தொடர்ந்து பதின்மூன்று வாரங்களாக ஆதவனின் சிறுகதைகள் சில குறித்து வெ. சுரேஷ் சிறு குறிப்புகள் எழுதி வந்தார். அந்தத் தொடர் சென்ற வாரத்துடன் முடிவுக்கு வருகிறது. ஆதவனின் புகழ் பெற்ற சிறுகதைகள் சில, கூடுதல் கவனத்துக்குரிய சிறுகதைகள் சில என்ற இந்த அறிமுகங்கள், நகர்ப்புற மத்திய வர்க்கத்தினர் வாழ்வு குறித்த கதைகள் என்ற எல்லைக்குள் ஆதவனைக் குறுக்குவதைக் கேள்விக்குட்படுத்துகின்றன- களம் அவ்வாறிருந்தாலும் ஆதவன் பேச எடுத்துக் கொண்டிருக்கும் விஷயங்கள் பலவகைப்பட்டவை.
1. “லௌகீக வாழ்விலும் பெரும் வெற்றி பெறாத, வணிக இலக்கியத்தில் கிடைக்கும் பெரும்புகழும் அடைய முடியாத ஒரு படைப்பாளிக்கு மிஞ்சுவதுதான் என்ன? தான் தனித்துவமானவன் என்ற ஒரு ஆத்ம திருப்தியா? அல்லது, அந்த அகங்காரத்தின் நிறைவா? அந்த சுய அடையாளமும் சில சமயங்களில் அசைக்கப்படும்போது என்ன மிஞ்சுகிறது?”- புதுமைப்பித்தனின் துரோகம்
2. “ஒரு கலைஞன் பயிலும் கலை, ரசிகர்கள் அவனைக் ஏற்றுக் கொள்வதில் முழுமை அடைகிறது. ஆனால் அந்தக் கலைஞன் எம்மாதிரியான பாராட்டுகளை விரும்பி ஏற்கிறான்? தன் கலையின் எல்லா நுணுக்கங்களையும் புரிந்து கொண்ட ஞானம் மிக்க சிலரின் பாராட்டா, அல்லது அவனது பிராபல்யத்தின் காரணமாக ஒரு மந்தைத்தனத்தோடு குவிக்கப்படும் வெற்றுப் புகழ் மொழிகளா? ” – அகந்தை
3. “எளிய மத்தியதர வர்க்க, வயதான பிராமணப் பெண்ணின் வாழ்க்கை பற்றியது என்று தோன்றினாலும், மனிதர்கள் தம் சக மனிதருக்குத் தரக்கூடிய மதிப்புமிக்க இடைவெளி குறித்தும், சக மனிதருக்கு நாம் அளிக்கக்கூடிய இடத்தையும் மதிப்பையும் நம் சுயத்தை இழக்காமல் கொடுக்க முடியுமா என்ற ஆழமான கேள்வியும் முன்வைப்பதே இந்தப் படைப்பு எனலாம்.” – சிரிப்பு
4. “முதுமையையும் பிரிவையும் மனித மனம் எதிர்கொள்ளும் விதத்தை இதை விட அழகாகச் சொன்ன ஒரு கதையை நான் தமிழில் படித்ததில்லை. ஆர். சூடாமணியின் ஒரு கதையே ஆதவனின் இந்தக் கதைக்குப் பின் என் நினைவில் வருகிறது. முதுமையின் துயர், எதிரில் நீண்டு நெருங்கும் பிரிவின் நிழல் இவையெல்லாம் தமிழ் சிறுகதை உலகில் அதிகம் பதிவானதில்லை. வழக்கம் போல ஆழ்மனதின் நினைவோட்டங்களை உரையாடல்களாக மாற்றுவதில் ஆதவனுக்கிருந்த நுட்பமான திறமை வியக்க வைக்கிறது.” – அந்தி
5. “மந்தையில் சேராதிருத்தல், தனித்து நின்று தன் அடையாளத்தை பேணுதல், மரபிலிருந்து விலகி நிற்றல் என்பவை அவரது நிறைய கதாபாத்திரங்களின் பொது அம்சங்கள். வயதடைதல் என்ற நிகழ்வின் போக்குக்கு உதாரண படைப்பாக அவரது “என் பெயர் ராமசேஷன்” நாவலைச் சொல்லலாம் என்றால், மந்தை திரும்புதலை மிகத் துல்லியமாக எழுத்தில் கொண்டுவந்த அவரது சிறுகதை (சற்றே நீளமான) “கார்த்திக்“.” – கார்த்திக்
6. “தன்மை ஒருமையில் விவரிக்கப்படும் இந்தக் கதையில் எந்த ஒரு பாத்திரத்துக்கும் பெயரே கிடையாது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஒரு கோணத்தில், வேஷங்கள் அணிவதில் உள்ள பொய்ம்மையைச் சித்தரிப்பது என்று தோன்றினாலும் இன்னொரு கோணத்தில், சலிக்கும் உண்மையிலிருந்து விடுபட வேஷங்கள் அணிவதில் உள்ள சவாலும் கற்பனைகள் தரும் சந்தோஷத்தையும் ரசிக்கத்தக்கதாகவே கூடத் தோன்றுகிறது.” – ‘லைட்ஸ் ஆன், ரெடி ஃபார் தி டேக்!’
7. “80களின் தமிழ் இலக்கியத்திலும் வேலையில்லாத் திண்டாட்டத்தால் பாதிக்கப்பட்டு தனக்குள் சுருங்கி வெதும்பி துயருறும் வாலிபர்கள் நிறையவே உண்டு… வண்ணநிலவனின், ‘கரையும் உருவங்கள்’ போன்ற சில கதைகள், அக்கால இளைஞர்களின் எதிர்வினைகளை உளவியல் ரீதியாகவும் வெளிப்படுத்தின. ஆனால் அந்த வகை கதைகளில் தனித்து நிற்கும் ஒன்று.. ஆதவனின் “இன்டர்வியூ” என்றே பெயர் கொண்ட ஒரு சிறுகதை” – இன்டர்வியூ
8. “அங்கே வாசுதேவனின் மனம் ஒரு உண்மையைக் கண்டு கொள்கிறது. தன் தம்பிக்கு எப்படி தன் வாழ்க்கை முறையை, தம் குணநலன்களை அடிப்படையாகக் கொண்ட உண்மையான மதிப்புக்கு பதில் ஒரு மௌடீகமான பக்தி இருக்கிறதோ, அதே போல குடும்பத்தினருக்கும் தன் மேல் இருக்கும் பெருமை, அவரைப் புரிந்து கொண்டு வந்ததல்ல என்றே அவர் புரிந்து கொள்கிறார்.” – தில்லி அண்ணா
9. “தலைப்பு சொல்லும் சேதியே அபாரம். தான் வேலைக்காரியாக இருக்கலாம், ஆனால் தன மகன் நன்றாக படித்து பிற்காலத்தில் பெரிய ஆளாக வரப்போகிறவன், அவனுக்கு தமக்கு சமதையாக ஒரு எவர்சில்வர் தட்டு வாங்கிக் கொடுக்க மனமில்லாத அந்த வீட்டாரின் பரிசை, அன்பை, தூக்கி எறியும் பாப்பாவின் ரோஷம் அந்தத் தலைப்பு வைத்திருக்கத் தூண்டியிருக்கலாம்” – லேடி
10. “கைலாசமும் அகர்வாலும், இருவருமே அடிப்படையில் நட்பார்ந்தவர்கள்தான், ஒருவொருக்கொருவர் மதித்து உறவாடும் நோக்கமும் உள்ளவர்கள்தான். ஆனாலும் அவர்களிடையே ஏன் அந்த நட்பு மலர்வதில்லை என்பதே கைலாசத்தைக் குடையும், குற்ற உணர்வுக்கு ஆளாக்கும் கேள்வி. எல்லா வழிகளிலும் முயன்றும் முகிழ்க்காத ஒரு நட்பை சராசரித்தனத்திலிருந்து மேம்பட்டிருப்பதாக தான் நம்பும் தன் தனித்தன்மையின் தோல்வி என்றே காண்கிறார் கைலாசம்.” – ஒரு அறையில் இரு நாற்காலிகள்
11. “ஜெயாவின் தேவை, தன்னை பொறுப்பு மிக்கவளாக. பெரியவளாக உணரச் செய்யும், சதா திருமணத்துக்காக ஏங்கிக் கொண்டிருப்பவளாகக் காட்டும் அவளது பெற்றோரின் இருப்பு அல்ல, தன்னை ஒரு பெண்ணாக உணரச் செய்து, தான் அவனுக்காக மாற வேண்டிய அவசியத்தை நினைவூட்டி அவளை அச்சுறுத்தும் கங்காதரன் போன்ற ஆண்கள் அல்ல. அவளுக்கு வேண்டியது, அவளைத் தம்மைவிடச் சிறியவளாகக் கருதி, பாதுகாப்பாக உணரச் செய்யும் தன் தோழிகளைப் போன்றவர்களும், அவளது தம்பியை நினைவூட்டும் இந்தப் புகைப்படமும்தான். ” – சின்ன ஜெயா
12. “பெரிய நிறுவனங்களுக்கு முன் சிறுத்துப் போய் நியாய அநியாயங்களை எதிர்க்கவோ, அடையாளம் காட்டவோ துணிவின்றி,தன உரிமைகளையும் கூட அதட்டிக் கேட்க தெரியாமல், தன் குடும்பம் எனும் சிறு வளைக்குள்ளேயே ஒடுங்கி, புலம்பும் ஒரு ஆணின் மன அவசங்களைக் காட்டுகிறது. அதே சமயம், மற்றொரு கோணமாக, அவன் எந்த அளவுக்கு அதே வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் தன் சக ஜீவனான மனைவியின் உலகைப்பற்றி அறியாமலேயே இருக்கிறான் என்பதையும் அனாயாசமாகக் காட்டுகிறது” – கருப்பு அம்பா கதை
13. “வித்தியாசங்கள்தான் ரசனையையும் ஈர்ப்பையும் தூண்டுகின்றன. ஆனால், அவையேதான் வெறுப்பைத் தூண்டவும் செய்கின்றன, இணக்கமான உறவுகள் கொண்ட உலகை அழிக்கின்றன. ஒவ்வொரு வீட்டிலும்கூட வித்தியாசங்கள் உண்டாக்கும் வெறுப்புகளும், அவை உருவாக்கும் அகதிகளும் இல்லையா என்ன? .” – அகதிகள்
சிறுகதைகளை கவனப்படுத்தும் வரிசையில் அடுத்த தொடர் விரைவில் துவங்குகிறது.