சத்யஜித் ரே

படோல் பாபு – திரை நட்சத்திரம்

சத்யஜித் ரே – (தமிழாக்கம்: ஸ்ரீதர் நாராயணன்)

இந்திய சினிமாவின் நூறாண்டு நிறைவை கொண்டாடும் விதமாக தயாரிக்கப்பட்ட ‘பாம்பே டாக்கிஸ்‘ திரைப்படத்தின் ஒரு பகுதியாக, பிரபல இயக்குநர் திபாங்கர் பானர்ஜி இயக்கிய குறும்படத்தின் மூலக் கதை. சத்யஜித் ரே ‘படோல் பாபு, திரைநட்சத்திரம்‘ என்ற தலைப்பில் எழுதியிருந்தார். திரையில் பார்க்கும்போது ‘புலிக்கலைஞன்‘ நினைவுபடுத்திக் கொண்டே இருந்தது.


db-star
நிஷிகாந்தா பாபு தெருவிலிருந்து அழைக்கும்போது படோல் பாபு சாமான்கள் நிறைந்த பையை தனது தோளில் மாட்டிக்கொண்டிருந்தார். ‘படோல், இருக்கிறீர்களா?’

‘இதோ, வருகிறேன்.’

நேபாள் பட்டாச்சார்ஜி தெருவில் படோல் பாபுவின் வீட்டிலிருந்து மூன்று வீடுகள் தள்ளி நிஷிகாந்த கோஷ் குடியிருந்தான். வெகு கலகலப்பான ஆள்.

சாமான்கள் பையுடன் வெளிப்போந்த படோல் பாபு கேட்டார். ‘என்னாச்சு? சீக்கிரமே எழுந்துவிட்டாயா?’

‘கவனி. நீ எப்போது திரும்புவாய்?’

‘இன்னும் ஒரு மணி நேரத்தில். ஏன்?’

‘நீ திரும்பவும் வெளியே போக மாட்டாய் அல்லவா? எப்படியிருந்தாலும் இன்று தாகூரின் பிறந்தநாள் வேறு. நேற்று நான் என் மனைவியின் தம்பியை நேதாஜி மருந்துக்கடையில் சந்தித்தேன். அவன் திரைப்படங்களில் வேலை செய்கிறான் – நடிகர்களை ஏற்பாடு செய்வது. ஒரு திரைப்பட காட்சிக்கு ஆள் தேவை என்று சொன்னான். அவன் வேண்டுவது என்ன தெரியுமா – ஐம்பது வயதான, குள்ள, வழுக்கைத்தலை – போன்றதொரு ஆசாமியை. உடனே உன்னைப்பற்றித்தான் நினைத்தேன். அதனால் அவனிடம் உன்னைப் பற்றி சொன்னேன். உன்னிடம் நேரடியாக பேசும்படி அவனிடம் சொல்லியிருக்கிறேன். இங்கே பத்துமணி வாக்கில் இருப்பேன் என்று சொன்னான். உனக்கொண்ணும் பிரச்னை இல்லையே? அவர்களுடைய கணக்குக்கு ஏற்றப்படி சம்பளம் தந்துவிடுவதாக சொன்னான்…’

அவ்வளவு அதிகாலையில் அப்படியான ஒரு குறிப்பை படோல் பாபு நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை. அவரைப்போன்ற சாதாரண ஆசாமிக்கு ஐம்பத்திரெண்டு வயதில் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பை எதிர்பார்ப்பது கடினம். உண்மையில் நம்பமுடியாதது. (more…)