ஏ. கே. மெஹ்ரோத்ரா

நம்பி கிருஷ்ணன் தமிழாக்கங்கள்: சி. பி. சுரேந்திரன், ஏ. கே. மெஹ்ரோத்ரா, தீபங்கர் கிவானி

 

இடுக்கண் களைவதாம் நட்பு
(ஆங்கில மூலம்: சி. பி. சுரேந்திரன்)

நாற்காலியில் அமர்கிறான்.
அதன் நான்காம் கால்
அவனுக்குரியது. இந்த நாற்காலி
அவனுக்கு பிரியமானது. அதில்
அவர்கள் புணர்ந்திருக்கிறார்கள்.
அப்போது நாற்காலிக்கு
நான்குக்கு மேல் இரண்டு இன்னம் இரண்டு,
எட்டு கால்கள். காலுள்ள நாட்கள்.
நிறையவே நடந்து முடிந்திருக்கின்றன,
அந்த நாட்களுக்குப் பின். இப்போது நாற்காலிக்கு
ஒரு கால் குறைவு. தன் காலை முட்டு
கொடுத்துக் கொண்டிருக்கிறான் இவன்.

oOo

இன்னமும் ஜனனிக்காத மகளிற்காக
(ஆங்கில மூலம் : ஏ. கே. மெஹ்ரோத்ரா)

கவிதை எழுதுவதன் மூலம் உன்னை
ஜனனிக்க முடியுமானால், இதோ
இப்போதே ஒன்று எழுதுவேன்,
ஓருடலின் தேவைக்கும் அதிக
சருமம் திசுக்கொண்டு பத்திகளையும்
பேச்சைக் கொண்டு வரிகளையும்
நிரப்புவேன். உன் அன்னையின்
ஒட்டக் கடிக்கப்பட்ட நகங்கள், இளம்பழுப்பு

கண்கள், அவற்றையும் உனக்களிப்பேன்,
அவளுக்கவை இருந்ததாக நினைவு. அவளை
ஒரு முறை மட்டுமே, ரயில் ஜன்னல் வழியே
மஞ்சள் வயலொன்றில் பார்த்தேன். வெளிறிய நிறத்தில்
உடையணிந்திருந்தாள். குளிரடித்தது.
ஏதோ சொல்ல விரும்பினாளென்று நினைக்கிறேன்.

oOo

சேகரம் செய்பவர்கள்
(ஆங்கில மூலம் : தீபங்கர் கிவானி)

இவ்வண்ணக்கற்களை புதையலெனக் காத்தோம் அப்போது,
இதோ, அந்த ஜூன் மாதத்தில் நீ கடைசியாய்க் கண்டெடுத்தது. அன்று உன் பிறந்தநாள்,
கடற்கரையில், என்னுடன் போட்டியிட்டு விரைகையில், அதன் நீலத்தைக் கண்டு குரல் கொடுத்தாய்.

இச்சிறு கூம்பின் தளம் இன்றும் அதே ஆரஞ்சு நிறம். அவ்வருடம் நம்மிருவருக்கும்
பத்து வயது; இந்தப் பெட்டியில், வெந்து நொய்ந்த அந்நாளில்,
இருபத்திரண்டுடன் இன்னுமொரு கல்லைச் சேர்த்தோம்.

பிடித்ததை சேகரித்தோம், அவையும் நிலைத்து நீடித்தன,
பால்ய காலம் கடந்த பதின்மூன்றாண்டு தொலைவில், இப்போது
இந்த இருபத்து மூன்றையும் கூட்டிப் பார்த்து உன்னைக் காண்கிறேன்

மறக்க விரும்பியதை முஷ்டியினுள் மறைத்துக் கொள்ளும்
ஆண்களாவதற்கு முன் என்னவாக இருந்தோம் என்பதற்காக:
இந்தா, கையைத் திற, நீயும் உணர முடியும்.

(These are unauthorised translations of the poems, “A Friend in Need” by C.P. Surendran, “To an Unborn Daughter” by A.K. Mehrotra, and “Collectors” by Deepankar Khiwani . The Tamil translations are intended for educational, non-commercial display at this particular webpage only).