சிறுகதை

நேசக்கரங்கள்

விஜய் விக்கி

மொபைலை எடுத்து செல்பி எடுத்துக்கொண்டேன். என் வாழ்க்கையின் கடைசி செல்பி அது, பொய்யான சிரிப்பு பொங்கி வழிந்தது. அவசரமாக பேஸ்புக்கில் அப்டேட் செய்தேன். அநேகமாக ஐம்பது லைக்குகள் விழக்கூடும். நாளைக்கு என் இறப்பை பகிரப் போகும் நண்பர்களுக்கு என்னால் கொடுக்க முடிந்த நினைவுப்பரிசு இது. “நேத்துதான் பிக்சர் அப்டேட் பண்ணிருந்தான். அழகா சிரிச்சபடி போஸ் கொடுத்திருக்கான் பாரு. ச்ச, இப்டி முடிவெடுத்திட்டானே” என பொருமிக்கொண்டு ஒரு “ஆர்.ஐ.பி” ஸ்டேட்டஸ் போடக்கூடும்.

பர்ஸ்க்குள் புதைந்திருந்த ஆதார் அட்டையை எடுத்து சட்டைப்பைக்குள் திணித்துக்கொண்டேன். ஒருவேளை மாடியிலிருந்து கீழே குதித்து, முகம் சிதைந்து அடையாளம் தெரியாமல் போய்விட்டால் இந்த ஆதார் அட்டை ஒரு அடையாளமாக இருந்துவிட்டுப் போகட்டும். “அடையாளம் தெரியாத வாலிபர் தற்கொலை” என ஏதோ ஒரு டீக்கடை வாசலில் செய்தியாக மனம் ஒப்பவில்லை.

வாழ்வதில்தான் முறையான திட்டமிடல் இல்லாமல் தோற்றுவிட்டேன், இந்த இறப்பிலாவது எல்லாம் முறையாக நடக்கட்டும்.

இனி இருக்கும் பொழுது எனக்கான விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ள. மெல்ல நடந்து அருகிலுள்ள செட்டிநாடு ஹோட்டலை அடைந்தேன்.

வாயிலில் அடுக்கப்பட்டிருக்கும் மெனு புகைப்படங்களை பார்த்தே பலநாட்கள், நாவினில் எச்சில் ஊறியதுண்டு. உள்ளே சென்று அமர்ந்து, விலைப்பட்டியலை ஒரு பொருட்டாகவே மதிக்காமல், இதுநாள் வரை கண்களால் ரசித்த அத்தனை பதார்த்தங்களையும் ஆர்டர் செய்தேன். உணவுப்பட்டியலை எழுதிக்கொண்ட வெய்ட்டர், சற்று விசித்திரமாக பார்த்துவிட்டு நகர்ந்து சென்றார்.

பறவை, நடப்பன, ஊர்வன, நீர் வாழ்வன என ஒரு உயிருக்கும் ஈவு இரக்கம் பார்க்கவில்லை. பிரியாணியின் வாசனை, நாசிக்குள் நுழைந்து சிறுகுடலை ஊடுருவிக்கொண்டிருந்தது. ஆசையோடு அள்ளி ஒரு வாய் வைத்தேன். நாவின் சுவை மொட்டுகளில் பட்டபோது, அப்படியொரு சிலிர்ப்பை உணரமுடிந்தது. ரசித்து ருசித்து மென்று விழுங்கியபோது, “இதுதான் உன் கடைசி சாப்பாடு!” என்று மனம் நினைவூட்டியது. சட்டென உடலுக்குள் ஒரு மாற்றம், இரைப்பைக்குள் எக்கச்சக்கமாய்ச் சுரந்த அமிலங்கள். உடல் முழுக்க வியர்த்து, தொண்டைக்குழியை அடைந்த முதல் வாய் அதற்கு கீழே செல்ல மறுத்து ஸ்தம்பித்து இடைநின்றது. பதற்றம் உச்சந்தலைக்குள் ஊசியாய் குத்த, வாயிலிருக்கும் உணவை சிரமப்பட்டு விழுங்கினேன். மூச்சு இறைத்தது. இதற்குமேல் சாப்பிட மனம் ஒப்பவில்லை. மேசையில் அடுக்கப்பட்டிருந்த உணவுகளை ஏக்கத்தோடு ஏறிட்டபடியே, கைகழுவ சென்றுவிட்டேன்.

“என்ன சார் சாப்பாடு ஏதும் சரியில்லையா?” குற்ற உணர்வோடு குரல் தணித்து வினவினான் ஊழியன்.

“இல்லப்பா. கொஞ்சம் உடம்பு சரியில்ல.”

“வேணும்னா பார்சல் பண்ணிடவா?”

“இல்ல. பரவால்ல. பில் கொடுங்க, போதும்!” சற்று ஆசுவாசமாக அமர்ந்துகொண்டேன். குவளையில் ஊற்றப்பட்டிருந்த தண்ணீரை எடுத்து குடித்துக்கொண்டேன். ஏனோ அழவேண்டும் போல இருக்கிறது. அக்கம்பக்கம் திரும்பிப் பார்த்தேன். குடும்பத்தோடு மகிழ்ச்சியாக சாப்பிட்டுக்கொண்டிருக்கும் சக மனிதர்கள். என் அழுகை அந்த இடத்துச் சூழலின் ரம்மியத்தை கெடுத்துவிடக்கூடும். எச்சிலோடு என் அழுகையையும் சேர்த்தே விழுங்கிக்கொண்டு அங்கிருந்து எழுந்துவிட்டேன்.

பில்லை கையில் கொடுத்துவிட்டு, ஒருவித கழிவிரக்கத்தோடு என்னை பார்த்துக்கொண்டிருந்தான் அந்த ஊழியன். முகம் அறியாத, முன்பின் தெரியாத சக மனிதர்கள் மீது ஒரு இனம்புரியாத இரக்கத்தினை இப்படி அதிசயமான சிலரிடம் மட்டும்தான் பார்க்க முடிகிறது.

எண்ணூற்று நாற்பது ரூபாய் மொத்தம். ஆயிரம் ரூபாய் தாளினை எடுத்து வைத்தேன். “சேஞ்ச் வேணாம்!” என அங்கிருந்து கடந்து சென்றேன்.

அந்திவெயில் நெற்றியை சுளீறிட்டது. உணவகத்திலிருந்து வெளியே வந்ததும், கால் போன போக்கில் நடக்கத்தொடங்கினேன். எங்கே போவது? ஒரு யோசனையும் இல்லை. நினைவு முழுக்க நெருங்கிக்கொண்டிருக்கும் பத்து மணியை ஒட்டியே ஓடிக்கொண்டிருந்தது.

“பீச் போறியா சார்?” ஷேர் ஆட்டோ ஒன்று நகர்ந்தபடியே வினவிக்கொண்டு வந்தது.

கடற்கரை. அதுவும் தோதான இடம்தான். பலதரப்பட்ட மனிதர்களை, பரபரப்பற்ற சூழலில் எதிர்கொள்வது அத்துனை அலாதியான அனுபவம்தான். ஏறிக்கொண்டேன்.

கண்ணகி சிலையருகே இறங்கிக்கொண்டேன். யாருக்காகவோ நீதி கேட்க இன்னமும் கையில் சிலம்போடு காத்துக்கொண்டிருக்கிறாள் அந்த கற்புக்கரசி. ஆற்றாமையோடு அவளை கடந்து கடற்கரை மணலில் கால் பதித்து நடக்கத்தொடங்கினேன். உப்புக்காற்று முகத்தில் படிந்து பிசுபிசுப்பாகியது. இன்னும் எவ்வளவு தூரம் நடக்கப்போகிறேன்? இருக்கப்போகும் ஒருசில மணிகளையும் இப்படி நடந்தே கடப்பதாய் உத்தேசமா? அதிகமாய் ஆட்கள் நடமாட்டமில்லாத ஒரு மையத்தில் அமர்ந்தேன். மணலில் பந்து எறிந்து விளையாடும் குழந்தைகள், அதிதீவிரமாக விரல்களை வருடிக்கொண்டே கதைத்துக்கொண்டிருக்கும் காதலர்கள், ‘இருட்டத்தொடங்கிவிட்டதே, இன்னும் போனியாகவில்லையே,” என ஏக்கத்தோடு ‘கடலை, கடலை’ என கதறிக்கொண்டிருக்கும் பதின்வயது இளைஞன். இந்த உலகத்தில் வேடிக்கை பார்த்திடத்தான் எத்தனை எத்தனை ரசனை நிரம்பிய விஷயங்கள்.  அதோ அங்கு கையில் ஏதோ குச்சியோடு என்னை நோக்கிவரும் மஞ்சள் அப்பிய பெண்மணி கூட ரசிக்கத்தக்கவள்தான்.

என் எதிரே சம்மணமிட்டு அமர்ந்தபோதுதான், அந்த ரசனையையும் தாண்டி அவளுக்குள் ஒரு செயற்கையான தெய்வீக ஒப்பனை அப்பிக்கொண்டிருப்பதை கவனித்தேன். ஒரு ரூபாய் நாணயத்தின் அளவிலான குங்குமப்பொட்டும், “ரேகை ஜோசியம் பாக்குறியா சார்?” என்ற கொச்சைத்தமிழும் முரண்கள் நிறைந்த அழகாகத்தான் தெரிகிறது.

வழக்கம்போல ‘’வேண்டாம்!’ என மறுக்க மனமில்லை. நம்பிக்கைக்காக இல்லையென்றாலும், ஓரிரு நிமிடங்கள் மரண பயத்திலிருந்து சற்று விலகி பொழுதுபோக்கலாம் என்கிற நப்பாசை.

“சூரிய ரேகை, சுக்கிரன் ரேகை, புதன் ரேகையல்லாம் பின்னிபினைஞ்சு திக்குக்கு ஒண்ணா கெடக்கு சாமி. இன்னதுதான் கஷ்டமுன்னு இல்லாம, இருக்குறதெல்லாம் சிக்கலா நெறஞ்சிருக்கு. ஆயுள் ரேகை அந்தரத்துல தொங்கிகிட்டு இருக்கு சாமி”

படாரென கையை இழுத்துக்கொண்டேன். இதென்ன மாயாஜாலம்? அப்படியே நேரில் பார்த்ததைப்போல பட்டவர்த்தனமாக சொல்கிறாளே!.

“ஒன்னும் பயப்பட வேணாம் சாமி. கெரகம்னு ஒன்னு இருந்தா, பரிகாரம்னு ஒன்னும் இருக்கும். நெறைஞ்ச பவுர்ணமி நாளுல, காளி கோயில்ல வெளக்கேத்தி, நாலு சுமங்கலி பொண்ணுகளுக்கு தானம் பண்ணு சாமி. உன்னப்புடிச்ச கெரகமெல்லாம் விலகும்!” கண்களை மூடிக்கொண்டு ஒருவித மந்திரக்குரலில் சொல்கிறாள்.

மனதிற்குள் படாரென ஒரு ‘ப்ளாஷ்’. ஒருவேளை இவள் சொல்வதைப்போல செய்து பார்க்கலாமா? மனது காளி கோவிலை நோக்கி பயணிக்கத்தொடங்கியது. இதென்ன முட்டாள்த்தனம்? சாவின் விளிம்பில் நின்றுகொண்டு, மூடத்தனத்துக்கு முட்டுக்கொடுப்பதேன்? அவசரமாக அப்பெண்ணின் கையில் ஒரு நூறு ரூபாய் தாளினை திணித்துவிட்டு, அங்கிருந்து நகர்ந்தேன். வாழும்போதுதான் எடுத்த முடிவுகள் அத்தனையும் குழப்பங்களின் உச்சம் என்றால், இறப்பிலும் அந்த தெளிவை இழக்க விரும்பவில்லை.

பொங்கிவரும் கடல் அலைகளில் கால் பதித்தவாறே நடக்கத்தொடங்கினேன். குதூகலமாக தண்ணீரினில் விளையாடிக்கொண்டிருக்கும் சிறார்களை பார்த்தபோது பால்ய நினைவுகள் அரும்பத்தொடங்கின. பசும்பொன் போன்ற பொய்மை கலக்காத சிரிப்புகள் அவை. முந்தையநாள் அப்பாவிடம் வாங்கிய அடியின் சுவடும் இல்லாது, மறுநாள் எழுதப்போகும் தேர்வு பற்றிய பதற்றமும் இல்லாது, அந்த நிமிடங்களை ரசித்து வாழ்ந்த காலங்கள் அவை. அத்தகைய ஜென் நிலையை இப்போதெல்லாம் யோசித்துப்பார்த்திடவே முடியவில்லை. சுற்றிலும் பாம்புகள் சீறிக்கொண்டிருக்க, பறந்துவரும் பட்டாம்பூச்சியை ரசிப்பதற்கு பெயர்தான் ஜென் நிலையா? ஒருபுறம் அது முட்டாள்த்தனமாக தெரிந்தாலும், மறுபுறம் வாழ்க்கையை வாழ்வதற்கு அத்தகைய வித்தையை கற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.

 “சார். உங்களைத்தான்.” யாரோ பின்னாலிருந்து அழைக்கிறார்கள். திரும்பிப்பார்த்தேன், இளம்பெண் ஒருத்தி. வெகுநேரமாக என்னை அழைத்திருக்கக்கூடும், நான் ஒருவழியாய் திரும்பிப்பார்த்துவிட்டதன் மனநிறைவு அவள் கண்களுக்குள்.

“சொல்லுங்க.” திரும்பினேன்.

“டைம் என்ன சார்?”

“எட்டு ஆகப்போகுது.”

“தாங்க்ஸ்” சிரித்துக்கொண்டே சொன்னாள். அப்போதுதான் அவளை கொஞ்சம் உற்று நோக்கினேன். சிவப்பு ஜிகினா சேலை, தலை நிரம்பிய மல்லிகை, உதட்டை மீறிய லிப்ஸ்டிக் ஒப்பனை. எதையும் கவனிக்காததை போல அவசரமாக கடலை நோக்கி திரும்பிவிட்டேன். அவள் இன்னும் என்னையே பார்த்துக்கொண்டிருக்கிறாள், மெல்ல என்னருகே நகர்ந்து வருகிறாள். இந்தச் சூழலை எப்படி எதிர்கொள்வது என்று புரியாமல் தடுமாறியபடிதான் நின்றேன்.

“பக்கத்துல ரூம் இருக்கு, ஆயிரம் ரூபாய்தான் சார்.” காதருகே கிசுகிசுத்தாள். பதற்றத்தில் வியர்த்து வழியத்தொடங்கியது. சட்டைப்பைக்குள் இருக்கும் ரூபாய்களை தேற்றி எப்படியும் ஆயிரம் ரூபாய் கொடுத்துவிடமுடியும்தான்.

அந்த தருணத்தில் மனதிற்கு இதமான ஒரு அனுசரணை தேவைப்படுகிறதுதான். பற்றி எரிந்துகொண்டிருக்கும் வைக்கோல்போரில் அள்ளி வீசவேண்டிய தண்ணீரைப்போல.

அவள் பின்னே நடக்கத் தொடங்கினேன். நான்கைந்து சந்துபொந்துகளை கடந்து, நாய்களின் ஊளைச்சத்தம் மங்கியிருந்த அந்த அழுக்கு படிந்த மாடிப்படிகளில் ஏறினோம். சற்றே சிதிலமடைந்துபோன ஒரு அறைக்குள் நுழைந்தபோது, மரண பயத்தையும் மீறிய ஒருவித பதற்றம் தொற்றிக்கொண்டது.

விளக்கை போட்டுவிட்டு, கதவில் உள்தாழ்ப்பாளையும் போட்டுவிட்டாள். அருகிலிருந்த தொலைக்காட்சிப்பெட்டியை ‘ஆன்’ செய்துவிட்டு, அதன் சத்தத்தை அதிகப்படுத்தினாள். கட்டிலில் சிதறிக்கிடந்த துணிகளை ஓரமாக அள்ளிவைத்துவிட்டு, என்னெதிரே செயற்கை சிரிப்புடன் வந்து நிற்கிறாள்.

‘நான் ரெடி, இனிமே நீதான் தொடங்கணும்!’ வார்த்தைகளில் அல்லாது, மெளனமாக உணரவைத்தாள். ஆனால் நான் எப்படி தொடங்குவது? முன்பின் அனுபவம் இருந்திருந்தால்கூட யோசிக்காமல் தொடங்கியிருப்பேன். நான் யோசித்துக்கொண்டிருப்பதன் உள்ளர்த்தம் உணர்ந்தவள் போல, என் சட்டை பொத்தான்களை அவளே கழற்றத் தொடங்கினாள். தன் சேலையையும் விலக்கிவிட்டு, என் வலதுகையை எடுத்து அவள் தோள் மீது வைத்தாள். கிளிப்பிள்ளைக்கு பாடம் சொல்லிக்கொடுப்பதை போல செய்துகொண்டிருக்கிறாள். இதற்குமேலும் மௌனசாமியாராய் நின்றிருந்தால், என் ஆண்மையின் மீதல்லவா சந்தேகம் கொண்டுவிடுவாள்.

அவளை வாரி அணைத்து உடைகளை களையத்தொடங்கினேன். அரை மயக்கத்தில் உச்சந்தலைக்குள் உணர்வுகள் கொப்பளிப்பதை உணர்ந்தேன். இப்படியும்கூட ஒருவித இன்பம் உடலுக்குள் ஏற்படுமா என்று எண்ணம் தோன்றிய மறுநொடியே எங்கிருந்தோ ஒருவித கவலை என்னையும் மீறி பீறிட்டு வழிந்தது. இன்னும் சில நிமிடங்களில் எழுதப்போகும் எனக்கான மரண சாசனம் பற்றியதான கவலை அது.

சாகப்போகும் தருணத்திலும் பாவக்கணக்கினை அதிகமாக்கிக்கொள்ள மனம் ஒப்பவில்லை. சட்டென விலகிக்கொண்டேன். வேகமாய் சட்டையை அணிந்துகொண்டு உடையினை சரிசெய்துகொண்டேன். விசித்திரமாக என்னை ஏறிட்டுப்பார்த்தவள், என்னை மேற்கொண்டு “என்ன? ஏன்?” என கேட்பதற்குள், அங்கிருந்து அவசரமாக வெளியேறினேன். நான் படிகளில் கீழே இறங்கியபோது, அவள் வாசல் வரை வந்து என்னை அதிசயமாக வெறித்துக் கொண்டிருப்பதை கண்டும் காணாமல் வேகமாய் அவள் கண்களை விட்டு மறைந்தேன்.

ஆள் அரவமற்ற அந்த அரைகுறை கட்டிடத்தை அடைந்தபோது நேரம் ஒன்பதரை மணிகடந்திருந்தது. எதிர்பார்த்ததை போலவே மனித நடமாட்டம் எதுவுமில்லாது, என் இறப்பை ஏற்றுக்கொள்ளும்விதமாய் தயாராக நிற்கிறது அந்த கட்டிடம். லிப்ட் எதுவும் இல்லை, அத்தனை மாடிகளையும் ஏறித்தான் கடக்கவேண்டும். கிடுகிடுவென படிகளில் தாவியேறினேன்.

மூச்சிரைக்க பதினான்காவது மாடியை அடைந்தபோது, இதயம் இடியென இடித்துக்கொண்டிருந்தது. வியர்வை உடலை குளிப்பாட்டியிருந்தது. கண்கள் இருட்டிக்கொண்டு வந்ததால், படிகளில் சாய்ந்து அமர்ந்துகொண்டேன். நேரம் பத்தை தொட இன்னும் ஐந்து நிமிடங்கள் மீதமிருந்தது. அலைபேசியை எடுத்து அனிச்சையாகவே அம்மாவின் எண்ணுக்கு அழைத்தது எனது விரல்கள்.

“என்னப்பா?. நல்லாருக்கியா?”

“இருக்கேன்மா..”

“சாப்டியா?..”

“ஹ்ம்ம் சாப்ட்டேன்.” வழக்கமாக இந்த பேச்சோடு அழைப்பினை துண்டித்துவிடும் நான், இன்று ஏனோ அமைதியாக காத்திருப்பது அம்மாவுக்கு சற்று விசித்திரமாக தெரிந்திருக்கக்கூடும்.

“எதுவும் பிரச்சினையாப்பா?. பணம் காசு எதுவும் வேணுமா?”

“அதல்லாம் ஒண்ணுமில்லம்மா. நீ நல்லா இருக்கியா?. உடம்ப பார்த்துக்கோ, நேரா நேரத்துக்கு சாப்பிடு.”

ஓரிரு வினாடிகள் மௌனத்துக்கு பிறகு, “என்னய்யா உடம்பு கிடம்பு சரியில்லையா?” கேள்விக்குறியோடு சந்தேகக்கணையும் சேர்ந்தே வந்தது.

அவசரமாக அழைப்பை துண்டித்தேன்.

யோசிக்கவெல்லாம் மனதிற்கு அவகாசம் கொடுத்திடாமல் சட்டென எழுந்து, மாடியின் விளிம்பில் நின்று கீழே எட்டிப்பார்த்தேன்.. வெகு அரிதாகவே வாகன போக்குவரத்து தென்படுகிறது. குறைவுயிராய் கிடக்கையில், அனுதாபத்தோடு ஆம்புலன்ஸ்’ஐ அணுகும் நிதானம் அங்கு தென்படவில்லை என்பது சற்று ஆறுதல் அளித்தது.

சரி குதித்துவிடலாம் என்கிற தீர்மானத்தோடு இன்னும் விளிம்பினை நோக்கி நகர்ந்து வந்தேன். கால் கிடுகிடுத்தது, உடல் முழுவதும் ரத்த ஓட்டம் அமிலமாய் எரியத்தொடங்கியது. அழுகை என்னையும் மீறி. ததும்பி வழிந்தது.

எவன் சொன்னது தற்கொலை என்பது கோழைத்தனம் என்று?  இதோ. இந்த நிமிடத்தில் இங்கிருந்து நான் குதிப்பதற்கு ஒரு அனாயச துணிச்சல் வேண்டும். வாழ்வதற்கான துணிச்சலை காட்டிலும், சிலபல கிலோக்கள் கூடுதல் துணிச்சல் அவசியம்.

ஆறு முறை எத்தனித்தும் இன்னும் குதித்திட முடியாமல் தடுமாறி நிற்கிறேன். கடவுளே, என்ன இது சோதனை? இவ்வளவு நேரமாய் மனதை சாவிற்கு ஆயத்தப்படுத்தியிருந்தும், கடைசி புள்ளியில் இப்படி தடுமாறுகிறதே. கண்களை மூடி, மூச்சினை உள்வாங்கி, இதுவரை பட்ட கஷ்டங்களிலேயே உச்சபட்ச கவலையை மனதில் நிலை நிறுத்தினேன். கால் இடறுகிறது. ஐயோ.

தடுமாறிவிட்டேன். காற்றில் மிதக்கிறேன், உடல் முழுவதும் மின்சாரம் பாய்வதை போல உணர்கிறேன். இன்னும் சில கணப்பொழுதில் தரையில் மோதி சிதறப்போகிறேன். இடையில் ஏதோ கேபிள் ஒயரில் சிக்கிக் கொள்கிறேன். அதுவும் அறுந்து விழுகிறேன்.

“ஐயோ.. யாரோ கீழ விழுந்துட்டாங்க” குரல் எங்கிருந்தோ ஒலிக்க, நினைவு மெல்ல அஸ்தமித்தது.

கண்களை திறக்க முடியவில்லை. ஏதோ பீப் சத்தங்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. நினைவு தத்தித்தடுமாறி மெல்ல சிதறியபடியே மீண்டது.

மூக்கிலும், வாயிலும் ஏதோ குழாய்கள் சொருகப்பட்டு, பலவண்ண ஒயர்கள் உடல் முழுக்க இணைக்கப்பட்டு படுக்கையில் கிடக்கிறேன். ஐசியூ’வில்தான் இருக்கிறேன் போலும், மருந்து நெடி சுவாசத்தோடு கலந்துவிட்டது. எப்படி பிழைத்தேன்? அந்த பாழாய்ப்போன கேபிள் ஒயரில் சிக்கியிருக்கக்கூடாது, இப்படி குற்றுயிராய் கிடக்கவைத்துவிட்டது.

கண் பார்வை அரைகுறை தெளிவோடுதான் தெரிகிறது. இப்போதுதான் உணர்வுகளும் மெல்ல மேலெழுகிறது. உடல் முழுக்க வலி தெறிக்கிறது அழக்கூட திராணியற்றுக் கிடக்கிறேன். வாயில் சொருகியிருக்கும் குழாய், குமட்டிக்கொண்டு வருகிறது. எல்லாவற்றையும் பிய்த்து எறிந்துவிட்டு எழுந்து ஓடவேண்டும் போல தோன்றுகிறது.

மங்கலான பார்வையில் என் கட்டிலருகே வெகுநேரமாக நின்றுகொண்டிருக்கும் ஒரு உருவத்தை அப்போதுதான் கவனிக்கிறேன் அம்மா.. அம்மாவேதான்.. சேலையின் முனையில் வாய்பொத்தி அழுதுகொண்டு நிற்கிறாள். உணர்வற்ற என் கால்களை ஒரு கையால் பிடித்தபடி நிற்கிறாள்.

செவிலிப்பெண் ஒருத்திவந்து, அழுதுகொண்டிருக்கும் அம்மாவை கண்டிக்கிறாள். அங்கிருந்து வெளியேற்ற முற்படுகிறாள். விடாப்பிடியாக அங்கு நின்றபடி நகர மறுக்கிறாள் அம்மா ஐயோ.. நான் இறந்துபோனால், என் கஷ்டங்களையும் சேர்த்து அம்மாவின் தலையிலல்லவா சுமைகளாக ஏற்றிவிடுவேன். துடித்துப்போய்விடுவாளே. பெற்ற பிள்ளையின் இறப்பை, எதிர்கொண்டு வாழும் கொடும் சூழலை நினைத்தாலே குலைநடுங்குகிறது. எழுந்துசென்று அவள் கண்களை துடைத்துவிட்டு அழவேண்டும் போல இருக்கிறது. உயிர் வாழும் வரையில் வாழ்வது மட்டும்தான் சுமையாக தெரிந்தது, மரணத்தின் விளிம்பில் நிற்கும்போதுதான் வாழ்விற்கு பின்னால் நடப்பவற்றை யோசிக்க மனம் தூண்டுகிறது.

ஐயோ நான் சாகக்கூடாது. எப்படியாவது உயிர்பிழைத்து, வாழவேண்டும் ஏதோ ஒரு அதிசயம் நிகழ்ந்து குணமாகிவிடவேண்டும். ஐயோ.. என்ன இது? கண் பார்வை மெல்ல மங்கிக்கொண்டு வருகிறது.

மூச்சுவிட அதிகம் சிரமமாக இருக்கிறது.. நினைவுகள் முன்னும் பின்னுமாய் தடுமாறுகிறது.

ஏதோ அவசர பீப் சத்தம் ஒன்று விடாமல் ஒலிக்க, என்னை நோக்கி வேகமாய் ஓடிவருகிறார்கள் செவிலிப்பெண்கள்யாரோ ஒரு மருத்துவர் என் நெஞ்சின்மீது கைகளை வைத்து அழுத்துகிறார், என்னைச் சுற்றி எத்தனை பேர், என்னைப் பற்றும் கரங்கள் எத்தனை. அவசரமாக பல ஊசிகள் ஏற்றப்படுகின்றன.

கடவுளே.. எவ்வளவுபெரிய பிழையை செய்துவிட்டேன், எப்படியாவது இதிலிருந்து மீளவேண்டும் நான் சாகக்கூடாது…  நான் சாகக்கூடாது…

 

முகிழ்தல்

– காலத்துகள்-

வீட்டைப் பூட்டிவிட்டு சாவியை சுந்தரி அக்காவிடம் கொடுக்கும்போது அவனுக்குச்  சற்று கூச்சமாக இருந்தது. பள்ளிக்குச் செல்ல சைக்கிளை எடுத்தான். கோகுலபுரத்திற்கு குடி வந்து ஒரு வருடமாகியும் அந்த இடம் அவனுக்கு அன்னியமாகவே இருந்தது. அந்த ஏரியாவில் இருந்த வீடுகளும் மனிதர்களும்  இன்னும் அவன்  மனதில் பதியவில்லை.   புதிய இடத்தில் உண்டாகும் அசௌகர்ய உணர்வுடன் எப்போதும் போல் சற்று வேகமாகவே  மிதித்தான்.

கோகுலபுரத்தைத் தாண்டி -அவன் பத்தாண்டுகளுக்கு மேலாக, செங்கல்பட்டுக்கு வந்ததிலிருந்து வசித்திருந்த-, மணியக்காரத்  தெருவிற்குள் நுழைந்தவுடன் சைக்கிளின் வேகம் குறைந்தது.  ஒரு முறைகூட பேசியதில்லை என்றாலும் பல ஆண்டுகள் தொடர்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்ததால் பழகியவை போல் உணரச்செய்யும் முகங்கள், வீடுகள், பரிச்சயமான கடைகள். மதிய நேரமென்பதால் கூட்டம் இல்லாத கடையில் நாடார் ஏதோ படித்துக்கொண்டிருந்தார். படித்தபின் எடைக்கு போடப்பட்ட  ஏதேனும் காமிக் புத்தகமாக இருக்கும். இவனும் நாடார் கடையில் அப்படி பல புத்தங்கங்கள் படித்தவன்தான் (பழைய கல்கி பத்திரிக்கைகளில் இருந்து எடுத்து பைண்ட் செய்யப்பட்டு, அட்டை பிய்ந்து போயிருந்த சிவகாமியின் சபதத்தின் அனைத்து பாகங்களையும் ஐந்து ரூபாய்க்கும் குறைவான விலையில் அங்கு வாங்கி இருக்கிறான்).

கோகுலபுரத்திற்கு குடி வந்த புதிதில் கடைக்குச் செல்ல வேண்டியிருந்தால், மணியக்காரத் தெருவுக்குத்தான் வருவான், ஆனால் நடைமுறைக்கு அது சரி வராது என்பது விரைவில் தெரிய அங்கிருந்த நாடார் கடைக்கே செல்ல ஆரம்பித்தான். ஆனால் இவனுக்கு நாடார் என்றால்  மணியக்காரர் தெருவில் கடை வைத்திருப்பவர்தான் என்றாகி விட்டது, கோகுலபுர நாடாரிடம்   ‘இத தாங்க, அது இருக்கா’ என்று பொதுவாகத்தான்  கேட்பான்.

இவன் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்ட ‘சைக்கிள் ராஜ்’  கடையும்  அதற்கடுத்து மீராவின் வீடும் தூரத்தில் தெரிந்தன. காற்றடிக்கும் சாக்கில் அங்கு வண்டியை நிறுத்தலாமா என்று யோசித்தவன், மனதினுள் சிரித்தவாறே அந்த எண்ணத்தையும், மீராவின் வீட்டையும் கடந்து சென்றான். விடுமுறை நாளொன்றின் விடிகாலையில் இந்தப் பக்கம் வர வேண்டிய வேலை இருக்க, வீட்டின் வெளியே இன்னும் தூக்கம் மிச்சமிருக்கிற கண்களுடன் வாடிய மலர்ச்சரத்தை  தலையிலிருந்து எடுத்தவாறு மீராவின் அம்மா கோலம் போடுவதைப் பார்த்தபடி இருந்ததும், அன்று அவள் அணிந்திருந்த மேலாடையின் கைப்பக்கம் சிறியதாக இருந்ததால், வெளிச்சம் படாத கையின் பகுதி அவளின் மாநிறத்திற்கு நேர்மாறாக வெண்மையாக இருந்ததும் நினைவிற்கு வர சைக்கிளுக்கு அழுத்தம் கொடுத்தான்.

உமாவின் வீடு மணியக்காரர் தெருவிற்கு மறுபுறம் இரண்டொரு தெருக்கள் தள்ளி இருந்ததாக கேள்வி. அந்த வீட்டையும் தாண்டி அவன் சென்றிருந்தாலும் அவளை அங்கு பார்த்ததில்லை. சுஜாதா வீடு எங்கு என்று இதுவரை அவன் யோசித்ததில்லை, யாரிடமாவது சந்தேகம் எழாதவாறு  கேட்க வேண்டும் என்று நினைத்தவாறே செட்டித் தெருவினுள் நுழைந்தான். மதிய நேர புழுக்கத்தை அதிகப்படுத்திக் கொண்டிருந்த மின்விசிறிகளின்கீழ் கடைக்காரர்கள் அமர்ந்திருந்தார்கள். சில கடைகளில் அப்போதும் கூட்டமிருந்தது. அரிசிக் கடையில் இறக்கப்பட்டுக் கொண்டிருந்த மூட்டைகளில் இருந்து தூசும், முடை நாற்றமும் முகத்தில் அறைந்தன. ஓடியே பார்த்திராத மணிக்கூண்டை கடந்தான். அந்த இடத்தில்  முன்பிருந்த  குதிரை வண்டி நிறுத்தத்திலிருந்து வண்டி வாடகைக்கு பிடித்து  அதில்  வைக்கோல் மணத்துடன்   பயணம் செய்திருக்கிறான்.

பரீட்சை இன்னும் முடியாததால் உள்ளே செல்ல முடியாமல் பள்ளிக்கு வெளியே பெரிய கூட்டம் நின்றிருந்தது. தன் வகுப்பு பசங்களுடன் சேர்ந்து, முழு கவனமும் இல்லாமல் வழக்கமான அரட்டையில் கலந்து கொண்டான். சைக்கிளில் வந்த பெண்கள் பள்ளியை நெருங்கியதும் பெடல் மிதிப்பதை நிறுத்தி,   வண்டியின் வேகத்தைக் குறைய விட்டு சட்டென இறங்கி, லாகவமாக காலை எடுத்துக் கொள்வதில்  உள்ள நளினத்தை எப்போதும் போல் ஓரக்கண்ணால் ரசித்தான்.   பரீட்சை எழுதியவர்கள்  வெளியேறியபின் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட,  வண்டி நிறுத்தும் இடத்தில்  எப்போதும் போல் நெருக்கடி. அதையொட்டி  இருந்த வகுப்புக்களில் மாணவர்கள் உள்ளே சென்று அமர  ஆரம்பித்திருந்தனர். அவன் படித்த ஒன்பதாம் வகுப்பறையை தாண்டும்போது  ஜன்னல் வழியே  வகுப்பினுள் சில நொடிகள்  பார்த்துக் கொண்டிருந்தவன், கூட்டத்தால் முன்னே உந்தப்பட்டான்.

பள்ளியாண்டு இறுதியில் மதிய நேரத்தில் வெளியே வர அனுமதி தருவதில்லை என்பதால் பிரதான வாயிலினுள் நுழைந்தவுடன் பள்ளி வெறிச்சோடி இருப்பது போல் முதற் கணம் தோன்றினாலும், அனைத்து வகுப்புகளிலிருந்தும் பேச்சொலி ஒன்றிணைந்து ஆண், பெண், மெல்லிய, கனத்த  குரல்  போன்ற தனித்தன்மைகளை இழந்து அடர்த்தியான ஒற்றை ரீங்காரமாக ஒலித்துக் கொண்டிருந்தது பள்ளி இயங்க ஆரம்பித்துவிட்டதை உறுதி செய்தது. வகுப்பு அடைந்தவுடன் அவ்வொலி இழைகளாக பிரிந்ததைப் போல அக்குரல்களில் சிலவற்றை அடையாளம் காண முடிந்தது. சுஜாதா  வந்து விட்டாள், ஓரக்கண்ணால் மீராவும் வந்திருப்பதை கவனித்தான். புத்தகப்பையை வைத்துவிட்டு தண்ணீர் குடிக்கச் சென்றவன், பள்ளியின் பின்புறமிருந்த மைதானத்தை நோக்கியபடி நின்றான்.  யாருமில்லாத வெட்டவெளியாக இருந்த மைதானம்  வெளிச்சம் நிறைந்திருந்தது. மைதானத்தின் ஓரத்தில்    சைக்கிளை நிறுத்திவிட்டுச் ஒளியை ஊடுருவி வருவது போல் பெண்கள் சிலர் நடந்து வருவதைக் கண்கள் கூச இடுக்கிக் கொண்டு பார்த்தான். முதல் வகுப்புக்கான மணி அடிக்க இவன் வகுப்புக்கு திரும்பிக் கொண்டிருக்கும்போது சில மாணவிகளையும் அவர்கள் சூடிக்கொண்டிருந்த மல்லியின் மணத்தையும் கடந்தான்.

பாடத்தில் எந்த கவனமும் இல்லை.  மின்விசிறி இல்லாத வகுப்பறையில் மதிய நேர புழுக்கத்தில் வியர்வை மணத்தையும், அதனுள் கலந்துள்ள மலர்களின் மணத்தையும் உணர்ந்தான். உடல் மணத்தில் மூச்சடைக்க மூழ்க வேண்டுமென்று தோன்றிய கையோடு பெண்களின் மணத்தை தனியாக உணரமுடிவது தன் கற்பனையோ என்ற சந்தேகமும் எழுந்தது. பெண்களின் மணத்தினூடே காலையில் முதல் முறையாக  முகர்ந்தற்கு நகர்ந்து அங்கிருந்து  தான் இன்னும் மாற்றிக்கொள்ளாத உள்ளாடைக்குச் சென்றான். அதை அருகில் உள்ளவர்கள்  உணர்வார்களோ என்று ஒரு கணம் யோசித்து அந்த அபத்த எண்ணத்தை  விலக்கினான். உடலும் மனமும் மீண்டும் தன்னை மீறிச் செல்வதை உணர்ந்தவனுக்கு  வகுப்பில் அம்மூவர் மட்டும் –மீரா, சுஜாதா, உமா- ஆடையில்லாமல் இருப்பதாக ஒரு நினைப்பெழுந்ததும் இன்று ஏன் என்றுமில்லாத அளவிற்கு  தறிகெட்டு அலைகிறோம் என்று  பயமேற்பட்டது. தவறு செய்கிறாய் என்று உள்ளுக்குள் சொல்லிக்கொண்டே மனக்கண்ணை மூடாமல் அதில் விழும் பிம்பங்களை துளித்துளியாக நினைவுக் கிடங்கில் சேகரித்தபடி இருந்தான். மூவரும் மாநிறம், அதிக பருமன் இல்லாத, கிட்டத்தட்ட ஒரே மாதிரியான உடல்வாகு. நிர்வாணமான உடலில் தலையில் மட்டும் ஏன் ரெட்டை ஜடையும் ரிப்பன்களும்? அவற்றையும் அவிழ்க்க நினைத்தவனுக்கு அது மட்டும் சாத்தியப்படவில்லை. எங்கோ  வகுப்பறையில் மாணவர்கள் கூட்டாக  ஒப்பிப்பதன் ஒலி அவனை  கலைக்க தலையை அழுத்திக்கொண்டான்.  ‘என்னடா கடி தாங்கலையா’ என்ற சுந்தரின் கேள்விக்கு தலையசைத்து வைத்தான்.

அடுத்து வந்த தமிழ் ஐயா பாடத்தை  இயந்திரம் போல் ஒப்பிக்க ஆரம்பித்தார். பத்தாம் வகுப்பு வரை முக்கியத்துவம் கொடுக்கப்படும் மொழிப்பாடங்கள், அதன்பின் மாணவர்களாலும் (வெளிப்படையாக), நிர்வாகத்தாலும் (சூசமாக), இரண்டாம் நிலைக்கு தள்ளப்படுவது இவன் பள்ளியில் இயல்பான ஒன்று.  மொழிபாட  ஆசிரியர்களும் அதை உணர்ந்திருந்ததால் அவர்களும் மாணவர்கள் மீது அதிகம் கவனம் செலுத்துவதில்லை என்பதால் மற்ற வகுப்புக்களை ஒப்பிடும்போது சற்றே இறுக்கம் குறைந்தவை அவை. தமிழர்களின் வீரம் பற்றி ஐயா சொல்லிக்கொண்டிருக்க, காளையை எல்லாம் என்னால் அடக்க முடியாது என்று நினைத்துக் கொண்டான்.  வேறேதேனும்  இக்கட்டில் இருந்து வேண்டுமானால் காப்பாற்றலாம். சைக்கிளில் இருந்து  சுஜாதா தடுமாறி தெருவில் கீழே விழ , மிக  வேகமாக பேருந்தொன்று அருகில் வந்துகொண்டிருக்க இவன்  சைக்கிளை மிதிக்கும் மிதியில் அது அந்தரத்தில் பறந்து அவளருகில் சென்று  அவளை கைதூக்கி காப்பாற்றுவதை பார்த்துக் கொண்டிருந்தான். தசரா சந்தையின்போது  உமாவை இரண்டு மூன்று மாணவர்கள் கிண்டல் செய்ய அவர்களை அடித்து விரட்டுகிறான். இவன்  பரிட்சையில் முதல் மதிப்பெண் பெற, மீரா கண்களில் ஆர்வம் மின்ன இவனைப் பார்க்கிறாள். மூவரில் யாரை தேர்வு செய்ய என்ற குழப்பத்துடன்  அவர்களுக்கு  என்ன வயது என்ற சந்தேகமும், ஓரிரு மாதங்கள் கூட அவர்கள் பெரியவர்களாக இருந்தால் என்ன செய்வது என்ற கவலையும் தோன்றின.

உண்மையில் இத்தனை வருடங்களில் அவர்களுக்கு இவன் மீது கொஞ்சமேனும் ஆர்வமிருக்கிறது என்பதற்கு ஏதேனும் சிறு குறிப்பையேனும் பார்த்திருக்கிறேனா என்று யோசித்தவனுக்கு ஆறாவதோ ஏழாவதோ படிக்கும்போது, பாடப் புத்தகம் எடுத்து வர மறந்த ஒரு நாளில், தன் புத்தகத்தை மீரா அளித்தது ஞாபகம் வந்தது ( ‘அன்று நாலைந்து மாணவர்கள் பாடப் புத்தகம் எடுத்து வராத நிலையில் தனக்கு அவள் இரவல் தந்ததில் ஏதேனும் சூட்சுமம் இருக்குமோ?’). தன் கற்பனைகளின் அபத்தம் குறித்து யோசித்தபடி பின் பெஞ்சின் மீது சாய, ‘தூங்காத நாயே’ என்ற குரல்  தலையை தட்டியது.

வீரத்தை விதைத்துவிட்டு தமிழ் ஐயா செல்ல, ஆங்கில ஆசிரியர் வந்தார்.   தமிழுக்காவது தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் இருக்க,  மேல்நிலை வகுப்புக்களுக்கு ஆங்கிலத்திற்கென்று தனி ஆசிரியர் கூட இல்லாத நிலையில்  இயற்பியல் எடுப்பவரே அதையும்  -‘Kennelனா   அது ஒரு விதமான கரடிக் குகை’ என்ற அளவில்- கற்றுக் கொடுத்தார்.

ஏதோ வகுப்பிலிருந்து  பி.டி.க்காக சென்று கொண்டிருந்தார்கள். சென்று கொண்டிருந்தவர்களில் மாணவிகள் டையை மட்டும் கழற்றி இருக்க, மாணவர்கள் சட்டையையும் கழற்றி இருந்தார்கள். சில வருடங்கள் முன் இத்தகைய ஒரு வகுப்பில் சட்டையின்றி பெண்கள் அருகில் நிற்க சில மாணவர்கள் தயங்கியதையும், விளையாட்டு ஆசிரியர் அதை கிண்டல் செய்ய, அதைப் பார்த்து பெண்கள் சிரித்ததும் நினைவுக்கு வந்தது. தயங்கிய கும்பலில் தான் இருக்கவில்லை என்றாலும், உள்ளுக்குள் இவனுக்கும் உதறல் தான். குறிப்பிடத்தக்க வகையில்  உறுதியான உடற்கட்டோ அதே நேரம்  மிகு  பருமனோ   இல்லாத உடல் இவனுடையது. அதுவே கூட அவனுக்கு சில நேரங்களில் தாழ்வு மனப்பான்மையை உருவாக்குவதாக இருந்தது,  குறிப்பாக விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களை பார்க்கும் போது.  கொஞ்சமே கொஞ்சம்  கனிவு கொள்ள ஆரம்பித்திருந்த சூரியன் அகன்று விரிந்திருந்த ஜன்னல்களின் வழியே வகுப்பறைக்குள் நிறைத்துக் கொண்டிருந்த பொன்னிற வெளிச்சத்தை பார்த்துக்கொண்டிருந்தவன், பாடப்புத்தகத்தை புரட்டி, அவன் தேடிய பாடத்தை எடுத்தான்.

“Shall I compare thee to a summer’s day?
Thou art more lovely and more temperate:
Rough winds do shake the darling buds of May,
And summer’s lease hath all too short a date: “

என்று தொடங்கும் ஷேக்ஸ்பியரின் சானட். இது கற்பிக்கப்பட்டபோது (ஆசிரியரால்  ஒப்பிக்கப்பட்ட என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்) மற்ற பாடங்களைப் போல இதையும் கடந்து சென்றவனுக்கு இப்போது இந்த வரிகள் -இப்போது  மார்ச் மாதம் தான் என்றாலும்- அணுக்கமாகத் தோன்றின.   ஜன்னலோரம் அமர்ந்திருந்த உமாவின்  முகம் முன் மாலை நேர ஒளியில் இன்னும் பொலிவு பெற்றிருந்தது போல் தோன்றியது. அவள்  கழுத்தோர வியர்வைத் துளிகள் இவன்  கற்பனைதான் என்று தெரிந்தாலும்  அவற்றை நாவால் வருடத் தோன்றியது.   பள்ளிக்கு வரும் போது துலக்கப்பட்டது போலிருந்த அவர்களிருவரின்  முகங்கள் சற்று  களை இழந்திருந்தாலும் முகத்திலிருந்த அந்தச் சோர்வும்கூட அழகாகத்தான் இருந்தது. மீராவின் கைகளில் மருதாணி பூசப்பட்டிருந்ததை அப்போததான் கவனித்தான். ஜன்னலருகில் அமர்ந்திருந்தால் அவர்களும் ஜொலித்திருப்பார்கள் தான். ஆசிரியர் கைகடிகாரத்தை  அவ்வப்போது  கவனிக்க ஆரம்பிக்க அதுவரை அமைதியாக இருந்த வகுப்பில் உடல்கள் அசையும் ஒலிகளும்  பரபரப்பும் எழுந்தன. ‘மீதி நாளைக்கு’ என்று சொல்லி ஆசிரியர் புத்தகத்தை மூடி வாசலை பார்த்தபடி நின்றிருக்க, புத்தகப் பைகளை ஒழுங்குப் படுத்தியவாறு, மெல்லிய குரலில் பேசும் சிறு சப்தங்கள் வகுப்பை நிறைத்தன.

சாவியைத் தரும்போது  ‘என்னடா ஒடம்புக்கு முடியலையா’ என்ற சுந்தரி அக்காவின் கேள்விக்கு ‘அதெல்லாம் இல்லக்கா, வெயில் ஜாஸ்தி’ என்று சொல்லி தன் போர்ஷனுக்குச் சென்றான். இனி  ஏழெட்டு மணி அளவில்  பெற்றோர் திரும்பும்வரை தனிமைதான். ‘எதாவது சாப்டறியாடா, மூஞ்சியே சரியில்லையே,’ என்று அக்கா வந்து கேட்க, ‘வேணாம்க்கா, ப்ரெட் ஸ்லைஸ் சாப்டுப்பேன்’, என்றவனுக்கு அவர்  சென்றவுடன், காலை முதல் தவறுக்கு மேல் தவறாக செய்துகொண்டிருக்கிறோம்  என்ற குற்றவுணர்வு மீண்டும் ஏற்பட்டது.  அந்த சஞ்சலத்துடனேயே ஒரு வழியாக   வீட்டுப் பாடங்களை முடிக்கும்போது  மணி ஆறு தாண்டி இருந்தது.

கண்களை ஓரிரு நிமிடங்கள்  மூடித் திறக்க ட்யூப்லைட்டின் ஒளி இன்னும் பிரகாசமாக கண்களை நிறைக்க மனமும் சற்று அமைதியாவது  போல் இருந்தது.  திரும்ப ஓரிரு நிமிடங்கள்  கண்களை மூடித் திறந்தான். சிறிது  நேர ஆசுவாசத்துக்குப் பின் மனம் மீண்டும் காலையிலிருந்தே பயணித்துக்கொண்டிருந்த பாதையில் நடைபோட  ஆரம்பிக்க,  இவன்   வெளியே  படிக்கட்டின் அருகே சென்றான். நாட்கள் நீளத்  தொடங்கியிருந்த,  இன்னும் சிறிது வெளிச்சம் மிச்சமிருக்கும் முன்னந்தி நேரம். பின்புற வீட்டில் புழக்கடை கதவு சாத்தப்பட்டிருக்க, அங்கு பொருத்தப்பட்டிருந்த பல்ப் அந்த இடத்திற்கு சற்றும் போதாத  மெல்லிய ஒளியை பரப்பிக்கொண்டிருந்தது. மல்லி, அரளிச் செடிகள் மற்றும் தென்னை வாழை மரங்களின் நிழல்கள் நீண்டிருந்தன. அவற்றையே பார்த்தபடி இவன் நின்றிருக்க, அவை  நெளிந்து பெண்ணுருக்கள்  கொண்டன.  பாடப் புத்தகமொன்றுடன் வந்த உமாவிடமிருந்து   சுஜாதா அதை பறித்து எறிய, மீரா  ஏதோ சொல்லிச் சிரித்தாள்.  இவன் காலையில் பார்த்தவளும் இப்போது அம்மூவருடன் சேர்ந்து கொண்டாள் (“இவளுக்கு எப்படி இவளுங்கள தெரியும்”). மல்லிச் செடியருகே அவர்களை அவள் அழைத்துச் செல்ல, அனைவரும் அதிலிருந்து பறித்த  பூக்கள் தாமாகவே   சரமாக, அவற்றை   தலையில் சூடிக் கொண்டார்கள். தான் சூடிய சரத்தை தோளின் முன்னே உமா போட்டுக்கொண்டாள். மெல்லிய காற்று வீசியதில்  பவழ மல்லியின் வாசனை எங்கும் பரவ , அதனூடே அவர்களின்  மணங்களையும் சேர்த்தே நுகர்ந்தான். மலர்களின், வியர்வையின், நகப்பூச்சின், மருதாணியின்,  கண் மையின், அணிந்திருக்கும் ஆடைகளின் மணமாக அவர்கள் தன்னை சூழ்த்து நிற்பதை உணர்ந்தவன்  அதன்  அழைப்பை ஏற்று சுவற்றைத் தாண்டி அந்த வீட்டினுள் குதித்தான்.

oOo

கரைதல்

கரைதல்

-காலத்துகள்-

பொதுத் தேர்வு நடந்துகொண்டிருப்பதால்   மதியம்தான் இவனுக்கு   பள்ளி.   அடுத்த வருடம் இதே நேரம் இவனும்  பன்னிரெண்டாம் வகுப்பு  தேர்வு எழுதிக்கொண்டிருப்பான்.  எட்டு  மணி அளவில்  அம்மாவும்  அப்பாவும் வேலைக்கு கிளம்ப, தினசரி படித்து முடித்து,  விவித் பாரதியின் காலை நேர தமிழ் ஒலிபரப்பு  சேவை  பத்து மணி அளவில் நிறைவுறும்போது தெரு அடங்கி விட்டது. இனி இரவில்தான்  மீண்டும் தேன்கிண்ணம் கேட்க முடியும்.

இயற்பியல் பாடத்தை புரட்டிப் பார்க்கலாம் என்று புத்தகத்தை எடுத்தவன் வெளியே போய்   படிக்கலாம் என்று மாடிப் படிக்கட்டில் அமர்ந்தான். பத்து பதினைந்து நிமிடங்கள் கழித்து சுற்று முற்றும் பார்த்தவன் கண்ணில் பின்புறமிருந்த வீட்டின் கிணற்றடியில் இவன் வயதையொத்த பெண் அமர்ந்தபடி   குளித்துக் கொண்டிருந்தது  பட்டது.  சட்டெனப் படிக்கட்டினுள் தலையை குனிந்து, பின் மீண்டும் எட்டிப் பார்த்தவனுக்கு அவர்கள் வீட்டு குளியலறையை உபயோகிக்க முடியாதபடி வெளிய குளிக்க ஏன் நேர்ந்தது   என்பதுதான் முதலில் தோன்றியது.  அவள் செயல்களில் எந்த அவசரமோ  யாரேனும் தன்னை கவனிக்கக்கூடும் என்ற பதற்றமோ இருந்தது போல் தெரியவில்லை.   அவ்வீட்டின் புழக்கடையில்  நடப்பட்டிருந்த  பவழ மல்லி, செவ்வரளிச்  செடிகள்,  வாழை , தென்னை மரங்கள் இயல்பான நிழல் படர்ந்த மறைவை  ஏற்படுத்தி  இருந்ததும், இந்த நேரத்தில் பொதுவாக  யாரும் வெளியே வருவதில்லை என்பதும்    அவளுக்கு  வெளியே குளிக்க தைரியம் அளித்திருக்க   வேண்டும். இவனேகூட இந்த இடத்தில் அமராமல்  சில  படிக்கட்டுக்கள் மேலோ கீழோ அமர்ந்திருந்தால்  அவளைப் பார்த்திருந்திருக்க  முடியாது.  தினமும் காலை ஏழு, ஏழரை மணி அளவில் அந்த வீட்டிலிருந்து ஒருவர் பல் துலக்கியபடி கர்ண கொடூரமான குரலில் வாய்  கொப்பளிக்கும்   சப்தங்கள்  எழுப்புவதையும்  அந்த தினசரி சடங்கை  எதிர்பார்த்திருந்து இவன் வீட்டில் கிண்டலடிப்பதும் மட்டுமே  இங்கு  குடி வந்த ஒரு வருடத்தில் பின் வீட்டை பற்றி அறிந்திருந்த அவனுக்கு  அங்கு  ஒரு பெண் இருப்பதே இப்போதுதான் தெரிந்தது.

இவன் பார்வையில் படும் போது குளித்து முடித்திருந்தவள்  மார் வரைச் சுற்றியிருந்த பாவாடையை கீழிறக்கியபடி எழுந்தாள்.  இறுதியாக  ஒரு கையால் தலையில் நீரை ஊற்றி , மற்றொரு கையால் முகத்தில் வழியும் நீரை நளினமாக  துடைத்துக்கொள்ள, நீர் அவள்  உடலில் வழுக்கிச் சென்றது. மரங்களில் இலைகளின் நடுவே ஊடுருவிய ஒளியில் அவளுடலில் நீர்த் துளிகள்  துல்லியமாக தெரிந்தன  ஒல்லியான உடல், முதிரா மார்பகங்கள், இன்னும் வடிவம் கொள்ளாத இடை  சராசரி நீளத்திலான கேசம் முதுகிலும், கன்னங்களிலும் ஒட்டியிருந்தது. (  பெரியவனாக ஆனபின்   இந்த சம்பவத்தை  அவன்  நினைவு கூரும்போதெல்லாம்  மரங்கள் சூழ்ந்த அமைதியான அந்த  இடமும், அவளின் உடலசைவுகளும்  அவளை   வனயட்சியுடன் தொடர்புபடுத்தச் செய்தன. இயல்பான சம்பவமொன்றை பால்ய கால பூதக்கண்ணாடியின்  மூலம் பார்ப்பதால் உருவாகும்  மிகையுணர்ச்சி அது என்று அவன் உணர்ந்தாலும் ,  அப்படி     உருவகிப்பதே  அன்று மட்டுமே பார்த்த, முகம் மறந்துப் போன அந்தப் பெண்ணின்  நினைவுக்கு  தான்   செய்யும் நியாயமாக  இருக்கும் என்றும் நினைத்தான).

அவள் உடலை துவட்டிக் கொண்டிருப்பதை கவனித்துக்கொண்டிருந்தவன்  வேறு யாரேனும் பார்க்கிறார்களா  என்று அருகிலிருந்த வீடுகளை பார்த்தான்.  யாரும் இருப்பது போல் தெரியவில்லை.   கூடப் படிக்கும்   பெண்களின்  காதோர,  கணுக்கால்  மென்  முடிகள், ஜடையை முன்னால்   தழைய விட்டு நீவியபடி பேசுவது ,  தோழியுடன் பேசத் திரும்பும் போதான கழுத்துச் சொடுக்கல்,   சைக்கிளில்  பயணிக்கும்போதும், இறங்கும்போதும் ஒரு நொடிக்கும் குறைவான நேரத்திற்கு  மேலேறும் அவர்களுடைய  சீருடை  ஸ்கர்ட்,  அவனை  இன்னும் சிறுவன் என்றே நினைத்து தங்களின்  ஆடை விலகல்கள் குறித்து அதிகம் அலட்டிக் கொள்ளாத அவனை விட   மூத்தப் பெண்கள்   எனச் சில வருடங்களாகவே அவனுள் பெண்ணுடல், அதன் அசைவுகள்  குறித்த குறுகுறுப்பும், அலைக்கழிப்பும் ஏற்பட்டிருந்தாலும் ஆடையின்றி ஒரு பெண்ணை இப்போது தான்  பார்க்கிறான். உள்ளே சென்று விடலாமா என்று யோசித்தவனுக்கு  இனி தன்னால் படிக்க முடியாது என்பது மட்டும் தெரிந்தது.

வீட்டு வாசலில் சைக்கிள் நிறுத்தப்பட்டு கேட் திறக்கப்படும் ஓசை கேட்டது.  “என்னடா படிக்கற” என்று கேட்டபடி சுந்தர் வர  “பிசிக்ஸ்டா” என்றபடி எழுந்து  சுந்தரை  உள்ளே அழைத்தான். ” படிக்கட்டிலேயே  கொஞ்ச நேரம் ஒக்காரலாமேடா ” என்ற சுந்தரிடம், “இல்லடா வெயில் அதிகமாறது, உள்ளயே போலாம்” என்றான். சுந்தர் வந்தது ஒரு விதத்தில் எரிச்சலாக இருந்தாலும், இக்கட்டிலிருந்து மீட்ட  உணர்வையும் தந்தது. உள்ளே சென்று சோபாவில் அமர்ந்தார்கள்.

“இன்னிக்கும் கம்ப்யூட்டர் ஸார் வர மாட்டார்டா, எங்களுக்கு  ஒரு பீரியட் ப்ரீ ” என்றான் சுந்தர்.

 “ஏன்டா நான் என் கம்ப்யூட்டர்லேந்து பேங்க்ல இருக்கற இன்போர்மேஷலாம்  பாக்க  முடியுமாடா?” எத்தனாவது முறை இதை அவன் கேட்கிறான் என்பது அவனுக்கும் சரி  சுந்தருக்கும் தெரியாது. மருத்துவம் படிக்க வேண்டுமென்றெல்லாம் பெரிய ஆசை இல்லாதிருந்தாலும், பெரும்பாலானோரைப் போல உயிரியல் க்ரூப்பையே இவன்  தேர்ந்தெடுத்திருந்தான். கம்ப்யூட்டர் பற்றியும் கூட பெரிய ஆர்வமில்லாவிட்டாலும், அது குறித்த அதீத கற்பனைகள் அவனுக்கு இருந்ததால் அந்த  க்ரூப்பை தேர்வு செய்திருந்த சுந்தரிடம் அது குறித்து கேட்டுக் கொண்டிருப்பான்.

“எல்லாம் முடியும்” என்று சுந்தரும் வழக்கம் போல் சலிக்காமல் பதில் சொன்னான்.

“அப்போ ஈஸியா பேங்க் பணத்த லவுட்டலாம்ல”

“அதாண்டா கம்ப்யூட்டர், ஆனா ஒழுங்கா கத்துக்கணும்”

“உங்க சிலபஸ் வேற ரொம்ப கம்மியா இருக்குடா , நூறு பக்கம் கூட இல்ல, பேசாம இந்த க்ரூப்ப எடுத்துருக்கலாம்”

“எல்லாம் ஏழெட்டு  ப்ரோக்ராம்தான்”

“என்னடா பேரு வெச்சிருக்காங்க  பேசிக், இன்னொன்னு என்ன  கோபால்னு நம்ம ஊர் பேரு மாதிரி”

“அத்த வுட்றா, இத்த கேளு  சூப்பர் மேட்டர், நம்ம மணி இருக்கான்ல அவன் சுஜாதாவ பாக்கறான்”.

“என்னடா சொல்ற”.

“ஆமாண்டா நேத்து கம்ப்யூட்டர் ஸார் வரலல, இவன் கம்ப்யூட்டர் ரூம்ல ஏதோ சீரிஸா எழுதிட்டிருந்தான், என்னடான்னு பாத்தா அவ பேரையும், இவன் பேரையும் வெச்சு ‘ப்ளேம்ஸ்’  ஆடிட்டிருக்கான்”

தன் பெயர் மற்றும்  பிடித்தமான பெண்ணின் பெயரை எழுதி   இரண்டிலும் உள்ள ஒரே அட்சரத்தை நீக்கிக் கொண்டே வந்து இறுதியில் மிஞ்சியிருப்பதை வைத்து அப்பெண்ணுடன் தனக்கு  எந்த வகையான உறவு ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளும்  – ஏழாவது, எட்டாவது படிக்கும் போது பிரபலமாக இருந்த – விளையாட்டை   இப்போதும் மணி ஆடிக்கொண்டிருக்கிறான் என்பது ஆச்சரியம் தான்.  (மீரா  மற்றும்  உமாவுடன்) சுஜாதா மேலும் இவனுக்கும்  – தான் அவர்களை பார்க்கிறோம் என்பது யாருக்கும் தெரியப்படுத்தாமல், பெண்கள் குறித்து அலட்டிக் கொள்ளாதவன்  என்ற பிம்பத்தை இவன்  காப்பாற்றி வந்திருக்கிறான்  – ஈர்ப்பு உண்டு  என்பதால் மணி மீது கொஞ்சம் எரிச்சலும் ஏற்பட்டது. சுஜாதாவுடன் ப்ளேம்ஸ் விளையாட்டில் தனக்கு  என்ன உறவு வந்தது என்று சட்டென்று நினைவுக்கு வரவில்லை, சுந்தர் சென்றவுடன் அதை ஆடிப்பார்க்க வேண்டும் என்று முடிவு செய்தான்.

“அவ பயாலஜி க்ரூப் ஆச்சேடா”

” மத்த பீரியட்லாம்  க்ளாஸ்ல ஒண்ணாதானேடா இருக்கோம்,  அவ ஒண்ணும்  இவனல்லாம்  எதுவும் கண்டுக்க மாட்டா’ என்று சுந்தர் சொன்னது கொஞ்சம் ஆறுதலாக இருந்தாலும்  ஒருவேளை சுந்தரும் அவளை பார்க்கிறானோ என்றும் தோன்றியது. சுந்தரென்றால் பரவாயில்லை விட்டுக்கொடுக்கலாம் என்று நினைத்துகொண்டான். உமா  மற்றும் மீரா  இருக்கிறார்களே.

“அவன்  ரேவதிய பாக்கறான்னு நெனச்சேன் ” என்றான் சுந்தர்.

ரேவதி குறித்து அவனுக்கு அபிப்ராயம்  எதுவும் இல்லையென்றாலும் ‘பெண்’ குறித்து அவனுக்கு அப்போதிருந்த மனநிலையில் அவளின்   உருவம்  முதல் முறையாக அவனை கிளர்த்தினாலும்,   அசௌகர்யமாகவும்  இருந்தது.  ‘பெண்கள்’ தவிர  வேறெதைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம்  என்று நினைத்தவன்  “ஒங்க வீட்ல கேபிள் போடறது என்னடா ஆச்சு” என்று சுந்தரிடம்  கேட்டான்.

” அடுத்த மாசத்துலேந்து கேபிள் போடறங்கடா,  மாசம் அம்பது ரூபா, சாங்காலம் ஆறரைலேந்து சன் டி.வி, ராஜ் டிவி  உண்டு, அப்பறம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல். “

“பரவாயில்ல அடுத்த  வருஷம் ஒனக்கு  பப்ளிக் எக்ஸாம்னாலும் போட்டுட்டாங்க”

“தினமும்  காத்தால ரெண்டு  தமிழ்  படங்க போடறாங்களாம், புதுப் படங்க கூட போடுவாங்களாம் அதனாலத்தான்னு  நெனக்கறேன். எப்படியோ  வீட்ல அப்பாம்மா  இருந்தாங்கன்னா நான் பாக்க சான்ஸ் கெடையாது, யாரும் இல்லேனா ஸ்போர்ட்ஸ் சேனல் பாக்கலாம் “

“இங்க கொஞ்சம் ட்யூன் பண்ணா அடுத்த  போர்ஷன்  கேபிள் ரொம்ப பொறி பொறியா தெரியுது, அதுக்கு பாக்காமையே  இருக்கலாம் கண் வலியாவது இல்லாம இருக்கும்”. அடுத்த போர்ஷன் என்றதுமே இன்று முதல் முறையாக பார்த்த  பின்  வீட்டுப் பெண் மீண்டும் நினைவுக்கு வந்து சங்கடப்படுத்த  கால்களை மடித்து உட்கார்ந்தவன், “கருத்தம்மா பாட்டு கேக்கலாம்டா ” என்றான்.

 பாடல்களைக் கேட்டுக்கொண்டே, ஆட ஆரம்பித்த  ஐந்து ஆறு  வருடங்களில் கவாஸ்கரின் இடத்தை  நிரப்பிய   சச்சின்   சமீபத்திய தொடரில் நிகழ்த்திய  சாகசங்கள், அடுத்த வருட பாடங்களை எப்போதிலிருந்து படிக்க ஆரம்பிக்க வேண்டும் போன்றவற்றை பேசித் தீர்த்து  பள்ளிக்கு தயாராக சுந்தர் கிளம்பிச் சென்றவுடன் மீண்டும் படிக்கட்டு அருகே சென்று  பின் வீட்டின் கிணற்றடியை பார்த்தான். யாருமில்லை. அவள்  குளித்ததற்கு தடயங்களாக  கிணற்றடியின் ஈரமும், சோப்பின் நுரை கலந்த   கழிவு நீரும் இருந்தன. அங்கேயே  பார்த்துக்கொண்டிருந்தால் அவள் உருவம்  மீண்டும் அங்கு தோன்றக் கூடும்  என்ற   எண்ணம் ஏற்பட்டது.  இத்தகைய நேரங்களில்  இடுப்புக்குக் கீழ் உருவாகும் இறுக்கம்  இப்போதும் ஏற்பட உடல் எடை கொண்டது போல் தோன்றியது. மெல்ல நடந்து வீட்டிற்குள்  சென்றான். இம்மாதிரியான மனநிலையில்  என்ன, எப்படிச் செய்தோம் என்றெல்லாம் பள்ளியில்   நண்பர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறான் என்றாலும்  அவர்கள் அந்த செயலுக்கு சூட்டிய  பெயரை உச்சரிப்பதுகூட அவனுக்கு தவறொன்றை செய்கிறோம் என்ற   கூச்சத்தை ஏற்படுத்தக் கூடியதாகவே இருந்தது. வீட்டில் அங்குமிங்கும் நடப்பது , மனதில் உள்ளதற்கு முற்றிலும் சம்பந்தமில்லாத வேறொன்றைக் குறித்து யோசிப்பது என   வழக்கமாக அவனுக்கு உதவும்  உத்திகள் இன்று உதவவில்லை.    கட்டிலில் சென்று அமர்ந்தவன்  தன்னிச்சையாக குப்புறப்படுத்து  தன் உடலின் மீது கட்டுப்பாட்டை  இழந்தான்.

கிணற்றடியில் பார்த்தவள்,  பள்ளி சீருடையில் சுஜாதா, மீரா , உமா , அடுத்த போர்ஷனில் வசிக்கும் சுந்தரி அக்கா  – அக்கா  எப்படி, ஏன் என்று குற்றவுணர்ச்சி கொள்ளக் கூட  அவகாசம் இல்லாமல்   –    என பலர் மனதில் உருக்கொண்டு கரைந்தார்கள்.   சில நிமிடங்கள் கழிந்தபின்  வாயிலிருந்து எச்சில் தலையணையை நனைத்திருக்க  தொடைகளின் இடுக்கில் கொழ கொழவென  ஒட்டிக்கொண்டிருந்தது. சற்றே மூச்சிரைக்க, உடலில் இன்னும் சிறு அதிர்வு  இருந்தது.  அனிச்சையாக  மூடியிருந்த கண்களை திறக்க முதலில் எதுவும் விழிகளில்  தங்கவில்லை.  கையை உள்ளே நுழைத்து பிசுபிசுப்பை தொட்டு முகர  இதுவரை அறிந்திராத மணம்.  திரும்பிப்  படுக்க முயன்றபோது  கால்கள்  தொளதொளவென வலுவிழந்து இருக்க  உடனடியாக எழ முடியாது என்று புரிந்தது.

அச்செயல்    அவன்   கற்பனை செய்திருந்தது  போல  அவனை  அருவருப்பானவனாக  உணரவைக்கவில்லை. மாறாக  இடுப்பின் இறுக்கம்  தளர்ந்திருக்க  மனதில்    முற்றிலும் புதிய பரவசமும், பூரண நிறைவும் பரவியிருந்தது.    விட்டத்தை பார்த்தபடி படுத்திருந்தவனுக்கு  ஆபத்தான எல்லையொன்றை  வெற்றிகரமாக கடந்து     பெரிய மனிதனானது போன்ற உணர்வு.    இப்போது   நடந்தது அவனுக்கே மட்டும் உரியதான அந்தரங்கமான அனுபவமாகவும் அதே நேரம்  இதை குறித்து  யாரிடமாவது  பகிர்ந்து கொள்ள வேண்டியதாகவும்  தோன்றியது. மதியம் பள்ளியில்   சுந்தரிடம் இதை பற்றி  சொல்லலாமா, அவன் என்ன நினைப்பான்  என்று யோசித்துக்கொண்டிருந்தான். பத்து பதினைந்து நிமிடங்கள் கழித்து எழுந்து முகம் கழுவி  பள்ளிக்குச் செல்ல தயாராக சீருடையை அணியும் போது உள்ளாடையில்  கெட்டி தட்டி படிந்திருந்த கறையை  பார்த்தவனுக்கு  அதுவரை இருந்த உற்சாகமனைத்தும் வடிந்து  வீட்டிற்கு தெரியாமல் அதை எப்படி அகற்றுவது என்ற கவலை ஏற்பட்டது.

மடத்து வீடு

ராம் செந்தில்

ஆற்றின் கரையில் இருந்தது அந்த வீடு. ஆற்றங்கரையில் நிறைய வீடுகள் இருந்திருக்கவேண்டும். ஆனால் இப்போதென்னவோ அங்கொன்றும், இங்கொன்றுமாய் சில வீடுகளே இருந்தன.  ஒரு காலத்தில் இந்த வீடு நான்கு கட்டுகளுடன், பிரமாண்டமான மதில்களுடன் இருந்திருக்கவேண்டும். இப்போது ஏறக்குறைய வீட்டின் பின்பக்கம் முழுவதும் இடிந்து கைவிடப்பட்டிருந்தது. முன்பக்கமும் பல இடங்களில் விரிசல் கண்டு அதில் அத்திச்செடி முளைத்திருந்தது. எப்போதோ பூசிய மஞ்சள் சுண்ணாம்பு முழுவதும் உதிர்ந்திருந்தது. விரிசல்களில் திட்டுதிட்டாக பாசி படர்ந்து, அந்த பாசி தந்த கருமை நிறம் மட்டுமே மிச்சமிருந்தது. வீட்டைத் தனியாக காட்டியது அந்த வீட்டின் மேல் இருந்த இரண்டு பெண் பொம்மைகள் மட்டுமே. புடவை அணிந்த தோழிகள் போலிருந்த அந்த பொம்மைகளை ஏன் அந்த இடத்தில் வைத்தார்கள் என தெரியவில்லை. ஒரு பொம்மையின் கை உடைந்திருந்தது. வாடாமல்லி வண்ணத்தில் அந்த பெண் அணிந்த ரவிக்கை மட்டும் இன்னமும் வண்ணத்தை தக்கவைத்திருந்தது.

நாயக்க மன்னர்களிடம் பணிபுரிந்த செட்டியார்களுக்கு இந்த ஊர் முழுவதும் நிலபுலன்கள் இருந்தன. அவர்களில் ஒருவருக்கு தமக்குப் பிறகும் தர்மங்கள் தொடர்ந்து நிகழவேண்டும் என்று கவலை இருந்தது. தனக்கிருந்த சொத்துக்களில் ஒரு பகுதியை கொண்டு அறக்கட்டளை நிறுவி, தொடர்ந்து வழிப்போக்கர்களுக்கு உணவும் உறைவிடமும் அளித்து, இன்ன பிற தர்மங்களையும் பரிபாலித்திட உயிலெழுதி மறைந்தார். அவருக்கு பிறகு வந்த வாரிசுகள் சில தலைமுறை வரை அதை சரியாக செய்தனர். பிறகு வந்தவர்கள் தமது தொழில்களுக்காக வேறு இடங்களுக்கு இடம்பெயர, எல்லாம் நின்றது. ஊரில் இருந்தவர்கள் குத்தகை என்ற பெயரில் ஆக்கிரமித்த நிலங்கள் போக மிச்சமானது இந்த வீடு ஒன்றுதான். இந்த வீடும் ஏதோ ஒரு தர்மத்துக்காக எழுதப்பட்ட ஒன்றுதான் என்பதால் அதை நிர்வகிப்பதில் எந்த நாட்டமும் இன்றி இடியவிட்டிருந்தனர். பிறகு தங்களிடம் காரியதரிசியாக இருந்து குத்தகை வசூலித்து தந்த சீனிவாசராவை அவரது குடும்ப சூழல் கருதி வாடகையில்லாமல் அந்த வீட்டில் தங்கிக்கொள்ள அனுமதித்திருந்தனர்.

ஆஸ்துமாவால் அவதிப்பட்டுவந்த சீனிவாசராவின் மனைவி ஒரு மார்கழிமாதக் குளிரில் இறந்துவிட்டதாகவும், சீனிவாசராவும் அவரது மூன்று பெண்களும் மட்டுமே அந்த வீட்டில் இருக்கிறார்கள் என்றும் அருண் சொல்லியிருந்தான். அந்தப் பெண்களையும் ஓரிருமுறை நான் பார்த்திருக்கிறேன். அருண் அவ்வபோது ரேஷன் பொருட்கள் வாங்கிதருவது, மின்சாரகட்டணம் செலுத்துவது போன்ற வேலைகளை அவர்களுக்குச் செய்து தருவான். அருணுக்கு ஊரின் எல்லா தெருக்களிலும் இப்படியான சிநேகம் இருந்தது.

கல்லூரி முடிந்து சாயங்காலம் பேருந்திலிருந்து இறங்கியபோது, பெட்டிகடையிலிருந்து அருண் பார்த்துவிட்டு கூப்பிட்டான். கூடவே ஒருவன், ஜீன்ஸ் பேண்ட், காட்டன் சட்டையில் நின்றான். மெலிதாக தாடிவிட்டிருந்தான். கையில் ஒரு இரும்பு காப்பு. விரலிடுக்கில் சிகரெட் புகைந்தது. அவனை காட்டி, இது என்னோட ஃபிரெண்ட். என்றான் அருண்.  மடத்து வீட்டுக்கு போறோம், வர்றியா? என்று கேட்டான். உடனே அந்த பெண்கள் ஞாபகத்துக்கு வந்தார்கள். புத்தகங்களை வீட்டில் வீசிவிட்டு அவர்களோடு நடந்தேன்.

ஆற்று பாலத்தை கடந்து மடத்து வீட்டை நெருங்கினோம். மாலைநேர காற்று சிலுசிலுவென்று வீசியது. வீட்டு வாசலில் உயரமான திண்ணை இருந்தது. அதிலிருந்து பார்த்தால் எதிரே ஆறு தெரிந்தது.. வீட்டின் கதவு கொஞ்சமாக மூடப்பட்டு இடைவெளி தெரிந்தது. நாங்கள் வீட்டின் கதவை நெருங்கியவுடனே ஒரு பெண் வெளியே தலையை நீட்டி, அருணை பார்த்து சிநேகமாக சிரித்து வா அருண் என்றாள். உள்ளே நுழைந்தோம். உள்ளே அழைத்த பெண் வெளிர்நீல கலரில் தாவணியும்,கறுப்பு பூக்கள் போட்ட பாவாடையும் அணிந்திருந்தாள்.

உட்காருங்க, எங்களை பார்த்து மையமாக பார்த்து சிரித்தபடி ஸ்டூலை காட்டினாள். தையல் மெஷின் எதிரிலிருந்த மற்றொரு ஸ்டூலையும் இழுத்து போட்டாள். தையல் மெஷினில் பாதியில் விட்டிருந்த ரவிக்கையை வாரி அறைக்கு கொண்டு சென்றாள். அருண் ஜன்னல் கட்டையிலேயே உட்கார்ந்தான். மற்றொரு ஜன்னல் கட்டையிலிருந்த, ரேடியோ எஃப்.எம்மில் “வசீகரா என் நெஞ்சினிக்க“ மெலிதாக ஒலித்துகொண்டிருந்தது.

வெளியே தெரிந்த வீட்டின் அளவுக்கும் உள்ளே இருந்த சூழலுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. உள்ளே நுழைந்தவுடன் கூடம்,. கூடத்திலிருந்த அனைத்து உத்திரங்களையுமே கரையான் அரித்திருந்தது. அவை இரும்பு பைப்புகளாலும், மூங்கில் மரங்களாலும் முட்டுகொடுக்கப்பட்டு கூரையை தாங்கியிருந்தது. கூடத்தின் ஒரு மூலையில் அந்த அறை இருந்தது. அறை வாசலில் பூக்கள் எம்பிராயடர் செய்யப்பட்ட ஒரு பழைய திரைச்சீலை தொங்கியது. சமையல் கூடம், இரண்டாம் கட்டில் இருந்திருக்கவேண்டும். இரண்டாம் கட்டே முழுமையாக இடிந்துவிட்டிருந்ததால், கூடத்தில் இருந்து பிரிந்த நடையிலேயே சமையலுக்காக ஒரு பழைய பலகை போடப்பட்டு பாத்திரங்கள் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்தன.

இவன் என்னோட பிரெண்ட் ராஜேஷ். தஞ்சாவூரிலே படிக்கிறான். இது பிரசாத் நம்ம தெரு என்றான் அருண், என்னை பார்த்து. அவள் மையமாக பார்த்து புன்னகைத்தாள்.

எப்படி இருக்கே ராஜி, எங்கே ஜெயா இன்னும் வரலையா?

அவ, எங்கே இப்போ வருவா? டாக்டர் அவ்வளோ சீக்கிரம் விடுவாரா? எப்படியும் எட்டரை ஆகிடும் என்றாள்.

பெரிய மேடம் ஜெயா, டாக்டருக்கிட்டே வேலைபாக்குறாங்க..எதுனா ராங்க் காமிச்சா, ஊசி போட்டுடுவாங்க என்றான் அருண்.

ஏன் மாப்ளே, நானும்தான் ஊசி போடுவேன். அதுவும் வலிக்காம..  என்றபடி அருணை பார்த்து கண்ணடித்தான் ராஜேஷ்.

எனக்கு திகீரென்றது. ராஜியை பார்த்தேன். அவள் அந்த பேச்சை கவனிக்காததுபோல், புன்னகைத்தாள்..

உங்க வீடு போஸ்ட் ஆபிஸ் பக்கத்துலேதானே இருக்கு? என்றாள் என்னை பார்த்து.

நான் அவசரமாக இல்லையென்று தலையாட்டினேன். பிறகு கேட்டது உரைத்து ஆமாம் என்றேன். மெலிதாக சிரித்தாள் ராஜி. மாநிறம். முடியை அழகாக பின்னி, முன்பக்கம் சில முடிகளை எடுத்துவிட்டிருந்தாள்.. கைகளில் கண்ணாடி வளையல்கள். உதட்டோர மச்சம் கவர்ச்சியாக இருந்தது. எப்படியும் இருபத்தி ஐந்து வயதை தாண்டியிருப்பாள் என்று தோன்றியது. சிரித்தபோது அழகாகவே இருந்தாள். பாதி படித்த லட்சுமியின் நாவல் ஒன்று தரையில், பக்கம் மறந்துவிடாமல் இருக்க குப்புறகவிழ்த்து வைக்கப்பட்டிருந்தது.

கொல்லைபக்கம் தண்ணீர் ஊற்றும் சத்தம் கேட்டது. நான் அந்தப்பக்கம் பார்ப்பதை ராஜி, கவனித்தாள். என் சிஸ்டர் வித்யா துணி துவைக்கிறா.

சாந்தி தியேட்டர்லே இதுநம்மஆளு படம் வந்துருக்கு. நயன்தாராவை இன்னைக்கு பார்த்தே ஆகணும்ன்னு அடம்பிடிச்சான் ராஜேஷ். நாந்தான், இங்கே வந்து என்னோட பிரண்ட்ஸை பாருன்னு கூப்பிட்டுவந்துட்டேன் என்றான் அருண்.

ஓ, நயன்ன்னா ரொம்ப பிடிக்குமோ?

முன்னாடியெல்லாம் இல்லைங்க.. பில்லா படம் பார்த்தப்பதான் எனக்கு நயனோட அந்த முழு தெற..மையும் நல்லா தெரிஞ்சுது.. தெறமை என்ற வார்த்தைக்கு தேவையில்லாமல் அழுத்தம் கொடுத்தான் ராஜேஷ்.

நீ அந்த நீச்சல் தெறமையைதானே சொல்றே மாப்ளே என்றான் அருண்.

கன்னங்கள் சிவப்பேறி லேசாக வெட்கத்துடன் சிரித்தாள் ராஜி. எல்லா பேச்சையும், தான் நினைக்கும் முனைக்கே இழுத்து செல்கிறான் ராஜேஷ். முன்பின் அறிமுகமில்லாத பெண்ணிடம் இப்படி கொஞ்சமும் லஜ்ஜையின்றி பேசுவது நிச்சயம் இவனுக்கு முதல்முறையாக இருக்காது. அருணின் தோழி என்றவுடன் இப்படிதான் இருக்கும் என்று முடிவெடுத்துவிட்டானா? சட்டென்று அவள் கோபமானால், அசிங்கமாகிவிடுமே. இவனுடன் வந்திருக்ககூடாதோ. ஆனால் இங்கு வரும்போதே நானும் இதை உள்ளுர எதிர்பார்த்திருந்தேனோ..

கொல்லைகதவை திறந்தபடி வித்யா வந்தாள். மஞ்சள் நிறத்தில் சிவப்பு பூக்கள் போட்ட சுடிதாரின் டாப்ஸ் மட்டும் அணிந்து உள்ளே வந்தவள், எங்களை பார்த்தவுடன் அறைக்குள் சென்று பேண்ட் அணிந்து வந்தாள். அழகான பெரிய கண்களே முதலில் ஈர்த்தது.  யாரும் கேட்காமலே, ஒரு சொம்பில் தண்ணீர் கொண்டு வந்து கூடத்தில் நடுநாயகமாக உட்கார்ந்திருந்த ராஜேஷிடம் முதலில் நீட்டினாள்.

ராஜேஷ் வாங்கி ஒரு வாய் குடித்துவிட்டு கண்ணை சிமிட்டியபடி, என்ன, தண்ணி சுடுது? என்றான்.

ம்ம்ம்.. தண்ணி சுடலை. நீங்கதான் சூடா இருப்பீங்க.. புத்திசாலிதனமாக பேசுவதாக நினைத்துகொண்டு இவனிடம் வாய் கொடுக்கிறாளே அசடு..

அது என்னவோ உண்மைதான்.. கைகளை உயர்த்தி நெட்டி முறித்தான்.

நான் பேச்சை மாற்றும் பொருட்டு, நீங்க படிக்கிறீங்களா என்றேன்.

சின்னமேடம் கரஸ்லேயே பிகாம் படிக்கிறாங்க.. டியூசன் எடுக்குறாங்க.. நீயும் வேணா ஜாயின் பண்ணிக்கோ

நான் புன்னகைத்தேன். அப்போது திடீரென்று கூடத்து அறையில் இருந்து மெலிதாக இருமல் சத்தம் கேட்டது. கொஞ்சம் கொஞ்சமாக சத்தம் அதிகரித்தது. எல்லோரும் அறையை பார்ப்பதை பார்த்த ராஜி, அப்பாதான், இரண்டு நாளா இருமல் ஓயலை. என்றாள்

இவ்வளவு நேரம் அவர் உள்ளேதான் இருந்தாரா? அவரை வைத்துகொண்டுதான் இப்படியெல்லாம் பேசினோமா, என்னவோ போல் இருந்தது. ராஜேஷின் முகமும் மாறியது போல் தெரிந்தது.

இருமலுக்கிடையே அவர் அழைத்தார். ராஜி உள்ளே போனாள். கதவுவிலகி, அவர் ஈசிசேரில் படுத்திருப்பது தெரிந்தது. வாய் குழறலாக ஏதோ பேசினார். அருணும் உள்ளே போனான்..இடது கையை நெஞ்சருகே வைத்திருந்த விதத்தில் வாதம் என்று தெரிந்தது. வலது கையை குடிப்பது போல் காண்பித்து லோலா.. லோ..லா என்றார்.

இது என்ன புதுப்பழக்கம்? சாயங்காலமானா சோடா வேணுங்குறது? உடம்புக்கு நல்லதா இது? பேசாம இருங்க.

சோடாதானே ராஜி, நான் வாங்கிட்டுவரட்டா?

இல்லை, வேணாம் அருண்

டெய்லி அஞ்சு ரூபா சோடா குடிக்க வேணும்னா எங்கே போறது ? வெந்நீர் போட்டுருக்கேன். பேசாம இருக்க சொல்லு ராஜி, என்றாள் வித்யா..

நீ பேசாம இரு வித்யா. நான் வாங்கிட்டுவாரேன்..பதிலை எதிர்பாராமல் அருண் வெளியே போனான்.

சோடாவை டம்ளரில் ஊற்றி கொஞ்சமாக கொடுத்தாள் ராஜி. குடித்தார். பிறகு மெதுவாக நாற்காலியை காட்டி “வாச போ “ என்றார். இல்லை..இங்கேயே இருங்கப்பா. அப்புறம் போய்க்கலாம்.

இப்போது குரலில் கடுமை தெரிந்தது. கையை நீட்டி நீட்டி “வாச போ” என்றார். கண்களை பெரிதாக்கி முறைத்தார். அருண், “வாசலுக்குதானே போகணுங்கறாரு?.. நாற்காலியை தூக்கி அங்கே போட்டுட்டு, அப்புறம் மெதுவா அழைச்சுட்டு போய் உட்காரவைச்சுடலாம்“ என்றான்.

இல்லை வேணாம் அருண்..நீ உட்காரு

“வாச போ” கத்தியபடி ஒரு கையில் இருந்த டம்ளரை தூக்கி எறிந்தார். அதில் மிச்சமிருந்த சோடா அறைக்கு வெளியே தெறித்தது. டம்ளர் சுவற்றில் ணங்கென்று மோதி சுழன்று விழுந்தது.

இப்போ எதுக்கு வாசலுக்கு போவணும்ன்னு துடிக்கிறாரு? செஞ்சதெல்லாம் பத்தாதா? ஆவேசமாக கேட்டாள் வித்யா..

வித்யா நீ தயவு செஞ்சு பேசாம இரு.. அதட்டினாள் ராஜி..

எப்படி கேவலமா வந்து நின்னு கேட்டா அந்த பொம்பளை… நாக்கை புடுங்கிட்டு சாகலாம்ன்னு இருந்துச்சு.. இந்த வயசுலே திண்ணைலே உட்கார்ந்துட்டு பொம்பளைங்க குளிக்கிறதை கண்ணுகொட்டாம பாக்குறாரே.. வீட்டுலே இருக்குற நீங்களும் பொம்பளைங்கதானேன்னு கேட்டாளே போனவாரம்.. குரல் உடைந்து கதறினாள் வித்யா.. இதெல்லாம் எங்களுக்கு தேவையா? இன்னும் யாருகிட்டெல்லாம் நாங்க கேவலபடணும்.. எப்படி கஷ்டப்பட்டு பாத்துக்குறோம்.. மேலே பேச முடியாமல் விம்மினாள்.

மெதுவாக வெளியே வந்து நடந்தோம்.. கொஞ்ச தூரம் யாரும் பேசவில்லை. சற்றுதூரம் போனவுடன் பெட்டிகடையில் சிகரெட் வாங்கினான் அருண். பற்றவைத்தவுடன், சரி விடு மாப்ளே.. படத்துக்கே போயிருக்கலாம்.. நைட் என்ன பிளான்? என்றான் அருண். எதுவும் பேசாமல், புகையை ஊதியபடி, தூரத்தில் தெரு விளக்கின் வெளிச்சத்தில் மங்கலாக தெரிந்த அந்த வீட்டின் பொம்மைகளை வெறித்தான் ராஜேஷ்.

பாலை

காலத்துகள்

இரவுணவை தயார் செய்து கொண்டிருக்கும்போது, என்ன நேரம் என்று கவனித்தவளுக்கு வழக்கமான சஞ்சலம் உண்டாக, சமையலைத் தொடர முடியாமல் சமையலறை மேடை மீது கைகளை வைத்து கொண்டு நின்றிருந்தாள். “என்னமா ஆச்சு?” என்று தண்ணீர் எடுக்க வந்த ரோஹித் கேட்க, அப்போதைக்கு ஏதோ சொல்லி சமாளித்தாலும் அவன் வீட்டின் சூழலை கவனித்து வருகிறான் என்ற சந்தேகம் அவளுக்கு இல்லாமல் இல்லை. அலைபேசியில் ஆனந்தியின் அழைப்பு வரவும், விடுபட்ட உணர்வோடு அவளுடன் பேசுவதற்காக படுக்கையறைக்குச் சென்றாள்.

தன் தெருவிற்குள் நுழைந்தவனின் கண்பார்வையில் அவன் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பு தென்பட்டதும் நடையின் வேகம் அனிச்சையாக குறைய, எந்த அவசரமும் இன்றி அபார்ட்மெண்ட்டை அடைந்தான். தரைதளத்தில் நின்றிருந்த ராகவன், “ஸார், இந்த வீக்எண்டு வாட்டர் டாங்க் க்ளீன் பண்ணப் போறோம், ஆளுக்கு ஐநூறு ரூபாய் ஆகும், உங்க மிசஸ் கிட்ட சொல்லி இருக்கேன்” என்றார். “பண்ணிட்லாம் சார்,” என்றவன், சுத்தம் செய்யப்போகிறவர்கள் பற்றி, அங்கு நடப்பட்டிருந்த செடிகள் பற்றி, தெருவில் புதிதாக வைக்கப்பட்டிருந்த அரசாங்க குப்பைத் தொட்டியைப் பற்றி ராகவனிடம்- அவர் சொல்லும் பதில்களில் அதிக கவனம் செலுத்தாமல்- விசாரித்தபடி கொஞ்சம் நேரம் செலவிட்டான். பின்னர் லிப்டைத் தவிர்த்து, மெதுவாக நடந்தே மூன்றாவது தளத்தில் உள்ள தன் வீட்டிற்கு வந்து படுக்கையறைக்குள் நுழைந்தவன் அங்கே அவள் ஜன்னலருகே அலைபேசியில் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்து வெளியே செல்லலாமா என ஒரு கணம் யோசித்து, தன் அலைபேசியில் ஏதோ நோண்டுவது போல் படுக்கையில் அமர்ந்தான். ஓரிரு நிமிடங்களுக்குப்பின் அவன் இருப்பை உணர்ந்தவள் அறையை விட்டு வெளியேறவும், உடைகளைக் களைந்து குளித்து முடித்தவன் ஜன்னலருகே அமர்ந்திருக்கும்போது அவள் மீண்டும் உள்ளே வந்தாள்.

‘கிச்சன்ல குழா லீக்….’

‘ப்ளம்பர் நம்பர் இருக்…’

‘அவன்ட்ட பேசி, வந்து பாத்துட்டான். நாளைக்கு மாத்தரானாம், ஆயிரம் ருபாய் ஆகும்’

”ம்ம்ஹம்…’

‘வாட்டர் டாங்க்..’

‘வரும்போது ராகவன் சார் சொன்னார்’

அவள் அறையை விட்டு வெளியேறத் திரும்பியவுடன், ‘நாளைக்கு லேட்டா வருவேன்’

‘… நைட் சாப்பாடு?’

‘கலீக் ரிஷப்ஷன், நேத்து சொன்னேனே’

‘… ‘

எதுவும் சொல்லாமல் வெளியேறினாள்.

‘சாப்ட வாப்பா’ என ரோஹித் கூப்பிடும்போதுதான் வெளியே வந்தான். பாத்திரங்கள் அவ்வப்போது நகர்த்தப்படுவதைத் தவிர வேறெந்த ஓசையும் இல்லாத இரவுணவின் அமைதியை தாள முடியாமல் தலையை தூக்க, அவள் தன்னை பார்த்தபடியே சாப்பிடுகிறாள் என முதலில் நினைத்தவன், அவள் தன்னை கவனிக்காமல் எதையோ யோசித்தபடி உண்கிறாள் என்பதைப் பிறகுதான் உணர்ந்தான்.

“ஸ்கூல்ல பி.டி.ஏ மீட்டிங் இந்த வாரம் இருக்கு”

பதில் சொல்லாமல் இருந்தவன், அவள் எதுவும் பேசாமல் இருக்கவே அவளை கவனித்தான். மீண்டும் தலையை குனிந்தபடி சாப்பிட்டுக்கொண்டிருந்தாள். ரோஹித் இவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

“நானும் வரணுமா?”

“எப்பவும் ஒருத்தரே வரக்கூடாதுன்னு ஸ்கூல்ல சொன்னாங்கன்னு சொன்னேனேப்பா”

“ம்ம், என்னிக்கு மீட்டிங்”

“சனிக்கிழமை, உங்களுக்கு எஸ்.எம்.எஸ் கூட அனுப்பி இருந்தாங்களே”

“வரேன்”

ரோஹித் ஏதோ பேசியபடி இருக்க, இருவரும் எதையோ யோசித்தபடி அவனுக்கு பதிலளித்தபடியும், கண்கள் சந்திக்கும் அசந்தர்ப்பமான கணங்களில் உடனே பார்வையை விலக்கியபடியும் சாப்பிட்டு முடித்தனர். இரவுணவு ஏற்படுத்திய கட்டாய அண்மையின் முடிவு இருவருக்குமே ஆசுவாசமாக இருந்தது.

படுக்கையறைக்குச் சென்று விளக்கை அணைத்தவன், மின்னொளியின் வெப்பம் இல்லாமலாகும் முதற்கணம் தரும் மெல்லிய குளிர்ச்சியை உணர்ந்தான். அறையின் இருளில் அலைபேசியில் நீல நிற ஒளிப்புள்ளி சுடர் போல் மினுங்கியது. திருவிழாக் காலம் ஆரம்பித்து விட்டதால், வாடிக்கையாளர்களுக்கு அனுப்ப வேண்டிய ஆடைகளுக்கான விற்பாணைகள் பல மடங்கு அதிகரித்திருந்தன, அதற்கேற்றார் போல் சரக்கு அனுப்புவதில் குழப்பங்களும் தவிர்க்க முடியாத தாமதங்களும். அது குறித்ததாக இருக்கலாம் என்று எண்ணியவன் எதுவாக இருந்தாலும் நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து, வந்திருந்தது அழைப்பா அல்லது குறுஞ்செய்தியா என்று எதுவும் பார்க்காமல் அணைத்தான். சில கணங்களின் முழு இருட்டிற்குப் பின் தெரு விளக்குக்களின் ஒளியினால் அறை சற்றே துலங்கத் தொடங்கியது.

தொலை தூரத்தில் கலங்கரை விளக்கம் வழக்கம் போல் அதே சீரான இடைவெளியில் சுற்றி அவன் வீடிருக்கும் திசை பக்கம் திரும்பும்போது அறையின் சுவர்களில் அலை போல் வெளிச்சம் நெளிந்து மறைந்தது. இன்னொரு புறமுள்ள ஜன்னலில் வழியே தெருவில் செல்லும் வாகனங்களின் ஒளிக்கற்றைகள் அவ்வப்போது ஊடுருவின. அறையில் இருந்த மங்கலான ஒளியில் கைகளினால் சுவற்றில் நரி, மான், பாம்பு என வழக்கமான நிழலுரு வடிவங்களை- அவை ஒரே போல் தோற்றமளிக்கின்றன என்ற சந்தேகத்தோடு- உருவாக்கிக் கொண்டிருந்தான்.

மாடிக்குச் சென்று ஒரு சுற்று சுற்றி வந்தாள். அருகில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் அடுக்ககத்தின் காப்பாளர் பண்பலை கேட்டுக் கொண்டிருப்பது சன்னமாக ஒலித்தது. பிரதான சாலையில் இருந்த ஆடை, வீட்டுப் பொருள் விற்பனை கடைகள் ஒளிர்ந்து கொண்டிருப்பது இங்கிருந்தே தெரிந்தது. மேற்கு திசையில் தான் வழக்கமாக அமரும் மேடையில் அமர்ந்து தெருவை கவனிக்க ஆரம்பித்தாள். சதுர, செவ்வக வடிவிலான ஜன்னல்களின் வழியே தெரிந்த அறைகளுக்குள் ததும்பி இருந்த வெளிச்சத்தில் உருவங்கள் மிதப்பது போல் தோன்றின. இரண்டு வீடுகள் தள்ளி மாடியில் சிறிய போர்ஷனொன்றில் குடியிருப்பவர் வராண்டாவில் அமர்ந்தபடி அன்றைய தினசரியை எப்பவும் போல் படித்துக் கொண்டிருந்தார். இன்னும் சிறிது நேரத்தில் அவர் மனைவியும் வந்தமர, இருவரும் பேச ஆரம்பிப்பார்கள். சில நேரங்களில் அவர்களுடன் சேர்ந்து கொள்ளும் அவர்களின் கல்லூரி செல்லும் மகள் சில காலமாக அவள் கண்ணில் படவில்லை என்பது நினைவுக்கு வர, வேலையில் சேர்ந்திருப்பாள் என்று நினைத்தவளுக்கு தானும் மீண்டும் வேலைக்குச் சென்றால் என்ன என்று சமீப காலமாக தோன்றும் எண்ணம் மீண்டும் ஏற்பட்டது. அது குறித்து யோசித்தவாறே, பள்ளியில் இருந்து மகளை- பொதுத் தேர்வுக்கான சிறப்பு வகுப்புக்கள் முடிந்து நேரங்கழித்து வருகிறாள் போல என இவள் யூகித்திருந்தாள்- அழைத்து வரும் பெண் எப்பவும் போல் தெருவைக் கடந்து செல்வதை கவனித்தாள்.

தெரு வழக்கம் போல் இயங்கிக்கொண்டிருப்பது ஆசுவாசமாக இருந்தது. குளிர் அதிகமாகவே, கீழே இறங்கியவள் ரோஹித்தை படுக்கப் போகச் சொன்னாள். அறைக்கு வெளியே பேச்சுச் சத்தத்தைக் கேட்டவன், ஜன்னல்களை மூடிவிட்டு சுவற்றை பார்த்தபடி பெட்டில் படுத்தான். வீடு பூட்டப்பட்டுள்ளதா என்பதை மீண்டும் ஒரு முறை சரி பார்த்துவிட்டு படுக்கையறை அருகே வந்தபின் ஒரு கணம் தயங்கியவள், உள்ளே விளக்கு எரியாததை உணர்ந்து கதவைத் திறந்து நுழைந்தாள்.