காலாண்டிதழ்

பன்முக ஆளுமை – பாவண்ணன்

விட்டல் ராவ் 

விட்டல்ராவுடன் (1)

வாழ்நாள் படைப்புச் சாதனைக்கென அங்கங்கே அவ்வப்போது சிறப்பு விருதுகளும் கெளரவங்களும் அளிக்கப்பட்டு வருவதைக் கவனிக்கும்போது, வயதும், படைப்பாக்கத்தில் தேக்க நிலை தொடர்பாயும் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். எண்பதுகள் என்பது மிகச் சமீபத்திய காலம்அதுவும் கலையிலக்கிய சங்கதிகளுக்கு. எண்பதுகளில் தோன்றி இந்த கணம் வரை இடையறாது சிறுகதை, கவிதை, நாவல், திரைப்பட விமர்சனம், நூல் விமர்சனம், பல்வேறு உலகியல் விஷயங்களைப் பற்றிய விரிவான ஆழ்ந்த கட்டுரைகள் என்று தொய்வோ தளர்ச்சியோ இன்றி எழுதி வரும் பாவண்னனின் படைப்பாக்க இளமையின்பேரில் ஆச்சரியமும் பொறாமையும்கூட ஏற்படக்கூடும்.

ஆரம்பத்தில் எண்பதுகளில் தீபம் இதழின் பக்கங்களில் படிக்க நேரிட்டபோதே என் கவன ஈர்ப்பின் உள்ளடக்கத்தில் அன்பர் பாவண்ணனும் ஒருவராக இருந்தார். தீபம் அலுவலகத்தோடு நெருக்கமாயிருந்த சமயம். அங்கிருந்த கம்பாசிடர் கையெழுத்துப் பிரதியிலிருந்த கதையொன்றைத் தந்துப் படிக்கச் சொன்னார். மிகவும் நன்றாக வந்திருந்தது. அதுவும் பாவண்ணன் கைவண்ணமே. பிறகு விட்டு விட்டு கண்ணில் படும் போதெல்லாம் தவறாமல் அவரது குறுநாவல்களை, சிறுகதைகளை, கட்டுரைகளைப் படித்து விடுவேன். பாவண்ணன் எல்லா பத்திரிகைகளிலும் எழுதி வருபவர். எந்தவொரு புதிய இதழ் ஆரம்பிக்கப்படும்போதும் கவனம் விட்டுப் போகாத படைப்பாளிகளில் இவரும் இருப்பார். வெங்கட் சாமிநாதன் பாவண்ணனைப் பற்றிக் குறிப்பிடுகையில் சொல்லுவார், “ சமீபமா பத்துப் பத்திரிகைகள பார்த்ததில ஏழிலியாச்சும் இவர் எழுதி வெளிவந்திருக்கய்யா. நல்லா எழுதறது ஒரு பக்கம், ரொம்ப நல்லவனாயுமிருக்கிறது இன்னும் சந்தோசமாயிடறது, இல்லையா”.

எண்பதுகளில்தீபம்காலம் தொட்டு இம்மாததீராநதியில் அவர் தொடங்கியிருக்கும் கட்டுரைத் தொடர் வரை சீரான நீண்ட இலக்கிய தடத்தைப் பார்க்கையில் பிரமிப்பு கூடிய பெருமகிழ்ச்சி ஏற்படுகிறது.

ஒருமுறை, தீபம் அலுவலகத்தில் நானிருந்த சமயம், எஸ். சங்கரநாராயணன் வந்தார். என்னைப் பார்த்து, “ பாவண்ணன் வந்திருக்காரா?” என்று கேட்டார். இல்லையே என்றேன். இந்த நேரத்துக்கு வர்ரேனு சொல்லியிருந்தார், என்று கூறி உட்கார்ந்தார், எனக்கும் பாவண்ணனை நேரில் பார்க்கலாமே என்று. ஆனால், ஒரு மணி நேரம் கடந்தும் ஆசாமி வரவேயில்லை. சங்கரநாராயணன் எழுந்து போய்விட்டார். அதற்குப் பிறகு இலக்கியச் சிந்தனை ஆண்டு விழாவில்தான் முதல் அறிமுகம். வண்ணதாசனின் மகன் திருமண வரவேற்பில் அறிமுகம் தொடர்ந்தது, பெங்களூரில் குடிபுகுந்த பின் அது இறுகித் தொடர்கிறது. காலஞ்சென்ற என் மனைவி ஏராளமாய் வாசிப்பவள். பாவண்ணன் தான் மாதமொருமுறை வீட்டுக்கு வந்து ஏராளமான நூல்களை அவளுக்குப் படிக்கத் தருவார், மருத்துவ மனையில் இறப்பதற்கு ஐந்து நாட்கள் முன்பு வரை அவருடைய புத்தகத்தைத்தான் படித்துக்கொண்டிருந்தாள்.

தொகுக்கப்பட்டு நூல் வடிவம் கொண்ட சிறுகதைகளை தற்போது மீள்பார்வையிடும்போது அவற்றின் வடிவமைப்பு, உத்தி, கரு, உள்ளடங்கும் சிறு செய்தி என்பவை மிகச் சிறப்பாக வந்திருப்பதை கவனிக்க முடிகிறது. பாவண்ணன் தன்னைச் சுற்றிலுமுள்ள யதார்த்த நிகழ்வுகளையும் சலனமற்ற காட்சிகளையும் தீர்க்கமாகப் பார்த்து கிரகிக்கும் போக்கிலேயே இணையாக கனவும், கற்பனையும் கவித்துவமும் ஏற்பட்டு பிரவாகமெடுக்கிறது. இயற்கைக் காட்சிகளை ஒன்றுக்கொன்று தொடர்பு அறுபடாது சித்தரிப்பது இவருக்கு இயல்பாகவே கைவருகிறது. இதை அவரது கவிதைப் படைப்புகளில் பளிச்சென காணமுடிகிறது. இவர் தம் கவிதைகள் பலவற்றில் இயற்கையின் எழில் தோற்றங்கள் அடுக்கடுக்காகவெற்று வார்த்தைக் குவியலாக இல்லாமல்அதே சமயம் கவிதைக்கு கவிதை மாறுபட்டும், புதியதாயும், சொன்னதையே திருப்பித் திருப்பிச் சொல்லாமலும் காணக் கிடைக்கின்றன. இவரது கவிதை நடையினின்று சிறுகதை நடை வெகுவாக விலகித் தோன்றுகிறது.

பாவண்ணனின் இலக்கியப் பணியின் மற்றொரு முக்கிய அங்கம் மொழிபெயர்ப்பு. கன்னட மொழியில் உள்ள கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் என்று அவரது மொழிபெயர்ப்பில் அணிவகுப்பவை, எஸ்.எல். பைரப்பாவின்பருவம்’, ராகவேந்திர பாட்டீலின்தேர்என்பவை குறிப்பிடத்தக்க நாவல் மொழிபெயர்ப்புகள். தேர்மொழிபெயர்ப்பு நாவலைப் படித்துவிட்டு என் மனைவி மிகவும் பாராட்டிய பிறகே, நான் படித்தேன். கன்னட தலித் சிறுகதைகள் என்ற இவரது பொழிபெயர்ப்பில் வெளிவந்த கதைத் தொகுப்பு மிகவும் சிலாகிக்க வல்லது. சிறந்த மொழிபெயர்ப்புக்கான (பருவம்) சாகித்ய அகாடமி விருது பெற்றவர் பாவண்ணன். நாவலுக்கான இலக்கியச் சிந்தனை பரிசும், சிறுகதைக்குகதாவிருதும் பெற்று கெளரவிக்கப் பட்டவர்.

பாவண்ணனின் கட்டுரையாக்கம் தனிச்சிறப்பு வாய்ந்தது. சமீபத்தில்தான்ஒட்டகம் கேட்ட இசைகட்டுரைத் தொகுப்பு நூலைப் பார்க்க நேரிட்டாலும், இதழ்கள்தான் அவருடைய கட்டுரைகளை நிறையவே படிக்கும் சந்தர்ப்பங்களை ஏற்படுத்தியவை. சிறுகதைகளில் இவருடைய கவிதை நடை அவ்வளவாக வாய்ப்புப் பெறாவிட்டாலும், கட்டுரைகளில் அவரது கவித்துவம் ஆங்காங்கே தெறிக்கின்றன. அதிகம் இல்லாவிட்டாலும் திரைப்பட விமர்சனக் கட்டுரைகளும் இவர் பங்கிற்கு இருக்கின்றன. நவீன கன்னட திரைப்படங்கள் இரண்டுக்கான விமர்சனக் கட்டுரைகள் இவரது சினிமா ரசனைக்கு எடுத்துக்காட்டு. அவையிரண்டுமே கன்னட சினிமாவின் மிகச் சிறந்த திரைப்படக் கலைஞர் கிரிஷ் காசரவள்ளி தயாரித்தது. அந்த இரு விமர்சனக் கட்டுரைகளிலும்த்வீபாஎனும் படத்துக்கான பாவண்ணனின் விமர்சனம் அதிசிறப்பாய் வந்திருந்தது. ஒவ்வொரு திரைப்பட விமர்சனமும் அது எழுதப்பட்ட அளவிலேயே முழுமையான கட்டுரையாக அமைந்திருந்தது என்பதும் விசேஷம். அதைப் போலவே அவர் எழுதிவரும் பிற கட்டுரைகளும் விசேஷ கவனம் கொள்ளத் தக்கவை.

புத்தக விமர்சனம் (நான் மதிப்புரை என்பதை தவிர்க்கிறேன்) திரைப்பட விமர்சனம்போல இருந்துவிடலாகாது என்பது போலவே திரைப்பட விமர்சனமும் நூல் விமர்சனம் போன்றிருக்கக் கூடாது என்பது கருத்தில் கொள்ளவேண்டியது. இவ்விஷயம் பாவண்ணனுக்கு வெகு இயல்பாக அமைந்து விடுகிறது. இவர் எழுதி வரும் நூல் விமர்சனம் ஒவ்வொன்றும் ஆழ்ந்த நோக்கில் கச்சிதமான சமநிலையோடு எழுதப்படுவது. ஒவ்வொரு நூல் விமர்சனமும், ஒரு விமர்சனத்துக்கும் அப்பால் சென்று அந்த நூலுக்கு புதியதொரு பரிமாணத்தைச் சேர்க்கவல்ல முழு கட்டுரையாக அமைந்திருக்கிறது.

ஒரு விசயத்தை மையமாய்க் கொண்டு எழுதும்போது அதைச் சுற்றி பல்வேறு விஷயங்களையும் கலை இலக்கிய நயத்தோடு சொல்லிக்கொண்டு போகும் வெங்கட் சாமிநாதனின் வழியை ஒட்டி அவரைப் பற்றின கட்டுரைத் தொடரை தீராநதியில் தொடங்கியிருக்கிறார் பாவண்ணன். ஆரம்பப் பக்கங்களே ஆர்வமூட்டுகின்றன. பாவண்ணனின் படைப்பாக்கத்துக்கு என் பாராட்டுக்கள்; வாழ்த்துக்கள்.    

குதிரை வீரன் பயணம் [பாவண்ணன் நேர்காணல்]

Paavannan 21

பதாகை: ஆரம்பத்தில் கவிதை எழுதத்தொடங்கியபோது எண்சீர்விருத்தம், ஆசிரியப்பா வடிவில் எழுதத்தொடங்கி பின்னர் குறுங்காவியங்கள் எழுதியதாக ஒரு பேட்டியில் படித்திருக்கிறேன். நீங்கள் கவிதை எழுதத்தொடங்கியது ஏன்? கவிதையிலிருந்து சிறுகதை எனும் வடிவத்தை கைகொண்டது எப்படி?

பாவண்ணன்: ஏன் தொடங்கினேன் என்கிற கேள்விக்கு நேரிடையான பதிலைச் சொல்வது சிரமம். ஆனால், எப்படித் தொடங்கினேன் என்று விரிவாகச் சொல்லமுடியும். அந்தப் பதிலிலிருந்து இந்தப் பதிலை நோக்கிச் செல்வது ஒருவகையில் எளிதாக இருக்கும். திருக்குறள் வாசிப்புதான் இளம்பருவத்தில் என் இலக்கிய ஆர்வத்துக்கான தொடக்கம். அதைத் தொடர்ந்து வாசித்த பாரதியார் கவிதைகளும் பாரதிதாசன் கவிதைகளும் என்னைக் கவிதைகளின் உலகத்தை நோக்கி அழைத்துச் சென்றன. எங்கள் பள்ளித் தமிழாசிரியர்கள் மிகவும் அன்பானவர்கள். ஒரே ஒரு பாடல் வரியை எங்கள் மனத்தில் பதியவைப்பதற்காக ஒரு வகுப்புநேரம் முழுதும் நீளும் அளவுக்கு அந்த வரி சார்ந்த வரலாற்றையே கதையாக எடுத்துச் சொல்வதில் ஆற்றல் மிகுந்தவர்களாக இருந்தார்கள். நளவெண்பாவிலிருந்து எங்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டிருந்த ஒரு நாலுவரி வெண்பாவைச் சொல்லிக் கொடுப்பதற்காக, நளன் சரித்திரத்தையே கதையாகச் சொல்லி விளக்கியவர்கள் அவர்கள். சிலப்பதிகாரம், மணிமேகலை, ராமாயணம் கதைகளையெல்லாம் அவர்கள்வழியாக நாங்கள் அப்படித்தான் தெரிந்துகொண்டோம். அச்சமயத்தில் எங்கள் ஊரில் திருக்குறள் கழகம் என்னும் பெயரில் இலக்கிய அமைப்பொன்று இயங்கிவந்தது. மாதத்துக்கு ஒன்றிரண்டு முறைகள் அக்கம்பக்கத்து ஊர்களிலிருந்து வரும் பேச்சாளர்கள் அந்த அமைப்பில் உரையாற்றுவது வழக்கம். இரண்டுமூன்று நாட்கள் நடைபெறும் அதன் ஆண்டுவிழாவில் கவியரங்கம், உரையரங்கம், இலக்கியப் பேருரைகள் என நடைபெறும். இந்தப் புறச்சூழலால் உருவான மன எழுச்சியும் கவிதைக்கான மனநிலையை அளிக்கக்கூடியதாக இருந்தது. அப்போது நான் பதினொன்றாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தேன். ஒருநாள் காலை ஏரிக்கரையில் இருந்து திரும்பிவரும்போது தொலைவில் ஒரு நாவல்மரத்தின் அருகில் ஏராளமான காக்கைகள் கூடி இரைச்சலிடும் ஓசையைக் கேட்டேன். எனக்கு ஒன்றும் புரியவில்லை. வேகமாக நடந்து சென்று அந்த மரத்தை அடைந்தேன். மின்சாரக்கம்பிகளில் சிக்கி உயிரிழந்த காக்கை, குழந்தை எடுக்கமறந்து வைத்துவிட்டுச் சென்ற ஒரு பொம்மைபோல தரையில் கிடந்தது. நூற்றுக்கணக்கான காக்கைகள் இறந்துபோன காக்கையைச் சுற்றிச்சுற்றி பறந்துவந்தன. ஓர் ஊரே கூடிநின்று அழுவதுபோல இருந்தது அந்த ஓசை. அந்தக் குரல் என்னை என்னவோ செய்தது. பதற்றமாகவும் வேதனையாகவும் இருந்தது. என்னால் சில கணங்களுக்குமேல் அங்கே நிற்க முடியவில்லை. வேகமாக நடந்து வீட்டுக்கு வந்துவிட்டேன். அன்று முழுக்க அந்தக் காட்சியை என் மனம் நூற்றுக்கும் மேற்பட்ட முறைகள் மீண்டும்மீண்டும் உருவாக்கி கண்கொட்டாமல் பார்த்தபடி இருந்தது. ஆசிரியர் பாடம் நடக்கும்போது கரும்பலகையில் இறந்துபோன அந்தக் காக்கை தெரிந்தது. நண்பர்களோடு மைதானத்தில் விளையாடும்போதும் அதைப் பார்த்தேன். சாலையில் நடக்கும்போதும் அதைப் பார்த்தேன். இரவுநேரத்தில் சிம்னி விளக்கு வெளிச்சத்தில் படித்துக்கொண்டிருந்தபோது, சுவரில் படிந்திருந்த நிழலிலும் அதைப் பார்த்தேன். என் மன அழுத்தம் தாளமுடியாததாக இருந்தது. அன்று இரவு அந்த அனுபவத்தை ஒரு கவிதையாக எழுதினேன். அஞ்சலிக்குறிப்பின் தோற்றத்தைக் கொண்ட அந்தக் கவிதையே என் முதல் கவிதை. மறுநாள் எங்கள் வகுப்பு தமிழாசிரியரிடம் காட்டினேன். அவருக்கு அது மிகவும் பிடித்திருந்தது. எப்போதும் அவர் என்னை ஒரு மாணவனாக நடத்தியதே இல்லை. உரிமையுள்ள ஓர் உறவுக்காரர்போலவே நடத்துவார். அந்தக் கவிதை எங்களிடையே இருந்த உறவை மேலும் வலிமையாக்கிவிட்டது. அந்தச் சம்பவத்துக்குப் பிறகு நான் எழுதிய கவிதைகளுக்கு அவரே என் வாசகர். அவரே என் விமர்சகர். இப்படித்தான் ஒரு கவிஞனாக நான் எழுதத் தொடங்கினேன். ஆனால் ஏன் தொடங்கினேன் என்பதற்கு எனக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை. அன்றைய பதற்றத்தையும் வேதனையையும் கடந்துவர எனக்கு அந்தக் கவிதைதான் உதவியது. அதை ஒரு சிறந்த வழிமுறையாக நான் பயன்படுத்திக்கொண்டேன். கிட்டத்தட்ட என் முதல் சிறுகதையையும் இதே போன்றதொரு சூழலில்தான் எழுதினேன். 1981ஆம் ஆண்டு. தொலைபேசித் துறையில் கர்நாடக மண்டலத்தில் இளம்பொறியாளர் பதவிக்கான நேர்காணலில் கலந்துகொள்வதற்காக புதுச்சேரியிலிருந்து பெங்களூருக்குச் சென்றிருந்தேன். குறிப்பிட்ட நாளில் பெங்களூருக்குச் சென்று திரும்புவதற்குத் தேவையான தொகை என்னிடம் இல்லை. அதைப் புரட்டுவதற்காக எங்கெங்கோ அலைந்தும் தோல்வியே கிடைத்தது. ஒரு கட்டத்தில் என்னால் நேர்காணலுக்குச் செல்லமுடியாமல் போய்விடுமோ என்று அச்சமாக இருந்தது. கடைசி நம்பிக்கையாக ஒரு நண்பனைச் சென்று சந்தித்தேன். அவன் கொஞ்சம் பணம் கொடுத்தான். உடனே அந்தப் பணத்துடன் பேருந்து நிலையத்துக்குச் சென்றேன். அன்று இரவுப்பயணத்துக்கான பயணச்சீட்டை வாங்கிய பிறகுதான் வீட்டுக்குச் சென்றேன். நேரம் குறைவாக இருந்தது. உடனே கைப்பெட்டியில் சான்றிதழ்களை எடுத்துவைத்துக்கொண்டு கிளம்பினேன். சாப்பிட நேரமில்லை. பணத்துக்கான அலைச்சலில் அன்றுமுழுக்கவே நான் சாப்பிட்டிருக்கவில்லை. ஆனால் அதையெல்லாம் யோசிக்க நேரமில்லை. பெங்களூரில் பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்துகொண்டு கிளம்பிவிட்டேன். மறுநாள் பெங்களூரில் நடந்ததெல்லாம் பெரிய கதை. நிறைய அலைச்சல்கள். மருத்துவச்சான்றிதழ் எடுக்கச் சென்ற இடத்தில் கைச்செலவுக்கு வைத்திருந்த பணத்தை சீல் போட்டுத் தருகிறவருக்கு அன்பளிப்பாகக் கொடுக்க நேர்ந்ததால் அன்றும் சாப்பிடமுடியவில்லை. மீண்டும் இரவுப்பயணம். ஊர் திரும்பி வீட்டுக்கு நடந்து செல்ல சக்தியே இல்லை. சில மாதங்கள் கழித்து அந்த வேலைக்கான பயிற்சிக்குரிய ஆணை கிடைத்து ஐதராபாத் சென்றுவிட்டேன். ஊரையும் பெற்றோரையும் நண்பர்களையும் முதன்முறையாக பிரிந்து வெகுதொலைவு வந்துவிட்டேன். அந்தப் பிரிவு என்னை நொறுக்கிவிட்டது. என்னால் அந்த வலியைத் தாங்கவே முடியவில்லை. அந்த நேரத்தில் ஊரில் என் அப்பா கடுமையாக நோய்வாய்ப்பட்டார். அவரை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு என் அம்மா மிகவும் துயரத்தில் இருந்தார். என்னுடைய ஓராண்டுப் பயிற்சியில் மூன்று மாதங்கள்மட்டுமே முடிந்திருந்தன. என்னால் என் குடும்பத்துக்கு ஒரு உதவியும் செய்ய முடியாமல் இருந்தது. அக்கணங்களில் என் இடத்தில் என் நண்பர்கள் இருந்து பல உதவிகளைச் செய்தார்கள். இருப்பினும் எனக்குள் பெருகிய குற்ற உணர்வுக்கு அளவே இல்லை. ஒருநாள் பயிற்சியிலிருந்து விலகி வீட்டுக்குச் சென்றுவிடலாமா என்றொரு யோசனை வந்தது. எங்கள் வகுப்புப் பொறுப்பாளரைச் சென்று சந்தித்துப் பேசினேன். நான் சொன்னதையெல்லாம் பொறுமையாகக் கேட்டுவிட்டு என் விலகல் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று சொன்னார். வேலை கிடைக்கவில்லை என்று ஒவ்வொருவனும் நம் நாட்டில் நாயாய் பேயாய் அலைகிறான். நீ என்னடா என்றால் முட்டாள் மாதிரி விட்டுவிடுகிறேன் விட்டுவிடுகிறேன் என்று சின்னப்பிள்ளைமாதிரி அழுதுகொண்டு வந்து நிற்கிறாய், போ, போய் ஒழுங்காக பயிற்சியை முடிக்கிற வேலையைப் பார் என்று புத்தி சொல்லி அனுப்பிவைத்துவிட்டார். அன்று இரவு மனம் மிகவும் உளைச்சலாகவே இருந்தது. மனசுக்குள் பெரிய பட்டிமன்றமே நடைபெற்றது. உறக்கவே வரவில்லை. பயிற்சிப் பொறுப்பாளரின் சொற்கள் மிக அருகில் ஒலிப்பதுபோல ஒலித்தன. அவற்றின் தொடர்ச்சியாக தற்செயலாக எனது நேர்காணல் பயணம் நினைவில் விரிந்தது. இரண்டு முழுநாட்கள் உணவில்லாமல் அலைந்த அலைச்சல் ஞாபகத்துக்கு வந்தது. என்னமோ அக்கணத்தில் பசியோடு உட்கார்ந்திருப்பதுபோல ஆழ்ந்த துயரத்தில் மூழ்கிவிட்டேன். அந்தப் பயணத்தின் ஒவ்வொரு காட்சியும் என் மனத்தில் மீண்டும் நிகழ்ந்தன. பசியின் எல்லையில் பெட்டியில் தேடித் துழாவி கைக்குக் கிடைத்த பத்து பைசாவுக்கு ஒரு வாழைப்பழம் வாங்கிச் சாப்பிட்டுவிட்டு, தோலைத் தூக்கிவீச மனமில்லாமல் வெற்றிலை மடிப்பதுபோல அதையும் மடித்துக் கடித்துத் தின்றதும். தின்று முடித்து திரும்பிய கணத்தில் பேருந்துக்குள்ளிருந்து என்னையே உற்றுப் பார்த்தபடி இருந்த இளம்பெண்ணின் பார்வையைக் கண்டு துணுக்குற்றதும் துல்லியமான காட்சிகளாகத் தெரிந்தன. தாங்கமுடியாத ஒரு சுமையைத் தூக்கிவைத்ததுபோல மனம் தத்தளித்தது. அக்கணத்தில்தான் அதை ஒரு சிறுகதையாக எழுத முடிவெடுத்தேன். விடியவிடிய உட்கார்ந்து அதை எழுதிமுடித்தேன். அதற்குப் பிறகுதான் என் மனபாரம் மெல்ல இறங்கியது. தாமதமாகச் சென்றேன். கவிதையாக இருந்தாலும் சரி, சிறுகதையாக இருந்தாலும் சரி, எனது மனபாரத்தை சிறிது நேரம் இறக்கிவைத்து இளைப்பாறுவதற்கு உதவும் சுமைதாங்கிக்கற்களாக உதவியிருக்கின்றன.

பதாகை : நாஞ்சில் நாடன் சிறப்பிதழில் வந்த ஒரு கட்டுரையை பாராட்டி, நண்பர் சுனில் கிருஷ்ணனிடம் சோழகக்கொண்டலின் மின்அஞ்சல் முகவரி பெற்றுக் கொண்டீர்கள் என்பது இங்கு நினைவுக்கு வருகிறது. அவர் எழுதிய கட்டுரையும் ஏறத்தாழ இதே போன்ற ஒரு வறிய பின்னணியை விவரிக்கிறது, அல்லவா? உங்கள் குடும்பம் மற்றும் சமூக பின்புலம் குறித்துச் சொல்ல முடியுமா? நீங்கள், சோழகக்கொண்டல் போன்றவர்கள் விவரிக்கும் சூழல் முறித்துப் போட்ட வாழ்வுகள் எண்ணற்றவை. உங்களால் எப்படி எதிர்காலம் குறித்த நம்பிக்கையையும், போராடும் உறுதியையும், கசப்பு தட்டாத பார்வையையும் தக்க வைத்துக் கொள்ள முடிந்திருக்கிறது?

உங்கள் ஆரம்பகட்ட எழுத்து வாழ்வில் வழிநடத்திய நண்பர்கள், ஆசிரியர்கள் பற்றி சொல்ல முடியுமா? இலக்கியம் எனும் வகைமைக்குள் வந்ததும் அதன் பல சாத்தியங்களை அறிமுகப்படுத்திய ஆளுமைகள் பற்றி?

பாவண்ணன்: தொடக்கப்பள்ளி காலத்திலிருந்தே எனக்கு நல்ல ஆசிரியர்கள் அமைந்தார்கள். அது என்னுடைய நல்லூழ் என்றே சொல்லவேண்டும். நான் படித்த கோவிந்தையர் பள்ளியின் ஆசிரியர் கண்ணன் மிகமுக்கியமானவர். வள்ளலார் பாடல்களை அவர் வகுப்பில் பாடிக் காட்டி பொருள் சொல்வார். ஆறாம் வகுப்பில் சேர்வதற்காக உயர்நிலைப்பள்ளிக்கு வந்த பிறகு ராமசாமி, அதியமான், ரங்கநாதன், ராதாகிருஷ்ணன், சாம்பசிவம் என தொடர்ச்சியாக நல்ல ஆசிரியர்கள் பாடம் எடுத்தார்கள். அவர்கள் அனைவருமே பாடம் எடுத்ததோடு நின்றதில்லை. பாடத்தோடு தொடர்ச்சியுடைய தகவல்களையும் கதைகளையும் சொன்னார்கள். என் ஆர்வம் எழுத்து சார்ந்து பெருகியிருப்பதைப் புரிந்துகொண்டதும் பிரியத்துடன் பல புத்தகங்களைக் கொடுத்து படிக்கத் தூண்டினார்கள். நான் எழுதிக்கொண்டு செல்லும் கவிதைகளைப் படிப்பதிலோ அல்லது யாப்புத் திருத்தங்கள் செய்துகொடுப்பதிலோ என் ஆசிரியர் ராதாகிருஷ்ணன் ஒருபோதும் சலித்துக்கொண்டதே இல்லை. ஜெயகாந்தனை எனக்கு அறிமுகப்படுத்திய ஆசிரியரும் இருந்தார். நான் அவசியம் மு.வரதராசனாரைப் படிக்கவேண்டும் என்று அறிமுகப்படுத்திய ஆசிரியரும் இருந்தார். அவர்கள் அனைவரையும் மனத்தில் இருத்தி வணங்குகிறேன். இலக்கியம் என்னும் வகைமைக்குள் வந்த பிறகு இராஜேந்திரசோழனும் பிரபஞ்சனும் நான் அவசியமாகப் படிக்கவேண்டிய நூல்களின் பெயர்களைப் பரிந்துரைத்ததுண்டு. ஆனால் தொடர்ச்சியாக உரையாடுவதற்கோ, சாத்தியங்களைத் தெரிந்துகொள்வதற்கோ எனக்கு யாரும் இருந்ததில்லை. சொந்தமாகப் படித்துப்படித்துத்தான் ஒவ்வொன்றையும் தெரிந்துகொள்ளவேண்டியிருந்தது. என் வேலை அமைப்பு முதல் காரணம். வேறொரு மாநிலத்தில் வாழ்ந்துகொண்டு அதற்கெல்லாம் எதிர்பார்ப்பை வளர்த்துக்கொள்ளமுடியாது. என்னால். நினைத்த நேரத்தில் சட்டென்று எங்கும் புறப்பட்டுவிட முடியாது. பல சமயங்களில் விடுப்பு நாளிலும் வேலை இருக்கும். அடிக்கடி ஊருக்கு போவதையும் திரும்புவதையும் நினைத்துக்கூட பார்க்கமுடியாது. நண்பர் ஜெயமோகனுடைய அறிமுகத்துக்குப் பிறகு, பல சாத்தியங்களைப்பற்றி உரையாடியிருக்கிறோம். அவர் பாலப்பட்டியிலும் தர்மபுரியிலும் தங்கியிருந்த காலத்தில் பல முறை சந்தித்திருக்கிறேன். அவருடைய சந்திப்புகளும் உரையாடல்களும் எனக்குப் பலவகைகளில் உதவியிருக்கின்றன. அதையும் சில ஆண்டுகளுக்குப் பிறகு தொடரமுடியாமல் போய்விட்டது.

IMG_35890127086157

பதாகை: நீங்கள் தமிழ் கவிதைகள், சிறுகதைகள் எழுதியதை உங்கள் நண்பர்களும், உறவினர்களும் எப்படி வரவேற்றனர்? எவ்விதமான மனநிலைகளை உங்கள் பணியிடத்து நண்பர்களிடையே எதிர்கொள்ள வேண்டியிருந்தது?

பாவண்ணன்: என் எழுத்து முயற்சிகளைப் பற்றி என் நண்பர்களுக்கு எப்போதும் பெருமிதம் உண்டு. அதே சமயத்தில் அவர்களுக்குள் ஒரு சின்ன மனக்குறையும் உண்டு. சிறுகதைகளைப்போல கவிதைகளில் தொடர்ச்சியாக நான் பங்களிப்பை நிகழ்த்தவில்லை என்பதுதான் அந்த மனக்குறை. நான் முதன்முதலாக பணிபுரிந்த புதுச்சேரி தொலைபேசி நிலையம் எனக்கு ஏராளமான நண்பர்களைத் தேடித் தந்த இடம். தொலைபேசி நிலையத்தில் இரண்டு தொழிற்சங்கங்கள் உண்டு. நான் இடதுசாரித் தொழிற்சங்க உறுப்பினராக இருந்தாலும், இரு தரப்பினரும் எனக்கு நண்பர்களாக இருந்தார்கள். எல்லோருமே என் கவிதைகளுக்கு நெருக்கமான வாசகர்கள். ஓய்வு நேரத்தில் படிப்பகத்தில் என் கவிதைகளைப் படித்துவிட்டு விவாதிப்பார்கள். மகேந்திரன் என்றொரு நண்பர் படிப்பதற்காக எனக்கு பல புத்தகங்களை விலைபோட்டு வாங்கி வந்து கொடுப்பார். அசோகமித்திரனின் ‘வாழ்விலே ஒருமுறை’ தொகுப்பை அவர் கொடுத்துத்தான் நான் படித்தேன். மதியழகன் என மற்றொரு நண்பர் தான் வாங்கி வைத்திருந்த பல சிற்றிதழ்களை எனக்குப் படிப்பதற்காக எடுத்துவந்து கொடுப்பார். மாலைநேரக் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்தபடி இரவுநேரத்தில் என்னோடு வேலை செய்த நண்பர் பல ஆங்கில எழுத்தாளர்களை எனக்கு அறிமுகப்படுத்தினார். என் குடும்பத்திலும் என்னை கெளரவமாகவே நடத்தினார்கள். திருமணத்துக்குப் பிறகு என் மனைவி என்னை இயக்கும் உந்துசக்தியாகவே வாழ்கிறார். கர்நாடகத்துப் பணியிடங்களில் என்னை மிகவும் நன்றாக அறிந்த ஒன்றிரண்டு பேர்களைத் தவிர, பலருக்கு என் எழுத்துப் பணிகளைப்பற்றி எதுவும் தெரியாது. ஓர் எழுத்தாளனாக நான் அவர்களிடம் ஒருபோதும் என்னை வெளிப்படுத்துவதில்லை. அவர்களைப் பொறுத்தவரையில் நான் ஒரு நேர்மையான, அணுகுவதற்கு எளிய ஆள். கொடுத்த வேலையை குறித்த நேரத்துக்கு முன்னாலேயே வேகமாக முடித்துவிடக்கூடியவன். எந்தப் புதிய தொழில்நுட்பத்தையும் எளிதாகத் தெரிந்துகொள்ளக்கூடியவன். அவ்வளவுதான்.

பதாகை: பதாகை வாசகர்களில் பலரும் உங்களைப் பற்றிய தகவல்களை இங்குதான் முதல்முறை வாசிப்பவர்களாக இருப்பார்கள். எனவே அவர்களுக்காக, உங்கள் கல்வி, மற்றும் பணிச்சூழல் குறித்து சிறிது விளக்கமாகச் சொல்ல முடியுமா – அதாவது, என்ன படித்தீர்கள், என்ன வேலை செய்கிறீர்கள் என்ற விஷயம். மேலும், கடந்த சில மாதங்களாக உங்களைத் தொடர்பு கொண்டதில் நிறைய பயணம் மேற்கொள்கிறீர்கள் என்று தெரிகிறது, சில இடங்களில் தொலைதொடர்பு வசதிகூட இருப்பதில்லை. பணிச்சுமையும் அதிகம் என்று சிலமுறை சொன்னதுண்டு. கடந்த முப்பது ஆண்டுகளில் நீங்கள் எழுதியவை பல்வேறு வகைமைகளில் சாரக்கூடிய ஒரு மிகப்பெரிய body of workஆக இருக்கின்றன. இதற்கெல்லாம் எப்படி நேரம் கிடைக்கிறது, அதைவிட, உங்கள் நீடித்த படைப்பூக்கத்தின் ரகசியம் என்ன?

சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், தி.ஜானகிராமன் போன்றோர் படைப்புகளில் தன்னெழுச்சிக்குத் தரும் முக்கியத்துவத்தை கிராஃப்டுக்கும் கொடுத்தார்கள். நீங்கள் எழுதத் தொடங்கிய காலகட்டத்தில் சிறுகதை என்பதை கிராஃப்ட் எனும் வடிவமாகப் பார்க்கும் போக்கும் அதிகமாக அமைந்திருந்தது இல்லையா?

பாவண்ணன்: சிறுகதையை ஒரு கிராஃப்டாக சுஜாதா சொன்னதுண்டு. அது எந்த விளைவையும் உருவாக்கியதில்லை. அவருடைய ஒரு விளக்கம் என்கிற அளவிலேயே அதை எல்லோரும் எடுத்துக்கொண்டார்கள். ஆனால் சிறுபத்திரிகை உலகில் அதே வாக்கியத்தைச் சொல்லி விவாதத்தை உருவாக்கியவர்கள் விமர்சகர்களும் விமர்சகர்களாக விரும்பியவர்களும். அது மட்டுமல்ல. எதார்த்தப் படைப்புகளுக்கு எதிர்காலமே கிடையாது, எல்லாம் இனி மாறிவிடும் என்றும் சொல்லப்பட்டது. நியூஸ் ரீல் எழுத்து என்று கேலி செய்யப்பட்டது. இலக்கிய எழுத்து, சாதாரண எழுத்து என்ற வேறுபாடெல்லாம் கிடையாது. எல்லாமே ஒன்றுதான். கிராப்ஃட் நுட்பத்தை வைத்துக்கொண்டு இதற்கு மாற்றான எழுத்துகளை உருவாக்குவதன் மூலம் தமிழிலக்கியத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல முடியும் என்றும் சொல்லப்பட்டது. மாயாஜால எழுத்து, அமைப்பியல் எழுத்து என்றெல்லாம் வகைமைகள் கிளம்பிவந்தன. ஆளுக்கொரு வெளிநாட்டு எழுத்தாளரின் பெயரை உச்சரித்தார்கள். நான் எல்லாவற்றையும் கவனித்தேன். பல சமயங்களில் வாயடைத்துப் போய் பார்த்திருக்கிறேன். நாம் கற்றதெல்லாம் எதுவுமில்லையோ என குன்றிப் போயிருக்கிறேன். அதை நான் மறைக்க விரும்பவில்லை. தடுமாற்றத்தில் தவித்திருக்கிறேன். ஓர் ஒற்றையடிப்பாதையில் எந்த அவசரமும் இல்லாமல் நாலாபக்கங்களிலும் வேடிக்கை பார்த்தபடி நடந்துபோய்க்கொண்டிருக்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்போது நமக்குப் பின்னால் இரண்டு சக்கர வண்டிகளும் நான்கு சக்கர வண்டிகளும் சர்புர்ரென்று சத்தமெழுப்பியபடி ஒன்றையடுத்து ஒன்றாக வருவதைப் பார்க்க நேர்ந்தால் எப்படி இருக்கும்? முதலில் அச்சத்தில் நடுங்கி எல்லாவற்றுக்கும் ஒதுங்கி வழிவிட்டு நின்றுவிடுவோம். அப்புறம் திகைப்போடு சில கணங்கள் வேடிக்கை பார்ப்போம். அதற்கடுத்து நாமே ஒரு தடத்தை உருவாக்கிக்கொண்டு நடந்துபோய்க்கொண்டே இருப்போம் அல்லவா? அதுபோலத்தான் நடந்தது. தொடக்கத்தில் அந்தப் பேச்சுகளும் விவாதங்களும் என்னைத் திகைக்கவைத்தன என்பதுதான் உண்மை. ஆனால் எதையும் வெறுக்க நினைக்கவில்லை. வெறுப்பது என் இயல்பே அல்ல. அதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்தேன். கிராப்ஃட்டுக்கும் மன எழுச்சிக்கும் உள்ள உறவு எத்தகையதாக இருக்கும் என ஒப்பிட்டு ஆய்வு செய்து பார்த்தேன். பாரதியாரின் கண்ணம்மா பாடல்களை பள்ளிக்கூடப் பாடத்தைப் படிப்பதுபோல ஒரு சிறுமி படித்துக்கொண்டு செல்வதைக் கேட்பதற்கும் ஒவ்வொரு வரியிலும் இழையோடும் பொருளை உள்வாங்கிக்கொண்டு உயிர்ப்போடு ஒரு பெண் பாடுவதைக் கேட்பதற்கும் வேறுபாடு உண்டு அல்லவா? ஒரு பாட்டைக்கூட, அதற்கே உரிய தன்னெழுச்சியோடு பாடப்படும்போதுதான் நம் மனசுக்கு உவப்பாக இருக்கிறது. இன்னும் ஒருமுறை பாடமாட்டார்களா, நாம் கேட்கமாட்டோமா என்று தோன்றுகிறது. பாடுகிறவருக்கு இருக்கக்கூடிய தன்னெழுச்சி, அந்தப் பாட்டை எழுதியவருக்கு அதைவிட கூடுதலாகவே இருக்கும். தன்னெழுச்சி இல்லாமலோ, மனம் திறக்காமலோ சொல் பிறப்பதில்லை. அந்தச் சொல்லை ஆற்றல் மிக்க சொல்லாக எழுதவேண்டும் என்பதுதான் ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் கனவாக இருக்கிறது. மந்திரம்போல சொல் வந்து விழவேண்டும் என்று வேண்டுகிறார் பாரதியார். என் வழி எனக்குத் தெளிவாகவே தெரிந்தது. நான் அந்த வழியிலேயே நடந்தேன்.

பதாகை: உங்களுடைய ஆரம்பகாலக் கதைகளிலிருந்து வாழ்க்கையை அதன் போக்கில் காட்டும் வடிவத்தை நீங்கள் சிரத்தையாக மேம்படுத்தி வந்துள்ளீர்கள் எனும்போது புனைவுகளில் சோதனை முயற்சிகளை உங்கள் மனம் எப்படி எதிர்கொண்டது?

பாவண்ணன்: புதுமையின்மீது எப்போதும் விருப்பம் கொண்டவன் நான். எண்பதுகளின் இறுதியிலும் தொண்ணூறுகளிலும் எழுதப்பட்ட சோதனைமுயற்சிகள் மிகமிகக் குறைவானவை. அவை புதுமையை நோக்கிய தாவல் அல்ல. வெறும் பாவனைகள். எவ்விதமான கலைவேட்கையும் இல்லாமல் மொழியார்வமும் இல்லாமல் முன்வைக்கப்பட்ட முதிரா முயற்சிகள். தடுமாற்றம் இருந்ததென்றாலும் நான் என் வழியிலேயே மிகமிக மெதுவாக நடந்துகொண்டே இருந்தேன். தேங்கி நின்றுவிடக்கூடாது என்பதனாலேயே என் மனத்தை அக்கணத்தில் மொழிபெயர்ப்பின் பக்கம் திருப்பினேன். அதே நேரத்தில் அம்முயற்சிகளைப் புரிந்துகொள்ளவும் முயற்சி செய்தபடி இருந்தேன். மரபான ஒரு வடிவம் தொடர்ச்சியாக கையாளப்பட்டு கையாளப்பட்டு, ஒரு கட்டத்தில் கைப்பழக்கமாகிவிடும்போது ஒரு சலிப்பு உருவாகும் அல்லவா? அந்தச் சலிப்பைக் கடந்துசெல்வது எப்படி என்பதுதான் பிரச்சினை. அது வெவ்வேறு விதங்களில் வெளிப்படுகிறது. அதைப் புரிந்துகொண்டதும், என்னளவில் அதை நான் எப்படிக் கடந்து செல்வது என்று யோசிக்கத் தொடங்கினேன். புதுமைப்பித்தனின் மொத்தத் தொகுப்பு வெளிவந்திருந்த சமயம் அது. அந்தத் தொகுப்பின் காலவரிசை அமைப்பு என் பிரச்சினைக்கு விடையாக இருந்தது. சலிப்பு என்பது ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் ஒவ்வொரு மொழியிலும் எப்போதும் இருக்கக்கூடிய ஒன்றுதான் என்னும் உண்மை உறைத்தது. அகச்சிக்கல் சார்ந்து சில கதைகளை எழுதி முடித்ததுமே, முற்றிலும் புற உலக விவரணைகள்சார்ந்து சில கதைகளை எழுதுகிறார் புதுமைப்பித்தன். சட்டென்று தொன்மம் சார்ந்து ஒரு கதை. பிறகு எப்போதோ ஒருமுறை திடீரென கனவுபோல விரியும் ஒரு கதை. அப்புறம் திடீரென நாட்டார்கதையின் சாயலைக் கொண்ட ஒரு கதை. சட்டெனத் திரும்பி புராணம்சார்ந்து ஒரு கதை. அப்புறம் மறுபடியும் அகம்சார்ந்த ஒரு கதை. அவருடைய கதைகளைப் பின்தொடர்ந்தபோது ஒரு குதிரைவீரனின் பயணத்தைத்தான் நினைத்துக்கொண்டேன். கிராமத்துச்சாலை, நகரத்துச்சாலை, மலைப்பாதை, காட்டுவழி, பாறைகள் அடர்ந்த பாதை, பாலைவனத்தின் பாதை என ஒவ்வொன்றாக கடந்துசென்றபடியே இருக்கிறான் குதிரைவீரன். அவர் எழுத்து ஒவ்வொன்றும் சோதனைதான். நான் செல்லவேண்டிய திசையின் விவரங்களை அத்தொகுப்பின் வழியாகவே அறிந்துகொண்டேன். நாட்டார்கதை, புராணம், தொன்மம் என என் மனம் தொடும் எல்லைவரையில் சென்று புதிய கதைகளை உருவாக்கினேன். முற்றிலும் புதியதொரு ஆட்டத்துக்கு என்னைத் தயார்ப்படுத்திக்கொண்ட புத்துணர்ச்சியை அக்கதைகளை எழுதியதன் வழியாக அடைந்தேன்.

பதாகை: இன்றைக்கு எழுத வரும் புதியவர்களின் கதைகளைத் தொடர்ந்து படித்து வருபவர் என்பதால் இந்த கேள்வி – பொதுவாக ஆரம்பகட்ட எழுத்தாளர்கள் புனைவு வடிவங்களில் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள் எனப்பரவலான குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது? சிறுகதைக்கான களன்களின் வறட்சி என இதை எடுத்துக்கொள்வதா அல்லது புதுமைக்கான விழைவாகவா?

பாவண்ணன்: ஆரம்பகட்ட எழுத்தாளர்கள் புனைவு வடிவங்களில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதை ஒரு பொது மதிப்பீடாக எடுத்துக்கொள்ள முடியாது. சமீபத்தில் பதாகை நடத்திய சிறுகதைப் போட்டிக்கு வந்த சிறுகதைகளைப் படித்தேன். புதிய புனைவு வடிவத்தில் ஆர்வமுள்ள படைப்புகளாக ஒன்றிரண்டு மட்டுமே இருந்தன. மற்ற கதைகள் அனைத்துமே மரபான வடிவத்தில் வாழ்வியல் அனுபவங்களையும் பாடுகளையும் முன்வைத்த சிறுகதைகள். கடந்த ஆண்டு ஜெயமோகன் தளத்தில் இருபது புதிய எழுத்தாளர்களின் படைப்புகளைத் தேர்ந்தெடுத்து வெளியிட்டிருந்தார். அவர்களிலும் இரண்டுமூன்று பேரைத் தவிர மற்ற எழுத்தாளர்கள் மரபான வடிவத்திலேயே தம் படைப்புகளை எழுதியிருந்தார்கள். ஆனால் பாதிக்கும் மேற்பட்டவை புத்தம்புதிய களன்களை உடையவை. நாம் எழுதாத களன்கள் ஏராளமானவை இன்னும் உள்ளன. கி.ரா. எழுதிய கோவில்பட்டி வேறு. பூமணி எழுதிய கோவில்பட்டி வேறு. நாளையே வேறொரு எழுத்தாளர் தோன்றி கோவில்பட்டியை எழுதத் தொடங்கினால், அவர் வேறொரு களனைக் காட்டமுடியும். களன்களுக்கு வாழ்க்கையிலும் பஞ்சமில்லை. கதைகளிலும் பஞ்சமில்லை. அதே சமயத்தில் புதிய வடிவத்தை நாடிச் செல்கிறவர்களின் விழைவு என்பது பிழையானதுமல்ல. அது ஒரு முயற்சி. புதிய களனை நாடும் விழைவு எந்த அளவு முக்கியமானதோ, அதே அளவு புதிய வடிவத்தை நாடும் விழைவும் முக்கியமானது. நம் நெஞ்சில் ஒளிரும் சுடரை அந்த அகல் தாங்கவேண்டும்.

pavannan

பதாகை: தமிழ் இலக்கிய சாதனைகள் சிறுகதைகளில் நிகழ்த்தப்பட்டுவிட்டன எனும் வாதத்தை ஏற்றுக்கொண்டால் இனி வரும் காலத்தில் கட்டுரை வடிவிலான கதைகளும், சுய அனுபவங்களை எவ்விதமான உட்புகுத்தலும் இல்லாது அந்தந்த வடிவிலேயே எழுதுவதும் சிறுகதைக்கான போக்காகக் கொள்ளலாமா?

பாவண்ணன்: ஒரு சாதனை நிகழ்த்தப்படும் கணத்துக்கு இணையாக, அந்தச் சாதனையைக் கடந்துசெல்லும் வேகமும் இயல்பாகவே நிகழ்கிறது. நிகழ்த்தப்பட்டுவிட்டன என ஓய்தல் என்பதே இல்லை. அது ஒரு தொடர் இயக்கம். புதிய புதிய புள்ளிகளை நோக்கி நம் பயணம் நிகழ்ந்தபடி இருக்கவேண்டும். கட்டுரை வடிவத்திலான கதைகளையும் சுய அனுபவங்களைக் கொண்ட கதைகளையும் எழுதும் போக்கு எதிர்காலத்தில் தொடரக்கூடும். ஆனால் அவை முக்கியப் போக்காக மாறாது. குறைந்தபட்சம் இன்னும் ஒரு ஐம்பது ஆண்டு காலத்துக்காவது இப்போது உள்ள மரபான கதைகூறல் போக்கே முக்கியப் போக்காகத் தொடரும் என்றே எண்ணுகிறேன். அதற்கான காரணம் இதுதான். நம் சமூகம் இன்னும் முற்றிலும் கல்வியறிவு பெறாத சமூகம். அறுபது விழுக்காடு, எழுபது விழுக்காடு என அரசாங்கப் புள்ளிவிவரம் சொன்னாலும் உண்மையான கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை அதைவிடக் குறைவானதாகவே இருக்கும். இவர்களில் இலக்கியத்தில் புழங்கக்கூடியவர்கள் மிகமிகக் குறைவானவர்களாகவே இருப்பார்கள். அடுத்த ஆண்டே இந்த எண்ணிக்கையில் ஐந்து விழுக்காடு அதிகரிக்கிறது என வைத்துக்கொள்வோம். அதிகரிக்கும் அந்தக் கூட்டத்தில் இலக்கியத்தில் புழங்கக்கூடியவர்களாகவும் நமக்குச் சிலர் கிடைப்பார்கள். அவர்களில் எழுதுபவர்கள் சிலராகவும் படிப்பவர்கள் சிலராகவும் இருக்கலாம். அவ்வாறு எழுத்தைத் தொடங்கும் சிலர் புதுமைப்பித்தனிலிருந்துதான் தொடங்குவார்கள். அதுதான் இயற்கையாக இருக்கும். அவர் தொடங்கிவைத்த கதைப்போக்கிலிருந்துதான் தொடங்கமுடியும். அந்தப் பயணம்தான் அவர்களுக்கு எளிதானதாக இருக்கும்.

பதாகை: இந்திய இலக்கியங்களில் தமிழ் சிறுகதையின் வளர்ச்சி எப்படி இருக்கிறது? தமிழ் புனைவுகளில் உச்சகட்ட சாதனையாக சிறுகதை வடிவத்தைப் பார்க்கலாமா?

பாவண்ணன்: தமிழ்ச்சிறுகதைகளின் வளர்ச்சி பெருமைக்குரியதாகவும் மகிழ்ச்சிக்குரியதாகவும் இருக்கிறது என்றே சொல்வேன். ஆனால் அதை எழுத்தில் எழுதி நிறுவுவதற்கு தன்னலமற்ற ஓர் ஒப்பீட்டாய்வு நிகழவேண்டும். அப்படி நிகழ்வதற்கான சாத்தியம் இருப்பதாகவே தெரியவில்லை. சாகித்ய அகாதெமி வழியாக ஆங்கிலத்திலும் இந்தியிலும் வெளிவரும் காலாண்டிதழ் இந்திய மொழிகளின் கவிதை, சிறுகதைகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. கடந்த பத்தாண்டுகளில் நாற்பது இதழ்கள் வந்துள்ளன. ஒரு இதழில் ஐந்து முதல் எட்டு சிறுகதைகள் வரை வெளிவருகின்றன. ஐந்து என்றே எடுத்துக்கொண்டாலும் இருநூறு சிறுகதைகள் வெளிவந்துள்ளன. இந்த இருநூறு சிறுகதைகளில் எத்தனை சிறுகதை தமிழ்க்கதையாக இருக்கும் என எண்ணுகிறீர்கள்? இரண்டு அல்லது மூன்று இருக்கலாம். அவ்வளவுதான். தமிழல்லாத ஓர் இந்திய எழுத்தாளன் எந்தப் படைப்பு முயற்சியும் இல்லாத மொழி என்றே தமிழை நினைக்கிறான். காரவன் ஆங்கில இதழிலும் இருபது இருபத்தைந்து பக்கங்கள் மாநில மொழிப்படைப்புகளுக்காக ஒதுக்கப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக நான் அதைப் படித்து வருகிறேன். என் கண்ணில் ஒருமுறை கூட தமிழ்ப்படைப்பு தென்பட்டதில்லை. நாமே எழுதி, நாமே படித்து, நாமே பாராட்டிக்கொள்கிறோம். இந்திய அளவில் வாசகர்களைப் பெறுவது என்பது சந்தைப்படுத்துதல் சார்ந்த ஒரு செயல்பாடு. அதில் ஓர் எழுத்தாளனாக செய்வதற்கு ஒன்றுமில்லை என்றபோதும் இந்த இடத்தில் சொல்லத் தோன்றுகிறது.

இன்றைய புனைவு வடிவங்களில் சாதனை என்பது நாவல் என்பதே என் எண்ணம். கடந்த நூற்றாண்டில் முதல் பாதியில் கவிதை மாபெரும் சாதனையாக இருந்தது. இரண்டாவது பாதியை சிறுகதை வசப்படுத்திக்கொண்டது. இரண்டாயிரத்துக்குப் பிறகான காலம் என்பது நாவல்களின் காலம் என்றே சொல்லவேண்டும்.

பதாகை: ’பொம்மைக்காரி’ சிறுகதைத் தொகுப்பு முன்னுரையில் “..பல சிறுகதைகளை ..நிகழ்காலக் காட்சிகள் அளித்த மன எழுச்சியால் இறந்தகாலத்தைத் தேடிப்போன கதைகள்” என வகைப்படுத்தியுள்ளீர்கள். இதை இன்னும் விரிவாகச் சொல்லமுடியுமா?

bommaikari

பாவண்ணன்: ஏதேனும் ஒரு அகத்தூண்டுதல்தான் ஒரு படைப்பை எழுதவைக்கிறது. எழுதத் தொடங்கும்வரை என்ன எழுதப் போகிறேன் என எந்த வரையறையும் உருவாவதில்லை. தன்னிச்சையாக கண்ணில் படும் ஏதோ ஒரு காட்சியால் தூண்டப்படும் தருணத்தில் வீணை நரம்பென மனம் அதிர்ந்து உத்வேகம் கொள்கிறது. அதுவே எழுத்து தொடங்கும் தருணம். இதில் வேடிக்கை என்னவென்றால், உத்வேகத்துக்குக் காரணமாக இருந்த காட்சியை எழுதிய தருணங்கள் குறைவானவை என்றே சொல்லவேண்டும். அந்தக் காட்சி நம் மனத்தின் நினைவடுக்குகளில் எங்கோ ஒரு மூலையில் ஒடுங்கியிருக்கும் இன்னொரு காட்சியை இழுத்துவந்து நிறுத்திவிடும். முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் நிகழ்ந்த சம்பவம், புத்தம்புதுசாக அன்று காலையில் நிகழ்ந்ததுபோல மீண்டும் நிகழும். ஒரே கணத்தில் அவற்றை இணைக்கும் சரடும் தர்க்கமும் முரணும் கூடிவந்துவிடும். அப்புறம் அந்தப் படைப்பை எழுதுவது எளிதாக இருக்கும். பொம்மைக்காரி தொகுதியில் உள்ள கதைகள் பாதிக்கும் மேல் அப்படிப்பட்டவை. ஒரு கதை உருவான விதத்தை முன்வைத்துச் சொன்னால் உங்களால் எளிதில் புரிந்துகொள்ளமுடியும். ஒருமுறை விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நண்பரொருவரைப் பார்த்துவிட்டு வருவதற்காகச் சென்றிருந்தேன். பார்வையாளர் நேரத்துக்கு முன்னாலேயே சென்றுவிட்டதால் வாசலில் நின்று வருகிறவர்களையும் போகிறவர்களையும் வேடிக்கை பார்த்தபடி இருந்தேன். அப்போது அவசர சிகிச்சைப் பிரிவின் வாசலில் வண்டியொன்று வந்து நின்றது. அதிலிருந்து ஸ்ட்ரெச்சரில் கிடத்தப்பட்டிருந்த ஒரு பெண்மணியை கீழே இறக்கி உள்ளே கொண்டு சென்றார்கள். ஒருசில நொடிகள்தான் அவரைப் பார்த்தேன். என் நெஞ்சே வெடித்துவிடும்போல இருந்தது. தோளிலிருந்து ஒரு பக்கம் முழுதும் தீக்காயங்கள். புவனா புவனா என்று யாரையோ பெயர்சொல்லி அலறிக்கொண்டே இருந்தார். அடிவயிற்றிலிருந்து எழுந்த அந்த அழுகை மனத்தை உருக்குவதாக இருந்தது. மீண்டும் மீண்டும் அந்த ஒரே சொல். இடைவிடாத அழுகை. அலறல். அவ்வளவுதான். அவரை உள்ளே அழைத்துச் சென்றுவிட்டார்கள். என்ன விஷயம் என்று பக்கத்தில் சென்று கேட்டேன். தீவிபத்து என்று மட்டுமே சொன்னார்கள். அந்த உருவமும் குரலும் மீண்டும்மீண்டும் மனத்தில் வந்துகொண்டே இருந்தன. பொதுவாக வலிதாளாது அழுகிறவர்கள் அம்மா என்று சொல்லி அழுவதைத்தான் பார்த்திருக்கிறோம். அந்தப் பெண்மணி புவனா என்று சொல்லி அழுததற்கான காரணம் என்னவா இருக்கும் என்பதுதான் என் முதல் யோசனையாக இருந்தது. ஒருவேளை அது அவள் குழந்தையின் பெயராக இருக்கலாம். அந்தக் குழந்தையின் பெயர்தான் புவனாவாக இருக்கவேண்டும் என்று தோன்றியது. விபத்தில் இழந்துவிட்ட குழந்தையைத்தான் அவள் அழைத்தபடி இருக்கிறாளோ என்னமோ என்று தோன்றியது. அப்படி வகுத்துக்கொண்ட சமாதானமெல்லாம் ஒரே ஒரு கணம்தான். அடுத்த கணமே அது குலைந்துவிட்டது. விபத்தில் அந்தக் குழந்தையை இழந்திருந்தால், அந்தக் குழந்தையும் மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டிருக்க வேண்டும் அல்லவா. ஆனால் வண்டியில் அந்தப் பெண்மணி மட்டும்தானே இருந்தாள். இப்படி கேள்விகள் கிளைவிட்டு கிளைதாவி போய்க்கொண்டே இருந்தன. இரவு முழுதும் அதே சிந்தனை. மறுநாள் காலைநடையின்போதும் அதே சிந்தனை. வீட்டுக்குத் திரும்பும் சமயத்தில் அந்தப் பெண்மணியை மறந்து, அந்த தீவிபத்தைப்பற்றி நினைக்கத் தொடங்கினேன். ஏதோ ஒரு கணத்தில் இருபதாண்டுகளுக்கு முன்பாக நான் நேருக்கு நேர் பார்த்த தீவிபத்தின் காட்சிகள் நினைவுக்கு வந்தன. அப்போது நான் துங்கபத்திரை நதிக்கரையோரம் ஒரு வாடகைவீட்டில் வசித்துவந்தேன். கால்வாயின் மற்றொரு பகுதியில் தொழிலாளர்கள் குடியிருப்பு இருந்தது. பெரும்பாலும் தமிழர்களும் தெலுங்குமொழி பேசுகிறவர்களும் வாழ்ந்த பகுதி. நள்ளிரவு நேரத்தில் அங்கே தீவிபத்து நிகழ்ந்துவிட்டது. அதற்கு முதல்நாள்தான் அங்கே வசிக்கும் ஒருவரைச் சந்தித்துவிட்டு வந்தேன். நூற்றுக்கணக்கான குடிசைவீடுகள் எரிந்துவிட்டன. நானும் நண்பர்களும் ஓடினோம். நெருங்கமுடியவில்லை. புகைமண்டலம். வெப்பம். ஒருவித இயலாமையுடன் அந்த ஓலங்களையும் கூக்குரல்களையும் கேட்டபடி நின்றிருந்தோம். தீயணைக்க வந்த வண்டிகளுக்குத் தேவையான உதவிகள் செய்தோம். வந்து நின்ற அவசர ஊர்திகளில் ஆபத்தான கட்டத்தில் உள்ளவர்கள் ஏற்றப்பட்டார்கள். அலறி அலறி தன் வலிமையெல்லாம் குன்றி ஒரு கேவலைமட்டும் எழுப்பியபடி இருந்த ஒரு பெண்மணியை தூக்கிவந்து ஏற்றினார்கள். அவர்களுடைய குழந்தை விபத்தில் இறந்துவிட்டது என்று நண்பர்கள் சொன்னார்கள். அந்த அம்மாவின் முகம் எனக்கு அருகில் தெரிவதுபோல இருந்தது. நான் எழுதவேண்டிய கதையின் தொடக்கம் அக்கணத்திலேயே முடிவாகிவிட்டது. இந்த விசித்திரம் வழங்கும் பரவசமும் பதற்றமும் புரிந்துகொள்ளமுடியாதவை. ஆனால் ஒரு எழுத்தாளனாக நான் மீண்டும்மீண்டும் சென்று நிற்க விரும்பும் புள்ளி அது. அப்படிப்பட்ட சின்னச்சின்ன கணங்களே இந்த வாழ்வின் அற்புதக்கணங்கள். நிகழ்கால மனஎழுச்சியால் இறந்தகாலத்தைத் தேடிப்போகும் பயணம் என இதையே குறிப்பிடுகிறேன். இப்படி ஒவ்வொரு கதைக்குப் பின்னாலும் ஒரு கதை இருக்கிறது.

பதாகை: இது தொடர்பாக இன்னொரு கேள்வி. ஒரு எழுத்தாளனின் நேரடி அனுபவங்கள் அவனது படைப்பில் எப்படி வெளிப்படுகின்றன, எதை எடுத்து எதை விடுகிறான், அனுபவம் எப்படி புனைவாக மாறுகிறது?

பாவண்ணன்: இது பதில் சொல்வதற்கு சற்றே சிக்கலான கேள்வி. தீவிபத்து சம்பவத்தின் ஞாபகத்தைப் புரட்டி எழுதிய ‘பொம்மை’ கதையையே எடுத்துக்கொள்ளுங்கள். அந்தச் சம்பவம் மட்டுமே அந்தக் கதையில் இல்லை. ஒரு மையத்துக்குத் தேவையான பல விஷயங்களும் அந்தக் கதைக்குள் வந்துவிட்டன. எல்லாமே ஒரு மனப்பழக்கத்தில் வந்துவிடுகின்றன.

பதாகை: பதினைந்துக்கும் மேற்பட்ட சிறுகதைத் தொகுப்புகள், நான்கு நாவல்கள், பதினெட்டு கட்டுரைத் தொகுப்புகள், இருபதுக்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்பு நூல்கள், சாகித்திய அகாதெமி உட்பட ஐந்து விருதுகள். இத்தனை தீவிரமாக எழுத்தில் இயங்கும் படைப்பாளிகளை கைவிட்டு எண்ணிவிடலாம். இப்போது திரும்பிப்பார்க்கும்போது உங்கள் ஒட்டுமொத்த இலக்கியப் பயணத்தைப் பற்றி உங்கள் எண்ணம் என்ன? உங்களுடைய பங்களிப்பைத் தாண்டி தமிழ் இலக்கியத்தின் இடம் எவ்விதம் நகர்ந்திருப்பதாக உணர்கிறீர்கள்?

பாவண்ணன்: நீங்கள் கேட்பது கிட்டத்தட்ட ஒரு சுயமதிப்பீடு. என் பயணம் எனக்கு நிறைவாகவே இருக்கிறது. என் எதிர்பார்ப்புகள் எப்போதும் பெரிதானவை அல்ல. ஒரு வாய் தண்ணீர் என்றொரு கவிதை என் முதல் கவிதைத்தொகுதியில் இருக்கிறது. நான் எதிர்பார்ப்பதெல்லாம் என் களைப்புக்கு ஒரே ஒரு வாய் தண்ணீர். அது எங்காவது ஒரு இடத்தில் எனக்குக் கிடைத்தபடியேதான் இருக்கிறது. யாரோ முகம்தெரியாத ஒருவர் கொடுத்துவிட்டுச் செல்கிறார். அது போதும் எனக்கு. என்னை இந்த மொழியில் நிறுவிக்கொள்ளவோ அல்லது நிரூபித்துக்கொள்ளவோ நான் எழுதத் தொடங்கவில்லை. என் பாரத்தை கரைக்க அல்லது மறந்து கடந்துசெல்ல எழுத்தை நான் அருந்துணையாகக் கொள்கிறேன். பல ஆண்டுகளுக்கு முன்பாக படித்த மா.அரங்கநாதனின் சிறுகதையொன்று நினைவுக்கு வருகிறது. அதன் பெயர் ’சித்தி’ என்று நினைக்கிறேன். ஓடுவதில் மிகவும் விருப்புமுள்ள இளைஞன் ஒரு பயிற்சியாளனால் கண்டடையப்பட்டு மாபெரும் ஓட்டப்பந்தய வீரனாக உருவாக்கப்படுகிறான். அவன் காலடித்தடம் படாத மலைப்பாதையே இல்லை. உலக அளவில் நிகழும் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொள்ளும் வீரர்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. அதில் அவனும் கலந்துகொள்கிறான். அவன் பெயர்தான் தேர்வாகும் என எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள். கிட்டத்தட்ட அப்படித்தான் நிகழப்போகிறது என எல்லோரும் கணித்திருக்கிறார்கள். அப்போது ஊடகங்கள் அவனிடம் ஒரு நேர்காணல் எடுக்க வருகிறார்கள். ஏன் ஓடுகிறீர்கள், எதற்காக ஓடுகிறீர்கள், ஓடும்போது எப்படி உணர்கிறீர்கள் என்றெல்லாம் மாறிமாறி கேள்வி கேட்கிறார்கள். இவன் எல்லாக் கேள்விகளுக்கும் பொறுமையாக ‘எனக்குப் பிடித்திருக்கிறது, அதனால் ஓடுகிறேன்’ ’எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது, அதனால் ஓடுகிறேன்’ ‘என் மனம் நிறைவாக உணர்கிறது, அதனால் ஓடுகிறேன்’ என்றெல்லாம் பதில் சொல்கிறான். ஊடகங்கள் எதிர்பார்க்கும் பதில்களோ, ‘என் தேசத்துக்காக ஓடுகிறேன்’ ‘என் தேசத்தின் பெருமைக்காக ஓடுகிறேன்’, ‘என் தேசத்தின் கெளரவத்தை உலக அரங்கில் நிலைநாட்டுவதற்காக ஓடுகிறேன்’ என்பவை போன்றவை. அவன் பயிற்சியாளரும் அதைத்தான் எதிர்பார்க்கிறார். அப்படிப்பட்ட பதில்கள்தான் அவனை களத்தில் வாய்ப்பு கிடைக்க உதவும் என்று நினைக்கிறார். அவனுடைய மாறுபட்ட பதில்கள் அவரை அமைதியிழக்கவைக்கின்றன. அமைதியில்லாமலேயே அவனை காரில் ஏற்றிக்கொண்டு ஊருக்குத் திரும்புகிறார். அப்போது முழுநிலா வானில் சுடர் விடுகிறது. அவன் பூரித்த மனத்துடன், இந்த நிலவொளியில் ஓடினால் எப்படி இருக்கும் என்று மகிழ்ச்சியோடு சொல்கிறான். அவர் கோபத்தின் உச்சியில் சட்டென்று காரின் கதவைத் திறந்து ’இறங்கு, இறங்கி ஓடி வா’ என்று சொல்லிவிட்டு அவனை இறக்கிவிடுகிறார். அவன் அவருடைய சொல்லில் உள்ள சீற்றத்தையும் கிண்டலையும் புரிந்துகொள்ளாமல் சட்டென்று இறங்கி நிலவொளியில் மின்னும் பாதையில் ஓடத் தொடங்குகிறான். அந்த முத்துக்கறுப்பனின் மனநிலைதான் எனக்கும். என் மனத்தை உற்சாகத்தால் நிறைத்துக்கொள்வதற்கும் கரைத்துக்கொள்வதற்கும் எனக்குள்ள, எனக்குத் தெரிந்த ஒரே வழி எழுத்து மட்டும்தான். தமிழிலக்கியத்தில் என்னுடைய பங்களிப்பு மிகமிகச் சிறியதுதான். அதை பெரிதாக ஒருபோதும் நான் கருதியதில்லை. கங்கைபோல, யமுனைபோல, காவேரிபோல தமிழிலக்கியம் ஒருபோதும் வற்றாது ஓடிக்கொண்டே இருக்கும் ஒரு பேராறு. அதன் கரையில் கால்களையும் கைகளையும் நனைத்து குளிர்ச்சியில் மனம் திளைத்தபடியும் கணந்தோறும் மாறும் அதன் அழகைச் சுவைத்து மனம் பறிகொடுத்தபடியும் காலம் கழிக்கும் பயணியாகவே என்னை நினைத்துக்கொள்கிறேன்.

பதாகை: உங்கள் முதல் நாவல் “வாழ்க்கை ஒரு விசாரணை”. வாழ்க்கையின் பலதரப்பட்ட முகங்களைக் காட்டும் படைப்பு எனப் பல விமர்சனங்கள் சொன்னாலும், மையக்கருத்தாக நான் நினைத்தது – மனிதர்கள் எப்படி தங்கள் நிலைப்பாடுகளைத் தொடர்ந்து மாற்றிக்கொள்ளத் தயாராக இருக்கிறார்கள், சரி-தவறு எனக் கொள்ளாது எப்படி வாழ்வதற்கானப் பாதையை மிக இயல்பாகத் தேர்ந்தெடுக்கிறார்கள். உங்கள் படைப்புகளில் தொடர்ந்து இது பேசுபொருளாக அமைந்திருக்கிறது. இது உங்கள் வாழ்க்கைப்பார்வை எனக்கொள்ளலாமா?

பாவண்ணன்: அவற்றைத் தொடக்கவரிகளாகக் கொண்டு இன்னும் சில வரிகளையும் சேர்த்துக்கொள்ளலாம். அறம் கடைபிடிக்கமுடியாத ஒன்றாக, அதே சமயத்தில் கடந்து செல்வதை கறாராகத் தடுக்காத ஒன்றாகவும் இருக்கும் அம்சம் வாழ்வின் மிகப்பெரிய விசித்திரம். அந்த விசித்திரத்தை மீண்டும்மீண்டும் கண்டடைந்தபடியே இருக்கிறேன். அறம் என்னும் நூல்வேலிக்குள் வாழமுடியாத அவஸ்தைகளை வெறும் அறத்தின் அலகுகளால் மட்டுமே மதிப்பிட்டுவிடமுடியாது. விசை= எடைx வேகம் என்னும் சூத்திரம்தான் நினைவுக்கு வருகிறது. ஒருபக்கம் ஓர் அலகை வைத்த இயற்கை இன்னொரு பக்கம் இரண்டு அலகுகளை வைத்து விளையாடுகிறது. எடையோ வேகமோ மாறும் தருணத்தில் விசையும் மாறிவிடுகிறது. நூல்வேலிக்குள் வாழமுடியாத அவஸ்தைகளை இப்படித்தான் புரிந்துகொள்கிறேன். இப்படி இன்னும் கொஞ்சம் சொல்லலாம் என்று தோன்றுகிறது.

பதாகை: உங்கள் “வாழ்க்கை ஒரு விசாரணை” நாவலில் வரும் காளியப்பன் மிக யதார்த்தமான பாத்திரமாக வந்துள்ளான். திருடி மாட்டிக்கொள்ளும் தம்பி, திருட்டுப்பழி சுமத்திய பண்ணையார், காசுக்கு விசாரணை செய்யும் போலீஸ்காரர்கள், ஓடிப்போனாலும் பணத்தை அனுப்பும் தம்பி என அவனைச் சுற்றிய உலகம் கருணையும் கொடூரமும் நிரம்பியது. அவற்றில் மிதக்கும் ஓடம் போல காளியப்பன் செல்கிறான். அப்படி ஒரு யதார்த்தத்தை தன்மீது படரவிட்டுக் கிடக்கும் சாத்தியம் இக்கால மனிதனிடம் உள்ளதா? இன்னொரு விதமாகக் கேட்கவேண்டுமென்றால் காளியப்பன் இந்த சமூகத்துக்குக் கொடுப்பது என்ன?

பாவண்ணன்: பெங்களூரில் எலெக்ட்ரானிக் சிட்டியைப்பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த மாபெரும் நகரத்தின் தகவல்தொழில் நுட்ப நிறுவனங்களில் பெரும்பாலானவை இங்கேதான் உள்ளன. எப்போதும் நெரிசலான சாலைகள். பரபரப்பான மனிதர்கள். வாகனங்கள். மடிவாளா என்பது இருபது கிலோமீட்டர் தொலைவில் உள்ள இன்னொரு பகுதி. முக்கியமான காய்கறிச்சந்தை மையம். அக்கம்பக்கத்து கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளும் சிறுவியாபாரிகளும் தம் விளைபொருட்களைக் கொண்டுவந்து விற்றுவிட்டுச் செல்லும் இடம். இங்கும் நெரிசலான சாலைகள். பரபரப்பான மனிதர்கள். வாகனங்கள். எலெக்ட்ரானிக் சிட்டியைச் சேர்ந்தவர்கள் மடிவாளா பகுதியை உயர்வானதாகக் கருதுவதில்லை. மடிவாளா பகுதியைச் சேர்ந்தவர்கள் எலெக்ட்ரானிக் சிட்டியை உயர்வானதாகக் கருதுவதில்லை. எலெக்ட்ரானிக் சிட்டியில் வசிப்பவர்கள் பெரும்பாலும் மேல்நடுத்தட்டு, உயர்தட்டுப் பிரிவினர்கள். மடிவாளாவின் இருப்பவர்கள் பெரும்பாலும் கீழ்நடுத்தட்டு, கீழ்த்தட்டுப் பிரிவினர்கள். இருவரும் இருமுனைகள். ‘மடிவாளாவ தாண்டி ஊருக்குள்ள போவதற்குள் உயிர்போய் உயிர் வருகிறது’ என்று சொல்வார்கள் மடிவாளாகாரர்கள். ‘எலெக்ட்ரானிக் சிட்டிய தாண்டி போவதற்குள் உயிர்போய் உயிர் வருகிறது’ என்று சொல்வார்கள். இவர்களால் சமூகத்துக்கு என்ன பங்களிப்பு இருக்கிறது என்று கேட்பார்கள் அவர்கள். அவர்களால் சமூகத்துக்கு என்ன பங்களிப்பு இருக்கிறது என்பார்கள் இவர்கள். ஒருவர் கூற்றை ஏற்று இன்னொரு கூட்டத்தை நிராகரித்துவிட முடியுமா என்ன? இருவருடைய பங்களிப்பும் சமூகத்துக்குத் தேவை அல்லவா? இரண்டும் இருவேறு விசைகள். பங்களிப்பு என்பது எல்லாத் தரப்பினர்களாலும் நேர்முகமாகவோ மறைமுகமாகவோ வழங்கப்படுவது என்பதற்காக சற்றே விரிவாகச் சொல்லவேண்டியதாகப் போய்விட்டது. இதைப் புரிந்துகொண்டால் காளிப்பனை இன்னும் நெருக்கமாகப் புரிந்துகொள்ளமுடியும் என்பதால் இந்த எடுத்துக்காட்டைச் சொல்ல விரும்பினேன். இந்தச் சமூகத்தில் சட்டம் செயல்படாமல் இருக்கும் ஒரு தருணத்தை, அறம் பிழைத்துவிட்ட ஒரு தருணத்தை அடையாளம் காட்டுவதற்காக உள்ள ஒரு சாட்சி காளிப்பன். அறம், அதற்குச் சாதகமான சாட்சிகளால் மட்டும் நினைவூட்டப்படுவதில்லை. பலியாகிவிழும் சாட்சிகளாலும் நினைவூட்டப்படுகிறது அல்லவா?

 

நிர்மால்யா மற்றும் ஜெயமோகனுடன்

பதாகை: மனிதர்களின் அலைக்கழிப்புகள், துயரம் போன்ற வாழ்வாதாரப்பிரச்சனையைப் பற்றிப் பேசுவது இலக்கியம் என ஒரு தரப்பு உண்டு. புனைவுகளில் வெளிப்படும் உண்மைக்கும், நம்மை சூழ்ந்துள்ள வாழ்வின் நிதர்சனத்துக்கும் இருக்கும் வேறுபாடுகளைப் பற்றி உங்களது கருத்து என்ன?

பாவண்ணன்: புனைவுகளில் வெளிப்படும் உண்மை , நிதர்சனத்தின் ஒரு சின்ன அலகு மட்டுமே. இதில் சந்தேகமே இல்லை. ஆனால் உண்மையிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட அந்த அலகு எப்படிப்பட்ட அலகு என்பது மிகவும் முக்கியம். சிறகிலிருந்து பிரிந்து, காற்றின் தீராத பக்கங்களில் தன் வாழ்வை எழுதிச் செல்லக்கூடிய இறகாக இருப்பின் அது மிகமிக முக்கியம். வாழ்வின் முக்கியமான ஒரு தருணத்தையே எப்போதும் புனைவு தன் மையமாகக் கொள்கிறது. அந்த முக்கியத்தன்மையாலேயே அது தன் இலக்கியப்பரப்பில் தன்னை நிறுவிக்கொள்கிறது. எடுத்துக்காட்டாக, இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் சமயத்தில் எழுதப்பட்ட மண்டோவின் சிறுகதைகளை எடுத்துக்கொள்ளுங்கள். பொது நிதர்சனம் என்பது எல்லோரும் அறிந்ததுதான். மதக்கலவரங்களால் நேர்ந்த அழிவின் சித்திரம் ஒரு பெரிய கொடுங்கனவு. அந்த அலங்கோலக் கொடுமைகளிலிருந்து மண்டோ தன் கதைகளுக்காக எடுத்துக்கொள்ளும் ஒவ்வொரு உண்மையும் நிதர்சனம் பிடித்த கொடியின் நிறத்துக்கு மாறானதாக இருப்பதை உணரலாம். பாத்திரத்தை அவர் இந்து என்றும் இஸ்லாமியன் என்று வகுத்துக்கொண்டாலும், ஓர் அடையாளமாக மட்டுமே அதைப் பயன்படுத்துகிறார். அவர் சுட்டிக் காட்ட விழைவது எப்போதும் மானுடம் கடந்த உணர்வாகவே இருக்கிறது. ’சஹாய்’ அவருடைய சிறுகதைகளில் முக்கியமான ஒரு கதை. ஓர் இஸ்லாமியக் குடியிருப்புக்கு அருகில், இஸ்லாமியர்களால் சுடப்பட்டு சாகும் தறுவாயில் இருக்கும் ஓர் இந்து நண்பனும் அவனுக்கருகில் செல்லும் இஸ்லாமிய நண்பனும் உரையாடும் இறுதிக்கணத்தையே மண்டோ தன் கதைக்காகத் தேர்ந்தெடுத்துக்கொள்கிறார். இந்து நண்பன் ஒரு காமத்தரகன். இந்து, இஸ்லாம் என மதத்தைக் கடந்து தொழிலில் ஈடுபட்ட பெண்களுக்கு நல்ல விலையைப் பெற்று வருமானத்துக்கு வழிவகுத்துக்கொடுக்கக்கூடிய தரகன் அவன். புரளக்கூட முடியாமல் கண்ணைத் திறந்து ‘பக்கத்தில் வா’ என்று அழைப்பவனுக்கு அருகில் செல்ல தயங்குகிறான் அவன். எங்கே காப்பாற்றச் சொல்லி உதவி கேட்டுவிடுவானோ என்று நடுங்குகிறான். ஓடிச் செல்லவும் அவனால் முடியவில்லை. மனசாட்சியின் குத்தல் தடுக்கிறது. ஒருவித தவிப்புடன் நெருங்கி குனிந்ததும், தன் கோட்டுப் பையில் ஒரு நகைப்பொட்டலம் இருக்கிறதென்றும் அதைப் பாதுகாப்பாக எடுத்துச் சென்று விலைமகள் சுல்தானாவிடம் சேர்த்துவிடு என்றும் சொல்லிவிட்டு உயிர் துறக்கிறான். பொது நிதர்சனம் மதச்சண்டைகளையும் மரணங்களையும் புள்ளிவிவரங்களாக மாற்றிவிடுகின்றன. புனைவுக்காக எடுத்தாளப்படும் உண்மை மதம் கடந்த மானுட உணர்வை முன்வைக்கிறது. தாமரை சேற்றில் பிறக்கிறது என்றாலும் சேற்றின் குணமோ மணமோ ஒருபோதும் அதற்கில்லை என்பது சொல்லிச்சொல்லி பழசாகிவிட்ட உவமை. ஆனாலும் இந்த நேரத்தில் அதுதான் நினைவுக்கு வருகிறது. பொதுநிதர்சனம் சேறு என்றால், புனைவு தன் மையமாகத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் உண்மை ஒரு தாமரை.

பதாகை: காலங்காலமாக இலக்கியகர்த்தாக்கள் இலக்கியத்தின் லட்சியத்தைப் பற்றி பேசுகிறார்கள். எதை முன்வைப்பதாக இருக்கவேண்டும் இலக்கியமும் கலையும்? அவற்றை முன்வைக்குமளவு இலக்கியம் முக்கியமானதா?

பாவண்ணன்: சமூகத்தில் ஒருவருடன் இன்னொருவர் உரையாடிக் கொள்ளவும் கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளவுமான கருவியாக மனிதன் மொழியைக் கண்டடைந்தான். எழுத்து பழகியதும் எழுத்துக்கும் எண்ணத்துக்கும் இடையிலான இணைப்பையும் புரிந்துகொண்டான். நாளடைவில் இலக்கியம் உருவானது. சமூகத்தின் முகமாக, கண்ணாக அது வளர்ச்சியடைந்தது. ஒரு புனைவு என்பது முக்கியமான ஒரு வாழ்க்கைத்தருணம். வாழ்க்கையைப்பற்றிய மதிப்பீடுகளும் விமர்சனங்களும் அதில் உள்ளது. ஓர் எழுத்தாளன் ஆயிரக்கணக்கான வாழ்க்கைத்தருணங்களை தன் வாழ்நாளில் எழுதுகிறான். இப்படி பல நூறு எழுத்தாளர்கள் இடைவிடாமல் தொடர்ந்து எழுதி எழுதியே இலக்கியம் உருவாகிறது. எண்ணிப் பாருங்கள். கோடிக்கணக்கான வாழ்க்கைத்தருணங்கள் எவ்வளவு மகத்தான தொகை. குறுக்குவெட்டாக, அது இந்தச் சமூகத்தின் இன்னொரு முகத்தைப் புரிந்துகொள்ள உதவுகிறது. இலக்கியங்கள் இலட்சியங்களைத்தான் முன்வைக்கவேண்டும் என கறாரான விதியொன்றும் இல்லை. இலக்கியம் இந்த மண்ணின் மீதுள்ள எதைப்பற்றியதுமாகவும் இருக்கலாம். அதற்கு எவ்விதமான கருத்துத்தடையும் இல்லை. அது இலக்கியமாக நிலைத்திருக்கும் அளவுக்கு இலக்கிய அழகியல்களோடு இருந்தால் போதும். இலக்கியம் முக்கியமானதா என்ற கேள்விக்குப் பதிலாக மகாபாரதம் முக்கியமானதா என்றொரு கேள்வியை நமக்கு நாமே கேட்டுப் பார்த்துக்கொள்ளலாம். பாரதத்தில்தான் எத்தனை எத்தனை அரிய மானுட உச்சங்கள். தியாகங்கள். வெற்றிகள். தோல்விகள். அவமானங்கள். சூளுரைகள். குடிவரலாறுகள். குலவரலாறுகள். நேற்றைய உலகத்தைப் புரிந்துகொள்ள பாரதத்தைப் படிப்பது தவிர வேறு வழியே இல்லை. மகாபாரதம் முக்கியமானது என்னும் முடிவை அப்போது நம் மனம் ஏற்றுக்கொள்வதை உணரலாம். நேற்றைய வரலாற்றையும் வாழ்க்கையையும் புரிந்துகொள்ள மகாபாரதம் முக்கியமானது எனில், இன்றைய வாழ்க்கையையும் வரலாற்றையும் புரிந்துகொள்ள நாளைய தலைமுறைக்கு இலக்கியம் துணையாக இருக்காதா என்ன?.

பதாகை: செகாவின் சிறுகதை “பச்சோந்தி” உங்களை மிகவும் பாதித்த கதையாகச் சொல்லியுள்ளீர்கள். அது ஒரு கசப்பானக் கதையல்லவா? வாழ்க்கையில் நடப்பவற்றுக்கு நேரடியாகக் காரணம் கண்டுபிடிக்க இயலாது, ஏதோ ஒரு மறைமுகமான கை ஆட்டுவிப்பதுபோல. உலக இலக்கியத்தில் இந்த ஒரு சுவை மட்டுமே மேலெழும்புகிறதா?

பாவண்ணன்: கசப்பாகவே இருக்கட்டுமே. ஆனால் அந்தக் கசப்பு குவிந்த மையத்தில் நம் முகத்தையும் அடையாளமும் தெரியும்படி வைத்துவிடுகிறது அந்தக் கதை. அந்தக் காவலனின் நிலைப்பாடுகளின் நிகழும் திடீர்மாற்றம் ஒரு கசப்பான புன்னகையை நம் உதடுகளில் படரவைக்கிறது என்பது ஒரு பாதி உண்மைதான். ஏதோ ஒரு கணத்தில் ஓர் அரசு ஊழியனின் அவஸ்தையையும் தனக்கென எவ்விதமான நிலைப்பாடும் இல்லாத முதுகெலும்பற்ற தன்மையையும் அது பட்டும் படாமல் சுட்டிக் காட்டுகிறது என்னும் மறுபாதி உண்மையை நம் மனம் எப்படியோ புரிந்துகொள்ளும். நம் மண்ணில் உள்ள அரசு ஊழியர் நிலையும் அதுதான் அல்லவா? ஓர் அரசாங்க அலுவலகத்தில் மூத்த அதிகாரி சொல்லும் அசட்டு நகைச்சுவைகளுக்கெல்லாம் சிரித்துக்கொண்டும் மேம்போக்காக உதிர்க்கும் தத்துவங்களுக்கெல்லாம் ஆமாம் போட்டுக்கொண்டும் அறிவில்லாத விமர்சனங்களையெல்லாம் காதுகொடுத்துக் கேட்டுக்கொண்டும் மெளனமாக எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு வாழ்கிற எளிய குமாஸ்தா வர்க்கத்தினரை நினைத்துப் பாருங்கள். ஒரு மாற்றுக்கருத்தைக்கூட உங்களால் சுதந்திரமாக வெளிப்படுத்திவிட முடியாது. வெளிப்படுத்திவிட்டு, அந்த இடத்தில் நிம்மதியாக உங்களால் வேலை செய்ய முடியாது. நெருப்புக்கு அருகில் இருப்பதுபோலவே இருக்கவேண்டும். உங்களை அறியாமல் நீங்கள் கண்காணிக்கப்பட்டபடியே இருப்பீர்கள். தருணம் பார்த்து, ஆழம் புரியாத ஒரு பள்ளத்தில் நீங்கள் விழவைக்கப் படுவீர்கள். இதுதானே இங்கு நடக்கிறது. செகாவ் தீட்டியிருக்கும் காவலனின் காலடி நிழல் முதுகெலும்பில்லாதவர்களாக மாற்றிவைக்கப்பட்டிருக்கும் குமாஸ்தாக்களின் பாதம்வரைக்கும் நீண்டுவருவதை என்னால் உணரமுடிகிறது. உண்மையிலேயே செகாவ் மிகப்பெரிய கலைஞர்.

பதாகை: கவிதை, சிறுகதை, நாவல் எனும் உலகத்திலிருந்து கட்டுரைகள் எழுதத்தொடங்கியது எப்போது?

பாவண்ணன்: பெங்களூர் வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த முக்கியமான நண்பர்களில் ஒருவர் கோ.ராஜாராம். தொண்ணூறுகளின் பிற்பகுதியில் அவர் அமெரிக்கா சென்றார். திண்ணை என்னும் பெயரில் ஓர் இணைய இதழை அவர்தான் முதன்முதலில் தொடங்கினார். நான் அதில் தொடர்ந்து எழுதவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். படித்த புத்தகங்களைப்பற்றிய கட்டுரைகளை நான் அதில் எழுதினேன். ஒரு வாசகனாக அப்புத்தகத்திலிருந்து நான் பெறுவது என்ன என்பதை விரிவாக உரைக்கும் பதிவாகவே ஒவ்வொரு கட்டுரையையும் அமைத்துக்கொண்டேன். ஒரு புத்தகத்துக்கு அரைப்பக்க மதிப்புரைகூட வருவதற்கு இடமில்லாத சூழலில் பக்கக் கட்டுப்பாடுகளே இல்லாமல் நான் விரிவாகவே எழுதினேன். ஒருநாள் பொங்கலுக்கு ஊருக்குச் சென்றிருந்த சமயத்தில் நானும் என் நண்பன் பழனியும் உரையாடிக்கொண்டே எங்கள் ஊர் ஸ்டேஷன் பக்கமாக நடந்துகொண்டிருந்தோம். அவனுடைய உறவினர் ஒருவரை இடையில் பார்க்க நேர்ந்தது. பேச்சென அதிகம் எதுவுமில்ல. நலவிசாரிப்பாக ஒன்றிரண்டு வரிகள். அவ்வளவுதான். அவர் போய்விட்டார். நாங்கள் மீண்டும் பேசிக்கொண்டே நடக்கத் தொடங்கினோம். அந்த உறவிக்காரரைப்பற்றி பழனி இன்னும் சில விஷயங்களைப் பகிர்ந்துகொண்டேன். அதையெல்லாம் கேட்ட பிறகு எனக்கு ஜானகிராமனின் பாயசம் சிறுகதை நினைவுக்கு வந்தது. நான் அந்தக் கதையை அவனுக்குச் சொல்லி, மனிதர்களின் மனத்தை இயக்கும் விசையைப் பகுத்தறிய முடியாத கையறுநிலையைச் சொன்னேன். நம் மனம் விசித்திரமான ஒரு ஸ்டியரிங். இடது பக்கம் திருப்பினால் இருளுக்கு இழுத்துச் செல்லும். வலதுபக்கம் திருப்பினால் வெளிச்சத்துக்கு இழுத்துச் செல்லும். தடுமாறாமல் பாதையில் ஓட்டத் தெரிந்தவன் மிகப்பெரிய பாக்கியவான் என்று சொன்னேன். நடையிலிருந்து திரும்பும்போது சிறுகதையைப் புரிந்துகொள்வதையும் வாழ்க்கையைப் புரிந்துகொள்வதையும் இணைத்து எழுதும் அவன்தான் முதன்முதலாக விதைத்தான். ’எனக்குப் பிடித்த கதைகள்’ கட்டுரை வரிசை அப்படித்தான் தொடங்கியது. அவையும் திண்ணை இதழிலேயே வெளிவந்தன. எல்லாமே புத்தாயிரத்தாண்டின் தொடக்கத்தை ஒட்டி நிகழ்ந்த மாற்றங்கள்.

பதாகை: கட்டுரைகளும் அபுனைவு இலக்கியங்கள் வழியே சுய அனுபவங்களை வரலாற்றுப் பிரக்ஞையுடன் எழுதும் சாத்தியம் அதிகரித்துள்ளது. தமிழில் சிறுகதைகளின் காலகட்டம் முடிவுக்கு வந்ததாக நினைக்கிறீர்களா?

பாவண்ணன்: அபுனைவு எழுத்துகளின் பெருக்கத்துக்கும் புனைவு எழுத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அதன் வழி அதற்கு. இதன் வழி இதற்கு. இப்போது எழுதப்பட்டு வரும் அபுனைவு எழுத்து முயற்சிகளைவிட இன்னும் கூடுதலான முயற்சிகள் தேவை என்பது என் எண்ணம். துறைசார்ந்த வல்லுநரின் அனுபவங்கள் இன்னும் இன்னும் வரவேண்டும். கன்னடத்தில் விஸ்வேஸ்வரய்யா தன் பணிக்கால அனுபவங்களை ஒரு தொகுதியாக எழுதியுள்ளார். அருமையான தொகுப்பு. கிருஷ்ணராஜசாகர் அணைக்கட்டையும் பெங்களூர் விதான்செளத எனப்படும் சட்டசபையையும் அவரே முன்னின்று கட்டியவர். தமிழில் அப்படிப்பட்ட நேரடி எழுத்து இல்லை. ஒரு தொடக்கப்பள்ளி ஆசிரியரின் அனுபவங்கள் என்னும் தலைப்பில் வார்த்தை இதழில் ஜெயகாந்தனின் நெருக்கமான நண்பரான குப்புசாமி ஒரு கட்டுரைத்தொடரை எழுதினார். மனத்தைத் தொடும் கட்டுரைகள். அப்படிப்பட்ட எழுத்துகள் இன்னும் இன்னும் வரவேண்டும். ஜெமினி கேண்டீன் என்னும் தலைப்பில் ஒரு புத்தகத்தைப் படித்தேன். ஜெமினி ஸ்டுடியோ நடைபெற்று வந்த காலத்தில் அங்கே கேண்டீன் நடத்தியவர் அந்த அனுபவங்களைச் சுவையாக எழுதியுள்ளார். ஒரு புனைகதைக்கு இணையாகப் படிக்கமுடிந்த புத்தகம் அது. பாரதிமணி எழுதிய பல நேரங்களில் பல மனிதர்கள் பிரபலமான கட்டுரைத்தொகுதி. தில்லி வாழ்க்கையில் அவர் சந்தித்த மனிதர்களையும் அந்த அனுபவங்களையும் ஒரு கோட்டோவியம்போல தீட்டிக் காட்டும் கட்டுரைகள். ஏ.கே.செட்டியாரின் பயணக்கட்டுரைகள் ஒவ்வொன்றும் தனி அனுபவம். சமீபத்தில் காங்கிரஸ் இயக்கத்தில் பங்கெடுத்துக்கொண்டவரும் சிவாஜி ரசிகர் மன்றத்தின் செயலராகவும் இருந்த சின்ன அண்ணாமலையின் கட்டுரைத்தொகுப்பொன்றைப் படித்தேன். ’சொன்னால் நம்பமாட்டீர்கள்’ என்னும் தலைப்பில் அது வந்துள்ளது. ஓமந்தூர் ராமசாமி செட்டியார், ராஜாஜி, கல்கி, காமராஜர், டி.கே.சி. என பல ஆளுமைகள் சாதாரணமாக வந்துபோகிறார்கள். வரலாறு அதன் போக்கில் இயங்கியபடி இருக்கிறது. கட்டுரைகள் அதை நம் கண்முன்னால் நிகழ்த்திக் காட்டுகிறது. நல்ல வாசிப்பனுபவம் உள்ளவை. இலக்கியத்தில் இது ஒரு வகைமை. சிறுகதையாக்கம் என்பது முற்றிலும் வேறான நுட்பம். அது இதைத் தேக்கிவிடும் என்பதோ அல்லது இது அதைக் கட்டுப்படுத்திவிடும் என்பதோ, தேவையற்ற அச்சம். இரண்டும் இருவேறு தனிப்பாதைகள். ஒருசில சமயங்களில் ஒரே இடத்தைத் தொடக்கூடிய சாத்தியம் உள்ளவை என்றபோதும்கூட.

பதாகை: ஒரு விஷயத்தை எந்த வடிவில் எழுதுவது என எக்கணத்தில் முடிவு செய்வீர்கள்?

பாவண்ணன்: அகத்தூண்டுதலால் மனம் நிமிரும் கணத்திலேயே, படைப்புக்குரிய வடிவமும் நிழலென அமைந்துவிடுகிறது.

பதாகை: உங்களது கட்டுரைத் தொகுப்புகளைப் படிக்கும்போது பிரமித்த ஒரு விஷயம் – உங்களுக்கு பலதரப்பட்ட கலைவெளிப்பாடுகளில் இருக்கும் ஆர்வம். ஒரு இடத்தில் “உலக ஞானங்களைக் கண்டு பிரமிக்கிறேன்” அப்படின்னு எழுதறீங்க. இந்த பிரமிப்பின் தொடக்கமாக எதைச் சொல்ல முடியும்?

உங்களுக்கு கர்நாடக சங்கீதத்தில் நல்ல ரசனையும் ஞானமும் உண்டு என்று நண்பர் வெ. சுரேஷ் குறிப்பிட்டார். அதே போல், திரை இசையை எல்லாரும் ரசித்தாலும் உங்கள் தேர்வில் ஒரு நுட்பம் தெரியும் என்றார். உங்கள் கதைகளிலும்கூட இசை விவரிக்கப்படுகிறது அல்லவா?

பாவண்ணன்: தெருக்கூத்திலிருந்து அது தொடங்கியது என்று நினைக்கிறேன். என்னோடு சுப்பையா என்றொரு பையன் படித்துவந்தான். எங்கள் வீட்டிலிருந்து நாலைந்து வீடு தள்ளி அவன் வீடு இருந்தது. அவன் அப்பா ஒரு விவசாயி. அவனை படிக்கவைத்துப் பார்க்கவேண்டும் என்பது அவர் ஆசை. ஆனால் அவனுக்குச் சரியாக படிப்பு வரவில்லை. என்னைவிட வயதில் மூத்தவன். ஒவ்வொரு வகுப்பிலும் இரண்டு இரண்டு ஆண்டுகளாகப் படித்து ஆறாவது வகுப்பில் என்னோடு படித்தான். வயதில் என்னைவிட மூத்தவன். அவன் எப்படியோ ஒரு கூத்துக்குழுவில் சென்று சேர்ந்துவிட்டான். அவன் அப்பாவுக்கு அது பிடிக்கவில்லை. அடித்துப் பார்த்தார். திட்டிப் பார்த்தார். பிறகு அவன் தலையெழுத்துப்படியே விட்டுவிட்டார். எங்கள் தெருக்கோவிலில் ஆடித்திருவிழா சமயத்தில் அவனுடைய கூத்துக்குழுதான் ஆட வந்தது. பொதுவாகவே விடியவிடிய உட்கார்ந்து கூத்துப் பார்க்கும் ஆசைகொண்டவன் நான். அன்று அவனுடைய ஆட்டத்தைப் பார்க்கப் போகிறேன் என்னும் எண்ணத்தால் நான் பரபரப்பாகவே இருந்தேன். திரெளபதை வஸ்திராபரணம். சுப்பையாதான் திரெளபதை. என்னால் நம்பவே முடியவில்லை. அச்சு அசலாக ஒரு பெண்ணைப்போலவே ஒயில்காட்டி அவன் ஆடிய ஆட்டமும் ஒரு அரசிபோல மிடுக்காக நடந்து காட்டிய கம்பீரமும் என்னை பிரமிக்கவைத்தன. எங்கள் சுப்பையாவா அது என்று வாயைப் பிளந்தபடி பார்த்தேன். வகுப்பில் ஆசிரியர் கேட்கிற கேள்விக்கு ஒரே ஒரு வார்த்தைகூட பதிலாகச் சொல்ல தெத்தித்தெத்தி திணறக்கூடியவன் காட்டாற்று வெள்ளமென சொல்மழை பொழிவதை வைத்த கண்ணை எடுக்கமுடியாமல் பார்த்தேன். அன்று இரவு அவனுடைய இரவு. அவன் முகத்தில் பொங்கிய கோபம். ஆவேசம். ஆரவாரம். அழுகை. கெஞ்சல். அவமானத்தில் உடல்குன்றி நின்ற கோலம். ஆத்திரத்தில் வெடித்தெழும் சாபம். அவனுக்குள் ஏதோ ஒரு தெய்வம் புகுந்து ஆட்டிப்படைப்பதுபோல இருந்தது. நம்பமுடியாமல் சலங்கை கட்டிய அவன் கால்களையும் அவன் ஆட்டத்தையும் உரையாடலையும் பிரமிப்போடு பார்த்தபடி இருந்தேன். வகுப்பில் ஆசிரியரின் பிரம்படிக்காக கையை நீட்டியபடி குனிந்து நிற்கும் சுப்பையா வேறு. ஆவேசத்துடன் அடவுகட்டி ஆடி தலைவிரி கோலத்துடன் சப்தமெடுக்கும் சுப்பையா வேறு. மறுநாள் காலையில் அவனை ஏரிக்கரையில் வேலங்குச்சியால் பல்விளக்கியபடி நின்றிருப்பதைப் பார்த்தபோது சாதாரணமாகத்தான் இருந்தான். ‘பிச்சி ஒதறிட்டடா’ என்று அவன் கையைப் பற்றி அழுத்தி என் பாராட்டுதல்களைத் தெரிவித்தேன். ‘உடுடா உடுடா’ என்று சிரித்தபடி அதை அவன் ஏற்றுக்கொண்டது எனக்கு இன்னும் நினைவுக்கு வந்தது. பிரமித்துப் பார்ப்பது என்பது நாம் ரசிப்பதன் வெளிப்பாடு அல்லவா? கோவிலில் மேளக்காரரும் நாதஸ்வரக்காரரும் போட்டிபோட்டுக்கொண்டு வாசிக்கும்போது எழும் விதம்விதமான தாளக்கட்டுகள் பிரமிக்கவைத்திருக்கின்றன. பாட்டுக்கச்சேரிகள், நடனங்கள், சிலம்பாட்டம் என ஏராளமான தருணங்கள் என்னை மலைக்கவைத்திருக்கின்றன. எனக்கு பெரியம்மா முறையாகக்கூடிய ஒரு அம்மா எங்கள் வீட்டுக்கு அருகில் இருந்தார். எழுதப் படிக்கத் தெரியாதவர். இரவுச் சாப்பாட்டுக்குப் பிறகு பழைய திரைப்படப்பாடல்களை மணிக்கணக்கில் சோகம் இழைந்தோடும் குரலில் பாடுவார். கேட்கும்போது நமக்கு அப்படியே நெஞ்சை அடைத்துக்கொண்டு வரும். கண்ணீர்த்துளிகள் முட்டும். சமீபத்தில்தான் ஒரு விபத்தில் இறந்துவிட்டார். வாழ்க்கையை ஒருநாள்கூட நிம்மதியாக வாழாத அவருக்கு அந்த இசையையே இயற்கை ஒரு வடிகாலாகக் கொடுத்திருக்கிறதுபோகும் என்று நினைத்துக்கொள்வேன். நாள்தோறும் அவர் பாடிய பாடல்களைக் கேட்டபடி வளர்ந்ததுகூட பாட்டின்மீது ஆர்வம் பிறந்ததற்கு ஒரு காரணம் என்று சொல்லலாம். வாரத்துக்கு ஒரு நாள் புதுச்சேரி கடற்கரையில் டியுப்ளே சிலைக்கு அருகில் பாண்ட் வாசிப்பார்கள். கிட்டத்தட்ட ஒருமணி நேரம் அந்த வாசிப்பு நிகழும். கேட்கக்கேட்க மனம் பறக்கும். அப்படியே நம்மை தூக்கிக்கொண்டு வேறொரு உலகத்திற்குக் கொண்டுபோய் இறக்கிவிடும். எனக்கு அமைந்த சூழல் என்னைச் சுவைக்கத் தெரிந்தவனாக சமைத்தது என்று சொல்லலாம். நீங்கள் எது தொடக்கம் என்றொரு கேள்வியைக் கேட்டதுமே பழைய நினைவுகள் பொங்கிப்பொங்கி வருகின்றன. காதையும் மனசையும் கண்களையும் திறந்துவைத்திருந்தபோது எல்லாமே உள்ளே வந்துவிட்டன.

பதாகை: யுகமாயினி இதழில் வெளிவந்த உங்கள் கட்டுரை (அனுபவத் தொடர்) மிகவும் வித்தியாசமானது.சிறுகதைகள் போலவே தோன்றும் கட்டுரைகள் அவை.(தீரா நதியில் நீங்கள் எழுதிய அந்தக் கட்டுரை தொடரோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த வேறுபாடு இன்னும் துலக்கமாகவே விளங்கும்) இவற்றுக்கும் சமீபத்தில் வெளிவந்த உங்கள் சிறுகதைகளுக்கும் (பள்ளிக் கூடம் போன்றவை) உள்ள வேறுபாட்டை விளக்க முடியுமா? ஒரு சம்பவத்தை கட்டுரை என்றும் கதை என்றும் எப்படி வகுத்துக் கொள்வீர்கள்?

பாவண்ணன்: கட்டுரைகளைவிட கதைகளுக்கு ஒருசில விழுக்காடுகள் கூடுதலான மதிப்பெண்கள் தரலாம் என்பது என் எண்ணம். ஒரு கட்டுரையின் சாயல் ஒரு கதையிலும் அல்லது ஒரு கதையின் சாயல் ஒரு கட்டுரையிலும் இடம்பெற்றிருக்கலாம். எழுதிச் செல்லும் போக்கில் தவிர்க்கமுடியாமல் அப்படி அமைந்துவிடும். கட்டுரைக்கான சம்பவத்தையும் கதைக்கான சம்பவத்தையும் ஏதோ ஓர் உள்ளுணர்வின் தூண்டுதலால்தான் பிரித்து வகுத்துக்கொள்கிறேன். அக்கணத்தில் மனம் செலுத்தும் திசையில் எழுத்து பறந்துபோகிறது. ஏன் அப்படி என்பதைச் சரியாகச் சொல்லத்தெரியவில்லை என்றே சொல்வேன். சந்தையில் நீங்கள் காய்கறி வியாபாரிகளைப் பார்த்திருப்பீர்கள். வியாபாரம் இல்லாத நேரங்களில் தனக்கு முன்னால் கொட்டிக் குவிக்கப்பட்டிருக்கும் தக்காளி அல்லது கத்தரிக்காய்களில் ஒரு சிலவற்றை எடுத்து ஒரு கூடையில் பிரித்துப் போடுவார். இன்னும் சிலவற்றை எடுத்து வேறொரு கூடையில் போடுவார். இதற்கு ஒரு விலை இருக்கும். அதற்கு ஒரு விலை இருக்கும். எதுவுமோ அழுகலோ அல்லது முற்றிப்போனவையோ அல்ல. அனைத்தும் நல்ல தரத்தில் உள்ளவையாகவே இருக்கும். ஆனாலும் இரண்டாக வகுத்தபடியே இருப்பார்கள். வழக்கமாக நான் காய்கறி வாங்கக்கூடிய ஒரு அம்மாவிடம் ’ எல்லாத்தயும் ஒரே கூடையில வச்சி ஒரே விலையில விக்கலாமே? எந்த அடிப்படையில இப்படி பிரிக்கிறீங்க?” என்று ஒரு நாள் கேட்டேன். அந்த அம்மா புன்னகைத்துக்கொண்டே ‘அதெல்லாம் பழக்கம்தாங்க. காயை தொடும்போதே கைக்கும் மனசுக்கும் தெரிஞ்சிடும்ல?’ என்றார் அவர். மேலும் ‘எல்லாம் ஒரு கைப்பழக்கம் மனப்பழக்கம்தான்’ என்றும் சொன்னார். அந்த அம்மாவிடம் கேட்ட அதே சொற்களைத்தான் நான் உங்களுக்கும் சொல்ல விழைகிறேன். எல்லாம் ஒரு மனப்பழக்கம்தான்.

பதாகை: கபிலர், புரந்தரதாசர், சிலப்பதிகாரம், ஆவுடை அக்காள் பாடல்கள் என சங்க இலக்கியத்திலிருந்து பதினெட்டாம் நூற்றாண்டு வரை வந்த பக்திப்பாடல்களைப் பற்றிய தீவிரமானக் கட்டுரைகளை முப்பது வருடங்களாக எழுதியுள்ளீர்கள். இந்த காலகட்டத்தில் பலவிதமான ரசனை மற்றும் கோட்பாட்டு விமர்சனங்கள் வந்துபோய்விட்டன. இந்தப் பாதையில் இவ்வகை சங்கம் மற்றும் மரபுக்கவிதைகளுக்கான பார்வை உங்களுக்கு மாறியுள்ளதா?

பாவண்ணன்: கோட்பாட்டு விமர்சனத்தை நான் ஆழமாகப் பயின்றதில்லை. என் பார்வை கோட்பாடு சார்ந்ததல்ல என்பதால், எனக்கு அதில் அதிக நாட்டமும் இருந்ததில்லை. நம்முடைய இலக்கியவளம் ஒரு மாபெரும் புதையல். தேடத்தேட எடுத்தபடி இருக்கலாம். நம்மாழ்வாரின் ஒரு பாட்டு நினைவுக்கு வருகிறது. ’அவரவர் விதிவழி அடைய நின்றனரே’ என்றொரு வரி அந்தப் பாட்டில் உண்டு. மறக்கமுடியாத வரி. இறைவனை உணரும் வழி இது என நம்பி நீங்கள் ஒரு வழியில் நடந்துசெல்கிறீர்கள். அந்த வழியாக இருக்குமோ, இந்த வழியாக இருக்குமோ என்றெல்லாம் குழப்பம் கொள்ளவேண்டாம். நீங்கள் தொடங்கிய வழியில் சென்றுகொண்டே இருங்கள். நீங்கள் தேடிய இறைவனை நீங்கள் அடைவீர்கள் என்று நம்மாழ்வார் சொல்லியிருக்கும் பக்குவத்தை மறக்கவே முடியாது. மற்றவர்களுக்கு இறைவன் தரிசனம் கிடைக்காதா என்றெல்லாம் வீண்சந்தேகமோ, வீண்குழப்பமோ வேண்டாம். அவரவர்கள் சென்ற வழியில் அவரவர்கள் தேடிய இறைவனை அவரவர்கள் கண்டடைவார்கள். நம் பயணத்தில் தீர்மானமான உறுதியும் பற்றும் இருத்தல் வேண்டும். கடவுளைக் காணும் ஒவ்வொருவரும் அவரவருக்கே உரிய வழிமுறைகளில் இறைவனைத் தேடிக் கண்டடைகிறார்கள். அவரவருக்கும் அவரவர்களுடைய இறையவர் முக்கியமானவர்களாக இருப்பார்கள். சங்கப்பாடல்கள் மீதும் மரபுப்பாடல்கள்மீதும் தீராத விருப்பமுடையவன் நான். எந்த விமர்சனப்பார்வையாலும் அது மாறியதில்லை.

பதாகை: கன்னட வசன மற்றும் கவிதை இலக்கியத்துக்கான அபாரமானத் தொடக்கங்களை உங்கள் கட்டுரைகள் கொடுத்துள்ளன. குறிப்பாக ‘பாட்டும் பரவசமும்’ எனும் கட்டுரையில் அக்கமகாதேவி, மல்லிகார்ஜூனைப் பற்றிப்பாடும் பாடல்களையும் ஆண்டாளின் பாடல்களையும் ஒப்பிட்டு எழுதியது தனிப்பட்ட அளவில் எனக்கு அவரது பாடல்களைத் தேடிக்கண்டடைய உதவியது. பக்தி காலகட்டப்பாடல்களை பரவச நிலையிலிருந்து அணுகியதோடு அப்பாடல்களின் ஆழத்தில் புதைந்துள்ள உணர்வுகளை வெளிச்சம் போட்டுக்காட்டியது. பக்தி, பற்று, நம்பிக்கை போன்றவற்றைத் தாண்டி இப்பாடல்களை எப்படி அணுகுவது?

பாவண்ணன்: நம் மகிழ்ச்சிக்குரிய தருணங்களை அத்தகு பாடல்கள் நமக்கு மீண்டும்மீண்டும் உருவாக்கி அளிக்கின்றன. பக்தி, பற்று, நம்பிக்கை நிலைகளிலேயே அவற்றை ஏற்றுக்கொள்வதில் நாம் ஏன் தயங்கவேண்டும். அறிவியலும் உளவியலும் இன்று நமக்குக் கிடைத்திருக்கும் கருவிகள். அவற்றின் துணையோடு அப்பாடல்கள்மீது தாராளமாக ஓர் ஆய்வை நிகழ்த்தலாம். அதனால் எப்படிப்பட்ட பயன் விளையும் என்று தெரியவில்லை. உளவியலின் அடிப்படையில் காந்தியைப்பற்றி எழுதப்பட்ட ஒரு கட்டுரையைப் படித்தேன். காந்தி இளமைக்காலத்தில் பாலியல் விருப்பம் உள்ளவராக இருந்தார். அவர் தன்னுடைய தந்தையார் மரணப்படுக்கையில் இருந்த தருணத்தில் பாலியல் விழைவோடு தன் துணைவியோடு இருக்கச் சென்றுவிட்டார். அவர் பிரிந்துசென்ற தருணத்தில் அவர் தந்தையாரின் உயிர் பிரிந்துவிட்டது. அன்றுமுதல் அவருக்கு பாலியல் சார்ந்த குற்ற உணர்வு ஏற்பட்டது. அதனால்தான் பிரம்மச்சரிய விரதத்தை அவர் அனைவரிடமும் முன்வைத்தார் என்று நீண்டு சென்றது அக்கட்டுரை. பெரிய உளவியல் அறிஞர் என்று சொன்னார்கள் அந்தக் கட்டுரை ஆசிரியரை. கடைசியில் அவருடைய அறிவு, காந்தியை எந்தச் சிமிழுக்குள் கொண்டு வந்து அடைக்கப் பார்க்கிறது, பாருங்கள். நம் மக்கள் அப்படித்தான் அவரைப் பார்க்கிறார்களா? பிரம்மச்சரிய விரதத்தைப் பேசியவர் காந்தி என்பதுதான் காந்தியின் பிரதானமான முகமா? ஆண்டாள் பாடல்களையும் அக்காவின் பாடல்களையும் பக்தி புதிய அணுகுமுறைகளில் அணுகி புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சக்கூடிய முடிவுகளைக் கண்டுபிடிக்க முடியும் என்றால் அவற்றை நிச்சயம் வரவேற்கவேண்டும். ஆனால், தனிப்பட்ட விதத்தில் எனக்கு நம்பிக்கையின் அடிப்படையில் ஆண்டாளின் பாடல்களையும் அக்காவின் பாடல்களையும் அணுகுவதே பிடித்திருக்கிறது.

இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான்
நம்மையுடையவன் நாராயணன் நம்பி
செம்மையுடைய திருக்கையால் தாள்பற்றி
அம்மி மிதிக்க கனாக்கண்டேன் தோழி

என்னும் பாட்டை நீங்கள் படித்திருப்பீர்கள். என்ன ஒரு திடமான நம்பிக்கை பாருங்கள். இந்தப் பிறவிக்கு மட்டுமல்ல, ஏழு பிறவிக்கும் எனக்குரியவன் அவன் என்று எவ்வளவு ஆழமாக நம்புகிறாள் ஆண்டாள். ஒரு பாட்டில் கைத்தலம் பற்றிய மதுசூதனனைச் சொன்னவள், இந்தப் பாட்டில் அவன் குனிந்து திருக்கையால் தன் தாள்பற்றும் கணத்தைக் குறிப்பிடுகிறாள். அதைப் படிக்கும்போதே நமக்கு மெய் சிலிர்க்கிறது. கடவுள் வந்து தன் கால்விரலைத் தொடுவான் என்பதில் அவளுக்கிருக்கும் உறுதியை நினைக்கும்போதே பரவசமாக இருக்கிறது. கடவுள் தன் அருகிலேயே இருந்தால் நன்றாக இருக்குமே என நினைப்பவர்களுக்கு இந்த வரி அளிக்கக்கூடிய ஆறுதலையும் நம்பிக்கையையும் நினைத்துப் பாருங்கள். அந்தப் பரவசத்தை வேறு எதைமுன்னிட்டும் நான் இழக்கத் தயாராக இல்லை.

விட்டல்ராவுடன் (1)பதாகை: ‘திறக்கும் கதவுகளும் மூடும் கதவுகளும்’ எனும் கட்டுரையில் மு.தளையசிங்கத்தின் கோட்டை தொகுப்பு பற்றி எழுதியிருந்தீர்கள். மதுரையிலிருந்து பெங்களூர் செல்லும் ரயிலில் கல்லூரிப்பெண்களும் ஆண்களும் கேலியாகப் பேசிச் சென்ற கணத்தில் திடுமென உடலைப்பற்றியதாக மாறியதும் தத்தமது நிலையை உணர்ந்து தயங்கும் ஓர் அனுபவக்குறிப்பு வருகிறது. ஒவ்வொரு இளைஞனும் இப்படிப்பட்ட ஒரு அனுபவத்தைக் கடந்து வந்திருப்பான். உங்கள் “தங்கமாலை” சிறுகதையைப் படித்ததும் அதேபோன்றதொரு எண்ணம் ஏற்பட்டது. சட்டென சங்க இலக்கியக்கட்டுரையில் தலைவி தலைவனுக்காகக் காத்திருந்து இளைத்தவள் அவன் வந்ததும் விலகிச்செல்லும் சித்திரம் தோன்றியது. இந்திய மண்ணுக்கு மட்டுமே பிரத்யேகமாக இருக்கும் இப்படிப்பட்ட உணர்வுகள் சட்டென மனிதர்களைப் பற்றியதாக எப்படி மாறிவிடுகிறது?

பாவண்ணன்: அது உலகப்பொதுவான உணர்வு என்றே தோன்றுகிறது. பைபிளில் ஒரு கதை உண்டு. தன் கணவனின் நம்பிக்கைக்குரிய வணிகன்மீது காதல் கொண்டு உருகுகிறாள் அவன் மனைவி. அவனோ முதலாளிக்கு துரோகமிழைக்க விரும்பாமால் அவள் அழைப்பை மறுக்கிறான். தன் அழைப்பைப் புறக்கணித்துவிட்ட அவன்மீது அவள் தீரா வஞ்சம் கொள்கிறாள். தன் கணவனிடம் வீண்கதை கட்டுகிறாள். தன் வார்த்தைகளை நம்பும்படி செய்கிறாள். இறுதியில் அந்த வணிகனின் தலையை வெட்டி ஒரு தட்டில் கொண்டுவரும்படி தன் கணவனிடம் கேட்டுக்கொள்கிறாள். கிரேக்கப் புராணங்களிலும் இப்படி ஏராளமான கதைகள் உள்ளன.

பதாகை: ‘பருவம்’ போன்ற காலத்தில் மிகப் பின்னே  அமைக்கப்பட்டுள்ள படைப்பை மொழிபெயர்ப்பதற்கும் ‘தேர்’ (ராகவேந்திர பாட்டீல்) போன்ற சற்றே பிந்திய காலம்/நிகழ்காலத்தில் அமைக்கப்பட்டுள்ள  படைப்பை மொழிபெயர்ப்பதற்கும் இடையே உள்ள வித்தியாசங்கள்/சவால்கள் ஏதேனும் உண்டா?

பாவண்ணன்: எந்தக் காலகட்டத்தைச் சேர்ந்த படைப்பாக இருந்தாலும், ஒரு மொழியில் உள்ள பழமொழிகளையும் மரபுத்தொடர்களையும் அவற்றின் பொருளையும் நோக்கத்தையும் தொனியையும் சிதைக்காமல் இன்னொரு மொழியில் மொழிபெயர்ப்பதுதான் மிகப்பெரிய சவால். முதலில் அது பழமொழிதானா, மரபுத்தொடர்தானா அல்லது உரையாடலின்போக்கில் உள்ள ஒரு வரியா என்பதை உறுதியாகப் புரிந்துகொள்ளவேண்டும். மீண்டும்மீண்டும் வாக்கியங்களைப் படித்துப்பார்ப்பதுதான் ஒரே வழி. ஏற்கனவே கூடி வந்திருக்கும் பொருளோடு எவ்விதத்தில் அது பொருந்திப் போகிறது என்பதையும் கணக்கிலெடுத்துக்கொள்ளவேண்டும். உரையாடலின் போக்கில் அல்லது விவரணையின் போக்கில் ஒரு வரி தீவாக தனித்து நின்றுவிடக்கூடாது. அது வீணான குழப்பத்தைக் கொடுக்கும். என்னைப் பொறுத்தவரையில் மொழிபெயர்க்கும்போது, எனக்குச் சந்தேகமாகத் தோன்றும் இடங்களை எந்தத் தயக்கமும் இல்லாமல் என் நண்பர்களுடன் கலந்து பேசி தெளிவு பெறுவேன். ஒன்றுக்கு இரண்டு பேரிடம் கேட்டு உறுதி செய்யவும் தயங்கமாட்டேன். ஒரு அத்தியாயத்தை மொழிபெயர்த்து முடித்ததும் கன்னட அத்தியாயத்தையும் தமிழ் அத்தியாயத்தையும் அருகருகில் வைத்துக்கொண்டு ஒவ்வொரு வாக்கியமாக மாற்றிமாற்றிப் படித்து சரிப்படுத்தி செம்மைப்படுத்திக்கொள்வேன். நேரம் செலவாவதைப் பொருட்படுத்தாமல் ஈடுபடும்போதுதான் ஒரு மொழிபெயர்ப்பு வேலைகளைச் சரியாகச் செய்துமுடிக்கமுடியும்.

பதாகை: ‘பருவம்’ நாவலின் கன்னட மூல பிரதியில் பழங்காலக் கன்னட சொற்றொடர்கள் நிறைய  உபயோகிக்கப்பட்டிருக்கும் என்ற யூகத்தில் கேட்கிறேன், அது தவறாகவும் இருக்கலாம். (உ.ம்  வெண்முரசில் அடிக்கடி உபயோகிக்கப்படும் ‘தீச்சொல்’ என்ற பதத்தைப் போல் பருவத்திலும் நவீன கன்னடத்தில் அதிகம் புழங்காத சொற்கள் உபயோகிக்கப்பட்டு இருக்கலாம் என்று தோன்றுவதால்). அத்துடன் ஒப்பிடுகையில் ‘தேரில்’ நவீன கன்னடம் அதிகம் எடுத்தாளப்பட்டிருக்கலாம்.  அப்படி பழங் கன்னட சொற்களை மொழிபெயர்க்கும் போது நவீனத் தமிழிற்கு நெருக்கமாக செய்வது உகந்ததா அல்லது அவற்றுக்கிணையான பழந் தமிழாகச் மொழிபெயர்ப்பது உகந்ததா?

பாவண்ணன்: ’பருவம்’ மகாபாரதத்தைப் பின்னணியாகக் கொண்ட நாவலென்றாலும் அது ஒரு நவீன நாவலுக்குரிய எளிய மொழியிலேயே எழுதப்பட்ட ஒன்றாகும். இதற்கு மாறாக, ’தேர்’ நாவலும் ஒரு நவீன நாவலென்றாலும் அதன் ஒரு பகுதி முழுக்கமுழுக்க ஒரு நிகழ்த்துகலையின் சாயலைக் கொண்டிருந்தது. அப்பகுதி சற்றே சவால் நிறைந்த பகுதியாகும். மொழிபெயர்க்கும் முன்பாக மூன்றுமுறை அதை வாசித்தேன். மனத்தளவில் என்னை நானே தயாரித்துக்கொள்ள அந்த இடைவெளி உதவியது. கன்னட நிகழ்த்துகலைக்கு இணையாக தெருக்கூத்து நிகழ்த்துகலையின் சாயலை அதற்கே உரிய மொழியுடன் கொண்டு வந்தேன். நானே ஒரு கலைஞனாக என்னை நினைத்துக்கொண்டு உயர்த்திய தொனியில் பாடவும் பேசவும் ஏற்றதாக அப்பகுதியை வடிவமைத்தேன். முற்றிலும் மொழிபெயர்த்து முடித்த பிறகும், கன்னடத்திலும் தமிழிலும் மாறிமாறிப் படித்து மேலும்மேலும் செம்மை செய்தபடியே இருந்தேன். பழைய சொல்லையோ அல்லது புதிய சொல்லையோ, அதற்கு இணையான தமிழ்ச்சொல்லைக் கண்டுபிடிப்பதோடு மட்டும் மொழிபெயர்ப்பு முடிவடைவதில்லை. அதன் பொருத்தப்பாட்டையும் முழு வாக்கியத்தில் அது உருவாக்கும் தொனியையும் உய்த்துணரவேண்டும். கதைப்போக்குக்கும் உத்தேசிக்கப்பட்டிருக்கும் காலத்துக்கும் உகந்ததாகவும் அமைக்கவேண்டும். திரும்பத் திரும்பப் படித்து செம்மை செய்தபடியே இருப்பதன் வழியாகத்தான் ஒரு மொழிபெயர்ப்பைச் சிறப்புறச் செய்யமுடியும்.

பதாகை: மொழிபெயர்க்கும் போது அதன் மூல ஆசிரியர்களுடன் உரையாடுவது உண்டா? அப்படியெனில், எந்தளவிற்கு.

பாவண்ணன்: இல்லை, மொழிபெயர்க்கும்போது நான் எந்த மூல ஆசிரியருடனும் உரையாடியதில்லை.

பதாகை: பருவம் கன்னட மூலத்தின் மொழி எப்படிப்பட்டது? கன்னடம் தெரிந்த ஒரு நண்பர், அந்நாவல் இக்காலகட்ட கன்னடத்தில் எழுதப்பட்டது. குறிப்பாக பல colloquial வார்த்தைகள் உள்ளடக்கியதுன்னு சொன்னார். மொழிபெயர்க்கும்போது உங்கள் மொழித்தேர்வும், வார்த்தைத்தேர்வும் எப்படி அமைந்தது?

பாவண்ணன்: ’பருவம்’ நாவல் நவீன நாவலுக்குரிய மொழியிலேயே எழுதப்பட்ட ஒன்றாகும். இதிகாசப்பின்னணியில் விசுவாமித்திரரைப்பற்றிய ஒரு நாவல் மகாபிராமணன் என்னும் பெயரில் வந்துள்ளது. அது முழுக்கமுழுக்க செவ்வியல் மொழியிலேயே எழுதப்பட்ட ஒன்றாகும். பைரப்பா அதற்கு நேர்மாறாக தன் பருவம் நாவலை நவீன மொழியிலேயே எழுதியிருந்தார். ஒருவேளை அவர் உருவாக்க நினைத்த தொனி அதற்குக் காரணமாக இருக்கலாம். நிகழ்காலத்துக்குரிய பார்வையில் பாரதத்தை அணுகும் ஒரு வாசிப்பை அவர் சாத்தியப்படுத்த நினைத்தார். அதனால் நிகழ்காலத்துக்குரிய மொழியையே அவர் தேர்ந்தெடுத்துக்கொண்டார். அதனால் நானும் கவனமாக அவர் பயன்படுத்திய சொற்களுக்கு இணையான நிகழ்காலச் சொற்களையே பயன்படுத்தினேன்.

பதாகை: ‘பருவம்’ நூல் பதிப்பில் பல பிழைகள் இருந்ததாக நண்பர் தெரிவித்தார். சாகித்திய அகாதமி வெளியீட்டில் இன்று புதிய பதிப்பு வந்திருக்கிறது என்றாலும் பொதுவாக வரும் பிழைகளை எப்படிக் களைவது? பதிப்பு வந்தபோது அவை உங்கள் கவனத்துக்கு வந்ததா?

பாவண்ணன்: பல வேலைகளுக்கிடையில் முதல் மெய்ப்புப்படியை நானே நேரமொதுக்கி திருத்தங்கள் போட்டு சாகித்திய அகாதெமியிடம் கொடுத்தேன். திருத்தங்கள் செய்யப்பட்ட பிறகு மீண்டுமொரு முறை எனக்கு மெய்ப்புப்படியை எடுத்துக் கொடுக்கும்படியும் அவற்றை மறுபடியும் வாசித்துத் திருத்திக் கொடுப்பதாகவும் சொல்லியிருந்தேன். அதற்கு அகாதெமி நண்பர் சம்மதித்திருந்தார். இந்தத் தருணத்தில் நிர்வாகக் காரணங்களுக்காக சாகித்திய அகாதெமியின் தமிழ்ப்பிரிவு பெங்களூரிலிருந்து சென்னைக்குச் சென்றுவிட்டது. பல மாதங்கள் கடந்தன என்றாலும் மெய்ப்புப்படி வரவே இல்லை. அச்சிடத் தேவையான தாள்கள் வாங்குவதற்கு ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன என்றும் அதுவரை புதிய நூல்களின் அச்சாக்கம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்றும் முதலில் சொல்லப்பட்டது. பிறகு நிதி ஒதுக்கீடு வரவில்லை என்றும் சொல்லப்பட்டது. அப்படியே இரண்டாண்டுகளுக்கும் மேல் ஓடிவிட்டது. திடீரென ஒருநாள் தொலைபேசியில் புத்தகம் அச்சுக்குப் போக இருப்பதாகச் சொன்னார்கள். நான் பதறினேன். இன்னும் திருத்தங்கள் போடும் வேலையே முடியவில்லையே என்று கவலையைத் தெரிவித்தேன். அதெல்லாம் நாங்களே முடித்துவிட்டோம் என்று சொன்னார்கள். நான் இன்னொரு முறை படித்துப் பார்த்து வேறு ஏதேனும் திருத்தம் தேவைப்படுமா என கண்டறிந்து, அவற்றைக் குறிப்பிட்டுத் தருவதாகச் சொன்னேன். நேரம் குறைவாக இருக்கிறது, அச்சுக்குச் செல்லவேண்டும் என்று அவர்கள் அவசரப்பட்டார்கள். இன்னொரு முறை பார்த்தால்தான் நிம்மதியாக இருக்கும் என்று நானும் தொடர்ந்து வலியுறுத்தினேன். அதனால் சில நாட்களுக்குப் பிறகு புதிய மெய்ப்புப்படிகள் வந்தன. முதல் மெய்ப்பில் நான் போட்டுக்கொடுத்திருந்த திருத்தங்களில் எழுபது எண்பது விழுக்காடு மட்டுமே மேற்கொள்ளப்பட்டிருந்தன. எஞ்சியவை அப்படியே இருந்தன. மீண்டும் படித்து மீண்டும் திருத்தி அனுப்பிவைத்தேன். சில வாரங்கள் கழித்து எல்லாத் திருத்தங்களும் போடப்பட்டுவிட்டன என்று தெரிவித்தார்கள். நண்பர்கள் சொல்வதை நம்புவதைத் தவிர வேறு வழியே இல்லை. எல்லா வேலைகளும் சென்னையில் நடந்ததால், என்னால் நேரில் சென்று பார்க்க நேரமோ, அவகாசமோ இல்லாமல் போய்விட்டது. ஒருநாள் புத்தகக்கட்டு வந்தது. பிரித்துப் பார்த்தால் ஏமாற்றமாக இருந்தது. இரண்டாவதாக போட்டுக்கொடுத்த திருத்தங்கள் பேருக்கு ஒன்றிரண்டை அங்கொன்று இங்கொன்றாக மட்டுமே போடப்பட்டிருந்தன. மற்றபடி அவை அப்படியே இருந்தன. என் வருத்தத்தை அவர்களிடம் தெரிவித்தேன். அடுத்த பதிப்பு வரும்போது சரிசெய்துவிடலாம் என்று என்னை அமைதிப்படுத்தினார்கள். அவ்வளவுதான். என் கவனத்துக்கு வராமலேயே இப்போது மறுபதிப்பும் வந்துவிட்டது. மறுபதிப்பு வந்துள்ள செய்தியை விளம்பரம் வழியாகவும் நண்பர்கள் வழியாகவும்தான் நானும் அறிந்துகொண்டேன். நான் இன்னும் பார்க்கவில்லை. பிழைதிருத்தம் வேண்டி என்னிடம் அனுப்பாத நிலையில், அநேகமாக முதல் பதிப்பில் உள்ள பிழைகளோடேயே வந்திருக்கிறதா அல்லது யார்மூலமாவது களையப்பட்டு வந்திருக்கிறதா என்று சரியாகத் தெரியவில்லை. சாகித்திய அகாதெமி அமைப்பில்தான் இத்தகு வெளியீட்டுக் கோளாறுகள்.

பதாகை: நீங்கள் வேறு  ஒரு மாநிலத்திற்கு சென்று பணியாற்றி அந்த மொழியை  கற்றுத் தேர்ந்து சிறந்த  மொழிபெயர்ப்பாளராகவும் மலர்ந்திருக்கிறீர்கள். அந்த அனுபவத்திலிருந்து  தமிழக அரசின் இருமொழிக் கொள்கை பற்றி என்ன நினைக்கிறீர்கள். குழந்தைகள் இளவயதிலிருந்தே இன்னும் நிறைய மொழிகளுக்கு அறிமுகம் ஆவதில் அநுகூலம் உண்டா?

பாவண்ணன்: கல்வித்திட்டத்தில் மொழிப்பாடங்களைச் சீரமைப்பதுபற்றிய புதிய சிந்தனைகளை மேற்கொள்ளவேண்டிய கட்டம் நெருங்கிவிட்டது என்றே எண்ணுகிறேன். அரசுப்பள்ளிகள் குறைந்துகொண்டே வரும் சூழலில் இந்த நெருக்கடி இன்னும் கூடுதலாகவே இருக்கிறது. இப்போதே தனியார் பள்ளிகளில் ஒருவிதமான கல்விமுறையும் அரசு பள்ளிகளில் இன்னொருவிதமான கல்விமுறையும் இயங்கி வருவது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். பயிற்றுமொழித் தேர்வு உரிமை பெற்றோர்களுக்கு உள்ளது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு எல்லோரையும் கட்டிப் போட்டிருக்கிறது. என்னைப் பொறுத்தவரையில் குழந்தைகளுக்கு மொழிகளைப் படிப்படியாக அறிமுகப்படுத்தவேண்டும் என்றே நினைக்கிறேன். பள்ளிப்படிப்பை முடிப்பதற்குள் ஒரு பிள்ளையால் தாராளமாக மூன்று மொழிகளில் நல்ல தேர்ச்சி பெற்றுவிட முடியும் என்று உறுதியாக நம்புகிறேன். நான்கு அல்லது ஐந்தாம் வகுப்பு வரைக்கும் தாய்மொழியில் பேசுவதும் படிப்பதும் மட்டுமே குழந்தைகளின் உளவளத்தை வளமுடையதாக ஆக்கும். தன்னம்பிக்கை அளவைப் பெருக்கும். அதைத் தொடர்ந்து ஆங்கிலத்தை அறிமுகப்படுத்தலாம். எட்டாம் வகுப்புக்கு வரும்போது, விருப்பமொழி என்னும் பாடப்பிரிவில் ஒரு மாணவர் தனக்கு விருப்பமான ஓர் இந்தியமொழியைக் கற்றுக்கொள்ளலாம். மூன்று ஆண்டு காலப் பயிற்சியில் அம்மொழியில் எளிதாக உரையாடமுடியும். பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு பள்ளியை விட்டு வெளியே வரும் ஒரு மாணவனுக்கு மூன்று மொழிகளிலும் நல்ல தேர்ச்சியும் திறமையும் இருக்கும். இதை நான் எந்த ஊகத்தின் அடிப்படையிலும் சொல்லவில்லை. நேரடியான எடுத்துக்காட்டுகள் உள்ளன. புதுச்சேரியில் பிரெஞ்சு மொழிவழிப் பள்ளிகள் இன்றும் உள்ளன. பிரான்சின் பாடத்திட்ட அடிப்படையில் அங்கே பாடங்கள் நடத்தப்படுகின்றன. ஆரம்பக்கல்வி முழுக்க பிரெஞ்சு மொழியில் மட்டுமே எல்லாப் பாடங்களும் கற்பிக்கப்படுகின்றன. என்னுடைய மாமாவின் பிள்ளைகள் அங்கேதான் படித்தார்கள். ஆறாவது வகுப்புக்கு வந்த பிறகுதான் அவர்கள் ஆங்கிலமொழியைக் கற்கத் தொடங்கினார்கள். இரண்டே ஆண்டுகளில் ஆங்கிலத்தில் அவர்கள் சொந்தமாகப் பேசவும் எழுதவும் முடிகிற அளவுக்கு தேர்ச்சி பெற்றார்கள். பள்ளியிறுதி வகுப்பில் மற்றொரு உலக மொழியைக் கற்கவேண்டும் என்பதால் ஒருத்தி ஸ்பானிஷ் மொழியையும் இன்னொருவன் ஜெர்மன் மொழியையும் தேர்ந்தெடுத்துக் கற்றுக்கொண்டார்கள். பிள்ளைகளுக்கு மொழியை இப்படித்தான் அந்தப் பள்ளிகளில் அறிமுகப்படுத்துகிறார்கள். காலம்காலமாக இந்தக் கற்பித்தல் நடைமுறை அங்கே வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது. மொழிப்பயிற்சி என்பதை இங்கே அரிச்சுவடியிலிருந்து தொடங்கிக் கற்பிப்பதே மரபான வழிமுறையாக உள்ளது. அதற்கு மாறாக, உரையாடலிலிருந்தே ஒரு மொழி கற்பிக்கப்படவேண்டும் என்பது என் கருத்து. சின்னச்சின்ன சொற்களும் சின்னச்சின்ன வாக்கியங்களும் பழகிய பிறகே வாசிப்புக்கும் எழுத்துக்கும் வரவேண்டும். எழுத்து, வாசிப்பு, உரையாடல் என மூன்றையும் ஒரே தருணத்தில் உள்வாங்கிக்கொள்வது குழந்தைப்பருவத்தில் பாரமான செயலாகவே இருக்கும். வீணான மன அழுத்தத்தை உருவாக்கும். தேவையில்லாமல் தன்னம்பிக்கை அளவை அது குறைக்கும்.

வண்ணதாசனுடன்பதாகை: எழுத வந்தபோதும் இப்போதும் உங்களுக்கு பிற எழுத்தாளர்கள் உடனான தொடர்பு எப்படி உள்ளது? உங்கள் படைப்புகளைப் பற்றிய கருத்துகளைப் பகிர்ந்துள்ளனரா? நீங்கள் பெற்றதும் கொடுத்ததுமான அனுபவங்கள் என்னென்ன?

பாவண்ணன்: நான் எழுத வந்த தொடக்க காலத்தில் மிகக்குறைவான எழுத்தாளர்களுடன் மட்டுமே எனக்குத் தொடர்பிருந்தது. முதலில் நெருக்கமாகப் பழக்கமானவர்கள் இராஜேந்திர சோழனும் பிரபஞ்சனும். அவர்களுடனான நட்பும் உறவும் அப்படியே இன்றும் தொடர்ந்து வருகிறது. என்னுடைய சக எழுத்தாளர்களில் எனக்கு முதலில் அறிமுகமானவர்கள் சுப்ரபாரதிமணியனும் சங்கரநாராயணனும் ஜெயமோகனும். அதற்குச் சிறிது காலத்துக்குப் பிறகு எஸ்.ராமகிருஷ்ணனும் கோணங்கியும் அறிமுகமானார்கள். மூத்த படைப்பாளி என்கிற வகையில் எனக்கு முதலில் அறிமுகமானவர் ஆ.மாதவன். அவரைத் தொடர்ந்து வண்ணதாசனும் பூமணியும் அறிமுகமானார்கள். அசோகமித்திரனுடனும் சுந்தர ராமசாமியுடனும் மிகவும் பிந்தியே நான் அறிமுகமானேன். தொண்ணூறுகளில் உதகையில் ஈரோடு ஜீவா ஏற்பாடு செய்திருந்த ’சோலைகள்’ சந்திப்பிலும் கலாப்ரியா நடத்திய குற்றாலம் பட்டறையிலும் பல புதிய எழுத்தாளர்கள் அறிமுகமானார்கள். எல்லா உரையாடல்களும் இலக்கியப்படைப்புகள் பற்றிய பொதுவான உரையாடல்களாக இருக்குமே தவிர, என்னுடைய படைப்புகள்பற்றிய தனிப்பட்ட உரையாடலாக அமைந்தது கிடையாது.

விட்டல்ராவுடன் (1)பதாகை: உங்களுக்கும் இதழாசிரியர்களுக்கும் இருக்கும் தொடர்பு எப்படிப்பட்டது? நீங்கள் சிறுபத்திரிக்கை நடத்தியுள்ளீர்களா?

பாவண்ணன்: இதழாசிரியர்களுடனான உறவை மிகவும் நெருக்கமான ஒன்று எனவும் குறிப்பிடமுடியாது. முற்றிலும் விலகிய உறவு என்றும் சொல்லமுடியாது. என்னால் எழுதமுடியும்போது அவர்களுக்கு எழுதி அனுப்புகிறேன். அவர்களால் வெளியிடமுடியும்போது வெளியிடுகிறார்கள். சில சமயங்களில் ஒன்றிரண்டு இதழ் இடைவெளியிலேயே அனுப்பப்பட்ட என் படைப்பு வெளிவந்துவிடுகிறது. சில சமயங்களில் ஐந்தாறு மாதங்கள் வரைக்கும் கூட காத்திருக்கவேண்டியிருக்கும். நான் சிறுபத்திரிகை எதையும் நடத்தியதில்லை. திசையெட்டும் என்னும் பெயரில் நண்பர் குறிஞ்சிவேலன் மொழியாக்கத்துக்கான ஓர் இதழை குறிஞ்சிப்பாடியிலிருந்து தொடர்ந்து நடத்தி வருகிறார். நான் அதற்காக ஒரு துரும்பைக்கூட கிள்ளிப் போட்டதில்லை. ஆனாலும் அவ்விதழின் ஆசிரியர் குழுவில் என் பெயரும் இடம்பெற வேண்டும் என்ற அவருடைய அன்பு விருப்பத்துக்கு நான் உடன்படவேண்டியிருந்தது. அதனால், என் பெயர் அவ்விதழின் ஆசிரியர் பட்டியலில் இணைக்கப்பட்டிருக்கிறது.

பதாகை: நீங்கள் எழுதும் முறை எப்படிப்பட்டது? குறிப்பிட்ட நேரத்தில் தினமும் எழுதுவீர்களா அல்லது உங்கள் மன இயல்புப்படி நேரம் கிடைக்கும்போதெல்லாம் எழுதுவீர்களா?

பாவண்ணன்: அலுவலகத்துக்குச் சென்று திரும்புவதற்கு மட்டுமே பகல்பொழுது முழுவதும் தேவைப்படுகிறது. இரவு ஒன்பதரை முதல் பன்னிரண்டு வரை என்பதே எனக்குரிய நேரம். இலக்கியத்துக்கான நேரம். படிப்பதற்கும் எழுதுவதற்கும் அந்த நேரத்தைத்தான் பயன்படுத்தவேண்டும். எழுதுவதற்கான மனநிலை பொருந்தி வந்திருந்தால் அன்றைய இரவு எழுதுவதற்கான இரவாகிவிடும். அல்லது வாசிப்பதற்கான இரவாகிவிடும்.

பதாகை: இந்த வருடம் வெளியாகும் உங்கள் படைப்புகள்? ஒரு நாவல் எழுதத்தொடங்கி ஐநூறு பக்கம் வந்ததும் நிறுத்தியிருந்ததாகப் படித்திருந்தேன். இந்த வருடம் அது வெளியாகுமா?

பாவண்ணன்: ’மூன்றாவது நதி’ என்னும் தலைப்பில் பத்து புதிய சிறுகதைகள் அடங்கிய தொகுப்பொன்று வெளிவரவிருக்கிறது. இதுவரை எழுதியவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட பத்தொன்பது சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பொன்று ‘பிரயாணம்’ என்னும் தலைப்பில் வெளிவரவிருக்கிறது. ஒரு நாவல் பாதி வளர்ந்த நிலையில் நின்றுபோயிருப்பது உண்மைதான். இந்த ஆண்டு அதை நெருங்கவே முடியவில்லை. ஓய்வற்ற வேலை. அடுத்த ஆண்டிலாவது தொட்டு முடித்துவிடவேண்டும் என நினைத்திருக்கிறேன்.

பதாகை: கன்னட தலித் இலக்கிய மற்றும் சமூக நூல்களைத் தேர்ந்தெடுத்து மொழிபெயர்ப்பு செய்திருக்கிறீர்கள். ராகவேந்திர பாடீலின் தேர் நாவல்கூட சாதியச் சூழலை விவரிக்கும் நாவல்தான். இது போன்ற நூல்களை மொழிபெயர்க்க நேர்ந்தது எப்படி? இது தொடர்பாக இன்னொரு கேள்விதமிழகத்தில் நிலவும் சாதியச் சூழலை உங்கள் படைப்புகளில் போதுமான அளவு பதிவு செய்திருப்பதாக நினைக்கிறீர்களா? நீங்கள் என்ன எழுத தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பதில் இது குறித்த எதிர்பார்ப்புகளின் தாக்கம் உண்டா?

பாவண்ணன்: சாதித்தட்டுகளில் இறுதித்தட்டைச் சேர்ந்தவர்களை அடையாளப்படுத்துகிற தலித் என்னும் சொல் புழக்கத்துக்கு வரும் முன்பு தேசிய அளவில் காந்தி ஹரிஜனர்கள் என்னும் சொல்லை உருவாக்கினார். காங்கிரஸ் இயக்கம் ஹரிஜனர்களுக்கு  ஆதரவாக நின்று உழைக்கவேண்டும் என நினைத்தார். நாடு முழுக்க ஹரிஜன சேவா சங்கம் உருவாக்கப்பட்டது. பள்ளிகள் தொடங்குதல், கல்வி கற்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தல், நல்ல இலட்சியங்களுடன் வாழ்வதற்கு துணையாக இருத்தல் என அந்த அமைப்புக்கு நோக்கம் இருந்தது. அந்தச் சங்கத்தை முன்னின்று நடத்தும் பொறுப்பை அவர் மேல்சாதியைச் சேர்ந்தவர்கள் ஏற்று நடத்தவேண்டும் என்று விரும்பினார். அது மூன்று வகைகளில் உதவும் என்பது அவர் எண்ணம். ஒன்று, பல தலைமுறைகளாக தன் மூத்தோர் கடைபிடித்து வந்த தீண்டாமைக் கொடுமைக்கு அது ஒரு பிராயச்சித்தமாக இருக்கும்.  இரண்டாவது, பழகிப்பழகி, மனத்தில் உள்ள சுயசாதிப்பற்றைத் துடைத்தெறிய அது ஒரு வாய்ப்பாக இருக்கும். மூன்றாவதாக, இதுகாறும் தம் மக்களை இழிவுசெய்து வந்த ஒரு கூட்டத்தினர் பழையதையெல்லாம் தூக்கியெறிந்து விட்டு தம்முடன் கைகோர்த்து நிற்கிறார்கள் என்பது தாழ்த்தப்பட்டவர்களுக்கு மனத்தளவில் ஒரு தன்னம்பிக்கையை வழங்கும். மிகக் குறுகிய காலத்திலேயே காந்தியின் கனவு உண்மையானது. நாடு முழுதும் காங்கிரஸ் தொண்டர்களால் தொடங்கப்பட்ட சேவை மையங்கள் மகத்தான வகையில் தம் கடமையை ஆற்றின. சின்ன வயதில் இதை ஒரு நூலில் படித்தேன். அது என் மனத்தில் நன்கு ஆழமாகப் பதிந்துவிட்டது. தொடக்கப்பள்ளியில் எனக்கு ஆசிரியராக இருந்த வள்ளலார் பற்றாளரான கண்ணன் அவர்களின் நெருக்கத்தால் சின்ன வயதிலேயே சாதிப்பிரிவுகளில் சிறிதும் நம்பிக்கையோ பற்றோ இல்லாமல் இருக்கப் பழகிக்கொண்டேன். அது அப்படியே நெஞ்சில் ஊன்றிவிட்டது. கடைசித்தட்டில் உள்ள தாழ்த்தப்பட்டவர்களுக்கு மேலே உள்ள எல்லாச் சாதிகளும் ஏதோ ஒரு வகையில் ஏதோ ஒரு காலத்தில் சின்ன அளவிலோ அல்லது பெரிய அளவிலோ கொடுமையை நிகழ்த்தியவர்கள் என்பதில் சந்தேகமே இல்லை. பிதுரார்ஜிதமாக, அந்தப் பாவத்தில் நம் அனைவருக்கும் பங்கு உண்டு. அந்தப் பங்கை நாம் முதலில் கரைக்கவேண்டும். அத்துடன் அனைவரும் ஒன்றே என்னும் எண்ணத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். காந்தி காலத்தில் சேவை மையங்கள் நடத்தப்பட்டதுபோல, நம் காலத்தில் நம்மால் சாத்தியமாகக்கூடிய ஒன்றைச் செய்யவேண்டும். என்னைப் பொறுத்தவரையில் நான் செயல்பாட்டாளன் அல்ல. கலைஞன். மொழியில் வாழக்கூடியவன். என் செயல்களை மொழியில் வழியாகவே நிகழ்த்தவேண்டும் என விரும்பினேன். நான் எண்பதுகளின் தொடக்கத்தில் கர்நாடகத்தில் குடியேறியபோது, அது தலித்துகள் எழுச்சியின் உச்சகட்டமாக இருந்தது. முதல் தலித் கவிதை, முதல் தலித் தன்வரலாறு, முதல் தலித் நாவல் என நவீன கன்னட எழுத்துலகில் தலித்துகளின் அடையாளத்தோடு படைப்புகள் வெளிவந்து பரவலான கவனத்தைப் பெற்றிருந்தன. மொழியைக் கையாளக்கூடிய ஓர் இலக்கியவாதி என்கிற வகையில், அவற்றைத் தமிழில் மொழிபெயர்த்து அறிமுகப்படுத்த வேண்டும் என நினைத்தேன். முதல் தலித் கவிதைத்தொகுதியை வெளியிட்டவர் சித்தலிங்கையா. அவருடைய தொகுதியிலிருந்து முக்கியமான கவிதைகளை மொழிபெயர்த்தேன். அவருடன் உரையாடி நான் எடுத்த ஒரு நீண்ட நேர்காணல் நிறப்பிரிகை என்னும் இதழில் வெளிவந்தது. தேவனூரு மகாதேவ எழுதிய நாவலைபசித்தவர்கள்என்னும் தலைப்பில் மொழிபெயர்த்தேன். முதல் தலித் சுயசரிதையான அரவிந்த மாளகத்தியின்கவர்ன்மென்ட் பிராமணன்  நூலையும் மொழிபெயர்த்தேன். இப்படியே என் படைப்புகள் தொடர்ந்தன. பல படைப்புகளைப் படித்தாலும் அல்லது என் கவனத்துக்கு வந்தாலும் அவற்றில் மிகமிக முக்கியமான ஒன்றையே நான் மொழிபெயர்ப்பதற்கு எடுத்துக்கொள்கிறேன். ஒரு படைப்பின் கலைமதிப்பும் மிகவும் முக்கியம் என்பது என் எண்ணம். பசித்தவர்கள் நாவலுக்குப் பிறகு மிக நீண்ட இடைவெளியில் வெளிவந்ததேர்நாவலை அப்படித்தான் தேர்ந்தெடுத்தேன். புராணத்தன்மையும் நாட்டாரியல் தன்மையும் சமகாலத்தன்மையும் இணைந்த அந்த நாவலின் கூறுமுறை மிகவும் வசீகரமான ஒன்று.

என்னைப் பொறுத்தவரையில் சாதியக்கொடுமைகளை அடையாளப்படுத்தும் சிறுகதைகளை நான் தொடக்க காலத்திலிருந்தே எழுதி வருகிறேன். இளம்பருவத்தில் நான் எங்கள் ஊர்களில் நான் பார்த்த பல சம்பவங்கள் என் நெஞ்சில் ஆறாத வடுக்களாக உள்ளன. அவற்றிலிருந்து குருதி கசியும் தருணங்களில் அவற்றைப் படைப்புகளாக்குகிறேன். சமீபத்தில், தினகரன் தீபாவளி மலரில் நான் எழுதியகடவுள் அமைத்துவைத்த மேடைசிறுகதை சாதியத்தின் பெயரால் நிகழக்கூடிய கெளரவக்கொலையையே மையமாகக் கொண்டிருப்பதை நீங்கள்  படித்திருக்கலாம்.

பதாகை: இப்போது எழுதிக் கொண்டிருக்கும் இளைய தலைமுறை எழுத்தாளர்களில் நெடுந்தொலைவு செல்லக்கூடியவர்கள் என்று நீங்கள் யாரை எல்லாம் நினைக்கிறீர்கள்பொதுவாக, இலக்கியத்தில் ஆர்வமுள்ள எழுத்தாளர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

பாவண்ணன்: என் தலைமுறையை அடுத்து உடனடியாக எழுதத்  தொடங்கியவர்களில் பெருமாள்முருகன், எஸ்.செந்தில்குமார், கண்மணி குணசேகரன், என்.ஸ்ரீராம், உமா மகேஸ்வரி போன்றவர்களும் புதியவர்களில் ஜோ.டி.குரூஸ், சு.வெங்கடேசன், கீரனூர் ஜாகிர்ராஜா, எஸ்.அர்ஷியா, லட்சுமி சரவணக்குமார், காலபைரவன், சந்திரா போன்றவர்களும் இலங்கை எழுத்தாளர் சயந்தனும் நெடுந்தொலைவு செல்லக்கூடியவர்கள் என எண்ணுகிறேன். யூமா வாசுகி, சுயம்புலிங்கம் போன்றோரின் படைப்புகள் தொடக்ககாலத்தில் இருந்த வேகத்துடன் தற்சமயத்தில் வெளிவருவதில்லை என்பது வருத்தக்குரியது.

சில சிறுகதை முகாம்களிலும் பட்டறைகளிலும் பல இளம் எழுத்தாளர்களுடன் உரையாட நேர்ந்திருக்கிறது. அப்போதெல்லாம் நான் ஒரு விஷயத்தை கவனத்தில் வைத்துக்கொள்ளும்படி அவர்களிடம் சொல்வதுண்டு. எழுதும்போது நம் மகிழ்ச்சி இருமடங்காகிறது. நம் புரிதல் இருமடங்காகிறது. அத்தருணத்தில் நம்மையறியாமலேயே நாம் ஏதேனும் ஒரு புதிய விஷயத்தைக் கண்டடைகிறோம். ஒரு புதிய புள்ளியில் நம் மனப்படகு கரைசேர்ந்து நிற்கிறது. இப்படிப்பட்ட அனுபவங்களுக்காக நாம் நம் மனத்தைத் திறந்துவைத்திருக்கவேண்டும். நம் மீது குவிகிற கவனத்தின்மீது நம் கவனம் ஒருபோதும் செல்லத் தேவையில்லை. நம் பயணத்தின் திசை எது, எல்லை எது என நமக்குத் தெரிந்திருக்கவேண்டும். இப்படியெல்லாம் சொல்வது வழக்கம். அதையே இந்த இடத்திலும் சொல்ல விழைகிறேன்.


பதாகை:வலை தொகுப்பின் பலக் கதைகளில் குழந்தைகள்அவர்களின் உலகமும் , குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாக ஆவது என்ற காலப் பயணத்திலும்  குழந்தைமை  உள்ளதுசிறார்களின்  உலகம்/பால்யப் பருவம்அதன் கனவுகள்/நிராசைகள்   உங்களின் எழுத்தை  எந்தளவுக்கு பாதித்துள்ளதுஇப்படி ஒரே தீம்  ஒரு தொகுப்பில் தொடர்ந்து வருவது தன்னிச்சையான அமைவதாஎழுத  ஆரம்பிக்கும் போது பால்யம் குறித்த உங்கள் எழுத்தில் இருந்த பார்வைக்கும் இப்போதுள்ள பார்வைக்கும் ஏதேனும் மாறுதல்களை பார்க்கிறீர்களா? அவ்வுலகம்   குறித்து விரிவான நாவல் எழுதும் எண்ணம் ஏதேனும் உள்ளதா ?

பாவண்ணன்: பால்யத்தில் திளைக்காத படைப்பாளியாக யாருமே இருக்கமுடியாது என்றே எண்ணுகிறேன். எண்பது வயதைக் கடந்துவிட்ட அசோகமித்திரனுடைய சமீபத்திய சிறுகதைத்தொகுதியில் கூட, பால்யத்தில் இருவிரல்களால் தட்டச்சு செய்த நினைவை முன்வைத்து அழகானதொரு சிறுகதையை எழுதியிருக்கிறார். சுந்தர ராமசாமி தன் எழுபது வயதைக் கடந்த நிலையில் பள்ளிக்கூட கால்பந்தாட்ட நினைவுகளை முன்வைக்கும் நாடார் சார்  சிறுகதையை எழுதியிருந்தார். என்னுடைய ஒவ்வொரு தொகுதியிலும் பால்யம் சார்ந்த ஏதேனும் ஒரு சிறுகதையாவது இடம்பெற்றுவிடுகிறது. அதை என்னால் தவிர்க்கமுடிவதில்லை. உண்மையைச் சொன்னால், இப்போதுதான் பால்ய நினைவுகள் மிகமிகத் துல்லியமாக, அவற்றின் நிறங்களுடன் நினைவில் பொங்கியெழுந்தபடி உள்ளன. நீங்கள் குறிப்பிடுவதுபோலவலைதொகுதியில் பால்யகால நினைவுகளை மையமாகக் கொண்ட கதைகள் சற்றே கூடுதலாகவே இடம்பெற்றுவிட்டன.   தற்செயலாக அப்படி அமைந்துவிட்டன. திட்டமிடல் எதுவும் இல்லை. உங்கள் கேள்வியை ஒட்டி, உண்மையிலேயே பால்யம் தொடர்பாக ஒரு நாவல் எழுதினால் என்ன என்றொரு எண்ணம் இப்போது கிளர்ந்தெழுகிறது. நண்பர்களே, இக்கணத்திலிருந்தே அதை அசைபோடத் தொடங்கிவிட்டேன். காலம் எனக்கு எப்படி துணைசெய்யப் போகிறது எனத் தெரியவில்லை. ஒருவெளை, அப்படி ஒரு நாவலை நான் எழுதினால், அதை பதாகை குழுவினருக்கே சமர்ப்பணம் செய்வேன்.

நன்றி : பதாகையில் தொடர்ந்து எழுதுபவர்களில் ஒருவர், இன்னும் பேசப்பட வேண்டும் என்று தான் விரும்பும் எழுத்தாளர் ஒருவர் குறித்து ஒவ்வொரு காலாண்டும் சிறப்பிதழ் தொகுக்கிறார்.. முதல் காலாண்டிதழில் ஸ்ரீதர் நாராயணன், தான் மிகவும் மதிக்கும் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் சிறப்பிதழின் பதிப்பாசிரியராக இருந்தார். அடுத்து, நண்பர் சுனில் கிருஷ்ணன், சு வேணுகோபால் குறித்து ஒரு சிறப்பிதழ் தொகுத்தார். இப்போது, தங்களைப் போலவே புதுவையில் பிறந்து புலம்பெயர்ந்து வாழும் நண்பர் ரா கிரிதரன் “பாவண்ணன் சிறப்பிதழ்” செய்ய முன்வந்திருப்பதில் ஒரு முக்கியமான் விஷயம் இருக்கிறது. பதாகையில தொடர்புடையவர்களில் ஒருவரைத் தவிர மீதமுள்ள அனைவரும் தமிழகத்துக்கு வெளியே இருக்கிறோம், தமிழும் அதன் மேன்மை வெளிப்படும் தமிழிலக்கியமும்தான் எங்களை இணைக்கும் பாலமாக இருக்கின்றன. இது போன்ற சிறப்பிதழ்கள் எங்கள் ஈடுபாட்டுக்கு ஒரு பொருள் தருகின்றன, அது மட்டுமல்ல, சிறிய அளவில் நாங்கள் முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு ஒவ்வொரு காலாண்டும் ஏதோ ஒரு வகையில் எங்களுக்கு நெருக்கமாக இருக்கும் எழுத்தாளர்களைப் பற்றிப் பேசுவதும் அவர்களுடன் உரையாடுவதும் மிகப்பெரும் உற்சாகம் தருகிறது. உங்கள் ஆதரவுக்கும் ஒத்துழைப்புக்கும் நன்றிகள்.

தாயினும் சாலப்பரிந்து – பாவண்ணனின் ஒட்டகம் கேட்ட இசை கட்டுரை தொகுதி – வாசகனின் பரிந்துரை

தன்ராஜ் மணி

ottagam_kaetta_isai

நிமிடத்திற்கு நூறு அனுபவ பதிவுகள் முகநூலிலும், வலைப்பூக்களிலும் வெளி வரும் இந்நாட்களில் ,அனுபவ பதிவு வ்கை எழுத்துக்களை வாசிக்கும் எண்ணமே ஒரு மனச்சோர்வை எனக்களிக்கிறது.

ஆனால் இது பாவண்ணனின் அனுபவ கட்டுரைகள். சொற்களின் நெசவு கைவரப் பெற்றவர் தன் அனுபவங்களை எழுதியதை வாசிக்கும் பொழுதே இவ்வகை எழுத்துக்களை எவ்வளவு படைப்பூக்கத்துடன் எழுத முடியும் என்பதை உணர முடிகிறது. தன் அனுபவங்களை பதிவுகளாய் வலையேற்றிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் இத்தொகுப்பை  அவை எப்படி எழுதப்பட வேண்டும் என்பதற்கு வழிகாட்டி நூலாக கொள்ள பரிந்துரைக்கிறேன்.

பெரு நகர வாழ்க்கை சார்ந்த அனுபவங்கள், தன் வேலை நிமித்தம் அவர் செல்லும் இடங்களில் அவரை பாதித்த விஷயங்கள் இவையே பல கட்டுரைகளுக்கான கருப்பொருள்.

நாம் அன்றாடம் கண்டும் காணாமல் கடந்து போகும் சமூக அவலங்கள்  புறக்கணிக்கும் யதார்த்தங்கள் ,  கண் முன்னால் கரைந்து மறையும் வாழ்க்கை முறை இவையே இக்கட்டுரைகளின் பேசு பொருள்.  

ஒரு சிறுகதையாய் தான் எழுதமுடியாமல் போன அனுபவங்களை கட்டுரையாக்கி இருப்பதாக முன்னுரையில் பாவண்ணன் சொல்கிறார். இவர் தேர்ந்த கதைசொல்லியாகவும் இருப்பதால் அனைத்து கட்டுரைகளும் ஒரு சிறுகதை வாசித்த அனுபவத்தை கொடுக்கிறது.

ஒரு வகையில் அனுபவ கட்டுரை எழுத்தாளர் தன் அனுபவங்களுடன் சேர்த்து தன்னையும் வாசகர் முன் வைக்கிறார். சிலருக்கு சுபாவமாகவே மனிதரின் நற்பண்புகள் மட்டுமே கண்ணில் படும்,  சக ஜீவராசிகள் படும் அல்லல்களும். பாவண்ணன் அவர்களில் ஒருவர்.

ஒரு புலம் பெயர் பிஹாரிக்கு உதவி புரிதல், சமூகத்தின் ஆகக்கடைசி இடுக்கில் சிக்கி திணறிக் கொண்டிருக்கும் சிறுவர்களுக்கு தமிழ் சொல்லி கொடுத்தல், குழந்தையை தொலைத்து விட்டு தேடிக்கொண்டிருக்கும் தாயின் துயரை தானும் அடைதல் என பாவண்ணன் எனும் மனிதரின் நல்லியல்புகள் இக்கட்டுரைகளின் பேசுபொருளையும் தாண்டி வெளிப்படுகின்றன.

சமூக பொறுப்புணர்வோடு , பிறருக்கென எந்த பிரதி பலனும் எதிர்பார்க்காமல்  நேரம் செலவழிப்பவர்களையும் காண்பது மிக மிக அரிதாகிவிட்ட காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இச்சூழலிலும் பாவண்ணன் போன்றோர் மனிதமும் , அன்பும் , நெகிழ்வுமாய் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர் என்பதே பெரும் ஆசுவாசமளிக்கிறது.

நக்கலும் , நையாண்டியும் , வலிந்து வரவழைக்கப்பட்ட நகைச்சுவையும் இல்லாத அனுபவ கட்டுரைகளை நான் படித்து பல காலங்கள் ஆயிற்று. இவை எதுவுமே இக்கட்டுரைகளில் இல்லை என்பது எனக்கு பேருவகை அளித்தது.

இக்கட்டுரை தொகுப்பை வாசித்து முடித்தவுடன் ஒரு நெருங்கிய நண்பரிடம் நீண்ட நேரம் உரையாடிய நிறைவு. விடை பெறும்போது பிரிய மனதே இல்லாமல், குலுக்கிய கைகளை விடாமல் பிடித்துக் கொண்டு பேசிக் கொண்டிருக்கும் நண்பர்கள் உங்களுக்கு இருந்தால் , அவர்களின் பிரியம் உங்களை நெகிழச் செய்தால், இந்த கட்டுரைகள் உங்களுக்கு பிடிக்கும்.

ஆனந்த அருவியின் இனிய இசை – பாவண்ணனின் கவிதைத் தொகுப்பு

க. நாகராசன் 

DSC05080

ஊரும் சேரியும், கவர்ன்மென்ட் பிராமணன் ஆகிய மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து விடியல் பதிப்பகத்தின் வெளியீடாக பாவண்ணனின்குழந்தையைப் பின்தொடரும் காலம்கவிதைத்தொகுதி வெளிவந்த சம்பவம் எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. அப்போதுதான் நான் கவிதைகள் வழியாக இலக்கிய உலகில் அடியெடுத்து வைத்திருந்தேன்.  அந்தச் சமயத்தில்தான் நிலையானதொரு பணியில் நான் அமர்ந்திருந்தேன். பாவண்ணனின் முதல் சிறுகதைத் தொகுதி 1987 ஆம் ஆண்டில் வெளிவந்தது. ஆனால் அவருடைய முதல் கவிதைத் தொகுதி வெளிவருவதற்கு மேலும் பத்தாண்டுகள் 1997 வரைக்கும் காத்திருக்க வேண்டியிருந்தது.

குழந்தையைப் பின்தொடரும் காலம்தொகுதியில் பல கவிதைகள் இன்னும் என் நினைவில் பதிந்திருக்கின்றன. அத்தொகுதியின் முதல் கவிதை பாவண்ணன் தன் அம்மாவைப்பற்றி எழுதியிருக்கும் கவிதை. கிட்டத்தட்ட சுயசரிதையின் சாயல் உள்ள கவிதை. ‘அன்புதான் முதல்படிப்பு, அதுக்கப்புறம்தான் பட்டப்படிப்புஎன முடிவடையும் அக்கவிதையை பல முறை திரும்பத்திரும்ப படித்திருக்கிறேன். அந்த வரிகள் ஒரு ஆப்த வாக்கியம்போல மனத்தில் அப்படியே பதிந்துவிட்டது.

இன்னொரு கவிதையும் நினைவில் இருக்கிறது. ஒரு பெட்டிக்கடையில் கடைக்காரர் ஒலிபெருக்கியெல்லாம் வைத்து நல்ல நல்ல பாட்டுகளை வைத்து ஒலிக்க வைத்தபடி இருப்பார். வாடிக்கையாளர்கள் வருவார்கள், போவார்கள். அந்தக் கடைக்கு அருகில்தான் பேருந்து நிலையம் இருக்கும். பல பேருந்துகள் வந்து பயணிகளை இறக்கிவிட்டுச் செல்லும். நிறைய மனிதர்களின் நடமாட்டம். இரைச்சல். வேறொரு பக்கம் உணவு விடுதிகளில் சாப்பிட்டுவிட்டு வெளியே வரும் மக்களின் பேச்சுச்சத்தம். பழவண்டிக்கடைகள். மிதிவண்டியில் இளநீர்க்குலைகளைச் சாய்த்துவைத்துக் கொண்டு வியாபாரம் செய்யும் இளைஞன். அங்குமிங்கும் நடக்கும் பெண்கள். கையேந்தித் திரியும் பிச்சைக்காரர்கள். ஏராளமானவர்கள் நடமாடுகிறார்கள். அவர்களில் யாருக்கும் அந்தப் பாட்டை காதுகொடுத்துக் கேட்கும் பொறுமையோ, விருப்பமோ, நேரமோ இல்லை. கடந்து சென்றுகொண்டே இருப்பார்கள். கடைக்காரர் அதைப் பற்றியெல்லாம் நினைத்துச் சோர்வடைவதே இல்லை. பாடல்களை மாற்றிமாற்றி வைத்தபடியே இருப்பார்.

முதல் வாசிப்பிலேயே எனக்கு அந்தச் சித்திரம் பிடிபட்டுவிட்டது. அச்சுஅசலாக எங்கள் கிராமத்தின் பேருந்து நிறுத்தத்தின் சித்திரம் அது. அந்த நிறுத்தத்தில் நானும் நின்றிருக்கிறேன். அந்தப் பாட்டை நானும் கேட்டிருக்கிறேன். அதை நினைத்துநினைத்து மகிழ்ந்தேன். சில நாட்களுக்குப் பிறகு, அத்தொகுதியை மறுபடியும் வாசித்தபோதுதான், அது வெறும் கிராமத்துச்சித்திரம் மட்டுமல்ல என்பது புரிந்தது. தன் பாட்டை ஒருவரும் காதுகொடுத்துக் கேட்கவில்லை என்றபோதும் தன் கடன் பணிசெய்து கிடப்பதே என்பதுபோல, அவன் தன் போக்கில் பாடல்களை பாடவைத்தபடி இருக்கிறான் என வேறொரு கோணத்தில் புரிந்துகொண்டேன். அந்த வெளிச்சம் கிடைத்த பிறகு எனக்கு அந்தக் கவிதை மனசுக்கு மிகவும் நெருக்கமாகிவிட்டது. முதல் கவிதையில் தன் அம்மாவின் சித்திரத்தைத் தீட்டிய பாவண்ணன், அடுத்தடுத்த கவிதைகளில் தன் சித்திரத்தை தானே தீட்டிவைத்திருக்கிறாரோ என நினைக்கத் தோன்றியது. மூன்று கவிதைத்தொகுதிகள், கிட்டத்தட்ட நூறு கவிதைகளின் பிரசுரத்துக்குப் பிறகும்கூட பெட்டிக்கடைப் பாடல்கள்போல பாவண்ணனின் கவிதைகள் கவனம் பெறாமலேயே போயிருப்பதைப் பார்க்க வருத்தமாகத்தான் இருக்கிறது.

DSC04854பல கவிதைகளில் தன் கண்களால் காண நேர்ந்த காட்சிகளையே பாவண்ணன் கவிதையாக்குகிறார். காட்சியை முதற்பொருளாகவும் திரைக்குப் பின்னால் வேறொரு அம்சத்தை மறைபொருளாகவும் இணைத்து அவர் நெய்திருக்கும் விதம் வசீகரமாக இருக்கிறது.  அடைமழையில் ஒதுங்க இடம் கிடைக்காமல், நனையும் தன் குழந்தையின் தலையை முந்தானையால் மறைக்கும் பிச்சைக்காரி, கடலில் அகப்பட்ட மீன்களை வலையிலிருந்து உதறும் மீனவர்கள், பிழைப்பதற்காக புதிய ஊருக்கு திருட்டு ரயில் ஏறிவரும் புதியவனை சந்தேக வழக்கில் அள்ளிப் போட்டுக்கொண்டு செல்லும் காவல் வாகனம், மனப்பாடச் செய்யுளை ஒப்பிக்காத மாணவிக்கு முட்டிப் போடும் தண்டனையைக் கொடுக்கும் ஆசிரியை, அந்த ஆசிரியை அடுத்த பிறவியில் கழுதையாகவோ நாயாகவோ பிறந்து தெருத்தெருவாக அலைந்து திரிய வேண்டும் என மனத்துக்குள் சாபமிடும் மாணவி, கோபம் கொண்ட அந்த மாணவியை அமைதிப்படுத்தியபடி மதில்மேல் ஓடும் அணில், ஆலமர விழுதில் ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருக்கும் இளம்பெண், கூடு கட்டுவதற்காக கவ்விச்சென்ற குச்சியை தவறவிடும் காகம், ஆறுநாட்கள் தொடர்மழையால் அலங்கோலமாகும் நகரம், உயர்ந்த மரத்தின் உலர்ந்த கிளையில் உட்கார்ந்து குதிரையோட்டும் சுள்ளி பொறுக்கும் சிறுமி, ஒற்றைக்கால் பந்தலென நிற்கும் வேப்பமரம், விண்ணையும் மண்ணையும் தொட்டபடி விஸ்வரூபமெடுக்கும் குற்றாலத்துத் தேனருவி, நகரத்தெருக்களில் இரவு வேளைகளில் நாய்கள் உறங்கும் அழகு, ஐயனாரின் வாளிலிருந்து மரத்துக்கும் மரத்திலிருந்து வாளுக்கும் மாறிமாறிப் பயணித்து நிலைகொள்ளாமல் தவிக்கும் சுடுகாட்டுக் குருவி, நடைப்பயிற்சியில் நாயைத் தொலைக்கும் முதியவர், காக்கைக்கு வைத்த படையல் சோறென காட்சியளிக்கும் அருவியில் மாண்டவனின் உடல் என பாவண்ணன் கவிதையுலகில் ஏராளமான காட்சிகள். அவற்றை மீண்டும் மீண்டும் மனத்துக்குள் மீட்டிமீட்டி மறைபொருளைக் கண்டறிந்து சுவைக்கும்போது கவிதைகளை மிகவும் நெருக்கமாக உணரமுடிகிறது.

கண்முன் விரியும் காட்சிகளை கவிஞரின் மனம் புகைப்படங்களாகச் சேமித்துக்கொள்கிறது. மனத்துக்குள் அவற்றை அசைபோடுகிறது. துல்லியமான அவதானிப்பும், காட்சிகள் உள்ளத்தில் ஏற்படுத்தும் சலனங்களும் தங்குதடையற்ற மொழியின் ஆற்றொழுக்கும் சொல்லாமல் சொன்னபடி விலகியோடும் மறைபொருளும் கவிதை ஓவியங்களாக விரிகின்றன என பாவண்ணனின் கவிதைகளின் சூத்திரமாக பொதுவாகச் சொல்லலாம் என்று தோன்றுகிறது. அதே சமயத்தில் இந்த எளிய சூத்திரத்தில் அவருடைய எல்லாக் கவிதைகளையும் அடக்கிவிடமுடியாது என்பதையும் உணரமுடிகிறது. எடுத்துக்காட்டாகஅணில்கவிதை. அதன் மையப்பொருள் மரணம். மரணம் அதிர்ச்சியடைகிறது. காரணம், வாழ்க்கை தன்னை கைவிட்ட அதிர்ச்சி.

வாழ்க்கையின் முகத்தில் துளிர்த்திருக்கிறது

மரணம் தூவிய விதை

உறக்கத்தில் ஏதாவது

ஒரு வாசல் வழியே நுழைந்து

ஏதாவது ஒரு வாசல் வழியே

வெளியேறுகிறது மரணம்

நடந்துசெல்லும் மானுடக்கூட்டத்தின்

பாதங்களுக்குக் கீழே

நிழல்போல ஒட்டிக்கிடக்கிறது மரணம்

கவித்துவம் வாய்ந்த இறுதி வரிகள் மிகமுக்கியமானவை: மரணம் விளையாடிக்கொண்டே இருக்கிறது / பழங்கள் தொங்கும் / கிளைக்குக் கிளை நகரும் அணில்போல. அணில் மரணத்திற்கான மிக இயல்பான படிமமாக வந்துள்ளது. பாவண்ணனின் மிகச்சிறந்த கவிதைகளில் ஒன்றாகஅணில்கவிதையைச் சொல்லமுடியும்.

பாவண்ணனின் கவிதைகளில் சிறுமிகளும் பெண்களும் வந்துகொண்டே இருக்கிறார்கள். ‘பூகவிதையில் வரும் சிறுமி தன் கனவில் பூ விழுகிறது என்று சொல்கிறாள். ஆனால், அடுத்தவர் கனவிலும் பூ விழுகிறது என்று சொன்னால் அது கனவாகவே இருக்காது, ஏதேனும் கதையின் நினைவாக இருக்கலாம் என கன்னத்தைக் கிள்ளிவிட்டு ஓடி விடுகிறாள். ’புன்னகையின் வெளிச்சம்கவிதையில் ஒரு சிறுமி இடம்பெற்றிருக்கிறாள். அவளுக்கு இறவாணத்து மூலையில் கையுடைந்த மரப்பாச்சிப் பொம்மையொன்று கிடைக்கிறது. அதைக் கழுவித் துடைக்கிறாள். ஆனந்தச் சிரிப்போடும் அளவற்ற ஆசைகளோடும் பாட்டுத்துணுக்குகளோடும் பரிகாசப் பேச்சுகளோடும் ஓர் ஊஞ்சல் அசைகிறது. சூரியனைப் பற்றும் விருப்போடு விண்ணைத் தொட ஊஞ்சல் காற்றில் பறக்கிறது. குழலாட, குழையாட, குட்டைப்பாவாடை சரசரக்க, இன்னொரு சிறுமி ஊஞ்சலாடுகிறாள். அவளிலிருந்து ஆயிரக்கணக்கான சிறுமிகள் தோன்றிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் ஆச்சரியத்தில் உறைந்து நிற்பவளிடம் ஒரு புன்னகையைப் பரிசாக அளிக்கிறார்கள். இருண்ட சமையலறையின் மூலையில் தன் வெளிச்சத்தைப் படரவிட்டது அந்தப் புன்னகை. கையொடிந்த மரப்பாச்சிப் பொம்மை நிறைவேறாத கனவுகளைக் கொண்ட சிறுமிகளுக்குப் படிமமாவது மிகச்சிறப்பானது. சமையலறை மூலையை அவர்களுடைய புன்னகை வெளிச்சமூட்டுவது குறியீட்டுத் தன்மை வாய்ந்தது. இன்னொரு பெண்குழந்தைவழிபாடுகவிதையில் வருகிறாள். குழந்தையும் தெய்வமும் இணையும் புள்ளியை சாதாரண வரிகளின்மூலம் அசாதாரண கவித்துவத்தை பாவண்ணன் வெளிப்படுத்துகிறார். கருவறைக்கு பொற்பாதம் காட்டி/ சட்டென்று விழுந்து சிரிக்கிறது குழந்தை.

சிறுமிகள் அடிக்கடி வருவதுபோல கவிதைகளில் அருவிகளும் அடிக்கடி இடம்பெறுகின்றன. மழை மீண்டும் மீண்டும் வருகிறது. (குறைந்தபட்சமாக பதினைந்து கவிதைகள்) பல கவிதைகளில் பட்டங்கள் பறக்கின்றன. மலர்கள் மலர்கின்றன. நாய்கள் உலவுகின்றன. காக்கைகள் கரைகின்றன. கனவுகள் மீண்டும் மீண்டும் விரிகின்றன. இப்படி திரும்பத் திரும்ப வந்தாலும்கூட அவை ஒற்றைப்பொருளை உணர்த்துவதில்லை. வெவ்வேறு வகைகளில் படிமமாகவோ, உருவகமாகவோ, குறியீடாகவோ மாறிமாறி வரிகளுக்கு வலிமையூட்டுகின்றன.

பயணம்கவிதை நல்லதொரு சிறுகதைபோல உள்ளது. ‘இளமைகவிதையின் இறுதிப்பகுதியில் உள்ள ஆறேழு வரிகள் அதிகப்படியாக நீட்டப்பட்டவையாக உள்ளன. கவிதை, அவ்வரிகளுக்கு முன்பேயே முடிவடைந்துவிட்டதுபோல இருக்கிறது. பொதுவாக பாவண்ணனின் கவிதைகள் அளவில் சிறியவை. ஆனால், ‘ஆதிக்காதலியின் அழுகுரல்’ (நான்கு பக்கங்கள்) ‘உயிரின் இசை’(பத்து பக்கங்கள்) இரண்டும் மிக நீண்டவையாக உள்ளன. எனினும் சற்றும் நெருடாமல் இயல்பாக ஒரு நதியோட்டம்போல விரிந்து செல்கின்றன

எளிய சொற்கள், நேரடியான வருணனைகள், ஒரு தளத்திலிருந்து சட்டென்று அடுத்த தளத்துக்கு தாவும் தன்மை, சாதாரண உருவில் இடம்பெறும் அசாதாரணமான படிமங்கள், முத்தாய்ப்பான  உச்சம், காட்சிகளை படிப்பவர் மனத்தில் ஆணியாக அறையும் சித்தரிப்பு என பாவண்ணனின் கவிதைகளில் தனித்துவம் மிளிர்கிறது. ஒருவகையில் அவருடைய சிறுகதை மற்றும் புனைவு எழுத்துகளின் நீட்சியே அவருடைய கவிதைகள் என்று சொல்லலாம். கவிதைகள் நவீன வடிவில் இருந்தாலும் இரண்டாயிரமாண்டு தமிழ்க்கவிதைகளின் தொடர்ச்சியாக அவற்றைக் கருதத் தோன்றுகிறது. விழுமியங்களும் கருப்பொருட்களும் எடுத்துரைக்கும் விதமும் ஒருவேளை காரணங்களாக இருக்கக்கூடும். நவீன இலக்கியச்சூழலில் பாவண்ணன் ஒரு கவிஞராக மிகுதியும் அடையாளம் காணப்படாதது ஏன் என்பது புரியாத புதிராகவே உள்ளது.

இந்தக் கட்டுரையை எழுதுவதற்காக கடந்த சில நாட்களாக நான் படித்த பாவண்ணனின் ஒட்டுமொத்தக் கவிதைகளையும் நினைத்துக்கொள்ளும் இத்தருணத்தில் (அவர் கவிதைகளில் அடிக்கடி இடம்பெறும்) அருவிகளும் இசையும் என் நெஞ்சில் எழுகின்றன. அவர் மொழியிலேயே சொன்னால் ஆனந்த அருவி மற்றும் இனிய இசை. ஒருவகையில் , இவை இரண்டுமே பாவண்ணனின் கவிதைகளுக்கு உருவகங்களாக கொள்ளத்தக்க இரு பாடுபொருட்கள். ‘இருள்என்றொரு  கவிதை. நடைபாதையில் தன் ஐந்து குழந்தைகளோடு உறங்கும் பிச்சைக்காரியின் தூக்கத்தைக்கூட கலைக்காமல் இருள் பயணிக்கிறது. இருள் எத்தனை கருணையோடு இருக்கிறது!  ஆதரவற்றவர்களுக்குக்கூட அது ஆதரவளிக்கிறது. ஏனெனில் அது பாவண்ணன் படைக்கும் இருள். கருணையோடுதான் இருக்கும். இனிமையைத்தான் கொடுக்கும்.

நிறைதல்என்னும் பாவண்ணனின் கவிதையோடு இந்தக் கட்டுரையை முடிக்க விரும்புகிறேன்.

மொழி புரியாத கடற்கரை ஊரில்

தென்னந்தோப்போரம் நடந்து செல்கிறேன்

கொட்டாங்குச்சி மேளத்தை

குச்சியால் தட்டியபடி

காற்றில் திளைத்திருக்கிறாள் ஒரே ஒரு சிறுமி

அவள் தலைக்கூந்தல் அழகாக நெளிகிறது

ஆனந்தம் கொப்பளிக்கிறது அவள் கண்களில்

அருகில் நிற்பதை உணராமல்

அவளது விரல் குச்சியை இயக்குகிறது

அவள் தாளத்துக்குக் கட்டுப்பட்டு

குரங்குக்குட்டிகள் போல

உருண்டும் புரண்டும்

எம்பியும் தவழ்ந்தும்

நாடகமாடுகின்றன அலைகள்

கீற்றுகளின் கைத்தட்டல் ஓசை

கிறுகிறுக்க வைக்கின்றன அவற்றை

உச்சத்தை நோக்கித் தாவுகிறது ஆட்டம்

தற்செயலாக திரும்புகிறது சிறுமியின் பார்வை

தெத்துப்பல் காட்டிச் சிரிக்கிறாள்

தொடரும்படி அவளிடம் சைகை காட்டுகிறேன்

கரையெங்கும் பரவி

நிறைகிறது மேள இசை

**

பாவண்ணன் படைப்பில் பெண் அகஉணர்வின் வெளிப்பாடு

மதுமிதா 

IMG_3717

பாண்டவர்கள் வனவாசத்தில் இருந்தபோது, ஒரு முனிவருக்குச் சொந்தமான மரத்திலிருந்து, பல வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே அதில் கனியும்  பழத்தைப் பறித்து விடுகிறார்கள்.  அக்கனியை உண்பதற்கு முன்பு குளித்து வரச் சென்றிருந்த முனிவரின் சாபத்துக்கு பயந்து என்ன செய்வது என்று அறியாமல் அவர்கள் திகைத்திருந்தபோது, கண்ணன் ஒரு உபாயம் சொல்கிறான். ஒவ்வொருவரும் தம் மனதில் இதுவரையில் யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்திருந்த ஒரு உண்மையைச் சொல்ல வேண்டும், அப்படிச் சொல்வது உண்மையென்றால் அந்தக் கனி மரத்தின் கிளைக்கே மறுபடியும் போய்ச் சேர்ந்துவிடும் என்கிறார். பாண்டவர்களும் ஒவ்வொருவராகத் தங்கள் மனதில் ரகசியமாக மறைத்து வைத்திருந்த  உண்மையைச் சொல்லச் சொல்ல, அந்தப் பழம் கொஞ்சம் கொஞ்சமாக மேலே செல்கிறது. மரத்தின் கிளை அருகே இருக்கும் அளவில் மேலே சென்று விடுகிறது. கடைசியில் திரௌபதி மட்டுமே தனது மனதில் இருக்கும் ரகசிய உண்மையைச் சொல்ல வேண்டும். அனைவரும் அவளைப் பார்க்கின்றனர். கண்ணன் குறும்புப் புன்னகையுடன் தீர்க்கமாக அவளைப் பார்க்கிறான். அப்போது திரௌபதி தான் கர்ணனை நேசிப்பதாகச் சொன்னதும் அந்தக் கனி மேலே சென்று மரத்தின் கிளையில் போய் ஒட்டிக்கொள்ளும்.

என்றிலிருந்தோ வாய்வழியாகத் தொடர்ந்து சொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் பலகதைகளில் ஒரு கதை இது. இந்தக் கதையைக் குறிப்பிட்டு, ஐந்து கணவன்மார்களுடன் வாழும் திரௌபதிக்கு அவர்களின் அண்ணன் கர்ணன் என்பது தெரியாமலேயே இந்த உணர்வு எழுந்துள்ளது என்றும், ஆறாவதாக ஒருவனை அவள் எப்படி விரும்பலாம் என்றும் இதுபோன்று இன்னும் சில, பல கேள்விகளும் ஆங்காங்கே கேட்கப்படுவதும் உண்டு.

ஒரு பெண்ணின் மனதில் கணவன் அல்லாத இன்னொரு ஆணின் நினைவு இவ்விதம் எழுவது சரியா தவறா என்பதைக் கடந்து, அகச் சிக்கலை உளவியல் ரீதியாக இப்படி விரிவாகப் பார்க்கும் கதைகள் தமிழில் இல்லை என்றே சொல்லலாம். இரு தார மனம், அல்லது அந்நிய ஆணுடனான உறவு போன்றவற்றைப் பேசும் சில படைப்புகள் பெண்ணின் பாலியல் சார்ந்த தனி மனித ஒழுக்கம் மீறியதாகப் படைக்கப்பட்டு இருந்தாலும், அந்த வேறொரு ஆணின் நினைவு ஒரு பெண்ணுக்கு ஏன் ஆறுதல் அளிக்கும் விதமாக இருக்க முடியும் என்னும் உணர்வு சார்ந்து நேரடியாகவோ மறைமுகமாகவோ வெளிப்பட்ட உளவியல் சார்ந்த கதைகள் வெளிவரவில்லை என்றே சொல்லலாம்.

ஒரு பெண் ஒரு ஆணை விரும்ப வேண்டுமென்றால், அதற்காக அவள் கட்டுப்பட்டிருக்கும் வகையில், இந்த உலகம் முழுக்க, பல்வேறு நாடுகளில் பல்வேறு விதங்களில் பல சட்ட திட்டங்கள் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. அதற்கு உட்பட்டே அவள் வாழ்ந்தாக வேண்டும். அவ்வகையில் அவள் ரத்தமும் சதையுமான உயிராக அன்றி ஒரு பொருளாகவோ, இயந்திரமாகவோ தான் கருதப்படும் மனநிலை ஏறக்குறைய அனைவரின் மனங்களிலும் பதியப்பட்டிருக்கிறது. ஆதியில் கற்காலத்தில் குகை மனிதர்களாக வாழ்ந்த சமயத்தில் இந்த நிலை பெண்ணுக்கு இல்லை. தான் விரும்பும் ஆணைத் தேர்ந்தெடுக்கும் உரிமை அவளுக்கு இருந்தது.

கற்கால பாலியல் சுதந்திரத்துக்கு சற்றே இணையானது என்பது போன்ற, லிவிங் டுகதெர் வாழ்க்கை என்று திருமணத்துக்கு முன்பே ஆணும் பெண்ணும் இணைந்து வாழும் கலாசாரம் இந்தியாவில் தமிழ்நாட்டிலும் இப்போது ஆரம்பித்து விட்டது என்றாலும், அப்படி இப்படியென்று பாலியல் ரீதியான தொடர்புகள் ஆங்காங்கே தென்பட்டாலும், கணவனைக் கடந்து வேறு ஆணை நினைப்பது தீங்கு என்று என்னும் பெண்கள் இன்னும் இருக்கவே செய்கிறார்கள். பெண்ணுள்ளத்தின் ஆழ்மன வெளிப்பாடுகள் இன்னும் பதிவு செய்யப்பட வேண்டிய வெளிகள் அதிகம் உள்ளன.

மலையில் இருந்து கொண்டு விலங்குகளுக்கு பயந்தால் எப்படி அய்யா

சந்தையில் இருந்து கொண்டு இரைச்சலுக்கு பயந்தால் எப்படி அய்யா

அக்கமகாதேவியின் இந்தப் பாடலை பாவண்ணன் அவர்களின் கட்டுரையில் வாசித்த பின்பே அக்கமகாதேவியைப் பற்றி மேலும் அறியும் ஆர்வம் எழுந்து இன்னும் இன்னும் மிகுந்தது. அது அக்கமகாதேவியைப் பற்றி அறியும் தேடலாகவும் அமைந்தது. அவளின் சென்ன மல்லிகார்ஜுனனின் மீதான எல்லையற்ற காதல் உள்ளத்தை ஆக்கிரமித்தது.

இது வெளிவந்தநதியின் கரையில்’, ’துங்கபத்திரைஇரண்டு நூல்களைப் பற்றியும் எழுத ஆரம்பிக்கையில் மரங்கள், பறவைகள், இயற்கை, மனிதம் என்று பல அற்புத தரிசனங்களையும் காணலாம் என்பதால் இன்னொரு கட்டுரையில் அதை விரிவாகப் பார்க்கலாம். நடைப்பயிற்சி உடலுக்கும் மனதுக்கும் அளிக்கும் இன்பத்துடன், அப்போது காண நேரும் மனித கதாபாத்திரங்களின் சித்திரங்கள் படைப்பாக எழும் காத்திரம் மிக்கவை. இதைப் போன்ற உண்மை நிகழ்வை பாவண்ணன் புனைவாக்கிக் காட்டியதாகவே இப்படைப்புகள் இருக்கும். அப்புத்தகத்தை வாசித்த காலத்தில், எந்தப் புத்தகம் வாங்கலாம் என்று என்னிடம் கேட்ட அனைவரிடமும் அவ்விரு புத்தகங்களைக் குறித்தே பேசிக் கொண்டிருந்தேன். அப்படி மூழ்கி ஆழ்ந்து போன அந்தப் புத்தகங்களைக் குறித்து விரிவாக இங்கே இப்போது எழுதவில்லை. அவரின் மொழிபெயர்ப்பான பைரப்பாவின் பருவம் கடந்து, கிரிஷ்கர்னாட் நாடகங்கள் என பல மொழிபெயர்ப்புகளும் சிறப்பானவை.

அந்தப் புத்தகங்கள் என்னை படைப்பாளியாக வெளிப்படுத்தக் காரணமாயிருந்த கட்டுரையை மட்டும் எடுத்துக் கொண்டிருக்கிறேன்.

அக்கமகாதேவி வசனங்கள் புத்தகம் வெளிவரக் காரணமாயிருந்த இந்தப் பாடல் இப்புத்தகத்தில்தான் இடம் பெற்றிருந்தது. அக்கமகாதேவி கணவனையும் அரசையும் துறந்து, சிவனாம் சென்னமல்லிகார்ஜுனனைத் தேடி கதலிவனம் வருகிறாள்.

ஆண்டாள், மீரா, காரைக்கால் அம்மையார் போன்று ஆண் கடவுளை நேசித்தவர்கள் புனிதப் பெண்ணாகப் பார்க்கப்பட்டார்களே தவிர, ஆணை நேசித்தவர்கள் எங்கும் போற்றப்படவில்லை. அக்கமகாதேவி மீராவைப் போன்று கணவனைத் துறந்து கடவுளை அடைய விரும்பியவர். இவர்களைப் போற்றுபவர்கள் யதார்த்தத்தில் ஒரு பெண் இன்னொரு ஆணை நினைப்பதையே குற்றமாகக் கருதுகின்றனர்.

ஒரு சொல், ஒரு வில், ஒரு இல்கொண்டவன் என்று போற்றப்படும் ராமன், சீதைக்குஇப்பிறவியில் இரு மாதரை சிந்தையாலும் தொடேன்என்று வாக்களித்தவன்.

பெண்களும், அதே போல மனதாலும் கணவனைத் தவிர இன்னொரு ஆண்மகனை எண்ணக்கூடாது என்னும் சிந்தையிலேயே வளர்க்கப்படுகிறார்கள்.

பாவண்ணன் இன்றைய தமிழ் படைப்பாளிகளில் பெண்ணின் ஆழ்மனதின் பரிமாணத்தை பெண்மனதின் வெளிப்பாடாகவே வெளிப்படுத்துவதில் வெற்றி பெற்றவராக இருக்கிறார்.

இவரின் படைப்புகளில் இவர் உபயோகிக்கும் உவமைகள் தனித்துவமானவை. உதாரணத்துக்கு சிலவற்றை மட்டும் இங்கே பார்க்கலாம்.

கல்யாணத்துக்கு சோறாக்கிப் பரப்பி வைத்த மாதிரி அம்பாரமாய் இருந்தன மல்லிகை அரும்புகள்.  (வேர்கள் தொலைவில் இருக்கின்றன தொகுப்பில், வடிகால்)

காது அடைத்தவள் பேசுகிற மாதிரி சின்னச்சின்ன வார்த்தைகளாய் விழுகிற அவள் பேச்சு உடைந்து போன புல்லாங்குழலில் வருகிற மெல்லிய ஓசை மாதிரி இருக்கும். (வேர்கள் தொலைவில் இருக்கின்றன தொகுப்பில், மீரா பற்றிய சில குறிப்புகள்)

தரமான ஒரு ரசிகனுக்குத் தன் ஓவியங்களின் நுணுக்கத்தைச் சொல்கிற சித்திரக்காரன் மாதிரி தனது அழகையெல்லாம் தெரு திறந்து காட்டியது. (வேர்கள் தொலைவில் இருக்கின்றன தொகுப்பில், மேடுகள் பள்ளங்கள்)

இவருடைய கதையின் ஆரம்ப வரிகளில் கதைக்கு உள்ளே இழுத்துச் செல்லும் நுணுக்கத்தைக் காணலாம்.

போ போ என்று கிளிப்பிள்ளைக்குச் சொல்கிற மாதிரி சொல்லி அனுப்பியபோது ரயில்வே ஸ்டேஷனுக்குப் பக்கத்தில் நாவல்பழம் பொறுக்கவும், கடலோரம் ஆட்டம் போடவும் சுவாரஸ்யத்தோடு ஓடத் தொடங்கியதுதான் முதல் தப்பு..

(வேர்கள் தொலைவில் இருக்கின்றன தொகுப்பில், வேர்கள் தொலைவில் இருக்கின்றன)

ஆழ்கவனச் சிகிச்சைப்பிரிவு வளாகத்தைத் தேடி உள்ளே சென்ற இரண்டு மூன்று நிமிடங்களுக்குள்ளாகவே திரும்பி படிக்கட்டுகளில் இறங்கி வருவதை நம்ப முடியாமல் ஆச்சர்யத்தோடு பார்த்தான் சிவா.

(பொம்மைக்காரி தொகுப்பில், ஒற்றை மரம் சிறுகதை)

காவல் நிலையச் சந்திப்பில் வண்டியைத் திருப்பும்போதே பார்த்துவிட்டேன். வாசலில் முருங்கை மரத்தடியில் ஒரு பெரிய தட்டு நிறையச் சோற்றை வைத்துக்கொண்டு அம்மா நின்றிருந்தாள்.

(பொம்மைக்காரி தொகுப்பில், அம்மா சிறுகதை)

தமிழ்ச் சொற்களை இயல்பாக உருவாக்கி அறிமுகப் படுத்துகிறார். உதாரணமாக ICU – ஆழ்கவன சிகிச்சைப் பிரிவு

உவமைகளும், கதையின் தொடக்கங்களும் விரிவாக இன்னும் தனியாக கட்டுரைகள் எழுதும் அளவில் இருக்கின்றன என்பதால், பாவண்ணனின் வேர்கள் தொலைவில் இருக்கின்றன, பொம்மைக்காரி இரண்டு சிறுகதைத் தொகுப்புகளிலும் இருக்கும் இன்னும் சில விஷயங்களை மட்டும் இங்கே பார்க்கலாம்.

“தமிழ்ச் சிறுகதை அரைநூற்றாண்டு வயதை உடையது. உலக இலக்கியம் பொருட்படுத்தத் தக்க சிறுகதைகளை தமிழ் அளித்துள்ளது என்பதையும் நாம் அறிவோம். ஆனால், சிறுகதையே போன்று, இன்றைய தமிழ் பத்திரிகைகளில் மாதந்தோறும் வெளியிடப்படும் சுமார் ஆயிரம் மாரீசக் கதைகளில், அசல் கதைகள் நாலைந்து தேறுமா என்பது சந்தேகத்துக்குரியது. ஆயிரத்தில் ஒன்று தேறும் எனினும், அவை உடனுக்குடன் தொகுதியாக வரும் சாத்தியம் குறைவு. இது கதை ஆசிரியரின் துரதிருஷ்டம். அவன் வெளிப்படும்போது மட்டும் அங்கீகரிக்கப்படுபவனாக இருக்கிறான்.

பாவண்ணனுக்கு இந்த நல்ல வாய்ப்பு தக்க தருணத்தில் வாய்த்திருக்கிறது. நல்ல கதைகள், உடனடியாகப் புத்தக உருவம் பெறுவது குறித்து எனக்கு மிக மகிழ்ச்சியாக இருக்கிறது…. “

என்று எழுத்தாளர் பிரபஞ்சன் வேர்கள் தொலைவில் இருக்கின்றன தொகுப்பில், தன்னுடைய உரையாகக் கொடுத்துள்ளார்.

பாவண்ணன் அவர்களின் இத்தனை வருடங்களாக அவர் எழுதிய சிறுகதைகளின் முழுமையான தொகுப்பு வெளிவரும் நாளுக்காகக் காத்திருக்கிறோம்.

வேர்கள் தொலைவில் இருக்கின்றனதொகுப்பில்மீரா பற்றிய சில குறிப்புகள்கதையில் வலிப்பு நோயில் மீரா படும் அவஸ்தைகள், அதனால் உளவியல் ரீதியாகத் திருமணமாகாத ஒரு பெண்ணின் மனவலி ஆழமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ’பொம்மைக்காரிதொகுப்பிலோபூனைக்குட்டிகதையில் வைதேகிச் செல்லம் படும் வேதனை கன்னங்களிலும் காதோரங்களிலும் கைகளிலும் கால்களிலும் கரிக்கோடு இழுத்ததுபோல் புசுபுசுவென்று அடர்ந்து வளர்ந்த முடிச்சுருளால், அவள் உடன் படிக்கும் குழந்தைகளிடமிருந்து ஒதுக்கப்பட்டு தனியாக இருப்பதும், பெற்றோரின் கவலையும் மிகச் சிறப்பாக சொல்லப்பட்டிருக்கும். இந்த வகை நோய் குறித்து தமிழ் இலக்கியத்தில் ஒரு படைப்பு வருவதும் இதுவே முதன் முறையாக உள்ளது. கைகளிலோ கால்களிலோ லேசாக இயல்பாக இருக்கும் முடியைக்கூட அழகு நிலையங்களுக்குச் சென்று மேனிக்யூர் பெடிக்க்யூர் என்று அழகுபடுத்திக் கொண்டு இயங்கும் காலகட்டத்தில் இந்தப் படைப்பு உளவியல் சார்ந்து அதிமுக்கியத்துவம் பெறுகிறது. துணை சிறுகதை திருமணமாகாத ஆணை அல்ல திருமண மண்டபத்தில் மணப்பெண் நான்கு வருடங்களாகக் காதலித்த காதலனுடன் காணாமல் போய்விட, மணமகளின் தங்கையே மணமகளாக்கப்பட்டு திருமணம் செய்து வைக்கப்பட்டு, அவளும் போய்விட அந்த ஆண் கணபதியின் உள்ளச்சோர்வும் வலியும் அந்த நாளினை அவன் எதிர்கொள்ளும் விதமும் அப்படி காட்சிப்படுத்தப் பட்டிருக்கும். கணபதி என்ற பெயரை இதற்காகவே அந்த கதாபாத்திரத்துக்கு வைத்தாரோ என்னவோ.

வெள்ளம் சிறுகதையோ புத்த துறவி சூரபுத்திரன் குறித்தது. சூரதத்தனிடம் தாரிணி உரையாடுவதும் விவாதிப்பதும் இருவரும் உணர்வுப் பிழம்பாகும் நிலையில் காதலின் காமத்தின் சுடரில் மனித குலத்தின் மனப்பிறழ்வுநிலை துல்லியமாக வெளிப்பட்டுள்ளது.

ஒவ்வொரு கதையும் கதாபாத்திரமும் தன்னளவில் தனித்துவமாக சித்தரிக்கப்பட்டிருந்தாலும் பொம்மைக்காரி கதையினை மட்டும் இங்கே பார்க்கலாம். இன்னும் விரிவாகப் பார்க்க வேண்டிய பல கூறுகள்  அக்கதையில் உள்ளன.

பொம்மைக்காரன் மாரியின் மனைவி வள்ளி. அதனால் அவள் பொம்மைக்காரி என்றே அழைக்கப்படுகிறாள். திருமணம் செய்து கொண்ட ஒரே காரணத்தால் அவள் வாழ்க்கையை அவனுக்கென அர்ப்பணித்திருப்பதாக அவள் எண்ணிக்கொண்டிருக்க, தன் வாழ்க்கையை அவள் கணவனுக்காகத் தொலைத்திருப்பதைக் காணமுடிகிறது. அவனுக்கென அவள்  அனைத்தையும் செய்யும்போது, ஒவ்வொரு வேலையும் அவனுக்கு அவளின் அன்பையோ அவனுக்காக செய்யும் பணிவிடைகளையோ ஒருபொழுதும் நினைவுபடுத்தவில்லை. நான் ஆண் என்ற இயல்பான திமிருடன் அவளை எப்போதும் கையாள்கிறான். அழைத்தவுடன் ஓடிப்போய் அருகில் நின்று சொல்லும் வேலைகளைச் செய்ய வேண்டும். வாய் திறந்து எதுவும் சொன்னாலும் வாய்க்கு வரக்கூடாத காது கொடுத்து கேட்க முடியாத திட்டும் அடி உதையும் கிடைக்கும். அவன் அவளுடன் கொள்ளும் உறவும் கூட விலங்கினங்கள் புணர்வது போன்றே காட்சிப்படுத்தப்படுகிறது. உறங்குபவளை எழுப்பி அவளை நெருங்குபவன் கெட்ட வார்த்தையில் திட்டிக்கொண்டே உறவு கொள்கிறான். இத்தனைக்குப் பிறகும் குடியில் அடி உதை என்று வாங்கிக்கொண்டும் அவள் அவனுக்காகவே வேலை செய்து கொண்டு எந்த உணர்வும் இன்றி இருக்கிறாள்.

வள்ளி அவனுக்கு அனைத்துமானவளாக இருக்கிறாள். அந்த அருமையை அறியாதவனாக தனக்கான அடிமையாகவே அவளைக் கருதிக்கொண்டு அவன் இருக்கிறான்.

வெளியூரில் ஒரு விழா. விழாவுக்கு வரும் கூட்டத்தில் விற்கலாம் என்று அங்கே பொம்மைக்கடை போடச் செல்கையில், பொம்மையை வாங்க வந்ததுபோல், வள்ளியைப் பார்த்துப் பேசும் சில இளைஞர்களின் ஜாடைப் பேச்சில் மாரி கோபப்பட்டுவிட அவர்களும் மாரியும் கைகலப்பில் இறங்குகின்றனர். அவர்கள் நால்வர்.. இருந்தும் மாரி மனைவிக்காக அவர்களை அடிக்க அவர்கள் இவனை அடிக்க, காயத்துடன் பொம்மை வண்டியை விட்டு விட்டு இருவரும் தப்பித்து ஓடுகின்றனர். காட்டின் மறைவில் ஒரு இடத்தில் மறைந்து கொள்கின்றனர். காயத்தின் வலியின் தீவிரத்தால் அவனால் நடக்கமுடியாமல் இருக்க, தண்ணீர் தாகத்தில் தவிக்கும் அவனுக்கு வள்ளி தண்ணீர் எடுக்க செல்கையில், நால்வரில் ஒருவனான சுருள்முடிக்காரன் அவளைப் பிடித்து, தன்னுடன் உறவு கொள்ள சம்மதித்தால், அவளுடைய கணவனை மற்றவர்களுக்குக் காட்டிக் கொடுக்காமல் விட்டு விடுவதாகவும், இல்லையெனில் கொன்றுவிடப் போவதாகவும் மிரட்டுகிறான். கணவனின் உயிரைக் காக்க அவள் பேச்சற்று கையறு நிலையில் கிடக்கிறாள். அவனோ அவளின் அழகை வர்ணித்தபடி முத்தமிட்டு முத்தமிட்டு அவளை அடைகிறான்.

வாக்களித்ததைப் போலவே மற்றவர்களிடம், இங்கே அவர்கள் இருவரும் இல்லை என்று சொல்லி வேறு பக்கமாக அழைத்துப் போய் விடுகிறான். வள்ளி மாரியை மெதுவாக வீட்டுக்கு அழைத்துப் போய்விடுகிறாள். அங்கே அவன் குணமடையும் வரையில் அவனுக்கு பணிவிடை செய்கிறாள். அப்போதும் அவன் அவளை அடித்தும் திட்டியும் துன்புறுத்துகிறான். ஒரு நாள் அவள் குளத்தில் குளிக்கச் செல்கையில், யாராவது வருவார்களோ என்று அஞ்சுகிறாள்.

எந்த உறவு கட்டாயத்தின் பேரில் அவளின் அனுமதியின்றி கணவனின் உயிர் பணயமாக வைக்கப்பட்டு நிகழ்ந்ததோ, எந்த உறவை அவள் வெறுத்தாலோ, எந்த உறவை நினைவு கூர அஞ்சினாளோ, அந்த நினைவே அவளுக்கு ஆறுதல் அளிக்க முடியுமா? பெண்ணின் அகமனச் சிக்கல் எத்தனை மர்ம முடிச்சுகளுடன் இருக்கும் வகையில் இச்சமூகம் கட்டமைத்திருக்கிறது.

அப்போது சுருள்முடிக்காரனின் ஞாபகம் வரும் காட்சி இரண்டரை பக்கங்களுக்கு காட்சிப்படுத்தப்பட்ட விதம் படைப்பாக்கத்தின் உச்சம்.

துணியை இழுத்து மார்புக்குக் குறுக்கில் முடிச்சிட்டபடி அவள் எழுந்து குளத்தின் மையத்தை நோக்கி மெதுவாக நடந்தாள். தன்னை இயக்கும் சக்தி குழப்பமா தெளிவா என்று புரியாமலேயே ஆறேழு அடி நகர்ந்தவளின் கழுத்தைச் சுற்றி தண்ணீர் மோதிய கணத்தில் அவள் கால்கள் தானாகவே நின்றன. மீண்டும் மீண்டும் தன்னை முத்தமிட்டபடி இருப்பது போன்ற எண்ணம் மனதில் பொங்கியது. அவள் வேதனைகளை யெல்லாம் அந்த முத்தம் அழுத்தித் துடைத்து விடுவதைப் போல இருந்தது. அந்த ஆறுதலை அவள் மனம் விருப்பத்தோடு ஏற்றுக்கொள்வதை ஆச்சர்யமாக உணர்ந்தாள். நின்று இருள் சூழ்ந்த குளத்தையும் பனைமரங்களையும் அசைவில்லாமல் வெகுநேரத்துக்கு பார்த்தபடி இருந்தாள். மறுகணமே திரும்பி எதுவுமே நடக்காததைப் போல் கரையை நோக்கி நடந்தாள்.

கடைசி வரி இப்படி முடிகையில் கணவர்களால் பொம்மையைப் போல நடத்தப்பட்டு, அடி உதைகள் அனுபவித்து, விலங்கினைப் போல புணரும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் மொத்த பெண்களின் பிரதிநிதியாக வள்ளி காட்சிப்படுத்தப் பட்டிருக்கிறாள் என்பதை உணர முடிகிறது.

சொல்லாமல் சொல்லப்பட்ட விஷயம் என்ன அழுத்தமான ஆழமான உணர்வினை கச்சிதமான அதிர்வாக மனதில் எழுப்புகிறது.

ஒரு பெண் இதுவரையில் பதிவு செய்யாத உணர்வினைத், தானே பெண்ணாக, பெண்ணின் உணர்வினை உள்வாங்கி படைத்த பாவண்ணனின் படைப்பாற்றல் இந்தக் கதையுடன் மட்டும் நின்றுவிடவில்லை. மற்ற கதைகளின் கதாபாத்திரங்களிலும் வெவ்வேறு விதமான உணர்வெழுச்சியையும் காட்சிகளின் வழியே வெவ்வேறு கோணங்களில் உணர்வின் வெளிப்பாட்டையும் பதிவு செய்திருக்கிறார்.

அம்மா சிறுகதை எழுப்பும் உணர்வெழுச்சி அப்பப்பாபோன தலைமுறையின் தானமளிக்கும் பரந்த பிரியமான மனசுக்கும் இன்றைய தலைமுறையின் குறுகிய சிக்கனமான மனசுக்குமான தவிர்க்க முடியாத இடைவெளியைப் பார்க்க முடிகிறது. நேசிக்கும் உயிர்களுக்கெல்லாம் உணவளித்து உலகுக்கே தாயாக விரும்பும் அம்மாவின் மனநிலை எந்த அளவில் பாதிக்கப்பட்டு சிலைக்கு உணவளிப்பதாக முடியும் கதையில் மகனின் மனதை உலுக்கி எடுக்கிறது.

ஒரு காட்சிக்குள் எழுத்தாளன் வாழ்க்கையைப் படிப்பது எப்படி? பல வழிகள் அதற்கு உண்டு. காட்சி நிகழும் கணத்தில் அவன் மனம் ஏதோ ஓர் எண்ணத்தை ஆழத்திலிருந்து மீட்டெடுக்கிறது. வெறும் எண்ணம் மட்டும் அல்ல அது. ஒரு வாழ்க்கைத் துணுக்கு. அதை அவன் கண்கள் தன் முன் நிகழும் காட்சியுடன் இணைக்கிறது. அப்போது எழும் புதிய சுடரின் அசைவில் அவன் புத்தம் புதிய ஒன்றைக் கண்டடைகிறான். கண்டுபிடிக்கும் அனுபவத்துக்காகவும் அதில் திளைக்கும் பரவசத்துக்காகவும் அவன் புதுப்புதுக் காட்சிகளை நோக்கித் தாவிக்கொண்டே இருக்கிறான்….

எல்லா காட்சியின் வழியாகவும் அவன் அறிய விளைவது வாழ்க்கையின் பாடம்.

கு. அழகிரிசாமியின் சிறுகதைகள் முழுத் தொகுப்பின் முன்னுரையில் பாவண்ணன் இவ்வாறு எழுதி இருப்பார்.

இந்த இரு தொகுப்புகளிலும் கூட இதை பிசகாமல் அப்படியே காணலாம்.

பாவண்ணன் அவர்களின் சிறுகதைகளின் முழுமையான தொகுப்பு வர வேண்டும். அதிலும் அவரின் கதாபாத்திரங்களின் சுடர் விடும் சித்திரமாக விரியும் புதுப்புது காட்சிகளாக இவ்வாறே நாம் கண்டு உணர்ந்து வாழ்க்கையின் பாடத்தை அறிய விளையலாம்.. ரசிக்கலாம்.