என். கல்யாணராமன்

விளக்கு அமைப்பின் ‘புதுமைப்பித்தன் நினைவு விருது -2015’

ரவிசங்கர்

விளக்கு என்னும் அமைப்பு, ஒவ்வொரு வருடமும் தமிழ் இலக்கியத்துக்குச் சிறந்த பணியாற்றியவர் ஒருவரைத் தேர்வு செய்து ஒரு விருது அளிக்கிறது. இந்த விருது புதுமைப்பித்தன் நினைவாக வழங்கப்படுவதாகத் தெரிகிறது. 2015 ஆம் ஆண்டிற்கான விருதை, தமிழில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதி வருபவரும், தமிழிலிருந்து இங்கிலிஷுக்கு மொழிபெயர்ப்பதில் பெயர் பெற்றவராகத் திகழ்பவருமான திரு.கல்யாணராமனுக்கு இந்த அமைப்பு வழங்கியது. அதன் பொருட்டு ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு பாராட்டு நிகழ்ச்சி,  சென்னை அருங்காட்சியகத்துக்கு எதிர் சாரியில் உள்ள இக்ஸா மையத்தில் நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தமிழின் மூத்த எழுத்தாளர்களான திரு. இந்திரா பார்த்தசாரதியும், திரு. அசோகமித்திரனும் வந்திருந்து சிறப்பித்தனர்.

கல்யாணராமன், தமிழிலக்கிய உலகில் நுழைய காரணமாக இருந்த கணையாழி பத்திரிகையை அன்று இயக்கிய அசோகமித்திரனும், அப்பத்திரிகையின் பதிப்புக் குழுவில் அன்று பங்கெடுத்து வந்த இந்திரா பார்த்தசாரதியும் இந்த நிகழ்ச்சிக்கு வந்தது ஒரு அபூர்வ நிகழ்வுதான். இவர்களைத் தவிர சிறப்பு வரவேற்பைப் பெற்றவராக, கிரியா பதிப்பகத்தை நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வரும் எஸ்.ராமகிருஷ்ணனும் அரங்கில் இருந்தார்.

உரையாற்ற அழைக்கப்பட்ட ஐந்து நபர்கள் பேசியன பற்றி ஒரு சிறு விவரணை கீழே.

முதலாவதாக நிகழ்ச்சியில் பேசிய பெருமாள் முருகன் நல்ல தயாரிப்புடன் வந்து பேசினார். சிறிது நீளமான உரை. மொழிபெயர்ப்பு பற்றித் தொல்காப்பியரிடமிருந்தே செய்திகளை நாம் பெற முடியும், அப்போதிருந்தே தமிழில் மொழிபெயர்ப்பு இலக்கியம் பற்றிய விழிப்புணர்வும் அதன் இயல்புகள் பற்றிய கருத்து வெளிப்பாடும் இருந்திருக்கிறது என்பதைச் சுட்டினார். அன்றைய கவனம் பெருமளவும் சமஸ்கிருதத்திலிருந்து பெறப்படும் இலக்கியம் பற்றி என்பது நமக்குத் தெரியும் என்றாலும், தொல்காப்பியத்துக்கு உரை எழுதிய  நச்சினார்க்கினியார், இளம்பூரணர் போன்றார் காலத்திருந்தே மொழிபெயர்ப்பு என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதைக் கட்டமைப்பதில் நம் கவனம் இருந்திருக்கிறது என்பதைச் சுட்டி இந்தத் துவக்க கால கவனம் எப்படி உருமாறியது என்பதையும் பற்றிப் பேசினார்.

சமகாலத்தில் மொழிபெயர்ப்பு என்பதில் தமிழிலிருந்து பிற மொழிகளுக்குப் போகும் இலக்கியம் பற்றியும், அதைச் செய்பவர்களைப் பற்றியும் தகவல் தேடினால் கிட்டுவது மிகக் கடினமாக இருக்கிறது என்றார். ஒரு சில பெயர்களைச் சொன்னார். ஆர். சண்முகசுந்தரம் நூறு புத்தகங்களுக்கு மேல் தமிழில் மொழிபெயர்த்தவர். அவரைப் பற்றி நமக்கு அதிகம் தெரியாமல் இருக்கிறோம்.  பட்டம் வாங்கவென, இதைப் பற்றி ஒருவர் ஆய்வு நடத்தி எழுதிய கட்டுரை/ புத்தகம் ஒன்றுதான் இன்னமும் இருக்கிற ஒரே ஆதார நூல் என்பது வருந்தத்தக்கது என்று பேசியவர், பிறகு கல்யாணராமனுடைய மொழிபெயர்ப்பின் அருமை பற்றி நிறையப் பேசினார். தன் கதைகளுக்கு கல்யாணராமன் கொடுத்த சிறப்புக் கவனத்தைப் பற்றி விளக்கினார்.

வட்டார வழக்குகள் நிறைந்த தன் படைப்புகளைச் சுயவிருப்பப்படி மொழி பெயர்க்காமல், தன்னை நேரில் வந்து பார்த்துப் பல மணி நேரம் உரையாடி, தொலைபேசியில் தொடர்ந்து பேசி அவ்வப்போது எழும் ஐயங்களை விளக்கிக் கொண்டு, மின்னஞ்சலில் மேற்படியான தகவல்களைச் சேகரித்து ஒவ்வொரு கதைக்கும் பல மாதங்கள் செலவழித்து மொழிபெயர்த்திருக்கிறார். அப்படி மொழிபெயர்த்தபோது கிட்டிய முதல் பிரதிகளைத் தன்னிடம் கொடுத்து சோதித்துக் கொண்டு மேலும் மேலும் தம் பிரதியைச் செம்மைப்படுத்திக் கொள்வதை ஒரு வழக்கமாக இவர் கொண்டிருக்கிறார். தம் கதைகளுக்குக் கிட்டிய சிறப்பான மொழிபெயர்ப்பாளர் இவர் என்பதில் தனக்கு ஐயம் இல்லை என்றும் சொன்னார்.

கல்யாணராமன் செய்யும் எதையும் இப்படிப் பல முறை சோதித்துச் செய்பவர் என்பது அவரது பேட்டி ஒன்றைப் பிரசுரித்த சொல்வனம் குழுவுக்கும், அந்த நேர்காணலை நடத்தி எழுதிக் கொடுத்த ஸ்ரீதர் நாராயணனுக்கும் தெரியும்.

அடுத்து பேசிய தேவிபாரதியும் கிட்டத்தட்ட முழுதுமே தன் நூலைக் கல்யாணராமன் எப்படி மிகக் கவனமாகவும், நிறைய உழைப்போடும் மொழிபெயர்த்திருக்கிறார் என்பது பற்றியே பேசினார். அந்த மொழிபெயர்ப்பின் விளைபொருளாகத் தன் சிறுகதைகளில் சிலவற்றின் தொகுப்பாக வெளிவந்திருக்கும் ‘ஃபேர்வெல், மஹாத்மா’ உலகரங்கில் கவனம் பெற்று விட்டது, இது சாத்தியமானது கல்யாணராமனின் மொழிபெயர்ப்புத் திறனால்தான் என்றும் தெரிவித்தார்.

இ.பா கொஞ்சம்தான் பேசப்போகிறேன் என்று ஆரம்பித்தார், ஆனால் பேசத் துவங்கியதும் தான் நினைத்திருந்த கருத்துகளின் தொகுப்பில் கிட்டிய உந்துதலாலோ அல்லது பேச்சுடைய ஓட்டம் கொடுத்த உற்சாகத்தாலோ கொஞ்சத்துக்கு மேலாகப் பேசினார். (ஒலிபெருக்கியிலிருந்து புறம் நகர்ந்து பேசியதாலும், அறையில் தெருவுடைய போக்குவரத்தின் சத்தம் ஊடுருவியதிலும் இவர் பேசியதில் மூன்றிலொரு பங்கு எனக்கு எட்டவில்லை).

மொழிபெயர்ப்பு என்பதைவிட மொழியாக்கம் என்பதே தனக்குப் பிடித்த சொல் என்றவர் அனேகமாக மொழியாக்கம்தான் சாத்தியம் என்பதைச் சொன்னார். அட, நான் பேச இருந்த விஷயத்தைப் பேசி விட்டாரே, இனி எதைப் பேசுவது என்று திகைத்தேன்.

மொழிபெயர்ப்பு என்பது எப்போதும் ஒரே பிரதியோடு நிற்பதில்லை. அந்தந்த காலத்தில் செவ்விலக்கியங்கள், சிறந்த படைப்புகளை மொழி பெயர்ப்பவர்கள் தமக்கு உகந்த மொழியில், நடையில் அவற்றை மாற்றுகிறார்கள். ஸெர்வாண்டெஸின் ‘டான் கிஹோட்டே’ க்குப் பல மொழிபெயர்ப்புகள் உண்டு என்று மொழிபெயர்ப்பாளர்கள் சிலரின் பெயர்களைச் சொன்னார்.  இரு மொழிகளிலும் மிக்க தேர்ச்சி தேவை என்றும், யார் வேண்டுமானாலும் மொழிபெயர்க்கலாம் என்பது உண்மைதான் என்றாலும், மூல ஆசிரியரின் நோக்கத்தைத் தெரிந்து கொள்ள அந்த மொழிக் குழுவின் இயல்புகள், படைப்பின் காலம் ஆகியன குறித்து நல்ல அறிவு தேவை என்றார்.

இ.பா. சேம் ஸைட் கோல் ஒன்றையும் போட்டார்- சம்ஸ்கிருதம் ஏதோ ஒரு சில சமூகக் குழுக்களின் கட்டுப்பாட்டில் இருந்த சொத்து இல்லை. அது ஒரு காலத்தில் அகில இந்திய இணைப்பு மொழி, அதிலிருந்து தமிழ் கடன் வாங்கிய அளவு, கடன் கொடுத்தும் இருக்கிறது என்பதை நாம் அறிவதில்லை என்றார் அவர். சீவக சிந்தாமணி தமிழிலிருந்துதான் சம்ஸ்கிருதத்துக்குப் போயிருக்க வேண்டும் என்ற ஓர் ஆய்வாளரின் கருத்து தனக்கு உடன்பாடுள்ள கருத்து என்றார். அது போலப் பல நூல்கள், உதா: பெரிய புராணம், தமிழிலிருந்து சம்ஸ்கிருதத்துக்குப் போனதை அறியாமல், இடைக்காலத்தில் (18-19 நூற்றாண்டுகளைச் சொல்கிறார்) இயங்கிய சில தமிழறிஞர்கள் கூட,  சம்ஸ்கிருதத்திலிருந்து தமிழுக்கு வந்த நூலாக அதைக் கருதியதைச் சொல்லி, நம் ஆய்வு முறைகள் இன்னமும் நன்கு செம்மைப்படவில்லை என்பதாகச் சொல்லி வருந்தினார்.

அ.மி பேசவில்லை. தனி உரையாடலில்கூட அவருக்குக் குரல் அதிகம் எழவில்லை. மிக்க தளர்ச்சி. ஆனாலும் படிகள் ஏறி இறங்கி, அங்கு வந்து அமர்ந்திருந்து பரிசை வழங்கினார் என்பது வியப்புக்குரியது. அது அவருடைய மன உறுதியைக் காட்டியது என்பதோடு, கல்யாணராமனின் இலக்கிய நடவடிக்கைகள் மீது அவருக்கிருக்கும் மதிப்பையும் காட்டியது.

கன்னடரும், பெங்களூர்வாசியுமான  ஸ்ரீநாத் பேரூர் (பெயரைச் சரியாகச் சொன்னேனா என்பது தெரியவில்லை) சுருக்கமாக, ஆனால் நன்கு உரையாற்றினார். இவர் இங்கிலிஷில் பேசினார். குறிப்பாக கல்யாணராமன் தன் போன்ற மொழிபெயர்ப்பாளர்களுக்கு ஆதர்சம் என்று சொன்னார். புலிக்கலைஞன் என்ற அமி கதையின் மொழிபெயர்ப்பிலிருந்து சில பகுதிகளைப் படித்துக் காட்டினார். டால்ஸ்டாய், தாஸ்தயெவ்ஸ்கி, செகாவ் போன்ற பற்பல ரஷ்ய எழுத்தாளர்களை சென்ற நூற்றாண்டில் உலகம் படிக்க முடிந்ததற்குக் காரணமே மொழிபெயர்ப்பாளர்கள்தாம் என்றார் அவர். சென்ற நூற்றாண்டின் சிறந்த ரஷ்ய எழுத்தாளர் யாரென ஆங்கிலேயர்களைக் கேட்டால் அது கான்ஸ்டன்ஸ் கார்னெட் என்றுதான் சொல்வார்கள், என்றார். காரணம், அவர்கள் ருஷ்ய எழுத்தாளர்களை படித்திருப்பது கான்ஸ்டன்ஸ் கார்னெட் மொழியாக்கத்தில்தான். அங்கு வந்திருந்த எத்தனை பேருக்கு இந்தப் பெயர் தெரியும் என்று எனக்குத் தெரியவில்லை.  (அவர் யாரெனவும் ரஷ்ய நாவல்களை மொழி பெயர்ப்பதில் நடக்கும் பனிப்போர் பற்றித் தெரிந்து கொள்ளவும் இந்தக் கட்டுரையைப் பாருங்கள்). அதே போல், தனக்குப் பிடித்த தமிழ் எழுத்தாளர் யார் என்று கேட்டால் தான் கல்யாணராமன் பெயரைத்தான் சொல்ல முடியும் என்றார்- அசோகமித்திரன், பெருமாள் முருகன், தேவிபாரதி, சல்மா, என். டி. ராஜ்குமார் என்று பல தமிழ் எழுத்தாளர்களும் பிற மொழியினருக்கு கல்யாணராமன் மொழியாக்கத்தில்தான் வாசிக்கக் கிடைக்கிறார்கள்.

நான் பேச நினைத்ததில் பகுதிகளை இ.பா, பெ.மு, ஸ்ரீநாத் ஏற்கனவே பேசி இருந்தனர். அதனால் சுருக்கிக் கொண்டேன்.

சொன்னவை: கல்யாணராமனின் துவக்க காலப் புனைவுகள் அவர் சொன்னது போல தற்சாய்வு கொண்டிருந்ததால் போதாதவையாக இல்லை. அவை சிறப்புகள் கொண்டவையாகவே இருந்தன. அவர் புனைவை எழுதாமல் நிறுத்தியது நமக்கு நஷ்டம்.

மொழிபெயர்ப்பு, மொழியாக்கம், முழி பெயர்ப்பு என்ற மூவகையில் மூன்றாவது, தமிழில் நிறையக் கிடைக்கிற விஷயம். புனைவு மட்டுமல்ல, அரசியல் நூல்கள் கூடத் தவறான வகைகளில் மொழிபெயர்க்கப்பட்டுப் பரப்பப்படுகின்றன. மூல நூல்களோடு ஒப்பிட்டால்தான் அவை எத்தனை தூரம் தவறானவை என்பது தெரியும். தமிழ் மட்டுமே படிக்கிறவர்களுக்கு இந்தக் குறைகள் தெரியாதது வருந்தத்தக்க நிலை. இது குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை.

இங்கிலிஷில் இருந்து தமிழிற்குக் கொணரப்பட்டதே இப்படி என்றால், தமிழிலிருந்து இங்கிலிஷுக்குப் போனது எப்படி இருக்கும்?  மிக்க சுதந்திரம் எடுத்துக் கொண்டு அவற்றை மாற்றிப் படைத்தவர்களே அதிகம். ஏ.கே. ராமானுஜம் போன்றாரின் மொழிபெயர்ப்புகள்கூட இப்படிச் சுதந்திரம் எடுத்து மாற்றிக் கொடுக்கப்பட்டவை. அவர் மொழிபெயர்த்த சங்கம் பாடல்களில் எனக்குச் சங்க காலத்துப் பண்பாடு கிட்டவில்லை. அது அவருடைய கவியாக்கமாகத்தான் தென்பட்டது.

ஆனால், பொதுவாக இந்திய சமூகங்களின் குணங்களை இந்திய மொழியிலிருந்து இங்கிலிஷுக்கு மாற்றப்பட்ட இலக்கியம் கொடுக்குமளவு நேரடியாக இங்கிலிஷில் எழுதப்படும் இந்திய நூல்கள் கொடுப்பதில்லை.

அந்த வகையில் கல்யாணராமன் செய்து வரும் மொழியாக்கம் ஒரு அரும்பணியே. இது அ.மிக்கு கல்யாணராமனின் கொடை என்று கூட நாம் சொல்லலாம். அ.மியே இங்கிலிஷில் எழுதக் கூடியவர் என்றபோதும், கல்யாணராமனின் உழைப்பும், அளிப்பும் அ.மியின் எழுத்தை ஒளிரச் செய்கின்றன.

இவை இன்று முன்னெப்போதையும் விட கூடுதலாக அவசியமான முயற்சி என்பது ஏன்  என்றால், 40 ஆண்டுகளுக்கு முன்பு போல இல்லாமல் பல லக்ஷம் இந்தியர்களும், தமிழர்களும் இன்று உலக நாடுகளில் பலவற்றிலும் பரவிச் சென்று வாழ்கின்றனர். அவர்களுக்கு மட்டுமல்லாமல், அவர்களின் அடுத்தடுத்த தலைமுறையினருக்கும் இத்தகைய மொழிபெயர்ப்புகள் இந்தியத்தைக் கொண்டு சேர்க்கின்றன. குறிப்பாக இரண்டாம், மூன்றாம் தலைமுறையினருக்கு இந்தியப் பண்பாட்டைக் கடத்திக் கொடுப்பதில் மொழிபெயர்ப்பு இலக்கியம் அரும் பணி புரிகிறது.

இந்திய மொழிகளிடையே மொழிமாற்றம் என்பது இந்தியரிடையே ஒருங்கிணைப்பைச் சாதிக்கும் அரிய பணியைச் செய்கிறது. இது ஆங்கிலம் மட்டுமே பேசி, அதையே படிக்கும் மக்களுக்கு அத்தனை பயனுள்ளதாக இராது, ஆனால் இந்திய மொழிகளில் படிக்கும் பலருக்கும் மிகப் பயனுள்ள ஒரு வழிமுறை.

உலகமயமாதல் என்பது அடையாளங்களை அழிக்கிறது என்றே பேசப்படுகிறது. என் அனுபவத்தில் அது ஏராளமான அடையாளங்களுக்கு உயிர்ப்பூட்டி மறுபடி செயல் வேகம் கொள்ளவும் தூண்டுகிறது. மொழிபெயர்ப்புக்கு உலகமயமாதலால் ஒரு தூண்டுதல் கிட்டி இருக்கிறது.

கடைசியாக, காலனியத்தின் எச்சமான ஒரு மொழி மூலம் காலனியத்தை நம்மிடமிருந்து அகற்ற நாம் பயன்படுத்த முடியும், இந்தியாவை ஒருங்கிணைக்க, பல மொழிக் குழுக்களிடையே உறவைப் புதுப்பிக்க, இதைப் பயன்படுத்த முடியும் என்பது ஒரு நகை முரண்தான். நம்மை நம்மிடமிருந்தே பிரிக்கும் வகையில் நம்மிடையே இன்றும் நிலவும் காலனிய எச்சங்களை நாம் அகற்றுவதுதான் நாம் ஒன்றிணைய உதவும் என்று முடித்தேன்.

கடைசியாக ஜி.குப்புசாமி பேசினார். தான் இந்தக் கூட்டத்தில் பேசுவதற்காக எடுத்த குறிப்புகள் எல்லாம் ஒரு கோப்பில் மேஜையில் வைக்கப்பட்டிருப்பதைச் சுட்டியவர், அவற்றைப் பேசுவதானால் பல மணி நேரங்கள் ஆகும் என்றார். அவை இனி ஒரு புத்தகமாகத்தான் வர வேண்டியிருக்கும், ஆனால் தனக்குக் கொடுக்கப்பட்ட பத்து நிமிடங்களில் முடிகிற மட்டும் தன் கருத்துகளைச் சொல்லப் போவதாகச் சொன்னார்.

இதற்குள் கூட்டம் கலைந்திருந்தது. பாதி பேர்தான் எஞ்சினர். அ.மி, இ.பா எல்லாம் நான் பேசும் முன்னரே சென்றிருந்தனர். திரு.குப்புசாமி, நபகோவ் மொழிபெயர்ப்பு பற்றி எழுதிய ஒரு கட்டுரையைக் குறிப்பிட்டு அது தனக்கு முக்கியமான கருத்துகளைக் கொடுத்தது என்று சில முறை திரும்பத் திரும்பச் சொன்னார்.  கல்யாணராமனின் சில மொழிபெயர்ப்புகளிலிருந்து பகுதிகளை மேற்கோள் காட்டி அவற்றின் சொல்தேர்வு, மூல எழுத்தாளரின் நோக்கமறிந்து பொருளைக் கைப்பற்றும் தன்மை என்பனவற்றைச் சிலாகித்தார். எல்லாரும் சொன்னது போல, மொழிபெயர்ப்பாளரும் ஒரு படைப்பாளி, அவருக்கான உரிய இடத்தைக் கொடுக்க நம் சமூகம் தவறுகிறது என்பதையும் சொன்னார்.  பிராந்திய வழக்குகளை நன்கு சோதித்து அறிந்து கல்யாணராமன் மொழிபெயர்ப்பது பாராட்டப்பட வேண்டிய ஒரு அணுகல் என்றார். அதே போல  இன்றைய தமிழிலக்கியத்தில் சிறந்த புனைவெழுத்தாளர் யாரெனப் பட்டியலிட்டால் அதில் கல்யாணராமன் பெயர் நிச்சயம் இருக்கும் என்றார். எந்த அளவுக்கு மொழிபெயர்ப்பாளர்கள் மறுஆக்கம் செய்கிறார்கள் என்பதை நாம் கவனிப்பதில்லை, இந்த நிலை மாற வேண்டும் என்று முடித்தார்.

ஏற்புரை வழங்கிய  கல்யாணராமன் சுருக்கமாகத்தான் பேசினார்.  படைப்பாளியின் அளவுக்கு மொழிபெயர்ப்பாளரும் முக்கியமான பணி ஆற்றுகிறார், அவர்களுக்கு பெயர் அங்கீகாரம்கூடக் கிட்டுவதில்லை. நம் நாட்டைப் போன்ற பல மொழிகள் உள்ள கூட்டமைப்பிற்கு மொழி மாற்றங்கள் மிக அவசியம். இதன் வழிதான் மொழியினங்கள் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்ள முடியும். அப்படிப் புரிந்து கொள்ளவும்தான் பிற மொழி இனங்களுக்குத் தக்க இடத்தை நாம் ஒவ்வொருவரும் கொடுக்கவும், அதன் மூலம் நமக்கான மதிப்பைப் பிறரிடம் இருந்து பெறுதலும் சாத்தியமாகும் என்றார்.

துவக்கத்தில் ’வெளி’ ரங்கராஜனும், இறுதியில் பொன். வாசுதேவனும் சிறு உரையாற்றி விளக்கு அமைப்பின் பணி குறித்து விளக்கினர்.

சுமார் மூன்று மணி நேரம் நடந்த இந்தக் கூட்டம் இறுதி வரை பலரை அமர வைத்திருந்தது என்பது இந்தத் தலைப்பு குறித்து தமிழில் ஒரு அளவுக்கு கவனம் கூடி வருகிறது என்பதைக் காட்டுகிறதா என்று யோசித்தேன்.

– ரவிசங்கர்  / 26 ஃபிப்ரவரி 2017/ சென்னை

oOo

ஒளிப்பட உதவி – செந்தில்நாதன் (திரு ஸ்ரீநாத் பேரூர் மற்றும் திரு ஜி. குப்புசாமி இருவரும் உரையாற்றியது பற்றி செந்தில்நாதன் அளித்த குறிப்புகள் அடிப்படையில் கட்டுரை  திருத்தப்பட்டிருக்கிறது. செந்தில்நாதன் அவர்களுக்கு நன்றிகள்)

பூமணியின் அஞ்ஞாடி – 2: இருட்டில் நிகழும் மோதல்கள்

– என். கல்யாணராமன் –

கட்டுரையின் முந்தைய பகுதி – பூமணியின் அஞ்ஞாடி – 1: அறிமுகம்

தான் அஞ்ஞாடி எழுத நேர்ந்த சுவாரசியமான கதையைச் சொல்கிறார் பூமணி. அவர் குழந்தையாய் இருந்தபோது, கட்டை விரல் இல்லாத ஒரு முதியவரைத் தன் கிராமத்தில் ஒரு மரத்தடியில் பார்த்திருக்கிறார். அது எப்படி என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் மேலிட்டு அவரிடம் விசாரித்திருக்கிறார். 1899ஆம் ஆண்டு நடந்த கலவரத்தின்போது, அருகிலிருந்த சிவகாசி டவுனுக்குள் கூட்டம் கூட்டமாக மக்கள் புகுந்து நாடார்களின் வீடுகளை சூறையாடியபோது தன் கட்டைவிரலை இழந்ததாக அந்த முதியவர் கூறியிருக்கிறார். நாடார்கள் தங்கள் ஊரைப் பாதுகாத்துக் கொள்ள பயங்கரமாய் பதிலடி கொடுத்திருக்கின்றனர். முதியவர் தன் கையிலிருந்த ஈட்டியை வீசுவதற்குள் நாடார்கள் எறிந்த கல் ஒன்று அவரது வலது கையைத் தாக்கி, அவரது கட்டைவிரலை நசுக்கி விட்டது. 70 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தேறிய நிகழ்வு ஒன்றை நேருக்குநேர் எதிர்கொண்ட அனுபவம், சிவகாசி கலவரம்பற்றி மேலும் மேலும் அறிந்து கொள்ளும் ஆர்வத்தை பூமணியின் மனதில் தூண்டிற்று. (more…)

பூமணியின் அஞ்ஞாடி – I : பின்னணி

– என். கல்யாணராமன் –

poomani-new.jpg.crop_display_0

2012ஆம் ஆண்டு நவம்பர் மாத இறுதியின் அதிகாலைப் பொழுதொன்றில் நான் கோவில்பட்டி வந்திறங்கினேன். தென் தமிழகத்தில் உள்ள சிறிய, ஆனால் பரபரப்பான, தொழில் நகரம். அதன் மக்கள்தொகை ஏறக்குறைய ஒரு இலட்சம் இருக்கலாம். தென் இந்தியாவில் உள்ள பல மொபசல் நகரங்களைப் போலவே கோவில்பட்டியும் முதல் பார்வையில் ஒழுங்கற்ற, சீர்குலைந்த தோற்றத்தை அளித்தது. மற்ற நகரங்களைப் போலவே இங்கும் சமநிலை குலைந்த பொருளாதாரச் செழிப்பையும் அபரித நுகர்வையும் சுட்டும் அடையாளப் புள்ளிகளை அண்மைக் காலங்களில் காண முடிந்தது: பகட்டான தங்கும் விடுதிகள், கார் விற்பனைக் கூடங்கள், சாலையின் இருபுறங்களிலும் வரிசை கட்டி நிற்கும் வாடகைக் கார்கள், தனியார் மருத்துவமனைகள், நிரம்பி வழியும் அலமாரிகளைக் கொண்ட மருந்துக்கடைகள். துணிகள், தீப்பெட்டிகள், பட்டாசுகள் ஆகியவற்றைத் தயாரிப்பதை நீண்ட பாரம்பரியமாகக் கொண்டுள்ள இந்தத் தொழில் நகரம், திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களை உள்ளடக்கிய மிகப் பெரும் பரப்பில் விரிந்திருக்கும் கரிசல் மண்வெளியின் மையத்தில் அமைந்துள்ளது- இந்தப் பிரதேசத்தை கரிசல் பூமி என்று அழைக்கிறார்கள். மழைநீர்ப் பாசனம் மட்டுமே சாத்தியப்படும் இப்பூமியில் விவசாயம் நெல்லைவிட சாமைப் பயிர்களுக்கே உகந்தது. பருவநிலைக்கேற்ப வறட்சியையும், கடந்த காலத்தில் அவ்வப்போது நேர்ந்த பஞ்சத்தையும் எதிர்கொண்டாக வேண்டிய பிழைப்பு. மதுரை (100 கி.மீ.), திருநெல்வேலி (55 கி.மீ.), துறைமுக நகரம் தூத்துக்குடி (60 கி.மீ.) என்று பெருநகரங்கள் பலவும் அண்மையில் இருப்பது போதாதென்று கரிசல் பூமியின் வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடத்தை வகிக்கும் எட்டயபுரம், கழுகுமலை, சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், சங்கரன்கோவில் போன்ற பிற மையங்களும் கோவில்பட்டிக்கு வெகு அருகில் அமைந்துள்ளன. (more…)