கவிதை

365 வது நாள்

ஜிஃப்ரி ஹாஸன்

 

மூடிக்கிடந்த சாளரங்களைத்
தட்டித் திறக்கிறது ஒரு புதிய கை

எனக்கு சூரியன் தேவை இல்லை
ஒரு நட்சத்திரம் போதும்
என்ற நம்பிக்கையுடன்
சாளரங்களைத் திறக்கிறேன்

முந்நூற்றி அறுபத்தைந்து நாட்களுக்கும்
ஒரே இரவில் விடைகொடுத்து அனுப்புகிறேன்
அந்த யுகம் எனக்கு கையளித்த கனவுகளும்
என்னிடமிருந்து கையகப்படுத்திய கனவுகளும்
உருவைப் பிரியும்
நிழல் போல் என்னைக் கைவிட்டு நகர்கின்றன

மீண்டும் எனக்கு முன்னால்
முன்னூற்றி அறுபத்தைந்து நாட்கள்
முன்னூற்றி அறுபத்தைந்து நட்சத்திரங்களாக
ஒளிர்கின்றன
வாழ்வை ஒளியூட்டும் புதிய நம்பிக்கைகள்
திறந்த சாளரங்கள் வழியே
என்னை ஒளியூட்டுகின்றன
நான் இப்போது
ஒரு பெரிய நட்சத்திரமாகி
இருளின் தெருக்களில் இறங்குகிறேன்

 

திதி

 நித்ய சைதன்யா

குளிர்ந்தசைந்த
நதியின் நீரள்ளி
ஓம குண்டத்தின் முன்
கண்கள் கலங்கி
மாப்பிண்டங்களில்
மலர்களிட்டு
கால்கள் சகதியில் கூச
இடுப்பளவு நீரில்
காசி காசி என புலம்பி
மார்புநுால் களைந்து
முங்கி எழ
கரைந்தமிழ்கின்றன
முன்னோர்களின்
பசித்துக்களைத்த முகங்கள்

 

 

 

தளைச்சுமை

– நித்ய சைதன்யா-

மீட்பென பறவையைச் சுட்டியது ஒருவிரல்
விலாவிலிருந்து கிளைத்து வந்தன
பறப்பதன் நுட்பங்கள்
கூரலகு காற்றைக் கிழிக்க
பஞ்சைப் போலானது எனதுடல்
தரையை வீடுகளை
பசுமை தளும்பிய மரங்களை
மலைகளைக் கடந்தேன்
வெண்மை போர்த்திய வெளியன்றி
இலக்கற்ற பாழ்வெளி
தங்கி இளைப்பாற ஓரிடம் ஏங்கி
நிலம் திரும்புகின்றன
அன்றாடத்தின் வேர்கள்

 

 

 

 

 

 

 

சப்பு கொட்டி சப்தமிட்டது

– பெ விஜயராகவன்-

வெட்டுண்ட விரலில் குருதிப்பிளவு
தக்கது கிடையாமல் தவித்த விரலை
கவ்விச் சப்பும் வாயினுள் கண்டேன்
கனிவாய் நாக்கின் இத ஒத்தடம்.
வெகுநேரம் விரல் ஊறி
சுருங்கி சிறுத்த விரலை இழுத்தேன்
விடுபட்ட வாயினுள்
சுவைத்த நாக்கோ
சப்பு கொட்டி சப்தமிட்டது.

நயாகரா 2

ஸ்ரீதர் நாராயணன்

மலையத்தனை நீர்த்தாரையை
அருகணைந்து தரிசிக்க
பெரும்படகில் குழுச் சவாரி.

நனையாத நெகிழி ஆடையும்,
தருணங்களைத் தவறவிடாமலிருக்க
பதிவுக்கருவிகளுமாக,
மனிதக்கொத்துகள்.

மலையருவி புரண்டுவிழ
புகைமூட்டமென மேலெழுகிறது
சாரல் நீர்த்திரை.

ஆற்று நீர்ப்பரப்பில்
துடுப்பு நடைபோட்டபடி
கடந்து செல்கின்ற,
இறக்கையில் இருகோடுகள் கொண்ட
வளைய மூக்கு கடற்பறவை ஒன்று,
புகைத்திரையினூடே
மலைமுடியைத் தொட்டு மீள
எழும்பிப் பறக்கின்றது.

*ring billed gull – வளைய மூக்கு கடற்பறவை