கவிதை, ராமலக்ஷ்மி,

மீள்பார்வை

பத்து எம்.எம் அகலப் பரப்பில் 
படமாக்கிய காட்சியை 
விரியச் செய்கிறேன்
பதினேழு அங்குலக் கணினித் திரையில்.
தொலை தூரத்தில் அடிவானம்
பந்தலிட்டிருந்தன கருமேகங்கள்
இடது மூலையில் 
அறுவடைக்குக் காத்திருக்கும் 
சோளக் கதிர்கள்.
வலது எல்லையோ 
தலைதுருத்தும் பாறைகளுடன் 
தரிசு நிலமாக.
ஓங்கிய மரங்களுக்கு மத்தியில்
ஈரத்தில் மினுமினுத்த மண் சாலையில்
இரட்டைக் கோடுகள் படிய
தனித்தூர்ந்த மாட்டுவண்டி 
என் நிழற்படத்தின் மையக் கருவாக.
பதிந்த நொடியில் 
மனதில் பதியாத விவரங்கள்
மீள்பார்வையில் 
மனதைப் பிசைபவையாக.
சக்கரங்களில் அப்பியிருந்தது
மழைச் சேறு
துருத்திய எலும்புகளுடன் தள்ளாடியது
காளை மாடு
வண்டியோட்டியின் முகத்திலோ
பெருஞ்சோர்வு.
உறைந்து போன காட்சியில்
உறையாது காலம் உருள
இரவு பகல்களை விழுங்கியபடி
நூற்றாண்டுகால வேதனைகளைப் புதைத்தபடி
வானம்பூமி சாட்சியாக 
வந்து கொண்டிருந்தார்கள் மெல்ல மெல்ல
மாடும், ஓட்டியும், வண்டியும்.
                                                                      – ராமலக்ஷ்மி