கவிதை தொகுப்புகள், மொழிபெயர்ப்புகள், கட்டுரைகள் என்று பல்வேறு தளங்களில் இடையறாது பங்களித்து கொண்டு வருபவர், தற்போது காலச்சுவட்டு இதழின் பொறுப்பாசிரியராக பணியாற்றி வரும் கவிஞர். சுகுமாரனின் தொகுப்பில் ‘தி.ஜானகிராமனின் சிறுகதைகள்’ இவ்வருட புத்தக கண்காட்சிக்கு, காலச்சுவட்டின் புதிய வெளியீடாக வருகிறது. கவிதை மொழியில் அவர் மேற்கொண்ட, பாசாங்கில்லாத, வடிவமைப்பு முயற்சிகள், சொற்தேர்வுகள் மற்றும் அதன் உள்ளடக்கம் பல இளம் கவிஞர்களுக்கு வழிகாட்டுதலாக அமைந்திருக்கிறது. வைக்கம் பஷீர், பால் ஸக்கரியா போன்றோரின் படைப்புகளை மலையாளத்திலிருந்து தமிழுக்கு கொண்டு வந்தவர். பதாகை சிற்றிதழுக்காக அவருடனான மின் அஞ்சல் உரையாடல்.
பதாகை – இந்தத் தொகுப்பில் ஈடுபட்டபோது ஏற்பட்ட உங்கள் அனுபவங்கள் பற்றிச் சொல்லமுடியுமா? காலவரிசையில் நோக்கும்போது தி.ஜா-வின் ஆரம்பகால படைப்புகளுக்கும் இறுதிகால படைப்புகளுக்கும் ஏதேனும் மாற்றம் தெரிந்ததா? ஒட்டு மொத்தமாக அவருடைய படைப்பில் ஊறியிருக்கும் மைய அக்கறை என்று எதைச் சொல்வீர்கள்?
சுகுமாரன் – இலக்கிய வாசகர்கள் எல்லாரிடமும் தங்களுக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்கள் என்று ஒரு பட்டியல் இருக்கும். என்னிடமும் இருக்கிறது. அந்தப் பட்டியலின் முதல் சில பெயர்களில் ஒன்று தி. ஜானகிராமனுடையது. எனக்குப் பிடித்திருக்கிறது என்று நான் சொல்வது ரசனை அடிப்படையில் மட்டுமல்ல; அந்த எழுத்தாளர்கள் தமது படைப்பு மூலம் கற்பித்த விஷயங்களையும் சார்ந்துதான். பெண்கள் மீதான மரியாதையைப் பேணக் கற்றுக் கொடுத்ததில் தி. ஜாவின் படைப்புகளுக்கும் பங்கு உண்டு. கணிசமான பங்கு. அதற்கான கைம்மாறாகவே இந்தத் தொகுப்புப் பணியில் ஈடுபட்டேன். அவருடைய படைப்புகள் மீது எனக்கிருக்கும் மதிப்பைக் காட்டவே இதைச் செய்திருப்பதாக நம்புகிறேன். தொகுப்புப் பணியில் எனக்குக் கிடைத்த முதலாவதும் முதன்மையானதுமான அனுபவம் இதுதான்.
இந்தத் தொகுப்பைக் காலவரிசைப்படித் தொகுக்கவில்லை. வெளிவந்திருக்கும் தொகுதிகளின் வரிசைப்படிதான் அமைத்திருக்கிறேன். காரணங்களை ‘தி. ஜானகிராமன் சிறுகதைகள் – முழுத் தொகுப்பு‘க்கு எழுதியிருக்கும் பதிப்புரையில் விரிவாகவே முன்வைத்திருக்கிறேன். ஜானகிராமன் கதைகளில் பெருமளவுக்கு தூலமான மாற்றங்கள் இல்லை. முதல் கதையான ‘மன்னித்து விடு‘ வில் ஆரம்ப கட்ட எழுத்தின் குறைகள் உள்ளன. ஆனால் கதைப்போக்கு, பாத்திரங்களின் உரையாடல், கதையின் வடிவம் ஆகியவற்றில் பிற்காலக் கதைகளின் முன் மாதிரியாகவே அமைந்துள்ளது. ஒரு செவ்வியல் பூரிதநிலை கொண்டவை அவரது கதைகள். அவை காலத்தின் போக்குக்கு ஏற்ப மாற்றம் அடையவில்லை கால, இட மாறுதல்கள் உள்ளடக்கத்தில் நுட்பமான மாற்றங்களை நிகழ்த்தியிருந்தாலும் அவரது கதைக் கலையின் செவ்வியல் நிலைக்கு வெளிப்படையான மாற்றம் ஏற்பட்டிருக்கவில்லை. மொழிவழக்கில் மட்டுமே மெல்லிய மாறுதல்கள் தெரிகின்றன. எனவே, காலவரிசைப்படி கதைகளைத் தொகுப்பதைவிடவும் வெளிவந்திருக்கும் தொகுப்புகளில் இருப்பதுபோலவே வரிசைப்படுத்துவது என்ற தீர்மானத்தை மேற்கொண்டேன்.
தி. ஜானகிராமனின் கதைகளின் மைய அக்கறை ‘மனித சேஷ்டைகள்’தாம். மனிதர்களைக் கொண்டாடி அலுப்பதில்லை அவருக்கு. அன்பு, பாசம், காதல், பரிவு என்று வெவ்வேறு வார்த்தைகளில் சொல்லப்படும் உணர்வு நிலைகளின் மையமான மானுடக் கருணையே அவரது படைப்பின் மையம் என்று சொல்லத் தோன்றுகிறது. மனிதர்கள் இந்த உணர்வுகளைக் கொண்டவர்களாகவே இருக்க முடியாமற் போவது அவர்களது சூழ்நிலையின் காரணமாகவே என்று அழுத்தமாகச் சொல்கிறார். அந்தச் சிக்கலையே அவர் பேசுபொருளாகக் கருதுகிறார். மானுடத் தத்தளிப்பின் பருவ மாற்றங்கள்தாம் அவரது படைப்புகளின் மையம். (more…)