(நியூ யார்க் ரிவ்யூ ஆப் புக்ஸ் கிளாசிக் பதிப்புக்கு அமித் சௌத்ரி எழுதியுள்ள ஓர் அறிமுகம்)
1976ஆம் ஆண்டில் ஜெஜூரி பதிப்பிக்கப்பட்டபோது என் வயது பதினான்கு. அதைப் பற்றி அடுத்த ஆண்டுதான் கேள்விப்பட்டேன். அப்போது அந்த நூல் காமன்வெல்த் கவிதைப் பரிசு வென்றிருப்பதாக டைம்ஸ் ஆப் இந்தியாவில் செய்தி வந்திருந்தது, அதனுடன் அருண் கொலாட்கர் பற்றிய ஒரு கட்டுரையையும் அந்தப் பத்திரிக்கை வெளியிட்டிருந்தது. என் நினைவு சரியாக இருந்தால், அதன்பின் ஒரு ஞாயிற்றுக் கிழமையன்று, கவிஞர், புத்தகம், மற்றும் மகராஷ்டிர மாநிலத்தில் உள்ள யாத்திரைத் தலமான ஜெஜூரி பற்றிய கட்டுரைகள் அந்தச் செய்தித்தாளில், வந்திருந்தன. அப்போது அதில் பார்த்த ஒரு புகைப்படத்தால்தான் கொலாட்கரின் தொங்கு மீசையும் நீண்ட தலைமுடியும் எனக்குப் பரிச்சயம் ஆகியிருக்க வேண்டும்.
இலக்கியம் என்ற ஒன்றே இல்லை என்பதுபோல் இப்போது கடந்த பத்தாண்டுகளாக பாவனை செய்து கொண்டிருக்கும் அந்தச் செய்தித்தாள், ஒரு கவிஞருக்காக அத்தனை நியூஸ்பிரிண்ட்டை அப்போது செலவு செய்தது என்பது இன்று அசாதாரண விஷயமாகத் தெரிகிறது; ஆனால், பம்பாயின் பண்பாட்டுச் சூழல், ஆங்கிலத்தில் எழுதப்படும் இந்திய கவிதைகளின்பால் அன்றெல்லாம், ஏறத்தாழ எதுவுமே யோசிக்காமல், வரையறைத்துக் கொள்ளாமல், நட்பு பாராட்டுவதாகத்தான் இருந்தது, தான் பொழுதுபோக்கு கேளிக்கைகளாகக் கொண்ட பலவற்றுக்கும் காட்டிய அதே இணக்க உணர்வுதான் இங்கும் அதற்கிருந்தது. (more…)