கபாடபுரம்

கபாடபுரம்- இணையத்தில் ஒரு புதிய இலக்கிய இதழ்

நல்வரவாகுக.

கண்ணைக் கவரும் வடிவமைப்புடன் துவங்கியிருக்கிறது, கபாடபுரம், சமூக – இலக்கிய இணையதளம். புதுமைப்பித்தனின் சாகச வாக்கியங்களை முகப்பில் தாங்கி வந்திருக்கிறது, அதன் முதல் இதழ்.

“வாக்கியத்துக்கு உயிருண்டு. அது பல தசைகளும், நரம்புகளும், அவயவங்களும் கொண்ட சிருஷ்டி. அதை நாம் உம்மைத் தொகுதிகளால் பிணிக்கப்பட்ட வெறும் வார்த்தைச் சங்கிலிகளாக மதித்துவிடக் கூடாது. வாக்கியத்தின் கட்டுக்கோப்பு (Architectonics) மிகவும் முக்கியமானது. ஒரு வாக்கியத்தில் வார்த்தையின் ‘அமைப்பு’ நயமான அர்த்த விசேஷங்களைத் தந்துவிடும். வாக்கியங்களின் (Prose-rhythm) ஓசை இன்பம் – கவிதையைப் போல் வசனத்திலும் இருக்கிறது; ஆனால் அதைவிட சூக்ஷ்மமானது – வார்த்தை நயங்களையும், வாக்கியத்தின் ‘அமைப்பு’ வசீகரத்தையும் பொறுத்தே இருக்கிறது. இதைப் பற்றி எழுத முடியாது; பயிற்சியினாலும், மேதாவிகளின் நூல்களைப் படித்துப் படித்து அனுபவிப்பதினாலும் வரும். தமிழில் இதற்கு இலக்ஷிய கர்த்தாக்கள் அவ்வளவாக இல்லை. வெளியிலிருந்து தான் ஆகர்ஷிக்க வேண்டும். சிலர் மோனைகளையும் பிராசங்களையும் வசனத்தில் உபயோகிப்பது ஓசை இன்பம் என்று நினைக்கிறார்கள். என்னமோ, அசுணப் பறவையையும் பறை முழக்கத்தையும் பற்றி கம்பன் சொன்ன கதைதான் நினைவிற்கு வருகிறது. அப்படி எழுதுவது ஆபாசம்; பேசுவது பைத்தியக்காரத்தனம்.”-