கியோர்கி கொஸ்போதினோவ்

இலக்கியம் இனியும் என்ன செய்ய முடியும்? – கியோர்கி கொஸ்போதினோவ்

(This speech is translated with the kind permission of Georgi Gospodinov and the Jan Michalski Foundation for Writing and Literature for non-commercial publication specifically at Padhaakai.com. No other use may be made of this material without prior permission of the author and the publisher)

ஆம், நான் மனவெழுச்சி மிக்க நிலையில் இருக்கிறேன். அதற்கு முன் நான் நன்றி சொல்லியாக வேண்டும். இந்தப் பரிசை நிறுவிய துணிச்சலுக்காக வெரா மிசால்ஸ்கிக்கு நன்றிகள், உலகில் நானிருக்கும் பகுதியில் வெளிவந்த புத்தகத்தைத் தேர்ந்தெடுத்த மரியாதைக்குரிய தேர்வுக் குழுவினருக்கு நன்றிகள். இந்தப் புத்தகம் வாசிக்கப்பட காரணமாக இருந்த என் மொழிபெயர்ப்பாளர்களுக்கு நன்றிகள் – பிரெஞ்சு மொழியாக்கம் செய்த மேரி வ்ரினா-நிகொலோவுக்கு நன்றிகள் (அவர் இங்கு இருக்கிறார்), ஜெர்மன் மொழியாக்கம் செய்த அலெக்சாண்டர் சிட்ஸ்மானுக்கும் ஆங்கில மொழியாக்கம் செய்த ஏஞ்சலா ரோடலுக்கும் நன்றிகள். என் பதிப்பாளர்களுக்கும் நன்றிகள்- இன்டர்வால்ஸ், ட்ரோஷ் வெர்லக், ஓப்பன் லெட்டர் புக்ஸ். என்னுடன் பரிந்துரைக்கப்பட்ட எழுத்தாளர்களுக்கும் நன்றிகள். இந்த இறுதிப் பட்டியலில் ஜூலியன் பார்ன்ஸ், ஜெவாட் க்ரஹாசன், ஆதிஷ் தசீர், நவீத் கெர்மானி ஆகியவர்களுடன் நானும் இடம் பெற்றிருப்பது என்னை பெருமைப்படுத்துவதாக உணர்கிறேன். இங்கு கூடியுள்ள உங்கள் அனைவருக்கும் நன்றிகள். என் மனைவி, பில்யானாவுக்கு நான் நன்றி சொல்லியாக வேண்டும், என் மகள் ரயாவுக்கும் நன்றிகள். இந்த நாவலை நான் முடிக்கும்போது அவளுக்கு ஐந்து வயது ஆகியிருந்தது. கதை ஓடாதபோது, அவள் பூனை அல்லது டினோசர் கதை சொல்லி எனக்கு உதவ எப்போதும் தயாராகவே இருந்தாள். ஒரு நாள் மாலை, ஏன் என் புத்தகங்களின் பெயர்கள் எப்போதும் சோகமாக இருக்கின்றன என்றே கேள்வியை ரயா கேட்டாள்- அடுத்த நாவலின் பெயர் உற்சாகமானதாக இருக்கும் என்று சொல்லியிருக்கிறேன் – “ஆனந்தத்தின் இயற்பியல்,” அல்லது அது போல் ஏதாவது. இதுவரை அந்த வாக்குறுதியை நான் நிறைவு செய்யவில்லை.

இந்தப் புத்தகம், இதுவே உங்கள் முன் நான் பேசும் பெருமையை எனக்குப் பெற்றுத் தந்திருக்கிறது, இந்தப் புத்தகத்தின் பெயர் “துக்கத்தின் இயற்பியல்”. இதன் பெயரை மாற்றும்படி ஒரு பதிப்பாசிரியர் நட்பார்ந்த முறையில் அறிவுரை அளித்தார். இப்படி ஒரு பெயர் கொண்ட நாவலை யாரும் படிக்க விரும்ப மாட்டார்கள் என்பதுதான் காரணம். துக்கம் விற்பனையாகாது. எப்போதாவது சோகம் மிகுந்த மெர்சிடஸ் விளம்பரம் பார்த்திருக்கிறீர்களா? நான் அந்த அறிவுரையை ஏற்றுக்கொள்ளவில்லை. “Тъга”- இப்படித்தான் துக்கத்துக்கான சொல் என் தாய் மொழியில் ஒலிக்கிறது. இந்தச் சொல் சிறியது. ஆனால் இது விவரிக்கும் நிலை நீண்டது, அவ்வளவு எளிதில் மொழிபெயர்க்கப்பட முடியாதது. (இப்போது நீங்கள் மெல்ல ‘Тъ-га” என்று சொல்ல முயற்சி செய்தால் உங்கள் குரல்வளையில் எலும்பு அசைவதை உணர முடியும். உங்கள் தொண்டைக்குள் எதுவோ செல்கிறது, முழுங்குவது போன்ற ஒரு முயற்சி, அடக்கிக் கொள்வது போன்ற ஒரு முயற்சி இது).

இந்த நாவலை எழுத ஆரம்பிக்கும்போது இப்படி ஒரு காட்சி வைத்திருந்தேன். அது என் குழந்தைப் பருவத்தின் ஒரு பகுதியாக இருந்த ஒன்று. 1970களில் ஒரு சிறுவன், முடிவற்ற மதியப் பொழுதுகளில் அந்தி போல் இருண்ட நிலவறையில் தங்கியிருக்கிறான்- அவன் இருளை விட்டுத் திரும்பி நிற்கிறான், அவனது முகம் சன்னலை நோக்கியிருக்கிறது. அந்த அறையின் சன்னல், நடைபாதை உயரத்தில் இருக்கிறது. அவனைக் கடந்து செல்லும் கால்களையும் பூனைகளையும் அந்தச் சிறுவன் எண்ணிக் கொண்டிருக்கிறான். ஒவ்வொரு நாளும், தனிமையில், இனம்புரியாத ஒரு கைவிடப்பட்ட உணர்வோடு. அப்போது மினோடர் தோன்றியது- தொன்மங்களில் நாமறிந்த ராட்சதன் ஆவதற்கு முன் தரைக்கடியில் உள்ள சிடுக்குகள் நிறைந்த பாதையில், எருது முகம் பூட்டப்பட்ட, கைவிடப்பட்ட குழந்தை. 1970களின் சிறுவனும் குழந்தை-மினோடரும் ஒரே, பொதுத் துயரத்தைப் பகிர்ந்து கொண்டவர்கள். கைவிடப்படவர்களின் துயரம். நமக்குள் பூட்டப்பட்டிருக்கும் மினோடர் பற்றி இந்தப் புத்தகத்தில் எழுத விரும்பினேன், நாம் வாழும் நூற்றாண்டைப் பற்றி அதன் மதியங்கள் அந்திப்பொழுதுகள் அனைத்தினும் கண்ட வகையில், பிறர் கதைகளுள் நுழையக்கூடிய இயல்பு கொண்ட, பிரம்மாண்டமான புரிந்துணர்வு கொண்ட ஒரு சிறுவனின் அச்சங்களைக் கொண்டு.

துக்கத்தில் உலக சாம்பியனாய் விளங்கும் தேசத்திலிருந்து வருகிறேன். உலகின் மிகச் சோகமான இடம் – வெவ்வேறு தேசங்களில் நிலவும் மகிழ்ச்சியுணர்வை ஒவ்வொரு ஆண்டும் கணக்கெடுக்கும் ஆய்வின் அடிப்படையில் தி எகானமிஸ்ட் இதழ் இவ்வாறுதான் பல்கேரியாவை அழைத்தது. இந்தப் புத்தகத்தை நான் எழுதிக் கொண்டிருக்கும்போது, இத்தனை சோகமும் எங்கே வடிந்து செல்கிறது என்று நினைத்துப் பார்த்தேன்- அது ஐரோப்பாவெங்கும் வெள்ளமாய் பாய்கிறது, ஒரு வகையில் உலகமெங்கும் கூடத்தான். நீண்ட காலமாய் தொடர்ந்து கூடிக்கொண்டிருக்கும் துக்கம், மறைக்கப்பட்டிருக்கும் துக்கம் வெடிக்கத் தயாராய் இருக்கும் ஆபத்தான விஷயம் என்பதை ஒரு எழுத்தாளனாக, நான் அறிந்திருக்கிறேன். எனவேதான் இது விடுவிக்கப்பட்டாக வேண்டும், கதைக்கப்பட வேண்டும், புனைவுகளைக் கொண்டு அடக்கப்பட வேண்டும். வேண்டுமானால், அதை நாம் கொண்டாடி வழியனுப்பலாம் என்று வைத்துக் கொள்வோம். இது இலக்கியத்தின் திறன்களில் ஒன்று.

இன்றுள்ள நம் உலகம் போன்ற ஒரு இடத்தில் இப்போதும் இலக்கியத்தால் என்ன செய்ய முடியும் என்பது குறித்து சில வார்த்தைகள் சொல்ல விரும்புகிறேன்.

அதனால் எளிய விஷயங்கள் செய்ய முடியும். உதாரணத்துக்கு, ஒரு உயிரைக் காப்பாற்றுவது போன்றவை. நீங்கள் கதை சொல்கிறீர்கள், அந்த வகையில் முடிவைத் தள்ளி வைக்கிறீர்கள். இதை நாம் ஷெஹராஜேட் மூலம் நன்றாக அறிகிறோம்- உயிருக்கு பதில் கதைகள் (எளிய ஒப்பந்தம்). பலியாக வேண்டியவள் கதை சொல்கையில் அவள் வேறொரு, பாதுகாப்பான மண்டலத்தில் இருக்கிறாள். கதை முடியாதவரை அவள் வாழ்வுக்கு உத்திரவாதம் உண்டு. இதுதான் இலக்கியத்தின் சிறப்பு உத்திரவாதம். இதுதான் கதை சொல்லும் மெலியவர்களின் ஆற்றல். குழந்தையாக இருந்தபோதே எனக்கு இதை உள்ளுணர்வு உணர்த்தியிருக்க வேண்டும். ஏனென்றால் தன்னிலை முன்னிலையில் சொல்லப்பட்ட புத்தகங்களையே நான் வாசிக்கத் தேர்ந்தெடுத்தேன். அவனோ அவளோ, கதை சொல்லிக் கொண்டிருக்கும்வரை சாகப்போவதில்லை என்ற எளிய விதியை நான் அறிந்திருந்தேன். கதை சொல்கிறேன், எனவே இருக்கிறேன். Narro, ergo sum.

இலக்கியம் வேறு என்ன செய்ய முடியும்? தோற்பவர்களின் பக்கம் நிற்க முடியும். நம் காலம் போல், அப்படி இருப்பது குறிப்பாக அவசியப்படும் காலங்கள் இருக்கின்றன- வலிமையற்றவர்கள், காயப்பட்டவர்கள், பிரச்சினையில் இருப்பவர்கள், ஹோமோ ஆங்க்சியஸ், இவர்கள் பக்கம் நின்றாக வேண்டும். நல்ல இலக்கியத்தின் அடிப்படை இயல்பாக இதைக் காண்கிறேன். வெற்றி பெற்றவர்களே வரலாறு எழுதுகிறார்கள் என்பது நமக்குத் தெரியும். ஆனால் தோற்றுப் போனவர்கள் கதை சொல்கிறார்கள். அவை கூடுதல் சுவாரசியம் கொண்டவை, உண்மைக்கு இன்னும் நெருக்கமானவை.

இலக்கியம் வேறு என்ன செய்ய முடியும்? நம் ரசனையை மேம்படுத்தலாம். இதைக் குறைத்து மதிப்பிடக்கூடாது. இது வெறும் அழகுணர்ச்சி மட்டுமல்ல. ரசனையுள்ள மக்கள் அற்ப பிரசாரத்துக்கு அவ்வளவு சீக்கிரம் வசியப்பட மாட்டார்கள். அரசியல் கிட்ஷை அவர்கள் அடையாளம் கண்டு கொள்வார்கள்.

இந்த இடத்தில் போலிஷ் கவிஞரான ஜ்பிக்னியவ் ஹெர்பர்ட்டின் “ரசனையின் ஆற்றல்’ என்ற அற்புதமான கவிதையின் வரிகள் சிலவற்றை நினைவுறுத்துகிறேன்:

அதற்கொன்றும் அவ்வளவு ஒழுக்கம் தேவைப்படவில்லை
நம் மறுப்புக்கும் மாற்று கருத்துக்கும் எதிர்ப்புக்கும்
தேவைப்பட்ட துணிவு ஒரு துளி இருந்ததுதான்
ஆனால் அடிப்படையில் அது ரசனை சார்ந்த விஷயம்
ஆம், ரசனை…

செய்தித்தாள்களின் முதல் பக்கங்கள், அரசியல் அறிக்கைகள், சந்தைகள் அல்லது வங்கிகளை மட்டும் கொண்டு உலகை விளக்க முடியாது என்பதை மெல்ல மெல்ல நாம் அறிந்து கொள்ளத் துவங்கியிருக்கிறோம் என்று தோன்றுகிறது. ஏனென்றால் நாம் பொருளாதாரத்தாலும் அரசியலாலும் ஆனவர்கள் அல்ல. நாம் துக்கத்தாலும் தயக்கத்தாலும், அவற்றைப் போன்ற மெல்லிய, விளக்க முடியாத, சில சமயம் தர்க்கத்துக்குப் பொருந்தாத விஷயங்களாலும் ஆனவர்கள். இங்குதான் இலக்கியம்- இப்படிச் சொல்லலாமென்றால்- அதன் நிபுணத்துவத்தின் இடம் வருகிறது. அரசியல்வாதிகள் இன்னும் அதிக அளவில் செகாவையும் போர்ஹெசையும் வாசித்தால் நம் பிரச்சினைகள் வேறு வகைப்பட்டவையாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு எப்போதும் உண்டு.

பரிவுணர்வை எழுப்பும் கதைசொல்லல் நமக்குத் தேவைப்படுகிறது. தனி வாழ்விலும் அரசியலிலும் இன்று பரிவுணர்வு முக்கியமாக இருக்கிறது. அதுதான் கடவுள் துகள் என்று சொல்லலாம். மானுட உலகின் பசை, ஹிக்ஸ் போஸான் (அது கண்டுபிடிக்கப்பட்ட இடத்துக்கு அருகில் நாம் இருப்பதால்). ‘துக்கத்தின் இயற்பியல்’ இலக்கணப் பிழை கொண்ட ஒரு சொற்றொடருடன் துவங்குகிறது, ஆனால் அதன் பொருள் சரியாக இருக்கிறது என்று நினைக்கிறேன். பரிவுணர்வை நான் இவ்வாறு வரையறை செய்து கொள்கிறேன்: நாம் உள்ளேன், அல்லது நான் உள்ளோம்.

நீஸ் நகரில் கூட்டத்தில் புகுந்து ஓடிய ட்ரக்கை இலக்கியமும் பரிவுணர்வும் நிறுத்த முடியாது என்பதை நான் அறிந்திருக்கிறேன். ஆனால் அந்த ட்ரக்கினுள் ஏறிய மனிதனை பல ஆண்டுகளுக்கு முன் அவை தடுத்து நிறுத்தியிருக்க முடியும். அவன் வாழ்வுக்கு அவை வேறொரு பொருள் தந்திருக்கலாம், இது சாதாரண விஷயமல்ல, இதுதான் எல்லாம்.

உலகம் எங்கும் வெறுப்பும் பாதுகாப்பின்மையும் திரண்டெழுந்து ஆபத்தான அளவில் மையம் கொண்டிருக்கின்றன. வேண்டுமானால் நீங்கள் அதை ஒரு பைத்தியக்காரத்தனம் என்று அழைக்கலாம். இது புதிதாய் தோன்றியுள்ள விரைவு ஊடகத்தால் எளிதில் பெரிதாகி வலுவடைகிறது. நம் கருத்துகளும் சொற்களும் கடும் தீவிரத்தன்மை கொள்கின்றன. நம்முள் மறைந்திருக்கும் இந்த உள்ளார்ந்த ஜிகாத்திசம் இன்று மிகவும் ஆபத்தான நிலைகளில் ஒன்றாகும். இன்று, பூகோள பரப்புகளை வெற்றி கொள்ள மட்டுமல்ல, மானுட பரப்புகளை வெற்றி கொள்ளவும் போர்கள் தொடர்கின்றன. மானுட இயல்புக்கு என்று மீறப்படக்கூடாத சில எல்லைகள் இருக்கின்றன. ஏனெனில், வரலாற்று நோக்கில், கோட்பாடுகளுக்கும் தேசங்களுக்கும் முன் மானுடம் இருந்தது. இன்றுள்ள புலம் பெயர்ந்தோர், துக்கங்களின் மகத்தான புலம் பெயர்தலின் ஒரு பகுதியினர். துக்கத்தின் புலம் பெயர்தலைக் குறித்து நாம் சிந்தித்து அதன் கதையாடல்களை விவரிக்க முயற்சி செய்ய வேண்டும்.

ஒரு முறை என் மகள் தன் அறையில் ஆசிரியை போல் விளையாடிக் கொண்டிருந்தாள். அவள் தன் மிருக பொம்மைகளிடம், “பிள்ளைகளா, நீங்கள் இன்று எப்படி இருக்கிறீர்கள்?” என்று கேட்டாள். அதன்பின் அவற்றின் பின்னால் போய் நின்றுக் கொண்டு, “நாளை இருப்பதைவிட நன்றாய் இருக்கிறோம்” என்று பதிலளித்தாள். அவள் இதை அறிந்து சொல்லியிருக்க மாட்டாள் என்று நினைக்கிறேன். “நேற்றை விட நன்றாய் இருக்கிறோம்” என்றுதான் நாம் வழக்கமாய்ச் சொல்வோம். “நாளை இருப்பதைவிட நன்றாய் இருக்கிறோம்,” என்று சொல்வது அதைவிட அதிக விழிப்புணர்வு கொண்ட ஒரு நிலையை உணர்த்துகிறது. நம் கடந்த காலத்தைவிட நம் எதிர்காலம் உறுத்தலாய் இருக்கக்கூடிய ஒரு புள்ளியில் நாம் உறைந்திருக்கிறோம். நம் நிகழ்காலத்தில் உள்ளதைவிட நம் கடந்தகாலத்தில் அதிக எதிர்காலம் இருந்தது.

நிதி நிலை, அரசியல், எண்ணை வளங்கள் வற்றிப் போதல் என்பது போன்ற புலப்படக்கூடிய பிரச்சினைகளுக்கு அப்பால் கண்ணுக்குத் தெரியாத, அவற்றைவிட அச்சுறுத்தும் வேறொரு பிரச்சினை இருக்கிறது என்று நினைக்கிறேன். அர்த்த சேகரங்களின் முற்றிழப்பு என்று அதை அழைக்கப் போகிறேன். கடும் எதிர்காலப் பற்றாக்குறை. எனவேதான் அர்த்தங்களை உருவாக்கும் கருவிகள் என்ற வகையில் இலக்கியத்துக்கு வளமான எதிர்காலம் இருக்கிறது என்று நினைக்கிறேன். மாற்று ஆற்றல் வளங்கள் போல். அல்லது யாரோ ஒருவருக்காவது ஆறுதல் அளிக்கக்கூடிய வளம். அல்லது ஒரு சிறு சூட்கேஸ், ஒவ்வொரு சமயத்துக்கும் தக்க கதைகள் கொண்ட அவசர உதவிப் பெட்டி. இது சாதாரண விஷயமல்ல. உலகின் கால அட்டவணை, “எதிர்காலம் ரத்து செய்யப்பட்டது,” என்று அறிவிக்கும் கணத்தை நம்மால் தள்ளி வைக்க முடியும் என்று நம்புகிறேன்.

இலக்கியத்தைப் புகழும் இந்தச் சிற்றுரையின் முடிவில், இப்போதோ பின்னரோ, எல்லாமே இலக்கியத்துக்கு உரிய விஷயமாக மாறிவிடுகிறது என்பதை மட்டும் சொல்ல விரும்புகிறேன். நம் துக்கங்களும் பிரச்சினைகளும்கூடத்தான். போர்ஹெஸ் மிகவும் நேசித்த மேற்கோள், மல்லார்மே எழுதியது, “உலகில் உள்ள எல்லாம் ஒரு புத்தகம் ஆகவே இருக்கின்றன”, என்று சொல்வது போல்தான்.

நன்றி நண்பர்களே, இவ்வுலகின் வாக்கியங்களில் ஒன்றில் சில நிமிடங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்.

அவ்வுணர்வுக்கு நன்றிகள்.

© 2016 Fondation Jan Michalski

நன்றி – Fondation Jan Michalski 

h/t Specimen

(This is an unauthorised translation of the speech, “What can Literature still do ?” by Georgi Gospodinov”, originally published at Fondation Jan Michalski. This Tamil translation is intended for educational, non-commercial display at this particular webpage only).

கியோர்கி கொஸ்போதினோவின் பல்கேரிய சோகம்