தேசிய நெடுஞ்சாலை 27ல் இருந்து பிரிந்து மாநில நெடுஞ்சாலைக்கு இறங்கியவுடன் ”ஹரப்பா நாகரிகத்தின் பெரு நகரம் உங்களை வரவேற்கிறது” என்ற ஆங்கில வரவேற்புப் பலகை கண்ணில் பட்டது. கீழே பொடி எழுத்துகளில் ”தோலாவிரா அகழ்வாராய்ச்சிக் களம் – 116 கிமி”.
சிந்து சமவெளி (ஹரப்பா) நாகரிகத்தின் முக்கியமான அகழ்வாராய்ச்சிக் களங்களில் ஒன்று தோலாவிரா. ஹரப்பாவும் மொகஞ்சதாரோவும் இன்றைய பாகிஸ்தானில் உள்ளன. இந்தியாவில் இருக்கும் அகழ்வாராய்ச்சி களங்களில் முக்கியமானது தோலாவிரா. எகிப்திய பிரமிடுகள் அளவிற்குத் தொன்மையான நகரம். கார்த்திக்கின் நீண்ட நாள் கனவு. இன்னும் 116 கிலோ மீட்டர் தூரத்தில்.
“அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடமையடா” என்று செளராஷ்டிராக்காரர் டி.எம்.எஸ். காருக்குள்ளே தமிழில் பாடிக் கொண்டிருந்தார். தமிழர்களான கார்த்திக்கும் வள்ளியும் அவரோடு சேர்ந்து உரக்கப் பாடிக்கொண்டே குஜராத்தில் பயணித்தார்கள்.
இருவரும் வேலை பார்ப்பவர்கள். வேலைப் பளு, குழந்தைகள், அவசர நகர வாழ்க்கை என்று எப்போதும் ஒரு படபடப்பிலேயே இருப்பவர்கள். நீண்ட நெடுஞ்சாலைப் பயணங்கள் தினசரி வாழ்க்கையிலிருந்து தப்பித்துச் செல்லும் உணர்வைத் தரும். விட்டு விடுதலையாகிப் பறக்கும் சிட்டுக்குருவி போலே. அதற்காகவே அவர்களிருவருமாக அடிக்கடி பயணம் செய்வதுண்டு. இந்த முறை சற்று அதிக தூரம். சென்னையிலிருந்து குஜராத் வரை.
ஆளரவமற்ற சாலை. இரு பக்கங்களிலும் முள் செடிகள் மட்டுமே. இருபது கிலோ மீட்டரில் ராப்பார் என்னும் சிறுநகரம். அதைத் தாண்டியதும் கைபேசியில் சிக்னல் மாயமானது. கூகுள் மேப்ஸ் இனிமேல் பயனளிக்க இயலாது என வருத்தம் தெரிவித்தது. தோலாவிரா 95 கிமி என்றது நெடுஞ்சாலைப் பலகை. ஒரே சாலை தானே, பார்த்துக் கொள்ளலாம் என்று சென்றார்கள்.
தோலாவிரா என்ற பெயர்ப்பலகை மட்டும் அத்துவானக் காட்டில் நின்றுகொண்டிருந்தது. சரியான குக்கிராமம். யாரும் கண்ணில் படவில்லை.
சற்று முன்னே சென்றதும் எல்லைப் பாதுகாப்புப் படை அலுவலகம் வந்தது. அங்கிருந்த காவலர்கள் முறைத்துப் பார்ப்பது போலத் தோன்றியது. எதற்கு வம்பு என்று கார்த்திக் வண்டியை நேராக குஜராத் சுற்றுலாத்துறை விடுதிக்குச் செலுத்தினான். பயண இணையதளங்களில் குறிப்பிடப் பட்டிருந்த இடம். அங்கே யாரும் வழிகாட்டி இருந்தால் கூட்டிக்கொண்டு செல்லலாம் என்று பார்த்தால் விடுதி பூட்டப்பட்டிருந்தது. காவலாளி கூட இல்லை.
அப்போது தான் அவனைப் பார்த்தார்கள். சின்னப் பையன், பத்துப் பன்னிரெண்டு வயதிருக்கும். விடுதிக்குப் பின்னால் இருக்கும் கூரை வீடு ஒன்றிலிருந்து வந்தான். தலை படிய வாரப்பட்டிருந்த்து. முக்கால் காலுக்கு ஒரு பேண்ட், பளீர் சிகப்பில் டி ஷர்ட்.
உடைந்த இந்தியில் “இங்கே யாரும் கைடு உண்டா பையா” என்று கேட்டான் கார்த்திக்.
“நானே கைடு தான் சார். ஃபாசில் பார்க் பார்க்க 150 ரூபாய், எக்ஸ்கவேஷன் சைட் பார்க்க 150 ரூபாய் – மொத்தம் 300 ரூபாய் கொடுங்க போதும். இதே பெரியவங்களைக் கூட்டிப் போனால் 500 ரூபாய் கேப்பாங்க” என்றான் அந்தப் பையன். அவனது இந்தி கார்த்திக் பேசிய இந்தியை விட நன்றாகவே இருந்தது.
சூட்டிகையான பையனாய்த் தெரிந்தான். சரி, இவனையே வழிகாட்டியாய் கூட்டிப் போனால் என்ன என்று யோசித்தான் கார்த்திக்.
“ரொம்ப சின்னப் பையனா இருக்கானே, இவனுக்குத் தெரியுமா” வள்ளி சந்தேகத்துடன் கேட்டாள்.
“இரு அவன் கிட்டயே கேப்போம்” என்றபடி “உனக்கு எல்லாம் தெரியுமா பையா?” என்று கேட்டான் கார்த்திக்.
“தெரியும் சார். எங்க தாத்த இங்க கைடா இருக்கார், அவர் கூடப் போய் நான் எல்லாம் கத்துகிட்டேன்”
”சரி, வா கார்ல ஏறு. உன் பேர் என்ன”
“கண்பத் சார்”
வள்ளி பின் சீட்டுக்குப் போக கண்பத் முன்னால் வந்து அமர்ந்தான்.
“நேரா போங்க சார். முதல்ல ஃபாசில் பார்க் போயிடுவோம், வெயில் வரதுக்கு முன்னாடி அங்க பாத்துட்டு அப்புறமா எக்ஸ்கவேஷன் சைட் பார்க்கலாம்” என்றான்.
இரண்டு கிலோமீட்டர் போனதும் சாலை முடிவடைந்த்து. எதிரில் கரடு முரடான பொட்டல். வழி என்று எதுவும் இல்லை.
”இது தானா?” கார்த்திக் சந்தேகமாகக் கேட்டான்.
கண்பத் உற்சாகமாக “இன்னும் அஞ்சு கிலோமீட்டர் போகணும் சார். இந்த மண் பாதைலயே போக வேண்டியது தான்”.
அவனது உற்சாகம் கார்த்திக்கையும் தொற்றிக் கொண்டது. சரி, போய்த் தான் பார்ப்போம் என்று காரை அந்த மண் பாதையில் இறக்கி ஓட்டினான். இரண்டு கிலோ மீட்டர் போவதற்குள் வள்ளிக்குப் பயம் வந்துவிட்டது.
“அவன் தான் சொல்றான்னா, நீயும் போய்கிட்டிருக்க. ஈ காக்கா கூட காணோம். வா, திரும்பப் போயிடலாம்” என்று தமிழில் சொன்னாள்.
அவளது பயம் கண்பத்துக்குப் புரிந்திருக்க வேண்டும். “இல்ல மேடம், தைரியமா வாங்க. இன்னும் கொஞ்ச தூரம் தான்” என்றான்.
கார்த்திக்கை முறைத்துக் கொண்டே வள்ளி முகத்தைத் திருப்பிக் கொண்டாள். கார்த்திக்குக்கும் ஏடாகூடமாக வந்து மாட்டிக் கொண்டோமோ என்று கொஞ்சம் பயமாகத் தான் இருந்தது. தூரத்தில் இருந்த சிறு குன்றைச் சுட்டிக் காண்பித்தான் கண்பத்.
“அதோ அங்க தான் சார். அந்த மலை ஏறி அந்தப் பக்கம் இறங்கினா ஃபாசில் பார்க்” என்றான். கார் பரிதாபமாகக் கதறியது.
குன்றின் உச்சியில் இரண்டு எல்லைப் பாதுகாப்புப் படை (பி.எஸ்.எஃப்.) வீரர்கள் இருந்தார்கள்.
“பி.எஸ்.எஃப் இங்க என்ன பண்றாங்க”.
“இங்கருந்து அம்பது கிலோமீட்டர் போனா பாகிஸ்தான் வந்துடும் சார்”
”அடப்பாவி, இங்க தான் இங்க தான்னு பாகிஸ்தானுக்கே கூட்டி வந்துட்டான்” வள்ளி அடிக்குரலில் முனகினாள்.
குன்று ஏறி இறங்கியதும் பயம் எல்லாம் பறந்தோடிவிட்டது. எதிரே ராண் என்று சொல்லப்படும் உப்பு சதுப்பு நிலம். கண்ணுக்கெட்டிய வரை நீண்டு கிடக்கும் உப்புக் கடல். அதன் வெண்மை கண்ணைக் கூசியது. சில நிமிடங்களுக்கு மேல் பார்க்க முடியவில்லை. பார்க்காமலும் இருக்க முடியவில்லை. அந்த உப்புக்கடலின் நடுவே தூரத்தில் ஒரு மலை.
”இங்கே மத்த மாசங்கள்ள தண்ணி இருக்கும் சார். நவம்பர்லேந்து பிப்ரவரி வரை நாலு மாசத்துக்குத் தண்ணி பின்வாங்கிடும். அப்ப தான் நீங்க இதைப் பார்க்கலாம்” கண்பத் சொல்லிக் கொண்டிருந்தான்.
கரையோரத்தில் கம்பி வேலிகளுக்கிடையே சில கெட்டித்துப் போன மரத் துண்டுகள் இருந்தன. கல் மரங்கள்.
“இதான் சார் ஃபாசில் பார்க். இந்த மரங்களெல்லாம் டைனோசார் காலத்தவை. பாறைக்குள் மாட்டிக்கொண்டு இதல்லாம் கல் மாதிரியே கெட்டியாயிடுச்சு. இந்த மாரி இங்கே பன்னெண்டு மரத் துண்டுகள் இருக்கு. முன்னாடி சும்மா தான் இருந்தது. இப்ப தான் கவர்மெண்ட்ல வேலி போட்டிருக்காங்க”
”தூரத்தில இருக்கே மலை, அது பேர் என்ன.”
“அது காலா டங்கர் சார். அங்க தான் குரு தத்தாத்ரேயர் திருவிழா வருஷா வருஷம் நடக்கும். அந்த மலைக்கு அந்தப் பக்கம் பாகிஸ்தான் இருக்கு”
திரும்பிப் போகும் போது பயமில்லை. வறட்டு வெயில் கூட அழகாயிருந்தது. எதிரே ஒரு மாருதி கார் கடந்து போனது. அதிலிருந்த வயதானவர் கண்பத்தைப் பார்த்துக் கைஅசைத்தபடி சென்றார்.
“உனக்குத் தெரிஞ்சவரா அவர்”
“எங்க தாத்தா சார். அங்க இருக்க பி.எஸ்.எஃப். வீரர்களுக்கு சாப்பாடு கொண்டு போறார்”
“உங்க அப்பா அம்மா இங்க தான் இருக்காங்களா” பின் இருக்கையிலிருந்து வள்ளி கேட்டாள். காரைக்குடியைச் சேர்ந்தவளாயிருந்தாலும் அவள் ஹிந்தி நன்றாகவே பேசுவாள்.
“இந்த வருஷம் மழை இல்லை மேடம், விவசாயம் படுத்துடுச்சு. அதனால் பக்கத்துல இருக்க ரேவத் ஊருக்குக் கூலி வேலை செய்யப் போய்ட்டாங்க. நான் இங்க எங்க மாமா வீட்ல தங்கி இருக்கேன்.”
“என்ன படிக்கிற”
“ஏழாங்கிளாஸ் படிக்கிறேன் மேடம். சனி ஞாயிறுகள்ல இந்த மாதிரி கைட் வேலை பாப்பேன்”
“இவனுக்கு நம்ம அனி வயசு தான் இருக்கும். எவ்வளவு பொறுப்பா இருக்கான் பாரு” வள்ளி கார்த்திக்கிடம் தமிழில் கூறினாள். அவளுக்கு கண்பத்தை மிகவும் பிடித்துப் போய்விட்டது.
”இங்க இருக்க தனியார் விடுதில சாப்பாடு வேணும்னா இப்பயே ஆர்டர் கொடுக்கணும். சொல்லிட்டுப் போயிடுவோமா சார்” என்றான்.
”ஒரு வாரமா ஹோட்டல்ல நான், பனீர் பட்டர் மசாலா சாப்பிட்டு வெறுப்பாயிருக்கு. குஜராத்தி பாஜ்ரா ரோட்டி கிடைக்குமா”
“அது எங்க வீட்ல தான் சார் கிடைக்கும்”
“சரி, அப்ப உங்க வீட்லயே சாப்பிடலாம்” வள்ளி விளையாட்டாகக் கூறினாள்.
அதற்குள் கண்பத் வீட்டுக்கருகே வந்து விட்டிருந்தார்கள்.
“ஒரு நிமிஷம் சார்” என்றபடி காரில் இருந்து இறங்கி ஓடினான்.
சிறிது நேரத்தில் மூச்சிரைக்க ஓடி வந்து “எங்க அத்தை கிட்ட சொல்லிட்டேன் சார், எக்ஸ்கவேஷன் சைட் பாத்துட்டு வந்து நம்ம வீட்லயே சாப்பிடலாம்” என்றான்.
எதிரில் பிரம்மாண்டமாக இருந்த்து தோலாவிரா புதையுண்ட நகரத்தின் கோட்டைச்சுவர். கண்பத் பழக்கப்பட்ட வழிகாட்டியாய் அவர்களுக்கு அந்த நகரத்தின் வரலாற்றை விவரித்தான். அவன் வார்த்தைகள் வழியே அந்த 4500 வருடப் பழங்கால நகரம் உயிர்பெற்று எழுந்தது. கோட்டை வாசல், அரசர் இருக்கை, தானியக் கிடங்குகள், நீர்த் தேக்கங்கள் எல்லாவற்றையும் விலாவாரியாகச் சொல்லிச் சுற்றிக் காண்பித்தான்.
”தோலாவிரா அந்தக் காலத்துல கடற்கரையோர நகரமா இருந்தது சார்.
வெளிநாட்டிலிருந்தெல்லாம் வியாபாரிகள் வருவாங்க. ராஜா இங்க தான் உக்காந்து அவங்கள வரவேற்பார்.” உற்சாகமாகப் பேசிக்கொண்டே போனான் கண்பத்.
”எதுக்கு இத்தன ரிஸர்வாயர் கட்டி வச்சிருக்காங்க?”
“இங்கல்லாம் ரெண்டு மூணு வருஷம் கூட மழை பெய்யாமப் போகும். அந்த சமயத்துல தேவைப் படும்னு தான் இப்படிப் பதினாறு ரிஸர்வாயர் கட்டி வச்சிருக்காங்க. இப்ப கூட அப்படித்தான் சார். இந்த வருஷம் முழுக்க மழை இல்ல. ஏ.எஸ்.ஐ. குவார்ட்டர்ஸ் உள்ள இருக்கற ஒரு கிணத்துல தான் தண்ணி இருக்கு. எங்க கிராமத்தில இருந்து இங்க வந்து தான் தண்ணி எடுத்துட்டுப் போவாங்க”
வெயில் சுள்ளென்று முகத்தில் அறைந்தது.
“இது தான் சார் குளியல் தொட்டி.. மேலே இருக்க கல்பாதை வழியாத் தண்ணி வரும். கீழே இருக்க குழியக் கல்லால அடைச்சிருப்பாங்க. அந்தக் கல்ல எடுத்துட்டா தண்ணி போயிடும்” என்று பெரிய விஞ்ஞானக் கோட்பாட்டை விவரிப்பது போல் விவரித்தான்.
“எங்க ஊர்ல இன்னமும் வளவுல தூப்பாக்குழிய கல் வச்சு தான் அடைக்கிறோம்” வள்ளி தமிழில் சொல்லிச் சிரித்தாள். ஒன்றும் புரியவில்லை என்றாலும் கண்பத்தும் சிரித்தான்.
சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவாகவே இருந்தது. வரலாற்று எச்சங்களைப் பார்க்க இவ்வளவு கஷ்டப்பட்டு யாரும் வருவதில்லை போலும்.
அங்கிருந்த சிறு அருங்காட்சியகத்தைப் பார்த்துவிட்டுத் திரும்பும் போது மணி பன்னிரெண்டாகி விட்டிருந்தது.
“அவ்வளவு தான் சார். வாங்க, சாப்பிட வீட்டுக்குப் போகலாம்” என்றான்.
அவர்களும் களைத்துப் போயிருந்தார்கள். அவன் பின்னே மெதுவாக நடந்து சென்றார்கள். வீட்டுக்கருகே போனதும் கண்பத் சற்று நின்றான்.
கூச்சத்துடன் “சார், சாப்பாட்டுக்கு நூறு ரூபாய் எங்க அத்தை கிட்ட கொடுத்துடுங்க” என்றான். அவ்வளவு நேரம் பெரிய மனுஷ வழிகாட்டியாய் இருந்தவன் சட்டென்று சின்னப் பையனாய் மாறியதைப் பார்த்ததும் கார்த்திக்குக்கு சிரிப்பு வந்தது.
வட்ட வடிவமான சுதை சுவர் கொண்ட கூரை வேய்ந்த வீடு. ஒன்றரை அறைகள் தான் மொத்தமே. சுத்தமாக இருந்தது. உள் அறைக்கு அவர்களை அழைத்தான் கண்பத். தரையில் அமரப் போனவர்களைத் தடுத்து, அங்கு இருந்த ஜமுக்காளம் ஒன்றை விரித்து உட்காரச் சொன்னான். முகத்திரையுடன் வந்த அவனது அத்தை வணக்கம் சொல்லிவிட்டு சாப்பாடை எடுத்து வைத்து விட்டுப் போனாள்.
ஒரு தட்டு நிறைய முரட்டு பாஜ்ரா (கம்பு) ரொட்டி, தொட்டுக்கொள்ளப் பல காய்கள் போட்ட ஒரு சப்ஜி, சூடான சாதம். சொம்பு நிறைய மோர். ஊர் பேர் தெரியாத இடத்தில் வீட்டு சாப்பாடு தேவாமிருதமாக இருந்தது. கண்பத் அனைத்தையும் எடுத்து வைத்து விட்டு நாசூக்காக வெளியே சென்றான்.
“பாரு, எவ்வளவு நல்ல பையன். சாப்பிடறப்ப பக்கத்துல இருந்தா நமக்குக் கூச்சமாயிருக்கும்னு விட்டுட்டுப் போய்ட்டான்” என்றாள் அவனது விசிறியாகவே மாறிவிட்டிருந்த வள்ளி.
திருப்தியான சாப்பாட்டுக்குப் பிறகு அவனது அத்தைக்கு நன்றி சொல்லிவிட்டு கையில் இருநூறு ரூபாய் கொடுத்தார்கள். சிரிப்புடன் வாங்கிக் கொண்டாள். கார் வரை வந்து அவர்களை வழியனுப்பி வைத்தான் கண்பத்.
கார் கண்ணாடியில் தோலாவிரா பின்னோக்கி சென்று கொண்டிருந்தது.
அருங்காட்சியகத்தில் கொடுத்த துண்டுப் பிரசுரத்தைப் பார்த்தபடி “நாலாயிரம் வருஷம் முன்னாடியே எவ்வளவு அமைப்பா இருந்துருக்கோம் என்ன. தொன்மையான நாகரிகம் தான்” என்று வள்ளி முணுமுணுத்தாள்.
“ஆமாம், நாகரிகமான ஊர் தான்” என்றான் கார்த்திக்.