ஆதவன் சிறுகதைகள்

இருப்புக்கும் விருப்புக்கும் இடையிலான இடைவெளி- ‘ஒரு அறையில் இரு நாற்காலிகள்’, ஆதவன் சிறுகதை

வெ. சுரேஷ்

இரு மனிதர்களுக்கிடையேயான நட்பின் அடிப்படை என்ன? ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நட்பு கொள்கிறோமா? அல்லது, நீண்ட காலம் நீடிக்கும் பழக்கம் புரிதலைச் சாத்தியமாக்கி, ஆழப்படுத்தி, நட்பையும் ஆழப்படுத்துகிறதா? சில பேருடன் எளிதில் நட்பு கொள்ள முடிகிறது. சிலரிடம் காரணமே இல்லாமல் விலக்கமே உருவாகிறது. யாரை விரும்புகிறோம், யாரை வெறுக்கிறோம் என்பதற்கெல்லாம் காரணங்கள் உண்டா? அல்லது, முதலில் தோன்றும் பிடித்த/பிடிக்காத  உணர்வுக்கு தர்க்க ரீதியான காரணங்களை நாம் முனைந்து  உருவாக்கிக் கொள்கிறோமா? பலரிடமும், ஏன், எல்லாருடனுமே நட்பாய் பழகவே மனம் ஆசைப்படுகிறது. ஆனால் சிலருடன் மட்டுமே அது சாத்தியப்படுகிறது. விருப்புக்கும் இருப்புக்குமான இந்த இடைவெளியின் காரணங்களைத் துல்லியமாக விளக்கி விட முடியுமா?

அப்படி துல்லியமாக விடை  அளித்து விடமுடியாத கேள்விகளாகவே எனக்கு எப்போதும் தோன்றுபவை இவை. ஆனாலும் மனித மனமும் மனிதனின் காரண காரிய விளக்கத்தை எப்போதும் நாடும் பகுத்தறிவும், எல்லாவற்றுக்கும் ஒரு தர்க்க ரீதியான விளக்கத்தை நாடியபடியே உள்ளன. இருப்புக்கும் விருப்புக்கும் இடையேயான இந்த இடைவெளிதான், இலக்கியத்தின் ஊற்றுக்கண் எனலாம். கலங்கிய நதியென ஓடும் வாழ்வின் ஆழங்கள் வெளிப்படும் தெள்ளிய, ஆனால் கணப்போதைய தருணங்களை மறு உருவாக்கம் செய்து, ஒரு வகையில் அதன் பொருளை நிரந்தரமாக்கி, இருப்புக்கும் விருப்புக்கும் இடையேயான இந்த இடைவெளிகளைப் புரிந்து கொள்ளவே இலக்கியம் உதவுகிறது. தத்துவத்துறையில் Is-Ought Problem என்று 250 ஆண்டுகளுக்கும் மேலாக முடிவின்றி இதுவே பல்வேறு பார்வைகளில் விவாதிக்கப்பட்டு வருகிறது – அறத்தாறு எதுவென்ற கேள்வி இருப்புக்கும் விருப்புக்கும் இடையேயான இடைவெளியை நோக்கும்போது நம்முன் எழுவதைத் தவிர்க்க முடியாது. இலக்கியம் விடை தருகிறதோ, இல்லையோ, கேள்வியை முழுமையாகப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த அத்தனை கேள்விகளுக்குமான பதில்களையும், கேள்விகளையுமேகூட தர்க்கப்பூர்வமாக அலசிப் பார்க்கும் சிறுகதையே ஆதவனின் ‘ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள்’

தில்லியில், ஒரு ‘சர்க்கார் காரியாலயத்தில்’ வேலை செய்யும்,  பகுதி நேர எழுத்தாளராகவும் இருக்கும் கைலாசம், எல்லோரோடும் ‘அட்ஜஸ்ட்’ செய்துகொண்டு வாழும் தகுதி கொண்ட திறந்த மனம் படைத்த ஒரு நவீன மனிதனாகவே தன்னை  உணர்பவர். அலுவலகத்தின் இட நெருக்கடி காரணமாக, அவர் அமர்ந்து வேலை செய்யும் அறையை  இன்னொரு  அலுவலருடன்  பகிர்ந்து கொள்ளும் சூழல் ஏற்படுகிறது. அப்படி அவரது அறைக்குள் வரும் இன்னொரு நாற்காலிக்காரர், அகர்வால்,

எத்தனை முயன்றும் அகர்வாலுடன் கைலாசத்தால் இயல்பான நட்புறவை வளர்த்துக் கொள்ள முடிவதில்லை.  .அகர்வாலோ அவரை பலவிதங்களிலும் நெருங்கி, நட்பாக பழக முயற்சித்துக் கொண்டே இருக்கிறார். அவர் நெருங்க நெருங்க இவரது விலக்கம் அதிகரிக்கிறது.

இதை எண்ணி மனம் நொந்து, தன்னைப் பற்றிய ஒரு ஏமாற்றத்தில் உண்டாகும் குற்றவுணர்ச்சியில் அமர்ந்து யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் வரும் தன்  நண்பர் ராமுவுடன் வெளியே (அகர்வாலுடன் சேர்ந்து சாப்பிடுவதை தவிர்த்த மகிழ்ச்சியுடன்) சாப்பிடச் செல்கிறார் கைலாசம். இவர்கள் இருவரிடையே நடைபெறும் நட்பு குறித்த  உரையாடலுமே இந்தச் சிறுகதை.

கைலாசமும் அகர்வாலும் ஏன் நட்பு கொள்ள முடிவதில்லை என்பதை கைலாசமும் ராமுவும் பல்வேறு கோணங்களில் விவாதிப்பதை ஆதவன் தனக்கே உரித்தான கூர்மையான, ஆழமான, சமயங்களில், வாய்விட்டுச் சிரிக்கவைக்கும் நகைச்சுவையுடன் பதிவு செய்திருப்பதே இந்தக் கதையை மீண்டும் மீண்டும் படிக்கத்  தூண்டும் ஒன்றாக ஆக்குகிறது. ராமுக்கு இவர்கள் இடையில் நட்பு கைகூடாததில்  கைலாசத்துக்கு இருக்கும் வருத்தம், தேவையில்லாத ஒன்றாக, இருப்பதாகப்  படுகிறது,. “பழக முடியலேன்னா, வெட்டி விட்டுற வேண்டியதுதானே,” என்பதே அவரது எளிமையான தீர்வு. ஆனால் கைலாசத்துக்கு அப்படியல்ல. “எல்லோரிடமும் அன்பாக நடந்து கொள்ள வேண்டும்,  யார் மனதையும் புண்படுத்தக் கூடாது, கருத்து பரிமாற்றம், செயது கொள்ளணும்னு” நம்புகிறவர் அவர்.  ஆனால், அதை ஒரு மூட நம்பிக்கை என்று  நிரூபித்துவிடுகிறார் அகர்வால்.

இது இரு தனிமனிதர்கள் இடையேயான பிரச்னை மட்டுமல்ல, இருவேறு மொழிகள், கலாச்சாரங்களின் பின்னணியில் இருந்து வந்தவர்கள் என்பதிலும் பிரச்னை இருக்கிறதோ என்பதையும் அலசுகிறார் ஆதவன். தமிழரான கைலாசம், உத்தரபிரதேசவாலாவான அகர்வால் எதிர்பார்க்கும் ஒரு சராசரி “மதராஸி”யாக இருப்பதில்லை. சப்பாத்தி, சமோசா, சாப்பிடுவதிலோ இந்திப் படங்களை பார்ப்பதிலோ எந்தத் தயக்கமும் கைலாசத்துக்கு இல்லை என்பதில் அகர்வாலுக்கு இருக்கும் ஏமாற்றத்தில் மிக நுட்பமாக இந்தியாவின் வடக்கு- தெற்கு அரசியலையும் கொண்டு வந்து விடுகிறார் ஆதவன். கைலாசத்திடம் இல்லாத, வட இந்திய எதிர்ப்புணர்வுக்கு பதிலாக அகர்வால் மேற்கொள்ளும் இட்லி, தோசை, சாம்பார் விருப்பம், தமிழக அறிஞர்கள், அரசியல் ஆகியவற்றின் மீது அவர் இவருக்காக மேற்கொண்டு காட்டிக்கொள்ளும் ஆர்வம், இவையெல்லாம் கைலாசத்துக்கு ஏதோ தேசிய ஒருமைப்பாட்டுக்கான போட்டியில் நடக்கும் நாடகத்தில் பங்கு பெரும் உணர்வை ஏற்படுத்துகிறது.

அடுத்து பெண்கள், செக்ஸ் ஆகிய விஷயங்கள் குறித்து உரையாடல் திரும்புகிறது. இவற்றைப் பற்றி சகஜமாக இருவரும் பேசிக் கொள்ள முடிகிறதா என்று கேட்கிறார் ராமு. அதையும் முயற்சித்தாயிற்று, ஆனால் அதைப் பற்றி பேசினால், அவன் அதற்கு மட்டும்தான் லாயக்கானவன் என்று தான் நினைப்பதாக அவன் நினைப்பதில்தான் முடிகிறது என்று வருத்தத்துடன் சொல்கிறார் கைலாசம். ஒருவர் வீட்டுக்கு ஒருவர் சென்றதுண்டா என்றால், அந்தக் கூத்தும் நடந்துவிட்டது, அகர்வால், வீட்டு தோசை சாப்பிட வேண்டும் என்றதால், கைலாசத்தின் வீட்டுக்கு ஒருமுறை வந்திருக்கிறார். ஆனால், அங்கு, அவர் கைலாசத்தில் மனைவியின் சமையலைப் புகழ்வதும், அவரை மகிழ வைப்பதற்காக அபத்தமான ஜோக்குகளை அடிப்பதும் கைலாசத்தின் மனைவிக்கு பிடிக்காமல் போகிறது- அவர்  கண்டிப்புடன் சொல்லிவிடுகிறார்,  அகர்வால் வீட்டுக்குத் தானும் வரமாட்டேன், கைலாசமும் போகக் கூடாது என்று. இதற்கு ராமுவின் பதில், பெண்கள் இந்த விஷயத்தில் எப்போதுமே நல்ல முன்னெச்சரிக்கையுடைவர்கள் என்பது.

ஆங்கிலத்தில்,Two good people not made for each other, என்று சொல்வார்கள். கைலாசமும் அகர்வாலும், இருவருமே அடிப்படையில் நட்பார்ந்தவர்கள்தான், ஒருவொருக்கொருவர் மதித்து உறவாடும் நோக்கமும் உள்ளவர்கள்தான். ஆனாலும் அவர்களிடையே ஏன் அந்த நட்பு மலர்வதில்லை என்பதே கைலாசத்தைக் குடையும், குற்ற உணர்வுக்கு ஆளாக்கும் கேள்வி. எல்லா வழிகளிலும் முயன்றும் முகிழ்க்காத ஒரு நட்பை சராசரித்தனத்திலிருந்து மேம்பட்டிருப்பதாக தான் நம்பும் தன் தனித்தன்மையின் தோல்வி என்றே காண்கிறார் கைலாசம்.

கதையின் இறுதியில் அலுவலகக் கேர்டேக்கரிடம் தம் அறையில் அகர்வாலின் இருக்கைக்கும் தன் இருக்கைக்கும் நடுவே ஒரு தடுப்பு போட்டுத் தரச்சொல்லி கைலாசம் கேட்க, உ.பி வாலாக்களோடு சேர்ந்திருக்கவே முடியாத நிலை குறித்த கேர்டேக்கரின் பிரசங்கத்தை மறுப்பேதும் சொல்லாமல், மௌனமாகக் கேட்டுக் கொண்டு அமர்ந்திருக்கிறார் கைலாசம்.

லேடி- ஆதவன் சிறுகதை

வெ. சுரேஷ்

என் சிறு வயதில் எங்கள் வீட்டில் சௌடம்மா என்று  ஒரு பாட்டி வேலை செய்து வந்தார். எங்கள்  அம்மாவிடம் நாங்கள் பேச முடியாதபடியெல்லாம் பேச அவருக்கு உரிமை உண்டு. அவர்கள் இருவரும் பேசிக்கொண்டு இருக்கும்போது பார்த்தால், சொந்த அம்மாவும் மகளுமே பேசிக்கொண்டு இருப்பது போலத் தோன்றும். சொல்லப்போனால், ஊரிலிருந்து அவ்வப்போது வரும் எங்கள் பாட்டியிடம் பேசுவதை விட இந்தப்  பாட்டியிடம் அம்மா இன்னும் மனம் திறந்து பேசுவதாகவே நாங்கள் எல்லோரும் நினைத்திருந்தோம். இது ஒரு புறம் ஆனால் அவ்வளவு நெருக்கமாக பழகி வந்தாலும், அவர் இல்லாத நேரத்தில் அவரைப் பற்றி பேச்சு வந்தால் அம்மாவிடம் அவ்வளவு நெகிழ்ச்சியைக் காண முடியாது. ஆமாமா வேணுங்கறது எல்லாத்தையும் இங்கதான் கேட்டு வாங்கிப்பா, விசுவாசத்தை மட்டும் இன்னொருத்தர் கிட்ட காட்டுவா, என்ற ரீதியில் முனகி கொள்வார். எங்களுக்குப் புரியாது. எப்போதும் அம்மாவுக்கு சௌடம்மா மீது அந்த சந்தேகம் இருந்தது. சௌடம்மாவுக்கும் ஒரு பழக்கம் இருந்தது. அம்மாவிடம் நேரடியாக எந்த பதிலும் சொல்ல மாட்டார். காபி நல்லா இருந்ததா, என்று கேட்ட்டால், அதுக்கென்ன குறைச்சல் என்கிற ரீதியில்தான் பதில் சொல்வார். கொடுக்கப்படும் உணவுப் பண்டங்களை, அவ்வளவு லட்சியம் செய்யாமலேயே வாங்கிக்  கொள்வார். இருவருக்கும் உள்ள நெருக்கத்தில் கண்ணுக்குத் தெரியாத முள் ஒன்று இருப்பதும் புரியும். அவர்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் மிகுந்த அன்பு காட்டினார்களா? அல்லது அன்பு இருப்பது போல நடித்து ஒருவரை ஒருவர் வெறுத்தார்களா? எஜமானியம்மா- பணிப்பெண் அல்லது எஜமான்- பணியாள்  உறவில் இது ஒரு பொதுவான விஷயம் என்பதை நண்பர்களுடன் பேசும்போது தெரிந்து கொண்டேன். ஆனால் இதன் முழுப் பரிமாணமும்  தாத்பரியமும், பின்னர் ஆதவனின் “லேடி” சிறுகதையைப் படிக்கும்போது  உணர்ந்து கொள்ள முடிந்தது.

பாப்பா என்கிற நடுத்தர வயதுத் தமிழ்ப்பெண் தில்லியில், பல வீடுகளில் வீட்டுப் பணியாளராக பணி புரிந்து வருபவர். அவரது ஒருநாள் வாழ்க்கையே இந்தக் கதை. இதில், அவர் ஒரு தமிழ் வீட்டில் வேலை செயது வருகிறார். இயல்பாகவே மற்ற  ஹிந்தி மொழிக்காரர்கள் வீட்டுப் பெண்மணிகளை விட இந்தத் தமிழ் பெண்ணிடம் நெருக்கமும் உரையாடலும் அதிகம்.. ஆனால் தமிழ் பிராமணர்கள் குடும்பங்களில் வீட்டு வேலையாட்களுக்கு இருக்கக் கூடிய எல்லைகள் அங்கும் உண்டு. வீட்டில் சில இடங்களுக்கு போகக் கூடாது, சில பாத்திரங்களைத் தொடக் கூடாது என்றெல்லாம். இந்த மாதிரி குறைகளெல்லாமே பாப்பா பொறுத்துக் கொள்கிறார். வளர்ந்து வரும், படித்துக் கொண்டிருக்கும் தன் மகனுக்காக. வரும் வாரத்தில், அவளது மகனுக்கு பிறந்த நாள் வரப்போகிறது. அதற்கு, பரிசாக ஒரு சட்டை வாங்கித் தருவதாக வாக்களித்த அந்த வீட்டுப் பெண்ணிடம், அது வேண்டாம், மகன் சாப்பிட ஒரு நல்ல தட்டு ஒன்று வாங்கிக் கொடுங்கள், என்று கேட்டிருக்கிறார் பாப்பா. அவர்கள் அந்தப் பரிசு வாங்கித் தரும் நாள்தான் கதை நடக்கும் நாள்.

அன்று பரிசும் வருகிறது. மிகுந்த ஆவலுடன் அந்தத் தட்டினைப் பார்க்கும் பாப்பா கடுமையான ஏமாற்றத்துக்கு ஆளாகிறார். அவர் எதிர்பார்த்திருந்த தட்டு அல்ல அது. வந்தது, பீங்கான் தட்டு..முகம் சுருங்க பாப்பா சொல்கிறார், “அய்ய இந்தத் தட்டு இல்லம்மா, இது வேணாம்.” “பின்ன எந்தத் தட்டுடி வேணும்?” என்று கேட்கிறார் வீட்டம்மா. “அத மாதிரி,” என்கிறார் பாப்பா. கைகள் அந்த வீட்டு அய்யமார்கள் சாப்பிடும் எவர்சில்வர் தட்டினைச் சுட்டிக்காட்ட, உடனே கோபமாக அந்த வீட்டம்மாள், “ஓஹோ, உனக்கு எவர்சில்வர் தட்டுதான் வேணுமாக்கும் இது வேணாமா?” என்று கேட்க, கண்டிப்பாக மறுத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார் பாப்பா. மறுக்கப்பட்ட அன்பினை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று திகைத்து நிற்கிறார் அந்த வீட்டம்மா.

பொதுவாக மத்தியதர வர்க்க மனிதர்களின் வாழ்க்கையயும், மனக்குழப்பங்களையுமே அதிகம் எழுதியுள்ளவர் என்று அறியப்படும் ஆதவன், அதற்கு கீழே உள்ள வர்க்கத்தாரின் மனநிலையில் நின்று எழுதிய அரிதான சிறுகதை இது. எஜமானி- பணிப்பெண் உறவின் love – hate தன்மையை அற்புதமான உரையாடல்கள் மூலம் கொண்டு வந்திருக்கிறார். பாப்பாவுக்கு அந்த வீட்டம்மாவால் காபி, சிற்றுண்டிகள், கொடுக்கப்படும் விதம், அந்த வீட்டில் பாப்பா திறந்து விடக்கூடாத கதவுகள், உள் நுழைந்து சுத்தம் செய்யக்கூடாத அறைகள் ஆகியவற்றின் மூலம் நுட்பமாக அந்த உறவின் சாதிய இடைவெளிகளையும், அது செயல்படும் விதத்தையும் வெகு இயல்பாக சித்தரித்திருக்கிறார். ஒரே சமயத்தில் அந்த வீட்டம்மா மீது பாப்பா கொண்டிருக்கும் ஒட்டுதலையும் விலகலையும், அவர்கள் வீட்டு வாழ்க்கை முறையின் மீதான ஆசையையும் விலக்கத்தையும், பாப்பாவின் மனவோட்டத்தின் மூலம் சித்தரிப்பது அருமை. திறக்கக்கூடாத அறையின் கதவிடுக்கு வழியாக தெரியும் ஒரு வெளுப்பு முதுகையும், எதிர்பாராமல் தன் மேல் மோதிவிடும் அந்த வீட்டுப் பிள்ளையின் உடல் தன் கணவனை நினைவூட்டுவதன் மூலமும் பாப்பாவின் மனதின் ஆழங்களை சித்தரித்திருக்கிறார்.

‘லேடி’, ஏழைகளின் தன்மானத்தையும், நடுத்தர வர்க்கத்தினரின் ஏழைகள் மீதான கரிசனத்தில் செயல்படும் ஒரு patronizing மற்றும் அதிலும் தென்படும் மேட்டிமை மனோபாவத்தையும்  ஒருசேரக் காட்டும் அபூர்வமான கதை. தலைப்பு  சொல்லும் சேதியே அபாரம். தான் வேலைக்காரியாக இருக்கலாம், ஆனால் தன மகன் நன்றாக படித்து பிற்காலத்தில் பெரிய ஆளாக வரப்போகிறவன், அவனுக்கு தமக்கு சமதையாக ஒரு எவர்சில்வர் தட்டு வாங்கிக் கொடுக்க மனமில்லாத அந்த வீட்டாரின் பரிசை, அன்பை, தூக்கி எறியும் பாப்பாவின் ரோஷம் அந்தத் தலைப்பு வைத்திருக்கத் தூண்டியிருக்கலாம். கதையின் இன்னொரு இழையாக, பாப்பாவின் மகன் மாரியின் சிநேகிதர்கள் குறித்த பாப்பாவின் கவலை, இறுதியில் மாரியின் பாண்ட் பாக்கெட்டில் அவர் கண்டுபிடிக்கும் சிகரெட் பாக்கெட் ஆகியவை, கதைக்கு இன்னொரு பரிமாணத்தை சேர்க்கின்றன.

அந்தக்கால ஒர்க்மன்ஷிப் : ‘தில்லி அண்ணா’- ஆதவனின் சிறுகதை குறித்து வெ. சுரேஷ்

வெ. சுரேஷ்

வீடு, வாசல், பணம், நகைகள் போன்றவற்றை எல்லாம் வாரிசுகளுக்கு மாற்றிக் கொடுக்கலாம். ஆனால் ஞானம், கலை ஆர்வம், வித்வத் ஆகியவற்றை? மகத்தான கலைஞர்களின் வாரிசுகள் பெரும்பாலும் இன்னொரு நல்ல கலைஞர்களாக ஆவதில்லை. வாரிசுகள் அதிகம் உருவாகும் கலை, என்று குரலிசையைச் சொல்லலாம். ஏனெனென்றால் குரல் வளம் என்பது அடிப்படையிலேயே உடற்கூறு மரபு சம்பந்தப்பட்ட ஒன்றாக இருக்கிறது. மகத்தான பாடகர்கள்/ வாத்திய இசைக்காரர்களின் வாரிசுகள், ஓரளவாவது பாடவோ, இசைக்கவோ செய்கிறார்கள். அடுத்த சந்ததிகளிடம் அந்தக் கலை இறங்கி வராமற் போவது அரிதாகவே நிகழ்கிறது. ஆனால் அனைவரும் தம் தந்தை அல்லது தாய் தொட்ட உயரங்களை தொடுவதில்லை.

ஆனால், வாசிப்பு ஆர்வம், இலக்கிய நுண்ணுணர்வு, படைப்பு, போன்றவை மிக மிக அரிதாகத்தான் அடுத்த சந்ததியினருக்கு வந்து சேர்கிறது. நல்ல இசைக்கலைஞர்களாக தந்தை/ தாய் – மகன்/ மகள் ஜோடியைப் பார்க்க முடிகிற அளவுக்கு எழுத்தாள தாய்/ தந்தை– மகன்/ மகள் இருக்கிறார்களா? மிக அரிதாகவே இப்படி ஒரு ஜோடியை சொல்ல முடியும் என்று தோன்றுகிறது. ஏனெனில் இலக்கிய ரசனை ஒரு மனப் பயிற்சி, மரபணு ரீதியாக மாற்றப்பட வழியில்லை.

லௌகீக விஷயங்களைத் தாண்டிய அல்லது அதில் அதிகம்  பற்றில்லாமல், இலக்கியம், ஆன்மிகம், இசை போன்ற விஷயங்களைக் குறித்த தேடலும் அதில் திறனும் உள்ள மனிதர்களின் குடும்பத்தினர் அவர்கள் மீது கொண்டிருக்கும் உணர்வுகள்தான் உண்மையில் என்ன? இம்மாதிரியான மனிதர்கள் மீது அவர்களின் திறனை புரிந்துகொண்ட உண்மையான மரியாதையா? அல்லது அது அவர்களுக்கு தங்கள் பொருளியல் ரீதியான பலவீனங்களையும் தோல்விகளையும் மறைத்துக் கொள்ள பயன்படும் முகமூடியாக உதவும் மௌடீக பக்தியா?  அவ்விதமான பக்தி ஞானஸ்தர்களுக்கு திருப்தியை தருமா?

இந்தக் கேள்விகளே ஆதவனின் ‘தில்லி அண்ணா’ சிறுகதைக்கு அடிப்படை. வாசுதேவன் தில்லியில் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். பதவியில் இருக்கும்போது  அதிகம் “சம்பாதிக்காமல்” ஞானஸ்தர் என்ற மரியாதையுடன் வாழ்க்கை நடத்துபவர். இப்போது அவர் இருப்பது தன் குமாஸ்தா மகனான அம்பியின் குவார்ட்டர்ஸில். அவரது மனைவிக்கும் மகனுக்கும் மகளுக்கும் தங்கள் தந்தையின் ஆளுமை குறித்த பெருமை உண்டு. ஆனால் அதற்கான அடிப்படைகள் மீது ஆர்வம் கிடையாது. இவர்களின் இந்தக் குணத்தை வாசுதேவன் கேள்விக்கு உள்ளாக்கும் தருணத்தை அவரது தம்பி குடும்பத்தினர் அவரது வீட்டிற்கு வரும் ஒரு சம்பவம் மூலம் கதையாக்கியுள்ளார் ஆதவன்.

வாசுதேவனின் தம்பி ராமச்சந்திரன் தன் அண்ணனைப் போலவே குமாஸ்தாவாக வாழ்க்கையைத் தொடங்கினாலும், ஒரு கட்டத்தில் தன் மனைவியின் சகோதரர்களின் உதவியால், நல்லதொரு தனியார் கம்பனியில் உயர் பதவி வகிப்பவர். பொருளியல் ரீதியாக தன் அண்ணனை விட பல மடங்குகள் முன்னேறியவர். அவருக்கு தன் அண்ணன் மீது கல்விமான், ஞானஸ்தர் என்ற மரியாதை உண்டு. ஆனால் ஆர்வம் கிடையாது. அவரது மனைவிக்கு, அண்ணா ஒரு ‘அரைக் கிறுக்கு’, பொருளியல் ரீதியாக வெற்றி பெற்று வாழ்க்கை நடத்தும் தன் சகோதரர்கள் மீதே உண்மையான மதிப்பு. அவர்கள் சென்னையிலிருந்து தில்லி வந்து நான்கு நாட்களாகியும் வாசுதேவனின் வீட்டுக்கு வராமல், வந்தபோதும் மிகக் குறைந்த நேரமே அங்கு இருப்பதன் மூலம் இதை அவள் காட்டிக் கொள்கிறாள்.

இந்தக் குறைந்தபட்ச நேரமேகூட சகோதரர்களுக்கிடையேயான நெருக்கத்தை, அல்லது முன்பிருந்த நெருக்கம் இப்போது இல்லாமல் போயிருப்பதை காண்பிக்க போதுமானதாக உள்ளது. பேசுவதற்கு அதிகம் பொதுவான விஷயங்கள் இல்லாத வேறு வேறு உலகங்களில் வாழும் இருவருக்கும் தத்தம் உடல் உபாதைகளை பகிர்ந்து கொள்வதே பொதுவான விஷயங்களாகின்றன. அப்போது மணியடிக்கும் பழைய கடிகாரச் சத்தமே அவர்கள் தாம் இருந்த நாட்களின் நெருக்கத்தை மீட்டுத் தருகிறது. “அந்தக் கால ஒர்க்மன்ஷிப்பே தனி இல்லை அண்ணா” என்கிறார் தம்பி. கூடவே ‘அந்தக் கால மனிதரான’ தம் அண்ணாவின் பெருமையை, அவர் தன் வீட்டுக்கு வந்திருந்தபோது பாடிய பாடல்களை, விளக்கிச் சொன்ன ஸ்லோகங்களை, நினைவு கூர்கிறார். இப்போது தான் ஒரு டேப் ரெக்கார்டர் வாங்கியிருப்பதையும், இவரது பாடல்களையெல்லாம் அதில் பதிவு செய்ய வேண்டும் என்ற ஆசையையும் சொல்கிறார். ஆனால் அண்ணாவின் மனதில் தன் தம்பியின் மனைவி தன்னை ஒரு ‘அரைக் கிறுக்காகப்’ பார்த்ததே நினைவில் எழுகிறது. உண்மையில் இப்போதுகூட, தம்பியின் பெருமை என்பது உண்மையில் மதிப்பறிந்து உணரப்பட்டது அல்ல என்றும் ஒரு மௌடீக பக்தி மட்டுமே என்பதையும் ஒரு போதும் தன் வாழ்க்கை முறையை அவர் மேற்கொள்ள விரும்ப மாட்டார் என்பதையும் புரிந்துகொள்கிறார்.

அவர்கள் கிளம்பிப்போனதும்,  வாழ்க்கையின் உன்னதமான விஷ்யங்களை ரசிக்க தெரியாதவர்கள் என்றும் அவர்களது பாவனைகளை கேலி செய்தும் வாசுதேவனின் மகளும் மனைவியும் பேசிச் சிரிக்கத் துவங்க, அவரது மகனும் அதில் சேர்ந்து கொள்கிறான். ஆனால் சட்டென்று வாசுதேவனுக்கு இதில் ஒரு அலுப்பும் எரிச்சலும் எழுகிறது. அவர் தன் மகனை நோக்கி, “உங்களுக்கு வெறும் கேலி பேசத்தான் தெரியும். நீ முடிஞ்சா ஒரு டேப் ரெக்கார்டர் வாங்கேன்,  பாக்கலாம்’, என்கிறார். அவர்கள் பேச்சை நிறுத்திவிட்டு, வியப்புடன் அவரைப் பார்க்கின்றனர். “நிஜம்மாத்தான் சொல்றேன்,” என்றபடி கையலம்பச் செல்கிறார் வாசுதேவன். இப்படி முடிகிறது கதை.

அங்கே வாசுதேவனின் மனம் ஒரு உண்மையைக் கண்டு கொள்கிறது. தன் தம்பிக்கு எப்படி தன் வாழ்க்கை முறையை, தம் குணநலன்களை அடிப்படையாகக் கொண்ட உண்மையான மதிப்புக்கு பதில் ஒரு மௌடீகமான பக்தி இருக்கிறதோ, அதே போல குடும்பத்தினருக்கும் தன் மேல் இருக்கும் பெருமை, அவரைப் புரிந்து கொண்டு வந்ததல்ல என்றே அவர் புரிந்து கொள்கிறார். தன் பொருளியல் ரீதியான போதாமைகளை, திறமையின்மையை  மறைத்துக் கொள்ள தன் தந்தையின் /கணவரின் திறன்களை, ஞானத்தை தனதாக வரித்துக் கொள்ளும் அறியாமையே அவருக்கு எரிச்சலூட்டுகிறது.

தம்பியின் சொத்துக்களுக்கு இணையான செல்வத்தை அவரது வாரிசுகள் அசாதாரண முயற்சி ஏதும் மேற்கொள்ள வேண்டியதில்லை. ஆனால் இவரது சொத்துக்களான, ஞானம், கலை, இலக்கிய ஆர்வம் ஆகிவை தாமாக வராது என்பதை அவரது மகளோ மகனோ உணரவில்லை என்பதை அவர் உணர்கிறார். மேலும், அவரது தம்பியாவது லௌகீக வெற்றியை அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கை முறையில் முழு மனதுடன் இறங்கி வெற்றியை அடைந்திருக்கிறார். ஆனால் இவர்கள் அந்தத் தேடலும் இல்லாமல் தங்கள் தந்தையின் அலௌகீக போக்குக்கு உண்மையில் எரிச்சலும் பட்டுக்கொண்டு, அதே சமயம், மற்றவர்களின் லௌகிகப் போக்கினை பரிகாசம் செய்யும் உரிமையும் தமக்கு இருப்பதாக நினைத்துக் கொள்கிறார்கள்.

ஆதவனின் ‘இன்டர்வியூ’ – வெ. சுரேஷ்

வெ. சுரேஷ்

80களில் தங்கள் கல்லூரிப் பருவத்தினை கடந்தவர்களுக்கு, வேலை இல்லாத் திண்டாட்டம் ஒரு அச்சுறுத்தும் அன்றாடச் சொல். இன்று உள்ளது போல் தொழில்நுட்ப கல்லூரிகள் அன்று இல்லை. உயர்கல்வி என்றால் அது பி.ஏ., பி.எஸ்.சி., பி.காம்தான். இவை எதுவும் தொழிற்பயிற்சி அளிக்கும் கல்வி அல்ல. அரசு வேலை வாய்ப்பும் குறைவு, தனியார் துறை வளர்ச்சியிலும் தேக்கம் என்றிருந்த அந்த நாட்களில் படித்து முடித்ததும் வேலை கிடைக்க, பரிந்துரை அவசியப்பட்டது. அப்படிப்பட்டவர்களின் அறிமுகம் இல்லாதவர்களுக்கு வேலைக்கான நேர்முகம் என்பது ஒரு சிம்மசொப்பனமாக இருந்தது. பணியிடம் சார்ந்த கல்வியும் அளிக்கப்படவில்லை, நேர்முகத்தை எதிர்கொள்வதற்கான பயிற்சியும் இல்லை, தெரிந்தவர்கள் இருந்தால்தான் வேலை கிடைக்கும் என்ற அவநம்பிக்கை- கல்விக்குப்பின் எங்கே வேலை செய்வது என்பதல்ல, என்ன வேலை கிடைக்கும் என்ற கேள்விதான் அன்று ஒவ்வொரு பட்டதாரி வாலிபன் தூக்கத்தையும் கெடுக்கும் கவலையாக இருந்தது. இந்த நாளைய “காம்பஸ்“ அல்ல, அது ஒரு வாழ்வா சாவா பிரச்னை.

80களின் ஏராளமான திரைப்படங்களில்  நேர்முக காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அந்நேர்முகங்களில் இடம்பெறும் அபத்தமான, நடைமுறை வாழ்க்கைக்குப் பொருந்தாத கேள்விகள், அவற்றைத் தொடுக்கும், அந்த அகலமான மேஜைகளுக்குப் பின் அமர்ந்திருக்கும் இறுக்கமான முகங்கள்- கோபக்கார கதாநாயகன் இந்த நாடகத்தைப் பழித்தபடி ஆத்திரத்துடன் வெளியேறும் காட்சிகளும் நிறைய உண்டு. ‘வறுமையின் நிறம் சிவப்பு’, ‘பாலைவனச் சோலை’ போன்ற பல படங்களை இங்கு நினைவு கூரலாம்.

80களின் தமிழ் இலக்கியத்திலும் வேலையில்லாத் திண்டாட்டத்தால் பாதிக்கப்பட்டு தனக்குள் சுருங்கி வெதும்பி துயருறும் வாலிபர்கள் நிறையவே உண்டு. அவற்றில் பல கதைகளும் அந்தப் பிரச்னையால் உருவாகக்கூடிய லௌகிக விளைவுகளை பேசின. வண்ணநிலவனின், ‘கரையும் உருவங்கள்’ போன்ற சில கதைகள், அக்கால இளைஞர்களின் எதிர்வினைகளை உளவியல் ரீதியாகவும் வெளிப்படுத்தின. ஆனால் அந்த வகை  கதைகளில் தனித்து நிற்கும் ஒன்று.. ஆதவனின் “இன்டர்வியூ” என்றே பெயர்  கொண்ட ஒரு சிறுகதை

ஆதவனின் பெரும்பாலான கதைகளைப் போலவே இதுவும் ஒரே நாளில் நடக்கும் சம்பவங்களை, சொல்லப்போனால், இன்டர்வியூ என்ற ஒரே ஒரு சம்பவத்தைத்தான் விவரிக்கிறது. சுவாமிநாதன், சிறுவனாக தன் தந்தையுடன் கடைத்தெருவில் நடக்கும்போது, அவர் அவனுக்கு ஐஸ்க்ரீம் வேண்டுமா என்று கேட்கிறார். நான் என்ன குழந்தையா என்கிறான். அவர் சிரிக்கிறார். அப்போது அடிக்கிறது அலாரம். ஆம், அது ஒரு கனவு. அவனுக்கு இப்போது அந்தத் தந்தை இல்லை. மேலும், அன்றைய தினம் ஒரு இன்டர்வியூவும் இருக்கிறது. ஒரு வேலையில்லா இளைஞன் தன் வீட்டில் செய்யக்கூடிய அன்றாட வேலைகள் அனைத்தையும் செய்து முடித்துவிட்டு அப்பாவின் நண்பர் ஒருவரிடம் நன்னடத்தைச் சான்றிதழ் ஒன்றையும் வாங்கிக் கொண்டு அவரது காரிலேயே இன்டர்வியூ நடக்கும் கம்பெனிக்குச் சென்று நேர்முகத்தில் பங்கேற்றபின் திரும்ப வரும் வழியில் ஒரு சினிமாவை பாதி பார்த்துவிட்டு வீட்டுக்கு வருவதற்காக பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருப்பதில் முடிகிறது கதை.

கதை இரண்டு தளங்களில் பயணிக்கிறது. ஒன்று சுவாமிநாதனின் நேர்முகம், அங்கே அவன் காணும் மற்ற  இளைஞர்கள், நேர்முக அறைக்குள் நுழையும் முன்பு நடைபெறும் கலாட்டா பேச்சுக்கள், நேர்முகத் தேர்வு ஏற்படுத்தும் இறுக்கமான உணர்வு, அது முடிந்த பின்னர் ஏற்படும் ஒரு விடுதலை உணர்வு என்று ஒரு தளம். கூடவே சுவாமிநாதனின் எண்ணவோட்டங்களின் மூலமாக அவனது நிலையையும், வீட்டில் அவன்,  அவன் அம்மா மற்றும் அக்காவுடனான உறவின் தன்மையையும், அண்மையில் மறைந்த அவன் தந்தையைப் பற்றியும் வரும் சித்திரங்கள் இந்தக் கதையை தனித்த சிறப்பு உடையதாக ஆக்குகின்றன. உண்மையில், கதையில் ஒரு பாத்திரமாக சுவாமிநாதனின் தந்தை வருவதில்லை. ஆனால், சுவாமிநாதனது எண்ணங்களின் மூலமாக அவரது இருப்பு அல்லது இழப்பு அவர் இல்லாமலும் இருப்பதை நாம் உணரும் வகையில் மிக நுணுக்கமாகச் சொல்லப்படுகிறது.

வீட்டில் இரண்டு பெண்களுக்கிடையே இருக்கும் சுவாமிநாதன் இன்னொரு ஆணான தன் தந்தையின் இன்மையை உணருதல், அவர் அவனது பாதுகாப்பான உலகாக இருத்தல் ஆகியவை கதையின் துவக்கத்தில் வரும் அந்தக் கனவின் மூலமாக காட்டப்படுகிறது. பின் அவன் தந்தையின் நண்பர், அவர் தலையில் அவன் காணும் வழுக்கையின் துவக்கம், பேச்சுக்கிடையே ஏதோ ஒரு ராகத்தை முணுமுணுப்பது ஆகியவற்றிலெல்லாம், அவரில் தன் தந்தையை சுவாமிநாதன் அடையாளம் காண்பது அதிகம் சொல்லாமலேயே குறிப்பாக உணர்த்தப்படுகிறது. அதோடு, இரு பெண்களுக்கிடையே வாழும் இளம் சுவாமிநாதன் மேல்  அவர்களின் உடல் ஏற்படுத்தும் இனம்புரியாத ஈர்ப்பும் கவர்ச்சியும், அதற்காக அவன் கொள்ளும் குற்ற உணர்வும் கூட, கோடிட்டுக் காட்டப்படுகிறது.

பின் சுவாமிநாதனின் இன்டர்வியூ அவன் தாய் மற்றும் தமக்கையால் எதிர்கொள்ளப்படும் விதம், இருவருக்குமே சுவாமிநாதன் இந்த இன்டர்வியூவில் தேறி வேலைக்குப் போய்விட வேண்டும் என்ற ஆவல் இருக்கிறது. ஆனால் கூடவே,  அது தங்கள் உலகை, அவனுடனான உறவின் தன்மையை, பாதிக்கும் விதத்தை பற்றிய கவலையும் இருக்கிறது. சுவாமிநாதனுக்கே கூட, அவனது அக்காவின் உழைப்பில்  வாழ்வதிலிருந்தும் அம்மாவின் சங்கடப்படுத்தும் பரிவிலிருந்தும்  விடுபட ஆவல். ஆனால், தன்னுடைய பகல் பொழுதுகள் வேற்று மனிதர்களுக்குச் சொந்தமாகி தன்னுடைய விடுதலையை இழப்பது குறித்தும் அச்சம்.

அவன் அக்காவிற்கு, சாமிநாதனின் இன்டர்வியூவின்  மூலம் அவனுக்கு அமையும் வேலை, அவளை இவர்களின் இந்த உலகத்திலிருந்து விடுவித்து அவளுக்கான உலகத்தை (அவளை  ஒரு கறுப்புக் கண்ணாடி இளைஞனோடு சுவாமிநாதன் சாலையில் பார்க்கிறான்) அடைய ஆவல். அதே சமயம், அவளது சம்பாத்தியத்தில் வாழும் அவளது அம்மா மற்றும் சுவாமிநாதன் மீதான ஒரு மேலாதிக்கத்தை இழப்பதிலும் உள்ள இழப்புணர்வு இருப்பதும் குறிப்பாக உணர்த்தப்படுகிறது.

சுவாமிநாதனது அம்மாவுக்கும் அவன் அந்த இன்டர்வியூவில் வெற்றி பெற வேண்டுமென்ற தவிப்பு  இருக்கிறது. அதன் மூலம் அவனில் அவன் அப்பாவைக் காணவும், கர்வத்துடன் மீண்டும் வெளியே செல்லவும் ஆசை. ஆனால், கூடவே அவனுடைய அக்காவைப் போலவே அவனும் அவளுடைய உலகத்தை விட்டு நழுவி வெளியே சென்று விடுவானோ என்ற அச்சமும் இருக்கிறது.

இதையெல்லாம் யோசித்துக் கொண்டு சுவாமிநாதன் பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருக்கிறான். சினிமாவுக்கும் நிஜ வாழ்க்கைக்குமுள்ள வேறுபாட்டையும் நினைத்து மருகுகிறான். இதே சினிமாவென்றால், அவனது அப்பா எப்படியோ இடைவேளைக்குப் பின் வந்துவிடுவார். இந்த இன்டர்வியூ அலுவலகத்தின் ரிசப்ஷன் அழகி ஒரு காரில் வந்து அவனை ஏற்றிக் கொள்வாள். அந்த கம்பெனியே அவளது அப்பாவுடையதாக இருக்கும். சினிமாவைப் போல வாழ்க்கை இருந்தால் கஷ்டமே இல்லை. ஆனால், இது வாழ்க்கை. அதனால் சுவாமிநாதன் பேருந்துக்காகக் காத்துக் கொண்டேயிருக்கிறான்.

ஒளி வெள்ளத்தின் மறைவில்: ஆதவனின் ‘லைட்ஸ் ஆன், ரெடி ஃபார் தி டேக்!’ – வெ. சுரேஷ்

வெ. சுரேஷ்

Alvin Toffler அவரது ‘Future Shock’ புத்தகத்தில் இருபதாம் நூற்றாண்டின் மனிதனைக் குறித்து Modular Man என்று ஒரு கருத்தை முன்வைப்பார். தொழிற்புரட்சிக்குப் பின் உருவாகி வந்த, நவீன நகர்ப்புற உலகில் வாழும் ஒரு தனி மனிதன் எப்படி பல்வேறு வேஷங்களில் தன்னைப் பொருத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது என்பதையும் சமூக உறவுகளில் ஒருவன் யாருடனும் தன்னுடைய முழுமையான ‘நான்’ ஐ வெளிப்படுத்திக் கொள்ளும் தேவை இல்லாத, அல்லது முடியாத, ஒரு சூழல் உருவாகி இருப்பதையும் விவரித்திருப்பார்.

நவீனத்துவத்துக்கு முன் இருந்த சமூகங்களில் இது மாதிரியான ஒரு அவசியம் தனி மனிதனுக்கு ஏற்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். குடும்ப உறவுகளில் பல்வேறு பாத்திரங்களை ஒரு ஆண் ஏற்றிருக்கலாம். மகன், கணவன், அப்பா,  தாத்தா என்று. ஆனால் தன்னைச் சுற்றியிருந்த எளிய பொருளாதார அமைப்பு கொண்ட ஒரு கிராமிய சமூகத்தில் அவன் என்ன தொழில் செயது வாழ்கிறானோ, அதுவே அவன். தான் யாரோ அதிலிருந்து பிறிதொருவனாக அவன் மற்ற சமூக மனிதர்களிடம் அவன் காட்டிக்கொள்ள வேண்டிய அவசியமோ போட வேண்டிய வேஷங்களோ இருந்திருக்காது என்றே தோன்றுகிறது. அதற்கான சாத்தியங்களும் குறைவு.

நவீன காலத்தில் நகர்ப்புறத்தில் வாழக்கூடிய, நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த ஒரு ஆண் பல்வேறு வேஷங்களை ஏற்று நடிக்க வேண்டியிருப்பதன் சிக்கல்களை ஆதவன் அவரது கதைகளில் பேசிய வண்ணமே இருந்தார். அம்மாதிரியான கதைகளில் மிகச் சிறந்த ஒன்றுதான் ‘லைட்ஸ் ஆன், ரெடி ஃபார் தி டேக்!’ என்ற  சிறுகதை.

அலுவலகம் முடிந்து, ஒரு டிபார்ட்மெண்ட் ஸ்டோர் சென்று பொருட்கள் வாங்கிக் கொண்டு வீடு திரும்ப பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் நேரம்தான் இந்தக் கதை நிகழும்  நேரம். தன்னுணர்வு கொண்ட  ஒரு மனிதன் அதற்குள் எத்தனை முகமூடிகளை அணிகிறான் என்பதை மிக அழகாகவும் நகைச்சுவை கொப்பளிக்கவும் சொல்லியிருக்கிறார் ஆதவன்.

முதலில் அங்கே சந்திக்க நேரும் தன் கல்லூரி காலத் தோழியிடம் தன் நிகழ்கால, நடுத்தர வர்க்க, சீரியஸ் வாழ்க்கையை மறைத்துக்கொண்டு, ஆவலுடன் பழகிய கல்லூரிக் காலத்தின் விடலை வேடம், அதன்கூடவே அவளது உயர்வர்க்க, குழந்தைத்தனமான வேடமும் அந்த வேடத்தை ரசித்து, பின் அதில்  சலிப்புற்று வெளியே வந்து  அங்கே மழைக்கு ஒதுங்கி நிற்கும், கல்லூரிப் பெண்களை ரசிக்கும்போது அவர்களால் கண்ணும் களவுமாகப் பிடிபட்டு, அவர்களைப் பெருந்தன்மையுடன் மன்னிக்கும் விட்டேத்தியான கல்லூரிப் பேராசிரியர் போன்ற வேடம், பேருந்து நிலையத்தில் எதிர்ப்படும் அலுவலக நண்பன் தன்னை ஒற்றைப்படையானவனாக, வெறும் அரசு ஊழியராக மட்டுமே பார்ப்பதால் ஏற்படும் சங்கடத்தில் தன்னை நிர்வாணமாக உணரும் தருணம்- அதிலிருந்து அவனைக் காப்பாற்றுவது, அங்கு வரும், அவனது வீட்டருகே வசிக்கும் இருவர். அதில் ஒருவர் வயதானவர், அவரிடம் இவன் என்றோ ஒரு முறை தன்னை இந்தக்கால பொறுப்பற்ற, மரபுகளை மதிக்காத வாலிபனாக காட்டிக் கொள்ளாமல், புதிய இளைய தலைமுறையின் (அவர்களில் ஒருவன் என்றாலும்), போக்கினை விரும்பாதவனாகக் காட்டிக் கொண்டதால், தொடர்ந்து அந்த வேடத்திலேயே அவர் முன் நிற்க வேண்டிய அவசியம்.

கையில் டாம் மொரேசின் கவிதைத் தொகுப்புடன் வரும் அவன் பேட்டையில் உள்ள கல்லூரி மாணவன்தான் மற்றொருவர். அவன் முன், ஆபீஸ் விஷயங்களைத் தவிர இதர விஷயங்களிலும் நாட்டமுள்ள ஒரு அறிவுஜீவி வேடத்தை, முகமூடியை அணிய வேண்டிய நிர்ப்பந்தம். நம் நாயகனை இப்படி மாறி மாறி வேடங்களை அணிந்து நடிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திலிருந்து காப்பாற்றுவது அப்போது அங்கு வரும், அவனது இருப்பிடம் போகும் பேருந்துதான். பேருந்தின் முன் அனைவரும் தங்கள் வேஷங்கள் அனைத்தையும் களைந்து வெறும் மனிதர்களாகி ஓடுவதுடன் கதையை முடிக்கிறார் ஆதவன்.

இது போன்ற ஒரு சூழ்நிலையில், நகர வாழ்வில் இயல்பாகவே ஒருவர் இப்படி இருக்க முடியாதா என்றும் ஏன் அவற்றை வேஷங்கள் என்றும் நினைக்க வேண்டும் என்றும் ஒரு கேள்வி எழலாம். அவை இந்த நாயகனின் வேஷங்கள்தாம் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுவது,  இந்த நடவடிக்கைகளிலிருந்து தனித்து நிற்கும் அவனது தன்னுணர்வும் இத்தகைய நடவடிக்கைகளின்மேல் அவனுக்கு உருவாகும் சலிப்பும்தான். அவற்றின் கூடவே மிக முக்கியமாக, இந்த நிகழ்கவுளின் ஊடாக, அவன் மனம் அந்நேரம் வீட்டில் தன் மனைவி எந்தவித வேஷங்களும் அணிய வேண்டிய நிர்ப்பந்தங்கள் இன்றி இயல்பாக சமைத்துக் கொண்டோ, ரேடியோவில் பாட்டு கேட்டுக்கொண்டோ, குழந்தையிடம் சண்டை பிடித்துக் கொண்டோ இருப்பாள் என்பதை பொறாமையுடன் அவன் நினைத்துக் கொள்வதை ஆதவன் சித்தரிப்பதுதான்.

தன்மை ஒருமையில்  விவரிக்கப்படும் இந்தக் கதையில் எந்த ஒரு பாத்திரத்துக்கும் பெயரே கிடையாது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஒரு கோணத்தில், வேஷங்கள் அணிவதில் உள்ள பொய்ம்மையைச் சித்தரிப்பது என்று தோன்றினாலும் இன்னொரு கோணத்தில், சலிக்கும் உண்மையிலிருந்து விடுபட வேஷங்கள் அணிவதில் உள்ள சவாலும் கற்பனைகள் தரும் சந்தோஷத்தையும் ரசிக்கத்தக்கதாகவே கூடத் தோன்றுகிறது. நம்மை நாமே அடையாளம் காண்பதிலும், பிறருக்கு நம்மை வெளிப்படுத்துவதில், நாம் அணியும் வேஷங்களுக்கும் ஒரு முக்கியத்துவம் இருக்கத்தான் செய்கிறது.மேலும், நம்மை பிறர் எளிதில் வகுத்துவிட முடியாதபடிக்கு நம்மை நாம் வேறு வேறு அடையாளங்களில் வெளிப்படுத்திக் கொண்டே இருப்பதிலும் ஒரு இயல்பான ஆர்வம் இருப்பதையும் இது வெளிக்கொணர்கிறது.

இரவுக்கு முன் வருவது மாலை” தொகுப்பின் முன்னுரையில் ஆதவன், தான் எழுதுவது குறித்து, “நானென்ன என்னிடமிருந்து தப்ப முயன்று கொண்டிருக்கிறேனா, அல்லது என்னை கண்டுபிடிக்கவா?” என்று கேட்டுக் கொள்கிறார். எழுதுவதற்கு மட்டுமல்ல, நிஜ வாழ்வில் நாம் நடந்து கொள்ளும் முறைக்கும், அணிந்து கொள்ளும் முகமூடிகளுக்குமேகூட இது பொருந்தும். நாம் என்னவாக இருந்தோம் என்பதைக் கடந்தே நாம் எப்படி இருக்க முடியும் என்பதைக் கண்டுபிடிக்க முடிகிறது. அதே சமயம், நாம் எப்படி இருக்க முடியும் என்பதைக் கண்டு கொள்வதால் நாம் என்னவாக இருந்தோம் என்பதும் இல்லாமல் போவதில்லை. தன்னுணர்வின் திரைக்குப்பின் களைவதும் புனைவதும் வேடங்களாகவே எப்போதும் இருக்கின்றன, அவை உறவுகளில் ஒரு சுவையான நாடகத்தன்மை சேர்ப்பதையும் இந்தக் கதையைப் படிக்கும்போது உணரலாம்.