கரோல் ஆன் டஃபி

அம்மணமாய் நிற்கும் பெண்- கரோல் ஆன் டஃபி

நகுல்வசன்

கேவலம் துட்டுக்காக இந்த இழவை ஆறு மணிநேரம் செய்ய வேண்டியிருக்கிறது.
தொப்புள் முலை குண்டியெல்லாம் ஜன்னல் வெளிச்சத்தில் காட்ட வைத்து
என் நிறங்களைப் பிழிந்தெடுத்துக் கொள்கிறான். இதில் வலது பக்கம்
தள்ளி நின்று அசையாமல் வேறு இருக்க வேண்டுமாம்.
என் உடம்பை கட்டம் கட்டமாக வரைந்து பிரேம் போட்டு
பெரிய மியூசியத்தில் எல்லாம் தொங்கவிடுவார்கள். பணக்கார்ர்கள்
என் தேவடியாப் படத்தைப் பார்த்து உச்சுக் கொட்டுவார்கள்.
இதறகுப் பேர்தான் கலையாம்.

யார் கண்டது? அவன் தலைவலி அவனுக்கு.
எனக்கோ வயிற்றுப் பிழைப்பு. நான் ஒல்லியாகிக்
கொண்டிருப்பது அவனுக்குப் பிடிக்கவில்லையாம். என் முலைகள்
சற்றே சரிந்து தொங்கத் தொடங்கிவிட்டன,
இந்த ஸ்டூடியோவோ குளிர்ந்து விறைக்கிறது. எலிசபெத் ராணி
என் உடம்பை உற்றுப் பார்ப்பது போல் ஒரு கனவு.
அற்புதம் என்று முணுமுணுத்தபடி அவள் கடந்து செல்கிறாள்.
சிரிப்பு வருகிறது. அவன் பெயர்

ஜார்ஜெ. அவன் ஒரு மேதையாம்.
ஓவியம் சரிவராத வேளைகளில் தன் இயலாமையை
என்னுடம்பின் கதகதப்பில் கரைத்துவிட ஏங்குகிறான்.
சாயத்தில் தூரிகையைத் தோய்த்துத் தோய்த்துக் கிட்டாண்
சட்டத்திற்குள் என்னை புணர்ந்து கொள்கிறான். பாவம்!
அதற்கெல்லாம் அவனுக்கேது காசு. நாங்கள் இருவருமே
ஏழைகள். எதையெதையோ செய்து எப்படியோ
பிழைத்துக் கொள்கிறோம். ஏன் இதைச் செய்கிறாய்,
என்று கேட்டதற்கு, அப்படித்தான் வேறு வழியில்லை,
வாயை மூடு என்று அடக்கிவிட்டான். என் சிரிப்பு
அவனைக் குழப்புகிறது. இந்த கலைஞர்களுக்கு
எப்போதுமே தாங்கள் ஏதோ பிஸதாக்கள்
என்ற பாவனை. மதுவால் வயிற்றை நிரப்பிக்கொண்டு
நான் இரவில் மதுக்கூடங்களில் ஆட வேண்டும்.
ஓவியத்தை முடிந்தபின் ஜம்பமாய் என்னிடம் காட்டுகிறான்,
சிகரெட்டை பற்றவைத்தபடியே.
சரி, மொத்தம் பன்னிரெண்டு ஃபிராங்க்,
என்று அவனிடம் கணக்களித்துவிட்டு என் மேலாடையை
எடுத்துக் கொள்கிறேன், ஓவியமோ என்போலவே இல்லை.​

௦௦

ஒளிப்பட உதவி – Wikiart

நிற்கும் நிர்வாணப் பெண் – கரோல் ஆன் டஃபி

செந்தில் நாதன்

அற்ப ஃபிராங்க்குகளுக்காக ஆறு மணி நேரம் இது போல.
வயிறு மார்க்காம்பு புட்டம் சன்னல் வெளிச்சத்தில்,
என் வண்ணங்களை உறிஞ்சுகிறான் இவன். சற்றே வலப்பக்கம்,
பெண்ணே. அசையாமலிருக்க முயற்சி செய்.
நான் பகுப்புமுறை ஓவிய மாதிரியாய்ப் புகழ் பெற்ற
அருங்காட்சியகங்களில் தொங்கவிடப்படுவேன். இப்படியொரு நதியோரத் தாசி
ஓவியமா என்று நடுத்தர வர்க்கம் பாராட்டும். இதைக் கலை என்கிறார்கள்.

ஒருவேளை இதுதானோ. இவன் கனபரிமாணங்களைப் பற்றிச் சிந்திக்கிறான்.
நான் அடுத்தவேளை உணவைப் பற்றி. நீ இளைத்துக் கொண்டே போகிறாய்
பெண்ணே, இது நல்லதில்லை. என் மார்புகள் சற்றே கீழ்நோக்கித்
தொங்குகின்றன, ஓவியக்கூடம் குளிர்கிறது. இங்கிலாந்து மகாராணி
என் உருவத்தைப் பார்வையிடுவதைத் தேநீர் இலைகளில்
ஆரூடம் காண்கிறேன். அற்புதம், அவள் முணுமுணுக்கிறாள்,
நகர்ந்தபடியே. இது எனக்குச் சிரிப்பூட்டுகிறது. இவன் பெயர்

ஜார்ஜெ. இவன் ஒரு மேதை என்கிறார்கள்.
ஒவ்வொரு நேரம் காரியத்தைக் கவனிக்காமல்
என் கதகதப்புக்காக விரைத்து ஏங்குகிறான்.
வண்ணங்களில் தூரிகையை தோய்த்துத் தோய்த்துச்
சட்டகத்துக்குள் என்னைச் சிறை பிடிக்கிறான். சின்னப் பையா,
நான் விற்பதை உன்னால் வாங்க இயலாது.
நாம் இருவரும் ஏழைகள், அவரவர் வழியில் பிழைக்கிறோம்.
ஏன் இதைச் செய்கிறாய் என்று அவனைக் கேட்கிறேன்.
ஏனென்றால் நான் செய்தாக வேண்டும். வேறு வழியில்லை.
பேசாதே.என் சிரிப்பு அவனைக் குழப்புகிறது.
இந்தக் கலைஞர்கள் தங்களைத் தீவிரமாகப் பாவித்துக் கொள்கிறார்கள்.
நான் இரவில் மதுவருந்திவிட்டு மதுக்கூடங்களில் நடனமாடுவேன்.
ஓவியம் முடிந்தபிறகு பெருமையுடன் என்னிடம் காட்டுகிறான்,
ஒரு சிகரெட்டைப் பற்றவைத்தபடி. நான் சொல்கிறேன்-
பன்னிரெண்டு ஃபிராங்க், அப்படியே என் மேலாடையை எடு.
இது என்னைப் போல் இல்லை.

————————

மொழிபெயர்ப்பாளர் குறிப்பு- கவிதையைப் பற்றி: இரா.முருகன் FB ல் பதியும் வரை இந்தக் கவிதையைப் பற்றித் தெரியாது. படித்தவுடன் அப்படியே மொழிபெயர்த்தேன்.

இரா முருகன் பகிர்வு- மூன்று கவிஞர்கள்

இங்கும் சில தகவல்கள்- https://writingonwomenwriters.wordpress.com/2013/05/10/standing-female-nude-carol-ann-duffy/

ஒளிப்பட உதவி – Wikiart