எஸ்.சுரேஷ்
“லைப் அண்ட் நத்திங் மோர்” என்ற படத்தில் ஓர் எளிய காட்சி. வயது முதிர்ந்த இயக்குனர் ஒருவர் இரானின் கிராமப்பகுதிகளில் பயணம் செய்து கொண்டிருப்பார். நில நடுக்கத்தால் பேரழிவைச் சந்தித்திருந்த பகுதிகள் அவை. இயக்குனர் ஒரு மூதாட்டியின் வீட்டு முன் காரை நிறுத்தி, அவரிடம் பேச்சு கொடுக்க ஆரம்பிப்பார். மூதாட்டி கனமான சுமையைச் சுமந்து கொண்டிருப்பார். அவர்கள் உரையாடல் இப்படிச் செல்லும்:
இயக்குனர்: “உங்களுக்கு உதவி செய்ய ஆசைப்படுகிறேன், ஆனால் என் முதுகு சரியில்லை”
மூதாட்டி: “அதனால் பரவாயில்லை. நானே இதைச் செய்து கொள்கிறேன்”
இயக்குனர்: “உங்களுக்கு உதவி செய்ய முடியவில்லை, மன்னித்துக் கொள்ளுங்கள். என் முதுகு நன்றாக இருந்தால் உங்களுக்கு உதவி செய்திருப்பேன்”
ஆவணப்படம் போன்ற மிக எளிய காட்சியமைப்பு. நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களின் கஷ்டங்களை, படம் பார்த்துக்கொண்டிருக்கும்போதே திடீரென்று உணர்கிறீர்கள். இப்போது ஒரு மாயம் நிகழ்ந்து, இரானிய சினிமா உலக சினிமாவாக மாறுகிறது.
நான் பார்த்த கியாரொஸ்டமி படங்களில் பலவும் அவை முடிந்தபின்தான் துவங்கியிருக்கின்றன. அவை என்னை யோசிக்கச் செய்கின்றன. மேற்குலகின் ஊடகங்கள் அளிக்க முடியாத ஒரு மனச்சித்திரத்தை அவரது திரைப்படங்கள் அளிக்கின்றன. அத்தனை அரசியலுக்கும் அப்பால் அவரது திரைப்படம் சாமானிய மக்களையும் அவர்களது சாமானிய போராட்டங்களையும் பேசுகின்றது. அவர்களது வாழ்க்கை நம் வாழ்க்கையைவிட அவ்வளவு வித்தியாசமானது அல்ல என்ற புரிதல் நமக்கு ஏற்படுகிறது. அத்தனை பரப்புரைகளும் நிறுவ முடியாத உண்மையை, கியாரொஸ்டமி ஒரு சில ஃபிரேம்களிலேயே அடைந்து விடுகிறார். அவர் நம் மனதின் சுவர்களை உடைத்து, நாம் நம்மைச் சுற்றி உறையாய் போர்த்தியிருக்கும் அடையாளங்களை அகற்றி சக மனிதனை புரிந்துணர்வோடு அணுக வாய்ப்பு அளிக்கிறார்.
“அண்டர் தி ஆலிவ் ட்ரீஸ்” என்ற படம். ஒரு சிறு லாரியில் திரைப்படக் குழுவினர் பயணம் செய்து கொண்டிருக்கின்றனர். வழியில் லாரியை நிறுத்தி, ஒரு தாயையும் மகளையும் ஏற்றிக் கொள்கின்றனர். திரைப்படக் குழுவில் உள்ள ஒரு இளைஞன் திருமணம் செய்து கொள்ள தகுந்த பெண்ணைத் தேடிக் கொண்டிருக்கிறான். இறங்க வேண்டிய இடம் வந்து தாயும் மகளும் போனதும், இயக்குனர் அந்த இளைஞனைப் பார்த்துக் கேட்கிறார்:
இயக்குனர்: இந்தப் பெண் எப்படி? நீ இவளைத் திருமணம் செய்து கொள்ளலாமே? மிக அழகாக இருக்கிறாள்”
நடிகர்: “ஆனால் இவளுக்கு படிப்பு போதாது. நான் படித்த பெண்ணைத்தான் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறேன்”
இயக்குனர்: “ஏன்?”
நடிகர்: “நாங்கள் இருவருமே படிப்பில்லாதவர்களாக இருந்தால் எங்கள் குழந்தைகளை எப்படி படிக்க வைப்போம்? எனக்கு படித்த பெண்தான் வேண்டும்”
இயக்குனர்: “உனக்கே படிப்பு கிடையாது. படித்த பெண் தன்னைப்போல் படித்த ஆணைத்தானே திருமணம் செய்து கொள்ள விரும்புவாள்? அவள் ஏன் உன்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்?”
நடிகர் முகத்தில் ஒரு சிறு புன்னகை அரும்புகிறது.
நடிகர்: “உண்மைதான், ஆனால் நான் படித்த பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன்”
இந்த ஆசைகள் நம் அனைவருக்கும் பொதுவானவை. அனைவரையும் உடனே தொடக்கூடிய சிறுசிறு சம்பவங்களில் கியாரொஸ்டமியால் கவனம் செலுத்த முடிகிறது, இயல்பான மானுட நடத்தையில் அவரால் அக்கறை காட்ட முடிகிறது என்பதுதான் இரானுக்கு வெளியே படமாக்கப்பட்ட அவரது திரைப்படங்களும் போலித்தனம் இல்லாமல் உண்மையைப் பேசக் காரணமாய் இருக்க வேண்டும். தனக்கு நேரடி அனுபவமாய் இல்லாத வாழ்வை இயக்குனர் படம் பிடித்திருப்பது போன்ற உணர்வு நமக்கு ஏற்படுவதில்லை.
ரேயின் மறைவு தன்னை நிலைகுலையச் செய்ததாகவும் கியாரொஸ்டமியின் படத்தைப் பார்த்ததும்தான் ரே விட்டுச் சென்ற வெற்றிடத்தை நிரப்பக் கூடியவரைக் கண்டு கொண்ட திருப்தியில் தன் உள்ளத்தில் அமைதி திரும்பியதாகவும் குரசோவா கூறியது மிகப் பிரசித்தம். ரேயின் கவித்துவம், திரை இலக்கணங்களை மீறாத கியாரொஸ்டமியிடம் கிடையாது, இவ்விருவரின் திரைமொழியும் மிகவும் வேறுபட்டவை என்றாலும், இருவரும் சாமானிய மனிதனை கருணையுடன் நோக்கினார்கள். இதனால் அவர்கள் திரைப்படங்களில் தென்பட்ட மனித நேயம், குரோசவா கியாரொஸ்டமியை ரேயின் இடத்தில் நினைத்துப் பார்க்க காரணமாக இருக்கலாம்.
ஒரு திரைக்கலைஞராக கியாரொஸ்டமி மிக உயர்ந்த இடத்தில் மதிப்பிடப்பட வேண்டியவர், ஆனால் அவர் தன் திரைமொழியின் கலைநுட்பங்களை முன்னிருத்துவதில்லை. “க்ளோஸ்-அப்” திரைப்படத்தில் உச்சக்காட்சியை நோக்கி கதையை மிக அருமையாக நகர்த்திக் கொண்டு செல்கிறார். மக்மல்பஃப் என்ற புகழ் பெற்ற இரானிய இயக்குனரைப் போல் நடித்து ஒரு குடும்பத்தில் தங்கியிருந்த காரணத்துக்காக ஒருவன் கைது செய்யப்படுகிறான். அவன் எதையும் திருடவில்லை, எந்த விதத்திலும் தவறாக நடந்து கொள்ளவில்லை. அவன் அந்தக் குடும்பத்தினரின் விருந்தோம்பலை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறான், அதுதான் அவன் செய்யும் தவறு. அவன் கைது செய்யப்பட்டு விசாரணை துவங்குகிறது. அவன் ஏமாற்றிய குடும்பத்தினர் மன்னித்தால் அவனுக்கு விடுதலை அளிக்க தான் தயாராக இருப்பதாய் நீதிபதி கூறுகிறார். கியாரொஸ்டமி பரபரப்பை உருவாக்க எதையும் செய்யாதபோதும் இந்த இடத்தில் நாம் சீட் நுனிக்கு வந்துவிடுகிறோம். மானுட நிலையை கியாரொஸ்டமி சித்தரிக்கும் விதம், ஏமாற்றியவனை குடும்பத்தினர் மன்னிக்க வேண்டும் என்று நாம் விரும்பச் செய்கிறது. அதன்பின்னர்தான் தேர்ந்த தொழில்நுட்பத்துடன் இப்பகுதிகள் படம் பிடிக்கப்பட்டிருக்கின்றன என்பதை நாம் உணர்கிறோம். ஆவணப்படம் போல் ஒவ்வொரு காட்சியாய் பதிவு செய்த போதிலும், கியாரொஸ்டமி எந்த ஒரு முயற்சியும் செய்யாமல், வலிந்து எதையும் முயலாமல், நம்மைக் கதையினுள் இழுத்துக் கொள்கிறார்.
அல்லது, “செர்ட்டிஃபைட் காப்பி” என்ற படத்தின் உணர்ச்சிகரமான காட்சிகளை அவர் படமாக்கிய விதத்தைப் பாருங்கள். மெல்ல மெல்ல கதையில் இறுக்கம் கூடுகிறது, திடீரென்று ஒரு திருப்பம். அதன் பின் வரும் நிகழ்வுகள் நம்மைத் திகைப்பில் ஆழ்த்துகின்றன. இவையனைத்தும் கவனமாய் அமைக்கப்பட்ட திரைக்கதையின் பகுதிகள். ஆனால் படம் சிரமம் தெரியாமல் நகர்கிறது. ஒரு கதை என்றால் இப்படித்தான் இயல்பாக இருக்க வேண்டும் என்று சொல்வது போன்ற காட்சியமைப்பு. மீண்டும் மீண்டும் கவனித்துப் பார்க்கும்போதுதான் இதிலுள்ள திரை நுட்பங்கள் நமக்குப் புலப்படுகின்றன.
நம்மை பிரமிப்பில் ஆழ்த்துவதைவிட மனிதர்களை உள்ளபடியே சித்தரிப்பதில்தான் கியாரொஸ்டமிக்கு ஆர்வம் இருந்தது என்பதையும் “செர்ட்டிஃபைட் காப்பி” உணர்த்துகிறது. படத்தின் கதைக்களம் அதனளவிலேயே சுவாரசியமானதுதான், “மூட் ஃபார் லவ்” திரைப்படத்திலும் இது போன்ற ஒன்றை பார்த்திருக்கிறோம். ஆனால் கியாரொஸ்டமி தன் திரைக்கதை மேதைமையை வெளிப்படுத்துவதை நோக்கமாய் கொண்டிருக்கவில்லை. அதைவிட, துணையில்லாமல் தனியாளாய் குடும்பம் நடத்தும் தாயின் உணர்வுகளை முழுமையாய்ச் சித்தரிப்பதே அவரது இலக்காக இருந்தது. ஒரு எளிய காட்சி. ஒற்றையாய் வாழும் தாய், பினோஷே, தன் ஆண் நண்பனுடன் பேசிக்கொண்டே நடந்து செல்கிறாள். அப்போதே அவள் போனில் தன் பதின்ம பருவ மகனுடனும் பேசிக் கொண்டிருக்கிறாள். இந்தக் காட்சி நமக்கு விவரிக்க முடியாத எத்தனையோ விஷயங்களை உணர்த்துகிறது. அந்தப் பெண்ணின் ஆழமான சோர்வும் அவளது சுமையின் எடையும் நமக்குப் புலப்படுகிறது. படத்தின் இறுதி காட்சியில், அந்த ஆண் நண்பன் தன் முகம் கழுவிக் கொள்ளும்போது, அவனது முகத்தில் தென்படும் பீதியை நாம் கவனிக்கிறோம். தான் சிக்கலில் அகப்பட்டுக்கொண்டு விட்டோம் என்பது அவனை அச்சுறுத்துகிறதா அல்லது அந்தப் பெண்ணின் நிலையை அவன் ஒருவாறு புரிந்து கொண்டதுதான் பீதியில் ஆழ்த்துகிறதா என்ற கேள்வி பூடகமாய் எழும் காட்சி இது.
ஜப்பானிய மொழியில் வந்த “லைக் சம்ஒன் இன் லவ்” என்ற கடைசி படத்தில்தான் கியாரொஸ்டமியின் செய்கலை நுட்பம் முழுமையாய் பரிமளிக்கிறது என்று சொல்ல வேண்டும். ஒரு மிகச் சிறந்த சிறுகதையை வாசிக்கும் அனுபவத்துக்கு இணையான திரைப்பட அனுபவம் இது. பேராசிரியரும் அவரது ஆண் நண்பனும் பழகிக் கொள்வது, அதைத் தொடர்ந்த குழப்ப நிலைகளைக் கொண்டு கதையை முன்னகர்த்திச் செல்வது, இவற்றின் சித்தரிப்பு நாம் கியாரொஸ்டமியின் பிற படங்களில் பார்க்காத ஒன்று. தனது முந்தைய படங்களில் கையாளாத நுட்பங்களை இதில் வெளிப்படுத்துகிறார் கியாரொஸ்டமி. இது தவிர, இந்தப் படத்தில்தான் நாம் மரபான கதையொன்றைப் பார்க்க முடிகிறது. இக்காரணத்தினாலேயே, இவரது பிற படங்களைவிட இது பெருவாரி மக்கள் புரிந்துகொள்ளக்கூடிய படமாகவும் இருக்கிறது (டோக்யோவை அதன் ஒலிகளைக் கொண்டே கியாரொஸ்டமி நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார் என்பது ரசித்துப் பார்க்கக்கூடியது. டோக்யோ சென்றவர்கள், நியான் விளக்குகளைவிட இடைவிடாது ஒலிக்கும் சப்தங்களே அந்நகரின் தனித்துவம் என்பதைக் கண்டு கொள்வார்கள். கியாரொஸ்டமி டோக்யோவின் ஓசைகளை ஒன்றுவிடாமல் பதிவு செய்வதில் வெற்றி பெற்றிருக்கிறார்).
அறம் மற்றும் இருத்தல் தொடர்பான கேள்விகளை எழுப்புவதில்தான் கியாரொஸ்டமிக்கு ஆர்வம் இருந்தது, தீர்வுகளைப் பரிந்துரைப்பதில் அவருக்கு ஒருபோதும் நாட்டம் இருந்ததாகத் தெரியவில்லை. ‘டேஸ்ட் ஆஃப் செர்ரி’ இதற்கு ஒரு நல்ல உதாரணம். உண்மையில், விடை தெரிந்து என்ன ஆகப் போகிறது? எது அறம் என்ற குறிப்பிட்ட சில குழப்ப நிலைகளில் நாம் எப்படி நடந்து கொள்கிறோம் என்ற கேள்விதான் சுவாரசியமானது. ‘சர்ட்டிஃபைட் காப்பி’ படத்தின் ‘நாயகனும்’கூட அறம் புலப்படாத இக்கட்டான சூழ்நிலையில்தான் சிக்கிக் கொள்கிறான். உச்சக் காட்சியின் முடிவை நாம்தான் அனுமானிக்க வேண்டியிருக்கிறது. கியாரொஸ்டமியின் பல படங்களும் இப்படிதான் முடிகின்றன. இது பலருக்கு அதிருப்தி அளிக்கும் முடிவாக இருக்கலாம், ஆனால் கியாரொஸ்டமியின் அழகியலுடன் இது முழுமையாய்ப் பொருந்திப் போகிறது.
இந்த ஒரு விஷயத்தில் கியாரொஸ்டமி தமிழின் மகத்தான எழுத்தாளர்களில் ஒருவரான அசோகமித்திரனை மிகவும் நினைவுபடுத்துகிறார். அசோகமித்திரனின் எழுத்தை கவித்துவம் கொண்டது என்று சொல்ல முடியாது. சிறுகதை இலக்கணத்தை மீறாத உரைநடையையே அசோகமித்திரனிடத்தில் நாம் பார்க்க முடியும் என்று தோன்றுகிறது. ஆனால் எவ்வளவு சிரமமில்லாமல் அவர் சக மனிதனிடத்தில் உள்ள பரிவை வெளிப்படுத்தி விடுகிறார் என்பதுதான் ஆச்சரியம். இருவருமே ஒரு தொலைவில் விலகி நின்றே நிகழ்வுகளை விவரிக்கிறார்கள், எந்த தீர்ப்பும் எழுதுவதில் அவர்களுக்கு விருப்பமில்லை என்ற பொருளில் இதைச் சொல்கிறேன். ஆனால் இந்தத் தொலைவே அவர்களது கருணையை அழுத்தமாய் பதிவு செய்கிறது. இவ்விருவரும் யாருக்காகவும் பேசுவதில்லை, ஆனால் அசோகமித்திரனின் கதையானாலும் சரி, கியாரொஸ்டமியின் படமானாலும் சரி, அவர்கள் யார் பக்கம் நிற்கிறார்கள் என்பது நமக்கு தெளிவாகவே புலப்படுகிறது.
கியாரொஸ்டமியின் இழப்பு மிகப்பெரிய ஒன்று – அவரது கடைசி படமான ‘லைக் சம்ஒன் இன் லவ்’ அவர் படைபூக்க உச்சத்தைத் தொட்டிருப்பதை உணர்த்திய படம். அவரது இனி வரும் படங்கள் மிகச் சிறந்த அனுபவம் அளிப்பதாக இருக்கும் என்று நாம் எதிர்பார்க்க இடமிருந்தது. உண்மையில் நாம் இப்போது மகத்தான கலையனுபவங்களை அடையும் முன்பே இழந்திருக்கிறோம். உலக சினிமாவின் மிகச் சிறந்த இயக்குனர்களில் ஒருவர் என்று கியாரொஸ்டமி இனி எக்காலமும் பேசப்படுவது உறுதி. ரே, குரசோவா, ஓசூ போன்ற மகத்தான படைப்பாளிகளின் வரிசையை அவரும் சேர்ந்துவிட்டார்.
இரானிய சினிமாவுக்கு உலக அளவில் ஒரு இடம் பெற்றுக் கொடுத்தது கியாரொஸ்டமி என்பது எல்லாரும் அறிந்ததே. ரேவின் சாதனைகளை அடித்தளமாய்க் கொண்டு இன்னும் பல உயரங்களைத் தொடும் முயற்சியில் இந்திய திரையுலகில் வெகுசிலரே வெற்றி பெற்றனர். ஆனால் இரானிய திரைச்சூழல் மிகவும் ஆரோக்கியமாய் உள்ளது. மக்மல்பஃப், ஜாஃபர் பனாஹி, மஜீத் மஜீதி, அஸ்கர் ஃபர்ஹாதி முதலான பல இயக்குனர்கள் இரானுக்கு பெருமை சேர்க்கக்கூடியவர்கள். கியாரொஸ்டமி அவர்களனைவருக்கும் படைப்பூக்கம் அளித்த பிதாமகராக இருந்திருக்கிறார். இன்னும் பலர் இந்த வரிசையில் வருவார்கள் என்றுதான் நம்புகிறேன். கருணையையும் மானுட உணர்வுகளையும் மையமாய்க் கொண்ட கலையுணர்வும் அழகியலும் கியாரொஸ்டமியின் நோக்காய் இருந்தது. இரான் மட்டுமல்ல, உலகமெங்கிலும் இனி வரும் இயக்குனர்கள் பலரும் அவரவர் பாணியில் இவரது பார்வையை சுவீகரித்துக் கொள்வார்கள் என்று நினைக்கிறேன். கியாரொஸ்டமியின் ஆன்மா சாந்தியடைவதாக.
Like this:
Like Loading...