கட்டுரை

ஸ்டீஃபன் வில்லியம் ஹாகின்

பானுமதி ந

‘நான் முதலும் முடிவுமாக ஒரு அறிவியல் ஆய்வகன். என் உடல் குறைகளைப் பேசுவதை நான் விரும்பவில்லை. அவைகளை நான் குடும்பத்திடம்கூட சொல்வதில்லை.’

உடலின் செயல்பாடுகள் நரம்பு இயக்க குறைபாட்டால் பாதிக்கப்பட்ட நிலையில் இயற்பியலிலும், பிரபஞ்ச ஆய்வியலிலும் தனக்கென தனியிடம் தேடி அடைந்தவர் ஹாகின்.

ப்ரிட்டன் இவ்ரது தாயகம். குவாண்டம் விசையியலிலும், பொது சார்பு தத்துவத்திலும், பிரபஞ்ச கோட்பாடுகளில் உலகின் 100 விஞ்ஞானிகளில் ஒருவராகக் கருதப்படுபவர்.

21 வயதிலேயே இறக்கக்கூடும் என்று கணிக்கப்பட்ட ஒருவர் இன்று 75 வயதில் ‘கடவுள் துகள்’ பற்றி பேசுகிறார், எழுதுகிறார். அத்தனையும் ஒரு சக்கர வண்டியில் அமர்ந்து கொண்டே. மனிதன் தன் அறிவால், உடலை வென்று சாதித்த சரிதம் இவருடையது.

08-01-42ல் பிறந்த இவர், இயற்பியலில் மிகுந்த நாட்டம் கொண்டிருந்தார். ALS எனப்படும் Motor Neuron Disease இவரது 21 வயதில் தொடங்கிவிட்டது. சிறிது சிறிதாக இவரது நடை, இயக்கம், பேச்சு தடைபட்டது. சக்கர நாற்காலியில் செயல்படவேண்டிய நிலை. ஆனால் அறிவுத் தளம் முற்றிலும் வேகமாக இயங்கியது. எந்நிலையிலும் சாதித்துக் காட்ட மனிதனால் இயலும் என்பதற்கு வாழும் எடுத்துக்காட்டு இவர்.

தன்னுடன் படித்த ‘ஜேன் வைல்ட்’ என்பவரை 1965-ல் திருமணம் செய்தார். 1995-ல் விவாகரத்து நடந்து, பின்னர் 2005ல் இருவரும் குடும்பத்துடன் சேர்ந்தனர். ’எலைன் மேசென்’ என்பவரை 1995-ல் திருமணம் செய்து பின்னர் 2006-ல் விவகரத்தும் நடந்தது. ’மேசென்’ இவரை கவனித்துக் கொள்ள செவிலியாக வந்து, அவருடன் பின்னர் நெருக்கமாகி, கல்யாணமும் செய்து கொண்டு, ஹாகின்னை மிகவும் உடல் துன்பத்திற்கு உள்ளாக்கினார் என்று சொல்லப்படுகிறது. ஆனால், ஹாகின் எந்த ஒரு குற்றச்சாட்டும் சொல்லவில்லை, காவல் துறையின் உதவியையும் நாடவில்லை. முதல் திருமணத்தின் மூலமாக இவருக்கு 2 ஆண்குழந்தைகளும், ஒரு பெண்ணும் பிறந்தனர்.

ஹாகின் உலகின் மிகச் சிறந்த 22 அறிவியல் பதாகைகள் பெற்றுள்ளார். மிகவும் எளிய நடையில் சிக்கலான அறிவியல் கோட்பாடுகளை விளக்கும் திறமை படைத்தவர். அவரது  ‘A Brief History of Time’ பண்டிதர் முதல் பாமரர் வரை  போற்றிய ஒரு நூல்.

‘கருந்துகள்கள் வெளியிடும் கதிர்வீச்சு’ இவரது புகழ் பெற்ற பிரபஞ்ச கோட்பாடு.இன்றளவும் ‘Penrose-Hawking Theorems’ இயற்பியலில் முக்கிய இடத்தை வகிக்கின்றன.

‘பிரபஞ்சத்தை யாரும் (கடவுள்) உருவாக்கவில்லை. காலவெளியின் ஒருமையும், அதன் ஜியோமிதியும் இதை ஏற்படுத்தின. விஞ்ஞான சட்டங்களுக்கு உட்பட்டு உருவாகிய இந்த அகிலத்தில் சொர்க்கம், நரகம் என ஏதுமில்லை. இந்த பிரும்மான்டத்தில் வேறு உலகங்களும், அவற்றில் உயிரினங்களும் சாத்தியமே. ஆனால், நம் நோக்கம் அவர்களை கண்டுபிடிப்பதல்ல. இந்தப் புவியில் என்னேரமும் திடீரென அணு ஆயுதப் போர் நிகழும் வாய்ப்பு இருப்பதால், விண்வெளி குடியேற்றங்கள் மிகவும் தேவை. அதற்கு மிக மிக மேம்பட்ட உன்னதமான செயற்கை அறிவும் தேவை. அறிவியல், சட்டங்களுக்கு ஆட்படுத்தப்பட்டு தன்னை வளர்த்துக் கொள்கிறது. தன்னை நிரூபிக்க அது தவறுவதில்லை. தத்துவங்கள் தேக்க நிலையில் உள்ளன. மனிதனின் இன்றைய தேவையும் அறிவியலே”, என்கிறார் இவர்.

உடல் இயக்கத்தில் அவர் பிறரை நாட வேண்டிய நிலை- மிக இளமையில் இருந்தே பிறரை சார வேண்டி இருந்தாலும் தன் குறையால் அவர் வாழ்வை வெறுக்கவில்லை. சக்கர வண்டியை இயக்கினார்; கைகள் செயலிழந்தபோது பேச்சின் மூலம் கட்டளைகள் பிறப்பித்து செயலாற்றினார் .’Intel’ நிறுவனம் அவரது மூளையின் சிந்தனைகள் மற்றும் முகபாவங்களை படிக்கும் கணினியை அவரது சக்கர நாற்காலியில் இணைத்து உதவியது. இன்று பேச இயலாத நிலையில், அவர் கன்னத்தின் ஒரு தசை மட்டும் இயங்கும் நிலையில் அதைப் படிக்கும் கணினி கொண்டு அவர் அறிவியல் சிந்தனைகளைப் பகிர்கிறார். அரசியல், மற்றும் சமுதாய நடப்புகளிலும் ஆர்வம் மிக்கவர். வியட்னாம் போருக்கு எதிராகக் குரல் கொடுத்தவர்.. ஒருங்கிணைந்த ப்ரிட்டனை ஆதரிப்பவர். தன் குறைகளைக் காட்டி ஆதாயம் தேடாமல் அறிவால் தன் ஆற்றலை நிரூபித்தவர். தாழ்வு மனப்பான்மை அற்றவர்.

என்ன குறை இவருக்கு? ஒன்றும் குறையில்லை.

லேடி- ஆதவன் சிறுகதை

வெ. சுரேஷ்

என் சிறு வயதில் எங்கள் வீட்டில் சௌடம்மா என்று  ஒரு பாட்டி வேலை செய்து வந்தார். எங்கள்  அம்மாவிடம் நாங்கள் பேச முடியாதபடியெல்லாம் பேச அவருக்கு உரிமை உண்டு. அவர்கள் இருவரும் பேசிக்கொண்டு இருக்கும்போது பார்த்தால், சொந்த அம்மாவும் மகளுமே பேசிக்கொண்டு இருப்பது போலத் தோன்றும். சொல்லப்போனால், ஊரிலிருந்து அவ்வப்போது வரும் எங்கள் பாட்டியிடம் பேசுவதை விட இந்தப்  பாட்டியிடம் அம்மா இன்னும் மனம் திறந்து பேசுவதாகவே நாங்கள் எல்லோரும் நினைத்திருந்தோம். இது ஒரு புறம் ஆனால் அவ்வளவு நெருக்கமாக பழகி வந்தாலும், அவர் இல்லாத நேரத்தில் அவரைப் பற்றி பேச்சு வந்தால் அம்மாவிடம் அவ்வளவு நெகிழ்ச்சியைக் காண முடியாது. ஆமாமா வேணுங்கறது எல்லாத்தையும் இங்கதான் கேட்டு வாங்கிப்பா, விசுவாசத்தை மட்டும் இன்னொருத்தர் கிட்ட காட்டுவா, என்ற ரீதியில் முனகி கொள்வார். எங்களுக்குப் புரியாது. எப்போதும் அம்மாவுக்கு சௌடம்மா மீது அந்த சந்தேகம் இருந்தது. சௌடம்மாவுக்கும் ஒரு பழக்கம் இருந்தது. அம்மாவிடம் நேரடியாக எந்த பதிலும் சொல்ல மாட்டார். காபி நல்லா இருந்ததா, என்று கேட்ட்டால், அதுக்கென்ன குறைச்சல் என்கிற ரீதியில்தான் பதில் சொல்வார். கொடுக்கப்படும் உணவுப் பண்டங்களை, அவ்வளவு லட்சியம் செய்யாமலேயே வாங்கிக்  கொள்வார். இருவருக்கும் உள்ள நெருக்கத்தில் கண்ணுக்குத் தெரியாத முள் ஒன்று இருப்பதும் புரியும். அவர்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் மிகுந்த அன்பு காட்டினார்களா? அல்லது அன்பு இருப்பது போல நடித்து ஒருவரை ஒருவர் வெறுத்தார்களா? எஜமானியம்மா- பணிப்பெண் அல்லது எஜமான்- பணியாள்  உறவில் இது ஒரு பொதுவான விஷயம் என்பதை நண்பர்களுடன் பேசும்போது தெரிந்து கொண்டேன். ஆனால் இதன் முழுப் பரிமாணமும்  தாத்பரியமும், பின்னர் ஆதவனின் “லேடி” சிறுகதையைப் படிக்கும்போது  உணர்ந்து கொள்ள முடிந்தது.

பாப்பா என்கிற நடுத்தர வயதுத் தமிழ்ப்பெண் தில்லியில், பல வீடுகளில் வீட்டுப் பணியாளராக பணி புரிந்து வருபவர். அவரது ஒருநாள் வாழ்க்கையே இந்தக் கதை. இதில், அவர் ஒரு தமிழ் வீட்டில் வேலை செயது வருகிறார். இயல்பாகவே மற்ற  ஹிந்தி மொழிக்காரர்கள் வீட்டுப் பெண்மணிகளை விட இந்தத் தமிழ் பெண்ணிடம் நெருக்கமும் உரையாடலும் அதிகம்.. ஆனால் தமிழ் பிராமணர்கள் குடும்பங்களில் வீட்டு வேலையாட்களுக்கு இருக்கக் கூடிய எல்லைகள் அங்கும் உண்டு. வீட்டில் சில இடங்களுக்கு போகக் கூடாது, சில பாத்திரங்களைத் தொடக் கூடாது என்றெல்லாம். இந்த மாதிரி குறைகளெல்லாமே பாப்பா பொறுத்துக் கொள்கிறார். வளர்ந்து வரும், படித்துக் கொண்டிருக்கும் தன் மகனுக்காக. வரும் வாரத்தில், அவளது மகனுக்கு பிறந்த நாள் வரப்போகிறது. அதற்கு, பரிசாக ஒரு சட்டை வாங்கித் தருவதாக வாக்களித்த அந்த வீட்டுப் பெண்ணிடம், அது வேண்டாம், மகன் சாப்பிட ஒரு நல்ல தட்டு ஒன்று வாங்கிக் கொடுங்கள், என்று கேட்டிருக்கிறார் பாப்பா. அவர்கள் அந்தப் பரிசு வாங்கித் தரும் நாள்தான் கதை நடக்கும் நாள்.

அன்று பரிசும் வருகிறது. மிகுந்த ஆவலுடன் அந்தத் தட்டினைப் பார்க்கும் பாப்பா கடுமையான ஏமாற்றத்துக்கு ஆளாகிறார். அவர் எதிர்பார்த்திருந்த தட்டு அல்ல அது. வந்தது, பீங்கான் தட்டு..முகம் சுருங்க பாப்பா சொல்கிறார், “அய்ய இந்தத் தட்டு இல்லம்மா, இது வேணாம்.” “பின்ன எந்தத் தட்டுடி வேணும்?” என்று கேட்கிறார் வீட்டம்மா. “அத மாதிரி,” என்கிறார் பாப்பா. கைகள் அந்த வீட்டு அய்யமார்கள் சாப்பிடும் எவர்சில்வர் தட்டினைச் சுட்டிக்காட்ட, உடனே கோபமாக அந்த வீட்டம்மாள், “ஓஹோ, உனக்கு எவர்சில்வர் தட்டுதான் வேணுமாக்கும் இது வேணாமா?” என்று கேட்க, கண்டிப்பாக மறுத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார் பாப்பா. மறுக்கப்பட்ட அன்பினை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று திகைத்து நிற்கிறார் அந்த வீட்டம்மா.

பொதுவாக மத்தியதர வர்க்க மனிதர்களின் வாழ்க்கையயும், மனக்குழப்பங்களையுமே அதிகம் எழுதியுள்ளவர் என்று அறியப்படும் ஆதவன், அதற்கு கீழே உள்ள வர்க்கத்தாரின் மனநிலையில் நின்று எழுதிய அரிதான சிறுகதை இது. எஜமானி- பணிப்பெண் உறவின் love – hate தன்மையை அற்புதமான உரையாடல்கள் மூலம் கொண்டு வந்திருக்கிறார். பாப்பாவுக்கு அந்த வீட்டம்மாவால் காபி, சிற்றுண்டிகள், கொடுக்கப்படும் விதம், அந்த வீட்டில் பாப்பா திறந்து விடக்கூடாத கதவுகள், உள் நுழைந்து சுத்தம் செய்யக்கூடாத அறைகள் ஆகியவற்றின் மூலம் நுட்பமாக அந்த உறவின் சாதிய இடைவெளிகளையும், அது செயல்படும் விதத்தையும் வெகு இயல்பாக சித்தரித்திருக்கிறார். ஒரே சமயத்தில் அந்த வீட்டம்மா மீது பாப்பா கொண்டிருக்கும் ஒட்டுதலையும் விலகலையும், அவர்கள் வீட்டு வாழ்க்கை முறையின் மீதான ஆசையையும் விலக்கத்தையும், பாப்பாவின் மனவோட்டத்தின் மூலம் சித்தரிப்பது அருமை. திறக்கக்கூடாத அறையின் கதவிடுக்கு வழியாக தெரியும் ஒரு வெளுப்பு முதுகையும், எதிர்பாராமல் தன் மேல் மோதிவிடும் அந்த வீட்டுப் பிள்ளையின் உடல் தன் கணவனை நினைவூட்டுவதன் மூலமும் பாப்பாவின் மனதின் ஆழங்களை சித்தரித்திருக்கிறார்.

‘லேடி’, ஏழைகளின் தன்மானத்தையும், நடுத்தர வர்க்கத்தினரின் ஏழைகள் மீதான கரிசனத்தில் செயல்படும் ஒரு patronizing மற்றும் அதிலும் தென்படும் மேட்டிமை மனோபாவத்தையும்  ஒருசேரக் காட்டும் அபூர்வமான கதை. தலைப்பு  சொல்லும் சேதியே அபாரம். தான் வேலைக்காரியாக இருக்கலாம், ஆனால் தன மகன் நன்றாக படித்து பிற்காலத்தில் பெரிய ஆளாக வரப்போகிறவன், அவனுக்கு தமக்கு சமதையாக ஒரு எவர்சில்வர் தட்டு வாங்கிக் கொடுக்க மனமில்லாத அந்த வீட்டாரின் பரிசை, அன்பை, தூக்கி எறியும் பாப்பாவின் ரோஷம் அந்தத் தலைப்பு வைத்திருக்கத் தூண்டியிருக்கலாம். கதையின் இன்னொரு இழையாக, பாப்பாவின் மகன் மாரியின் சிநேகிதர்கள் குறித்த பாப்பாவின் கவலை, இறுதியில் மாரியின் பாண்ட் பாக்கெட்டில் அவர் கண்டுபிடிக்கும் சிகரெட் பாக்கெட் ஆகியவை, கதைக்கு இன்னொரு பரிமாணத்தை சேர்க்கின்றன.

2016ஆம் ஆண்டில் படித்த குறிப்பிடத்தக்க சில புத்தகங்கள்

– ஆர். அஜய்-

  1. நிலவில் பூத்த முல்லை – உ.வே.சா.

தலைப்பு கட்டுரையில் ‘பத்துப் பாட்டை’  தேடி அலைகிறார் உ.வே.சா. ஒரு ஊரில் இரவு நேரத்தில் சுவடி கிடைக்கிறது. நிலவொளி மட்டுமே உள்ள இடம். அவசர அவசரமாக சுவடிக்கட்டை பிரிப்பவரின் கண்ணில் ‘முல்லைப் பாட்டு’ படுகிறது,  நிலவில் முல்லை பூக்கிறது.

புனைவின் சாயல் கொண்ட பல நிகழ்வுகள் இந்த நூலில் உள்ளன. வாழ்ந்து கெட்ட குடும்பத்தில் பிறந்து சொத்து அனைத்தையும் ஜப்தியில் பறி கொடுத்து, தன்னிடமுள்ள- அன்று விற்றிருந்தால் கணிசமாக தொகை கிடைத்திருக்கக்கூடிய – சுவடிகளை இலவசமாக விட்டுச் சென்ற, இறுதிவரை தன் பெயரைச் சொல்லாதவர் பற்றிய பதிவு சிறுகதையாக மாறக் கூடியது. இவை ‘உண்மை புனைவை விட புரிந்து கொள்ள கடினமானது’  என்பதை மீண்டும் நிரூபிக்கின்றன.

திருமணமான மாணவர்கள் தங்கள் செலவுக்காக தந்தை கொடுப்பது போதாமல், மாமனாரை அதிகாரம் செய்து பணம் பெற்றுக்கொள்வது அன்றைய சமூகச் சூழலை, கடந்து போன காலத்தை  குறித்த ஒரு சித்திரத்தை அளிக்கிறது என்றால் வகுப்பறைகளில் மாணவர்களின் குறும்பு சில இடங்களில் காலம் அப்படியே உறைந்துள்ளதைச் சுட்டுகிறது.

இறுகிப் போகாத, இன்னும் வாசகனுக்கு அணுக்கமாக இருக்கும் புன்சிரிப்பை உருவாக்கும் நடையும்,  உள்ளன. ‘சீவக சிந்தாமணியின்’ செய்யுள்களில் ஒரு வரி குறித்து குழம்பிக் கொண்டிருக்கிறார். அந்த காலகட்டத்தில் முதியவரொருவர் அவர் இல்லத்தில் அவ்வப்போது வந்து உண்பது வழக்கம். எப்போதும் போல் அவர் புலம்பிக்கொண்டே இருக்க, உ.வே.சா வழக்கம் போல் ‘சிறிதும் சிரத்தை’ இல்லாமல் கேட்டுக் கொண்டிருந்ததை விவரிக்கிறார். பேச்சுவாக்கில் கிழவர் ஏதோ பழமொழி சொல்ல, அது சீவக சிந்தாமணியில்  உ.வே.சாவிற்கு சந்தேகம் உள்ள பகுதியோடு தொடர்புடையது. உடனே உற்சாகமாகும் உ.வே.சா கிழவரிடம் பேச்சு கொடுத்து தன் சந்தேகத்தை தீர்த்துக் கொள்கிறார்.

தனக்கு நேர்ந்த அனுபவங்களை விலகலோடு பார்க்கும் மனநிலையும் அவருக்கு உள்ளது.  வார இறுதிகளில், மற்றும் பிற விடுமுறை நாட்களில், அவர் வீட்டில் இருந்ததாகவே தெரிவதில்லை, பெரும்பாலும் ஏதேனும் தொலைவில் உள்ள ஊருக்கு சுவடி தேடி செல்கிறார். சுவடி தேடிச் சென்ற இடத்தில் அங்கிருப்பவர் இவரை கவனிக்காமல் இருப்பது போல் பாவனை செய்ய அதை பொருட்படுத்தாமல் அங்கேயே நின்றிருந்ததை எந்த சுயபச்சாதாபமும் இல்லாமல் விவரிக்கிறார்.

இரு  நிகழ்வுகள். மணிமேகலையில் ‘கும்மாயம்’ என்ற சொல்லின் அர்த்தத்தை தேடுகிறார். கும்பகோணத்தில் ஒரு கோவிலுக்கு செல்பவருக்கு பட்டாச்சாரியார், பல பிரசாத சிற்றுண்டிகளை தருகிறார். அவற்றின் பெயர்களை கேட்கும் உ.வே.சா, ஒன்றின் பெயர் ‘கும்மாயம்’ என்று கேள்விப்பட்டதும் உணவை மறுக்கிறார். அச்சிற்றுண்டி  நாவிற்கு தந்த சுவையை விட, அந்தப் பெயர் காதில் விழுந்தபோது உருவான சுவையே சிறந்தது என்கிறார்.  வில்லி பாரதத்தில்    ‘செண்டை’ என்ற சொல்  ஒரு  செய்யுளின் உபயோகிக்கப்பட்டுள்ள விதம்  ‘பூச்செண்டை’     குறிக்காது என்று தெரிந்தாலும் வேறெதை குறிக்கிறது என்று அதன் அர்த்தத்தை தேடுகிறார்.  கோவிலொன்றில் தரிசனத்தின்போது, பெருமாள் கையிலிருந்த ஆயுதத்தை பார்ப்பவர் அது என்னவென்று கேட்க, ‘செண்டு’ என்கிறார் அர்ச்சகர்.  உ.வே.சா அகக்கண்ணில் திரௌபதியை இழுத்து வரும் துச்சாதனன்தான் இப்போது தெரிகிறான். அவர் சந்தேகம் தீர்கிறது. அறுசுவை  உணவை விட,  இறை தரிசனத்தை விட அவற்றின் மூலம் தன் சந்தேகங்கள் தீர்ந்ததே அவருக்கு மகிழ்ச்சியைத் தந்திருக்க வேண்டும்.

அன்றாட லௌகீக வாழ்வில் ஈடுபட்டிருந்தாலும், அப்போது என்ன செயல் செய்து கொண்டிருந்தாலும் அவர் மனம் உள்ளூர இலக்கியங்கள் குறித்தே யோசித்துக் கொண்டிருந்துள்ளது.

2. The Ancestor’s Tale – Richard Dawkins.

டாக்கின்ஸின் சரளமான நடையில் நமது பரிணாம வளர்ச்சியின் பாதையை அறிய உதவும் சுவாரஸ்யமான பயணம் இந்த நூல். என்னைப் போன்ற பொது வாசகர்களையும் அன்னியப்படுத்தாமல், அதே நேரத்தில் தான் சொல்லும் விஷயத்தை மிகவும் எளிமையாக்கி  நீர்த்துப் போகச் செய்யாமலும் கம்பி மேல் நடக்கும் வித்தை டாக்கின்ஸ்சுக்கு புதிதல்ல. அதே நேரத்தில் ஓரளவுக்கு மேல்  எளிமைப்படுத்த முடியாத துறைசார்ந்த நுணுக்கமான விஷயங்கள் சம்பந்தப்பட்ட சில இடங்களில், இவை பொது வாசகருக்கு கடினமாக இருக்கலாம், எனவே அடுத்த ‘சில’ பக்கங்களை நீங்கள் கடந்து செல்லலாம், அதனால் இழப்பு இருக்காது என்றும் சொல்லி விடுகிறார். இவையும் பொதுவாசகனுக்கு உதவுவதோடு அவன் குறைந்தபட்ச தயாரிப்பு செய்து கொள்ளவும் உதவுகின்றன.

முற்றிறுதியாக பல விஷயங்களை சொல்பவர்,  அனைத்திற்கும் பதில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்ற தரப்பை எடுப்பதில்லை. அறிவியல்  இன்னும் இறுதி முடிவுக்கு வராததையும் குறிப்பிட்டு அவை குறித்த தன் யூகங்களையும் (இவை  யூகங்கள் மட்டுமே என்பதையும்  வெளிப்படையாக) கூறுகிறார்.  உதாரணமாக நம் பரிணாம வளர்ச்சியில் இன்னொரு கிளையான, நம் பங்களிகளான, நியாண்டர்தால்கள், அவர்களுக்கும்   நமக்கும் இருந்திருக்கக்கூடிய உறவு பற்றி அவர் குறிப்பிடும் சில கருத்துக்கள்.  இந்தப்  புத்தகம் வெளிவந்தபின் இன்று அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு ‘நியாண்டர்தால்களுக்கும் நமக்குமான  உறவுக்கான  சான்றுகள்  மரபணு சார்ந்து கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.

Backward chronology and forward chronology are each good for different purposes. Go backwards and, no matter where you start, you end up celebrating the unity of life. Go forwards and you extol diversity.’

என்று நூலின் ஆரம்பத்தில் டாக்கின்ஸ் அழகாகச்   சொல்வதில் உள்ள பரவசத்தை  நூல் முழுதும் உணர முடிகிறது.

  1. Letters to a Nation – Nehru’s letters to his chief ministers

தன் இலட்சியங்கள் மற்றும் மனசாட்சிப்படி உறுதியாக இருந்த, அதே நேரத்தில் பிடிவாதமாக இல்லாமல் எப்போதும் மாற்று தரப்புடன் உரையாடலில் ஈடுபட தயாராக இருந்த ஜனநாயகவாதியை இந்த கடிதங்களில் காண்கிறோம். “I cannot advise you because the responsibility is yours and you have to judge finally”, “,”I would like you to give some thought in your province also to the question of the reorganization of the government machinery with a view to seeing whether it is functioning at the maximum possible level of efficiency,” போன்ற வரிகள் இந்தக் கடிதங்களில் அடிக்கடி வருவது, கூட்டாட்சி முறையில் அவருக்கிருந்த நம்பிக்கையை உணர்த்துகிறது. தரையில் கால் பதித்தபடி வானத்தை தொடும் கனவில் -இரண்டிற்கும் உள்ள முரண்பாடை எப்போதும் சமன் செய்தபடி – உள்ளவரும் இந்த கடிதங்களில் இருக்கிறார் . திட்டங்களை செயல்படுத்துவதில் ஏற்படும் காலதாமதங்களை, தடங்கல்களை எதிர்கொண்டு பல்வேறு பிரிவினைகளால் வெவ்வேறு திசைகளில் இழுக்கப்படும் தேசத்தை பொருளாதார வளர்ச்சிக்கு மட்டுமல்ல, ஜனநாயக வளர்ச்சிக்கும் இட்டுச் செல்ல முயன்ற ஒரு தலைவர் இக்கடிதங்கள் மூலம் நமக்குத் தெரிகிறார். அனைத்தையும் விட, “I have supreme faith in India, a faith which transcends even an accumulation of faults and futilities on our part” என்ற ஒரு கடிதத்தில் குறிப்பிடும், எந்தச் சூழலிலும் மேம்பட்ட இந்தியா குறித்த தன் கனவை, நம்பிக்கையை இழக்காத ஒருவர்தான் நூல் முழுதும் உள்ளார்.

  1. To the Brink and Back – Jairam Ramesh

1991ல் தாராளமயமாக்கத்தின் முதல் அடிகளை நரசிம்ம ராவும், மன்மோகன் சிங்கும் எடுத்து வைத்துக் கொண்டிருக்கும்போது தொழில்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் ரெட்டி மற்றும் , MoS ரங்கராஜன் குமாரமங்கலத்துடனான அது குறித்த பேச்சுவார்த்தைகளில் முட்டுச் சந்தில் நிற்கிறார்கள். மன்மோகன் சிங் குமாரமங்கலத்தை சந்தித்து அவர் தந்தை குறித்த நினைவுகளை பகிர்ந்து கொண்டு நாட்டின் நலனிற்கான மாற்றங்களை அவர் ஏற்றுக்கொண்டிருப்பார் என்று விளக்குகிறார். இந்த சந்திப்பு முடிந்து வெளியே வரும் குமாரமங்கலம் ‘Yaar, Sardar ne kamaal kar diya‘ என்று ரமேஷிடம் சொல்கிறார். உரையாடல் அடுத்து சுமூக முடிவை எட்டுகிறது என்பது நமக்கு புரிகிறது. மன்மோகன் சிங் குறித்து இப்போது பொது புத்தியில் படிந்திருக்கும் எண்ணத்திற்கு நேர்மாறான நிகழ்ச்சி இது.

80களின் ஆரம்பத்தில் தாராளமயமாக்கம் குறித்து எடுக்கப்பட்ட முயற்சிகளில் ஆரம்பித்து, 91ம் பெரும் கொந்தளிப்பான சூழலில் அது அமலுக்கு கொண்டு வரப்பட்டதை இத்தகைய திரைக்கு பின்னால் நடந்த விஷயங்களோடு ரமேஷ் சொல்கிறார்.

நாம் காணும் நரசிம்ம ராவ், சிங் மற்றும் ரமேஷ் போல இயல்பாகவே தாராளமயமாக்கம் குறித்த நேர்மறை எண்ணங்கள் கொண்டவர் அல்ல, சூழ்நிலையால் அதை நோக்கி தள்ளப்பட்டவர். கட்சியிலேயே அதற்கு பலத்த எதிர்ப்பை சந்தித்தவர். இந்த பின்புலத்தில் வைத்துப் பார்க்கும்போது, தாராளமயமாக்கம் அமல்படுத்துவதில் சிங் போன்றவர்களின் திட சித்தத்தை விட ராவ் உறுதியாக இருந்ததே பெரிய விஷயமாக இப்போது தோன்றுகிறது. ஆனால் ரமேஷ் அதை உணர்ந்து போல் தெரியவில்லை அல்லது அதை ஒப்புக்கொள்ளவில்லை. ராவ் சமரசம் செய்ய நேரும் போதெல்லாம் அதை அவரின் தனிப்பட்ட தோல்வியாக சித்தரிக்கிறார். ஆனால் வரலாற்றின் குப்பைத்தொட்டிக்குள் நரசிம்ம ராவை தள்ள காங்கிரஸ் செய்த முயற்சிகள் பெருமளவில் வெற்றி பெற்று விட்ட நிலையில் அவருக்கான இடத்தை இந்த நூலில் ரமேஷ் அளிப்பது வரவேற்க்கத்தக்கது.

  1. The Complete Adventures of Feluda – Volume 1&2 – Satyajith Ray

சிறார், வளரிளம் பருவத்தினருக்காக எழுதப்பட்ட துப்பறியும் கதைகள் என்றாலும், குற்றங்களின் முடிச்சுக்களை கட்டமைப்பதும், வாசகனை ஏமாற்றாமல் போலி துப்புக்களோடு புதிருக்கான விடையையும் அவன் முன் வைப்பதும், இறுதியில் நுட்பமாக  முடிச்சவிழும்போது அவனை – கண் முன் இருந்த விடையை கவனிக்காமல் இருந்ததற்காக – வியப்படைய செய்வதும் இவற்றை பெரியவர்களுக்கான கதைகளாகவும் ஆக்குகின்றன. டார்ஜிலீங்கின் பனிப்பொழிவும், எப்போதும் மெல்லிய மழை பெய்து கொண்டிருக்கும் திபெத்தும், காசியின் கங்கைக்கரை சித்திரங்களும், ராஜஸ்தானின் ஒளி வீசும் மணற்பரப்பும், வட இந்திய பழங்கால கோட்டைகளும் உருவாக்கும் விரிவான நிலவியலை பெரும்பாலான குற்றப்புனைவுகளில் காண இயலாது. எனினும்  இந்தக் கதைகளுக்கான உத்தேச வாசகப்பரப்பு சிறார், வளரிளம் பருவத்தினர் என்பதால், இவற்றை ‘தூய்மையாக’ – ஆண்-பெண் உறவுப் பிறழல்கள், ரத்த விரயம், அதீத வன்முறை போன்ற குற்றப்புனைவின் சம்பிரதாய அம்சங்கள்  இல்லாதிருப்பது – வைத்திருக்கிறார் ரே. குறிப்பாக முதல் தொகுதியில் பெண்களே இல்லை என்று சொல்லலாம்.

இந்த தூய்மையின் தாக்கம் எந்தளவுக்கு உள்ளதென்றால், இரண்டாம் தொகுதியின் ஒரு கதையில் ‘அழகாக இருந்தார்’ என்று ஒரு பெண்ணை பற்றிய ஒற்றை வரி வர்ணனை வாசகனை அதிர்ச்சிக்கு உள்ளாக்கக்கூடும். இது குறித்து தன் முன்னுரையில் குறிப்பிடும் அவர், பெரியவர்கள் இவற்றைப் படிக்கும்போது இவற்றின் வாசகப் பரப்பை நினைவில் கொள்ள வேண்டும் என்கிறார்.

  1. அசோகமித்திரன் கதைகள் மறுவாசிப்பு –

மொத்தமாக இல்லாமல், குறிப்பாக இவற்றை படிக்க வேண்டும் என்ற நோக்கமில்லாமல் வாசிக்கப்பட்ட கதைகள். தனது சானட் ஒன்றில் ஷேக்ஸ்பியர் ஒரே அகத்தூண்டுதலைப் பற்றி ஏன் பாடுகிறேன் என்ற கேள்வியை எழுப்பி

“For as the sun is daily new and old,
So is my love still telling what is told”

என்று முடிக்கிறார். ஒவ்வொரு நாளும் சூரியனை புதிதாக பார்ப்பது போல், ஒவ்வொரு மறுவாசிப்பிலும் ஏதேனும் புதிதாக பெற்றுக் கொள்ள இந்தக் கதைகளில் உள்ளது.

நூறு இந்திய டிண்டர் கதைகள்

மாயக்கூத்தன்

cny3rgyvmaaigrg

ஒரு நாள் அலுவலகத்தில் உறவுகள், குழந்தைகள் பற்றிப் பேசிக் கொண்டிருந்தபோது, ‘ரெண்டு பேரு கல்யாணம் பண்ணிக்கிட்டு பல வருஷம் சேர்ந்து வாழற மாதிரி வொண்டர்புல்லான ஒரு விஷயத்தை நான் பார்த்ததில்லை’னு சொன்னார். அவர் அடுத்த வருஷத்துக்கு அடுத்த வருஷம் ரிட்டயர் ஆகப்போறார். அவர் கல்யாணம் பண்ணிக்கொண்டு ஒரு இருபது இருபத்து ஐந்து வருஷம் ஆகியிருக்கலாம். மணவாழ்க்கை மட்டுமல்ல, எந்த ஒரு உறவும் ஒரு அற்புதம் மாதிரி தான்.

சின்ன வயதில், வான சாஸ்திரம் ஆச்சரியமாக இருந்தது. ராக்கெட் போவது ஆச்சரியமாக இருந்தது. இப்போது கூட, உடன் வேலை பார்க்கும் ஒருத்தன் எப்போதும் எலான் மஸ்கினுடைய திட்டங்களைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பான். எனக்கு சுத்தமாக அதில் விருப்பமில்லை. நான் இப்போது பார்க்கும் வேலை சிறு வயதில் எனக்கு அத்தனை ஆச்சரியங்களையும் அளித்த ஒன்று. ஐந்து வருடங்களுக்கு மேலான பணியில், ஒரு பிரச்சனை அதற்கான தீர்வு என்றே போய்க்கொண்டிருக்கிறது. பிரச்சனை இருக்கிறது. தீர்வு எங்காவது இருக்கும். அவ்வளவு தான். நம்மை திருப்திப்படுத்தம் ஒரு தீர்வு, அடுத்தவரை திருப்திப்படுத்தும் தீர்வு. அவ்வளவு தான் அதற்கு மேல் வேலையில் என்ன இருக்கிறது? இது மனச்சோர்வு இல்லை. தீர்வு கண்டிப்பாக இருக்கப் போகிறது என்கிற தைரியம். மிரட்சி இல்லாத நிலையில் ஒன்றும் பிரச்சனையில்லை. அன்றைய நாள் அன்றைக்குள்ளே தீர்ந்துவிடுகிறது. அஷ்டே!

ஆனால், இப்போது மனிதர்கள் மிரட்சியைத் தருகிறார்கள். போன வாரம் அப்பாவின் தோளில் கைவைத்து, ‘இன்னிக்கு என்ன விசேஷம்?’னு கேட்டா, ‘தோளையெல்லாம் தொடற; ஏதோ சண்டைக்கு அடி போடற மாதிரி இருக்கு?’ என்றார். அவரைச் சொல்லி குத்தமில்லை. நாங்க எப்பவும் அப்படித்தான். ஒவ்வொரு முறை இங்கே வரும் போதும், இனி இந்தவாட்டி சண்டை போடக் கூடாதுன்னு ஒரு வைராக்கியம் வரும். ஆனா, அவர் வந்து பத்து நிமிஷத்துல டாம் அண்ட் ஜெர்ரி ஆரம்பிச்சுடும். அவருக்கு எனக்கும் மட்டுமில்லை, எனக்கும் பிறருக்கும் கூட, அவருக்கும் பிறருக்கும் கூட, பிறருக்கும் பிறருக்கும் கூட இது தான் நிலைமை. அப்பா சொல்வார், நாமெல்லாம் நவக்கிரக மூர்த்திகள்.

என்னுடைய பெரிய லட்சியம் இந்த வாழ்க்கையில் தொடர்ந்து சில நிமிடங்கள் பேசிக் கொள்ள சில உறவுகளை (ஒரு அஞ்சு பேர்?) உருவாக்கிக் கொள்வதாகத்தான் இருக்கும். அந்ததந்த நாளைப்பொறுத்து சில சமயம் ரொம்பவே சிக்கலாகவும் மறு சமயம் எளிதாகவும் தோணும்.

இந்துவின் இந்த நூறு இந்தியத் டிண்டர் கதைகள் முயற்சி வாசிப்பவர்களுக்கு நல்ல இலக்கியங்களை விடவும் பல திறப்புகளை தரக்கூடும். கதைசொல்லிகளைப் பற்றிய நம்முடைய முன் முடிவுகளை அவர்கள் மீது ஏற்றும் எண்ணத்தைத் தாண்டி இவற்றை வாசிக்கும் போது, ஒரு நல்லுறவுக்கான மனிதர்களின் தேடல் நமக்குப் புலப்படக்கூடும். வகை வகையான மனிதர்கள், இலக்கணப் பிழைகளுடன் எழுதுபவர்களை ஒதுக்கும் இரண்டு மெட்ராஸ் காரர்களைத் தவிர, மற்ற எல்லோரையும் என்னால் எங்காவது பொறுத்திப் பார்க்க முடிகிறது.

இந்தக் கதைகள் பற்றி முதல் பத்தியில் குறிப்பிட்ட அலுவலக நண்பரிடம் சொன்னால், அவர் இவர்களை லட்சியம் இல்லாதவர்கள், கவலை அற்றவர்கள் என்று சொல்லக்கூடும். அதான் சொல்கிறேன் நம்முடைய முன் முடிவுகளை விட்டுவிட்டு வாசித்தால் மட்டுமே இந்த நூறு கதைகளையும் அதன் மனிதர்களையும் நாம் புரிந்து கொள்ள முடியும். எல்லோருக்கும் ஒரு அர்த்தமுள்ள, ஒவ்வொரு நொடியும் புதுமையாய் புத்துணர்ச்சி தரும் ஒரு உறவு வேண்டியிருக்கிறது. இவர்கள் அதற்கான முயற்சிகளை எடுக்கும் போது நாம் ஏன் மிரள்கிறோம்?

ஆண்-பெண் உறவுகளை எடுத்துக் கொண்டால், நாமும் நம்முடைய சமூகமும் நம்முடைய சட்டங்களும் இத்தனை இறுக்கமாக இருக்க வேண்டியதில்லை. ஒரு நல்ல புத்தகம் ஒருவனுக்கு எத்தனை அவசியமோ, அதைவிட நூறு மடங்கு ஒரு நல்ல உறவு அவசியம்.

இந்த நூறு கதைகளுடன் வரும் ஓவியங்களைப் பற்றி ஓவியம் பயின்றவர்கள் தான் சிறப்பாக எழுதமுடியும் என்பது என் நினைப்பு. இந்த ஓவியங்களைவிடவும் இந்தக் கதைகள் எனக்கு மனிதர்களைப் பற்றி பல்லாயிரம் அர்த்தங்களைக் கொண்டு சேர்க்கும்.

எதற்காக எழுதுகிறேன்? – குமரன் கிருஷ்ணன்

குமரன் கிருஷ்ணன்

உயிரணுக்களால் உண்டாவது உடம்பு. நினைவணுக்களால் உருவாவது மனது. ஓயாமல் மனது உருப்பெற்றுக் கொண்டே இருக்கிறது. இந்த உருவாக்கத்தின் தொடர்வினையாக, ஒரு நிகழ்வின் நொடியை நினைவின் பிரதியாய் மனது சேகரிப்பதை நாம் அனுபவம் என்று அழைக்கலாம். ஆனால் எந்தவொரு நிகழ்வின் நொடியும் தனித்திருப்பதில்லை என்பது காலத்தின் விதி. அதன் முன்னும் பின்னுமாய் கோர்க்கப்பட்ட நிகழ்வுகளுக்குரிய‌ நொடிகளின் பிரதியை கொண்டே குறிப்பிட்ட நிகழ்வை உள்வாங்க முடியும் என்பது காலம் ஏற்படுத்திய உயிரியல் கட்டமைப்பு. ஓரறிவு துவங்கி ஆறறிவு வரை அனைத்திற்கும் இதனை பொது விதி எனக் கொள்ளலாம். இவ்விதியை கொண்டு காலம் நம் மனதை கையாளும் பாங்கு அலாதியானது. நினைப்பின்றி நிகழ்வில்லை, நிகழ்வின்றி நினைப்பில்லை என்னும் விசித்திர வளையத்திற்குள் நம்மை சுற்ற விட்டு வேடிக்கை பார்க்கும் காலத்திற்கு நாம் வைத்திருக்கும் பெயர் வாழ்க்கை. உலகில் உலவும் அனைத்து விதமான விழுமியங்களும் ‍ அது தனிமனித தத்துவ விசாரங்கள் சார்ந்ததோ, சமூகம் சார்ந்ததோ, மதம் சார்ந்ததோ…அறிவியல் சார்ந்ததோ…எப்படியிருப்பினும் இந்த விசித்திர வளையத்தில் அடங்கி விடும். இவ்விசித்திர வளையம் தரும் வியப்பினால் எழுதுகிறேன் அவ்வியப்பை பற்றி எழுதுகிறேன்.இத்தகைய வியப்பை ஊட்டும் படைப்புகளை பற்றியும் எழுதுகிறேன் அவற்றின் வாசிப்பு அனுபவங்களை சுற்றியும்  எழுதுகிறேன்.

இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என்று மூன்று காலங்கள் இருப்பதாக நமக்கு கற்பிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் காலம் ஒன்றே எனத் தோன்றுகிறது. அது இறந்த காலம் தான். அதுவே, நாம் பார்த்த இறந்த காலம், பார்த்துக் கொண்டிருக்கும் இறந்த காலம், நாளை பார்க்கப் போகும் இறந்த காலம் என்று திரிகிறது…ஒரு நினைப்பிலிருந்து மற்றொரு நினைப்புக்கு மனம் நகரும் கால அளவை நிகழ் காலம் என்றும் ஒரு நினைப்பிலிருந்து மற்றொரு நினைப்பை உருவாக்கும் மனதின் விழைவை எதிர் காலம் என்றும் சொல்லலாம் இல்லையா?  காலம் என்பதே நினைப்பு தான். நினைப்பும் நினைப்பை பற்றிய நினைப்பும்…! காலம் சில சமயங்களில் நம் தோள் அணைத்து அழைத்துச் செல்கிறது. சில சமயங்களில் தரதரவென்று இழுத்துச் செல்கிறது. இரண்டும் இவ்வாழ்வின் இயல்பென்று புரியத்துவங்குகையில் காலத்தை ஒரு அற்புதமான ஆசானாய் பார்க்கும் ஆர்வம் சுரக்கிறது. அதன் விளைவாய் ஒவ்வொரு நொடியையும் கூர்ந்து பார்க்கும் நோக்கம் கிடைக்கிறது. கூர்ந்து பார்த்தல் என்பதே கூடுதல் அனுபவத்திற்கான வழி என்ற பக்குவம் பிறக்கிறது. இவ்வாறு சேர்க்கும் அனுபவத்தின் அச்சாணி நினைப்பு. நினைப்பு என்பது ஒரு விசித்திர வஸ்து. ஒரு நினைவு, அது நினைக்கப்படும் பொழுதில் என்ன பொருள் தரும் என்பது காலத்தின் கையில் இருக்கிறது. இடைப்பட்ட பொழுதுகளில் கிடைக்கும் மேற்கூறிய அனுபவத்தின் ஆழ நீளங்களின் அமைப்பைப் பொறுத்து இருக்கிறது. நினைப்பின் பரிமாணங்கள் நினைப்பை பற்றிய ஒவ்வொரு நினைப்பு தோறும் மாறிக்கொண்டே இருக்கும் விசித்திரம் நிகழ்கிறது. இத்தகைய நினைப்பு தரும் உணர்வை, அதன் விசித்திரத்தை, அதற்கு நிகரான சொற்களின் வடிவேற்றி படிம‌ப்படுத்தும் படைத்தல் அனுபவம் தரும் பரவசத்திற்காய் எழுதுகிறேன்…

காலம் நம் நினைப்புடன் உறவாடும் மாயம் தான் எத்தனை வியப்புக்குரியது? காலம் ஒரே அலகில் தான் உலகில் உலவுகிறது. ஒரு இலையின் அசைவுக்கும் ஒரு இறுதி மூச்சுக்கும் காலத்தின் அலகு ஒன்றே. ஆனால் அதைப் பார்ப்பவர் அவற்றுடன் கொண்ட நினைப்பின் பரிமாணங்களைப் பொறுத்து அந்நிகழ்வும், பின் அந்நிகழ்வு சார்ந்த நினைப்பும் கால அலகின் கணக்கில் அடர்த்திமிகு நீளம் கொண்ட நினைப்பாக மாறும் மாயம் சொல்லி அடங்குமா சொல்லில் தான் அடங்குமா? நாளும் பொழுதும் நிகழும் இம்மாயத்தை மொழியின் வழியே சேகரித்துக் கொள்ளும் தீராத ஆவலில் எழுதுகிறேன்.

“நெருப்பு என்று எழுதினால் சுட வேண்டும்” என்பார் லா.ச.ரா. அது போல் நினைப்பென்று எழுதினால் நெகிழ வேண்டும். மனதின் நெகிழ்வு உள்ளிருக்கும் மனிதத்தை உரமேற்றிக் கொண்டே இருக்கிறது. அதை வேண்டி எழுதுகிறேன். வாசிப்பவருக்கும் அத்தகைய நெகிழ்தல் நேரும் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன்.

நினைப்பு உறவுகளாலும் உணர்வுகளாலும் உண்டான கலவை. இங்கே உறவு, உணர்வு என்பதை மனிதருடன் மட்டும் தொடர்புபடுத்திக்கொள்ளாமல், நம் அகத்திற்கும் புறவெளிக்குமான உறவும் உணர்வும் என்று பொருள் கொள்க. இத்தகைய நினைப்பு காலத்துடன் உறவாடும் நிகழ்வுதானே வாழ்க்கை? இந்த உறவைப் பற்றி எழுதுகிறேன்…இந்த உறவின் உன்னதம் பற்றிய புரிதல் தரும் விசாலமான பார்வைக்காய் எழுதுகிறேன்…

காலம் நொடி தோறும் நினைப்பை பிரசவித்தபடி நகர்ந்து கொண்டே இருக்கிறது. காணும் திசையெங்கும் கடக்கும் பொழுதெங்கும் நினைப்புக்கான கருவை சுமந்தபடி திரிகிறது காலம்.  உறவையும் பிரிவையும் உட்பொருளாய் கொண்டது காலம். அதை உள்வாங்கி ஊழ்வினையாய் மாற்றுகிறது நினைப்பு. இந்த ரகசியத்தை, அதிசயத்தை, அதன் உட்பொருள் பற்றிய என் புரிதலை பகிர்ந்து கொள்ள எழுதுகிறேன்.

நிகழ்கால நாக்கில் நினைப்பை அள்ளி தடவுகையில் மனதில் ஊறும் சுவைதானே நம் வயது? எனவே வயதின் வார்ப்பு பற்றி எழுதுகிறேன் அதன் சாரமான அனுபவ ஈர்ப்பு பற்றி எழுதுகிறேன்.

இதுவரை சொன்ன அகம் சார்ந்த “எதற்காக?” தந்த எழுத்துக்கள்,  பிறர் வாசிக்கும் நிலையை அடையும் பொழுது, ஒரு மிக முக்கியமான “எதற்காக?” நிகழ்கிறது. இங்கும் காலமே கருவியாய்…ஆம்.ஒரு நுனியை மற்றொன்றில் கோர்த்து விடுவதில் காலம் வெகுவாய்த் தேர்ந்தது!

எனவே, இவ்வாறு, என் நினைப்பை தேக்கி வைத்த சொல்லடுக்கு ஒன்றை வாசிக்கும் ஒருவர் எதிகொள்ளும் ஒற்றைவரியின் அடியில் அவரின் நினைப்பின் நுனி ஒன்று ஒட்டிக் கொண்டிருக்கக் கூடும். அதன் பின் என் வரி அவரின் பிரதி. அவருக்கான பிரதி. நினைப்பின் பிரதி என்பது வெறும் நகலன்று. அதன் பொருளடக்கம் வாசிப்பவரின் நினைப்புக்கேற்ப மாறிக்கொண்டே இருக்கும் பண்பு உடையது. இப்பண்பு பயில‌ வாசிக்கிறேன். இப்பண்பு பகிர எழுதுகிறேன்.