கவிதை

துளிகள் – ஸ்ரீதர் நாராயணன் கவிதை

– ஸ்ரீதர் நாராயணன் –

ஈர விறகுகள் ஊறிப் பெருத்து
வெடித்து எரிகின்றன,
விரிசல்கள் வழியே
இசை ஒன்றை எழுப்பிக் கொண்டு.

உருட்டிக் கொண்டு வரப்பட்ட
உடல் மழுங்கிய கூழாங்கற்கள்
நதியின் மடியில்
புரண்டு எழுகின்றன,
மலை முகட்டுகளை
எதிரொலித்துக் கொண்டு.

பருவ மாற்றத்தை
பழகிக் கொண்ட
தடித்த மரவுச்சியிலிருந்து
பழுத்து உதிரும் இலை,
காட்டின் பரிணாமத்தை
மாற்றி அமைக்கிறது.

வடிந்தது போக ஒதுங்கிய
மழைநீரில் நொதித்த கூரை
சொட்டிக் கொண்டிருக்கிறது
துளித்துளியாக.

சர்ப்பம் – ஸ்ரீதர் நாராயணன் கவிதை

– ஸ்ரீதர் நாராயணன் –

ஒளிரும் மேலுடல் மினுக்க
நெருஞ்சி முட்புதர் ஊடே ஊர்கிறது.
சுற்றி அணையும் சுவர்கள்
நெருக்குந்தோறும்
விரிவடைகின்றன அதன் மூலைகள்.
கூட்டின் அமைதி பொழுதெல்லாம்
நச்சுப்பை முடைந்து
விடம் செறிகின்றது.
வால் குலைத்து
போகும் தடமெல்லாம்.
பற்றி எரிகிறது காடு.
கை பற்றி ஏறி வந்து
தோள் சுற்றி
முறுக்கிக் கொள்கிறது.

சுடர் நெருப்பென நாக்கு நீட்டி
தலையென நிலை கொள்கிறது.

வரம்புகளற்ற அகண்ட நிசப்த வெளியில்
தன் வால் கவ்விச் சுருண்டு உறங்கும்
சர்ப்பம்.

பேரமைதி – ஸ்ரீதர் நாராயணன் கவிதை

– ஸ்ரீதர் நாராயணன் –

சரவிளக்கொளியால் மெருகேற்றப்பட்ட
அகண்ட அரங்கத்தில்,
நறுவிசாய் உடுத்திய
கனவான்களும் குணவதிகளும்
சீரான வரிசையில்
தூசியற்ற தரைவிரிப்புக்கு நோகாதபடி
ஊர்ந்து செல்கிறார்கள்,
கரம் பற்றியும், மெலிதாக கட்டியணைத்தும்,
ஆறுதல் சொற்களை அளந்து பரிமாறியபடி.

பேரமைதியை குலைத்தபடி
வெடித்து கிளம்புகிறது
ஓர் அழுகைக் குமுறல்,

மலர் ஜோடனையுடனான மரப்பெட்டியினுள்
லினன் விரிப்பின் மேல்
நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்டுக் கிடந்தவரை
இரத்தமும் சதையுமாக
இழுத்து வெளியில் போட்டது.

சிலைகள்

எஸ். சுரேஷ்

கை உயர்த்தி ஆள்காட்டி விரலால்
இலக்கில்லாத ஒன்றைச் சுட்டாமல்
கைகளைப் பின்புறம் கட்டிக் கொண்டிருந்தால்
கறைகள் மறைந்திருக்கும்

தலை நிமிர்ந்து வானத்தை பார்க்க வேண்டும்
தலை குனிந்த தருணங்கள் மறைந்து விடும்

நெற்றியில் சில சுருக்கங்கள் இருந்தால்
சிந்தித்துக் கொண்டிருப்பது போல் இருக்கும்
அவரவர் மனதில் தோன்றும் எண்ணங்கள்
இயல்பாய் முகத்தில் தோன்றும்

பயம், அசூயை, குரோதம், கோபம்
இவற்றை மறைக்கும் சிற்பி
வீரமும் தொலைநோக்கும் கொண்ட
பார்வை கொடுக்க வேண்டும்

உதடுகளில் புன்னகையா?
வேண்டாம்
சொல்லியவை பல்லாயிரம்
பீடத்தில் ஒரு வாக்கியம் போதும்-
உதடுகள் விரியாதிருப்பதே நல்லது.

தினமும் சிலைகள் செதுக்கப்படுகின்றன-
ஆனால் எதுவும் முடிந்தபாடில்லை

அந்தி

எஸ்.வீ.ராஜன்

பூ மேகம் தூறிவிட்டுப் போகட்டுமென்று
புரண்டு படுக்கும் காய்ந்த சருகிற்கு
தொட்டி நிரம்பி வழிநீர் பட்டுத் தெறிக்கிறது
என்று சந்தோஷப்பட இடமில்லை.

ஊர்சுற்றிக் காகமும் கும்மாளக் குருவியும்
குற்றாலக் குளியல் போட்டு
சிலிர்த்துச் சிறகசைத்துக் கூடடையும்
மாலைச் சூரிய சாய்வொளி
வானவில் வரைந்து காட்டும்.

மின்னியக்கியை கீழிறக்கிட
ஊளையை நிறுத்தும்
ஆழ்துளைக் கிணற்று நீரேற்றி.

.