பதாகை – பாவண்ணன் சிறப்பிதழிற்காக கிரிதரன் ராஜகோபாலன் என்னைத் தொடர்பு கொண்டு கட்டுரை கேட்ட போது பாவண்ணன் என்கிற எழுத்தாளர் குறித்து எனக்குள் எந்த மாதிரியான சித்திரம் தோன்றுகிறது என்று சற்று நேரம் சிந்தித்துப் பார்த்தேன். பாவண்ணனின் எழுத்துக்களை அச்சிலும் இணையத்திலும் பல ஆண்டுகளாக தொடர்ந்து வாசித்து வந்திருந்த போதிலும் நானே வெட்கமும் குற்றவுணர்வும் கொள்கிற மாதிரி அவர் பற்றிய எந்தவொரு சித்திரமும் எனக்குள் தோன்றவில்லை. ஓர் எழுத்தாளரின் படைப்புகளை தொடர்ந்து வாசிக்கும் போதே அவை பற்றிய மனப்பதிவுகளை தொடர்ந்து பதிவு செய்து வைத்துக் கொள்வதே சிறந்த வாசகனின் செயலாக இருக்கும் என்று தோன்றுகிறது. அந்த படைப்புகளை மீள்நினைவும் வாசிப்பும் செய்யும் போது அதன் மூலம் எழுத்தாளரின் உத்தேசமான முழு சித்திரத்தை நாம் எட்டிவிடக்கூடும். இன்னமும் அடுத்தபடி நிலையில் ஒரு விமர்சகனாக அந்த எழுத்தாளரின் படைப்புலகை துல்லியமாக சித்தரிக்கும் முயற்சியிலும் ஈடுபடுவதற்கான சாத்தியத்தை அது தரக்கூடும்.
எழுத்தாளர் ஜெயமோகன் நவீன தமிழிலக்கிய எழுத்தாளர்கள் பற்றிய நூல்களில் தொடர்புள்ள எழுத்தாளர்களின் ஒட்டுமொத்த படைப்புலகை அதற்குரிய பொருத்தமான மேற்கோள்களுடன் ஏறத்தாழ கச்சிதமாகவும் துல்லியமாகவும் தம்முடைய அற்புதமான தர்க்க மொழியின் மூலம் நிறுவி விடுவார்.. ஒரு கறாரான விமர்சகன் எட்ட வேண்டிய இடம் இதுவே என்று தோன்றுகிறது.
பாவண்ணன் எழுத்துக்கள் குறித்து நான் இதுவரை வாசித்தவற்றை மெல்ல நினைவுப்படுத்திப் பார்த்தேன். திண்ணை இணைய இதழில் ‘எனக்குப் பிடித்த சிறுகதைகள்’ என தமிழக, இந்திய, அயல் எழுத்தாளர்களின் நூறு சிறுகதைகளை மிகச்சிறப்பாக அறிமுகப்படுத்தி அவர் எழுதிய தொடர் பசுமையாக நினைவில் வந்தது. தமது வாழ்வியல் அனுபவங்களோடு ஒவ்வொரு சிறுகதையையும் நுட்பமாகப் பொருத்தி அவர் எழுதிய விதம் அற்புதமானதாக இருந்தது. தாம் வாசிக்கும் நூற்களைப் பற்றிய அனுபவங்களையெல்லாம் தம்மோடேயே வைத்துக் கொள்ளாமல் அதை பிறருக்கும் சுவாரசியமாக அறிமுகப்படுத்துவது மிக முக்கியமான இலக்கியப் பணி மாத்திரமல்ல, அடிப்படையானதும் ஆகும். மிக குறிப்பாக தம்முடைய மொழியாக்கப் பணியின் மூலம் கன்னட மொழியிலிருந்து தமிழிற்கு அவர் அறிமுகப்படுத்தியிருக்கும் பல எழுத்துக்கள் முக்கியமானவை.
இலக்கியப்பூசல்களின் மூலமும் சர்ச்சைகளின் மூலமும் தன் இருப்பை நிலைநிறுத்திக் கொள்ளும் எந்தவொரு மலினமான முயற்சியிலும் ஈடுபடாமல் எது பற்றியும் யாரைப் பற்றியும் கவலைப்படாமல் எதிர்பார்க்காமல் ஒரு தெளிந்த நீரோடை போல அவர் இத்தனை ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வரும் அவரது நீண்ட கால இலக்கியச் செயற்பாடுகளை நினைவுகூர்ந்தால் பிரமிப்பாக இருக்கிறது. எழுத்தாளர், விமர்சகர், மொழிபெயர்ப்பாளர், சிறுவர்களுக்கான எழுத்து பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட எழுத்து அவருடையது. மூன்று நாவல்கள், சிறுகதைத் தொகுதிகள், கட்டுரைத் தொகுதிகள் என மிக நீண்ட பட்டியலைக் கொண்டது அவரது படைப்புலகம். சமீபத்திய தீராநதியில், மறைந்த வெங்கட்சுவாமிநாதன் பற்றி அவர் எழுதும் அஞ்சலிக் கட்டுரை கூட, வாசகனின் தோள் மீது கைபோட்டு உரையாடும் அவரின் வழக்கமான சிநேகமான தொனியை இன்னமும் கைவிடாமலிருக்கிறது.
***
அவரது புதினங்களுள் 1995-ம் ஆண்டின் இலக்கியச் சிந்தனைப் பரிசு பெற்ற புதினமான ‘பாய்மரக்கப்பல் மிக முக்கியமானது. சூழலியல் குறித்த வந்த தமிழ் புதினங்களின் முன்னோடியான படைப்புகளில் இதுவொன்று.
உலகில் விவசாயத்தை பெருமளவு செயல்படுத்தும் நாடுகளுள் ஒன்று இந்தியா. அதற்கான நிலப்பரப்பும் இயற்கைச் செல்வங்களும் இங்குள்ளன. உணவுப் பொருட்களை விளைவிப்பதில் தன்னிறைவு பெற்றதோடு உபரிச் செல்வத்தை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் முக்கியமான காரணிகளில் ஒன்றாக உள்ளது விவசாயம். ஆனால் இந்தப் பெருமையை இந்தியா கடந்து செல்லும் கனவு போல மெல்ல மெல்ல இழந்து வருகிறது. விளைநிலங்களின் இடங்கள் பறிக்கப்பட்டு அந்த இடத்தில் தொழிற்சாலைகளும் வீடுகளும் இடம்பெறுகின்றன. பன்னாட்டு நிறுவனங்களின் இந்த நில அரசியலுக்கு அதிகார வட்டங்கள் தங்களின் ஆதாயத்திற்காக இந்த அழிவிற்கு உடந்தையாக இருக்கின்றன. அந்நிய நாடுகள் தங்களின் வணிகத் தந்திரங்களின் மூலம் அதிக சாகுபடிக்கு ஆசைகாட்டி விற்கும் பூச்சிக்கொல்லி மருந்துகள் காலப்போக்கில் விளைநிலங்களை மலட்டுத்தன்மையாக்கி விடுகின்றன. ஒருபுறம் கடன்களினாலும் இன்னொருபுறம் இடைத்தரகர்கள் அடிக்கும் கொள்ளை லாபம் மூலம் தங்களின் விளைப்பொருட்களுக்கான நியாயமான வருவாய் கிடைக்காத துயரங்களினாலும் விவசாயிகள் தற்கொலை செய்யும் அவலம் ஆண்டுக்கு ஆண்டு நீடித்துக் கொண்டே போகிறது. வேளாண் நிலங்களும் காடுகளும் அழிக்கப்பட்டுக் கொண்டே போவதும் நாகரிக மாற்றங்களினால் ஏற்பட்டிருக்கும் நுகர்வு கலாச்சாரமும் சுற்றுச் சூழலை பெருமளவு நாசம் செய்கின்றன.
தம்முடைய சமகாலத்தில் சமூகத்தில் ஏற்படும் எதிர்மறையான மாற்றங்களை, அழிவுகளை பதிவு செய்து தொலைநோக்குப் பார்வையோடு சுட்டிக்காட்டி எச்சரிப்பது ஒவ்வொரு எழுத்தாளரின், படைப்பாளியின் தார்மீக கடமையாகும். இந்த நோக்கில் தமிழில் எழுதப்பட்ட புதினங்களில், சூழலியலில் ஏற்படும் ஆபத்தைப் பற்றி அது பற்றி அதிகமாக உரையாடப்படாத காலத்திலேயே நுட்பமாகவும் கலையமைதியுடனும் எழுதப்பட்ட முதல் புதினமாக 1969-ல் வெளிவந்த சா.கந்தசாமியின் ‘சாயாவனத்தைச்’ சொல்லலாம். தஞ்சைப் பகுதியிலுள்ள ஒரு வனம் மெல்ல மெல்ல அழிந்து போவதைப் பற்றிய கவலையை தன்னுடைய மையமாக பதிவு செய்தது அந்தப் புதினம்.
பிறகு 1990-ல் வெளிவந்த ஜெயமோகனின் ‘ரப்பர்’ புதினம், ரப்பர் என்கிற பணப்பயிர் எவ்வாறு மற்ற ஆதாரமான உணவுப் பயிர்களை அழித்து உறிஞ்சி பிரம்மாண்டமான தொழிலாக வளர்ந்து நிற்கிறது என்பதை ஒரு குடும்பத்தின் வீழ்ச்சியோடு இணைத்து உரையாடுகிறது அந்த நாவல். இந்த வரிசையில் பாவண்ணனி்ன் ‘பாய்மரக்கப்பல்‘ புதினத்தையும் வைத்துப் பார்க்கலாம்.
***
காசாம்புக் கவுண்டரின் விவசாயக்குடும்பமானது மெல்ல மெல்ல அடுத்தடுத்த தலைமுறைகளில் வீழ்ச்சியடைந்து விவசாயத்திலிருந்து விலகி கடைசியில் சாராயக்கடை திறப்பிற்கும் ஆதாய அரசியலுக்கும் சென்று சேரும் சோகத்தை இந்தப் புதினம் படிப்படியாக சொல்லிச் செல்கிறது. துரைசாமி சாராயக்கடை திறப்பதற்கான முன்னேற்பாடுகளைச் செய்யும் பரபரப்போடு துவங்குகிறது நாவல். அடுத்த அத்தியாயத்தில் அவனது தாத்தா முத்துசாமி கவுண்டரைப் பற்றிய அறிமுகமும் கோர்க்காட்டிலிருந்து வளவனூருக்கு வந்த அவரைப் பற்றிய பின்னணி விவரங்களும் மெல்ல துலக்கமாகின்றன. இப்படியாக சமகாலத்திற்கும் கடந்த காலத்திற்கும் மாறி மாறி நாவல் பயணிக்கிறது.
குடும்பத்தகறாரில் முத்துசாமியின் சகோதரர் வெறிகொண்டு பெரும்பாலான குடும்ப உறுப்பினர்களை வெட்டிப் போட தன் மனைவி வனமயிலையும் அதில் இழக்கிறார் முத்துசாமி. பொருந்தாத திருமணத்தில் கணவனிடமிருந்த விலகிய நாவாம்பாளை இரண்டாவதாக மணந்து கொள்கிறார். பட்டாளத்திற்கு சென்று சேர்வதற்காக பிரான்ஸ் செல்ல விரும்பும் மகன் முனுசாமியின் கோரிக்கையையும் அது சார்ந்த பிடிவாதத்தையும் முத்துசாமியால் தவிர்க்க முடியவில்லை. இன்னொரு மகன் ரங்கசாமி சாமியாராகப் போய் விடுகிறான். விவசாயத்தில் உதவிக் கொண்டிருந்த ஆறுமுகம் குடிப்பழக்கத்தின் விபத்தால் பக்கவாதம் வந்து முடங்கிப் போகிறான். இப்படியாக முத்துசாமிக்குப் பிறகு விவசாயத்தைத் தொடர எவருமில்லாததால் அரசியலில் ஈடுபடும் பேரன் துரைசாமியின் முரட்டுத்தனத்தனமான பிடிவாதத்தாலும் அது சார்ந்த சச்சரவுகளாலும் நிலத்தை ரியல் எஸ்டேட்காரர்களுக்கு விற்க நேர்கிறது. நிலம் தன்னை விட்டுப் போன அந்தக் கணத்திலிருந்தே தன்னை நடைப்பிணமாக உணரத் துவங்குகிறார் முத்துசாமி.
காலனியாதிக்கத்தில் இருக்கும் புதுச்சேரியின் காலக்கட்டம். பிரெஞ்சுக்கார துரைகளிடம் விசுவாசத்தைக் காட்டில் ஊரில் செல்வாக்கோடு இருக்கும் சீத்தாரம ரெட்டியிடம் தந்தை காசாம்பு வாங்கிய கடனுக்காக நிலங்களை ரெட்டியிடம் இழக்கிறார் முத்துசாமி. தன் செல்வாக்கைப் பயன்படுத்தி முத்துசாமியை மிரட்டி நிலங்களைப் பறித்து விடுகிறான் ரெட்டி. கோர்க்காடிலிருந்து தமிழ்நாட்டின் வளவனூருக்கு புலம்பெயரும் முத்துசாமி, ஐயரிடமிருந்து குத்தகை எடுத்து விவசாயம் செய்யத் துவங்குகிறார். இது சார்ந்த வரலாற்றுப் பின்புலத்தோடு அத்தியாயங்கள் கடக்கின்றன.
***
இன்னொரு புறம் சமகாலத்தில் பேரன் துரைசாமியின் அரசியல் செயற்பாடுகளும் அதிகாரத்தின் படிக்கட்டுகளில் மெல்ல மெல்ல அவன் மூர்க்கமோடு முன்னேறும் உத்வேகங்களும் பாவண்ணனின் திறமையான சொற்களில் விரிகின்றன. தாத்தா முத்துசாமியோடு அவன் கொள்ளும் பகையும் தன் மனைவி மல்லிகாவின் மீது அவன் செலுத்தும் ஆதிக்கமும் குடும்ப வன்முறையும் இயல்பான தொனியில் ஆனால் அதன் உக்கிரம் குறையாமல் வெளிப்படுகின்றன.
காங்கிரஸ் தியாகியான காத்தவராயன் கவுண்டருக்கு ‘தியாகி‘ பட்டம் மூலம் கிடைத்த ஒரு காணி நிலத்தை குத்தகையாகப் பெற்று விவசாயம் செய்கிறார் முத்துசாமி. காந்தி இறந்த செய்தியைக் கேட்ட அதிர்ச்சியில் மரணமடையும் காத்தவராயனுக்குப் பிறகு அவரது நிலத்தை மகனான சத்தியசீலனுக்கு கைமாற்ற முடியவில்லை. சினிமாவில் நடிப்பதற்கான ஆர்வம் முற்றி விவசாயத்தை தொடர விரும்பாமல் அவன் சென்னையில் திரிந்து கொண்டிருக்கிறான். எனவே அந்த நிலத்தை வேறு வழியின்றி முத்துசாமியே பணம் கொடுத்து வாங்கிக் கொள்கிறார்.
விவசாயத் தலைமுறைகளிலிருந்து கிளைக்கும் வாரிசுகள் அரசியலாலும் சினிமா மோகத்தினாலும் குடியினாலும் தம்முடைய ஆதார தொழிலான விவசாயத்தை அடுத்தடுத்த தலைமுறைகளில் தொடராமல் கைவிட்டுப் போகும் யதார்த்தமான சோகத்தை அதன் சமூகப் பின்னணிகளுடன் ‘பாய்மரக்கப்பல்‘ அடிநாதமாக விவரிக்கிறது.
ஒரு விவசாயக் குடும்பம் மெல்ல மெல்ல தடுமாறி தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் சிரமங்கள் அனைத்தும் அடுத்தடுத்த தலைமுறையின் உதாசீனங்கள் மூலமும் விலகலின் மூலமும் எவ்வாறு சிதறிப் போகிறது என்பதை மூன்று தலைமுறையின் காலக்கட்ட வரலாற்றின் மூலம் பதிவு செய்கிறார் பாவண்ணன். பிரெஞ்சு அரசு பின்னணியில் புதுச்சேரியின் காலக்கட்டமும் அதுசார்ந்த அரசியலும் பின்னணியில் ஒரு மெல்லி்ய கோடாக பதிவாகியிருக்கிறது. நாவலில் உலவும் பாத்திரங்களின் உறவுகளை புரிந்து கொள்ள சற்று சிரமமாக இருந்தாலும் மீள்வாசிப்பின் போது எத்தனை கவனமாகவும் நுட்பமாகவும் இந்த நாவலின் கட்டுமானத்தை பாவண்ணன் திட்டமிட்டு அதை செயலாற்றியிருக்கிறார் என்பதை உணர பிரமிப்பாக இருக்கிறது. நிலங்களை இழந்த விரக்தியோடும் துயரத்தோடும் அவதிப்படும் முத்துசாமி இறுதியில் தன் குடும்ப உறுப்பினர்களை அழைத்து நடுங்கும் கரங்களால் புதிய மரக்கன்றுகளை மீட்டுக் கொண்ட மகிழ்ச்சியோடு நடும் தருணத்தோடு நாவல் நிறைகிறது. சமூகமும் மனிதர்களும் எத்தனை அவநம்பிக்கைகளில் மூழ்கிப் போனாலும் துவண்டு போகாமல் அதன் மீது நம்பிக்கை ஏற்படுத்த வேண்டிய கடமை ஒரு படைப்பாளிக்கு இருக்கிறது. அந்த கடமையை பாவண்ணன் தன்னுடைய புதினத்தில் கச்சிதமாகவே நிறைவேற்றியிருக்கிறார்.
புயல் காற்றில் சிக்கித் தடுமாறி பயணிக்கும் ஒரு பாய்மரக்கப்பலைப் போல சமூகத்தின் மிக ஆதாரமாகவும் தொடர்ச்சியாகவும் இயங்க வேண்டிய விவசாயம் எனும் இயக்கம் பல்வேறு சமூகக் காரணங்களால் தட்டுத் தடுமாறும் உருவகத்தை நாவலின் தலைப்பு உணர்த்துகிறது எனக் கொள்ளலாம். சூழலியல் சார்ந்து தமிழில் வெளிவந்த ஒரு குறிப்பிடத்தகுந்த படைப்பாக ‘பாய்மரக்கப்பல்‘ புதினத்தை நிச்சயம் குறிப்பிடலாம்.