ஆயிரத்தொரு இரவுகள்

‘இரவுக்கு ஆயிரத்தொரு கண்கள் -2: ஆயிரத்து இரண்டாம் இரவின் கதை’

– ஆர். அஜய்-

ஆயிரத்தொரு இரவுகள் கதைகள் கேட்டபின் மனம் மாறி ஷெரியார் (Shahryar)  ஷஹேரேசாதவுடன் (Scheherazade) இனிமையான இல்வாழ்க்கை நடத்தினார் என்று ‘அரேபிய இரவுகள்‘ முடிகின்றன (இந்த ஆயிரத்தொரு இரவு காலகட்டத்தில் கதை சொல்லல்/ கேட்டல் இவற்றினூடே மூன்று குழந்தைகள் ஷஹேரேசாத/ ஷெரியார் தம்பதியருக்கு பிறந்தன என்பதையும் நினைவில் கொள்வோம்). அதன்பின் அவர்களுடைய இல்வாழ்க்கை எப்படி இருந்திருக்கக்கூடும்?  தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருந்த கத்தி நீங்கியபின், தினமும் அரசனை மகிழ்விக்கும் கதை சொல்ல வேண்டிய நிர்பந்தம் இனி இல்லாத நிலையில் ஷஹேரேசாத அடுத்த இரவை எப்படி கழித்திருப்பார்? உறக்கமில்லாமல் கதை சொல்லிச் சொல்லி அலுத்துப் போய் நிம்மதியான இரவுத் தூக்கத்தை எதிர்நோக்கி காத்திருந்திருப்பாரா அல்லது ‘ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது’ என்பதற்கு ஏற்ப மேலும் கதைகளை உருவாக்கி இருப்பாரா? எட்கர் ஆலன் போ, ஆயிரத்தி இரண்டாவது இரவிலும் ஷஹேரேசாத இன்னொரு கதையை சொல்வதாக ‘The Thousand-And-Second Tale of Scheherazade‘ ல் புனைகிறார்.

போவின் புகழ் பெற்ற ஆக்கங்களைப் படித்து அவருடையது மிக இருண்மையான உலகம் என (சரியான) புரிதலில் இருப்பவர்களுக்கு இந்தக் கதையில் உள்ள மெல்லிய நகைச்சுவை புதிதாக இருக்கக்கூடும். அந்தப்புரத்தில் உள்ள அனைத்து கன்னிகளையும் கொன்று விடுவதாக தன் தாடியின் மீது ஷெரியார் உறுதி எடுக்கிறார். அவரை தைரியமாக மணம் முடிக்கும் ஷஹேரேசாத கணவனை உறக்கத்தில் இருந்து எழுப்பும்போது அவன் அவளைக் கடிந்து கொள்வதில்லை என்பதற்கு பாசம் காரணமல்ல, ‘… who bore her none the worse will because he intended to wring her neck on the morrow, …‘  என்பதுதான். தன் கணவன் குறட்டை விடுவதைப் பற்றிய மனத்தாங்கலும் ஷஹேரேசாதவுக்கு உள்ளது. எல்லாம் சுபமாக முடிந்த பின்பு, ஆயிரத்தி இரண்டாம் இரவில். குறட்டை விட்டபடி உறங்கிக் கொண்டிருக்கும் கணவனைப் பல முறை கிள்ளி எழுப்பி ஷஹேரேசாத சிந்த்பாத்தின் ஏழாவது பயணத்தை பற்றிய கதை சொல்ல ஆரம்பிக்கிறார். குறட்டை ஒலியின் நாராசத்தை கேட்காமல் இருக்கவே இன்னொரு கதையை ஆரம்பித்தார் என்றும் கருதவும் இடம் உள்ளது.

வழக்கம் போல் பயணப் பித்தால் பீடிக்கப்படும் சிந்த்பாத் இன்னொரு பிரயாணத்தை ஆரம்பிக்கிறான். ஆனால் எப்போதும் போல் பெரும் பாம்புகளையோ, பறவைகளையோ சந்திப்பதில்லை, பயமுறுத்தும் ஜின்களோ, மயக்கும் அழகிகளோ, சாகஸ நிகழ்வுகளோ இல்லை. மனித- மிருக அம்சங்கள் கொண்ட ஜீவராசி ஒன்றைச் சந்திப்பவன், அதனால் பல இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவதும், அங்கு அவன் காண்பவற்றை விவரிப்பதுமே மீதிக் கதை. முதற்பார்வையில் பெரிதாக சுவாரஸ்யம் இல்லாத நிகழ்வுகள்தான், ஆனால் தன் (போவின்) காலத்திய கண்டுபிடிப்புகளை சிந்த்பாத் காண்பதாக சுட்டிச் செல்வதின் மூலம் தன் தனித்துவத்தை பதிவு செய்கிறார். சார்ல்ஸ் பாபெஜ்ஜின் கணக்கீடு கருவி, ஆரம்ப கால புகைப்படக் கருவி, ரெயில் வண்டி என சிந்த்பாத் பார்ப்பவற்றின் பெயரை நேரடியாக சொல்லாமல் குறிப்பால் உணர்த்துகிறார். ‘Another directed the sun to paint his portrait, and the sun did’ …’In place of corn, he had black stones for his usual good; and yet, in spite of so hard a diet, he was so strong and swift that he would drag a load more weighty than the grandest temple in this city, at a rate surpassing that of the flight of most birds‘  போன்றவை எவற்றைக் குறிக்கின்றன என வாசகன் யூகிக்க முடியும்.

இவற்றை ஷெரியார் எவ்வாறு எதிர்கொள்கிறார்? மனித- மிருக ஜீவராசி பற்றி கேள்விப்படும்போது மிகவும் மகிழ்விப்பதாக இருப்பதாக சொல்பவர் அதன் பின் ‘Hum’, ‘Hoo’, ‘Humph’, ‘Pooh’, ‘Stuff’ போன்ற பொத்தாம் பொதுவான ஒற்றை வார்த்தை எதிர்வினைகள் ஆற்றுவதன் மூலமும் அவை பின்னர்  ‘Nonsense’,  ‘Twattle’, ‘Ridiculous’, ‘Absurd’,  ‘Preposterous’ ஆக மாறுவதன் மூலமுமே அவர் மனநிலையை போ நமக்கு உணர்த்துகிறார். எனவே இறுதியில் ஷஹேரேசாதவைக் கொல்ல அவர் உத்தரவிடுவது பெரிய வியப்பில்லை. முதலில் வருத்தமடையும் ஷஹேரேசாத, பின் தன் அறிவிலி கணவனின் குழந்தைத்தனமான துர்நடத்தை பல கற்பனை செய்ய முடியாத சாகசங்களைப் பற்றி அவன் அறிந்து கொள்ள முடியாமல் தடுத்து விடுவது அவனுக்குதான் நஷ்டம் என்று தன்னை தேற்றிக் கொண்டு மரணத்தை தழுவுவதில் அவல நகைச்சுவை உள்ளது.

‘நுணலும் தன் வாயால் கெடும்’ என்பதன் உதாரணம் ஷஹேரேசாத என்று எளிதில் சொல்லி விடலாம். அதே நேரம் இன்னொன்றும் கவனிக்கப்பட வேண்டியது. பல விசித்திர, அசாதாரண கதைகளை ஆயிரத்தொரு இரவுகள் சந்தோஷமாக கேட்டு வந்த ஷெரியார் ஏன் உண்மையை எதிர்கொள்ளும்போது அது தலைவலி ஏற்படுத்துவதாக சொல்லி, அதற்காக மனைவியை தண்டிக்க வேண்டும்? போவிற்குதான் இவை நிகழ்கால உண்மைகள், ஷெரியாரைப் பொறுத்தவை அவை பொய்கள் (அல்லது எதிர்கால உண்மைகள்) என்பது சரியே, ஆனாலும் இந்த (நிகழ்/ எதிர்கால) உண்மைகள்/ பொய்கள் ஷஹேரேசாதவின் புனைவுகளைவிட எந்தளவுக்கு மாறுபட்டவை, நம்ப முடியாதவை? ‘Truth is stranger than fiction‘ என்று கதையின் ஆரம்பத்தில் போ குறிப்பிடுவதை கதையின் இறுதியோடு ஒப்பிட்டு பார்ப்பது போ இந்தக் கதையில் என்ன முயல்கிறார் என்பதை புரிய உதவக்கூடும். அதிலுள்ள நகைமுரணும்,  கதையின் மெல்லிய நகைச்சுவை அம்சமும் இதை கவனிக்கப்பட வேண்டிய கதையாக்குகின்றன.

oOo

இரவுக்கு ஆயிரத்தொரு கண்கள் – 1 – ஆர். அஜய்

இரவுக்கு ஆயிரத்தொரு கண்கள் – 1

– ஆர். அஜய்-

lyons1

“... They embraced each other and she took him and lay back, undoing her drawers. The tool that his father had bequeathed him moved and he called out: ‘Help me, Shaikh Zacharias, father of veins’. He put his hands on her hips and, setting the vein of sweetness to the Gate of the Cleft, he pushed it until it reached the Lattice Gate and passed through the gate of Victories. After that, he entered the Monday market, the Tuesday market, the Wednesday market and the Thursday market. He found that the carpet filled the room and he moved the tuber round against its covering until the two met“.

லிட்டிரரி ரெவ்யு‘ பல ஆண்டுகளாக அளித்து வரும் ‘மோசமான கலவி எழுத்து’ (‘Bad sex in fiction’) விருதுக்கு போட்டியிடும் தகுதி கொண்ட இந்தப் பத்தி – இந்த விருதுக்கான இறுதிப் பட்டியல் வரை தேர்வு செய்யப்பட்டுள்ள பிலிப் ராத், முரகாமி போன்ற- நம் சமகால இலக்கிய ஜாம்பவான்களால் எழுதப்படவில்லை. குழந்தைகள் படிக்கும்படியாக, பல அம்சங்களை நீக்கி எளிமையான முறையில் பலரால் பல பதிப்புக்களில் -சில புதிய சேர்க்கைகளோடு- மொழிபெயர்க்கப்பட்டு, மாயாஜால, சாகச கதைகளின் தொகுப்பாக மட்டுமே அறியப்படும் ‘ஆயிரத்தொரு அரேபிய இரவுகளின் கதைகளி’ல் (The Arabian Nights Tales of 1001 nights) உள்ள ஒரு கதையின் பகுதி இது என்பது வியப்பளிக்கக்கூடும்.

அரேபிய இரவுகளின் கதைகள் மட்டுமல்ல, க்ரீம் சகோதரர்களின் (Grimm Brothers) தேவதைக் கதைகள் முதற்கொண்டு மற்ற புகழ் பெற்ற நட்டார் கதைகளும் இத்தகைய சுத்திகரிப்புக்கு உள்ளாகியுள்ளன. உதாரணமாக அரேபிய இரவுகளின் மிகவும் புகழ்பெற்ற கதைகளில் ஒன்றான ‘அலிபாபாவின்’ கதை தொகுதியின் பிறசேர்க்கை என்பதும் நூல்களிலும்/ திரைப்படங்களிலும் அலிபாபாவின் காதலியாக வரும் மற்யானா (Marjana/ Morgiana), உண்மையில் அவன் அடிமை என்பதும், அவளே கொள்ளையர்களை ஒழிப்பதில் முக்கிய பங்கு வகிப்பதும், இறுதியில் அலிபாபா அவளை தன் மகனுக்கு மணம் முடித்து வைப்பதும் பரவலாக அறியப்படாத ஒன்றாக இருக்கும்.

வழமையான ஆண்- பெண் உறவு மட்டுமில்லாமல், தற்பால் விழைவு, ரத்த உறவுகளுக்குள் ஏற்படும் விபரீத சம்பந்தம் என பாலியல் விழைவுகளின் பல சாத்தியங்களை தன்னுள் கொண்டுள்ள ‘அரேபிய இரவுக்’ கதைகளை ‘பாலியல்’ என்ற கோணத்தில் தொகுத்து நோக்குவது சுவாரஸ்யமான சில புரிதல்களை தரக்கூடும். ‘ரோஜா போன்ற கன்னங்கள்’, ‘பதினான்கு முழு நிலவுகளை ஒன்று சேர்ந்தது போன்ற ஒளிமிக்க அழகிய முகம்’, ‘உறுதியான உடற்கட்டு’, இந்த வர்ணனைகள் பெண்ணை விவரிப்பவை அல்ல, ஆண்களை. ‘அரேபிய இரவுக் கதைகளில் பெண்களுக்கு நிகராக ஆண்களின் அழகும் மிக விரிவாக வர்ணிக்கப்படுவது முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று.

இத்தகைய வெளிப்படையான விவரிப்புக்கள் ஒரு புறம் இருக்க, கதைகளில் வரும் ஆண் பாத்திரங்கள் தற்பால் விழைவுள்ளவர்களாக இருப்பின் அவர்கள் தீயவர்களாக வார்க்கப்பட்டிருப்பதின் பின்னால் உள்ள உளவியல் சிக்கல் யோசிக்கப்பட வேண்டியது. தன்னை குறித்து எந்த நேரடி பொருளையும் தராத விவரிப்பில் வெளிப்படையாக இருக்கும் கதைசொல்லி(கள்), தங்கள் விழைவு குறித்து குற்றவுணர்வை தீய தற்பால் பாத்திரங்களின் மூலம் கடந்து செல்கிறார்களா? தற்பால் விழைவுள்ள பெண்களும் இவ்வாறே படைக்கப்பட்டிருக்கிறார்கள்.

பட்டி விக்கிரமாதித்தியன் கதைகளில் வரும் ஒரு தொடர் அம்சம், பெண்களின் சலன புத்தி மற்றும் அதனால் அவர்கள் எளிதில் சோரம் போவது குறித்த குற்றச்சாட்டுக்கள். நீராடச் செல்லும் முனிவர் ஒருவர் தன் ஜடாமுடியில் இருந்து ஒரு பெண்ணை விடுவித்து செல்ல, அவளோ தன் ஆடையின் முடிச்சில் இருந்து தன் சோர நாயகனை விடுவித்து அவனுடன் களித்திருப்பதாக வரும் பட்டி- விக்கிரமாத்தியன் கதை நிகழ்வை வேறு வேறு வடிவங்களில் பிற நாட்டார் கதை தொகுதிகளிலும் காணலாம். (‘கதா சரித சாகரம்’ போன்ற சம்ஸ்கிருத இலக்கியங்களுக்கும் அரேபிய இரவுகளுக்கும் உள்ள சில ஒற்றுமைகள், கொடுக்கல்/ வாங்கல்கள், இரண்டும் அவற்றுக்கும் முந்தைய வேறு பல மூல ஆக்கங்களில் இருந்து பெற்றுக் கொண்டவை பற்றியும், பஞ்சதந்திர கதைகளுக்கும், மிருகங்களை பற்றிய அரேபிய இரவுகளில் உள்ள கதைகளுக்கும் உள்ள ஒற்றுமைகள் குறித்தும் இலக்கிய ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள், இவை வேறொரு கட்டுரையில் பார்க்கப்படவேண்டியவை). அரேபிய இரவு கதைகளிலும் பெண்கள் இரண்டாம் தரத்தில்தான் வைக்கப்படுகிறார்கள். பேரழகியை கண்டதும் அண்டமே பொசுங்கிப் போகும் அளவிற்கும் பெருமூச்சு விடும், அவளைப் பிரிந்தால் உடல் நலம் குன்றி துயரத்தில் உழலும் ஆண்கள் இருந்தாலும், ‘ஆடமின் விலா எலும்பில் இருந்து வந்தவர்கள்’ என்று வசையாக பயன்படுத்தப்படும் சொற்றொடரின் மூலம் பல இடங்களில் இகழ்ச்சியாக பெண்கள் சுட்டப்படுகிறார்கள்.

பாலியல் விழைவுகள் இட்டுச் செல்லும் முடிவுகளிலும் ஆண்- பெண் வேறுபாடுகள் உள்ளன. மாற்றந்தாய் மூலம் பிறந்த பெண்ணுடன் (step-sister) உறவு கொண்டு குழந்தை பெற்று கொள்ளும் சகோதரன், தன் மகனின் காதலி/ மனைவிக்கு உணவில் மயக்க மருந்து கலந்து அவளுடன் கலவி கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ளும் தந்தை பெரிய தண்டனைக்கு உள்ளவதில்லை. சகோதரனாவது பழிக்கு அஞ்சி சகோதரியை இன்னொருவனுக்கு மணம் முடிக்கிறான், அரசனான தந்தையோ தன் இச்சை தீர்ந்தவுடன் அவளை மறந்து விடுகிறான். அதே நேரம், கணவனின் மற்றொரு மனைவி மூலம் பிறந்த மகனிடம் (step-son) இச்சை கொள்ளும் பெண்கள் தண்டிக்கப்படுகிறார்கள்.

பெண்கள் சுதந்திரமாக தங்கள் விழைவுகளை அனுபவிக்கும் நிகழ்வுகளும் இந்தக் கதைகளில் உள்ளன. தன் ஏழு சகோதரர்கள் குறித்து நாவிதன் சொல்லும் கதைகளில் இரண்டாவது சகோதரன் சந்திக்கும் பெண்ணும் அவள் சேடிகளும் அவனை மயக்கம் வரும் அளவிற்கு அடிக்கிறார்கள், மீசையையும், தாடியையும் பிடுங்குகிறார்கள், புருவத்திற்கு சாயம் அடிக்கிறார்கள். இவற்றை பொறுமையாக சகித்துக் கொண்டிருந்தால், அதன் பின் அப்பெண் குடி மிகுதியில் உடைகளைக் களைந்து விட்டு நிர்வாணமாக ஒவ்வொரு அறையாக அவனிடமிருந்து தப்பிப்பது போல் ஓட, இவனும் உடைகளை களைந்து அவளை துரத்தியபடி ஓடி அவன் குறி விறைப்படைந்த பின்னரே அவனை தன்னுடன் இணைய விடுவாள் என்று சொல்லப்படுகிறது. ஐம்பது விதமான விசித்திர பாலியல் விழைவுகளுக்கு (fetish) முன்னோடியாக இப்பெண் இருக்கக்கூடும்.

‘கூலி சுமப்பவன் மற்றும் மூன்று பெண்கள்’ கதையில் அவர்கள் அவனுடன் உடல் பற்றிய உணர்வின்றி, தங்கள் நிர்வாணத்தை குறித்து சுவாதீனமாக இருப்பதும், அவனுடன் குடித்து மகிழ்ந்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது. பார்த்தவுடன் காதல் வயப்படும் கன்னிப் பெண்களும் மீறல்களை ஓரளவு வரை அனுமதித்து, கலவி அல்லாத மற்ற களியாட்டங்களில் காதலனுடன் ஈடுபடுகிறார்கள். ‘..played with him..‘, ‘..played with each other..‘ என்றே இத்தகைய களியாட்டங்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. தன் கணவன் வேறொரு பெண்ணுடன் உறவு கொள்வதை பார்த்துவிடும் பெண், அதற்கு பழி வாங்கும் விதமாக நகரத்திலேயே மிகவும் அழுக்கான மனிதனை தேர்ந்தெடுத்து அவனுடன் உறவு கொள்கிறாள். பின் கணவன் மன்னிப்பு கேட்டதும் அதை ஏற்றுக் கொள்பவள், தன் கணவன் மீண்டும் தவறு செய்தால் அவனை அழைப்பதாக அந்த அழுக்கான ஆசாமியிடம் கூறுகிறாள்.

இவற்றை பெண்ணியப் பிரதிகளாக பார்க்கத் தேவையில்லை, அடுக்குமுறை கொண்ட ஒரு -அரசர்கள்/ பிரபுக்களால் கவரப்பட்டு அல்லது அடிமைகளாக வாங்கப்பட்டு அந்தப்புரத்தில் உள்ள பலப் பெண்களில் ஒருவராக வாழ்வை கழிக்க வேண்டிய- சூழலின் ஆழத்தில் பதுங்கி இருக்கும் சுதந்திரத்திற்கான விழைவாக அணுகலாம்.

சிறு குற்றங்களுக்கும் கசையடிகள், கை, கால் வெட்டப்படுதல் போன்ற கடும் தண்டனைகள் கொண்ட சட்ட திட்டங்களின் – இத்தகைய பல நிகழ்வுகளை இக்கதைகளில் காண முடிகிறது – காலத்திய பாக்தாத்திலோ, கெய்ரோவிலோ இரவு நேரம். ஜன சந்தடி மிகுந்த வணிக/ குடியிருப்பு வீதிகள். எங்கும் காவலர்களின் கண்காணிப்பு, தண்டனை குறித்த பயம். பொதுவெளியில் மாதிரி குடிமகன்களாக தங்கள் வேலையை மட்டும் கவனித்தபடி அவசரமாக சென்று கொண்டிருப்பவர்கள். குற்றங்கள் எதுவும் நடக்காதது போல் வெளித்தோற்றம் அளிக்கும் சமூகம், எங்கும் ஒழுங்கின் அரசாங்கம். அதே நகரங்களில் அதே இரவு நேரத்தில், தாழிடப்பட்ட, எண்ணெய் விளக்குகளால் மஞ்சள் நிற ஒளிரூட்டப்பட்ட, வாசனை திரவியங்களின் மணத்தால் நிரம்பிய வீடுகளுக்குள்ளும், வணிக நிறுவனங்களின் உள்ளறைகளிலும் அரங்கேற்றப்படும் அனைத்து விதமான மனித ஆசைகளின் ஆடல்கள். இரவுக்கு ஆயிரம் கண்கள் இருப்பின், இச்சைகளின் கூர்மையான ஒளியால் நிரம்பித் ததும்பும் இக்கதைகளின் 1001*1000 கண்களும் அவற்றைக் கொண்டு இரவின் இருளை துளைத்து ஊடுருவிச் செல்கின்றன. அவற்றில் சில நம்முடைய கண்களே, அவை பருகும் இருளும் நம் ஆழ்மன விழைவுகளே.

burton

பின்குறிப்பு:

மால்கம் லாயன்ஸ் (Malcom Lyons), அர்சுலா லாயன்ஸ் (Ursula Lyons) தம்பதியர் இணைந்து மொழிபெயர்த்து, பெங்குயின் பதிப்பாக வந்துள்ள மூன்று தொகுதிகள் கொண்ட நூல்களில் (The Arabian Nights Tales of 1001 Nights Volumes 1, 2 & 3) இருந்து மேற்கோள்கள் தரப்பட்டுள்ளன. ரிச்சர்ட் பர்டனின் மொழிபெயர்ப்புக்குப் பின் செய்யப்பட்ட முழு மொழிபெயர்ப்பு என்று அறியப்படும் இவை முன்னதோடு ஒப்பிடுகையில் இன்றைய ஆங்கிலத்திற்கு அணுக்கமாக உள்ள நடையை உடையவை (பர்டனின் மொழிபெயர்ப்பில் அலிபாபாவின் மருமகன் மற்யானாவை மணந்து கொள்வது என்பது போன்ற பல பாடபேதங்கள் இரண்டிற்கும் இடையே உள்ளன). மொழிபெயர்ப்பில் ஆர்வமுள்ளவர்களுக்கு இரண்டுமே படிக்கப்பட வேண்டியவை.