மதுரை பாத்திமா கல்லூரியில் தமிழ்த்துறை இணைப் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். சிறுகதைகள், செவ்வியல் மொழியாக்கம், பெண்ணிய ஆய்வு என்ற பல தளங்களில் இயங்கி வரும் முனைவர் எம்.ஏ.சுசீலா அவர்களின் புதிய படைப்பாக ‘யாதுமாகி’ நாவல் இவ்வருடம் வம்சி வெளியீடாக வருகிறது. இவருடைய முந்தைய படைப்பான ‘அசடன்’ (தஸ்தெய்வ்ஸ்கியின் ‘இடியட்’டின் தமிழ் மொழியாக்கம்) பல விருதுகளை பெற்று பெருவாரியான வரவேற்பை பெற்ற நிலையில் இந்த நூல் எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது. சுசீலா அவர்களுடன் பதாகை நிகழ்த்திய உரையாடல் –
செவ்வியல் இலக்கிய ஆக்கங்களில் ஆழ்ந்த புலமையும், அடுத்த தலைமுறையினருக்கு அவற்றை எடுத்துச் செல்லும் வழிகாட்டியான பொறுப்பும் அனுபவமும் கொண்ட நீங்கள், ஒரு புது நாவல் படைப்பிற்காக மீள் உருவாக்கம் செய்து கொள்ள வேண்டியிருந்ததா? இலக்கிய வகுப்பெடுப்பதும், இலக்கிய உருவாக்கமும் முரணான மனநிலைகள் கொண்டு செயல்பட வேண்டியதாக இருக்கிறதா?
அப்படிப்பட்ட முரணான மனநிலைகள் எனக்கு ஒருபோதுமே ஏற்பட்டதில்லை. மிகச்சிறு வயதிலிருந்தே இலக்கிய உருவாக்கத்தின் மீது நான் மாளாத காதல் கொண்டிருந்தேன். அதுவே வேதியியலில் இளம் அறிவியல் படித்த என்னை இலக்கியக் கல்வியிடம் கொண்டுபோய்ச் சேர்த்தது.
நான் பெற்ற செவ்வியல் இலக்கியப்பயிற்சி என் மொழியை வளப்படுத்தியது. தமிழின் ஆழங்களையும் நுட்பங்களையும் அறிய வைத்தது. செவ்வியல் இலக்கிய ஆக்கங்களைப் படித்த காலகட்டம், அவற்றைப் பயிற்றுவித்த காலகட்டம் என இரண்டிலுமே சமகால இலக்கிய வாசிப்பை நான் இடைவிடாமல் தொடர்ந்து கொண்டிருந்தேன். பாடத்திட்டத்தில் இல்லாதபோதும் வாய்ப்பு நேரும்போதெல்லாம் ஆர்வமுள்ள மாணவியருக்கு சமகாலத் தமிழ்ப்போக்குகளை இனம் காட்டிக் கொண்டிருந்தேன். சங்கத் தமிழும், காப்பியத் தமிழும், சமயத்தமிழும் இவை எதுவுமே படைப்பிலக்கிய உருவாக்கத்துக்கு இடையூறாக என் நடையையோ உள்ளடக்கத்தையோ பாதிக்கவில்லை; அவற்றை அடித்தளங்களாக மட்டுமே கொண்டு பண்டித நடையின் குறுக்கீடுகள் இன்றிக் கதைகளை எழுதிக்கொண்டு போவது ஒன்றும் இயலாத செயல் அல்ல; நான் செய்ததும் அதைத்தான். இளம் வயது முதல் நான் படித்த ஏராளமான சிறுகதைகளும் நாவல்களும் எனக்குத் துணையாக நின்றபடி – நான் பெற்ற இலக்கியக்கல்வியும் நான் போதிக்கும் இலக்கியமும் எந்த வகையிலும் என் படைப்பைப் பாதிக்காமல் பார்த்துக்கொண்டன என்றுதான் சொல்ல வேண்டும்.
1979 முதல் என் சிறுகதைகள் வரத் தொடங்கி விட்டதால் என்னை நான் மீள் உருவாக்கம் செய்து கொள்ள வேண்டிய தேவையே எனக்கு ஏற்படவில்லை. மேலும் முனைவர் பட்டத்துக்காக நான் தேர்ந்து கொண்டதும்கூட நவீன இலக்கியம் சார்ந்ததாகவே இருந்தது. என் நவீன இலக்கியச்சார்பு, சங்கத் தமிழைக்கூட நவீன இலக்கியப்பாணியில் கற்பிக்கும் கலையை எனக்கு சொல்லித் தந்தது என்று வேண்டுமானால் சொல்லலாம். (more…)