அடுத்த ரயில்
என்ற கோட்பாட்டை நம்புபவர்
முன்பதிவு செய்பவர்
உரையாடல் மாறி
நேரத்தை கேட்கையில்
சாதுர்யமாய் பேசி
அனுப்பிவைக்கிறார்
எதிர் முகப்பில் உள்ள
உயரதிகாரியிடம்
இரண்டு தலைகொண்ட
ஸ்டேஷன் மாஸ்டரோ
ரயில்பாதை நிர்மாணிக்கப்பட்ட
வருடம் தவிர
இதர காலஅட்டவணைகள்
அனைத்தையும்
நிராகரிக்கும் பிரிவை சேர்ந்தவர்
சந்தேகமான ஒன்றுதான்
என்றாலும்
ரயில்பாதை நிர்மாணிக்கப்பட்ட வருடம்
வெளிவந்த
முதலாவது அட்டவணையை
விளக்கிச்சொல்கிறார்
இடைப்பட்ட வரிகளின் விவரங்களையும்
வாசிப்பதில்
அவருக்கிருக்கும் சுதந்திரத்துடன்.
அது ரகசியமானதொரு சடங்கின்
பகுதி என்பதைப்போலவும்
அதில் எவ்வித தவறுகள் நேர்வதையும்
அவர் விரும்பமாட்டார்
என்பதைப்போலவும்
சூரிய அஸ்தமனத்தை
பார்த்துக்கொள்கிறார்.
சற்று பதற்றத்துடன்
இறுதியாக
ஆம் மற்றும் இல்லை
என்பதற்கு இடையே
ஒருகோடு வரைவதுபோல
தலையசைத்து
பின் சொல்கிறார்
இதுவரை வெளியிடப்பட்ட மற்றும்
இன்னமும் வெளியிடப்படாத
எல்லா கால அட்டவணைகளும்
எல்லா நேரத்திலும்
எல்லா தடத்திலும்
செல்லுபடியாகும்தான்.
கால அட்டவணைகளை பொறுத்தவரை
அவை அனைத்திலும்
உள்ளார்ந்து இருப்பது
ரயில்பாதை நிர்மாணிக்கப்பட்டபோது
அச்சிடப்பட்ட அட்டவணை மட்டும்
என்பதால்,
என்றபின்
சிவக்கின்றன
அவரின் இரண்டு முகங்களும்
ஒரே நேரத்தில்.
000
அருண் கொலாட்கர் எழுதிய The Station Master என்ற கவிதையின் தமிழாக்கம்