இராகப் பெண்கள்

இராகப் பெண்கள் – 8: வராளி புன்னாக வராளி –அந்தி மயக்கம்

பானுமதி. ந

8: வராளி புன்னாக வராளி –அந்தி மயக்கம்

இதை நீர் சூழ்ந்த உலகு என்கிறார்கள். பனிக்குடத்துடன் பிறந்து நீர்க்குடத்துடன் நம் வாழ்வு நிறைகிறது. துவங்கும் புள்ளியும், முடியும் புள்ளியும் நீர்… நீர். நம் கடவுளின் தலையிலும் நீர்… அவன் உறைவிடமும் நீர்…

காவிரி பாயும் கன்னித் தமிழ்நாட்டில் தரங்கிணி அறிமுகமாகிறாள். அந்த ஆறுதான் அவளின் நதிமூலம்.. “எங்கம்மா என்னை எப்போ காவேரிக்குப் பெண்ணா ஆசீர்வாதம் பண்ணிவிட்டாளோ, அப்படியேதான் நான் ஆயிட்டேன்- வேண்டியவா, வேண்டாதவா எல்லாருக்கும் ஒண்ணாய், ஆத்து ஜலம் மாதிரி, எங்கெங்கே எப்படி எப்படியோ, ஒரு சமயம் ஒடுங்கி, ஒரு சமயம் பெருகி, ஒரு சமயம் ஒதுங்கி, ஒரு சமயம் நெருங்கி, எல்லோர் கைப்பட, எல்லாச் சொல்லும் பட வளர்ந்தேன்,” தரங்கிணி இராக “மாயா”.

அவள் கணவன்… தங்களிடையில் குழந்தையும் கூட தனிமையின் பங்கம் என நினைப்பவன். அவன் சொல்லும் ஒரு தொடர் நம்மைப் புரட்டிப் போட்டுவிடும். ”தனியாயிருக்கலாம். ஆனால்…தனிமையாயிருத்தல்…..அப்பா

குளிக்கப் போனவிடத்தில் மூழ்கிப் போய் தான் இறந்து போய்விட்டோம் என்பதை உணரும் உணர்வு மாத்திரமிருந்தால் எப்படி இருக்கும்?” அவனை அலைக்கும் தீயை அவள் நெருக்கத்தின் குளுமையில்தான் ஆற்றிக் கொள்ள முடிந்தது. சாவும் சத்தியமும் அவனளவில் ஒன்று.

அவள் உயிர் நீட்சி ஒன்று தான் வறட்சி தீர்க்கும் மருந்து என்கிறாள். சொல்லாலே மந்திரம் செய்யும் கதை இது. ”எனக்கு உயிர் மேல்தான் ஆசை. நான் செத்துப் போனாலும் உசிரோடு இருக்கணும். உசிர் மேலே எனக்கு அவ்வளவு உசிர்.”

இருக்குன்னா இல்லை என்போம். இல்லேன்னா இருக்கு என்போம் இப்படித்தான்”- அவள் சொல்லி, அவள் உணர்ந்து, இன்னுமொரு கல்யாணத்திற்கு அவன் செவி சாய்ப்பதை அவள் தாயாகப் போகும் தருணத்தில், தன்னை வளர்த்த ஆற்றின் கரையில் அவள் அறிவது….அப்பா! ”வானில் தங்க ரதம் ஒன்று உருவாகி எழும்பியது. கொத்துக்கொத்தாய்ச் சடை பிடித்த பிடரி மயிர் அலை மோத தலைகள்  உதறிக் கொண்டு வெள்ளை குதிரைகள் தாமே தோன்றி ரதத்துடன் தம்மைப் பூட்டிக் கொண்டன. ரதம் நகர்ந்தது. சக்கரங்களினடியில் அகிற்புழுதி தோகை தோகையாய் எழும்பிற்று.”

மாயா தரங்கிணி… ஆறு வளர்த்த இராகம்… அதுவே அவள் அகம், அதுவே அவள் புறம். அதுவே அவள் அறம் அதுவே அவள் மறம்.. அவளுயிரின் தொடர்ச்சி… தன்னை பலியிட்டாவது சாவிலும் வாழும் ஆசை.

அவள் புன்னாக வராளி..அவள் தொடங்குவதே நிஷாதத்தில்தான், முடிவதும் அதில்தான்
நி ச ரி க ம ப த நி நி த ப ம க ரி ச நி

இனி பங்கஜம்——நளபாக விருந்தில் முதன்மையான உணவு.

இவளை இனம் கண்டு கொள்வது அத்தனை எளிதில்லை.இவள் அந்த கலவையில் செய்த உணவோ, இந்தக் கலவையில் செய்த உணவோ என உண்பவனை கேட்டுக் கொள்ளச் செய்கிறார் தி. ஜா.

அதிக முதன்மையில்லாமல் அறிமுகமாகி நினைவில் நிற்கும் அற்புத ருசி. கண்களுக்கும், நாவிற்கும், வயிற்றிற்கும், மனதிற்கும் இசைவான ஒரு அமுது. ”இவளைப் பார்த்தால் இருபது வயது போல- முப்பது வயது போல- நாற்பது வயது போல-எல்லா வயதும் தெரிகிற தோற்றம்”. இது மாமியாரான ரங்கமணி மருமகளைப் பற்றி நினைக்கும் தோற்றம்.

யாத்ரா ஸ்பெஷலில் சமையல் தலைமையாக ரங்கமணி கண்ட காமேச்வரன் – ஒரு ஆசானாக, மகனாக, சமையல் கலைஞனாக, அம்பாள் உபாசகனாக, அறிவு, அழகு, ஒழுக்கம், பண்பு ஒருமித்தவனாக, தன் வம்சத்தின் சாபத்தை களைபவனாக ரங்கமணியைக் காண வைக்கிறது. அந்த யாத்திரையில் வரும் ஒரு ஜோதிடர் சொல்வது, அவளைச் சிந்திக்க வைத்து காமேச்வரனை தன் வீட்டில் தனக்கு மகனாக சமையல்காரனாக, பூஜை செய்து குல சாபம் போக்குபவனாக அழைப்பு விடுக்கிறது. இரவல் வம்சமாகவே வளரும் தன் குடியில் தன் வம்சத்து வித்து வேண்டும் என அவள் நினைக்கிறாள். அவளுக்கு ஒரு தத்துப் பிள்ளை உண்டு. அந்தப் பிள்ளை இந்த பங்கஜத்திற்கு சரியான இணை இல்லை என நினைக்கிறாள்.

ஒரே கூரையின் கீழ் வாழும் மூவரின் தனிமையைப் போக்க அவன் வருகிறான். அவர்கள் அன்பு செலுத்த அவன் வேண்டும். அவன் இது வரை அறியாத குடும்ப நேசத்தை அவர்கள் மூலம் அனுபவிக்கிறான். அவன் எல்லாமுமாக இருக்கிறான். தொட்டிச் செடியாக இருந்தவர்கள் தோட்டத்துக் கொடிகளாக, காற்றையும், சூரியனையும்,மிகும் நீர் உறிஞ்சும் மண்ணையும் அனுபவிக்கிறார்கள். இத்தனைக்கும் இடையில் ரங்கமணியும் பங்கஜமும் ஆடும் கண்ணாமூச்சி விளையாட்டு….

உனக்கில்லை …. எனக்குத்தான்”. இளமையும், மிக மிகத் தனிமையுமான நடுவயதும், வாழ்வின் பேழையிலிருந்து பருகத் தவிக்கின்றன. ரங்கமணியின் வயதும், நிலையும் அவளை இலைகள் மூடிய கனியெனக் காட்டுகின்றன. இளமையும், வாழ்வின் உரிமையும் பங்கஜத்தினை எண்ணத்தினால் சற்று அசைத்துப் பார்க்கின்றன. யாரும் இல்லா ஓர் முன்னிரவு சமயத்தில் காமேச்வரனின் விரல்களை பற்றச் செய்கின்றன. தனக்கு அதுவே போதும் என்று அவள் சொல்கையில் தி ஜா கத்தியின் மேல் நடந்த நம்மை பாதுகாப்பாக இறக்கி விடுகிறார். மன இயல் வல்லுனர் போல் தி ஜா போடும் கோலங்கள். உணர்ச்சியில் தடுமாறாத விவேகம்.. ஒரு சமையல காரன் சமைக்கும் மன- மண விருந்து. அவன் கரம் பட்டு அவள் தன் கணவனுடன் உடன்பட்டு காமன் எழுதும் உயிரோவியம்.

ஊரோடு உறவாகிறது அவனுக்கு. புழங்காத அறையினுள் காற்றும், வெளிச்சமும் அவனால் வருகிறது. நட்பும், நேசமும் கலகலப்பும் தனிமையைப் போக்கும் அருமருந்தென செயல்படுகிறது. பங்கஜத்திற்கு சீமந்தம் வருகிறது. அவன் அனைத்துமாக இருக்கிறான். அதில் தத்து வந்த பிள்ளையின் சொந்தக்காரர்களும், குணம் கெட்ட ஊர்க்காரரும் இவனை இணைத்துப் பேச, இந்த சின்னத்தனம் தாங்காது அவன் குமுறுகிறான். பங்கஜத்தின் கணவனோ இந்த அவப் பேச்சுக்களை ஒதுக்கி விடுகிறான். அவன் இருவரின் மேல் கொண்டுள்ள அசையாத நம்பிக்கை மிக அழகாக வெளிப்படுகிறது.

தன் இருப்பிடம் விட்டு வராத பங்கஜம். அவள் புகுந்த ஊரின் பல பகுதிகள் அவள் அறியாதவை. வறட்டு வாழ்வில் வசந்தம் என வந்தவன் அவன். ஆணுக்குப் பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் தோழமையானால் இந்த உலகில் தனிமை என்பதே இல்லை. உடல் கவர்ச்சியால் அவர்களின் நட்பை கொச்சைப்படுத்தும் சமூகத்தில், தனிமை என்றுமே தகிக்கும் நெருப்புதான். ஆனாலும், புனிதத்தை மட்டுமே இங்கே தி. ஜா நினைக்கவில்லை. ”உனக்கில்லை எனக்குத்தான் “ என்பதில் உளம் விழையும் நட்பை பூரணமாக அறிய உடலும் உணர வேண்டும் என்னும் மனிதர்களின் நுண்ணிய ஆவலை (ஆசை அல்ல) தி ஜா வினால் மட்டுமே விரசம் இல்லாமல் சொல்ல முடியும். சொல்லி பங்கஜத்தை, காமேஸ்வரனை, துரையை, ரங்கமணியை, ஜோசியக்காரரை வெற்றி பெறச் செய்யவும் முடியும்.

காமேச்வரன் தன் சில உடைமைகளை ரங்கமணியின் அகத்தில் வைத்துவிட்டு தன் பழைய யாத்ரா வேலைக்குத் திரும்புகிறான். கல்யாணம் செய்து கொள்ளும் எண்ணத்தையும் சொல்கிறான்.

வராளி… பொதுவாக கச்சேரிகளில் நடுவில் மட்டும் பாடப்படும் ஒரு இராகம். முதலில் பிடிபடாது போனாலும் பின்னர் தன் இடத்தில் கம்பீரமாக அமர்ந்துவிடும். சுரங்கள் ஆரோகணத்தில் வரிசைப்படி இல்லை. அவரோகணத்தில் இருக்கிறது. இரண்டு “க” ஏறுமுகத்தில் வருவதுதான் அதன் அழகு; அதன் எழுச்சி.. கீழே பாடுகையிலும்,நிதானமான ஆலாபனையிலும் உருவெடுத்து பின்னர் மலை அருவியிலிருந்து பெருக்கெத்தோடும் ஆறு போன்ற இராகம். எல்லோரும் எப்பொழுதும் அதைப் பாட முடியாது. தம்பூரின் சுருதியோடு தன்னைக் கலந்து அது இழையோடும்.

பங்கஜ வராளியைப் பாட தி. ஜாவால் தான் முடியும். தரங்கிணியைப் புன்னாக வராளியாகப் பாட லா.ச.ராவால் மட்டுமே முடியும்.

வராளி: ச க ரி கம ப த நி ச ச நி த ப ம க ரி ச
புன்னாக வராளி: நி ச ரி க ம ப த நி நி த ப மக ரி ச நி

வயலினில் ஒன்று. மகுடியில் மற்றொன்று. இரண்டுமே அம்சம்தான்.

oOo

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இராகப் பெண்கள் – 7: கோபிகா வசந்தம், ஹிந்தோள வசந்தம்- ஆபரணம்

பானுமதி. ந

 7. கோபிகா வசந்தம், ஹிந்தோள வசந்தம்- ஆபரணம்

துறவு என்றால் என்ன? இந்த உலகினர் அனைவரையும் துறப்பதா அல்லது ஆத்மாவைச் சுற்றியுள்ள மூன்று கவசங்களகற்றி உலகோர்க்கு நன்மை செய்து கொண்டிருப்பதா? இல்லறத்தில் துறவு கூடுமா? துறவு இல்லறத்தை நோக்கிச் செலுத்துமா?

கை பிடிக்காத கணவனுடன், மாப்பிள்ளை அழைப்பன்று ஓடியவனுடன், நினைவிலே ஒரு வாழ்வு சாத்தியமா? திலகவதியின் நாடல்லவா இது? அவனை நினைத்தும், நெருங்கியும், தனித்தும், உலகோர் வாழும் வாழ்வில்லாத வாழ்வும், ”அன்பே ஆரமுதே” ருக்குவிற்கு மட்டும் முடியும்.

இதை இன்று நாம் அறியும் (அபத்தமாக அறியும்) கற்பெனும் சிறையில் தள்ளவில்லை தி. ஜா. செந்தாழம்பூவைப் போல் கமழச் செய்கிறார். காட்டுக்குள்ளே ஒரு ஓடை. ஓடையோரம் தாழம் புதர். காற்றினிலே வரும் மணம். ஆனால் அது உனக்கில்லை. உன்னதமான ஒரு சமர்ப்பணம் முன்னரே ஆகிவிட்டது. அதன் வாசம் பிறரை இழுத்தாலும் அதன் நேர்த்தியே அவர்களை அண்ட விடுவதில்லை. பூக்கள் எங்கு வேண்டுமானாலும் சென்று சேரலாம், உன் வசத்தில் பூத்தால்.

அது பாரிஜாதம் போல் பூத்திருக்கிறது- பூக்கையிலே மாலையாகி தன்னளவில் தோள் சேர்ந்து விட்டது.

அந்தத் தோள்கள் அறியும் முன், அவன் கால்கள் அவனை எங்கோ ஓடிப் போகச் செய்கின்றன. அவன் ஒரு மருத்துவ சன்யாசி, அல்லது சன்யாசியாக பிறர் நலம் பேணும் மருத்துவர். அவரின் கால்கள் மூலம் சென்னையில் தி. ஜா. நடந்து கொண்டேயிருக்கிறார். பலர் பிணி போக்குகிறார். உடலோடு மனப்பிணியும் போக்கும் இந்த அற்புத மருத்துவரை யார்தான் காண விழையார்?

கதையின் நாயகி அவரைச் சந்திப்பதும், இயல்பாகவும் கம்பீரம் குறையாமலும் தன்னை இன்னார் என்று அறிமுகப்படுத்திக் கொள்வதும் அழகோ அழகு! தனக்கு நல்லதெல்லாம் செய்யும் குடும்பத்திற்கு அவளும் நல்லது செய்ய நினைக்கிறாள்; செய்யவும் செய்கிறாள்.

அவரை, தான் குடி போகும் வீட்டின் மாடியில் இருத்தி அவரது மருத்துவப் பணி சிறக்க எல்லாமாகவும் நிற்கிறாள். அவளும், அவரும் பந்தமில்லாப் பந்தத்தில், உறவான தோழமையுடன், தோழமையான உறவுடன் இருக்க மிக  நேர்மையுடன் செயல்படுகிறாள். தூற்றும் ஒரு வாய்க்காக அவள் சோரவில்லை. தன் நண்பரின் குடும்பத்திற்காக அவரை அந்த நபரிடமும் அனுப்ப அவள் தயங்கவில்லை. அன்பும் ஆருயிரும் …

இதில் இருளும் ஒளியுமென, பகல் இரவு என, நல்லது, கெட்டது என இரு பிரிவுகளும் கைகூடும் மனிதர்களைப் பார்க்கிறோம். நடந்து செல்லும் ஒரு மழை மாலயில், பார்க்கும் வானவில்லென பரவசம் ஊட்டும் மனிதர்கள். வியப்பும், கவலையும் அளிப்பவர்கள். தன்னைத் தானே உணரப் பார்க்கும் முயற்சிகள்.

ருக்கு, தன்னை மணக்க இருந்தவரை தன் வாடகை வீட்டில் குடியமர்த்துவது தான் வெற்றி பெற்றோம் என்பதற்கு அல்ல. அது ஒரு தவம், சபரியின் தவம், திலகவதியின் தவம். சபரி மோட்சம் பெற்றாள்; திலகம் சிவனடியாரானாள். ருக்கு மருத்துவ சன்யாசிக்கு உதவுகிறாள். ஒரு பெண்ணை மீட்கவும், தன்னைப்போலவே ஆகப்போகும் ஒரு பெண்ணிற்கு தோள் கொடுக்கவும் அவள் தயங்கவில்லை. முகம் அறியா மனிதர்களின் உடல் நோய்க்கும் மன நோய்க்கும் உதவிட அந்த சன்யாசியுடன் இந்த சன்யாசி நிற்கிறாள்.

ஒரு உன்னதமான பாத்திரப் படைப்பு. இவள் கோபிகா வசந்தம். கண்ணன் ஆயர்பாடியில் இருந்த பொழுதெல்லாம் கோபிகைகளுக்கு வசந்தம். அவன் மதுரா சென்ற பிறகோ அந்த நினைவுகளே வசந்தம். நினைவுகள் தரும் புனைவுகள் கோபிகா வசந்தம்,

ச ம ப நி த நி த ச   ச நி த ப ம க ச  

பச்சைக் கனவு

அன்பின் தராசு மிகவும் வலிமையற்றது. ஒரு சிறு தவற்றில் அது உறவில் ஒரு நிரந்தரப் பகையை உண்டு செய்து விடும். ”உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது” என்றாலும் சற்று உடைந்த அல்லது விரிசல் கண்ட கண்ணாடிதான்.

பசுமை என்று சொல்கையில் இருக்கும் நிறைவு பச்சையில் இருப்பதில்லை. பச்சையுடன் ஏதேனும் ஒன்று சேரவேண்டும்- “பச்சைப் பசேல்”, “ பச்சைக் காய்கறி”, “பச்சைப் புல்”, “பச்சை விளக்கு”, “பச்சைப் பொய்”.

மனக்கண் குருடாய், மனமொழி பேசாமல், மனச்செவிடராய் இருக்கும் மாந்தர்களை லா.ச ரா “பச்சைச் கனவில்” காண்பிக்கிறார். கதையின் நாயகன் சிறு வயதில் ஆதவனை உற்று உற்று நோக்கி, பின் சுற்றும் முற்றும் பார்க்கையில் காணும் பச்சைக் கோலங்களை வியக்கிறான். பச்சை தங்கிவிட வாழ்வு குருட்டுத்தனமாக  நீள்கிறது. அவனுக்கு சிறு வயது கல்யாணம். அந்தப் பெண் ஊமையும் செவிடுமாக வாய்க்கிறாள். ஆணின் குறை பாராட்டப்படாமல் பெண்ணின் குறை வாழ்வை சூறையாடுகிறது. பலன் பிரிவு.

இளமை, தன் இணை தேடும் தவிப்பு, தன் சொந்தம் என்ற நினைப்பு, உயிர் உருகும் ஏக்கம், அது அவர்களை ஊர் அறியா வண்ணம் சேர்க்கிறது.

அவர்களிருவரின் ஆயுளின் இன்பத்தையும் துன்பத்தையும் ஒரே மூச்சில் அளந்துவிட முயல்வது போன்ற ஆலிங்கனத்தின் அவஸ்தையிது…

3 மாத கர்ப்பத்துடன் அவள் இறக்க, ஊர் சிரிக்க அந்த நேச இழை வெளியே அறுந்து உள்ளே பச்சையாகத் தொடர்கிறது.

ஊமை கண்ட கனவினை யாரிடம் சொல்வாள்? இல்லை.. “அந்த நினைவு அவர்கள் இருவருக்கும் மட்டுமே சொந்தமாயிருக்க அவள் எண்ணியிருக்கக் கூடும். பகை நடுவில் பயிரான உறவைப் பாதுகாப்பதில் சட்டென்று சலிப்பேற்பட்டுவிட்டதோ? உயிர் நிலையின் ஒரே மூச்சுப் போன்ற அம்மூன்று மாதப் பச்சைக் கனவின் மிச்சம்”- நாயகன்தான்.

மானம், மானம் என்பதெல்லாம் வகையாக வாழ்பவருக்கோ? கண்டு, கேட்டு, பேச இயலாத உறவின் தனிமைகளை ஊர் அறிய ஏன் சொல்லவேண்டும்? வாழ வைக்காதவர்கள் தூற்ற மட்டும் எங்கிருந்து வருகிறார்கள்? உயிர் உருகும் ஓசை கேட்காதவர்கள் வாய் திறந்து பேச மட்டும் செய்கிறார்களே? லா. ச.ரா அவன் மூலம் இந்தக் கேள்விகளைக் கேட்கிறார். அந்த உறவின் அர்த்தத்தை, அவர்கள் கண்டு கொண்ட உயிரின் மீதியை, இளமைக் கொண்டாட்டங்கள் மீறிய சிலிர்ப்பை அவன் பகிரங்கப்படுத்தவில்லை.

இந்தக் கதையும் நாயகனின் போக்கிலே சொல்லப்படுகிறது. அதுவும் தன் இரண்டாம் மனைவியிடம்..

பார்வையற்ற அவனுக்கு இறந்தவள் பாலைவன நீரூற்று. தாகம் தணித்தவள். அன்பால் நிறைத்தவள். அந்த அன்பாலேயே பிரிந்தும் சென்றவள். குறைகளைக் கொண்டாடும் சமுதாயத்தில் விடை சொல்லாத வினாவாக அவள் வெற்றி பெறுகிறாள். அதற்கு மதிப்பளித்து அவனும் மௌனிக்கிறான். அவன் மட்டுமே கேட்ட வசந்தம்… ஹிந்தோள வசந்தம்.. வசந்த மாதவம்… ஜானகி தவம்… சச்சிதானந்த வைபவம் (முத்துஸ்வாமி தீஷதர் கிருதி…  சந்தான இராமனைக் கொண்டாடும் இந்தக் கிருதி).இவன் பச்சைக் கனவின் நாயகியை மனதால் பார்த்துக் கொண்டேயிருக்கிறான்.

பெயரில்லாத இந்தப் பெண்… வாய் பேச இயலாத இந்தப் பெண் தன் பிறப்பின் பலனை உரக்கச் சொன்னாள். உயிர் தாங்கும் உரிமை பெண்ணிற்கு அன்றி யாருக்கும் இல்லை. அவள் வசந்தம்.. பூவாகிக் காயாகிக் கனிந்த மரம்… தன்னையன்றி யாருக்கு அவள் தன்னை மெய்ப்பிக்க வேண்டும்?

ச ரி ம ப த நி த ச  ச நி த ப ம த ம க ச  – ஹிந்தோள வசந்தம்.

ருக்குமணி– கோபிகா வசந்தம்: இன்பமும் துன்பமும் வெளிப்படை.

பச்சைக் கனவின் நாயகி- ஹிந்தோள வசந்தம்: இன்பமும் துன்பமும் உள்ளிடை.

oOo

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இராகப் பெண்கள் – 6: அமிர்த வர்ஷினி- மீறும் அளவுகள்

பானுமதி. ந

6. அமிர்த வர்ஷினி- மீறும் அளவுகள்

அமிர்த தாரை. வானம் கொடுக்கும் உயிர். நீரின்றி அமையாத உலகின் அச்சாணி. இத்தனை சிறப்பு— “ஆழியில் புக்கு முகர்ந்து கொடார்த்தேரி” வரும் வருணனுக்கு. ஆனால், அவன் நினைக்கையில் மட்டும்தான் வருவான். அளவின் கட்டுப்பாடுகள் அவனுக்கு இல்லை. குறைவாய், அதிகமாய், சரியாய், விளைநிலத்தில், காடுகளில், கடலில் பெய்யும் பெருமழை. வருவது போல் தோன்றி, போக்குக் காட்டி பின்னர் எதிர்பாராது  வந்து… மகேசன் அறியா மாமழை.

ஆழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து” லா. ச. ரா.வின் “அபூர்வ இராகம்” நாயகி பெய்யும் பெரு மழை. முழங்காலுக்கும் கீழே தொங்கும் கூந்தல், இயல்பாக இருத்தல் அவள் வழி. பெண் பார்க்கையிலேயே “பஜ்ஜிக்கு உப்பு போதுமா?” என்று கேட்க வைத்து அவள் தன்மையை உணர்த்தி விடுகிறார் லா. ச. ரா. தீயில் இருக்கும் குளிராக, குளிரில் உறையும் நெருப்பாக அவனும், அவளும். அவர்களின் ஆழம் காணும் போக்கு அவர்களை சிறிது காலம் பிரிக்கிறது. ஒருவரை ஒருவர் வரவழைக்க பொய்யான செய்தி சொல்லி தந்திகள் பறக்கின்றன. ஊர் பார்க்கும் கவலையின்றி இருவரும் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி, கண்ணீரில் கரைந்து அந்தப் புகை வண்டி நிலையத்தில் ஒன்றேயான இரண்டாக நிற்கின்றனர்.

அவளின் கூந்தல் அவனின் பிரமிப்பு. அவளின் அலாதியான மௌனமும், சிறு பேச்சுக்களும் அவனின் வியப்பு. மாமழை தொடர்ந்து பெய்து கொண்டே இருக்கும் ஒரு மாலையில் இருவரும் கடற்கரைக்குச் சென்று பேரழகின் அச்சத்தை, ஆழத்தை, இயற்கையின் விளையாட்டை, காட்சி தெளிவாக இல்லாத ஒளிமயக்கை, அனுபவிக்கிறார்கள். அதிலும் அவள் கொள்ளும் உற்சாகம் மிகுதி. உள்ளம் அனுபவித்ததற்கு உடல் விலை கொடுக்கிறது. அவள் நோயுற்று சாகப் பிழைக்கக் கடந்து தேறுகிறாள்.

அவன் அன்னையின் வேண்டுதல்படி அவள் தன் கூந்தலை காணிக்கையாக ஏழுமலையானுக்கு செலுத்த வேண்டும். இருவருக்குமே இது தாள இயலாத அதிர்ச்சி. ஆனால் இதெல்லாம் இவர்களுக்கு வேண்டாம். அந்தந்த நிமிட வாழ்வில்தான் இருவருக்குமே அக்கறை.

அபூர்வ இராகத்தின் உயிர் நாடி அந்த அளகபாரம்தான். ”பின்னாது வெறுமனே முடிந்தால் ஒரு பெரும் இளனீர் கனத்துக்கு கழுத்தை அழுத்திக் கொண்டிருக்கும். பின்னலை எடுத்துக் கட்டினால், கூடை திராஷையை அப்படியே தலையில் கவிழ்த்தது போலிருக்கும்.” தன் நிலை தாழ அது விரும்பவில்லை. உயிர் ஸ்வரம் இல்லாமல் இராகம் என்ன, தாளம் என்ன? பாவ பூர்வமாக, ஸ்ருதி சேர்ந்ததாக, அந்த ஸ்வ்ரத்தில் மட்டும் நின்று கார்வை கொடுக்கையில் வீணையின் தந்தி அறுந்துவிடுகிறது.

“அபூர்வ இராகம், அதே வக்கரிப்பு, பிடாரன் கை படாத பாம்பு போல், அபாயம் கலந்த படபடப்பு, ஸ்வர ஸ்தானங்கள் பிடிபடாது, பழகப் பழக எல்லையேயற்றது போல், நடையுடை பாவனைகளில் சிந்தும் ஒரு கவர்ச்சி, வேட்டையில் வேடுவன் மேல் பாயத் திரும்பிய மிருகம் போல் பயந்த ஒரு முரட்டுத்தனம் சிலிர்சிலிப்பு”

“இயல்பு என்று சொல்வதன் அர்த்தம் என்ன? பட்சிகளுக்குப் பறப்பதுதான் இயல்பு. இறக்கையை ஒடித்துவிட்டு இயல்பு மாறாதவரை பட்சி பட்சிதான் என்றால் என்ன சரி? இராகத்திற்கும், பட்சிக்கும் என்ன வித்தியாசம்? இரண்டிற்கும் மேல் சஞ்சாரம்தானே?”

இவள் வர்ஷிப்பவள். பொழிந்து ஆள்பவள். ஆனால் கட்டுக்குள் அடங்காதவள், அதுதான் அவளது இயல்பு. அந்தந்த நொடியில் வாழ்பவள். தன் இயற்கையில்  இருப்பவள். இவள் அம்ருத வர்ஷினி

அவுடத இராகம். பிறப்பெடுத்து தோன்றும் உருக் கொள்பவள்

ச க ம ப நி ச     ச நி ப ம க ச

அமிர்தம்

நிறைகுடம். தெவிட்டாதது. காலம் தோறும் வெல்லும் உண்மைகளின் உரைகல். அழகும், அறிவும், ஆற்றலும் திரண்ட அமுது. சேற்றிடை செந்தாமரையென மலர்ந்தவள். அழுக்கு அண்டாமல் வாழத் துடித்தவள். தன் தாயை மீற இயலவில்லை. தன்னை ஊர் அறியாத் துணையாக வைத்துக் கொள்ளத் துடிக்கும் முதலியாரிடம் காதலில்லை. அவர் பால் கழிவிரக்கம்தான். தன்னைக் கொடுக்காமல் அவரிடமிருந்தே தவணை பெறுகிறாள். முதலியாரின் பெரும் போக்கான மேம் குணங்களை அழகாகச் சொல்லிச் செல்கிறார் தி. ஜா. கெட்டவன் நல்லவன் என்ற இரு கூறான பிரிவு இல்லை. அனைத்து  மனிதர்களிடத்திலும் இருக்கும் கலவை. அமிர்தமும் அதனை நினைக்கிறாள். ஆனால், காதலாகிக் கசிந்துருக அவளால் இயலவில்லை. இச் சூழ்நிலையில் தாயும் இறந்து விடவே, அவள் தனியாகிறாள். முதலியார் துக்கம் கேட்க வராதது அவளை  வாட்டுகிறது. ஊரறிய சொல்லிக் கொள்ள விரும்பாத உறவாக  தன்னை முதலியார் கருதுவது அவளது தன்மானத்தைப் பாதிக்கிறது. ஆனாலும், ஒரு சக மனிதனாக அவர் நடந்து கொள்ளாதது அவளை வருத்துகிறதே தவிர அவர் பால் அவள் உள்ளம் ஈடுபடவில்லை. இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டை தி. ஜா. கதைப் போக்கிலேயே சொல்லிவிடுகிறார்.

இரு மாதங்களாகக் கோயிலில் பார்க்கும் ஒரு இளைஞனின் உருவமும், பருவமும், அவன் நடத்தையும் அவளை இயல்பான வெட்கத்தை மீறி அவனுடன் பேசவைக்கின்றன. அவன் இந்த ஊரைச் சேர்ந்த ரங்கூன்வாசி. ஊரில் அவனுக்கு நண்பர்கள் இல்லை. எப்பொழுதாவது இங்கே வரும் அவனுக்கு நெருக்கமானவர்களில்லை. அவளுடைய ஆற்றலும், அழகும், அறிவும் அவனைக் கொள்ளை கொள்கின்றன. சட்டம் படித்த அவன் அவளைக் கல்யாணம் செய்ய விரும்புகிறான். அவளுடைய வாழ்க்கைச் சம்பவங்கள் சமுதாயத்தின் நீதி குறித்து அவனைச் சினமடைய வைக்கின்றன.

அவளை அவன் அவள் வீட்டில் சந்தித்து தங்கள் மணம் குறித்து பேசுகையில் அவனது தந்தையான முதலியார் அங்கே வருகிறார். தன் தந்தைதான் அவளை அடைய ஆவல் கொண்டவர் என அறிகையில் தவிக்கிறான், திகைக்கிறான், வெறுக்கிறான். தந்தைக்கும் அதிர்ச்சி. பூங்காவில் சந்திக்கும் முதியவர் அவன் அமிர்தத்தை  மணம் செய்யவேண்டுமென்றும், இதில் அவன் மற்றும் அவளது விருப்பம் தான் முதன்மையானதென்றும், தந்தை மகன் நன்றிக் கடன் எல்லாம் அவனை கட்டுப்படுத்தினால் கூட அமிர்தத்தின் காதல் வலிமையானது என்றும் உணர்த்துகிறார்.

முதலியார் அவன் காஃபியில் நஞ்சு கலந்து அதை அவன் குடிக்கப் போகையில் தானே தட்டியும் விடுகிறார். சொத்தில் பங்கில்லை என்கிறார். அமிர்தத்தின் மீது அவதூறும் சொல்கிறார். கடிதத்திலும் சேற்றை வாரி இறைக்கிறார். அவன் துணிவாக நிற்கிறான். அன்று மாலை கோயிலில் சந்தித்து விரைவில் மணம் முடித்து ஊரை விட்டுப் போகத் தீர்மானிக்கிறான். அவன் ஆலயத்தில் காத்திருக்கையில் கடிதம் அவளிடமிருந்து வருகிறது. சில சிக்கல்களுக்கு மிகச் சரியான விடை கிடைத்தாலும், அந்த விடைகளே முடிச்சுக்களாக மாறி இறுக்கி விடும் என்று சொல்லி தான் ஊரை விட்டு நீங்குவதாகவும், மேலே படித்து தன் வாழ்வை அமைத்துக் கொள்வதாகவும், அடுத்த பிறவியில் அவர்கள் நிச்சயமாக இணைவார்கள் என்றும் அதில் சொல்லப்பட்டிருக்கிறது.

பிறப்பால் தொடரும் ஒரு கறை. அதைப் போக்கி தூயதான வாழ்வு தேடும் ஒரு சிறு பெண். அவளை வென்று விடத் துடிக்கும் பணம், உறவு. அதை வெற்றி கொள்ளும் அவள் சாமர்த்தியம், தன் கணவனாக அவனை நினக்கும் பாங்கு, எதையுமே மறைக்காத உண்மை, பணத்தை முதலியாரிடமே சேர்க்க நினைக்கும் நேர்மை, தகப்பன், மைந்தன் இருவரையுமே விட்டுச் செல்லும் தீர்மானம்…. இந்த சிறு பெண்தான் தூய அமுதம். மென்மை, கம்பீரம், தெளிவு, புத்தி கூர்மை, இனிமை, இளமை, துயரங்களைக் கடக்கும் திண்மை, பாலைவனத்து நிலாவானால் என்ன? நிலவின் இயல்பு ஒளிர்வது தானே?

இவளும் அமிர்த வர்ஷினிதான். மாதம் மும்மாரி பெய்பவள். உலகோர்க்கு உயிரானவள். தன் இயல்பை மீறாதவள். கண்ணனுடன் கலந்து தீப ஒளியாய்த் திகழும் ஆண்டாள், கண்ணனுடன் ஆயர்பாடியில் சிறிது காலமே இருந்த இராதை . இருவர் காதலும் உவப்பானதே.

அவள் “ஆனந்தாமிருகர்ஷினி

இவள்”சுதாமயீ

ஏழு ஸ்வ்ரங்களும் வரவில்லை என்றாலும் அழகான இராகங்கள்.

oOo

 

 

 

இராகப் பெண்கள் – 5: ரீதி கௌளை: ஆனந்த பைரவி- தோற்ற மயக்கம்

பானுமதி. ந

4. ரீதி கௌளை: ஆனந்த பைரவி- தோற்ற மயக்கம்

மகிழ்ச்சியும் ஆனந்தமும் ஒன்றேதான? வேறுபாடுகள் உண்டல்லவா? சொல் பெருகும் ஓடையில் தி ஜா ஒரு செம்பகப் பூவை மலர வைக்கிறார்.

“பிரமிப்பில் ஏறி நின்ற சோகத்தின் அதிர்ச்சி கண்ணீராகக் கரைந்தது.”

“மலர்ந்து இரண்டு நாளான கொன்னைப் பூவைப் போல் வெண்மையும் மஞ்சளும் ஒன்றித் தகதகத்தையும், நீரில் மிதந்த கரு விழியையும் வயசான துணிச்சலுடன் கண்ணாரப் பார்த்து பூரித்துக் கொண்டிருந்தார்.

“அது என்ன பெண்ணா? முகம் நிறைய கண் .. கண் நிறைய விழி… விழி நிறைய மர்மங்கள்.. உடல் நிறைய இளமை.. இளமை நிறைய கூச்சம்.. கூச்சம் நிறைய நெளிவு.. நெளிவு நிறைய இளமுறுவல்”

“தேங்காய்க்கும் பூவன் பழத்திற்கும் நடுவில் நிற்கிற குத்துவிளக்கைப் போல”

செம்பகப் பூவை அனைவராலும் முகர்தல் இயலாது. அதன் வாசம், அதன் வாடல் எல்லாமே தனி. இதழ் விரித்து மணம் வீசும் அது சிலர் மூக்கின் அருகே முகர்கையில் குருதியையும் வரவழைத்துவிடும்.

அழகே  உருவானவள். மானிட இனத்தோரால் தன் உடமை என்று சொந்தம் கொண்டாட முடியுமா அவளை? ஆனாலும் அவளுக்கும் திருமணம் நடக்கிறது. அவன் முகர்ந்து பின்னர் மரணிக்கிறான். இவளின் இள வயதும், அழகும், ஆனந்தமும், களியும் யாரோ ஒருவன் சாவினால் அழியக் கூடாதென கதையில் வரும் கிழவர் நினைக்கிறார். அவர் மனைவியும், சமூகமும் வேறுபடுகிறார்கள். இந்த செம்பகப் பூ சில நாட்கள்தான் துக்கம் கொண்டாடுகிறது.  பின்னர் தன் ஆனந்தத்திற்கு வந்து விடுகிறது. சந்தன சோப்பில் முகம் கழுவி, கருமேகக் கூந்தலை  பின்னலிட்டு முடிந்து, பாங்காய் சேலை உடுத்தி அந்தப் பூ வாடாது வாசம் வீசுகிறது. இறந்தவனின் அண்ணனின் துணை கொண்டு வாழ்வையும், தன் இருப்பின் உண்மையையும் செம்பகம் சொல்லிச் செல்கிறது.

கேட்பதற்கு ரீதிகௌளை சற்று ஆனந்த பைரவியை நினைவுபடுத்தும். அதன் வளைவும், நெளிவும், அழகும் சொல்லித் தீர்வதில்லை. ஒரு சிறு கதையில் ஒரு பார்வையாளன் வாயிலாக தி ஜா நமக்கும் அந்த மலரின் வாசத்தைக் காட்டுகிறார். நியதிகள் வாழ்க்கை முறைக்குவழி காட்டுபவையே. ஆனால் ஆனந்தம் என்பது வாழ்விற்கு அவசியம். களி கொள்ளும் உவகை, உவகை தரும் உரிமை, உரிமை தரும் மாற்றம், மாறுதல் தரும் தருணம், அந்தத் தருணத்தின் ஆனந்தம் இதுதான் உயிர்ப்பின் அடையாளம்.. மற்றவை உடலில் உயிர் இருக்கிறது என்பது மட்டும்தானோ?

ஆனந்த பைரவியைப் போல் தோன்றும் ரீதி கௌளை இவள். உலகக் கணக்குப்படி பாஷாங்க இராகம்; ஆனால் இசைக்கப்படவேண்டிய இராகம். தன் மனோதர்மப்படி அலை மோதும் இது. அதில் குற்ற உண்ர்வு ஏற்படுத்தாத இராகம். ஸ்தாயியும், ஸ்வரமும், ஸ்வரூபமும் உள்ளது; இராக லக்ஷணங்கள் உள்ளது. புல்லாங்குழலுக்குள் காற்றாகப் புகுந்து கொள்வது. இசைபட வாழ்தல் என் உரிமையெனச் சொல்லாமல் சொல்வது.

இனி ஆனந்தபைரவி

தி ஜா வைப் போலவே லா ச ராவும் இந்தப் பெண்ணின் பெயர் சொல்லவில்லை, “ப்ரளயம்” என்ற சிறுகதையில். உள்ளுக்குள் முனகும் ஒரு இராகம். கதை சொல்லும் மாற்றுத் திறனாளியின் ஆனந்த இராகம்.  அன்பைத் தேடுகிறான்-கருணை, இரக்கம் இவற்றையல்ல. அவன் சொல்கிறான்—“அன்பு கூட அல்ல; நான் தேடுவது உள்ளத்தின் நேர் எழுச்சி. இரு தன்மைகள் ஒன்றுடனொன்று இணைந்தோ, மோதியோ விளையும் இரசாயனம்”

“சில சமயம் வாழ்க்கையின் இன்பப் பகுதிகளை வாழ்க்கையிலிருந்து பலவந்தமாகப் பிடுங்கி அனுபவித்தால் நலமே என்று தோன்றுகிறது”

“என்னைச் சுற்றி எத்தனை பேர் இருந்தும் இந்த மீளமுடியாத தனிமை. நான் என்னுள் உணர்ந்த இந்தத் தனிமை சகிக்க முடியவில்லை”

உயிர்களின் அடிநாதமான நீட்சி, தன்னிலிருந்து ஒரு உயிர்… அவனுக்கும் வேண்டும். தன்னைக் கொடுக்கும், தன்னிடம் அன்பாக இருக்கும் பெண் அவனுக்கும் வேண்டும். உடலில் குறைபாடு உள்ளவன் இதைப்  பிறரிடம் சொல்லவும் நாணுகிறான். பணம் இருந்தும் துணை இல்லை. ஏழையான உறவுப் பெண்ணை நினைத்துக் கொள்கிறான். கேட்கவில்லை. அவளுக்கும் திருமணமாகி ஊரை விட்டுச் செல்கிறாள். மணந்தவனும் வசதியற்றவன். எப்பொழுதாவது அந்தக் கணவன் எழுதும் கடிதம்.

ஒரு நீல இரவில், பார்வையை ஏமாற்றிய சரடுகள் தொங்கும் நக்ஷத்திர இரவில், நீல ஏரியில் இரு கைகளிலும் (அவன் ஒரு கை அற்றவன்- தோளிலிருந்து சூம்பியவன்) துடுப்பு ஏந்தி அவன் செலுத்தும் ஓடம் கரை தட்டி அவனின் அந்தப் பெண் படகில் ஏறுகிறாள். அவள் நீலப் புடவை உடுத்தியுள்ளாள்.

“நான் நீலச் சுடரானேன்- கர்ப்பூரம் அசைவற்று எரிவதைப் போல். என்னுள் குறையும் அத்தனையின்  நிவர்த்தியுமானேன். என்னின் நிவர்த்தியுமானேன்”

அவனின் இந்த உண்மையுமான கனவில் ஓடம் பாறையில் மோதி அவள் நீரில் மூழ்குகிறாள்.

அவள் தாயாகப் போகும் செய்தி தாங்கி வரும் கடிதம் அவனின் ஆதார சூக்ஷுமத்தைத் தொடுகிறது. தன் மகவு, அது பெண் மகவு என திண்ணமாக நினைக்கிறான். அவர்களுக்குத் தொடர்ந்து பணம் அனுப்பி தன் குடும்பம் போல் பார்த்துக் கொள்கிறான், அவளும் பிள்ளைபேற்றுக்கு வருகிறாள். ஒரு நாள் குளக்கரையில் நீர் நிறைந்த விழிகளுடன் யதேச்சையாக அவனைப் பார்க்கிறாள்.

அவள்  இறந்து விடுகிறாள். ஆண் குழந்தையும் வயிற்றிலேயே இறந்து போகிறது. தன் ஆசைப் பசி அவளைத் தின்றுவிட்டதாக இவன் நினைக்கிறான். அவள் கணவன் இவனுடன் பேசுகையில்  இவன் நினைக்கிறான். ”என் குழந்தையைப் பெற்றவள் அவள். என் குழந்தைக்கு தந்தையாய் இருப்பவன் அவள் கணவன்”

“உள்ளத்தின் மூலம் உடலை வெற்றி கொண்டேனா?அல்லது உடலின் மூலமே உள்ளத்தின் தாபத்தை வெற்றி கொண்டேனா?”

அனைவரும் இரசிக்கும் இராகம் ஆனந்த பைரவி. நாட்டுப்புறப் பாடல்களிருந்து அனைத்திலும் அது விரவி உள்ளது. மனம் வருடும் இராகம்.

ஆனால் ஏன் எல்லோருக்கும் நேரே கிடப்பதில்லை?கிடைக்காவிட்டால் என்ன? ஆனந்தம் மனிதனுக்கும் இயல்பு. அதை அவன் தேடி இசைத்துவிடுவான்.

ஒரு வார்த்தைகூட கதையில் அந்தப் பெண்ணை லா.ச ரா பேசவிடவில்லை. சிறு பருவத்தில் கதைசொல்லியை அவள் கேலி செய்வதுகூட இவன் குரலில் தான். அந்தப் பெண் பேச வேண்டியதனைத்தும், நிறைசூலியாய் நீர் எடுக்க குளத்திற்கு வருகையில் துடிக்கும் உதடுகளும், கண்களில் நிறையும் நீரும், மௌனமும், அவள் விருட்டென்று சென்றுவிடும் வேகமும் மொத்தமாகக் காட்டிவிடுகின்றன. அவன் வாழ்க்கையில் பிறர் அறியா ஆனந்தம் அவள். அவன் இசைத்த ஆன்மீகப் பாடல் அவள். தன் சுருதி சேர்ந்த இடத்தினை நுட்பமாகக் கையாள்கிறாள். அவனின் தாபம் தீர்த்தவள், அவனுக்கு மட்டுமே இரகசிய ஆனந்தத்தை தந்து இறந்து விடுகிறாள். அவன் நெந்சுக்குள் கமழும் இராகம். அவரவர் பாடல் அவரவர்க்கு.

ரீதி கௌளை:  ச க ரி க ம  நி த ம நி நி ச; 

    ச நி த ம க ம ப ம க ரி ச

ஆனந்த பைரவி:  ச க ரி க ம ப த ப ச

                ச நி த ப ம க ரி ச

oOo

 

 

 

 

 

 

 

 

 

இராகப் பெண்கள் – 4: மோகனக் கல்யாணி

பானுமதி. ந

4. மோகனக் கல்யாணி- அன்னவாசல் அழகு

சிலவற்றிற்கு ஒரு புனிதம் உண்டு. அவை மாசுபடாது தூசு படாது தெய்வீகத்தின் மறு உருவாய் வாழ்வில் காணக் கிடைக்கும்.

அம்மா அன்பானவள், காருண்யம் மிக்கவள், புனிதமானவள், போற்றத்தகுந்தவள். தாய் பிறன் கைபட சகிப்பவனாகி நாயென வாழ்பவன் நமரில் இங்கில்லை.

ஆனால், தி. ஜா வின் “அம்மா வந்தாள்” -அகிலாண்டமாக- அனைத்து அண்டமாக எழிலும், கம்பீரமும் கொண்டவள். விளையும் நிலம் இவள். செழுமையின் இனம் கொண்டு நிலம் கூடிக் களிப்பவள். முழுமையாக தன் நாயகனை அடையவிட்டு அந்த அனுபவத்துடன் அவனை விலகச் செய்பவள். அவள் தரிசு நிலமல்ல. சிவசுவின் விளைநிலம். அன்பும் எளிமையும் அறிவும் மட்டும் அவளை அடையப் போதுமானதில்லை. அதற்கு மேலும் ஒன்று – அவளே ஆளுமை, அதைச் சீண்டும் ஆளுமை, செயல் ஊக்கம் கொண்ட ஆண்மை; அதன் மூலம் பெற்ற பிள்ளைகள் எல்லாமும் ஒரு குடும்பத்தின் அங்கமாக.

மீள இயலாத கவர்ச்சி அவ்வழியில் அவளுக்கு இருக்கிறது. ஒரு அற்புத அனுபவம் நல்வழியில் கிடைத்தால் அது கொண்டாடப்படுகிறது. அது உலகோர் ஏற்றுக் கொள்ளும் பாதை இல்லையென்றால், சமுதாய நியதிகளை மீறியது என்றால்  மனிதர்கள் என்ன செய்வார்கள்?இச்சையும் உடலும் தன் இரையைத் தேடித் தேடி உண்கையில் மனம் ஒருமிகத் தூய்மையான ஒன்றை தனக்காக ஏற்படுத்திக் கொண்டு விடுகிறது. அழுக்கை விழுங்கும் தீ… எந்த நேரத்திலும் தூய்மையான விளக்கு.. இருளை விரட்டும் தீ.. காமங்கள் அண்டாத தீ.. நீருள் இருக்கும் நெருப்பு போன்ற தீ.

காமாக்னியை அழிக்கும் வேதத்தீ. அம்மாவின் அன்பிற்குரிய அப்பு வேதம் கற்பவனாகி அவளுடைய பரிகாரமாக விளங்க அம்மா விரும்புகிறாள். முகப் பொலிவும், உடல் வலிமையும் மிகத் தூயமனமும் ஒருங்கே அவனிடம் உள்ளன. அவன் இந்துவின் மனக் கணவன். அவன் உணராமலேயே இந்து அவனைக் காதலிக்கிறாள். பரசுவுடன் அவளுக்குத் திருமணம் ஆகி 3 வருடங்கள் குடித்தனம் நடத்தியும் அவள் உடலாலும் மனதாலுமாக இருவாழ்க்கை வாழ்கிறாள். அந்த நலமற்ற கணவனையும் இழந்து ஊர் திரும்பும் இந்து ஒரு தருணத்தில் அப்புவிடம் மனம் திறக்கும் இடம் நயம் மிக்கது. பெண் தானே தன்னைத் தரும்போதும்கூட விலகி ஓடும் அப்பு வேள்வித்தீ என மிளிர்கிறான். அம்மாவைப் பற்றி இந்து சொல்கையில் உள்ளே கொதிக்கிறான். தி.ஜா படைக்கும் காட்சிகள் அந்த எண்ண ஓட்டத்திற்கும் நிகழ்வுகளுக்கும் அவற்றின் மறைமுகத் தன்மைகளுக்கும் எத்தனை பொருத்தம்! ”இந்து மாதிரி ஒரு பெண்ணை விட்டுவிட்டு நீ சாதிக்கப் போவது என்ன?” என்று ஒரு வேலையாள் மூலம் கேட்கிறார் தி ஜா மறைமுகமாக. இதை பின்னர் நினைக்கிறான் அப்பு.

அம்மாவின் மறுபுறம் தெரிகையில் அப்பு அம்மாவைவிட அப்பாவை வெறுக்கிறான். குமையும் கையாலாகாத சினம். தனிமையில் மட்டும் கசடு கொப்பளித்து மேலே வருகிறது. அந்திக் கருக்கலில் அலைகளின் ஓலத்திற்கிடையே அப்புவும் அவன் தந்தையும் பேசுவது நாகரிகத்தின் உச்சம்.

அப்புவின் மேல் கறையே படக்கூடாதென நினைக்கும் அம்மா, அவன் அப்பா பார்த்து வைத்துள்ள பெண்ணின் இறந்து போன தாயின் நடத்தை சரியாக இல்லை என மறுத்துவிடுகிறாள். அந்த அளவிற்கு அவன் புனிதத்தில் அவளூக்கு விருப்பம்.  நீள்விழிகள் கொண்ட அந்த பெண்ணை வியந்த போதும் அம்மாவை அப்பு தட்டவில்லை. தன் உறவினர் அனைவரும் அறிந்த அம்மாவின் மறுபக்கம் அப்புவைப் பந்தாடுகிறது. தன் புனிதத்தினால் தான் தனிமைப்பட்டுப் போனதாக எண்ண வைக்கிறது.

தான் படித்த வேதபாடசாலைக்குத் திரும்பும் அப்பு இந்துவின் அன்பில் இணைகிறான். அவனைத் தேடி வரும் அம்மா அவன் அம்மா பிள்ளையாகி விட்டான் என்றும், இனி தான் தன் கணவனை வதைப்பது சரியல்ல என்றும், காசிக்குப் போய் கர்மம் தொலைக்கப்போவதாகவும் சொல்கிறாள்.

அம்மா மோகினி. ஒரு அரசியின் ஆளுமை, நடை, பேச்சு, செயல் அத்துடன் தன் வசப்படுத்தும் ஒரு திறன். அந்த கம்பீரத்தின் முன்னே அனைத்தும் தோற்றுவிடுகின்றன. பூரணம், பூரணத்தில் சம்பூர்ணம்… அவளின் இசை.அன்னிய ஸ்வரம் வந்தும் கணவன் வெறுக்காத மோகனம். சொந்தங்கள் வாய் மூடி மௌனித்துக் கிடக்கின்றன . அவளின் ஆளுமை அவள் குறையைக் காணவொட்டாமல் அடிக்கிறது. ஒரு உரிமையுடனே சிவசுவிடம் அவள் நடந்து கொள்கிறாள். இரு குதிரைகளில் சவாரி செய்வது போல் தோன்றினாலும் அரசப் பட்டயமிட்டுச் செல்லும் குதிரை நினைவை அசை போடுகிறது. அரசியின்போகத்தில் மற்றொன்று திளைக்கிறது.

ச ரி க ப த ச  ச த ப க ரி ச

இல்லை நி இல்லை. ஆனால் என்ன ஒரு அழகு இதில்! மோகன இராமா, கோபிகா மனோகரம் இவையெல்லாம்  மட்டும் மோகனமில்லை. அகிலாண்டமும்தான். ஆரோகணத்தில் தொடங்கி, அவரோகணத்தில் பயணித்து அவள் பின்னர் அவரோகணத்தில் கரைந்து கரைந்து ஆரோகிக்கிறாள். அப்புவைப் பெற்றதாலேயே, அவனை வேதம் கற்க வைத்ததாலேயே, புனிதத்தின் அரவணைப்பில் தன்னை புடம் போட நினைக்கிறாள். கூர்க்கில் சிறு வடிவம் கொண்டு எழுந்து கன்னித் தமிழகத்தில் பெருக்கெடுத்தோடும் காவிரி. ஆம்… அவள் விரிந்தவள், பரந்தவள், புனித நீராட்டுபவள், புண்ணிய நதிகளின் பாவம் போக்குபவள். தன் வேள்வியாய் தன்னையும் தருபவள். அவள் அனைவரும் இரசிக்கும் மோகனம், ஆனால்  அனைவராலும் பாட முடியா “மருங்கு வண்டு கிடந்தார்ப்ப மணிப்பூ ஆடை அது போர்த்து கருங்கயற்கண் விழித்து ஒல்கி” நடக்கும் நதி அவள்.

ஜனனி

இவள் யார்? நம் புராணங்களில் அன்னை மனித வயிற்றில் பிறப்பதில்லை. அவள் கண்டெடுக்கப்படுபவள். கரு வாசம் அவளுக்கு இல்லை. இந்த விதியை சிறிது மாற்றி, குழந்தை வெளிப்படுகையில் அன்னை அதில் புகுந்து கொள்வதாக லா ச ரா எழுதுகிறார். பிறந்ததுமே அனாதை ஆகிறாள். ஒருவரால் கண்டெடுக்கப்பட்டு அவர் மனைவியால் ஏற்றுக் கொள்ளமுடியாமல்  “ஜனனி” ஆகிறாள். அவள் உலகின் தாய். ஆனால் அவள் விரும்பிய தாய்ப்பால் அவளுக்குக் கிடைக்கவில்லை. அவள் கழுத்தில் கடயம் போடப்பட்ட தாய்ப் பசு. ஒரு கல்யாணமும் நடக்கிறது அவளுக்கு. தன் உடல் மாறுதல்கள், அவை கவரும் கண்கள், உள்ளே படரும் இனம் தெரியா ஏக்கம். தன்னுள் தன்னை ஒடுங்கச் செய்து விடுகிறது. ”நீ நானாக இருப்பினும், நான்  நானாகத்தான் இருக்க முடியும். ஆனால், நீ –மறுபடியும் ‘நா’னாகிக் கொண்டிருக்கிறாய்.  ‘உன்னின்’ மீட்சி” லா ச ராவைத் தவிர யாரால் இதை எழுத முடியும்?

இக்கதையில் ஜனனி தன்னை “நித்திய சுமங்கலி” என்று சொல்வாள். பரம்பொருளிலிருந்து பிரிந்த உயிர் அவனை மறந்து, அல்லல்பட்டு, தன்னைத்தானே உணர்ந்து அவனைச் சேரும் ஒரு செய்தி கதையில் உள்ளது. உடல் கொள்ளும் அவஸ்தைகள், உயிர் உருகும் சம்பவங்கள் எல்லோருக்கும் நேர்வதே. அதை அன்னை தானே அனுபவிக்கிறாள். அவள் கல்யாணி- மங்களங்கள் நிறைந்தவள். மாயா வினோதினி- “மானிடர்கென்று பேச்சுப்படின் வாழகில்லேன்” என்றாள் ஆண்டாள்.

அன்னை ஒரு பட்டாளத்தானை மணமும் செய்கிறாள்.  சாந்தி மூகூர்த்தத்தின்போது அவனை வதைத்தும் விடுகிறாள். அவன் இறந்த பின்னரும் அவள் பூவும், மஞ்சளும், தாலியும் அவளுடனே இருக்கிறது. அவள் கல்யாணிதான். பல ஜனன இராகங்கள்  அவளுக்கு உண்டு. ஆனால் அவளுக்கு அமுது ஊட்ட யாருண்டு? கல்யாணிகளுக்கும் ஆசை உண்டோ? புனிதமான அம்மா, தன் உடல் அமைப்பினாலேயே பால் நினைந்து ஊட்டும் அன்பு, அதில் அடங்கியுள்ள அந்தக் கடமை, அன்னையைக் கடயம் போட்ட பசுவாக காட்டத் துடித்தாலும், அவள் மீறுகிறாள். ஆணின் மீது வரும் கட்டற்ற சினத்தின் வெளிப்பாடு அது. ஆனாலும் அவள் பரம கல்யாணி. யார் அறிவார் இதை?அவளை பீடத்தில் ஏற்றி நீ அன்னை என்று சொல்லிவிட்டான் ஆண். அவள் தூய்மைக்காக கர்ப்ப வாசம் அவளிக்கில்லை என்றும் சொல்லிவிட்டான். ஆனால், தான் மட்டும் “மன்னு புகழ் கோசலை தன்  மணிவயிறு வாய்”க்கிறான். ஜனனியாகப் பிறப்பெடுக்க அவள் ஏன் தீர்மானிக்கிறாள்?தன்னைக் கொஞ்சிக் கொண்டாட தனக்கும் அமுதூட்ட ஒரு தாய் வேண்டுகிறாள். அந்த அனுபவம் அவளுக்குக் கிடைக்கவேயில்லை.முனைப்பால் கூட முலைப்பால் அருந்தாத கல்யாணி.

அகிலாண்டம், ஜனனி  இருவருமே மக்கள் அறியும் இனிய மோகனமும், கல்யாணியும். அகிலாவை நாம் சிறிது நேரம் பெண்ணாகவும் பார்க்க முயல்கிறோம்; அவள் மோகம் நமக்குப் புரிகிறது. அவள் தேடும் புனிதம் அவளுக்குக் கிடைத்தால் நமக்கு மகிழ்ச்சி, இல்லையெனில் வருத்தமில்லை. அந்தக் கவர்ச்சியும், குழைவும், கம்பீரமும், இயல்பும் ஆளுமையும் நாம் பார்க்கும் பெண்களிடத்தில் ஒரு சேரக் கிடைத்தால் நாம் கொள்ளும் பரவசம்! அங்கே சமுதாய நியதிகள் சற்றுக் கண்ணயரும்.

ஜனனி –கல்யாணி- “நிதி சால சுகமா”வும் கல்யாணி தான் “வாசுதேவயனியும்” கல்யாணிதான். அவள் ஜனக இராகமாகத்தான் இருக்க முடியும். ஜன்யமாக முடியுமா?அவள் நிறைவானவள். முதல்“ப்ரதி மத்ய “ இராகம். ஏழு ஸ்வரமும் கொண்டவள். ஆனாலும் ஒரு ஏக்கம் உண்டு.

மோகனம்  ஜன்ய இராகம்- ஒளடத இராகம். தன் மயக்கில் நம்மையும் கடத்துபவள்.

ஜனனியின் ஒரு ஆவல், அகிலாண்டத்தின் ஒரு ஆவல்

அவள் ஆவலை அறிவார் இல்லை. இவளது வெளித் தேடலில் மன்னிப்பு இல்லை. ஆனால், இருவரின் உள்ளார்ந்த சினம் மோகனகல்யாணி.

“என் தனிமையின் உருவற்றமையாலே, நான் காலம், இடம், உரு நியமங்கள் கடந்த மெய். சப்தத்தின் சத்யம். நான் சொல். சொல்லின் பொருள். பொருளின் செயல். மூன்றும் ஒன்றாய் இயங்கும் திரிசூலம்”

கல்யாணி-   ச ரி க ம ப த நி ச,   ச நி த  ப ம க ரி ச

மோகனம்-   ச ரி க ப த ச ,  ச த ப க ரி ச

மோகனக்கல்யாணி- ச ரி க ப த ச, ச நி த ப ம க ரி ச

ஏறுகையில் இல்லாத ஸ்வரம் இறங்குகையில் பூரணம்.

ஒரு ஒளடத சம்பூர்ண இராகம்

oOo