இருமொழிக் கவிதைகள்

அதீனாவின் தலை

ஸ்ரீதர் நாராயணன்

pallasathena

 

கொண்டு வருகிறேன் பலாஸை
இந்த மைதானத்திற்கு நடுவே.
உங்கள் பாசாங்குகளை
முற்றொழிக்க.

எந்தையின் சுடரை
அவர் பெண்மைத் தலையிலிருந்து
பிடுங்கி எடுத்து,
கொண்டு வருகிறேன்
இந்த உடலற்ற நெருப்பை.

எரி-கண்கள் கொண்ட பெண்ணவள்
இந்த நகரை
போலித்தனங்களிலிருந்து
பொலிவுற செய்யட்டும்.

கனன்று கொண்டிருக்கும் இத் தலை
கொடுக்கட்டும் எல்லா கதகதப்பும்
வேறெதுவும் மறைக்கப்பட வேண்டியதில்லை

கொண்டு வருகிறேன்,
பலாஸ் அதினாவை
இந்த மைதானத்திற்கு.

I bring the Pallas
to the middle of this Stadium,
to extinct the pretense

The fire of our father,
sprung out of his
effeminate scalp,
I bring you-
fire without a frame

She, the fiery-eyed lady
shall light this city
out of its sham

This smoldering head
bestows all the warmth,
there is no call for shields.

I bring,
Pallas of Athena
to this Stadium!

குருட்டு ஈ / The Blind Fly

குருட்டு ஈ
தேவதச்சன்-

ஆஸ்பத்திரியில்
வெண்தொட்டிலில்
சுற்றுகிறது
இறந்து கொண்டிருக்கின்ற குழந்தையின்
மூச்சொலி
பார்க்கப்
பயமாக இருக்கிறது
சுவரில்
தெரியும் பல்லி
சீக்கிரம் கவ்விக் கொண்டு
போய்விடாதா
என் இதயத்தில்
சுற்றும் குருட்டு ஈயை

oOo

The Blind Fly
Nakul Vac

The last gasps
of the dying child
In a white crib
at the hospital
Swirl
Leaving me
scared to death
That lizard
on that wall
How I wish for it
to snatch in a jiffy
This blind fly
wildly buzzing around
My frantic heart.

oOo

குறிப்பு –

இந்தக் கவிதையில் மூன்று வாக்கியங்கள்.

“ஆஸ்பத்திரியில்/ வெண்தொட்டிலில்/ சுற்றுகிறது/ இறந்து கொண்டிருக்கின்ற குழந்தையின்/ மூச்சொலி/”
“பார்க்கப்/ பயமாக இருக்கிறது/”
“சுவரில்/ தெரியும் பல்லி/ சீக்கிரம் கவ்விக் கொண்டு/ போய்விடாதா/ என் இதயத்தில்/ சுற்றும் குருட்டு ஈயை”

இதில் முதல் வாக்கியத்தை

“ஆஸ்பத்திரியில்/ வெண்தொட்டிலில்/ சுற்றுகிறது/
இறந்து கொண்டிருக்கின்ற குழந்தையின்/ மூச்சொலி/

என்று இரண்டாகவும்

மூன்றாம் வாக்கியத்தை,

சுவரில்/ தெரியும் பல்லி/
சீக்கிரம் கவ்விக் கொண்டு/ போய்விடாதா/
என் இதயத்தில்/ சுற்றும் குருட்டு ஈயை”

என்று மூன்றாகவும் பிரிக்கலாம்.

இது இரண்டு மட்டுமே போதும்- “பார்க்கப்/ பயமாக இருக்கிறது/” என்பது இந்தக் கவிதையில் ஒரு உணர்ச்சி மிகை. மப்ளர், ஸ்வெட்டர் எல்லாம் போட்டுக் கொண்டு கனமான கம்பளி போர்வை போர்த்து, குத்துக்காலிட்டு அமர்ந்திருக்கும் ஒருவன் நடுங்கும் குரலில், “ரொம்ப குளிருது” என்று சொல்வது போன்ற விஷயம். பார்த்தாலே தெரிகிறது, அப்புறம் எதற்கு சொல்ல வேண்டும்? புனைகதையாசிரியர்களுக்கு வேண்டுமானால், “சொல்லாதே, காட்டு,| என்பது சரிப்பட்டு வரலாம், ஆனால் குளிரில் நடுங்கிக் கொண்டிருப்பவன் மிகைகளைக் கண்டு அஞ்ச முடியாது. தியரிகளை லட்சியம் செய்யாமல் பாட்டுடை நாயகனின் தோலுக்குள் புகுவது தனி வித்தை, அதை இந்தக் கவிதையில் பார்க்கிறோம்.

– மொழிபெயர்ப்பிலும் பார்க்கிறோம் என்று சொன்னால், அது மிகையாக இருக்குமா?

தமிழில், “என் இதயத்தில்/ சுற்றும் குருட்டு ஈ” ஆங்கிலத்தில், “This blind fly/ wildly buzzing around/ My frantic heart” என்றாகி இருக்கிறது.

ஒருவரோடொருவர் என்று இருவர் பேசிக் கொண்டே நடந்து செல்கிறார்கள் என்றால் கால்களைக் கொண்டே அவர்களுக்கு இடையே உள்ள இணக்கத்தை ஓரளவு அனுமானிக்கலாம். ஒருவர் போகும் வேகத்துக்கு மற்றொருவர் ஈடு கொடுக்க வேண்டுமென்றால் அவரது கால்களுக்கு இணையாக இவரது கால்களும் நடை போட வேண்டும். பக்கவாட்டிலிருந்து பார்த்தால் இருவரும் ஒரே நேரத்தில் கால்களை எடுத்து வைப்பதைப் பார்க்கலாம், பொதுவாக இந்த ஒத்திசைவு இயல்பாகவே அமைந்துவிடும்- இல்லாவிட்டால் ஒருவர் பின்தங்கி விடுவார், இல்லையா? இதில் கால்களின் உயரமோ நிறை குறையோ எதுவும் ஒரு பொருட்டல்ல. மொழிபெயர்ப்பையும் இது போன்ற உரையாடலாய்க் கொள்ளலாம். நடனத்தில் நாம் காணும் உரையாடல் வேறு, இது நடைப்பயிற்சியின் உரையாடல். நல்ல மொழிபெயர்ப்பு என்பது பொருளுக்கு அப்பால் மொழியின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முனைவது, இன் தியரி.

லைன் ப்ரேக்குகளில் சற்று தாமதித்துப் படிக்கும்போது, “சுவரில்/ தெரியும் பல்லி/ சீக்கிரம் கவ்விக் கொண்டு/ போய்விடாதா/ என் இதயத்தில்/ சுற்றும் குருட்டு ஈயை” என்பதற்கு இணையான நிதானித்துச் செல்லும் வேகத்தை, “That lizard/ on that wall/ How I wish for it/ to snatch in a jiffy/ This blind fly/ wildly buzzing around/ My frantic heart” என்பதில் பார்க்கலாம். இந்த மொழிபெயர்ப்பு மூல மொழியின் பொருள் மட்டுமல்ல, அதன் மிகைகளையும் அள்ளிக் கொள்கிறது.

என் நூற்றாண்டு / My Century

என் நூற்றாண்டு
– தேவதச்சன் – 

துணியால் வாயைப் பொத்தி அழுதபடி
ஒரு பெண் சாலையில் நடந்து போகிறாள்
என் பஸ் நகர்ந்து விட்டது.
படிவங்களை நிரப்பத் தெரியாமல் ஒரு முதியவர்
மருத்துவமனையில் திகைத்து நிற்கிறார்
என் வரிசை நகர்ந்து விட்டது.
தண்டவாளத்தில் ஒரு இளைஞன் அடிபட்டு
தண்ணீர் தண்ணீர் என்று
கையசைத்துக் கொண்டிருக்கிறான்
என் டிரெயின் நகர்ந்து விட்டது
எவ்வளவு நேரம்தான் நான் இல்லாமல் இருப்பது
எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரம்
இருபத்தொன்றாம் நூற்றாண்டு எவ்வளவு நேரமோ
அவ்வளவு நேரம்

oOo

My Century
Nakul Vac

Muffling her cries with her saree
A woman walks down the street weeping
My bus has begun to move.
Flummoxed by forms he can’t fill
An old man stands helpless at the hospital
My queue has begun to move.
Water Water
An injured young man pleads with his hands
at the railway track

My train has begun to move.
For how long should I be absent
As long as I can
As long as this twenty first century lasts
That long.

oOo

குறிப்பு-

இந்தக் கவிதையின் மொழிபெயர்ப்புச் சிக்கல் கடைசி வரிகளில் வருகிறது. மொழிபெயர்ப்புச் சிக்கல் மட்டுமல்ல, புரிதலின் சிக்கலும்தான்- “எவ்வளவு நேரம்தான் நான் இல்லாமல் இருப்பது/ எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரம்/ இருபத்தொன்றாம் நூற்றாண்டு எவ்வளவு நேரமோ/ அவ்வளவு நேரம்”, என்பதைப் பலவாறு பொருள் கொள்ளலாம். அவற்றில் ஒன்றை நோக்கும் குறிப்பு இது,

மேற்கண்ட கேள்வியில், “நான் இல்லாமல் இருப்பது,” என்ற இடத்தில், “கண்டும் காணாமல் இருப்பது” என்று மாற்றி வாசித்தால் என்ன வேறுபாடு சொல்ல முடியும்?

கவிதையின் முந்தைய வரிகள், கண்டும் காணாமல் செல்வதைத்தான் சொல்கின்றன- அழுதபடிச் செல்லும் பெண்ணிடம் ஆறுதலாக ஒரு வார்த்தை பேசியிருக்கலாம், ஆனால் நம் நகர்ப்புற வாழ்க்கையில் பிறர் அந்தரங்க விஷயங்களில் தலையிடுவதில்லை; பெரியவருக்கு படிவம் நிரப்பித் தந்திருக்கலாம், ஆனால் நமக்கு நம் அவசரம்; அடிபட்டவனுக்கு ஒரு வாய் தண்ணீர் கொடுத்திருக்கலாம், ஆனால் நமக்கு நம் நிர்ப்பந்தங்கள். இப்படி வெவ்வேறு காரணங்கள் சொன்னாலும் இவை அனைத்தும் நாம் கண்டும் காணாமல் கடந்து செல்லும் சம்பவங்கள், எனவே, “எவ்வளவு நேரம்தான் கண்டும் காணாமல் செல்வது”, என்று கேட்டு நம் மனசாட்சியை எளிதாகத் தொட்டிருந்தால் சரியாகவே இருந்திருக்கும். மாறாக, “எவ்வளவு நேரம்தான் நான் இல்லாமல் இருப்பது” என்பதில் குழப்பம் வந்து விட்டது.. தவித்த வாய்க்குத் தண்ணீர் கொடுத்திருந்தால் நான் இருந்திருப்பேனா?- இந்தக் கேள்வியைக் கேட்டுக் கொண்டால், நான் என்பது மனிதம் என்று அர்த்தப்பட்டு கவிதைச் சரியான இடத்துக்குக் கொஞ்சம் சுற்றுவழியில் வந்து விடுகிறது.

ஆனால் இந்தக் கவிதைக்கு நம் சமூக மனதைச் சாடும் நோக்கம் இருக்குமா என்பது சந்தேகமாக இருப்பதால், வேறொரு யோசனை தோன்றுகிறது. கவிஞர் நடந்தது எதையும் நினைத்து வருந்துவதாக இருக்காது- அதாவது, குற்றவுணர்வு இருக்கலாம், அதற்காக திருந்தி வாழும் மனநிலை வந்து விட்டது என்று சொல்ல முடியாது. மாறாக, இதெல்லாம் இப்படித்தான் இருக்கும், நாமும் எதையும் செய்யப் போவதில்லை என்ற விரக்தி மனநிலைக்கு வந்து விட்டிருக்கலாம்- இல்லை, இதுதான் யதார்த்தம், இதுதான் நிதர்சனம், தான் மட்டுமல்ல, நாமெல்லாரும் உள்ளபடியே உள்ள நிலையைதான் விவரிக்கிறார் என்று சொன்னாலும் சரி, அடுத்து வரும் வரிகள் “எவ்வளவு நேரம்தான் நான், இல்லாமல் இருப்பது” என்ற மனநிலையோடு பொருந்திப் போகிறது. நான் அப்போதெல்லாம் அங்கு நிற்காமல் நகர்ந்து வந்து விட்டதாக நினைத்துக் கொண்டிருக்கிறேன், ஆனால் இப்போது நினைத்துப் பார்க்கும்போது அங்குதான் இன்னும் நிற்கிறேன் என்று தெரிகிறது: நகர்ந்தது நானல்ல, “என் பஸ் நகர்ந்து விட்டது.”, “என் வரிசை நகர்ந்து விட்டது.”, “என் டிரெயின் நகர்ந்து விட்டது”. எத்தனையோ விஷயங்கள் என்னைக் கொண்டு செல்கின்றன, ஆனால் என் கூடவே இந்த விஷயங்களையும் நான் கொண்டு வந்திருக்கிறேன், அல்லது அவற்றோடு என்னில் ஒரு பகுதியை விட்டு வந்திருக்கிறேன். தன்னிகழ்வாக, அன்பாலோ கருணையாலோ, என்னில் ஏதோ ஒன்று தோன்றி வெளிப்படாவிட்டால் அப்புறம் அது என்ன இருப்பு, இருப்புக்கும் இல்லாமைக்கும் என்ன வேறுபாடு, நான் செலுத்தப்படுகிறேன் என்பதைத் தவிர? இதையெல்லாம் எத்தனை நாளைக்கு என்னால் தாங்கிக் கொள்ள முடியும்? தாங்கிக் கொள்வதா? செத்தாலும் முடியாது!

இந்தக் கவிதை இருபத்து ஒன்றாம் நூற்றாண்டின் துவக்க ஆண்டுகளில் எழுதப்பட்டது என்பதைப் பார்க்கும்போது- “எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரம்/ இருபத்தொன்றாம் நூற்றாண்டு எவ்வளவு நேரமோ/ அவ்வளவு நேரம்”:- இதெல்லாம் இருந்து தீர்க்கிற விஷயங்கள் இல்லை என்று சொல்வதாகத் தோன்றுகிறது.