையை உரக்க சொல்லிக் கொண்டிருந்தன. பாத்திரங்களுக்குப் பதிலாக நான் புத்தகங்களை அடுக்கிக் கொள்ள வசதியாக இருந்தது.

ஆளுக்கு 3500 ரூபாய் வாடகை. மின்கட்டணம், நீர்கட்டணம், துணி துவைத்தல், அயர்ன் பண்ணுதல், வீடு பெருக்குதல் என அனைத்தும் அதற்குள் அடங்கும். அறையும் நன்றாகத் தான் இருந்தது. ஆனாலும் எனக்கேயுரிய தனிப்பட்ட பிரச்சினைகள் இருந்தன. ஹாலில் இயங்கும் தொலைக்காட்சியின் சப்தம் படிப்பதற்கு மனதை ஒருமுகப்படுத்த விடாமல் செய்தது. இரவு பத்து மணிக்கு மேல் வரும் பக்கத்து படுக்கை சிங் டியூப்லைட்டைப் போடும் போது தூக்கம் போனது. அதுவும் அவர் அன்றைக்குக் காதலியிடம் பேசத் தொடங்கினாரானால் அன்றிரவு விழித்திருப்பவனின் இரவு தான். வெளிச்சத்துக்கும், சப்தத்துக்கும் எனக்கு இருந்த hypersensitiveness அப்போது தான் புரிந்தது. தனியறை எடுக்கலாம் என்று தோன்றியது. ஆனால் அண்ணாநகரில் அதற்கு எங்கே போவது? இந்த இடத்தில் எப்படியாவது இரண்டு மாதங்கள் ஓட்டிவிட்டு அதற்கப்புறம் தேடிப் பார்க்கலாம் என்ற முடிவுக்கு வந்த போது தான் வீட்டு உரிமையாளர்கள்* மாதவனிடம் காலி பண்ணச் சொன்னார்கள்.

(*இந்த வீட்டுக்கு உரிமையாளர் ஒரு நபர் தான். ஒரு வயதான பாட்டி. ஆனால் அந்த குடும்பத்துக்காரர்கள் அனைவரும், அதாவது அந்த பாட்டியின் பத்து வயது பேரப்பையன் வரைக்கும் அந்த வீட்டு சொந்தக்காரன் போலவே உரிமையுடன் எங்கள் அறைகளை அடிக்கடி சூப்பர்வைஸ் செய்வதால் உரிமையாளர்கள் என பன்மையில் அழைக்க வேண்டியது அவசியமாகிறது)

காலி பண்ணச் சொன்னதற்கான காரணங்களைப் பற்றி எக்கச்சக்கமான கருதுகோள்கள் உலவின. விடுதியில் இருந்தவர்கள், அதாவது நாங்கள், குடித்து விட்டு கலாட்டா செய்தோம் என்பது ஒரு கருதுகோள். குடித்து விட்டு கலாட்டா செய்தது உண்மையே, அதனால் பாத்ரூம் கதவு உடைந்ததும் உண்மையே என்ற போதும் அதற்காகத் தான் எங்களைக் காலி பண்ணச் சொன்னார்கள் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. சுவாரசியமான மற்றொரு கருதுகோள் – மாதவன் ஒழுங்காக வாடகை கொடுக்கவில்லை. இவ்விரு பெரும் கருதுகோள்களுக்கிடையே சிறு , குறு கருதுகோள்கள் நீர்க்குமிழிகளைப் போல் ஒரு உரையாடலுக்குள்ளேயே தோன்றியுடையும்.

ஒழுங்காய், லட்சணமாய் வேலைக்குப் போக வேண்டிய வயதில் சென்னையில் ஒரு அறையில் உட்கார்ந்து அரசியல், வரலாறு, புவியியல், சில கணக்குகளைப் போடுவதற்கான common sense என பள்ளியில் கற்றுக் கொண்டது அனைத்தையும் மீண்டும் கற்றுக் கொண்டு, செய்தித்தாள்களையும் தவறாமல் படித்து, இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் ஒரு அரசுப்பணியோ, அரசு சார்ந்த நிறுவனப்பணியோ கிடைக்கும் என்று ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு சிறிதும் மனந்தளராத விக்கிரமாதித்தன் போல தகவல் வேதாளங்களைப் பிடித்தே நாட்களைக் கழிப்பது, படிக்காத சமயங்களில் பேரபத்தமாகப் பட்டது. அத்தகைய எதிர்மறை சிந்தனைகளுக்கு இடமளிக்கக் கூடாது என படிப்பில் மூழ்கி யாருங்காணாத ஆழத்துக்குப் போய் படிப்பைத் தியானம் போல் மாற்ற வேண்டும் என முயன்றாலும் தொலைக்காட்சி சப்தத்தாலும், அறை நடமாட்டங்களால் ஏற்படும் கடுந்தொந்தரவுகளாலும் அம்முயற்சிகள் தோல்வியடைந்தன.

அறை மாற்றப்படுவதால் எழுந்த கவலையால் படிக்க முடியாமற் போகவே என் உளச்சிக்கல்கள் மிகுந்தன. எந்த முகவரிக்கு மாறப் போகிறோம் என்பதை மாதவன் சொல்லாமற் போனதால் நான் அறைக்கு தபால் மூலம் வருவித்துக் கொண்டிருந்த வார, மாதமிருமுறை இதழ்களை எம்முகவரிக்கு மாற்றி அனுப்பக் கோருவது என்பதை அறியாமல் அல்லாடிக் கொண்டிருந்தேன். 25ம் தேதி மாதவன் ஒரு முகவரியைத் தந்தார் அம்முகவரியை மின்னஞ்சலில் பத்திரிகை அலுவலகத்துக்கு அனுப்பி என்னுடைய ஒரு பிரச்சினை முடிவுக்கு வந்தது என்ற சந்தோஷத்தில் சரவண பவனிலிருந்து ஸ்பெஷல் சாப்பாடு வாங்கி வந்து அறையில் உட்கார்ந்து சாம்பார் கவளங்களையும், புளிக்கறி கவளங்களையும், ரச கவளங்களையும் விழுங்கி, மோர்க்கவளங்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது எதிரே மாதவன் வந்து அமர்ந்தார். கையில் பாதி உருவாகியிருந்த மோர்க்கவளத்தை தட்டில் வைத்து நிமிர்ந்தேன்.

“அந்த ரூமுக்கு இப்ப மாற முடியாதுப்பா” என்றார்.

பதில் சொல்லவில்லை. முகத்தை ஒரு வட்ட வடிவ கேள்விக்குறியாக மாற்றிக் கொண்டேன். “அக்ரிமென்ட்டுக்குப் பேசும் போதே ரொம்ப குளறுபடி பண்றாங்க. அது தான் அந்த இடம் வேண்டாம்னு விட்டுட்டேன்”, முந்தின நாள் முகவரியைத் தந்து வெள்ளையடிக்கும் வேலை நடந்து கொண்டிருப்பதாகச் சொன்ன அதே மகான் மாதவன் தான் இதையும் சொன்னார். பாதி உருவாகி தட்டில் இருந்த மோர்க்கவளத்தை எடுத்து அவரின் முகத்தில் அடித்து, கவளத்தைப் பருக்கைகளாக மாற்றி பறக்க விட வேண்டும் என்று என் மனதுக்குள் எழுந்த அதீத ஆசையை நிறைவேற்றுவதற்கு அவகாசம் தராமல் எழுந்து கொண்ட மாதவன் சொன்னார், “நீங்க ஒண்ணும் கவலப்படாதீங்க தம்பி, நம்மகிட்ட இன்னொரு கெஸ்ட் ஹவுஸ் இருக்கு. அங்க இப்போதைக்கு நீங்க எல்லாரும் தங்கிக்லாம். சீக்கிரமா புதுவீடு பாக்றேன்”.

எனவே, இப்போது போகப் போகிற அறையும் நிரந்தரமானது அல்ல. நிரந்தரமான முகவரிக்கு மாறும் வரை பத்திரிகைகள் அனுப்புவதைத் தற்காலிகமாக நிறுத்தச் சொல்லி ஒரு மின்னஞ்சல் அனுப்ப வேண்டியது தான். ஒரு பத்திரிகை எளிதாகக் கிடைத்து விடும். இன்னொரு பத்திரிகை கிடைப்பது கஷ்டம். அப்படியே கிடைத்தாலும் இடையிடையே சில வாரங்களுக்கான இதழ்கள் விட்டுப் போகக் கூடும். ஏற்கனவே இருந்த திருப்தி கரைந்து போயிருக்க சாப்பாடும் எந்த உற்சாகமும் ஊட்டவில்லை. நல்லவேளை, தலப்பாகட்டி சிக்கன் சாப்பிட்டிருந்தால் காசு அதிகமாகச் செலவான கவலையும் கூடவே சேர்ந்திருக்கும்.

நேற்றைக்குக் கொடுத்துப் போன முகவரி நிஜ முகவரியா, இல்லையென்றால் வெறும் சமாளிப்பா என்பதைப் போய்ப் பார்த்து விட வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. ஆனால், அதற்கு இரண்டு அவென்யூக்களைக் கடந்து போக வேண்டும். எப்பொழுதும் வாகனங்கள் பறந்து கொண்டேயிருக்கும் சாலைகள். கவனக்குறைவாலோ, உளச்சிக்கலால் வேண்டுமென்றோ ஏதேனும் வாகனத்தின் முன் குதித்து விடுவேன் என்று என்மேலே எனக்கு சந்தேகம் இருந்ததால் அந்த யோசனையைக் கைவிட்டேன்.

 பக்கத்திலிருந்த மளிகைக்கடையில் அட்டைப் பெட்டிகளை வாங்கி, எடுத்துப் போக வேண்டிய பொருட்களை அவற்றுள் நிறைக்கத் தொடங்கினேன். ஆறு பெட்டிகள் நிறைந்தன. ஐந்து பெட்டிகளில் இருந்த புத்தகங்களுக்கும் அரசாங்க வேலைக்கும் எந்த சம்பந்தமுமில்லை. அவற்றை எடுத்து வீட்டில் போய் போட்டு விட வேண்டியது தான். திரும்ப அறை மாறும் போது சுமையாவது குறையும்.

இருபத்தேழாந் தேதியே புதிய ரூமுக்குப் போக வேண்டியதாயிற்று. போன பின்பு தான் அது தங்கும் அறையே இல்லை என்று புரிந்தது. டைனிங் ஹாலில் நான்கு கட்டில்களை கொஞ்சங்கூட இடைவெளியில்லாமல் நெருக்கி, அவற்றை சுவரோடும் ஒட்டிப் போட்டு எங்கள் ‘அறையை’த் தயார் செய்திருந்தார் மாதவன். அந்த அறையில் மூன்று அறைகளின் கதவுகள் திறந்தன. கிச்சனில் தண்ணீர் குடிக்கப் போகிறவர்கள் அந்த அறையைத் தாண்டித் தான் போக வேண்டும். பல் தேய்க்க, முகங்கழுவ எல்லோரும் அந்த அறையில் இருந்த வாஷ்பேசினைத் தான் பயன்படுத்தினார்கள். பரபரப்பான ஒரு தெருவின் நடுவே கிடப்பதைப் போன்ற உணர்ச்சி. எனது கேரளக் காதலி டயானாவின் முகத்தை மடிக்கணினி திரைமுழுக்க வியாபிக்கச் செய்து, பின்னணியில் ஸ்விரிடோவின் “பனிப்புயல்” (Snowstorm) என்ற வால்ட்ஸ் இசைத்துணுக்கை ஒலிக்க விட்டு அவள் முகத்தின் ஒவ்வோர் அணுவையும் ரசிப்பது எனக்குப் பிடித்தமான ஒரு பொழுதுபோக்கு. அதை இங்கே செய்யமுடியாது.

மெயின் ஹாலில் இருந்த தொலைக்காட்சியின் இரைச்சல் எத்தடையுமின்றி அறைக்குள் நுழைந்து சித்திரவதை செய்தது. முதல் நாளிலேயே தலை இரண்டாகப் பிளப்பதைப் போல் கடுமையான தலைவலி. அங்கிருந்து தப்பி தெருக்களில் அலைந்து இரவு ஒன்பது மணிக்கு மேல் அறைக்கு வந்தேன்.

(* ஒன்பது மணிக்கு மேல் தெருக்களில் அலைய பயம். அந்தப் பகுதியில் அமைச்சர்களின் வீடுகளும், அரசு அதிகாரிகளின் வீடுகளும் இருந்தன. இந்த சூழலில் என்னைப் போல் ஒருவன் இரவில் தெருக்களில் அலைந்து கொண்டிருந்தால் சந்தேகக் கேஸில் பிடித்துப் போய் விடுவார்கள். அக்காளின் கணவர் சென்னையில் இன்ஸ்பெக்டர் தான். ஆனால் அதையெல்லாம் கேட்டுக் கொண்டிருக்காமல் அடிக்கத் துவங்கிவிட்டால்?)

அடுத்த நாள் வந்த மாதவனிடம் சொன்னேன், “இன்னும் ஒரு மாசத்துக்குள்ளார ரூம் காலி பண்ணிடுறேன்.”

“என்ன ஆச்சு? எங்க போற?”

“ஃப்ரண்டஸ்லாம் வெளிய ரூம் பாத்துகிட்ருக்காங்க. அங்க போலாம்னு இருக்கேன்”

“உனக்கு யாருப்பா ஃப்ரெண்டஸ்? நீ யார்கூட பேசியும் பாத்ததில்லேயே. உன் ரூம்மேட்ஸ் கிட்ட கூட பேச மாட்டேங்க்ற”. மாதவன் சொன்னதிலும் ஓரளவு உண்மை உண்டு. கிட்டத்தட்ட எப்போதுமே படித்துக் கொண்டிருப்பதால், அறைத் தோழர்களிடம் பேசுவதே குறைவு. ஆனால் எனக்கு அதைத் தாண்டி நண்பர்கள் உண்டு. அவரவர் அறைகளில் ஏற்கனவே செட்டில் ஆகி விட்டார்கள். வேறு அறை எதுவும் பார்க்கவில்லை. நான் தான் பார்க்க வேண்டும். ஆனால் எனக்கு இருக்கும் / இல்லாத நண்பர்களைப் பற்றிப் பேசுவதற்கு மாதவன் யார்?

“என் ஃப்ரெண்ட்ஸ் யாருமில்லேன்னா சிங்கிள் ரூம் எடுத்துகிட்டுப் போயிடுவேன். அவுட்டர் ஏரியாவானாலும் பரவாயில்லை”. மாதவனின் முகம் கூம்பிப் போவதைப் பார்க்கும் போது குதூகலமாகவே இருந்தது.

பேச வேண்டியதைப் பேசியாயிற்று. இனி ரூம் பார்க்க வேண்டியது தான். மகான் மாதவன் என் அட்வான்ஸ் ஐயாயிரத்தைத் திருப்பித் தருவாரா, இல்லையென்றால் தனது நஷ்டத்தை ஈடுகட்ட அதைப் பயன்படுத்திக் கொள்வாரா என்று தெரியவில்லை. இதைப் போன்ற விளம்பரங்களுக்கென்றே இருக்கும் இணையதளங்களில் எனது தேவையைப் பதிவு செய்தேன். “குடிப்பழக்கம், புகைப்பழக்கம் இல்லாத திருமணமாகாத இளைஞருக்கு (குடிமைப்பணித் தேர்வுகளுக்காகப் படித்துக் கொண்டிருப்பவர்) தனியறை தேவை”.

அடுத்த நாளிலிருந்தே அவ்விளம்பரத்துக்குப் பதில்கள் வரத் தொடங்கின. முதலில் பேசியவர் ஒரு பெண். அவர் முழுக்க ஆங்கிலத்திலேயே பேச நானும் ஆங்கிலத்திலேயே தட்டுத்தடுமாற வேண்டியதாயிற்று. மைக்ரோவேவ் ஓவன் உள்ளிட்ட பல வசதிகளுடன் எனக்கு ஏற்ற மாதிரி ஒரு அறை இருப்பதாகச் சொன்னார். மைக்ரோவேவ் ஓவனை நான் அதற்கு முன்னால் சில ஆங்கிலப்படங்களில் நிச்சயமாகப் பார்த்திருக்கிறேன். சில ஹோட்டல்களில் பார்த்ததைப் போல் தோன்றினாலும் நினைவு சரியாக இல்லை. ஆனால் எந்த வீடுகளிலும் நான் அதைப் பார்த்ததில்லை. ஒரு ஆம்லெட் கூட வட்ட வடிவில் ஒழுங்காகப் போடத் தெரியாத எனக்கு ஒரு மைக்ரோவேவ் ஓவன் எவ்வகையில் வசதி என்றும் புரியவில்லை.

தொடர்ந்து மின்னஞ்சலில் அவ்வறையின் புகைப்படங்களை எனக்கு அனுப்பினார். பல்வேறு கோணங்களில் அவ்வறையின் பல்வேறு பகுதிகளை புகைப்படமெடுத்து அனுப்பியிருந்தார். அடுக்களையில் மைக்ரோவேவ் ஓவன்; படுக்கையறையில் தரை மட்டத்தின் மேல் உயர்த்திப் போடப்பட்ட மேடையில் இரண்டு பெரிய படுக்கைகள்; நவீன மேற்கத்திய பாணி கழிவறை. இரண்டு பேருக்கான அறை அது. மொத்த வாடகை 10000 ரூபாய். என்னோடு இன்னொரு நபர் யாரும் இல்லாததால் நானே அவ்வளவையும் கொடுக்க வேண்டும். எனக்கு ஒரு மாதத்துக்கான மொத்த செலவே அவ்வளவு தான். வீட்டில் அதற்கு மேல் காசு கேட்க சங்கடமாக இருந்தது. அதுவே அதிகம் என்று சமயங்களில் தோன்றியது.

ஆனால் அந்த அறைவீடு இரண்டு பேருக்கு ரம்மியமானதாக இருக்கும். கலியாணமானவுடன் ஒரு நீண்ட தேனிலவை அக்கட்டில்களில் உருண்டு புரண்டு கொண்டாடலாம். ஆனால் கலியாணம் ஆக வேண்டும். வேலையில்லாமல் இருக்கும் போது கலியாணத்தைப் பற்றி யோசிப்பதே பாவம். ஆனால் வேலையில்லை என்று இனப்பெருக்க சுரப்பிகளும் வேலையற்று இருந்து விடுகிறதா என்ன? காதலி இருந்தாலாவது அச்சுரப்புகள் வீணாய்ப் போகாது என்ற நிச்சயம் இருக்கும்.

 காதலைப் பற்றி நினைத்தவுடன் முதலில் ஜூலியின் முகம் நினைவுக்கு வந்தது.பள்ளியில் கூடப் படித்தவள். அவளுக்கு காதல் தொல்லை கொடுத்து அவள் அண்ணனிடமிருந்து திட்டு, மிரட்டல் எல்லாம் வாங்கியிருக்கிறேன். இப்போது திருவனந்தபுரத்தில் ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறாள். 20000 சம்பளம் இருக்கும். அவள் சென்னைக்கெல்லாம் வரமுடியாது. முடிந்தாலும் எனக்காகவெல்லாம் வரமாட்டாள். இப்போது என்னை மறந்தே போயிருப்பாள்.

அடுத்து டயானா. கேரளத்துக் காதலி. கல்லூரியில் கூடப்படித்தவள். வடகேரளத்தில் ஒரு பாலிடெக்னிக்கில் லெக்சரராக இருக்கிறாள். ஒரே கல்லூரியில் படித்திருந்தாலும் அவளுக்கு நான் யாரென்றே தெரியாது. அடுத்த காதலி காவ்யஸ்ரீ. அவள் பதிவயதில் திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கிய காலந்தொட்டு அவளை நான் காதலிக்கிறேன். அவளுடனேயே வளர்ந்தேன். அவளுக்கும் என் வயதென்பதால் வசதியாகப் போனது. இப்போது அவள் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கில் மிகப் பிரபலமான கதாநாயகி. அவளை நான் நேரில் பார்த்தது கூட கிடையாது.

இப்படி எனக்கு ஒன்றுக்கு மூன்றாக காதலிகள் இருந்தாலும், அவர்கள் யாரும் என்னைக் காதலிக்கவில்லையாதலால் எனக்கு அந்த வீடு வேண்டாம்.

அடுத்தும் சிலர் பேசினார்கள். பத்தாயிரம் வாடகை, லட்சம் அட்வான்ஸ் என்றார் ஒருத்தர். லட்சத்துக்கு நான் எங்கே போக? வீட்டில் கேட்க முடியாது. இன்னொருத்தர் வடசென்னையில் இருந்து பேசுவதாகச் சொன்னார். “குமார் பேசுறேன்” என்று அவர் சொன்னவுடன் பெயருக்கு முன்னால் கொக்கி இருக்கிறதா என்று கேட்க வேண்டும் போலிருந்தது. அப்படி இருந்துவிட்டால் என்ன செய்வது என்ற பயத்தில் கேட்காமலேயே கைகள் நடுங்க தொலைபேசினேன். வேறு எங்குமே கிடைக்காவிட்டால் அவரிடம் தஞ்சம் புக வேண்டியது தான்.

அண்ணாநகரிலா வீடுகள் கிடைக்காது? என்போன்ற அகதிகள் எத்தனை ஆயிரம் உண்டு அண்ணாநகரிலே? தடுக்கி விழுந்தால் எழுப்பி விட்டு, “பாஸ், நான் சிவில் சர்வீசசுக்கு பிரிப்பேர் பண்றேன். நீங்க?” என்று கேட்பவர்கள் அண்ணாநகரின் ஒரிஜினல் ஜனத்தொகைக்கு சமமாகவோ அதிகமாகவோ இருக்கக் கூடும். சக அகதி என்ற முறையில் பழக்கமான ஒரு தோழனிடம் சொல்லி வைத்திருந்தேன். அவன் அவனுக்குத் தெரிந்த ஒரு சக அகதியிடம் சொல்லி ஒரு அறைக்கு அழைத்துப் போனான். இரண்டு பேர் தங்கும் அறை; ஒரு அடுக்குமாடிக் கட்டிடத்தின் மூன்றாம் தளத்தில் இருந்தது. ஒரு முன்னறை, ஒரு பின்னறை, இடையில் ஒரு இந்தியப் பாணி கழிவறை, ஒரு சமையலறை. சமையலறை கிட்டத்தட்ட ஷெல்புகளால் ஆனதைப் போலிருந்தது. ஷெல்புகளில் தொட்டால் பொடியாகும் நிலையில் மூன்று பழம்புத்தகங்கள் இருந்தன. அவற்றைத் தொட்டுப் பொடியாக்கி கரைத்துக் குடிக்கும் மனநிலையில் நான் அப்போது இல்லையாதலால் அப்புத்தகங்கள் உயிர் பிழைத்தன.

இரண்டு பேர் தங்கலாம். சரி தான். ஆனால் இரண்டாவது நபரை எங்கே போய்த் தேடுவது? என்னை அழைத்துச் சென்ற அகதியிடமே “நீ இப்போது அறை மாறும் உத்தேசம் ஏதுமுண்டா?” என்று கேட்டேன். அவன் அத்தகைய உத்தேசங்கள் எதுவும் தனக்கு இல்லை என்பதைக் காண்பிக்கும் வகையில் மிக அழுத்தமாகவும், ஆழமாகவும் தலையசைத்து மறுத்தான். அதற்கும் இணையத்தில் விளம்பரம் கொடுக்கலாமா? ஆனால் அதைப் பார்த்து இரண்டாவது நபர் வருவதற்குள் வேறிருவர் வந்து வாடகை பிடித்தால் என்ன செய்வது?

என்ன செய்வதென்று அறியாமல் மனக்கரங்களால் மூளையைப் பிசைந்து கொண்டும், சதைக்கரங்களால் தலையைச் சொறிந்து கொண்டும் அறைக்குப் போகும் போது என்னைப் போல் மோகனுக்கும், ராஜீவுக்கும் அறை பிடிக்காமல் போயிருந்தது. அவர்கள் அடுத்தநாள் புதிதாக வேறொரு விடுதி பார்க்கக் கிளம்பினார்கள்.அவர்களுடனேனயே ஒட்டிக் கொண்டேன்.

முதலில் கிங்ஸ் கெஸ்ட் ஹவுஸ். பெரிய அறைகளை கண்ணாடித் தடுப்புகளால் சிறிய அறைகளாகப் பிரித்து ஒவ்வொன்றிலும் மூன்று இரண்டடுக்கு படுக்கைகளைப் போட்டிருந்தார்கள். அப்படி ஒரு அறையில் மொத்தம் ஆறு அரசர்கள். எப்படி அரசர்கள் ஆட்டுக் கொட்டகை போன்ற அறைகளில் தங்க சம்மதிக்கிறார்கள் என்று தெரியவில்லை. உணவுடன் சேர்த்து மாதம் 6500 ரூபாய். மோகனுக்கும் ராஜீவுக்கும் பிடித்துப் போனது. எனக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. அறைக்குள் இருந்த ஏற்புணர்வு வெளியே வந்ததும் வடிந்து போனதால், அடுத்த அறையைத் தேடிப் போவதைப் பற்றி அவர்களுக்கும் எந்த ஆட்சேபணையும் இல்லை.

மீண்டும் தெருக்களை அளந்தோம். கொஞ்ச தூரத்தில் இன்னொரு விடுதி. இரண்டு பேர் தங்கிக் கொள்வது மாதிரியான அறைகள். ஆனால் முழுதாக நிரம்பியிருந்தது அவ்விடுதி. அந்த விடுதியின் சொந்தக்காரர் வைஷ்ணவுக்கு அதைப் போல் இன்னும் சில விடுதிகள் இருப்பதாகச் சொல்லி அங்கே தங்கியிருந்தவர் ஒரு மொபைல் நம்பரைத் தந்தார்.

மோகன் வைஷ்ணவுக்கு ஃபோன் பண்ணினான். காலியிடங்கள் இருக்கும் இன்னொரு விடுதிக்கு போக வழி சொன்னார் அவர். சென்னைக்குள்ளேயே குக்கிராமம் போன்ற பகுதியில் அமைந்திருந்தது. உள்ளே சாலைகள் எதுவும் இல்லை. அரிசி மண்டியொன்றின் மூன்றாம் மாடியில் இருந்தது அது. அறை வெளிச்சமாகவும் காற்றோட்டமாகவும் இருந்தது. இரண்டு பேர் ஒரு அறைக்குள் தாராளமாகத் தங்கலாம். சாப்பாடோடு சேர்த்து 5500 ரூபாய். மூன்று பேருக்கும் பிடித்திருந்தாலும் அதைவிட நன்றாக ஒரு அறை கிடைக்காதா என்கிற நப்பாசை/ பேராசையில் யோசித்து சொல்கிறோம் என்று சொல்லி வெளியே வந்து விட்டோம்.

எங்கள் நப்பாசை நிறைவேறவில்லை. அதற்கப்புறம் பார்த்தவையெல்லாம் காற்றோட்டமில்லாமல், இருட்குகைகளைப் போலவும், மாட்டுத் தொழுவங்களைப் போலவும் இருந்தன. வைஷ்ணவை அடுத்த நாள் போனில் கூப்பிட்டு அந்த விடுதி ஓகே என்றோம். அடுத்தநாள் தான் அந்த அறைக்கு வருவதாகவும், அங்கே வந்து அட்வான்ஸ தரவும் சொன்னார் அவர். காலையிலேயே மூன்று பேரும் ஆளுக்கு ஐயாயிரத்துடன் கிளம்பி விட்டோம். வைஷ்ணவ் மாதவனை போன்றவராக இல்லாதவரைக்கும் நல்லது தான். சீக்கிரமாக வந்து விட்டோமா என்றெண்ணி அரிசி மண்டி வாட்ச்மேனிடம் “வைஷ்ணவ் சார்…” என்றோம். அவர் மேலே கைகாட்டினார்.

அன்றைக்குப் பார்த்த அறையின் கதவைத் திறந்து உள்நுழைந்தோம். வைஷ்ணவ் உட்கார்ந்திருந்தார். இல்லை, மாதவன் உட்கார்ந்திருந்தார். அப்படியும் சொல்ல முடியாது. சிலரால் வைஷ்ணவ் என்றும், சிலரால் மாதவன் என்றும், எங்களால் அவ்விரு பெயர்களாலும் அழைக்கப்பட்டிருந்த அந்நபர் உட்கார்ந்திருந்தார். நாங்கள் அறியாத வேறு பெயர்களும் அந்நபருக்கு இருக்கலாம்.

எங்களைப் பார்த்தவருக்கு எந்த அதிர்ச்சியுமில்லை. எங்களை எதிர்பார்த்திருந்தவர் போன்றே அமர்ந்திருந்தார். நாங்கள் அதிர்ச்சியில் எதுவும் பேசாமல் நின்றிருந்தோம். “என்ன பாக்றீங்க? எல்லாருமே நான்தான். எங்க போனாலும் சுத்தி சுத்தி எங்கிட்ட தான் வரணும். சென்னை முழுசா என்னுது தான், ஒலகம் முழுசுமே என்னுது தான். வேணும்னா பாக்றீங்களா?” என்று வாயை விரிவாய்த் திறந்தார்.

சென்னை நகரம் அந்தச் சிறுவாய் முழுக்க நிறைய சிறுவாய் பெருவாயாகிக் கொண்டே போனது. கூவத்தின் வாடை அறைமுழுக்க வியாபிக்கவே திடுக்கிட்டு வாயை மூடிக் கொண்டார் சென்னையின் கடவுளான வைஷ்ணவ்/மாதவன்/பெயரற்றவர்.