பதாகை 18 மே 2015

பொதுவாக கவிதைகள் குறித்த ஒரு தெளிவைப் பார்ப்பது அரிதாக இருக்கிறது. “இது எப்படி கவிதையாகிறது?” என்ற கேள்வி தமிழைப் பொறுத்தவரை நம்மை ஒரு ஜென் நிலைக்குக் கொண்டு செல்லும் தருணங்களை வெளியில் சொன்னால் மரியாதையில்லை. என்றாலும், கவிதைகள் எழுதப்படுகின்றன, வாசிக்கப்படுகின்றன. ஏதோ ஒரு தீவிர உந்துதல் நம்மையெல்லாம் கவிதை எழுத வைத்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் விரைவில் தமிழ் கவிதை தன் வடிவைக் கண்டடையக்கூடும் என்று நம்பச் செய்கிறது- அல்லது, நாம் அதன் வடிவை புரிந்து கொள்வதும் சாத்தியப்படலாம்.

இவ்வாரம் ஐந்து கவிதைகள் பதாகையின் பக்கங்களை அலங்கரிக்கின்றன.

யாரும் அற்ற ஒரு புனித கணத்தில்/ அது அவன் ஆனது.” என்று துவங்கும் அரிஷ்டநேமியின் கொள்ளேன் எனில் கவிதையின் இயங்குதளம் தத்துவ விசாரம் என்று நினைக்கிறேன். “அவன் ஆன காலம் முதல்/ பசி அவனைத் தின்னத் தொடங்கியது.” என்று வலுவாகத் தொடரும் கவிதை இறுதிவரை தன் ஆற்றலைத் தக்கவைத்துக் கொள்கிறதா என்பதை வாசகர்களே தீர்மானிக்க வேண்டும்.

ஒவ்வொரு கவிதை முயற்சியும் ஒரு சோதனை முயற்சி என்றாலும் சிகந்தர்வாசியின் கவிதைகள் குறிப்பிட்ட ஒரு பார்வையை வெளிப்படுத்தும் விழைவில் உருவாகிவருகின்றன. வெற்றி தோல்விகளுக்கு அப்பாற்பட்ட இவரது முயற்சிகளில் “குடும்ப ஃபோட்டோ” ஒரு மைல்கல் என்று சொல்ல வேண்டும். தனக்குரிய குரலையும் தன் கவிதைக்குரிய வடிவத்தையும் அடைந்துவிட்ட நிறைவில் அவர் இங்கு சற்று இளைப்பாறலாம்- தனிப்பட்ட முறையில் இக்கவிதையை அவர் ஒரு சாதனையாகக் கொண்டாடலாம்- அதற்கான உரிமையை அவர் அடைந்துவிட்டார்.

பின்லாந்தில் இருக்கிறார் என்பதைத் தவிர சோழகக்கொண்டல் யார் என்ன என்று தெரியாது. ஆனால், ஒரு கவிஞனை அடையாளப்படுத்த இது போன்ற குறைந்த பட்ச தகவல்கள் மட்டுமே போதுமானவை. மிச்ச விஷயங்களை கவிதை பார்த்துக் கொள்ளும். “எனைக்/ கவ்விச்சூழ்ந்திருக்கும்/ காலநாகத்தின்/ நடுக்கண்டத்தில்/ நான்” என்று கவித்துவ கற்பனையின் உச்சத்தில் துவங்கினாலும் உலகின் மறுமுனையில் வீடு என்ற தலைப்பும், இடையில் வரும் “படுக்கை/ விரிப்பில்/ சிறு/ கலைவும் இல்லை” என்ற அடிகளும் கவிதைக்குள் நுழைய ஒரு ஜன்னலைத் திறந்து கொடுக்கின்றன. கவிதையின் ஒவ்வொரு அறையையும் ஆற அமர சுற்றிப் பார்க்கும் வாசகர்கள் தம் பொழுதை வீணடித்திருக்க மாட்டார்கள்.

தொடர்ந்து கவிதைகள் எழுதிவந்த அனுகிரஹா இடையில் சிறுகதைகள் எழுதப் புகுந்தார்- கட்டுரைகள் எல்லாரும் எழுதுவதால் அதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதில்லை. நாஞ்சில் நாடன் சிறப்பிதழையொட்டி மீண்டும் கவிதைகள் எழுதத் துவங்கியிருப்பது தெரிகிறது. அறையும் மழை கவிதையைப் பார்க்கும்போது, “அடடா, இதுதான் தமிழ்க்கவிதை” என்று சொல்லத் தோன்றுகிறது. புற அனுபவங்களையும் அக உணர்வுகளையும் ஒன்று போலாக்கிய படிமங்களை மொழியின் தளத்துக்கு நகர்த்திக் கொண்டுசெல்வது நவீன தமிழ்க்கவிதைகளில் மேலோங்கியிருக்கும் ஒரு யத்தனமாகத் தெரிகிறது.  அனுகிரகாவின் கவிதை இந்த லட்சியக் கனவில் பங்கேற்கிறது.

காஸ்மிக் தூசி தொடர்ந்து சில வாரங்களாய் அருண் கொலாட்கரின் கவிதைகளை மொழிபெயர்த்து வருகிறார்- காட்சிகளைச் சொற்களில் சித்தரிப்பதில் இவருக்கு ஒரு நகைச்சுவையும் நகைமுரணும் கைகூடுவதைப் பார்க்க முடிகிறது. இவரது கவிதைகள் குறித்து காஸ்மிக் தூசி விரைவில் ஒரு கட்டுரை எழுத வேண்டும்- அதுவரை விளக்கங்களின் சுமையேற்றப்படாத நிலையில் நம் வாசிப்புக்கு, மலைகள் காத்திருக்கின்றன.

வழக்கமாக கவிதைகளை ஒற்றை வாக்கியத்தில் முகப்புப் பக்க அறிமுகக் குறிப்புகள் கடந்து சென்றுவிடுவதாக இருந்த குறை நிவர்த்திக்கப்பட்டுவிட்டது என்று நினைக்கிறேன். மற்றபடி ஒவ்வொரு படைப்பு குறித்தும், அதிலும் கவிதைகளுக்கு, எப்போதும் இவ்வளவு பெரிய அறிமுகம்  .தேவையில்லைதான்.

பதாகையில் சிறுகதைகள் வருவது தற்போது அருகியுள்ளது. ஆனால் இந்த வாரம் அனுகிரகாவின் நேற்றிரவு என்றச் சிறுகதை அந்த வெற்றிடத்தைப் போக்குகிறது. ஐடி துறை பெண்களின் அன்றாட வாழ்வை விவரிக்கும் இவரது சிறுகதைகளுக்கு அழகியலுக்கும் இலக்கிய பெருமதிப்புக்கும் அப்பால் முக்கியமான ஆவண மதிப்புண்டு. அனுகிரகாவின் சிறுகதைகளைத் தொடர்ந்து வாசித்து வருபவர்க்ள இதை அறிந்திருக்கக்கூடும், அறியாதவர்கள் நேற்றிரவில் துவங்கலாம்.

வண்ணக்கழுத்து பற்றி என்ன சொல்வது? மாயக்கூத்தனின் துல்லியமான மொழிபெயர்ப்பிலும் மிகையற்ற தமிழிலும் தொடரும் இந்தக் கதை வாசக கவனத்துக்கு உரியது- படித்துப் பாருங்கள், போர் மூண்டது. 

இவை தவிர, இந்தோனேஷிய இலக்கியத்தை மொழிபெயர்த்தல் என்ற மொழிபெயர்ப்பு கட்டுரையும் இவ்விதழில் இடம் பெறுகிறது. “எல்லாம் முடிந்தபின் பார்க்கும்போது எந்த ஒரு மாபெரும் தேசமும் தன் இலக்கியத்தையும் அதன் படைப்பாளிகளையும் மதித்து பெருமைப்படுத்தியதாகவே இருந்திருக்கிறது என்பதை அறிகிறோம்.” என்ற இதன் இறுதி வாக்கியம் நம் சிந்தனைக்குரியது.

சிறுகதைச் சிறப்பிதழ் குறித்த அறிவிப்பு விரைவில் வரவிருக்கிறது, அதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன.

நண்பர்கள் தங்கள் படைப்புகளை editor@padhaakai.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். அல்லது, தொடர்பு கொள்ள இந்தப் படிவத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.