அகரமுதல்வன்

புதிய குரல்கள்: எழுத்தாளர் அகரமுதல்வனுடன் ஒரு நேர்முகம் – நரோபா

நரோபா

பிறப்பு /படிப்பு/ குடும்பம் பற்றி ?

என்னுடைய மிகச்சிறிய வயதுகள் இடப்பெயர்விலேயே வளர்ந்தன.எறிகணைகள் வீழ்ந்து வெடிப்பதும், உலங்குவானூர்திகள் மேலிருந்து சுடுவதும்தான் எனது சிறியவயதின் நினைவுகளாக அடர்ந்து நிற்கிறது. நான் முதன்முறையாக ஒரு தொகையான சனங்களின் பிணங்களை இடப்பெயர்வு ஒன்றில் நடந்துகொண்டே பார்த்தேன். அந்த இடத்தைவிட்டு அம்மா என்னை மிகவேகமாக இழுத்துக்கொண்டு ஓடினாள். அம்மா முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக் களத்தில் என்னை எந்த திசைக்கு இழுத்துக் கொண்டு ஓடினாலும் எங்கும் பிணங்களே நிறைந்திருந்தன. இந்த இரண்டு சம்பவங்களுக்கு இடையேதான் என்னுடைய பள்ளிக்கூட வாழ்வும் இருக்கிறது.எத்தனை எத்தனை ஊர்கள் எத்தனை பள்ளிக்கூடங்கள் பிறகு அவையே குண்டுத்தாக்குதலால் தகர்க்கப்பட்டும் இருக்கின்றன.எனக்கு பள்ளிக்கூடப் படிப்பின் மீது இருந்த ஒருவிதமான ஒவ்வாமையும் பிடிப்பின்மையும் தாண்டியும் எழுதத் தெரியும் என்கிறவரை படித்துவிட்டேன்.

முதல் கதை/ கவிதை எப்போது பிரசுரம்? எழுத வந்தது எப்படி? எழுத்தாளன் என எப்போது உணர்ந்தீர்கள்?

எழுத வந்தது எப்படியென்று நானறியேன். ஆனால் எனக்கு தேவாரப் பதிகங்கள் மீது வியப்பு தோன்றியதன் பிறகே எல்லாவற்றையும் உற்றுக் கவனித்தேன்.

“யாரொடு நோகேன் ஆர்க்கெடுத் துரைப்பேன் ஆண்டநீ அருளிலை யானால்
வார்கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய்
வருகஎன் றருள்புரி யாயே”

இப்படியாக முடியும் திருவாசகம் எனக்குள் போய் நின்றது.பிறகு பதிகங்களுக்குள்ளேயே உழன்றேன். சைவ இலக்கியங்கள் தமிழ் மொழிக்கு ஞானப்பால் தந்திருக்கின்றன என்று தெரியுமளவுக்கு ஓரளவு அதிலேயே கசிந்து கிடந்தேன். அதன் விளைவாக என்னுடைய பத்தாவது வயதிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கியிருந்தேன்.அன்றைய காலகட்டத்தில் கவிஞர் புதுவை இரத்தினதுரையின் கவிதைகளும், காசி ஆனந்தனின் கவிதைகளும் என்னை வெகுவாகப் பாதித்து உசுப்பின. இருவரின் கவிதை நடைகளையே நான் பின்தொடர்ந்தேன். எனது கவிதைகளை மேடைகள்தான் முதலில் வெளியிட்டன. நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டிருக்கும் மேடைகளில் கவிதை வாசிப்பிற்கு தரப்பட்ட வாய்ப்புக்களை நான் தவறவிடவில்லை. அடிப்படையில் என்னுடைய தன்னியல்பான கலையார்வம் என்பது கவிதை, மற்றும் நாடகத்தில் தான் இருந்தது.நிறையக் கதைகளையும், கவிதைகளையும் ஏதேவொரு பதுங்குகுழியில் கைவிட்டுவிட்டேன். அவைகளின் இரத்தப் பிசுபிசுப்பும் சூடும் நான் மட்டுமே அறிந்தது. புலம்பெயர்ந்து தமிழ்நாட்டிற்கு வந்ததற்கு பிறகு சில வருடங்கள் கழித்து எழுதத் தொடங்கினேன். கவிதைகளை எழுதுகிற மொழியின் வல்லபம் என்னிடம் தகித்துக் கிடந்தது. கவிதைகளை எழுதிக் கொண்டிருந்த காலங்களில் சிறுகதைகளை எழுதடா தம்பி என்று இந்தப்புலம்பெயர்வு வாழ்வில் நான் பெற்ற மகத்தான சகோதரர்களில் ஒருவரான எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார் சொன்னார். தோழர் தியாகுவும் ஒரு கூட்டத்தில் என்னிடம் கோரிக்கை விடுத்தார். எழுத்தாளர் வேல ராமமூர்த்தி அவர்களோடு ஒரு படப்பிடிப்பில் இருந்த சில நாட்களில் அவர் எனக்கு முன்வைத்துக் கொண்டிருந்த ஒரு கோரிக்கை சிறுகதை எழுதுங்கள் முதல்வன் என்பதுதான். எழுதுவதற்கு திட்டமிட்டு இருந்தாலும் தாமதித்துக் கொண்டிருந்த சிறுகதைகளை பெரியவர்களின் உந்துதலில் எழுதத் தொடங்கினேன். என்னுடைய “பைத்தியத்தின் தம்பி” என்கிற முதல் சிறுகதையை தமிழ்நாட்டின் “உயிர் எழுத்து” பத்திரிக்கை வெளியிட்டது.

ஆதர்ச எழுத்தாளர் தமிழில், உலக இலக்கியத்தில்?

அடிப்படையில் நானொரு வாசிப்பாளன். இலக்கியங்களை தேடிக் கண்டடைகிற சுகம் அலாதியானது. அப்படியான பயணத்தில் தமிழ் மட்டுமே தெரிந்திருக்கும் ஒருவனாக இருப்பதால் ஆங்கில நூற்களை வாசிக்க முடியாத கவலையும் இருக்கிறது. நான் ஆதர்ச எழுத்தாளர்கள் என்று குறிப்பிடும்படியாக எவருமில்லை. ஆனால் சிலரின் எழுத்துக்களை நான் தொடர்ச்சியாக படித்துக் கொண்டிருக்கிறேன். என்னளவில் அவர்களின் எழுத்துக்கள் புதிய உலகில் என்னை சங்கமிக்கச் செய்கின்றன. ஆதலால் நான் எவற்றையும் தட்டிக் கழிப்பதில்லை. அசலான வாசகன் என்பவன் ஒரு பேரலையைப் போல ஓய்ந்துவிடாமல் கொந்தளிக்க வேண்டும். இந்த வாசக அவதாரத்தில் நிலையான அமைதியோ ஓய்வோ அவனுக்கில்லை. என்னை வசீகரம் செய்த எழுத்தாளர்களின் பெயர்களை குறிப்பிட்டால் அது நீளமான பட்டியலாக இருக்கும்.

உங்கள் கதைகளுக்கு பொதுவாக எத்தகைய கவனிப்பும், விமர்சனமும் கிடைத்துள்ளது?

பொதுவாகவே ஈழ இலக்கியத்தை தொடக்க காலத்தில் வாசிப்பவர்கள் ஈழப் போராட்டம் பற்றி அறிந்தவர்களாகவே இருந்து வந்தார்கள். ஆனால் இந்தக் காலத்தில் அதனைத் தெரிந்துகொள்ளவே ஒரு பெருந்திரளானோர் ஈழ இலக்கியங்களை படிக்கிறார்கள். என்னுடைய கதைகளில் வருகிற சம்பவங்களும் பாத்திரங்களும் ஒரு வீரயுகத்தின் சுவடுகள். அவர்களின் உடல்மொழியில் இருந்து நிலத்தின் வாசனை வரைக்கும் என்னுடைய இலக்கியங்கள் பதிவு செய்கின்றன. எழுச்சியும், உக்கிரமான யுத்தமும், களச்சமர்களும், போரில் தமிழர் தரப்பு இறுதி வரை கடைபிடித்துவந்த ஒழுக்கமும், விடுதலைக்காய் நாம் செய்த தியாகமும், இயக்க அத்துமீறல்களையும், அரசினால் எம்மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையையும், அதன் பின்னர் ஆண் பெண் என இருபாலருக்கும் நடந்த உடல் சித்ரவதைகளையும் இரத்த சாட்சியாக எழுதுகிறேன். அதற்கான கவனமென்பது எனது கதைகளுக்கானது மட்டுமென நான் புரிந்து கொள்ளவில்லை. அப்படியான காலகட்டத்தை வாசகர்கள் அரசியல் ரீதியாக புரிந்துகொள்ள முனைகிறார்கள். தமிழர்களின் இரத்தமும் கண்ணீரும் தோய்ந்த போராட்ட வாழ்வையும், அவர்களின் அறம் கொண்ட போரையும் வரலாற்றில் தெரிந்துகொள்ள விரும்புபவர்களின் கவனிப்பு எனது கதைகளுக்கு கிடைத்திருக்கிறது. நான் எதிர்கொண்டிருக்கும் விமர்சனங்கள் என்னளவில் சில கோஸ்டிகளால் உருவாக்கப்பட்டமை. அது குறித்தெல்லாம் எனக்கு கருத்துமில்லை கவலையுமில்லை.

இசை/நடிப்பு/ பயணம்/ சினிமா என உங்களின் பிற ஆர்வங்கள் என்ன?

இப்போது நிறைய எழுதவேண்டுமென்று திட்டமிட்டிருக்கிறேன். கர்நாடக சங்கீதம் கற்றுக்கொண்டு பாதியிலேயே நிறுத்திவிட்டேன். எழுதுவதற்குத்தான் மனம் கொதிக்கிறது. கடந்து வந்த நாட்களுக்கு நினைவுகளால் பயணம் செய்கிறேன். அங்கு போவதே பயங்கரமாய் இருக்கிறது. நெஞ்சு பதைபதைக்கிறது. நினைவின் கால்களில் குழந்தைகளின் மாம்சம் தட்டுப்படுகிறது. அய்யோ நந்திக்கடலே!

குறிப்பாக சினிமாவில், முழுநீள திரைப்படம் இயக்க உள்ளீர்கள். அந்த முயற்சிகளைப் பற்றி?

தமிழ்த்திரையுலகில் ஒரு திரைப்படத்தை எடுப்பதற்கு எந்தப் பின்னணியும் இல்லாமல் இருக்கிற ஒருவன் படக்கூடிய அத்தனை பாடுகளையும் இப்போது அனுபவிக்கிறேன். திரைப்படத்திற்கான திரைக்கதையை எழுதி முடித்திருக்கிறேன். தமிழின் மிக முக்கியமான எழுத்தாளர் ஒருவர் வசனம் எழுதுகிறார். இந்த ஆண்டிற்குள் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகிவிட வேண்டுமென்று மிகத் தீவிரமாக உழைக்கிறேன்.

முதன்மையாக நீங்கள் கவிஞரா அல்லது சிறுகதை எழுத்தாளரா? அல்லது இரண்டுக்கும் எந்த வேறுபாடும் இல்லையா? கவிதை சிறுகதைகளின் மீது எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது?

நான் கவிஞனும் அல்லன்; எழுத்தாளனும் அல்லன். நானோர் ஏதிலி. விடுதலைக்காய் காத்திருக்கும் ஒரு தலைமுறையின் உயிரி. என்னுடைய சிந்தையின் உள்வீதியெங்கும் நான் விட்டுவந்த எனது வீடும் கோவிலும் ஊர் சனங்களும் உலாத்திக்கொண்டே இருக்கின்றனர். உலகில் எந்தத் தரையில் நித்திரை கொண்டாலும் கனவில் குண்டுகளுக்கு பயந்து ஓடிக்கொண்டே இருக்கிறேன். நான் கவிதைகளை எழுதத் தொடங்கினேன். பிறகு கதைகளை எழுதத் தொடங்கினேன். ஆனால் இவை இரண்டிற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. கவிதையை மிக லேசில் எழுதிவிட்டு அதிலிருந்து கழல முடியாது. அவை மீண்டும் மீண்டும் எழுதியவனையே தாக்கும். என்னுடைய கவிதைகள் வார்த்தைகளால் கட்டுமானம் செய்யப்படும் கலையல்ல. அதற்குள் ஜீவிதத்தின் தீனக்குரல் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அதனை நெய்துமுடிப்பதே ஒரு சித்ரவதை. கூடவே மீண்டும் படுகொலைக்கு உள்ளாவது போலானது. கதைகள் சற்று இளைப்பாறல் என்று சொல்லலாம். கவிதையும் சிறுகதையும் அர்த்தத்தில் வேறுவேறானவை. ஆனால் கவிதையிலிருக்கும் ஓரிழை சிறுகதைக்குள் சேர்கிறபோது கதைக்குள் ஜொலிப்பின் ஜ்வாலை கூடுகிறது என்று நான் அனுபவிக்கிறேன். என்னுடைய கதைகளில் நான் கவிதை எழுதுவதாகக்கூட சிலர் சொல்லுவதுண்டு.அதற்காக நான் அதனைக் கைவிடுவதில்லை.

உங்கள் கதைகளில் உவமை பயன்பாடு சற்று மிகையாகவும் பொருத்தமற்றதாகவும் இருப்பதாக கூறப்படும் விமர்சனத்தைப் பற்றி என்ன எண்ணுகிறீர்கள்? அது உங்கள் தனித்தன்மையா?

உவமைகள் அதிகம் கொண்டு என்னுடைய சில கதைகள் இருக்கின்றன. இருக்கவும் செய்யும். அதுவொன்றும் குற்றமில்லை. நான் ஒரு கதையின் ஆன்மாவை உவமையால் அழித்தொழிக்கமாட்டேன். பல கதைகளில் உவமையை உரித்தும் எழுதுகிறேன். ஆனால் பொருத்தமற்று உவமையை பயன்படுத்துவதாக இதுவரைக்கும் விமர்சனத்தை கேட்டதில்லை. நீங்கள் கூட ஒரு அமர்வில் அதிகமாக இருக்கிறது என்று சொன்னீர்கள். அடிப்படையில் “உவமை”யை நான் தீண்டாமைக்கு உட்படுத்த விரும்பவில்லை. பிறகு அவைகளை அதிகமாக பயன்படுத்துவதாக எனக்கு இன்னும் தோன்றவுமில்லை. உண்மையில் சொல்வதனால் அதனை நான் எனது தனித்தன்மை என்று புரிந்துகொள்கிறேன். என்னுடைய கதைகளில் கலைத்தன்மையும் அழகியலும் குறைவாக இருக்கிறது என்று கூட சில எழுத்தாளர்கள் சொல்லக் கேட்டதுண்டு. முள்ளிவாய்க்காலிலிருந்து வந்து கலைத்தன்மையைக் காப்பாற்ற எழுதவில்லை என்று எனக்குத் தீர்மானமாய் தெரியுமென்பதால் நான் குழம்பிப் போவதில்லை.

உங்கள் கதைகளில் சமநோக்கு இல்லை. புலி ஆதரவு கருத்தியல் வலுவாக, ஏறத்தாழ பிரகடனமாக உள்ளதாக கூறப்படும் விமர்சனத்தைப் பற்றி?

நான் உண்மைகளை எழுதுகிறேன். ஊழிக்காலத்தின் ஒவ்வொரு கணங்களையும் அதிலிருந்து மீண்டவன் என்கிற வகையில் எழுதுகிறேன். நான் எனது மண்ணுக்காகவும் விடுதலைக்காகவும் போராடிய விடுதலைப் போராளிகளை ஆதரிப்பேன். அது என்னுடைய தார்மீகப் பொறுப்பு. புலிகள் இயக்கம் செய்த தவறுகளையும், குற்றங்களையும்கூட என்னுடைய கதைகள் பேசுகின்றன. ஆனால் அவர்கள் செய்யாத குற்றங்களை எல்லாம் செய்தார்களென பொய்யுரைக்க முடியாது. நான் விடுதலைப் போராளிகளான புலிகளை என்னுடைய இலக்கியத்தில் பிரகடனம் செய்கிறேன், ஏனெனில் நான் வாழ்ந்த காலத்தின் தியாகிகள் அவர்கள். நிலத்தின் விடுதலைக்காய் போராடியவர்களை நான் இன்னும் இன்னும் போற்றுவேன். எனது விடுதலையை பிரகடனம் செய்தவர்கள் அவர்கள்.அவர்களை நானும் என் இலக்கியத்தில் பிரகடனம் செய்வேன்.

புலி எதிர்ப்பாளர்களை உங்கள் கதைகள் ஒற்றை நிறமுடையவர்களாக காட்டுவதாக தோன்றுகிறது. ஆதரவு- எதிர்ப்பு இருமையை கடந்து மகத்தான மானுட அற மோதல்களை களமாக்க தவற விடுவதாக எனக்கொரு எண்ணம் இந்த விமர்சனத்தைப் பற்றி உங்கள் பதில் என்ன?

உங்கள் கேள்வியே என்னை கொதிப்படையச் செய்கிறது. புலி எதிர்ப்பாளர்கள் என்று நீங்கள் வகைப்படுத்துபவர்கள் எழுதும் கதைகளை ஒரு ஈழத்தமிழனாக ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. புலிகள் சனங்களுக்கு கிளைமோர் வைத்தார்கள் என்று எழுதுகிறவன் எப்படி இந்தக் காலத்தில் ஈழ எழுத்தாளன் என்கிற வகைமைக்குள் கொண்டுவரமுடியும். புலிகளை எதிர்க்கிறேன் என்கிற பேரில் ஒரு அரசு உலகோடு சேர்ந்து செய்த இனப்படுகொலையை சமன் செய்யத் துடிக்கும் அநீதியாளர்கள் அனைவருக்கும் ஒரு நிறம்தான். புலிகள் சனங்களிடம் தங்கத்தை வாங்கி அதில் துப்பாக்கி ரவைகள் செய்தனர் என்று எழுதப்படும் கதைகளை எனது தலைமுறை ஏற்றுக்கொள்ளாது. புலி எதிர்ப்பு வாதம் தன்னை நிரந்தரமான ஒரு சக்தியாக தக்கவைக்க விரும்புகிறது. ஆனால் அவர்களால் பேருண்மையை எதிர்கொண்டு நிலைக்க முடியவில்லை. ஆதரவு –எதிர்ப்பு இருமையைக் கடந்து மானுட அறமோதல்களை பேசவில்லையா? நான் பேசுகிறேன். இன்றைய காலகட்டத்தில் புலியெதிர்ப்பு வாதிகளின் கதைகளுக்கு எதிராக தமிழகத்தில் புலம்பெயர்ந்து வாழ்ந்துகொண்டு எழுதுவது என்பதே மானுட அற மோதல்தான் என்பதை உங்களால் (தமிழக அறிவுஜீவிகள்) புரிந்துகொள்ள முடியாது என்று நினைக்கிறேன்.

அனுபவங்களை கதையாக்கும்போது உள்ள சவால் என்ன, உணர்ச்சிகரமான கதைகள் மெலோடிராமாவாக எஞ்சிவிடும் அபாயம் உண்டே?

எல்லா அனுபவங்களையும் எழுதிவிடுகிற காலம் எனக்கு இன்னும் வாய்க்கவில்லை. அவலங்களை எழுதவே முடியவில்லை என்பது பேரவலம். ஆனால் எழுதும் கதைகளில் உணர்ச்சிகரமான நிலையை நான் அடைகிறேன். அதற்காக மென்சோக/மென்இன்ப நாடகமாக அவைகள் எஞ்சிவிடுமென நான் அஞ்சுவதில்லை. அப்படி சில கதைகள் உருவானாலும் அதொன்றும் சமூக குற்றமோ, இலக்கியத் தவறோ கிடையாது. எல்லோர் வாழ்க்கையிலும் மெலோடிராமாக்கள் இருக்கவே செய்கின்றன.

சமகால ஈழ இலக்கியத்தைப் பற்றிய உங்கள் பார்வை என்ன?

இனி வருகிற நூற்றாண்டுகளில் தமிழ் இலக்கியத்தின் செழுமையும், பெருமையும் தமிழீழர்களால் எழுதப்படுகிற படைப்புக்களினாலேயே பெருகப் போகிறது. போரும் போர் சார்ந்த வாழ்வும் தமிழ்மொழியின் நவீன இலக்கியத்திலும் ஒரு புறநானூறாக இப்போது எழுகிறது. தமிழ் மொழிக்கு புதிய சொற்களை ஈழத்தமிழரின் போரிலக்கியம் தந்து கொண்டே இருக்கிறது. ஆனால் ஈழத்தமிழ் இலக்கியம் என்பது ஒரு அரசியல் பூர்வமான சொல்லாடல். அதுவும் மறுக்கப்பட்ட நீதிக்காய் மானுடத்தின் குரலாக எழுகிற எழுத்து ஊழியம். வெறும் ஈழத்தமிழனாக பிறந்திருப்பதாலேயே அவர் எழுதுவதை ஈழ இலக்கியம் என்கிற வகைப்பாட்டிற்குள் கொண்டுவர முடியாது என்பது எனது கருத்து. நாம் இந்த நூற்றாண்டில் சந்தித்த மாபெரும் மனிதப் படுகொலையின் பின்னர் ஒரு எழுத்தாளனுக்கு புனைவுத்திறனைப் பார்க்கிலும் அறம் முக்கியமான தகமையாக இருக்கிறது. இந்தப் புள்ளியில் இருந்துதான் நீங்கள் சரியான ஈழ இலக்கியத்தை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்.தமிழிலக்கியத்தின் போரிலக்கியமும் பேரிலக்கியமும் ஈழ இலக்கியங்கள்தான்.

முக்கியமான ஈழ இலக்கிய ஆக்கங்கள் – ஒரு பட்டியலிட முடியுமா?

பஞ்சமர் – டானியல்
ஒரு பனஞ்சோலைக் கிராமத்தின் கதை- என்.கே ரகுநாதன்
பெண் போராளிகள் எழுதிய கவிதைகள்/கதைகள்
சிவரமணி கவிதைகள்
செல்வி கவிதைகள்
கவிஞர் புதுவை இரத்தினதுரையின் கவிதைகள
நிலாந்தனின் கவிதைகள்
தீபச்செல்வன் கவிதைகள்
எஸ்.போஸ் படைப்புக்கள்
எனது நாட்டில் ஒரு துளிநேரம் – ந.மாலதி
காலம் ஆகிவந்த கதை –அ.இரவி
மலைமகள் கதைகள்
மாயினி ,வரலாற்றில் வாழ்தல் –எஸ்.பொ
சேரன் கவிதைகள்
சண்முகம் சிவலிங்கம் கவிதைகள்
வ.ஐ.ச ஜெயபாலன் கவிதைகள்
சு.வில்வரத்தினம் கவிதைகள்
க. சச்சிதானந்தன்
அ.யேசுராசா கவிதைகள்
பார்த்தீனியம் –தமிழ்நதி
விடமேறிய கனவு –குணா கவியழகன்
எழுதித் தீராத பக்கங்கள் – செல்வம் அருளானந்தம்
போர் உலா –மலரவன்
ஜெப்னா பேக்கரி –வாசு முருகவேல்
தமிழகத்தின் ஈழ அகதிகள் – பத்திநாதன்

அடுத்தக்கட்ட திட்டங்கள் என்ன?

திரைப்படம் எடுக்கும் முயற்சியில் இருக்கிறேன். என்னுடைய கதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யும் பணியில் தீவிரமாய் இருக்கிறேன். ஒரு சிறந்த மொழிபெயர்ப்பாளர் மிக விருப்பத்தோடு என்னுடைய கதைகளை மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறார். மிக விரைவில் ஆங்கிலத்தில் என்னுடைய கதை வெளியாகிவிடும்.

ஏன் எழுதுகிறீர்கள் எனக் கேட்டால் என்ன சொல்வீர்கள்?

மனுஷத்துவம் அவலப்பட்டு அழிந்துபோன முள்ளிவாய்க்கால் ஊழியிலிருந்து உயிர் பிழைத்திருக்கிறேன். நெம்பிக் கிடக்கும் மானுட சோகத்தை இவ்வுலகிற்கு தெரியப்படுத்த வேண்டுமென்பதில் தீர்மானமாயிருக்கிறேன். லட்சோப லட்ச மக்களை கொன்றும் உயிர் தப்பிய மக்களை நிர்வாணப்படுத்தியும் ஆயுதங்களின் முன் சரணாகதி அடையச் செய்த அநாகரிகமான இவ்வுலகத்தினரோடு நான் உரையாடுகிற தொடர்பு சாதனமாக எனது எழுத்தை வரித்துக் கொண்டிருக்கிறேன். அது மட்டுமில்லை வேடனுக்கும் சிங்கத்திற்கும் நடக்கும் சண்டையில், சிங்கத்திற்கென தனியான வரலாற்றாசிரியன் இல்லையென்றால் வேடன் சொல்வதே வரலாறாகும் என்ற சினுவ அச்சிபியின் வார்த்தையைத்தான் ஒரு தமிழீழனாக நானும் சொல்ல விரும்புகிறேன். வென்றவர்களும்,கொன்றவர்களும் அரச படுகொலையாளர்களுக்கு சார்பானவர்களும் எழுதுகிற இலக்கியங்கள் சனங்களின் இரத்தத்தின் மீதே கட்டியெழுப்படும் பொய்களாகவே இருக்கிறது. நான் அவற்றுக்கு எதிராகவும் ஒரு சமரைச் செய்து கொண்டிருக்கிறேன். எழுத்தென்பது எனக்கு அறம். அறம் வெல்லும் அஞ்சற்க என்பது என் எழுத்தின் வேட்கை. நான் அறத்தின் உயிருக்காக என் ஆயுள் முழுக்க எழுதுவேன்,எழுதுகிறேன்.