ஆதவன் கிருஷ்ணா

கால்பகுதி + இரண்டு வெட்டு

– ஆதவன் கிருஷ்ணா – 

துயரார்ந்த சாலையின்
கசப்பில் சிக்கிக் கொண்ட மதுவிடுதி
ஒன்று தன் கேவலைத்
தொடங்கிற்று

இந்த மனித வாழ்க்கை
சுலபமானது
என்றுளறியது இரண்டு வெட்டுகளுக்கு மேற்பட்டு

பொருத்தமற்ற காலம் வந்த சமயம்
தவறான சந்தர்ப்பத்தில்
இயைந்து வரா சூழலின் சரிவுகளில்
நம் சந்திப்பு ஏன்
நிகழ்ந்திருக்க வேண்டும்
என்ற புலம்பல்
சத்தமானது
கால்பகுதி + இரண்டு வெட்டு
கடந்த போது

மங்கலான முகம்
கசந்த சரக்கு
மந்தமாக்கி
சொஸ்தப்படுத்தும்
சீரான நினைவலையைக்
கட்டுடைத்து
சொற்களின் மரண ஒலிக்குள்
சிக்காமல் செய்யும்
என்றதன்
ஒவ்வொரு சொட்டு மதுவிலும்
தோய்ந்து கிடக்கிறது
அம்மதுச்சாலையின்
தீராவலி

000

ஒளிப்பட உதவி- Amsterdam Art Gallery

இப்பிணம்

  – ஆதவன் கிருஷ்ணா – 

 

இந்த பிணத்துக்கு
என்னுடைய சொற்கள்
கேட்டிருக்கலாம்

அதனால்
மெல்ல அசைகிறது

இந்த பிணம் நடந்திராத
சாலை
மிருதுவும் ஆபத்துமில்லாதது

இந்த பிணத்தின்
நீலம் பாரித்த முத்தங்கள்
தீராதுயரோடு இன்றும்
தனித்தலைகின்றன

இதோடு
சேர்த்துக் கட்டிய
இரவல் பூமாலை
தன் காதலியின் இருளை
மணக்கச் செய்ய
வாங்கிச் செல்லும் பூத்துண்டைப்
போன்றது

பிணமாவதற்கான
முந்தைய பொழுதுகளில்
தீவிர வெயிலொளி படரும்
பந்தலற்ற
தெருவின் புழுதிக்கு
மணல் ஓவியம் வரைய
கற்றுக் கொடுத்ததாம்
இது

கூடுதலாக
பிணமாவதற்கு சற்று முன்பு
என்னொருவனோடு
அரை கிளாஸ்
மேன்சன் ஹவுஸ்
நீர் கலக்காமல்
பகிர்ந்தருந்திக் கொண்டிருந்தது கூட

அதிலும்
அழுகி
நாற்றம் பீடிக்கும் வரை
அது பிணமென்றே ஒப்புக்கொள்ளப்படவில்லை

000

ஒளிப்பட உதவி – Art Lies

பிச்சைக்காரனின் வரவு

 – ஆதவன் கிருஷ்ணா – 

 

எப்பொழுதும் போல
விடியவில்லை நேற்றைய
காலை
காகங்கள் கும்பலாக
கரைந்து
சூழ
வெட்டு ஓடுகளினின்று
ஊசிகளாய் இறங்கிய
மங்கலான வெளிச்சம்
துடைப்பமிடா அலைந்தோடும்
புள்ளித் துகள்களுள்
படரத் துடித்தன
அழைப்பு மணியின்
பித்தானுக்கு சுவர்க்கோழி
பதில் சொன்னது
இராசி பலன் சொல்லிகள்
தேவையற்றுப் போனார்கள்
நீண்டு வந்த இரயில்
வண்டியின் குரல் அடங்கிப்போயிருக்க
காலையில் அபூர்வமாய்
வரவுற்ற
பிச்சைக்காரன் மட்டும்
நிரந்தரமாக வீட்டுக்குள் தங்கிவிட்டான்
சிறுவர்கள் கூட்டமாக முற்றத்திலிட்ட கோலத்தின் மேல்
பீய்ச்சி அடித்த
பெருநீரின் நாற்றம்
அகாலத்தின் கனவொன்றில்
வந்து போனது
என் நம்பிக்கை சரிதான் அங்கு
அவள் கோலமிழந்த காட்சியில்
ஒரு நடிகையைப் போலவே
இல்லை வழக்கம் போல்
இவன் விரல்கள் சூப்பிக்கொண்டு
தவழ்ந்துகொண்டிருந்தான்
புனித சிலுவை அணிந்து
கண்ணாடிப் பெட்டிக்குள் வாழும்
என் கண்களில் இலை முனை வழி சொட்டும் நீரென விழ ஆரம்பித்த
நேரத்தில்
பிச்சைக்காரன் கையளித்து
என்னை
அழைத்துச் செல்கிறான்
மீள இயலா கனவொன்றிற்கு

௦௦௦

 

ஒளிப்பட உதவி – dreamstime

மீன் வியாபாரி 

ஆதவன் கிருஷ்ணா

இரண்டு பெண்கள்
இரண்டு மொழிகளில் பேசியபடி
நூறு நூறு
ரூபாய்களைக் கொடுக்கிறார்கள்
(அவர்களின் நிழல் அசைவுகள்
முத்தமிட்டுப் புணர்வது போல
தரையில் நெளிவதை அவன் கவனித்தான்)

நேரெதிரே
முதியவரின்
கிழட்டு கைத்தடி
மெல்ல அசைந்து மீன் வண்டியை
விட்டு நகர்கிறது

வெறுமையான மதியத்தின்
தெருவில்
நூறு ரூபாய் தாள்களோடு நிற்கும்
மீன் வியாபாரி
விருப்பமற்று வளர்த்த தாடிக்குள்
சில்லரையைத் தேடுகிறான்

சடலங்களைப் போல
வாய் பிளந்து கிடக்கும் மீன்களின்
மீதிருந்த
ஈக்களை விரட்டுகிறான்

சுவாசமற்ற
அதன்
வெறித்த கண்களில்
மழை மேகங்கள்
எவ்வொரு சலனமுமின்றி
நுழைந்து செல்கின்றன

அம்மாவின் வானம்

ஆதவன் கிருஷ்ணா

அம்மாவின் வானத்தில்
சிதையுண்ட
மேகங்களைக் காண்கிறேன்

பொட்டுப் பொட்டாய்
தூர்த்தும் மேகமழைக்குள்
கை நுழைத்துச்
சில்லிடுகிறாள்
(அப்போது துள்ளிக் குதிப்பதற்காகவாவது மழை நீளலாம் என்று தோன்றும்)

தோழிகள்
வெளிர் நீல நிற மழை வானத்தின்
குறுக்காய்
பணிவாய்க் குனிந்து
நிறங்களமைக்கிறார்கள்

அம்மாவின் வானம்
பாதுகாப்பானது
கருணை மிக்கது
வெயிலின் உக்கிரத்தை
திரைப்பது
இரைஞ்சுதலையும் கூடுமானவரை
பரிவோடு அணைத்துக்
கொண்டும் செல்வது
வண்ணாத்திப் பூச்சியின்
மென் வருகையை நினைவூட்டுவது
விளையாடும்
சிறு குழந்தை போல
வெள்ளந்தித்தனமானது

அதில்

கூடும்
குளிர் தரும்
வெண் புகை
அடர்
கரு மேகம்

தாழ்வாய்
உலாத்தும்
கூரலகு தவிட்டு நிற நீள் றெக்கை
கொடும்
பருந்து.