குதிரை மரம்

கே.ஜே.அசோக் குமாரின் ‘குதிரை மரம்’ – செமிகோலன்

செமிகோலன் 

கே.ஜே.அசோக் குமாரின் ‘குதிரை மரம்’ தொகுப்பிலுள்ள ‘மண் புழுவின் ஐந்து ஜோடி இதயங்கள்’ கதையை வாசித்துக் கொண்டிருக்கும் போதும், வாசித்து முடித்த பின்பும், மனதில் ‘Nature vs nurture’ விவாதம் குறித்த சிந்தனைகள் இருந்தன. கதைசொல்லி தன் மகனுடன் விளையாடச் செல்லும் இடத்தில் சந்திக்கும் சிறுவனைப் பற்றிய இந்தக் கதை, முடிந்த பின்பும் வாசகனை அதன் நீட்சியை, அதன் சாத்தியக் கூறுகளை பற்றி யோசிக்கத் தூண்டுகிறது. மகனுடனான கதைசொல்லியின் கிரிக்கெட் ஆட்டத்தில் இறைஞ்சி சேர்ந்து கொள்ளும் சிறுவன் ஒழுங்காகவே விளையாடுகிறான். சராசரியானவன் போல் வாசகனுக்கு தோற்றமளிக்கும் அவன், விளையாட்டு முடிந்தவுடன் , நாயொன்றை வதைக்கிறான், பின் அந்துபூச்சியோன்றின் காலை பிய்த்து எறிகிறான். அந்த வயதில் நிறைய சிறுவர்கள் ஈடுபடும் எந்த காரணமற்ற -வயதாக வயதாக நின்றுவிடும் – வன்முறை என்று இதை பார்க்க முடியாது. சிறுவனுக்கு மாறிக் கொண்டேயிருக்கும் மனநிலை. பூச்சியை பிய்தெறிந்த பின் சாதாரணமாக பேசிக் கொண்டிருப்பவன், கிளம்ப எத்தனிக்கும் கதை சொல்லியுடன் அவர் வீட்டிற்கு வந்து விளையாடுவதாக கூறுகிறான். பின் அவர்கள் விளையாட உபயோகித்த பந்தை எடுத்துக் கொண்டு ஓடுகிறான். சிறுவனின் தாத்தா, தன் மருமகன் -அவனுடைய தந்தை- குறித்து, நிரம்ப வன்முறை மனநிலை கொண்டவன் என்று கூறுவதை சிறுவனின் செயலுடன், -அவனுடைய இயல்பான மனநிலையே அது தான்/nature -பொருத்திக் பார்க்கலாம். சிறுவனை எந்த நல்ல குணமும் இல்லாத மோசமானவனாகவே தாத்தா சித்தரிப்பது, இறுதியில் அவனுடைய தாய் அவனை அடிப்பது, வளர்ப்புடன்/nurture பொருத்தலாம். சிறுவன் கதைசொல்லியை இறைஞ்சும் கண்களோடு பார்ப்பதோடு கதை முடிந்தாலும், கதை சொல்லி அதன் பின் அவனை எப்போதும் சந்திக்காமல் இருக்கக் கூடும், அதன் பின்னான அவன் முழு வாழ்க்கையையும் வாசகன் எண்ணிப் பார்க்கிறான்.

கதை முடிந்த பின்னான கதையை குறித்து யோசிக்கத் தூண்டும் மற்றொரு புனைவு ‘கணக்கு’. கணக்கு ட்யூஷனுக்கு செல்ல நிர்பந்திக்கப்படும் கல்லூரி படிக்கும் விஜி. ட்யுஷன் ஆசிரியர் ஆர்கே, மிகவும் புகழ் பெற்றவர், சிறப்பாக சொல்லிப் கொடுப்பவர் என்றாலும், அவருக்கு இரு மனைவிகள் என்பது விஜிக்கு ஒவ்வாமையாக உள்ளது, அதை ஆர்கே உணர்கிறார் என்று சுட்டப்படுகிறது. முதல் முறையாக ட்யூஷனுக்கு செல்லும் அன்று அவருக்கும், விஜிக்கு நடக்கும் உரையாடலுடன் கதை முடிகிறது. ஆர்கே உளவியல் ரீதியாக விஜியை சீண்டுகிறாரோ என்று எண்ண வைக்கும் இந்த உரையாடல், தொடர்ந்தும் அவ்வாறே அவர் நடந்து கொள்வாரா, அதை விஜி எப்படி எதிர் கொள்வாள் போன்ற கேள்விகளை எழுப்புகிறது.

அலர்’, கதைசொல்லியின் தெருவில் வசிக்கும் தம்பதி இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது விபத்தேற்பட்டு மனைவி இறந்து விட்டார் என்ற செய்தியுடன் ஆரம்பிக்கிறது . வண்டியை ஓட்டிய கணவரின் அஜாக்கிரதையால் தான் இது நேர்ந்தது என்று தெருவில் பேச்சு, அத்துடன் அந்தக் கணவன் எப்போதுமே மனைவியிடன் கடுமையாகத் தான் நடந்து கொண்டான் என்பது போன்ற பழங்காலக் கதைகள் தூசி தட்டப் படுகின்றன. எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருக்கும் கதைசொல்லி, மரணம் நடந்த வீட்டிற்கு செல்ல நினைக்கிறான். இதுவரை வாசகன் நேரடியாக சந்திக்காத அந்தக் கணவன், மொத்தத் தெருவின் தீர்ப்பால் , எத்தகையை குற்றவுணர்ச்சியில் மூழ்கியிருப்பான், எப்படி மறுகிக் கொண்டிருக்கிறான் என்று எண்ணிக் கொண்டிருக்கையில், திருப்பம் வருகிறது. அது கதையின் தலைப்பிற்கு பொருத்தமாக, பொது மனநிலையை சுட்டுவதாக இருந்தாலும், அதுவரையிருந்த கதையின் போக்கை, அதன் மையம் என்று வாசகன் எண்ணியிருந்ததை விட்டு விலகி, சிறிது நீர்க்கச் செய்கிறதோ என தோன்றுகிறது.

பெரு வணிக காய்கறி/கனி கூடங்களில், அதிகபட்சம் ஒரு சிறு புன்னகையை மட்டும் பரிமாறிக் கொண்டு பொருட்கள் வாங்கி வரும் இன்றைய காலகட்டத்தில், பெரும்பாலும் வழக்கொழிந்து விட்ட, தினசரி வீட்டிற்கு வரும் சிறு காய்கறி/பழ/பூ வியாபாரிகளையும், அவர்களுடனான, வீட்டிலுள்ளவர்களின் உறவு – வியாபாரத்தோடு குடும்பம் பற்றிய பேச்சு, அதிக உரிமை எடுத்துக் கொண்டு பொருட்களை திணிப்பது ஏற்படுத்தும் எரிச்சல் -, அதனூடே வீட்டிலிருக்கும் பெண்ணின் ஒரு பகல் பொழுதை துல்லியமாக சித்தரிக்கிறது ‘புரியாதவர்கள்’ கதை. இறுதி வரி, அதுவரை இருந்த சமநிலையை சிறிது குலைக்கிறதோ என்ற கேள்வி எழுதிகிறது.

ஒரு புனைவு அல்லது கவிதை எங்கு முடிகிறது, எப்படி முடிய வேண்டும் அதன் பின்னரும் அதை இழுத்துச் செல்ல வேண்டுமா என்று வாசகனுக்கு இயல்பாக தோன்றக் கூடிய ஒன்று தான். எழுத்தாளர் அவர் எண்ணிய கதையை – நாம் நினைப்பதை அல்ல – தான் எழுதியிருக்கிறார் என்றாலும் இத்தகைய எண்ணங்கள் தவிர்க்க முடியாதவை – நாம் விரும்பும், நம்மை ஈர்க்கும் படைப்புக்களிலும் – என்று தோன்றுகிறது.

தொழிலின் நசிவு, அதனூடே ஒரு வாழ்க்கை முறையின் முடிவு, சுயத்தின் அழிவு போன்ற இழைகள் ‘குதிரை மரம்’ நெடுங்கதை/குறுநாவலில் இருந்தாலும், இயலாமையின் துயரத்தை வாசகன் உணர முடிகிறது. மகனை பள்ளிக்கு தயார் செய்து கொண்டிருக்கும் பிரபுவிடம், அவன் மனைவி வத்சலா கோபமாக பேசிச் செல்ல,. வத்சலாவின் உறவினருடன் வேலைக்கு செல்ல நேர்கிறது. அங்கு ஒரு சூழலில், பிரபுவிற்கு தெரிந்தவர் முன், உறவினர் கடுமையாக பேசி விடுகிறார். அவமானப்படுதல் என்பது எப்போதுமே குறுகச் செய்வது தான் என்றாலும், தெரிந்தவர் முன், தெரிந்தவர்களால் முன் சிறிய இழிவுகள் கூட அதீத அளவிற்கு ஒருவனை சிறுமைப்படுத்தக் கூடியது. இந்தச் சூழலில், தன்னை விட்டு முன்னால் ஓடிக் கொண்டிருக்கும் காலத்தை பிடிக்க முயற்சிக்கும் பிரபு, மீண்டும் தன் தொழிலை, வாழ்க்கை முறையை, சுயத்தை மீட்டெடுப்பானா ஒரு புறமிருந்தாலும், தோல்வியடைந்தாலும் கூட அவனை இந்த முயற்சி மட்டுமே சிறிதளவேனும் ஆற்றுப்படுத்தும், தன்னிருப்பை அவனுக்கே நியாயப்படுத்தும்.

எஞ்சும் இருள்’ கதையில், ஒரு சாதாரண பால்ய நிகழ்வு திரும்பத் திரும்ப சொல்லப்படுவதால் கதைசொல்லிக்கு ஏற்படும் சலிப்பு, ‘தற்கொலை முகம்’ கதையில், டாக்டரின் வாழ்க்கை வெளிப்படும் விதம் இவற்றை இந்தத் தொகுப்பின் கதைகளின் ஒரு பொது இழையாக கொள்ளலாம். வெவ்வேறு களங்களில் நிகழ்ந்தாலும், வேறுபட்ட பேசுபொருளை கொண்டிருந்தாலும், ஒன்றுமில்லாதது போல் முதலில் தோற்றமளிக்கும் நிகழ்வுகள் வேறு உருக்கொள்ளும் கணங்களின், இயல்பாக இருக்கும் மனநிலையில் விழும் கீறல்களின் நெசவு இந்தத் தொகுப்பு.