குற்றப்புனைவு

சிண்ட்ரெல்லா கொலைவழக்கு

– கதை: ஸ்ரீதர் நாராயணன்; ஓவியம்: யாத்ரீகன்

Cinderella

இன்னும் பத்து நிமிஷத்தில் சில்க்போர்டு பாலம் வந்துவிடும். இந்த நடுஜாமத்தில் மடிவாலா பக்கம் ஏதாவது டீக்கடை திறந்திருக்கலாம் என்று நீங்கள் நினைக்கும் போது வண்டியோட்டிக் கொண்டிருந்த கம்பார் மைக்கை திருப்புகிறார். சற்று கரகர பின்னணியில் ஒரு குரல் ‘கமின்…. கமின்… கண்ட்ரோல் ரூம் கமின்…. ஹொய்சளா பேட்ரோல் செவண்டீன் ரிப்போர்ட்டிங்… இல்லி கொலை ஆரிட்டிட்டு. காரு உளகே ஒந்து லேடி டெத்…’ என்று செய்தி சொல்கிறது. ஏதோ சாலைவிபத்து பற்றி தகவல் என்று நினைத்தால் கொலை என்ற வார்த்தை, காரில் உள்ள எல்லோரையும் நிமிர்ந்து உட்காரவைக்கிறது. உங்களுடைய அடுத்த ஒரு மணி நேர அனுபவங்களும், இன்னும் மூன்று மாதத்திற்காகவது ‘சிண்ட்ரெல்லா கொலைக்கேஸ்’ என்று மீடியாக்களில் அதகளபடப்போகிறது பாருங்கள்.

பின் சீட்டில் அரைத்தூக்கத்தில் உட்கார்ந்திருக்கும் ஏடிஜிபி ராகவேந்திரா முல்குந்த் இன்னும் நான்கு வருடங்களில் சிட்டி கமிஷனராக ஆகிவிடுவார். அவருக்கு தொந்தரவு வேண்டாமே என்று கம்பார் அவசரமாக மைக்கை அணைக்க போக, முழுவதுமாக விழித்துக்கொண்ட ஏடிஜிபி அவர் தோளைத் தொட்டு, அணைக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டு மைக்கில் வந்த செய்தியை உன்னிப்பாக கேட்கிறார்.

பன்னர்கட்டா ரோடில், மீனாட்சி கோவில் பக்கம் அநாமத்தாக சாலையோரத்தில் கார் ஒன்று நிற்கிறதாம். காரை ஓட்டி வந்த பெண், டிரைவர் சீட்டில் இறந்து கிடக்கிறாராம். வழிப்பறிக் கொள்ளையோடு கொலையாக இருக்கலாம் என்கிறார். மைக்கில் பேசுபவரின் மொழி ஹூப்ளி வட்டாரவழக்கு போல் உங்களுக்கு தெரிகிறது. போலிஸ் வேலை என்று வந்துவிட்டால் எவ்வளவு நுட்பமாக எல்லாவற்றையும் கவனிக்க வேண்டியிருக்கிறது பாருங்கள். ஆனால் ரொம்பவும் மெனக்கெடாதீர்கள். இந்தக்கதையின் முக்கியமான துப்பு துலக்கப் போகும் பாத்திரம் என்றாலும், நீங்கள் யூனிஃபார்ம் போலிஸ் இல்லை. ஏடிஜிபி ஆபிஸ் கிளார்க்தான். ஏடிஜிபியோடு கேம்ப் போய்விட்டு பெங்களூரு திரும்பிக் கொண்டிருக்கிறீர்கள். (more…)