சு வேணுகோபால்

மீதமிருக்கும் கோதும் காற்று: ஒரு பார்வை

கோகுல் பிரசாத்

வாடிக்கையாளர் எவரும் வராத பாலியல் தொழிலாளியின் நாள் ஒன்றினை மையமாகக் கொண்டு ஓர் இடதுசாரி எழுத்தாளர் கதை புனைகிறார். வழக்கம் போல வேசிகள் வாழ்வு மீது பச்சாதாபம் கொண்டு தன்னை மாபெரும் மனிதாபிமானியாக பிரகடனப்படுத்திக் கொள்ளும் முனைப்புள்ள சித்தரிப்பு. வாடிக்கையாளர் கிடைக்காத அந்தக் குறிப்பிட்ட ஒரு நாளில் மட்டும்தான் கதையின் மையக் கதாபாத்திரம் வலியும் வேதனையுமின்றி நிம்மதியாக உறங்கியதாக முடிகிறது அக்கதை. இதனை வாசித்த சு. வேணுகோபால் அந்த எழுத்தாளரிடம், ‘நீங்க ஒரு பழக்கடை வச்சிருக்கீங்க. அன்னிக்கு யாரும் பழம் வாங்க வரல. அதனால கடைக்காரன் நிம்மதியா தூங்கினான்னு எழுத முடியுமா?’ என அந்தக் கதையை மறுத்து தனது பார்வையை முன்வைத்து எழுதியதே ‘மீதமிருக்கும் கோதும் காற்று’ என்ற சிறுகதை. இது அவர் எழுதிய கதைகளுள் முக்கியமானது.

இலக்கியம் என்பது வாழ்வை ‘காட்சிப்படுத்துதல்’ (portray) அல்ல. அது வாழ்வைத் துழாவி கண்டறிதலில் (discover) முகிழ்க்கிறது. கண்டறிந்த உண்மைகளை உணர்வுகளின் வழி கடத்துவதே சு. வேணுகோபாலுக்கு போதுமானதாக இருக்கிறது. சம்பவங்களின் தொகுப்பாக அல்லாமல் அவை இறுதியில் விட்டுச் சென்ற உணர்ச்சிகளின் தடயங்களை பின்தொடர்ந்தே இவரது கதைகளை நினைவு கூர்கிறேன். இவரது பெரும்பாலான கதைகளில் மையக் கதைமாந்தர்களின் புறத் தோற்றமோ அக வெளிப்பாடுகளோ மேலதிகமாக சித்தரிக்கப்படுவதில்லை. மாறாக மற்றவர்/ மற்றவை மீது தாம் வெளிப்படுத்தும் எண்ணங்கள் ஊடாகவே அவர்கள் மேலெழுந்து வருகிறார்கள். பிறர் மீதான நம் பார்வைகளே நாம் யாரென பிறர்க்கு அடையாளம் காட்டுபவை.

சுகிர்தாவின் தினப்பொழுதுகள் ஏனைய பாலியல் தொழிலாளிகளிடமிருந்து மாறுபட்டதல்ல. ஆனால் திட்டமிட்டு கட்டமைக்கப்படாத சம்பவங்கள் இழுத்துச் செல்லும் திசைகள் தோறும் கதை வளைகிறது. இது வாழ்வு பற்றிய விசாரணைகளை மேற்கொள்ளவில்லை. திணிக்கப்பட்ட தத்துவ மேற்பூச்சுகள் ஏதுமில்லை. அதனாலேயே வரையறுக்கப்பட்ட எல்லைகள் குறித்த கவலையின்றி தன்போக்கில் திரிகிறது. அலைந்து திரிந்து வடிகட்டப்படாத எண்ணங்களைச் சிதறடிக்கிறது. மனிதர்கள் மீதான அவநம்பிக்கையில் துவங்கி மனிதத்தின் பேருருக் கொண்டு அமைகிறது. வெவ்வேறு அடர் நிறங்களின் வண்ணக் கலவைகள் குழைந்து வேகமெடுத்த தீற்றல்களின் சமரசமற்ற மோதல்களில் ஒரு ஓவியம் முழுமை கொள்வதைப் போல.

சுகிர்தாவின் வேடங்கள் உதிர்ந்து கொண்டே இருக்கின்றன. அழகான வாடிக்கையாளனின் வயிற்றை அணைத்துக் கொள்ள பிரியமிருக்கிறது. கசப்பை விழுங்கி எரிச்சல் காந்தும் தருணத்திலும் தன் மார்புகளை குலுக்கி அந்தக் கேலிக்கூத்தில் தானும் அமிழ்ந்து போக அவளுக்கு ஆட்சேபனை கிடையாது. சக தொழில் போட்டியாளரான ரோகிணிக்கு தான் சளைத்தவளில்லை என நிரூபிக்கக் கிடைத்த ஒரு தருணத்தை தவறவிடலாகாதே! அலங்கோலமாகக் கிடக்கும் குடிகாரனிடம் அவள் காட்டும் கரிசனமும் அதன் மூலமாக தனது துயரை மீறிச் சென்று இளைப்பாற விழையும் தன்முனைப்பு தான். கனிந்து கொண்டிருக்கும் தீ!

சரி தவறுகளுக்குள் புகாது வாழ்வை விலகி நின்று அவதானிக்கும் சு வேணுகோபால் ‘உடலின் நாற்றமா? நாற்றமே உடலா?’ என தனது கருத்துகளை அவ்வப்போது கதாபாத்திரங்கள் மீது திணிப்பதை தவிர்த்திருக்கலாம். மறு வாசிப்பில் இயல்பாகத் துலங்கும் வெளிச்சப் புள்ளிகள் மீது அவை கருந்திட்டுகளாக துருத்திக் கொண்டு படர்ந்திருக்கின்றன.

தொகுப்பு : களவு போகும் புரவிகள்
வெளியீடு : தமிழினி

நிறைவின்மையின் வழியே…

ஸ்ரீதர் நாராயணன்

su_venugopalan

தூர்தர்ஷனில் ஒரு காலத்தில் உலகப்புகழ்பெற்ற சிறுகதைகளை தொலைக்காட்சித் தொடராக செய்து ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள். தாகூர், சகி (H H Munroe), செக்காவ், ஓ ஹென்றி, சுந்தர ராமசாமி, முன்ஷி பிரேம்சந்த் என்று பலரின் கதைகளை நேரடியாக திரையில் பார்க்கும் அனுபவம் வாய்த்தது. அதிலொரு கதையில் (பெயர் நினைவில்லை) ஓர் ஏழைச்சிறுவன் பிரபல எழுத்தாளர் ஒருவரின் புத்தகங்கள் நிறைந்தப் பெட்டியை தூக்கிக் கொண்டு செல்ல உதவுவான். ‘இந்தப் பெட்டியில் என்ன இருக்கிறது’ என்று அந்தச் சிறுவன் கேட்க, அவர் ‘உன்னைப் போன்றவர்களைப் பற்றி நான் எழுதிய புத்தகங்கள்’ என்பார். சிறிய தயக்கத்திற்குப் பின்னர் அவன் ‘அந்தப் புத்தகங்களினால் எங்களுக்கு என்ன பயன்’ என்றுக் கேட்பான். அப்போதுதான் அவர் தான் யாருக்காக எழுதினோமோ அவர்களிடமிருந்து மிகவும் தள்ளிப் பிரிந்து வந்துவிட்டோம் என்பதை உணர்வார். அந்த எளிய மாந்தர்களின் வாழ்வியல் சிக்கல்கள் எல்லாம் அவருடைய எழுத்திற்கான கச்சாப்பொருளாக மட்டுமே இருந்திருக்கிறது. எழுதுபவன், வாசகன் என்ற இரு நிலைகளைக் கடந்து, எழுத்தின் பேசுபொருளான சமூகத்திற்கான பயன் என்று ஒரு நிலை உருவாகும்போதுதான் அந்த எழுத்து உயர்நிலையை அடைகிறது. அப்படியானதொன்றுதான் சு வேணுகோபாலின் படைப்புலகம்.

சு வேணுகோபாலின் படைப்புலகம் எனக்கு அறிமுகமானது ‘களவு போகும் புரவிகள்’ சிறுகதை வழியாகத்தான். பிரபல எழுத்தாளர்கள் பலரின் ‘முக்கியமான படைப்புகள்’ பட்டியலில் தவறாமல் இடம்பெற்ற சிறுகதை அதுவென்பதால், தேடிப்பிடித்து படிக்கும் ஆர்வம் உண்டானது. கன்னட தேவாங்க சமூகத்தினரின் வழிபாட்டுத்தலமான சௌடம்மா கோவிலின் புரவி திருவிழாவை பின்புலமாக கொண்ட மாயயதார்த்த கதை. கச்சிதமான வடிவமைப்புடன், புதிர்த்தன்மையோடு சொல்லப்பட்ட கதை. எதிரிநாட்டு ராஜதந்திரி கணக்கில் மாயவித்தை செய்து புரவிகளை களவாடிப் போகும் தொன்ம வரலாற்றை கூத்துக்கலையாக, தற்கால திருவிழா கொண்டாட்டத்தோடு கூடிக் களிக்கிறார்கள் ஊர் மக்கள்.

கதிரைய்யனின் குதிரைகள் களவுபோனதால், ஊருணியில் குளித்துவிட்டு வந்த சௌடம்மா, காலத்திற்கும் இடுப்பிலிருக்கும் தன் உடைவாளோடு (ஜமுதாடு) அப்படியே தெய்வமாகிப் போகிறாள். பாரம்பரியம் என்றால் அப்படியேத்தான் நடக்க வேண்டும் என்று நாடகீய சடங்குகளின் ஒருபகுதியாக ‘பொட்டு கட்டி வம்சாவழி ஆள் வந்தால்தான்’ குடத்தில் குத்தியிருக்கும் ஜமுதாடு நிற்கும் என்று அணைக்கரைப்பட்டிவரை போய் ஆளைக் கூட்டி வரச்செய்கிறார்கள். காலத்திற்கும் தன் பிறப்பால் ஏற்றப்பட்ட கறையை அழிக்க முடியாத வேதனையோடு அவர் வர, ஊராரின் மனநிறைவிற்கேற்ப சாங்கியங்கள் நிகழ்த்தப்படுகின்றன. மாயயதார்த்த புனைவில் சமகால சமுதாய பிரக்ஞையை விட்டுவிடாத இடம்தான் எழுத்தாளனின் ஆன்மாவை நமக்கு புரியவைக்கிறது. பாரம்பரிய கொண்டாட்டங்களை ஆவணப்படுத்துவதாக மட்டுமல்லாமல் அதில் இருக்கும் அவலத்தை சிறு கோடிழுத்துக் காட்டுகிறார். பள்ளத்தை நோக்கிப் பாயும் நதி போல, சமூகத்தின் நிறைவின்மையை, அதன் இருள்பகுதிகளை தொட்டுக் காட்டும் எழுத்து சு வேணுகோபாலுடையது.

மூன்று நாவல்களும், நூற்றுக்கு பக்கமான சிறுகதைகளும் எழுதியிருக்கும் சு வேணுகோபாலின் படைப்பூக்கத்திற்கும் அந்த நிறைவின்மைதான் அடித்தளமாக இருக்கிறது. இன்றைய தமிழ் புனைவிலக்கிய சூழலில் அதிகம் கைக்கொள்ளப்படாத நெடுங்கதைகள் எனப்படும் குறுநாவல்களும் நிறைய எழுதியிருக்கிறார். அவருடைய பெரும்பாலான படைப்புகள் நேரடியாக தொகுப்புகளுக்கு என எழுதப்பட்ட விதத்தைப் பார்க்கும்போது பெருவணிக பத்திரிகை / ஊடக பாதைகளின் அரசியலிலிருந்து ஒதுங்கி விளிம்புநிலை மனிதர்களின் வாழ்வியல் சிக்கல்களை முன்வைத்து எழுதுகிறார் எனத் தெரிகிறது. இதற்கு தோதாக தமிழினி பதிப்பகமும் அவருக்கு உறுதுணையாக இருந்து வருவது முக்கியத்துவம் வாய்ந்தது.

‘ஒரே அமர்வில் ஒரு நெடுங்கதையை எழுதி முடித்துவிடுவேன். ‘பால்கனிகள்’ குறுநாவல் இரண்டு இரவு ஒரு பகல் காலத்தில் எழுதப்பட்டது. மனதில் இருப்பதை எழுதி முடிக்காவிட்டால் என்னால் உறக்கம் கொள்ள முடியாது’ என்று ஹிந்து நாளிதழிற்கு அளித்த பேட்டியில் குறிப்பிடுகிறார். பெரும் கதைப்பின்னலுடன், வரலாற்று பின்புலத்தில், ஒட்டுமொத்த தரிசனம் (vision) அளிக்கும் நாவல்களை விட, ஒரு முரணை முன்வைத்து நறுக்குத் தெறித்தார்ப்போன்ற வடிவத்தில் எழுதப்படும் சிறுகதைகளை விட, சு வேணுகோபாலின் படைப்பூக்கம் திறனுடன் வெளிப்படுவது நெடுங்கதை வடிவத்தில்தான் எனச் சொல்லலாம்.

தோற்றுப்போன விளையாட்டு வீரனான வடிவேல், சுற்றமும் உறவினரும் வெறுத்து, சமூகத்தால் தொடர்ந்து வஞ்சிக்கப்படும் தன்பால் ஈர்ப்புக் கொண்ட கிஷ்டன், ஆதிக்க சமூகத்தால் ஒடுக்கப்பட்டும் நாவிதன் பழனி, நல்லாசிரியர் விருது பெற்றாலும் தன்னுடைய கீழ்சாதி முத்திரையை தொலைக்க முடியாத பரமன் என்னும் ராமமூர்த்தி என்று அவருடைய கதை மாந்தர்கள் எல்லோரும் ஏதோ ஒரு நிறைவின்மையால் துரத்தப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். ஒப்பனையின்மை, பாத்திரங்களுக்கான படைப்பு நேர்மை, செறிவான பின்புல சம்பவங்கள், தேய்வழக்கு அல்லாத புதிய கோணங்கள், தகர்த்தெறிய முடியாத சமூகத்தளைகள் என்று தனித்துவ குணங்களோடு அவை காணப்படுகின்றன.

கதைப் போக்கில் சொல்லப்படும் சம்பவங்கள் அதிர்ச்சி மதிப்பீட்டிற்காக அழுத்தம் கூடிப் போய் தொனி மாறிவிடக்கூடாது என்பதில் கட்டுக்கோப்பாக செயல்பட்டிருக்கிறார் கதையாசிரியர். அதற்காக சொல்லப்பட வேண்டியது சொல்லப்படாமலும் போய்விடக் கூடாது. கிஷ்டனின் கதை முழுவதும் திவ்யாவின் பார்வையிலேயே சொல்லப்படுகிறது. அவனுடைய ஆண் சொந்தங்களான அண்ணனும், மச்சான்மார்களும் அவனிடமிருந்து விலகி நிற்பதையே முயன்று செய்கிறார்கள். ஊர்த் திருவிழாவில் தன்னை முழுவதுமாக பெண்ணென்று வெளிப்படுத்திக் கொண்டு வந்து நிற்பவனை அடித்துத் துரத்துவதில் குறியாக இருக்கும்போது அவர்களுடைய பழைய அநியாயங்களை போகிறபோக்கில் சொல்லிவிட்டுப் போகிறான். ‘நல்லா இருந்த காலத்தில் என்னை நாசமாக்கினவன் நீதானடா’ என்று தன் மாமாவைப் பார்த்து உக்கிரத்தோடு சொல்கிறான். இந்த ஒப்பனையற்ற நடை வழியேத்தான் சு வேணுகோபாலால் ‘உள்ளிருந்து உடற்றும் பசி’ போன்ற புனைவுகளை எழுதிவிட இயலுகிறது.

‘என்னைச் சுற்றியிருக்கும் பெண்கள் நாளும் சொல்லும் கதைகள் வழியேத்தான் என் வாழ்க்கை சென்று கொண்டிருந்தது’ என்று தன்னுடைய கிராமத்து வாழ்க்கையைப் பற்றி இந்து நாளிதழுக்கான பேட்டியில் சொல்கிறார். திசையெல்லாம் நெருஞ்சி நெடுங்கதையில் குழந்தை மேல் மாரியாத்தாள் வந்துவிட்டதால் (அம்மை போட்டிருப்பதால்) ஊர்க்காரர்கள் கருணைக் காட்டினாலும், ‘என்னதான் இருந்தாலும் அம்பட்டையன் சம்சாரிய எட்டி உதைக்கலாமா’ என்று சடைத்துக் கொண்டு போட்ட தீர்ப்பை திருப்பி எடுக்க மாட்டார்கள் என்பது பழநி வழியாக மெள்ள மெள்ள படிக்கிறவர்களுக்கு கடத்திக் கொண்டே வருகிறார். இறுதியில் தீவன படைப்பை நெருப்பிலிட்டு கொளுத்திவிட்டு ஊரைவிட்டு ஓடிப்போகும்போது பழநியைச் சுற்றி அத்தனை வாசல்களையும் அடைத்து வைத்திருக்கும் ஆதிக்க சமூகத்தின் மேல் நமக்கும் நம்பிக்கை அற்றுப் போய்விடுகிறது. எவ்வித ரொமாண்டிசசமும் இல்லாத ஒப்பனையற்ற கதை சொல்லும் முறை.

ஆனால் பாத்திரங்களுக்கான படைப்பு நேர்மையை கைவிட்டுவிடுவதில்லை. ஊர் ஒதுக்கி வைக்கும் முன்னர் பழநி கைத்தோரத்துப் பையனாக ஓடிஓடி ஊராருக்கு உதவி செய்திருக்கிறான். அக்காலத்தில் ஆண்டியப்பப் பிள்ளை கிணத்துமேட்டிலிருந்து பூசணி பறித்துத் தந்திருக்கிறார். ராமுத்தேவர் சுரைக்காய் பறித்துக் கொடுத்திருக்கிறார். வீடு வீடாகப் போய் அரிசி, பருப்பு, புளி, நவதானியங்கள் வாங்கி வந்திருக்கிறான். ஆனால் இப்போது அம்மை போட்ட பையனுக்காக ஒரு வாழையிலையை அறுத்துக் கொண்டு போக முடியாதபடி திமிரெடுத்த அம்பட்டப்பயலாக ஆகிவிட்டோமே என்று பழநிக்கு மனது துவண்டு போகிறது. ஊர்க்காரர்கள் அத்தனை பேருக்கும் வெட்டி வாரிப்போட்ட மயிர்குப்பை நிறைந்த அம்பட்டங்குழிப் போலத்தான் அவன் வாழ்க்கையும் ஆகிவிட்டிருந்தது.

‘நமக்கு வேண்டப்பட்டவர்கள் எல்லாம் இருந்தும் துரத்தி விட்டுட்டாங்கன்னு மனங்கோணாதப்பா’ என்று பழநிக்கு ஆறுதல் சொல்லும் சம்சாரிகளும் இருக்கிறார்கள். ஆனால் நிலையழிந்த மனிதனின் மனம்தான் கொடூரமான ஆயுதம் என்பது போல மல்லையாவின் வன்மம் பழநி திரும்பும் இடமெல்லாம் நெருஞ்சியாக நிறைந்திருக்கிறது. வேறுவழியில்லாமல் அந்த நெருஞ்சிக் காட்டைக் கொளுத்திவிட்டு கிளம்புகிறான் பழநி.

அதே போல ‘இழைகளின்’ பரமன் என்னும் ராமமூர்த்திக்கு, நல்லாசிரியர் விருது கிடைத்தப் பிறகும் கைகொடுத்து வாழ்த்து சொல்லாத சக ஆசிரியர்களின் ‘ஒதுக்குதல்’ நெருஞ்சியாக உறுத்துகிறது. மற்றோர் இழையில் ஜெயசுதாவிற்கு முன்னால் எடுப்பான உடை அணிந்து போக அம்மாவின் கருத்தங்கன்னியை (அம்மா வளர்த்து வரும் ஆட்டின் பெயர்) குட்டிகளோடு விற்றுப்போட்டுவிட அவரே முனைப்பாக இருந்திருக்கிறார். ஒன்றை ஒன்று பின்னிப் பிணைந்து கொண்டு விடாமல் சுற்றி வருகிறது ஒடுக்கப்பட்டவர்களின் இழைகள்.

நிறைவின்மையால் எப்போதும் துரத்தப்பட்டும் பாத்திரங்களாக இருந்தாலும் ஒவ்வொருவரைச் சுற்றியும் தனி உலகே இயங்கும் அளவுக்கு செறிவான வார்ப்புகளாக உருவாக்கியிருக்கிறார். கர்ப்பத்திற்கான கைமருந்து தயார் செய்யும் பழநியின் ஆத்தாவிற்கு அப்படியொரு கைராசி. பத்து ரூபாய் மருந்தில் கனகத்தின் வயிறு திறந்து இப்போது பேத்தியும் எடுத்துவிட்டாள். ஆனாலும் பழநிக்கு எதிரான ஊர்க் கட்டுப்பாட்டை மீற அவர்களுக்கு அப்படியொரு தயக்கம். மகாலிங்கத்தின் புழுவெட்டிற்கு வைத்தியம், அவர் பையன் மனோகரனுக்கு வியர்த்து ஊற்றும் நோய்க்கான சிகிச்சை, காளியப்பனின் இளம்பிள்ளை வாதம் பாதித்த பையனுக்கான சர்வாங்க சவரம் என்று அந்த ஊரைச் சுற்றிலும் பழநிக்கு அத்தனை இழைகள் படர்ந்திருக்கின்றன. வெந்த முருங்கைக்காயிலிருந்து கூழைச் சுரண்டி, கத்திரிக்காயோடு சேர்த்து கிஷ்டன் தக்காளி சட்னி, வெந்தயக் குழம்பும் ஊத்தப்பமுமாக அதகளப்படுத்துவதை விவரிக்கிறார். பள்ளி ஆசிரியர்களுக்கு டீப் போட்டு அனுப்பும் கடைக்காரர்கள் கூட அவர்களுடைய சாதியை உய்த்தறிந்து அதற்கேற்ப கிளாஸ்களையும் போணிகளையும் குறித்து வைத்து அனுப்பும் நுண்மையை சொல்கிறார்.

மற்றோர் இழையில் தீண்டத்தகாததாக ஒதுக்கிவைக்கப்படும் தன் உடல் ஒரு பெண்ணால் காமுற்று பயனடையும் போது பரமனுக்கு தன் இழிவின் மேல் மாளாத கோபம் எழுகிறது. தன்னுடைய சுயமரியாதைத் தூண்டுதலால் அவர் பேராற்றல் கொண்டு பாறையை பிளந்து வளரும் பெருமரம் போல வளர்கிறார். ஆனால், அவருக்குப் பின்னாலும் அந்தப் பாறை நிலம் அப்படியே பாறையாகவேத்தான் இருக்கிறது. அது போலவேத்தான் பழநியின் வாழ்வாசையும் அவனுடைய மானத்தை தற்காத்துக் கொள்ளுவதிலேயே பெருமளவு செலவழிகிறது. ஊராரிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்க முடியாது என்ற நிலையில், குமரனும் மல்லையாவும் குருவம்மாளைப் பற்றி தூற்றுகின்றனர். ‘நீ எதுக்கு கோவப்படுற, நான் அப்படிப்பட்டவளா’ என்று பழநியை சமாதானப்படுத்தும் குருவம்மாளை மீண்டும் மீண்டும் தொந்தரவுகள் துரத்துகின்றன. எவ்வளவு தூரம் துரத்தினாலும், அந்த ஊர் தரும் பாதுகாப்பை எப்படியும் இருத்திக் கொள்ள வேண்டும் என்றுதான் குருவம்மாள் ஆசைப்படுகிறாள். அதுவே பழநியின் ஆசையாகவும் அவ்வப்போது அவனுடைய சிந்தனையின் ஓட்டத்தில் வந்து போகிறது. தன்னை இழிவு செய்யும் ஊர் தலைவர்களிடையே எப்பாடுபட்டாவது மன்னிப்பு வாங்கிவிட வேண்டும் என்றெண்ணுகிறாள்.

‘அவங்களுக்கும் எனக்கும் என்ன பகை? நான் வேணும்னா தனியாப் போய் மன்னிப்பு கேட்டுவிட்டு வரட்டுமா’ என்றுதான் அவள் சிந்தனை ஓடுகிறது. பழநியில்லாத வேளையில் மப்பேற்றிக்கொண்டு வீட்டிற்கு வெளியே கதவைத்தட்டிக் கொண்டு இளித்துக் கொண்டு நிற்கும் ஊர்ப்பெரியவர்களைப் பற்றி குருவம்மாளின் நினைப்பு இந்தளவில்தான் இருக்கிறது. ‘இழைகளின்’ ராமமூர்த்தி ஆசிரியருக்கும், அவருடைய தம்பியின் பையன்கள் படிப்பை தொடரமுடியாமல் போய்விடுவது பெரிதும் பாதிப்பு ஏற்படுத்தாமல் செய்துவிடுகிறது அவரைத் தொடர்ந்து ஒடுக்கியே வைத்துக் கொண்டிருக்கும் சமூகம்.

நல்லாசிரியர் விருது பெறும் தருணத்தில் ராமமூர்த்தி ஆசிரியரின் நனவோடை பல இழைகளாக விரிந்து பரவுகின்றது என்றால், தண்டோராப் போட்டு ஊரைவிட்டு ஒதுக்கிவைக்கும் தருணத்ததிலிருந்து பழநியின் ஒற்றைப் பிரச்னையை முன்னும் பின்னுமாக சொல்லிச் செல்கின்றது ‘திசையெல்லாம் நெருஞ்சி’. திவ்யாவின் சிறுவயது விளையாட்டுத் தோழனாக இருந்த சிறுவன் கிஷ்டன், திடீரென சுற்றத்தாரின் வக்கரிப்பு ஆளாகி தானொரு சராசரி ஆண் இல்லை என்று உணரும் அந்தரங்க தருணத்தை, அவளும் காண நேரிடகிறது. அந்த தவிப்பில் இருந்து அவன் வெளியேறி சமூகத்தின் தடைகளைத் தாண்டி எதிர்நீச்சல் போட்டு தன்னை ஒரு குடும்ப அமைப்பில் பிணைத்துக் கொண்டு முழுமையடையும் காலத்தில் திவ்யா மீண்டும் சந்திக்கும் தருணத்தில் முடிவடைகிறது ‘பால்கனிகள்’. முன்னது இரண்டு குறுநாவல்களிலும் தகர்த்தெறிய முடியாத சமூகத்தளைகள் ‘பால்கனிகள்’ல் ஓரளவு நெகிழ்ந்து நம்பிக்கைக் கீற்று ஒளிர்கிறது.

சுவேணுகோபாலின் எழுத்திற்கான சுதந்திர வெளியை அமைத்துக் கொடுப்பதில் தமிழினியின் பங்கு அளப்பரியது. இலக்கிய அளவீடுகளை முறையாகக் கொண்டுள்ள வெகுசில பதிப்பகங்களில் தமிழினி முதன்மையானது.

நிறைவின்மையின் வழியே ஓடிச்செல்லும் நதியென சுவேணுகோபாலின் படைப்புகளை தொடர்ந்து இணைய உலகில் முன்னெடுத்தும் செல்லும் இந்த சிறப்பிதழ் வெற்றியடைய வாழ்த்துகள்.