கட்டுரை

மாயக் கதவுகளுக்கு முன்…

சித்ரன் ரகுநாத்

ஒவ்வொரு புத்தாண்டு பிறக்கும்போதும் நம் எல்லோரிடமும் இரண்டு கேள்விகள் முன் நிற்கும். 1) சென்ற ஆண்டு என்ன செய்தோம் அல்லது என்ன நடந்தது? 2) புத்தாண்டில் என்ன செய்யப்போகிறோம்?

சென்ற வருடம் நிகழ்ந்த அனுபவங்கள், சம்பவங்கள், நிகழ்வுகள், துக்கங்கள், மகிழ்ச்சிகள், ஏமாற்றங்கள், சாதனைகள், இழப்புகள், கிடைத்தது, கிடைக்காதது, நடந்தது, நடக்காதது என்று ஃப்ளாஷ்பேக்குகளில் மனது உலா வரும். அது சந்தோஷமான நிகழ்வாக இருப்பின் அதுபோல் மீண்டும் வருங்காலங்களில் தொடரவேண்டும் என்று ஆசைப்படுவதும், விரும்பத்தகாத சம்பவமாக இருப்பின் அது திரும்பவும் நிகழ்ந்துவிடக்கூடாதே என்ற பதட்டத்துடன் வரும் புதிய நாட்களை எதிர்கொள்வதுமாக ஒவ்வொரு புத்தாண்டு பிறக்கும் போதும் சில பல கலவையான எண்ண ஓட்டங்களில்தான் நாம் இருப்போம்.

நாம் எங்காவது வெளியே கிளம்பலாம் என்று நினைக்கும் போதுதான் மேகங்கள் கவிந்து  மழைத்துளிகள் விழ ஆரம்பிக்கும். இன்றைக்கு ரசம் சாதத்துடன் சமையலை முடித்துக் கொள்ளலாம் என்று நினைக்கும்போது விருந்தினர் வந்து நிற்பார். அவசரத் தேவைக்கு பணம் எடுக்கப் போனால் ஏ.டி.எம்மில் காசில்லை என்று வரும். ஏன் குறுக்கே போகும் ஒரு பூனைக்குட்டிகூட நமது தினத்தைத் தீர்மானிக்கக்கூடும்.

எதிர்மறையான விஷயங்கள் நம்மைச் சுற்றிப் பெருகிவிட்டன என்பதை மறுப்பதற்கில்லை. எதையாவது புலம்பிக்கொண்டிருப்பதற்கான  சந்தர்ப்பங்களும் பெருகிவிட்டன. நாம் சுவாசிக்கும் காற்று மாசுபட்டிருக்கிறது. நாம் சாப்பிடும் உணவு வேதிப்பொருள்களின் ஆதிக்கத்தால் விஷமாகிக் கொண்டிருக்கிறது. உலகமயமாகுதல், உலகம் வெப்ப மயமாகுதல் தரும் நேரடி பாதிப்புகளை நாம் ருசிக்கத் துவங்கிவிட்டோம். குடிதண்ணீரை பாட்டிலில் வாங்கிக் குடிப்பதும், வியாபாரமயமாகிவிட்ட மருத்துவமனைகளில் கட்டுக்கட்டாக பணத்துடன் டிவி பார்த்தபடி வரிசையில் காத்திருப்பதும் நமக்கு பழக ஆரம்பித்துவிட்டது. குண்டு வீசப்பட்டு நாசமான கட்டிட இடிபாடுகளுக்குள்ளிருந்து கேட்கும் குழந்தைகளின் அலறல்கள், அழுகைகள் செய்திகளாக நம்மைச் சிதறடிக்கின்றன.

நிமிர்ந்தால் குட்டுவதும், குனிந்தால் நெட்டுவதுமான மனிதர்களின் போக்கு. சுயநலக்காரர்கள் பெருகிவிட்டார்கள். அடுத்தவர் மீது யாருக்கும் அக்கறையில்லை. நம் மீது நம்மை ஆளும் அரசாங்கத்திற்கும் அக்கறையில்லை. இவையெல்லாவற்றையும் தினசரி கடந்துதான் போகிறோம். இதெல்லாம் அடுத்த ஆண்டும் இப்படியேதான் தொடரப் போகின்றன. அதில் மாற்றமில்லை. யாரும் அதை மாற்றப் போவதில்லை.

ஆனால் எல்லாவற்றிக்கும் நடுவே புத்துணர்ச்சியுடன் ஒரு புதிய தினத்தை, நமக்கான ஒரு புதிய உலகைக் கண்டடையும் உத்வேகத்துடன்தான் நாம் வாழ்க்கைப் பாதையில் பயணிக்கிறோம். எதிர் மறைகளுக்கிடையேயும் நேர் மறைகளைத் தேடிக் கண்டெடுக்கிற உத்வேகம் அது.  விரும்பாத விஷயங்களின் முன் ஒரு வெண்திரையைப் போட்டு அதற்குமுன் நமக்கு வேண்டிய, நாம் காண விரும்புகிற விஷயங்களைத் திரையிட்டுப் பார்த்து மகிழ்வதற்கான முயற்சியை நாம் எப்போதும் செய்து கொண்டேதான் இருக்கிறோம்.

புத்தாண்டில் என்ன செய்யப் போகிறோம்? நாம் வாழ்வில் எதை அடைய விரும்புகிறோம் என்கிற முனைப்பில், உறுதியில் இருக்கிறது இந்தக் கேள்விக்கான பதில். எதிர்மறையாய் என்ன வேண்டுமானாலும் நடந்துவிட்டுப் போகட்டும், கவ்விப் பிடித்திருக்கும் எந்த இருட்டிற்கும் வில்லனாக இருக்கும் ஒரு ஒளி உண்டு. தூரத்தில் எப்போதும் தெரியும் அந்த ஒளியைப் பார்த்து ஓடலாம். நடந்ததெல்லாம் நன்மைக்கே, நடக்கப்போவதும் நன்மைக்கே என்ற நம்பிக்கை வரிகளைத் தாங்கிய கண்களுக்கு மட்டுமே அந்த ஒளி தெரியும். அது மிக உயரிய மனோபாவம் சம்பந்தப்பட்டது. எல்லா நலன்களையும், வளங்களையும், நிலைத்த சிரிப்பையும், நீடித்த ஆயுளையும் தரும் ஒளி அது.

நமக்கு எது வேண்டும் என்று நாம் தீர்மானிப்போம். நம் உணர்வுகளைச் சிறுமைப்படுத்தும் விஷயங்களை சவால்களாகப் பார்க்கும், சமாளிக்கும் திறனை, உறுதியை வளர்த்துக் கொள்வோம். இடைவிடாது கற்றுக்கொள்வோம். கற்றுக்கொடுப்போம். இழந்தவைகளை மீட்டெடுப்பதற்கான சந்தர்ப்பங்களை உருவாக்க முயற்சி செய்வோம். நம்மால் அடுத்தவர்க்கு ஏற்பட்ட காயங்களுக்கு முடிந்தால் மருந்திடுவோம். நமக்கேற்பட்ட காயங்களை மறந்திடுவோம். திறமைகளைத் திரும்பக் கொணர்வோம்.

நாம் உருவாக்கிய, நம்மை உருவாக்கிய சமூகத்திற்கு நம்மாலான துரும்பைக் கிள்ளிப்போடுவோம். மனோபாவமே வாழ்வில் எல்லாம் என்பதை தாரக மந்திரமாக்கிக் கொள்வோம். எதுவும் அடைய முடியா உயரமல்ல என்பதை எப்போதும் நினைவு கொள்வோம். செவ்வகக் கருவித் திரைகள் மூலம் மனிதர்களைத் தேடாமல் நேரில் சென்று கைகுலுக்க முயற்சி செய்வோம். நம் வாழ்வை எந்த விதத்திலாவது அர்த்தப்படுத்திவிட முடியாதா என்ற கேள்வியை புத்தாண்டில் புதிதாய் முன்வைப்போம். அதற்கான பதிலை மித மிஞ்சிய நம்பிக்கையுடன் கண்டறிய முயற்சி செய்வோம்.

நம்பிக்கைகளைக் கொண்டு நமக்கான உலகத்தை இந்தப் புத்தாண்டில் நிர்மாணிக்க நினைப்போம். நமது நம்பிக்கைகள் நமக்கானவை. அவை உறுதியானதாக இருக்கட்டும். இந்தப் புது வருடத்தில் திறக்கப்படாத மாயக் கதவுகளையும் அது தட்டித் திறக்கட்டும். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்!

கடல்

சத்யராஜ்குமார்

img_3605

போன வருஷம் இந்நேரம் ஃப்ளோரிடாவில் இருந்தேன். கீ வெஸ்ட் என்ற இடம். இது அமெரிக்காவின் ராமேஸ்வரம். அதாவது தென் கோடி முனை. படு அழகான கடல் பிரதேசம். கேளிக்கை விடுதிகளும் உணவகங்களுமாலான நகரம். இரவு நேரம் பகல் போல உயிர் பெற்றியங்கும். அங்கே மைல் ஜீரோ என்ற இடத்திலிருந்து ஜஸ்ட் தொண்ணூறு மைல் தொலைவில் உள்ளது க்யூபா.

அந்த தீபகற்பத்தைச் சுற்றிச் சுற்றிக் கடல் நீர். எங்கே திரும்பினாலும் அலைகளும், தொடுவானமும்.

ஸ்டீம் போட் வாடகைக்குக் கிடைக்கும். சற்றே பெரிய படகுகளை ஓட்டிச் செல்ல கேப்டனோடு புக் செய்யலாம். கடலில் போட்டிங் போவதும், நடுக்கடலில் ஆழம் குறைவான பகுதிகளைக் கண்டறிந்து படகை நங்கூரமிட்டு நிறுத்தி கீழே இறங்கி நீரில் விளையாடுவதும் த்ரில்லிங் அனுபவமாயிருக்கும்.

பங்கீ ஜம்ப், ரோலர் கோஸ்டர் போல எல்லாம் சாகசம் போலத் தெரியாவிட்டாலும் எல்லா த்ரில்லிங்குமே எந்த விபரீதமும் நிகழாத வரைக்கும் மனம் குதூகலித்து மகிழும்.

நாங்கள் குழந்தைகளையும் சேர்த்து கிட்டத்தட்ட பதினைந்து பேர் இருந்தோம். ஆகவே கேப்டனோடு ஒரு பெரிய படகை புக் செய்ய விரும்பினோம். முந்தைய இரவு சில நிறுவனங்களைத் தொடர்பு கொண்ட போது – மறுநாள் வானிலை சரியில்லை என்பதால் போட் வாடகைக்கு விடப் போவதில்லை என்று மறுத்து விட்டார்கள்.

மதியத்துக்கு மேல் வானிலை நன்றாக இருப்பதாகப்பட்டதால் டைரக்டரி பார்த்து ஒவ்வொரு நிறுவனமாய் முயற்சி செய்து கொண்டே இருந்தோம். எல்லோரும் கிளிப்பிள்ளை போல ஒருவர் சொன்னதையே மற்றவரும் சொன்னார்கள். தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்யனாய் கடைசியில் ஒரு நிறுவனத்தில் விசைப் படகு புக் பண்ணி விட்டோம். எல்லோரும் சொல்வது போல நாளை வானிலை கொஞ்சம் சரியில்லைதான். ஆனால் பதினோரு மணிக்கு மேல் கடலில் செல்வதாயிருந்தால் கொஞ்சம் நிலைமை சரியாயிருக்கும் என்று சொல்லி படகை புக் செய்து தந்தார்கள்.

எங்களுக்கு அப்பாடா என்றிருந்தது. எங்கே இவ்வளவு தூரம் வந்து கடலில் போட்டிங் செல்லாமல் திரும்ப வேண்டியிருக்குமோ என்ற கவலை அகன்று ஹோட்டலில் நிம்மதியாகத் தூங்கினோம்.

மறுநாள் உற்சாகமாய்க் கிளம்பிக் கொண்டிருக்கும்போது படகுக் கம்பெனியிலிருந்து போன் வந்தது. வானிலை சரி இல்லாததால் கேப்டன் வர மறுத்து விட்டார் என்று சொன்னார்கள். எங்களுக்கு ரொம்ப ஏமாற்றமாயிருந்தது. எங்கள் ஏமாற்றத்தைப் புரிந்து கொண்டவர்களாக மேலும் சொன்னார்கள். கேப்டன்தான் வர மறுத்து விட்டார். நீங்களே போட் ஓட்டிக் கொண்டு செல்வதாக இருந்தால் படகை வாடகைக்கு விடுவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை என்றார்கள்.

படகுச் சவாரி செய்து நடுக்கடலில் நங்கூரமிட்டு விளையாடி விட்டு வராமல் எங்களுக்கு ஜென்ம சாபல்யம் கிடைக்காது போலிருந்தது. நாங்களே படகை ஓட்டிக் கொள்கிறோம் என்று சொல்லி விட்டோம். எங்களில் ஒருவர் முன்னர் அந்தப் பகுதியில் வசித்தவர். வாரா வாரம் மோட்டார் படகுச் சவாரி செய்வது அவர் வழக்கம். ஆகவே அவர் இருக்க பயமேன்.

சுமார் பதினொண்ணேமுக்காலுக்கு அங்கே போய் விட்டோம். கடற்கரையை ஒட்டிய ஒரு ஹோட்டலுக்குப் பின்னால் இருந்தது அந்த போட் கம்பெனி. முதலில் எங்கள் எல்லாரிடமும் ஒரு படிவத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டார்கள். அதாவது கம்பெனி சார்பாக நியமிக்கப்பட்டிருந்த அந்த அழகான பெண் சிப்பந்தி ப்ளூ பெர்ரி குரலால் படிவத்தில் எழுதியிருந்ததை விளக்கி கையெழுத்து வாங்கிக் கொண்டாள்.

எங்கள் சுய புத்தியின் பேரில், சொந்தப் பொறுப்பில் இந்தப் படகுச் சவாரி செய்கிறோம். இதனால் ஏற்படும் உடமை இழப்பு முதல் உயிர் இழப்பு வரை எதற்குமே கம்பேனி பொறுப்பேற்காது என்பதே அந்தப் படிவத்தின் சாராம்சம். குழந்தைகளுக்காக பெற்றோர் கையெழுத்திட்டோம்.

ஒரு கேளிக்கை மனநிலையில் இதெல்லாம் மனதில் ஒட்டுவதில்லை. நாங்கள் பாட்டுக்கு மென்பொருள் தரவிறக்கும் முன்பு அக்ரீ அக்ரீ என்று குத்துவோமே அப்படி கையெழுத்தைப் போட்டுத் தள்ளிக் கொண்டிருந்தோம்.

அந்தப் பெண் ஆளுக்கொரு லைஃப் ஜாக்கெட் எடுத்துக் கொடுத்தாள். நானும், சிலரும் நீச்சல் தெரியும் என்று அதை வாங்க மறுத்து விட்டோம். அவள் எல்லா ஜாக்கெட்டையும் ஒரு ஓரமாய்ப் போட்டு விட்டு – உங்கள் இஷ்டம், வேண்டுமென்றால் எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டுப் போய் விட்டாள். அவள்தான் ஏற்கெனவே எங்களிடம் எகையெழுத்து வாங்கிக் கொண்டு விட்டாளே, இனி நாங்கள் எக்கேடு கெட்டாலும் அவளுக்கு எந்தக் கவலையும் இல்லை.

img_1438

அந்த யமஹா விசைப் படகை கொண்டு வந்து நிறுத்திய ஆசாமி ஒரு ட்ரையல் ரன் போய் எங்களில் ஓரிருவருக்கு பயிற்சி தருவதாகச் சொன்னான். எஞ்சினை ஆன் செய்வது, ஆஃப் செய்வது, பொருட்களை எங்கே வைப்பது. போன்ற பல அடிப்படை விஷயங்களைச் சொல்லிக் கொடுத்து விட்டு – “இந்த இடத்தைப் பார்த்து வெச்சுக்கங்க. சாயந்தரம் ஆறு மணிக்கு திருப்பிக் கொடுத்தால் போதும். இட்ஸ் ஆல் யுவர்ஸ்” என்றான்.

தண்ணீரில் குலுங்கும் போட்டில் பேலன்ஸ் பண்ணி ஏறி அமர சில பெண்களும், குழந்தைகளும் தடுமாறினார்கள்.

“வானிலை மோசம் என்றார்களே, இப்போது பரவாயில்லையா?” எனக்கு அவனிடம் கேட்கத் தோன்றியது.

“மழை இனி இல்லை. ஆனால் காற்று அதிகம்.” – இடது புறம் கை காண்பித்தான். “இந்தப் பக்கம் போக வேண்டாம்.”

ஃப்ளோரிடாவில் பழம் தின்று கொட்டை போட்டவரான எங்கள் ஆள் இந்தப் பக்கம் போனால்தான் தாழ்வான பகுதி வரும், அங்கே படகை நிறுத்தினால் கீழே இறங்கி விளையாட முடியும், குழந்தைகள் மனமகிழ்வார்கள் என்றார்.

சினிமா பட வில்லன்கள் போல் நடுக்கடலில் அருந்த பியர், பீட்ஸா எல்லாமும் கூட வாங்கி அடுக்கியாயிற்று.

படகு என்பது வெறும் பலகை. பலகையின் ஒரு முனையில் எஞ்சின் மாட்டியிருக்கிறது. இரண்டு பென்ச்சுகள் பொருத்தப்பட்டுள்ளன. அவ்வளவுதான். யமஹா மோட்டார் ஸ்டார்ட் ஆனது. அப்போதுதான் கவனித்தேன், நாங்கள் சிலர் லைஃப் ஜாக்கெட் வேண்டாம் என்று சொன்னதைப் பார்த்தோ என்னவோ யாருமே லைஃப் ஜாக்கெட் வாங்கிக் கொள்ளவில்லை. குழந்தைகள் உட்பட. அவர்களில் பலருக்கு நீச்சல் தெரியாது.

படகு கொஞ்ச தூரம் போனதும் ஒரு பெரிய அலை தண்ணீரை வாரியிறைத்து படகில் நுழைந்து வழிந்து ஓடியது. பழம் தின்றவர் அப்படித்தான் இருக்கும் என்றார். ஏதோ  ரோலர் கோஸ்டர் ரைடு போல எண்ணி ஒவ்வொரு முறை அலை வந்து படகு முழுக்கத் தண்ணீரை இறைக்கும்போதும் ஓ வென கத்தி மகிழ்ந்தார்கள்.

நாங்கள் புறப்பட்ட இடம் புள்ளியாகி மறைந்து விட்டது. நாலாபுறமும் அசைந்தாடும் கன்னங்கரேல் தண்ணீர் தவிர வேறொன்றும் தெரியவில்லை.

போகப் போக அடுத்தடுத்து இடைவெளி இல்லாமல் பெரிசு பெரிசாக வேக வேகமாக அலைகள் வந்து தூக்கித் தூக்கிப் போட ஆரம்பித்தன. படகின் ஆட்டம் ரொம்ப ஜாஸ்தியானது. இன்னொரு பேரலையில் சிலரின் செருப்புகள் கழண்டு  கடலோடு கலந்தன. பெட்டியில் வைத்திருந்த பீட்ஸா எல்லாம் நனைந்து நமுத்துப்போன அப்பளம் போலானது. குழந்தைகள் வீறிட்டழ ஆரம்பித்தார்கள்.

இதைத்தான் வானிலை சரியில்லை என்று சொன்னார்களா? இதனால்தான் படகுக் கம்பெனிகள் பலர் வாடகைக்கு விட மறுத்தார்களா?

எல்லோர் முகமும்  சற்றே வெளிறத் துவங்கியது. பருமனான நபர்களை இடம் மாறி அமரச் சொல்லி ஜோக் அடித்துப் பார்த்தார் ஒரு நண்பர். யாருக்கும் சிரிப்பு வரவில்லை.

அதே நேரம் அடித்த இன்னொரு மிகப் பெரிய அலை படகை ஏறக்குறைய புரட்டிப் போட்டது. ஒருபக்கமாய் சரிந்து ஆட்களை தூக்கி வீசியது. ஒருவரை ஒருவர் இறுக்கமாய்ப் பற்றிக் கொண்டார்கள். அவ்வளவுதான் கவிழ்ந்தோம் என்று நினைத்தேன். சற்று நேரம் மிதக்கும் அளவுக்கு எனக்கு நீச்சல் தெரியும். ஆனால் லைஃப் ஜாக்கெட் அணியாத நீச்சல் தெரியாத பலரை எப்படிக் காப்பாற்றுவது? சுறா மீன்கள் இருக்குமா? அந்த பய கணத்திலும் பல்வேறு யோசனைகள்.

ஆனால் படகை ஓட்டும் பழம் தின்று கொட்டை போட்ட நண்பர் கொஞ்சமும் கலவரம் அடையாமல் அல்லது கலவரத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல் லாகவமாக அந்தப் பெரிய அலையைக் கையாண்டு கவிழ இருந்த படகை நேராக்கி விட்டார்.

“இன்னும் கொஞ்ச தூரம் போனா அலைகள் அடங்கிரும். அந்த இடம் ரொம்ப நல்லா இருக்கும்.” என்றார்.

“போதும். திரும்பிப் போயிடலாம்.” என்று எல்லோரும் சத்தம் போட ஆரம்பித்தனர். அலைகளின் கோரத் தாண்டவத்துடன் போராடி படகைத் திருப்புவதே பெரும்பாடாக இருந்தது. ஒரு வழியாய்த் திருப்பி திக்கு திசையை உணர்ந்து புறப்பட்ட இடத்துக்கு வந்து சேர்ந்த பின்புதான் பலருக்கு உயிரே வந்தது.

ஏற்கெனவே எழுதி வாங்கிக் கொண்ட படகுக் கம்பெனி பேரழகி பேயறைந்தது போலிருந்த எங்களைப் பற்றிய எந்தப் பிரக்ஞையுமின்றி – “என்ன போட்ல சீட்டெல்லாம் கழண்டிருக்கு?” என்றாள்.

இதைப் போன்ற கட்டுரைகள் எழுதுவதற்காகவாவது முட்டாள்த்தனமான முடிவுகளை சில சமயம் எடுக்க வேண்டும்.

ஆதவனின் ‘கார்த்திக்’

வெ. சுரேஷ்

வயதடைதல் (coming of Age) என்பதும், மந்தை திரும்புதல் (Returning to the fold) என்பதும் மனித வாழ்வின் முக்கியமான கட்டங்கள். எப்போது இவை இரண்டும் நிகழ்கிறது என்று குறிப்பிட்டு சொல்லும்படியாக அல்லாமல் ஒரு தொடர் நிகழ்வாக பலரது  வாழ்வில் அமைவதுண்டு. ஆனால், சிலர் வாழ்வில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான சம்பவங்கள் இவைக்கு காரணமாக நிகழ்வதுமுண்டு. இவை இரண்டுமே இருபதாம் நூற்றாண்டு நவீன உலகுக்குரிய இளைஞர்களின் பிரச்சினைகளில் முக்கியமானவையாக இருந்தன என்றே சொல்ல வேண்டும்.

சுதந்திர போராட்டத்தின் லட்சியவாத அலை அடங்கி, சுடும் யதார்த்தம் 70களில் பரவியது. சுதந்திர அரசு மரபார்ந்த கல்வி மற்றும் தொழில்முறைகளில் கவனம் செலுத்துவதற்கு மாறாக, தொழில்மயமான ஒரு வலுவான தேசத்தை உருவாக்க முற்பட்டது. ஆனால் தொழில்மயப்பட்ட சமூகத்துக்கு தேவைப்படும் ப்ளூ காலர் பணிகளில் பொருந்தக்கூடிய தொழிற்கல்விக்கு முக்கியத்துவம் அளிக்காமல், காலனிய ஆட்சியின் தொடர்ச்சியான ஒயிட் காலர் பணிகளுக்கு ஆயத்தப்படுத்தும் குமாஸ்தா கல்விமுறையே தொடர்ந்தது. கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரித்து அவற்றிலிருந்து வெளிவரும் பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. ஆனால் கணக்கு எழுதுவதையும் குறிப்புகள் எடுப்பதையும் தவிர பிற எந்த தொழிலுக்கும் தகுதியில்லாதவர்களாக இவர்கள் இருந்ததால் வேலையில்லாத்  திண்டாட்டம் கடுமையானது. அரசே முதன்மையான வேலை வாய்ப்பு தரக்கூடிய அமைப்பாக இருந்த காலகட்டத்தில், அதுவும் நவீன கல்வி உருவாக்கிய அந்நியத்தன்மை வாய்ந்த, (அரசு) வேலைகளின் யந்திரத்தனத்திலும் சலிப்பு, அந்த வேலைகளும் கிடைக்காத இளைஞர்களின் கோபம் ஆகியவை தீவிரமாக வெளிப்படத் தொடங்கின. மேலும், இளைஞர்கள் தங்களது தனித்தன்மை  (Individuality) என்பதை நிறுவவும் முனைந்த காலகட்டமாக அது அமைந்தது.

ஆதவனின் புனைவுலகம், எப்போதும் மேலே சொன்ன பிரச்சினைகளைத் தன்னகத்தே கொண்டது.  மனிதர்களின் தனித்தன்மையை, அவர்கள் அதனை இழக்க நேரும் பின்னணியை, சோகத்தை, விரிவாகச் சொல்லக்கூடியது. மந்தையில் சேராதிருத்தல், தனித்து நின்று தன் அடையாளத்தை பேணுதல், மரபிலிருந்து விலகி நிற்றல் என்பவை அவரது நிறைய கதாபாத்திரங்களின் பொது அம்சங்கள். வயதடைதல் என்ற நிகழ்வின் போக்குக்கு உதாரண படைப்பாக அவரது “என் பெயர் ராமசேஷன்” நாவலைச் சொல்லலாம் என்றால், மந்தை திரும்புதலை மிகத் துல்லியமாக எழுத்தில் கொண்டுவந்த அவரது சிறுகதை (சற்றே நீளமான) “கார்த்திக்“.

இருபதாம் நூற்றாண்டின் கடைசி காற்பகுதியில் வாழும் நவீன இளைஞன் கார்த்திக், ஒரே சமயத்தில் மரபில் இருந்து விலகி அறிவார்ந்த நோக்கினால், மரபு தன் மீது சுமத்தும் மூடப்பழக்கங்களை களையவும், அதே சமயத்தில், காதல் வயப்பட்டாலும் தன்  தனித்தன்மையை அதில் இழக்காமல் இருக்கவும் விழைபவன். ஒரே சமயத்தில், பெற்றோரின் மரபு அளிக்கும் சுமைகளிலிருந்தும் காதல் மனைவியின் நவீன நோக்கு அளிக்கும் தளையிலிருந்தும் விலகி வாழும் விழைவுடன் தன் தனித்துவத்தைப் பேணுவதில் உறுதியாக இருக்கவும் முனைபவன். தன்னைச் சுற்றியிருக்கும் மற்றவர்களைப் போலாகாமல் இருப்பதில் கவனமாக இருப்பவன். இந்த நிலைப்பாடுகளிலிருந்து மெல்ல நழுவி அவனும் மற்றவர்களை போல, யாரையெல்லாம் தவிர்க்க நினைக்கிறானோ அவர்களை போலவே,  ஆவதை விவரிப்பதுதான் ‘கார்த்திக்‘.

என் போன்ற 70கள் 80களில் வளர்ந்த, மரபிலிருந்து துண்டித்துக் கொண்டு சாதி மத அடையாளமற்ற வாழ்க்கையை, அல்லது மிக மேலோட்டமாகவே சாதி மத அடையாளத்தைப் பேணும் வாழ்வை வாழ்பவர்களுக்கு, கார்த்திக் சிறுகதை அடிக்கடி நினைவுக்கு வரும். “கார்த்திக்” சிறுகதையை நினைவுபடுத்தும் சம்பவங்கள் நடந்து கொண்டேயிருக்கும். அண்மையில்கூட குடும்பத்தினரின் பிரார்த்தனையை நிறைவேற்ற ஒரு கோவிலுக்குச் சென்றபோது, ஒரு சாதாரண சடங்குகூட செய்யத் தெரியாமல் தவிக்கையில்  கார்த்திக்கை நினைத்துக் கொண்டேன்.

இந்தக் கதையில், கார்த்திக் தன் மந்தைக்குத் திரும்பும் நிகழ்வு, பத்மாவுடனான காதல் திருமணத்துக்குப் பிறகே மெல்லத் தொடங்கிவிட்டாலும், அது தீர்மானகரமான திரும்புதலாக ஆவது அவனது தந்தையின் மரணத்துக்குப் பிறகுதான். அவர் இருந்தவரை கார்த்திக்கின் மகனுக்கு எல்லாமுமாக இருக்கிறார். பூஜை செய்வது, ரேடியோவில் கச்சேரி கேட்கும்போது தாளம் போடுவது என்று அவரைப் பார்த்தே அனைத்தையும் கற்றுக் கொள்கிறான் கார்த்திக்கின் பிள்ளை ரவி. திடீரென்று ஒரு நாள், கார்த்திக்கின் தந்தை இறந்து விடுகிறார். மிகப்பெரிய இழப்பு ரவிக்கு மட்டுமல்ல, கார்த்திக்குக்கும்தான். தன் வித்தியாசங்கள், தனித்தன்மைகள் என்று அவன் எண்ணியிருந்ததெல்லாம் அவர் கரும்பலகையாயிருந்து எடுத்துக் காட்டிய வெள்ளை எழுத்துக்கள்தான் என்று உணர்கிறான். அந்தக் கரும்பலகை இல்லையென்றானபின் அவனது தனித்தன்மைகள் என்னும் வெள்ளை எழுத்துக்கள், பின்னணி ஏதும் இல்லாமல் சோபை இழந்து விடுகின்றன.

ஆனால் உடனடியாக அவன் சமாளித்தாக வேண்டியது தன் மகனின் தனிமையை. தாத்தாவின் மறைவுக்குப் பின் அவர் அவனுடன் ஆடிய விளையாட்டுக்கள், பூஜை, கச்சேரி, புராணக் கதை சொல்லுதல் போன்றவைகளுக்கு அவனுக்கு ஆள் இல்லை. கார்த்திக் வேறு வழியில்லாமல் தன் தந்தையின் பாத்திரத்தை ஏற்று நடிக்க வேண்டியதாகிறது. பூஜை செய்கிறான், புராணக்கதைகளைத் தேடிப் படித்து மகனுக்குச் சொல்கிறான், கச்சேரி கேட்கிறான். கொஞ்சம் கொஞ்சமாக தான் யாராக இல்லாமல் இருக்க விழைந்தானோ அவராகவே மாறுகிறான்.

சிலகாலம் கழித்து, சுற்றியிருக்கும் பகுதிகளில் இருக்கும் ரவியின் நண்பர்களான சிறுவர்கள், கார்த்திக்கை கார்த்திக் மாமா என்று அழைக்கின்றனர். ஒருநாள், ரவிக்காக பூஜை அறையில் உட்கார்ந்து ரவியை அழைக்கும்போது தெரிகிறது, ரவி அவனையொத்த பையன்களுடன் வெளியே  விளையாடப் போயிருப்பது. மனைவி பத்மா அவனை அழைத்து வரட்டுமா என்கிறாள். வெளியே வந்து எட்டிப்பார்க்கும் கார்த்திக், ரவியில் கார்த்திக்கைப் பார்க்கிறான்.  திரும்பி வந்து பத்மாவிடம், அவனைக் கூப்பிட வேண்டாம், அவன் விளையாடட்டும், நாம் செய்வோம் பூஜையை என்கிறான் கார்த்திக்- இல்லை, கார்த்திக் மாமா. பக்கத்தில் பாந்தமான பத்மா மாமி. இப்போது ரவிதான் கார்த்திக்.  கார்த்திக்கின் மந்தை திரும்புதல் முழுமையடைகிறது.

ஒரு பார்வையில், பெற்றோரின் மரபான வாழ்க்கையுடன் முரண்பட்டு பின் அத்தகைய ஒரு வாழ்க்கைக்கே திரும்புவதே கதையின் முக்கிய பேசுபொருள் என்றாலும், கார்த்திக்கின் தனித்தன்மை சார்ந்த தன்னுணர்வு அவனது யுகம் சார்ந்த நவீனப் பெண்ணான அவன் மனைவியுடனும்கூட முழுவதுமாக ஒத்துப்போக முடியாத சூழலை உருவாக்குகிறது. அவளுடைய முற்போக்கு அவனை சங்கடத்துக்குள்ளாக்குகிறது. மனைவி, இவனது பெற்றோருடன் மரபார்ந்த விஷயங்களில் கொள்ளும் நெருக்கம் கார்த்திக்கை அந்நியப்படுத்துகிறது. அதே சமயம் அவள் கார்த்திக்குடன் நெருங்கிக் கொள்ள உதவும நவீன உலகு சார்ந்த கருத்துக்களும் அவனது தனித்தன்மையை குலைத்து பத்திரமற்ற மனநிலையை உருவாக்குவதையும் ஆதவன் வெகு அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார். இப்படி இரண்டு தளங்களில் பிரயாணிக்கிறது கதை.

நவீன வாழ்க்கை உருவாக்கும் அடையாளச் சிக்கல் மிகுந்த, முன்னே போவதா, பின்னே போவதா, இருந்த நிலையில் இருப்பதா என்ற குழப்பமான ஆண்-மனநிலைக்கு ஒரு மிகச் சிறந்த உதாரணமாகத் திகழ்வது ஆதவனின் “கார்த்திக்‘ – கார்த்திக் மாமா என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும்.

ஆதவனின் ‘அந்தி’

வெ. சுரேஷ்

சிறு வயதில பாட்டி தாத்தா வீட்டுக்குப் போகும்போதெல்லாம் அவர்களின் சண்டையை ரசிப்பதில் பெரும் ஆனந்தம் அடைவதுண்டு.  அவை, மேசை மின்விசிறியை யார் பக்கம் திருப்பி வைப்பது, யாருக்கு வாய் குழறல்,  மறதி, கை  நடுக்கம் அதிகம் போன்ற தீராத விவாதங்கள். இறுதியில் எப்போதும் பாட்டிதான் ஜெயிப்பார். தாத்தா சில சமயம் பெருந்தன்மையுடனும், பல சமயம் அசட்டுச் சிரிப்புடனும் தோல்வியை ஒப்புக் கொள்வார். அதில் ஒரு குறிப்பிட்ட சம்பவம் என் குடும்பத்தில் பிரபலமான,  குறிப்பாக என் தம்பிக்கு மிகவும் பிடித்த ஒரு கதை. அவனை விட்டுவிட்டு நானும் என் அண்ணனும் தாத்தா பாட்டியுடன் மதுரை சென்று  வந்தபோது, தாத்தா எங்களுக்கு அங்கு ஒரு  ஹோட்டலின் இரண்டாவது மாடியில் ரூம் போட்டு விட்டதனால் பாட்டி அவரை, ‘திட்டிண்டு திட்டிண்டு’ படி ஏறினார் என்ற அந்தப் பகுதியை கேட்கும்போதெல்லாம், என் தம்பி பரவசம் அடைவான். அவனை விட்டுவிட்டுப் போன தாத்தா நல்ல திட்டு வாங்குகிறாரே! தாத்தா அந்தத் திட்டுகளை ரசித்து ஏற்றுக் கொண்டார் என்பதே என் நினைவு.

நான் பார்த்த இவர்கள் இப்படித்தான் இருந்தார்கள், ஆனால் தாத்தா பாட்டியைப் பற்றிய பழைய கதைகள் முற்றிலும் வேறானவை. தாத்தா ஒரு பயங்கர முன்கோபி, பாட்டி அவரைப் பார்த்தாலே நடுங்குவார். இருவரும் ஒருவருக்கொருவர் நேராகப் பேசிக்கொண்டுகூட என் அம்மா, சித்திகள், மாமாக்கள் பார்த்ததில்லை. தாத்தாவுடன் பேசுவதென்றால், மூத்தமகளான என் தாயார், அல்லது கடைக் குட்டியான எங்கள் கடைசி மாமா இவர்களால்தான் முடியும். வார்த்தைகள் அதிகமற்ற, ஹூம்,ம்ஹூம், என்பது போன்ற உருமல்கள்தான். எப்போதும் வாயில் வெற்றிலை, கையில் செல்லம், இல்லையென்றால் புத்தகம். Sslc சான்றிதழ் வாங்க பள்ளிக்கு வரும்படி என் தாயார் அழைத்தபோது, “நீ Sslc முடிச்சிட்டயா?” என்று கேட்குமளவு வீட்டின் மேல் கவனம்.அவரா இவர்? என்று நாங்கள் சிறுவர்கள் நம்பமாட்டோம்.

அவர்களின் ஏறத்தாழ, 50 வருட தாம்பத்திய வாழ்வின் இறுதி ஐந்தாறு வருடங்களே நாங்கள் பார்த்தது. நான் பார்த்த தாத்தா பாட்டியிடம் நிகழ்ந்திருந்த மாற்றங்கள்  (என் பிற உறவினர்கள் மூலமாக நான் தெரிந்து கொண்டிருந்ததை வைத்துப் பார்க்கும்போது) எத்தகையவை, அவற்றுக்கு என்ன காரணங்கள் இருக்கலாம் என நான் புரிந்து  கொள்ள தொடங்கியது, என்  இருபதுகளில் ஆதவனின் ‘அந்தி‘ சிறுகதை  படித்தபின்தான் .

அந்தி‘ சிறுகதையின் கதைசொல்லி, தன் மனைவியின் மிக வயதான, தங்கள் கல்யாணத்துக்கு கூட வர இயலாத, தாத்தா பாட்டியின் வீட்டுக்கு  மனைவியுடன் சென்று வரும் நிகழ்விலும், பின்னர் அந்தப் பாட்டியின் மரணச்  செய்தியைக் கேள்விப்பட்டு அவர்களை பற்றி நினைத்துக் கொள்வதிலும் விரிகிறது. இளம் தம்பதியினர், தாம்பத்திய வாழ்வின் துவக்கத்தில் இருப்பவர்கள், அதன் அந்திப் பொழுதில் இருப்பவர்களைச் சந்திக்கின்றனர் என்பது இந்தக் கதையின் நெகிழ்ச்சியான பின்புலம். கதையும், இளம் மாப்பிள்ளையின் பார்வையில்தான் சொல்லப்படுகிறது. அதன் முக்கிய பகுதி அவர்களின் தாத்தா பாட்டி வீட்டு விஜயம். தாத்தாவைப் பற்றி கதைசொல்லி கேள்விப்பட்டிருந்தது எல்லாம் அவர் ரயில்வேயில் ஸ்டோர்ஸ்  சூப்பிரென்டெண்டாக இருந்து ஓய்வு பெற்றார் என்பதுதான் (அங்கு ஒரு பஞ்ச் வைக்கிறார் ஆதவன்,அது சூப்பிரென்டெண்டுகளுக்குக் கூட  சுய மரியாதையோடு இருந்த காலம் என்று). கூடவே, அவர் அபாரமான ஆங்கில அறிவு கொண்டவர். ஆபீஸையே முதல் மனைவியாகக்  கொண்டவர்.  கண்டிப்புக்கும், கறார்த்தன்மைக்கும்,முன்கோபத்துக்கும் பேர் போனவர்; (என் தாத்தாவைப் போலவே) பாட்டி பொறுமையின் சொரூபம், தாத்தாவின் எந்த உதவியும் இல்லாமல், பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கியவர், தாத்தா முன் ஒரு சொல்லெடுத்து அறியாதவள்என்ற புறத்தகவல்கள்தான்.

ஆனால் இங்கு அவர்  காணும் காட்சியே முற்றிலும் வேறானது. பாட்டி அதிகம் பேசுவதில்லை. தாத்தா சமையல் அறை நிபுணராக இருக்கிறார். காபி போடுவது அவர்தான். ஓயாமல் சமையல் அறையிலும் மேடையிலும் வேலைகளை சுலபமாக்குவதற்கும், சமையலைறைப் பாத்திரங்களை இலகுவாக அலம்புவது குறித்தும் தான் செய்திருக்கும் மாற்றங்களையுமே  பேசிக் கொண்டிருக்கிறார். அந்த ரயில்வே ஸ்டோர்ஸ் சூப்பிரென்டெண்டுஅங்கு இல்லவே இல்லை. ஆனால், அவர் ஒரு ஐந்து நிமிடம் பால் வாங்க வெளியே சென்றிருக்கும் சமயம், பாட்டி கதைசொல்லியிடம், திடீரென்று அக்ஷரம் பிசகாத அழகிய ஆங்கிலத்தில் பழங்காலத்து ரயில்வே விஷயங்களை பேசத் துவங்குகிறார். தாத்தா உள்ளே வந்தவுடன் அந்தப் பேச்சு அடங்கிவிடுகிறது. இப்படி ஒரு பகல் நேரம் அங்கே இருந்துவிட்ட, குழம்பிய மனநிலையுடன் இன்னொரு உறவினர் வீட்டுக்கு செல்கின்றனர் இவர்கள். அங்குதான் தெரிகிறது அவர்களுக்கு, பாட்டிக்கு சில காலமாகவே சித்த சுவாதினம் இல்லையென்றும் திடீர் திடீரென்று இப்படி ஆங்கிலப் பேச்சில் புகுந்து விளையாடுவதுண்டு என்பதும். அப்படியென்றால் அவர் தன்னிடம் பேசியதெல்லாம் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் தாத்தா பேசிய ஆங்கிலத்தின் எதிரொலிகளா, என்று பிரமிப்பில் ஆழ்கிறார் கதைசொல்லி. பிரமிப்பு  விலகாத மனநிலையுடன் ஊர் திரும்புகின்றனர் புதுமணத் தம்பதியினர். சில மாதங்கள் கழித்து, பாட்டி இறந்த செயதி வருகிறது. வருத்தத்தில் மூழ்கும் கதைசொல்லி, தான் அவர்களது வீட்டில் கண்ட காட்சிகளுக்கு அர்த்தம் தேடுவதில் முனைகிறார்.

மிக நீண்ட காலம் மணவாழ்க்கையில் இணைந்து வாழும் தம்பதியினர், ஒருவரது பிரிவை இன்னொருவர் எப்படித் தாங்கிக் கொள்கிறார்கள்? நான் என் தாத்தா பாட்டியிடம் கண்டதும், இங்கு இந்தக் கதைசொல்லி தன் மனைவியின் தாத்தா பாட்டியின் நடவடிக்கைகளிலும்  கண்டதும்  ஒரு role reversal என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. ஒருவரது இழப்பை இன்னொருவர் தாங்குவதற்கு மிகச் சிறந்த உபாயமாக அவர்களது ஆழ்மனம் தங்கள் துணையின் பாத்திரங்களைத் தான் ஏற்று நடிக்கத்  தொடங்குகிறது. இங்கே, பாட்டியின் பாத்திரத்தை தாத்தா ஏற்று நடிப்பது, பிரக்ஞாபூர்வமாக- ஆனால் பாட்டி நடிப்பதில்லை. அவர் சித்தம் தாத்தா அருகிலில்லாதபோது அவராகவே மாறி  விடுகிறது. என்றோ எப்போதோ கேட்ட ஆங்கில வாக்கியங்கள் அவரை அறியாமல் அவரது வாயிலிருந்து வந்து கொண்டேயிருக்கின்றன. இதை அன்றாடம் நாம் நம் குடும்பங்களில் காண முடியும்- குறிப்பாக கணவன் – மனைவி இருவர் மட்டுமாய் இணைந்து வாழ்பவர்களின் பேச்சே மாறிவிடுகிறது, அவர்களது குரல்களின் ஏற்ற இறக்கங்கள்கூட ஒருவரையொருவர் பிரதிபலிப்பதாய் இருக்கிறது. என் தாத்தாவைப் போலவே சர்வாதிகாரியாக தம் வாழ்வின் பெரும்பகுதியைக் கழித்த ஆண்கள் தம் இறுதிக் காலத்தில் முழுக்க முழுக்க மனைவிகளிடம் முற்றடங்குவதும், அடங்கி போதலே சுபாவம்  என்றிருந்த பெண்கள் ஒரு கட்டத்தில் தம் கணவர்களை வழிநடத்துபவர்களாகவும் மாறி  இருப்பதைக் காண முடியும்.

முதுமையையும் பிரிவையும் மனித மனம் எதிர்கொள்ளும் விதத்தை இதை விட அழகாகச் சொன்ன ஒரு கதையை நான் தமிழில்  படித்ததில்லை. ஆர். சூடாமணியின் ஒரு கதையே ஆதவனின் இந்தக் கதைக்குப் பின் என் நினைவில் வருகிறது. முதுமையின் துயர், எதிரில் நீண்டு நெருங்கும் பிரிவின்  நிழல்  இவையெல்லாம் தமிழ் சிறுகதை உலகில் அதிகம் பதிவானதில்லை. வழக்கம் போல ஆழ்மனதின் நினைவோட்டங்களை உரையாடல்களாக மாற்றுவதில் ஆதவனுக்கிருந்த நுட்பமான திறமை வியக்க வைக்கிறது. கதைசொல்லி, தனக்கு ஏன் முதியவர்களை எப்போதும்  பிடிக்கிறது என்று தன்னைத்தானே ஆராய்ந்து கொள்ளும் இடங்களில் ஆதவனின் கசந்த நகைச்சுவை மிளிர்கிறது. எல்லாவற்றுக்கும் மேலே, இந்த கதையை இப்படி முடிக்கிறார்-

“பாட்டி இறந்த செய்தியைக் கேட்டவுடன், சட்டென்று தாத்தா பாத்திரங்களைத் தேய்த்துக் கவிழ்த்த்துக் கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது. முன்னை விடவும் தீவிரமாக அவர் சதா சமையலைறையில் முனைந்து கிடைக்கக் கூடுமோ என்று தோன்றுகிறது. இன்னொன்றும் தோன்றுகிறது, அவர் ஆங்கிலம் பேசுவதை நிறுத்தியிருக்கக் கூடும்.”

         இக்கதையை படித்த பிறகு, நான் பார்க்கும் ஒவ்வொரு முதிய தம்பதியினரிடமும் இந்தக் கதையின் தாத்தா பாட்டியின் சாயல்களைக் கண்டு கொண்டேயிருக்கிறேன். என் தந்தை தனது  முதுமையில் எப்படி இருந்திருப்பார் என்றறிய சந்தர்ப்பம் அமையவில்லை. ஆனால் இன்று மேலே சொன்ன  என் தாத்தா பாட்டி என் நினைவில் எழும்போதெல்லாம் முதுமையில் இருந்திருக்கக்கூடிய என் தந்தையின் நடவடிக்கைகளை ஊகிப்பது சுலபம் என்றே தோன்றுகிறது. கூடவே எனது முதுமையும். அதுவே ஆதவனின் இந்தக் கதை நம் மீது செலுத்தும் ஆழ்ந்த பாதிப்பின் அடையாளம். அவரது கலையின் வெற்றி.

மேலும், என்னவொரு பொருத்தமான தலைப்பு.

‘அகந்தை’ – ஆதவன் சிறுகதை குறித்து

வெ.சுரேஷ்

“ஒரு கலைஞன் தன் சாதனைகளின் கூறுகளை உணர்ந்து, அது குறித்து நியாயமான கர்வம் கொள்வதில் தவறில்லைதான். அதே சமயத்தில், தன் சாதனையின் பரிமாணங்கள் குறித்த பூதாகரமான பிரக்ஞையும் அவனுக்கு நல்லதில்லை. இந்தப் பிரக்ஞையின் பளு இல்லாத வரையில்தான் பணிவுடன், யதேச்சையான, இளமையான, ஒரு மனப்பாங்குடன் அவன் தன் கலையைப் பயிலவும் பேணவும் முடியும்”

மேற்காணும் வரிகள் ஆதவனின் ‘அகந்தை,’ சிறுகதையில் வருபவை. ஒரு கலைஞன் பயிலும் கலை, ரசிகர்கள் அவனைக் ஏற்றுக் கொள்வதில் முழுமை அடைகிறது. ஆனால் அந்தக் கலைஞன் எம்மாதிரியான பாராட்டுகளை விரும்பி ஏற்கிறான்? தன் கலையின் எல்லா நுணுக்கங்களையும் புரிந்து கொண்ட ஞானம் மிக்க சிலரின் பாராட்டா, அல்லது அவனது பிராபல்யத்தின் காரணமாக ஒரு மந்தைத்தனத்தோடு குவிக்கப்படும் வெற்றுப் புகழ் மொழிகளா? அல்லது இரண்டுமே ஒரு நல்ல கலைஞனுக்குத் தேவைப்படுமோ?

இந்தக் கேள்விதான் ஆதவனின் ‘அகந்தை,’ சிறுகதையின் அடிப்படை  என்று சொல்லலாம். மத்திய அரசு அளிக்கும் விருது ஒன்றினைப் பெற்றது முன்னிட்டு புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகர் வெங்கடேஸ்வரனுக்கு பாராட்டு விழா. அவரது பிரதான சிஷ்யன் கல்யாணமும் ஒரு பேச்சாளர். தன்  முறை வரும்போது, அவரின் கலையைப் பற்றிய தன்  நுணுக்கமான அவதானிப்புகளை- அவர் பாடும் முறையின் தனித்துவத்தை, இதுவரை எவரும் தொட்டுப் பேசியிராத சில தனித்த அம்சங்களை, விரிவாக எடுத்துரைத்துப் பாராட்டக் காத்திருக்கிறான். ஆனால் அதற்கு முன் மேடையில், அந்த ஊரின் கலெக்டர் பேசுகிறார். இசை ரசனை ஏதுமற்ற, வழக்கமான, அரசு அதிகாரிக்குரிய தோரணையோடு ஆற்றப்படும் உரை, மேலும் அதையடுத்து இன்னும் சில சமத்காரமான உள்ளீடற்ற பேச்சுக்கள் என்று போய்க்  கொண்டிருக்கிறது. இந்த வெற்று உரைகளை வெங்கடேஸ்வரன் கிண்டலாகவே அணுகி, மேடையிலிருந்தாலும் தன்னிடம் கண்ஜாடையில், குறும்புச் சிரிப்பில் அதிருப்தியைப் பகிர்ந்து கொள்வார் என்று எதிர்பார்த்திருக்கும் அவனுக்கு வெங்கடேஸ்வரன் அந்த உரைகளை ரசித்து அமர்ந்திருப்பது அதிர்ச்சியைத் தருகிறது. கடைசியில் உங்களுக்கும் இதுதான் வேண்டியிருக்கிறது என்று வெறுப்போடு  நினைத்துக் கொள்கிறான்.

அவனது முறை வரும்போது, தான் தயாரித்து வந்ததைப் பேசாமல் அவர் எப்படி எவ்வளவு எளிமையானவர், தன்னைப் போன்றவர்களின் முட்டாள்தனத்தையெல்லாம் எப்படி மன்னித்து அருள்பவர் என்றெல்லாம் ஒரு விதூஷக வேஷம் கட்டிப் பேசுகிறான். கூட்டம் ஆரவாரிக்கிறது. வெங்கடேஸ்வரன் அகந்தை கொண்டு விட்டதாகவே நினைக்கிறான். தான் அங்கு உதாசீனப்படுத்தப்பட்டதாகவும் உணர்கிறான். வெறுப்போடு வீடு திரும்பியவன், பிறகு வெங்கடேஸ்வரன்   வீட்டுக்குப் போவதையே பல நாட்களாக தவிர்க்கிறான்.

அவருக்குத் தன் வித்தையைப்  பற்றிய அகந்தையும் புகழில் ஆசையும் வந்துவிட்டதாக எண்ணிக் கொள்கிறான். அப்போது ஒருநாள் வெங்கடேஸ்வரன் பாடிய ஒரு பழைய  கச்சேரியை வானொலியில் கேட்டு மனமுருகி, தரையில் அமர்ந்து அந்த ‘ராம பக்தி சாம்ராஜ்யம்‘ கீர்த்தனையைப் பாடுகிறான். மனம் நிர்மலமானதைப் போல் இருக்கிறது.

அடுத்த நாள் அவன் அதுவரை அறியாத ஒருவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, நேற்று அவன் பாடிய கீர்த்தனையை வெகுவாகப் பாராட்டி, பாட்டில் இருந்த நுணுக்கங்களைக்  குறித்து விரிவாக உரையாடுகிறார். அவன் வீட்டின் மாடியில் குடியிருப்பவர் அவர். பின் இந்தப் பழக்கம் தொடர்கிறது. அவருக்காக இவன் பாடுகிறான். நுணுக்கமான அவரது அவதானிப்புகளுக்கு ஈடு கொடுப்பதற்காக ஒவ்வொரு நாளும் மேலும் நுணுக்கங்களுக்காக முயன்று என்று போகிறது நாட்கள்-, ஆனால் ஒரு கட்டத்தில் அவரது நுட்பமான அவதானிப்புகளும் ரசனையும் அவனுக்குச் சலிக்கத் தொடங்குகிறது.  அவரைத் தவிர்க்கத்  தொடங்குகிறான்.

அப்போதுதான் மேலே மேற்கோளில் சொன்ன அந்தச் சிந்தனை தோன்றுகிறது அவன் மனதில். அந்த ரசிகர் தனக்கு, தன்  பாடும் திறன் மீது, பூதாகாரமான ஒரு பிரக்ஞையை உருவாக்கித் தன்  கலை அப்பியாசத்துக்கு தடையாவதாகத் தோன்றும் அதே சமயம், வெங்கடேஸ்வரனின்  நினைப்பும் வருகிறது கல்யாணத்துக்கு. நுணுக்கமான ரசனை வெளிப்பாடுகளால் தன்  கலை குறித்த பூதாகரமான பிரக்ஞையை மறைக்க அல்லது தவிர்க்கத்தான் அன்று அவர் பல வெற்று உரைகளை ரசித்தாரோ? அல்லது, அவற்றை ரசிப்பது போலக்  காட்டிக் கொண்டாரோ, என்று நினைக்கும்போதே அப்படித்தான் என்று தோன்றுகிறது  அவனுக்கு.

இசையின் நுணுக்கங்களை அறியாத எளிய பாமர ரசிகர்களை ஊக்குவித்து தன்னை அவர் உதாசீனப்படுத்தியதாகக் கருதியதும் தவறோ  என  நினைக்கிறான் அவன். மாறாக, நுட்பமான ரசிகர்களின் மதிப்பீடுகளினால் தன் கலைக்கு ஏற்படும் இடையூறுகளை உணர்ந்துதான் எளிமையான ரசிகர்களை நோக்கி ஓடியிருக்கிறார் அவர் எனவும் நினைக்கிறான். மறுநாளே மனைவி குழந்தையுடன் வெங்கடேஸ்வரனைச் சந்திக்க அவர் வீட்டுக்குப் போகிறான். இப்படி முடிகிறது கதை.

ஆதவனின் பெரும்பாலான கதைகளைப் போலவே இதிலும் மனித வாழ்வின் தவிர்க்கவியலா புற காரணிகள், சம்பவங்கள் உருவாக்கும் பாதிப்பைவிட,  மனநிலைகளின்  முரண்கள் உருவாக்கும் பாதிப்புகளே அலசப்பட்டிருக்கிறது. இதில் ஒரு கலைஞன், இன்னொரு கலைஞனின் மனநிலையை தனது சுய அனுபவத்தின் மூலமாக ஏற்படும் ஒரு திறப்பின் வழியாக புரிந்து கொள்வது விவரிக்கப்படுகிறது. ஒரு கலைஞனுக்கு உவப்பளிப்பது என்ன என்ற கேள்வியும் விவாதிக்கப்படுகிறது. இன்னொரு கோணத்தில், கலை குறித்தான அவதானிப்புகள், விமரிசனங்கள் கலைஞனின் மீது ஏற்படுத்தும் பாதிப்பையும் விவாதிப்பதாகப் பார்க்கலாம். அவை பாராட்டாக இருந்தாலும், குறை கூறலாக இருந்தாலும், அதில் நுணுக்கங்கள் மேலிட மேலிட ஒரு கலைஞனுக்கு மகிழ்ச்சியைவிட, ஒருவித இறுக்கத்தையே (Discomfort) ஏற்படுத்துவதை சிலரிடத்தில் கவனித்திருக்கிறேன். முக்கியமாக, இந்தக் கதையில் வருவதைப் போல், இசைக்கலைஞர்களிடம் அதை மிகத்  தெளிவாகப் பார்க்கலாம்.

இசையமைப்பாளர் எம்.எஸ்.வி ஒரு தொலைக்காட்சி தொடரில் மிக விரிவாக நேர்காணல் செய்யப்பட்டார். அவரது இசையமைக்கும் முறையும், ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு ராகத்தை தேர்ந்தெடுக்கும் காரணத்தையும் விளக்கும்படி கேட்கப்பட்ட எந்தக் கேள்விக்கும் அவர் நேரடியாக பதில் சொல்லவேயில்லை. சற்றே  கூச்சத்துடன், அது அப்படி வந்தது அப்படி பண்ணினேன், என்பது போன்ற மிக எளிமையான ஒரு வரி பதில்களாலேயே அந்தக் கேள்விகளை எதிர்கொண்டார். கிரிக்கெட் ஆட்டத்தில்கூட, கபில்தேவ் போன்றவர்கள் தம் திறமைகளைக் குறித்த நுணுக்கமான கேள்விகளை தவிர்த்து விடுவதையே கண்டிருக்கிறேன். A Genius can never  explain his genius என்று அந்த நேர்காணல்களை காணும்போதெல்லாம் நினைத்துக் கொள்வேன்.

ஆனால் இந்தச் சிறுகதை வேறொரு கோணத்தை திறக்கிறது. தன் படைப்பின் நுணுக்கங்களை விவாதிப்பதை ஓரளவுக்கு மேல் ஒரு கலைஞனால் விரும்ப முடியாதோ என்ற கேள்வியை முன்  வைக்கிறது. அதே போல ஒரு ரசிகனுக்கு ஏற்படக்கூடிய, தன் ரசனையின் நுட்பத்தின் மேன்மை குறித்த ஒரு பெருமிதத்தையும் கேள்விக்குள்ளாக்குகிறது. உதாரணமாக, வெங்கடேஸ்வரனின் போக்கு குறித்து தொடர்ந்து சிந்திக்கும் கல்யாணம், ஒரு கட்டத்தில், மேன்மையான, நுட்பமான ரசிகன், சமரசமற்ற கலைஞனை மட்டுமே கொண்டாடுபவன் என்ற அகந்தை தனக்குத்தான் இருக்கிறதோ என்றே நினைக்கிறான்.

கூடுதலாக, ஆதவனின் நகைச்சுவை உணர்வுமிக்க அவதானிப்புகள்- அந்தப்  பாராட்டு விழாவில் கலெக்டர் பேசி முடித்தவுடன் பேச வருபவர்களுக்கு, விழா நாயகரைப் பாராட்டுவதன் கூடவே, நமது கலெக்டர் அய்யா சொன்னது போல என்றோ, கலெக்டர் அய்யா அழகாகச் சொன்னார்கள் என்றோ கலெக்டர்  பேச்சையும் பாராட்ட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுவது,   நீதிபதி, தலைமை ஆசிரியர் ஆகியோர் தத்தம் தொழிற் கோணத்திலேயே  பாராட்டுவது போன்ற இடங்களும்- குறிப்பாக, வெங்கடேஸ்வரனின் மனைவி குறித்த கல்யாணத்தின் மனைவியின் கூர்மையான அவதானிப்புகளும்- என்று பல விஷயங்களை ரசித்துப் படிக்கக்கூடிய சிறுகதை, ‘அகந்தை