கவிதை

இயற்கை அழைக்கிறது

எஸ் வீ. ராஜன்.

அலங்கரித்து
வண்டீர்க்கத்
தயாராய் நின்ற
பூச்செடிக்கு
பனிமுத்தமிட்டுச்
செல்லும்
ஐப்பசி
அதிகாலை.

இளம்சிவப்புச்
சூரிய வட்டத்தின்
குறுக்காக
நிழல்கோடிட்டபடி
கடந்து செல்லும்
அழகைக்கவனியெனும்
பறவைக்கூட்டபவனி.

குளக்கன்னத்தில்
குழிவிழக்
குதித்துக்களிக்கும்
தவளைக்கு
பயந்தார்ப்போல
தாமரையிலைமேல்
தவ்வியேறும்
நீர்த்திவலை.

இதையெல்லாம்
பார்ப்பதற்கே
சீக்கிரம்
எழுப்பிவிட்டதாய்
சொல்லத்தெரியாத
என்
இயற்கை அழைப்பு.

ஒரு சிவப்பு பாட்டில்

அதிகாரநந்தி

img_20161103_170038-01

என் முன்னே இருக்கும்
இந்தச் சிவப்பு பாட்டில்
ப்ரான்ஸில் செய்யப்பட்டது
ரத்தம் மாதிரி இருக்கிறதே நீர்
என்று ஓரோர் நாள் நினைத்ததுண்டு-
தொண்ணுற்று ஒன்பது ரூபாய்க்கு கொடுத்திருக்கிறான்
அதுவும் ப்ரான்ஸிலிருந்து. ரத்தம்தான்,
ஆனால் யாருடையதோ.

சண்டமாருதம்

ஸ்ரீதர் நாராயணன்

koothu1

பூசிய சந்தனமும்
வீசிய அரிவாளுமாக
வெறிகொண்டு எழுகிறது
துடியான முனி.

துள்ளி ஆடுகிறது
எகிறிக் குதிக்கிறது
இரத்தம் கேட்கிறது
துடியான முனி.

சன்னதம் கொண்ட
சண்டமாருதமென
புறப்படுகிறது வேட்டைக்கு
துடியான முனி

வழியில் குறுக்கிடும்
ஆடு அகப்பட்டால்
ஒரே போட்டில் போட்டுவிடும்
துடியான முனி

எதிரில் வந்து நின்ற
அடுத்த ஊர் சாமியை
நாக்கை துருத்தி
நின்று பார்த்துவிட்டு
எல்லையைச் சுற்றிக் கொண்டு
திரும்பி ஓடுகிறது.

Image courtesy சொல்வனம்

உள்ளாடைகள் எப்போதும்

மஜீஸ்

 

உள்ளாடைகள் எப்போதும்
அவமானத்தின்
குறியீடுகளாகவே மட்டும்
பழக்கப்பட்ட அவளுக்கு
முப்பது தாண்டியும்
உள்ளூரில் எந்த முடவனும்
கரம் பிடிக்க தயாரில்லை யென்றதும்
சம்பிரதாயங்களும், நிர்பந்தங்களும்
கழுத்து நீட்டச் சொல்ல
ஓசைகள் பெருத்த நகரத்து
அழுக்கனின் அந்தப்புரத்திற்கு
அடிமையாக வேண்டியாயிற்று
கண்ணீரால் லௌகீகக் காயங்களை
கழுவிக்கொள்ளும் நகரத்து
மனை வாழ்க்கையின்
நீட்சியில்
அவள் பழகிக்கொண்டதும்
மாற்றிக்கொண்டதும்
கொங்ரீட் காடுகளில் கசியும்
வெயிலுக்கு ஏதுவாக
கட்டப்பட்ட கொடியில் எந்த வித
சங்கோஜமுமின்றி துவைத்த
உள்ளாடைகளைக் காயப்போட
மட்டுமே.

மழைக் கால சோகம் போல…

ஜிஃப்ரி ஹாசன்

சங்கீத வார்த்தைகளால்
வானம் மழைக்கால கீதத்தை
இசைக்கிறது
கொதிப்பேறிக் கிடந்த
வரண்ட நிலத்தின் வெடிப்புக்களை
கண்ணாடிப் பூக்களாய்
மாற்றுகிறது மழை
இரசிக்கப்படாமலே
கைவிடப்பட்டுக் கிடந்த
இயற்கையை மழை அழகுபடுத்துகிறது
குழந்தைகள் வண்ணத்துப்பூச்சிகளாய் மாறி
மழையின் தெருக்களில்
சிறகசைத்துப் பறப்பதை
முரட்டுக்கரங்கள் தொடர்ச்சியாகத்
தடுக்க முனைந்து தோற்கின்றன
மின்சாரக் காற்றில் உலர்ந்த உடல்களை
இயற்கையாய் வருடுகின்றன
மழையின் கரங்கள்.
மழைக் கால இரவுகள்
அன்பின் இரகசியத்தை ஈரச் சொற்களால்
பகிர்ந்துகொள்கின்றன
எனினும்
இனம்புரியாதவோர்
மழை நேரத்துச் சோகம்
மீண்டும் அதே ஈரச் சொற்களால்
துயரக் கவிதைகளை
இதயத்தில் எழுதிக்கொண்டே இருக்கிறது