குமரன் கிருஷ்ணன்

எதற்காக எழுதுகிறேன்? – குமரன் கிருஷ்ணன்

குமரன் கிருஷ்ணன்

உயிரணுக்களால் உண்டாவது உடம்பு. நினைவணுக்களால் உருவாவது மனது. ஓயாமல் மனது உருப்பெற்றுக் கொண்டே இருக்கிறது. இந்த உருவாக்கத்தின் தொடர்வினையாக, ஒரு நிகழ்வின் நொடியை நினைவின் பிரதியாய் மனது சேகரிப்பதை நாம் அனுபவம் என்று அழைக்கலாம். ஆனால் எந்தவொரு நிகழ்வின் நொடியும் தனித்திருப்பதில்லை என்பது காலத்தின் விதி. அதன் முன்னும் பின்னுமாய் கோர்க்கப்பட்ட நிகழ்வுகளுக்குரிய‌ நொடிகளின் பிரதியை கொண்டே குறிப்பிட்ட நிகழ்வை உள்வாங்க முடியும் என்பது காலம் ஏற்படுத்திய உயிரியல் கட்டமைப்பு. ஓரறிவு துவங்கி ஆறறிவு வரை அனைத்திற்கும் இதனை பொது விதி எனக் கொள்ளலாம். இவ்விதியை கொண்டு காலம் நம் மனதை கையாளும் பாங்கு அலாதியானது. நினைப்பின்றி நிகழ்வில்லை, நிகழ்வின்றி நினைப்பில்லை என்னும் விசித்திர வளையத்திற்குள் நம்மை சுற்ற விட்டு வேடிக்கை பார்க்கும் காலத்திற்கு நாம் வைத்திருக்கும் பெயர் வாழ்க்கை. உலகில் உலவும் அனைத்து விதமான விழுமியங்களும் ‍ அது தனிமனித தத்துவ விசாரங்கள் சார்ந்ததோ, சமூகம் சார்ந்ததோ, மதம் சார்ந்ததோ…அறிவியல் சார்ந்ததோ…எப்படியிருப்பினும் இந்த விசித்திர வளையத்தில் அடங்கி விடும். இவ்விசித்திர வளையம் தரும் வியப்பினால் எழுதுகிறேன் அவ்வியப்பை பற்றி எழுதுகிறேன்.இத்தகைய வியப்பை ஊட்டும் படைப்புகளை பற்றியும் எழுதுகிறேன் அவற்றின் வாசிப்பு அனுபவங்களை சுற்றியும்  எழுதுகிறேன்.

இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என்று மூன்று காலங்கள் இருப்பதாக நமக்கு கற்பிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் காலம் ஒன்றே எனத் தோன்றுகிறது. அது இறந்த காலம் தான். அதுவே, நாம் பார்த்த இறந்த காலம், பார்த்துக் கொண்டிருக்கும் இறந்த காலம், நாளை பார்க்கப் போகும் இறந்த காலம் என்று திரிகிறது…ஒரு நினைப்பிலிருந்து மற்றொரு நினைப்புக்கு மனம் நகரும் கால அளவை நிகழ் காலம் என்றும் ஒரு நினைப்பிலிருந்து மற்றொரு நினைப்பை உருவாக்கும் மனதின் விழைவை எதிர் காலம் என்றும் சொல்லலாம் இல்லையா?  காலம் என்பதே நினைப்பு தான். நினைப்பும் நினைப்பை பற்றிய நினைப்பும்…! காலம் சில சமயங்களில் நம் தோள் அணைத்து அழைத்துச் செல்கிறது. சில சமயங்களில் தரதரவென்று இழுத்துச் செல்கிறது. இரண்டும் இவ்வாழ்வின் இயல்பென்று புரியத்துவங்குகையில் காலத்தை ஒரு அற்புதமான ஆசானாய் பார்க்கும் ஆர்வம் சுரக்கிறது. அதன் விளைவாய் ஒவ்வொரு நொடியையும் கூர்ந்து பார்க்கும் நோக்கம் கிடைக்கிறது. கூர்ந்து பார்த்தல் என்பதே கூடுதல் அனுபவத்திற்கான வழி என்ற பக்குவம் பிறக்கிறது. இவ்வாறு சேர்க்கும் அனுபவத்தின் அச்சாணி நினைப்பு. நினைப்பு என்பது ஒரு விசித்திர வஸ்து. ஒரு நினைவு, அது நினைக்கப்படும் பொழுதில் என்ன பொருள் தரும் என்பது காலத்தின் கையில் இருக்கிறது. இடைப்பட்ட பொழுதுகளில் கிடைக்கும் மேற்கூறிய அனுபவத்தின் ஆழ நீளங்களின் அமைப்பைப் பொறுத்து இருக்கிறது. நினைப்பின் பரிமாணங்கள் நினைப்பை பற்றிய ஒவ்வொரு நினைப்பு தோறும் மாறிக்கொண்டே இருக்கும் விசித்திரம் நிகழ்கிறது. இத்தகைய நினைப்பு தரும் உணர்வை, அதன் விசித்திரத்தை, அதற்கு நிகரான சொற்களின் வடிவேற்றி படிம‌ப்படுத்தும் படைத்தல் அனுபவம் தரும் பரவசத்திற்காய் எழுதுகிறேன்…

காலம் நம் நினைப்புடன் உறவாடும் மாயம் தான் எத்தனை வியப்புக்குரியது? காலம் ஒரே அலகில் தான் உலகில் உலவுகிறது. ஒரு இலையின் அசைவுக்கும் ஒரு இறுதி மூச்சுக்கும் காலத்தின் அலகு ஒன்றே. ஆனால் அதைப் பார்ப்பவர் அவற்றுடன் கொண்ட நினைப்பின் பரிமாணங்களைப் பொறுத்து அந்நிகழ்வும், பின் அந்நிகழ்வு சார்ந்த நினைப்பும் கால அலகின் கணக்கில் அடர்த்திமிகு நீளம் கொண்ட நினைப்பாக மாறும் மாயம் சொல்லி அடங்குமா சொல்லில் தான் அடங்குமா? நாளும் பொழுதும் நிகழும் இம்மாயத்தை மொழியின் வழியே சேகரித்துக் கொள்ளும் தீராத ஆவலில் எழுதுகிறேன்.

“நெருப்பு என்று எழுதினால் சுட வேண்டும்” என்பார் லா.ச.ரா. அது போல் நினைப்பென்று எழுதினால் நெகிழ வேண்டும். மனதின் நெகிழ்வு உள்ளிருக்கும் மனிதத்தை உரமேற்றிக் கொண்டே இருக்கிறது. அதை வேண்டி எழுதுகிறேன். வாசிப்பவருக்கும் அத்தகைய நெகிழ்தல் நேரும் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன்.

நினைப்பு உறவுகளாலும் உணர்வுகளாலும் உண்டான கலவை. இங்கே உறவு, உணர்வு என்பதை மனிதருடன் மட்டும் தொடர்புபடுத்திக்கொள்ளாமல், நம் அகத்திற்கும் புறவெளிக்குமான உறவும் உணர்வும் என்று பொருள் கொள்க. இத்தகைய நினைப்பு காலத்துடன் உறவாடும் நிகழ்வுதானே வாழ்க்கை? இந்த உறவைப் பற்றி எழுதுகிறேன்…இந்த உறவின் உன்னதம் பற்றிய புரிதல் தரும் விசாலமான பார்வைக்காய் எழுதுகிறேன்…

காலம் நொடி தோறும் நினைப்பை பிரசவித்தபடி நகர்ந்து கொண்டே இருக்கிறது. காணும் திசையெங்கும் கடக்கும் பொழுதெங்கும் நினைப்புக்கான கருவை சுமந்தபடி திரிகிறது காலம்.  உறவையும் பிரிவையும் உட்பொருளாய் கொண்டது காலம். அதை உள்வாங்கி ஊழ்வினையாய் மாற்றுகிறது நினைப்பு. இந்த ரகசியத்தை, அதிசயத்தை, அதன் உட்பொருள் பற்றிய என் புரிதலை பகிர்ந்து கொள்ள எழுதுகிறேன்.

நிகழ்கால நாக்கில் நினைப்பை அள்ளி தடவுகையில் மனதில் ஊறும் சுவைதானே நம் வயது? எனவே வயதின் வார்ப்பு பற்றி எழுதுகிறேன் அதன் சாரமான அனுபவ ஈர்ப்பு பற்றி எழுதுகிறேன்.

இதுவரை சொன்ன அகம் சார்ந்த “எதற்காக?” தந்த எழுத்துக்கள்,  பிறர் வாசிக்கும் நிலையை அடையும் பொழுது, ஒரு மிக முக்கியமான “எதற்காக?” நிகழ்கிறது. இங்கும் காலமே கருவியாய்…ஆம்.ஒரு நுனியை மற்றொன்றில் கோர்த்து விடுவதில் காலம் வெகுவாய்த் தேர்ந்தது!

எனவே, இவ்வாறு, என் நினைப்பை தேக்கி வைத்த சொல்லடுக்கு ஒன்றை வாசிக்கும் ஒருவர் எதிகொள்ளும் ஒற்றைவரியின் அடியில் அவரின் நினைப்பின் நுனி ஒன்று ஒட்டிக் கொண்டிருக்கக் கூடும். அதன் பின் என் வரி அவரின் பிரதி. அவருக்கான பிரதி. நினைப்பின் பிரதி என்பது வெறும் நகலன்று. அதன் பொருளடக்கம் வாசிப்பவரின் நினைப்புக்கேற்ப மாறிக்கொண்டே இருக்கும் பண்பு உடையது. இப்பண்பு பயில‌ வாசிக்கிறேன். இப்பண்பு பகிர எழுதுகிறேன்.

பா வண்ணம்…

குமரன் கிருஷ்ணன்

P7

சில படைப்பாளிகளின் புனைப்பெயர்கள், அவர்களின் ஆக்கங்களின் வழி நாம் அனுபவம் அடையும்பொழுது, ஜன்னலோர பயணங்களில் மரங்களின் இடையில் தோன்றி மறையும் சூரியனின் கதிர் போல அவ்வப்பொழுது நம்மை தொடர்ந்து தொட்டுக் கொண்டே இருக்கும். “பாவண்ணன்” என்பதும் அத்தகைய ஒரு பெயரே…”(ப்)பா…” என்பது இப்போதைய தலைமுறைக்கு ஒரு சமீப கால திரைப்படத்தில் நாயகன் உச்சரித்து உச்சரித்து பிரபலமடைந்த வார்த்தை என்று மட்டுமே அறியும் அளவிலே தமிழ் தள்ளாடிக் கொண்டிருக்கையில், “பா” என்றால் பாட்டு அல்லது செய்யுள் வகை என்னும் பொருளையும் தாண்டி ருசிக்கத்தக்க அர்த்தங்களை நினைப்பில் வைக்கமாறு செய்யக்கூடியது.”பாவண்ணன்” உள்ளே இருக்கும் “பா”.

இவரது படைப்புகளை வாசித்து பழகிய பின், இப்பெயர் குறித்து பெரும்பாலும் எனக்கு இரண்டு உருவகங்கள் மனதில் தோன்றுவதுண்டு.

நெசவில் “பாவு” என்பதை “பா” என்பார்கள். பாவண்ணன் நெய்யும் மொழித்தறிகளில் ஓடும் “பாவு”,  நம் எண்ணங்களில் இழைக்கும் அன்றாட வாழ்வியல் அனுபவங்களின் வண்ணக் கலவை மிக வசீகரமானது.

“பா” என்பதற்கு “நிழல்” என்றொரு அர்த்தம் இருப்பதாக சொல்லக் கேட்டிருக்கிறேன். “நிழலுக்கு வண்ணம் தருபவர்” என்று யோசித்துப் பாருங்கள்… மனதின் நிழல் என்பது எண்ணம் தானே என்ற நினைப்பு நமக்குள் வந்து உட்கார்ந்து விடும். பின் அவரின் படைப்புகளை மறுவாசிப்பு செய்தால், அவரின் ஆக்கங்கள் எங்கும் நிறைந்திருப்பது நமது நிழலாகவும் அதற்கு அவர் பூசும் வண்ணங்களாகவும் நமக்குத் தெரியக் கூடும்…

“படைப்பாளி” என்பதன் பொருள் குறித்து இவர் சொல்வது [“ஒரு சிற்பம் ஓர் ஓவியம் ஒரு கவிதை“] இவரின் படைப்புகளுக்கே ஒரு அறிமுகம் தருவது போலவும், வாசிப்பு அனுபவம் நமக்கு வழங்கப் போவது என்ன என்று தெளிவு செய்வது போலவும் உள்ளது. “இந்த உலகம் ஏற்றுக் கொள்வதை சொல்ல வேண்டும் அல்லது இந்த உலகத்தை ஒரே ஒரு அங்குலமாவது முன்னகர்த்தி வைக்க வேண்டும் என்கிற எண்ணங்களின் அடிப்படையில் எந்தவொரு படைப்பாளியும் இயங்குவது இல்லை. தோல்வியின் தருணங்களையும் துக்கங்களின் தருணங்களையும் முன்வைக்கின்ற படைப்புகளின் பின்னணியில் உள்ள மன எழுச்சி யாருக்கும் குற்ற உணர்ச்சியை ஊட்டுவதில்லை. இதுவும் இயற்கையே என்ற எளிய உண்மையை உணர்த்துவதாகும். எல்லாவற்றையும் கடந்து வந்த உலகில் இதுவும் கடந்து போகும் என்கிற வெளிச்சத்தை வழங்கும் தோழமை உணர்வை மட்டுமே அது வெளிப்படுத்துகிறது” என்ற இவரின் எண்ணம் இவர் படைப்புகள் முழுவதிலும் பிரதிபலிப்பதை நாம் காண முடியும்.

பாவண்ணனின் களங்கள் அனைத்துமே ஒரு நுட்பமான புரிதலின் வேர் நோக்கி நம்மை இட்டுச் செல்கின்றன. நாம் எத்தகைய முனைப்புடன் ஒரு தருணத்தின் மீதேறி நிற்க விழைந்தாலும் அத்தருணத்தின் பார்வையாளனாக மட்டுமே நம்மை ஆக்கி வேடிக்கை பார்க்கும் வல்லமை காலத்திற்கு உண்டு என்பதையும், நம் சிந்தனை, செயல், நினைப்பு, முதிர்ச்சி அல்லது முதிச்சியின்மை அனைத்தும் அத்தருணங்களின் தயவே என்பதையும், அவ்வாறு பெற்ற அனுபவத்தின் வாயிலாக நாம் எடை போடக்கூடிய நியாய அநியாயங்களும் தர்ம அதர்மங்களும் கூட மற்றொரு தருணத்திற்கு நம்மை அழைத்துச் செல்ல காலம் வகுக்கும் யுக்தியோ என்றொரு சிந்தனையும் மீண்டும் மீண்டும் பல்வேறு கோணங்களில் நமக்குள் பதிகின்றன.

மேற்கூறிய “புரிதலின் வேர்” இரண்டு தளங்களில் இயங்கும் அற்புதமான உதாரணம் “வெள்ளம்“. மேல் தளம், சூரதத்தன் என்னும் ஒரு இளம் பிக்குவின் மனம் தன் “பாதை”யிலிருந்து விலகும் தள்ளாட்டத்தையும் அத்தள்ளாட்டத்தின் தருணங்களையும் விரிவுபடுத்துகிறது. எத்தனை நுட்பமாக என்றால், அப்படியொரு நிலை வரப்போகிறது என்பதன் தருணம், இரவெல்லாம் சேகரித்த நீர்த்துளியை காலையில் இழக்கும் இலையின் ஒரு நொடித்துளி மூலமாக பலகாலம் ஒருவன் சேகரிக்கும் அறிவையோ அனுபவத்தையோ வாழ்வியல் பாதையையோ ஒரு தருணம் இழக்கச் செய்யும் என்னும் படிமம் காட்சிப்படுத்தப்படுகிறது. தள்ளாட்டம் முடிந்த பின் அவன் தன்னையே “காணும்” தருணத்தையும் பின்னர் அவன் மனமே சொல்லும் தன்னிலை விளக்கத்தின் மூலமாக, புத்தரை கண்மூடி தியானிக்கும் பொழுதில் அவன் பிழையென்று நினைத்த நொடி சரியென்று நினைக்கும் தருணமாகவே பிக்குவின் உள்ளிறங்கி ஒளிர்வதாக முடிகிறது கதை. அதாவது கதையின் மேல்தளம்.

இம்முடிவிற்குள் நம்மை நுழைக்கும் வகையிலும், இக்கதையின் கருவிற்கு மட்டுமில்லாமல், எத்தகைய “தருணங்களின் அலைக்கழிப்பு”க்கும் பொருந்தும் வண்ணம் ஒரு பொதுத்தன்மை புகுத்தும் வகையிலும் புத்தரின் நான்கு வாக்கியங்களை ஒன்றன் பின் ஒன்றாக கட்டமைப்பதன் வழியாக கதையின் முடிவை சாத்தியப்படுத்துவது கவனிக்கத்தக்கது. “ஒரு மனிதனின் மிகப்பெரிய செல்வம் தன்னம்பிக்கை”, “சுவைகளில் சிறந்த சுவை சத்தியம்”, “மெய்யான அறத்தின் வழி அறிவதே சத்தியம்”, “சத்தியமே வாழ்வதற்கு சிறந்த வழி” என்பதன் வழியாக “அடித்தளத்தின்” அறிமுகம் நடக்கிறது. இந்த நான்கு கண்ணிகளின் இணைப்பிலோ அல்லது இணைக்க முடியாததன் இயலாமையிலோ தொங்கிக் கொண்டிருப்பவை தானே நம் வாழ்க்கையின் தருணங்கள்?

அடித்தளத்திற்கு செல்வதற்கான சாவி, கதையை வாசிக்கும் மனதுக்குள் இருக்கிறது. அதைக்கொண்டு அடித்தளத்தை திறப்பதற்கான தருணம், அதுவரை மனதுக்குள் கொட்டிக்கிடக்கும் தருணங்களின் தயவில் உருவாவதே…! எனவே இக்கதையின் அடித்தளம் அவரவர் மனதின் தளமே.

கதையின் பாத்திரங்கள், பின்புலன்கள், இச்சைகள் அனைத்தும் அடித்தளத்தில் குறியீடுகளே…

ஒரு தருணத்தை விலக்க விழையும் மனது. அத்தகைய விலக்குதல் பற்றிய விழைவை மனம் கற்பித்துக் கொண்ட தருணங்கள் வழியாகவே எதை விலக்க நினைத்ததோ அதன் வழியாகவே பயணம் போகும் அல்லது போக வைக்கப்படும் தருணங்கள் நம் அனைவரின் வாழ்விலும் உண்டு. அதன் உள்ளீடுகளே அடுத்த தருணத்தை நோக்கி நம்மை நகர்த்துகின்றன. இதுவே அடித்தள அனுபவம். தற்கால உலகம் நமக்குக் காட்டும் வாழ்வியல் மகிழ்ச்சிக்கான தருணங்களில் நாம் சிக்குவது இருப்பின் நியதி என்றாகி விட்டாலும் நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் பிக்கு அத்தருணங்களில் தவிர்க்க விழைவதை நம்மை நாமே கூர்ந்து நோக்கினால் உணர முடியும் தானே?

கற்றல் என்பது அனுபவம் என்றால் கற்றல் நேரும் இடமும் நொடியும் நமக்குத் தருவது பேரானந்த அனுபவம் எனலாம். பாவண்ணன் அத்தகைய இடங்களையும் நொடிகளையும் நமக்கு அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கிறார். கதையோ கட்டுரையோ, அது நிகழும் வரிகள் அப்படைப்புக்கும் இயல்பாய் அதை மீறிய நம் பிரத்யேக சிந்தனைக்கும் விருந்தாய் பொருந்துவது வாசிப்பவருக்கு மிகுந்த உவகை ஊட்டுவதாகும். “கடல் பார்ப்பது நல்ல விஷயம்…” என்று துவங்கி “கடல் கடவுளோட மனசு” என்று முடிக்கும் “அடைக்கலம்” ஆகட்டும், “யாரிடமும் நெருங்கிக் கழிக்க முடியா பொழுதுகள்” என்னும் வார்த்தை பிரயோகத்தின் வழியே நமக்குள் இறங்கும் [“பூனைக்குட்டி“] அடர்த்தியாகட்டும், “காட்டை யாராலும் முழுசா சுத்த முடியாது…அப்பப்போ கொஞ்சம் கொஞ்சம் பார்த்துக்கலாம்” என்று சொல்லும் “குருவி மடம்” ஆகட்டும் வரிகளின் வழியே மனதில் வரிவரியாய் பதிந்து போகும் கற்றல் அனுபவங்கள்…!

பாவண்ணனின் படைப்புகள் நமக்குள் உணர்வுச் சுனையை உற்பத்தி செய்யும் ஊக்கியாக திகழ்பவை. அத்தகைய உணர்வுச் சுனையில் இருந்து வழிந்தோடும் துளிகள் போகும் வழியெங்கும் விட்டுச் செல்லும் ஈரத்தின் பிசுபிசுப்பில் ஒட்டிக் கொண்டிருக்கும் மனிதத்தின் ருசி அலாதியானது. ஈரம் என்றாலே நினைப்புதானே? மண்ணின் ஈரம் மழையின் நினைப்பு; மனதின் ஈரம் நினைப்பை பற்றிய நினைப்பு. அவரின் பெரும்பான்மை கதைகளும் கட்டுரைகளும் நினைப்பை பற்றிய நினைவின் வாயிலாகவே உணர்வை ஊட்டுகின்றன. கடந்த காலத்துக்குரிய கடமையை நிகழ்கால தர்மமாக நினைக்கும் “அழைப்பு“, ஒரு தலைமுறை பெண்மைக்கு மறுக்கப்பட்ட உணர்வு சார்ந்த மறுப்பீடுகளின் நினைப்பை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் “வைராக்கியம்“, நினைப்பில் அல்லாடியே பிழைப்பை கெடுத்துக் கொள்ளும் “அட்டை“, கடந்ததன் நினைப்பையே தன் நிகழ்காலமாக மட்டுமின்றி நிரந்தர காலமாகவே ஆக்கிக் கொண்ட “அம்மா“, “பறத்தல்” குறித்த பேரனுபவங்களை மனதுக்குள் தூவிக் கொண்டே போகும் “ஒரு பறவையின் படம்“, ஒரு காலை நேர நடையை கூட காலத்தின் குப்பிக்குள் அடைக்க உதவும் கருவியான பறவைகள் நிரம்பிய மரம் தாங்கிய வீட்டின் நினைப்பைச் சொல்லும் “வலசை போகாத பறவை“, நமக்குள் மறைந்து போன எத்தனையோ முகங்களை மீட்டெடுக்கும் “மறக்க முடியாத முகம்“, நம் ஆசிரியர் ஒருவரையேனும் நினைக்க வைக்கும் “கோடியில் ஒருவர்“, சாலையில் பார்க்கும எந்தவொரு வியாபாரியின் முகத்திலும் அவரின் நதிமூலம் எப்படியிருக்குமோ என்று எண்ண வைக்கும் “கிஷன் மோட்வாணி” போன்ற கட்டுரைகள் என்று சொல்லிக் கொண்டே போகலாம்…

பாவண்ணனை வாசித்த பின், பேருந்து நிறுத்தங்களில் அமர்ந்திருக்கும் மூதாட்டிகளை பார்க்க நேர்ந்தால் “குழந்தையும் தெய்வமும்” வழியே மனது குழையும்…மன வளர்ச்சி குன்றியவர்கள் என்ற கருதப்படுபவர்களை காண்கையில் எது மன வளர்ச்சி என்ற “விடை தெரியாத கேள்வி“யில் மனம் குவியும்…வசிப்பிடம் ஏதுமின்றி தெருவோரம் “வாழ்வைத் தேடி” வருபவர்களிடம் நம் பார்வை பதியும்…”கீழ் தட்டு” என்று சொல்லப்படும் கண்டுகொள்ளப்படாமல் இருக்கும் சமூக தளத்திலிருந்து வரும் சிறுவர்களின் நடவடிக்கைகளில் “நான்கு எழுத்துக்கள்” பாய்ந்தால் மாற்றம் வாராதா என்ற என்ற எண்ணம் சூழும்…

பாவண்ணன் அவர்களின் எழுத்துக்கள்  நமக்குள் இறங்க மறுத்தாலோ, சற்றே அந்நியமாகத் தோன்றினாலோ, நம்மை அவற்றுடன் அடையாளப்படுத்த முடியாமல் இருப்பது போல் தெரிந்தாலோ, நாம் தெருவில் இறங்கி நடந்து வெகுநாட்கள் ஆகி விட்டன என்று பொருள். இன்றைய சமூகம் முன்னிறுத்தும் ஓட்டத்தில் நாம் எப்புறமும் பார்க்காமல் தங்க கூண்டில் பயணம் செய்து கொண்டிருக்கிறோம் என்றும் பொருள். கூண்டை விட்டிறங்கி வானம் பார்க்கும் வாய்ப்பை வழங்குகின்றன பாவண்ணனின் ஆக்கங்கள்.

நதியின் பிழையும் நாஞ்சில் நாடனும்

குமரன் கிருஷ்ணன்

nanjil_nadan_spl_issueநீங்கள் வசதியானவரென்றால் உங்களுக்கே உரித்தான குளுகுளு காரிலோ, அல்லது நீங்கள் நடுத்தர வர்க்கத்தின் திரிசங்கு சொர்க்கத்தில் திரிபவ‌ரென்றால் சொகுசு பேருந்திலோ ரயிலிலோ செல்லும் பொழுது, பரந்து விரிந்திருந்தாலும் வறண்டு கிடக்கும், காவிரியையோ, கொள்ளிடத்தையோ, தாமிரபரணியையோ கண் கொட்டாமல் பார்க்கும் பொழுது, கையிலிருக்கும் “cauvery” “vaigai” போன்ற லேபிள்கள் ஒட்டிய‌ மினரல் வாட்டர் பாட்டில் உங்கள் மனசாட்சியை இம்சித்தால், நீங்கள் நாஞ்சில் நாடனின் வாசகராக இருக்கக்கூடும் இல்லையேல் அவரின் வாசகராகக் கூடிய மனப்பொருத்தம் உங்களுக்கு(ம்) உண்டு. ஆதங்கம்…நம்மைப் போன்ற ஒரு சாமானியனிடம் பிரதிபலிக்கக்கூடிய அதிகபட்ச ஏமாற்றமும் எதிர்ப்பும் கலந்த உணர்வு ஆதங்கம் தானே! அதை ஒவ்வொரு பக்கத்திலும் எழுத்து முலாம் பூசிய கண்ணாடியாய் நம் முன் வைத்து நம்மை பார்க்கச் சொல்லும் பொழுது, அதை நம்முடைய பிம்பமாய் மட்டுமின்றி ஒட்டு மொத்த சமூகத்தை பீடித்த துன்பமாய் உணர வைக்கும் உக்கிரமும், அதிக காரத்தை மட்டுப்படுத்த உப்பு சேர்ப்பதைப் போல, அந்த உக்கிரத்தின் மீது ஆங்காங்கே தூவப்பட்ட நக்கல் நடையழகும்  அவரின் எழுத்துப் பாணி…”உண்மை உணர்வுகள் மறந்தால் அவர் மண்ணுக்குத் தேவையில்லை” என்பது நாஞ்சில் நாடனின் “தலைகீழ் விகிதங்கள்” நாவலின் திரை வடிவமான “சொல்ல மறந்த கதை” படத்தில் வரும் ஒரு பாடல் வரி. அவரது எழுத்தின் வேரை உரித்துக் காட்ட போதுமான வரி!

மொழி, பண்பாடு, கலாச்சாரம் என அனைத்து முகங்களிலும் இரட்டைத் தன்மை கொண்டுள்ள நம் சமூகம் அதன் வேர்களுக்கு வெந்நீர் ஊற்றும் விவேகமற்ற தன்மையை விளாசும் கட்டுரைகள் மூலமாகவே நாஞ்சில் நாடனை தேடித் தேடி வாசிக்கும் வழக்கம் எனக்குள் பீடித்தது…கருத்தாக்கத்தின் விசால பரப்பும் ஒழுங்கமைவும் அவரது கட்டுரைகளின் தலையாய பண்புகள் எனலாம். ஒழுங்கமைவு என்பதே ஒரு அருமையான சொல் இல்லையா? இயல்பான அமைப்பில் இருக்கும் ஒழுங்கே ஒழுங்கமைவாக இருக்க இயலும். அப்படியானால், நேர்த்தியின் இழைகளால் கோர்த்த கருத்தாக்கத்தின் ஆழ அகல நீளம் கூடக் கூட ஒழுங்கமைவு என்பது உண்டாக்கவும் பராமரிக்கவும் மிகவும் கடினமான ஒன்றாக மாறும் தன்மையுடையதாகிறது. ஆனால், நாஞ்சில் நாடன் இத்தகைய விசாலமான ஒழுங்கமைவை தன் ஒவ்வொரு கட்டுரையிலும் ஆழ்மனப் பார்வைக்கும் சிந்தனை கோர்வைக்கும் நம் முன் வைக்கிறார். உதாரணமாக, “சங்க இலக்கியத் தாவரங்கள்” கட்டுரையை எடுத்துக் கொள்வோம். புத்தகங்கள் வாங்க தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் செல்கிறார் நாஞ்சில் நாடன். செப்டம்பரில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளுக்கு 50% சதவீதம் கிடைக்கும் மற்ற எந்த சிறப்பு நாள் கழிவும் 25% கழிவுதான் என்கிறார் புத்தகம் விற்பவர். செம்டம்பர் மாதம்  வரலாம் என்று நினைத்ததை எழுதும் ஆசிரியர், அதன் உவமையாக சட்டென்று “அப்பம் தின்னவோ அலால் குழி உண்ணவோ” என்று எழுதுகிறார். நம் மனம் மணோன்மணீயம் காலத்திற்கு பிந்திப் பாய்கிறது. அங்கிருந்து பதிப்புத்துறை செல்லும் நாஞ்சில் நாடனுக்கு ஒரு திருக்குறள் நினைப்புக்கு வருகிறது. அக்குறளை எழுதி, செம்மொழித் தமிழ்க்குடிமகனுக்கு திருக்குறள் பொருள் விளங்குவது அரிது என்பதால் அதற்கான ஆங்கில மொழி பெயர்ப்பும் அந்த புத்தகம் எங்கு கிடைக்கும் என்பதையும் சொல்கிறார். தஞ்சை தமிழ் பல்கலைகழகத்திலேயே “சங்க இலக்கியத் தாவரங்கள்” கிடைக்காத கதையைச் சொல்லி, அப்புத்தகத்தை பற்றி விரிவாக எழுதுகிறார். அப்புத்தகத்தில் குறிப்பிடப்படும் தாவரங்கள் பலவற்றை தன் பல்வேறு வயதுகளில் கண்டு ஏற்பட்ட சிலிர்ப்பை நம்முடன் பகிர்ந்து கொள்ளும் நாஞ்சில் நாடன், “இந்நூல் கிடைப்பதும் கிடைக்காததும் உங்கள் ஊழ்வினை” என்று கட்டுரையை முடிக்கிறார்.  இக்கட்டுரை படித்து முடித்த பின்பு, சாலையில் மிஞ்சியிருக்கும் சொற்ப மரங்களை நாம் கடக்கும் ஏதோ ஒரு பொழுதிலோ, பெயர் தெரியாத மரங்களின் இலையோ பூவோ நம்மீது இறங்கி வரும் நொடியிலோ “சங்க கால நிழல்” நம் மீது படிந்து நகர்வதை நமக்கு நாமே உள்நோக்க இயலும்.

“சிறுமீன் சினையிலும் நுண்ணிது” கட்டுரை மற்றுமொரு உதாரணம். ஆலமர விழுதுகளாய் மனதில் அசையும் அது சார்ந்த நினைவின் பொழுதுகளை சொல்ல வரும் நாஞ்சில் நாடன் கட்டமைக்கும் கட்டுரையின் போக்கு அலாதியானது. ஆலிலையில் துயின்ற கண்ணனில் தொடங்கும் அவர், திருப்பாணாழ்வார், பெரியாழ்வார், குலசேகராழ்வார், திருமழிசை ஆழ்வார் போன்றோர் பாடிய ஆலின் நிழலில் நம்மை சற்று நேரம் அமர்த்தி பின், புறநானூறு வழியே ‘ஆல் அமர் கடவுள்” அறிமுகப்படுத்தி, பெரு மற்றும் சிறு காப்பியங்களில் கண்ட ஆல் பற்றியனவற்றை மேற்கோள் காட்டி ஒரு அற்புதமான பாடலின் வழியே பெருமிதமும் ஆதங்கமும் சேர்ந்து கட்டிய உணர்வின் உச்சிக்கு நம்மை இட்டுச் செல்கிறார். ‘தெள்ளிய ஆலின் சிறுபழத்து ஒரு விதை…” என்னும் அப்பாடலை படிக்கையில் எப்பேர்பட்ட இலக்கிய வேரில் கிளர்ந்தெழுந்த சமூகத்தின் வழிவந்தவர்கள் நாம் என்ற பெருமிதமும் அப்படிப்பட்ட புதையல் சீண்டுவாரின்றி சீரழிந்து கொண்டிருக்கிறதே என்ற ஆதங்கமும் ஒரு சேர நமக்குள் எழும். அந்த ஆதங்கத்தின் மீது தனது ஊர் ஆலமரத்துடன் தான் வளர்ந்த அனுபவத்தை அமர்த்தி, அந்த மரம் வீழ்ந்த பின் முதியவராய் அதன் மிச்சமான அடிமரத்து வெட்டுப்பரப்பில் உட்கார்கையில் சிறுவயதில் சித்தியின் மடியில் அமர்ந்த ஞாபகம் வருவதாய் சொல்லி “கடவுள் ஆலம்” என்று முடிக்கையில் நம் தொண்டையில் ஏதோ உருள்வது போல் உணரக்கூடும். நினைப்பும் இழப்பும் சேர்த்து பிசைந்த உணர்வுருண்டையோ அது?

ஒரு யதார்த்த நிகழ்வின் வழியே நாம் “தொலைத்தவற்றை”ச் சொல்லி, அதன் பக்க விளைவாக, சிந்தனையை செம்மைப்படுத்தத் தக்க‌ வினையாக, தறி கெட்டு ஓடிக் கொண்டிருக்கும் தற்கால வாழ்க்கை பரபரப்பில், அவசியமில்லை என்ற அறிவின்மையால் அற்ப‌ம் என்றாகிப் போன அற்புதங்களை நமக்கு அறிமுகப்படுத்துவதே அவரின் பெரும்பாலான கட்டுரைகள்.

ஒரு படைப்புக்கு, அதன் தலைப்பே கவிதையின் எழிலுடன் பொருட்பொலிவுடன் இருக்க வேண்டும் என்பது நாஞ்சில் நாடனின் அவா. அதனை ஆழமாகச் சொல்ல “எனக்கும் என் தெய்வத்துக்குமான வழக்கு” என்ற தலைப்பில் ஒரு நீண்ட கட்டுரையே எழுதியுள்ளார் அவர். தமிழ் மட்டுமின்றி பிற மொழிகளிலும் தான் கண்ட அட்டகாசமான தலைப்புகளை இக்கட்டுரையில் பட்டியலிட்டு விளக்குகிறார். இப்படிப்பட்ட எதிர்பார்ப்பு உள்ள ஒருவரின் படைப்புகள் எத்தகைய தலைப்புகள் கொண்டதாக இருக்கும்? “நதியின் பிழையன்று நறுப்புனல் இன்மை” என்பது அவரின் கட்டுரைத் தொகுப்பு ஒன்றின் தலைப்பு.

“நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை” இராமயண வரிதான். ஆனால் தனது கட்டுரைத் தொகுப்பு ஒன்றின் தலைப்பாக அதை வைத்த‌ நாஞ்சில் நாடன், அந்த வரியின் இராமாயணப் பொருளை முற்றிலுமாக மாற்றி நெறியாள்கிறார்.  இன்று வறண்டு கிடப்பது நதிகளின் நீராதாரம் மட்டுமா? மனிதத்தின் ஜீவனே அல்லவா வறண்டு கிடக்கிறது? இலக்கியத்தை ஒதுக்கி வைத்து, ஜீவனற்ற மொழி பேசி, ஜீவனற்ற இசை கேட்டு, அச்சிடப்பட்டவற்றில் பணத்தாள் மட்டுமே படிக்கத் தெரிந்த அறிவார்ந்த தலைமுறைகள் வளர்த்து, உலர்ந்து போன அன்புடன், உடைந்து போன உறவுவகைகளுடன், உண்மையற்ற உணர்வுகளுடன் ஊருக்காய் வாழும் போலித்தனம் மிகுந்த ச‌மூகத்தின் ஜீவன் வேறெப்படி இருக்கும்? வறண்டு தான் கிடக்கும். அந்த வறண்டு போன சமூக நதியில் நம் அக மலத்தை அள்ளி அள்ளிக் கொட்டி சாக்கடையாக்கிய நம் பொறுப்பின்மையின் நாற்றத்தை நாமே நுகர்ந்து கொள்ள வைக்கும் பேசுபொருளே “நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை”… நம் அன்றாட வாழ்வின் அங்கங்கள் ஒவ்வொன்றையும் உரித்து ஊற வைத்து உப்புகண்டம் போட்டு தொங்க விடும் அதன் ஒவ்வொரு கட்டுரையிலும் சமூக பிரக்ஞையை  நம்முள் ஏற்றுகையில், ஊவா முள்ளெடுத்து உடல் முழுக்க குத்தியது போல் நாளாக நாளாக நமக்குள் வலியெடுக்கும்…நம் சமூக, வாழ்க்கை நதி நறும்புனலாய் இல்லாமல் மாறக் காரணம் நாம் தானே?

அடுத்த தலைமுறையின் அடிவேர் என்று நாம் கருதும் பள்ளி கல்லூரி படிப்புகளில் தமிழ் மெல்ல தலைகுனிந்து நடந்து பின் தலைமறைவாகிப் போய் கொண்டிருக்கும் அவலத்திலிருந்து தப்பிய எண்பதுகளில் பயின்ற என்னைப் போன்றோருக்கும் அதற்கு முந்தைய தலைமுறையினருக்கும் “தகுதி வழக்கு” என்னும் இலக்கணப் பகுதி நினைவில் இருக்கக்கூடும். யதார்த்த பயன்பாட்டிற்கு வெகு அருகில் அமைந்ததாலோ என்னவோ, நாஞ்சில் நாடன் பாஷையில் சொன்னால், “மூலத்தில் குருதி கொப்பளிக்க வைக்கும்” இலக்கண விதிகள் போல் அல்லாது எளிமையாக மனதில் பதியக் கூடியது…மங்கலம், குழூஉக்குறி, இடக்கரடக்கல் என்பவை தகுதி வழக்கின் கூறுகள். இந்த மூன்றையும் சேர்த்து ஒரு தலைப்பாக்கி நாஞ்சில் நாடன் எழுதியிருக்கும் கட்டுரை நாம் அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று. தகுதியற்ற மாந்தர்கள் பெருத்து கொழுத்து பெரும்பானமை ஆகிப்போன சமூகத்தின் மீது தன் வழக்கை பதிவு செய்யத் தான் தகுதி வழக்கின் பகுதிகளையே தலைப்பாய் வைத்தாரோ நாஞ்சில் நாடன்? பெண்களின் ஊன் ஒன்றையே காணும் பொருளாக்கி நடுவீடு வரை வந்து நமக்கு ஊட்டும் ஊடகங்களை ரசித்தபடியே அவ்வப்போது தலைப்புச் செய்திகளாகும் நிர்பயாக்களுக்கு  “வாட்ஸ் அப்களில்” ஆவேசமும் வருத்தமும் தெரிவித்து விட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போகும்  சமூகம் கொண்டிருக்கும் உள்ளத்தின் கள்ளத்தை, இரட்டைத் தன்மையை, குணக்கேட்டின் “அமங்கலத்தை”,  மலின ரசனைக்கு [“செல்ஃப்பி புள்ள” போன்ற புல்லரிக்கும் சொற்தொடர்களே நம் செவிக்கு இன்பம் பயக்கும் என்றாகி விட்ட போது மொழியின் செவ்வியல் எல்லாம் யாருக்கு வேண்டும்?] கும்பலாய் அடிமையான “குழூஉக்குறியை” சொல்லாமல் சொல்வது தான் நாஞ்சில் நாடன் அந்தக் கட்டுரையின் அடியில் வைத்த “தகுதி வழக்கு”.

எழுதும் பொருளில் நேர்மையும் எழுதுபவரின் அக நேர்மையும் சரிவிகிதத்தில் சமன்பாடு கொள்ளும் போது அந்தப் படைப்பின் இயல்புத்தன்மையும் உண்மையும் நமக்குள் ஊடுருவத் தவறுவதில்லை. நாஞ்சில் நாடனின் அகநேர்மைக்கு ஒரு சான்றாக, “காப்பிய இமயம்” கட்டுரையில் தன் பம்பாய் வாழ்க்கையில் “நேர் வாசல்” வழியாக‌ கம்ப இராமயணம் கற்ற அனுபவம் பற்றி விவரிக்கையில், “…அப்போது நான் தீவிர நாத்திகனும், பார்ப்பன எதிர்ப்பாளனும், வடமொழி எதிரியுமாக இருந்ததால் வால்மீகியை பொருட்படுத்தவில்லை. காலம்போன காலத்தில் இப்போது ஆதிகவி ஒருவரையும் ஆதி காவியத்தையும் அலட்சியப்படுத்திய கழிவிரக்கம் வதைக்கிறது” என்று எழுதுகிறார். இதைப் போன்று ,அவரின் எழுத்து நேர்மைக்கான அத்தாட்சியங்கள் பல கட்டுரைகளிலும் பரவலாக காணக் கிடைக்கிறது…

இலக்கை இயம்புவது இலக்கியம் என்பார்கள் சான்றோர்கள். ஒரு சமூகம் இலக்கின்றி திரியும் அவலத்தை இயம்புவதும் இலக்கியமே!

ஐம்புலன் அவிக்கச் சொல்லிய குறள் தந்த சமூகம் இன்று ஐம்புலனை அழிக்கச் செய்யும் ரசனைகளுடன், வாழ்க்கையே சந்தைப்படுத்தப்பட்டுவிட்ட தந்திரத்தை அறிந்து கொள்ளும் ஆர்வமற்ற, அனுபவமற்ற இயந்திரமாய், பல்லுயிர்க்கும் இப்பூமியில் வாழ சம பங்குண்டு என்பதை மறந்து இவ்வுலகம் தன்னுயிர்க்கு மட்டுமானது என்ற சுயநல அறிவீனத்தில் திளைக்கும் மானுட மந்தையின் அவலத்தை ஆற்றாமையுடன் எடுத்துரைக்கும் நாஞ்சில் நாடனின் கட்டுரைகளும் இலக்கியமே! இனிப்பின் சுவை நாக்கில் இலகுவாய் உருகி நடுத்தொண்டையில் வழிந்தோடுவது போன்றதில்லை கசப்பின் சுவையும் காரத்தின் சுவையும்…நாக்கின் வழிச்செல்லும் போது துவங்கி நாடி நரம்பெங்கும் சுண்டி எரிக்கும் தன்மையுடைத்து கசப்பும் காரமும். அவலம் புசிக்கும் ஆழ்மனம் அத்தகைய உணர்வைத்தான் அடைகிறது. அதனால் தான் “எத்தனை காலம்தான் கசப்பை உள்வைத்துக் கொள்வது?” என்று கேட்கிறார் நாஞ்சில் நாடன். அந்தக் கசப்பின் படிமத்தை கலை வடிவமாய் கொண்ட அவரின் கட்டுரைகளும் இலக்கியமே! புத்தகம் இல்லா வீட்டில் நீர் அருந்த வேண்டாம் (“கசப்பை” போக்கும் நீர் தான் புத்தகமோ?) என்று எழுதும் நாஞ்சில் நாடனை வாசித்தல், நம் மனதில் இன்னும் எங்கேனும் ஒரு ஓரத்தில் மீதமிருக்கும் மனிதத்தின் வேரிலும் சமுக அக்கறையின் மீதிலும் நீரூற்ற நல்லதொரு வாய்ப்பு!