எதற்காக எழுதுகிறேன்

எதற்காக எழுதுகிறேன்? – குமரன் கிருஷ்ணன்

குமரன் கிருஷ்ணன்

உயிரணுக்களால் உண்டாவது உடம்பு. நினைவணுக்களால் உருவாவது மனது. ஓயாமல் மனது உருப்பெற்றுக் கொண்டே இருக்கிறது. இந்த உருவாக்கத்தின் தொடர்வினையாக, ஒரு நிகழ்வின் நொடியை நினைவின் பிரதியாய் மனது சேகரிப்பதை நாம் அனுபவம் என்று அழைக்கலாம். ஆனால் எந்தவொரு நிகழ்வின் நொடியும் தனித்திருப்பதில்லை என்பது காலத்தின் விதி. அதன் முன்னும் பின்னுமாய் கோர்க்கப்பட்ட நிகழ்வுகளுக்குரிய‌ நொடிகளின் பிரதியை கொண்டே குறிப்பிட்ட நிகழ்வை உள்வாங்க முடியும் என்பது காலம் ஏற்படுத்திய உயிரியல் கட்டமைப்பு. ஓரறிவு துவங்கி ஆறறிவு வரை அனைத்திற்கும் இதனை பொது விதி எனக் கொள்ளலாம். இவ்விதியை கொண்டு காலம் நம் மனதை கையாளும் பாங்கு அலாதியானது. நினைப்பின்றி நிகழ்வில்லை, நிகழ்வின்றி நினைப்பில்லை என்னும் விசித்திர வளையத்திற்குள் நம்மை சுற்ற விட்டு வேடிக்கை பார்க்கும் காலத்திற்கு நாம் வைத்திருக்கும் பெயர் வாழ்க்கை. உலகில் உலவும் அனைத்து விதமான விழுமியங்களும் ‍ அது தனிமனித தத்துவ விசாரங்கள் சார்ந்ததோ, சமூகம் சார்ந்ததோ, மதம் சார்ந்ததோ…அறிவியல் சார்ந்ததோ…எப்படியிருப்பினும் இந்த விசித்திர வளையத்தில் அடங்கி விடும். இவ்விசித்திர வளையம் தரும் வியப்பினால் எழுதுகிறேன் அவ்வியப்பை பற்றி எழுதுகிறேன்.இத்தகைய வியப்பை ஊட்டும் படைப்புகளை பற்றியும் எழுதுகிறேன் அவற்றின் வாசிப்பு அனுபவங்களை சுற்றியும்  எழுதுகிறேன்.

இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என்று மூன்று காலங்கள் இருப்பதாக நமக்கு கற்பிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் காலம் ஒன்றே எனத் தோன்றுகிறது. அது இறந்த காலம் தான். அதுவே, நாம் பார்த்த இறந்த காலம், பார்த்துக் கொண்டிருக்கும் இறந்த காலம், நாளை பார்க்கப் போகும் இறந்த காலம் என்று திரிகிறது…ஒரு நினைப்பிலிருந்து மற்றொரு நினைப்புக்கு மனம் நகரும் கால அளவை நிகழ் காலம் என்றும் ஒரு நினைப்பிலிருந்து மற்றொரு நினைப்பை உருவாக்கும் மனதின் விழைவை எதிர் காலம் என்றும் சொல்லலாம் இல்லையா?  காலம் என்பதே நினைப்பு தான். நினைப்பும் நினைப்பை பற்றிய நினைப்பும்…! காலம் சில சமயங்களில் நம் தோள் அணைத்து அழைத்துச் செல்கிறது. சில சமயங்களில் தரதரவென்று இழுத்துச் செல்கிறது. இரண்டும் இவ்வாழ்வின் இயல்பென்று புரியத்துவங்குகையில் காலத்தை ஒரு அற்புதமான ஆசானாய் பார்க்கும் ஆர்வம் சுரக்கிறது. அதன் விளைவாய் ஒவ்வொரு நொடியையும் கூர்ந்து பார்க்கும் நோக்கம் கிடைக்கிறது. கூர்ந்து பார்த்தல் என்பதே கூடுதல் அனுபவத்திற்கான வழி என்ற பக்குவம் பிறக்கிறது. இவ்வாறு சேர்க்கும் அனுபவத்தின் அச்சாணி நினைப்பு. நினைப்பு என்பது ஒரு விசித்திர வஸ்து. ஒரு நினைவு, அது நினைக்கப்படும் பொழுதில் என்ன பொருள் தரும் என்பது காலத்தின் கையில் இருக்கிறது. இடைப்பட்ட பொழுதுகளில் கிடைக்கும் மேற்கூறிய அனுபவத்தின் ஆழ நீளங்களின் அமைப்பைப் பொறுத்து இருக்கிறது. நினைப்பின் பரிமாணங்கள் நினைப்பை பற்றிய ஒவ்வொரு நினைப்பு தோறும் மாறிக்கொண்டே இருக்கும் விசித்திரம் நிகழ்கிறது. இத்தகைய நினைப்பு தரும் உணர்வை, அதன் விசித்திரத்தை, அதற்கு நிகரான சொற்களின் வடிவேற்றி படிம‌ப்படுத்தும் படைத்தல் அனுபவம் தரும் பரவசத்திற்காய் எழுதுகிறேன்…

காலம் நம் நினைப்புடன் உறவாடும் மாயம் தான் எத்தனை வியப்புக்குரியது? காலம் ஒரே அலகில் தான் உலகில் உலவுகிறது. ஒரு இலையின் அசைவுக்கும் ஒரு இறுதி மூச்சுக்கும் காலத்தின் அலகு ஒன்றே. ஆனால் அதைப் பார்ப்பவர் அவற்றுடன் கொண்ட நினைப்பின் பரிமாணங்களைப் பொறுத்து அந்நிகழ்வும், பின் அந்நிகழ்வு சார்ந்த நினைப்பும் கால அலகின் கணக்கில் அடர்த்திமிகு நீளம் கொண்ட நினைப்பாக மாறும் மாயம் சொல்லி அடங்குமா சொல்லில் தான் அடங்குமா? நாளும் பொழுதும் நிகழும் இம்மாயத்தை மொழியின் வழியே சேகரித்துக் கொள்ளும் தீராத ஆவலில் எழுதுகிறேன்.

“நெருப்பு என்று எழுதினால் சுட வேண்டும்” என்பார் லா.ச.ரா. அது போல் நினைப்பென்று எழுதினால் நெகிழ வேண்டும். மனதின் நெகிழ்வு உள்ளிருக்கும் மனிதத்தை உரமேற்றிக் கொண்டே இருக்கிறது. அதை வேண்டி எழுதுகிறேன். வாசிப்பவருக்கும் அத்தகைய நெகிழ்தல் நேரும் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன்.

நினைப்பு உறவுகளாலும் உணர்வுகளாலும் உண்டான கலவை. இங்கே உறவு, உணர்வு என்பதை மனிதருடன் மட்டும் தொடர்புபடுத்திக்கொள்ளாமல், நம் அகத்திற்கும் புறவெளிக்குமான உறவும் உணர்வும் என்று பொருள் கொள்க. இத்தகைய நினைப்பு காலத்துடன் உறவாடும் நிகழ்வுதானே வாழ்க்கை? இந்த உறவைப் பற்றி எழுதுகிறேன்…இந்த உறவின் உன்னதம் பற்றிய புரிதல் தரும் விசாலமான பார்வைக்காய் எழுதுகிறேன்…

காலம் நொடி தோறும் நினைப்பை பிரசவித்தபடி நகர்ந்து கொண்டே இருக்கிறது. காணும் திசையெங்கும் கடக்கும் பொழுதெங்கும் நினைப்புக்கான கருவை சுமந்தபடி திரிகிறது காலம்.  உறவையும் பிரிவையும் உட்பொருளாய் கொண்டது காலம். அதை உள்வாங்கி ஊழ்வினையாய் மாற்றுகிறது நினைப்பு. இந்த ரகசியத்தை, அதிசயத்தை, அதன் உட்பொருள் பற்றிய என் புரிதலை பகிர்ந்து கொள்ள எழுதுகிறேன்.

நிகழ்கால நாக்கில் நினைப்பை அள்ளி தடவுகையில் மனதில் ஊறும் சுவைதானே நம் வயது? எனவே வயதின் வார்ப்பு பற்றி எழுதுகிறேன் அதன் சாரமான அனுபவ ஈர்ப்பு பற்றி எழுதுகிறேன்.

இதுவரை சொன்ன அகம் சார்ந்த “எதற்காக?” தந்த எழுத்துக்கள்,  பிறர் வாசிக்கும் நிலையை அடையும் பொழுது, ஒரு மிக முக்கியமான “எதற்காக?” நிகழ்கிறது. இங்கும் காலமே கருவியாய்…ஆம்.ஒரு நுனியை மற்றொன்றில் கோர்த்து விடுவதில் காலம் வெகுவாய்த் தேர்ந்தது!

எனவே, இவ்வாறு, என் நினைப்பை தேக்கி வைத்த சொல்லடுக்கு ஒன்றை வாசிக்கும் ஒருவர் எதிகொள்ளும் ஒற்றைவரியின் அடியில் அவரின் நினைப்பின் நுனி ஒன்று ஒட்டிக் கொண்டிருக்கக் கூடும். அதன் பின் என் வரி அவரின் பிரதி. அவருக்கான பிரதி. நினைப்பின் பிரதி என்பது வெறும் நகலன்று. அதன் பொருளடக்கம் வாசிப்பவரின் நினைப்புக்கேற்ப மாறிக்கொண்டே இருக்கும் பண்பு உடையது. இப்பண்பு பயில‌ வாசிக்கிறேன். இப்பண்பு பகிர எழுதுகிறேன்.

எதற்காக எழுதுகிறேன் – அறிமுகம்

நரோபா

yetharkkaha-228x228

 

அண்மையில், சந்தியா வெளியீடாக வந்துள்ள “எதற்காக எழுதுகிறேன்” என்ற சிறு நூலை வாசிக்க நேர்ந்தது. தி.ஜானகிராமன், ஜெயகாந்தன், சி,சு,செல்லப்பா, க,நா.சு, ந.பிச்சமூர்த்தி, கு.அழகிரிசாமி, லாசரா, ஆர்.ஷண்முகசுந்தரம் உட்பட அக்காலகட்டத்து எழுத்தாளர்கள் பலரும் இந்த கேள்வியை எதிர்கொண்டு எழுதி (பேசி) இருக்கிறார்கள். அன்றைய காலத்தில் பிரபலமாக இருந்த தொடர்கதை எழுத்தாளர் ஆர்.வியின் கட்டுரை கூட இடம் பெற்றிருக்கிறது. ஒவ்வொரு கட்டுரையும் ஒவ்வொரு விதம், ஒவ்வொரு தொனி.

எனக்கே எனக்காக எழுதுவதைப்பற்றி என்ன சொல்ல முடியும்? விஸ்தாரமாக சொல்ல என்ன இருக்கிறது? எனக்கே எனக்காக எழுதவேண்டும் போலிருக்கிறது எழுதுகிறேன். அது என்னமோ பெரிய ஆனந்தமாக இருக்கிறது. காதல் செய்கிற இன்பம் அதிலிருக்கிறது. காதல் செய்கிற இன்பம், ஏக்கம், எதிர்பார்ப்பு, ஒன்றிப்போதல், வேதனை- எல்லாம் அதில் இருக்கின்றன. இன்னும் உள்ளபடி சொல்ல வேண்டும் என்றால் பிறர் மனைவியை காதலிக்கிற இன்பம், ஏக்கம், நிறைவு – எல்லாம் அதில் இருக்கின்றன.,“ என்று எழுத்து அளிக்கும் கிளர்ச்சியை, அதனால் தனக்கு கிடைக்கும் இன்பத்தை, அந்த நிலையை மீண்டும் மீண்டும் அடைந்து நிலைத்திருக்கும் வேட்கையை எழுதுகிறார் தி. ஜானகிராமன்..

ஜெயகாந்தன் அவருக்கே உரிய முறையில் தனது தரப்பை வலுவாக வைக்கிறார். எழுத்தாளன் தனக்குள் சுருண்டுகொள்ளும் குகைவாசி அல்ல என்று அவனை இழுத்து கொண்டுவந்து நிறுத்துகிறார்-

எழுத்தாளன் சோம்பேறியோ, பொறுப்புக்களற்றவனோ அல்ல. அவன் உலகத்து இன்பங்களை, அல்லது குறைந்தபட்ச வசதிகளை அனுபவித்துக்கொண்டு தனக்குதானே, தன் மன அரிப்புக்காக வாழும் மனமைதுனக்காரன் அல்ல.

அரசியல்வாதியும், விஞ்ஞானியும், கலைஞனும் இந்த உலகத்தை நிர்ணயிக்கிறார்கள். இதன் தன்மையை மாற்றியமைத்து வளர்க்கிறார்கள்.

அவர்களது இந்த போராட்டத்தில் நான் எனது கடமையைச் செய்கிறேன். இதை மறுத்தால் நான் வாழும் காலத்திற்கும், எனது உடன் பிறந்தோர்க்கும் நான் துரோகம் செய்தவனானேன்.

ஆர்விக்கு வேறு கவலைகள் இருக்கின்றன. “எழுத்தைக்கொண்டு என்னவும் செய்யலாம். “இன்னும் நேரில் திட்ட முடியாத ஆட்களை, எஜமானர்களை, எதிரிகளை பெயரை மாற்றிபோட்டு இஷ்டப்படி தீர்த்து கட்டுகிறபோது ஏற்படுகிற இன்பத்துக்குப் பெயர் எதாவது இருந்தாள் அது என்ன? அதிலும் ஆத்மதிருப்தி இருக்கிறது என்று சொல்ல முடியாதோ?

அழகிரிசாமி, க.நா.சு, பிச்சமூர்த்தி ஆகிய மூவரின் கருத்துக்களும் ஆன்மீக தளத்தில் விரிகின்றன.

ஆகவே, எழுதுவதால் நான் மனிதனாக இருக்கவும், நான் மனிதனாக வாழவும், மனிதனாக வளரவும் முடிகிற காரணத்தால் எழுதுகிறேன் ..எழுத்துப் பணியின் உச்ச நிலையில், நான் மற்றச் சகல உயிர் வர்க்கங்களுனுடனும் ஒன்று கலந்து ஐக்கியமாகிவிடுவதால் நான் எனக்கு செய்யும் மனித சேவை, மண்ணுயிர் சேவையாகவும் இருக்கிறது. நான் உயர்ந்தால், உலகமும் உயர முடிகிறது. இப்படிப்பட்ட காரியத்தை கலைகளினாலேயே சாதிக்க முடியும். நான் பயின்ற கலை எழுத்து, அதனால் எழுதுகிறேன்,” அழகிரிசாமி எழுத்தின் வழியாக தான் அடையும் இரண்டற்ற நிலையை பேசுகிறார்

ஈடுபாடில்லாமல் கண்டு, கண்டதைத் திரும்பச் சொல்லி, பிறரையும் அதேபோல காண செய்வதுதான் கலையின் லட்சியம். காண்பதிலும், கண்டதை திரும்ப சொல்வதிலும் ஆனந்தம் காண்பதே இலக்கிய ஆசிரியர்களின் லட்சியம். இந்த ஆனந்தத்துக்காகத்தான் நான் எழுதுகிறேன்,” என்று க.நா.சுவும் ஏறத்தாழ இதே போன்ற ஆன்மீக தளத்தில் நின்று தான் தன் எழுத்தை பற்றி மதிப்பிடுகிறார்.

இப்போது எதற்காக எழுதுகிறேன்? சுத்தமாக பணத்திற்காக எழுதுகிறேன் என்று சொல்லிக்கொள்வதில் நான் வெட்கம் கொள்ளவில்லை!..ஆம் வீடுகட்டும் என்ஜினீயர் மாதிரி பணம் கொடுத்தால் – நாவலோ, சரித்திரமோ – தயார் செய்து கொடுக்க வேண்டியதுதானே? …வீட்டிலுள்ள உயிர்கள் – நம்மை நம்பி இருக்கின்ற ஜீவன்கள் சோர்ந்து கிடக்கையில், ‘என் கொள்கை, என் லட்சியம்’ என்று அலட்டிகொள்வதில் என்ன பிரயோஜனம்?” என்று ஆர்.ஷண்முகசுந்தரம் எழுதும் போது மனம் கனக்கிறது.

ஆனால் பிச்சமூர்த்தி அதை உறுதியாக மறுக்கிறார். “உண்மையில் கலைஞனும் விதையைபோல. பணமும் புகழும் பிரச்சாரமும் கலைக்கு நேரடியாக காரணங்கள் அல்ல. புஷ்பத்தை சந்தையில் விற்கலாம், ஆனால் வியாபாரம் நடத்துவதற்காக மல்லிகை மலர்வதாக நினைத்துவிட முடியாது… சிருஷ்டி இயற்கையின் லீலை. ஆன்மீக விளையாட்டு.

இதில் எது சரி? எது தவறு? எனக்கு எல்லாமே சரி என்று தான் தோன்றியது. .

அண்மையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் கவிஞர் இசை ‘ஏன் எழுதுகிறேன்’ என்றொரு கட்டுரையை அந்திமழை இதழில் எழுதி இருக்கிறார். ஆர்வெல், ஹெமிங்க்வே, புக்கோவ்ஸ்கி போன்ற எழுத்தாளர்கள் எழுத்தை பற்றியும் ஏன் எழுதுகிறேன் என்பதை பற்றியும் விளம்பி இருக்கிறார்கள்.

இந்த கேள்வி எனக்கு முக்கியமானதாக பட்டது. காலந்தோறும் எழுப்பப்பட வேண்டிய கேள்வியாகவும் பட்டது. எழுதுபவரே வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு பதில்களை கண்டடையும் சாத்தியம் கொண்டதாகவும் இருக்கிறது. இன்றைய இணைய யுகத்தில் கவனம் சிதையாமல் எழுதுவது ஒரு சவாலாக இருக்கிறது. அன்றைய சூழ்நிலையுடன் ஒப்பிடும் போது, பணம் இன்று எழுத அத்தனை முக்கிய காரணி இல்லை என்றே தோன்றுகிறது. இணையத்தின் எழுச்சி வேறுவகையில் அதிகம் எழுதி குவிக்கவும் சாத்தியம் உள்ள காலகட்டமும் இதுவே.

எழுதும் அந்த நேரத்தில் வேறு எதை எதையோ செய்திருக்கலாம்.  உண்மையில் ஒருவன் ஏன் எழுத வேண்டும்? நம்முள் எழுத்தாக வெளிப்படத் துடித்து நம்மை உந்தித் தள்ளிக் கொண்டிருக்கும் அது என்ன? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விடை இருக்கலாம். எல்லா சமயங்களிலும், எல்லோருக்கும்  எழுத்து ஒரு கொண்டாட்டமாக இருப்பதில்லை. பெரும் எழுத்தாளர்கள், வளரும் எழுத்தாளர்கள், இளம் எழுத்தாளர்கள், எழுத துவங்கியவர்கள் என எல்லோரையும் நோக்கி இக்கேள்வியை கேட்க வேண்டும் என தோன்றியது. அந்தரங்கமாக ஒரு சின்ன கடைதலை இக்கேள்வி நிகழ்த்தி தனக்கான விடையை அவர்கள் கண்டுகொண்டு நமக்களிக்கும்போது அது நமது விடையாகவும் இருக்க கூடும். திஜாவின், பிச்சமூர்த்தியின், அழகிரிசாமியின் விடை என்னுடையதும்தான். புனைவாளர்கள், கட்டுரையாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் என பல தரப்பட்டவர்களை நோக்கி இக்கேள்வியை கேட்க விரும்பினேன். தமிழில் வெகு அரிதாக வாசிக்கப்படும் அறிவியல் கட்டுரையை இத்தனை மெனக்கெட்டு ஏன் எழுத வேண்டும்?

பதாகை சார்பாக நாங்கள் அறிந்த பலரிடமும் இக்கேள்வியை வைத்தோம். பெரும்பாலும் எவரும் மறுக்கவில்லை. மேலும் பலரையும் கேட்பதாக இருக்கிறோம். இதை வாசிக்கும் வாசகர்கள் எழுத்தாளர்கள் அவசியம் எழுத வேண்டுமாய் கேட்டுகொள்கிறோம். இந்த இதழ் துவங்கி ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து, எழுத்தாளரின் சிறிய அறிமுகத்துடன் இனைந்து,  பல்வேறு எழுத்தாளர்களின் பார்வை வெளிவரும் என நம்புகிறேன்.

Picture courtesy: சந்தியா பதிப்பகம்