(நாம் மாநகர ரயில் அல்லது பேருந்து ஒன்றில் ஏறுகிறோம் என்று வைத்துக் கொள்வோம். இருக்கை காலியாய் இருக்கிறது, ஓடிப் போய் அமர்ந்து ஆசுவாசமடைந்ததும் மெல்ல அதிகரிக்கும் எரிச்சலுடன் கவனிக்கிறோம், நம்மருகில் அமர்ந்திருப்பவர் யாருடனோ தன் மொபைலில் உரக்கப் பேசிக் கொண்டிருக்கிறார். நமக்குச் சம்பந்தமில்லாத விஷயம் மாதிரிதான் இருக்கிறது- யாரோ இரண்டு பேர் சண்டை போட்டுக் கொள்கிறார்கள், ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் பேசும் விஷயத்தின் சுவாரசியம் நம்மையும் உள்ளிழுத்துக் கொள்கிறது- அப்படிப்பட்ட ஒரு கட்டுரை இது, J.D. McClatchy எழுதிய “உயிர்ப்பசி” (Hungry for Spirit) என்ற கட்டுரை, Boston Review என்ற தளத்தில் வெளிவந்தது. அதன் எளிய மொழிபெயர்ப்பு இது)
இதில் எனக்கு ஏன் இந்த அக்கறை என்பதை முதலில் சொல்லிவிடுகிறேன். ஹரோல்ட் ப்ளூம் தொகுத்த நூலில் நான் எழுதிய ஒரு கவிதையும் இடம் பெற்றிருக்கிறது என்பது மட்டுமல்ல, அவர் எனக்கு ஒரு ஆசிரியரும்கூட, இப்போது யேல் பல்கலைக்கழகத்தில் என் சகாவாகவும் இருக்கிறார். இந்தத் தகவல்களை நான் பாஸ்டன் ரிவ்யூ பதிப்பாசிரியரின் கவனத்துக்குக் கொண்டு வந்தேன். ப்ளூமின் வாதம் குறித்து எதிர்வினை அளிக்குமாறு விடுத்த வேண்டுகோளை அவர் திரும்பப் பெற்றுக்கொள்ள இவை போதுமான காரணங்களாக இருக்கவில்லை. ஆனால் என் சார்புநிலை என்னவென்பதை வாசகர்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன்.
உண்மையில் ப்ளூமின் சர்ச்சைக்குரிய கட்டுரைதான் என்னைப் பின்னோக்கிச் செலுத்தி அட்ரியன் ரிச்சின் தொகுப்பை முழுமையாய் வாசிக்கச் செய்தது- இதற்கு முன் இதைச் செய்யத் தவறியிருந்தேன். நல்ல காத்திரமான தொகுப்பு, “காட்டமான மருந்து” என்று சொல்வது போன்ற காத்திரம் இதில் இருக்கிறது- ஆனால் சிறப்பான தொகுப்பு என்று சொல்ல முடியாது. அதாவது, தொடரின் நோக்கத்துக்கும் நியாயம் செய்வதில்லை, ரிச்சின் உயர்ந்த, ஆத்திர அவசர லட்சியங்களுக்கும் உதவுவதில்லை. (more…)