சலாம் குலாமு

சலாம் குலாமும் சமுதாயச் சீர்த்திருத்தமும் பின்ன சுரேஷும்

(பகடி)

இலவசக் கொத்தனார்

உரைநடைகளின் போதாமைகளைத் தாண்டி நம் அகத்தினைத் தொட்டு, தட்டி எழுப்பி, எழுச்சிகளைக் கொந்தளிக்க வைத்து, நம் பிரக்ஞைகளை உலுக்குவதுதான் நல்ல கவிதை என்றால் சுரேஷின் கவிதைகள் நல்ல கவிதைகள். நல்ல கவிதைகள் படிக்க முடியாத கரடுமுரடு மொழியில்தான் இருக்க வேண்டும் என்ற மேற்தட்டு மனப்பான்மையை சுக்குநூறாக தகர்தெறிந்து உழைக்கும் வர்க்கத்தினரின் உன்னதமான எளிய பாசாங்கற்ற பகடுகளேதுமில்லாத மொழியிலும் கூட நல்ல கவிதையைத் தர முடியும் என்பதற்கான சான்று சுரேஷின் கவிதைகள். மனித உணர்வுகளின் பிரதிபலிப்பு என்று வந்த பின்னர் விமர்சனப்பிரதிகளில் கவிதையியல். கோட்பாடு எல்லாம் இரண்டாம் மூன்றாம் பட்சமாகிவிடுகிறது. இருப்பினைப் பற்றியும் உறுப்பினைப் பற்றியும் சமூக குடும்ப நிறுவன வெளிகளில் உருவாக்கப்பட்டுள்ள கருத்தாக்கங்களையும் மதிப்பீடுகளையும் சிதைத்து அவற்றின் வன்முறைகளுக்கெதிராக குரலெழுப்பி தற்கால மொழிக்கலாச்சாரத்தின் அகப்புற எல்லைகளை மீறி இயங்குவது மட்டுமே நல்ல கவிதை என்ற பொதுப்புத்தியினுக்குள் பொருந்த நினைத்திடாத சராசரி மொழியிலும் மனதுக்கு அந்தரங்கமான மொழியிலும் கூட ஒரு மனிதனின் ஆழ்மனத்துடன் பேசும் உரையாடலை பொதுவிற்குக் கொண்டு வரமுடியும் என்பதில் வெற்றி பெற்று இருக்கிறார் சுரேஷ். (more…)

சலாம் குலாமு

– எஸ். சுரேஷ் –

தொப்பி அணிந்து நின்று கொண்டிருந்த
மனித குரங்கு கதவை எனக்காகத் திறந்தது
உள்ளே நுழைந்து ஒரு அறைக்குள் சென்றேன்
இரண்டு சிறுத்தைகள் மான் கறி தின்று கொண்டிருந்தன
கோட் சூட் அணிந்த ஒரு யானை என்னிடம் வந்து
“நீங்க வெஜ்ஜா நான்-வெஜ்ஜா” என்று கேட்டது
“இன்றைக்கு நான் வெஜ்” என்றேன்
“இங்கே வாருங்கள்” என்று வேறொரு அறைக்கு அழைத்து சென்றது

என் பக்கத்து மேஜையில் ஒரு பூனையும் நாயும்
கோப்பையிலிருந்த பாலை நக்கிக்கொண்டிருந்தன
“ஏன் நீங்கள் நான்-வெஜ் சாப்பிடவில்லை?” என்று கேட்டேன்
பூனை என்னை மெளனமாய் முறைத்தது
“இன்றைக்கு சனிக்கிழமை” என்று நாய் கூறியது

சாப்பிட்டுவிட்டு வெளியே வரும்போது
தொப்பி அணிந்திருந்த மனித குரங்கிற்கு
பத்து ரூபாய் டிப்ஸ்ஸாகக் கொடுத்தேன்
உடனே அது “சலாம் குலாமு குலாமு சலாம் குலாமு”
என்று ஒரு முறை குதித்துப் பாடி பணத்தை பெற்றுக்கொண்டு
சலாம் போட்டு என்னை வழியனுப்பி வைத்தது.

 

image credit – Tabatha Yeatts, The Opposite of Indifference