ஸிந்துஜா

வெளியேற்றம்

ஸிந்துஜா

கண்ணாடி காட்டிய உருவம் சுமிக்குத் திருப்தி அளித்தது. பொட்டு மட்டும் சரியாக அமையவில்லை. சிறிய சிவப்பு கறுப்பு நிறங்களில் பொட்டுக்கள் விற்கிறார்கள் என்று ஒரு சிவப்பு பாக்கெட்டு வாங்கி வைத்திருந்தாள். போன வாரம் பிரித்து இட்டுக் கொண்டாள். மேஜை மேலிருந்த சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை புத்தகத்துக்கு அடியில் இருக்கிறதா என்று தேடினாள். கிடைக்கவில்லை.

“என்ன இன்னும் டிரஸ் பண்ணி முடிக்கலியா? நான் குளிச்சிட்டு, சாமிக்கு ரெண்டு பூ போட்டு ஸ்லோகம் சொல்லிட்டு வந்தாச்சு. நீ என்னடான்னா அப்போலேர்ந்து கண்ணாடி மின்னே நின்னுண்டு ராயசம் பண்ணிண்டு இருக்கே ” என்று சரசம்மா அறையின் உள்ளே வந்தாள். அவளிடம் பொட்டுப் பாக்கெட்டைக் கேட்கலாம் என்றால் எடுத்ததை வச்ச இடத்தில் வச்சால் தேட வேண்டாம்; ஆனா கேட்டாத்தானே என்று யாரோ மூணாம் மனுஷிக்குச் சொல்லியபடியே எங்கேயிருந்தோ கொண்டு வந்து தருவாள்.

“ரொம்ப அட்டகாசமா புடவை கட்டிண்டு இருக்கியே? இன்னிக்கி மீட்டிங்குக்கு சல்வார் கமீஸ் போட்டுண்டா ஒத்துக்காதா?” என்று அவளைப் பார்த்தாள்.

“ஏம்மா அம்பைக்குக் கோபம் வர்ற கேள்வியெல்லாம் கேக்கறே?” என்று சிரித்தாள் சுமி. சரசம்மாவும் சிரித்தபடியே சுமியின் நெற்றியைப் பார்த்து விட்டு “பாழும் நெத்தியோட அலையணும்னு இன்னிக்கி வேண்டுதலா?” என்று கேட்டாள்.

“மறுபடியும் அம்பையைச் சீண்டாதேம்மா. நானே பொட்டுப் பாக்கெட்டை எங்கியோ வச்சிட்டுத் தேடிண்டு இருக்கேன்” என்றாள் சுமி.

“அன்னிக்கி என்னமோ கேக்கறேன்னு நெத்தியிலே பொட்டு வச்சிண்டே கிச்சனுக்கு வந்து அங்கேயே பாக்கெட்டை வச்சிட்டுப் போயிட்டே. சரி அங்கேயே இருக்கட்டும்னு எடுத்து வச்சேன். நீதான் கிச்சன் பக்கம் எட்டிப் பாக்க மாட்டியே” என்று உள்ளே போய்எடுத்துக் கொண்டு வந்தாள். “கடுகு சைசுக்கு இருக்கு. இதை விடச் சின்னதாக் கிடைக்கலையா?” என்று ஒரு சிவப்புப் பொட்டை எடுத்து சுமியின் நெற்றியில் வைத்தாள்.

“ஏன்தான் எனக்கு உன்னை மாதிரி இருக்க முடியலையோ?” என்றாள் சுமி.

“எல்லாம் ஜீன்ஸ்லே வரது” என்றபடி சரசம்மா நெற்றிப் பொட்டை சரி செய்தாள்.

அவள் உண்மையில் தாக்குவது தன்னையல்ல என்று சுமி நினைத்தாள். வாரத்தில் இரண்டு மூன்று நாள்கள் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சண்டை போடுவதற்கென்றே சமயங்கள் வாய்க்கும். காய்கறி மார்க்கெட்டில் அவர் வாங்கி வரும் காய்கறிகளை அம்மா முத்தல் பழி என்று முத்திரை குத்துவாள். அவர் சுமிக்கு எடுக்கும் உடை கண்ணைக் குத்தும் கலரில் சகிக்கப் போறலை என்பாள்.அவள் விரும்பும் தமிழ் சினிமாவுக்குப் போகாமல் இந்திப் படம் போக வேண்டும் என்று சொல்லி அவர் வெறுப்பேற்றுவார்.

அம்மாவுக்கு எதிலும் செட்டாக இருக்க வேண்டும். ஒழுங்கு, கவனம், துப்புரவு, கௌரதை, அழுத்தம், திருத்தம் என்று எல்லாமே வடிவெடுத்து வந்தாற் போல அவள் நடையில், உடையில், பேச்சில், பாவனையில் தெரிய வரும். வீட்டில் ஒரு தூசு தும்பு இருக்கக் கூடாது. சோஃபா, நாற்காலிகள் எல்லாம் ஹாலில் தரையோடு ஒட்டி வைத்தது போல ஒரு இஞ்சு நகராமல் போட்ட இடத்திலேயே இருக்க வேண்டும். இரண்டு வாரத்துக்கு ஒரு முறை ஜன்னல்கள், கதவுகள், சுவர்கள் எல்லாம் துடைத்து வைத்தது போல இருக்க வேண்டும். ஆழ்வார்குறிச்சி சித்தி போன தடவை வந்த போது சரசம்மாவைப் பார்த்துச் சிரித்தபடியே “அக்கா, நான் உங்காத்துக்கு வரப்போ மட்டும் குங்குமம் இட்டுக்கக் கண்ணாடி கிட்டே போகிறதில்லே. நான் நின்னுண்டு இருக்கிற இடத்திலே இருந்து குனிஞ்சு தரையைப் பாத்தாப் போறும்!” என்றாள்.

எதிராளியிடம் பணிவை ஏற்படுத்தும் தோற்றம் அம்மாவிடம் இருக்கிறது என்று சுமி அடிக்கடி தனக்குள் நினைத்துக் கொள்வாள். அவள் நிறம் கொஞ்சம் மட்டுதான். அவள் கம்பீரம் லேசான ஆண் சாயலை அவளுக்குத் தந்திருந்தது. ஆனால் அவற்றைப் பற்றி கவலை எதுவும் கொள்ளாமல் அவள் தன்னை ஸ்தாபித்துக் கொண்டு வளைய வந்தாள். ராம்குமார் மாமா அம்மாவை ஜெஜெ எங்கே என்றுதான் கேட்பார். ஜெ.ஜெயலலிதாவாம்! ராம்குமார் பாட்டியின் தம்பி. அதனால் அம்மாவுக்கு மாமா. ஆனால் அம்மாவின் உறவினர் குடும்பங்கள் அனைத்துக்கும் அவர் மாமாதான். அவர் சரசம்மாவை விடப் பத்துப் பனிரெண்டு வருஷங்கள் மூத்தவராயிருக்கலாம். ஆனால் அவர் வீட்டுக்கு வந்தால் ஒரே சிரிப்பும் கேலியுமாய் வீடே களேபரத்தில் மூழ்கும். சில நாள்கள் அவர் வந்திருக்கும் அன்று அப்பா ஆபிசிலிருந்து வர சற்று லேட்டாகும். ஆனால் மாதவராவ் வந்த பின் சத்தம் இன்னும் ஜாஸ்தியாகுமே ஒழியக் குறையாது. உறவுக்கு அப்பாலும் மாதவ
ராவும் மாமாவும் நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள்.

சுமி மறுபடியும் கண்ணாடி முன்னே நின்று ஒருமுறை பார்த்துக் கொண்டாள்.

“எல்லாம் நன்னாதான் இருக்கு. புடவை கட்டிண்டு வான்னு அது சொல்லி இருக்காதே?”

அம்மா அது என்று சொல்லுவது அவளை விட்டுச் சென்ற கணவனை. ஏழு வருஷத்துக்கு முன்பு நடந்த பிரிவு. அப்போதுதான் சுமி காலேஜில் சேர்ந்திருந்தாள். அதற்கு சரசம்மாதான் மாமாவிடம் பணம் வாங்கிப் பீஸ் கட்டினாள். மாதவராவ் அதற்கு முந்திய இரண்டு மாதமாகக் குடும்பச் செலவுக்குப் பணம் கொடுக்கவில்லை. ஆபீஸ் வேலை என்று ஒன்றரை மாதமாகக் கல்கத்தாவில் இருந்தார். கணவன் மனைவி பிரிவு பணத்தினால் மட்டும் விளைந்த ஒன்றோ என்று அவளுக்கு லேசாகத் தகராறு இருந்தது. ஆனால் அதைச் சுட்டிக்காட்டும் எந்த நிகழ்வையும் அவள் சந்திக்கவில்லை. அவர்களிருவரும் பிரிவது என்பதை அது நடப்பதற்குச் சில வாரங்கள் முன்புதான் அம்மா சொல்லி அவள் தெரிந்து கொண்டாள். அதையும் அம்மா ஐந்து வார்த்தைகளில் முடித்து விட்டாள்: ‘உங்கப்பா இனிமே நம்மோட இருக்க மாட்டார்.’ அவளிடம் அப்பா அதைப் பற்றி ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை என்பது தனக்குக் கோபத்தை ஏற்படுத்தவில்லை என்பதை உணர்ந்த போது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவள் அம்மாக் கோண்டு என்று மாதவராவ் நினைத்திருக்கலாம். அல்லது தனது மனைவியைப்
போலப் பெண்ணுக்கும் ‘பொல்லாத்தனம்’, ‘கல்மனது’ ஆகிய வார்த்தைகளுடன் நெருங்கிய சம்பந்தம் உண்டு என்று கருதியிருக்கலாம்.

சரசம்மாவை விட்டுச் சென்ற மாதவராவ் ஊரை விட்டு ஜான்சிக்குப் போய் விட்டார் என்று சில மாதங்கள் கழித்து அவர்களுக்குத் தெரிந்தது. அதுவும் ராம்குமார் மாமா மூலமாகத்தான். மாமாவின் கம்பனிக்கு மாதவராவின் கம்பனிதான் மெஷின்களை விற்று வந்தார்கள். அந்த ஆர்டர்கள் கூட மாமா மூலம்தான் கிடைத்தன என்று அம்மா சொல்லியிருக்கிறாள்.

சுமி சரசம்மாவிடம் “புடவை கட்டிண்டு வரதைப் பத்தியெல்லாம் பேச அன்னிக்கி எங்கே டயம் இருந்தது?” என்று கேட்டாள்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு சுமி அலுவலகத்தில் வேலையாய் இருந்தபோது பியூன் வந்து அவளிடம் “மேடம், உங்களைத் தேடி
ரிசப்சன்லே உக்காந்திருக்கிறவங்களை இங்க அனுப்பட்டுமா?” என்றான்.

அப்போது மணி நான்கு இருக்கும். அவள் கம்பனியின் விளம்பரதாரரை மூன்று மணிக்கு வரச் சொல்லியிருந்தாள். லேட்டாக வந்ததுமில்லாமல் இங்கே வருவதற்குப் பதிலாக எதற்கு
ரிசப்ஷனில் நின்று கொண்டு தன்னை அழைக்கிறாள்? சுமிக்குக்
கோபம் ஏற்பட்டது.

“யார் அட்வைர்டைசிங் ரேகாதானே? அவளை இங்கே வரச் சொல்லு” என்றாள்.

“அவ இல்லே. அவரு” என்று சிரித்தான் தண்டபாணி.

அவள் ஆச்சரியத்துடன் ரிசப்ஷனுக்குச் சென்றாள். மாதவராவ்.

அவளுக்கு ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லை. இவர் எப்படித் திடீரென்று இங்கே? ஏழு வருடங்களுக்கு முன்பு அவர் பெட்டியைத் தூக்கிக் கொண்டு அவர்கள் வீட்டை விட்டு வெளியே சென்ற தினம்தான் அவள் அவரை கடைசியாகப் பார்த்தது. கல்லூரியில் அவள் வகுப்பு மாணவிகள் ஒரு முறை வட இந்தியச் சுற்றுப் பயணம் மேற்கொள்ளலாம் என்றார்கள். பார்க்க வேண்டிய இடங்களில் கஜுராஹோவும் இருந்தது. அதைப் பற்றி வகுப்பில் பேச்சு வந்த போது ஜான்சி வழியாக அங்கே போவது சௌகரியம் என்று ஒருத்தி சொன்னாள். அப்போது மாதவராவின் நினைவு அவளுக்கு ஏற்பட்டது.

ஏழு வருஷம் அவரிடம் தோற்றிருந்தது. ஏதோ போன வாரம் பார்த்த மாதிரி இருந்தார்.

அவர் அவளைப் பார்த்ததும் எழுந்து நின்று புன்னகை புரிந்தார்.

அவள் “உக்காருங்கோ” என்று அங்கிருந்த சோஃபாவைக் காட்டி விட்டு அவளும் பக்கத்திலிருந்த இன்னொரு இருக்கையில் அமர்ந்தாள்.

“எப்படி இருக்கே? யூ ஆர் லுக்கிங் வெரி ஸ்மார்ட்” என்றார்.

“நீங்களே கேள்வி கேட்டுட்டு நீங்களே பதிலும் சொல்லியாச்சு” என்றாள் சுமி.

மாதவராவ் முகத்தில் புன்னகை தோன்றி மறைந்தது.

“எனக்குச் சந்தேகமாதான் இருந்தது. பாக்கறதுக்கு ஒத்துக்க மாட்டியோன்னு. அது தவிர நான் சொல்லாம கொள்ளாம வந்து நிக்கறது உனக்குப் பிடிக்காமப் போனா? போன் பண்ணிட்டு வரலாம்னு முதல்லே நினைச்சேன். ஆனா நீ போன்லேயே வராதேன்னு சொல்லிட்டா? அதுக்குத்தான் போய்ப் பாத்து ட்ரை பண்ணலாம்னு வந்துட்டேன்” என்றார்.

அவர் தயங்கித் தயங்கிப் பேசியதும், அந்தப் பேச்சில் தென்பட்ட அச்சமும் அவளைச் சற்றுப் பாதித்தது.

“அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லே. நீங்க ஏதாவது சாப்பிடறேளா?” என்று கேட்டாள்.

அவள் அப்படிக் கேட்டதும் அவர் முகத்தில் லேசாகப் பரவிய நிம்மதியை அவள் கவனித்தாள். ஆனால் தலையை அசைத்து ஒன்றும் வேண்டாம் என்று மறுத்து விட்டார்.

“நீங்க நார்த்லே இருக்கறதா சொன்னாளே?” அவரிடம் சகஜத் தோரணையை ஏற்படுத்த அவள் கேட்டாள். அதே சமயம் அவரைப் பார்த்ததும் கோபமோ வெறுப்போ ஏன் தனக்கு ஏற்படவில்லை என்பதை ஆச்சரியத்துடன் உணர்ந்தாள்.

“இல்லே. இப்ப நாங்க இங்கே வந்துட்டோம். ஒரு மாசமாகப் போறது.”

சுமி ஆச்சரியத்துடன் “நாங்களா?” என்று கேட்டாள்.

“ஓ, அந்த நியூஸ் உங்களுக்கெல்லாம் தெரியாதோ? அஞ்சு வருஷம் முன்னாலே நான் இன்னொரு கல்யாணம் பண்ணிண்டேன்” என்றார். அவர் குரலில் குற்ற உணர்ச்சி தொனிக்கிறதா என்று அவள் உற்றுக் கவனித்தாள். இல்லை.

ராம்குமார் மாமா இருந்திருந்தால் அவர்களுக்குத் தெரிந்திருக்கும். மாதவராவ் அவர்கள் குடும்பத்தை விட்டு விலகிச் சென்ற பின் மாமாதான் அவர்களுக்கு வேண்டிய வெளி வேலைகளையெல்லாம் பார்த்து உதவிக் கொண்டிருந்தார். ஆறு மாதம் போயிருக்கும். திடீரென்று ஒரு நாள் தனக்கு சிங்கப்பூரில் வேலை கிடைத்து விட்டது என்று போனவர்தான். அப்புறம் சொந்த ஊர்ப் பக்கம் தலை காண்பிக்கவில்லை.

“வீடு எங்கே?” என்று சுமி பேச்சைத் தொடர்ந்தாள்.

“தொட்டகலாசந்திராலே மந்திரி ஸ்ப்ளெண்டர் பக்கத்திலே வீடு.”

“அது ரொம்ப தூரமாச்சே?””

“ஆமா. இங்கே மெஜெஸ்டிக்லேந்து தூரம்தான். ஆனா எனக்கு ஆபீஸ் பக்கத்திலேன்னு அங்க போயிட்டோம்.”

தொடர்ந்து “இந்த ஊருக்கு வரேன்னு தெரிஞ்சப்புறம் எனக்கு உன்னைப் பாக்கணும்னு எப்பவும் நினைச்சிண்டே இருப்பேன். அதிலே ஆசை, பயம், ஏக்கம், தடுமாத்தம் எல்லாம் இருந்து என்னைப் போட்டு வதைக்கும். கடைசியிலே எப்படியோ இன்னிக்கி வந்து பாத்துட்டேன்” என்றார்.

பேசிக் கொண்டிருக்கும் போதே அவர் கண்கள் அவள் முகத்தை விட்டு விட்டுப் பார்த்துக் கொண்டிருந்தன. அவள் முகத்தில் ஓடுவதைப் படிக்கத் துடிக்கும் கண்கள். தான் சரியாகப் பேசுகிறோமா, அவள் அதை ஒப்புக் கொள்கிறாளா என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை அவரின் பேச்சில் இருந்த படபடப்பு தெரிவித்தது.

அவள் கண்கள் சுவரில் இருந்த கடிகாரத்தைப் பார்த்தன.

அவர் அவளிடம் “சரி, நான் கிளம்பறேன். ஆபீஸ்லே வேலையா இருக்கறப்போ டிஸ்டர்ப் பண்ணிட்டேன்” என்று எழுந்தார்.

“அதெல்லாம் ஒண்ணும் இல்லே” என்றாள் சமாதானப்படுத்தும் குரலில்.

“ஒரு நா நீ எங்காத்துக்கு வரணும்” என்றபடி தயாராக சட்டைப் பையில் இருந்து ஒரு காகிதத்தை எடுத்துக் கொடுத்தார். “பங்கஜாவுக்கும் உன்னைப் பாக்கணும், உன்னோட பேசணும்னு ஆசை. இப்பக்கூட தானும் வரதா சொன்னா. நான்தான் முதல்லே நான் போய்ப் பாத்துட்டு வரேன்னு சொல்லி சமாதானப்படுத்திட்டு வந்தேன்” என்று புன்னகை செய்தார்.

அவள் அவர் கொடுத்த காகிதத்தை வாங்கிக் கொண்டாள். ஆனால் பிரித்துப் படிக்க முயலவில்லை.

“இந்த ஞாயத்துக் கிழமைக்கு அடுத்த ஞாயத்துக் கிழமை வரேன்” என்றாள்.

அவள் திரும்ப சீட்டுக்கு வந்த பின் நடந்ததை ஒரு முறை நினைத்துப் பார்த்தாள். அவர் சரசம்மாவைப் பற்றி ஒரு வார்த்தை கேட்கவில்லை. பெண்ணைப் பார்த்துக் கொண்டிருந்தாலே போதும் என்ற மன நிலையில் மறந்து விட்டாரா? ஆனால் எப்படியோ அவள் இருக்குமிடத்தைக் கண்டுபிடித்து வந்து விட்டாரே. அவளும் அவர் எடுத்த முயற்சிகளைப் பற்றி ஒன்றும் கேட்கவில்லை. அவருடைய தயக்கமும், குரல் நடுக்கமும் அவர் மீது பரிதாபத்தை உண்டு பண்ணுவதாக இருந்தன.

சட்டென்று அவளுக்கு மாதவராவுடன் பேசிய அத்தனை நேரத்தில் தான் அவரை ஒருமுறை கூட அப்பா என்று அழைக்கவில்லை என்பதை உணர்ந்தாள்.

அன்று மாலை அவள் அலுவலகத்திலிருந்து வந்த பின் இரவு உண்ணும் போது சரசம்மாவிடம் மாதவராவின் வருகையைப் பற்றிச் சொன்னாள். வீட்டுக்கு வா என்று அவர் சொன்னதை அவளிடம் சொல்லும் போது சரசம்மா அவளை ஒரு நீள் பார்வை பார்த்தாள். மற்றபடி சரசம்மா வாயைப் புழக்கடையில் விட்டு விட்டு செவியை வரவேற்பறையில் வைத்திருப்பவளாய்க் காட்சியளித்தாள்.

சுமி அவளிடம் “அம்மா, நான் அவாத்துக்குப் போயிட்டு வரலாம்னு பாக்கறேன்” என்றாள்.

சரசம்மா சாப்பிடுவதை நிறுத்தி விட்டு “ம். போயிட்டு வாயேன்” என்றாள். குரலில் எந்த உணர்ச்சியையும் காட்டாது அவள் ‘செய்யேன்’ என்று சொன்னது ‘செய்யாதே’ என்று கூறுவது போல சுமிக்குப் பட்டது. ஆனால் உடனடியாக அவள் இதெல்லாம் தன்னுடைய பிரமை என்று தனக்குள் உதறிக் கொண்டாள். அம்மா இப்போதைய நிலையில் எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அப்படித்தான் நடந்து கொள்கிறாள் என்று அவள் மனம் நினைத்தது. நான் ஏன் இம்மாதிரித் தடுமாறுகிறேன்? இரவு படுக்கையில் விழுந்து மாதவராவையும் அவர் பேச்சையும் அம்மாவின் முகபாவனையையும் பேச்சையும் நினைத்துப் பார்த்தாள். அவளுக்கு மாதவராவின் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்னும் தனது நினைப்பின் பின்னால் எதற்காக மணமுறிவு ஏற்பட்டது என்னும் உண்மையான காரணத்தைத் தெரிந்து கொள்ளும் ஆவல்தான் தன்னை இப்படி உந்தித் தள்ளுகிறது என்று தோன்றிற்று. இதுவரை ஒவ்வொரு முறையும் அவள் வெவ்வேறு காரணங்களைத் தானாகவே கற்பித்துக் கொண்டு வந்திருப்பதுதான் உண்மை. அதை உரைத்துப் பார்க்க ஒரு வாய்ப்புக் கிடைக்கும் போது எதற்காக அதை அவள் உதறித் தள்ள வேண்டும்?

மெட்ரோ ஸ்டேஷனிலிருந்து பக்கத்தில்தான் மாதவராவ் வீடு இருந்தது.

அழைப்பு மணியை அமுக்கியதும் கதவைத் திறந்தது மாதவராவ்தான்.

“வா, வா. வீடு கண்டு பிடிக்க கஷ்டமாயில்லையே?”

உள்ளே நுழைந்ததும் ஹால் எதிர்ப்பட்டது. ஒரே களேபரமாகக் கிடந்தது. சோஃபாவின் மேல் யானை, குதிரை, நாய், சோட்டா பீம், டைனோசர் என்று கால் ஒடிந்த, தலை கலைந்த பெரிய பற்களுடன் வாய் விரித்த கோலத்தில் பலர் கிடந்தார்கள். சோஃபாவை ஒட்டி ஒரு ரயில் வண்டி தலை குப்புறக் கீழே விழுந்து கிடந்தது. ஓடிக் கொண்டிருந்த டி .வி.யின் மேல் வைக்கப்பட்டிருந்த ஒரு கண்ணாடிப் பிரேமுக்குள் தலை நிறைய மயிரும் குறுகுறு கண்களும் அரிசிப் பல் சிரிப்புமாக நாலைந்து வயதில் பொல்லாத்தனம் கொட்டும் முகத்துடன் ஒரு பொடியன் தலையைச் சாய்த்து நின்றான்.

மாதவராவ் அவள் பார்ப்பதைப் பார்த்து விட்டு “நீ வரப்போறயேன்னு அரைமணிக்கு மின்னாலேதான் இது எல்லாத்தையும் மூட்டை கட்டி ஒழிச்சு வச்சேன். இப்போ அஞ்சு நிமிஷத்துக்கு மின்னாலே வந்து ரணகளம் பண்ணிப் போட்டுட்டு பாத்ரூமுக்குப் போயிருக்கு பாரு” என்று சிரித்தார். சோஃபாவில் இருந்த பொருள்களை அங்கேயே ஒரு ஓரமாக ஒதுக்கிக் குமித்து விட்டு “உக்காரு” என்றார்.

அவள் உட்கார்ந்து கொண்டதும் “ஒரு நிமிஷம் வரேன்” என்று உள்ளே சென்றார். அவள் பார்வை ஹாலைச் சுற்றியது. டி.வி ஸ்டான்டின் அருகில் இருந்த ஸ்டூலில் இந்தியன் எக்ஸ்பிரஸின் சில பக்கங்கள் ஸ்டூல் மேலும் மீதி தரையிலும் கிடந்தன. டைனிங் டேபிள் மீது இருந்த பாத்திரங்களில் இரண்டு மூடப்படாமல் இருந்தன.

மாதவராவ் கையில் குளிர்பானம் நிரம்பிய இரு கண்ணாடித் தம்ளர்களை எடுத்து வந்து அவளிடம் ஒன்றைக் கொடுத்தார். அவள் அதை வாங்கி எதிரே இருந்த டீபாயில் வைத்தாள்.

“குழந்தைக்கு என்ன வயசாறது?” என்று கேட்டாள் சுமி போட்டோவைப் பார்த்தபடி..

“எட்டு வயசாறது” என்றார் மாதவராவ்

“என்னது?”

“ஆமாம். அந்தப் படம் அப்போ எடுத்தது. இப்போ எட்டு வயசு.”

சுமியின் பார்வை சோஃபாவின் மீது விழுந்து நின்றது.

“அவன் கொஞ்சம் ரிடார்டட் பேபி.” என்றார் மாதவராவ்.

அவள் திரும்பி அவரைப் பார்த்தாள். அன்று முதல் சந்திப்பில் ஐந்து வருடம் முன்பு கல்யாணம் ஆயிற்று என்றாரே. அப்படியென்றால்?

“நான் வேலை பாக்கற ஆபீஸிலேதான் பங்கஜாவும் வேலை பார்க்கறா. அவ புருஷன் அவளை விட்டுட்டு ஓடிப் போயிட்டான்.”

சட்டென்று அவளையும் மீறி சுமியின் வாயிலிருந்து வார்த்தைகள் வெளிப்பட்டு விட்டன.

“நீங்க என் அம்மாவை விட்டுட்டுப் போயிட்ட மாதிரி” .

மாதவராவ் அவள் கண்களை நேரடியாகச் சந்தித்தார். தயக்கம் எதுவும் தெரிவிக்காத ஆழமான ஆனால் அமைதியான கண்களைப் பார்ப்பது போல சுமிக்குத் தோன்றிற்று.

“ஐ’ம் ஸாரி. வெரி ஸாரி” என்றாள் சுமி.

“நீ ஒண்ணும் தப்பா சொல்லலையே” என்றார் மாதவராவ். “உனக்குத் தெரிஞ்சதை வச்சு நீ சொன்னதுலே ஒரு தப்பும் இல்லே.”

அவர் வார்த்தைகள் பூடகமாக இருக்கின்றனவோ என்று ஒரு கணம் அவளுக்குச் சந்தேகம் எழுந்தது. நீ தப்பாக சொல்லி விட்டதால் உனக்கு இம்மாதிரி தோன்றுகிறது என்று அவள் மனம் கூறியது.

.”குறையோட இருக்கற குழந்தையை வச்சுண்டு தனியா மன்னாடறாளேன்னுதான் கல்யாணம் பண்ணிண்டேன்” என்றார் அவர்.

அவளுக்கு அவர் மீது இப்போது பெரும் மரியாதை ஏற்பட்டது.

“நான் எப்பவுமே உங்களைத் தப்பா நினைச்சிண்டு வந்திருக்கேனோன்னு ஒரு குத்த உணர்ச்சி என்னைப் போட்டுப் பிறாண்டறது” என்றாள் சுமி உணர்ச்சி மேலோங்க.

மாதவராவ் கனிவுடன் அவளைப் பார்த்துப் புன்னகை புரிந்தார்.

“என்னவோ ஒருத்தர் சந்தோஷமா இருக்க நல்லது செய்யறேன்னு நினைச்சிண்டு நானாத்தான் வெளியே வந்தேன். ஆனா அது என்னமோ வேறே மாதிரி நடக்கணும்னு ஆயிடுத்து” என்றார் மாதவராவ் .

 

அப

ஸிந்துஜா

எதிரே நிழலாடிற்று. படித்துக் கொண்டிருந்த டெக்கான் ஹெரால்டிலிருந்து நாகேச்வரய்யர் கண் எடுத்து நிமிர்ந்து பார்த்தார். அபயாம்பாள்.

அவள் அவரைப் பார்த்து “நீங்க இன்னிக்கி ஆத்திலேதான் இருக்கப் போறேள்னு நேத்தி மாமி சொன்னா. மாமி ஜெயநகருக்குப் போயிருக்கா இல்லே?” என்றாள்.

“ஆமா. அவ தங்கையாத்துக்குப் போயிருக்கா. என் ஆபீஸ்லேயும் எல்லாப் பசங்களும் நவம்பர் பரீட்சை கொடுக்கறேன்னு லீவில் போயிட்டான்கள். அடுத்த வாரம்தான் ஆபீஸைத் திறக்கலாம்னு இருக்கேன்” என்றார். அவர் பெங்களூரில் இருபது வருஷமாக ஆடிட் பிராக்டிஸ் செய்து கொண்டிருந்தார்.

பின்பு அவளிடம் “உக்காரு. என்ன இந்தப் போதுக்கு இங்கே வந்துட்டே? கோமதியாத்திலேன்னா இப்ப நீ புரண்டு படுத்துண்டு வாயாடிண்டு இருக்கணும்?” என்று சிரித்தார்.

“கோமதி மாமி ஊருக்குப் போயிருக்கா. அவ நாத்தனார் பொண்ணுக்குக் கல்யாணம்னு. வரதுக்கு ரெண்டு நாளாகும்னு சொல்லிட்டுப் போயிருக்கா” என்றபடி அவருக்கு எதிரே உட்கார்ந்து கொண்டாள் அபயம்.

“ஓ! அப்ப சங்கரனுக்கும் சேத்து நீதான் சமைச்சு அவாத்துக்கு அனுப்பணும்னு கோமதி சொல்லிட்டுப் போயிருப்பாளே!” சங்கரன் கோமதியின் ஒரே பிள்ளை. உள்ளூர் காலேஜில் வேலை பார்க்கிறான்.

“ஆமா. ரொம்ப நல்ல பையன். வாயைத் திறக்காம அனுப்புறதை சாப்பிட்டுட்டுப் போயிடறது அந்தப் பிள்ளை” என்றாள்.

“பேஷ், பேஷ். சர்டிபிகேட் எல்லாம் கேக்கறதுக்கே அமர்க்களமா இருக்கே” என்று அய்யர் சிரித்தார்.

“மாமா. அவனைப் பத்திப் பேசத்தான் இப்ப உங்க கிட்டே வந்தேன்” என்றாள் அபயம்.

அவர் அவளை உற்றுப் பார்த்தார். வாயிலிருந்து வந்து விழுந்த வார்த்தையில் தெரிந்த லேசான பதட்டம் அவள் முகத்திலும் இருந்தது. வழக்கமாக அவள் தன்னைத் தெரிவித்துக் கொள்ள முன் வருபவள் இல்லை. அய்யருடைய மனைவி ‘அவயம் ரொம்ப அமுக்கு’ என்று அவளுடைய கெட்டிக்காரத்தனத்தைச் சிலாகிப்பாள். உற்றுக் கேட்டாலொழிய கண்டுபிடிக்க முடியாத சுவர்க் கோழியின் ரீங்காரத்தை நினைவூட்டுபவளாக அய்யர் சில சமயம் அவளைப் பற்றி எண்ணுவார்.

“என்ன விஷயம்? சொல்லு” என்றார் அய்யர்.

“இந்தப் பொண்ணோட கல்யாணம் என்னை அரிச்சுப் பிடுங்கிண்டே இருக்கு” என்றாள் அபயம்.

“கல்யாணி இந்த வருஷம்தானே பி ஏ. முடிக்கப் போறா. அதுக்குள்ளே என்ன கல்யாணப் பேச்சு?” என்றார் அவர் ஆச்சரியத்துடன். கல்யாணிக்கு இருபது வயது இருக்குமா?

“இந்தப் பிராமணன் வேலையிலே இருக்கறப்பவே பண்ணாதானே ஆச்சு. ஒரு நாளைப் பாத்தாப்பிலே பையைத் தூக்கிண்டு ஆபீசுக்குப் போறதும் வரதுமா இருந்தா மட்டும் போறாதுன்னுதானே கிடுக்கிப் பிடி போட்டு சாயங்காலத்திலேயும் ஒரு வேலை பாத்தா கொஞ்சம் பணம் வருமேன்னு பிடுங்கி எடுத்து அனுப்பிச்சேன். போன மாசம் வரைக்கும் ஆத்துக்கு வந்ததும் ஒரு வாய் காப்பியை வாயில் விட்டுண்டு உடனே சைக்கிளை எடுத்துண்டு சேட் ஆபீசுக்குப் போய் அங்க கணக்கு எழுதி டைப்பிங் வேலையும் பாத்ததுக்கு மாசம் எதோ அஞ்சாயிரம் எக்ஸ்ட்ராவா வந்துண்டு இருந்தது. யார் கண் பட்டதோ, திடீர்னு நாலு நாளைக்கு மின்னாலே இனிமே சேட்டு கிட்டே எல்லாம் வேலைக்குப் போகப் போறதில்லேன்னு நின்னுட்டார். சேட்டோட என்ன வாய்க்காத் தகராறோ?” என்றாள்.

அபயம் அவள் புருஷனைப் பற்றி இளக்காரமாகப் பேசுவது ஒன்றும் புதிதல்ல. சேதுவும் அதற்கேற்றாற் போல் கொஞ்சம் அசடுதான். அவனோடு வேலைக்குச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி சேதுவுக்கு மேலே அதிகாரியாகி விட்டான். சேது வரவை விட செலவில் ஆர்வம் காட்டுபவன். குதிரைக்கு லகானைப் போட்டு இழுக்கின்ற மாதிரி அபயம் இருக்கிறாளோ, குடும்பம் கொஞ்சம் நிமிர்ந்து கௌரவமாக மற்றவர்களுக்கு முன் காட்சியளிக்கிறது என்று அய்யர் அடிக்கடி நினைப்பதுண்டு.

அபயம் பேரழகி இல்லை என்றாலும் கண்ணைக் கவரும் உருவம் அவளுடையது. உயரமும் அதற்குப் பாந்தமான கட்டு விடாத உடலும் அவளை நாற்பத்தி ஐந்து வயதுக்காரியாகக் காண்பிக்க மறுத்தன. நாற்பது இருக்குமா என்றதைக் கூட புதிதாக அவளைப் பார்ப்பவர்கள் சந்தேகமாகத்தான் கேட்டார்கள். ‘இருபது வயசிலேயே என்னமோ கொள்ளை போறாப்பிலே எனக்குக் கல்யாணத்தைப் பண்ணி வச்சிட்டார் எங்க அப்பா. இந்த மனுஷன் இந்தியன் ஸ்டீல் ஆபீஸ்லே வேலை பார்க்கிறதை ஆபீஸரா இருக்கார். உசந்த மாப்பிள்ளைன்னு காதிலே தப்பா வாங்கிண்டு… எல்லாம் என் கஷ்டகாலம். அரை வயத்துக்குக் கஞ்சி குடிக்கற ஒரே ஆபீசர் பொண்டாட்டி இந்த உலகத்திலேயே நான்தான்” என்று பழக ஆரம்பித்த மூன்று மாசத்துக்குள் ஒரு தடவை அய்யரிடமும் அவருடைய மனைவியிடமும் அழுது விட்டாள். அவள் அய்யரையும் அவரது மனைவியையும் ஏதோ தன் சொந்த பெற்றோர்தான் என்று நினைத்திருப்பவள் போல அவர்களிடம் அப்படி ஒட்டிக் கொண்டு இருந்தாள்

“ஆமா. நாங்கூட முந்தா நா ஈவினிங் வாக் போயிட்டு திரும்பி வரச்சே உங்காத்து வாசல்லே நின்னுண்டு இருந்தவன் என்னைப் பாத்துக் கை அசைச்சான். அவன் பக்கத்திலே மூர்த்தி நின்னு பேசிண்டு இருந்தான். சரி, சேது சாயங்கால டூட்டிக்குப் போகலே போலன்னு நான் நினைச்சிண்டு அவனுக்கு பதிலுக்குக் கையைக் காமிச்சிட்டு வந்தேன்” என்றார் அய்யர்.

“நீங்க அவருக்கு நல்லதா நாலு வார்த்தை சொன்னாதான் எனக்கு விடியும்” என்றாள் அபயம்.

“சரி, சாயந்திரம் பாக்கறேன். ஆறு ஆறரைக்கு இருப்பானோல்லியோ?”

“அதான் சேட்டு வேலையை விட்டப்புறம் அஞ்சரைக்கே ஆபீஸ்லேந்து வந்து இங்கே உக்காந்துண்டு போறவா வரவா கிட்டே அரட்டை அடிக்கறதும், மொபைல்லே சினிமா பாட்டு கேக்கறதுமா காலத்தைக் கடத்தியாறதே. எல்லாம் என் தலையெழுத்து” என்றாள் அபயம்.

அய்யர் இந்தப் பேச்சைத் தவிர்க்க விரும்பியவராக “சங்கரனைப் பத்தி என்னமோ சொல்றேன்னு ஆரமிச்சியே” என்றார்.

அபயம் குரலைத் தாழ்த்தி “ஆமா. உங்ககிட்டத்தான் பேசணும்னு வந்தேன். மாமிகிட்டே கூட இதைப் பத்திப் பேச்செடுக்கலே. இப்பவும் மாமி தங்கையைப் பாக்கப் போயிருக்கற சமயமாப் பேசிடலாம்னுதான் வந்தேன். இந்த சங்கரனைக் கல்யாணிக்குப் பண்ணி வச்சிட்டா…” என்று முடிக்காமல் நிறுத்தினாள்.

சில வினாடிகள் அய்யர் எதுவும் பேசாமல் அபயத்தைப் பார்த்தவாறு இருந்தார். அந்த மௌனத்தைத் தாங்க முடியாதவள் போல அபயம் புடவை தலைப்பால் இரண்டு முறை தன் முகத்தைத் துடைத்துக் கொண்டு விட்டாள். இவ்வளவுக்கும் வாசலிலிருந்த வேப்ப மரத்திலிருந்து வீசிய காற்று அவர்களிருந்த இடத்தைத் தழுவிச் சென்று கொண்டிருந்தது.

அபயம் பொறுக்க முடியாதவளாய் “மாமா, நான் சொன்னதிலே ஏதாவது தப்பா?” என்று கேட்டாள்.

நாகேச்வரய்யர் “நல்ல விஷயம் பேசறே. அதிலே தப்பு என்ன? நான் ஓப்பனாவே உன்கிட்டே கேக்கறேன். இந்த பசங்க ரெண்டு பேர் மனசைத் தெரிஞ்சிக்க வேண்டாமா?” என்று கேட்டார்.

“ரெண்டு பேருக்கும் இஷ்டம்னுதான் தோணறது. ஏற்கனவே கோமதி மாமிக்கு ஒத்தாசையா நான் இருக்கேன்னு அவளுக்கு என்னை ரொம்பப் பிடிக்கும். அதனாலேதான் ஆரம்பத்திலேர்ந்து எனக்கும் பொழுது போறதுக்கு, பேச்சுத் துணைக்குன்னு அவாத்துக்குப் போயிண்டு வந்துண்டு இருப்பேன். இப்ப இந்த மூணு நாலு மாசமா நான் சாயங்காலமா சங்கரன் ஆபீஸ்லேந்து வந்து ஆத்திலே இருக்கறப்போ அவனோடையும் பேச்சுக் கொடுக்க ஆரமிச்சேன். இந்தக் காலத்துப் பசங்க மாதிரி இவனும் தலை கலைஞ்சு இருக்கறவன்னா நாம தெரிஞ்சிண்டுடலாமேன்னுதான். பேப்பர், சினிமா, டி,வி.ன்னு எல்லாத்திலேயும் வர்ற காதல், பணக்காரன் ஏழை மோதல், ஆக்டர்ஸ் ஆக்ட்ரசஸ் கிசுகிசு, பாலிடிக்ஸ்ன்னு வம்படிப்பேன். அதனாலே அவன் பணத்திலே குறியாயிருக்கானா, குடும்பம் குழந்தை குட்டின்னு அதிலெயெல்லாம் மதிப்பு வச்சிண்டிருக்கானா, பொண்கள் வேலைக்குப் போகணும்னு எதிர்பார்க்கிறவனா, அம்மா கோண்டுவான்னு வேறே எப்படித் தெரிஞ்சிக்கறது?”

“பேசறதுக்கு உனக்குச் சொல்லித் தரணுமா?”

அபயம் புன்னகை செய்தாள்.

“ஒரு நா நானும் மாமியும் பேசிண்டு இருக்கறச்சே ‘இப்பல்லாம் அபயம் கோமதியாத்திலேயே பழியா கிடக்கா. பகல் பொழுது போறாதுன்னு சாயரட்சைக்கும் அவாத்திலே போயி அப்படி என்னதான் பேசுவாளோ?’ன்னு மாமி அலுத்துண்டா” என்றார்.

“ஆமா. அவனை வேறே எப்படி நான் நன்னாத் தெரிஞ்சிக்கறது? ஆனா சங்கரனும் ஹாஸ்யமா பேசறான். புத்திசாலியா எல்லா விஷயத்திலேயும் கொஞ்சம் கொஞ்சம் தெரிஞ்சு வச்சிண்டிருக்கான். அதனாலே அவன் கிட்டே சான்ஸ் கிடைக்கிறப்போ எல்லாம் கல்யாணியைப் பத்தி நாலு வார்த்தை போட்டு வைப்பேன். அவளுக்கு புஸ்தகத்திலே, சங்கீதத்திலே எல்லாருக்கும் ஹெல்ப் பண்ணறதிலே இன்ட்ரெஸ்ட்ன்னு அப்பப்போ நாலு வார்த்தை தூவி வைப்பேன்” என்று வெட்கத்துடன் சிரித்தாள் அபயம். “தனக்கு இன்ட்ரெஸ்ட் இருக்கற விஷயத்திலே எல்லாம் கல்யாணிக்கும் இன்ட்ரெஸ்ட் இருக்கேன்னு ஒரு தடவை சங்கரன் சொல்லியிருக்கான்.”

நாகேச்வரய்யர் “இதுவரைக்கும் நீ சொன்னது எல்லாம் திருப்தியாதான் இருக்கு. அவன் அம்மா கோண்டுவான்னு தெரிஞ்சிக்கப் பாத்தேன்னயே?”
என்று கொக்கி போட்டார்.

அபயம் ஆச்சரியத்துடன் அவரைப் பார்த்து “இவ்வளவு சொன்னேன். ஆனா இதைப் பத்திதான் உங்களுக்குக் கேக்கணும்னு தோணிருக்கே!” என்றாள். பிறகு “அவனோட அப்பா சின்ன வயசிலேயே போயிட்டாரோன்னோ? கோமதி மாமிதான் கஷ்டப்பட்டு வளர்த்தது. அதனாலே அம்மாகிட்டே ரொம்ப அட்டாச்டா இருக்கான். அந்தப் பாசத்தை எப்படிக் கோண்டுன்னு சொல்லறது?” என்று கேட்டாள்.

“வாஸ்தவம். ஆனா நீ சொல்ல ஆரம்பிச்சதிலேந்து எனக்கு மனசுக்குள்ளே
ஓடிண்டு இருக்கற ஒரே கேள்வி கோமதி இதுக்கு ஒப்புத்துப்பாளா எங்கிறதுதான்.”

அபயம் உடனடியாக எதுவும் பதில் அளிக்கவில்லை. இருவரிடையேயும்
சற்றுக் கனத்த அமைதி நிலவியது.

மறுபடியும் அய்யர்தான் பேச ஆரம்பித்தார். “எதுக்குச் சொல்றேன்னா கோமதி ரெண்டு மூணு தடவை என் காது கேக்க இங்கே இருக்கிறவா கிட்டே சொல்லியிருக்கா. சங்கரனுக்குப் படிச்ச பொண்ணா அழகா இருக்கறவளா, நன்னா சொத்து சம்பாத்தியம் இருக்கற ஆத்திலேந்து வர்றவளா இருக்கணுங்கிறதுதான் தன்னோட ஆசைன்னு.”

அபயம் சற்று விரக்தியான குரலில் “எங்ககிட்டே அந்த மூணாவது சௌந்தர்யம் இல்லியே” என்றாள்.

நாகேச்வரய்யர் அவளைக் கனிவுடன் பார்த்தார்.

“எதுக்கு உடனே மனசை விட்டுடறாய்? நம்மகிட்டே இருக்கறதை வச்சு ஜமாய்ச்சிடலாம்னு நீ இருக்கணும். நானோ நீயோ கோமதியோ இல்லே இந்த ரெண்டு குழந்தைகளோ ஆசைப்படலாம். ஆனா ஆசைப்படறது எல்லாம் நடக்கறது இவா யார் கையிலேயும் இல்லையே. மேலே இருக்கறவன்னா பாத்துக்கறான்? கச்சி ஏகாம்பரம் அபிராமிக்கு ரெண்டு நாழி நெல்லுதான் கொடுத்தார். ஆனா எப்படி அதை வச்சுண்டு தேவி லோகம் பூராத்துக்கும் அன்னபூரணியா இருந்து கொடுத்தா? யாரோ வருவா. உதவி பண்ணுவா. எல்லாம் நல்லபடியா நடக்கும்னு தைரியமா இரு” என்றார்.

அவர் அப்படி ஆறுதலாய்ப் பேசியதில் அவள் சற்று முகம் மலர்ந்து அவரை நன்றியுடன் பார்த்தாள்.

“சங்கரனுக்கு அவனோட அம்மா மேலே எவ்வளவு பாசமோ அந்த அளவுக்கு அவன் மேலே கோமதிக்கு ரொம்பப் பிரீதி. அதை நான் கவனிச்சிருக்கேன். சங்கரன் எனக்குக் கல்யாணிதான் வேணும்னு சொல்லணும். அப்ப எல்லாமே நல்லபடியா முடிஞ்சுடும்” என்றார் அய்யர்.

“எனக்கென்னவோ அவன் அப்படிதான் சொல்லுவான்னு தோணறது” என்றாள் அபயம்.

“ஆனா நீ இவ்வளவு நாழி பேசிண்டு இருக்கறச்சே இப்பிடிக் க்ளீயரா சொல்லலியே. அல்லாடிண்டு இருக்கிறவ மாதிரின்னா இருந்தே” என்றார் அய்யர்.

அவள் அவரை உற்றுப் பார்த்தாள்.

பிறகு “எனக்கு இதை உங்க கிட்டே சொல்லணும்னுதான். அப்புறம் நீங்க என்னைத் தப்பா நினைச்சிட்டேள்னான்னு ஒரு தயக்கம். ஆனா இப்ப என்னவோ எல்லாத்தையும் உங்ககிட்டே கொட்டிடணும்னு எனக்கு இருக்கு. கல்யாணியும் சங்கரனும் ரெண்டு வாரமா கொஞ்சம் நெருக்கமாதான் பழகிண்டு இருக்கா.”

“என்னது?”

“ஆமா. நான்தான் அவா நெருங்கிப் பழகட்டும்னு ஒரு நா முடிவு பண்ணினேன். இப்பெல்லாம் மணிக்கணக்கிலே அவ ரூம்லேந்து அவனுக்குப் போன் பண்ணிப் பேசறா. ரெண்டு பேரும் சேர்ந்து சினிமாவுக்கு ஒரு நாள், ஓட்டலுக்குப் ஒரு நாள் போனா. அவன் போன வாரம் அவளோட பர்த்டேக்குப் புடவை வாங்கிக் கொடுத்தான்.”

“ட்டேயப்பா!” என்று நாகேச்வரய்யர் தாங்கமுடியாத வியப்புடன் அவளைப் பார்த்தார். பொறுக்க முடியாமல் “நீ பெரிய அமுக்குன்னு மாமி சரியாத்தான் ஜட்ஜ் பண்ணியிருக்கா” என்று சொல்லி விட்டார்.

“ஓ, மாமி என்னை அப்பிடி வேறே திட்டியிருக்காளா?” என்று அபயம் சிரித்தாள்..

பிறகு எழுந்தபடி “நான் வரேன். நீங்க இன்னிக்கி சாயங்காலம் இந்த மனுஷனைக் கொஞ்சம் கூப்பிட்டுச் சொல்றேளா? நீங்க சொன்னா கேப்பார்ன்னு ஒரு நப்பாசைதான் எனக்கு” என்று அங்கிருந்து கிளம்பிச் சென்றாள்.

அய்யர் அன்று மாலை சேதுவைக் கைபேசியில் கூப்பிட்டார்.

“சேது, நீ ஃப்ரீயா? ஒரு செஷ்ஷன் போடலாமா? போன வாரம் என்னோடகஸ்டமர் லிக்கர் வேர்ல்டு இருக்கானோல்லியோ? அவன் தீபாவளிக்குன்னு ரெண்டு டீச்சர்ஸ்ஸும் ரெண்டு ஜாக் டேனியல்ஸும் அனுப்பிச்சான். தீபாவளி அன்னிக்கி கங்கா ஸ்நானம் பண்ணிட்டு இந்த ஸ்நானம் வேறே பண்ணி எதுக்கு எல்லாரோட வயித்தெரிச்சலையும் கொட்டிக்கணும்னு உள்ளே எடுத்து வச்சிட்டேன். நீ சேட்டு ஆபீஸ் வேலையை முடிச்சிட்டு ராத்திரி எட்டு மணிக்கு எங்காத்துக்கு வந்துடறயா?” என்று ஒன்றும் தெரியாதவர் போலக் கேட்டார்.

“எதுக்கு எட்டு மணிக்கு? நான் இப்பல்லாம் ஃப்ரீதான். ஏழு மணிக்கு அங்கே வரட்டுமா?” என்றான் சேது.

சொன்ன நேரத்துக்கு சேது வந்து விட்டான்.

அவர்கள் மாடிக்குச் சென்றார்கள். அய்யர் மாடியில் பார் வைத்திருந்தார்.

குடிக்க இரு கண்ணாடிக் குவளைகளையும் ஒரு ஜாக் டேனியல்ஸ் பாட்டிலையும் அய்யர் எடுத்து வைத்தார். தின்பதற்கு சில அயிட்டங்கள் மேஜை மீது இருந்தன. இரண்டு பாக்கெட்டுகளைப் பிரித்து இரு பிளாஸ்டிக் தட்டுகளில் சிப்ஸ், காரக்கடலை ஆகியவற்றை வைத்தார். இன்னொரு தட்டில் சாலட் வைத்திருந்தது. அவர் இரண்டு குவளைகளில் மதுவை நிரப்பி ஐஸ் கட்டிகளையும் நீரையும் விட்டார். பார் ஸ்டூல்களை இழுத்துப் போட்டுக் கொண்டு இருவரும் அமர்ந்தனர்.

“எம்.ஜி.ரோடு ஹோட்டல் பார் மாதிரின்னா வச்சிருக்கேள்” என்று சேது சிரித்தான். ஒரு குவளையை எடுத்து ஒரு வாய் விட்டுக் கொண்டான்.

“எது செஞ்சாலும் திருப்தியா செய்யணும். முழுசாச் செய்யணும்னு காந்தி சொல்லியிருக்கார்” என்றார் அய்யரும் சிரித்தபடி.

“யாரு ராகுல் காந்தியா, ராஜீவ் காந்தியா?” .

“யாரோ ஒரு காந்தி” என்றார் அய்யர்.

“நல்லவேளை மகாத்மா காந்தின்னு சொல்லாம விட்டேளே!” என்று வாய் விட்டுச் சிரித்தான் சேது.

அவர்கள் லிங்காயத்து – கௌடா அரசியல் பற்றிப் பேசினார்கள். தமிழ்நாட்டில் கதாநாயகிகளை வடநாட்டிலிருந்து இறக்குமதி செய்வது போல கர்நாடகாவில் கதாநாயகர்களை இறக்குமதி செய்யலாம் என்று சேது கூறினான். ஒரு காலத்தில் பென்ஷனர்ஸ் பாரடைஸ் ஆக இருந்த பெங்களூர் இப்போது பென்ஷனர்களின் நரகமாகி விட்டதாக அய்யர் அலுத்துக் கொண்டார். அரைமணி நேரம் பேச்சு இப்படியே உலக விவகாரங்களை கவ்விக் கொண்டிருக்க ஜாக் டேனியல்ஸின் பாட்டிலில் அளவு குறைந்து கொண்டே வந்தது.

“உங்க கம்பனி இப்ப எப்படிப் போயிண்டிருக்கு? எக்ஸ்போர்ட்ஸ்லாம் மறுபடியும் ஜாஸ்தியாக ஆரம்பிச்சாச்சா?”

“எங்கே? இப்ப சைனாலே கோவிட் மறுபடியும் கிளம்பி இருக்குன்னு கதர்றான். எக்ஸ்போர்ட் டார்கெட்ஸ் எல்லாத்தையும் குறைச்சு ஆனானப்பட்ட அமெரிக்காவையே கதற அடிக்கிறான். ஈரோப்பும் இன்ஃப்லேஷன், அன்யெம்ப்லாய்மெண்ட்ன்னு கவுந்து கெடக்கு. நாமெல்லாம் எந்த மூலைக்கு?”

“அடக் கண்ராவி! அப்போ உங்க கம்பனி கொடுத்திண்டு இருந்த இன்சென்டிவ் எல்லாம் இனிமே அவ்வளவுதானா?”

“இன்சென்டிவ்வா? ஆள்களை வீட்டுக்கு அனுப்பாம சம்பளம் கொடுத்தாலே போதும்னு இருக்கா. ரெண்டு வருஷத்துக்கு வருஷாந்திர இன்க்ரீமெண்ட் பத்தி வாயைத் திறக்கக் கூடாதுன்னு சர்குலர் வந்தாச்சு” என்று சேது வெறுப்புடன் சிரித்தான்.

அய்யர் அவனிடம் “நல்ல வேளையா அந்த சேட்டுப் புண்ணியவான் கைங்கர்யத்தில் நீ ஒரு எக்ஸ்ட்ரா சம்பாத்தியம் வச்சிண்டிருக்கே” என்றார்

அவன் அவரிடம் “சேட்டு வேலையா? அதை நான் விட்டாச்சு!” என்றான். அவன் கண்கள் அவரைப் பார்க்காமல் கையிலிருந்த குவளையில் பதிந்திருந்தன.

“என்னது? வேலையை விட்டாச்சா? ஏன் அந்தக் கம்மனாட்டிக்கு என்ன கேடு வந்தது?” என்றார் அய்யர் கோபம் குரலில் தொனிக்க. ஒரு க்ஷணத்தில் புண்ணியவான் கம்மனாட்டியாகி விட்ட விந்தை!

சேது பதிலளிக்காமல் அவரையும் குவளையையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தான். பிறகு குவளையில் இருந்ததை ஒரே மூச்சில் குடித்து விட்டுப் பேப்பர் நாப்கினால் வாயைத் துடைத்துக் கொண்டான்.

சேது அவரிடம் “இதையெல்லாம் சொல்லணுமான்னு வெக்கமா இருக்கு. ஆனா யார்கிட்டேயாவது சொல்லி ஆத்திக்கணும் போலவும் இருக்கு. மனசிலே அடைச்சு வச்சுண்டு இருக்கறது என்னைக் குதறிப் போட்டுண்டு இருக்கு” என்று சொல்லி விட்டுப் பேசாமல் இருந்தான்.

காலையில் அபயம் இதே மாதிரி வார்த்தைகளை உச்சரித்தாள். இவன் என்ன சொல்லப் போகிறான்?

அவர் பதில் எதுவும் சொல்லாமல் அவனைப் பார்த்தார்.

“சீக்கிரம் கல்யாணிக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணிட்டா தேவலையா இருக்கும் எனக்கு” என்றான். “அப்போ இந்த அபயம் அடிக்கிற கூத்துக்கெல்லாம் ஒரு முடிவு கட்டினாப்பிலே ஆயிடும்.”

“அபயமா? கூத்தா? சேது நீ என்ன சொல்றே?”

“உங்களுக்கெல்லாம் ஒண்ணும் தெரியாது. நாலு மாசமா இந்த முண்டை அந்த சங்கரன் ஆத்திலே போய் உக்காந்துண்டு அவனோட கூத்தடிக்கிறா. அவன் சின்னப் பையன். ஆனா, இவ? கல்யாண வயசிலே ஒரு பொண்ணை வச்சுண்டு எப்படி சார் அவ இந்த மாதிரி கேடு கெட்டவளா இருக்கா? நானும் ராத்திரி எட்டு எட்டரைக்குதானே ஆத்துக்கு வரேன்? அது இவளுக்கு ரொம்ப சௌகரியமாப் போயிடுத்து. அதான் இதுக்கு ஒரு முடிவு கட்டணும்னு சேட்டு ஆபீஸ் வேலையை விட்டுட்டேன். சாரி சார். உங்களைப் போட்டுத் தொந்திரவு பண்ணிட்டேன். சாரி சார்” என்று கலங்கிய குரலில் கூறி வந்தவன் சட்டென்று இரு கைகளாலும் முகத்தை மூடிக் கொண்டான்.

அய்யர் எதையோ மிதித்து விட்டவர் போலத் திடுக்கிட்டார். சமாளித்துக் கொண்டு கையில் ஏந்திய குவளையில் இருந்ததை வாயருகே கொண்டு சென்றவர் அதிலிருந்ததைக் குடிக்க முடியாமல் கீழே வைத்து விட்டார்.

மகான்

ஸிந்துஜா

பாலு எட்டு மணி வாக்கில் மகானைத் தன்னுடைய வீட்டுக்கு அழைத்து வந்தான். வந்தவரின் முழங்காலுக்குச் சற்றுக் கீழ் வரை மஞ்சள் கரையுடன் வெள்ளை வேஷ்டி, கொஞ்சம் இளகின காவியில் தொள தொளவென்று அரைக்கைச் சட்டை. தலையில் முக்காலும் வழுக்கை. தெளிவான சதுர முகத்தின் நெற்றியில் மூன்று வரி வெள்ளைப் பட்டை. நடு வரியில் இப்போது புழக்கத்தில் இல்லாது மறைந்து விட்ட ஒரு ரூபாய் நாணய அளவில் சந்தனப் பொட்டு. அதன் நடுவில் அரக்குக் குங்குமம். மனிதன் சற்று உயரமாய் இருந்ததால் இளம் தொந்தி அடங்கிக் கிடந்தது போல் ஒரு தோற்றம். மேனி கறுப்பும் இல்லாமல் சிவப்பும் இல்லாமல் மரியகுப்பம் செங்கல் பளபளப்பில் மின்னிற்று. காலில் செருப்புக் கிடையாது.

பாலு உள்ளே பார்த்துக் குரல் கொடுத்தான். அவன் மனைவி சுலோச்சு கையில் ஒரு சிறிய பிளாஸ்டிக் வாளியுடன் வந்தாள். வாளியில் இருந்த குவளையில் நீர் எடுத்து மகானிடம் கொடுத்தாள். அவர் கால்களை அலம்பிக் கொண்டதும் மூவரும் வீட்டுக்குள் சென்றார்கள்.

காலை இளம் வெய்யிலின் சூட்டுக்காக எதிர் வீட்டு வாசலில் சேரைப்
போட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்த ராமேந்திரன் இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தார். நேற்றே பாலு அவரிடம் இம்மாதிரி மகானை அழைத்து வரப் போவதாகக் கூறியிருந்தான். ராமேந்திரன் இருந்த குடியிருப்புக்குப் பக்கத்தில் ஒரு வருஷம் முன்னால்தான் பாலு வந்தான். அவனாகவே அவரைத் தேடிக் கொண்டு வந்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். தனியார் வங்கியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவன் வீயாரெஸ்ஸில் வேலையை விட்டு விட்டு வந்ததாகத் தெரிவித்தான். அவன் மனைவி சுலோச்சு தெலுங்கு ரெட்டியார் குடும்பத்தைச் சேர்ந்தவள் என்றும் அவர்கள் காதல் திருமணத்தில் முடிந்ததாகவும் ஒரு நாள் சொன்னான்.

பாலு அக்கம் பக்கத்தில் எல்லோரும் தன்னைப் பற்றி அறியுமாறு வைத்துக் கொண்டிருந்தான். வங்கியில் வேலை பார்த்திருந்தாலும் அவனுக்கு எல்லா விஷயங்களிலும் கொஞ்சம் கொஞ்சம் தெரிந்திருந்தது. பாலு யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று அவன் தானாக ஒரு கணியன் பூங்கொன்றனாரைத் தனக்குள் வைத்துக்கொண்டு விட்டான். அவன் பேச்சும் கேளீர் கேளீர் என்று கூப்பிட்டு மயக்குவதாய்த்தான் இருந்தது, வார்த்தைகளில் அப்படி ஒரு ராயசம்.

பாலு அவன் வீட்டிலிருந்து வெளியே வந்து தன்னைப் பார்த்து விட்டு நெருங்குவதை ராமேந்திரன் கவனித்தார்.

“என்ன மகானை அழைச்சுண்டு வந்துட்டியா?”

“ஆமா. அவர் பானஸ்வாடிலே ரெண்டு நாள் தாமசம். இன்னிக்கி இங்கே வந்துட்டு கம்மனஹள்ளிக்குப் போயிடுவார். சாயந்திரம் வரை இருக்கேன்னார்.”

“சாப்பாடு உங்காத்திலேதானா?”

“அதெல்லாம் மூச்சுப் பரியப்படாது. குடிக்கறதுக்கு ஜலம் வாங்கிண்டாலே
பெரிய விஷயம். எல்லாருக்கும் எல்லாம் கொடுக்கிற கை, கொடுக்கிற மனசு அது.”

“இந்தத் தெருவிலே இருக்கறவா எல்லாரும் காத்திண்டிருக்கா. சாமி படத்திலேந்து விபூதி விழறதைப் பாத்து வாங்கி இட்டுக்கணும், அவர் கையிலே இருந்து சங்கு வரவழைச்சுக் கொடுக்கறதை வாங்கிக்கணும்னு தவிக்கிறதுகள். எல்லாம் நீ சொல்லி வச்சதுதான்” என்றார் ராமேந்திரன்.

“நீங்க இன்னும் நம்பலே இல்லே?”

“அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லே.”

“இல்லே, உங்க குரலே காட்டிக் கொடுக்கறதே” என்றான் பாலு சற்றுச் சலிப்பான குரலில். தான் முக்கியத்துவம் தரும் இவர், தான் முக்கியத்துவம் தரும் அவருக்கு முக்கியத்துவம் தரவில்லையே என்னும் சலிப்பு.

அப்போது நாலாவது வீட்டில் குடியிருக்கும் அப்பண்ணா அவர்களை நெருங்கினார்.

பாலுவிடம் “நேத்திக்கு மணியோட ரிசல்ட் வந்தது பாஸ் பண்ணிட்டான். கணக்கு காலை வாரி விட்டுடுமோன்னு எனக்குக் கொஞ்சம் கவலை
யாத்தான் இருந்தது” என்றார்.

“ராமநாதன் ஸார் பாஸ் பண்ணிட்டார்னு சொல்லுங்கோ” என்றான் பாலு. ராமநாதன் வாத்தியார் மணியின் டியூஷன் மாஸ்டர்.

“அவனுக்குக் காலேஜிலே கேக்கற க்ரூப் கிடைச்சா நன்னாயிருக்கும். மகான்தான் வழி காட்டணும்” என்றார் அப்பண்ணா பாலுவிடம் தாழ்ந்த குரலில்.

“அதுக்கென்ன? வாங்கோ, வாங்கோ. அவர் அனுக்கிரகம் பண்ணுவார்.”

“எங்காபீஸ்லே சுப்பாராவ்னு இருக்கார். அவர் பொண்ணுக்குக் கல்யாணமே ஆகாம இருந்தது. அவரும் பானஸ்வாடிலேதான் இருக்கார். மகான் கிட்டே போய்க் கால்லே விழுந்திருக்கார். இன்னும் ஒரு மாசத்திலே வடக்குலேந்து உமக்கு மாப்பிள்ளை வருவான்னு மகான் சொன்னாராம். இருபது நாள் கழிச்சுப் பொண் கேட்டுண்டு டெல்லிலேந்து வந்தாளாம்.. சரியா முப்பதாவது நாள் நிச்சயதார்த்தம் நடந்துதுன்னார்” என்றார் அப்பண்ணா.

பாலு ராமேந்திரனைச் சற்றுப் பெருமையுடன் பார்த்து விட்டு “அவர் இன்னும் கால் மணியிலே பூஜை ஆரம்பிக்கிறேன்னார். போய் பூஜை சாமானெல்லாம் எடுத்து வைக்கணும். வரட்டா?” என்று கிளம்பினான். அப்பண்ணாவும் அவனுடன் சென்றார்.

“சாப்பிட வரேளா?” என்று அபயத்தின் குரல் கேட்டு அவர் திரும்பிப் பார்த்தார். வாசல் நிலைப்படியில் நின்றிருந்தாள். பாலுவுடன் பேசியது அவள் காதிலும் விழுந்திருக்கும்.

அவர் எழுந்து வீட்டுக்குள் சென்று கை கழுவி விட்டு சாப்பிட உட்கார்ந்தார். இட்லிகளையும் சட்டினியையும் அவரது தட்டில் வைத்தவாறே அபயம் “நீங்க அந்த மகானைப் பாக்கப் போறேளா?” என்று கேட்டாள். அவர் உடனடியாகப் பதில் அளிக்காமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அபயம் எதுவும் பேசாமல் உள்ளே சென்று கொஞ்சம் இட்டிலிகளை ஒரு தட்டில் போட்டுக் கொண்டு வந்து உட்கார்ந்து தானும் சாப்பிட ஆரம்பித்தாள்.

அவர் “அங்க போகணுமான்னுதான் இருக்கு” என்றார். அப்போது வெளியிலிருந்து நரசி வீட்டுக்குள் வந்தான். அவரின் ஒரே பிள்ளை.

“இன்னிக்கி ஆபீசுக்கு லீவுன்னு பெரிய வாக்கிங்கா?’ என்றார் ராமேந்திரன் பிள்ளையைப் பார்த்து. அவன் ஒரு அமெரிக்கக் கம்பனியின் இந்தியக் கிளைப் பொறுப்பாளராக இருக்கிறான். அங்கே அவர்களுக்கு லீவு என்றால் இங்கே இவனுக்கும் லீவு.

அவன் சிரித்தவாறே “ஆமா. அம்மா, எனக்கும் டிபன் கொடுத்துடு” என்றான். பிறகு ராமேந்திரனைப் பார்த்து “எதிராளாத்து வாசல்லே என்ன திடீர்னு அப்படி ஒரு கூட்டம்? ஏதாவது விசேஷமா?” என்று கேட்டான்.

“ஓ, உனக்கு அதைப்பத்தி எதுவும் தெரியாதோ? நீதான் கார்த்தாலே சூரியன் மனுஷாளைப் பாக்க வரதுக்கு முன்னாலேயே ஆபீசுக்குப் போயிடறே. ஆபிஸ்லேந்து நீ திரும்பறப்போ உனக்கு ஜோடியா கோட்டான்தான் முழிச்சிண்டு இருக்கு. நம்பாத்து விஷயத்தையே உன்கிட்டே முழுசாப் பேச முடியறதில்லே. எதிராளாத்து பாலு ஒரு மகானைப் பத்தி ஒரு மாசமா பேசிண்டு அலையறான். இன்னிக்கி அவர் பாலு ஆத்துக்கு வந்திருக்கார்” என்றார் ராமேந்திரன்.

“மகானா?”.

“ஆமா. பாலு அவரை நடமாடற தெய்வம்னு சொல்லிச் சொல்லி மாஞ்சு போறார். அவர் முழங்கைலேந்தும் உள்ளங்கைலேந்தும் சங்கு, முத்து, ஸ்வாமி டாலர்னு எடுத்து வரவாளுக்குக் கொடுக்கறாராம். அவர் பூஜை பண்ணி முடிச்சப்பறம் ஸ்வாமி படம் மாட்டியிருக்கற சுவத்திலேந்து குங்குமம், விபூதி எல்லாம் கொட்டறதாம்” என்றாள் அபயம்.

“அப்பா, இதையெல்லாம் நீங்க நம்பறேளா?” என்று கேட்டான் நரசி.

“எனக்கு நம்பிக்கையில்லேனு சொன்னா பாலு அடிக்க வந்துடுவான்” என்று சிரித்தார் ராமேந்திரன். “சித்த நாழி மின்னேதான் உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லேல்லேன்னு கேட்டான். ஒரு மாசமா தெனைக்கும் கார்த்தாலே குளிச்சிட்டு அந்த மகான் ஆத்துக்குக் கிளம்பிப் போறான். சாயரட்சைதான் திரும்பறான். தினம் அவர் மகாத்மியத்தை என்கிட்டே வந்து சொல்லாமப் போகமாட்டான். ஒவ்வொண்ணும் ஒரு கதை மாதிரி இருக்கும். திருடன் கிட்டே பறி கொடுத்த நகையைப் பத்தி ஒருத்தி வந்து சொன்னா. மறுநாள் திருடனே பறிகொடுத்தவ ஆத்துக்கு வந்து நகையைத் திருப்பிட்டானாம். பெங்களூர் முழுக்கக் காமிச்சும் தேவலையாகாம அப்படி ஒரு ஜுரம் வாரக்கணக்கிலே படுத்தின குழந்தைக்கு ஒரு வாரம் அவரோட பிரசாதத்தைக் கொடுத்துக் குணமாச்சாம், இன்சால்வன்ஸி நோட்டீஸ் கொடுக்கப் போற ஸ்டேஜிலே யாரோ ஒரு மைசூர்காரர் இவரைத் தேடிண்டு வந்து காப்பாத்துங்கோன்னு அழுதாராம். ரெண்டு நாள் கழிச்சு அவருக்கு கேரளா லாட்டரியிலே பிரைஸ் அடிச்சதாம். அதை ஏன் கேக்கறே? பாலு கிட்டே உக்காந்தா, நாள் கணக்கிலே என்ன, வாரக் கணக்கிலே மாசக் கணக்கிலே சொல்லுவான்.”

“பாலு அங்கிள் இப்படி அந்த மகான் ஆத்திலேயே குடி இருந்தா, குடும்பம் நடத்தறது எப்படி?” என்று கேட்டான் நரசி.

“எதுக்குடா அவர் பொண்டாட்டியே கவலைப்படாத விஷயத்துக்கு எல்லாம் நீ கவலைப்பட்டுண்டு இருக்கே?” என்று அபயம் பையனைப் பார்த்துச் சிரித்தாள்.

“அங்கையும் பாலு ஒரு பொடி வச்சிருக்கான். போனவாரம் லெவென்த் கிராஸ் மார்க்கெட்லே ராமண்ணா கடையிலே காய்கறி வாங்கிண்டு வரப் போனப்போ அவன்தான் சொன்னான். தினம் உங்க பக்கத்து வீட்டுக்காரர் பத்துப் பதினஞ்சு தேங்கா கொண்டு வந்து போடறாருன்னு. மார்க்கெட்டிலே ஒரு தேங்கா முப்பது முப்பத்தஞ்சுக்குக் குறைச்சு விக்கறதில்லேயே. ராமண்ணா ஒரு காய்க்கு இருபது ரூபா கொடுத்தான்னாக் கூட இருநூறு முந்நூறு கிடைக்காதா பாலுவுக்கு?மகானைப் பாக்க வர்ற ஜனங்கள்தான் வெத்திலே, பூ, தேங்காய், பழம், சுவீட்டுன்னும் கொண்டு வந்து கொட்டறதாமே. அவர் ஒண்ணுத்தையும் கையாலே தொடறதில்லையாம். எல்லாத்தையும் வந்து போறவா கிட்டேயே கொடுத்து அனுப்பிச்சிடறாராம். அவர் வேறே யாராத்துக்காவது பூஜை பண்ணனும்னு போறதா இருந்தா, இப்பல்லாம் பாலுதான் சாரதி. அவனோட ஸ்கூட்டர்லே அழைச்சுண்டு போயிட்டுத் திரும்ப ஆத்திலே கொண்டு வந்து விட்டுடறான்.”

“நீங்க சொல்றதை எல்லாம் கேட்டா எனக்கும் அவரைப் பாக்கணும் போல இருக்கு” என்றான் நரசி.

“அப்படிப் போடு!” என்று சிரித்தார் ராமேந்திரன். “ஆனா நீதான் விபூதி குங்குமம் எல்லாம் இட்டுக்க மாட்டியேடா?”

“அவர் தரப்போ மரியாதைக்கு நெத்தியிலே வச்சுண்டு ஆத்துக்கு வந்ததுக்கு அப்புறம் அழிச்சிண்டாப் போச்சு” என்றான் நரசி.

பனிரெண்டு மணி வாக்கில் அவர்கள் மூவரும் கிளம்பி பாலுவின் வீட்டுக்குச் சென்றார்கள். அவர்களைப் பார்த்ததும் பாலு தன்ஆச்சரியத்தைக்
கண்களை அகல விரித்துத் தெரிவித்தான். ராமேந்திரன் சுற்றும் முற்றும் பார்த்தார். தெரிந்தவர்கள் அவர் கண்களைச் சந்தித்ததும் கையசைத்து வணக்கம் தெரிவித்தார்கள். தெரியாதவர்களும் சேர்ந்து கூட்டம் அதிகமாகத்தான் இருந்தது.

பாலு “இன்னும் அஞ்சு நிமிஷத்திலே பூஜை முடிஞ்சு பிரசாதம் கொடுப்பார். வாங்கிண்டு கூட்டம் கலைஞ்சிடும். அதுக்கப்புறம் அவரோட நீங்க சித்த நாழி இருந்து பேசிட்டுப் போகலாம்” என்றான்.

பூஜை முடிந்ததும் அவரவர் கைகளில் எடுத்துக் கொண்டு வந்த பைகளை மகான் கையில் கொடுத்தார்கள். அவரும் வாங்கிப் பலரிடம் அதை விநியோகம் செய்தார். எதையும் அவர் தன்னிடம் வைத்துக் கொள்ளவில்லை. ஒரு வயதான கணவனும் மனைவியும் பேரக் குழந்தையுடன் மகானை நெருங்கினார்கள்.

மகான் அவரைப் பார்த்து “சேஷு , எப்படியிருக்கேள்?” என்று கேட்டார்.

சேஷு “எல்லாம் மகானோட ஆசீர்வாதம்” என்றார் குரல் நடுங்க. “நேத்திக்கு மத்தியானம்தான் மது மேலே ஒண்ணும் குத்தம் இல்லேன்னு கோர்ட்லே ரிலீஸ் பண்ணிட்டா..”

பாலு ராமேந்திரன் காதருகில் நின்று “இவர் பாலஸ் ஆர்ச்சர்ட்லே இருக்கார். பெரிய மருந்துக் கடைக்காரர். ஏகப்பட்ட ஹோல்சேல்.பெங்களூர்லேயே எட்டு பிராஞ்சு இருக்கு, பையன்தான் பாத்துக்கறான். போன மாசம் யாரோ வேண்டாதவன்கள் இவா கோடவுன்லே போதை மருந்து கொண்டு போய்ப் போட்டுட்டு போலீஸ்லே வத்தி வச்சிட்டான்கள். போலீஸ் கேஸ் போட்டு பையனை அரெஸ்ட் பண்ணிடுத்து. இவர் மகான் கிட்டே வந்து என்ன பண்ணறதுன்னு கேட்டார். பையனைக் கோர்ட்டுக்கு இழுத்துண்டு போனதும் பகவான்தான். அவனைக் கொஞ்ச நாள் கழிச்சு வெளியே விடறதும் அவரேதான். நல்ல காரியங்களைப் பண்ணிண்டே இருங்கோ. அது போதும்னார் மகான். அதைத்தான் இப்போ சொல்றார் சேஷு”
என்றான்.

சேஷு தன்னிடமிருந்த பையிலிருந்து ஒரு சிறிய பெட்டியை எடுத்தார். அதைப் பிரித்து ஒரு நகையை எடுத்தார். அந்த ஹாலின் விளக்கு வெளிச்சத்தில் அது மஞ்சளாய்ப் பளபளத்தது. வெற்றிலை பாக்கு பழம் தேங்காயுடன் அதையும் வைத்து மகானை நமஸ்கரித்து அவர் கையில் கொடுத்தார். “இதை நீங்களே வச்சுக்கணும். வேறே யாருக்கும் வழக்கம் போலக் கொடுத்திடப்படாது” என்றார் சேஷு.

மகான் புன்முறுவலுடன் அவர்களுடன் வந்திருந்த பெண் குழந்தையைத் தன்னிடம் இழுத்துக் கொண்டார். “யாரு இவோ?”

“எங்காத்து வேலைக்காரியோட பொண்ணு. வீட்டு வேலை, சமையல் வேலை எல்லாம் இவ அம்மாவே எடுத்துப் போட்டுண்டு செய்யறா. அதான் ஆத்தோட வச்சிண்டிருக்கோம். நாங்க கிளம்பி வரச்சே நானும் சாமியைப் பாக்கணும்னு அடம் பிடிச்சது. அதான் அழைச்சுண்டு வந்தோம் ” என்றார் சேஷு.

“குட்டி பேரென்ன?” என்று மகான் குழந்தையிடம் கேட்டார்.

“தேவி” என்றது.

“ஓ, அது என்னோட தாயார் பேருன்னா?.இதைத் தேவிக்கு சாத்தாம வேறே யாருக்குப் போய்ச் சாத்தறது?” என்று அந்த மாலையைக் குழந்தையின் கழுத்தில் அணிவித்தார். “இப்ப சாட்சாத் தேவியான்னா இருக்கா.”

அங்கு இருந்தவர்கள் திகைப்புடனும் சந்தோஷத்துடனும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

பாலு ராமேந்திரனிடமும் நரசியிடமும் “நான் சொன்னேன் இல்லியா? எதையும் கேட்கவோ வாங்கவோ மாட்டார். அது கொடுக்கற கைதான். கர்ணன் மாதிரி” என்றான்.

கூட்டம் கலைந்ததும் பாலு ராமேந்திரனையும் அபயத்தையும் நரசியையும் கூட்டிக் கொண்டு போய் மகானிடம் அறிமுகம் செய்வித்தான்.

“இவர் ராமேந்திரன். பக்கத்தாத்துலே இருக்கார். டெல்லியிலே ஹோம் செக்ரட்டரிக்கு அடுத்தாப்பிலே இருந்தார். இது,மாமி. சுலோச்சுவுக்கு குரு எல்லா விஷயத்திலேயும்” என்றான் பாலு சிரித்தபடி.

“நன்னாயிருக்கு! நான்னா சுலோச்சு கிட்டேர்ந்து நிறைய சமையல் கத்துண்டு இருக்கேன்” என்றாள் அபயம்.

“இது நரசி. இவாளோட ஒரே பிள்ளை. அமெரிக்கன் கம்பனியிலே இந்தியா ஆபீசை நடத்திண்டு பெரிய போஸ்ட்லே இருக்கார். இவ்வளவு சின்ன வயசிலே பெரிய பதவி” என்றான் பாலு.

இந்த முகமன் கேட்டு நரசி சிரித்து வெட்கப்பட்டாற் போல உடலை ஒருமுறை வளைத்துக் கொண்டான்.

“பேஷ். பேஷ். ஒரு காலத்திலே மேக்கே பாரு மேக்கே பாருன்னு கும்பிடு போட்டுண்டு இருந்தா. இப்போ அவா அங்கேர்ந்து கெழக்கைப் பாத்து நமஸ்காரம் பண்றா” என்று மகான் புன்முறுவல் பூத்தார்.
.
மூவரும் விழுந்து அவரை நமஸ்கரித்தனர் அவர் ஆசீர்வாதம் செய்தார். கையில் வைத்திருந்த சாமான்கள் நிரம்பிய பையை ராமேந்திரன் அவரிடம் தந்தார். அவர் அங்கு நின்றிருந்த சுலோச்சுவிடம் கொடுத்து விட்டுக் கையில் கட்டியிருந்த வாட்ச்சைப் பார்த்தார். பிறகு பாலுவிடம் “கிளம்பலாமா?” என்று கேட்டபடி எழுந்தார்.

பாலு அவரிடம் “சாயந்திரம் வரை இருக்கேன்னேளே!” என்றான்.

“நாலரை மணிக்கு மல்லேஸ்வரத்துக்கு வரச் சொல்லி சங்கரமடத்திலேந்து
கூப்பிட்டு அனுப்பிச்சிருக்கா . அதான் ஆத்துக்குப் போயிட்டு அங்கே போலாம்னு இருக்கேன்” என்றார்.

பாலு அவரிடம் “நாம காத்தாலே இங்க ஸ்கூட்டர்லே வரப்பவே பிரேக் சரியாப் பிடிக்காம இருந்தது. வண்டியை இங்கே கொண்டு வந்து நிறுத்தினதும் பிரேக் கேபிள் கட்டாயிடுத்து. இருங்கோ. ஒரு ஒலாவைக் கூப்பிடறேன்” என்றான்.

நரசி ” டாக்சி எதுக்கு? நான் என் கார்லே கொண்டு போய் விட்டுடறேன்” என்றான். பாலு அவனை நன்றியுடன் பார்த்தான்.

“உனக்கு எதுக்குப்பா சிரமம்?” என்றார் மகான்.

“நீங்க இப்பிடிச் சொல்றதைக் கேக்கறதுதான் எனக்கு சிரமம்” என்றான் நரசி. அவர் அவன் முதுகில் தட்டிக் கொடுத்தார்.

காரில் உட்கார்ந்ததும் நரசி ஏ.சி.யைப் போட்டான்.

“ஏ.சி. வேணுமா?” என்று அவர் கேட்டார்.

“உங்களுக்கு வேணுமோன்னுதான் போட்டேன். அணைச்சிடட்டுமா?”

அவர் தலையசைத்ததும் அவன் ஏ.சி.யை அணைத்து விட்டு இருவர் பக்கமிருந்த ஜன்னல்களை லேசாகத் திறந்து வைத்தான்.

காரில் செல்லும் போது அவர் அவனைப் பற்றி விஜாரித்துக் கொண்டு வந்தார். அவர்களது பூர்விகம் எது, அவனுக்குக் கூடப் பிறந்தவர்கள் இருக்கிறார்களா, அவன் வயசு என்ன, எந்த ஸ்கூல், காலேஜில் படித்தான், இப்போது இருக்கும் வேலையில் அவனை வெளிநாட்டுக்கு வரச் சொல்லி அங்கே வேலை பார்க்கச் சொல்லுவார்களா என்றெல்லாம் கேட்டார். அவன் பதிலளித்துக் கொண்டு வந்தான்.

அப்போது அவனது மொபைல் ஒலித்தது. எடுத்து “ஹலோ!” என்றான். வெளியிலிருந்து எழுந்து வந்த ஒலிகளினால் மொபைலை ஸ்பீக்கரில் போட்டான்.

“சார், ரங்கநாதன் பேசறேன்” என்றது எதிர்க்குரல்.

“எதுக்கு லீவு நாள்லே ஆபீசுக்கு வந்திருக்கே?”

“இந்த ஜூனியர் எஞ்சினியர் அப்ளிகேஷன்களைப் பாத்து லிஸ்ட் எடுத்திடலாம்னு வந்தேன். ஆபீஸ் நாள்லே வேறே வேலை ஏதாவது குறுக்கே வந்துட்டே இருக்குமே. ஆனா நான் கூப்பிட்டது இதுக்கிலே சார்.”

“சொல்லு.”

“இருபது அப்ளிகேஷன்லே எட்டு பேர் எலிஜிபிளா இருக்காங்க. அதிலே ஒரு ஆள் ஐ.ஐ.டி லக்னவ்.”

“என்னது?”

“ஆமா சார். நீங்க ஒரு பார்வை பாத்துட்டா இன்டெர்வியு எப்ப வச்சுக்கலாம்னு டிசைட் பண்ணி நாளைக்கி கால் லெட்டர்சை அனுப்பிச்சிடலாம்.”

“சரி, இப்ப ஒரு மணி நேரத்திலே வரேன். பாத்துடலாம்” என்று நரசி மொபைலை ஆஃப் செய்தான்.

கார் மரியப்பா சர்க்கிளைக் கடக்கும் போது அவர் “அதோ அங்கே ஒரு பஸ் ஸ்டாப் தெரியறது இல்லியா? அதுக்கு அடுத்த லெப்ட்லே இருக்கற சந்துலே போகணும்” என்றார். நரசி அவர் சொன்ன வழியில் சந்துக்குள் நுழைந்து சென்றான். சந்து சாலைகளின் ஒரிஜினல் சொந்தக்காரர்களான மாடுகள் வழியில் படுத்திருந்தன. கார் வரும் சத்தம் கேட்டுத் தலையை உயர்த்திப் பார்த்துவிட்டு ‘சரி ஒழிந்து போ’ என்பது போல எழுந்து நகர்ந்து சென்றன. சற்றுப் பெரிதாக இருந்த கட்டிடம் ஒன்றின் அருகில் நிறுத்தச் சொன்னார்.

பிறகு அவர் இறங்கிக் கொண்டு ‘உள்ளே வா” என்றார்.

“பரவாயில்லே. நான் கிளம்பறேன்” என்றான் நரசி.

“ஆத்து வாசலுக்கு வந்தவாளை வாசல் வழியே திருப்பி அனுப்பிச்சுடற நாகரிகத்தை நான் இன்னும் கத்துக்கலே” என்றார்.

அவன் சிரித்தபடி அவருடன் சென்றான். பெரிய கட்டிடத்தை ஒட்டியிருந்த ஒரு பழைய கட்டிடத்தில் நுழைந்தார்கள். அது ஒரு காம்பவுண்டுக் குடித்தனம் என்று ஒவ்வொரு சிறிய வீட்டு வாசலிலும் தென்பட்ட கோலங்கள் தெரிவித்தன.

“தலையைக் கொஞ்சம் குனிஞ்சுண்டு வரணும்” என்றபடியே அவர் தன் போர்ஷனுக்குள் நுழைந்தார்.

உள்ளே சிறிய ஹாலில் இருந்த சிறிய நாற்காலியில் அமர்ந்திருந்த வாலிபன் வந்த விருந்தினரைக் கண்டு எழுந்து நின்றான். அவன் ஒல்லியாக உயரமாக இருந்தான். அரையில் வேட்டியும் மேலே கை வைத்த பனியனும் அணிந்திருந்தான். மகான் நரசியிடம் “என் பிள்ளை. வெங்கடேசன்னு பேரு” என்றவர் பிள்ளையின் பக்கம் திரும்பி “இவர் நம்ம பாலு சார் ஆத்துக்குப் பக்கத்து ஆத்திலே இருக்கார். கார்லே கொண்டு வந்து விடறேன்னு வந்தார்” என்றபடி உள்ளே சென்றார்.

“உக்காருங்கோ” என்று வெங்கடேசன் நரசியிடம் நாற்காலியைத் தள்ளினான். உட்கார்ந்து கொண்ட நரசியின் பார்வை கூடத்தைச் சுற்றி வந்தது. வெண்மை மறைந்து லேசாக மஞ்சளாகிக் கொண்டிருந்த சுவர்கள் வீட்டுக்குள் இருந்த வெளிச்சத்தை அடக்க முயன்று வெற்றி பெற்றிருந்தன. கூடத்துக்குள் வலது மூலையில் ஒரு மேஜை மீது செம்பருத்திப் பூக்கள் செருகப்பட்டு வெங்கடாஜலபதி படமும் மீனாட்சி அம்மன் படமும் இருந்தன. மேஜையை ஒட்டி இருந்த ஒரு ஸ்டூலில் மடித்த படுக்கை விரிப்புகளும் தலையணைகளும் காணப்பட்டன. இடது பக்க மூலையில் நிறைய கீறல்களுடன் ஒரு பழைய பிரிட்ஜ் நின்றது.

நரசி வெங்கடேசனைப் பார்த்து “எங்கே வேலை பாக்கற? இன்னிக்கி ஆபீஸ் லீவா?” என்று கேட்டான்.

வெங்கடேசன் நரசியின் கண்களைப் பார்க்காமல் “இப்ப ஒண்ணும் வேலை இலாமதான் இருக்கேன்” என்றான்.

அப்போது உள்ளேயிருந்துவந்த மகான் “லெமன் ஜுஸ்தான். சாப்பிடு” என்று ஒரு கிளாஸ் தம்ளரை நீட்டினார். அவன்”தாங்க்ஸ்” என்றபடி எடுத்துக் கொண்டான்.

“என்ன படிச்சிருக்கே?” என்று நரசி கேட்டான்.

வெங்கடேசன் “கம்ப்யூட்டர் இஞ்சினீரிங்” என்றான்.

“எப்போ முடிச்சே?”

“2018லே. உடனே வேலை கிடைச்சது. எலக்ட்ரானிக் சிட்டிலே ஒரு பிரைவேட் ஹார்டுவேர் கம்பனியிலே இருந்தேன். கோவிட் சமயத்திலே வேலை போயிடுத்து.” என்றான் வெங்கடேசன்.

“ஆமா. ரொம்பப் பேர் அப்பலெந்து இந்த மாதிரிக் கஷ்டத்தை ஃபேஸ் பண்ணிண்டு இருக்கா” என்றான் நரசி மகானைப் பார்த்து. .

“இப்ப மறுபடியும் ஆள் கேக்க ஆரம்பிச்சிருக்கால்லியா. அப்ளை பண்ணிண்டு இருக்கேன்” என்றான் வெங்கடேசன்.

நரசி தன் கைக்கடிகாரத்தைப் பார்த்து விட்டு “அப்ப நான் கிளம்பட்டுமா? ஆபீசுக்குப் போகணும்” என்று எழுந்தான்.

மகான் அவன் கூடவே வந்தார். “உங்களுக்கு எதுக்குக் கஷ்டம்?” என்று நரசி வாசலருகே அவரைத் தடுத்தான்.

“இதிலென்ன?” என்றபடி அவர் அவன் கூட வந்தார்.

அவன் காரில் ஏறிக் கொண்டு அவரைப் பார்த்தான்.

“போயிட்டு வா. உன்னைப் பார்த்தது ரொம்ப சந்தோஷம்” என்று கையை அசைத்தார். பிறகு தன் வீட்டை நோக்கிச் சென்றார்.

உறுத்தல்

ஸிந்துஜா

அங்கிள் நீங்க யங்கா இருந்தப்போ எல்லாரையும் படுத்தி எடுத்திருப்பீங்கல்லே?

சித்ராவின் முகத்தில் படர்ந்திருந்த குறும்பையும் சிரிப்பையும் பார்த்து சுவேதாம்பரத்துக்கும் சிரிப்பு வந்தது. ஜன்னல் வழியாக வெளியிலிருந்து ஓடி வரும் காற்றையும் இளம் வெய்யிலையும் சவாலுக்கு அழைப்பவள் போல அப்படி ஒரு இனிமையைத் தன்னைச் சுற்றி எறிந்து கொண்டிருக்கிறாள் அவள் என்று அவர் நினைத்தார்.

ஏன் அப்படிச் சொல்றே சித்தி?

ஆமா. நான் உங்களுக்குச் சித்தி! நல்ல வேளை பாட்டின்னு கூப்பிடாம இருக்கீங்களே என்று முகத்தை நொடித்துக் காட்டிக் கொண்டாள்.

சித்ரான்னா ஆன்னு வாயைத் திறக்கணும். பார்யா இவ்வளவு வயசுக்கு அப்புறமும் வாயைப் பொளக்கறான்னு பேர் வாங்கணுமா? சித்தின்னா ஸாப்டா இருக்கே. அதை விடு. இன்னிக்கு டாக்டர் வந்ததும் முதல்லே கம்ப்ளெய்ன்ட் பண்ணிடனும்.

என்னன்னு?

உங்க நர்ஸ் வம்புக்கு ரொம்ப அலையறான்னுதான்.

பேச்சை மாத்தாதீங்க. நான் கேட்டதுக்குப் பதில் சொல்லுங்க.

முதல்லே நீ ஏன் என்கிட்டே அப்படிக் கேட்டேன்னு சொல்லு.

ஆமா. உங்களைப் பாத்துக்கன்னு பெசலா எனக்கு டூட்டி போட்டிருக்காரு டாக்டர். ஆனா நீங்க எங்கே என்னை வேலை செய்ய விடறீங்க? தண்ணி குடிக்கணும்னா என்னயதானே கூப்பிடணும்? படார்னு கட்டில்லேந்து எறங்கி நடந்து போயி டேபிள் கிட்டே இருக்குற வாட்டர் ஜக்குலேந்து எடுத்துக் குடிக்கிறேன்னு சட்டை
யெல்லாம் நனைச்சிகிட்டு…

கிழவர் அவளை இடைமறித்து அந்த ஜக்கோட வாய் உடஞ்சு போயிருக்கு. முதல்லே ஒரு புது ஜக் வாங்கி வை என்றார்.

அதே மாதிரி பாத்ரூம் போகணும்னா என் கிட்டே சொன்னா ஜோசப் தம்பிய வரச் சொல்வேன்லே. அவன் வந்து கூட்டிட்டு போறதுக்குப் பதிலா நீங்களே தனியாப் போறீங்க. ‘அப்படியெல்லாம் தனியாப் போகக் கூடாது, நீ போக விடக்கூடாது’ன்னு
உங்களையும் வச்சுட்டுதானே டாக்டர் என்கிட்டே சொல்லிட்டுப் போனாரு. நீங்க
எங்கே கேக்கறீங்க? அதுக்குதான் நீங்க யங்கா இருந்தப்போன்னு… கேட்டேன்.

அவள் முகத்தில் இருந்த கனிவுக்கும், வார்த்தைகளில் நடமாடிய பொய்க் கோபத்துக்கும் இருந்த வித்தியாசத்தைக் கிழவர் கவனித்துச் சிரித்தார்.

உனக்கும் என் பொண்ணுக்கும் என்ன வித்தியாசம்? எப்பப் பாத்தாலும் என்னைக் கண்ட்ரோல் பண்ணிண்டு…

“ஐயோ, அக்கா எவ்வளவு பெரியவங்க? லண்டன்லே போயி பெரிய படிப்பு எல்லாம் படிச்சிட்டு வந்தவங்க. டெல்லியிலே பெரிய வக்கீல் கம்பனியிலே இருக்கறாங்க. நான் யாரு? ஒரு சுண்டக்கா. மதுரையிலே முக்கி முனகி பத்தாங் கிளாஸ் வரை படிச்சிட்டு இப்ப இங்க வந்து ஆயா வேலை பண்ணிக்கிட்டு இருக்கறவ.

இருந்தா என்ன? அவளுக்கு சாத்துக்குடி ஜூஸ் பிழிஞ்சு தரத் தெரியுமா? வலிக்காம ஊசி போடத் தெரியுமா? நான் தூங்கறச்சே அதோ அந்தச் சேர்லே உக்காந்துண்டு ராத்திரி பூரா தூங்காம இருக்கத் தெரியுமா?

அக்கா வக்கீலா நீங்க வக்கீலான்னு எனக்கு சந்தேகம் வருது என்று சிரித்தாள் சித்ரா. இப்பவும் பேச்சை மாத்திக்கிட்டே போயி நான் மொதல்லே கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாம இருக்கீங்க பாத்தீங்களா?

என்னது? நான் மத்தவங்களைப் படுத்தி எடுத்தேனாவா? மத்தவங்க என்னைப்
படுத்தாமா இருந்தா போறாதா?

அம்மாவைப் போட்டு ஆட்டி வச்சிருப்பீங்க.

என்னைக் குரங்காட்டிங்கறே.

ஐயையோ. நான் சொன்னது தப்பு தப்பு. ரொம்பத் தப்பு. நீங்க எவ்வளவு பெரியவரு. சாரி, சாரி.

எதுக்கு இப்படிப் பதர்றே? நானும் உன்னை மாதிரி ஜாலிக்குதானே சொன்னேன். என் ஒய்ப் ரொம்ப சாது. பக்கத்துத் தெருலே இருக்கற காய்கறிக் கடைக்குப் போறதுக்குக் கூட நான் வரணும்பா. நகையோ புடவையோ எது வாங்கினாலும் என் செலக்க்ஷன் வேதத்துக்கு முக்கியம். நான்தான் ஏதோ வேலை அது இதுன்னு முட்டாள் மாதிரி வெளியிலே அலைஞ்சிண்டு கிடந்தேன். ஷீ வாஸ் எ நைஸ் ஸோல். அதான் சீக்கிரம் கூட்டிண்டு போய்ட்டான்.

கிழவர் பழைய நினைவுகளில் ஆழ்ந்து விட்டவர் போலப் பேச்சை நிறுத்தி விட்டார்.

சித்ராவுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

நாளக்கி சாவியோட பர்த்டே. ஞாபகம் இருக்கோல்லியோ?

ஓ மை காட். மறந்தே போயிட்டேன்டி வேதம். நல்ல வேளையா ஞாபகப்படுத்தினியே. இதைக் காலம்பறயே சொல்லியிருக்க மாட்டியோ? இப்ப அவனவன் எட்டு மணிக்குக் கடையைப் பூட்டிண்டு போக ஆரமிச்சிடுவான்களே. சரி சரி கிளம்பு.

எங்கே? எந்தக் கடைக்கு?

குழந்தை வாட்ச் வேணும்னு கேட்டுண்டு இருந்தாளே. மந்த்ரி மால் போகலாம் வா. ஷாப்பர்ஸ் ஸ்டாப்லே வாங்கிடலாம்.

இந்த மாதிரியா? என்று அங்கிருந்த மேஜையைத் திறந்து ஒரு சிறிய கறுப்பு நிற வெல்வட் பையை எடுத்து அவரிடம் தந்தாள்.

உள்ளே சிறிய பிளாஸ்டிக் பெட்டியில் கறுப்பு டயலுடன் தங்க முலாம் பூசப்பட்ட வாட்ச் படுத்திருந்தது.

அவர் வேதம் நீ பெரிய ஆள்டி என்றார்.

இப்படியே பேசிண்டு எப்பவும் ஆபீசைக் கட்டிண்டு அழுங்கோ. நாளைக்கு ஆறு மணிக்கு அவ பிரெண்ட்ஸ் எல்லாரையும் கூப்பிட்டிருக்கா. நீங்க அஞ்சறை மணிக்காவது வந்துடுங்கோ.

நிச்சயமா என்றார் சுவேதாம்பரம். ஆனால் வழக்கம் போல் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியவில்லை. ஐந்து மணிக்கு வீட்டுக்குப் போன் செய்தார்,

போனை எடுத்த வேதம் நீங்க வரலேன்னு சொல்லப் போறேள் இல்லையா? ஸ்கூல்லேந்து வந்த உடனேயே குழந்தை சொல்லிட்டா நீங்க வரமாட்டேள்னு.

அவர் சமாதானம் சொல்ல முயன்ற போது போன் எதிர்முனையில் வைக்கப்பட்டு விட்டது.

அப்போது அறைக்குள் யாரோ வரும் சத்தம் கேட்டு இருவரும் ஏறிட்டுப் பார்த்தனர்.

சித்ரா வந்தவனைப் பார்த்து குட் மார்னிங் சேகர் சார் என்று புன்னகை செய்தாள். கிழவரின் மகன்.

கிழவர் திரும்பிப் படுத்துக் கொண்டார்.

அவன் கட்டிலைச் சுற்றி வந்து “குட்மார்னிங் டாட்” என்றான்.

கிழவர் அவனிடம் எதுக்குடா இவ்வளவு சீக்கிரமா வந்துட்டே? என்று கேட்டார். சுவரில் தொங்கிய கடிகாரத்தைப் பார்த்து. எட்டு மணி கூட இன்னும் ஆகலையே.

சாவித்திரி அக்கா மத்யான ப்ளைட்லே வரா. பவானி மாமி லஞ்சுக்கு கொஞ்சம் எக்ஸ்ட்ராவா காய்கறில்லாம் வாங்கிக் குடுத்துடுன்னு சொன்னா. அதுதான் சீக்கிரமா வந்து ஃப்ரேக்பாஸ்ட் கொடுத்துட்டு மார்க்கெட் பக்கம் போனேன்னா பத்தரை பதினொன்னுக்கு இங்க திரும்ப வந்துடலாம்னு… என்றான் அவர் பையன்.

அவ எதுக்குடா இப்ப இங்க ஓடி வரா? கால்லே நெருப்பைக் கட்டிண்டு? எவ்வளவு நாள் இருக்கப் போறாளாம்?

அவன் உடனடியாகப் பதில் சொல்லவில்லை.

இன்னிக்கி ராத்திரி ஃப்ளைட்டா? சொல்லேன்.

அவன் தயங்கியபடி நாளைக்குக் காத்தாலே திரும்பிப் போறா

ஓ, ரியல் ஃப்ளையிங் விசிட் என்று கிழவர் சிரித்தார். அவர் குரலில் இருந்த ஏளனம் ஆளை அடிப்பது போல இருந்தது.

உன்னையே ஏண்டா நீ பழி மாதிரி இங்க வந்து விழுந்து கிடக்கறேன்னு சொல்லிண்டு இருக்கேன். காலம்பரம் சாயந்திரம்னு வந்து வந்து உக்கார்றே, ஆபீசுக்குப் போய் வேலையைப் பாருங்கிறேன். காதிலேயே வாங்காம இருக்கே.

உங்களைப் பாத்துக்கறதை விட வேறே என்ன பெரிய வேலை எனக்கு?

ஏய் சித்தி, சிவாஜி கணேசன் வசனம் பேசறான். கேட்டுக்கோ.

சித்ரா புன்னகையுடன் அவரருகே வந்து அங்கிள் அவர் சொல்லுறது சரிதானே என்றாள்.

ஓ, சேம் சைட் கோல் போடுறியா. பரவாயில்லே. பாத்துக்கறேன்.

சேகர் சித்ராவைப் பார்த்து எட்டரை எட்டே முக்காலுக்குதானே சாப்பிடுவாரு? நீங்க கொஞ்சம் ஹெல்ப்…

கிழவர் அவனைப் பார்த்து ஓகே. ஓகே. பை பை என்றார். அவர் பார்வையில் தெரிந்த வெறுப்பை சித்ரா கவனித்தாள். இதற்கு முன்னால் நாலைந்து தடவை இந்தப் பார்வையை அவள் கவனித்திருக்கிறாள். முதல் தடவை அதிர்ச்சியாக இருந்தது. இப்போது லேசாகப் பழகி விட்டது.

சேகர் ஒன்றும் பேசாமல் வெளியே சென்றான்.

அங்கிள் அவரு ஒண்ணும் தப்பா சொல்லலியே. எதுக்கு உங்களுக்கு இவ்வளவு கோவம்?

கிழவர் சில வினாடிகள் பேசாமல் இருந்தார்,

கார்த்தாலேந்து தலைவலி மண்டையைப் பொளக்கறதுன்னயே வேதம். அதை வச்சுண்டே சமையலையும் முடிச்சிட்டே. போய் கண்ணை மூடிண்டு அக்கடான்னு கொஞ்ச நாழி படுத்துக்கோயென்.

இன்னிக்கி சேகர் கிளாஸ்லே பி.டி. மீட்டிங். இந்தத் தடவை கொஞ்சம் போயிட்டு வந்துடறேளா? போன தடவையே வரலேன்னு அவன் டீச்சர் ரொம்பக் கோவிச்சிண்டா. ப்ளீஸ்.

அங்க அவ ரோல் நம்பர் படின்னா வரிசைலே நிக்கச் சொல்லிக் கூப்பிடுவா! இவன் பேர் வரதுக்கு ரெண்டு மணி நேரம் ஆகுமே. எனக்கு இன்னிக்கி ஆடிட்டர்ஸ் வேறே வரான்கள்.

அதுக்காக இவன் பேரை ஆராவமுதுன்னோ அன்பழகன்னோ மாத்திடலாமா? மொத்த மீட்டிங்கே ஒரு மணி நேரத்திலே ஆயிடும். உங்க ஆடிட்டர்ஸ் ஒரு மாசம் இருக்கப் போறா. ஒரு மாசத்துக்கு அவா மூஞ்சியைத்தான் நீங்க பாத்துண்டு அலையணும். இன்னிக்கி மாத்திரம் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிப் போங்கோ.

சரி, நீ இந்த மாசமும் பேரென்ட் டீச்சர் மீட்டிங் போக வேண்டாம். சேகரோட டீச்சருக்கு போன் பண்ணி உனக்குத் தலைவலி இல்லாட்டா ஜொரம்ன்னு சொல்லிடு.

அது எங்களுக்குத் தெரியாதாக்கும். அங்க ஸ்கூலுக்கு வரவாளைப் போய்ப் பாருங்கோ. முக்கால்வாசி குழந்தைகளோட அப்பாதான் வந்து நிக்கறா. உங்களுக்கு அப்படி என்னதான் கூச்சமோ? நாலு பேரைப் பாத்து நின்னு பேசிட்டு வரதுக்கு. சரி இந்தத் தலைவலியோடையே நான் போறேன். இன்னிக்கி சாயந்திரம் வேறே டியூஷனுக்குக் கூட்டிண்டு போயிட்டு வரச்சே டென்த் கிராஸ்லே டெயிலர் கிட்டே அவனைக் காமிச்சு தீபாவளி டிரஸ்ஸுக்கு அளவு குடுக்கணும்.

கிழவர் சித்ராவைப் பார்த்து என்ன கேட்டே? நான் ஏன் சேகரைக் கோவிச்சுக்கிறேன்னா? எனக்கு என்னைக் கண்டாலே வெறுப்பாயிருக்கு. இது என்ன லைஃப்? பிறத்தியார் கையை எப்பவும் எதிர்பாத்துண்டு? நான் எப்பவும் யாரையும் எதிர்பாக்காமதானே இத்தனை நாள் காலத்தைத் தள்ளிண்டு வந்திருக்கேன்?

அப்போ ஸ்டிராங்கா இருந்தீங்க. இப்ப அப்பிடியா? என்றாள் சித்ரா கனிவு நிரம்பிய குரலில்.

கிழட்டுப் பயலேன்னு செல்லமா கூப்பிடறே, இல்லே?

அவள் முகத்தில் தென்பட்ட அதிர்ச்சியை அவர் ரசித்தார்.

அவள் ஏதோ சொல்ல வாயைத் திறந்த போது நான் விளையாட்டுக்குதான் சொன்னேன். எனக்கு உன்னைத் தெரியாதா? உங்கிட்டே நான் ஒண்ணு சொல்லட்டுமா? எம்பது வயசு என்னைக் கட்டிப் போட்டிருக்குன்னு எல்லாரும் நினைக்கிறான்கள். நிஜமாவே நான் கட்டுண்டா கிடக்கேன்? இல்லியே. நடந்தாதான் நடமாட்டமா? என் மனசு இன்னும் நூறு மைல் வேகத்திலே வேலை செய்யறது. வேதம் இருந்தாள்னா கையாவும் காலாவும் இருப்ப. அதுக்குதான் எனக்குக் கொடுத்து வைக்கலையே.

சித்ரா என்ன பதில் சொல்வது என்று குழம்பியவளாய் மௌனத்தைக் கடைப்பிடித்தாள்.

காரில் வரும் போது சாவித்திரி தம்பியிடம் ஹவ்’ஸ் தி ஓல்ட் மான்? என்று கேட்டாள்.

சாலையிலிருந்து பார்வையை எடுத்து சேகர் அவளைக் கூர்மையாகப் பார்த்தான்.

சரி, சரி. கோவிச்சுக்காதே. ஹவ்’ஸ் தி பாஸ்?

சேகர் அவர் உடம்பு பத்து நாளைக்கு முன்பு இருந்ததை விட இப்போது குணமடைந்திருக்கிறது என்றான்.

ஆனா என் தலையைப் பாத்தவுடன் ஒரு கோப மூஞ்சியை எடுத்து மாட்டிக்கறார்

நீ தினமும் அவரைப் போய்ப் பாத்துக்கிறியேடா!

எதுக்கு வரேன்னு திட்டறார்.

வராம இருந்தா நன்னி கெட்டவங்கள்னு திட்டுவாரே

தெரியலே அக்கா. ஆனா வேறே யார் இருக்கா அவரைப் போய்ப் பாத்துக்கறதுக்கு? இப்ப நீ வரப் போறேன்னு சொன்னவுடனே அவ எதுக்கு இப்ப ஓடி வரான்னு கேட்டார்.

வராதேங்கிறாரா?

வந்துட்டு இன்னிக்கி ராத்திரியே ஓடிப் போறதுக்கு எதுக்கு வரணும்னு கேட்டார்.

நான் பத்து நாள் லீவு போட்டுத் தங்கிட்டுப் போலாம்னுதான் வந்திருக்கேன் என்றாள் சாவித்திரி.

ஓ வெரி குட். ஆனா நீ நாளைக்கே திரும்பனும்னு போன்லே சொன்னியே. நானும் அதைத்தான் அவரிடம் சொன்னேன்.

இல்லே. எனக்கு மனசு கேக்கலே. எப்பப் பாரு என்ன சதா வேலையைக் கட்டி அழுதுண்டுன்னு அம்மா சொல்லுவாளே. அது எனக்கும் தோணிடுத்து. அப்பாவோட கொஞ்ச நாள் இருக்கணும்.

சேகர் இப்போதைக்கு அந்த நர்ஸ் சித்ராதான் அவரைக் கட்டி மேய்க்கிறா. அப்படியும் யார் பேச்சையும் கேக்காம எழுந்து எழுந்து ஒடிண்டு எல்லாக் காரியத்தையும் தானே செய்வேன்னு பிடிவாதம் பிடிக்கறார். முந்தா நாள் மத்தியானம் நான் ஆபீசுக்குப் போகணுமா இருந்தது. குவார்ட்டர்லி போர்டு மீட்டிங்னு. நான் இல்லாததைப் பாத்துட்டு வாக்கிங் போறேன்னு ரூம் வாசல்லேந்து இறங்கிட்டாறாம். எல்லாரும் அப்பிடியே பதறிப் போயிருக்கா. அவரோ வெளியிலே போகணும்னு ஒரே அடம். சித்ராவுக்கு அழுகையே வந்துடுத்தாம். அவர் கிட்டே அங்கிள், நீங்க உள்ளே போகலேன்னா நான் பெர்மனெண்டா இந்த ஆஸ்பத்திரியை விட்டு வெளியேதான் போகணும்னா பாரேன். ஒரு மறுபேச்சு இல்லாம உள்ளே போயிட்டாறாம்” என்றான்.

அவருக்குள்ளே எதோ நடந்துண்டு இருக்கு. அது என்னன்னுதான் நமக்குத் தெரியலே. நாம சாயந்திரம் நாலு நாலேகாலுக்குப் போகலாமா?

இல்லேக்கா. சாப்பிட்டுட்டு நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு. நான் அவருக்கு லஞ்ச் எடுத்துண்டு போய்க் கொடுத்துட்டு அங்கே இருக்கேன். நாலு மணிக்கு ஆத்துக்கு வந்து உன்னைக் கூட்டிண்டு போறேன்.

மாலையில் அவர்கள் ஆஸ்பத்திரியை அடைந்த போது சுவேதாம்பரத்துக்கு சித்ரா சாத்துக்குடி ஜுஸ் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

அவளைப் பார்த்ததும் அவர் முகம் மலர்ந்தது. சித்ரா வாங்க அக்கா. நல்லா இருக்கீங்களா என்று விசாரித்தாள்.

சாவித்திரி அவரது படுக்கையின் அருகில் சேரைப் போட்டுக்கொண்டு உட்கார்ந்தாள்.

எப்படி இருக்கேப்பா என்று கேட்டாள்.

அதான் பாக்கறையே அனந்தசயனத்தை. அது சரி. நீ எதுக்கு குண்டாங் குண்டான்னு அவ்ளோ தூரத்திலேந்து ஓடி வந்திருக்கே. ப்ளேன் சார்ஜ் போட்டுண்டு.

உன்னை இருந்து பாத்துட்டுப் போகலாம்னுதான் என்று சிரித்தாள் சாவித்திரி.

இன்னிக்கு வந்துட்டு நாளைக்குத் திரும்ப ஓடறதுக்கு, இல்லே?

இல்லே. ஒரு பத்து நாள் இருந்துட்டுதான் போவேன்.

அவர் திடுக்கிட்டு அவளைப் பார்த்த மாதிரி இருந்தது.

உனக்கு கிறுக்கு பிடிச்சிருக்கா?

என்னப்பா, என்ன சொல்றேள்?

அவள் திகைப்புடனும் சந்தேகத்துடனும் அவரைப் பார்த்தாள்.

அவர் உடனடியாகப் பதில் அளிக்கவில்லை. அவள் பார்வை அவரைச் சற்று உலுக்கியது.

இல்லேடி. பொட்டுண்டுவை யார் பாத்துப்பா? மாப்பிள்ளைக்கு குழந்தையைப் பாத்துக்க என்ன தெரியும்?

அவர் குரல் அவருக்கே சமாதானமாக இல்லை.

ஏன் அல்கா தீதிதான் வீட்டோட இருக்காளே? நா ஆபீஸ் வேலையா பாம்பே கல்கத்தான்னு போறச்சே அவதானே குழந்தையைப் பாத்துக்கறா?

அதெல்லாம் ஒண்ணும் சொல்ல வேண்டாம் நீ. இங்க என்ன பாழாப் போறதுன்னு கிளம்பி வந்தேன்னு நினைச்சிண்டு இருக்கேன். பத்து நாள் இருக்காளாம். ஆஸ்பத்திரி டூட்டிக்கா? இதோ இந்த சித்ரா இங்கே இருக்காளே. நீ மொதல்லே நாளைக்கு கிளம்பப் பாரு.

அவர் நிர்தாட்சண்யமாக அவ்வாறு பேசியது சாவித்திரிக்கு மட்டுமல்ல, சேகருக்கும் சித்ராவுக்கும் கூட விசித்திரமாக இருந்தது.

அப்போது அறைக்குள் டாக்டர் வந்தார் என்ன கலாட்டா இங்கே என்றபடி. அவர்கள் பேசியதை அவர் கேட்டுக் கொண்டுதான் வந்திருக்க வேண்டும். சாவித்திரியைப் பார்த்ததும் “எப்போ டெல்லிலேந்து வந்தே? குழந்தை ஹஸ்பென்ட் எல்லாரும் எப்படியிருக்காங்க?” என்று கேட்டார்.

சாவித்திரி அவருக்கு வணக்கம் செலுத்தியபடி எல்லாரும் சௌக்கியம்தான் டாக்டர் என்றாள்.

அவர் கிழவர் அருகே சென்று யூ ஆர் லுக்கிங் சீர்ஃபுல் என்றபடி நாடியைப் பிடித்துப் பார்த்தார். ஸ்டெதஸ்கோப்பை அவரது மார்பிலும் வயிற்றிலும் முதுகிலும் வைத்துப் பார்த்து விட்டு குட் என்றார்.

சித்ராவைப் பார்த்து மத்தியானம் நல்லாத் தூங்கினாரா? என்று கேட்டார்.

அவள் பதில் சொல்வதற்கு முன் சுவேதாம்பரம் ஓ, ரெண்டு மணிக்குப் படுத்தவன் நாலு மணிக்குத்தான் எழுந்தேன் என்றார்.

கொஞ்சம் கஷ்டப்பட்டாரு டாக்டர் என்றாள் சித்ரா. கிழவர் அவளை முறைத்துப்
பார்த்தார்.

டாக்டர் சித்ராவிடம் அவருக்குக் கொடுத்துக் கொண்டிருக்கும் மருந்துகளில் இரண்டின் பேரைச் சொல்லி அவற்றை இனிமேல் கொடுக்க வேண்டாம் என்றார். கிழவரைப் பார்த்து ராத்திரி வீட்டுக்குப் போறதுக்கு முன்னாலே உங்களை வந்து பார்க்கிறேன் என்று கிளம்பினார். அவருடன் சித்ராவும் சென்றாள்.

ஒரு மணி நேரம் சேகரும் சாவித்திரியும் கிழவருடன் பேசிக் கொண்டிருந்தார்கள். பேரன் பண்ணும் அட்டாகாசங்களை எல்லாம் சாவித்திரி சொல்லச் சொல்ல கிழவர் சிரித்தபடி கேட்டுக் கொண்டிருந்தார். சாவித்திரியின் ஆபீஸ் வேலைகளை பற்றிக் கேட்டார். அவர்கள் கிளம்பிய போது அவர் சாவித்திரியிடம் “நீ கிளம்பி ஊருக்குப் போ. நான் இவனையே இங்கே ஏண்டா பிரும்மஹத்தி மாதிரி என்னைப் பிடிச்சிண்டு நிக்கறே. ஆபீசுக்குப் போடங்கறேன். நீயாவது நான் சொல்றதைக் கேளு என்றார்.

அவர்கள் கிளம்பிச் செல்கையில் சித்ரா கூட வந்தாள். அவர்களிடம் உங்களை டாக்டர் வந்து பார்க்கச் சொன்னார் என்றாள்.

டாக்டர் அறைக்குள் சென்று அவர்கள் அவரைப் பார்த்தார்கள்.

சேகர் அவர் கூடவே இருக்கறவன், நீதானே ரொம்ப நாள் கழிச்சு அவரைப் பாக்கறே. எப்படி இருக்கார்னு உனக்குத் தோணறது என்று சாவித்திரியிடம் கேட்டார்.

ஹி லுக்ஸ் ஆல்ரைட் டு மீ டாக்டர். பத்து நாளா படுக்கையிலே இருக்கறதினாலே மூஞ்சிலே கொஞ்சம் டயர்ட்னெஸ் தெரியறது. ஆனா…

ஆனா? என்று டாக்டர் கேட்டார்.

அவர் பேச்சென்னவோ வித்தியாசமா இருக்கற மாதிரி இருக்கு. இல்லியா சேகர்?

சேகர் அவள் சொல்வதை ஆமோதிப்பவன் போலத் தலையசைத்தான்.

நீ சொல்றது கரெக்ட்தான். ட்ரீட்மென்டுக்கு உடம்பு நன்னா கேட்டுண்டு வரது. உன்னைக் கிளம்பிப் போன்னு மறுபடியும் சொன்னாரா?

ஆமா. கிளம்பறச்சே ஏதோ விரட்டற மாதிரி கிளம்பிப் போன்னார் .

நான் ஒண்ணு சொல்லட்டுமா? என்றார் டாக்டர். சில வினாடிகளுக்குப் பின், சேகர், நீ தினமும் காலம்பரையோ ராத்திரியோ ஒரு வேளை மட்டும் வந்து அவரைப் பாத்துட்டுப் போ. சாவித்திரி, நீயும் நாளைக்குக் கிளம்ப முடிஞ்சா கிளம்பிடு. அவரை அடுத்த வாரம் டிஸ்சார்ஜ் பண்ணிடுவேன். அதுக்கப்பறம் ரெண்டு மூணு வாரமோ இல்லே ஒரு மாசமோ கழிச்சு வந்து அவரோட தங்கி இருந்துட்டுப் போற மாதிரி பிளான் பண்ணிண்டு வா என்றார்.

பிறகு நான் ரவுண்ட்ஸுக்கு போயிட்டு வரட்டா, குட் நைட் என்றபடி தன் இருக்கையிலிருந்து எழுந்து வெளியே சென்றார்.

தாயார்

ஸிந்துஜா

image credit Craiyon

 

வாசல் கதவை அம்மாதான் திறந்தாள். சுதாமதியைப் பார்த்ததும், “ஐயோ!” என்றாள்.

தன்னை அவள் வரவேற்கும் விதம் எதிர்பாராத ஒன்றல்ல என்று நினைத்தபடி சுதாமதி வீட்டுக்குள் நுழைந்தாள். ஹாலில் கிடந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டாள். தொலைக்காட்சிப் பெட்டியில் ஸ்ருதிராஜிடம் சங்கீதா, உன்னை இந்த வீட்டை விட்டுத் துரத்தாத வரை எனக்கு நிம்மதி இல்லை, என்று பற்களைக் கடித்துக் கொண்டிருந்தாள். இங்கேயும் வீட்டை விட்டுத் துரத்தும் கதைதானா என்று சுதாமதி நினைத்தாள்.

வீடு கும்மென்று வெப்பத்தில் தவித்துக் கிடந்தது. இவ்வளவுக்கும் மாலை பிரிந்து இரவு வரும் நேரம் என்று பேர். பொட்டுக் காத்து இல்லை.

அவளருகில் வந்து நின்ற அம்மாவை சுதாமதி ஏறிட்டாள். ‘எதுக்குடி இப்ப இங்கே வந்திருக்கே?’ என்கிற கேள்வி தொங்கிக் கொண்டிருக்கும் அவளின் பார்வையைச் சந்தித்தாள். அதற்குப் பதில் சொல்ல வேண்டுமா? அவளாகவே பேச்சை ஆரம்பிக்கட்டும் என்று மறுபடியும் தொலைக்காட்சிப் பெட்டியைப் பார்த்தாள்.

“இந்த அழகு சீரியலைப் பாக்கறதுக்கா தும்கூர்லேந்து ஓடி வந்திருக்கே?” என்றாள் அம்மா. “அந்தக் கடங்காரன் என்ன சொல்லி இப்ப உன்னை இங்கே தொரத்திருக்கான்?”

பார்வையில் மட்டுமில்லாது குரலிலும் எகிறும் கோபத்தை சுதாமதி கவனித்தாள். எதையும் செய்ய முடியாத தனது கையறு நிலையை நினைத்தா அம்மாவின் குரலில் துக்கத்தின் இடத்தைக் கோபம் கவ்விக் கொண்டிருக்கிறது? ஹாலில் வீசிய அரை மங்கலான விளக்கொளியில் அம்மாவின் முகம் காட்டுவதென்னவோ துக்கத்தைத்தான்.

“அம்மா, ரொம்பப் பசிக்கிறதும்மா” என்றாள் சுதாமதி.

க்ஷணத்தில் அம்மா மாறி விட்டாள் . கனிவு அவள் முகத்தில் ஏறிய தருணம் “என்னது பட்டினியா வந்திருக்கியா? வாடி உள்ளே. வயித்துக்கு எதுக்கு வஞ்சனை பண்ணிண்டு வந்திருக்கே?” என்று அவள் கையைப் பிடித்துத் தன்னுடன் இழுத்துச் சென்றாள். சமையலறைக்குள் நுழைந்தவள் “தட்டை எடுத்துப் போட்டுண்டு இங்கேயே உக்காரு ” என்று சொல்லி விட்டு மேடையை அடைந்தாள். சுதாமதியின் பார்வை சமையலுள்ளை அளைந்தது இரண்டு பித்தளை பாத்திரங்களும் ஒரு எவர்சில்வரும் மேடையிலிருந்தன. பித்தளை உருளியின் வெளிப் பாகத்தில் நாலைந்து சாதப் பருக்கைகள் ஒட்டியிருந்தன. கச்சட்டிப் பிடியில் குழம்புத் துளிகள் தெறித்து விழுந்து காய்ந்து கொண்டிருந்தன. எவர்சில்வர் பாத்திரத்தின் கீழ் பீன்ஸ் துகள்கள் கிடந்தன. மேடை மேலிருந்த ஸ்டவ்வில் அதன் ஒரிஜினல் மஞ்சள் நிறம் போய் எண்ணெய்ப் பிசுக்கு கறுப்பாக மாற முயன்று கொண்டிருந்தது. அலமாரியென்று சுவரில் ஒட்டியிருந்ததில் ஒரு கதவு மட்டும் திறந்து கிடந்தது. போன தடவை அவள் வந்த போது இருந்த இன்னொரு கதவு இப்போது இல்லை. அப்போதே அது உடைந்து உயிரை விடுவது போல்தான் இருந்தது. அம்மா மேடையிலிருந்த ஏனங்களை எடுத்துக் கொண்டு வந்து சுதாமதி உட்கார்ந்திருந்த இடத்துக்கு எதிரே வைத்தாள்.

பிறகு அவளது அருகில் உட்கார்ந்து பரிமாறினாள். சுதாமதி அம்மாவை ஒருமுறை பார்த்து விட்டுத் தட்டில் இருந்தவற்றைக் கலக்கி உருட்டி வாயில் போட்டுக் கொண்டாள்.

“இப்ப சாப்பாடு போடறதுக்குக் கூட வக்கில்லையா அவனுக்கு? இல்லே, உன்னைப் படுத்தி எடுக்கணுமேன்னு இப்பிடிப் பண்ணறானா?” என்று அம்மா கேட்டாள்

“நேத்திக்கு விடியறச்சேயே காப்பிக்குப் போட சக்கரை வாங்கி வைக்கத் துப்பில்லையா முண்டமேன்னு கத்தினான். காலங்காத்தால அவனோட கையாலாகாத்தனத்துக்கு என்னைப் போட்டு நொறுக்கறதான்னு எனக்கும் எரிச்சல் மண்டிண்டு வந்தது, கடையிலே போய் வாங்கிண்டு வந்து வச்சா இருக்கும். இல்லேன்னா அது மானத்துலேந்து வந்து குதிக்குமான்னேன் வேகமா என்கிட்டே வந்து வாயைப் பாரு வாயை. கிழிச்சு எறிஞ்சுடுவேன்ன்னு சொல்லிண்டே பளார்ன்னு கன்னத்திலே அறைஞ்சான். முழு பலத்தையும் கைக்குள்ளே கொண்டு வந்து அடிச்ச அடியிலே கீழே விழுந்துட்டேன். பின்னாலே நகர்ந்துண்டு என்னைப் பார்வையாலேயே மிதிச்சபடி போய் உங்கப்பன்ட்டேர்ந்து பத்தாயிரம் வாங்கிட்டு வா. நான் இன்னிக்கி திப்டூருக்கு டூர் போறேன். நாளைக்கு சாயங்காலம் நான் திரும்பி வரப்போ நீ பணத்தோட இங்க இருக்கணும், ஆமாம்ன்னு கத்திட்டுக் கோபத்தோட தரையிலே கிடந்த பிளாஸ்டிக் வாளியைக் எத்திண்டே பாத்ரூமுக்குப் போயிட்டான். நேத்திக்கி கார்த்தாலே ரெண்டு இட்லி பிச்சு வாயிலே போட்டுண்டது” என்றாள் சுதாமணி. “அவன் சாப்பிடறதுக்குன்னு டிபன் பண்ணினதாலே அந்தப் புண்ணியத்தில் எனக்கும் இட்லி கிடைச்சது. டூர் போயிருக்கான். வீட்டிலே ஒரு இழவும் கிடையாது. அவன் ஊர்லே இல்லாதப்போ நான் காத்தைக் குடிச்சிண்டு உயிர் வாழணும்.”

“அடிப்பாவி! நேத்திக்கே இங்கே வரதுக்கென்ன?” என்று அம்மா அவளைக் கோபத்துடன் பார்த்தாள்.

“அவன் உங்கப்பா கிட்டே போய்ப் பத்தாயிரம் வாங்கிண்டு வான்னு அடிச்சு அனுப்பியிருக்கான். போன தடவை அப்பா அடிச்ச கூத்துக்கு அப்புறம் நான் எப்பிடி அவரைப் பாத்துக் கேப்பேன்? இப்பவே அவர் வந்து என்னைப் பாத்தவுடன் இந்த பிரும்மஹத்தி எதுக்கு இங்கே வந்து நிக்கறதுன்னு அவருக்குக் கோபம் பிச்சிண்டு வரப் போறது” என்றாள் சுதாமதி.

அம்மா அவள் தலையைப் பரிவுடன் தடவிக் கொடுத்தாள். “அப்படில்லாம் ஒண்ணும் ஆகாது” என்றாள்.

போன தடவை என்றால் ஒரு வருஷத்துக்கு முன்பு. சுதாமதிக்குக் கல்யாணம் ஆகி தலை தீபாவளிக்கு வந்ததுதான். இவ்வளவு பக்கத்தில் இருந்து கொண்டு தலையையே காமிக்க மாட்டேங்கிறியே என்று அவளுடைய தோழிகள் கேட்பார்கள். அவள் புருஷனின் லட்சணம் அவர்கள் குடும்பத்துக்குள் மட்டும் இருந்தது. அதனால் மற்றவர் கேள்விகளையெல்லாம் சிரித்து மழுப்பி விடுவாள். ஆனால் ஒரு வருஷத்துக்கு முன்பு இன்றைய தினம் போல சுதாமதி மட்டும் தனியாக வந்து நின்றாள். ராமசாமி அன்றும் அவளைப் பணம் வாங்கிக் கொண்டு வரச் சொல்லி அனுப்பியிருந்தான்.

மாலையில் ஆபிசிலிருந்து வந்த சபாபதி அய்யருக்கு அசாத்தியக் கோபம் வந்து விட்டது. “அவன்தான் கேட்டான்னா எந்த மூஞ்சியை வச்சுண்டு நீ இங்கே வந்து நிக்கறேடி? உன் கல்யாணத்துக்கு வாங்கிய கடனுக்கு இப்ப வட்டி கட்டறதே எனக்குப் பெரும் பாடுன்னு உனக்குத் தெரியாதா? அந்த நாய்ப்பயல் கேட்டால் எடுத்துக் குடுக்க நான் என்ன நோட்டு அடிச்சு வச்சிருக்கேனா? எவ்வளவு கடன் வாங்கி உனக்கு நகை வாங்கிப் போட்டேன்? அந்த ராஸ்கல் எல்லாத்தையும் கழட்டி எடுத்துண்டு போய் வித்துட்டான்னு வந்து சொல்றியே? அவன் கேட்டப்போ கழட்டிக் கொடுக்க மாட்டேன் போடான்னு இங்கே வந்திருக்க வேண்டியதுதானே? அமுக்கு மாதிரி இருந்துட்டு இங்க வந்து இப்ப பணம் கொடுங்கிறே. என் கையிலே கொடுக்கறதுக்கு ஒண்ணுமில்லே. அடியோ உதையோ வாங்கிண்டு அங்கேயே விழுந்து செத்துத் தொலை” என்று காட்டுக் கத்தல் கத்தினார். அவர் பேச்சைக் கேட்டு அவர் மேல் அம்மாவுக்குக் கோபம் வந்து விட்டது.

“விளக்கு வச்ச நேரத்திலே என்ன பேச்சுப் பேசறேள்? இவ பணம் கேட்டுதானே வந்திருக்கா, என்கிட்டே இல்லைன்னு ஒரு வார்த்தையை, அது கூட உதடு பிரியற கஷ்டத்தைக் கொடுக்காத ஒரு வார்த்தையைக் கடவுள் எதுக்குப் படைச்சு வச்சிருக்கான்? நறுக்குத் தெறிச்சாப்பிலே ஒரு வார்த்தை சொல்றதை விட்டுட்டு எதுக்கு நீங்க இப்பிடி நெருப்புக் கங்கை அவ மேலே
விட்டெறியணும்? குழந்தை துடிக்கிறா பாருங்கோ. பெத்த வயிறு இன்னும் மேலாவே பதர்றது. ஜனகன் போட்டு அனுப்பாத நகைகளா சீதைக்கு? ஒரு நட்டு இல்லாம புருஷனோட அன்பை மட்டுமே வச்சுண்டு காட்டுக்குப் போற கஷ்டத்தைத் தேவி தாங்கிக்கலையா? கர்மாவை யார் தடுக்க முடியும்?” என்றாள் அம்மா.

அப்பா “நான் ஒண்ணும் ஜனகன் இல்லே, எடுத்து அள்ளி அள்ளி வீசறதுக்கு. இவ தான் கஷ்டத்துக்கு சீதையை கொண்டிருக்கா. எக்கேடு கெட்டு ஒழியுங்கோ. என்கிட்டே ஒரு சல்லி இல்லே” என்று மறுபடியும் கத்தி விட்டு வெளியே போய் விட்டார்.

இரவு வெகு நேரம் கழித்து வந்தவர் மனைவியைக் கூப்பிட்டு “சுப்பு, இந்தா. இந்தக் கவர்லே ஐயாயிரம் இருக்கு. முத்துச்சாமிகிட்டேர்ந்து ரெண்டு வட்டிக்கு வாங்கிண்டு வந்தேன். இவ்வளவுதான் தர முடியும்னு சொல்லிட்டான். இதை எடுத்துண்டு அவ போகட்டும். ஆனா இனிமே பணம்னு கேட்டுண்டு இங்கே வர வேண்டாம்னு சொல்லிடு”என்றார். ராமசாமியின் முரட்டுத்தனத்தை நினைத்து அஞ்சி அவளுடைய அம்மாவும் அப்பாவும் அதன் பிறகு அவள் எப்படி இருக்கிறாள் என்று கூட விசாரிக்க முடியவில்லை.

“அம்மா, எனக்கு நிஜமாவே இங்கே பணம் கேட்டுண்டு வர கொஞ்சமும் பிடிக்கலே. அப்பா என்ன வச்சுண்டா இல்லேங்கிறார்? ஆனா அவர் கடனோ உடனோ வாங்கிக் கொடுத்துடுவார்னு அவனுக்கு அப்படி ஒரு நம்பிக்கை. ஆனா நான் இப்ப வந்தது அதுக்காக இல்லே” என்றாள் சுதாமதி.

“நீ அன்னிக்கிக் கிளம்பிப் போனதுக்கு அப்புறம் இந்த மனுஷன் கதறியிருக்கார் பாரு, எனக்கே அழுகை வந்துடுத்து. எவ்வளவு செல்லமா வளர்த்தேன் இந்தக் குட்டியை. அவ அஞ்சாங் கிளாஸ் படிக்கறப்போ கணக்கு சரியா போடலேன்னு கிளாஸ் வாத்தியார் கிள்ளினதுக்காக நேரே அவன் வீட்டுக்குப் போய் அவன் வீட்டு ஹால்லே இருந்த கிரிக்கெட் பேட்டை எடுத்து இந்தக் கைதானே கிள்ளினதுன்னு ஏழெட்டு அடி போட்டேன். துடிச்சிட்டான். இதுமாதிரிதானேடா குழந்தைக்கும் வலிச்சிருக்கும்னேன். ‘நான் உன்னை இப்ப அஞ்சாங் கிளாஸ் வாத்தியாரா நினைச்சு அடிக்கலே. வய்யாளிக்காவல் நரசய்யான்னுதான் அடிச்சேன். திரும்ப ஏதாவது என் குழந்தைக்குப் பண்ணினாயோ அப்புறம் இந்த அடி தெருவுக்கு வந்துடும்’னு சொல்லிட்டு வந்தேன்னு உனக்குத் தெரியுமே.
அவ கேட்டதையெல்லாம் என்னிக்காவது தர மாட்டேன்னு சொல்லியிருக்கேனா? ஆனா இப்ப யாரோ ஒரு அயோக்கியன் கிட்டே சிக்கிண்டு அவ படற பாட்டை என்னாலே தாங்கிக்க முடியலையே. வாயிலே இருக்கு வார்த்தைன்னு என்னமாக் குழந்தையைப் போட்டுத் திட்டிட்டேன்னு சொல்லிச் சொல்லி மாய்ஞ்சு போயிட்டார்” என்றாள் அம்மா.

“பாவம் அப்பா!” என்று மெல்லிய குரலில் சொன்னாள் சுதாமதி. சில நிமிஷங்கள் கழித்து “நான் இப்ப வந்தது அதுக்காக இல்லேன்னு சொன்னேன். நீ காதிலே வாங்கிக்கலையே” என்றாள் சுதாமதி.

“புரியலையேடி. சொல்றதை சரியா சொன்னாத்தானே இந்த மரமண்டைக்கும் கொஞ்சம் ஏறும்” என்று அம்மா சிரித்தாள்.

“நான் இங்க வரதுக்கு மின்னாலே தம்புவைப் பாத்தேன்.”

அம்மா கண்களை அகல விரித்து “ஓட்டல்காரத் தம்புவையா? அவன் எங்க உன்னைத் தெருவிலே பாத்தான்? எப்பவும் கார்லே மிதந்துண்டு இருக்கறவனான்னா ஆயிட்டான் அவன் உன்னை அடையாளம் கண்டானோ?”

சுதாமதி அம்மாவைப் பார்த்தாள். அம்மாவின் ஆச்சரியம் அவளுக்கு ஆச்சரியத்தை அளிக்கவில்லை. தம்பு இப்போது பெரிய பணக்காரனாகி விட்டான். அம்மா சொல்லும் காரைத் தவிர ராஜாஜி நகரில் வீடு, இப்போது அவன் நடத்துகிற ஒட்டல் எல்லாவற்றையும் வாங்கி விட்டான்.

அம்மாவும் அவள் நினைப்பதையே நினைக்கிறாள் என்பதை அம்மாவின் அடுத்த பேச்சு நிரூபித்தது.

“யார் யாருக்கு என்ன கிடைக்கணுமோ அதுதான் லபிக்கும். ஆத்துக்குள்ளே வந்து சுதாவை எனக்குத் தாங்கோன்னு கேட்டான். நாலு பேர் வந்து டீசண்டா உட்கார்ந்து சாப்பிடக் கூட முடியாத ஒரு குச்சுலே ஏழை பாழைகளுக்கு இட்லி தோசை போட்டு விக்கறவனுக்கு எப்படி என் பொண்ணைக் கொடுக்கறதுன்னு வேண்டாம்னுட்டார் உங்க அப்பா. ராஜா மாதிரி கவர்மெண்ட் உத்தியாகத்திலே இருக்கற மாப்பிள்ளைன்னு பண்ணி வைச்சார். இப்ப கவர்மெண்ட் ராஜா பிச்சைக்காரனா ஆயிட்டான். ஓட்டல்காரன் எங்கையோ உசரத்திலே இருக்கான் பாரு” என்றாள் கோபமும் வருத்தமும் தொனிக்கும் குரலில்.

அவள் சற்று சமாதானமாகட்டும் என்று சுதாமதி ஒன்று சொல்லாமல் அம்மாவின் கையைப் பிடித்துத் தன் கையேடு இணைத்துக் கொண்டாள்.

திடீரென்று அம்மா நினைவுக்கு வந்தவள் போல “தம்புவை நீ எங்கே பாத்தே? என்ன சொன்னான்?” என்று கேட்டாள்.

“அவனை நான் ஒரு மாசத்துக்கு மின்னாலே பாத்தேன். தும்கூர்லே. நாளைக்கு காலம்பற எட்டு மணிக்கு அவன் ஆபீசுக்கு வரச் சொல்லியிருக்கான்.

“என்னது?”

சுதாமதி அம்மாவிடம் சொல்ல ஆரம்பித்தாள்.

ஒரு மாதத்துக்கு முன்பு அவள் தும்கூரில் கடைவீதியில் சென்று கொண்டிருந்த போது அவளுக்கு முன்னால் சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென்று நின்றது. அவள் பார்த்துக் கொண்டிருந்தபோதே அதிலிருந்து தம்பு இறங்கினான்.

அவள் அருகே வந்து “நீ சுதாதானா? என்ன இப்படித் தேஞ்சு போய்க் கிடக்கே” என்றான்.

“ஆனா நீ அடையாளம் கண்டுபிடிச்சிட்டியே” என்று அவள் புன்னகை புரிந்தாள்.

“இந்தக் கோணக்கால் நடையை இந்த சுதாமணியைத் தவிர இந்தக் கர்நாடகாலே வேற யார் கிட்டே பாக்க முடியும்?” என்று பதிலுக்கு அவனும் சிரித்தான்.

எப்போதும் அவன் அவளை அப்படித்தான் கேலி செய்வான்.

“அடேயப்பா! எவ்வளவு இந்த?” என்று அவள் சிரித்தாள். “நீ எங்கே இங்கே?”

“தும்கூருக்கு ஒரு ஓட்டல்காரன் எதுக்கு வருவான்? வருஷாந்திர காண்ட்ராக்ட் போட்டு தும்கூர் புளி வாங்கிண்டு போறதுக்குத்தான். இவ்ளோ நாளும் மானேஜரை அனுப்பிடுவேன். இந்த வருஷம்தான் இப்ப அவர் பொண்ணுக்கு அடுத்த மாசம் கல்யாணம்னு லீவிலே போயிருக்கார். அதனாலே அவர் கொள்முதல் பண்ற எல்லா இடத்துக்கும் நான் போயிண்டு இருக்கேன்” என்றான்

“ரொம்பப் பிஸிதான் நீ” என்று சுதாமணி சிரித்தாள்.

“சரி எதுக்கு ரோடுலே நின்னுண்டு பேசணும்? கார்லே போலாம் வா” என்றான். அவன் டிரைவர் சீட்டில் உட்கார்ந்து கொண்டான். அவள் முன் சீட்டில் உட்கார்ந்து கொண்டாள்.

“நிஜமாவேதான் கேக்கறேன். எப்படி இவ்வளவு மோசமா உன் உடம்பு இருக்கு? ஏதாவது ஹெல்த் பிராப்ளமா?”

ஒரு நிமிடம் அவள் மௌனம் சாதித்தாள். பிறகு அவனைப் பார்க்காமல் “மனசு உடைஞ்சா உடம்பும் உடைஞ்சுதானே போகணும்?” என்றாள்.

அவன் வண்டியை இடது பக்க ஓரமாகச் செலுத்தி நிறுத்தி விட்டான்.

அவள் தன் மணவாழ்க்கையை அந்த ஒரு வரியில் சுருக்கி விட்டதை அவன் பிரமிப்புடன் பார்த்தான்.

ஆனால் எதையும் எதற்காகச் சுற்றி வளைத்துப் பேச வேண்டும்?

தம்பு அவளைப் பார்த்து “அப்ப நரகத்திலேந்து வெளியிலே வந்துடு. என் கிட்டே சொர்க்கமில்லே. அதை நீ எதிர்பார்க்கிறவளும் இல்லேன்னு எனக்குத் தெரியும்” என்றான்.

அவள் அவன் கண்களைச் சந்தித்தாள்.

“இதை நீ அன்னிக்கே எங்கப்பா கிட்டே சொல்லிட்டு என்னை ஏன் தரதரன்னு இழுத்துண்டு போகலே?” பேசிக் கொண்டிருக்கும் போதே அழுகை வெடித்து வர அவள் கைகள் கண்களில் பதிந்தன.

தம்பு அவள் கைகளை முகத்திலிருந்து எடுத்தான். அவள் கர்சீப்பை எடுத்துக் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

சுதாமதி அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்தவள் பேச்சை நிறுத்தி விட்டாள்.

“இன்னிக்கிப் போய்ப் பாத்தேங்கிறியே? என்ன சொல்றதுக்குப் போனே?”

சுதாமதி உடனே பதில் சொல்லி விடவில்லை. ‘ஒரு தப்பை எங்கப்பா செஞ்சு வச்சார். ரெண்டாவது தடவையா அதையே நான் செய்யறதாயில்லே. நீ ரொம்ப நல்லவன். என்னோட சிநேகிதன். எனக்கு உன்கிட்டேயே, இல்லேன்னா உனக்குத் தெரிஞ்சவா கிட்டேயே ஒரு வேலை பண்ணிக் கொடு. நானும் பி.காம்.னு ஒண்ணைப் படிச்சு வச்சிருக்கேன். கணக்கு எழுதறேன். எங்கப்பாம்மா என்னை அவாளோட வச்சிக்கிறேன்னா அவளோடயே இருந்துண்டு வர்ற சம்பளத்தை எங்கப்பா கையிலே கொடுக்கறேன். அவர் கடனை அடைக்கறதுக்கு அது ஒரு அணில் பங்கா இருந்துட்டுப் போகட்டும்னு சொல்லறதா இருக்கேன்’ என்று மனதிற்குள் நினைத்தாள்.

அம்மா அவள் பதிலுக்கு காத்திருக்க முடியாதவள் போல “என்னவோ கடவுள் இப்பவாச்சும் கண்ணைத் திறந்து பாக்கறானே” என்றாள்.

சுதாமணி திடுக்கிட்டு அம்மாவைப் பார்த்தாள். அவளிடமிருந்து இப்படி ஒரு பேச்சு வருமென்று அவள் எதிர்பார்க்கவில்லை.

“என்னம்மா சொல்றே?”

“ஏன், தமிழ்லேதானே சொன்னேன்” என்றாள் அம்மா பதிலுக்கு.

யாரோ வாயைக் கட்டிப் போட்டது போல சுதாமதி பேசாமலிருந்தாள். பிறகு சமாளித்துக் கொண்டு “அன்னிக்கி சீதாவுக்கு வராத கஷ்டமான்னு எல்லாம் பேசினே. இப்போ நான் சீதாவா உன் கண்லே படலியா?” என்று கேட்டாள். ஆனால் அவள் குரலில் நிலவிய அமைதி அவளுக்கே ஆச்சரியத்தை அளித்தது.

அம்மா அவளைப் பார்த்துச் சிரித்தாள். “அன்னிக்கி உன்னை ஜனகனோட பொண்ணாப் பாத்து உங்கப்பா மேலே கோபப்பட்டேன். ராமசாமிதான் ராமன் இல்லையே. அதனாலே நீயும் இப்போ என்னோட சுதாமணி மட்டும்தான்.”

அம்மாவின் லாஜிக்கைப் பார்த்து சுதாமணிக்குச் சிரிப்பு பொங்கிக் கொண்டு வந்தது. வாய் விட்டுச் சிரித்தாள். அம்மாவின் கழுத்தைக் கட்டிக் கொண்டு “சுப்புலெச்சுமி, நீ ரொம்பப் பொல்லாதவடி!” என்று சொல்லி விட்டு மறுபடியும் சிரித்தாள்.